2011/01/03

பத்தினிப் பட்டம்





ஒன்று காற்று, ஒன்று ஊற்று
ஒன்று வானம், ஒன்று மேகம்
ஒன்று பகல், ஒன்று இரவு
ஒன்று நேரம், ஒன்று காலம்
ஒன்று பிறவி, ஒன்று மரணம்
ஒன்று கணவன், ஒன்று காதலன்.

எனக்குக்
கணவன் வேண்டும்.
காதலனும் வேண்டும்.

எதுகையும் மோனையும்
கவிக்கழகு.
இமையும் புருவமும்
விழிக்கழகு.
சொல்லும் பொருளும்
மொழிக்கழகு.
குழலும் யாழும்
இசைக்கழகு.
கணவனும் காதலனும்
எனக்கழகு.

கணவன் மூச்சுக் காற்று.
காதலன் குருதி ஊற்று.
இரண்டும் வேண்டும் எனக்கு.

ஒன்றும் ஒன்றும் இரண்டாகும் கணித விதி.
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகும் காதல் விதி.
ஒன்றும் இரண்டும் ஒன்றாகும் இது
காதல் கணிதம்.

மூன்றில் அடங்கும் இரண்டு,
என்றாலும்
இரண்டிருந்தால் தானே மூன்று?
கணவா, காதலா
உங்களுக்கு புரியவில்லையா?
உங்களுக்குப் புரிந்த
நயம்
உலகத்துக்கு புரியாத
பயமா?

உனக்கும் எனக்கும் உனக்கும்
புரிந்து விட்டால்
மற்றவருக்குப் புரிந்தால் என்ன?
மயிராய்ப் போனால் என்ன?

எனக்கு வானமும் வேண்டும்
மேகமும் வேண்டும்.
காமக் கண்ணோ, காதல் பார்வையோ
எதுவானாலும்
வானம், பூமி, மேகம்
என்றும்
கணவன், நான், காதலன்.

ரசமென்றால் எதுவும் ரசம்
விரசமென்றால் எதுவும் விரசம்.

ஒரு கண்ணனுக்குப் பல ராதை
ரசம்.
ஒரு ராதைக்குப் பல கண்ணன்
ஏன் விரசம்?
நானே ராதை. நானே சீதை.
உனக்கு நான் சீதை.
உனக்கு மட்டும் ராதை.

பகலும் இரவும் தனியென்றாலும்
இரண்டும்
சேர்ந்தால் தானே நாள்?
நான் ஆளானது
பகலையும் இரவையும்
சேர்க்கும் நாளாவதற்கே.

நேரமும் காலமும்
வேறில்லை.
காலக் கண்ணோட்டத்தில்
நேரம் பறக்கும்.
நேரத்தோடு சேர்ந்தால்
காலம் மறக்கும்.
எனக்குக் காலமும் வேண்டும் நேரமும் வேண்டும்.
காதலனும் வேண்டும் கணவனும் வேண்டும்.

எனக்குப் புரிந்த விதி
உனக்குப் புரியவில்லையா பகலே?
உனக்கும் புரியாதா இரவே?
நீ அறியாயோ காலமே?
நீ மறந்தாயோ நேரமே?

உண்மையில் புரியவில்லையா?
ஊர் பேச்சில் அச்சமா?
கொலையின் பாவம்
உலையில் போக்கும்
உலகம்
உள்ளொன்று நினைத்துப்
புறமொன்று செய்யும்
கலகம்.

ராமனையும் கண்ணனையும் மணந்த
திருமகள்
வழிவந்த நான்
சொல்கிறேன்
என் கண்களின் மொழியினைப் படி.
ஊர் தலையில் விழட்டும் இடி.

கணவன் பிறவி நெருக்கம்.
காதலன் மரண மயக்கம்.
பிறவியும் மரணமும்
ஆன்மா எனக்கு
ஒன்றல்லாமல் வேறல்ல,
இரண்டும் கலந்த மூன்று.
நான் மூன்று.
எனக்குள் நீயும் நீயும்
அடக்கம்.

வா கணவா, வா காதலா.
ஊர் பழி ஊருக்கு,
எனக்கல்ல.
உனக்கல்ல.
உனக்குமல்ல.

நான்
மலருக்கு மலர்
வரும் வாசம்.
மாநிலங்கள்
சேரும் தேசம்.

ஐவரை மணந்த பெண்ணை
அம்மன் என்று எல்லையிலே
கோவில் கட்டும்
இரண்டு பெண்டாட்டிக்காரர் உலகில்
எனக்கு
உனக்கு
உனக்கும்
இடமில்லையா? யார் சொன்னது?

பத்தினிப் பட்டம்
யாருக்கு இட்டம்?
நீ காற்றானால் கணவா,
நீ கயிறானால் காதலா,
சேர்ந்திந்தப் பட்டத்தைப்
பறக்க விட்டுப் பார்ப்போமே?

