2012/08/27

வளர்ச்சிக்கு விலையில்லை.....யா?



    சென்னை, பெங்களூர் நகரப் புத்தகக்கடைகளில் நிறையப் பத்திரிகைகள் தென்பட்டன. தின, வார, மாத இதழ்கள். ஆங்கிலம், இந்தி மொழிகளில் எக்கச்சக்கமானப் பத்திரிகைகள், புத்தகங்கள். ஹைதராவில் அதிகம் பத்திரிகைகள், தெலுங்கிலும் தென்படவில்லை. பெங்களூரில் தெலுங்கு, மலையாளம், மராத்தி என்று பிறமொழி நாளிதழ், பத்திரிகைகள் பார்த்தேன். ஒன்றிரண்டு ஆங்கிலம் தவிர, சென்னையில் தமிழ்ப் பத்திரிகைகளே அதிகம். சென்னையில் இன்னும் யாரும் இந்தி படிக்கத் தொடங்கவில்லை போலிருக்கிறது. இந்தியாவில் இந்திக்கு அடுத்தபடி தமிழ்ப் பத்திரிகைகள் அதிகமோ என்றும் தோன்றியது. சிறியப் பெட்டிக்கடையில் கூட உயிர்மை போன்ற பத்திரிகைகள் தொங்குவது ஆச்சரியமும் நிறைவும். கண்ணில் பட்ட அத்தனை "இலக்கிய"ப் பத்திரிகைகளையும் வாங்கினேன். கடைக்காரருக்கு உள்ளூர பயம், நான் பணத்தை எண்ணிக் கொடுக்கும் வரை - சும்மா காமெடி பண்ணி ஓடி விடுவேனோ என்று. சாவகாசமாகப் புரட்டினால்... எதையுமே ஒரு நிமிடத்துக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. முதல் வரியிலேயே "இலக்கியம்" முகத்திலடித்துப் பயமுறுத்துகிறது.

    சென்னைப் புத்தகக் கடைகளில் இன்னும் சுஜாதா ஆதிக்கம் உணர முடிகிறது. அவர் இறப்பின் தாக்கம் மூன்று வருடங்கள் நிலைக்கும் என்று கணித்திருந்தேன், இன்னும் மூன்று வருடங்கள் நிலைக்கும் போல. சென்ற இருபது ஆண்டுகளின் "இலக்கியக் காவலர்கள்" சிலர் எழுதியப் புத்தகங்களை மேலோட்டமாகப் புரட்டிப் படித்தேன். அதிர்ச்சியில் வயிற்று வலி வந்துவிட்டது. 'காவல் கோட்டம்' வாங்க எண்ணி தி.நகர் புத்தகக் கடையில் மேய்ந்தபோது, ஒரே ஒரு பிரதி வைத்திருந்தார்கள். அச்சும் காகிதமும் படு மோசம். பின்பக்க எழுத்துக்கள் முன்பக்கத்தில் ஊடுறுவி.. படிக்கவே சிரமமாக இருந்தது. சிறப்பான விருது பெற்ற புத்தகத்துக்கே இந்தக் கதியா? (அப்புறம்... எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருக்கிறதா? அதைவிட மேலான விருது ஏதாவது சீக்கிரம் கிடைக்கட்டும். அவருடைய பொறாமையும் காழ்ப்பும் அடங்கட்டும். பழைய கதை என்றாலும் 'காவல் கோட்டம்' பற்றிய அவருடையப் பண்பற்றக் கருத்தைப் படித்து மிகவும் வருந்தினேன். that was low.)

    நாக்பூர்-மும்பை பயணத்தில் ஒரு மராத்தி நடிகையைச் சந்தித்தேன். நடிக/நடிகைகள் என்றால் ரசிகர்கள் ஈ போல் மேலே விழுவார்கள் என்று படித்திருக்கிறேன். விமான நிலையத்தில் சர்வ சாதாரணமாகப் பழகினார். கூட்டமும் பண்போடு நடந்தது. பிரபல நடிகையாம். தமிழ் நடிகர்களையே தெரியாது, மராத்தியை எங்கே தெரிந்து வைக்கப் போகிறேன்? ஸ்புருஹா ஹோஷி என்றார்கள். பெயர் எத்தனை சிரமமாக இருக்கிறது! நிஜப்பெயரா, இல்லை புருஹா விடுகிறாரா? சாதாரணமாக எங்களுடன் போர்டிங் பஸ்சுக்கு லைன் கட்டி நின்றார். என்னிடமிருந்த ப்லேபுக் பார்த்து 'may i see it?' என்றார். "ஆங்கிலத்தில் கேட்டதற்கு மிகவும் நன்றி. எனில் எனக்குப் பண்பில்லை என்றோ நான் செவிடு என்றோ நினைத்திருப்பீர்கள்" என்றேன். முறுவலுடன், "உங்களைப் பார்த்தாலே தெரிகிறதே?" என்றார். ஹ்ம்.. என்ன தெரிந்ததோ? ஒரு விக் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்.

