2011/01/02

கேள்வி எந்திரம்





    வ்வொரு வருடமும் நிறையக் கேள்விகளுடன் தொடங்குகிறது. ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் காண்பதிலேயே வருடப்போது கழிந்துவிடுகிறது. சில கேள்விகள் அடுத்த வருடத்துக்கு மாற்றப்படுகின்றன; நிறைய கேள்விகள் தங்கிவிடுகின்றன. பதில் காணாமல், மாற்றாமல், எங்கோ எண்ணவானில் விரியும் கேள்விகள் திரிசங்கில் என்றைக்காவது ஒருநாள் சிக்குவேனோ என்கிற அச்சம், அவ்வப்போது கேள்வி வடிவில் தோன்றும். அந்தக் கேள்வியும் குட்டி போட்டுத் திரியும்.

என் தாத்தா சுவற்றைப் பார்த்தபடி தனக்குள் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பார்; மூப்பு என நினைத்தேன், இப்போது புரிகிறது - இளைமையிலிருந்து அவர் கேட்டுத் தொலைத்த கேள்விகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார் என்பது. நான் ஏதாவது ஒரு தந்திரம் கற்றாக வேண்டும் - கேள்விகள் திரிசங்கில் மனக்கால் பதிக்குமுன். என் மனைவி மக்கள் எனக்கு alzheimer அல்லது senile delusion இரண்டில் எதுவென்ற கேள்வியையும், இவனை என்ன செய்வது என்ற உப கேள்வியையும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் கேட்டுக் கொள்வார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால் நான் கேள்வித் திரிசங்கில் தமிழுலாச் செய்யும் விவரம் புரியாமல் கேள்வி கேட்டு விழிப்பார்கள். அவர்களும் என் கேள்விகள் திரிசங்கை கூகிலில் தேடிச் சலிப்பார்கள். 'Is he deranged?' என்று கேள்வி கேட்பார்கள். அவர்களின் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக என் கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டுபிடிக்கும் வேலையில் நாளை இறங்கலாம்; அல்லது, முடியாய்ப் போனதெனத் தொடர்ந்து கேள்விகள் கேட்கலாம். அநேகமாக அதைத்தான் செய்வேன். என் பாட்டனாருக்கு முப்பாட்டனார் காலத்துக் கேள்விகள் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கின்றன. This is my legacy.

ஒன்று, இரண்டு, மூன்று... வெளிவந்தேன். How insanely depressing! கேள்விகளுக்குப் பதில் தேடி ஓயாது. அதற்காகக் கேள்விகள் கேட்காமல் இருக்க முடியுமா? ஒன்றிரண்டு பதில்களுக்கானத் தேடலில் தானே, வாழ்க்கை வருடம் முழுதும் சுவைக்கிறது? இந்த வருடத்துக்கான கேள்விகள் எந்திரத்திலிருந்து வெளியே வரத் தொடங்கிவிட்டன. சுறுசுறுப்பானத் தொடக்கம் ...
... என்று நினைத்தால் மூன்று நாள் கூட ஆகவில்லை, அதற்குள் ஹைபர் வேகத்தில் இயங்கத் தொடங்கிவிட்டதே? 'off' விசை எங்கே? என்ன, மென்பொருள் விசையா? மைக்ரோசாஃப்ட் தயாரிப்பா? யாராவது இதை நிறுத்துங்களேன்? Please help me!

