2015/06/19

கைந்நிலை    ப்போதோ விடிந்திருந்தப் பொழுதிலே முந்தைய இரவுகளின் இருள் தவிர்க்க முடியாமல் ஒட்டிக்கொண்டிருந்தது... சுமைகள் இறங்கினாலும் தோள்களின் விலகாத வலி போல். இந்த வலி இந்தச் சுமையினால் வந்தது என்றுக் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறதா என்ன? சில பார்வைகளுக்கே தெரியும் காட்சி. சிலருக்கு மட்டுமே புரியும் புறநானூற்று வரிகள்.

வெளியே பார்த்தேன்.

இருளை அழித்தக் குற்ற உணர்வுக் குழப்பத்தில் பல ஒளிக்கற்றைகள் வெயிலைப் பரப்பிக் கொண்டிருந்தன. வெயிலின் வறட்சி செடி கொடிகளைக் கடந்து, புழு பூச்சிகளைக் கடந்து, பிராணிகளைக் கடந்து, மனித உள்ளங்களை ஊடுறுவியிருந்தது போல் பட்டது. சொல்லிப் புரியாத எண்ணங்களைக் கண்டு அஞ்சிப் பதுங்கியோடும் இன்னும் சொல்லாத எண்ணங்களின் தோல்விப் போராட்டம் போல, இளவெயில் புது வெயிலில் கரைந்து கொண்டிருந்தது.

அருகே நிழலாடுவதைக் கவனித்தேன். அவள் தான்.

அருகில் நின்றாலும் தொலைவில் இருந்தாள் என்பது புரிய வேண்டிய அவசியமில்லாமல் புரிந்தது. எனக்கென்று சொல்லாமல் எனக்காக அவள் விருப்பப்படிக் கலந்து கொண்டு வந்த காபியை கோப்பையுடன் அருகே வைத்தாள். அதை எடுத்துக் குடித்தால் கிடைக்கும் அங்கீகாரத்தை அளிப்பதா மறுப்பதா? இல்லாத மதிப்பை இருப்பதாக எண்ணுவதால் வரும் குழப்பமா? இருக்கிற மதிப்பை இல்லாமல் செய்து கொள்ளும் முட்டாள்தனமா? சாதாரண காபிக் கோப்பைக்கு ஏன் இத்தனை சித்தாந்தச் சுற்று?

அவள் மனதின் தீர்மானங்களைப் புரிந்து கொள்ள முடியாத இறுக்கம். என் மனதின் தீர்மானங்களை வெளிப்படுத்த இயலாத இறுக்கம்.

இறுக்கங்களின் வேர் புரிய மறுக்கிறது. எங்கிருந்து வருகின்றன அவநம்பிக்கைகளும் குழப்பங்களும்? பச்சிளம்பிள்ளையின் நம்பிக்கை.. வாயில் திணிக்கப்பட்ட முலையில் விஷமில்லை என்ற ஒட்டுமொத்த நம்பிக்கை.. அறிவற்ற நிலையில் உடன் ஒட்டிய அந்தக் கபடமற்ற நம்பிக்கை அறிவார்ந்த நிலையில் எப்படி மறைகிறது? சந்தேகமும் சுயநலமும் அப்பாவி நம்பிக்கைகளைச் சாப்பிட்டு விடுகின்றனவா? அல்லது நம்பிக்கை என்பதே நாடகமா? விளங்காத அண்ட நிலையின் அணுவளவு வெளிப்பாடா?

சனிக்கிழமையின் விடுமுறைச் சோம்பலில் உள்ளக்கனங்களைப் போர்த்திய வண்ணம்... என்னையறியாமல் காபிக் கோப்பையை எடுத்தேன். 'விழுங்கிய சூடான காபி நரம்புகளின் ஊடாய் ஓடி எத்தனை பிறவிகளின் சோர்வினைத் துரத்தும்?' என்ற பதிலுக்கப்பாற்பட்டக் கேள்வியுடன் மறுபடி வெளியே பார்த்தேன். மெல்லிய ஒலி. அழுகிறாளோ?