மூன்றிலுண்டிரண்டு.
உமை நானே.
கண்ணகி மாதவி நான்.
சீதையும் ராதையும் நானே.
நமை யாரும் மோசம் சொன்னால்
உலகை எரிப்பேன்.
உன்னை அணைப்பேன்.
உன்னையும்.

இந்தக் கவிதைக்கரு என் தோழி சாவித்திரிக்குச் சொந்தம்.

சிலர் இருந்த நேரத்தை விட இறந்த பிறகு அதிகமாகத் தொந்தரவு செய்வார்கள். சாவி அந்த வகை. மறைந்தாலும் வளரும் நினைவுகள். எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் பழகினோம். ஒன்றாகச் சில நாள் படித்தோம். திரைக்கதை, பாடல் என்று கூட்டாக வேலை செய்தோம். அந்தத் துறையின் ஊழலும் ஏழ்மையும், அவளுடைய காதலும் என்னுடைய தேடல்களும், எங்களைப் பிரித்தது எனலாம். தொலைநோக்கு இல்லாமல் தற்காலிகத் தொல்லைகளுக்குள் சிக்கித் தொலைந்தோம் எனலாம்.

சாவி. பாதை வகுத்துக் கொண்டே பயணம் செய்த வியத்தகுப் புரட்சிப் பெண். இது அவள் நினைவில்.

15 கருத்துகள்:

  1. பெயரில்லாஜனவரி 03, 2011

    அருமையான கவிதை..

    பதிலளிநீக்கு
  2. சிலர் இருந்த நேரத்தை விட இறந்த பிறகு அதிகமாகத் தொந்தரவு செய்வார்கள்.

    நானும் உணர்ந்திருக்கிறேன். உங்களுக்கு சாவித்திரி, எனக்கு சகுந்தலை.

    பதிலளிநீக்கு
  3. சாவியின் , ஏக்கம் , புரட்சி ,நேர்மை , பிடிவாதம் , அன்பு , காதல் அனைத்தும் உங்கள் தமிழில் கவிதையாக சாகா வரம் பெற்றுள்ளன

    பதிலளிநீக்கு
  4. உங்கள் உள்ளத்தில் சாகாத சாவியால் அதைத் திறந்து எங்களுக்கு ஒரு அற்புதக் கவிதை. நன்றி ;-)

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாஜனவரி 04, 2011

    அப்பாதுரை சார், நான் எப்போதாவது தங்களின் வலைபதிவிற்கு வருவதுண்டு, புதிதாய் விஷயங்கள் படிப்பதுண்டு. இந்த வரிசையில் இன்று படித்த கவிதை சூப்பர்.. ரொம்பவே உள்ளார்ந்து வருத்தபட்டவாறு நடை உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நன்றி ANKITHA VARMA, ஜெகதீஸ்வரன், ஸ்ரீராம், பத்மநாபன், RVS, தகடூரான், ...

    பதிலளிநீக்கு
  7. அருமை

    சாவி - பூத்தூரிகையில் அவர் எழுதிய பல கவிதைகள் அபாரமானவை

    பதிலளிநீக்கு
  8. அப்பாஜி...புரட்சிக் கவிதை.
    வார்த்தைகள் தைத்து நைகின்றன ! !

    பதிலளிநீக்கு
  9. மிகவும் அருமை! இந்த கவிதை பூத்தூரிகையில் வெளியிட்டபோது வந்த பின்னூட்டங்களை என்றுமே மறக்க முடியாது. அதிலும் குறிப்பாக அரசன் அவர்களின் பின்னூட்டமும், அதற்கு உங்கள் பதில் விளக்கமும் ஆழ்ந்த கருத்துக்களுடன் அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  10. மிகச் சரளமான நடை.
    அருமையாக இருக்கு சார்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லாஜனவரி 11, 2011

    அப்பாதுரை சார்,
    பூத்தூரிகை - என்பது எங்களுக்கு "பிளாக்" தானே?

    பதிலளிநீக்கு
  12. பூத்தூரிகை பிளாக் தான், தகடூரான். யாருமே படிக்க முடியாமல் போனது பரிதாபக் கதை.

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை வரிகள் .இன்றுதான் உங்கள் ஆக்கத்தைக் கண்டேன் .மிக்க மகிழ்ச்சியாக உள்ளது .உங்களிடம் நாம் கற்பதற்கும் நிறைய விசயங்கள் உள்ளதையா .
    வாழ்த்துங்கள் எங்களையும் உங்கள் வாழ்த்துக்களால் என் கவிதை வரையும் தன்மை சிறப்புப் பெறட்டும் .மிக்க நன்றி ஐயா தங்கள் பகிர்வுக்கு .முடிந்தால் என் தளத்திலும் தங்கள் வருகையைக் காட்டுங்கள் ........

    பதிலளிநீக்கு
  14. ஒரு கண்ணனுக்குப் பல ராதை
    ரசம்.
    ஒரு ராதைக்குப் பல கண்ணன்
    ஏன் விரசம்?

    - WOW...Really a good one..

    பதிலளிநீக்கு