2015/12/20
தர்மம்?
மனிதக் கலைக்கூடம் விசித்திரமானது. தன்னறிவும் தன்னம்பிக்கையும் சரியான அளவில் கலந்து சீராக வடிவமைத்து அறிவுமுலாம் பூசி அடங்காத வெற்றி விளக்கொளியில் மிளிறும்படி வைத்தாலும், காலத் தூசும் வாழ்க்கைத் துருவும் கருணையின்றித் தொடர்ந்து தாக்கியதால் விளைந்த அவநம்பிக்கை அழுக்கில் பொலிவிழக்கும் பெரும்பான்மை மனிதப் பொம்மைகளின் நடுவே, பண்பை மட்டும் அட்சயபாத்திரப் பருக்கை போல் எப்படியோ பிடித்துக்கொண்டு அவலத்திலும் அழியாத அழகாய்த் தோன்றும் பொம்மைகள் சில... கலைக்கூடத்தின் விசித்திரத்தையும் கொடூரத்தையும் நியாயப்படுத்துவது வேதனையைக் கடந்த வியப்பு.
கும்பகோணத்திலிருந்து இரவுப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ரதிமீனா நிறுவனப் பேருந்து ஒன்றில் சீட்டு வாங்கியிருந்தேன். முன்னர் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். வண்டியும் இருக்கையும் ஓரளவுக்கு வசதியாகவும் சுத்தமாகவும் இருக்கும். இந்த முறை வாய்த்தது பாடாவதி வண்டி. சாய்விசையை அழுத்தினால் பின்னாலிருந்த பெண்மணி மடியில் ஒரேயடியாகச் சாய்ந்து விட்டது. அவர் அலற, தொடர்ந்து நான் அலற... சிரமப்பட்டு எழுந்து இருக்கையை மேலெழுப்பினேன்.. ஜன்னலோரப் பக்கத்து இருக்கைக்கு ஆள் வருவதாகவும் வேறு இடம் இல்லையென்றும் சிப்பந்தி சொன்னதால், என் இருக்கையிலேயே நிமிர்ந்த நெஞ்சும் நிறையாத கண்டனமும் கூடியக் கண்மூடிப் பார்வையுடன் அமர்ந்திருந்தேன். பேருந்து கிளம்பும் தருணத்தில் பக்கத்து இருக்கைக்காரர் ஏறிக்கொண்டார். எழுந்து வழிவிடும் பொழுதே ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டோம்.
முரளி என்கிற கோபாலகிருஷ்ணனை நான் சடுதியில் அடையாளம் கண்டதன் பின்னே சில காரணங்கள் உண்டு. என் காரைக்கால் வாழ்வின் மூன்று நண்பர்களில் ஒருவன் முரளி என்பது ஒரு காரணம். என் வாழ்வில் நான் செய்த முதலும் கடைசியுமான திருட்டுக்குக் கூட்டாளி என்பது ஒரு காரணம். திருட்டை விடுவோம். மறக்க முடியாத காரணம் உண்டென்றால் அது அனந்தராமன். முரளியின் அப்பா.
1967ம் வருடம் ஜூன் மாதம் காரைக்காலில் குடிபுகுந்த முதல் நாள். எங்கள் தெருவின் கடைசி வீட்டில் தனியாக வாசலில் உட்கார்ந்திருந்த முரளியிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். தன் பெயரைச் சொல்லி, "எங்கப்பாம்மா ஆஸ்பத்திரி போயிருக்காங்க... எங்க தாத்தா இன்னிக்கு காலைல தூக்கு போட்டுக்கிட்டாரு..." என்றான்.
ஒரு கணம் எனக்கு என்ன சொல்வதென்று தோன்றவில்லை.
என் கைகளைப் பிடித்துக் கொண்டு "நல்லா இருக்கியா துரை?" என்றான். "சதாபிஷேகத்துக்கு நீ காரைக்கால் வந்தப்ப பாத்தோம்.. பதினஞ்சு வருஷம் இருக்குமா?"... வசதியாக உட்கார்ந்து கொண்டு... "சாஞ்சுக்கயேன்?". என்றான்.
ஒரேயடியாகச் சாய்ந்ததைச் சொன்னதும் சிரித்தான். "காசு வாங்குறதுல குறியா இருக்கானுங்களே தவிர பயணிகளுக்கு வசதியா ஏதாவது செய்யறாங்களா பாரு"
"விடு. என் துரதிர்ஷ்டம் இந்த மாதிரி சீட் கிடைச்சுது" என்றேன்.
"வேறே சீட் கிடைச்சிருந்தா இப்ப நாம சந்திச்சிருக்க முடியுமா? அதுவும் அதிர்ஷ்டம் தானே?" என்றபடி இருக்கையை நேராக்கிக் கொண்டான். "நானும் இப்படியே உக்காந்துட்டு வரேன்".
இதான் முரளி என்கிற கோபாலகிருஷ்ணன். எதையும் நிறைவுக் கோணத்தில் மட்டுமே பார்ப்பவன். படுபாவி, மாறவே இல்லை.
"மெட்ராஸ் போறியா?" என்றான். இவனாவது மெட்ராஸ் என்கிறான். மெட்ராஸ் எனும் ஒற்றைச்சொல் கால எந்திரம் இன்னும் எத்தனை நாள் பயணத் தகுதியில் இருக்குமோ தெரியவில்லை.
"ஆமாம்.. அம்மாவைப் பார்க்க வந்தேன்" என்றேன்.
"கும்மோணத்துலயா இருக்கா உங்கம்மா? எப்படி இருக்கா? சௌக்கியமா?"
தலையசைத்தேன். "நீ எங்கே இங்கே?" என்றேன்.
"பத்து வருஷமா இங்கதான் வேலை பாக்கறேன். டவுனைஸ்கூல்ல கணக்கு வாத்தியார்...." சற்றுத் தயங்கி, "வேலை பாத்தேன்னு சொல்லணும்" என்றான்.
"ஏன்?"
"இன்னிக்குக் காலைல வேலையை விட்டுட்டேன்"
"ஏன்?"
"அவசரமா மெட்ராஸ் போகணும். இனிமே மெட்ராஸ் வாழ்க்கைதான் போலிருக்கு"
கேள்வி கேட்காமல் அவனைப் பார்த்தேன்.
"என் பையன் ஸ்ரீகிருஷ்ணன்... தீபாவளிக்கு மொதநாள்... முப்பதாவது பொறந்த நாளன்னிக்கு... தற்கொலை பண்ணிக்கறதுக்காக பாதி ராத்திரி எட்டாவது மாடியிலந்து விழுந்துட்டான்.."
அவன் சொன்னது என்னை உறைய வைத்தது.
பிறப்பிறப்பு புரியாத அந்த வயதிலும் செய்தியின் தீவிரம் புரிந்தது. "என்ன சொல்றே? உங்க தாத்தா தூக்கு போட்டுட்டாறா?"
"ஆமாம். திடீர்னு காலம்பற எங்கம்மா கத்தறா. என்னானு நானும் அப்பாவும் எழுந்து பாத்தா... ஹால்ல எங்க தாத்தா சீலிங் பேன்ல தொங்கறாரு. எங்கப்பா என்னை பெட்ரூம்ல தள்ளிக் கதவை சாத்துறதுக்குள்ள நான் பாத்துட்டேன். தாத்தா கால் ஆடிட்டே இருக்கு. தலை சாஞ்சு கிடக்கு. தாத்தாவை கீழே இறக்கி எங்கப்பா டாக்ஸி கூட்டிட்டு வந்து பெரியாஸ்பத்திரிக்கு போயிருக்காங்க..." என்றவன், அதே ஓட்டத்தில் வெண்மையாக "நீ ஊருக்குப் புதுசா? உங்க வீடு மலர் வீட்டுக்குப் பக்கத்துல தானே? உங்கப்பாவை நான் பாத்துருக்கேன். மோட்டார்பைக் வச்சிருக்காரு தானே? எங்கப்பா கிட்டே சைக்கிள் கூட கிடையாது" என்றான்.
எந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுப்பது என்பது புரியவேண்டிய அவசியமில்லாத வயதின் வசதியில் பொதுவாகத் தலையசைத்தேன். "எங்கம்மாவும் நாங்களும் இன்னைக்குக் காலைல வந்தோம். போன வாரமே நாகூர் வந்துட்டோம். அங்கே எங்க பெரியம்மா இருக்காங்க. எங்க பெரியம்மா பையன் ரகு என்னோட பெரியவன். குடுகுடுபாண்டியோட சண்டை போட்டான் தெரியுமா? அங்கேந்து பஸ்ல நேத்திக்கு ராத்திரி வந்தோம். எனக்கு ஒரு தம்பி மூணு தங்கை. தம்பியும் கடைசி தங்கையும் மெட்ராஸ்லயும் வாசுதேவநல்லூர்லயும் இருக்காங்க. எங்கப்பா அடிக்கடி வேலையை விட்டுடறாருனு அவங்களை எங்க தாத்தா பாட்டி பாத்துக்கறாங்க" என்று செய்திகளைத் தொடர்பில்லாமல் அறிவித்தேன்.
"நிர்மலா ராணி ஸ்கூல் தானே நீயும்?" என்றான்.
"ஆமாம்.. எங்கப்பா என்னையும் என் தங்கையையும் சேத்துட்டாரு. மெட்ராஸ்ல தெரஸா ஸ்கூல்ல க்வாடர்லி வரைக்கும் படிச்சோம். நான் எப்பவும் பர்ஸ்ட் ரேங்க். இங்கே எனக்கு டபுள் ப்ரமோஷன் கொடுத்து சேத்துக்கிட்டாங்க. என் தங்கைக்கு டபுள் ப்ரமோஷன் கிடையாது. அதே க்ளாஸ்லதான் படிக்கணும்." என்றேன். என்ன பெருமையோ தெரியவில்லை.
"படிக்க்க்க்கிற புள்ளையா?" என்றான் இழுத்து. என்னை மேலும் கீழும் பார்த்தான். "எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா உன் குசுவைக் குடிக்கச் சொல்லுவாரு"
"என்னது?"
"யாராவது பர்ஸ்ட் ரேங்க் பையன் எங்க வீட்டுக்கு வந்தா உடனே குசு குடிரானு ஆரம்பிச்சுடுவாரு"
"ஏன்? நீ நல்லா படிக்க மாட்டியா?"
"படிப்பேன். ஆனா எப்பவும் அஞ்சாவது ஆறாவது ரேங்கு தான்"
திடீரென்று தெருமுனையில் அலாரம் போல் மணி அடிக்க, திரும்பினோம். ஒரு ஆம்புலன்ஸ் வண்டி அவசரமாக வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பேர் ஒரு படுக்கையில் வெள்ளைத துணி போர்த்திய உடலை அவசரமாக வெளியே எடுத்து வீட்டு ஹாலில் கிடத்தி வந்த வேகத்தில் வண்டியுடன் காணாமல் போனார்கள். விசை தட்டினாற்போல் அழுகை. ஓலம். திடுக்கிட்டேன். வார்த்தை வராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். முரளியின் அப்பா அனந்தராமன் என்னிடம் வந்து அன்புடன் "யாருப்பா அம்பி நீ?" என்றார். சொன்னதும், "இதெல்லாம் ஒண்ணுமில்லே. பாத்து பயந்துடாதே. இவனோட தாத்தா வைகுண்டம் போயிட்டார்: நாங்கள்ளாம் இருந்து வழியனுப்பணும். நீ ரெண்டு நாள் கழிச்சு விளையாட வா" என்றார் சாதாரணமாக.
"என்ன இப்படி சாதாரணமா சொல்றே?" என்றேன் சற்று நிலைதடுமாறி.
"ப்ராப்தம். அவனுக்கு என்ன பிரச்சினையோ?. கடன்னு சொல்றா. பொண்டாட்டினு சொல்றா. வேலைன்னு சொல்றா. கொஞ்ச நாளாவே லூசாட்டம் என்னமோ பேத்திண்டிருந்தான்னு சொல்றா... நாங்கதான் யாருமே கவனிக்கலேயோ என்னவோ?"
கேட்பதா கூடாதாவென்று புரியாமல் காத்திருந்தேன். அவனாகவே தொடர்ந்தான். "ஆனா சாகலே பாரு. அவனோட துர்பாக்கியம் கரெக்டா ஒரு காய்கறி லாரி மேலே விழுந்துட்டான். ரோட்டுல விழுந்திருந்தாலாவது பொட்டுன்னு போயிருப்பான். இப்படி மண்டைல அடிபட்டு... லாரிக்கார புண்யவான் உடனே ஸ்ரீக்ருஷ்ணாவை ஆஸ்பத்திரிலே சேர்த்து... நானும் ஸ்வர்ணாவும் தீபாவளியன்னிக்கு அடிச்சுண்டு ஓடினோம். ஆஸ்பத்திரிலே கோமால கிடக்கான்... பத்து பதினஞ்சு நாளாவது தீவிர மருத்துவ கவனிப்புல இருக்கணும்னுட்டாங்க ஆஸ்பத்திரிலே. அவனைத் தினம் போய் கவனிக்கறதுக்காக இவ முடிச்சூர்ல அக்கா வீடு காலியா இருக்கேன்னு அங்க தங்கிண்டு இருந்தா. நான் திரும்பி வந்துட்டேன். அடிச்சுது மெட்ராஸ்ல பத்து நாள் பேய்மழை. வெள்ளிக்கிழமை... நல்ல முகூர்த்த நாளா பார்த்து... வீட்டுல தண்ணி அளவு ஏறிண்டே வந்து வெள்ளத்துல சட்டுன்னு வெளில வர முடியாம... உதவிக்கு ஆள் இல்லாம... வீட்டுக்குள்ளயே மூழ்கிச் செத்துட்டா ஸ்வர்ணா. ரெண்டு நாள் கழிச்சுதான் தெரிஞ்சுதாம். அழுகிக் கிடக்காளாம். நேத்திக்கு ஆஸ்பத்திரிலந்தும் சேதி வந்துது. ஸ்ரீக்ருஷ்ணா கோமாலந்து வந்துட்டான். ஆனா மூளை குழம்பியிருக்கு. வலதுபக்கம் வாதம். பேச்சு வரதுக்கு நாளாகும்னு... அரக்க பறக்க கிளம்பிட்டேன். போய் அவளுக்குக் காரியம் பண்ணனும். அப்புறம் அவனுக்கு கைங்கரியம் பண்ணனும்..."
இன்னும் ஏதாவது விபரீதமாகச் சொல்லப் போகிறானோ என்று விளங்காமல் சில கணங்கள் விழித்தேன். சுதாரித்து "என்ன சொல்றதுனே தெரியலே முரளி.. இத்தனை அதிர்ச்சியை ஒட்டு மொத்தமா கேக்கறதுக்கே எனக்கு சக்தியில்லை... நீ எப்படி யதார்த்தமா இருக்கேன்னு புரியலே... எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடா" என்றேன்.
"சகடம் உருண்டுட்டே இருக்கு துரை. இன்னிக்கு செத்தா நாளைக்கு ரெண்டு. இதுல வருத்தப்பட்டும் துக்கப்பட்டும் என்ன ஆகப்போறது?" என்றான். "ஒருவேளை நானும் அவளோட நாலு நாள் தங்கியிருந்து.. நானும் போயிருந்தா? பிள்ளையை யார் கவனிக்கறது? இப்ப ஸ்ரீக்ருஷ்ணாவுக்காவது நான் இருக்கும்படி ஆச்சு பாரு? அதுவும் ஒரு ஆசீர்வாதம் தானே?"... சிறு மௌனத்துக்குப் பிறகு... "எங்கப்பா ஞாபகமிருக்கில்லையா உனக்கு? அவர் அன்னிக்கே சொன்னாராம்.. ஸ்வர்ணாவுக்கு ஜலகண்ட ம்ருத்யு சாத்யம்னுட்டு அவ அப்பாகிட்டே... சொன்னமாதிரியே ஸ்வர்ணாவுக்கு தண்ணீல சாவு. அனந்தராமன் நாக்கு அசாத்திய வாக்கு இல்லையோ?"
நான் அனந்தராமனையே பார்த்துக் கொண்டிருந்தேன். "என்ன மாமா இப்படிச் சொல்றீங்க? அதிர்ச்சியா இருக்கு"
"என்னைப் பத்தி உனக்குத் தெரியுமில்லையா? எனக்கு கிடைச்சிருக்குற சக்தி ஒரு மகா ஆசீர்வாதம். அதை ஸ்வயலாபத்துக்கு உபயோகிச்சா நிக்காது. மத்தவா பலனுக்குக்காகக் கிடைச்ச சக்தி. அப்படித்தான் இன்னி வரைக்கும் வாழ்ந்துண்டிருக்கேன். எனக்கோ என் நேர் வாரிசுகளுக்கோ இதைப் பயன்படுத்தக்கூடாதுனு வைராக்கியமா இருக்கேன்..." சற்றுத் தயங்கி..."இருந்தேன்னு சொல்லணும்... இல்லேடா... நீ எங்கந்தோ இங்கே வந்திருக்கே... என்னைப் பாக்க வந்தது ஒரு செய்தி போலப் பட்டுது.. அதான்.. உங்கிட்டே சொல்லலாம்னு தோணித்து... பாரமா நினைச்சுக்காதே.. தயவுசெஞ்சு இதை முரளிகிட்டே நான் சொன்னதா சொல்லிடாதே... நான் உசிரோட இருக்குறவரைக்கும் அவனுக்கு இது தெரியவேண்டாம்... எனக்கு செய்யுற ஒரு உதவியா நினைச்சுக்கோ"
அவர் சொன்னது எனக்குள் இறங்கி என்னவோ செய்தது. முரளியின் திருமணத்துக்குப் போனதோடு சரி. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து அவனைப் பார்க்க வந்திருந்தேன். அவன் அப்பாவுக்கு சதாபிஷேகம் என்று என்னை வற்புறுத்தி அழைத்திருந்தான். வந்த இடத்தில் இப்படி ஒரு செய்தியை அனந்தராமன் சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.
அவர் எதிரே நின்ற சட்டையற்றச் சிறுவனை குப்புறப் படுக்க வைத்து அவன் கைகளை இறக்கை போல் விரித்துப் பிடித்தார். சிறுவனின் தந்தையிடம் சிறுவனின் இடது கையை அழுத்திப் பிடித்துக் கொள்ளச சொன்னார். அனந்தராமன் சிறுவனின் சூம்பிக் கிடந்த வலது கையை அழுத்திப் பிடித்துக் கொண்டார். சிறுவன் அலறிக் கொண்டிருந்தான். "கண்டுக்காதீங்கோ.. சித்த நாழி அப்படித்தான் இருக்கும்.." என்றார். ஒரு கிண்ணத்தில் குழைத்து வைத்திருந்த வண்ண விழுது ஒன்றை எடுத்து சிறுவனின் முதுகுத் தண்டில் தடவி அழுத்தித் தேய்த்தார். பிறகு தண்டிலிருந்து மேலாகவும் குறுக்காவும் நீவினார். நீவியபடியே சிறுவனின் வலது கையை மெள்ள மெள்ள உயர்த்தினார். சிறுவன் அலறிக்கொண்டிருந்தான். நிறுத்திய அனந்தராமன், "இன்னிக்குப் போறும். புதன் சாயந்திரம் அஸ்தமனத்துல வந்துருங்கோ" என்றார்.
சிறுவனின் தாய் எங்கள் வீட்டில் போல் பல வீடுகளில் வேலை செய்து பிழைப்பவர். தந்தை மாவு மில் அருகே சைக்கிள் ரிக்ஷா வைத்திருந்தார். சிறுவன் பள்ளிக்கூடம் போகவில்லை. விளங்காத வலது கையுடன் எங்கிருந்து படிப்பது? அதைத்தவிர சிறுவனின் சாதி சமூக அந்தஸ்து, கிறுஸ்துவப் பள்ளிகளில் கூட ஏற்கப்படவில்லை.
மூன்றாவது மாதமோ என்னவோ சிறுவனுக்கு எல்லாம் சரியாகி விட்டது. விளங்காதிருந்த கை சுத்தமாகச் சரியாகிவிட்டிருந்தது. ஒரு பைசா பணம் வாங்கவில்லை அனந்தராமன்.
அதே நினைவாக, "உங்கப்பா இருந்தா இந்நேரம் ஸ்ரீக்ருஷ்ணாவைக் குணப்படுத்தியிருப்பார்" என்றேன். அனந்தராமன் என்னிடம் சொன்னதை அவனிடம் சொல்லத் தோன்றியது. "டேய்... சதாபிஷேகத்துக்கு வந்தப்போ உங்கப்பா எங்கிட்டே ஒண்ணு சொன்னாருடா.. எனக்கு அப்போ புரியலே.. இப்போ.."
உடனே என்னைத் தடுத்தான். "வேணாம்டா... என்னைப் பத்தி ஏதாவது சொல்லியிருந்தா தயவுசெஞ்சு சொல்லாதே.." அவன் குரலில் சற்று ஆத்திரம் கலந்திருந்ததை உணர்ந்தேன்.
வண்டி மாயவரம், கடலூர், நெய்வேலி என்று வரிசையாகக் கடந்து கொண்டிருந்தது. எங்கேயாவது காபி டீ சாப்பிட நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். சமீப மழையின் விளைவாக வழியோர கும்பகோணம் டிகிரிக் காபிக்கடைகள் எல்லாம் மூடியிருந்தன. ஏற்கனவே அங்கே காபி சகிக்காது. நல்லது என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் எங்கேயாவது ஒரு கப் காபி சாப்பிடக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
"கொஞ்சம் கடுப்பா பேசிட்டேன்னு நினைக்காதே... யார் யாருக்கோ எங்கப்பா ஆரூடமும் மருந்தும் வாக்கும் சொல்லியிருக்காரு... ஞாபகம் இருக்கா.. உனக்கு நாலாவது தங்கை பொறந்து உங்கம்மா பொழைப்பாளானு படுத்துக் கிடந்த போது எங்கப்பா நீங்க எல்லாம் அமோகமா இருக்கப் போறேள்னு சொன்னது? உங்கப்பாவை மோட்டார்பைக் ஓட்டுறதை நிறுத்தச் சொன்னது? நீ அமேரிக்கா போவேன்னு அப்பவே சொன்னாரு ஞாபகம் இருக்கா?.."
"ஏன் ஞாபகம் இல்லே?" என்றேன்.
எதிர்பாராததை ஆரூடமாகச் சொல்வதிலும் நிகழ்த்திக் காட்டுவதிலும் அனந்தராமன் வல்லவர். பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். நேரிடையாகவும் அனுபவித்திருக்கிறேன். எதிர்கால நிகழ்வுகளைச் சொல்லுவார். குணப்படுத்த முடியாது என்று சொல்லப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்துவார். எங்கிருந்தெல்லாமோ வருவார்கள். ஜோசியம் கேட்கவும். தேவமருந்து வாங்கவும். மருத்துவம் என்று ஒரு நாளும் சொல்லமாட்டார். தேவமருந்து என்றே சொல்வார். காரைக்காலில் இருந்த போது என் பாட்டி அடிக்கடி சொல்லுவார். "அந்த அதர்வண பிராமணன் வீட்டுக்குப் போகாதேடா... தலைகீழா நடந்து வரப்போறே ஒரு நாளைக்கு. சொல்றதைக் கேளு".