விளிம்புப் பார்வையில் கவனித்தேன். அவள் அழவில்லை. நான் அழுதால் அவளுக்குத் தெரியப்போவதுமில்லை. தெரிந்தும் பயனில்லை. புரியாதவர்கள் எதைத் தெரிந்து கொண்டு என்ன பயன்? அழுவது என்பது அடையாள வெளிப்பாடாக இருக்க வேண்டுமா என்ன? உள்ளத்தின் ஓரத்தில் அவநம்பிக்கையின் அசுத்தமான கத்தி கீறி வரும் இரத்தம் சாதாரணமானதா? வலியும் சாதாரணமானதா? உள்ளம் எப்படி அழும்? நான் அழுகிறேனா என்று அவள் கவனிக்கிறாளோ? அவள் அழவில்லை என்ற என் எண்ணம் வலுக்கவே அழாதிருக்கிறாளோ? அல்லது அவளின் அழுகை, நகைப் போர்வை போர்த்திய மேல் மரபோ?

ஒரு வேளை அழுவது நான் தானோ? இல்லை. நான் அழவில்லை. ஒலி அவளிடமிருந்தும் வரவில்லை... வெளியிலிருந்து வருகிறது. ஒரு குழந்தையின் கேவல் போல்.

கண்களை விரித்தேன். வெயிலின் கடுமை. இயற்கையை வாட்டி வதக்கும் இயற்கையின் முரண். கண்கள் கூசின. ஒலியின் பிறப்பிடத்தை எதிர் வீட்டின் தெருத்திருப்பச் சுவரோரமாக இருந்த மரத்தடியில் கண்டேன்.

இரண்டு பூனைகள். ஒரு குட்டிப் பூனை. ஒரு பெரிய பூனை. குட்டிப்பூனையை அவ்வப்போது வாயால் கடித்தும் கைகளால் அறைந்தும் துன்புறுத்திக் கொண்டிருந்தது பெரிய பூனை. வீலென்று குட்டிப்பூனை அலறும் போது சட்டென்று விலகிய பெரிய பூனை, சற்றுப் பொறுத்து மறுபடி தாக்கியது.

நான் கவனிப்பதை அவள் கவனித்தாள். "காலையிலந்து இப்படித்தான்" என்றாள்.

தலையசைத்தேன்.

எதிர் வீட்டில் யாருமில்லை. கோடை விடுமுறைக்குக் குடும்பத்துடன் வெளி நாடு போயிருந்தார்கள். அவர்கள் வீட்டுப் பூனையாக இருக்க வேண்டும். இந்தக் குடியிருப்பில் பிராணி வளர்ப்போர் வேறு எவருமில்லை. ஒரு வேளை குட்டி போட்ட பூனையோ? முதல் குட்டியைத் தின்னும் என்பார்களே? அது தானோ? பெரிய பூனைக்குப் பசியோ? அல்லது சிறிய பூனைக்குத் தரப் பாலில்லையோ? பசியால் வாடும் சிறிய பூனைக்குப் பால் தரமுடியாத வேதனையில் அதைக் கொன்று நிம்மதியை வழங்குகிறதோ? பிறப்பின் வேதனை இறப்பில் சாதனையாகிறதா? இறந்தால் நிம்மதி கிடைக்குமா? எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வு மரணம் தானா?

குட்டிப் பூனை மெள்ளத் தளர்ந்து அயர்ந்து கொண்டிருந்தது. பெரிய பூனை அதை வாயில் கவ்விக் கவ்விக் கீழே போட்டது. ஒவ்வொரு முறை கீழே போட்ட போதும் குட்டிப்பூனை கெஞ்சியது. பலமாக அலறக்கூட முடியவில்லை. கொல்லாதே என்கிறதா, சீக்கிரம் கொல் என்கிறதா?

"விலக்கலாம்னு பார்த்தா பயமா இருக்கு" என்றாள்.

தலையசைத்தேன்.

விலக்கி என்ன பயன்? குட்டிப் பூனையை எடுத்து வந்தால் பிழைக்கும் என்பது என்ன நிச்சயம்? அப்படிப் பிழைத்தாலும் வளர்க்க முடியுமா? அப்படி வளர்த்தாலும் குட்டிப் பூனை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? ஒருவேளை பெரிய பூனையின் கொடுமைகள் அதற்குப் பிடித்திருக்கிறதோ? பழக்கமோ என்னவோ? பெரிய பூனையின் நிலமை என்னவாகும்? ஒரு வேளை காப்பாற்றப்பட வேண்டியதே பெரிய பூனை தானோ? யாரிடமிருந்து யார் யாரைக் காப்பாற்றுவது?