இந்த வருடத்துக்கான என் கேள்வி எந்திரத்திலிருந்து:
1. இடைவேளைக்குப் பிறகான என் கதையையாவது நிறைவாக எடுத்துச் செல்வேனா? அடுத்த வருடத்துக்கான மாற்றல் கேஸ் என்று படுகிறது.
2. பிழைப்புக்கான சமாதானங்களை விட்டு, உடலும் உள்ளமும் ஒருங்கே இணைகிறத் தொழிலைச் செய்வேனா? நிச்சயம் திரிசங்கு.
3. வாரத்தில் இரண்டு நாட்கள் ஆத்திரம் சினம் தவிர்த்து, நிதானமாக, பரந்த மனப்பான்மையுடன், இந்த வருடமாவது நடப்பேனா? ஹ்ம்ம்ம்..பெருமூச்சில் கேள்வி அதற்குள் கரைந்து விட்டது போலிருக்கிறதே?
4. பணிவிடை செய்யாவிட்டாலும், தள்ளாமை தள்ளுமுன் என் அம்மாவுடன் சில வருடங்களாவது தங்கியிருப்பேனா? கிளைக் கேள்வி: யாருடைய தள்ளாமை?
5. நினைவு தெரிந்த நாள் முதல் நிறைய பேருக்கு ஏமாற்றத்தையும் மனவேதனையையும் கொடுத்திருக்கிறேன். அவர்களைத் தேடிப் பிடித்து மன்னிப்பு கேட்பேனா? அடச்சே, அதற்குள் கிளைக் கேள்வி: இனியாவது ஏமாற்றாமல் வேதனை தராமல் இருப்பேனா?
6. தொலைத்த நட்புக்களைத் தேடிப் புதுப்பிப்பேனா?
7. 2011 தேர்தலிலாவது போட்டியிடுவேனா அல்லது வெளிவட்டத்தில் நின்று கும்மியடிப்பேனா? ம்ம்.. 2013 வரை யோசிக்கணும்.
8. பகட்டுக்காக வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களைத் தூசு தட்டிப் படிப்பேனா? அல்லது, படிக்க மாட்டேன் என்று தெரிந்தே புத்தகம் வாங்கும் பழக்கத்தை நிறுத்தி, வருடத்துக்கு இரண்டு மரங்களைப் பிழைக்க வைப்பேனா? ஒரு கேள்வி கேட்டால் இன்னொன்று இலவசம் என்றார்கள், அதான்.
9. மூன்றாம் சுழி வலைப்பூவிலிருந்து என்றைக்கு ஓயப் போகிறேன்? இரண்டு மார்க் கேள்விகள் எப்பவுமே பிடிக்கும். நோ திரிசங்கு. பிழைத்தது!

இதைத் தவிர, சிதறியத் துண்டுக் கேள்விகள் சில. கொஞ்சமும் தொடர்பில்லாமல் எங்கிருந்தோ வந்து விழுந்தத் துண்டுகள். யாரையா அது..? கொஞ்சம் தள்ளி நின்னு மிசினை ஓட்டுங்கய்யா...
9. இன்னும் எத்தனை நாள் சாதிச்செங்கல் எறிந்து கொண்டிருப்போம்?
8. அடுத்தப் பதினைந்து ஆண்டுகளுக்கு இலங்கைத் தமிழரை வழிநடத்த, உருப்படியான தலைமைக்குழு உருவாகுமா?
7. இந்தியாவில் அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்கான பொதுநோக்குடன் நடப்பார்களா? அல்லது 2020 புஸ்வாணமா?
6. செல்ஃபோனுக்கு அடுத்தபடி, பரவலாக ஏற்கப்படும் கண்டுபிடிப்பு என்னவாக இருக்கும்?
5. ஒற்றைத் தலைவலிக்கு மருந்து கண்டுபிடிப்பார்களா?
4. 2012ல் உலகம் அழியுமா? ரப்பர் எங்கிருந்து வரும்?
3. சுஜாதா இலக்கியவாதியா, இலக்கியப்பாதியா?
2. ரஜினிகாந்த் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவாரா?
1. ஒபாமையை எதிர்க்கவல்ல வஸ்தாது எவளாவது, பேலினைத் தவிர, ரிபப்லிகன் கட்சியில் வருவாளா?

25 கருத்துகள்:

  1. தமிழ் மண நட்சத்திரத்துக்கு வாழ்த்தை பிடியுங்க முதல்ல ... பதிவை படிச்சுட்டு வர்றேன்