"சொல்லுங்கோ" என்றேன்.
அனந்தராமனுக்கு சதாபிஷேகம் முடிந்த மறுநாள். காரைக்கால் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தொடங்கி திருவாரூர், திருவிடைமருதூர், சுவாமிமலை, திருநள்ளார் கோவில்களுக்கு வசதியான காரில் அழைத்துச் சென்று திரும்பியிருந்தேன். என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
என் கைகளைப் பிடித்துக் கொண்டார். "என் பையன் முரளிக்கு ஆயுசுல நிம்மதியே கிடைக்காதுடா. எங்கப்பாவோட கர்மா என் பேரனைக் கட்டியிருக்கு. ஆனா எனக்குக் கிடைச்ச விடுதலை என் பையனுக்குக் கிடைக்காது போலிருக்கு.. நடக்கும்னு தெரிஞ்சே சில சமயம் நடக்காதுனு ஏதோ ஒரு நம்பிக்கைல சில காரியங்களைச் செஞ்சுடறோம்" என்றார். குரல் விம்ம,"இதுக்கு மேலே என்னால சொல்லமுடியாது. இதையே யார் கிட்டேயாவது சொல்லணும்னு மனசு குடைஞ்சு தள்ளித்து. உன்னோட இத்தனை கோவில்களுக்குப் போயிட்டு வந்தப்போ எனக்கு கிடைச்ச அசாத்திய நிம்மதியிலே துணிஞ்சு இதைச் சொல்லிட்டேன்" என்றார். "என் பேரனால அவனுக்கு நிம்மதி போயிடும். ஒரு உதவி பண்ணு... நாளைக்கு நான் போனப்புறம்.. பேரனுக்கு ஏதாவதுனா முரளி எல்லாத்தையும் விட்டு வடக்கே காசிலயோ கேதாரநாத்லயோ சன்யாசம் வாங்கி ஓஞ்சுடச்சொல்லு. சம்சார பந்தம் அவன் நிம்மதியைக் கொலைச்சு சாகற வரைக்கும் விடாது". அதற்குள் ஸ்வர்ணா காபி கொண்டு வர சுதாரித்தார்.
மோசமான காபி என்றாலும் அப்போதைக்கு அது தேவைப்பட்டது. பாண்டிச்சேரி அருகே எங்கேயோ நிறுத்தியிருந்தார்கள் வண்டியை.
"துரை.. எனக்கும் சில சமயம் தோணிருக்கு. எங்கப்பா கிட்டேயே கேட்டிருக்கேன். இத்தனை பரோபகாரம் பண்றேளே.. எனக்குக் கொஞ்சம் உபகாரம் பண்ணக்கூடாதானு.. என் வாழ்க்கை நதி எப்படியெல்லாம் ஓடும்னு பாதை போட்டுக் காட்டியிருந்தா வேறே முடிவுகள் எடுத்திருப்பேனோ என்னவோனு அடிக்கடி தோணும். அப்புறம்தான் உணர்ந்தேன். எங்கப்பா ஆரூடத்துக்கு ஏத்தமாதிரி நான் முடிவுகள் எடுத்திருந்தா அது மட்டும் எனக்கு நிம்மதியையோ ஆனந்தத்தையோ கொடுத்திருக்கும்னு என்ன நிச்சயம்? அதுவுமில்லாம... அவரோட தர்மத்தை எனக்காக விட்டுக்கொடுத்தாருனு ஒரு பாரம் வேண்டாம் பாரு..."
"எதுடா தர்மம்? ஒரு துரும்பைப் பிடிச்சுட்டாவது கரையேற மாட்டோமானு தினம் தினம் வாழ்க்கைக் கடல்ல நீந்திட்டிருக்குற கோடிக்கணக்கான பேர் மத்தியிலே... அப்படிக் கிடைச்ச துரும்பைக் கூட ஊழல்லயும் அரசியல்லயும் முட்டாள்தனத்துலயும் இழந்துட்டு அல்லாடிட்டிருக்குறவங்க மத்தியிலே.. இப்படியொரு சக்தி கிடைச்சிருக்கு உங்கப்பாவுக்கு. பேராசையெல்லாம் வேண்டாம்.. ஒரு சின்ன வழியாவது காண்பிச்சிருக்கலாம் இல்லையா? ஏழைலந்து அரசியல்வாதி வரைக்கும் அவனவன் பணமா கொட்டிக் கொடுத்தப்ப உங்கப்பா ஒரு காசு கூட வாங்காதது எந்த விதத்துல நியாயம்? அப்படி வாங்கியிருந்தா ஒருவேளை நீ இருந்த இடத்துலயே உன் பையனோட அமோகமா இருந்திருக்கலாமே? தனக்கு மிஞ்சித்தாண்டா தானமும் தர்மமும்"
"நீ சொல்றது உனக்கும் எனக்கும் நியாயமாத் தோணினாலும் அது அவரோட தர்மம் ஆகாதுடா. பரோபகாரம் அவருக்கு நிம்மதியைக் கொடுத்துது. சக்தியை தனக்குச் சாதகமா பயன்படுத்திட்டிருந்தா குற்ற உணர்வு தான் மிஞ்சியிருக்கும். எங்கப்பாவை எனக்குத் தெரியும். அவருக்குக் கிடைச்ச அபூர்வ சக்தியினால எங்க தாத்தா தூக்குப் போட்டுட்டதிலந்து என் பையன் நிலமை வரைக்கும் தெரிஞ்சிருக்காம இருக்கும்னு நான் நினைக்கலே. எனக்குச் சொல்லாத காரணத்தையும் நான் வெறுக்கலே"
"நீ இருக்குற நிலமைல..உன் பையனுக்கு இருக்குற நிலமைல.. உன்னால பாத்துக்க முடியுமா?"
"ஏன்?"
"ஸ்வர்ணா தவறிட்டாங்கறே.. உனக்கும் வயசாயிடுச்சு.. வேலையை விட்டாச்சுன்றே.. உன் பையனுக்கு மூளை குழம்பியிருக்குனு சொல்றே. நீ யாருனு கூட அவனுக்குத் தெரியாதுடா.."
"அதனால என்னடா. என் பிள்ளையை எனக்குத் தெரியுமே?"
"முரளி.. தப்பா நினைக்காதே.. இப்பல்லாம் இதுக்குன்னு தனி இடம் வசதியெல்லாம் கிடைக்குது. மொத்தமா பணம் கட்டி ஸ்ரீக்ருஷ்ணாவை சேத்துட்டா அவங்களே பாத்துப்பாங்க. அப்பப்போ போய் பாத்துட்டு வரலாம்..."
"என்னடா உளறல் இது? எனக்குப் பொறந்த குழந்தைடா. யார் பாத்துப்பாங்க? காசுக்காக வேலை செய்யுறவங்களா? போடா"
"கண்மூடித்தனமா பேசாதடா. உன்னால அவனைப் பார்த்துக்க முடியாது. உங்கிட்ட வசதியும் கிடையாது"
"எனக்கென்ன? ஸ்வர்ணாவோட நகையெல்லாம் வித்து இருக்குற பிராவிடன்ட் பணத்தையெல்லாம் எடுத்து அவனைக் கவனிச்சுக்க வேண்டியதுதான். இதைவிட எனக்கு என்ன வேலை?"
"பணத்தைச் சொல்லலே. நாளைக்கே உனக்கு உடம்புக்கு முடியாமப் போனா? அட.. உனக்கே ஒண்ணு ஆறதுனு வை.."
"அதனால என்ன? நான் இருக்குற வரைக்கும் அவனைப் பாத்துண்ட திருப்தியும் நிம்மதியும் போறுமே. பணம் கட்டித் தனியாச் சேத்திருந்தாலும்... எப்படியிருந்தாலும் எனக்கப்புறம் அவனுக்கு என்ன நடக்கும்னு என்ன உத்தரவாதம் இருக்கு?"
"அதெப்படிடா.. நீ போனப்புறமும் அவன் உன் குழந்தை தானே? யாராவது கவனிக்க வேண்டாமா?"
"துரை.. நான் போனப்புறம் நானே இல்லைடா. எனக்கு ஏது குழந்தை? நான் போனப்புறம் யாராவது கவனிக்கணுங்கறதுக்காக இருக்குறப்ப நான் கவனிக்காம இருக்கலாமா? இருக்குறவரைக்கும் தானே என் தர்மமும் நியாயமும் எனக்கு தைரியத்தையும் நிம்மதியையும் கொடுக்கவோ கெடுக்கவோ முடியும்..? எனக்கப்புறம்.. அந்தப் பார்வதி பரமேஸ்வரன் பாத்துக்கட்டும்.. ஒரு பேச்சுக்கு சொல்றேன்... நாளைக்கு உன் குழந்தைக்கு இப்படி ஆச்சுனா விட்டுப் போயிடுவியா?"
"விட்டுப் போகமாட்டேன். விடாம பிடிச்சிட்டிருக்கவும் மாட்டேன். கண்டிப்பா ஒரு இடத்துல சேர்த்து பணம் கட்டி... என் சக்தியின் வரம்பு எனக்குத் தெரியும்"
"அப்படித் தெரிஞ்சா இத்தனை நாள் எல்லாம் பண்ணினே? சின்னக் குழந்தையா நடை பழகினதுலந்து... கைல நாலணா இல்லாம அமெரிக்கா போனதுலந்து... எந்த சக்தியோட வரம்பு உன்னைக் கட்டுப்படுத்தியிருக்கு?"
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வண்டி கிளம்பத் தயாரென்று ஒலிக்க, அவசரமாக ஏறிக்கொண்டோம்.
"எங்கப்பா தெரிஞ்சோ தெரியாமலோ எனக்குக் கொடுத்த ஒரு பெரிய சக்தி என்னன்னா... எதையும் அதன் போக்குல எடுத்துக்கணுங்கிறது மட்டும்தான்... நடக்குறது நடக்கும்... அதிலே நாமளும் நடக்கப் பழகிக்கணும்...அவ்வளவுதான். நான் அப்படிக் கேட்டேன்னு தப்பா நினைக்காதே. ஒரு நாளும் உன் குழந்தைக்கு எதுவும் ஆகாது" என்றான் உட்கார்ந்தபடி.
"சே சே! நான் அப்படியெல்லாம் நினைக்கலேடா. நீ நிம்மதியா இருக்கணும்னுதான் அப்படிச் சொன்னேன"
"தெரியும்டா. இருந்தாலும் அப்படிக் கேட்டதுக்கு என்னை மன்னிச்சுடு. ஒரு கணம் தவறி வரம்பு மீறிட்டேன்" என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டான். "உன் கூட பேசினதே பெரிய பாரம் இறங்கினாப்புல இருக்கு. நீ ஊருக்கு வந்ததே தெரியாது. இருந்தும் இன்னிக்குப் பார்த்து இதே பஸ்ல ஏறி என் பக்கத்துல உக்காந்து வரணும்னு இருக்கா சொல்லு? இதான் செய்தி. உனக்குப் புரிஞ்சாலும் ஏத்துக்க மாட்டே இல்லையா? கண் அசத்திட்டு வரது. கொஞ்ச நேரம் தூங்கறேன்" என்றபடி கைகளைத் தளர்த்திக் கண்மூடினான். நொடிகளில் குறட்டை.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கண்மூடியவுடன் தூங்குகிறானே? இத்தனை பிரச்சினைகளின் இடையே? எப்படிச் சமாளிக்கப் போகிறான்? ஏதாவது உதவி செய்வதா? அவனுடைய சிக்கல்களைச் சிந்தித்துக் குழம்பி என் தூக்கத்தைத் தொலைத்தேன்.
குரோம்பேட்டையில் நிற்கவேண்டி வண்டி வேகம் குறையத் தொடங்கியது. முரளியை எழுப்பி விடைபெற எண்ணி அவனைப் பார்த்தேன். கவலையில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான். முகத்தில் சிறு புன்னகை கூட அரும்பியிருந்தது. இவனுக்கெல்லாம் எதற்கு நிம்மதி? அனந்தராமனின் கவலைக்குப் பொருளில்லை என்பது பொட்டில் அடித்தது. தந்தை மகன் இருவரின் தர்மமும் சற்றே புரிந்தது போல் பட்டாலும்.. தர்மமோ நம்பிக்கையோ ஏதோ ஒன்று இவனைத் தொடர்ந்து நடத்திச்செல்லும் என்பது தெளிந்தது. என் தொடர்பு விவர அட்டை ஒன்றை அவன் சட்டைப்பையில் செருகி, இறங்குவதற்காக எழுந்தேன்.
2015/10/02
பாடல் பெற்ற பதிவர்
எண்ண முதிர்ச்சி எழுத்து வளர்ச்சியொடு
அண்மைப் பதிவுகளில் ஆளுமை - நுண்மை
பிறழா இலக்கிய நூலெழுதி இன்னும்
சிறந்து வளரட்டும் சீனு.
காதல் கடிதத்தில் சீனுவுடன் ஏற்பட்ட பழக்கம் இனிமையாகத் தொடர்கிறது :-).
எழுத்து மெருகு என்று ஏதாவது இருந்தால் இவரின் வளர்ச்சிக்கு உதாரணமாகச் சொல்வேன். (நம்ப முடியாதவர்கள் சீனுவின் 2012 காலப் பதிவுகளையும் சமீபப் பதிவுகளையும் படிக்கலாம் :-). அதிகம் படிக்கிறாரா அல்லது எழுதுகிறாரா, இரண்டுமா?
வியக்க வைக்கும் வளர்ச்சி. வாழ்த்துக்கள் சீனு!
அடுத்து பாடல் பெறும் பதிவர்: ஷைலஜா
முன்னர்:
சுப்புத்தாத்தா
ஜோதிஜி
கீதா சாம்பசிவம்
பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி
2015/09/18
புத்தகம் சாராயம் கச்சாமி
1. புத்தக விமரிசனங்கள்.
2. சாராயம் காய்ச்சுவது எப்படி?
3. பயணத் துக்கடா.
திருவிழாவுக்கு நண்பர்களுடன் போகிறீர்கள். திடீரென்று பூகம்பம். கடலோரத் திருவிழா என்பதால் சுனாமியும் சேர்ந்து வருகிறது.. என்ன செய்வீர்கள்? அடித்துப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி எப்படியோ தப்பிக்கிறீர்கள். சற்று அமைதியானதும் புரிகிறது. உடன் வந்த உயிர் நண்பர் மோகனை பூகம்பத்திலோ சுனாமியிலோ விட்டு வந்த விவரம். நீங்கள் திடுக்கிடலாம். வருத்தப்படலாம். அழலாம். வேறே என்ன செய்ய முடியும்? சரி, நடந்தது மோகனின் விதி, எல்லாம் ஆண்டவன் செயல் என்று மெள்ள நடைமுறைக்கு வருவீர்கள். இல்லையா?
திருவிழாவுக்கே இப்படி எனில், நண்பர் மோகனை இன்னொரு கிரகத்தில் தனியாக விட்டு வர நேரிட்டால்? அது தான் நிகழ்கிறது. The Martian கதையில். மோகனுக்குப் பதில் மார்க் வாட்னி.
நான் சமீபத்தில் படித்த மிகச் சுவாரசியமான புதினம்.
ஏரீஸ்-3 கலனில் செவ்வாய்க்கு செல்லும் குழு அங்கே புயலில் சிக்கித் தடுமாறுகிறது. உடன் வந்த பயணி மார்க் இறந்துவிட்டாரென்று நம்பி பூமிக்குப் பயணிக்கிறது. இரண்டு செவ்வாய் நாள் பொறுத்து மார்க், 'நான் செத்துப் பொழச்சவண்டா' என்று பாடி எழுகிறார். அல்லது எழுந்து பாடுகிறார்.
பிழைச்சா போதுமா? பிழைக்க்க்க்க்க வேண்டாமா? நிலை புரிந்த மார்க் திடுக்கிடுகிறார்.
உடனடியாக பூமியுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். பூமிக்குப் போன கலனில் தொடர்பு சாதனங்கள் இருப்பதை உணர்ந்து மறுபடி திடுக்கிடுகிறார். பதைக்கிறார். செவ்வாய்ப் பயணத் திட்டப்படி ஏரீஸ்-4 கலன் வர இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகுமென்பதும், அது செவ்வாயில் தரையிறங்கும் இடம் மார்க் இருக்கும் இடத்திலிருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் உள்ளது என்பதும் நினைவுக்கு வருகிறது. உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன், நீர் மற்றும் உணவு இருப்பைக் கணக்கிடுகிறார். குழுவின் ஆறு பேருக்கான உணவு இப்பொழுது தனக்கு மட்டுமே என்று கணக்கிட்டால் முன்னூறு நாட்களுக்குப் போதுமான உணவு இருப்பது புரிகிறது. குறைவாக உண்டாலும் நானூறு நாட்களுக்கு மேல் பிடிக்காது என்பது புரிகிறது.
மார்க் உயிருடன் இருக்கிறார் என்பது பூமிக்குப் புரியாது. அப்படி ஒருவேளை யாராவது கோள் படங்கள் வழியாகக் கவனித்துப் புரிந்து கொண்டால் ஒரு ஆசாமிக்காக தனிக் கலன் அனுப்பிக் காப்பாற்றுவார்களா? அனுப்பினாலும் அது வந்து சேர ஒரு வருடமாகலாம். அதைத் தவிர கார்பன் டையாக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் ஆக்சிஜனேடர் கருவி பழுதானால் பிழைக்கப் போவதில்லை. தண்ணீர் உற்பத்தி செய்யும் கருவி பழுதானால் பிழைக்கப் போவதில்லை. இன்னொரு புயல் வந்தால் பிழைக்கப் போவதில்லை. அனைத்து ஆபத்துகளிலிருந்து பிழைத்தாலும் பட்டினியால் சாவது நிச்சயம்.
இந்நிலையில் பொதுஜனம் என்ன செய்யும் என்பது ஒரு புறம்.. மார்க் வாட்னி எப்படிப்பட்டவர் என்பதை மெள்ளப் புரியவைப்பதே கதையின் வேர். மார்க் வித்தியாசமானவர். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவர். வாழ்ந்து காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார். இப்படித் தொடங்குகிறது கதை.
உருளைக்கிழங்கில் என்ன இருக்கிறது? வாயு என்று உடனே சொல்லத் தோன்றலாம். சற்று ஆராய்ந்தால் ஆச்சரியம். குவிந்த கையளவு உருளைக்கிழங்கு ஒன்றை வேகவைத்து (அல்லது அப்படியே) உண்டால் சுமார் நூறு கேலொரிகள் கிடைக்கும். நாளொன்றுக்குத் தேவையான கேல்சியம் அளவில் பாதி கிடைக்கும். ஒரு வாழைப்பழம், கையளவு கீரை இரண்டையும் சாப்பிட்டால் கிடைக்கும் பொடேசியத்தை விட அதிகமாக உருளைக்கிழங்கில் கிடைக்கிறது. உருளைக்கிழங்கு தோலில் ஒரு நாளைக்குத் தேவையான பைபரில் முப்பது சதம். அதைத்தவிர பி6, இரும்புச்சத்து, மெக்னீஸியம் போன்றவை... முக்கியமாக அலர்ஜிகள் மற்றும் மனச்சோர்வு குறையக் காரணமாகும் ஏன்டி-ஆக்ஸிடன்டுகள்... எல்லாம் உள்ளங்கை சைஸ் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது. (ஸ்..யப்பா.. தமிழ் கலக்காமல் ஆங்கிலத்தில் எழுதுவது சிரமம்! ;-)
பட்டினியால் சாகாதிருக்க உணவு தேவை. ஓரளவுக்கு எல்லாச்சத்தும் அடங்கியதான உணவு, எளிதில் தயாரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் இல்லையா? மார்க் வாட்னி தேர்ந்தெடுத்த உணவு? உ.கி.
உருளைக்கிழங்கை எப்படிப் பயிர் செய்வது? செவ்வாயில் உணவு உற்பத்திக்கான சூழல் இல்லையே? மனம் தளரா மார்க் திட்டமிடுகிறார். செவ்வாய் மண்ணை பூமி மண்ணுக்கு இணையாக மாற்றுகிறார். எப்படி என்று புத்தகத்தில் படிக்கவும் (மூக்கை மூடிக்கொண்டு). 'science the shit out' என்ற பஞ்ச் வரி இந்தப் புத்தகத்தினால் பிரபலமாகப் போகிறது.
ஏற்கனவே செவ்வாயில் விடப்பட்ட கலனான பாத்பைண்டர் இருக்கும் இடத்தைத் தேடிப்பிடிக்கிறார். அதை வைத்துக் கொண்டு பூமியுடன் தொடர்பு கொள்கிறார்.
இடையே பூமியில் படா ரகளை. இறந்து போன மார்க் வாட்னி ஒரு ஹீரோ என்று அத்தனை அமெரிக்கரும் புகழ, நேசாவில் வேலை பார்க்கும் மின்டியெனும் மங்கை மார்க் உயிருடன் இருப்பதை ஓசைப்படாமல் கண்டுபிடிக்கிறார். கண்டுபிடித்ததும் ஓசையெழுப்புகிறார். நேசா இயக்குனரான வெங்கட் கபூர் (ஆமாம்!) என்பவரிடம் விவரங்களைச் சொல்கிறார். வெங்கட் மிகுந்த அறிவுடையவர். ஆற்றல் உடையவர். மார்க் வாட்னி பூமிக்குத் திரும்ப முக்கியக் காரணமாகிறார். விவரங்கள் புத்தகத்தில்.
மார்க்கை அம்போவென்று விட்ட குழுவுக்கு ஒருவழியாக விவரம் தெரிகிறது. குழுவுக்கு விவரம் தெரியக்கூடாது என்று தீர்மானமாக இருந்த வெங்கட் கபூரை ஏமாற்றி மார்க் உயிருடன் இருப்பதை குழுவுக்குத் தெரியப்படுத்துகிறார் மிச் எனும் இன்னொரு அதிகாரி. குழு அதிர்கிறது. மார்க்கைக் காப்பாற்ற மீண்டும் செவ்வாயை நோக்கிப் பயணிக்கிறது கலன். க்ரேவிடி அஸிஸ்ட் எனும் அற்புதமான எளிய உத்தியைப் பயன்படுத்தி நேசாவை எதிர்த்துக் கொண்டு நண்பனைக் காப்பாற்ற விரைகிறது. அவர்கள் செய்கையில் கோபம் கொண்டாலும் நேசா.. நேசா மட்டுமல்ல.. சைனா.. உலகமே ஒருங்கிணைந்து உதவுகிறது. க்ளைமேக்ஸில் இன்னும் சில அதிரடிகள். மார்க் ஒருவழியாக பூமிக்குத் திரும்பும் கலனில் ஏறிக்கொள்கிறார். சுபம்.
