2018/06/23

புள்ளி - 4

    .
  . . .
. . . . .



◄◄ 1 2 3

        ந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவிலுக்கு போய் வருகிறேன். ஒவ்வொரு சனிக்கழமையும் நெடியோனைப் பார்த்து உள்ளுக்குள் உருகி வருகிறேன். என்னைச் சுற்றி இருக்கும் பிறரைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் சிலிர்க்கும். இத்தனை பக்தர்களில் எத்தனை பேர் அச்சுதனை அமரர் ஏறை பச்சை மேனியனை புருஷோத்தமனை நேரில் சந்தித்திருக்கப் போகிறார்கள்?

ஐம்பத்தாறு சனிக்கிழமைகள் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஐம்பது வாரங்கள்.

புள்ளி.

"என்னடா இது? வந்ததும் வராததுமா இப்படிப் பண்றே? எல்லாத்தையும் திருப்பி எடுத்து வந்துட்டே?" என்றார் அம்மா. எனக்காகக் கொடுத்திருந்த சாமி படங்கள்.. பரம்பரையாக வந்த சிவன் பார்வதி படம்.. குலதெய்வம் வெங்கடாஜலபதி படம்.. அம்மா பூஜை செய்த வெள்ளி கிருஷ்ணர் மகாலக்ஷ்மி குட்டி விக்ரகங்கள்.. தாத்தா வீட்டு திருநாங்கூர் பெருமாள் அச்சு.. ஸ்ரீசக்ரம்.. ருத்ராக்ஷம்.. என்று எல்லாவற்றையும் திருப்பினேன். அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது.. "என்ன இப்படி பண்றான் இவன்?" என்று பூஜையறை சுவற்றைப் பார்த்துக் கேட்டார்.

சுவரில் காஞ்சிப் பெரியவர் படம். ஜெயேந்திரர். "அந்தாளையே புடிச்சு உள்ளே போட்டாச்சு. அவரைக் கேட்டு என்ன பிரயோஜனம்?" என்றேன். அம்மாவுக்கு இன்னும் அழுகை வந்துவிட்டது. கோபமும்.

"என்னடா இது? இப்படிப் பண்றே? உனக்கே நல்லாருக்கா?" என்று அதட்டினாள் அக்கா.

"நான் என்ன பண்றேன்? எனக்கு நம்பிக்கையில்லை. நீங்களாவது உபயோகிக்கலாம்னு அமெரிக்காலந்து மூட்டை கட்டி எடுத்துட்டு வந்தேன்.. இல்லைன்னா அங்கயே குப்பைனு தூக்கிப் போட்டிருப்பேன்"

அம்மாவுக்கு என்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அந்த நிலையிலும் "இவனை ஒண்ணும் செஞ்சிடாதே அபிராமி" என்றாள்.

நான் குளிக்கத் தயாரானேன். "துண்டு இருக்கா.. குளிக்கணும்.. ப்ளைட்ல வந்து ட்ரெயின்ல வந்து பஸ்ல வந்து.. ரொம்ப களைப்பா இருக்கு.. உடம்பெல்லாம் நாறுது" என்று நான் குளியலறைக்குப் போனேன்.

"பயப்படாதம்மா.. அவனை இந்த மாதிரி பண்ண வச்சதே அபிராமி தான்.. " என்று என் அக்கா சொன்னது தெளிவாகக் கேட்டது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.

புள்ளி.

லன்டனில் விமானம் தரை தொட்டதும் பைலட் ஒருவர் என்னைத் தேடி வந்தார். "உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. விமானம் நின்றதும் உங்கள் மனைவியுடன் பேசுங்கள்" என்று தொலை பேசியைக் காட்டினார். என்னிடம் செல்போன் இருக்கிறது என்றேன்.

"பதட்டப்படாமல் சொல்லு" என்றேன் மனைவியிடம்.

அவள் மறுமுனையில் அழுது கொண்டே சொன்னபோது திக்கென்றது. என் பெண்ணைக் காணோம். இரவு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் கொடுத்துத் தேடுகிறார்கள். இந்த நேரம் பார்த்து நான் பயணத்தில்.. ஐயோ என்று அடித்துக் கொண்டேன்.

"என்ன ஆச்சு?" இப்போது நான் பதறினேன்.

தொடர்ந்து அழுதாள் மனைவி. "என் பெற்றோரை எனக்குப் பிடிக்கவில்லை" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்டாள் பெண். பதிமூன்று வயது. எங்கே போயிருப்பாள்? நண்பர்கள் வீட்டில் தேடியாகி விட்டது. அவளால் கார் ஓட்ட முடியாது. சைக்கிள் ஒட்டக்கூடத் தெரியாது. எங்கே போயிருப்பாள்? மறுமுனையில் போலீஸ் வந்தது. அவள் எழுதியிருந்த கடிதம் பற்றி கேட்டார்கள். துன்புறுத்தினோமா கொடுமைப்படுத்தினோமா.. என்று என்னிடம் விசாரித்தார்கள். முதல் நாளிரவு மைகேல்ஸ் காய்கறி மார்கெட் பக்கம் என் பெண்ணின் அடையாளங்களுடன் ஒரு சிறுமி வெள்ளை நிற பிக்கப் டிரக் ஒன்றில் ஏறியதாக யாரோ சொல்ல அதைப் பற்றி விசாரித்தார்கள். என் உறவினர் நண்பர்கள் யாரிடமாவது அப்படி பிக்கப் டிரக் இருக்கிறதா என்று கேட்டார்கள். பகீரென்றது. இல்லை இல்லை. என் பெண்ணைப் கண்டுபிடியுங்கள் என்று கெஞ்சினேன். அழுகை தொண்டையை அடைத்தது. உடனே திரும்பி வருவதாகச் சொன்னேன். "தைரியமாக இருங்கள்" என்றார்கள்.

பெண்பிள்ளை கடத்தலில் முதல் இருபத்து நாலு மணி நேரம் மிக முக்கியம். அதற்குள் முக்கிய திருப்பங்களோ தடயங்களோ கிடைக்கவில்லை என்றால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண்பிள்ளை கடத்தலில் உடனடியாக தொலைவாக இடம் மாற்றுவார்கள். பெண்பிள்ளை கடத்தலில் முதல் நாலைந்து நாட்கள் போல் அனேகமாக உள்ளூர் சுற்று வட்டாரத்தில் தனியிடத்தில் அடைத்து வைப்பார்கள். பனிரெண்டு வயதுக்கு மேலான சிறுமிகளுக்கு சுய நினைவுகள் சுத்தமாக அழியும் வரை தொடர்ந்து நாலைந்து நாட்களும் போதைப் பொருள் கொடுத்து... அதற்குப் பிறகு அடுத்தக் கட்டத்தைத் தீர்மானிப்பார்கள். பெரும்பாலும் வெளியூர் ஆசாமிகளுக்கு விற்று விடுவார்கள். இதைப் பற்றி ஆராய்ந்து கதை கதையாக எழுதியிருக்கிறேன். எல்லாம் இப்போது வந்து அச்சுறுத்தியது. அதுவும் என் பெண் எங்களைப் பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருக்கிறாள். அவளைக் கண்டுபிடித்தாலும் DCFS காரர்கள் பிடித்துக் கொள்வார்கள்.

லன்டன் ஏர்போர்ட்டில் தாறுமாறாக ஓடினேன். என் லக்கேஜ் கூட எடுக்கவில்லை. எப்படியோ போகிறது. எனக்கு என் பெண் வேண்டும். பத்திரமாக ஆபத்தில்லாமல் வீடு திரும்ப வேண்டும். அடுத்த இரண்டு அமெரிக்கன் விமானங்களில் சிகாகோவுக்கு இடமில்லை. நிலையை எடுத்துச் சொன்னேன். முதல் வகுப்பில் இரண்டு இடம் இருக்கிறது என்றார்கள். ஒரு டிக்கெட் ஆறாயிரம் டாலர். முதல் வகுப்பு டிக்கெட் எடுக்க காசில்லை. பெண் காணாமல் போய்விட்டாள் என்பதற்காக டிக்கெட் விலை குறைக்க முடியாது என்று சொல்லாமல் சொன்னார்கள். எனக்குத் தலை சுற்றியது. யுனைடெட் பிரிடிஷ் டெல்டா லுப்தான்சா என்று மாறி மாறித் தேடி கடைசியில் மறு நாள் காலை ஏர் லிங்கசில் எழுநூறு டாலருக்கு இடம் பிடித்தேன். பெண் காணாமல் போய்விட்டாள் என்றாலும் உடனடியாகக் கிடைத்த விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்க மனமில்லாமல் சுற்றியது மிக உறுத்தியது. பெண்ணை விட ஆறாயிரம் டாலர் பெரிதா? ஆறாயிரம் போகிறது என்று கிரெடிட் கார்ட் கொடுத்து எடுத்திருக்க வேண்டுமோ? இந்நேரம் சிகாகோ சேர்ந்திருக்கலாமோ? ஆறாயிரம் டாலர் என்றதும் என் தயங்கினேன்? என் பெண் முக்கியமில்லையா? 'என் பெற்றோர்களை எனக்குப் பிடிக்கவில்லை' என்று பெண் எழுதி வைத்தது நினைவுக்கு வந்தது. இத்தகைய உணர்வுச் சிக்கல்கள் யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

'என் பெண் கிடைக்க வேண்டும்.. கிடைக்க வேண்டும்.. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன். யாரிடம் சொல்கிறேன்? அதைப் பற்றிக் கவலைப்படாமல் மனதுள் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.

"கண்டிப்பாகக் கிடைப்பா. பயப்படாதீங்க" என்று ஸ்பஷ்டமாகத் தமிழில் குரல் வர, திரும்பினேன். பக்கத்தில் இருந்தவரை அதுவரை கவனிக்கவே இல்லை. "பயப்படாம போங்க.. எல்லாம் சரியாகிடும்" என்றார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

"உங்களுக்கு எப்படி?"

"எனக்கு எல்லாம் தெரியும்" என்றார். உடனே அமைதியுடன் சிரித்து "நீங்க அமெரிக்கன் ஏர்லைன் காரிகிட்டே நிலைமையை விவரமா சொன்னதை நானும் கேட்டேன்.. உங்க பின்னாடியே நின்னுட்டிருந்தேன்.. அதான்" என்று என் தோளை ஆதரவாகத் தொட்டு அழுத்தினார். சுரர்ர்ர்ரென்றது. "எல்லாம் சரியாகிடும்" என்றார் என்னை தீர்க்கமாகப் பார்த்து.

நிச்சயம் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

புள்ளி.

"நாளைக்குப் பணத்தை ரிலீஸ் பண்ணுகிறோம்" என்றான் வசீம்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மூன்று வருடங்களாக சவுதியில் கைதி போல் வாழ்ந்த வாழ்க்கை முடியப்போகிறது என்ற நிமமதி. ப்லாக் நண்பரை நம்பிப் பணம் கொடுத்துத் தொடங்கிய தொழில். என்னையும் எமாற்றி வாடிக்கைக் காரரையும் ஏமாற்றி... சவுதி அரசாங்கமே வாடிக்கை என்றால் சும்மா விடுமா? நண்பர் அவசரமாக என்னை அழைத்து நீங்கள் தான் எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பதற மூன்று வருடங்களுக்கு முன் இங்கே வந்தவன் ஏறக்குறைய கைதி போல் வாழ்ந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றி இருக்கிறேன்.

உள்ளே காலடி வைத்ததும் எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டுள் என்பது புரிந்தபோது தாமதமாகி விட்டிருந்தது. உள்ளே வந்து விட்டிருந்தேன். அமெரிக்க பாஸ்போர்ட் இருந்ததால் இரண்டு மாதங்களில் கொஞ்சம் கனிவுடன் நடத்தினார்கள், இல்லையெனில் நண்பர் செய்த மோசடிக்கு என்னை ஏதாவது செய்திருக்கலாம். என்னதான் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் பார்க்க இந்திய லட்சணம் தானே? அதுவும் தமிழ்க் கறுப்பு. சவுதியில் இந்தியருக்கு மதிப்பு பிலிபினருக்கு கொஞ்சம் உயர்வான மட்டில், அவ்வளவே. மத்தியக் கிழக்கு முழுதும் அப்படியே என்று நினைக்கிறேன்.

