2012/08/17

சென்னைத் தா[க்]கம்    யல்வெளிகளை விற்று வான் முட்டக் கட்டி வருகிறார்கள். இழந்தப் பசுமையை ஈடுகட்டும் முறைகளைப் புறக்கணித்துவிட்டார்கள். கார் போக்குவரத்து ஆறு மடங்காக உயர்ந்திருக்கிறது என்கிறார்கள். சாலைகள் ஷாக் அப்சார்பர்களின் சோதனையாகவே இருக்கின்றன. தடுக்கி விழுந்தால் சூபர் மார்கெட் ரீடெய்ல் செந்டர் கட்டியிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களைத் திருடர்களாய் பாவித்து ஆறாம் விரல் போல் ஒட்டிக்கொண்டே வருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய்க்கு சின்னஞ்சிறிய விளையாட்டுப் பொருள் விற்கிறார்கள், வீட்டுக்கு வந்ததும் வேலை செய்யவில்லை. கஸ்டமர் சர்வீசில் கேட்டால் முகத்தில் அடிக்காத குறையாக ஏசுகிறார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை எல்லாரும் விதவிதமான செல்போன் வைத்திருக்கிறார்கள். செல்போனில் பேசியபடி தெருவோரம் சிறுநீர் கழித்து மூக்கைச் சிந்தி காறித் துப்புகிறார்கள். அத்லெடிக் பிடிப்பு ஆடைகளும் கேமியும் நைகியும் புலோவாவும் அணிந்துத் தள்ளுகிறார்கள். கூடவே வாய் மணமும் வியர்வை மணமும் குமட்டும்படி நெருக்கித் தள்ளுகிறார்கள். தலைவலியென்று டாக்டரைப் பார்த்தால் எக்ஸ்ரே ரத்தம் நரம்பு என்று தனித்தனிப் பரிசோதனைக்கனுப்புகிறார்கள். patient bill of rights என்று கேட்டால் ஓரமாகப் போய்ப் புடுங்கச் சொல்கிறார்கள். மேற்கத்தியத் தாக்கம் என்கிறார்கள். எது?

    தி.நகர் ரங்கநாதன் தெரு பஜாரில் நிழலாக விற்கிறார்கள், எனினும் பழைய படங்கள் அதிகம் காணோம். "பக்த ஹனுமான் டிவிடி இருக்கிறதா?" என்றேன். பலான படத்தின் குறிப்பெயர் அல்ல என்றுத் தெரிந்து கொண்ட கடைக்காரச் சிறுவன் நிச்சயமாக என்னைத் திட்டியிருக்க வேண்டும். சென்னையில் முன் போல திருட்டு டிவிடிக்கள் நடுத்தெருவில் போட்டு விற்காதது ஒரு வியப்பு. ஏமாற்றமும் :-).

    விமானப் பயணச்சீட்டுக்கான அச்சுப்பிரதியை எடுத்துவர வற்புறுத்துகிறார்களே என்று என் ப்லேஷ் டிரைவில் இருந்த டிகெட்டுகளை அச்செடுக்க, குரோம்பேட்டையில் ஒரு இன்டர்நெட் கடைக்குப் போனேன். "ப்ரின்ட் அவுட் தானே? இதற்கு கணினி வாடகைக்கு எடுக்க வேண்டியதில்லை" என்று என்னிடமிருந்து டிரைவை வாங்கிக்கொண்டு கேட்ட டிகெட்டுகளை ப்ரின்ட் எடுத்துக் கொடுத்தார்கள். ஒரு வாரம் கழித்து ஹைதராபாதில் வேலை விஷயமாகத் தேடுகிறேன் - ப்லேஷ் டிரைவைக் காணோம். ப்லேஷ் டிரைவில் என் அத்தனை விஷயமும் வைத்திருந்தேன். ஐந்து வருட பிசினஸ் ப்லான், வருமான வரி விவரங்கள், என் வங்கிக் கணக்கு விவரம், சில வியாபார ரகசியக் கோப்புகள், என் தொடர்புகளின் முழு விவரம், குடும்ப மற்றும் நண்பர் படங்கள், சில முக்கிய வழக்கு விவரங்கள், சில பலான படங்கள், வங்கிக் கடன் விவரங்கள், என் குடும்ப பாஸ்போர்ட் விவரம் என்று அத்தனையும் அதில் இருந்தது. புதிதாக வாங்கியிருந்த கணினியில் சேர்ப்பதற்காகத் தேடினால்.. அய்யோ, காணோமே! இன்டர்நெட் கடையில் விட்டு வந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது. இதயம் வயிற்றுக்குள் விழுந்துப் பிசைந்துச் சக்கையானது போல் உணர்வு. தெரிந்தவர்களை அனுப்பிக் கேட்கச் சொன்னால் எதுவும் கிடைக்கவில்லை. 'மீண்டும் சென்னை போவதற்கான வாய்ப்பு இந்தப் பயணத்தில் இல்லை. விஷமிகளின் கையில் சிக்கிவிடப் போகிறதே' என்ற கலக்கம் என்னை வாட்டாத நாளில்லை. எனக்குத் தான் அறிவில்லை; என்னிடமிருந்து ப்லேஷ் டிரைவை வாங்கியவர்களாவது திருப்பிக் கொடுக்க வேண்டாமோ? இதை ஒரு process என்று ஏன் அவர்கள் முறைப்படுத்தவில்லை?. தினம் நொந்தேன்.