பிலியன் கணக்கில் செலவு செய்து மார்க் வாட்னியை மீட்கிறார்கள். ஏன்? ஒரு தனிமனிதனை மீட்க ஏன் இத்தனை வேகம்? இத்தனை ஆர்வம்? இத்தனை முயற்சி? இத்தனை கூட்டணி? இத்தனை ஒத்துழைப்பு? எதற்காக? ஒரு உயிர் போனால் என்ன குறைந்து விடப்போகிறது? வீட்டிலும் வெளியிலும் பக்கத்து வீட்டுடனும் நாட்டுடனும் சண்டை போட்டு உயிரைத் துச்சமாகக் கருதும் நாம் செவ்வாயில் சிக்கிக் கொண்ட ஒரு உயிருக்காக ஏன் அத்தனை செலவு செய்து சிரமப்படுகிறோம்?
கதையின் சாகசங்களுக்கு அப்பால் மனிதம் எனும் மகத்துவத்தை உணரச் செய்யும் புத்தகம். நானூற்றுச் சொச்சப் பக்கங்கள். முதல் பக்கத்தில் தொடங்கிய விறுவிறுப்பு இடையில் சிறிது தொய்ந்தாலும் கடைசிப் பக்கம் வரை மறையாமல் மார்க் எப்படி பூமிக்குத் திரும்புகிறார் என்பதை அறியத் துடிக்கும் நம் வேகத்துக்கிணையாக எழுதப்பட்டிருக்கிறது. பிரமாதம்! Andy Weirன் முதல் புத்தகமாம்! பாராட்டுக்குரியவர்.
கதையைப் படமாக்குகிறார்கள். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. மேட் டேமன் மார்க் விட்னியாக வருகிறார். வெங்கட் கபூர் யாரென்று பார்த்தால் ச்வெடில் எய்ஜ்போர் எனும் நைஜீரியர். ஏன்? ஹாலிவுட் காரர்களுக்கு ஒரு இந்திய நடிகர் கிடைக்கவில்லையா? ஹாலிவுட்டுக்கு இணையாகப் படமெடுக்கிறோம், உலகநாயகன், அது இது என்று சங்கரரையும் கிங்கரரையும் தலையில் தூக்கி வைக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இது முகத்தில் அடித்தாற் போல் இல்லையோ? இந்திய நடிகர்களுக்கு உலக அப்பீல் இல்லையா? நிச்சயம் ஹாலிவுட் செய்த பிழை. இதற்காகவே இந்தப் படத்தைப் பார்ப்பதில்லை என்றுத் தீர்மானித்திருக்கிறேன். இருந்தாலும் புத்தகத்தில் வரும் காட்சிகளை, எழுத்தாளனின் கற்பனையை, எப்படிப் படமாக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல். முக்கியமாக ஒரு காட்சியை. தீப்பற்ற வேண்டிய அவசியத்தில் மார்க் அங்கேயும் இங்கேயும் தேடி கடைசியில் மரத்தினாலான ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறார். குழுவில் யாரோ விட்டுச் சென்ற சிலுவை. சீவுகிற கத்தியை ஒரு கையில் எடுத்துக் கொண்டு சிலுவையைப் பற்றுகிறார் மார்க்.
சில மாதங்களுக்குப் பின் புத்தகத்தை மீண்டும் படிப்பேன் என்று நினைக்கிறேன்.
மற்றொரு புத்தகம் ஜான் க்ரிஷம் எழுதிய நிலக்கரி சுரண்டல்காரர்கள் பற்றிய கற்பனையற்றக் கதை. கதையற்றக் கற்பனை. நூற்று எழுபதாவது பக்கத்தில் கதையைத் தொடங்கி வாசகர்களை அவமதிக்கிறார். வளவளாவுக்கு ஒரு அளா வேண்டாமா? மேல் விவரங்களை அடுத்த வரிகளில் படிக்கலாம்.
ஒரு மதியம் சீமைச் சாராயம் காய்ச்சினேன். பீர். பொழுது போகவில்லை. வாட் டு டூ?
கல்லூரி நாட்களில் முதல் அனுபவம். மேலாண்மைப் படிப்பில் beer game என்று ஒரு strategy பயிற்சி உண்டு. இந்தக் காலத்தில் அதைவிடக் கொம்பன் பயிற்சியெல்லாம் உள்ளன என்றாலும் அந்தக்காலத்தில் beer game மிகப் பிரபலம். 'சும்மா பயிற்சியில் இறங்காமல் சிறிது அசலுக்கும் ஈன்றால் என்ன?' என்ற எண்ணத்தின் விளைவு, நானும் உடன் படித்த இருவரும் பீர் காய்ச்சினோம். இன்னொரு குழு வைன் காய்ச்சியது. பயிற்சிக்கும் அதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மிகவும் சுமாராகத்தான் வந்தது. கையில் இருந்த காசை அதில் செலவழித்து விட்டதால் ஒரு மாதம் போல் இரண்டையும் குடித்துத் தீர்த்தோம். அந்த வயதில் பீர் வைன் எதுவானால் என்ன - சிங்கில் மால்ட் ஸ்காச்சைத் தவிர பிற சோமங்களைத் தொடத் தயங்கும் முதிர்ந்த குடிமகனாவதற்கு முன் - கிடைத்ததைக் குடித்த பருவம். கோல்டன் டேஸ்.
அதற்குப் பிறகு ஒருமுறை விஸ்கி காய்ச்சலாம் என்று பிரிடிஷ் நண்பர் ஒருவருடன் முயற்சி செய்து தண்டச்செலவைப் பாதியிலேயே கைவிட்டோம். நண்பர் குருடாகாமல் பிழைத்தது அவரின் சமயோசிதம்.
சாராயம் காய்ச்சுவது என்ன பெரிய வித்தை? சைக்கிள் விடுவது, நீந்துவது.. போலத்தானே? கற்றுக் கொண்டால் மறந்தா விடும்? ஒன்றை செய்யத் துணிந்தால் அதை அன்றே செய்வது தமிழர் மரபில்லையோ? உடனே அதற்கான பொருட்களை வாங்கினேன்.
சாராயம் காய்ச்ச மூடியுடன் கூடிய ஒரு அண்டா (குண்டா என்றும் சொல்லலாம்), கொஞ்சம் பார்லி மால்ட், சர்க்கரை, ஐம்பது கிராம் யீஸ்ட், சுத்தம் செய்யும் உப்பு, ஐந்து ஒரு லிட்டர் பாட்டில் நல்ல தண்ணீர்... எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு செய்முறையை குறிப்பாக எழுதிக்கொண்டேன். ஒருவேளை சாராயம் நன்றாக வந்தால் எங்கள் பிளாக் திங்கட்கிழமை பதிவொன்றில் போடச் சொல்லலாம் பாருங்கள்?
சுத்தம் செய்ய ஒரு அகண்ட பாத்திரம், காய்ச்சுவதற்காக ஒரு அகண்ட வால்பாத்திரம்.. ஆக இரண்டு பாத்திரங்கள் தேவை.
சாராயம் காய்ச்ச நல்ல தண்ணீர் முக்கியம். பெரியே வகை மேல்தட்டுத் தண்ணீர் மிகவும் உசிதம். இல்லையெனில் அக்வாபினா, பிஸ்லெரி. தெளிந்த சுத்தமான தண்ணீர் அவசியம்.
அகண்ட பாத்திரத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ஊற்றி மிதமாகச் சுட வைக்க வேண்டும். அதில் ஒரு பாகெட் சுத்தம் செய்யும் உப்பைக் கலக்க வேண்டும். அந்தக் கலவையில் காய்ச்சுவதற்கான வால்பாத்திரம், சாராய அண்டா, கிளறும் கரண்டிகள் எல்லாவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.
சாராய அண்டாவில் இரண்டு பாட்டில் நல்ல தண்ணீர் ஊற்றித் தயாராக வைக்க வேண்டும்.
வால்பாத்திரத்தில் ஒரு பாட்டில் நல்ல தண்ணீரி ஊற்றி, அதில் மால்ட், சர்க்கரை இரண்டையும் கலந்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பாகு போல் பொங்கி வரும் வேளையில் இறக்கிவிட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
கிளறிய மால்ட் பாகை சாராய அண்டாவில் இருக்கும் இரண்டு பாட்டில் தண்ணீருடன் கலக்க வேண்டும். பலமாகக் கிளற வேண்டும். பாகு அண்டாவின் பக்கவாட்டிலோ அடியிலோ பிடிக்காமல் தண்ணீரில் நன்றாகக் கலக்கும்படி அல்வா கிளறுவது போல் கிளறவேண்டும். அல்வா கிளறத் தெரியாதவர்கள் அல்லது பலமற்ற கணவர்கள் மனைவிகளின் உதவியை நாடலாம், தவறில்லை. ராமநவமிக்கு பாகுநீர் செய்வதாக கப்ஸா விடலாம். நம்பி விடுவார்கள். பக்தியை மெச்சி வேறு ஏதாவது பரிசு கொடுத்தாலும் கொடுப்பார்கள். ஓகே.. நன்றாக கிளறியதும் மிச்சமிருக்கும் இரண்டு பாட்டில் தண்ணீரையும் ஊற்றி இன்னொரு கிளறல் கிளறியதும், யீஸ்ட் பாகெட்டைப் பிரித்து பாகுநீரில் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் தூவ வேண்டும். பிறகு அண்டாவை இறுக்கமாக மூடி, அதிகம் வெயில் படாத இடமாகப் பார்த்து ஒதுக்கி வைக்க வேண்டும். பாட்டில்களை மூடியுடன் அருகிலேயே பத்திரமாக வைத்துக் கொள்ளவும். காய்ச்சிய சாராயத்தை ஊற்றி வைக்கத் தேவைப்படும். (வாயில் ஊற்றிக் கொள்ளுமுன்).
இரண்டு வாரம் பொறுக்க வேண்டும். அதாவது பொறுமையாக இருக்க வேண்டும்.
ஓ.. மறந்தே போனது. முப்பது வரிகளுக்கு முன்பு அண்டா வாங்கிய போது குழாய் வைத்த அண்டாவாகப் பார்த்து வாங்கியிருந்தால் அடுத்த வரிகளில் வசதியாக இருக்கும். இல்லையென்றால் ஒரு பெரிய துருப்பிடிக்காத கரண்டியைச் சுத்தம் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
சாராய அண்டாவின் மூடியைத் திறந்து அற்புதமான பீர் மணத்தை ஒரு முறை இழுத்துக் கொள்ளவும். பிறகு குழாயைத் திறந்தோ கரண்டியினாலோ ஒவ்வொரு பாட்டிலையும் மூடியிலிருந்து முக்கால் இஞ்ச் வரை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு பாட்டிலிலும் அரை ஸ்பூன் நல்ல சர்க்கரை சேர்க்க வேண்டும் (நுரை மிகப்பொங்க பீர் வேண்டுமென்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரை). பாட்டிலை மூடியினால் இறுக்க மூடி ஒன்றிரண்டு முறை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். பிறகு பாட்டில்களை பழையபடி வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும்.
மறுபடி இரண்டு வாரம் பொறுக்க வேண்டும். அதாவது பொறுமையாக இருக்க வேண்டும். பூமி ஆள முடிகிறதோ இல்லையோ, பொறுத்தார் பீர் ஆள்வார்.
அவ்வளவு தான். உயர் ரக மேலை நாட்டு சாராயம் தயார். பீர் பாட்டில்களை குளிர்ப்பெட்டியில் வைத்து வெயிலுக்கு இதமாகவோ அல்லது வெத்துக் காரணமாகவோ இனிதே பருகலாம்.
அரசு விளம்பரங்களையும், முரளிதரன் மற்றும் தில்லையகத்துக்காரர்கள் எழுதிய பதிவுகளையும் மறந்து விட வேண்டாம். குடி குடியைக் கெடுக்கும்!
இந்த வருட வனவாசம் இதமாக இருந்தது
எத்தனையோ வருடங்களாக எண்ணியிருந்த பயணங்களில் ஒன்று இந்த வருடம் நிறைவேறியது. ஒலிம்பிக் நேஷனல் பார்க், போர்ட் ஏஞ்சலீஸ், சிக்வியம் பகுதிகளில் சில நாட்கள் தங்கினேன். குடும்பத்துடன். குடும்ப வனவாசங்கள் பொதுவாக ஒரு சிலருக்கு மட்டும் நிறைவைத் தரும். இது எல்லோருக்கும் நிறைவைக் கொடுத்தப் பயணம்.
அமெரிக்க வாஷிங்கடன் மாநிலம் வடக்கு ஓரம்.. கண்ணெதிரே கேனடா தெரியும் இடம். ஒலிம்பிக் மலைத்தொடர் (பிரம்மாண்டமான மலைகள்).
இந்தப் படங்களை நான் எடுத்ததாகச் சொன்னால் பொய். ஆனால் இந்த இடங்கள் மனதின் அத்தனை கற்பனையுணர்வுகளையும் சுண்டியிழுத்தன என்பது மெய். |
படங்கள் போலவே இருந்தன இடங்கள். காட்டு மரங்களிடையே நடந்த போது எங்களுக்கு இருபதடி அண்மையில் ஒரு பெரிய காட்டுமான் (elkக்குத் தமிழ் தெலியுது) வேகமாக வந்து அப்படியே திடுக்கிட்டு நின்றது. நான் திடுக்கிட்டேன். என் மகன் திடுக்கிட்டான். பெண்ணோ சாதாரணமாக படமெடுத்து இன்ஸ்டெக்ரேம் இட்டாள். பெண்கள்!
அமெரிக்காவையும் கேனடாவையும் இணைக்கும் வான் டி பூகா நீர்நிலையை ஒட்டி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கினோம். தினம் கடலோர சூரிய உதயம். மலைத்தொடரில் மறைவு. கண் கொள்ளுமட்டும் ரசித்தக் காட்சிகளில் சிலவற்றை படமாக எடுத்து (ஏதோ சுமாராக வந்திருக்கிறது) இங்கே சேர்த்திருக்கிறேன்.
உதயம் இரண்டு, வீட்டின் பின்கட்டுப் பார்வையில். அதிகாலை ஐந்து மணியளவில். |
திடீரென்று தோன்றிய பெரும்படகு |
கல்லெறியும் தொலைவில் இருக்கிறதே என்று ஒரு நாள் கேனடா போனோம். போர்ட் ஏஞ்சலீஸ் துறைமுகத்திலிருந்து கேனடாவின் விக்டோரியா நகருக்கு ஓடப்பயணம். வழியில் ஒரு திமிங்கலம் பார்த்தோம். குட்டித் திமிங்கலம். திமிங்கலக் குட்டி? ஓடத்துக்குப் போட்டியாக நீந்திக் குதித்துத் தாவி சில மைல்களுக்கு எங்களுடன் வந்தது. எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. என்னால் படம் எடுக்க முடியவில்லை. இருநூறு அடி போல் தள்ளியே வந்ததால் செல்போன் கேமராவில் தெரியவேயில்லை.
ஆனால் விக்டோரியா புஷ்சார்ட் தோட்ட வளாகத்தில் எடுத்த இந்தப் படம் மிகுந்த நிறைவைக் கொடுத்தது.
பயணிகளுக்காகக் காத்திருக்கும் படகுத்துறை. |
அமெரிக்காவில் இருந்தால் அவசியம் தங்கிப் பார்க்க வேண்டிய இடங்கள். மின்னஞ்சல் அனுப்பினால் விவரங்கள் தருகிறேன். மறக்க முடியாத பயணமாக அமையும் என்று நம்பலாம்.
2015/09/02
பாடல் பெற்ற பதிவர்
சூரியெனும் சித்தரிவர் சிந்தனையில் புத்தரிவர்
வாரியெழும் பின்னூட்டப் பாற்கடல் - சீரிளையோன்
பல்மொழிப் பல்கலைப் பாட்டன் பதிவுலக
நல்வினையின் மொத்தப் பலன்.
வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பதன் ஒட்டு மொத்த பொருளுக்கான உருவம் சூரி அவர்கள். ஆத்திகமும் எழுதுகிறார், ஆன்மிகமும் எழுதுகிறார், அலேக் விஷயமும் எழுதுகிறார், அப்பள சமாசாரமும் எழுதுகிறார். இவரின் பன்மொழிப் பிடிப்பும் பரந்த கலை ரசனையும் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள். கவராத விஷயம்? ஹிஹி.. எதுவும் இல்லை.
அடுத்து பாடல் பெறும் பதிவர்: சீனு
முன்னர்:
ஜோதிஜி
கீதா சாம்பசிவம்
பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி
2015/08/23
தலை சிறந்த தமிழ்ச் சிறுகதை
நான் ஒரு எழுத்தாளன். என்று சொல்லிக் கொள்ளவாவது விரும்புகிறவன்.
கட்டுரைகள் கவிதைகள் என்று எத்தனையோ எழுதினாலும் சிறுகதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். கலைகளின் ராணி கவிதை என்பார்கள். எனக்குச் சிறுகதை தான் ராணி ராஜா எல்லாம். என் கதையில் வரும் மாந்தர்கள்... அவர்களின் தோற்றம், உருவம், வளர்ச்சி, குணாதிசயம், படிப்பு, வேலை, திருமணம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம், மரணம்... என்று அத்தனை நிகழ்வுகளையும் நானே முடிவு செய்து திட்டமிட்டு நானே நடத்திக்காட்டவும் முடிவதால்.. எனக்கு படைப்பின் முழு நிறைவு கிடைக்கிறது. கடவுளுக்குக் கூட இந்த நிறைவு கிடைக்காது என்றே தோன்றுகிறது. காரணம் நல்லது நிகழ்ந்தால் கடவுளின் கருணை, அல்லது நிகழ்ந்தால் மாந்தரின் பாபம் என்று படைப்பாளி - படைப்பின் உரிமைகளையும் சலுகைகளையும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். சிறுகதை உலகம் அப்படியல்ல. அந்த ரீதியில் கடவுளை விட நான் அதிகம் பொறுப்புள்ளவன் என்ற ஒரு சிறிய கர்வம் எனக்குண்டு, அதன் நிறைவில் குளிர்காயும் அல்பத்தனமும் எனக்கு உண்டு. பூஜ்யத்தில் சிறிதென்ன பெரிதென்ன.. பூஜ்யப் பெருமை அல்பத்தனம் தானே, என்ன சொல்கிறீர்கள்?
கடவுளைப் போலவே எனக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. அபிஷேகம், ஆராதனை, பூஜை, நோன்பு, விரதம், யாகம் எல்லாம் செய்து.. படைத்தவன் என்ற அங்கீகாரத்தை அவ்வப்போது தந்து வழிபடாவிட்டால் கண்ணைக் குத்துவதிலிருந்து குடும்ப நாசம் வரை அத்தனை கெடுதல்களையும் செய்து பழி வாங்கும் கடவுள் அளவுக்குச் சிறுகதை எழுத்தாளனான எனக்குத் தோன்றாது.. எனினும் அவ்வப்போது எனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறவன். அந்த அங்கீகாரம் பல விதங்களில் கிடைக்கக் கூடுமென்றாலும் பரவலான வரவேற்பைப் பெறும் பத்திரிகைகளில் என் படைப்புகள் வெளிவந்தால் அதை மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்கிறவன். பெரும்பாலான எழுத்தாளர்கள் என்னைப் போலத்தான். புத்தகமாக வெளிவந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள். திரைப்படமாகவோ நாடகமாகவோ படைப்புகள் நிரந்தரப்படுத்தப்பட்டால் மேன்மையின் உச்சிக்குப் போய் வரங்களை அருளுவார்கள். நாலைந்து விருதுகள் கொடுத்து கௌரவித்தால் மோட்சம் கூட வழங்குவார்கள். புகழ் வெறி அல்லது போதையின் உக்கிரத்தில் கடவுளையும் அரசியல்வாதிகளையும் போல சில நேரம் எழுத்தாளர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும் பொழுது எனக்குச் சற்று பயமாகவே இருக்கும். என்னைப் பொறுத்தவரை பத்திரிகைகளில் அவ்வப்போது சில கதைகள் வெளிவந்தால் அந்த அங்கீகாரமே போதுமானது. என் எதிர்பார்ப்புகள் திருப்பதி வெங்கடாஜலபதி அளவுக்கு இல்லையென்றாலும் எல்லை ஐயனார் போல் என்று வையுங்களேன். அங்கீகாரம் மறுக்கப்பட்ட கடவுள் எனில் ஏதாவது கெடுதல் செய்து மக்களை பயமுறுத்திக் கண்மூடி அடிமைப்படுத்தலாம். சிறுகதாசிரியன் பாவம் என்ன செய்ய முடியும்? புலம்ப மட்டுமே முடியும்.
அதைத்தான் செய்தேன்.
என் நண்பன் ரகுவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ரகுவின் கடலோர வீட்டுப் பின்கட்டில் சமீப மாலையொன்றில் பேசிக்கொண்டிருந்தோம். சூரியன் முழுப்பழமாக கடலுள் முங்குவதைப் பார்த்தபடி நான் புலம்பிக் கொண்டிருந்தேன். "ரகு.. நான் எழுதி அனுப்புற கதைகளில் அனேகமா எதுவுமே பிரசுரமாவதில்லை. இரண்டு வருஷங்களா நான் எழுதி அனுப்பிய அறுபத்தேழு சிறுகதைகளில் ஒன்று கூட பிரசுரமாகவில்லை. பத்திரிகை அல்லது பதிப்பக ஆசிரியர் என்ன நினைக்கிறாங்களோ தெரியலியே.. குப்பை கதைகளெல்லாம் பிரசுரமாகுதுப்பா. என் கதைகள் கொஞ்சம் புத்திசாலித்தனமானவை. உள்ளுணர்வுகளைத் தூண்டுபவை. சில கதைகள் முதிர்ந்த வாசகர்களுக்கானவை. டப்பா கதைகளெல்லாம் பிரசுரமாகையில் நான் விழிக்கிறேன்.."
"எத்தனையோ பேர் சிறுகதை எழுதி பிரபலமாறாங்களே? பத்திரிகைகளில் அவர்களின் கதைகள் தொடர்ந்து வருதே? ஜெயமோகன், சாரு நிவேதிதா, ராமகிருஷ்ணன்..."
"அதான் விழிக்கிறேன்.. பிரபலங்கள் என்ன குப்பை எழுதினாலும் பிரசுரமாவுது. பிரபலமாவது எப்படி? பிரபலமாக வாசக ஆதரவு தேவை. ஆனால் பிரசுரிக்கும் ஆசிரியர்களின் கவனத்தைக் கவர்ந்தால் தானே வாசகரைச் அடைய முடியுது?"
"பத்திரிகை ஆசிரியர்களுக்குப் பிடித்தமான முறையில் எழுத வேண்டியது தானே?"