பெரிய பூனை விடாமல் குதறிக் கொண்டிருந்தது. சிறிய பூனை சாகவுமில்லை. பிழைத்து ஓடவுமில்லை. அங்கேயும் இங்கேயும் நகர்ந்து கொண்டிருந்தது. வேகமாக ஓடித் தப்பித்துப் போக வேண்டியது தானே? தப்பிக்கும் சக்தியில்லையா? புத்தியில்லையா? தப்பிக்கும் எண்ணமேயில்லையா?

ஓட்டப் பயிற்சிக்குப் போக வேண்டும். உடையணிந்துக் கிளம்பினேன். அவளைப் பார்த்தேன். சலனமில்லாதிருந்தாள்.

வெளியே வந்துக் காரைக் கிளப்பினேன். பூனைகளின் நினைவு வந்தது. காரை நிறுத்தி மரத்தடிக்குப் போனேன். பெரிய பூனை என்னைப் பார்த்து சட்டென்று விலகியது. ரொம்பத் தூரம் ஓடவில்லை. என் வீட்டருகே நின்றபடி என்னையே பார்த்தது.

பூனைக்குட்டியைப் பார்த்தேன். உடல் முழுதும் கீறல்கள். மிக அடிபட்டிருந்தது. கண்கள் திறக்கவேயில்லை. குருட்டுப் பூனையோ? வருத்தப்பட்டேன். நாம் எல்லாருமே பல வகையில் குருட்டுப் பூனைகளாய்க் கடி படுகிறோமே, இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? தெளிந்தேன்.

கராஜிலிருந்து ஒரு பழைய அட்டைப் பெட்டியை எடுத்து வந்தேன். ஓட்டப் பயிற்சிக்குப் போகும் வழியில் மருத்துவ மையத்துடன் கூடிய சிறு பிராணிகள் காப்பகம் இருக்கிறது. அங்கே விட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்தில் குட்டிப் பூனையை எடுத்துப் பெட்டிக்குள் போட்டேன். பெரிய பூனை என்னையே பார்த்தபடி இருந்தது. குட்டிப்பூனை இருந்த பெட்டியுடன் காரில் கிளம்பினேன்.

    காப்பக மையத்தில் ஒரு பதின்மப் பெண் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். விவரம் சொல்லி குட்டிப் பூனை இருந்தப் பெட்டியைக் கொடுத்தேன். அவள் அதை வாங்கித் திறந்து, என்னை வியப்போடு பார்த்தாள். "பூனைக்குட்டி இறந்து விட்டது" என்றாள்.

"ஐயோ.. ஒரு வேளை பெட்டியை மூடியதில் மூச்சுத் திணறி இறந்துவிட்டதோ?" என்றேன்.

"இருக்கலாம். அல்லது அடிபட்ட ரணம் கூட காரணமாக இருக்கலாம். அடியும் கடியும் பார்த்தால் குட்டிப் பூனை பிழைத்திருக்காது என்றே நினைக்கிறேன்"

"காப்பாற்றலாம் என்று நினைத்து எடுத்து வந்தேன்"

"காப்பாற்றுவது உங்கள் விருப்பம். பிழைப்பது பூனைக்குட்டியின் விருப்பம் அல்லவா?" என்றாள். வயதுக்கு மீறிய அவளின் ஞானம் என்னைக் கணம் சிலையாக்கியது.

"நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று பெட்டியுடன் உள்ளே போனாள். மெள்ள விலகி விரைந்தேன்.

    நான்கு மணி நேர ஓட்டப்பயிற்சி முடிந்து நண்பர்களுடன் அரை மணி நீச்சல் அடித்துவிட்டு பகல் ஒரு மணி போல் வீடு திரும்பினேன். களைத்திருந்தாலும் புத்துணர்வுடன் இருந்தேன். இயற்கையின் இன்னொரு முரண்.

குடியிருப்புப் பராமரிப்புக் குழுவைச் சேர்ந்த இருவர் என் வீட்டருகே ஏதோ செய்து கொண்டிருந்தனர். காரை நிறுத்தி விசாரித்தேன்.

"தெரியலே சார். செத்துக் கிடக்கு. போன் வந்துச்சு. அதான் அப்புறப்படுத்தலாம்னு வந்தோம்" என்று எதையோ சுருட்டிக் கொண்டிருந்தனர். பார்த்தேன். பெரிய பூனை. காலையில் தானே குட்டிப்பூனையைக் கொன்று கொண்டிருந்தது? இதற்கென்ன வந்தது? ஏன் இறக்க வேண்டும்? பூனையை ஒரு பிலேஸ்டிக் பையில் சுற்றியெடுத்தனர். மருந்தடித்தனர். "வரோம் சார்" என்று விலகினர்.

