2012/08/13

நட்புக்கு நன்றி    மீப இந்தியப் பயணம் எதிர்பாராமல் தொடங்கி அவசரமாக முடிந்தது. பல பதிவுகளுக்கானக் கருப்பை. இப்போதே சொல்லிவிடுகிறேன்.

முன்பு சந்தித்த அல்லது அறிமுகமான பதிவர்கள் பலருடன் இந்தமுறை பேசக்கூட முடியவில்லை. புதிதாகப் பலரைச் சந்தித்தேன். இந்த நட்பை எப்படி வளர்க்கப்போகிறேன் என்ற அச்சம் ஒரு புறம் இருந்தாலும் முதலடி வைத்ததில் கொஞ்சம் நிறைவு.

சுந்தர்ஜி, கணேஷ் இருவரும் ஒன்றைப் பலவாக்கும் வித்தை தெரிந்தவர்கள். ஒருவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பில் பலரைச் சேர்த்து அந்தக் குறிப்பிட்ட மாலைகளை மறக்கமுடியாதபடி செய்தவர்கள்.

அடுத்தவரைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் வித்தை எனக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்திருந்தேன் - மோகன்குமார் இதில் விற்பன்னர் என்றுச் சடுதியில் புரிந்து கொண்டேன். விஷயம் தெரிந்தவர். அவருடைய வளர்ச்சி நெளிவு சுளிவு வேகம் எல்லாம் அவர் பைக்கைப் பார்த்ததும் புரிந்தது :-) "ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வரவா?" என்ற கேள்வியை அடக்கப் பெரும்பாடானது.

கண்ணதாசன் பற்றி ரமணியைப் பேசவிட்டு நாள் முழுதும் அலுக்காமல் கேட்கலாம். சொந்தத்துக்கும் பந்தத்துக்கும் வேறுபாட்டை இத்தனை நாள் பாட்டாகக் கேட்டிருந்தாலும் ரமணி அதே வரிகளைச் சொன்னபோது தான் புரிந்தது. கண்ணதாசன், வாலி, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் என்று இவர் பேசப்பேச 'இன்னும் இன்னும்' என்று கேட்கத் தோன்றியது. வயதாகி விட்டது என்ற உணர்வும் :-).

பத்மா சற்று ஆழமான கருத்துக்களை இயல்பாக almost அலட்சியமாகப் பேசுகிறார். மற்றப் பதிவர்கள் சேருமுன் கிடைத்த சில நிமிடங்களின் தனிமையை, போகன் பற்றிப் புறஞ்சொல்லிக் கழித்தோம்.

தன்னுடைய படைப்புகளைப் போலவே அமைதியாக, தீவிரக் கவனத்தோடு இருக்கிறார் மாதங்கி, ஒன்றிரண்டு கருத்துக்கள் சொன்னாலும் says what matters.

எஸ்.வி.வேணுகோபாலன் சிறிய நகைச்சுவை இயந்திரம் ஒன்றை உள்ளுக்குள் புதைத்து வைத்திருக்கிறாரோ என்ற ஐயம் எனக்கு அடிக்கடி வந்து போனது. சாதாரண கருத்தைச் சொன்னாலும் உடனே நகைச்சுவை கலந்து பதில் சொல்கிறார் - நாகேஷின் timing. நீங்கள் blog எழுதவில்லையா என்று கேட்டதற்கு, "நேரமுமில்லை, சாரமுமில்லை" என்கிறார்.

சாதனைகளை வியப்பதா அல்லது அவையடக்கத்தை வியப்பதா என்று எண்ண வைத்தவர் கதிர்பாரதி.

ஜெயகாந்தனைச் சந்திக்கிறேனோ என்ற முதல் பார்வையின் ஐயத்துக்குக் காரணமானவர் தஞ்சாவூர் கவிராயர். சமீபத்தில் ஒரு சின்னத்திரைப்படத்தில் தன்னுடைய அந்தத் தோற்றம் காரணமாகவே ஒரு எழுத்தாளர் வேடத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பற்றிச் சொன்னார். அந்தப் படத்தை கலைஞர் டிவிக்காக இயக்கிய ராஜகுமாரன், குடும்பத்துடன் வந்திருந்தது வரமாக அமைந்தது. பத்மா, நான், ராஜகுமாரன் - எங்களுக்கிடையே இருக்கும் ஒரு சிறிய நைலான் நூலிழைப் பிணைப்பு புரிந்தபோது மூவருமே வியந்தோம்.