    ம்சி பதிப்பகத்தாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பவா செல்லத்துரை, ஷைலஜா இருவரையும் சந்தித்ததில் என் இந்தியப் பயணமே மெருகேறியது. எழுத்தைக் காதலிக்கும் தம்பதி. எழுத்தாளர்களை (என்னையும் அந்த வகையில் சேர்த்தார்கள்) மிகவும் மதிக்கிறார்கள், கௌரவிக்கிறார்கள். சிறுகதைப் போட்டியின் பரிசைப் பெற்றுக் கொண்டேன். இரவு அவர்கள் வீட்டில் தங்க/சாப்பிடச் சொல்லி மிகவும் அன்புத்தொல்லை கொடுத்தார்கள். சாப்பாட்டை ருசித்ததும் "நல்லவேளை வற்புறுத்தினார்களே" என்று தோன்றியது. இரவு நெடுநேரம் பேசினோம். பவா, ஷைலஜா இருவரின் இலக்கியப் பிடிப்பு மிகவும் பரந்ததாகத் தோன்றியது. "வம்சி பதிப்பகத்தை, புத்தகக் காதலுக்காக வணிக நோக்கமின்றி நடத்தி வருகிறோம்" என்றார்கள். மறுநாள் அந்த உண்மை புரிந்தது. என் ஆர்வத்துக்கேற்பப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்தார்கள். ஒரு புத்தகமோ இரண்டோ அல்ல. அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். நெகிழ்ந்து போனேன். அடுத்த முறை இந்தியா போகையில் திருவண்ணாமலையில் இரண்டு நாள் இவர்களுடன் தங்க நினைத்திருக்கிறேன். அவர்களின் பண்பு என்னிடம் கொஞ்சம் ஒட்டிக் கொள்ளட்டும்.