நான் காரைக் கிளப்பி கராஜுள் செலுத்தினேன்.

    வீட்டுக்குள் அமைதியின் பேரிரைச்சல். இந்த அமைதி புதிதல்ல. வார்த்தைகளின் ஓசை, அமைதியின் இரைச்சலுக்கு இணையே அல்ல என்பது புரிந்து மாதங்களாகின்றன. இரைச்சலை உள்வாங்கியபடிக் குளித்தேன். குட்டிப்பூனை, ஒட்டம், பதின்மப் பெண், பெரிய பூனை, நான், அவள், அலுவல், நண்பர்கள், வெயில், வாழ்க்கை... செயற்கைக் குளியலில் கரைந்த இயற்கை நிலைகளின் அழுக்கு. வெளியேறி உடையணிந்தேன். வீட்டில் அவளைக் காணாதது உறைத்தது.

மிகுந்த தாகத்துடன் பசித்தது. சமையலறைக் குளிர்பெட்டியிலிருந்து புரதப்பால் புட்டியை எடுத்து ஒரு கண்ணாடிக் கோப்பை நிறைய ஊற்றினேன். குளிர்பெட்டியை மூடும்பொழுது முகப்பைக் கவனித்தேன்.

ஒரு வெள்ளைக் காகிதத்தின் நடுவில் ஒரே ஒரு சொல் எழுதி ஒட்டியிருந்தாள்.

37 கருத்துகள்:

 1. குட்டிப்பூனையும் செத்துப்போய், தாய்ப் பூனையும் செத்துப்போய் ....... படித்து கலக்கமடைந்த எனக்கே ..... கடைசி வரிகளில் அவளும் போனதை ஜீரணிக்க முடியாமல் இருக்கும்போது ..... தங்களுக்கு இது தாங்கமுடியாத துயரமாகவல்லவா இருந்திருக்க வேண்டும் !

  எதை எதையோ எப்படி எப்படியோ அவரவர்களே அவரவர் போக்கினில் புரிந்துகொள்ளட்டும் என நினைத்து எழுதியுள்ள தங்கள் எழுத்துநடை மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதுகிறவருக்கு எழுதும் போது மட்டுமே துன்பம். படிக்கிறவருக்கு படிக்கும் போதெல்லாம்..:-)

   நீக்கு
 2. வர்ணனைகளின் விவரிப்பிலேயே நகரும் கதை. ஏகப்பட்ட தத்துவ விசாரணைகள்! பூனைகள் சாகட்டும். அவள்தான் போகட்டும். சிந்தனைகளிலிருந்து என்று விடுதலை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதல்லவோ கேள்வி? சிந்தனையற்ற நிலை வேண்டும் என்று பாடியவர் யாரென்று சட்டென்று தோன்றவில்லை. தேடிப்பார்க்க வேண்டும்.

   நீக்கு
 3. சில நிகழ்வுகள் சஞ்சலம் தரும். யாரிடமாவது சொல்லி ஆறுதல் பெற விழையும் மனம். ஆனால் சொல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தும் இன்னொரு பாதி மனம் எழுத்தாளர்களுக்கு இரண்டும் நிறைவேறும் வகையில் எழுத முடிந்தால்.. அதுதான் முடிந்து விட்டதே. சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. // தீர்வு மரணம்... குருட்டுப் பூனைகளாய்க்... இயற்கையின் இன்னொரு முரண்... // பல உண்மைகள்...

  பதிலளிநீக்கு
 5. //இருளை அழித்தக் குற்ற உணர்வுக் குழப்பத்தில் பல ஒளிக்கற்றைகள் வெயிலைப் பரப்பிக் கொண்டிருந்தன. //
  ஒளி இருளை அகற்றியதற்கு குற்ற உணர்வு கொள்ளுமா?

  புரியவில்லை. ஆக தொடர்ந்து படிக்கவும் முடியவில்லை.

  ஒளி என்றால் என்ன? இருள் என்றால் என்ன?

  ஒரு சுந்தர்ஜிபிரகாஷோ , ஒரு ஜீவாவோ , அல்லது மோகன்ஜி யோ தான் இதற்கு பதில் சொல்ல இயலும்.

  இன்னொரு கோணத்தில் பார்க்கையில் ......
  இப்ப வேண்டாம்.
  அதை அப்பறம் சொல்வோம்.