"அதெப்படி தெரியலியே? குங்குமம் ஆசிரியருக்குப் பிடிச்சது குமுதம் ஆசிரியருக்குப் பிடிக்காது. கல்கிக்கு பொருந்தும் கதை விகடனுக்குப் பொருந்தாது. போதாக்குறைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரு பக்கக் கதை என்று படு குப்பையாக எதையோ பிரசுரிக்கிறாங்க. அல்லது முத்திரைக்கதைனு ஒரே ஒரு சிறுகதை வெளியிடுறாங்க. யாரும் பத்திரிகை படிக்கிறதில்லையோனு தோணுது.."
"அப்படிச் சொல்ல முடியாது.. பத்திரிகைகளின் ஒட்டு மொத்த வாசிப்பு அதிகமாயிட்டிருக்குனு ABC புள்ளிவிவரங்கள் சொல்லுது. தங்கள் பத்திரிகை இமெஜ் மற்றும் வாசக வட்டத்தைப் பற்றி ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு கருத்து வச்சிருக்கலாம். அதற்கேற்றபடி கதை எழுதினால் பிரசுரமாகும்"
"சொல்வதற்கென்ன.. வாய் கூட வலிக்காது. எப்படிச் செயலில் காட்டுவது?"
"ஹ்ம்ம்"
"நீ ஏம்பா பெருமூச்சு விடுறே? நானில்லே புலம்பறேன்?"
"பெருமூச்சில்லை. யோசிக்கிறேன். எல்லாப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் பிடித்துப் போகிறாப்புல... தானே வடிவமைத்துக்கொள்ளும் ஒரு கதை எழுதினால்?"
நாங்கள் வெறும் காபி குடித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்ததால் திடுக்கிட்டேன். "என்ன சொல்றே? நீ மட்டும் தனியா தண்ணி கிண்ணி போட்டியா? தானே வடிவமைத்துக்கொள்ளும் கதையா? அதெப்படி சாத்தியம்?"
"ஆமாம். கம்ப்யூடரை வைத்துக்கொண்டு ஒரு க்வான்டம் அலை உருவாக்கினால், இது சாத்தியம்"
மறுபடி விழித்தேன். நீங்களும் விழித்தால் ஒரு சிறிய அறிமுகம் அவசியமாகிறது.
ஸ்டேன்பர்டு-எம்ஐடி பல்கலைக்கழகக் கூட்டுறவில் ஓசைப்படாமல் இயங்கிக்கொண்டிருக்கும் குவான்டம் ஆய்வுக் குழுமத்தில் உப தலையாக பணி புரிகிறான் ரகு. இந்தத் துறையின் வஸ்தாது. குவான்டம் கம்ப்யூடிங்கை வைத்து என்னென்னவோ ஜாலங்கள் செய்யமுடியும் என்கிறார்கள். இப்போ இருக்கிற கணினிகளெல்லாம் ஒன்றுமேயில்லை. தானே ஜனித்து தானே வளர்ந்து தானே உணர்ந்து தானே விரியும் கணினிகளை வைத்து மனிதம் எங்கேயோ போகப் போகிறது என்று அடிக்கடி சொல்வான்.. என்றாலும் இப்போது தான் உருப்படியாக ஏதோ ஒரு பயன் சொல்லியிருக்கிறான். குவான்டம் கம்ப்யூடர் கதை எழுதும் என்று. அதுவும் நம்ப முடியாத விஷயம்.
"என்ன முழிக்கிறே?" என்றான் ரகு.
"இல்லே. சென்னைப் பித்தன்னு ஒரு எழுத்தாளர் இருக்கார். தனித்தமிழ் விரும்பி. அவரு கோவிச்சுக்காம இருக்கணுமேனு தோணிச்சு. குவான்டம் என்கிறதுக்குத் தமிழ் தெரியாதே ரகு?"
"அவரை ஏம்பா இழுக்குறே?"
"இல்லேப்பா. ஒரு வேளை.. இந்த அனுபவத்தை நான் எழுதுறப்ப தமிழில் வார்த்தை தேடணுமில்லே? இதோ பாரு" என்று என் ஐ-போனில் கூகில் மொழிபெயர்ப்பைக் காட்டினேன். quantum என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு குவாண்டம் என்றது தமிழில் கூகில் - தேவையில்லாமல் மூன்று சுழி ண வேறே.. "சரி போகுது. உன் ஜாலவித்தை பத்திச் சொல்லு"
"எங்க அலுவலகக் கணினியில் ஒரு ப்ரோக்ரேம் எழுதுறேன். குவான்டம் வேவ். உன் சிறுகதைக்குத் தேவையான கரு, உரை, நடை, வீச்சு போன்றவற்றைப் பொதுப்படையாகக் கொடுத்து ஒரு குவான்டம் அலை உருவாக்குறேன். கதையைப் படித்து முடிக்கும் வரை.. அலையுடன் தொடர்பு இருக்கும் வரை.. வாசிப்பு அனுபவம் வாசிப்பவரின் எதிர்பார்ப்புக்கு இணங்க மாறிக்கொண்டேயிருக்கும்.. எல்லாவற்றையும் பரோக்ரேம் பார்த்துக் கொள்ளும். கதை படித்து முடித்ததும் அலையும் துண்டிக்கப்படும். ப்ரோக்ரேம் முடிந்ததும் பலனும் கிடைக்கும். படித்தவரின் ரசனைக்கேற்ப கதை அமைந்திருக்கும்"
"நம்பவே முடியலே"
"இப்பவே போகலாம் வா" என்று என்னை இழுத்துக்கொண்டு பேலோ ஆல்டோ விரைந்தான். தன் தனி அலுவலறையில் இருந்த கணினி முன் அமர்ந்து சிறுகதை எழுதுவது பற்றிய நிறைய விவரங்கள் கேட்டறிந்து கொண்டான்.
மறுநாள் மாலை என்னை அலுவலகத்துக்கு அழைத்தான் ரகு. விரைந்தேன். "டேய்.. ப்ரோக்ரேம் தயார். யார் யாருக்கு அனுப்பணும் சொல்லு" என்றான்.
"ஒரு தடவை நான் கதையைப் படிக்கிறேண்டா"
"கூடாது. நீ படிச்சுட்டா வேவ் முடிஞ்சுடும். பத்திரிகை ஆசிரியருக்குப் பொருத்தமா ப்ரோக்ரேம் முடிவுகள் அமையாமல் போயிடும்"
"அப்போ.. என் கதையை நான் படிக்கக் கூடாதா?"
"கணினி எழுதினது.. இருந்தாலும் உன்னதுனு சொல்லிக்கலாம்.. தப்பில்லே.. ஆனா பிரசுரமானதும் படி"
"நீயாவது படிச்சியா?"
"பிரசுரமானதும் நிச்சயம் படிப்பேன்"
"நிச்சயம் பிரசுரம் ஆகுங்கறே?"
"நிச்சயத்துக்கு ஒரு படி மேலே. தமிழில் வந்த சிறுகதைகளிலேயே சிறந்ததாக அமையணும்னு குறிக்கோள் கொடுத்து ப்ரோக்ரேம் செஞ்சிருக்கேன். அனுப்புற கதைகள் எல்லாம் தலைசிறந்த சிறுகதைகள்னு பேர் வாங்கும். துணிஞ்சு அப்படியே பத்திரிகாசிரியர்களுக்கு அறிமுகம் செய்யலாம்"
"அதெல்லாம் வேணாம்.. சும்மா சிறுகதைனே அறிமுகம் செஞ்சு அனுப்பு. குமுதம், கல்கி, விகடன், குங்குமம்.. இது நாலுக்கு அனுப்பு"
"எதுக்கு பயப்படுறே? சரி.. என்னப்பா இது.. ஆயிரக்கணக்கா தமிழ்ப் பத்திரிகைங்க வந்தாச்சு.. இன்னும் அந்த நாலையே பிடிச்சிட்டிருக்கே?"
"அந்த நாலும் தான் லீடர்ஸ்.. அதுல பிரசுரமானா..."
"சரி. உன் இஷ்டம்.." என்று கணினியில் சிறிது நேரம் தட்டினான். எழுந்தான். "அனுப்பியாச்சு. அவ்வளவு தான். இனி மேல் நீ கதை எழுதி அனுப்ப வேண்டியதில்லை. 'கதை அனுப்புங்க சார்'னு ஒவ்வொரு பத்திரிகாசிரியரும் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கதறுவாங்க பாரு" என்றபடி நாற்காலியில் சாய்ந்தான்.
"அது மரியாதையில்லே, அது மரியாதையில்லே" என்று நானும் விடைபெற்றேன்.
எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எனினும் பல்லைக் கடித்தபடி நாளை.. வாரங்களைக் கடத்தினேன்.
ஆறு வாரங்களாகியும் எந்தப் பத்திரிகையிலும் என் கதை எதுவும் வரவில்லை. எட்டாம் வாரம் குங்குமம் பத்திரிகை தலைமைப் பொறுப்பாசிரியர் திருமுருகனிடமிருந்து ஒரு இமெயில் வந்தது.
"அன்பின் அப்பாதுரை. நீங்கள் அனுப்பிய கதை படித்தேன். உங்கள் அறிமுகப்படியே இது தமிழில் மிகச் சிறந்த சிறுகதை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தக் கதையை அறுபது வருடங்களுக்கு முன்பே கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற பெயரில் புதுமைப்பித்தன் எழுதிவிட்டாரே? வேண்டுமானால் புதுமைப்பித்தனின் கதையை விமரிசனம் செய்வது போல் அரைப் பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்புங்களேன்? கதையோடு சேர்த்து ஒரு ஓரமாகப் பிரசுரம் செய்துவிடுவோம்?".
எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்பதால் மதிப்பு வைத்து இமெயில் அனுப்பியிருந்தார் திருமுருகன். அவர் எழுதாத எண்ணங்கள் என்னை உக்கிரமாகத் தாக்கின. மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை விட மோசமாகிவிட்டதே! ரகுவின் அலுவலகத்துக்கு விரைந்தேன்.
"என்னடா! பிரசுரமாச்சா? அவனவன் கதை வேணும்னு லைன் கட்டி நிக்க ஆரம்பிச்சிருப்பானுவளே?" என்றான் ரகு.
"அடிக்காத குறை" என்றேன். "டேய்.. அந்த ப்ரோக்ரேம்.. அது என்னென்ன கதை அனுப்புச்சுனு பாருடா" என்றேன் எரிச்சலுடன்.
"ஆர் யூ ஷூர்?" என்றபடி விவரங்களை அச்சில் பிரதியெடுத்தான். எல்லாமே புதுமைப்பித்தன் கதைகள். பெயர் மட்டும் மாறியிருந்தது.
"தமிழின் தலைசிறந்தச் சிறுகதைனு ப்ரோக்ரேம் வரம்பமைச்சேன்.." என்றபடி கம்ப்யூடரையும் என்னையும் மாற்றி ஏற இறங்கப் பார்த்தான்.
என்ன செய்வதென்று தெரியவில்லை. அமைதியானேன். திடீரென்று உரக்கச் சிரித்தேன். ரகுவைத் தட்டி "உன் கம்ப்யூடர் தவறு எதுவும் செய்யவில்லை. தலைசிறந்த கதைகள் எழுத ஒருவரால் மட்டுமே முடியும்" என்றபடி வெளியேறினேன்.
இக்கதை Eric James Stone (EJ) எழுதிய 'the greatest science-fiction story ever written' என்கிற கதையின் அப்பட்டமானத் தழுவல். அத்தனை சிறப்பும் EJவுக்கு. குறைகள் என்னுடையவை. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.
2015/07/24
பாடல் பெற்ற பதிவர்
தேவியர் இல்லம் பதிவில் தினவாழ்வின்
மேவுமிடர் ஆய்ந்திடுவார் ஜோதிஜி - ஆவலிந்த
மின்னூல் மகராசன் டாலர் நகரம்போல்
இன்னும் எழுதவேண்டு மென்று.
மேல்தட்டுச் சமூகச் சிந்தனை, அடித்தட்டுச் சமூக அக்கறை, தீவிரப் பொதுநோக்கம், பாமரச் சிக்கல்களின் ஆழறிவு, முன்னேற்றத்துக்கான மெய்க்கவலை, வணிக நாணயத்தின் இருபுறப் பார்வை, தனித்தமிழ் வீச்சு, எழுத்தாளுமை - வேறு சூழலில், காலக்கட்டத்தில் எங்கள் நட்பு நேரிட்டிருந்தால் தமிழக அரசியலில் மாற்று அமைப்புகள் வேரிட்டிருக்கும் கடுஞ்சாத்தியத் தொலைக்கனவைத் தன் எண்ண வெளிப்பாடுகளில் அடிக்கடி முன்னிறுத்தும் இலட்சியப்பதிவர் ஜோதிஜி.
எதையும் அக்கறையுடன் எழுதும் இவரின் படைப்பு நேர்மை பிரமிக்க வைக்கிறது. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். பதிவர்கள் தங்களைப் பற்றிக் குறிப்பெழுத 'ப்லாகர்' அனுமதிக்கிறது. ஜோதிஜி தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கும் விதம் - இதுவரை படித்திராதவர்கள் கைவேலைகளைத் துறந்து உடனே படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும்.
இவரது வலைப்பூ libertarian intellectual கள் பானை. உள்ளே இறங்கிவிட்டால் போதை தலைக்கேறும் வரை பதிவுகளைப் புரட்டிக்கொண்டே இருக்கத் தோன்றும். எப்போதாவது எழுதும் சமூக வரலாற்றுக் குறிப்புகள் ஊறுகாய் போல. [நாடார்களின் தோற்றம் பற்றியப் பதிவு சுவாரசியமானது. நாடார்களை உருவாக்கியவர் peeping tom இந்திரனாம்.]
இவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் தகவல் சுரங்கம்.
அடுத்து பாடல் பெறும் பதிவர்: சூரி என்கிற சுப்புத்தாத்தா.
முன்னர்:
கீதா சாம்பசிவம்
பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி
2015/07/15
மன்னருக்கு மெல்லிசையின் நன்றி
மெல்லிசை மன்னரின் நினைவில்.. என் பழைய பதிவுகளிலிருந்து சில வரிகள்:
இசைச்சக்கரவர்த்தி, இசைத் திலகம், இசைப்புயல், இசை இளவல், இசையாளுனர், இசை மாமன்னர், இசை இன்னார், இசை அன்னார் என்று இந்நாளில் பலர் பலவாறாகப் பட்டம் பெற்றாலும் கொடுத்துக் கொண்டாலும், பட்டத்துக்கு ஒரு படி மேலேயே தன்னை இருத்திக் கொண்டவர், பட்டத்துக்கு தகுதியேற்படுத்திக் கொடுத்தவர், மன்னர் எம்.எஸ்.வி ஒருவர் தான் என்பது என் கருத்து. எம்.எஸ்.வி அபிமானம் என் வயதைச் சுட்டிக் காட்டுகிறது என்று ஒரு கண்ணோட்டத்தில் கொண்டாலும், எம்.எஸ்.வியின் இசை மட்டுமே என்னை இளமையாக்கி எங்கோ கொண்டு சென்று இன்ப வேகத்தில் இயங்க வைக்கிறது. அந்த வகையில் எனக்கு நூறு வயதானாலும் எம்.எஸ்.வியின் இசையைக் கேட்க முடிந்தவரை இளமையின் ரகசியத்தை அறிந்தவனாவேன்.
மெல்லிசை மன்னர்(களின்) இசையில் வந்த ஒரு இந்திப்பாடல் பற்றியது இந்தப் பதிவு. தமிழ்த் திரையிசையில் புதுத்திருப்பத்தை ஏற்படுத்திய இரட்டையர் இவர்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவர்கள் சேர்ந்து வடித்த பாதையில் எம்.எஸ்.வி பின்னர் தனியாகப் புகுந்து விளையாடினாரென்றாலும், திருப்பத்தை உருவாக்கியதற்கான பெருமை இருவருக்குமே சேரும். இரட்டையர் சேர்ந்து இசையமைத்த பாடல்களில் பெரும்பாலானவை இன்றைக்கும் கேட்டு ரசிக்கும்படி இருப்பது இதற்கு சாட்சி. எம்.எஸ்.வியின் தனிப்பட்ட ஆட்சி இருவரும் சேர்ந்திருந்த காலத்தை விட நீண்டது என்றாலும், இரட்டையராக இருந்த போது பெற்ற வெற்றியை விட கணிசமாகக் குறைவாகத் தான் இருந்தது அவருடைய தனிப்பட்ட வெற்றி என்ற கருத்து நிலவுவதை அறிவேன். தனியாக எம்எஸ்வி தொட்ட வெற்றியின் உச்சங்களை இரட்டையராக தொட்டிருக்க முடியாது என்பது என் கருத்து. எம்.எஸ்.வியின் வெற்றிக்கு இணையாக, இன்னொரு தனி இசையமைப்பாளர் இன்னும் வெற்றி பெறவில்லை.. காலத்தை வென்று நெஞ்சில் நிறைந்திருக்கும் பாடல்களை அமைத்த விதத்தையே, நான் இங்கே வெற்றியென்று குறிப்பிடுகிறேன்.
மெல்லிசை மன்னரின் ஆடம்பரமே இல்லாத எளிய பாடல்கள் மூன்றை இங்கே தொகுத்திருக்கிறேன். இந்தப் பாடல்களை இன்றைய தலைமுறையினர் கேட்டிருப்பார்களா?
மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான். சந்தேகமிருந்தால் அடுத்த வரியைப் பத்து முறை படிக்கவும். மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான்.
கடவுள் நம்பிக்கையில்லாத எனக்கு தெய்வீக உணர்வை அனுபவிக்க சில வழிகள் அன்றாடம் கிடைக்கின்றன. முதலில் என்னைப் பெற்றவள். அதற்கடுத்த படிகளில் முதல் படி என்னை வளர்த்த மெல்லிசை மன்னரின் இசை.
மெல்லிசை மன்னரின் இசை என் வாழ்வின் எத்தனை சோகங்களை சோர்வுகளை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறது என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும்.
சமீபத்தில் தெரிந்து கொண்ட செய்தி. கணவன் இறந்ததும் கைக்குழந்தையை வளர்க்க வசதியில்லாத வறுமையில் குழந்தை எம்எஸ்வியைக் கொன்றுத் தானும் சாகத் தீர்மானித்தாராம் இவரின் தாயார். நல்லவேளையாக இவர் தாத்தா குறிக்கிட்டு... எத்தனை கொடிய விபத்திலிருந்து தப்பித்தார்... தப்பித்தோம்?!
வாழ்ந்ததற்கும் வழங்கியதற்கும் உளமார்ந்த நன்றி, எம் இனிய மன்னரே!
சற்றே தொண்டையை அடைக்கிறது. இருங்கள்.. மெல்லிசை வள்ளலின் துள்ளல் மெட்டில் குரலும் குழலும் வயலினும் வீணையும் கிடாரும் குதூகலக் கொட்டும் கலந்து கொஞ்சுவதைக் கொஞ்சம் கேட்டு வருகிறேன்.
2015/06/19
கைந்நிலை
எப்போதோ விடிந்திருந்தப் பொழுதிலே முந்தைய இரவுகளின் இருள் தவிர்க்க முடியாமல் ஒட்டிக்கொண்டிருந்தது... சுமைகள் இறங்கினாலும் தோள்களின் விலகாத வலி போல். இந்த வலி இந்தச் சுமையினால் வந்தது என்றுக் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறதா என்ன? சில பார்வைகளுக்கே தெரியும் காட்சி. சிலருக்கு மட்டுமே புரியும் புறநானூற்று வரிகள்.
வெளியே பார்த்தேன்.
இருளை அழித்தக் குற்ற உணர்வுக் குழப்பத்தில் பல ஒளிக்கற்றைகள் வெயிலைப் பரப்பிக் கொண்டிருந்தன. வெயிலின் வறட்சி செடி கொடிகளைக் கடந்து, புழு பூச்சிகளைக் கடந்து, பிராணிகளைக் கடந்து, மனித உள்ளங்களை ஊடுறுவியிருந்தது போல் பட்டது. சொல்லிப் புரியாத எண்ணங்களைக் கண்டு அஞ்சிப் பதுங்கியோடும் இன்னும் சொல்லாத எண்ணங்களின் தோல்விப் போராட்டம் போல, இளவெயில் புது வெயிலில் கரைந்து கொண்டிருந்தது.
அருகே நிழலாடுவதைக் கவனித்தேன். அவள் தான்.
அருகில் நின்றாலும் தொலைவில் இருந்தாள் என்பது புரிய வேண்டிய அவசியமில்லாமல் புரிந்தது. எனக்கென்று சொல்லாமல் எனக்காக அவள் விருப்பப்படிக் கலந்து கொண்டு வந்த காபியை கோப்பையுடன் அருகே வைத்தாள். அதை எடுத்துக் குடித்தால் கிடைக்கும் அங்கீகாரத்தை அளிப்பதா மறுப்பதா? இல்லாத மதிப்பை இருப்பதாக எண்ணுவதால் வரும் குழப்பமா? இருக்கிற மதிப்பை இல்லாமல் செய்து கொள்ளும் முட்டாள்தனமா? சாதாரண காபிக் கோப்பைக்கு ஏன் இத்தனை சித்தாந்தச் சுற்று?
அவள் மனதின் தீர்மானங்களைப் புரிந்து கொள்ள முடியாத இறுக்கம். என் மனதின் தீர்மானங்களை வெளிப்படுத்த இயலாத இறுக்கம்.
இறுக்கங்களின் வேர் புரிய மறுக்கிறது. எங்கிருந்து வருகின்றன அவநம்பிக்கைகளும் குழப்பங்களும்? பச்சிளம்பிள்ளையின் நம்பிக்கை.. வாயில் திணிக்கப்பட்ட முலையில் விஷமில்லை என்ற ஒட்டுமொத்த நம்பிக்கை.. அறிவற்ற நிலையில் உடன் ஒட்டிய அந்தக் கபடமற்ற நம்பிக்கை அறிவார்ந்த நிலையில் எப்படி மறைகிறது? சந்தேகமும் சுயநலமும் அப்பாவி நம்பிக்கைகளைச் சாப்பிட்டு விடுகின்றனவா? அல்லது நம்பிக்கை என்பதே நாடகமா? விளங்காத அண்ட நிலையின் அணுவளவு வெளிப்பாடா?
சனிக்கிழமையின் விடுமுறைச் சோம்பலில் உள்ளக்கனங்களைப் போர்த்திய வண்ணம்... என்னையறியாமல் காபிக் கோப்பையை எடுத்தேன். 'விழுங்கிய சூடான காபி நரம்புகளின் ஊடாய் ஓடி எத்தனை பிறவிகளின் சோர்வினைத் துரத்தும்?' என்ற பதிலுக்கப்பாற்பட்டக் கேள்வியுடன் மறுபடி வெளியே பார்த்தேன். மெல்லிய ஒலி. அழுகிறாளோ?