    முப்பது வருடங்களுக்குப் பிறகு புல்லாரெட்டி இனிப்பு கார வகைகளை ருசி பார்க்கும் வாய்ப்பு ஹைதராபாதில் கிடைத்தது. முந்திரிப்பருப்பு லட்டு இன்றும் அதே போல் சுவையாக இருப்பது ஆச்சரியம். மொசாம்சாகி மார்கெட்டில் கராச்சி பேகரி என்னுடைய அந்தநாள் வாடிக்கையாளர். சிறிய கடை. பழபிஸ்கட்டுகள், by-two டீ சாப்பிட லைன் கட்டி நிற்பார்கள். கராச்சி பேகரி இப்போது மிகப் பெரிய நிறுவனமாகி விட்டது. மொசாம்சாகி மார்கெட் இப்போது இருக்கிறதா தெரியவில்லை. இரண்டு பொன்னான மாலைகளில் ஹலீம் சாப்பிட்டேன். ஹைதராபாத் ஹலீமுக்கு இணையில்லை. பத்து கிலோ எடை கூடினேன் என்பது வேறு விஷயம். ஹைதராபாத் அடையாளமே மாறிவிட்டது. ஏசி குளுமைக்காகவும் சில நேரம் தென்படும் மினி ஸ்கர்ட்களுக்காகவும் icri என்று அழைக்கப்பட்ட பயிர் ஆராய்ச்சி நிலையத்துக்கு, என் வாடிக்கையாளர் என்பதால், அடிக்கடி வருவேன். பிறகு ராமசந்திரபுரம் தாண்டி bhel வருவேன். ஒவ்வொரு முறையும் ஓய்வெடுக்கச் சொல்லும் அலுப்பு. இன்றைக்கு என்னடாவென்றால் எல்லாமே ஹைதராபாத் என்கிறார்கள். bhel எதிரே இப்போது அட்டகாசமான பஸ் நிலையம் வேறே. civilized! அந்த நாளில் சம்சாபாத் போக நெடு நேரமாகும். போனால் எங்கே பார்த்தாலும் திராட்சைத் தோட்டங்கள் - ஆயிரக்கணக்கான ஏக்கருக்குத் தோட்டங்கள்! வரிசை வரிசையாய்ப் பந்தல் கட்டித் திராட்சைக் கொடிகள்! இன்றைக்கு அங்கே வெறும் தரையில் மிகப்பெரிய கான்க்ரீட் விமான நிலையம். திராட்சைத் தோட்டங்களை என்ன செயதார்கள்?

    பெங்களூரு போவதற்காக மறுபடி ஹைதராபாத் விமான நிலையம். மறுபடி திராட்சைத் தோட்ட நினைவு. ஏற்கனவே துக்கமாக இருந்த என்னை இண்டிகோ நிறுவனம் இன்னும் துக்கப்படுத்தியது. எல்லா இடங்களுக்கும் இழுத்துக் கொண்டு போன என் பெரிய மூட்டையை excess baggage என்று ஏற்க மறுத்துவிட்டார்கள். என் american express சலுகைகளைக் காட்டி வாதாடியபோது 'போடா உனக்கும் உன் அமெக்சுக்கும் பெப்பே' என்றாள் இண்டிகோக்காரி. ஜெட் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் தொல்லை தரவில்லை. இவர்கள் மட்டும் அல்பத்தனமாக நடந்து கொண்டார்கள். எனக்கு உரிய சலுகையைத் தர மறுத்தவர்களின் பரம்பரையைத் திட்டியபடி லகேஜைப் பிரித்தேன். புல்லாரெட்டி இனிப்பு, காரப் பெட்டிகளைத் தனியே எடுத்து வைத்தேன். அந்தப் பைகளில் நான் வாங்கி வந்தப் புத்தகங்கள், பரிசாகக் கிடைத்தப் புத்தகங்கள் என்று அடுக்கினேன். அறிவுரிக்கப்பட்ட என் பெரிய லகேஜ் மூட்டையை அங்கிருந்த எடை எந்திரத்தில் சரிபார்த்துவிட்டுத் திரும்புகிறேன், புத்தகப்பைகளையும் புல்லாரெட்டி பெட்டிகளையும் காணோம். அடப்பாவிகளா! புத்தகங்களையும் சேர்த்துத் திருடிவிட்டீர்களா? அங்கே இங்கே அலைந்தேன். ஏர்போர்ட் செக்யூரிடியிடம் முறையிட்டேன். என் முகவரியை எழுதிக் கொடுத்தேன். எப்படியும் புத்தகங்களைத் திருப்பிவிடுவார்கள் என்று நம்பிக்கையோடு விமானம் புறப்படும் வரைக் காத்திருந்தேன். புத்தகங்களைத் தொலைத்தது பேரிழப்பு.