  சுப்பு தாத்தா.
  www.Sury-healthiswealth.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருள் அகற்றப்படவேண்டியதா? உருவகங்களில் வேண்டுமானால் பொருந்தலாம். உலகியலில் பொருந்தாதே? இருள் அரக்கனும் இல்லை ஒளி யோக்கியனும் அல்ல. எந்த அழிவிலும் குற்றம் உண்டு. அழிப்பதும் அழிக்கப்படுவதும் வேண்டுமானால் நியாயப்படுத்தப்படலாம். தலையில் தூக்கி வைத்துக் கொள்ள ஒளியில் அப்படி என்ன இருக்கிறது? அண்டத்தில் எல்லாமே இருளின் ஆதிக்கம் தானே?

   நீக்கு
  2. //தலையில் தூக்கி வைத்துக் கொள்ள ஒளியில் அப்படி என்ன இருக்கிறது?//

   சார் சொன்னா, சரியாத்தான் இருக்கும்போல.என்று நினைக்கும்போதே,

   "ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா :" என்ற வரி நினைவுக்கு வருது.
   எழுதியவன் யாரு சார் ??
   யாருன்னு உங்களுக்கு தெரியாம இருக்காது.
   அவனே ஒரு வெண்பா வில்,
   தன்னை சின்னப்பயல் என்று சொல்லி விட்டான் இல்லையா.
   அப்படின்னு சொல்வீகளோ ??

   அதனாலே ஒளியில் தூக்கி வைத்துக்கொள்ள ஒன்று மில்லை என்று லைட்டை அணைத்தேன். நான் அணைக்கல்ல . கரண்ட் [போயிடுத்து.
   அப்பாதுரை சார் !!
   ஒண்ணுமே தெரியல்ல சார். !!
   மேற்கொண்டு உங்க பதிவை எப்படி படிக்கிறது அப்படின்னு சொல்லுங்க..
   கண்கள் இருந்தும் குருடானேன்.
   கண்கள் இருந்தாலும் வெளிச்சம் வேணும் சாரே...
   பிசிகல் வர்ல்ட் எக்சிட்ஸ் ஆன் லைட்.


   வெளிச்சம் ( வெளிச்சமே ) இல்லாம (முழு இருட்டுலே ) இதுக்கு ஒரு பதில் நீங்க எழுதின பின்னே, (ஐ மீன் இன் த பிசிகல் சென்ஸ்)
   அண்டத்துக்கும் ஆன்மீகத்துக்கும் அப்பறம் போகலாம். .

   சு.தா.


   நீக்கு
  3. அதுக்காக ஒளி தேவையில்லேனு அர்த்தம் ஆகுமா? ஒளி எதுக்கும் லாயக்கில்லேனா அர்த்தம்? ம்ம்ம்.. ஒரு கதைக்கான ஸ்பார்க் (ஒளி ) கிடைச்சுது.

   உங்க வியாக்கியானப்படியே வச்சுப்போம். ஒளி மேல் தட்டு இல்லையா? அதான்.. அழிய வேண்டியது அழிஞ்சாலும் கில்டியா பீல் பண்ணுது..

   இருள் எத்தனை அவசியமோ ஒளியும் அத்தனை அவசியம். அதனால் தான் ஒன்றை ஒன்று அழிக்கும் போது குற்ற உணர்வு. இது எழுத்தாளர் (அப்படின்னு நானே சொல்லிக்கிறேன்) கற்பனை/உரிமை. முகத்தை வண்டு மொய்த்ததுனு சொன்னா கொடி பிடிக்கப்படாது கவிஞர் சுபாவம்னு விட்டுறணும். :-)

   நீக்கு
  4. //ஒளி மேல் தட்டு இல்லையா? அதான்.. அழிய வேண்டியது ///..


   தோன்றா எண்ணமும் சொல்லா சொல்லும் செய்யா செயலும்
   தின்றா சொல்ல இயலும் நன்றென்று ??

   வென்றுனைத்தான் வேரூன்றுவேண்டுமேனும்
   என்றுமென் எண்ணம் தவிர் - உள்ளே

   இருள் இல்லை இப்போது .உள் இருந்த
   மருளும் மிரண்டு போய் மாண்டது காண்.!!

   உருவும் அருவுமே . மாயை என உள் சொல்ல ,
   கரு என்ன ? கதையினுள் செல்.
   கண்டதைச் சொல். .

   விண்டதையா ? இல்லை. என்
   விண்ணைப் பிளந்து
   கண்ணொளி தந்த
   கார்முகிலின் கேளா இடியா ??