வீட்டுக்கு வந்தேன். டிரைவர் கண்ணன் மட்டும் இல்லையென்றால் எனக்கு இன்னும் கடினமாக இருந்திருக்கும். தினம் என்னை ரிபைனரி-வீடு என்று மேலும் கீழும் சாரதியாக இருந்து.. வெள்ளி சனியில் தயங்கி தயங்கிப் பழகி.. ஒரு பிடிப்பில் இருந்தான். "கண்ணன்.. எல்லாம் முடிஞ்சிருச்சு.. நாளைக்குப் பணம் வந்ததும் சவுதிக்கு ஒரு சலாம்" என்றேன். "நல்லது சார்.. ரொம்ப சந்தோசம் சார்" என்று சிரித்தான்.. கன்னத்தில் குழி விழ அவன் சிரிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.

உடனே சென்னையில் ப்லாக் நண்பரை அழைத்து விவரம் சொன்னேன். "என்னை மன்னிச்சிருங்க.. உங்களை இப்படி வம்புல மாட்டிவிட எண்ணியதேயில்லை.. நல்லவேளை முடிச்சிருச்சே.. ரொம்ப சாரி துரை.." என்றார்.

"விடுங்க.. விடுங்க.. மூணு வருசமாயிருச்சு விடுங்க.. ஏதோ செஞ்சுட்டீங்க.. ஐம் ஓவர் இட்" என்றேன்.

மறுநாள் பணம் கிடைக்கவில்லை. "நீங்க கடன் வாங்கினதா பேங்குல முடக்கிட்டாங்க" என்றான் வசீம்.

"வாட்?" அதிர்ந்தேன். "என்னமோ பிழை நடந்திருக்கு.. யார் கிட்டே கடன்?"

"அப்தப் சையத் பைசல்னு ஒருத்தர் புகார் கொடுத்திருக்கார். ஜட்ஜ்மென்ட் வாங்கி பேங்குல சமர்ப்பிச்சிருக்காரு. சவுதி நாட்டவருன்றதால அவருக்கு முன்னுரிமை இருக்கு"

விழித்தேன். வசீம் தொடர்ந்தான். "அது மட்டுமில்லே.. கடன் தொகைல மிச்சம் எட்டாயிரம் ரியால் நீங்க தர வரைக்கும் ட்ரேவல் பேன் பண்ணியிருக்காங்க.. நீங்க வெளியே போக முடியாது"

எனக்கு தலை சுற்றியது. நடுங்கினேன். என்ன இது, புதுக் கதை?

வசீமிடம் அப்தப் பற்றிய முழு விவரம் வாங்கிக் கொண்டு கண்ணனுடன் விரைந்தேன். அப்தப் விவரமாகச் சொன்னார். ப்லாக் நண்பர் இந்த கான்ட்ராக்ட்டைக் காட்டி லெட்டர் அப் கிரெடிட் பாணியில் சுத்தமாக வழித்து எடுத்து கடன் வாங்கியிருந்தார். தனிக் கடன். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்தப்பிடம் சொல்லி பார்த்தேன் "ஐயா.. இது நான் வாங்கின கடன் இல்லை.."

அப்தப் விடவில்லை. "இந்த கான்ட்ராக்ட் பேர்ல கடன் கொடுத்தேன்.. கான்ட்ராக்ட் பணம் கடன் திருப்பத்தான் எடுக்குறேன்"

ப்லாக் நண்பர் (?) மறுபடி மன்னிப்பு கேட்டார். இந்த முறை அழுதார். "உங்க கால் செருப்புக்கு கூட நான் சமானம் கிடையாது துரை.. உங்களை எப்படி ஏமாத்தியிருக்கேன்.. எனக்கு மன்னிப்பே கிடையாது.. எனக்கு வெட்கமா இருந்ததால உங்க கிட்டே மறைச்சுட்டேன்.. எனக்கு விமோசனமே கிடையாது.. ஆனா என்னை நம்புங்க.. நான் எப்படியாவது இந்தப் பணத்தைத் திருப்பிடுவேன்.."

"எப்படிங்க? எப்படித் திருப்புவீங்க? இதென்ன ஆயிரமா பத்தாயிரமா ஒரு லட்சமா திருப்பித் தரேன்னு நீங்க சொல்றதுக்கு? நானும் நம்புறதுக்கு?"

ஒரு வாரம் அலைந்தேன். பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைத்தால் போதுமென்றாகிவிட்டது. கண்ணன் என்னிடம் "சார்.. இந்த ஊர்ல வாஸ்தா இருந்தா எல்லாமே நடக்கும் சார்.. நான் ஒருத்தர் கிட்டே கூட்டிப் போறேன்.. நூறு இருநூறு ரியால் கொடுத்தா விஷயத்தை முடிச்சுக் கொடுத்துருவாரு.." என்றான். நம்பிக்கையில்லாமல் சரியென்றேன்.

எங்கேயோ சுற்றி கவனமாக என்னை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றான் கண்ணன். என்னை வரவேற்றவருக்கு அறுபது வயதாவது இருக்கும். முகம் நிறைய புன்னகைத்தார். உள்ளே அழைத்து உட்கார வைத்து டீ கொடுத்தார். சிறிய தட்டில் அல்வா போல் ஒரு இனிப்பு. "சாப்பிடுங்க" என்றார். "மஜ்தூல் பேரீச்சம். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும்.. நபிகள் கைப்பட விதைச்ச மரத்துலருந்து வந்தது.. மக்காவுக்கு பத்து கிலோமீடருல இருக்கு தோப்பு"

என் விவரங்கள் எல்லாம் கேட்டார். உடனே நாலைந்து பேருக்கு செல் போன் செய்தார். பிறகு அமைதியாக "உங்க கான்ட்ராக்ட் கடன் பணம் திரும்ப வராது. ஆனா அந்த எட்டாயிரம் ரியாலை தள்ளுபடி செய்யுறதா சொல்லிட்டாரு அப்தப். உங்க பயணத் தடை நாளைக்கு நீக்கிடறதா பேங்குல சொல்லிட்டாங்க.. என்னால இதான் பண்ண முடியும்"

என்ன செய்வதென்று புரியவில்லை. மூன்று வருட உழைப்பு வீணான துடிப்பு. ப்லாக் எழுத்தின் திறனை வியந்து எந்தப் பொறுக்கியையோ நம்பிக் கடன் கொடுத்த அசட்டுத்தனம். அதைத் தொடர்ந்து ஏமாந்த முட்டாள்தனம். எல்லாம் என்னைப் புரட்டி எடுத்தது.

"போகுது விடுங்க.." என்றார் பெரியவர். "நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும்" என்று ஆதரவாக என் தோளை அழுத்தினார். "இந்தப் பணம் உங்களது இல்லை.. யாருக்கோ நீங்க பட்ட கடன்"

"இல்லிங்க.. எப்படி.."

"உங்க நண்பரை மன்னிச்சு நிலைமையை ஏத்துக்கிட்டு அடுத்த கட்டத்தை நோக்கிப் போங்க.. எல்லாம் உன்னதமா இருக்கும்"

நீண்ட பெருமூச்சு விட்டேன். ப்லாக் நண்பரை மன்னித்தேன். சட்டி சுட்டதடா. மெள்ள எழுந்தேன். பெரியவருக்குத் தர வேண்டிய பணத்தை எடுத்துக் கொடுத்தேன். சிரித்தபடி வாங்கிக் கொண்டார். "கொஞ்சம் இருங்க" என்று உள்ளே சென்றார். திரும்பி வந்து "நிறைய இழந்துட்ட வருத்தம் உங்க முகத்துல தெரியுது. இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செஞ்சவங்களை மன்னிச்ச பெரிய மனசு உங்களுக்கு நிம்மதியையும் உன்னதத்தையும் கொடுக்கும்" என்று ஒரு சிறிய உருள் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். "விலை மதிப்பில்லாத ஒன்றை உங்களுக்கு பரிசா கொடுக்க விரும்பறேன். எடுத்துக்குங்க"

பிரித்தேன். திடுக்கிட்டேன். என் மனைவியின் உறவினர் சாகும் தறுவாயில் எனக்குக் கொடுத்தப் பிள்ளையார். அதே வில்லேந்திய பிள்ளையார். எத்தனை வருடங்களுக்குப் பின்.. அதுவும் இங்கே..

திகைப்பு அடங்காமல் அவரை ஏறிட்டேன். "இது எப்படி உங்க கிட்டே? ஆச்சரியமா.. நம்பவே முடியலியே?"

பெரியவர் என்னை வழியனுப்பி "நம்ப முடியாதது எதுவுமே இல்லை.." என்றார். தயங்கி என்னை நேராகப் பார்த்து "..நம்பினால்" என்றார்.

என் மிக அருகே வந்து, "நம்புறீங்க இல்லையா?" என்றார் என் தோளை அழுத்தி. பிறகு கண்ணனை அழைத்து "இவரை ஜாக்கிரதையா சேர்க்க வேண்டிய இடத்துல கொண்டு போய் சேர்த்துடு" என்றார்,

வீட்டுக்கு வந்ததும் உறைத்தது. பெரியவர்.. சவுதியில் கால் வைத்த ஐந்தாம் நிமிடம் என்னுடன் உரையாடிச் சேர்ந்து தொடர்ந்து முடிவில் பெரியவரைப் பார்க்க அழைத்துச் சென்ற கண்ணன்.. திரும்பக் கிடைத்த வில்லேந்திய பிள்ளையார்.. "இவரை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துடு" என்ற பெரியவரின் சொற்கள்.. என் டிரைவரின் பெயர் கண்ணன் என்பது கூட ஒரு பெரிய விஷயமாக முதல் முறையாகத் தோன்றியது. எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நானென்றான்.

புள்ளி.


<இன்னும் உண்டு>


*DCFS: Department of Children and Family Services - பிள்ளை வளர்ப்பு முறைகேடுகளை விசாரணை செய்யும் அரசு மையம்.


2018/06/12

புள்ளி - 3

    .
  . . .



◄◄ 1 2


        ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை கூட்டம் வெயிலில் நிற்கிறது என்கிறார்கள். தெரியாது. அந்நாளில் ஒன்பதரை மணிக்குத் திறக்கும் அமெரிக்க தூதரக விசா அலுவலக வளாகத்தில் காலை எட்டரை மணிக்கே கூட்டம் சேர்ந்து விடும். அலுவலக வெளியில் மரத்தடியில் வரிசையாக கயிறு கட்டி ஒரு மணி நேரம் நிற்க வைப்பார்கள். அமெரிக்கா செல்லும் ஆர்வத்தில் ஒரு மணி நேரம் வெளியே நாய் போல் நிற்கும் அவதியைச் சகித்தேன். உள்ளே சென்ற பின் இன்னொரு அரை மணி நேரம். என் விவரமெல்லாம் சரி பார்த்தார்கள். கூண்டுக்கு அந்தப்புறம் இருந்த வெள்ளைக்காரப் பெண்மணி "that's a very good school.. what is your ph.d in?" என்றாள்.

"application of cognitive science models for consumer marketing precision" என்றேன்.

"i don't understand a word of what you said" என்றாள்.

"me neither" என்றேன்.

உரக்கச் சிரித்தாள். என் விவரங்களை சரி பார்த்தாள். வழக்கமாக கேட்பாளா என்னை மட்டும் கேட்டாளா தெரியாது. "what will you do when you come back.. or would you look to stay in America?"

"why else would i go there? actually.. i intend to run away soon as i land in America; my ambition is to find a job at a petrol bunk and work my way up"

"we call it gas station" என்றாள் நிதானமாக. "do you know i can disqualify you for expressing vagabond intent?" என்று முறைத்தாள். ஆழமான பார்வை தொடர்ந்த மிதமான புன்னகையுடன் "your application seems in order.. we'll verify.. come back at 4pm for visa" என்றாள்.

