2016/04/20

பல்கொட்டிப் பேய்

4


3◄

        விபரீத அனுபவங்கள் ரகுவுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும் அவன் உறைந்து போனான் என்பது தெரிந்தது. பம்மல் வாசிகளான எனக்கும் ரமேஷுக்கும் பேய் சமாசாரம் பெரிய விஷயமில்லை என்றாலும்.. ஒரு பேய் தலையை இத்தனை அருகில் பார்ப்பது இதுவே முதல் தடவை.

முதலில் தயங்கிய ரகு மெள்ள முன்னேறி, தலையை ஒரு குச்சியால் தொடப்போக.. அது விர்ரென்று எழுந்து வேகமாக கிணற்றுச் சுவற்றில் மோதித் தெறித்து எங்கள் பின்கட்டுக் கதவில் மோதி சட்டென்று எங்கள் முன் வந்து புவ்வென்று விரிந்தது.. டெனிஸ் பந்து தரையில் விழ, எங்கள் முகத்தருகே ஒரு உருவம்.. அத்தனை பற்களும் ஆடச் சிரித்தது. "வரேண்டா!" என்று கூவி சண்முகா கொட்டகை பக்கம் காணாமல் போனது.

எத்தனை நேரம் வெலவெலத்திருந்தோம் என்பது நினைவில்லை. "தணிகாசலம் இருக்கார்டா.. அவர்கிட்டே சொல்லலாம்" என்றான் ரமேஷ்.

அதற்குள் ஸ்ரீராமைக் காணாமல் அரண்டோம். முப்பதடி தொலைவில் பம்மல் மெயின் ரோடில் நின்று கொண்டிருந்தான். "இங்க வாடா" என்று கூவினேன். அவன் அங்கிருந்தே, "காஞ்சிபுரத்துக்கு எந்தப் பக்கமா போவணும்? நடந்தாவது அங்க போவேனே தவிர சத்தியமா இங்க இருக்க மாட்டேன்" என்றான். ஒரு வழியாக அவனை அடக்கி எங்களுடன் அழைத்து வந்தோம். "பயப்படாத.. நாங்க இருக்கோம்ல?".

எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் துர்கையம்மன் கோவிலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். கோவில் எதிரே இருக்கும் ஒற்றைப் பனைமரத்தடியில் இருந்த கருங்கல் பெஞ்சில் படுத்துக் கொண்டிருந்த பூசாரி தணிகாசலத்தை எழுப்பி விவரம் சொன்னோம்.

"கால் தெரிஞ்சுச்சா? கொலுசு சத்தம் கேட்டுச்சா? சிரிச்சப்ப எக்காளமா இருந்துச்சா? இல்லே சத்தமில்லாம தும்முறாப்புல இருந்துச்சா? பல்லுலந்து ரத்தம் வந்துச்சா? கண்ணுலந்து முடி வந்துச்சா? தலைல கருமுடியா நரையா? உச்சந்தலைல ஆணி அடிச்சிருந்துச்சா? காது அறுந்திருந்துச்சா? கண்ணு ரெண்டும் சுத்துச்சா? கழுத்துல கயிறு கட்டுன கொப்புளம் தெரிஞ்சுச்சா?...." என்று கேள்விகளை அடுக்கினார் தணிகாசலம்.

"இந்தாளு இப்படி க்விஸ் வைப்பாருன்னு தெரியாம போச்சே?" என்று முணுத்தான் ரமேஷ்.

"எதுவும் கவனிக்கலியா தம்பி?" என்று என்னை நெருங்கினார் பூசாரி. "இத பாருப்பா. பேயுங்க பல வகை. இன்ன வகைனு தெரிஞ்சா... அதுக்கு ஏத்தாப்புல குறியடிச்சு ஓட்டலாம்.. பலி போட்டு ஓட்டலாம்.. வேப்பெல அடிக்கலாம்.. ஆணி அடிச்சு முடி கட்டலாம்.. பச்சைக்கோழி ரத்தம் குடிச்சு மோளம் கொட்டலாம்.. எதுவுமில்லேனு வை.. ஓடி ஒளியலாம்" என்றார். "என்ன பேய்னு தெரியாம இப்போ என்ன செய்ய?"