   புல் நுனி மேய்தல் .வேண்டா வென
   துல்லியமாய் உள் நுழைந்தேன். = கதையுள்.

   ஒளி மேல்தட்டு இல்லை.
   ஒளிமேல் தட்டு.என
   ஒலி கேட்டேன். புரிந்தேன்.
   கிலி இல்லை இனி..


   சமைந்திருந்த
   அமைதியின்
   இரைச்சல் அதிகம் தான்.

   குளிர்பெட்டியின் முகப்பை
   உற்றுப் பார்த்தேன்.
   வெள்ளைக் காகிதம் ஒன்று ஒட்டி இருக்கிறது.
   உண்மை தான். அதில் நடுவே ஒரு
   வார்த்தை இருந்த இடம் மட்டும்
   இருக்கிறது.
   அழிந்திருக்கிறது.

   சுப்பு தாத்தா.

   நீக்கு
  5. சற்று பொறுத்திருங்கள்.
   எங்கும் போய் விடாதீர்கள்.
   தனியே இவனைத்
   தவிக்க விட்டு சென்று விடாதீர்.

   இங்கு தான் இன்னமும் இருக்கிறேன்.
   இதோ.!
   இதே வெள்ளைக் காகிதத்தை
   இன்னமும் இன்னமும் ஆம்
   இன்னும் உற்றுப்பர்த்தவண்ணமே
   இருக்கிறேன்.

   இதில் என்ன இருக்கிறது ? என்ன?
   இதிகாசமே இருக்கிறதா !!
   புதிரைப் போடாதீர் !
   புரியும்படிச் சொல்லும்.

   சொல்கிறேன். இது
   சொல்ல இயலா காவியம்
   செல் அரித்த காகிதம் என
   கேலி செய்யாதீர்.

   உற்றுப்பாரும். இரு
   உதடுகளின் பதிப்பு அங்கே
   தெரியவில்லை !!
   தொட்டுப்பாரும் !!
   ஒட்டிக்கொள்ளும் எச்சிலா !!

   உனக்கும் எனக்கும் அது சீ .
   உன்மத்தமானவனுக்கோ
   உலகம். அவன்
   உலகம்.

   சு. தா.

   நீக்கு
  6. வெளிச்சமே இல்லாம தாராளமாக பதில் எழுதுவேனே? புரியணும்னு கண்டிசன் போடுவீங்க!
   ப்ரெய்ல் தெரிஞ்சா தேவலாம்.

   நீக்கு
  7. அட்டகாசமான interpretation. Half full half empty நிலை விளக்கத்துக்கு உங்க பின்ன்னூட்டமே முன்னுதாரணம்.

   நீக்கு
  8. மனுஷன் என்ன சொல்றாருன்னு புரியல்லையே...
   அரை வேக்காடு என்று ஆங்கிலத்தில் சொல்றாரோ !!

   அறை யுள் அரை இருள் என்றால் .
   அது போதும்.
   ஆனந்தம் . என்கிறாரே !!

   இந்த ஆனந்தம்
   அனந்தம் இல்லையென
   ஒளி வரின்
   தெளிவாரோ !!!
   தெரியல்லையே !

   பதின்மபெண்ணே வா. நின்
   புன்னகையின் ஒளிக்கீற்றில்
   புரிதல் பிறக்குமா?
   பொறுத்துப் பார்ப்போம்.

   சுதா.

   நீக்கு
 6. இரண்டு பூனைகள். ஒரு குட்டிப் பூனை--- என்று ஆரம்பிப்பதிலிருந்து இரண்டாம் பகுதி.

  ஆக, அந்த வரிக்கு முன்னிருப்பது எல்லாம் முதல் பகுதி சார்ந்தது.

  இரண்டாம் பகுதியில் முதல் பகுதியை அடக்கிப் பார்த்ததில் ஏற்பட்ட பிரமிப்பு நீங்குவதற்குள்--

  வீட்டுக்குள் அமைதியின் பேரிரைச்சல்-- என்று தொடங்குமிடத்தில் முதல் பகுதி தன்னாலே வந்து இரண்டாம் பகுதியுடன் ஐக்கியமாவதை படித்தில் அந்த வெள்ளைக் காகிதத்தின் நடுவில் எழுதப்பட்ட ஒரே சொல் என்னவென்று தெரிந்து விட்டது. தெரிந்ததில் பெருமூச்சே எஞ்சியது.