அடக்க முடியாத சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். பெருமையுடன் எதிரே உட்லண்ட்சில் நுழைந்து ஒரு சூடான பாதாம் பால் தரவழைத்தேன். சிகாகோவுக்கான டிக்கெட் போக கையில் ஆயிரம் ரூபாயோ என்னவோ இருந்தது. அமெரிக்கா போகும் வரை இதை வைத்து ஓட்டியாக வேண்டும். மாலை விசா வந்தவுடன் நேரே பர்மா பஜார் சென்று ஒரு நல்ல சூட்கேஸ் வாங்க வேண்டும். தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு எத்தனை சீக்கிரம் முடியுமோ இந்த நரகத்தில் இருந்து கிளம்பி ஒரே ஓட்டம் திரும்பி வரவே கூடாது.. ஐயே.. நாடா இது? பல வித சிந்தனைகளுடன் பொங்கல் வடை பூரி என்று வெட்டினேன். பொழுதை எப்படிக் கழிப்பது என்று எண்ணியபடி வெளியே வந்து நடந்தேன். எதிரே சபையர் தியேடர் வளாகத்தில் நுழைந்தேன். மூன்று தியேடர்களிலும் ஆங்கிலப் படங்கள். அமெரிக்கா போவதால் இனி ஆங்கிலப் படங்கள் மேற்கத்திய வழக்கங்கள் மட்டுமே ஏற்பது என்று தீர்மானித்திருந்தேன். நாகேஷ் நினைவு வந்தது. நாகேஷுக்கு இணையாக ஒரு மேற்கத்திய நடிகன் உண்டா என்ற நினைப்பை அசை போட்டபடி ப்லூ டைமன்ட் தியேடரில் 'the world according to Garp" என்று ஒரு படத்துக்கு டிகெட் எடுத்தேன். சகிக்கவில்லை. உடனடியாக ஜம்பு ஜகன்மோகினி பாணி படம் பார்த்து துக்கத்தைத் துடைத்துக் கொள்ள நினைத்து வெளியே வந்தேன். எல்ஐசி பக்கமாக நடந்தேன். விக்டோரியா காட்சியகத்தில் ஈயடித்தது. நேரம் கடத்த எண்ணி உள்ளே நுழைந்தேன். விதவிதமான சிலைகள் அலங்காரங்கள் காட்சியில் இருந்தன. எட்டு கைகள் கொண்ட நாட்டியப் பிள்ளையார் சிலை ஏனோ கவர்ந்தது. ஒவ்வொரு கையிலும் ஒரு ஆயுதமோ சங்கோ என்னவோ வைத்திருந்தார். போதாக்குறைக்கு தகப்பன் ஸ்டைலில் காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே டான்ஸ் வேறே. வெண்கலமோ செம்போ தெரியவில்லை. செம விலை. இதையெல்லாம் எந்த மனுஷன் வாங்குவான் என்று நகர எண்ணிய போது பிள்ளையாரின் ஒரு கை வளைந்து என்னைச் சுட்டியது "டேய்!" என்பது போல. சட்டென்று விலகி நின்று பார்த்தேன். பிள்ளையார் சிலை லேசாக என் பக்கம் திரும்பி கால்களை ஊன்றி இரண்டு கைகளை இடுப்பில் வைத்து மூன்றாவது கையால் அதே விரல் சுட்டு. "டேய்!". லேசான நடுக்கத்துடன் பிள்ளையார் அருகே சென்று பார்த்தேன். நிச்சயமாக பிரமையில்லை. அதிர்ந்து அவசரமாக வெளியே வந்தேன். சீ சீ நிச்சயம் பிரமை தான்.. இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ.. அதன் பிறகு இந்த கண்றாவியெல்லாம் இல்லை. அமெரிக்கா.

அங்குமிங்கும் சுற்றி மறுபடி தூதரகத்துக்கு வந்தேன். வந்தவருக்கெல்லாம் விசா கொடுத்துவிட்டு கடைசியில் என்னை அழைத்தார்கள். இந்த முறை ஒரு ஆண். டிப்டாப் வடக்கத்தி இந்தியர். என்னை ஏற இறங்கப் பார்த்து "உங்களைப் பற்றி ஒரு புகார் வந்திருக்கிறதே? நீங்கள் கொடுத்திருக்கும் படிப்பு விவரங்கள் வங்கி விவரங்கள் எல்லாம் ஏமாற்று என்று புகார். பெங்களூர் இந்திரா நகர் போலீஸ் ஸ்டேஷனில் உங்களைப் பற்றிய மோசடி புகாரின் நகல். ஆளை அடித்து மிரட்டி ரவுடித்தனம் செய்ததற்கான புகார்.." என்று வரிசையாக அடுக்கினார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"இதோ" என்று ஒரு கடிதத்தைக் காட்டினார். "இந்தா.. இதன் நகல்" என்று என்னிடம் கொடுத்தார். விடுவிடுவென்று படிக்கத் தொடங்கினேன். சேஷாத்ரி என்று கையொப்பம் பார்த்தேன். உடனே புரிந்து விட்டது. "சார்.. இது வெறும் பொய் சார்.. நான் கொடுத்த விவரமெல்லாம் உண்மை.. போலீஸ் புகார் எல்லாம் பொய் என்று போலீசே சொல்லிவிட்டது.. கேட்டுப் பாருங்கள்" என்றேன். எனக்கு அழுகையே வந்து விட்டது.

சமாதானப்படுத்துவது போல "we will find out.. அதனால நீங்க ரெண்டு நாள் கழித்து வாங்க.. visa is on hold" என்றார்.

உலகமே இடிந்தது போல் வெளியே வந்தேன். இந்த சேஷாத்ரி என் மேனேஜர். கம்பெனி என்னை அமெரிக்கா அனுப்ப எண்ணி எல்லாம் செய்தது. ஆனால் எனக்கும் அவனுக்கும் ஒத்து வராமல் நான் வேலையை விட்ட போது இந்த மாதிரி ஒரு விஷமக் கடிதம் அனுப்பி என்னை இக்கட்டில் விட்டிருக்கிறான். எச்சக்கலைப் பரதேசி. சொறி நாய். சாக்கடைக் காளான். பன்னி. உடனே பெங்களூர் சென்று அவன் கொட்டையை சுத்தியலால் அடித்து நசுக்க ஆத்திரமும் வேகமும் வந்தது.

சோர்வுடன் வெளி வந்து பஸ் பிடிக்க நடக்கையில் விக்டோரியா பிள்ளையார் நினைவுக்கு வந்தது. ஏன்? எனக்கு உதவக்கூடாதா? பிள்ளையாரப்பா? நீயெல்லாம் ஒரு அப்பனா? உன்னைப் போய் சாமினு கொண்டாடினேன் பாரு? உனக்கு எத்தனை பூஜை செய்திருப்பேன்.. கடவுளே.. இந்த சேஷாத்ரிக்கு குஷ்டமோ தீராத மூலமோ வந்தால் தான் நீ இருக்கிறாய் என்று அர்த்தம்.. இல்லாவிட்டால் கடவுள்னு பேரை வச்சுகிட்டு ஊரை ஏமாத்துற கல்.. கல் கூட பரவாயில்லை சாணி தட்ட உதவுது.. சாமிக்கல் எதுக்கும் உதவாத நாய் மூத்திரம் போகிற கல். அரை மணி போல் அத்தனை கடவுளையும் திட்டிவிட்டு பல்டி அடித்தேன். பிள்ளையாரப்பா.. எப்படியாவது இந்த விசா வாங்கிக் கொடுத்துரு.. நூத்தி எட்டு தேங்காய் உடைக்கிறேன். ஏதேதோ மனதுள் புலம்பியபடி சைதாப்பேட்டை வரை நடந்தே வந்தேன். வீட்டில் சொன்னதும் அம்மா "கவலைப்படாதடா.. அபிராமி இருக்கா பார்த்துப்பா" என்றாள்.

இரண்டு நாள் பொறுத்துக் கொஞ்சம் தெளிந்திருந்தேன். விசா கிடைக்கிறதோ இல்லையோ வருந்தப்போவதில்லை. சேஷாத்ரியை மன்னித்து விட்டேன். போகிறான் அல்பன். தூதரகம் சென்றேன். வரிசையில் நின்று என் முறை வந்ததும்.. முன்பு பார்த்த பெண்மணி. "ah.. the gas station aspirant" என்றாள். இன்டர்காமில் யாரையோ பெயர் சொல்லி அழைத்தாள். அதே வடக்கத்தி டிப்டாப் வந்து ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான். என்னைப் பார்த்தான். முறைத்தான். விலகினான். "ok.. here's your visa.." என்று என்னிடம் பொட்டலத்தைக் கொடுத்தாள் பெண்மணி. பரவசமானேன். "thank you.. thank you" என்றேன் இரட்டைக்கிளவியில். "thank the man who was here" என்றாள். மறுபடி "thank you.. thank you" என்றேன்.. "goodluck" என்றாள். மனம் மாறி விசாவைப் பிடுங்கிக் கொள்ளுமுன் இங்கிருந்து ஓடி விட வேண்டும்.. தலையாட்டி வெளியே வந்தேன்.

தூதரக வாயில் கடந்தபின் உறைத்தது. அவள் இன்டர்காமில் அழைத்த டிப்டாப். மிஸ்டர் கேனஷ்ரேம். மிஸ்டர் கணேஷ்ராம்.

புள்ளி.

அப்பா இறந்து ஒரு வருடம் போலிருக்கும் பூணலைக் கழற்றி எறிந்திருந்தேன். "எனக்கு வேணாம்மா"

"என்னடா இப்படி அக்கிரமம் பண்றே?" என்றாள் அம்மா. "செலவழிச்சு போட்டது.. அடுத்த மாசம் வர்ஷாப்தீகம் முடிஞ்சு காசில கர்மா எல்லாம் பண்ண பூணல் வேணும்.."

"என்ன செலவு? எதுக்காக போட்டீங்க.. அப்பனுக்கு ஸ்ரார்த்தம் பண்ணத்தானே? என்னவோ ஆசையா பூணல் போட்டாப்புல பேசுறே?"

"வாய மூடுறா சண்டாளா" என்றார் தாத்தா.

"யோவ்.. யாருயா நீ? யாரைப் பாத்து சண்டாளன்ற? வயசனவன்னு பாக்க மாட்டேன் ஆமா"

"என்னடா இது..?" அம்மா அதிர்ந்தாள்.. அவளுக்கு அழுகை வந்துவிட்டது.

"அப்பனைப் பெத்தவனையே யாருன்னு கேக்குறான்.. உருப்படுவானா இவன்.. சல்லிப்பய..?"

"அப்பனே பூட்டான்.. அப்புறம் அப்பனுக்கு அப்பன் என்ன வேண்டிக்கிடக்கு?"

"கூறுகெட்டப் பய.. வளத்திருக்கே பாரு? " என்று அம்மாவிடம் பாய்ந்தார்.

"டேய்.. மரியாதை கெட்டுரும்.. எங்கம்மாவை பத்திப் பேசினா.. உன் பையனை நீ ஒழுங்கா வளத்திருந்தா இதெல்லாம் வந்திருக்குமா? பேச வன்டான்"

"தாத்தா.. பிள்ளையார் சிலையை கிணத்துல போட்டான்.. நான் பார்த்தேன்.." என்று நேரம் தெரியாமல் வத்தி வைத்தாள் தங்கை.

"ஒ.. ஏதுரீ.." என்று பாட்டி சேர்ந்து கொண்டார். "சாமியார் கொடுத்த பிள்ளையார் ஆச்சே? திரும்ப வந்து வாங்கிப்பார்னு சொல்வானே அம்பி?"

"சாமியார் என் கனவுல வந்து பிள்ளையாரைக் கிணத்துல போடச் சொன்னார்.." என்றேன்.