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள தமிழ்மண இந்த வார நட்சத்திரம்,
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    கேள்வி இயந்திரம் தயாரான இடத்திலேயே ஒரு பதில் இயந்திரம் தயாரித்து எங்களுக்கும் அனுப்பி விடவும். கொஸ்டின் பேப்பர் ரொம்ப டஃபாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான கேள்விகள்தான். முதல் கேள்வி விளங்கவில்லை. இரண்டாவதற்கு ஒரு நல்ல தீர்வு இந்த வருடம் கிடைக்க வாழ்த்துக்கள். மூன்றாவதற்கு கேள்வி கேட்காமல் முயற்சி செய்யுங்கள். நான்காவதற்கு ஒரு மாதம் லீவு எடுத்து அம்மாவுடன் தங்கவும். எனக்கு சென்ற விடுமுறையில் இந்த பேறு கிடைத்தது. that was my best vacation ever. ஐந்தாவதற்கு, கடவுள் நம்பிககை இருந்தால் அவரிடம் பொது மன்னிப்பு கேட்கலாம். ஆறாவதற்கு முயற்சி செய்யுங்கள். ஏழாவதை நினைத்துக் கூடப் பார்க்காதீங்க. எட்டாவது கேள்வி எனக்கு ஆச்சர்யமாக இருக்கு. தூங்கும்போதுகூட புத்தகம் படிப்பவனாயிற்றே நீங்கள்!! ஒன்பதாவதற்கு எங்கள் அனுமதி கிடையாது. infact நாங்கள் அந்த கேள்விக்கே கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. நேர் வரிசை கேள்விகள் கிட்ட தட்ட அனைத்தும் எனக்கும் பொருந்தி வந்தது ...அந்த நாலாம் கேள்வி . கண்ணீர் முட்ட வைத்துவிட்டது டாய்லட்டுக்குள் புகுந்து விட்டேன் ..

    தலைகிழ் வரிசை கேள்விகளின் ஆதங்கங்களும் பெரும்பாலும் பொருந்தி வந்தது ..வாத்தியாரை சீண்டியது தவிர ,அதுக்கு கவனிப்பு அப்புறம் தனியாக

    பதிலளிநீக்கு
  5. தமிழ்மண நட்சத்திரப் பதிவாளரானதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நட்சத்திரம் ஜொலிக்க வாழ்த்துக்கள். ;-)

    பதிலளிநீக்கு
  7. நட்சத்திர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. உள்ளுக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிற இந்தக் கேள்வி இயந்திரத்தை ஒரு தடவை நிறுத்த நான் முயற்சி செய்தேன்.விளைவுகள் அச்சமூட்டும் விதம் இருந்தன.ஆகவே ஓடிக் கொண்டே இருக்கட்டும் இயந்திரம்.

    பதிலளிநீக்கு
  9. ம்ம்ம்...உங்கள் மனதில் இவ்வளவு கேள்விகள்தானா, பரவாயில்லையே! //மூன்றாம் சுழி வலைப்பூவிலிருந்து என்றைக்கு ஓயப் போகிறேன்?// அதற்குள்ளேயே இந்த கேள்வி வந்து விட்டதா!
    கேள்விக்கான பதிலை விட, கேள்வியை பற்றிய பாடல்கள்தான் கட கடவென்று மனதில் வருகிறது.
    முடிந்தவற்றை உடனே செய்தும், முடியுமா என்று நினைப்பதை, முடிப்பதற்கான முயற்சியில் இறங்குவதும் நன்று. 'முயற்சி திருவினையாக்கும்', 'முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்'.
    நாம் பெற்றோர் ஆன பிறகு, நம் அம்மாவுடன் கொஞ்ச நாட்களாவது இருக்க முடிவது பெரும் பேறுதான். வாழ்கையில் நான் அதை தவற விடவில்லை என்று எண்ணி எண்ணி மகிழ்கிறேன். மனதிற்கு நிறைவாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. //வாரத்தில் இரண்டு நாட்கள் ஆத்திரம் சினம் தவிர்த்து, நிதானமாக, பரந்த மனப்பான்மையுடன், இந்த வருடமாவது நடப்பேனா? //

    வாரத்தில் ஒரே ஒரு நாள் இருந்தால் மட்டுமே எனக்கு கோவம் குறைவது சாத்தியம் !!

    ஐயப்ப விரதம் என்று மாலை அணிந்தே கோவம் தலைக்கு ஏறுகின்றது.

    எங்காவது கண்காணாத இடத்துக்கு சென்று இருக்கவேண்டும் நான் !! என் இயலாமையே கோவமாக வருகின்றதோ என்று நினைக்கின்றேன்.

    உனக்கு கோவம் வருமா ?

    பதிலளிநீக்கு
  11. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்... கலக்குங்க.

    பதிலளிநீக்கு
  12. அட, அப்பப்பா:-) நீங்க நட்சத்திரமா? கலக்குங்க, மனமார்ந்த வாழ்த்துகள். புத்தாண்டு வாழ்த்துகளும்!