    ஹைதராபாதில் தன் நாலு வயதுப் பிள்ளைக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தாள் என் niece. மண்ணை அள்ளித் தின்றக் குட்டிக்கிருஷ்ணன் வாயில் யசோதா அண்டம் கண்ட கதை. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட பிள்ளை கடைசியில், "சரி, க்ருஷ்ணர் வாயிலிருந்த மண் என்ன ஆச்சு?" என்றான். அப்படிக் கேளுடா சிங்கக்குட்டி, கண்மூடாதே. ஹை,பெ,செ எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். எல்லாரும் கம்யூனிடி லிவிங் என்ற அமைப்புக்குள் - அபார்ட்மெந்ட் வளாகத்துக்குள்ளேயே புழங்குகிறார்கள். பிள்ளைகள் வெளியில் சென்று விளையாட வாய்ப்பே இல்லை. காலை ஆறரை மணிக்கு சிலர் பள்ளிக்கூடம் செல்கிறார்கள்! மாலை திரும்பினால் வீட்டுப் பாடம், பியேனோ, கராத்தே என்று கிளம்பி அரை மணி நேரம் போல் விளையாடுகிறார்கள் - அதுவும் காம்பவுன்ட் சுவருக்குள் இருக்கும் பத்தடி மணல் திடலில். வெளியே செல்ல நமக்கே பயமாக இருக்கிறது - அத்தனை நெரிசல் என்பதும் காரணமாக இருக்கலாம். தனிவீட்டில் வளரும் ஒரு நண்பரின் மகன், கம்யூனிடி லிவிங் காரணமாகத் தனக்கு விளையாட ஆள்/நேரம் இல்லை என்று புலம்பியது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது. முப்பது வருடங்களில் வாழ்க்கைமுறை தலைகீழ் ஆகிவிட்டது! சற்றும் எதிர்பாராத வளர்ச்சி (?) இது. வரம்புக்குட்பட்டக் குடியிருப்புகள். ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனி வசதிகள், சட்டங்கள், கமிட்டிகள். forrest ackerman என்றைக்கோ எழுதிய எதிர்காலப் புனைவு ஒன்று நினைவுக்கு வந்தது. நாடுகள் என்ற எல்லை/வரம்புகள் ஒழிந்து உலகில் எல்லாமே கம்யூனிடி லிவிங் பாணிக் குடியிருப்புகள். ஒவ்வொரு குடியிருப்பு/காலனியும் தத்தம் சட்டதிட்டங்களுக்குள் இயங்குவார்கள். கடைசியில் ஒவ்வொரு காலனியும் அடித்துக் கொண்டுச் சாவார்கள்.

    குரோம்பேட்டை எதிர்வீட்டில் காலை ஏழு மணி வாக்கில் செய்திகள் மட்டும் கேட்கிறார்கள். டிவி என்று நினைத்தேன். ரேடியோ என்று தெரிந்ததும் ஆச்சரியப்பட்டேன். எனக்குப் பழைய சரோஜ் நாராயணசுவாமியின் குரல் நினைவுக்கு வந்தது. மற்றபடி வீடுகளில் வானொலி அனேகமாக மறைந்துவிட்டது என்றே நினைக்கிறேன். விவித்பாரதி எல்லாம் இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.
எல்லிருவே
மாலை தமிழ் வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு முன்பு அரைமணி கதம்ப நிகழ்ச்சி ஒன்றில் தென்னிந்திய மொழிகளில் இருந்து ஒன்றிரண்டு பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அப்போது கேட்ட ஒரு எஸ்பிபி கன்னடப் பாடல். பிறகு ராஜாஜி நகர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் முதல் வேலையில் சேர்ந்தபோது நாள் முழுதும் ஒலித்தப் பாடல். பெங்களூர் டிவியில் பாடல் காட்சியை இப்போது முதல் முறையாகப் பார்த்தேன். ரேடியோவின் மதிப்பு மிக உயர்ந்தது. பாடல் இன்றைக்கும் சில நினைவுகளைக் கிளறி இனித்தது.

    பெங்களூரில் என் நண்பன் எனக்காக விருந்தொன்று ஏற்பாடு செய்திருந்தான். இந்த விருந்தில் சாப்பாடு கிடையாது. வந்திருந்தோரில் தன் மகளை அறிமுகப்படுத்தினான். பிறகு மகளின் நண்பரையும் அறிமுகப்படுத்தினான். "தே லிவ் டுகெதர்" என்றான். அரை செகந்டுக்கும் குறைவாகத்தான் என்றாலும் என் மனதில் தோன்றி மறைந்த சஞ்சலம் முகத்தில் தெரியாமல் இருக்கச் சிரமப்பட்டேன். ஆச்சரியம் மறைந்து கொஞ்சம் சந்தோஷம் தோன்றியதும் உண்மை. இந்நாளில் நிறைய இளைஞர்கள் திருமணத்துக்கு முன் சேர்ந்திருக்க உடன்படுகிறார்கள் என்று படித்திருந்தும், இப்பொழுது தான் முதல் முறையாக நேர்கொள்கிறேன். தனிமையில் இருவரையும் பிறகு நண்பரையும் பாராட்டிய போது, என்னைக் கீழாகப் பார்த்தார்கள். "நீயெல்லாம் முற்போக்காடா, பாடு" என்றான் நண்பன் வெளிப்படையாக. "அவங்க வாழ்க்கை. இதுல என்னோட அனுமதி இருந்தா என்னா இல்லாட்டி போனா என்ன?" என்றான்.

    கரங்களில் எங்கே பார்த்தாலும் செக்யூரிடி. சாதாரண மால்களின் நுழைவாயிலில் கூட செக்யூரிடி. ஆயுதம், போதைப்பொருள் பரிசோதனை. இதை ஏற்றுகொண்டபின் அமெரிக்க விமான நிலைய சோதனைகளை என்னமோ பெரிய அவமானமாக போஸ்டர் ஒட்டிப் புலம்புகிறார்களே இந்தியப் பிரபலங்கள்? எல்லா சாலைகளையும் தோண்டி சின்னாபின்னப் படுத்தியிருக்கிறார்கள். சர்வசாதாரணமாக மோதிவிட்டுப் போகிறார்கள். இந்தியாவின் அன்றாட வாழ்க்கை அபாயகரமானது என்ற எண்ணம் அவ்வப்போது வந்து போனது.