    ந்தியாவிலேயே அதிக வளர்ச்சியைக் கண்டது பெங்களூரு என்கிறார்கள். இரண்டரை கோடி ரூபாய்க்கு சர்வ சாதாரணமாக வீடுகள் விற்பனையாகின்றன. கட்டிடம் தவிர பெங்களூருவில் எதையுமே காணோம். எம்.ஜி.ரோடு பக்கம் நடந்தால் கிடைத்த அமைதியும் நிறைவும் சுத்தமாக அழிந்துவிட்டது. லால்பாக் இப்போது நகருக்கு நடுவில் இருக்கிறது. ஜெயநகர் மட்டும் இன்னும் அமைதியாக இருக்கிறது. "இரண்டு கோடி ரூபாய்க்கு வீடா.." என்று பழைய நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஐந்து கோடிக்கு வீடு என்று சில ப்ராஜக்டுகளைக் காட்டினார்கள். இந்தப்பக்கம் பூந்தமல்லி வரை பெங்களூரு வளர்ந்து விட்டது. நம்பவே முடியவில்லை. பொதுவாக ரியல் எஸ்டேட் தென்னிந்தியாவில் உச்சத்துக்கு வந்திருப்பது போல் தோன்றினாலும், பெங்களூரு இன்னும் உயரும் என்றே தோன்றுகிறது. strange feeling.

    பெங்களூருவிலிருந்து சிகாகோ போக இருந்தவன், ஏர் ப்ரேன்ஸ் குளறுபடியினால் சென்னை போய், உடனே பெங்களூரு திரும்பி, பழையபடி பெங்களூருவிலிருந்து சிகாகோ போகும் நிலையுண்டானது. கிடைத்த சில மணி நேரங்களில் குரோம்பேட்டையில் ஓய்வெடுக்கச் சென்றேன். இன்டர்நெட் கடை நினைவுக்கு வந்து ஓடினேன். விவரம் சொன்னதும், "இதுங்களா? யாருதுனு தெரியலிங்க.. இங்கயே வச்சிருந்தோம்" என்று என் ப்லேஷ் டிரைவை எடுத்துக் கொடுத்தார் கடைக்காரப் பெண். முத்தம் கொடுக்காதக் குறையாக நன்றி சொல்லித் திரும்பினேன். புத்தகங்களும் அது போல் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றி...

    நீண்ட பயணத்தில் சென்னையை மறக்க முயன்றேன். பறிகொடுக்காதப் புத்தகங்கள் படித்தேன். வலைப்பதிவுகளை வைத்து ஒரு புதிர் சமைத்தேன். ஒலியொளிக் குறை பொறுத்துப் பழைய பாடல்களை நிறையப் பார்த்து ரசித்தேன். புதிர் பிறிதொரு பதிவில்.


22 கருத்துகள்:

 1. தங்களின் பயணம் பலவற்றை அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. //தமிழகத்தில் வசித்தால் இது போல் அடிக்கடி சந்தித்துக் கொஞ்சம் intellectual மேய்ச்சலுக்கான வழி கிடைக்கும். யோசிக்கிறேன்.//

  //நீண்ட பயணத்தில் சென்னையை மறக்க முயன்றேன்.//

  //விவரம் சொன்னதும், "இதுங்களா? யாருதுனு தெரியலிங்க.. இங்கயே வச்சிருந்தோம்" என்று என் ப்லேஷ் டிரைவை எடுத்துக் கொடுத்தார் கடைக்காரப் பெண்.//

  போன இடுகையின் கடைசி வரிக்கும், இந்த இடுகையின் கடைசி வரிக்கும் இடையில்தான் சென்னை மட்டுமல்ல இந்தியாவே இருக்கிறது.

  இங்கு அன்னா ஹஸாரே போன்றோரை முன்னிறுத்தும் பெருமக்களிடம் போக விரும்பும் இடமும், போகும் வழி தெரியாத தவிப்பும் இருப்பது இதனால்தான்.

  பல விஷயங்களை அமுக்கமாக வெளியில் காட்டிக்கொள்ளாத அழுத்தக் காரரய்யா நீர்! என்னோட வாலட் ஹைதராபாதில் தொலைந்துபோன சமயத்தில் கூட எனக்கு வருந்தியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. அப்பாதுரை அஞ்சலிதேவியாகி அழைக்காதே (இந்தியாவுக்கு) என்று பாடுவது போலவே தோன்றியதைச் சொல்ல விடுபட்டுவிட்டது.

