2015/07/15

மன்னருக்கு மெல்லிசையின் நன்றிமெல்லிசை மன்னரின் நினைவில்.. என் பழைய பதிவுகளிலிருந்து சில வரிகள்:

    இசைச்சக்கரவர்த்தி, இசைத் திலகம், இசைப்புயல், இசை இளவல், இசையாளுனர், இசை மாமன்னர், இசை இன்னார், இசை அன்னார் என்று இந்நாளில் பலர் பலவாறாகப் பட்டம் பெற்றாலும் கொடுத்துக் கொண்டாலும், பட்டத்துக்கு ஒரு படி மேலேயே தன்னை இருத்திக் கொண்டவர், பட்டத்துக்கு தகுதியேற்படுத்திக் கொடுத்தவர், மன்னர் எம்.எஸ்.வி ஒருவர் தான் என்பது என் கருத்து. எம்.எஸ்.வி அபிமானம் என் வயதைச் சுட்டிக் காட்டுகிறது என்று ஒரு கண்ணோட்டத்தில் கொண்டாலும், எம்.எஸ்.வியின் இசை மட்டுமே என்னை இளமையாக்கி எங்கோ கொண்டு சென்று இன்ப வேகத்தில் இயங்க வைக்கிறது. அந்த வகையில் எனக்கு நூறு வயதானாலும் எம்.எஸ்.வியின் இசையைக் கேட்க முடிந்தவரை இளமையின் ரகசியத்தை அறிந்தவனாவேன்.

    மெல்லிசை மன்னர்(களின்) இசையில் வந்த ஒரு இந்திப்பாடல் பற்றியது இந்தப் பதிவு. தமிழ்த் திரையிசையில் புதுத்திருப்பத்தை ஏற்படுத்திய இரட்டையர் இவர்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவர்கள் சேர்ந்து வடித்த பாதையில் எம்.எஸ்.வி பின்னர் தனியாகப் புகுந்து விளையாடினாரென்றாலும், திருப்பத்தை உருவாக்கியதற்கான பெருமை இருவருக்குமே சேரும். இரட்டையர் சேர்ந்து இசையமைத்த பாடல்களில் பெரும்பாலானவை இன்றைக்கும் கேட்டு ரசிக்கும்படி இருப்பது இதற்கு சாட்சி. எம்.எஸ்.வியின் தனிப்பட்ட ஆட்சி இருவரும் சேர்ந்திருந்த காலத்தை விட நீண்டது என்றாலும், இரட்டையராக இருந்த போது பெற்ற வெற்றியை விட கணிசமாகக் குறைவாகத் தான் இருந்தது அவருடைய தனிப்பட்ட வெற்றி என்ற கருத்து நிலவுவதை அறிவேன். தனியாக எம்எஸ்வி தொட்ட வெற்றியின் உச்சங்களை இரட்டையராக தொட்டிருக்க முடியாது என்பது என் கருத்து. எம்.எஸ்.வியின் வெற்றிக்கு இணையாக, இன்னொரு தனி இசையமைப்பாளர் இன்னும் வெற்றி பெறவில்லை.. காலத்தை வென்று நெஞ்சில் நிறைந்திருக்கும் பாடல்களை அமைத்த விதத்தையே, நான் இங்கே வெற்றியென்று குறிப்பிடுகிறேன்.

    மெல்லிசை மன்னரின் ஆடம்பரமே இல்லாத எளிய பாடல்கள் மூன்றை இங்கே தொகுத்திருக்கிறேன். இந்தப் பாடல்களை இன்றைய தலைமுறையினர் கேட்டிருப்பார்களா?

    மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான். சந்தேகமிருந்தால் அடுத்த வரியைப் பத்து முறை படிக்கவும். மெல்லிசை என்றால் எம்எஸ்வி தான்.
***

    டவுள் நம்பிக்கையில்லாத எனக்கு தெய்வீக உணர்வை அனுபவிக்க சில வழிகள் அன்றாடம் கிடைக்கின்றன. முதலில் என்னைப் பெற்றவள். அதற்கடுத்த படிகளில் முதல் படி என்னை வளர்த்த மெல்லிசை மன்னரின் இசை.