"புத்திர சோகம் போறாதுன்னு இப்படி தெய்வச் சேதம் பாக்கணும்னு எழுதியிருக்கானே.." கண் கலங்கினார் பாட்டி.

"அப்புறம் அம்மா.. நான் காசி எல்லாம் போறதா இல்லே.." என்றேன். தாத்தாவைப் பார்த்தேன். "யோவ்.. உன் பையன் தானே? வேணும்னா நீ போய் காசில எல்லாம் போட்டுக்க"

என் அம்மா வழக்கம் போல் எதுவும் சொல்லவில்லை. ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றாள். பாட்டி என்னிடம் வந்து "அந்தப் பிள்ளையாரையாவது எடுத்துக் கொடுரா.. நீ நல்லா இருப்பே.." என்றார்.

புள்ளி.

<இன்னும் உண்டு>►► 4




2018/06/10

புள்ளி - 2

    .
  .


◄◄ 1


        தாம்பரம் பட்ஸ் ஓட்டல் வெளிச்சுவற்றில் ஒரு சிறிய பிள்ளையார் சிலை பதித்து வைத்திருப்பார்கள். ஒரு கதர் துண்டை உடுக்கையாகவும் பட்டையாக விபூதியும் ஒரு எருக்க மாலையும் அணிவித்து பிள்ளையாரை அவர் பாட்டுக்கு விட்டிருப்பார்கள். நான் சென்ற போதெல்லாம் ஒருவராவது கும்பிட்டோ தேங்காய் உடைத்தோ பார்த்ததில்லை. யார் இவருக்கு உடையும் அலங்காரமும் செய்கிறார்கள் என்பதும் அறிந்து கொண்டதில்லை.

என் அப்பாவின் கொலை வழக்கு தொடர்பாக அடிக்கடி செங்கல்பட்டு போவேன். அப்படியே சில நேரம் புதுப்பட்டினத்திலிருந்த என் மாமா வீட்டுக்குப் போய் ஒரு நாள் தங்கிவிட்டு வருவதுண்டு. வரும் வியாழனன்று முக்கியமான திருப்பம் என்று என்னை ஒரு நாள் முன்பே வரச்சொல்லியிருந்தார் வக்கீல். நான் போவது தெரிந்து நண்பன் ஸ்ரீதர் உடன் வருவதாகச் சொன்னான். செங்கல்பட்டில் அவன் அத்தை வீடு இருந்தது. அவனுக்கு திருக்கழுகுன்றம் போகப் பிடிக்கும். எனக்கு அவன் அத்தை மகளைப் பார்க்கப் பிடிக்கும். எங்களை விட நாலு வயதோ என்னவோ மூத்தவள், பார்க்க அட்டகாசமாக இருப்பாள். இதான் சாக்கு என்று வீட்டில் கொஞ்சம் அதிகம் சில்லறை வாங்கிக் கொண்டு புதன் மதியமே தாம்பரத்துக்கு நடை கட்டினோம். வெயிலாவது கியிலாவது? பொருட்படுத்தியதே இல்லை. பட்ஸ் ஓட்டலில் வெட்டிவிட்டு அங்கிருந்து வண்டலூரில் மாலை சுப்ரமணிய ராஜுவின் பேச்சு ஒன்றைக் கேட்டுவிட்டு அங்கிருந்து செங்கல்பட்டுக்கு பஸ் பிடிக்கத் திட்டம். ஸ்ரீதருக்கு இந்த எழுத்தாளர் வட்டம் கிட்டம் எல்லாம் ரொம்ப இட்டம். பட்ஸ் ஓட்டலில் பணம் கட்டுவதாக வேறே சொல்லியிருந்தானா, குஷியாகக் கிளம்பினேன்.

தாம்பரம் சேனடோரியம் அருகே நடந்து வந்த போது என்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பது போலிருந்தது. என் நண்பன் ரவியின் மாமா பையன் பாலுவைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். இதே சேனடோரியம் மருத்துவமனையில் தான் கொடூரமாக இறந்தான். 'என்ன இது.. பாலுவின் குரல் மாதிரி இருக்கிறதே?' என்று எண்ணியபடி ஸ்ரீதரைப் பார்த்தேன். பாலு விவகாரத்துக்குப் பிறகு ஸ்ரீதர் என்னுடன் நட்பைத் துண்டித்துக் கொண்டு சமீபத்தில் தான் ராசியாகி இருந்தான். அதுவும் ஒரே கல்லூரயில் சேர்ந்ததே காரணம். பாலுவைப் பற்றிப் பேச்செடுக்கத் தயக்கமாக இருந்தது. நடந்தேன். தொடர்ந்து யாரோ அழைப்பது போலவே இருந்தது. ராமர் கோவில் அருகே வந்ததும் ஸ்ரீதர் சட்டென்று என்னை இழுத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தான். பதட்டத்துடன், "டே.. என்னை யாரோ தொட்டு தொட்டுக் கூப்பிடுறாப்புல இருந்துதுடா" என்றான். "கோவில்ல கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போவோம்"

"என்னையும் யாரோ கூப்பிடுறாப்புல இருந்துச்சுடா.. நான் தான்.."

"பாலு தானே? எனக்குத் தெரியும்டா"

"சீ சீ.. அதெல்லாம் இல்லடா.. அவன் போய் மூணு நாலு வருஷம் இருக்குமா? சரி. சரி.. நீ வேணா கும்பிட்டு வாடா.. போவோம்.. பசிக்குது."

கோவிலில் நடை சார்த்தியிருந்தார்கள். ஐந்து மணிக்கு மேல் தான் திறப்பார்கள். அவன் அவசரமாக பிரபந்தப் பாசுரம் நாலைந்து சொல்லிவிட்டு 'வாடா' என்று என் தோள் மேல் கை வைக்கப் போனவன் திடுக்கிட்டு "என்னடா இது?" என்றான். என் சட்டை தோள்பட்டை அருகே சிவப்பு நிறத்தில்.. சட்டையைக் கழற்றினேன்.. வில் போல ஒரு வடிவம்.

"நீ பிரகாரம் சுத்துறப்ப இங்க சாஞ்சிட்டிருந்தனா.. ஒட்டியிருக்கும்" என்று ஒரு தூணைக் காட்டினேன்.

ஸ்ரீதர் மசியவில்லை. "அடப்போடா.. தோராயமா சாஞ்சா இப்படி தெளிவா சித்திரம் வருமாடா? இது அசல் கோதண்டம்டா. ஞாபகம் இருக்கா.." என்று ஒரு கணம் என் வாயைப் பொத்தி விலகி, "பேர் சொல்லாதே.. இப்பத்தானே பேசிட்டிருந்தோம்..? பதட்டப்பட்டோம்ல? இது ராமர் கோவில்.. நான் பாசுரம் சொல்லி முடிச்சதும் பாருடா.. துணைக்கு அனுப்பியிருக்கார்டா"

நான் நெளிந்தேன். "என்னடா இது.. ராமராவது.. கோதண்டமாவது.. இது அழுக்கு சட்டைடா டேய்.."

"லூசு.. சட்டையைக் கசக்காதடா.. இதப்பாரு இன்னும் அப்படியே இருக்கு. இது ஒரு குறி.. அப்படியே போட்டுக்க.. துணைக்கு கோதண்டம் வரும்"

"இல்லடா.. நீயே வச்சுக்க" என்று அவனிடம் கொடுத்தேன். பையிலிருந்த மாற்றுச் சட்டையை எடுத்து அணிந்து கொண்டேன். ஸ்ரீதருக்கு என் செயல் பிடிக்கவில்லை. சட்டையை வாங்கிக் கவனமாக இடுப்பில் சுற்றிக் கொண்டான் - வில் வெளியே தெரியும் படி. தாம்பரம் வரை என்னுடன் அதிகம் பேசவில்லை. பட்ஸ் ஓட்டல் வந்ததும் என்னைப் பார்த்தான். சிரித்தான். "சாரிடா.. நீ சொல்றது சரிதான்.. எனக்குத்தான் குழப்பம்.. கோதண்டமாவது.." என்று என்னிடம் சட்டையைத் திருப்பினான்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே வந்த ஒரு அரை டிராயர் பிச்சைக்காரச் சிறுவன் எங்களிடம் கையேந்தினான். என்னிடமிருந்த சில்லறையிலிருந்து கவனமாக மூன்று பைசா நாணயம் ஒன்றைப் பொறுக்கி எடுத்து அவனிடம் கொடுத்தேன். என்னிடம் இருந்த சட்டையை.. என்ன தோன்றியதோ.. அவனுக்குத் தரப் போனேன்.. "இந்தாப்பா சட்டை போட்டுக்குறியா? பெரிய சட்டை.. பரவாயில்லையா?"

"இருடா.. எதுக்குடா" என்று ஸ்ரீதர் தடுத்தான். அதற்குள் என்னிடமிருந்து சட்டையைப் பிடுங்கிக் கொண்டு தாவி ஓடி பட்ஸ் ஓட்டல் சுவர் பிள்ளையார் இடுப்பில் இருந்த துண்டையும் உருவிக் கொண்டு சடுதியில் மறைந்து விட்டான் சிறுவன். திகைத்தோம். பட்ஸில் கணிசமாக வயிற்றுக்கு உணவீய்ந்து பிறகு சுப்ரமண்யராஜு தயவில் செவிக்கும் சற்று ஈய்ந்து முடித்து ஒன்பது மணி வாக்கில் நாங்கள் தாம்பரம்-செங்கல்பட்டு மொபசல் வண்டி ஏறிய நேரத்தில் எல்லாம் மறந்து விட்டோம். செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் இறங்கிய போது இரவு பதினொரு மணியாவது இருக்கும். பழைய பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீதர் அத்தை வீடு பத்து நிமிட பொடி நடை. சுறுசுறுப்பாக நடந்தோம். பத்தடி நடந்திருப்போம். ஸ்ரீதர் என் கைகளைப் பிடித்து நிறுத்தினான். "டே.. அங்க பாருடா.." என்று தெருவின் எதிர்புறம் காட்டினான். "உன் சட்டையைப் பிடுங்கிக் கிட்டு ஓடின பையன்.."

பார்த்தேன். அப்படித்தான் தோன்றியது என்றாலும் மறுத்தேன். "அதெப்படிறா முடியும்? சின்னப் பையன்.. பிச்சைக்காரன் வேறே.."

"டே.. அவனே தான்.. நம்மளைப் பாத்து வரான்.. போவோம் வா" என்று வேகமாக நடக்கத் தொடங்கினான். நானும் விரைந்தேன். ஸ்ரீதர் வீட்டு முனையிலிருந்து திரும்பிப் பார்த்த போது அந்தப் பையன் போலவே உருவம் தொலைவில் நின்றபடி கை அசைத்தது. அடுத்த கணம் நானும் ஸ்ரீதரும் ஓட்டம் பிடித்து ஸ்ரீதர் வீட்டுக்குள் நுழைந்து நின்றோம். விவரம் சொன்னதும் சிரித்த ஸ்ரீதரின் அத்தை "இது கூட தெரியலியா? உனக்கு துணையா வீடு வரைக்கும் கொண்டு விட்டு டாடா காமிச்சுட்டும் போயிருக்கான் ஸ்ரீராமன். உள்ளே வந்து பெருமாளை சேவிச்சுட்டு படுங்கோ ரெண்டு பேரும்" என்றார். ஸ்ரீதரின் அத்தை மகளை சைட் அடிக்க முடியவில்லை.. தூங்கிவிட்டிருந்தாள். கை முகம் கழுவிக் கொண்டு அத்தை சொன்னபடி உள்ளேயிருந்த ராமர் படத்துக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுப் படுக்கப் போனோம். ராமர் படத்திலிருந்த வில் உறுத்தியது. படத்தில் பளிச்சென்று வில் மட்டும் தெரிந்தது. சட்டையில் இருந்தாற்போல். அதே வடிவம். ஸ்ரீதரைக் கேட்க நினைத்து அடக்கிக் கொண்டு படுத்தேன்.