    ன் பயண நேரத்தில் வெளிநாட்டிலிருந்து ஹைதராபாத் வந்தப் பழைய நண்பன் ஒரே வாரத்தில் தன் மூத்த உறவினர்கள் இருவரை இழந்தக் காரணத்தால், அவனைச் சந்திக்க முடியவில்லை. பலமுறை தொலைபேசினேன். "டேய்.. என்னுடைய முந்தைய ஜெனரேஷன் எல்லாரும் 65-85 வயசு ரேஞ்சுல இருக்காங்கடா. என்னிக்குப் போவாங்கனு சொல்லமுடியாது. இவங்க எங்கயோ இருக்காங்க.. நான் எங்கயோ இருக்கேன். ஒரு அவசரம்னு ப்ளேனை பிடிச்சு வரக்கூட பத்துப் பனிரெண்டு மணி நேரமாகுது. என் முந்தைய தலைமுறை மறைஞ்சு போறதை நான் பார்க்கக் கூட முடியாதுனு நெனக்கறப்ப எனக்கு தாங்கலேடா. இதுக்காகவாவது கொஞ்ச நாள் இந்தியா வந்திருந்து அவங்களோட பழகணும்னு தோணுது.. இவங்கள்ளாம் என் சின்ன வயசுல என்னை அப்பப்ப எடுத்து வளத்தவங்கடா.." என்றான். சிறிய ரம்பம் ஒன்று என் இதயத்தை மெள்ள மெள்ள இடம் பார்த்து அறுக்கத் தொடங்குவதைத் தடுக்க முடியவில்லை. சென்ற எந்தப் பயணத்திலும் உணராத அளவுக்கு இந்தப் பயணத்தில் என் உற்றார் சுற்றார் முதுமையின் தாக்கத்தை உணர்ந்தேன்.

    ந்தியாவில் பொருள் அமெரிக்க விலை விற்கிறது. பெட்ரோல், தண்ணீர், பால், சில காய்கறிகள், துணி, பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் அமெரிக்க விலையை விட அதிகம். பெட்ரோல் விலை அதிகம் என்று இங்கே புலம்பும் நான், இந்திய விலைகளைப் பார்த்ததும் மூச்பேச் இல்லாது போனேன். பத்து சதவிகிதத்துக்கு மேல் வட்டிக்குக் கடன் வாங்கி, நாற்பது லட்சத்திலிருந்து கோடிக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்குகிறார்கள். அதைத் தவிர மாதம் ஐந்தாயிரம் வரை பராமரிப்புச் செலவு என்று கம்யூனிடி கமிட்டியில் கட்டுகிறார்கள். வாங்கும் சம்பளத்தில் அறுபது எழுபது சதவிகிதம் வீட்டுக்கே போயிவிடும் போலிருக்கிறது. அப்புறம் கார். சாதாரண வசதியுடன் கூடிய வீட்டு மாதவாடகை ஐம்பதாயிரம் வரை போகிறது. விலைவாசி தொடர்ந்து ஏறினால் (gdp ஏழில் தாக்குப் பிடிக்கிறது - விலைவாசி இப்போதைக்கு குறையும் என்று தோன்றவில்லை. என்றைக்காவது குறைந்திருக்கிறதா?), விரைவில் புவாவுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் வீட்டின் விலை மிக உயர்ந்தாலொழிய சொந்தவீடு வாங்கி லாபம் பார்க்க முடியாது என்று தோன்றியது. இந்திய நகரங்களில் வாழவேண்டுமானால் வீட்டு வாடகை தவிர மாதச் செலவுகளுக்குப் பத்தாயிரக்கணக்கில் பணம் வேண்டும் என்று தோன்றியது. பயந்து போனேன். சீக்கிரம் ஊரைப் பார்க்கப் போகணும் என்ற உந்துதல், அரிக்கத் தொடங்கியது.

    ரில் இறங்கியதும் நிம்மதிப் பெருமூச்சு. இரண்டு நாள் பொறுத்து மறுபடி சென்னை ஏக்கம். பழைய பயண நினைவுகள்; புதிய பயணக் கனவுகள். மனம் கேவலம்.

38 கருத்துகள்:

  1. கடைசி வரிகள்.............. ஹைய்யோ!

    சென்னையில் பல சங்கடங்களைப்பார்த்து மனம் வெறுத்து எப்படா வீட்டுக்குப்போலாமுன்னு இருக்கும். விமானத்தில் ஏறி உக்கார்ந்ததுமே......... இனி எப்படா இந்தியா வரப்போறோம் என்ற ஹோம்சிக் தொடங்கிரும்.

    இருதலைக் கொள்ளி!

    ஆனால் ஒன்னு சென்னையில் வசிக்கணுமுன்னா என்னால் வாடகை கொடுத்துக் கட்டுப்படி ஆகாது:(

    பதிலளிநீக்கு
  2. வெளிநாட்டுலேயிருந்து இந்தியா போகிற எல்லோருக்கும் பொதுவாய் இப்படி தான் இருக்கிறது. x+1 சிண்ட்ரோம் மாதிரி இது ஒரு சிண்ட்ரோம் போலிருக்கிறது. அழகாய் வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு வரியுமே ஒப்புக் கொள்ள வைக்கும் உண்மைகளைச் சுமந்து நிற்கின்றன. அதே பெங்களூருவிலேயே எனது நண்பரின் மகளும் அதே போல... எல்லிருவே பாடல் எனக்கு மிகப் பிடிக்கும் என் அலைபேசியில் அந்தப் பாடல் இருக்கிறது! கன்னடப் பாடல்களில் நிறைய நல்ல பாடல்கள்! மலையமாருதம் படப் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா? பார்ட்டி ஒன்றில் அம்பரீஷ் பாடும் சகோதரப் பாடல் ஒன்றின் வரிகளை நினைவில் வைத்து நெடு நாட்கள் தேடிக் கொண்டிருந்தேன். பிறகு மறந்து போனது!