மெல்லிசை மன்னரின் இசை என் வாழ்வின் எத்தனை சோகங்களை சோர்வுகளை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறது என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும்.

சமீபத்தில் தெரிந்து கொண்ட செய்தி. கணவன் இறந்ததும் கைக்குழந்தையை வளர்க்க வசதியில்லாத வறுமையில் குழந்தை எம்எஸ்வியைக் கொன்றுத் தானும் சாகத் தீர்மானித்தாராம் இவரின் தாயார். நல்லவேளையாக இவர் தாத்தா குறிக்கிட்டு... எத்தனை கொடிய விபத்திலிருந்து தப்பித்தார்... தப்பித்தோம்?!

வாழ்ந்ததற்கும் வழங்கியதற்கும் உளமார்ந்த நன்றி, எம் இனிய மன்னரே!

சற்றே தொண்டையை அடைக்கிறது. இருங்கள்.. மெல்லிசை வள்ளலின் துள்ளல் மெட்டில் குரலும் குழலும் வயலினும் வீணையும் கிடாரும் குதூகலக் கொட்டும் கலந்து கொஞ்சுவதைக் கொஞ்சம் கேட்டு வருகிறேன்.


12 கருத்துகள்:

 1. உச்சங்களைத் தொட்டாலும் கனம் தலைக்கு ஏறாத மனிதர். உலகுக்கு வந்ததன் அர்த்தத்தைப் பூரணமாக்கி விட்டுச் சென்றுள்ள பெருந்தகை. இவரால் எத்தனை கோடி பேர்கள் சந்தோஷம் அடைந்தனர், கவலைகளைக் கொஞ்ச நேரமேனும் மறந்தனர் என்பதை விட புண்ணியம் உண்டோ?

  பதிலளிநீக்கு
 2. கடவுள் நம்பிக்கையில்லாத எனக்கு தெய்வீக உணர்வை அனுபவிக்க சில வழிகள் அன்றாடம் கிடைக்கின்றன. முதலில் என்னைப் பெற்றவள். அதற்கடுத்த படிகளில் முதல் படி என்னை வளர்த்த மெல்லிசை மன்னரின் இசை. //

  இசையை அனுபவிப்பதும் இரு தெய்வீகம் தான். அம்மா தெய்வீக பாடல்களை பாடி உங்களை இசை பிரியர் ஆக்கி விட்டு இருப்பார் இல்லையா?

  பாடகர் சிவா அவர்கள் இசையை பற்றி பேசினார், இசையை எவ்வளவு கேட்டாலும் காது வலிக்காது என்று. அது போல மெல்லிசை மன்னரின் இசை காதை வலிக்க செய்யாது. பகிர்ந்த பாடல் எல்லாம் அருமை.
  மெல்லிசை மன்னருக்கு அவர் பாடல்களால் அஞ்சலி, நன்றி.

  பதிலளிநீக்கு
 3. M.S.V மறைவு மூன்று தலைமுறையினருக்கு வாய்த்துவிட்ட இழப்பு. இப்போதல்ல.... பல வருடங்களுக்கு முன்னரே அவரை நாம் தொலைத்து விட்டோம். கண்ணதாசன், வாலி போன்ற பாடலாசிரியர்களின் பாடல் வரிகளுக்கு பெரும் பரிமாணம் சேர்த்தது அவரின் இசை. அந்த இசை தமிழகம் போற்றும் பெரும் நடிகர்களின் பாடல்களாகவே அறியப்பட்டு இசையமைப்பாளரை பின்னுக்குத் தள்ளியதாகவே தோன்றுகிறது.