கோர்ட் விவகாரம் முடிந்து ஸ்ரீதர் வீட்டுக்கு நான் திரும்பிய போது மணி ஒன்றிருக்கும். "டே.. நான் எங்க மாமா வீட்டுக்குப் போறேன்.. திருக்கழுகுன்றம் வரை நடந்து அங்கிருந்து புதுப்பட்டினம் பஸ் பிடிப்பேன்.. வரேன்.." என்றேன்.

"திருக்கழுகுன்றமா? இருடா நானும் வரேன்" என்று உடன் கிளம்பினான். அவன் வருவானென்று தெரியும். "அத்திம்பேர்.. உங்க சைக்கிளை எடுத்துண்டு போறேன்" என்று கூவினான். "வாடா, சைக்கிள்ள போவோம்"

கோவிலுக்கு அரை கிலோமீடர் கிழக்கே ஒரு பெரிய குளம்* உண்டு. சிறிய ஏரி எனலாம். கோவிலுக்கு வரும் கழுகு இந்தக் குளத்தின் நடுவில் மூழ்கிக் குளித்து விட்டு வரும் என்பார்கள். கரையில் நிறைய மரங்கள் உண்டு. மரத்தில் ஏறி அங்கிருந்து குளத்தில் தாவிக் குதிப்பது சுவாரசியமான குதூகலம். "குளிக்கலாம்டா" என்றான். ஆளுக்கொரு மரத்தைப் பிடித்துக் கொண்டு சர் சர்ரென்று மரமேறிக் குதித்தோம்.. ஸ்ரீதர் என்னை விட வேகமாக ஓடி நீந்துவான். நான் நாலாவது முறை மரம் ஏறுவதற்குள் அவன் குதித்து எழுந்து நீந்திக் கொண்டிருந்தான். நான் குதிக்கத் தயாராகும் நிலையில் திடீரென்று ஸ்ரீதர் நீரில் மூழ்குவதைக் கவனித்தேன். யாரோ அவனை உள்ளே இழுப்பது போல். இழுத்து இழுத்து அடிப்பது போல். ஸ்ரீதருக்கு எப்போதாவது வலிப்பு போல் வரும். கையில் ஒரு இரும்புக் கவசம் வைத்திருப்பான். ஒருவேளை.. சட்டென்று குதித்தேன். அவனை நோக்கி நீந்தினேன். அவனைப் பிடிக்கபோன என்னை உதறித் தள்ளினான். நான் எதிர்பாரா விதமாக என்னை உள்ளே இழுக்கத் தொடங்கினான். திமிறி வெளிவந்து அவனை மேலே இழுக்கப் போனேன். அதற்குள் ஸ்ரீதர் மயங்கி விடுவான் போல் தொய்ந்து போயிருந்தான். 'ராமா' என்று மனதுள் கூவினேன். . எனக்கு அவனை மேலே இழுக்கும் வலு குறைந்து கொண்டிருந்தது. தெரிந்த கடவுள் பெயரெல்லாம் அழைத்தேன். மூச்சு முட்டியது. கண்களில் தளர்ச்சி. ஒரு நிமிடம் போலிருக்கும். இரண்டு பேர் நீரிலிருந்து எங்களை மேலே இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

கரையில் கொஞ்சம் சுதாரித்த பின் எங்களைக் காப்பாற்றியவருக்கு நன்றி சொன்னோம். "ரெண்டு பேரு இழுத்தாப்புல இருந்துச்சே?"

அவர் சிரித்து "நீங்க ரெண்டு பேராச்சே? அப்படித்தான் இருக்கும்"

"சார்.. உங்களுக்கு ஏதாவது.. எங்க கிட்டே ரெண்டு ரூவா இருக்கு.."

"உங்கிட்ட வாங்க வேண்டியது நிறைய இருக்கு தேவையானா வாங்கிக்குவேன்.. ரெண்டு பேரும் பத்திரமா வீடு சேருங்க" என்று மரத்தடியில் இருந்த தன் சட்டையை அணியத் தொடங்கினார்.

எனக்குப் புரியவில்லை.

என் குழப்பத்தைப் படித்தது போல் "புரியும் போது புரியும்" என்று எங்களைப் பார்த்துத் திரும்பினார்.

திடுக்கிட்டோம். அது.. அது.. என் சட்டை. வில் படிமம் உட்பட அப்படியே..

"உங்களுக்கு இந்த சட்டை எப்படிக் கிடைச்சுது? இது என் சட்டை.."

"என்னுதுபா! எல்லாமே என்னுது.. அதான் சொன்னேன்ல? தேவையானா உங்கிட்ட வாங்கிக்குவேன்" என்று சிரித்து ஸ்ரீதரின் சைக்கிளில் ஏறிக் காணாமல் போனார்.

"யோவ் யோவ்.. வண்டி அவனுதில்லையா.. என்னுதுமில்லையா.." என்று தள்ளாடி எழுந்து அவர் பின்னே ஓடிய ஸ்ரீதரின் பின்னே நான் ஓடினேன். சன்னதித் தெரு முனையில் சைக்கிள் மட்டும் கிடந்தது.

புள்ளி.

<இன்னும் உண்டு> ►► 3




*இப்போது அங்கே அபார்ட்மென்ட் வரிசையாகக் கட்டியிருக்கிறார்கள். குளத்தைக் காணோம். மரங்களையும் காணோம். திருக்கழுகுன்றத்தைக் கூட விடவில்லை.


2018/06/03

புள்ளி - 1

    .



        காரணம் காரியம் எல்லாமே இணைந்திருக்கிருன்றன என்கிறார்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத சூட்சுமம் என்கிறார்கள். இப்பிறவியின் நடப்புகள் அனைத்தும் முற்பிறவிச் செயல்களின் விளைவுகள் என்றும் சொல்கிறார்கள். முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்கிறார்கள். பிற்பகல் செயின் எப்போது விளையும் என்று ஏனோ சொல்லாததால் நிறைய பேர் பிற்பகல் செய்கிறார்கள். எனக்கு அது தோன்றாமல் எல்லாவற்றையும் முற்பகலிலே செய்து பிற்பகலில் அனுபவிப்பது என் வாழ்வின் வாடிக்கை ஆகிவிட்டது.

எல்லாம் கடவுளுக்குத் தெரியும் என்கிறார்கள். கடவுளை விட்டால் யாருக்காவது தெரியுமா என்று கேட்டால் கர்மாவுக்குத் தெரியும் என்கிறார்கள். கர்மா அறியாதது எதுவும் இல்லை. நம் செயல்கள் எதுவுமே அழிவதில்லை. எல்லாவற்றையும் பிறவி வாரியாகக் கர்மா பதிவு செய்து கொள்கிறது என்கிறார்கள். அண்டத்தின் முதல் blockchain கர்மா தான் போலிருக்கிறது. அத்தனை செயல்களின் முனைப்புகளும் பாதிப்புகளும் இந்தக் கர்மா blockchainல் பதிவு செய்யப்படுகின்றன. பிறகு அதிலிருந்து அவரவருகேற்ற மாதிரி கர்மா data mining நடத்தி விளைவுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. எங்கே எது எப்படி இணைகிறது.. எத்தனை விலகல்களில் இணைகிறது.. என்பது கர்மா அல்லது கடவுள் அறிந்த புதிர்.

கடவுளை அவ்வப்போது சந்தித்திருக்கிறேன். அந்தக் சந்திப்புகளினாலேயே கடவுள் இல்லை என்ற எண்ணம் எனக்குப் பலமாகத் தோன்றும். சரி, கலர்சட்டை விவாதம் இங்கே வேண்டாம். 'என்னடா இவன் கமல்ஹாசன் மாதிரி ஒரு தினுசா பேசுறானே?' என்றும் நினைக்க வேண்டாம். பல நேரம் நான் சொல்வது பலருக்கும் புரியும். எனக்கும் கடவுளுக்கும் நேரடி மற்றும் மறைமுக பிணைப்புகள் நிறைய உண்டு. குறிப்பாக பிள்ளையார், ராமர். ஆம். மூஷிக வாகனன். மோதக ஹஸ்தன். ரகுவீரன். ரங்கபுர விகாரன். அவர்களே தான். நிறைய சம்பவங்கள். நிறைய புள்ளிகள். முன்பெல்லாம் புள்ளிகள் தெரியும். இப்போது புள்ளிகள் இணைந்த கோலம் மட்டுமே புலப்படுகிறது. புள்ளிகள் புரிகின்றன. கோலம் இன்னும் புரிந்த பாடில்லை. இந்தக் கதையை எழுதினால் ஒருவேளை எனக்கு விவரம் புரியக்கூடும் என்பதனால் எழுதுகிறேன். எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா.

நான் எழுத ஒரு நியாயம் கற்பிக்க முடியுமே தவிர நீங்கள் படிக்க அல்ல. அதனால் உடனே இந்தக் கதையை விட்டு பக்கத்து பிலாக் போனால் வருந்த மாட்டேன். இந்தக் கதையை இனித் தொடர்ந்து படிப்பதிலும் ஒரு சிறு சங்கடம் இருக்கிறது. கதையா? நிஜமா? என்ற ஐயம் எழலாம் (அய்யம் என்று எழுத வேண்டுமோ?). நிஜம் என்பது நிகழ்வுப் புள்ளிகள் இணைந்த கோலம். கதை என்பதும் அதானே? நிகழ்வுப் புள்ளிகள் கற்பனையில் இருந்தால் என்ன, கண்ணெதிரே நடந்தால் என்ன? கண்ணெதிரே நடப்பதும் இன்னொருவருக்குக் கற்பனையாகலாமே? எனக்கே கூட அந்தச் சந்தேகம் அடிக்கடி தோன்றும். இந்த நிகழ்வுகள் எனக்கு இந்த உலகில் நடக்கிறதா? அல்லது இன்னொரு இணையுலகில் இதே நேரம் நடக்கிறதா? எது கற்பனை? எது நிஜம்? இதுவா, அதுவா? இங்கா அங்கா? இத்தகைய இணையுலகக் குழப்பங்கள் சில நேரம் வழி நடத்திச் செல்கின்றன. சில நேரம் வழி கடத்திச் செல்கின்றன. என்ன நான் சொல்வது?

இந்தக் கதை என் கடவுள் சந்திப்புப் புள்ளிகளைத் தழுவியது. தழுவியது என்றதும் நினைவுக்கு வருகிறது. தப்பித் தவறி இந்தக் கதையை இனித் தொடர்ந்து படிப்பவர்களுள் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் இருந்தால் ஆங்காங்கே உரசலான விஷயங்கள் தென்படலாம். கவனம். யூட்யூபிலும் இன்னொரு ட்யூபிலும் இல்லாத உரசலா என்று இக்கட்டான எதிர்கேள்வி கேட்டால், கேசவா நாராயணா மாதவா கோவிந்தா விஷ்ணு மதுசூதனா த்ரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ருஷீகேசா பத்மநாபா தாமோதரா, ஏழை நான் என் செய்வேன்? ஊரிலேன். உறவிலேன். உன் பாதமன்றி ஒரு பற்றிலேன்.

புள்ளி.

அவர் பிள்ளையார் ரசிகை. வீட்டில் நூற்றுக்கணக்கில் சிறிதும் பெரிதுமாக விதம் விதமான பிள்ளையார் சிலைகள் வைத்திருப்பார். என் மனைவிக்கு உறவு. அதனாலேயோ என்னவோ அவரை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. கர்வமும் அகங்காரமும் தேவையில்லாத நீள் மூக்கும் கொண்டவர் என்பது என் அபிப்பிராயம்.

திடீரென்று ஒரு நாள் உறவினர் "சாகக் கிடக்கிறார், வந்து பார்க்கச் சொல்கிறார்" என்று என் மனைவி வற்புறுத்தியதால் சென்று பார்த்தேன். அடுத்தவரைப் பேச விடாமல் தானே பேசிக்கொண்டிருப்பவர் இன்று பேசத் திணறுவது எத்தனை முரணான விந்தை என்று எண்ணினாலும் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது.