    பதிலளிநீக்கு
  4. தங்கள் சென்னை பெங்களூர் பயணத்தை
    அனுபவத்தை நாங்களும் அனுபவிக்கும்படி எழுதுதியதும்
    ஆங்காங்கே எழுப்பிச் செல்லும் கேள்விகளும்
    விதைத்துச் செல்லும் சிந்தனைகளும் இப்போது
    எங்களை ரம்பமாய் இதயத்தை அறுத்துக் கொண்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்லிப்போவது மிகச் சரி
    நான் எதனுடனும் எதை இணைத்துப்பார்ப்பது என்கிற
    தெளிவூட்டும் அருமையான பதிவு
    அறிவின்மையாலே பல விஷயங்களில் அவதியுறுகிறோம
    தெளிவூட்டும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அப்பதுரைஅவர்களே! நாற்பது ஆண்டுகள்மதுரையில் இருந்துவிட்டு நாகபுரியில் வசிக்கிறேண். ஆனால் நானும் என் மனைவியும் இதற்காக பத்து ஆண்டுகளுக்குமுன்பே மனதளவில் தயார் செய்து கொண்டோம்.என் சொந்த கிராமமான நெல்லைக்குச் செல்லவில்லை. அங்கு போனலும் நிலமை வித்தியாசப்படாது.நண்பர்கள் உறவினர்கள் எல்லாருமே புலம் பெயர்ந்து வாழும்போது நாம் நமது சொந்த ஊரிலேயே அந்நியப்பட்டு நிற்கவேண்டும். என்னுடைய ஆலோசனை "நீர் இருக்கும் சிகாகோ தான் உமக்கு "அயோத்தி". இந்தியாவில் வந்து "அயோத்தி"யை தேடாதேயும். அதை நாங்களே சிதைத்து விட்டோம்!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாஆகஸ்ட் 27, 2012

    எப்பவுமே இனி இதுதான் நமக்குன்னு மனசுக்குள்ள முடிவு பண்ணிண்டா நம்மால எதுலேயும் ஒரு வழி வகுத்துண்டு வாழ முடியும். கட்டுரை அருமை! பல வரிகள் சுவாரசியம். சில வரிகள் மனதை தொட்டது.
    'எல்லிருவே' சூப்பர்! கன்னட மொழியிலும் சில பாடல்கள் என்றும் மனதில் ரீங்காரமிடும். அதில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடல் பல முறை 'சித்ரமாலா' நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். இந்த படம் தூர்தர்ஷனில் நான் படிக்கும் காலத்தில் பார்த்திருக்கிறேன். அதன் சில காட்சிகள் கூட இந்த பாடலை கேட்டபோது நினைவுக்கு வந்தது. இந்த படத்தில் கல்பனா மனநிலை பாதிக்கப்பட்டு இறுதியில் சரியாகி விடுவார். படித்த பாடங்கள் எதுவும் நினைவில் இல்லை. இதெல்லாம் எப்படித்தான் நினைவில் இருக்கின்றதோ. எனக்கே சிலநேரம் இது புரியாத புதிர். ஷங்கர் நாக், விஷ்ணுவர்த்தன் இருவரும் என்னுடைய favorite ஹீரோஸ்.

    ஸ்ரீராம் உங்களுக்கு நேரம் கிடைத்தால் கன்னட படமான 'அமிர்தவர்ஷினி' பட பாடல்களை ஒருமுறை கேளுங்கள். படமும் கிளாஸ். இது நான் என்றும் ரசிக்கும் படம், ரசிக்கும் பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  8. கமெண்ட் பிளாக்கர் ஸ்வாஹா பண்ணிவிட்டது போல்....

    சொன்ன அத்தனை விஷயங்களும் உண்மை. நீங்க வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து திரும்பும்போது கொண்ட உணர்வுகள் எனக்கு ஒவ்வொரு முறையும் தில்லியிலிருந்து தமிழகம் சென்று திரும்பும்போதும்....

    கன்னடப் பாடல் கேட்டு ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  9. சென்னையை எனக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் இந்த நெரிசல்.

    விலைவாசி என்ன சொல்றதுன்னு புரியலை . எங்கயோ போறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றா குறை நிலைதான் இன்று...

    பதிலளிநீக்கு
  10. நல்ல பல கருத்துக்கள் சார்...

    தங்களின் பயண அனுபவம் மூலம் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது... நன்றி...

    பதிலளிநீக்கு
  11. வெளிநாட்டுக்குப் போனா மட்டுமல்ல வெளிமாநிலத்துல வசித்தாலும் ஹோம்சிக் படுத்துதே..

    இக்கரைக்கு அக்கரை பச்சை :-)

    பதிலளிநீக்கு
  12. // வீடுகளில் வானொலி அனேகமாக மறைந்துவிட்டது //

    முழுசும் மறையலை. எஃப் எம் என்ற புதிய ரூபத்தில் இன்னும் ஆட்சி செய்யுது.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் அப்பாதுரை சார்,

    உங்கள் பதிவு மிகவும் நெகிழ்ச் செய்துவிட்டது... தேவைகளை நாமே அதிகப்படுத்திக் கொள்வதுதான் இதற்கான காரணம் என்று நினைக்கிறேன்.. குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் மிக அதிகம். சக்திக்கு மிறி ஆசைபடும் போது ஒரே வழி திரை கடலோடியும் திரவியம் தேடுவதுதான். சொந்தம், பந்தம், மண்ணின் மனம் எல்லாம் துறந்து என்ன வாழ்க்கை இது என்று சலிப்பு தட்டினாலும், ஆசை அனைத்தையும் மறைத்து விடுகிறதே... எல்லாம் அனுபவ புலம்பல்தான்.....

    பதிலளிநீக்கு
  14. Yes you are right there is no place for the children to play in an open ground. There is no group of boys comprising of different castes,creed from different classes of society making it possible for them to move with everybody without any inhibition. This tendency is getting slowly missing nowadays. Price rise is too much in India. Leave alone the affordables but I do not now how the poor people of managing their standard of living. There is one more point - children with less infrastucture and poor income are doing very good in their studies.