  பதிலளிநீக்கு

 4. பல அனுபவ நினைவுகளை கிளறி விட்டது உங்கள் பதிவு.

  சென்னையை நன்றாக வர்ணித்திருக்கிறீர்கள்.  பதிலளிநீக்கு
 5. குரோம்பேட்டை விஷயம் உடனே சொல்லியிருந்தால் (கடை பெயரும்) அந்த கடைக்கு சென்று கேட்டிருக்கலாம்; இன்டர்நெட் கடை பேர் நினைவிருக்கா? நாளை குரோம்பேட்டை பக்கம் செல்வேன். மெயிலில் சொல்லவும். கடை தெரிந்தால் போய் கேட்டு பார்க்கிறேன்

  //புல்லாரெட்டி இனிப்பு // அடடா ! நாங்க ஹைதை போனபோது சாப்பிட்டோம் செம டேஸ்ட் !

  வம்சி பதிப்பகத்தார் பற்றி அறிந்து மகிழ்ச்சி ; உங்கள் புத்தக வெளியீடு பற்றி அவர்களிடம் பேசி பார்த்திருக்கலாமே?

  பதிலளிநீக்கு
 6. ப்லேஷ் டிரைவ் திரும்பக்கிடைத்தது பெரிய விஷயம்!

  பதிலளிநீக்கு
 7. என்னமா பகிர்ந்துக்கறீங்க... விறுவிறுப்பான நடை. நன்றி!

  பதிலளிநீக்கு
 8. உடன் நாங்களும் பயணப்பட்டதைப்போல இருந்தது
  அனுபவங்க்களை படிப்பவர்களும் அனுபவிக்கும்படி
  எப்படி எழுதுவது என்பதை தங்கள் பதிவுகள் மூலம்
  எளிதாக கற்கலாம் என நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 9. //செல்போனில் பேசியபடி தெருவோரம் சிறுநீர் கழித்து மூக்கைச் சிந்தி காறித் துப்புகிறார்கள்.//

  சொர்க்கமே என்றாலும்.....!

  பதிலளிநீக்கு
 10. புத்தகங்கள் தொலைந்து போச்சா.....ஐயோ....!

  பதிலளிநீக்கு
 11. எத்தனை விதமான அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன இந்தப் பயணத்தில் உங்களுக்கு... அந்த பலேஷ் டிரைவை அதன் முக்கியத்துவம் உணராததால் கடைக்காரப் பெண் ஓரமாகப் போட்டு வைத்திருந்தாள் என்பது என் கணிப்பு. வம்சி கொடுத்த புத்தகங்கள் தொலைந்து விட்டன என்பதைப் படித்ததும் மிகமிக வருந்தினேன். நான் தொலைத்தவை எல்லாம் நினைவில் நிழலாடின. அந்தப் புதிர் என்ன... சீக்கிரம் சொல்லுங்க அப்பா ஸார்... ஈகர்லி வெய்ட்டிங்!

  பதிலளிநீக்கு
 12. சென்னைத் தாக்கத்தோடு தாகமும் குறையவில்லை என்றே தோன்றுகிறது. என்ன இருந்தாலும் நம்ம ஊர் நம்ம ஊர்தானுங்க, என்று எப்போதாவது தோன்றியதா. ? முகம் தெரியாதவர்களோடு பழகும்போதும் ஒரு அன்னியோன்னியம் கிடைத்ததா இல்லையா.?

  பதிலளிநீக்கு
 13. பலேஷ் டிரைவை தொலைத்தது குறித்து வருத்தமே மற்றபடி பயண அனுபவங்களை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்றும் சிந்திக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.
  உதவ முன்வந்ததற்கு நன்றி மோகன்குமார், அடுத்த இக்கட்டு நேர்கையில் உங்கள் உதவியை நிச்சயம் கேட்கிறேன் (தயாராக இருங்கள் :-)
  நீங்கள் சொல்வது புரிகிறது கணேஷ். டிரைவ் கிடைத்ததில் நிறைவடைந்த மனம் அடுத்த நிமிடமே எத்தனை காபி எடுத்திருப்பார்களோ என்று நினைக்கத் தொடங்கியது.. திருந்த மாட்டேன்.