    ஹிஹி மற்றபடி உங்க கேள்விகள் பலவும், வயதுக்கேற்றாற்போல் எனக்கும் மற்றவர்களுக்கும் வரும் கேள்விகள்! அதுவும் இனி 4வது கேள்விக்கு நேர்மையான பதிலைக் கொடுக்க முடியாத சங்கடம் வேறு:-(

    பதிலளிநீக்கு
  13. அன்பு நட்சத்திர வாழ்த்துக்கள் தோழர்.மிகுந்த மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. இரண்டொரு நாட்களுக்கு பின்னர் மீண்டும் இணையம் வந்து நட்ச்சத்திர பதிவுகள் அனைத்திற்கும் பின்னூட்டுகிறேன் .. தற்போது போதிய நேரமில்லை ... மன்னிக்கவும் தோழர்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி RVS, bogan, சாய், அரசூரான், கெக்கே பிக்குணி, ...

    பதிலளிநீக்கு
  16. கேள்வி எந்திரத்தின் கேள்விகளை ஒவ்வோன்றா பார்ப்போம்...

    1.நிங்க சொல்லும் கதைகளின் இடைவேளைக்கப்புறமா ..இல்லை வாழ்க்கை கதையின் இடைவேளைக்கப்புறமா.. வாழ்க்கை கதைன்னா அவ்வளவு சீக்கிரம் இடைவேளை வரக்கூடாதே.....விளம்பர இடைவேளையா இருக்கலாம்.

    2. சமதானத்தோடு வேலைசெய்யனும்னா ..எதோ ஒரு கலையில் தான் ஈடுபாட்டோட இருக்கணும் ( ஆயிரம் குறை சொன்னாலும் , கமல் தான் அந்த மாதிரி வேலையில் இருக்கிறமாதிரி இருக்கு- ம.அ. தோற்றதற்கு தலைவனுக்கு ஆறுதலா ஒரு வார்த்தை இப்படி சொல்லிக்கலாம் ).

    3. பரந்தமனப்பான்மையொட சினம் தவிர்த்து நிதானமாக .... எதோ இரண்டுக்கு வாய்ப்பு எற்படுத்திக்கலாம்.

    4. ஆமாங்க அது பெரிய ஆசை...இது நம்ம கையில மட்டுமில்லிங்க சுத்தியுள்ளவங்களும் காரணம்... அம்மாவே, பையன் எங்கிருந்தாலும் நல்லா இருந்தா போதும்ங்கற சிங்கிள் அஜண்டாவோடு இருப்பதும் ஒரு காரணம்.

    5. தொலைத்த நட்புக்கள்..... இதுவும் கொடுமைங்க.. நாம ஒரு அடி தேடிப்போனா..அவர்கள் நாலு அடி தள்ளி ஒழிந்துகொள்கிறார்கள்....

    ........அடுத்த அஞ்சு அப்புறம்

    பதிலளிநீக்கு
  17. சாய், கோபம் கூடப் பொறந்ததாச்சே? போகுமா? "டாய்"னு கத்திட்டுப் பொறந்ததா அம்மா சொல்வாங்க. எனக்கு அறிவு கெட்டுப் போகும் நாளில் தான் கோபம் மறைந்துபோகும் என்று நம்புகிறேன் :)

    கோபம் கொஞ்சம் தேவை என்று நினைக்கிறேன்; அதை காட்டும் விதத்தில் பக்குவம் வேண்டும் - கோபத்தை வெளிப்படுத்தும் முறை தெரிந்திருந்தால் வாழ்க்கை இன்னும் சுவையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். நடந்ததை நினைத்து ஒரு பயனுமில்லை, so, இனிமேலாவது கோபத்தை முறையாக வெளிப்படுத்த முயற்சி செய்யப்போகிறேன்.

    கண்காணா இடத்தில் ஒரு பிரச்சினையும் இல்லையே? கோபம் போனதென்று எப்படித் தெரியும்?

    பதிலளிநீக்கு
  18. என் பெயர்ல 'வி' உண்டு பத்மநாபன் - இங்க்லீஷ் 'வி', இனிஷியல்.

    அப்பாவினு இல்லிங்க.. பெருந்தன்மையும் இல்லை. எந்த காரணத்துக்காக பெயரைச் சொல்ல விரும்பவில்லைங்கறது அவங்க விஷயம் இல்லையா? அப்பாதுரைனு பேரைப் போட்டா கூட என் பேர் அப்பாதுரைனு எப்படித் தெரியும்?

    பதிலளிநீக்கு
  19. நட்சத்திர அப்பாவுக்கு வாழ்த்துகள் !