    பதிலளிநீக்கு
  15. //எதையுமே ஒரு நிமிடத்துக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. முதல் வரியிலேயே "இலக்கியம்" முகத்திலடித்துப் பயமுறுத்துகிறது.//

    //..சென்ற இருபது ஆண்டுகளின் "இலக்கியக் காவலர்கள்" சிலர் எழுதியப் புத்தகங்களை மேலோட்டமாகப் புரட்டிப் படித்தேன். அதிர்ச்சியில் வயிற்று வலி வந்துவிட்டது..//

    //"ஆங்கிலத்தில் கேட்டதற்கு மிகவும் நன்றி. எனில் எனக்குப் பண்பில்லை என்றோ நான் செவிடு என்றோ நினைத்திருப்பீர்கள்" என்றேன்.//

    //தனிமையில் இருவரையும் பிறகு நண்பரையும் பாராட்டிய போது..//

    //சிறிய ரம்பம் ஒன்று என் இதயத்தை மெள்ள மெள்ள இடம் பார்த்து அறுக்கத் தொடங்குவதைத் தடுக்க முடியவில்லை. //

    //சீக்கிரம் ஊரைப் பார்க்கப் போகணும் என்ற உந்துதல், அரிக்கத் தொடங்கியது.//

    மனம் மாமேரு.

    பதிலளிநீக்கு
  16. துரை சாரு,

    ஒரு வழியா இன்னைக்கு தான் வந்தேன் வலைக்கு.ஹைதராபாத்தில் நம் சந்திப்பின் நினைவு பல நாட்கள் நினைவிலாடும்.

    எனக்கு பழைய இடங்கள், பழகிய தடங்களை மீண்டும் சந்திக்க கிளம்பும் போதெல்லாம் மனம் பதறும். நெஞ்சோடு நிற்கும் நினைவு பிம்பங்களை கலைந்து விடுமோ எனும் பயம் தான்.

    இந்தியா குறித்த உங்கள் ஐயப்பாடுகள் நிஜமே. நம்பிக்கையும் மாற்றங்கள் வந்தே தீரும் எனும் எதிர்பார்ப்பும் தான் ஜனங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

    நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் இலக்கியம், யதார்த்தம் கலைத்து போட்ட மணல் வீட்டை மீண்டும் நிர்மாணிக்கும் யத்தனமாய், அல்லது யதார்த்தைப் புறந்தள்ளி, உவந்ததை கவனம் கொள்ளும் முயற்சியாய் நடை பெற்று வருகிறது.

    ஏதோ ஒன்று நடக்கத் தானே வேண்டும்?

    பதிலளிநீக்கு
  17. வெளிநாடுகளில் பலகாலம் இருந்துவிட்டுப் போனால் தெரியும் நாகரீக மாற்றங்களை அப்படியே இயல்பாகச் சொல்லியுருக்கிறீர்கள் அப்பாஜி.

    உங்கள் தேசம் இப்படியானால் போரால் பாதிக்கப்பட்ட என் தேசம்,மக்கள் கதி.2-3 ஆவது தலைமுறைகள் முகம் தெரியாமல் தடுமாறும் தவிப்பு....?

    பதிலளிநீக்கு
  18. புத்தகப்புழு நீங்கன்னு கடையில இருக்குற மொத்த புக்ஸ் வாங்கும்போதே தெரிஞ்சிருக்கும் கண்டிப்பா கடைக்காரருக்கு.. அட சமர்த்தே அப்டி தான் நினைச்சிருப்பார்...

    நடிகை எந்த மொழியா இருந்தால் என்ன? எல்லோரையும் ஒரு இடத்தில் அட்ராக்ட் செய்றார்னா அது சாதாரண மக்களால் முடிகிற காரியமா என்ன? அதுவும் உங்க கிட்ட பேசிட்டாங்க வேற :) பேசிட்டப்பின் விக் வைத்திருக்கலாம்னு ஏன் நினைச்சீங்க? அனுபம்கெருக்கு பால்ட் ஹெட் தான் அழகு.. ஆனாலும் நீங்க போட்ட வரியை ரசித்து சிரித்தேன்...

    //ஹ்ம்.. என்ன தெரிந்ததோ? ஒரு விக் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம். //

    இப்ப இருக்கும் குழந்தேள் எல்லாம் ரொம்ப ஸ்மார்ட் தெரியுமோ? என் பையன் நேற்று வாக் போகும்போது கேட்ட விஷயம் எங்களால பதில் சொல்லவே முடியலை... அதுப்பற்றி என் ப்ளாக்ல நிதானமா போடுகிறேன்... அந்த அளவுக்கு ஜூட்டிகையான பிள்ளைகளை அடைத்து வீட்ல வெச்சிருந்தா இப்படி தான் புத்திசாலித்தனமா கேள்விகள் கேட்டு அம்மா அப்பாவை திணறடிக்கும்.. அதுக்கு ஒழுங்கா வெளியே விளையாட அனுப்பினால் மூளையும் இன்னும் சுறுசுறுப்பாகும் உடலும் நல்லா சுறுசுறுப்பாகும்... ஆனா எங்க வெளியே விடறது? பயமாருக்கே..

    இந்த தடவை இந்தியாவுக்கு போனப்போ உங்களுக்கேற்பட்ட அத்தனை பிரச்சனையும் எண்ணங்களும் எனக்கும் ஏற்ப்பட்டது.. அட எப்பப்பா இங்க வந்து சேருவோம் என்றாகிவிட்டது....

    ஆனால் இங்க வந்த ரெண்டே நாட்களில் ஹோம் சிக் வந்துட்டுது... ஹூம்.. இது தான் நம் நிலை...

    பாடல் இங்க ஆபிசுல கேட்கமுடியாது வீட்ல போய் தான் கேட்கணும்..

    ரசிக்கும்படி பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் அப்பாதுரை...