  நான் சொல்லவந்தது என் மறதி, அவசரம், முட்டாள்தனம் பற்றித்தான். மின் யுகத்தில் எல்லாமே டிஜிடலாக கைக்கடக்கமாக இருக்கையில் கவனமாக இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லாஆகஸ்ட் 18, 2012

  தலைப்பு :).

  Flash drive தொலைத்ததை படித்தபோது அப்போதைய உங்கள் பதற்றமும், டென்ஷனும் படித்த தருணத்தில் என்னையும் தொற்றிக் கொண்டது. தொடர்ந்து அதே டென்ஷனில் கிடைத்து விட்டதா என்பதை தெரிந்து கொள்வதற்காக கட கட கடவென்று பதிவை படித்தேன். தொலைந்தது கிடைத்ததை படித்தபோதுதான் அப்பாடி என்றிருந்தது. பிறகு மீண்டும் ஒரு முறை பதிவை டென்ஷன் இல்லாமல் நிதானமாக படித்தேன்.

  சீரான நடையில் ஒரு சுவாரசியமான பதிவு.

  சுசீலாவின் குரலில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று. மிகவும் ரசித்து கேட்டேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 16. உங்கள் பார்வையில் சென்னை படித்தேன்; எனக்கும் சென்னையைப் பற்றிப் பெரிய கருத்தெல்லாம் ஒன்றும் இல்லை தான். என்றாலும் உங்களுக்கு நேர்ந்த பல இழப்புகள் மனதுக்கு வேதனையைக் கொடுக்கிறது. அதுவும் புத்தகங்கள் தொலைந்தது முக்கியமாய் வருத்துகிறது. :((((

  நிறையப் புத்தகங்களோ??

  பதிலளிநீக்கு
 17. உங்கள் பார்வையில் சென்னை படித்தேன்; எனக்கும் சென்னையைப் பற்றிப் பெரிய கருத்தெல்லாம் ஒன்றும் இல்லை தான். என்றாலும் உங்களுக்கு நேர்ந்த பல இழப்புகள் மனதுக்கு வேதனையைக் கொடுக்கிறது. அதுவும் புத்தகங்கள் தொலைந்தது முக்கியமாய் வருத்துகிறது. :((((

  நிறையப் புத்தகங்களோ??

  பதிலளிநீக்கு
 18. //இதயம் வயிற்றுக்குள் விழுந்துப் பிசைந்துச் சக்கையானது போல் உணர்வு. //

  தான் அடைந்த உணர்வுகளை இன்னொருவருக்கும் வார்த்தை வரிகளில் உணர்விக்க வரம் வாங்கி வர வேண்டும் போலத் தான் தோன்றுகிறது. அதை நீங்கள் வாங்கி வந்திருக்கிறீர்கள்.

  அடுத்த தடவை இந்தப் பக்கம் வரும் பொழுது முன்கூட்டியே தெரியப்படுத்தி விடுங்கள். தவறாமல் நேரில் சந்திக்கலாம்.

  பதிலளிநீக்கு
 19. இப்போதைய எம்.ஜி ரோட்-தீராத வருத்தம்:(!

  வீடுகள்(flats & villas) கோடிகளில் என்றாகி சில வருடங்களே ஆகி விட்டன பெங்களூரில். பில்டர்ஸ் விற்காவிட்டால் அப்படியே போட்டு வைப்பார்களே தவிர விலையைக் குறைக்க மாட்டார்கள். ஆனால் பலரும் சென்னையை விட பெங்களூர் தேவலாம் என்றும் சொல்லக் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. பெயரில்லாசெப்டம்பர் 05, 2012

  வந்து போன உங்களுக்கு இந்த அனுபவம்.நொந்து போன எங்களின் மாநகர வாழ்வுப்பாடுகளை எந்த மொழியில் துல்லியமாய் சொல்வதென எனக்குத் தெரியவில்லை!ஆனாலும் உங்களின் எழுத்து அருமை.பேனாவில் குற்றால நீரைக் கலந்து விடுகிறீர்களோ!வாழ்த்துகள்!-நேசமிகு எஸ்.ராஜகுமாரன்.5-9-2012