  எத்தனையெத்தனைப் பாடல்கள்?? அந்த இசையின் ஒவ்வொரு அதிர்வும் நம் ஆன்மாவில் அல்லவா ஒட்டியிருக்கின்றது.... உங்களைப்போல,என்னைப்போல மெல்லிசைமன்னரின் இசையோடு வளந்தவர்களுக்கு பாடல் வரிகள் மட்டுமின்றி ,அது பொதிந்த இசை ஜாலம் அலையலையாய் சிந்தனையின் பின்புலமாய் ஒலித்த வண்ணம் தானே வாழ்க்கை நடந்திருக்கிறது? இனியும் நடக்கும். வேறு மார்க்கம் இருக்கிறதா என்ன?

  அவர் மகள் மூலம் அவருக்கு நான் பரிச்சயமாகி இருந்தது என் பாக்கியம். என்னை அடையாளம் கண்டு பேசும் அளவுக்கு சில சந்திப்புகள் வாய்த்தது. கண்ணதாசன் குறித்தும், சில பாடல்கள் அமைந்த விதம் பற்றியும் அவர் வாயாலேயே சொல்லக்கேட்ட தருணங்கள்... தரையில் கால் பாவாது நான் நடந்த கணங்கள். பொக்கிஷமாய் நான் பாதுகாக்கும் அவருடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் ...

  விருதுகள் அவருக்கு பெரிதாக வாய்க்கவில்லை. அந்தக் குழந்தைமனம் அதற்காக தவிக்கவுமில்லை. விருந்தாய் மாறிவிட்ட இசைக்கு விருதாவாக விருதுதான் எதற்கு ?

  நெஞ்சையடைக்கும் இந்த துக்கம் குறைந்த பின் அவர் இசையை அலசுவோம்.

  மன்னிக்கவும். புலம்பல் கொஞ்சம் நீண்டு விட்டது. என் சொந்த துக்கம் இது. வானவில் மனிதனில் இந்த பேரிழப்பை தற்சமயம் பதிவிட இயலவில்லை. உங்கள் தோளிலேயே சாய்ந்து கொள்கிறேன் அப்பாதுரை....

  மோகன்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெகிழ்ந்தேன் மோகன்ஜி. சற்று ஆறுதலும் தந்த புலம்பல்.

   ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல வாழ்வின் முழுமை என்பதன் பொருளுணர்ந்து வாழ்ந்து மறைகிறார்கள் சிலர். அத்தகைய மரணங்கள் பொதுவான சஞ்சலத்தை உருவாக்கினாலும் அதன் மடியில் பெறும் நிறைவையும் கருவாக்கிப் போகின்றன. அந்த நிறைவுக் கருவுக்கு அழிவேயில்லை. அதிசயம்!

   ஒரே ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று நான் ஏங்கியவர்களில் கண்ணதாசன், டிஎம்எஸ், எம் எஸ்வி...


   நீக்கு
 4. நன்றி அப்பாதுரை !

  நேற்றிரவெல்லாம் அவர் பாடல்களோடு ஒடுங்கிக் கிடந்தேன்.

  //நேரில் சந்திக்க வேண்டும் என ஏங்கியவர்களில் கண்ணதாசன்,டிஎம்எஸ்,எம்எஸ்வி //

  இந்த வகையில் நான் உங்களைவிட பாக்கியம் செய்தவன் போல... ஒரு நாளெல்லாம் கவிஞர் கண்ணதாசனுடன் இருக்கும் வாய்ப்பு கல்லூரி நாட்களில் கிட்டியது.

  மெல்லிசை மன்னரின் பரிச்சயம் உள்ளளவும் மறக்காது. ஒருமுறை அவர் காலில்விழுந்து ஆசி பெற்ற என் மகனை உச்சி முகர்ந்து, ' உன் அப்பாவைப்போல மனுஷாளை மதிச்சி நடந்துக்கடா செல்லம்' என்றார்.
  என் கண்ணீரை என் மகன் பார்க்கவில்லை

  பதிலளிநீக்கு
 5. மனம் நிறைந்த இசையமைப்பாளர்...