"தணிகாசலம்.. ஒரு குச்சியால ரகு தலையை நோண்டுனப்ப.. அது பிகுன்னு எங்க முன்ன விரிஞ்சு வந்துச்சு.. வரேண்டானு கூவிச் சிரிச்சு காணாம போயிருச்சு.." என்றேன்.

"சிரிச்சப்போ பல்லு மொத்தமும் ஆடிச்சு" சேர்ந்து கொண்டான் ரகு.

கொஞ்சம் யோசித்த பூசாரி, "தம்பி.. இது ரொம்ப டேஞ்சருபா.. பல்கொட்டியா இருக்கும் போலிருக்குதே? ரொம்ப ரொம்ப டேஞ்சரான பேய்பா" என்றார்.

3◄ ►5

15 கருத்துகள்:

 1. கதையின் அமானுஷ்யம் இருக்கட்டும்... முந்தைய பதிவுக்கெல்லாம் வரும் பின்னூட்டங்கள் கூட இதனுடன் கலந்து ஒன்றாய் வருகிறதே... அது எப்படி? பீதியாய் இருப்பது அதுதான்.

  பதிலளிநீக்கு
 2. மா.மா பயப்பட ஒன்றுமில்லை. லேபிளைக் கவனிக்கவும்! வகை : நகைச்சுவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லையா பின்னே? கதைல பாருங்க.. அடிக்கடி 'சிரிச்சு சிரிச்சு'னு வருதில்லே?

   நீக்கு
 3. சீக்கிரமே அதர்வண வேதத்திலே 1.18 ஆக்கப்பட்ட ஸ்லோகத்தை
  ரகு, ஸ்ரீ ராம், அப்பறம் யாரு அது ? ரமேஷ் எல்லோரும் 48 நாளைக்கு
  ஸ்ரத்தையா சொல்லிட்டு,

  அந்த பல்கொட்டி பேயைப் பார்த்த இடத்திலே திரும்பிப் போய் ,
  உடம்பு முழுக்க வீபுதியை பூசிண்டு,

  த்ரயம்பக மந்த்ரம் சொல்லவும்.

  ஒன்னு அந்த பேய் , இல்லேன்னா இந்த நாலு பேர், சீக்கிரமே...

  இப்ப சொல்லவேண்டாம்.

  கதை தொடரட்டும்.

  சு தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா! ஹூ! ஹ்ரீம்! க்ரீம்!

   நீக்கு

  2. ஐ ஆம் வெறி சாரி. ஒரு வரி எழுதியது ஏன் வரவில்லை ?

   பூசிண்டு .....அதுக்கப்பறம் எப்படி அடுத்த லைன் விட்டுப்போச்சு !!

   எல்லாம் அந்த பல் கொட்டிப் பேய் காட்டும் வித்தை பாருங்கோ ..
   அஸ்வத்தாமா ஹதஹ கதை மாதிரி குஞ்சரஹ அப்படின்னு சொல்லும்போது பேரிகை சத்தம் போல...
   நான் எழுதியது வல்ல...

   அடுத்த லைன்.
   (துரியோதனன் பண்ணின தப்பை ரிபீட் செய்யக்கூடாது)

   அப்பறம் ...தான் அந்த ...
   த்ரயம்பக .....எக்சட்ட்ரா

   ஹே ரகு, ஹே ரமேஷ் !!
   நன்னா புரிஞ்சுதா ?

   சுப்பு தாத்தா.

   நீக்கு
 4. //"கால் தெரிஞ்சுச்சா? கொலுசு சத்தம் கேட்டுச்சா? சிரிச்சப்ப எக்காளமா இருந்துச்சா? இல்லே சத்தமில்லாம தும்முறாப்புல இருந்துச்சா? பல்லுலந்து ரத்தம் வந்துச்சா? கண்ணுலந்து முடி வந்துச்சா? தலைல கருமுடியா நரையா? உச்சந்தலைல ஆணி அடிச்சிருந்துச்சா? காது அறுந்திருந்துச்சா? கண்ணு ரெண்டும் சுத்துச்சா? கழுத்துல கயிறு கட்டுன கொப்புளம் தெரிஞ்சுச்சா?...." என்று கேள்விகளை அடுக்கினார் தணிகாசலம்.//

  அடேங்கப்பா ..... இதையெல்லாம் உன்னிப்பா கவனிச்சிருக்கணும் போலிருக்கே. அதற்குள்ளேதான் அது "வரேண்டா!" என்று கூவி சண்முகா கொட்டகை பக்கம் சினிமா பார்க்கப் போயிடுச்சே. :)

  தொடர் நல்ல த்ரில்லிங்க்காத்தான் போகுது. இப்படியெல்லாம் யோசித்து எழுத தங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துகள்.