  பதிலளிநீக்கு
 21. அது வேற ஒன்னுமில்லப்பா எத்தனை நாளுக்கு தான் வயலை வைத்துக்கொண்டு சேற்றை மிதித்துக்கொண்டு கைக்கும் வாய்க்கும் வயிற்றுக்கும் பத்தாம அல்லல்படுவது அப்டின்னு ரியல் எஸ்டேட்காரர்களுக்கு வித்துடறாங்க.... அப்புறம் எங்க பசுமை எங்கே மழை? கட்டிடங்களாக நிமிர நிமிர அண்ணாந்து பார்த்து பார்த்து நமக்கும் தான் கழுத்து வலி வந்துவிடுகிறது....... இப்பெல்லாம் ஊருக்கு (சென்னைக்கு) போனாலே வெளியூருக்கு போவது போல தான் இருக்குப்பா... நான் உடுத்துவதையும் பேசுவதையும் பார்த்து கிண்டல் செய்கிற அளவுக்கு :) நாகரீகம் அந்த அளவுக்கு முன்னேறி விட்டது.... நீங்க எழுதி இருப்பதை பார்த்தபோது நான் சென்னை போய் வந்ததை நினைத்து பார்க்கிறேன்.... அப்டேட்டடா இருக்காங்க பிள்ளைகள்... ஸ்டைல் பெருகிவிட்டது.... சூப்பர் மார்க்கெட்டுக்கு மட்டுமல்ல துணி கடைகளுக்கு போனால் கூட எடுத்து பார்க்கும்போதே கூடவே வந்து கனிவாக கூட பதில் சொல்வதில்லை... சிடுசிடுன்னு தான் சொல்றாங்க.... கூட்டம் முண்டுகிறது..... செல்போன் உபயோகம் இப்ப ரொம்ப ரொம்ப அதிகமாகிவிட்டது ஊரில்..... சுத்தம் சுகாதாரம் மருந்துக்கு கூட காணோம் எங்கேயும்.... பஸ்ல போகவே பயமாக இருக்கிறது... எல்லாம் நீங்க சொன்ன அவஸ்தைகள் தான்...டாக்டரிடம் நார்மல் செக்கப்புக்கு தான் போனேன்... நீங்க சொன்னது போலவே லிஸ்ட் அடுக்கிவிட்டார்கள் இத்தனை டெஸ்ட் எடுக்கணும்னு. தலை சுற்றிவிட்டது.. வெளிநாட்டில் இருக்கும் நாமெல்லாம் நம் ஊரின் வளம், பழமை, அன்பு இப்படி தேடிக்கிட்டு ஓடுகிறோம். ஆனால் அங்க எல்லாமே உல்டாவாக இருக்கிறது.... எப்டிப்பா இது?? ஏன் இப்படி??? கேள்வி நமக்குள் எழுவது தான் மிச்சம்... பதிலில்லாத கேள்விகள் தான் இதெல்லாம்.. நொந்து போய் குவைத் வந்தாச்சு... என்ன சொன்னாலும் சரி.... நாம தான் இன்னும் மாறாம இருக்கோம்....


  பழைய படங்கள், பக்தி படங்கள் இதெல்லாம் இப்ப கிடைப்பதே சிரமமாக இருக்கிறது.... முரசு சேனலில் தினமும் மாலை 4.30க்கு தமிழ் படம் பழையது போடுகிறான். பார்த்து ஆறுதல் கொள்கிறோம்.... அம்மா ரொம்ப நாட்களாக கங்காகௌரி படம் கேட்டுக்கொண்டே இருக்காங்க.. உங்கள் யாருக்காவது கிடைத்தால் எனக்கு அனுப்புங்கோ ப்ளீஸ்.....


  அடேங்கப்பா நிஜம்மாவே இது மிராக்கிள் தான்.. தொலைத்த ஃப்ளாஷ் ட்ரைவ் கிடைத்தது... எத்தனை கவனப்பிசகு.... நாம இருக்கும் அவசரத்தில் எங்கு சென்றாலும் எதாவது ஒன்னு விட்டுட்டு வரணும் என்பது விதி போலிருக்கு... இதே கதை தான் எங்களுக்கும்... நல்லவேளை.... இத்தனை விஷயங்கள் அதுவும் முக்கியமான விவரங்கள் அடுக்கிய ஃப்ளாஷ் பத்திரமா திரும்ப கிடைச்சிருக்கு.. நீங்க செய்த நல்லதெல்லாம் மொத்தமா உங்களை இப்படி காப்பாத்தி இருக்கு அப்பாதுரை.... கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்கலை தானேப்பா?