விளிம்புப் பார்வையில் கவனித்தேன். அவள் அழவில்லை. நான் அழுதால் அவளுக்குத் தெரியப்போவதுமில்லை. தெரிந்தும் பயனில்லை. புரியாதவர்கள் எதைத் தெரிந்து கொண்டு என்ன பயன்? அழுவது என்பது அடையாள வெளிப்பாடாக இருக்க வேண்டுமா என்ன? உள்ளத்தின் ஓரத்தில் அவநம்பிக்கையின் அசுத்தமான கத்தி கீறி வரும் இரத்தம் சாதாரணமானதா? வலியும் சாதாரணமானதா? உள்ளம் எப்படி அழும்? நான் அழுகிறேனா என்று அவள் கவனிக்கிறாளோ? அவள் அழவில்லை என்ற என் எண்ணம் வலுக்கவே அழாதிருக்கிறாளோ? அல்லது அவளின் அழுகை, நகைப் போர்வை போர்த்திய மேல் மரபோ?
ஒரு வேளை அழுவது நான் தானோ? இல்லை. நான் அழவில்லை. ஒலி அவளிடமிருந்தும் வரவில்லை... வெளியிலிருந்து வருகிறது. ஒரு குழந்தையின் கேவல் போல்.
கண்களை விரித்தேன். வெயிலின் கடுமை. இயற்கையை வாட்டி வதக்கும் இயற்கையின் முரண். கண்கள் கூசின. ஒலியின் பிறப்பிடத்தை எதிர் வீட்டின் தெருத்திருப்பச் சுவரோரமாக இருந்த மரத்தடியில் கண்டேன்.
இரண்டு பூனைகள். ஒரு குட்டிப் பூனை. ஒரு பெரிய பூனை. குட்டிப்பூனையை அவ்வப்போது வாயால் கடித்தும் கைகளால் அறைந்தும் துன்புறுத்திக் கொண்டிருந்தது பெரிய பூனை. வீலென்று குட்டிப்பூனை அலறும் போது சட்டென்று விலகிய பெரிய பூனை, சற்றுப் பொறுத்து மறுபடி தாக்கியது.
நான் கவனிப்பதை அவள் கவனித்தாள். "காலையிலந்து இப்படித்தான்" என்றாள்.
தலையசைத்தேன்.
எதிர் வீட்டில் யாருமில்லை. கோடை விடுமுறைக்குக் குடும்பத்துடன் வெளி நாடு போயிருந்தார்கள். அவர்கள் வீட்டுப் பூனையாக இருக்க வேண்டும். இந்தக் குடியிருப்பில் பிராணி வளர்ப்போர் வேறு எவருமில்லை. ஒரு வேளை குட்டி போட்ட பூனையோ? முதல் குட்டியைத் தின்னும் என்பார்களே? அது தானோ? பெரிய பூனைக்குப் பசியோ? அல்லது சிறிய பூனைக்குத் தரப் பாலில்லையோ? பசியால் வாடும் சிறிய பூனைக்குப் பால் தரமுடியாத வேதனையில் அதைக் கொன்று நிம்மதியை வழங்குகிறதோ? பிறப்பின் வேதனை இறப்பில் சாதனையாகிறதா? இறந்தால் நிம்மதி கிடைக்குமா? எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வு மரணம் தானா?
குட்டிப் பூனை மெள்ளத் தளர்ந்து அயர்ந்து கொண்டிருந்தது. பெரிய பூனை அதை வாயில் கவ்விக் கவ்விக் கீழே போட்டது. ஒவ்வொரு முறை கீழே போட்ட போதும் குட்டிப்பூனை கெஞ்சியது. பலமாக அலறக்கூட முடியவில்லை. கொல்லாதே என்கிறதா, சீக்கிரம் கொல் என்கிறதா?
"விலக்கலாம்னு பார்த்தா பயமா இருக்கு" என்றாள்.
தலையசைத்தேன்.
விலக்கி என்ன பயன்? குட்டிப் பூனையை எடுத்து வந்தால் பிழைக்கும் என்பது என்ன நிச்சயம்? அப்படிப் பிழைத்தாலும் வளர்க்க முடியுமா? அப்படி வளர்த்தாலும் குட்டிப் பூனை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? ஒருவேளை பெரிய பூனையின் கொடுமைகள் அதற்குப் பிடித்திருக்கிறதோ? பழக்கமோ என்னவோ? பெரிய பூனையின் நிலமை என்னவாகும்? ஒரு வேளை காப்பாற்றப்பட வேண்டியதே பெரிய பூனை தானோ? யாரிடமிருந்து யார் யாரைக் காப்பாற்றுவது?
பெரிய பூனை விடாமல் குதறிக் கொண்டிருந்தது. சிறிய பூனை சாகவுமில்லை. பிழைத்து ஓடவுமில்லை. அங்கேயும் இங்கேயும் நகர்ந்து கொண்டிருந்தது. வேகமாக ஓடித் தப்பித்துப் போக வேண்டியது தானே? தப்பிக்கும் சக்தியில்லையா? புத்தியில்லையா? தப்பிக்கும் எண்ணமேயில்லையா?
ஓட்டப் பயிற்சிக்குப் போக வேண்டும். உடையணிந்துக் கிளம்பினேன். அவளைப் பார்த்தேன். சலனமில்லாதிருந்தாள்.
வெளியே வந்துக் காரைக் கிளப்பினேன். பூனைகளின் நினைவு வந்தது. காரை நிறுத்தி மரத்தடிக்குப் போனேன். பெரிய பூனை என்னைப் பார்த்து சட்டென்று விலகியது. ரொம்பத் தூரம் ஓடவில்லை. என் வீட்டருகே நின்றபடி என்னையே பார்த்தது.
பூனைக்குட்டியைப் பார்த்தேன். உடல் முழுதும் கீறல்கள். மிக அடிபட்டிருந்தது. கண்கள் திறக்கவேயில்லை. குருட்டுப் பூனையோ? வருத்தப்பட்டேன். நாம் எல்லாருமே பல வகையில் குருட்டுப் பூனைகளாய்க் கடி படுகிறோமே, இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? தெளிந்தேன்.
கராஜிலிருந்து ஒரு பழைய அட்டைப் பெட்டியை எடுத்து வந்தேன். ஓட்டப் பயிற்சிக்குப் போகும் வழியில் மருத்துவ மையத்துடன் கூடிய சிறு பிராணிகள் காப்பகம் இருக்கிறது. அங்கே விட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்தில் குட்டிப் பூனையை எடுத்துப் பெட்டிக்குள் போட்டேன். பெரிய பூனை என்னையே பார்த்தபடி இருந்தது. குட்டிப்பூனை இருந்த பெட்டியுடன் காரில் கிளம்பினேன்.
காப்பக மையத்தில் ஒரு பதின்மப் பெண் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். விவரம் சொல்லி குட்டிப் பூனை இருந்தப் பெட்டியைக் கொடுத்தேன். அவள் அதை வாங்கித் திறந்து, என்னை வியப்போடு பார்த்தாள். "பூனைக்குட்டி இறந்து விட்டது" என்றாள்.
"ஐயோ.. ஒரு வேளை பெட்டியை மூடியதில் மூச்சுத் திணறி இறந்துவிட்டதோ?" என்றேன்.
"இருக்கலாம். அல்லது அடிபட்ட ரணம் கூட காரணமாக இருக்கலாம். அடியும் கடியும் பார்த்தால் குட்டிப் பூனை பிழைத்திருக்காது என்றே நினைக்கிறேன்"
"காப்பாற்றலாம் என்று நினைத்து எடுத்து வந்தேன்"
"காப்பாற்றுவது உங்கள் விருப்பம். பிழைப்பது பூனைக்குட்டியின் விருப்பம் அல்லவா?" என்றாள். வயதுக்கு மீறிய அவளின் ஞானம் என்னைக் கணம் சிலையாக்கியது.
"நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று பெட்டியுடன் உள்ளே போனாள். மெள்ள விலகி விரைந்தேன்.
நான்கு மணி நேர ஓட்டப்பயிற்சி முடிந்து நண்பர்களுடன் அரை மணி நீச்சல் அடித்துவிட்டு பகல் ஒரு மணி போல் வீடு திரும்பினேன். களைத்திருந்தாலும் புத்துணர்வுடன் இருந்தேன். இயற்கையின் இன்னொரு முரண்.
குடியிருப்புப் பராமரிப்புக் குழுவைச் சேர்ந்த இருவர் என் வீட்டருகே ஏதோ செய்து கொண்டிருந்தனர். காரை நிறுத்தி விசாரித்தேன்.
"தெரியலே சார். செத்துக் கிடக்கு. போன் வந்துச்சு. அதான் அப்புறப்படுத்தலாம்னு வந்தோம்" என்று எதையோ சுருட்டிக் கொண்டிருந்தனர். பார்த்தேன். பெரிய பூனை. காலையில் தானே குட்டிப்பூனையைக் கொன்று கொண்டிருந்தது? இதற்கென்ன வந்தது? ஏன் இறக்க வேண்டும்? பூனையை ஒரு பிலேஸ்டிக் பையில் சுற்றியெடுத்தனர். மருந்தடித்தனர். "வரோம் சார்" என்று விலகினர்.
நான் காரைக் கிளப்பி கராஜுள் செலுத்தினேன்.
வீட்டுக்குள் அமைதியின் பேரிரைச்சல். இந்த அமைதி புதிதல்ல. வார்த்தைகளின் ஓசை, அமைதியின் இரைச்சலுக்கு இணையே அல்ல என்பது புரிந்து மாதங்களாகின்றன. இரைச்சலை உள்வாங்கியபடிக் குளித்தேன். குட்டிப்பூனை, ஒட்டம், பதின்மப் பெண், பெரிய பூனை, நான், அவள், அலுவல், நண்பர்கள், வெயில், வாழ்க்கை... செயற்கைக் குளியலில் கரைந்த இயற்கை நிலைகளின் அழுக்கு. வெளியேறி உடையணிந்தேன். வீட்டில் அவளைக் காணாதது உறைத்தது.
மிகுந்த தாகத்துடன் பசித்தது. சமையலறைக் குளிர்பெட்டியிலிருந்து புரதப்பால் புட்டியை எடுத்து ஒரு கண்ணாடிக் கோப்பை நிறைய ஊற்றினேன். குளிர்பெட்டியை மூடும்பொழுது முகப்பைக் கவனித்தேன்.
ஒரு வெள்ளைக் காகிதத்தின் நடுவில் ஒரே ஒரு சொல் எழுதி ஒட்டியிருந்தாள்.
2015/06/13
ஜீன்ஸி ராணி
அடையாரிலிருந்து பதினைந்து நிமிடங்களில் சென்ட்ரல் ரயில் நிலையம் அசராமல் கொண்டு விட்ட டிரைவருக்கு நன்றி சொன்னான் ரகு. சதாப்தி ரயில் நின்ற இரண்டாவது பிளாட்பாரத்துக்கு நடந்தான்.
பெட்டியில் உட்கார வந்தால்... தன் இருக்கையில் ஏழெட்டு வயது போல் தெரிந்த அழகான உடையணிந்த ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தாள். அடுத்த இருக்கையில் கண்ணாடியணிந்த தொப்பைக்காரர் ஒருவர்.
ரகு சிறுமியைப் பார்த்து, "பாப்பா.. என் சீட்ல உக்காந்திருக்கம்மா" என்றான்.
பாப்பா உர்ரென்று பக்கத்து சீட் கண்ணாடிக்காரரைப் பார்த்தாள். "ஆமா சார். இது ஜன்னல் சீட்டு. என் பெண்ணுக்குப் பிடிக்கும். அதான். நீங்க இந்த அயில் சீட்டுல உக்காருங்க. சரியா?" என்றார் கண்ணாடிக்காரர்.
ரகு மெதுவாக, "முடியாதுங்க. தயவுசெய்து என் சீட்ல என்னை உக்கார விடுங்க" என்றான். கைப்பையை எடுத்துக்கொண்டு அவர்கள் விலகத் தயாராக நின்றான்.
சிறுமி இருவரையும் பார்த்து "நோ!" என்றாள். அதிகம் பேசிவிட்டது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கைகளை இறுக்கிக் கொண்டு நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
வேறு வழியில்லாமல் ஏதோ முணுத்தபடி முனை சீட்டில் உட்கார்ந்தான் ரகு. ஹ்ம்.. அசந்தா இப்படி ஏமாத்துறாளே இந்தப் பொண்ணு? வளந்த பிறகு யாரை எப்படி ஏமாத்தி என்ன அராஜகம் பண்ணப் போகுதோ இந்த அம்மா?
மெள்ள கூட்டம் சேரத் தொடங்கியது. ரகுவின் எதிரே மூன்று பேர் வந்தமர்ந்தார்கள். அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, ஜீன்ஸ் கமீஸ் அணிந்த முப்பது வயதின் அண்மையில் ஒரு பெண், ஐந்தாறு வயதுக்குட்பட்ட சிறுவன். சிறுவன் ஒரே பாய்ச்சலில் "அம்மா எனக்கு ஜன்னல் சீட்டு" என்று தாவ, ஜீன்ஸ்-கமீஸ் அவனை "நோ, யூ ஸிட் ஹியர்" என்று ஆங்கிலத்தில் அடக்கி நடு சீட்டில் உட்கார வைத்தார். தான் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்.
ரகு பிரமித்தான். அட, குழந்தையை அடக்கும் தாய்!
குழந்தைகள் என்றால் ரகுவுக்கு மிகவும் பிடிக்கும். தான் ஒரு ஊரிலும், அவர்கள் நாலைந்து ஊர்கள் தள்ளியும் இருந்தால். அவர்களின் அழுகையும், நச்சரவும், காரணமில்லாத கெக்கலிப்பும், சிரிப்பும், கூச்சலும், கத்தலும் திடீரென்ற விம்மலும் வீறலும் பிடிவாதமும் மூர்க்கமும்... திடமான மனிதர்களையே சற்று உலுக்கிவிடும். அரசியல், பொருளாதார மற்றும் கோர்பரெட் அழுத்தங்களின் கலவையில் மூழ்கிக் காசுக்கும் கடனுக்கும் அடிமையாகி 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?' என்று தினம் புலம்பியபடி வாழும் அதிட மாந்தர்களில் ஒருவனான ரகுவைக் குழந்தைகளின் ரசிகன் என்று சொல்ல முடியாது.
தன் வரிசையில் குட்டிப் பெண். எதிரே குட்டிப் பையன். 'இன்றைக்கு இரண்டு வில்லர்களுடன் ஆறு மணி நேரம் பயணம் செய்ய வேண்டுமே!' என்று உள்ளுக்குள் கலங்கியவனைப் பார்த்து எதிர்வரிசைச் சிறுவன் இலேசாகச் சிரித்தான். நடுங்கியபடி சுற்றுமுற்றும் பார்த்தான். சிறுவன் சிரிப்பின் வில்லத்தனம் புரிந்தது. இந்தியாவில் இன்று குழந்தைகள் பயண தினம் என்று ஏதாவது கொண்டாடுகிறார்களா தெரியவில்லையே? பெட்டியில் வரிசைக்கு ஒரு குழந்தை என்ற கணக்கில் வந்திருந்தாற்போல் பட்டது. பிறந்த குழந்தை, கைக்குழந்தை, மழலை, பிள்ளை, சிறுவர் என்று வகைக்கு அரை டசனாகப் பெட்டியை அடைத்துக் கொண்டிருந்தது குழவிப் பட்டாளம். 'இன்றைக்குப் பெங்களூர் போய்ச் சேர்ந்த மாதிரிதான்!' என்றெண்ணி... அஞ்சி நடுங்கி... மூலை சீட்டுக்குள் ஒடுங்கினான்.
வண்டி நகரத் தொடங்கியது. ம், "அம்மா எனக்கு சிப்ஸ் வேணும்" என்றான் சிறுவன்.
"ஆஸ்க் க்ரேன்மா" என்று பதில் சொல்லிவிட்டு ஐபேடுக்குத் திரும்பினார் ஜீன்ஸ். இதைக் கேட்ட அறுபது வயது பெண்மணி சிரத்தையுடன் கீழே இருந்த பையிலிருந்து ஒரு சிப்ஸ் பேகெட்டை எடுத்து அவனிடம் கொடுத்தார். "பிரிச்சுத் தரட்டுமாடா கண்ணா?"
"வேணாம் பாட்டி.." என்று சட்டென்று சிப்ஸ் பேகெட்டைப் பிடுங்கிக்கொண்டான் சிறுவன். சிப்ஸ் பேகெட்டை அப்படி இப்படிப் புரட்டிவிட்டு உயரத் தூக்கியெறிந்து கேச் பிடிக்கத் தொடங்கினான்.
பேஸின்ப்ரிட்ஜ் தாண்டியதும் கேடரிங்க சிப்பந்திகள் ஒரு தட்டில் ஒரு பாதுஷா, சமோசா, கெச்சப் என்று கொண்டு தந்தார்கள். சிறுவன் இன்னும் கேச் பிடித்துக் கொண்டிருந்தான். சாப்பிடலாம் என்று இனிப்பை எடுத்தான் ரகு. சிறுவன் எறிந்த சிப்ஸ் பேகெட் ரகு இனிப்புப் பொட்டலம் பிரிக்கும் நேரத்தில் அதன் மேல் விழ, இனிப்போடு பொட்டலத்தைக் கீழே தவற விட்டான். சிப்ஸ் பேகெட் அவன் தட்டில் விழ, சிறுவன் சடாரென்று பாய்ந்து சிப்ஸ் பாகெட்டை எடுக்க, சமோசா பொட்டலம் தவறி உருண்டு தரையில் விழுந்தது.
இப்போது ரகுவின் தட்டில் கெச்சப் பாகெட்டும் பேப்பர் துண்டும் மட்டுமே அசையாமல் இருந்தன. பையன் இன்னும் கேச் பிடித்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்களில் சிப்பந்திகள் தட்டுக்களை திருப்பி எடுத்துக் கொண்டு போனார்கள். சுத்தம் செய்ய வந்த சிப்பந்தி ரகுவின் காலடியில் கிடந்த பாதுஷாவை அப்புறப்படுத்துகையில், "பாத்து சாப்பிடக் கூடாதா சார்? இப்படி அசுத்தம் பண்றீங்களே?" என்றார்.
நொந்து போன ரகு, கண்களை மூடிச் சாய்ந்து உட்கார்ந்தான். தலையில் ஏதோ மடமடவென்று தாளமிட்டு நெருட, கைகளால் தடவிப் பார்த்தான். செருப்பு போல் பட்டது.
திரும்பிப் பார்த்தான். பின்னிருக்கையில் ஒரு ஐந்து வயதுச் சிறுவன் தலைகீழாக ட போல் உட்கார்ந்திருந்தான். அவனருகே இன்னொரு சிறுவன் இன்னொரு ட. இருவரும் பாகெட் நின்டென்டோ விளையாடிக் கொண்டிருந்தார்கள். நாலைந்து முறை கேட்டும் பயனிலாது போக, சிறுவனின் கால்களை நகர்த்தினான் ரகு.
அந்த நேரத்தில் கையில் ஏதோ பொட்டலத்துடன் அந்தப் பக்கம் நடந்த இன்னொரு சீட்காரர் விதி போல் விளையாடினார். ரகு நகர்த்திய சிறுவனின் கால்கள் அவரை இடறிவிட, தடுமாறி பொட்டலத்துடன் விழுந்தார். சிதறி விழுந்த மிளகாய்ப்பொடி இட்லிகளை விடச் சிவந்திருந்தது விழுந்தவரின் முகம். "ஏன்யா யோவ்? அறிவில்லே?" என்று அமைதியாக ரகுவை அழைத்தார்.
இதற்குள் செய்தியறிந்த பெட்டியின் குழவிப் பட்டாளம் ஆளாளுக்குக் கொக்குத்தலை நீட்டிப் பார்த்துச் சிரித்தன. பலத்த சிரிப்பு.
விழுந்தவர் அவமானம் தாங்காமல் கொதித்தார். அன்புடன் ரகுவைப் பார்த்து, "பன்னாடை! சின்ன பசங்க காலைத் தட்டி விட்டு போற வரவங்களை இப்படித்தான் இடறி விடுறதா? மனுசனாய்யா நீ? இதப் பாரு.. தட்டி விட்டது நீ. சுத்தம் செய்யுறதும் நீ தான்" என்று ரகுவின் கைகளில் பொட்டலத்தைத் திணித்தார். திணித்த வேகத்தில் அதில் கைவிட்டு இருந்த ஒரு இட்லியை எடுத்து வாயில் அடைத்துக் கொண்டார். "இதையாவது விட்டு வச்சியே" என்றபடி நகர்ந்தார். கண்ணில் தென்பட்ட இட்லிகளைப் பொறுக்கி எடுத்துப் பொட்டலமிட்டு பாத்ரூம் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு வந்தான் ரகு.
சில நிமிடங்களுக்குப் பிறகு சிறுவனும் சிறுமியும் பழையபடி கேச் பிடிக்கத் தொடங்கினர். மெள்ள பெட்டியின் பிற ராட்சசர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர். "அம்மா!" என்று அலறியது ஒரு குரல். இன்னொன்று பேயறைந்தாற் போல் வீறிட்டலறியது. பின்னிருக்கைச் சிறுவர்கள் சண்டை போடத் தொடங்கினர். கதவோரம் இருந்த பிள்ளைகள் இருக்கைகளின் இடைப்பாதையில் ரன்னிங் ரேஸ் ஓடத்தொடங்கினர். எதிர் வரிசை இருக்கைகள் ஒன்றில் ஒரு பிள்ளை சீட்டில் உட்காராமல் குரங்கு போல் சீட்டின் மேல் ஏற முயற்சித்துக் கொண்டிருந்தான். இன்னொரு இருக்கை வரிசையில் இரண்டு மூன்று சிறுமிகள் பாடத்தொடங்கினர். ஒரு கைக்குழந்தை அழுதது. ரன்னிங் ரேஸ் குழந்தைகளை சமாளித்தபடி ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு பாத்ரூம் பக்கம் அவசரமாக விரைந்தார் ஒரு தந்தை. தன் இருக்கையில் அமர்ந்து மனதுள் கந்த சஷ்டிக் கவசம் சொல்லத் தொடங்கினான் ரகு.
கேச் விளையாட்டை நிறுத்திய சிறுவன் பாகெட்டைப் பிரிக்க முற்பட்டான். "நான் பிரிச்சுத் தரேண்டா ராஜா" என்ற பாட்டியை ஒதுக்கி பாகெட்டை இரண்டாகக் கிழிக்க முற்பட்டான். கன்னாபின்னாவென்று கிழிந்த பாகெட்டிலிருந்து சிதறி விழுந்தன உருளை வறுவல்கள். "ஹஹா!" என்று சிரித்தாள் சிறுமி. மேசையில் கிடந்த ஒரு பிஸ்கெட் பாகெட்டை எடுத்துப் பிரித்துப் போட்டான் சிறுவன். "ஹஹா!" என்றான். சிறுமி உடனே ஒரு பிஸ்கெட்டை எடுத்து சிறுவனைப் பார்த்து எறிந்தாள். சிறுவன் நகர அது பாட்டியின் தோளில் பட்டுத் தெறித்தது. சிறுவன் உடனே ஒரு பிஸ்கெட்டை எடுத்து சிறுமியைக் குறிவைத்து எறிந்தான். அது ஜன்னலில் பட்டுத் தெறித்தது.