  பதிலளிநீக்கு
 7. அது எழுதப்படாத காகிதமாக இருக்ககூடாதா?எழுதியதை அழிக்க இயலுமா?

  பதிலளிநீக்கு
 8. நலமே, அப்பாதுரை சார்.

  இப்போ சூரி சாரின் 'புரியவில்லை'க்கு வருவோம்.

  "ஒளி என்றால் என்ன? இருள் என்றால் என்ன?"

  ஒளியின்மையே இருள். இருள் இன்மையே ஒளி.

  ஒன்றின் இருப்பும் அதனுடையேதான இல்லாமையும்.

  இருள் இருப்பு என்று எடுத்துக்கொண்டால் ஒளி அதனுடைய இல்லாமை என்றாலும் சரியே.

  இருளை விட ஒளி நமக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒன்று என்பதினால் அதுவே இருப்பாக நம் மனதில் அதற்கு ஒரு ராஜா அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

  சகல சிறப்பிற்கும் ஒளியை உதாரணமாக்குகிறோம்.

  பதிலளிநீக்கு
 9. கதை அருமையா அல்லது கருத்துக்கள் அருமையா? ஒன்றை ஒன்று போட்டி போட்டுத் துரத்துகின்றன! வழக்கமான அப்பாதுரையின் "சுருக்" முடிவு!  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த
   கதை கருத்து எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
   கீதா மேடம் !
   என்ன வர்ணனை !! என்ன ஜோடனை !!
   ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு சொல்லும்
   அடடா !! அடடா...
   சொல் அலங்காரத்தை கவனித்தீர்களா ?
   கதை பெருமாள் அப்படின்னா அதில் வரும் சொற்கள் நவரத்ன அங்கி போல.

   மோகினி அவதாரத்தன்னிக்கு, பெருமாள் அலங்காரத்தை மிஞ்சி
   விட்டது பார்த்தீர்களா !!

   எல்லாம் பெருமாள் அனுக்ரஹம்.

   நீக்கு
  2. ஆகா! ஆகா! ரொம்ப நன்றி!

   நீக்கு
 10. கதையும் நடையும் மிக அருமை. மனிதனின் சுபாவங்களைப் பிரதிபலிப்பதாகத் தோன்றும் பூனைகளை அவதானிப்பது எப்போதுமே எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் பிரியமான ஒன்றாக இருந்து வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜபேஷ் தொடரிலும் பூனை வரும் பகுதிகளை இரசித்தேன் :) .

   நீக்கு
  2. அதே அமானுஷ்யம்,
   அதே மௌனம்
   அதே பூனை

   அதே திகில்
   அதே முகில்

   அங்கே இடி,
   இங்கே கடி.

   ஆனா
   அங்கே அகம் திசைகாட்டுகிறது.
   இங்கே சுகம் திசை திருப்புகிறது.

   சுதா.

   நீக்கு
  3. கவிதை நடைல அடிச்சு நொறுக்குறீங்க..

   நீக்கு
 11. அப்பா சார், காலையிலேயே ஒரு கோப்பை குளம்பியைக் குடித்ததைப் போன்ற உற்சாகம்... Blessed with your writings :-)

  பதிலளிநீக்கு
 12. கதை அருமையாக பல வர்ணனைகளுடன்...வர்ணனைகளுக்குள் தத்துவங்கள்....ஒரு பூனைக் குடும்பத்துடன் வாழ்க்கையை ஒட்டி உரசிக் கொண்டு போய் (பூனைகளைப் போலவே) இறுதியில் இரண்டிலும் பேரமைதி...

  நல்ல நடை சார்...

  பதிலளிநீக்கு
 13. உங்களின் பதிவுகளை படித்து முடிக்கும் போதெல்லாம் நமக்கு எழுதத் தெரியலையோ என்று யோசித்துக் கொள்வதுண்டு.

  பதிலளிநீக்கு
 14. சற்றே தாமதித்து கருத்து சொல்வதிலே ஒரு நற்பயன் உண்டு என்றெனக்குப் படுகிறது. சூட்டோடுசூடாக தரப்படும் கருத்துகள் உடனடி சந்தோஷம் தான் எனினும், யாவும் சற்றே ஓய்ந்த பின்னர், மீண்டும் 'ஒரு சபாஷ்' புது உற்சாகம் தருமில்லையா? தந்தேன் சபாஷ்.... சந்தோஷம் தான் எனக்கு..