என் கைகளைப் பிடித்துக் கொண்டார். பிறகு தன் தலையணையின் கீழிருந்து பிள்ளையார் சிலையொன்றை எடுத்து என் கையில் திணித்தார். வித்தியாசமான குட்டிப் பிள்ளையார். ராமர் போலக் கையில் வில்லேந்திய பிள்ளையார். ராமனுக்கு முன்னால் சிவதனுசை அலட்சியமாக எடுத்தாண்டவர் பிள்ளையார் என்று படித்திருக்கிறேன். பிள்ளையாருக்கு பட்டையாய் திறுநீறு பூசிப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்தக் குட்டிச் சிலையின் நெற்றியில் திருமண் காப்பிட்டிருந்தார்கள். நாமம் போலவும் இருந்தது. சூலம் போலவும் இருந்தது. அதிசயம். வில்லேந்திய வைஷ்ணவப் பிள்ளையாரைப் பார்ப்பது இதுவே முதல்.

சிலையைப் பெறத் தயங்கிய என்னை அவர் விடவில்லை. கண்களால் எதோ சொல்ல வந்துத் திணறி விசுக் விசுக் என்று கழுத்தில் நரம்புகள் துடிக்க என் கைகளில் பிள்ளையாரை அழுத்தியபடியே காலமானார்.

திடுக்கிட்டேன். என் கைகளில் ஒருவர் சாவதும் இதுவே முதல். சாகிறவர் நம் வலது கையைப் பிடித்துக் கொண்டு செத்தால் ஆவியாகவோ வேறே வடிவிலோ நம்மைத் தொடர்ந்து வருவார் என்று பம்மல் பூசாரி தணிகாசலம் ஒரு முறை சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது. சட்டென்று பார்த்தேன். என் வலது கையை அவர் வலதுகை பிடித்துக் கொண்டிருந்தது. பதட்டத்துடன் விலக்கிக் கொண்டேன். ஆச்சரியமாக இருந்தது பிணப்பிடியின் வலிமை. வீட்டுக்கு வந்ததும் அவர் கொடுத்த பிள்ளையாரை எங்கேயோ வைத்தேன். அத்தோடு மறந்தும் போனேன்.

புள்ளி.

தற்செயலாகக் கிடைத்த 'நினைத்தது பலிக்கச் செய்யும்' மந்திர தாயத்தை கையில் பிடித்து நண்பர்கள் ஆளுக்கொரு வேண்டுதல் வைத்து மறந்த விஷயம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். என்றாலும் நடந்தது என்னவோ இது தான்.

மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என் அப்பா பிள்ளையாருக்கு விசாலமாகப் பூஜை செய்வார். சொத்தெல்லாம் போனபின் வேலை தேடி சென்னை வந்து காசில்லாமல் சென்னை மெரீனா பீச்சில் நடந்த போது யாரோ சாமியார் கொடுத்த சிறிய வெள்ளிப் பிள்ளையார் என்பார். அந்தச் சிலைக்கு சந்தனக் காப்பு சார்த்தி அட்டகாசமாக அலங்கரித்து ஒரு அஷ்டோத்திரப் புத்தகத்தைப் படித்து அர்ச்சனை செய்வார். மற்ற நாட்களில் ஒன்றுக்கும் உருப்படாத என் அப்பா மாதத்தில் இந்த ஒரு பூஜையை மட்டும் பந்தாவாகச் செய்வார்.

மறு நாள் பூஜைக்கு உதிரிப்பூ வாங்கிவரச் சொல்லி காசும் கொடுத்திருந்தார். பம்மல் மலையுச்சியில் தாயத்து விவகாரத்தில் பூ வாங்க மறந்தே விட்டது மட்டுமில்லாமல் காசையும் தொலைத்து விட்டேன். வீட்டுக்கு வரும் பொழுதே நேரமாகி விட்டது. காசு வேறே இல்லை. திரும்பி வரும் பொழுது கோகுலம் காலனியில் மாமாவிடம் ஒரு ரூபாய் கேட்டு வாங்கி வந்து வைத்து விடலாம் என்ற எண்ணத்துடன் சட்டென்று என் அப்பா பர்சிலிருந்து ஒரு ரூபாயைத் திருடிக் கொண்டு ஓடினேன். இரட்டைப் பிள்ளையார் கோவிலருகே இருக்கும் பூக்கடை எல்லாம் அடைத்து விட்டன. என் அப்பாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. முதலில் அடி. அப்புறம் பேச்சு. அடியென்றால் அப்படி ஒரு அடி. அர்த்தமே இல்லாமல் அடிப்பார். இப்போது காரணம் வேறு கிடைத்து விட்டதே? செத்தேன் என்று கிருஷ்ணா நகருக்கு ஓடினேன். பிள்ளையார் கோவில் அருகே பூக்கடை உண்டு. அங்கேயும் மூடிவிட்டார்கள். "பூ இல்லே, பலாப்பழம் கீது, வாங்கிக்கிறியா?" என்றாள் க்ருஷ்ணா நகர்க் கிழவி. இன்றைக்குப் பலிதான் என்று பதறி பிள்ளையாரைப் பார்த்து வேண்டிக்கொண்டே பல்லாவரத்துக்கு ஓடினேன். நல்ல வேளையாகக் கடை அடைக்கவில்லை. "ஒரு ரூபாய்க்கு உதிரிப்பூ குடுங்க" என்று பையில் கை விடுகிறேன்...

திக்கென்றது. கடைக்காரியிடம் நடந்ததைச் சொல்லி அழுது கடன் கேட்டேன். முதலில் முடியாது என்றவள் என்ன தோன்றியதோ ஒரு பெரிய பொட்டலம் நிறையப் பூ வைத்து என்னிடம் கொடுத்து, "போ ராஜா" என்றாள். தெருவின் அசிங்கம் பாராமல் சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்தேன். பூவை வாங்கிக் கொண்டு அழுது கொண்டே திரும்பி ஓடி வந்தேன். நேரமாகி விட்டது. இனி எப்படியும் அடி விழும். திரும்பும் வழியில் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டேன். 'அப்பனை அடிக்காமல் இருக்கச் சொல்லு, மாமியிடம் கேட்டு தேங்காய் உடைக்கிறேன்'.

கோகுலம் காலனி வந்த போது மாமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நைசாக மாமியிடம் ஒரு ரூபாய் கேட்டேன். மாமா காதில் விழுந்து விட்டது. "எதுக்குடா ஒரு ரூபாய்?" என்றார். சொன்னேன். "அப்பா வந்திருப்பா மாமா, அவசரமா ஓடணும்" என்றேன். "ரூபாலாம் வேண்டாம். அடிக்க மாட்டான். நடந்ததைச் சொல்லு" என்றார் மாமா. மாமியும் இனி பணம் தர மாட்டார். "இருடா.. சாப்டுட்டு போ. மாமாவை அழைச்சுண்டு போ.. நீங்க போய் சமாதானமா சொல்லிட்டு வாங்கோ.. குழந்தையை அடிக்கிறதாவது.. என்ன ம்ருகம்.. பயந்து போயிருக்கான் பாருங்கோ" என்றார். நான் சாப்பிடவில்லை. மாமாவும் வரவில்லை.

வீட்டுக்கு ஓடினேன். அப்பா குளித்துக் கொண்டிருந்தார். அவசரமாக பூவை பூஜை மேடையில் வைத்தேன். பர்சில் பணம் இல்லாததைப் பார்த்து விசாரணை நடத்தி முடித்திருந்தார் என்று என் தங்கை என்னிடம் விவரமாகச் சொன்னாள். "என்னடா நீ திருடினியா?" என்றாள். சுத்தமாக மறுத்து விடுவது என்று தீர்மானித்திருந்தேன். "சீ சீ" என்றேன். அப்பா குளித்து வந்ததும் முதல் வேலையாக என்னிடம் கேட்டார். "ஏலே.. திருவாழத்தான்.. உளப்பாம சொல்லு.. எடுத்தியா?". "எனக்குத் தெரியவே தெரியாதுப்பா". பிள்ளையார் மேல் சத்தியம் செய்தால் என் அப்பா சற்று தளர்வதைப் பார்த்திருக்கிறேன். "இல்லப்பா.. பிள்ளையார் மேலே சத்தியமா நான் எடுக்கலே.. உன் பர்ஸ் பக்கமே வரலே.. நாள் முழுக்க விளையாடிட்டிருந்தேன்.. அதான் பூ வாங்கவே லேட்டு.. பிள்ளையார் மேலே சத்தியம்பா" என்று ஒரு போடு போட்டேன்.

வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. என் தங்கை ஓடித் திறந்தாள். மாமி உள்ளே வந்தார். எங்களைப் பார்த்தார்.

"சரியான டயத்துக்கு வந்திருக்கேன். இதோ பாருங்கோ அத்திம்பேர்.. குழந்தை வந்து எல்லாம் சொன்னான்.. தெரியாம எடுத்துட்டான்.. அடிக்காதீங்கோ.." என்று எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். என் கன்னத்தைத் தட்டி, "வரட்டுமாடா கண்ணா.. அப்பா அடிக்க மாட்டா சரியா? சாப்டாம ஓடி வந்துட்டியேடா.. டீந்த்ரா.. வரட்டுமாடி.. இவனுக்கு சாதம் போடு.." என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். "குழந்தையை அடிக்காதீங்கோ.. ரூவா தானே.. போய்ட்டுப் போறது.."

என் மாமி கிளம்பியதும் எனக்கு விழுந்த முதல் அறையில் கன்னம் பழுத்துப் போனது. "பிள்ளையார் மேலேயா சத்தியம் பண்றே ப்ளேக்காட்?" எனக்கு விழுந்த இரண்டாவது அறையைப் பார்த்த என் தங்கை நின்றபடி அதிர்ச்சியில் ஒன்றுக்குப் போனாள். பூஜை மேடைப் பிள்ளையாரைப் பார்த்தேன். சிரிப்பது போல் பட்டது. என் அப்பா அடிக்கும் பொழுது என் அம்மா பொதுவாகத் தடுத்ததே இல்லை. அன்றைக்கும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு அடிக்கு மேல் தாங்க முடியவில்லை. பிள்ளையாரைப் பார்த்தேன். என்னைக் கைவிட்டு சிரிப்பு வேறேயா? மீண்டும் தாயத்து நினைவு வந்தது. இந்த முறை உருகி வேண்டிக் கொண்டேன். அப்பா சாக வேண்டும்.

அன்றைக்கு அவரிடம் வாங்கியது தான் கடைசி அடி. அடுத்த மாதம் ஆகஸ்டு 15ம் தேதி இறந்தார். எனக்கும் விடுதலை.

புள்ளி.

<இன்னும் உண்டு> ►► 2




2018/04/01

கோமதியின் காதலன்



        ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவுகளும் செய்கைகளும் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை யூகத்துக்கு இடம் வைக்காமல் தெரிவித்தன. வயதானால் இது ஒரு வரம் போல. இயங்கத் தவிக்கும் உறுப்புக்கு இயங்கித் தவிக்கும் இன்னொரு உறுப்பின் துணை.

இன்னொரு உறுப்பு என்றதும் என் மனைவி கோமதியின் நினைவு வந்தது. கோமதி இறந்து நாலு வருடங்கள் இருக்குமா? வீட்டுக்கு வரும் வருந்தினர்கள் ரம்யாவிடம் "உன் அப்பா மிகவும் நொடிந்து விட்டார்.. மனைவியை இழந்த துக்கம்" என்று சொல்லும் பொழுது தலையாட்டுவேனே தவிர எனக்குத் தெரியும் அது எத்தனை போலி என்று. அதற்காக என் கோமதியை நான் நேசித்தது பொய்யாகி விடாது. வயதான காலத்தில் அவளுடைய பொருமல்கள் எரிச்சலூட்டின என்றாலும் அவள் ஆஸ்பத்திரியில் பட்ட அவதிகள் என் விரோதிக்குக் கூட வரக்கூடாது என்று நினைத்திருக்கிறேன்.