சிறுவனுக்கு என்ன தோன்றியதோ அடுத்த பிஸ்கெட்டைச் சிறுமியைப் பார்த்து எறியாமல் தோராயமாக பெட்டியின் வாயிலை நோக்கி எறிந்தான். "ஹேய்!" என்று பின்பக்கத்திலிருந்து குரல் கேட்க, சிரித்தான். சிறுமி சும்மா விடுவாளா? இன்னொரு பிஸ்கெட்டை எடுத்து எதிர்புறம் எறிந்தாள். "யார்ராது?" என்ற குரல் கேட்டு "கிகிகி" என்று மென்மையாகச் சிரித்தாள் வில்லி. இருவருக்கும் இது பிடித்துவிட்டது. சதிகாரக் கூட்டம்!
பெட்டி திடீரென்று அமைதியானது. கேடரிங் சிப்பந்திகள் மறுபடி அடுக்குகளுடன் உள்ளே வந்தார்கள்.
வரிசையாக மறுபடி ஆளுக்கொரு தட்டில் சில பொட்டலங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். முன் அனுபவம் எச்சரிக்க, ரகு அவசரமாகத் தட்டில் பாய்ந்தான். காய்ந்து போன வரட்டித் துண்டு போல் நான்காக வெட்டப்பட்ட பராத்தா ரொட்டி. குமட்ட வைக்கும் கரம் மசாலா போட்ட சென்னா கூட்டு. ஒரு பொட்டலத்தில் கீரைச்சாதம். ஒரு சிறு பேகெட் சிப்ஸ். கொடகொடவென்று ஒரு கப் தயிர். ஒரு ஊறுகாய்ப் பொட்டலம். ஒரு தண்ணீர் பாட்டில், ஸ்பூன், பேப்பர் துண்டு. கீரைச்சாதத்தையும் மோரையும் விழுங்கிவிட்டு தட்டை அப்படியே வைத்தான். தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்துக் கொண்டான்.
தட்டைத் தொடாத ஜீன்ஸ்-கமீஸ் ஐபேடிலிருந்து விலகி, "ஆர் யூ எஞ்சாயிங்?" என்றார் மகனிடம். "ஓ ப்லீஸ் டோன்ட் ஈட் திஸ் ரப்பிஷ்!" என்றார். பிறகு பையிலிருந்த டப்பர்வேர் டப்பாவைத் திறந்து அவனுக்கான உணவை எடுத்து, "அம்மா.. கேன் யூ கிவ் ஹிம்?" என்று அம்மாவிடம் கொடுத்தார். இவருக்கு அம்மா என்பதைத் தவிர வேறு ஏதாவது தமிழ்ச் சொல் தெரியுமா என்று திகைத்தான் ரகு.
ஜோலார்பேட்டை தாண்டி அரை மணி இருக்கும். பெட்டியில் எல்லோரும் வரிசையாக பாத்ரூம் போகத் தொடங்கினார்கள்.
ரகுவுக்கு தலை வலிக்கத் தொடங்கியது. கண்ணாடிக்காரர் ஏறக்குறைய அவன் மடியிலேயே படுத்துக் கொண்டுவிட்டார். அவ்வப்போது எழுப்பி தோளுக்கு உயர்த்திக் கொண்டிருந்தான். சிறுமி இப்போது கலர் பென்சிலால் மேசை மேல் வரைந்து கொண்டிருந்தாள். சிறுவன் தண்ணீர் பாட்டிலை உருட்டிக் கொண்டிருந்தான். இரண்டரை மணி நேரத்தில் பெங்களூர் அடைந்துவிடும் என்று யாரோ சொல்வது காதில் விழுந்தது. பெங்களூர் வருவதற்குள் ஒரு மணி நேரமாவது தூங்கினால் நன்றாக இருக்குமென்று நினைத்தான் ரகு. முடியாமல் தவித்தான்.
ஜீன்ஸ்-கமீஸ் ஐபேடை உள்ளே வைத்தார். "அம்மா.. ஐ நீட் டு ஸ்லீப். கேன் யு டே கேர் ஆப் ஹிம்?" என்றார். பெட்டியின் இரைச்சலைப் பொருட்படுத்தாமல் ஜீன்ஸ் ராணி கண் மூடியது ரகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னிருக்கைச் சிறுவர்கள் இப்போது வேகமாக காலால் உதைக்கத் தொடங்கியிருந்தார்கள்.
எதிர்வரிசைச் சிறுவன் உருட்டிக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலின் மூடி அவனது பிடியிலோ உருண்டதிலோ விலகியிருக்க வேண்டும்.. மூடி விலகி மேசையெங்கும் தண்ணீர். கிடுகிடுவென ஓடி ஜீன்ஸ் ராணியின் உடையில் அருவி போல் சரிந்தது. பாட்டி அவசரமாக பாட்டிலை எடுத்து நிறுத்தினாலும் ஜீன்ஸ் நனைந்து விட்டது.
கண்ணயர நினைத்த ஜீன்ஸ் ராணி கோபமாகப் பார்த்தார். "ஒரு பத்து நிமிஷம் தூங்க விடறியா நீ?" என்று இரைந்தார். அதற்குப் பிறகு ரகு கற்பனை செய்து பார்த்திராத சாதனையை நிகழ்த்திக் காட்டினார் அல்லி ராணி.
சிறுவனைப் பிடித்து பட்டென்று கன்னத்தில் ஒரு அறை, தோளில் ஒரு அறை விட்டார். "என்ன விஷமம். ஒரு அளவில்லே? எப்பப் பாத்தாலும் ரகளை" என்று இன்னொரு தட்டு தட்டினார். ஜீன்ஸ் ராணி தமிழில் பேசியதை ரகு கவனிக்கத் தவறவில்லை. "ஆகா! இத்தனை அழகாகத் தமிழ் பேசுகிறவரைச் சந்தேகப்பட்டோமே' என்று வருந்தினான்.
விசும்பிக் கொண்டிருந்த சிறுவனை இழுத்த ஜீன்ஸ் ராணி, "பின்னே என்ன? சொன்னாக் கேட்டா தானே? இங்க வா, படுத்துக்க.. அம்மா தூங்க வேண்டாமா? தூங்கறியா இல்லின்னா இன்னும் ரெண்டு அறை கிடைக்கும்" என்று அணைத்துக் கொண்டார்.
பெட்டியில் சட்டென்று அமைதி. அங்கங்கே சுவிச் அணைத்தாற்போல் ஓசைகள் அடங்கின. "உனக்கும் ரெண்டு போடவா?" என்று அங்கங்கே குரல்கள். எட்டிப் பார்த்த ஒன்றிரண்டு குட்டி அரக்கர்கள் அடங்கினர்.
ரகு ஜீன்ஸ் ராணியைப் பெருமிதத்துடன் பார்த்தான். 'ஆகா! வாட் எ லீடர்?! குழந்தையை ரெண்டு தட்டு தட்டத் துணிந்த சக்தியின் அவதாரம் இல்லையோ இவர்? உலகில் அமைதியை நிலை நாட்டப் பிறந்தவரல்லவோ இந்த ஜீன்ஸி ராணி?' என்று மனதுள் ஆராதித்தான்.
தூங்க முயற்சித்தான்.
2015/06/05
வெத்துவேலை
பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அடுத்த வாரம் முதல் அந்தந்த மாநிலத்தைப் பொறுத்து எட்டிலிருந்து பத்து வாரங்களுக்கு நடை சாத்திடுவார்கள் அறிவுக் கோவில்களில்.
பக்கத்து ஊர் அரோரா உயர் நிலைப்பள்ளிப் பாதுகாப்பு அதிகாரி (பள்ளிக்கூடத்துக்காக ஒதுக்கப்பட்ட உள்ளூர் போலீஸ்) நேற்று தன் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்த செய்திகளில் இரண்டு என் சிற்றறிவைக் கவர்ந்தன.
✹ வடக்கு அரோரா உயர்நிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை 44 துப்பாக்கி சூடுகள் நடந்திருக்கின்றன. வருட முடிவுக்குள் இதை ஐம்பதுக்குள் கொண்டுவர அத்தனை முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
✹ சென்ற கல்வியாண்டில் 19 துப்பாக்கி சூடுகள்.. இந்த வருடம் 44ஆக முன்னேறியிருக்கிறது. ஹைஸ்கூல் பிள்ளைகள் ரௌடிகளாக அங்கீகாரம் பெற வேண்டித் தேவையற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதும், பெற்ற்றோர்கள் பிள்ளைகளுடன் முறையாகப் பேசி வளர்க்காததும் இரு பெருங்காரணங்களாகும்.
அலோ அல்லல்லோ அதிகாரி அய்யா! வருட முடிவுக்குள் துப்பாக்கிச் சூடுகளை ஐம்பதுக்குள் கொண்டு வர முயற்சி செய்யறீங்களா? ஏன் 44 பத்தாதா? ஒரு பொறுப்புள்ள அதிகாரியா இருந்துகிட்டு அறிக்கை விடுறதுனா இப்படியா? அடுத்த ரெண்டு வாரத்துக்குள்ளாற ஆறு துப்பாக்கி சூடுங்க எங்கே நடக்கப் போவுதோனு பொதுமக்கள் பயப்பட மாட்டாங்களா? என்னய்யா அதிகாரி நீ? ஹைஸ்கூல் பிள்ளைகள் தேவையற்றத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடறாங்களா? அப்ப.. தேவையுள்ள துப்பாக்கிச் சூடு பள்ளிக்கூடத்துல இருக்குதுன்றே? இரண்டாவதா ஒரு முத்து உதிஞ்சுச்சே? என்னாது? 19லிருந்து.. 44ஆக.. முன்..னேறியிருக்கிறதா? அய்யா, அறிவுக்கொழுந்தே, பாதுகாப்புத் திலகமே, இதுவாய்யா முன்னேற்றம்? ஏலே, ஞானப்பேனே.. என்ன சொல்றோம்னு தெரியாம நீயெல்லாம் எதுக்கய்யா அதிகாரியாவணும்? அதிகாரியாகி அறிக்கை விடணும்? அறிக்கை விட்டு எங்களை வாட்டணும்? கடைசியிலே இன்னொரு குண்டைப் போடுறீங்களே அய்யா? ரௌடிகளாக அங்கீகாரம் பெற விரும்பும் பதின்மர்களைப் பள்ளிக்கூடத்தில் வைக்க என்ன புடலங்காய் முயற்சி செய்கிறீர்கள் அய்யா? இவர்கள் பிள்ளைகள் அய்யா. இன்னும் பதினாறு வயதுகூட நிரம்பாத பிள்ளைகள்! பெற்றோர்கள் பிள்ளைகளுடன் முறையாகப் பேசி வளர்க்கவில்லையா? ஏன்யா.. பின் தங்கிய ஊர்ல ஏதோ கூலி வேலை பாத்துகிட்டு.. தான் படிக்கலே தன் பசங்களாவது நல்லாயிருக்கட்டும்னு பசங்களை பள்ளிகூடத்துக்குத் தினம் அனுப்புறதே வடக்கு அரோரா பெற்றோர்களுக்குக் கஷ்டமா இருக்குறப்ப... பள்ளிக்கூட பாதுகாப்பு அதிகாரியா பதவியிலே உக்காந்துகிட்டு நீ என்னய்யா ஆணியடிச்சுட்டிருக்கே? பசங்களுக்கு ஒரு முன்னோடியா உதாரணமா முனைப்பு தர வேணாமா? ஆசிரியர்களை வச்சுகிட்டு ஒரு சின்ன சைஸ் சமூகப் புரட்சி செய்ய வேணாமா? அட, புரட்சி வேணாம் ஒரு பாதுகாப்பாவது தர வேணாமா? அலோ.. உன் ஜாப் டைட்டில் பாரு நைனா. இன்னா செக்யூரிடி கொடுத்துக் கியிக்கிறே நீ? உம்ம தலையைச் சுத்தி கருப்பா இருக்குறது முடினு நெனச்சேன்.. எப்பேற்பட்ட ஞான இருளய்யா உமக்கு!
இப்படியெல்லாம் கூவத் தோன்றினாலும், யாரும் எதுவும் சொல்லவில்லை. ஊர் மக்களுக்குக் கூவ நேரமில்லை. கூவக்கூடினால் வால் மார்ட்டிலோ மெக்டானல்ட்ஸிலோ கிடைத்த அடிமட்ட மணிக்கூலி வேலையும் போய்விடுமே?
அடுத்த ஆறு துப்பாக்கிச் சூடுகளில் தன் பிள்ளைகள் குறுக்கே வராமல் இருக்கட்டும் என்று எல்லாமறிந்த மேய்ப்பனிடம் மனமுருக முறையிட்டு, ஈடாக வரும் ஞாயிறன்று திருச்சபை உண்டியலில் ஒரு டாலர் காணிக்கையிடத் தீர்மானித்தனர் மெக்சிகோவிலிருந்து பிழைப்புக்காக வந்து அல்லல்படும் மரியாக்களும் பெர்த்தாக்களும்.
'முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை தரக்கூடாது, பறித்துவிட வேண்டும்' என்று ஒரு இந்திய மத்திய அமைச்சர் சொல்லியிருப்பதாக டிவி செய்திகளில் பார்த்தேன். அதிர்ந்தேன். மோடியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களுக்கு இதுவும் வேண்டும். அவர் பொறுப்பில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. அவர் அறியாது வெளிவந்த செய்தியென்றால் உடனே அப்படிப் பேசியவரை பதவியிலிருந்து நீக்கியோ பொதுவாக அறிக்கை விட்டோ மறுத்திருக்க வேண்டும். செய்தாரா தெரியவில்லை. மாறாக இதைப்பற்றி அர்னாப் கூ(ச்சல்)ஸ்வாமிகள் பொதுமக்கள் காது கிழிய கத்திக் கொண்டிருப்பதே மிச்சம் (பிறகு வருகிறேன்).
ஒரு பக்கம் மோடியின் உலகப்பயண செலவுக்கான அலசல். இன்னொரு பக்கம் ராகுல் காந்தி ஏன் காணாமல் போனார் என்ற புலம்பல் (நிஜமாவேவா?). இன்னொரு பக்கம் அஷ்டலக்ஷ்மிகளின் அவதாரமான அம்மாவைப் பற்றிய அலசல். மோடி ஆட்சிக்கு வருகிறேன். இந்தியாவின் secular அரசியல் சட்ட அமைப்பு இந்த அளவுக்கு எப்போதேனும் அசைக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. எத்தனையோ இனக் கலவரங்களைப் பார்த்திருந்தாலும் தொடர்ந்து வரும் செய்திகளின் பின்னே ஏதோ ஒரு ஒழுங்கும் திட்டமும் இல்லாதிருக்குமோ என்ற கேள்வியும் அச்சமும் தோன்றவே செய்கின்றன. இந்துவாக மதம் மாறினால் லட்சக்கணக்கில் ரூபாய் கிடைக்கும் என்று ஒரு அறிக்கை வந்ததாக அல்லல்பட்டது.
அரசியலில் மதம் கலக்கலாம். மதத்தில் அரசியல் கலக்கலாம். இரண்டையும் ஒன்றாக்கினால் அடுத்த தேர்தலில் காவி காலி.
"மோடி என்ன சாதித்திருக்கிறார்?" என்று பழைய பம்மல் நண்பர் ஒருவரிடம் கேட்ட போது "செல்போன்ல் கேக்குறதோட நிறுத்திக்க. ப்லாக்ல எல்லாம் எழுதிடாத. உள்ளே தள்ளிடப் போறாங்க' என்றார். "66A" என்றேன் பதிலுக்கு. "தாம்பரம்-பூந்தமல்லி" என்றார். "இல்லே" என்றேன். "தாம்பரம்-குன்றத்தூர்?" என்றார். "இது வேறே" என்றேன். "நீ திமிர் பிடிச்சவன்டா" என்றார்.
இந்தியா வந்த ஒபாமா செய்தியின் பின்னணி இப்போது எனக்கும் புரியத் தொடங்கியிருக்கிறது. ஒபாமாவை மோடி நிறைய காபி அடிக்கிறார் என்கிறார்கள். பாவம் பாரதம்.
அர்னாப் ஸவுன்ட்ப்லேஸ்டர்ஸ்வாமி தன் சிறு வயதில் இரண்டு ஒலிக்கூட்டிகளை விழுங்கியிருக்க வாய்ப்பு இருக்கிறது. இரும்புச்சத்து குறை என்பதைத் தவறாக எடுத்துக்கொண்டிருக்கலாம். இவருடைய குரலின் அளவுக்கு முகத்தின் மேற்பகுதியில் ஏதாவது இருந்தால் சரிதான். 'இவர் செல்போன் இல்லாமலே லாங்க் டிஸ்டென்ஸ் பேசலாம்' 'இவர் குரலிலிருந்து எலக்டிரிசிடி டிரா பண்ணமுடியும்னு நினைக்கிறேன்' 'இவர் ப்ரோக்ரேம் டேப்பிங் பார்க்க ஸ்டூடியோவுக்கு வந்தவங்கள்ள தினம் பத்து பேராவது செவிடாயிருப்பாங்க' 'ஒரு வேளை இந்த ஆள் பரம செவிடோ?' என்று வரிசையாக அடுக்கிவிட்டு, 'இவர் வீட்டில் எப்படிப் பேசுவார்?' என்ற என் மகனின் கேள்வி சுவாரசியமாகப் பட்டது. அர்னாப் டெசிபல்க்ரேக்கர் வீட்டில் உரையாடல்கள் எப்படி இருக்கும்? எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அவர் பாடு, அவர் பக்கத்துவீட்டுக்காரர் பாடு. என்றாலும் இவர் அழைப்புக்கு இசைந்து தொலைக்காட்சியில் இப்படி காட்டுக்கூச்சலைக் கேட்டு அனுபவிக்க வேண்டும் என்பது விதியா? பேட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு ஒரு கவுரவம் வேண்டாமா?
சூப்பர் சிங்கர் தொல்லையை எப்படித்தான் மக்கள் பொறுக்கிறார்களோ தெரியவில்லை. சமீபத்தில் பார்த்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஆபாச வரம்புகளை அவ்வப்போது கடந்ததாகத் தோன்றியது. அடுத்து சூப்பர் சிங்கர் toddler, சூப்பர் சிங்கர் baby, சூப்பர் சிங்கர் just born, சூப்பர் சிங்கர் ..சரி.. தொடர்ந்து வரிசையாக வாராதிருக்க வேண்டும் என்று சொல்ல வந்தேன். வயலும் வாழ்வும் காலத்தில் வளர்ந்த எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய டிவியா!
'தமிழ் வாழ்க, தமிழினம் ஓங்குக' என்று கூவத்தோன்றியது இன்னொரு நிகழ்ச்சியில். 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாடலை ஒலிக்கவிட்டு 'யார் எழுதியது?' என்ற கேள்விக்கு, 'ஜேசுதாஸ்' என்று பதிலளித்தார் ஒரு மாணவர்(?). 'மறைமலையடிகள் யார்?' என்ற கேள்விக்கு 'திருவண்ணாமலைல இருந்தார்னு தெரியும், பேரு சட்னு ஞாபகம் வரலே' என்றார் ஒருவர். 'தொல்காப்பியம்' எழுதியவர் யார் என்பதற்கு, 'இளங்கோவடிகள்' என்றார் ஒருவர். 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' பாடலை ஒலிக்க விட்டு 'யார் எழுதியது?' என்ற கேள்விக்கு, உற்சாகமாகப் பித்தானழுத்தி 'கலைஞர் கருணாநிதி' என்றார் ஒரு பெண்மணி. பாரதியாரின் இயற்பெயர் தெரியாமல் விழித்தார் ஒருவர்.
நிகழ்ச்சியை விமரிசிக்கையில் உடனிருந்த நண்பர் (பெர்சு) "சரி.. இவ்வளவு சொல்றியே, சுப்பிரமணியன் எங்கே எப்போ எப்படி பாரதி ஆனார்னு தெரியுமோ?" என்று என்னைக் கேட்டார். நான் கொஞ்சம் விழித்துப் பின் சுதாரித்து, "என்னது? எங்கிட்ட.. எங்கிட்டயே கேள்வி கேக்கறீங்களா?" என்றேன் தருமி பாணியில். விவரத்தைச் சொல்லி, இந்த நிரலியையும் எனக்குக் காண்பித்துக் கொடுத்த பெர்சின் நல்ல மனம் வாழ்க.
கமல் ஜோக்ஸ் சொல்லி மாதக்கணக்கிலாகிறது.
சமீபத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் நூறு கமல்கள் பரவலாக அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கையில் ஒரு கமல் மட்டும் கொஞ்சம் கூட அடிபடாமல் பிழைத்த அதிசயத்தை பஜய் டிவியில் பேட்டியாக ஒளிபரப்பினர். கெக்கெக்கே என்று சிரித்தபடி நிருபர் டிங்டிங் பேட்டி கண்டார்.
டிங்டிங்: ரயில் நிலையத்தில் என்ன நடந்துச்சு கமல்?
கமல்: அதுவா? மதுரையிலிருந்து வரும் பாண்டியன் எக்ஸ்ப்ரஸ் இரண்டாம் பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறதுனு ஒலிபெருக்கில சொன்னதும் ப்ளாட்பாரத்துல நின்னுகினு இருந்த அத்தினி கமலுங்களும் சடார்னு தண்டவாளத்துல குதிச்சுட்டாங்க..
டிங்டிங்: ஆச்சரியமா இருக்கே? நீங்க எப்படி பிழைச்சீங்க?
கமல்: அதுக்கு ஏன் இப்படிக் காட்டுப் பன்னி மாதிரி சிரிக்கிறீங்க? கேட்டா சொல்லிட்டு போறேன்..
டிங்டிங்: என் சிரிப்பே அப்படித்தான்.. எப்படி பிழைச்சீங்க சொல்லுங்க கமல்.
கமல்: நான் தற்கொலை செஞ்சுக்கலாம்னு தண்டவாளத்துல இருந்தனா.. ரயிலு ப்ளாட்பாரத்துல வருதுன்னதும் சடார்னு தாவிட்டேன்..
கொசுறுக்கு ஒரு பில் கேட்ஸ் ஜோக்கு (ஷ்! யாருக்கும் தெரியாமல் படிக்கவும்):
முதலிரவில் பில் கேட்ஸின் மனைவி: உங்க கம்பேனி பேரு தான் மைக்ரோசாப்ட்னு நினைச்சேன்..