  சிறுகதை போட்டியில் நீங்க பெற்ற பரிசுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா... பரிசு மட்டுமல்லாது வீட்டுக்கு அன்பு வற்புறுத்தல் செய்து உங்களுக்கு விருந்தோம்பல் மட்டுமல்லாது நீங்கள் விரும்பிய புத்தகங்கள் அனைத்தும் கொடுத்த அந்த முகம் தெரியாத தம்பதியருக்கு என் மனம் நிறைந்த நன்றிகளை சொல்லிருங்கப்பா...

  பதிலளிநீக்கு
 22. திராட்சை தோட்டங்கள் மட்டுமல்ல நிறைய தோட்டங்கள் இருக்கும் இடமே தெரியாம போச்சு... எல்லாம் நீங்க சொன்னது போல கான்க்ரீட் கட்டிடங்களா முழித்துக்கொண்டு நிற்கிறது....ஹலீம் நா என்ன?? அது சாப்பிட்டா எடை கூடுமா? அச்சச்சோ எடை குறைய எதுனா சாப்பிட்டு சொல்லக்கூடாதா நீங்க? அதென்னப்பா புல்லாரெட்டி இனிப்பு காரவகைகள்... நான் சாப்பிட்டதே இல்லையே :(

  ஆமாம் ஏர்ப்போர்ட்ல இது ஒரு அவஸ்தை எக்ஸஸ் லக்கேஜுக்கு போராடினீங்களா... ஹூம்... இவ்ளவு பயங்கரமாவா இருப்பாங்க ஜனங்க? புத்தகங்களையும் புல்லாரெட்டி இனிப்பு கார வகைகள் இவ்ளோ வேகமா திருடி இருக்காங்களே :( இன்னும் கவனமா இருக்கணும் நாம அப்டின்னு சொல்லுது உங்களோட இந்த பகிர்வு....

  இங்கே வெளிநாட்டில் வசிப்போர் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து மனம் சோர்ந்து எப்படா சொந்த ஊர் போவோம்னு காத்திருந்து போனால் இப்படி எல்லாம் எக்ஸ்ப்ரியன்ஸ் கிடைத்தால் ஊருக்கு போகும் ஆசையே விட்டுப்போகும்னு நினைத்தால் ஹுஹும் மனசு அழிச்சாட்டியமா மறுபடி எப்ப லீவ் கிடைக்கும் போவோம்னே காத்திருக்கும்...

  உங்க பகிர்வு படிக்கும்போது நீங்க போன இடத்துக்கெல்லாம் எங்களையும் கைப்பிடித்து அழைத்து சென்றது போல, நடந்த சம்பவங்களை எல்லாம் நேரில் இருந்து கண்டது போல இருந்தது என்றால் அது மிகையில்லை அப்பாதுரை...

  அதென்ன எங்க கிட்ட எல்லாம் எப்பவும் சந்தோஷமா பதிவு போடும் நீங்க ஏர்ப்போர்ட்ல லக்கேஜ் பிரச்சனைக்காக சண்டை போட்டீங்களா?? ஹுஹும் நம்ப முடியலையே.... கோபம் கூட வருமா என்ன? சரி சரி அடுத்த முறை நீங்க ஊருக்கு நாங்களும் போகும்போதே இந்தியா போனீங்கன்னா நாங்களும் வரோம்பா... மறக்காம இனிமே ஃப்ளாஷ் ட்ரைவ் பத்திரமா வைச்சுக்கோங்க....

  ரசிக்கவைத்த உங்களுடனே எங்களையும் பயணிக்கவைத்த அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அப்பாதுரை....

  அடுத்து எப்ப ஊருக்கு போறீங்க? :)

  பதிலளிநீக்கு