ஆனால் எனக்கே வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கான ஆயத்தங்கள் தான் என் மகள்-மாப்பிள்ளை உரையாடல் என்பது புரிந்திருந்தால் அன்றைக்கே மூச்சைப் பிடித்துக்கொண்டு பொட்டென்று போய்ச் சேர்ந்திருப்பேன்.

"என் அப்பாவை இன்னிக்கு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க, சொல்லிட்டேன்"

"ரம்.. அவருக்கு இஷ்டமில்லே.. டோன்ட் யு ஸீ?"

"வீட்டிலயே இருந்து அவரைச் சாகச் சொல்றிங்களா? யூ வான்ட் ஹிம் டெட்?"

"இல்லே.. நீ என்ன சொல்லியும் அவரு வர மாட்டேங்குறாரு.. ஐ'ம் ஒன்லி ஹிஸ் ஸன் இன் லா"

"அவர் கிட்டே பணம் வாங்குறப்ப வேர் வாஸ் திஸ் டிபரன்ஸ்? அப்ப மகன் மாதிரி இளிச்சிங்களே?"

"லிஸன்.. உங்கப்பா கிட்டே நான் ஒரு பைசா எனக்காக கை நீட்டி வாங்கியதில்லே.. உங்கம்மா இறந்தப்புறம் அவங்க நகை நிலம் எல்லாம் வித்து உனக்காகவும் நம்ம பசங்களுக்காகவும்னு என் கிட்டே கொடுத்த பணத்தை நான் வாங்கிக்கிட்டேன்.. அதுவும் உன் பேர்ல ட்ரஸ்ட்ல இருக்கு.. க்விட் யுர் நான்ஸென்ஸ்"

"வாடெவர்.. நீங்க தானே ட்ரஸ்டி? ஐ னோ வாட் யு டூ வித் த மனி"

"யூ அன்க்ரேட்புல் லீச்... உங்கம்மாவுக்கான அத்தனை மெடிகல் செலவும் நான் தானே கொடுத்தேன்? வேர் வில் ஐ கோ பார் மனி?" மாப்பிள்ளை குரல் உயர்ந்தது. பெண் இனி விட்டுக் கொடுக்க மாட்டாள். இருவரும் குரைக்கத் தொடங்குவார்கள். மெள்ள நகர்ந்து என் அறைக்குப் போனேன்.

"உங்கம்மா மெடிகல் செலவு போதாதுனு.. உங்கப்பாவுக்கான க்ரீன் கார்ட் செலவு.. அண்ணனு சொல்லிக்கிறியே.. ஒருத்தனாவது உங்கப்பாவை கூட வச்சுக்க வேண்டியது தானே? தொண்ணூறு வயசு ஆசாமி கூட இருந்தா தொந்தரவுனு ரெண்டு பேரும் கை விரிச்சாங்க.. நான் தான் உங்கப்பாவையும் வச்சுக் காப்பாத்த வேண்டியிருக்கு"

"ஓ மை காட்! யூ ஆர் மெஸ்ட் அப்..! என் அப்பாவை சுமைனு சொல்ற அளவுக்கு உனக்கு மூளை கோளாறு வந்திருச்சு.. உன் அப்பா அம்மாவா இருந்தா என்ன செய்வே?"

"மை பேரென்ட்ஸ் ஆர் டெட்"

நான் படுக்கையில் படுத்துக் கொண்டேன். "ராமா" என்றேன் ஆயாசத்துடன்.

"கூப்டீங்களா தாத்தா?" என்றான் இளைய பேரன். பக்கத்தில் படுத்திருந்ததை கவனிக்கவில்லை. "ராம்.. இங்க ஏன் படுத்துட்டிருக்கே? ரூமுக்குப் போ இல்லின்னா அம்மாவுக்கு கோவம் வரும்"

"தாத்தா.. பயமாருக்கு.. அண்ணா என் படுக்கைல தேள் போட்டிருக்கறதா சொன்னான்.. அதான் இங்கே வந்தேன்.. இந்த ஓரத்துல படுத்துக்கறேன் தாத்தா.. ஐ வோன்ட் பாதர் யு"

"சீசீ.. இங்க வா.. தாராளமா படுத்துக்கோ" என்று போர்வையை விலக்கி அவனை உள்ளிழுத்தேன்.

"அப்பா அம்மா சண்டை போடுறாங்களா உன்னைப் பத்தி?" என்றபடி என் கால்களின் மேல் தன் காலைப் போட்டுக் கொண்டு படுத்தான் ராம். "பேசாம டாக்டர் கிட்டே போக வேண்டியது தானே தாத்தா?"

"டாக்டர் கிட்டே போகாமலே போக முடியுமானு பாக்கறேன்"

"புரியலே தாத்தா.." என்றவனை இலேசாக வருடிக் கொடுத்தேன். "புரிய வேண்டிய அவசியமே உனக்கு வராமல் இருக்கட்டும்டா".

பத்து நிமிடம் கூட இருக்காது.. மாப்பிள்ளையும் ரம்யாவும் அறைக்குள் வந்தார்கள்.

"அப்பா.. இப்ப நீயா ஆஸ்பத்திரிக்கு வரியா, இல்லே போலீஸை கூப்பிட்டு அன்கோவாபரெடிவ்னு உன்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பவா?"

"அனுப்புறதுலயே இருடி" என்று சலித்தபடி எழுந்தேன். ராம் சட்டென்று எழுந்து "சாரிம்மா.. நான் என் ரூமுக்குப் போறேன்" என்று ஓடினான்.

"ரம்யா.. எனக்கு ஒண்ணுமில்லே.. ஜஸ்ட் வீக்" என்றேன்.

"அப்பா.. நேத்து ராத்திரி மட்டும் ரெண்டு தடவை கீழே விழுந்தே.. இன்னிக்கு மதியம் ஒரு மணி வரை நீ எழுந்திருக்கக் கூட இல்லே.. ஜஸ்ட் கோ" என்று என்னை எழுப்ப முனைந்தாள்.

"தள்ளாதடி.. நானே எழுந்து வரேன்".

                என்னை சோதனை செய்த மருத்துவர் "மிஸ்டர் ஸேடா.." என்று இழுத்தார்.

"சதாசிவம்"

"உங்க ரத்தத்துல ஹிமொக்லொபின் எண்ணிக்கை ரொம்ப குறையா இருக்கு.. 12வது இருக்கணும்.. ஆறுதான் இருக்கு.. இந்த நிலையில உங்களால எழுந்து நடமாடக் கூட முடியாது.. அதனால உங்களை இங்கே அட்மிட் பண்ணச் சொல்லியிருக்கேன்"

நான் கவனிக்கவில்லை. எனக்குத் தெரிந்து விட்டது என் நிலை. "ஹலோ.. நான் சொல்லுறது புரியுதா? உங்களுக்கு ஒரு யூனிட் ரத்தம் கொடுத்து கொஞ்சம் நீருணவும் ஐவில புகட்டச் சொல்லியிருக்கேன். காலைல எப்படி இருக்குனு பார்த்து வீட்டுக்கு அனுப்பிடச் சொல்லியிருக்கேன். ஆல்ரைட்?"

                "அப்பா எப்படி இருக்கு?"

"நீ தான் சொல்லணும்.. காலைல வீட்டுக்கு அனுப்புறதா சொன்ன டாக்டரைக் காணோம்.. வந்து ரெண்டு நாளாச்சு"

"டோன்ட் வரி பா.. உன் ஜூரம் இறங்கலியே அதான் இங்கே வச்சிருக்காங்க.. புது ரத்தம் சேர்த்ததால இருக்கலாம்.. அப்புறம் உன் வயிறு லிவர் கிட்னி சரியா வேலை செய்யலியாம்.. நாளைக்கு என்டஸ்கொபி பண்ணி வயத்துல ஏதாவது சிக்கல் இருக்கானு பார்க்கப் போறாங்க.. அதுக்குள்ள ஜூரம் இறங்கிடும்ன்றாங்க"

                "இப்ப எப்படி இருக்கு?" மாப்பிள்ளையைக் கண்ணால் பார்த்துச் சிரித்தேன். என் நிலை உனக்கு வரக்கூடாது ஐயா.

"கவலைப்படாதீங்க.. என்டஸ்கொபில சிக்கல் எதுவும் இல்லேனு சொல்லிட்டாங்க"

"அப்ப வெளில அனுப்ப சொல்லுங்க" என்றேன். "வந்து ஆறு நாளாவுது"

"உங்க ஆக்ஸிஜன் கவுன்ட் சீரா இல்லைனு சொல்றாங்க.. இந்த நிலையில வீட்டுக்கு அனுப்ப முடியாதாம். அதுவுமில்லாம நிமோனியா சிம்டம்ஸ் இருக்குல்ல.. உங்க நுரையீரல் பழுதாயிருக்கும்னு சொல்றாங்க"

"மாப்பிள்ளை.. ஐ வாஸ் ஜஸ்ட் வீக். ரெண்டு வாட்டி தடுமாறி விழுந்தேன். அவ்ளோ தான். ஆனா நானே சாப்பிட்டு நானே குளிச்சு நானே என் படுக்கையை சரி செய்து படுத்து எழுந்தேன். என்னை இங்கே கொண்டு வந்து..."

"நாட் மி. உங்க பொண்ணு தான் உங்களை வற்புறுத்தி இங்கே கொண்டு வந்தா.. ப்லீஸ் டோன்ட் ப்லேம் மி"

"ஐயோ.. பழியாச் சொல்லலே.. என் நிலமையை.." அமைதியானேன்.

                "மிஸ்டர் ஸேடா.. ஹௌ ஆர் யூ டுடே?"

இவன் வேறே.. குசலம் விசாரிச்சுக் கொல்றவன் நம்மாளு. ஹௌ ஆர் யூனு கேட்டே கொல்றவன் வெள்ளைக்காரன். பத்து நாளா காசு குடுக்குற பேஷன்ட் பெயரை ஒழுங்கா கத்துகிட்டு உச்சரிச்சா என்ன? புன்னகைக்க முயற்சித்தேன். வேண்டாமென்று நிறுத்திக் கொண்டேன். "மிஸ்டர் ஸேடா.. உங்க நிமோனியா குறையலே.. அதில்லாமே உங்க கிட்னி அறுபது சதவிகிதம் தான் வேலை செய்யுது"

"அடப்பாவிகளா.. ஒரு புட்டி ரத்தம் கொடுத்து உடனே வீட்டுக்கு அனுப்புறேன்னு உள்ளே கொண்டு வந்தீங்க.. நாசமாப் போக"

"அப்பா.. நிமோனியா குறைஞ்சதும் உன்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க" என்று என் மகள் சேர்ந்து கொண்டாள்.

"எத்தனை நாள்?"

"இன்னும் அஞ்சு நாள்"

"எனக்கு இப்பவே போகணும்னு இருக்கு"

"இப்ப வீட்டுக்கு போக விட மாட்டாங்கப்பா"

"வீட்டுக்கு யார் போகணும்னா? சாக விடுவாங்களா கேளூ. ஐ வான்ட் டு டை"

"ஸேடா ஸீம்ஸ் டிப்ரஸ்ட்" என்றான் வெள்ளை. "மூணு டோஸ் ஏன்டை டிப்ரஸன்ட் சேர்க்கச் சொல்றேன்"

                "அப்பா" என்று எழுப்பினாள் மகள். நான் உறங்கவில்லை. எப்படி உறக்கம் வரும்? இங்கே வந்த நிமிடம் முதல் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்தப் படுக்கையை விட்டு எழுந்திருக்கவேயில்லை. இந்த வேளைக்குத் தூக்கம் என்று தெரிந்தால் தானே? அதற்கு மேல் இந்த ஆஸ்பத்திரி ஆட்கள் என் மகள் மாப்பிள்ளை யாரையுமே பார்க்கப் பிடிக்கவில்லை. என்னை அவர்கள் இந்த நிலையில் - ஒரு சுருணை போர்த்திய உடலுடன் ஏதோ ஒதுக்கிவைக்கப்பட்ட காளான் போல் தனித்து கிடக்கும் நிலையில் - யாரும் என்னைப் பார்க்க விரும்பவில்லை. என் இயலாமை.. என்னால் சட்டென்று அத்தனையையும் அறுத்துக் கொண்டு ஓடிப்போகவும் முடியவில்லை. நான் ஒவ்வொரு நிமிடமும் வேண்டும் அத்தனை ராமன்களும் க்ருஷ்ணன்களும் மகாலக்ஷ்மி பரதேவதாக்கள் அத்தனை பேருமே என்னை வைத்துக் கேலியாட்டம் ஆடும் பொழுது நேரும் அவமானத்தையும் அவலத்தையும் சகித்துக் கொள்ள கண்களையாவது மூட முடிகிறதே என்ற அல்ப சந்தோஷத்தில் கண்ணை மூடிக் கொள்கிறேன். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருளுமா என்ற வாதம் எத்தனை உதவாக்கரை என்பது இப்போதல்லவா புரிகிறது? மகள் விடவில்லை. "அப்பா" என்றாள். "என்னப்பா தூங்கிட்டியா?"