    அப்பாஜி...இத்தனை கேள்விகளையும் கேட்டுவிட்டு சும்மா இருந்தால் ஆகாது.முயற்சி செய்தால் ஒன்றிரண்டு வெல்லும் நிச்சயம் !

    பதிலளிநீக்கு
  20. //அப்பாதுரை சொன்னது…

    எனக்கு அறிவு கெட்டுப் போகும் நாளில் தான் கோபம் மறைந்துபோகும் என்று நம்புகிறேன் :)

    கோபம் கொஞ்சம் தேவை என்று நினைக்கிறேன்; அதை காட்டும் விதத்தில் பக்குவம் வேண்டும் - கோபத்தை வெளிப்படுத்தும் முறை தெரிந்திருந்தால் வாழ்க்கை இன்னும் சுவையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். நடந்ததை நினைத்து ஒரு பயனுமில்லை, so, இனிமேலாவது கோபத்தை முறையாக வெளிப்படுத்த முயற்சி செய்யப்போகிறேன்.

    கண்காணா இடத்தில் ஒரு பிரச்சினையும் இல்லையே? கோபம் போனதென்று எப்படித் தெரியும்?//

    நீங்கள் சொல்லுவது எல்லாமே எனக்கு கஷ்டம்.

    எல்லா குணமும் இருந்து கோவமும் இருந்தால் பரவாயில்லை, ஆனால் அது மட்டுமே இருந்தால் !!

    எனக்கு அறிவே இல்லாததால் தான் கோவம் வருவதாக என் அகமுடையாள் சொல்லுகின்றாள் !! நீங்கள் வேறு !

    கோவத்தை பக்குவமாக வெளியிட - ஐயோ அதுக்கு எங்கே கோச்சிங் கிளாஸ் இருக்கு துரை !!

    கண்காணாத இடம் - சொர்க்கமோ / நரகமோ போனபிறகு - அங்கே போய் வேண்டுமென்றால் கோவத்துக்கு பெயர் பெற்ற துர்வாசரை / விஸ்வாமித்திரர் எல்லாரையும் கொஞ்சம் போட்டுப்பார்க்கலாம் ?

    பதிலளிநீக்கு
  21. நட்சத்திர பதிவாளரானதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அடுத்தது நாலுதான்....

    6 (5)நமக்கு தெரிஞ்சு செய்வதில்லை ...தெரியாம செய்யறது கணக்கில் இல்லை ...

    7. எப்ப இருந்து தேர்தல் ஆசை ? இப்பல்லாம் முதலீடு ஜாஸ்தி வேணும் ..

    8 கண்டிப்பா படிக்கணும் நெனச்சு தான் வாங்குகிறோம் ...முடியறதில்லை ...மரம் தனி விஷயம் ..
    ஓரு புத்தகம் -ஓரு மரம் கோட்பாடும் சுற்று சுழல் ஆர்வலர்களால் பரப்பபடுகிறது ....

    9 . நான்காம் சுழி ஆரம்பிச்சா வேணா மூணாம் சுழியிலிருந்து ஒய்வு கிடைக்கும் ...நிறைய கடமை பாக்கியிருக்குங்க

    பதிலளிநீக்கு
  23. மூணுசுழிக்கே மூச்சு வாங்குது பத்மநாபன்!

    பதிலளிநீக்கு
  24. 'கோச்சிங்' இருக்கு சாய். 'கவுன்சலிங்'.
    'anger management' பத்தி உளவியல் ஆலோசனையும் திருத்தமும், தேவைப்பட்டால் மருத்துவமும், கிடைக்கிறது.கட்டுப்படுத்த முடியாத கோபம், வியாதி. அதன் வேர்களை உளவியல் நிபுணர்கள் கண்டுபிடிக்க உதவலாம். என் கோபத்தின் வேர்களை நானறிவேன் (கொஞ்சம் பயன்படுகிறது). உளவியல் ரீதியில் வளர்ந்தவர் கோபம் depression, stress, childhood abuse, familial dysfunction போன்றவற்றின் காரண/காரியமாகலாம் என்கிறார்கள்.

    சமீபமாகச் சிலர், கோபம் lack of energy என்றும் சொல்கிறார்கள். வளரும் பருவத்தில் நான் கோபத்தில் கத்தினால் என் பாட்டி உடனே "அவனுக்கு சோத்தைப் போடு, காச்சு மூச்சுனு கத்தறான் பார்" என்பார்.

    உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    பதிலளிநீக்கு