    பதிலளிநீக்கு
  19. மற்ற உறவுகளின் முதுமை, தொடரும் இழப்பையே ஜீரணிக்க முடியவில்லை. பெற்றோரை - வயதானவர்களை - தனியே இருக்க வைத்திருக்கும் எனக்கு - தினமும் மனம் அரிக்கும் விஷயம்.

    //சீக்கிரம் ஊரைப் பார்க்கப் போகணும் என்ற உந்துதல், அரிக்கத் தொடங்கியது.

    ஊரில் இறங்கியதும் நிம்மதிப் பெருமூச்சு. இரண்டு நாள் பொறுத்து மறுபடி சென்னை ஏக்கம். பழைய பயண நினைவுகள்; புதிய பயணக் கனவுகள்//

    ஒரு பெரிய்ய ரிப்பிட்டு. அங்கே இருப்பவர்களுக்கும் வேறு வழியில்லாததாலேயே அங்கே இருக்கிறார்களோ என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
  20. //ஊரில் இறங்கியதும் நிம்மதிப் பெருமூச்சு. இரண்டு நாள் பொறுத்து மறுபடி சென்னை ஏக்கம். பழைய பயண நினைவுகள்; புதிய பயணக் கனவுகள். மனம் கேவலம்.//

    போன டிசம்பர் மாதம் நான் இந்தியா சென்றது. அடுத்த வருடம் 12 வகுப்பு முடித்து கல்லூரி செல்லும் மகன் விசாவுக்கு எதாவது பிரச்னை வருமோ என்று பயத்தில் இந்தியா, மணிலா, லண்டன் என்று எல்லா ஊருக்கு செல்வதையும் தள்ளிபோட்டு இருக்கின்றேன். இன்னும் எவ்வளவு மாதங்கள் முடியும் என்று தெரியவில்லை.

    நீங்கள் எழுதியது போல் ஆழமனதில் என்னதான் இருந்தாலும் போய் வந்தபின் கூடையும் !

    பெங்களூர் வாழ்ந்த எனக்கு இப்போது அங்கு அடிக்கடி செல்ல முடிவதில்லை, ரொம்பவே மாறிவிட்டதாக எல்லோரும் சொல்லுகின்றார்கள். லிவிங் டுகெதர் ஆணும் பெண்ணும் என்று இருந்தால் போதும் பரவாயில்லை என்று தோன்றிவிட்டது !! இருந்தாலும், இனி வரும் காலங்களில் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் என்று அந்த கூத்தும் ஐந்து ஆறு தலைமுறைகளுக்கு நடந்தால் மனித மக்கள்தொகை கொஞ்சம் குறையும் !!

    நேற்று தீடீரென்று என் மனைவி, என்ன நிசப்பதம் பார்த்தீர்களா என்று என் வீட்டில் சொன்னபோது நிஜமாகவே அமெரிக்கா மயான அமைதியுடன் இருப்பது விளங்கியது.

    அடுத்த வருடம் இந்தியா திரும்பும் மனைவியும் இரண்டாம் மகனும் செலவழிக்க இப்போதே நிரம்ப உழைக்க ஆரம்பித்துவிட்டேன் இங்கே அமெரிக்காவில் !! டவுசர் கிழிந்து விடும் போலிருக்கு !!

    பதிலளிநீக்கு
  21. //எல்லிருவே' சூப்பர்! கன்னட மொழியிலும் சில பாடல்கள் என்றும் மனதில் ரீங்காரமிடும். அதில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடல் பல முறை 'சித்ரமாலா' நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். இந்த படம் தூர்தர்ஷனில் நான் படிக்கும் காலத்தில் பார்த்திருக்கிறேன்.//

    பெங்களூர் வாழ்க்கை மறந்தே விட்டதோ !!
    ஐயோடா

    பதிலளிநீக்கு
  22. Sriram, I will flick Kannada songs what ever you have when I see you next time. I like quiet a few

    பதிலளிநீக்கு
  23. அப்பாஜி நீங்களாவது அமேரிக்கா சென்று விட்டு சொந்த மண்ணை எண்ணி ஏங்குகிறீர்கள். சொந்த மாநிலத்திலேயே வேலை நிமித்தம் பிரிந்து வந்து தவிக்கும் என்னைப் போன்றோரின் நிலைமை?

    சொந்த வீடு பற்றி மிக அருமையாக சொல்லியிருக்கிறீகள். சிறு வயதில் " காணி நிலம் வேண்டும்" படித்து விட்டு என்ன பாரதி இப்படி அல்பமாக வேண்டுகிறான் என்று நினைத்ததுண்டு. இப்போதல்லவா தெரிகிறது அது எவ்வளவு பெரிய வேண்டுதல் என்று.

    நீங்கள் எதை எழுதினாலும் சுவைபட எழுதுகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  24. //சிறிய ரம்பம் ஒன்று என் இதயத்தை மெள்ள மெள்ள இடம் பார்த்து அறுக்கத் தொடங்குவதைத் தடுக்க முடியவில்லை. //

    நிறைய கவனித்து நிறைவாக நெருடலான பாதிப்புகளைப் பகிர்ந்திருக்கிறீகள்....

    பதிலளிநீக்கு
  25. நானும் மோகன்ஜி பின்னாடியே உள்ள நுழைஞ்சுக்கிறேன் ( எனக்கு வலை இன்னமும் சிக்கலாவே இருக்கு வலைப்பதிவு இன்னமும் தூரமாவே இருக்கு )

    உங்கள் இந்திய பயணப் பதிவனைத்தையும் புஸ் புஸ் என பொறாமை பொங்க படித்து முடித்தேன்.. சந்திக்க முடியாமல் போனது வருத்தம் . எனது பயணம் அக்டோபருக்கு தள்ளிவிட்டது...