  ஆவலுடன் காத்திருக்கிறேன் ... அடுத்த பகுதிக்கு.

  பதிலளிநீக்கு
 5. பல்கொட்டிப்பேய் முன்னாடியே கற்பூரம் ஏத்தி அடிச்சுச் சொல்லலாம் நீ நகைச்சுவைப் பேய்..ஹிஹிஹி...."பல்லைக் காமிக்காத" . அதுக்கிட்டச் சொல்லலாம் போல!!!நு நினைச்சா அது பல் இருந்தாத்தானே காமிக்கும் அது தான் பல்கொட்டிப் பேயாச்சே... ரசித்துத் தொடர்கின்றோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க நினைக்கற மாதிரி பல் கொட்டிப்பேய் இருக்காது.

   நீங்க பார்க்கும்போது சட சட அப்படின்னு சத்தம் போட்டுண்டு
   வரிசையா தொடர்ச்சியா கொட்டும்.

   கொட்டி முடிஞ்சோன்ன, ஒவ்வொரு பல்லும், கீழே விழுந்த
   இடத்தில் இருந்து தானாவே எம்பி பேயோட வாய் லே யதாச்தானத்திலே
   பிரதிஷ்டை ஆகுமாம்.

   நான் டூப் விடறேன், ரீல் விடறேன் அப்படின்னு நினைக்க வேண்டாம்.
   நேத்திக்கு, அயோத்யா மண்டபம் பக்கத்திலே இருக்கும் பெரியவர் தான் சொன்னார்.

   கையிலே கறுப்புக் கயிறும் பஞ்ச முக உத்ராக்ஷமும் போட்டு இருக்கரவாளை ஒன்னும் செய்யாதாம்.

   என்னை வாங்கிக்கொள்ளச் சொன்னார். அப்பைக்கு நான் காசு ஏதும் கொண்டு போகல்லை. மொத்தம் இரண்டும் சேர்த்து ரூ 456.45 . கட்டும்போது மந்த்ரம் சொல்லி கட்டணுமாம்.

   அ .துரை அகௌன்ட் லே அவரது வாசகர் பத்து பேருக்கு அனுப்பலாம் என்று இருக்கேன்.

   சொல்ல மறந்துட்டேன். ஒரு தடவை கட்டிண்டு , பின்னே ஒரு கிரஹனம் வந்துடுத்து அப்படின்னா, புனரபி, அத அவுத்துட்டு, புதுசா கயிறும் உத்ராக்ஷமும் வாங்கி போட்டுக்கணும். அப்படி அந்த பெரியவர் சொல்றார்.
   பார்கறதுக்கு சார் மாதிரியே இருக்கார்.

   சு தா.

   நீக்கு
  2. ...ஆகா... இப்படி கூட்டம் கிளம்பியிருக்குதா?!

   நீக்கு
 6. சிரிச்சப்போ பல் ஆடித்தா கொட்டித்தா.தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. எனக்கு பேயோட பேர் பிடிச்சிருக்கு...

  பதிலளிநீக்கு
 8. கொஞ்சமா பயம் வருமோன்னு பார்த்த நடுநடுவுல நீங்க ஜோக் அடிக்கிறீங்க! (இந்தாளு இப்படி க்விஸ் வைப்பாருன்னு தெரியாம போச்சே!)
  இதுவரைக்கும் சிரிச்சாச்சு. அடுத்த பகுதிலே பயம் வருதான்னு பாக்கறேன்!

  பதிலளிநீக்கு
 9. சிரிப்பா சிரிச்சாச்சு. நானும் அடுத்த பாகத்துக்குப் போகிறேன்.
  பயமாத்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 10. ஹாஹா, எல்லோரும் பேயைப் பார்த்து அரண்டு போயிருக்காங்க போல!

  பதிலளிநீக்கு