2015/05/30
ஜபேஷ்
1 | 2 ◄◄இதற்கு முன்
"ஆச்சரியம் தான். ஆனா இப்படியெல்லாம் யோசிக்கறீங்களேனு வருத்தமாவும் இருக்கு. இப்படிக் கூச்சல் போட்டீங்களே, என்னாச்சோ ஏதாச்சோனு வந்தா தியாகப்பிரம்மம் பூனை ரூபத்துல நம்ம வீட்டுக்கு வந்திருக்காருனு சொல்லிக்கிட்டு.. பத்து நாள் முந்தின மழைல முறிஞ்ச கிளையும் புதரும் வெயில்ல காஞ்சு சுள்ளியும் முள்ளுமா கிடக்கு.. காலெல்லாம் குத்துது.. அதை எடுத்துப் போடுங்கனு ரெண்டு நாளா கத்தறேன்.. தியாகப்பிரம்மம் பூனைனு.. வேறே வேலையில்லையா?"
"க்லீன் பண்ண ஆள் அழைச்சுண்டு வரதா சொன்னியே மாலி? ஓகே.. இன்னிக்குப் பண்ணிடறேன் ஜெயா.. சரி இதைக் கவனி.." என்று மறுபடி என் சோதனைகளில் இறங்கினேன். தியாகராஜர் க்ருதி ஒலித்த போது ஒன்றி என்னருகே வந்தமர்ந்த பூனை, ஒவ்வொரு முறை வேறே எந்தப் பாடல் ஒலித்தாலும் அசுவாரசியமாகவோ அல்லது அவசரமாகவோ இடத்தை விட்டு அகன்றது. "இப்ப என்ன சொல்றே ஜெயா?"
"தப்பா நினைக்காதீங்க. அமெரிக்கால நாய் "ஸிட்"னா உட்காரும். நம்ம பசங்க பாட்டு டான்சுனு ஏதாவது கூத்தடிச்சா தானும் சேர்ந்து உக்காரும். அதுக்காக பாப் ம்யூஸிக் தெரிஞ்ச நாய்னா அர்த்தம்? உங்களுக்கு ஞாபகம் இருக்கா? டுலுத் சம்மர் ஹவுஸ்ல ஒரு தடவை நம்ம வீட்டுக்குள்ள தவறி நுழைஞ்ச நாய்.. நீங்க என்ன சொல்லியும் கேட்கலே.. வாலை ஆட்டிக்கிட்டே இருந்தது.. ஆனா அதைத் தேடி வந்த ரோபர்டோ ஸ்பேனிஷ்ல ஏதோ சொன்னதும் ஒரே ஓட்டமா தாவியோடிச்சே... ஸ்பேனிஷ் தெரிஞ்ச நாய்னா அதுக்கு அர்த்தம்? இல்லே. பழக்கம். இது யார் வீட்டுப் பூனையோ? தியாகராஜர் க்ருதி கேக்குற வீடா இருந்திருக்கலாம். சாப்பாட்டு டயத்துல இது மாதிரி பாட்டுக்களைப் போட்டிருக்கலாம். சாப்பாட்டு வேளை... ஏதாவது சாப்பாடு கிடைக்குமோனு கூட இந்தப் பூனை உங்க பக்கத்துல வந்திருக்கலாம்.."
"உன்னை கன்வின்ஸ் பண்ணவே முடியாது. இது பழக்க வழக்கம் இல்லே. இப்ப பாரு" என்று எழுந்தேன். தியாகய்யரிலிருந்து எப்எம் ரேடியோவுக்கு மாற்றினேன்.
..தில்லானா தில்லானா நீ திக்கு திக்கு தேனா...
பூனை திடுக்கிட்டு எழுந்தது. புன்னகையுடன் ரேடியோவில் அலைவரிசை மாற்றினேன்.
..ஊத்த பல்ல வெளக்காமே சோத்த தின்னுங் காமாச்சி...
அலறியடித்து இடத்தை விட்டு அகன்ற பூனை சமையலறைப் பொந்துக்குள் அடைக்கலம் புகுந்தது.
ஜெயாவைப் பார்த்தேன். பிறகு சமையலறையிலிருந்த சாதம், பால், அப்போது செய்து வைத்திருந்த சாம்பார், வாழைக்காய்க் கூட்டு, கேரட் பச்சடி, கல்கண்டு, திராட்சைப்பழம் என்று கண்ணில் பட்ட உணவுகள் எல்லாவற்றிலும் சிறிதாகத் தட்டுக்களில் எடுத்துப் பூனையருகில் வைத்தேன். பத்து நிமிடங்களாகியும் பூனை எதையும் மோப்பம் பிடிக்கக் கூட எழவில்லை. என்னுடன் வந்த ஜெயாவும் மாலியும் கவனித்தபடி இருந்தனர். சமையலறையிலிருந்து வெளியே வந்து பத்து நிமிடங்கள் பொறுத்து மீண்டும் உள்ளே சென்றோம். பூனை தூங்கிக் கொண்டிருந்தது. தட்டுக்களில் உணவு அப்படியே.
வரவேற்பறைக்குத் திரும்பி இசையைத் தியாகய்யருக்கு மாற்றி மிக மிக மென்மையான ஒலிக்குக் குறைத்தேன்.
..ந்யாய அந்யாயமு தெலுசுனு ஜெகமுலோ...
பூனை வரவில்லை. சற்றே ஒலி கூட்டினேன்.
..ராம நீ சமானம் எவரு..
பூனை வரவில்லை.
"கொஞ்சம் செவிட்டுப் பூனையா இருக்குமோ அத்திம்பேர்? தியாகய்யருக்கு ஆயிருக்குமே நானூறு வயசு.." என்றார் மாலி.
மாலியை முறைத்தபடி எழுந்து சமையலறைக்குள் சென்றேன். பூனையைக் காணோம். சற்றுக் கலங்கி அங்குமிங்கும் பார்த்து மீண்டும் வரவேற்பறைக்கு வந்தபோது சோபாவின் கைப்பிடிக்குக் கீழே தியாகய்யர் பாட்டைக் கேட்டபடி மறைவாக மெய்மறந்து நின்று கொண்டிருந்தது பூனை. ஜெயாவையும் மாலியையும் சைகையில் அழைத்துக் காட்டினேன். பிறகு சமையலறையிலிருந்து உணவுத் தட்டுக்களை எடுத்து வந்து பூனையின் முன் வைத்தேன். அலட்சியம் செய்வது போல் பூனை எந்தத் தட்டையும் கொஞ்சமேனும் கவனிக்கவில்லை.
"இப்ப என்ன சொல்றே?" என்றேன்.
"அசைவப் பூனையோ அத்திம்பேர்? எலி மீஞ்சுரு மீன் ஏதாவது சாப்பிட்டுப் பழக்கமோ?"
"மாலி.."
"ஒருவேளை ஒசத்தியா கோழிக்குஞ்சு வேணுமோ என்னமோ?"
"சும்மா இரேன்.. பூனை கோழிக்குஞ்சு சாப்பிட்டுப் பாத்திருக்கியா எங்கயாவது?"
"பார்த்ததில்லேத்தே. ஆனா பூனைக்குக் கோழிக்குஞ்சுனா தேன்பாகு மாதிரி தெரியுமோ? டிவிலே இப்பல்லாம் டாமஜரினு.. சின்னக் கொழந்தைகளுக்கான ப்ரோக்ராம்னு சொல்றா.. ஆனா அதுல ஒரு பூனை சான்சு கிடைச்சா லபக்னு லபக்னு ஒரு கோழிக்குஞ்சை முழுசா முழுங்கிடறது.."
"அது கோழிக்குஞ்சில்லே" என்றபடி மாலியைக் கோபமாக முறைத்தேன்.
"அப்டியா? மஞ்சள் மஞ்சேள்னு மொழுக்காட்டம் இருந்ததே பாக்கறதுக்கு? யார் கண்டா? அமெரிக்க தேசத்துல பன்னிக்குட்டி கூட நல்ல வெளுப்பா கலரா இருக்குங்கறா. பாக்கறதுக்குப் பன்னி மாதிரியே இருக்காதுங்கறா"
"நிறுத்து மாலி"
"மாலி சொல்றது சரியாயிருக்கலாமே? பிராமண வீட்டுப் பூனையா இருந்தா பருப்பு சாதம் போட்டிருக்கலாம். மத்தவா மீனும் கறியும் தானே போடுவா? வாழைக்காய்க் கூட்டும் பருப்பு சாம்பாரும் வச்சா இந்தப் பூனைக்கு நாத்தம் குடலைப் பிடுங்குதோ என்னமோ யார் கண்டா?" என்றாள் ஜெயா. "அதுக்காக நாம மீன் வாங்கிட்டு வந்தா போட முடியும்? வேறே வேலை இல்லே?"
"அத்திம்பேர்.. இப்பல்லாம் பிராமணா சிக்கன்65 மட்டன்95னு ஒரு கட்டு கட்டி வெளுத்து வாங்கறா. அய்யருங்க கறி திங்கறதால் மாமிச விலைவாசி ஏறிப்போச்சுனு ஊர்ல புலம்பறா.. அதான் தியாகய்யர் பூனையா வந்து.."
சைகை காட்டி மாலியை அடக்கிக் கடுப்புடன் அமர்ந்தேன்.
"சரி சரி.. நீங்க சொல்றாப்புல சங்கீத ரசனையுள்ள பிராணினே வச்சுப்போம். ஆனா எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க?! இந்தப் பூனை தியாகய்யர்னு தானே சொல்றீங்க? இப்பப் பாத்துடலாம்" என்றாள் ஜெயா. அலமாரியிலிருந்த விக்கிரகங்களை எடுத்துக் கோபமாக எறிவது போல் பாவம் காட்டித் தரையில் வீசினாள். விக்கிரகங்கள் மூலைக்கொன்றாக சிதறி உருண்டன. நான் அதிர்ந்து "ஜெயா!" என்றேன்.
அந்தக் கணத்தில் நாங்கள் யாருமே எதிர்பாராதது நடந்தது. விபரீதங்களின் முதல் அடையாளமென அப்போதே தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஒரு காட்டுப்புலியின் உறுமலுடன் பூனை ஜெயாவின் மேல் பாய முற்பட்டது.
ஜெயா சட்டென்று விலகி அலறினாள். அந்தக் கணத்தில் நான் கண்ட ஜெயாவின் முகம்! திடுக்கிட்டேன்! அவளுடைய முகம்.. என்னை என்னவோ செய்தது. தலை மழுங்கச் சிரைத்து, காதில் குண்டலங்களும் நெற்றியில் விபூதியும் அணிந்த ஒரு பிராமணரின் முகம் போல் சில கணங்களுக்கு மாறியது.
பூனையை ஒரு கையால் வேகமாகத் தள்ளிவிட்டாள் ஜெயா. பாசித்தரையில் கால் வழுக்கியது போல் அறை மூலைக்குக் கத்தியபடி வழுக்கிச் சென்ற பூனை, அதே வேகத்தில் உடனே எழுந்து விக்கிரகங்களின் அருகே வந்தது. ராம விக்கிரகத்தைத் தேடிப் பார்த்து அதனருகே உட்கார்ந்தது. ஜெயாவைப் பார்க்க அஞ்சி நடுங்கியது போல் என்னைப் பார்த்தது.
பதைத்து ஜெயாவிடம் சென்றேன். கைகளிலும் முகத்திலும் சிராய்ப்பு. பூனை நிச்சயம் அவளை நிறையக் கீறியிருந்தது. "வா.. முதல்ல சுத்தம் செஞ்சு மருந்து போடறேன்"
"இந்தப் பூனையை முதல் வேலையா காவேரில கடாசிட்டு வாங்க. என்னை நான் பார்த்துக்கறேன். நான் திரும்பி வரப்போ பூனை இங்கே இருக்கக் கூடாது.." என்றபடி ஜெயா படுக்கையறைக்குள் சென்றாள்.
"நான் வேணும்னா நாளைக்கு வரேன் அத்திம்பேர்.. கொஞ்சம் வேலையிருக்கு" என்றபடி மாலி சமயோசிதமாகப் புறப்பட்டார்.
நான் பூனையின் அருகே சென்றேன். என்னைக் கண்டு அஞ்சி ஓடவில்லை. மாறாக என்னை நேராகப் பார்த்தது. அறிவுக்கப்பாற்பட்டக் கடவுளின் அடையாளமென்று சொல்லப்படும் ஆறறிவு அவதாரமான ராமனின் விக்கிரகத்தைத் தன் இரண்டு கால்களால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த ஐந்தறிவு அவதாரமான தியாகய்யப் பூனையைப் பற்றி நான் என்ன நினைப்பது? என்ன புரிந்து கொள்வது? என்ன செய்வது?
மறுநாள் அதிகாலையில் எழுந்துவிட்டேன். உறக்கம் வரவில்லை. விக்கிரகங்களை வீசியதைக் கண்டு கோபத்தில் பூனை பாய்ந்தது.. ஜெயாவின் முகம் மாறியது.. நிச்சயம் நான் கற்பனை செய்யவில்லை. ஜெயாவின் முகம் ஒரு அந்தணரின் முகமாக.. சில கணங்கள் என்றாலும்.. மாறியதைக் கண்ணால் கண்ட அதிர்ச்சி அடங்கவேயில்லை. ஜெயாவிடம் இதைப் பற்றிச் சொல்லாதது வதைத்தது. மேலும் பூனையை விரட்டாமல் வைத்திருந்தக் காரணத்தால் ஜெயாவை மிகவும் கோபப்பட வைத்துவிட்டேன் என்றக் குற்ற உணர்ச்சி மிகத் தொந்தரவு செய்தது.
எழுந்ததும் முகம் கழுவி முற்றத்தின் ஓரத்தில் எனக்காக ஒதுக்கியிருந்த மேசைக்கு வந்தேன். உதய வேளையின் அரைகுறை இருட்டும் வெளிச்சமும் கண்ணாடிக்கூரை வழியாகப் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. பழைய மேகின்டாஷ் கணினியைத் தட்டியெழுப்பி, எண்ணத்தில் உதித்தவற்றைச் சற்றுத் தீர்மானமாகத் தெரிந்துகொள்ள, இணைய ஆராய்ச்சியில் இறங்கினேன். எம்எல்வி, மணி அய்யர், எம்எஸ், ராதா ஜெயலக்ஷ்மி, பாலமுரளி, நிஷா ராஜகோபால் என்று பல குரலில் தியாகராஜர் க்ருதிகள் மென்மையாக இசைத்துக்கொண்டிருக்க, பூனை வழக்கம் போல் என்னருகே அமர்ந்து என்னைக் கவனியாமல் இசையையும் ராம விக்கிரகங்களையும் கவனித்துக் கொண்டிருந்தது.
கூகிலுக்கும் அத்தனை விவரங்களைக் கொட்டிக் கொடுத்திருக்கும் விகிபீடியாவுக்கும் பகிர்ந்து கொண்ட இணைய நுகர் எந்தரோ மகானுபவர்கள் அந்தருக்கும் என் வந்தனங்களை மானசீகமாகத் தெரிவித்தபடி, கட்டுப்படுத்த முடியாத வியப்போடு விவரங்களைச் சேகரித்தேன். சுமார் ஏழரை மணிக்கு ஜெயா சமையலறைக்குள் வருவதற்குள் ஏறக்குறைய ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு விவரங்கள் சேகரித்துவிட்டேன்.
காபி கொண்டுவந்த ஜெயா, "காபி சாப்பிடறீங்களா?" என்றாள். மஞ்சள் பீங்கான் கோப்பையில் நுரை பொங்கக் கொடுத்தாள்.
நன்றியுடன் "நல்லா தூங்கினியா?" என்றேன்.
பூனையை வெறுப்புடன் பார்த்த ஜெயா, "இந்தப் பூனையைக் கிளப்புற வரைக்கும் தூக்கம் வராது" என்றாள்.
"இந்த வாரம் நாம ஸ்ரீரங்கம் போறப்போ திருச்சி எஸ்பிஸிஏல சேர்த்துடறேன்னு சொல்லியிருக்கேன்ல?"
"சனியனைப் பாருங்க.. என்னமோ இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் மாதிரி கம்பீரமா உக்காந்துட்டு.. வாட் எ ராட்"
"பாவம் ஜெயா.. பிராணியைப் போய் சனியன் கினியன்னுட்டு.." என்று காபியை அருந்தினேன். எனக்குப் பிடித்த வகையில் சூடாக சர்க்கரை குறைவான டிகாக்ஷன் அதிகமான ஸ்ட்ராங் காபி. சற்று இளைப்பாறினேன். "அதை விடு.. நெட்ல தெரிஞ்சுக்கிட்ட விவரங்களைக் கேட்டா நீ மனசு மாறினாலும் மாறுவே.."
"நானே கேக்கணும்னு நினைச்சேன்.. புஸ்தகம் ஏதாவது எழுதுறீங்களா?"
"சமீபத்துல நடந்ததெல்லாம் என்னை ரொம்ப பாதிச்சுது ஜெயா" என்றேன், முழு விவரங்களைச் சொல்லாமல். "தூக்கம் வரலே. இங்க நம்மளைச் சுத்தி ஏதோ பிரம்மாண்டமா நம்ம அறிவுக்குப் புலப்படாத விஷயங்கள் நடக்கிறதா எனக்குத் தோண ஆரம்பிச்சுது. ப்லீஸ்.. நான் சொல்றதைக் கேளு.. நானும் ரேஷனல் தான். இருந்தாலும் சில வாரங்களா.. குறிப்பா நேத்து ராத்திரி நடந்தது.. என்னை நிறையவே அசைச்சிருக்கு ஜெயா. இது என்னை நானே ஆத்திக்குறதுக்கான என்னோட தேடல்னு வச்சுக்கோ.."
"என்ன தேடுனீங்க?"
"மறுபிறவி சித்தாந்தங்கள்.. மறுபிறவினு பார்த்தாலும் சரி.. கொஞ்சம் தீவிரமா ஆன்மாவின் உடல்மாற்றம்னு பார்த்தாலும் சரி.. நான் தெரிஞ்சுக்கிட்டது என்னை நிச்சயமா உலுக்கியிருக்கு. எனக்கென்னவோ இந்தப் பூனை தியாகய்யர்னு நிரூபிக்குற அளவுக்கு விவரங்கள் கிடைச்சிருக்குனு நினைக்கிறேன்.. ஆனா எதுக்காக வந்ததுனு தான் புரியலே"
ஜெயா சிரித்தாள். சத்தியமாக ஆணின் சிரிப்பு.
திடுக்கிட்டு அவளைப் பார்த்தேன். வெண்கல டவரா டம்ளரில் காபியை உதட்டில் படாமல் உயர்த்தி அருந்திக் கொண்டிருந்தார் நேற்றிரவு பார்த்த அந்தணர். என் வாழ்நாளில் ஜெயா அப்படிக் காபி.. எந்த பானத்தையுமே குடித்ததில்லை. ஆச்சரியம் அடங்குமுன் சட்டென்று மாறித்திரும்பிய அவள் முகம்.. தூக்கிவாரிப் போட்டது! "என்ன கண்டுபிடிச்சீங்க?" என்றாள் இயல்பாக. காபியை உதட்டில் வைத்து அருந்தி முடித்து பீங்கான் கோப்பையை என் முன் வைத்தாள். குழம்பினேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டதா?
சுதாரித்தேன். "நிறைய கண்டுபிடிச்சேன்.. மறுபிறவி கிடையாதுனு நாம சொன்னாலும்.. கிழக்குலயும் மேற்குலயும் சரி அந்தக் காலத்துலந்து சொல்லியிருக்கறதெல்லாம் வேறே மாதிரி இருக்கு.. நிறைய உதாரணங்கள் கொடுத்திருந்தாலும் இதுக்கெல்லாம் அடிப்படையான சித்தாந்தம் ஆழமானதுனு நினைக்கிறேன். இந்த உலகத்துல இயற்கையா நடக்குறதெல்லாம் நிரந்தர அழிவில்லாம திரும்பத் திரும்ப உருவெடுக்குதுனு நம்புறியா?"
"எப்படிச் சொல்றீங்க?"
"உதாரணமா.. விதைச்சா செடி மரம் பூ பழம் விதைனு மறுபடி ஒரு வட்டம் உருவாகித் தொடருது.. சரியா? எவ்ரிதிங் இன் நேசர்.. தண்ணி நிலத்துல விழுந்து ஆவியா எழும்பி மேகமா மழையா மறுபடி விழுந்து மறுபடி எழுந்து.. பிராணி மனுஷன்லந்து எல்லாமே இயற்கையின் இந்த விதிக்கு உட்பட்டு நடக்குறதாவே தோணுது. ரிக் வேதத்துல புனர்ஜென்மம் புனர்ம்ருத்யுனு ரெண்டைப் பத்தியும் எழுதியிருக்குறதைப் படிச்சு அசந்துட்டேன் ஜெயா. நாம எல்லாமே இது போல இயற்கையின் விதிக்குட்பட்டு கலந்து பிறந்து இறந்து பிறந்து கலந்து பிறந்து இறந்து.. ஆன்மாவின் ட்ரேன்ஸ்மைக்ரேஷன் சாத்தியம்னு தோணுது.. பிறப்பு எப்படி ஏற்பட்டது? வாழ்வின் ஆதாரம் என்ன? எங்கே எப்படி எல்லாம் தொடங்கியது? நம்ம வேதாந்தமும் சரி மேற்கத்திய வேதாந்தமும் சரி.. ஒண்ணைத்தான் சொல்லுது.. ஆம்னி விவம் எ விவோ.. வாழ்விலிருந்தே வாழ்வு.. இதுக்கு என்ன அர்த்தம்?"
"உங்களுக்குப் பொழுது போகாம இதையெல்லாம் படிச்சுக் குழம்பியிருக்கீங்கனு அர்த்தம்.."
"இரு.. வாழ்விலிருந்து வாழ்வுனா ஒவ்வொரு பிறவியும் இன்னொரு பழைய பிறவியின் தொடர்ச்சினு ஆகுது இல்லையா? இதை நீ நம்பாவிட்டாலும் இப்போதைக்கு ஏத்துக்கிட்டு நான் சொல்றதைக் கேட்டா பிரமிச்சுப் போயிடுவே. ஹென்ரி டிஷ்னர்னு ஒருத்தர் கிழக்கு மேற்கு அத்தனை சித்தாந்தங்களையும் புரட்டி மறுபிறவி பத்தி எழுதியிருக்கார். நாம எல்லாருமே ஒரு முடிவின்மையிலிருந்து இன்னொரு முடிவின்மைக்குப் பயணம் செய்கிறோம். இதில் பிறப்பும் வாழ்வும் இறப்பும் இயற்கையின் விதிக்குட்பட்டு நடந்துகிட்டே இருக்கு. அத்தனை அணுக்களும் எப்படியாவது எங்கேயாவது அமைந்தும் அழிந்தும் தானே ஆக வேண்டும்னு அவர் எழுதியிருக்கிறது பிரமிப்பா இருக்கு. தியாகய்யரின் அணுக்கள் இந்தப் பூனையில் ஏன் கலந்திருக்கக் கூடாது?"