    நட்பை பேணும் விதம் ...பதிவர்களுக்கும் பதிவுகளுக்கும் கொடுக்கும் மரியாதை இப்படி உங்களிடம் கற்றுக்கொண்டேயாகவேண்டும் என நிறைய விஷயங்கள்...

    அனுபவித்ததை அழகாக பகிர்வதற்க்கு நன்றியும் வாழ்த்துகளும்


    பதிலளிநீக்கு
  26. கா.கோ குறித்த எஸ்ரா கருத்தில் என்ன பிழை. அவர் சொல்வது...
    1) காப்பியடித்து (மொழிபெயர்த்து) எழுதியது - மூலப் புத்தகங்களை அட்ரிப்யூடும் செய்யாமல்

    2) வரலாற்று புனைவு என்றால் அறியாத பகுதிகளை நிரப்ப கற்பனை தேவை - இது வெறும் சரித்திரத்தை அப்படியே ஒப்பிக்கிறது

    3) அந்தக் கால மதுரையைக் கூட இக்கால நோக்கில் (நிலபுலன், பேச்சு மொழி வழக்கு, நகர அடையாளங்கள் போன்றவற்றை) எழுதுகிறார்.

    திருடினாலும் பரவாயில்லை. மொழிபெயர்த்தாலும் ஒகே. பாட புஸ்தகம் தாண்டி எழுதுவதுதானே புனைவு?

    பதிலளிநீக்கு
  27. தொடர்ந்து படிப்பதற்கும் பின்னூட்டங்களுக்கும் - அனைவருக்கும் மிகவும் நன்றி.

    ஹேமா (HVL): என் மகள் இதை OMS என்கிறாள். old men syndrome.

    காஸ்யபன் சார்: இருக்கும் இடமே சொர்க்கம். நன்றாகப் புரிந்தது.

    mohan baroda: diversity பற்றிய நல்ல கமெந்ட். எனக்குத் தோன்றவில்லை. நன்றி.

    ஹூஸைனம்மா: உங்கள் நிலமை நெஞ்சைப் பிசைகிறது. இது ஒரு பெரிய சிக்கல்.

    பதிலளிநீக்கு
  28. ஸ்ரீராம்: living togetherல் தவறோ முறைகேடோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்தியாவில் முப்பதாண்டுகளுக்குள் இப்படி ஒரு மாறுதலா, அதுவும் கலாசார முரணாச்சே என்ற அதிர்ச்சி சட்டென்று தோன்றி மறைந்தது. அதையே நண்பன் judgmentalஆக எடுத்துக் கொண்டுவிட்டானோ என்று பதட்டம். அதைவிட அந்த இளைஞர்கள் மனதை புண்படுத்தியிருப்பேனோ என்ற பதட்டம். பெண்கள் தங்களைப் பற்றிய முழு உணர்வோடும் நம்பிக்கையோடும் செயல்படுவது உண்மையிலேயே நிறைவாக இருந்தது. சட்டரீதியான மாற்றங்கள் இதை ஆதரிக்கின்றனவா தெரியவில்லை. உதாரணமாக, இங்கே living together என்றாலும் சொத்தில் பங்குண்டு :-) இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். முழுமையாக ஏற்காமல், அரைகுறையாக ஏற்று, பிறகு எல்லாத் தீங்குகளுக்கும் மேற்கத்திய தாக்கம் என்று பழிபோடத் தயங்கவே மாட்டோம். அதான் கொஞ்சம் திக்.

    சில வாரங்கள் முன்பு மங்களூரில் (அதே கர்னாடகா) மத/கலாசாரப் போலீஸ் இளைஞர்களை அடித்து நொறுக்கி, பெண்களைக் கொடுமைப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் முரண்கள் இனிமையான ஆச்சரியம் என்று நினைத்து உற்சாகமாக நடந்தால் அயோக்கியத்தன அராஜகம் என்ற குழி தயாராகக் காத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  29. ஹேமா: பரிணாம இழப்புக்களுக்கும் திட்டமிட்ட அழிவுக்கும் வேறுபாடு உண்டு என்று உணர்ந்தாலும், உங்கள் கருத்தைப் படித்து என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்கிறேன். பரிணாம இழப்புக்களின் மறுபக்கம் வளர்ச்சி இருக்கும் - பொதுவாக. திட்டமிட்ட அழிவிற்கு மறுபக்கம் என்று எதுவும் உடனடியாக உருவாவதில்லை. சொல்லைக் கட்டிப்போட்ட உங்களுக்கு என் நெஞ்சுருக்கம். சொட்டுக் கண்ணீர்.

    பதிலளிநீக்கு
  30. வருக Bala Subra.

    எஸ்.ரா கருத்தில் பிழை இருப்பதாக நான் சொல்லவில்லை. பண்பில்லை என்று தான் சொன்னேன்.

    அவர் கருத்து பிழையா இல்லையா என்ற என் கருத்தைச் சொல்ல, நான் காவல் கோட்டம் படிக்க வேண்டும். வாங்கிய புத்தகத்தைப் படிக்காமலே பறிகொடுத்துவிட்டேன். போகிறது, பிழையா இல்லையா என்ற விவாதத்தை இன்னொரு முறை வைத்துக் கொள்வோமே?

    அவர் கருத்தில் பிழை இருக்கிறதா இல்லையா என்பதை அவர் கருத்தைப் படித்தாலே புரிந்துவிடும் என்றும் நினைக்கிறேன். இருப்பினும் இப்போதைக்கு பிழையில்லை என்றே வைத்துக்கொள்வோம். "தமிழ்நாட்டில் மலைமேல் பெருமாள் கோவில் கிடையாது" என்ற எஸ்.ரா, எதையுமே நன்கறிந்துப் பிழையில்லாமல் பேசக்கூடியவர் என்றே வைத்துக் கொள்வோம். பண்போடு பேசவில்லை என்பதே என் கருத்து.