  இது உங்கள் நடையில்லை என்பதை உணர்கிறேன். புதிதாய்இருக்கிறது. ஆனாலும் உங்கள் நடைபோலும் ஒயிலாய்த்தான் இருக்கிறது. 'தேர்ந்த வாசகர்க்கானது' என்பதும் புரிகிறது. தேர்ந்துவிடத் தவிப்பதிலே என் வாசகத்தனம் கூட கண்ணசராமல் முயன்று கொண்டே இருக்கிறது.

  மெல்லக்கனன்று ஸ்தூலமாய்ப் புகையும் ஊதுபத்தி போலே சொற்றொடர்கள். புரிதலின் அருகாமையை ஒட்டி உணரப்படும் மணம்.... எந்தப்பூனையின் கூச்சலுக்காய் செவிசாய்க்கும் மனம்?

  இருளும் ஒளியும் பற்றிய குறிப்பும், சுப்பு தாத்தா மற்றும் உங்களின் கருத்துகளும் எஸக்யேலின் ஆங்கிலம் கவிதைவரிகளை நினைவூட்டுகின்றன. என் சுமாரான மொழியாக்கத்தில் கீழே :

  இருளுக்கு இடாதே சாபம்..

  இடாதே என்ற ஆணைப்படி.

  அதே சமயம்......

  அவசரத்தில் மெழுகுவர்த்தியும் ஏற்றாதே !

  ஒளி உணரமுடியாத ரகசியங்கள்

  இருளிடை மட்டுமே உண்டு.

  இருள் ஒருவகைத் பூரணத்துவம்- ஆனாலோ

  ஒவ்வொரு ஒளியும்,

  உண்மையை

  உருக்குலைத்தபடியே இருக்கிறது.  இன்னும் சிலமுறை படிப்பேன்... ஒட்டப்பட்ட துண்டுகாகிதம் சொல்லும் கதையை..

  பதிலளிநீக்கு
 15. ஒளி உணரமுடியாத ரகசியங்கள்

  இருளிடை மட்டுமே உண்டு.

  இருள் ஒருவகைத் பூரணத்துவம்-///

  ஒளியில் ஒளியும் உண்மைகள்
  உருவாய் வந்து அருவாய் ஆகி
  தருவாரும் பெறுவாருமிடையே
  இருளோடு கலந்து இனிய சுவை தந்து
  கருவென பிறந்து
  இருளிலே ஈரைந்து திங்கள்
  இருந்தபின் வெளி வந்து
  வெளிச்சம் கண்டு
  மருள் கொண்டு
  குரல் உயர்த்தி,


  க்வா க்வா என அழுகையிலே

  இருளில் இருந்தா வந்தது
  இத்தனை அழகு

  என்றல்லவா மயங்கி நிற்கிறோம் !!

  உண்மைதான்
  இருள் இடை இரகசியங்கள்
  இனிக்கத்தான் செய்கின்றன.


  சு தா.

  பதிலளிநீக்கு
 16. இருள் இடை ரகசியங்கள் !!!//  இடை இடையே கசியும்போது
  இடை என்ன கடை என்ன முதல் என்ன ?!
  மோகன் எனை எழுப்பி விட்டார்.
  ஆஹா ..நான் புத்தனானேன்.
  இல்லை என நீர் மொழிந்தால்,

  யுரேகா வென எழுந்தேன்.
  என வைத்துக்கொள்ளும்.

  இருள்
  இறைவன் தந்த
  அருள் .!  அது சரி.

  அந்தப்
  பதின்மப் பெண்
  என்னானாள் ??

  சுதா.

  பதிலளிநீக்கு
 17. வெள்ளைத் தாளின் ஒற்றைச் சொல் வேதனை?! பலனற்ற பிரிவு.... காப்பகத்துச் சிறுபெண்ணின் தெளிவு, 'எது எங்கிருக்கும்; எதிலிருந்து பெறுவோம்' என்று தீர்மானிக்க இயலாததாகிறது.

  பதிலளிநீக்கு
 18. அப்பாதுரை அவர் க ளே ! வா ழ் த் து க்க ள் ! இருள் என் ப து கு றை ந த ஒளீ ! ஒளி என் ப து கு றை ந த இருள் !
  18 வ ய து வரை பா ர்வை இ ல்லா மல் பின் பா ர வை பெ ற்ற் எ ழு த்தா ள ர் தே னி சீ ரு டை யா ன் கூ றி ய து ---கா ஸ் ய பன் .

  பதிலளிநீக்கு