"இப்படிச் சொல்வீங்கனு எனக்குத் தெரியும்.. பூனைக்குப் பதிலா உங்களோட ஏன் கலந்திருக்கக் கூடாது? பூனை ஒரு காரணம் தான். தியாகய்யர் ராமர் விக்கிரகம்னு நீங்க தான் பிடிச்சிட்டிருக்கிறதா எனக்குத் தோணுது.."
"எக்ஸாக்ட்லி.. ஒரு விஷயத்தை முதலில் மனதில் பதிச்சுக்குறப்பவோ.. ஒரு முதல் சந்திப்பை ஏத்துக்குறப்பவோ.. எதையுமே செய்யுறப்பவோ.. மனம் தனக்குத்தானே ஒரு தீர்மானத்தையும் செய்யுது இல்லையா? திஸ் ஜட்ஜ்மென்ட்.. இதுக்குக் காரணம் என்னனு கேட்டின்னா.. இதுக்கு முன்னால நாம் எடுத்த பிறவிகளின் ஒட்டு மொத்த அனுபவம்.. அதான் நம்மையறியாமலே நம்மை தீர்ப்புக்குட்படுத்துது.. முன்பின் தெரியாதவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயமோ கெட்ட அபிப்பிராயமோ ஏற்படுதுனா அதை அறிவு பூர்வமா எப்படி விளக்குவே சொல்லு?"
"மை குட்னஸ்! பூனை உங்களை பைத்தியமாவே ஆக்கிடுச்சு போலிருக்கே? ப்லீஸ். விட்டுருங்க. இந்தப் பூனையும் வேண்டாம். இந்த முட்டாள்தனமும் வேண்டாம். உங்க தியரிப்படியே வச்சுப்போம். இதுக்கு முந்தி என்னவா இருந்தீங்கனு தெரியாது. இதுக்குப் பிறகு என்னவா இருப்பீங்கனு தெரியாது. இப்ப இருக்குற பிறவிலே உங்களுக்கு நீங்களே நேர்மையா நடந்துக்குங்க அது போதும்.."
"இதுக்கு முன்னால நீ யாரா இருந்தேனு ஒரு ஐடியா இருக்கு" என்றேன் மென்மையாக. ஏன் அப்படிச் சொன்னேன்? சொல்லியிருக்கக் கூடாது.
"என்ன சொன்னீங்க?"
"நீ மட்டுமில்லே நான் கூட இதுக்கு முன்னால யாரா இருந்திருப்போம் எதுவா இருந்திருப்போம்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் உண்டாகுது இல்லையா?" என்று சமாளித்தேன். "இன்னொரு கப் காபி சாப்பிடுவோம்" என்றபடி சமையலறைக்குச் சென்று இரண்டு கப் சன்ரைஸ் காபி கலந்து கொண்டு வந்தேன்.
"நெட்ல தேடினப்போ மில்டன் வில்லிஸ்னு ஒருத்தர் கிட்டத்தட்ட நூறு வருஷத்துக்கு முன்னால எழுதின 'மறுபிறவி, ஏன், எப்படி?'ங்கற புத்தகம் கிடைச்சுது. அதுல யார் யார் எப்போ மறுபிறவி எடுப்பாங்கனு ஒரு கணக்கே போட்டுக் கொடுத்திருக்காரு. ரொம்ப சுவாரசியமா இருக்கு. இதோ பாரு.." என்று ஒரு குறிப்பைத் தேடியெடுத்துப் படித்தேன்.
...ஒரு பிறவி முடிந்ததும் உயிர் ஆத்மா என்று அழைக்கப்படும் பிறவியின் ஆணிவேர் இயற்கையின் ரசாயனத்துடன் கலந்துவிடுகிறது. அணுக்கள் அணுக்களுடன் கலந்து உலவுகின்றன. வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏற்றபடி இந்த அணுக்கள் கலந்தும் பிரிந்தும் உலவுகின்றன. மேன்மையாக வாழ்ந்தவர்களின் அணுக்கள் மரணமடைந்ததும் சற்று உயரே சென்று கலக்கின்றன. கேவலமாக வாழ்ந்தவர்களின் அணுக்கள் மேலெழுந்தவாரியில் உடனே கலந்து தாழ்வாகவே இருக்கின்றன. இயற்கையின் சுழற்சிக்குட்பட்டே இவை மீண்டும் கலந்து பிறப்பில் முடிந்து இறப்பில் தொடங்குகின்றன...
"சுவாரசியமா இல்லே?" என்றேன். "பிறப்பு என்பது ஆரம்பம், இறப்பு என்பது முடிவுனு தானே நாம நினைச்சிட்டிருக்கோம்.."
ஜெயா பதில் சொல்லாமல் காபி சாப்பிட்டாள். "இங்க தான் சுவாரசியம் அதிகமாகுது" என்றேன். குறிப்பை எடுத்துத் தொடர்ந்து படித்தேன்.
...குடிகாரர்கள், சோம்பேறிகள், பழி சொன்னவர்கள், ஊழல் பேர்வழிகள், பொய்யான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் அணுக்கள் ஐம்பது வருடங்களுக்குள்ளாகவே மறுபிறவி எடுத்து விடுகின்றன...
...அறிவில்லாமல் நடந்து கொள்பவர்கள், தன்னைப் பற்றியே நினைப்பவர்களின் அணுக்கள் நூறு வருடங்களுக்குள் பிறவி எடுக்கின்றன...
...பணத்திமிர் பிடித்தவர்கள், கண்மூடிகள், படித்தவர்கள், உலகாயதமாய் வாழ்ந்தவர்களின் அணுக்கள் இருநூறு வருடங்களுக்குள்..
...தன்னலம் குறைத்துப் பிறர் நலம் கருதி ஒரு பொதுவுணர்வோடு வாழ்ந்தவர்களின் அணுக்கள் ஐநூறு வருடங்களுக்குள்...
...பொதுமையிலிருந்து விலகி உயர்ந்த குறிக்கோளோடு வாழ்ந்த அபூர்வப் பிறவிகளின் அணுக்கள் ஆயிரம் வருடங்களுக்குள்...
...எப்படி வாழ்வதென எடுத்துக்காட்டிப் பண்போடு வாழ்ந்த அதிசயப்பிறவிகளின் அணுக்கள் இரண்டாயிரம் வருடங்களுக்குள்...
ஜெயா மறுபடி சிரித்தாள். மறுபடியும் ஆணின் சிரிப்பு. "நீங்க சொல்றாப்புல சொல்லியிருக்காரா? இல்லே உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்களா?"
"நான் புரிஞ்சுகிட்டதுதான். நூறு வருஷத்துக்கு முன்னால மில்டன் வாழ்ந்த காலத்துல விவசாயிங்க அதிகம். சர்வாதிகாரிகள் அதிகம். கலைஞர்கள் குறைவு. அரசினம் ஏறக்குறைய அழிந்திருந்தது. விவசாயிகளை அவர் பொதுவுணர்வோடு வாழ்ந்தவர்கள்னு சொல்றாரு.. அரசர்களை பண்புள்ளவர்கள்னு சொல்றாரு.. சர்வாதிகாரிகளை திமிர் பிடித்தவர்கள் கண்மூடிகள்னு சொல்றாரு.. கலைஞர்களை குறிக்கோள் கொண்டவர்கள்னு சொல்றாரு. இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் என் கருத்தோட ஒட்டுற மாதிரி எடுத்துக்கிட்டேன்.. மில்டன் கருத்தின் அடிப்படை தான் முக்கியம். அதுல மாத்தமே இல்லே. அறிவார்ந்த அடுத்தவங்க கருத்துக்கு இடம் தராமல், தான் நம்பினதையே நம்பி ஏமாந்து போறவங்க கண்மூடிகள் தானே? சர்வாதிகாரிகள் திமிர் பிடித்தவர்கள் தானே? தன் விருப்பபடி எல்லாம் நடக்கணும்னு குடும்பத்துல பெண்டாட்டி பிள்ளைங்களை திமிரோடு ஏறக்குறைய அடிமையா நடத்துறவங்க சர்வாதிகாரிங்க தானே? மில்டன் சொன்னதையே நானும் சொல்றேன்.. தன் கருத்துக்கு ஆதரவா மில்டன் சொல்லியிருக்குறதைக் கவனி". தொடர்ந்தேன்.
...எபிக்டீடஸ், உனக்கும் எனக்கும் மிகவும் பிடிச்ச பிலாஸபர் இல்லையா, அவர் கவிஞர் எமர்ஸனா திரும்பி வந்தார்...
...இந்தியாவின் அசோக மகாராஜா அமெரிக்காவின் வீர வக்கீலான ஹென்ரி ஆல்காட்டாகத் திரும்பி வந்து அடையார் தியஸாபிகல் சொசைடி தொடங்கி வைக்கக் காரணமாயிருந்தார்..
...ஹரப்பா மொகஞ்சதாரோவுக்கு குடியேறியவர்களின் மூதாதையரான கெல்டியத் தலைவராக இருந்தவரே ஹிட்லரை ஒடுக்கிய அமெரிக்க அதிபரான ரூஸவெல்ட்.. அதுக்கு முன்னால அவரும் சீஸரும் கணவன் மனைவியா இருந்தவங்க...
...ஆங்கில அரசுக்கு அடித்தளம் போட்ட ஆல்ப்ரெட் தி கிரேட் தான் விக்டோரியா அரசியா திரும்பி வந்தது...
"இதையும் கேளு..நெட்ல கிடைச்ச விவரம்.." தொடர்ந்தேன்.
..ஏப்ரகம் லிங்கனோட போர்க்கால அமைச்சர் தான் இந்திரா காந்தியா மறுபிறவி எடுத்தார்..
..ஏப்ரகம் லிங்கன் அமைச்சர்கள்ல ஒருத்தர் தான் இப்போதைய ஒபாமா..
..திப்பு சுல்தான் அப்துல் கலாமா மறுபிறவி எடுத்திருக்கார்..
..அமிதாப் பச்சன் பழைய அமெரிக்க நடிகர் எட்வர்ட் பூத்..
ஜெயா மறித்தாள். "இதை வச்சு தியாகய்யர் திரும்பி வந்திருக்காருனு சொல்றீங்க.. சரி.. பூனையா வருவானேன்? மறுபிறவி எடுத்தா நீங்க சொன்ன நாலஞ்சு மனுஷ வகைல ஒருத்தரா இல்லை எடுக்கணும்?"
"அதைத்தான் சொல்றேன்.. இத்தனை வருடங்களுக்குள்னா சரியா இத்தனையாவது வருடத்தில் இந்த வடிவத்தில் வரணும்னு ஏதும் இல்லையே? மில்டனின் கணிப்பு ஒரு சுவாரசியமான அனுமானம். இப்ப இதைக் கேளு... அஷ்டலக்ஷ்மிகள் சேர்ந்து ஜெயலலிதாவா அவதாரம் எடுத்திருக்காங்கனு ஞானி ரஜனிகாந்தே சொல்லிட்டாரு.. பெசன்ட் நகர் கோவில்ல இனிமே கூட்டம் வருமானு தெரியலே.. அதைவிடு.. ஜவர்ஹர்லால் நேரு ஸ்வீடன்ல ஒரு நாயா மறுபிறவி எடுத்தார்னு நெட்ல விவரம் இருக்கு.."
இருவரும் சிறிது சிரித்தோம்.
"ஜெயா.. எல்லாமே ஒரு அனுமானம்னு வச்சுக்கிட்டாலும் இத்தனை ஆராய்ச்சி.. இத்தனை விவரம்.. இதுல ஏதோ ஒண்ணு இருக்கலாம்னு தோணுது. இந்து மதத்துலயே எத்தனை மறுபிறவிக் கருத்துக்கள்! நசிகேதன் கதை என்னை எங்கேயோ கொண்டு போயிடுச்சு. சிவன் ஆதிசங்கரரா வந்தார்னு சொல்றாங்க. வால்மீகியே தியாகய்யரா வந்தார்னு சொல்றாங்க. த்வைத மத்வாச்சாரியாரும் அத்வைத சங்கராச்சாரியாரும் ஒவ்வொரு பிறவியிலும் எதிரிகளாகவே பிறந்தார்கள்னும் ஒரு கருத்து.. ஸ்ரீரங்கத்துல நடந்துதுனு சொல்வியே.. கஜேந்திர மோட்சத்து யானையும் முதலையும் முற்பிறவியில் வேறே பிறவிகளா இருந்தாங்கனு புராணம் சொல்லுது இல்லையா? தசாவதாரத்தின் தாத்பர்யமே இது தானே? மீனாகவும் மிருகமாகவும் மனிதனாகவும் பிறந்து இறந்து பிறந்து வாழும் இயற்கை நியதியை அப்படியே சொல்லாம கடவுள் மகாத்மியம்னு தலைமுறை தலைமுறையா கதை வடிவுல சொல்லப்படும் மறுபிறவிச் செய்தி.. அவ்வளவுதான்.. அப்படியிருக்குறப்ப தியாகய்யர் பூனையா ஏன் வந்திருக்கக் கூடாது?"
ஜெயா விருட்டென்று எழுந்தாள். "போறும் உங்க ஆராய்ச்சி. மழையில முறிஞ்ச கிளையும் புதரும் காய்ஞ்சு கிடக்கு.. எடுத்து வெளில போடுங்கனு ரெண்டு நாளா அடிச்சுக்குறேன். இந்தப் பூனையும் விக்கிரகங்களும் உங்களைப் பைத்தியமாத்தான் அடிச்சிருக்கு"
இங்கே தான் விபரீதங்கள் உக்கிரமாகத் தொடங்கின என்று நினைக்கிறேன்.
"உக்காரு ஜெயா.. நான் பைத்தியம்னே வச்சுக்கோ. இந்தப் பூனையின் கழுத்துல ஒரு மாலையிருக்குனு சொன்னேனே.. இன்னிக்குக் காலைல என்னமோ தோணிச்சு.. பூனைக் கழுத்துல இருந்த மாலையை மறுபடி நல்லா ஆராய்ஞ்சு பார்த்தேன். வழவழனு முடிச்சு மாதிரி இருக்கே தவிர அது முடிச்சு இல்லே ஜெயா. ருத்ராட்சம். பூனை கழுத்துல ருத்ராட்சம் எப்படி வந்தது?"
ஜெயா என்னை வெறுப்புடன் பார்த்தாள். "என்னைக் கேட்டா?"
"அதுக்கு மேலே இன்னொண்ணும் சொல்றேன்.. எப்படிச் சொல்றதுனு தெரியாம இருந்தேன்.. தப்பா நினைக்காதே. நேத்து நீ விக்கிரகங்களை வீசினதும் பூனை பாஞ்சுது இல்லையா.."
நான் சொல்லும் பொழுதே ஜெயாவின் முகம் இறுகத் தொடங்கியதைக் கவனித்தேன். தொடர்ந்தேன். "தியாகராஜருக்கு ஒரு அண்ணன் இருந்தார். தனக்கு இல்லாத திறமை தம்பிக்கு இருக்கேனு பொறாமை..."
ஜெயாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஏதோ முனகத் தொடங்கினாள். விடாமல் தொடர்ந்தேன். "தன் முன்னே தியாகராஜர் பாடியதைக் கேட்டு மெய்மறந்த குரு வெங்கடராமையா, தஞ்சாவூர் அரசர் சரபோஜி மகராஜாவிடம் தியாகய்யரைப் பற்றிப் பெருமையாக எடுத்துச் சொன்னார். இதைக்கேட்ட மகாராஜா, தியாகய்யரைத் தன் ஆஸ்தானத்தில் சேரும்படி கேட்டு தியாகய்யர் வீட்டுக்குச் செய்தி அனுப்பினார். தியாகய்யர் இல்லாத நேரத்தில் வந்த அரச தூதர்கள் அண்ணனிடம் இந்தச் செய்தியைச் சொன்னார்கள். தம்பிக்கு வந்த வாய்ப்பைக் கண்டு பொறாமைப்பட்டாலும் இதனால் குடும்ப வறுமை நீங்கி பெரும் அந்தஸ்தும் கிடைக்கும் என்ற ஆசையில் அண்ணன் ஜபேசன்.."
ஜெயா சடாரென்று எழுந்து உட்கார்ந்தாள். பூனை நடுங்கி என்னருகே ஒண்டியது. தொடர்ந்தேன். "..தியாகய்யரிடம் அரசச் செய்தியை சொன்னார். தியாகய்யர் எந்தவிதச் சலனமும் இல்லாமல் தன் சீதாராமலட்சுமண விக்கிரகங்கள் முன் அமர்ந்து 'நிதி சால சுகமா.. ராமா.. நி சன்னதி சேவா சுகமா?' என்று தமிழில் சுலபமாகப் புரிகிற மாதிரித் தெலுங்கில் பாடத்தொடங்கினார்"
"ஏய்!" என்றாள் ஜெயா. சந்தேகமில்லாமல் கோபமான ஆண் குரல்.
நான் சுதாரிப்பதற்குள் வேகமாக எழுந்து விக்கிரகங்களை அலமாரியிலிருந்து எடுத்துக்கொண்டு பின்கட்டுக்கு ஓடினாள். என்னருகே இருந்த பூனை ஒரு கணமும் தாமதிக்காமல் அவள் பின்னே உறுமிப் பாய்ந்து ஓடியது.
ஜெயாவின் உருவம்.. ஜெயா அல்ல.. ஜபே..சபே..ஜெயே.. எனக்கு தலை சுற்றியது.. பூனையின் பின்னே ஓடினேன்.
பின்கட்டில் மரக்கிளை ஒன்றில் தடுக்கி விழுந்தேன். எழுவதற்குள் ஜெயா படித்துறையில் நின்றபடி விக்கிரகங்களை வீச.. பூனை பாய.. ஜெயா அலறியது கேட்டது. எப்படியோ எழுந்து.. மிகவும் வலித்த இடுப்பையும் கால்களையும் இழுத்துப் பிடித்துப் படித்துறைக்கு வந்தேன். ஜெயா படித்துறையில் வழுக்கி விழுந்து அடிபட்டுக் கிடந்தாள். நெற்றியில் ரத்தம் வேகமாகக் கசிந்து கொண்டிருந்தது. அவள் முகத்திலும் கைகளிலும் கீறல்கள். பதறியபடி அவளை நெருங்க முனைந்ததில் தடுமாறி அவளருகே விழுந்தேன். விக்கிரகங்களைக் காணவில்லை. பூனையையும். வலியில் கண்கள் இருண்டன. தலை சுற்றியது. வலி தாளாமல் புரண்ட போது கவனித்தேன். எதிர்க்கரையில் முன்னர் பார்த்த பெரியவர். அவர் கைகளில்...
மாலி எப்போது வந்தார்.. எப்படி எங்களை மருத்துவமனையில் சேர்த்தார் என்பது எதுவும் தெரியாது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும், பிறகு எங்களுக்குத் தெரிந்த டாக்டர் விசாலம் மருத்துவமனையிலும் சில வாரங்கள் தங்கவேண்டியிருந்தது.
எனக்கு இடுப்பு ஒடிந்துவிட்டதால் செயற்கை இடுப்புப் பொருத்தியிருந்தார்கள். இன்னும் ஒரு மாதமாவது மருத்துவமனையில் இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
ஜெயாவுக்கு நெற்றியில் இரண்டு தையல், முகத்தில் ஒரு தையல், கை கால்களில் அங்கங்கே பேண்டேஜ் சுற்றியிருந்தார்கள். அவளை இன்றைக்கு டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்புவார்கள். விவரம் சொன்ன மாலி, "கவலைப்படாதீங்கோ அத்திம்பேர். நான் கூடமாட இருந்து அத்தையைக் கவனிச்சுக்கறேன். நீங்க நிதானமாத் தேறி வாங்கோ. அதான் முக்கியம்" என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றார். "சீக்கிரமே டிஸ்சார்ஜ் பண்ணி ஆத்துக்கு அனுப்பிடுவா. நாளைக்கு மறுபடி வரேன்" என்று என்னை விட்டு விலகிப் போனார். நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.
அறை அமைதியாக இருந்தது. எனக்கு ஒரு விவரம் தெளிவாகப் புரிந்துவிட்டது.
இயற்கையின் சுழற்சியைப் புரிந்து கொள்ள முடியாது. விக்கிரகத்தை நான் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தியாகய்யர்.. பூனை.. வரவில்லை. விக்கிரகம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கட்டும் என்ற முனைப்புடனேயே பூனை வந்திருக்கிறது. விக்கிரகம் மண்ணுக்குள்ளேயே கிடக்கவேண்டுமென்ற விதி. தியாகய்யர் வேறு பிறவியில் திரும்ப நேர்ந்தால் திரும்பி வரும் காலம் வரையில் மண்ணில் புதைந்து கிடக்கட்டும் என்பதற்காகவே.. விக்கிரகங்களை வீசி எறியக் கூடியவர் வீட்டில்.. நடந்தவை எதுவும் தற்செயல் இல்லை.. நான் என்னவோ வேண்டாத ஆராய்ச்சியெல்லாம் செய்து சுழற்சியைத் தற்காலிகமாக நிறுத்தி.. ஜெயா சொன்னது போல் அன்றைக்கே விக்கிரகங்களை கோவிலில் கொடுத்திருந்தாலோ நீரில் எறிந்திருந்தாலோ பூனை எங்கள் வீட்டுக்குள் வந்தே இருக்காது.. அதைத்தான் மதில் மேல் நின்றபடி என்னிடம் சொல்ல முற்பட்டதோ தியாகய்யப் பூனை? ராம விக்கிரகங்களைப் பராமரிக்கும் தகுதி எனக்கில்லை என்பது புரியாமல் ஏதோ செய்துவிட்டேன். ஜெயாவைப் போல் எனக்கும் முற்பிறவித் தொடர்புகள் இருக்க வேண்டும். அதனால் என்னிடம் பூனை வந்திருக்கிறது. தெரியாது போன எனக்கும் தியாகய்யருக்குமான தொடர்பு தெரியாமலே இருக்கட்டும். விபரீதமாகத் தோன்றினாலும்.. விக்கிரகங்களை இருக்க வேண்டிய இடத்தில் வைக்கவே ஜெயா முற்பட்டாள் என்பது மட்டும் புரிந்து அவள் மேல் எனக்குப் புது மதிப்பு உண்டானது. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றதும் அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆ! அசையும் பொழுதெல்லாம் வலித்தது.
இன்னொன்றும் புரிந்தது என்பேன்.
வலிக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது 'ராமா' என்று சொல்லத் தொடங்கியிருக்கிறேன்.
[முற்றும்].
இக்கதை Roald Dahl 1950 வாக்கில் எழுதிய 'Edward, the Conqueror' எனும் சிறுகதையின் தழுவல். என் எழுத்தில் நிறைய உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நிறைகள் அத்தனையும் டாலுக்குச் சொந்தம். குறைகள் ஒட்டுமொத்தமாக என்னுடையவை.