    அவர் கருத்தில் வயிற்றெரிச்சலும் காழ்ப்பும் பொறாமையும் அறியாமையும் நிரவியிருப்பதாக நம்புகிறேன். அவர் செய்திருப்பது அறிவார்ந்தப் பொறுக்கித்தனம். துரதிர்ஷ்டவசமாக, அதற்கு வேறு பெயர்களும் இருக்கின்றன: கருத்துரிமை. பேச்சுரிமை. எழுத்துரிமை.

    பதிலளிநீக்கு
  31. பாரதியின் வேண்டுதல் பற்றிய கருத்தை மிகவும் ரசித்தேன் சிவகுமாரன். [மனம் நூறாண்டுகள் பின்னோக்கிப் பயணித்து பாரதியின் நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறது. அவரைச் சந்தித்துக் கேட்டதற்கு முண்டாசுக்காரர், "அளவோடு ஆசைப்படுகிறேன்" என்றார்.]

    பதிலளிநீக்கு
  32. திருட்டு கொடுத்தவருக்கு கோபம் வந்தால் சுடுசொல் போட்டு திட்டுவார். அந்த மாதிரி சினங்கொண்டு தகாத வார்த்தை எதுவும் பண்பு கெட்டுப் போய் எஸ்ரா சொல்லவில்லை.

    கவன ஈர்ப்பிற்காக “1000 பக்க அபத்தம்” என்ற தலைப்பு வைத்திருக்கலாம். “காவல் கோட்டம்: திருட்டுப் பட்டியல்” என்று அவருடைய விமர்சனத்தைப் போட்டிருந்தால், திருடங்களைப் பற்றிய கதை போலிருக்கு என்று எல்லோரும் படிக்காமலே போயிடுவாங்களோ என்னும் தமிழ் வாசக மனோபாவம் குறித்த அச்சமும் காரணமாக இருந்திருக்கலாம்.

    பண்பு கெட்டு எஸ்ரா என்ன சொன்னார்?

    பதிலளிநீக்கு

  33. அப்பாதுரை சார், சில நாட்களுக்குமுன் நான் எழுதிய பதிவொன்றில் சிலர் வேரைத் தொலைத்து விட்டார்களோ எனும் முறையில் எழுதி இருந்தேன். என் கருத்துடன் நீங்கள் மாறுபட்டதாக நினைவு. ஆனால் நீங்கள் அமெரிக்கா திரும்பிச்சென்றபிறகு எழுதும் பதிவுகளில் உங்களுக்கும் சிறிது ஏக்கம் இருப்பது தெரிகிறது. அதுவும் நியாயம்தானே( நீர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் )

    பதிலளிநீக்கு
  34. நெருக்கடி மிக்க அடுக்குமாடிக்கட்டிடக் குடியிருப்புக்கு கம்யூனிட்டி லிவிங்க் தேவலாம். பிள்ளைகள் பயமில்லாமல் விளையாடலாம். அப்படியும் ஹலோ,ஹலோ நாகரிக விசரிப்புக்கு மேல் பெரியவர்கள் நெருங்கி வருவார்களா என்பது சந்தேகமே. இந்தியாவில் விலைவாசியையும் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வாங்கும் மக்களைப் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். முக்கியமாக தங்கமாளிகையில் உண்மையிலேயே திருவிழா கூட்டம்தான். லிவிங்க் டுகெதெர் என்ன, நாலுபேர் பார்ப்பார்களே என்ற எண்ணம் இல்லாமல் பூங்கா, கடற்கரையென்று இளசுகள் அடிக்கும் கூத்தைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது. இந்தியாவின் பலமே அதன் கலாச்சாரமும் பண்பாடும்தான். அதையும் தொலைத்தால் நமக்குப் பெருமை கொள்ள ஒன்றுமே கிடையாது.

    பதிலளிநீக்கு
  35. Madam Geetha Seetharaman,
    I agree with your views 100 percent. Today it will be living together with one male and one female and tomorrow this combination may change to any mode one with two, two with three or male with male and female with female. It is better to keep ourselves ready for such types of "living" to avoid FUTURE SHOCKS.

    பதிலளிநீக்கு
  36. பாரதி கற்பனையை ரசித்தேன் கால இயந்திரம் ஒன்று இருந்தால் என் தந்தையைக் கூட இல்லை , பாரதியைத் தான் சந்திப்பேன்.

    பதிலளிநீக்கு
  37. Bala, உங்க கேள்வியிலேயே பதிலை அடையாளம் காட்டியிருக்கீங்கனு தோணுது. இதைப் பத்தி விவரமா எழுத விருப்பமில்லை. அதனால் தான் எஸ்.ராவுக்கு விருது கிடைக்கட்டும் என்று மட்டும் வேண்டிக் கொண்டதோடு நிறுத்தினேன். போகட்டும் என்று விடுவோம், சரியா?

    பதிலளிநீக்கு
  38. பிரிந்து வ‌ந்த‌ ஊரும் உற‌வும் பிறிதொருநாள் பார்க்கும்போது வேத‌னையை வெட்க‌த்தை ஏற்ப‌டுத்துவ‌தை எதிர்பார்த்து வ‌ருவதில்லை நாம். இக்க‌ரைக்கு அக்க‌ரைப் ப‌ச்சையாகிப் போக‌ ஓட்ட‌மெடுத்தாலும், ம‌றுமுறை ப‌ய‌ண‌த்துக்கான‌ ஆய‌த்த‌ம் தொட‌ங்கிவிடுகிற‌து ம‌ன‌சில்...என்ன‌வொரு விந்தை!வ‌கைதெரியாம‌ல் வ‌ள‌ர்த்த‌ செடியில் இலைக‌ளும் பூக்க‌ளும் கூர்முட்க‌ளும் ப‌ல‌தினுசு பூச்சிக‌ளும்... இருந்தாலும் ந‌ம்முடைய‌தாச்சே!

    பதிலளிநீக்கு