  பதிலளிநீக்கு
 6. எல்லோரும் தங்கள் அஞ்சலியை மிக அருமையாகவும் பொறுமையாகவும் காட்டி இருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை எம் எஸ்வியின் பாடல்கள் இருக்கும்வரை அவரும் என்றும் அழியாமல் நம்முடனேயே இருப்பார்.

  பதிலளிநீக்கு
 7. திசை திருப்புவதில்
  இசைக்குள்ள அசைவுகள் அதிர்வுகள்
  பிரமிக்கத் தக்கவை

  இருப்பினும் இசை ஈயும் மென்மையிலிருந்து
  வன்மை க்குத் திரும்புவது
  அறிவென யாம் நினைக்கும்
  ஆணவமே.

  ஷட்ஜம் முதல் நிஷாதம் வரை
  ஏழு ஸ்வரங்களில்
  எம்.எஸ்.வி.
  பஞ்சமம் மட்டும் அல்ல
  பஞ்சாமிர்தம்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 8. கடவுள் நம்பிக்கையில்லாத எனக்கு தெய்வீக உணர்வை அனுபவிக்க சில வழிகள் அன்றாடம் கிடைக்கின்றன. முதலில் என்னைப் பெற்றவள். அதற்கடுத்த படிகளில் முதல் படி என்னை வளர்த்த மெல்லிசை மன்னரின் இசை.///  திசை திருப்புவதில்
  இசைக்குள்ள அசைவுகள் அதிர்வுகள்
  பிரமிக்கத் தக்கவை

  இருப்பினும் இசை ஈயும் மென்மையிலிருந்து
  வன்மை க்குத் திரும்புவது
  அறிவென யாம் நினைக்கும்
  ஆணவமே.

  ஷட்ஜம் முதல் நிஷாதம் வரை
  ஏழு ஸ்வரங்களில்
  எம்.எஸ்.வி.
  பஞ்சமம் மட்டும் அல்ல
  பஞ்சாமிர்தம்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு மன்னருக்கு! மன்னர் மன்னர்தான் நோ டவுட்! நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துகள் அனைத்தும் அதே அதே,,,எங்களுக்கும்...இசையை ரசிக்கவோ இல்லை இசைக்கோ வயது உண்டா என்ன?!!

  மன்னரைக் குறித்து பலரும் மிக அழகான இரங்கல்கள் வெளியிட்டுள்ளார்கள்...

  அவரது உடல் உயிர் நீத்திருக்கலாம்...ஆனால், இசை உயிர் நீக்காது. அது காலம் காலமாக வாழும். பயணம் பயணம் என்று நம்மை விட்டு பயணித்துவிட்டாலும் அவரது இசை, காற்றினில் கலந்து காற்றினில் வரும் கீதமாக, நீ இல்லாத இடமே இல்லை என்று நம் காதோடு பேசி, மனதோடு நிறைந்து இருக்கும்.....

  ரொம்ப ரசித்துக் கேட்கும் பாடல் அதுவும் அவரது குரலில் ஜெகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் யந்திரம்....அருமையான பாடல்...

  பதிலளிநீக்கு
 10. நண்பரே,

  அருமையான பதிவு என்ற பாராட்டு சம்பிரதாயமாக இருந்தாலும் அதுவே உண்மை.

  எம் எஸ் வி பற்றி நானும் எழுதியிருக்கிறேன். அவரது இசை எவ்வாறு நம்மை உறங்கச் செய்தது என்பது முதல் நம்மை களிப்பூட்டி, கண்ணீர் சிந்த வைத்து, குதூகலப் படுத்தி வேதனையில் விழ வைத்து, உறவின் மகத்துவத்தை நமக்கு உணர்த்தி, பிரிவின் துயரை முட்களாக நெஞ்சில் ஏற்றி.....

  மலர்ந்தும் மலராத பாடலுக்கு இணையான இன்னொரு பாடல் தமிழில் இருக்கிறதா?

  எம் எஸ் வி இசையாகவே இருக்கிறார். அவருக்கு மறைவு என்பதே இல்லை.

  பதிலளிநீக்கு