எத்தனை மடத்தனமான கேள்வி. இருந்தாலும் கேட்டவள் மகள் அல்லவா? கேள்வியுடன் அவளைப் பார்த்தேன். "அப்பா.. உன்னை மறுபடி ஐசியூவுக்கு மாத்தப் போறாங்க.. ஆக்ஸிஜன் கூடுற வரைக்கும் மூக்குல கப் பொருத்தி எல்லாமே ஐவில தரப்போறாங்க.. அனதர் த்ரீ டேஸ்"

அவளைப் பரிதாபமாகப் பார்த்தேன். நான் என்ன சொல்வேனென்று எதிர்பார்க்கிறாள்? நான் நிதம் வணங்கும் பெருமாளே.. அசல நிர்குண ஆத்ம ராமா.. என் பெண்ணுக்கு இந்த நிலமையைக் கொடுத்துடாதே. அவளுக்கு இந்த நிலை வந்தா கடவுள்னு சொல்லிக்கத் தகுதியே உனக்கு இல்லை.

                இன்றோடு இங்கே வந்து இருபத்தேழு நாட்களாகின்றன. இரண்டு முறை டயாலிஸிஸ் செய்துவிட்டார்கள். இரண்டு முறை ஐசியூ பார்த்தாகிவிட்டது. பல்மனெரி, யுராலஜி, நெப்ராலஜி, ந்யூராலஜி இத்யாதி லஜிகளைப் பார்த்தாகிவிட்டது. பாவிகளா! ஹிமொக்லொபின் குறைஞ்சா என்னடா நாசாமாப் போனேன்? நல்லாத்தானே சாப்பிட்டுத் தூங்கி என் பாட்டுக்கு என் பேரனை அவ்வப்போது பார்த்துக்கொண்டு.. ஏதோ யுட்யூபில் நாகேஷ் படம் பார்த்துக்கொண்டு.. கோமதியை அவ்வப்போது திட்டிக்கொண்டு.. நல்லாத்தானே இருந்தேன்? ஹிமொக்லொபின் குறைஞ்சா என்ன இப்போ? எத்தனை குறைகிறதோ அத்தனைக்கேத்தாற் போல இருந்துட்டுப் போறேன்.. இப்படி தெருச் சொறிநாயை விடக் கேவலமா என்னை அலங்கோலப்படுத்தி அசிங்கப் படுத்திட்டீங்களேடா..

                "அப்பா" மகள் தான். மாப்பிள்ளை வருவதை நிறுத்திக் கொண்டாரா அல்லது அவர் வரும் பொழுது நான் உண்மையிலேயே தூங்கிவிட்டிருந்தேனா தெரியாது. அவசியமும் இல்லை. "அப்பா.. அண்ணா ரெண்டு பேரும் பேஸ் டைம் பண்றாங்கப்பா.. பேசணும்னு சொன்னியே" என்றபடி ஐபோனை என் எதிரே இருந்த டிவியில் இணைத்தாள். என் இரு மகன்கள் மருமகள்கள் பேரக்குழந்தைகள் என்று எல்லாரும் தெரிந்தார்கள். ஏதேதோ பேசினார்கள். என்னால் உரக்கப் பேச முடியவில்லை. கையசைத்து அவர்களை அமைதி காக்கச் சொன்னேன். மெள்ளப் பேசினேன்.. "இதப்பாருங்கப்பா.. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. நீங்கள் சொன்னால் டாக்டர்கள் கேட்பார்கள்.. தயவுசெய்து என்னைச் சாக விடுங்கள்.. நீங்களா இதைச் செய்யலேன்னா இன்னிக்கு ராத்திரி நானே இந்த ட்யூப் எல்லாம் பிச்சிப் போட்டுருவேன்"

"அப்பா.. அப்படியெல்லாம் பேசாதப்பா.. உன்னால எந்த ட்யூபையும் பிச்சிப் போட முடியாது.. கண்காணிப்புல இருக்கே.. அப்படி முரண்டு பிடிச்சா உன்னை அடைச்சு வச்சுடுவாங்க"

"அப்பா.. உனக்கு என்ன குறை? ஆஸ்பத்திரிலே கேர் பண்றாங்க.. ரம்யா வேறே தினம் வரா"

"அப்பா.. உன் எரிச்சல் புரியுது.. ஆனா வியாதி வந்தா அனுபவிச்சு தானே ஆகணும்? அதைவிட்டு சாகறேன் பிச்சுப்போடுறேன்லாம் சைல்டிஷ் இல்லையா?"

என் குழந்தைகளுக்கு என்னைப் புரியவில்லை. புரிந்து கொள்ளும் சக்தியையும் அறவே இழந்து விட்டார்கள். அவர்களுக்குப் புரியவைக்க எனக்கு வலு இல்லை.

ஓ என்று அழுதேன். கோமதி.. என் கோமதி.. எனக்கு ஒரு உதவி செய்யேன்? நீ தான் சாமர்த்தியமா கழண்டுகிட்டே.. எப்படியாவது என்னையும் கூட்டிக்க.. கோமதி.. கோமதி.. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. குமுறிக் குமுறி அழுதேன். இதற்கா தொண்ணூறு வருடங்கள் வாழ்ந்தேன்? நாதியற்று கேவலமாக பிச்சைக் கேட்கும் அவலத்தில் மிதக்கவா என்னைப் படைத்தாய் ராமா?

"ப்லீஸ்" என்றேன் மென்மையாக. "ஐ வான்ட் டு கோ.. இந்தக் கொடுமையிலிருந்து எனக்கு விடுதலை குடுங்க.. உங்க குடும்பங்கள் நன்றாக இருக்கும்"

"தி ஓல்ட் மேன் இஸ் டிமென்டெட்" என் மகன் சொல்வது தெளிவாகக் காதில் விழுந்தது. கோமதி அடிக்கடி இடிப்பாள் "இதெல்லாம் நல்லா காதுல விழுமே?"

"லிஸன் மை டியர் சில்ரன்" என்றேன். "எனக்கு தொண்ணூறு ஆவப்போகுது. ஐ ஹெவ் லிவ்ட் மை லைப். எப்படியாவது என் வாழ்நாளை நீட்டிக்க எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என்ன செய்யப் போகிறேன்? எழுந்து வந்து உங்கள் யாருக்காவது உதவியாக இருக்கப் போகிறேனா? அல்லது என் போக்கில் நடமாடத்தான் போகிறேனா? ஐ கான்ட் இவன் லிப்ட் மை பிங்கர் விதவுட் யுவர் பர்மிஷன். என்னை ஏன் இப்படிக் கேலி செய்கிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? இந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் எல்லாம் என்னவோ என் ஒரு உயிரைக் காக்கும் கடமையில் இருப்பதாக நினைக்கிறீர்களா? கூலிக்கு மாரடிக்கும் அந்தக் கூட்டத்துக்கும் என் நலத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. உண்மையில் உங்களுக்கும் எனக்கும் கூட அதிகம் இனி சம்பந்தம் இல்லை. வி லிவ் இன் டிபரன்ட் வர்ல்ட்ஸ். நான் ஒரு சுமை. என்னை ஏன் சுமக்க விரும்புகிறீர்கள்? என்னை வீட்டிலேயே இருக்க விட்டிருந்தால் இன்னேரம் இறந்திருப்பேன். அதற்கு பதிலாக இங்கே கொண்டு வந்து உடம்பெல்லாம் ஓட்டை போட்டு ட்யூப் பொருத்தி பீத்துணி மாதிரி ஒரு கவுன் மாட்டி என்னைக் கேலிக்கிடமாக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? நான் உங்கள் அப்பா இல்லையா? அந்த கரிசனம் கிடையாதா? ப்லீஸ்.. என் உயிரை நீட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தயவுசெய்து என்னை கௌரவத்துடன் சாக விடுங்கள். லெட் மி டை இன் டிக்னிடி". நான் அழவில்லை.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்கள். என் மகள் தனியாக எங்கோ போய் அண்ணன்களுடன் பேசித் திரும்பினாள். உடன் என் மருத்துவரும் வந்தார். ஐபோனை மறுபடி டிவியில் இணைக்க, பேஸ் டைமில் என் மகன் இருவரும் புன்னகைத்தார்கள். மருத்துவர் என்னிடம் "ஸேடா.. டு யூ வான்ட் டு பி டேகன் ஆப் ஆகிஸிஜன்?" என்றார்.

"ஆமாம்"

"இதை எடுத்தால் மிக விரைவில் உங்கள் இதயத் துடிப்பு நின்றுவிடும் என்பது புரிகிறதா? டு யூ ரியலைஸ்?"

"இதை வைத்திருந்தால் என்னை சாயந்திரம் டிஸ்சார்ஜ் செய்வீர்களா?"

மருத்துவர் சிரித்தார். "ஸ்மார்ட்.. உங்க முக்கிய உறுப்புகள் எல்லாமே இருவது சதவிகிதத்துக்குக் குறைவாகவே இயங்குது.. ஸோ நோ.. உங்களை டிஸ்சார்ஜ் செய்வது இம்பாஸிபில்"

"அப்ப.. எனக்கு விடுதலை கொடுங்கள்"

சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு மருத்துவர் எழுந்தார். என்னைத் தட்டிக் கொடுத்தார். "ப்ரேவ் மேன்" என்றபடி வெளியேறினார். "இரண்டு மணி நேரம் இருந்தால் அதிகம்" என்று அவர் என் மகளிடம் சொன்னது கேட்டது.

                அத்தனை குழாய்களையும் நீக்கி புதிதாக ஒரு சுருணை அணிவித்து அழகு பார்த்தார்கள். என் பெண், பேரக்குழந்தைகள், மாப்பிள்ளை எல்லாம் வந்திருந்தார்கள். என்னுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். டிவியில் என் இரண்டு மகன்களின் குடும்பம்.

"அப்பா.. வி ஆல் லவ் யூ" என்றாள் மகள். "உனக்கு என்ன வேணும்பா? வாட் கேன் வி டு பார் யூ நௌ?"

"கோமதி படத்தைக் கொண்டு வரச் சொன்னேனே?" என்றேன்.

"மறந்து போச்சுபா" என்றாள் மகள்.

"போகட்டும்.. ம்ருத்யுஞ்சய மந்த்ரம் சொல்லேன்"

"மறந்து போச்சுபா.. அம்மா சின்ன வயசுல சொல்லிக் கொடுத்தது"

"மாம்.. செக் இன் யுட்யூப்" என்றான் பேரன்.

"சரி விடு.. ராம ராமனு நாலு தடவை சொல்லு"

"கொஞ்சம் இருப்பா.. யுட்யூப்ல தேடுறேன்"

கோமதி பாடுவது போல் கேட்டது..
    அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
    அவனே யணிமருதம் சாய்த்தான் - அவனே
    கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்
    இலங்கா புரமெரித்தான் எய்து.

நீ சொன்னா சரி, கோமதி.