கவிராயர், வாசன், ரமணி, வேல்கண்ணன், சுந்தர்ஜி போன்றவர்கள் பேச்சைக் கேட்கையில், அவர்களுடையத் தமிழ்ப் பிடிப்பும் தெளிவும் வியக்க வைத்தது. நான் தொலைத்தது புரிந்து வருந்தினேன்.

ஆர்வீஎஸ்சைக் கொஞ்சம் வேடிக்கை பார்க்க எண்ணினால், மனிதர் உண்மையிலேயே influential. பதிவர் சந்திப்புக்காக வந்து சிவப்பியை no parking பகுதியில் ஜாலியாக நிறுத்திவிட்டு எங்களுடன் இரண்டு வகை சுண்டல், காபி மற்றும் கலந்துரையாடல் என்று நேரத்தைக் கழித்தவர், சிவப்பியைக் கவர எண்ணியக் கார்பொரேஷன்/காவல் ஆட்களை 'நான் யார் தெரியுமா?' பாணியில் விரலைவிட்டு ஆட்டி, நொடிகளில் சிவப்பியை மீட்ட சுந்தரபாண்டியனானார். நானும் சுந்தர்ஜியும் எங்களுடைய சொந்த மூக்கின் மேல் விரல் வைத்தோம்.

சந்திப்பு முடிந்து வீடு திரும்புகையில் வேல்கண்ணனுடன் செலவழித்த நிமிடங்கள் சுவையானவை. அவருடைய சமூக நோக்கும் வேகமும் தொற்றிக்கொண்டது.

இந்த முறையும் ஸ்ரீராம் வீட்டில் விருந்து - விடமாட்டார். சாப்பிட்டபடியே கொஞ்சம் புத்தகங்கள், சென்னைக் கல்லூரிகளில் இடம் பிடிக்கும் வித்தை, பதிவர்கள் என்றும் கொரித்தோம்.

மோகன்ஜியைச் சந்திக்க முடியாமல் போகுமோ என்றுக் கலங்கியபோது சுந்தர்ஜி மீண்டும் ஆஜராகி மந்திரம் போட்டார். எனக்காக ஹைதராபாத் வந்து மோகன்ஜியைச் சந்திக்க வைத்தார். மோகன்ஜி அட்டகாசமாகச் சமைக்கிறார் (என்னுடைய நளகர்வம் அடங்கிப் பொடியானது). வயிற்றுக்கு நிறைய ஈந்துவிட்டு செவிக்குத் தாவினோம். குடும்பம், கலை, இலக்கியம், 'இலக்கியக் காவலர்'களின் போலித்தனம், சினிமா, பொருளாதாரம், ரியல் எஸ்டேட், அரசியல், அகநானூறு, ஐயப்பன், அழகானப் பெண்கள் என்று நிறையப் பேசினோம். அவர் வீட்டில் கழித்த நாள் சுவாரசியமானது, சுவையானது. ஒரு பிரபல குணச்சித்திர நடிகரைப் போல் பேச்சும் மேனரிசமும் மோகன்ஜிக்கு இருப்பதாகத் தோன்றியது - நடிகர் பெயர் இதோ நாக்கு நுனியில் இருக்கிறது.

'இருபுளிக் குழம்பு' என்ற மறந்து போன உணவு வகை நினைவுக்குத் திரும்பக் காரணமானது காஸ்யபன் வீட்டு விருந்து. எழுத்துக் குடும்பம் என்றால் காஸ்யபன் குடும்பம் எனலாம். கொஞ்சம் அரசியல், சமூகம், பெரும்பாலும் புத்தகங்கள் எழுத்தாளர்கள் பற்றியே பேசினோம். நான் சற்றும் எதிர்பாராத விதத்தில் எனக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்து, ஒரு புத்தகக் கட்டும் பரிசாகக் கொடுத்தார் - நசிகேத வெண்பா எழுதியதற்காக. i choked. காஸ்யபன் அவர்களைச் சந்தித்தது மறக்க முடியாத நாள். நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

பெங்களூரின் நெரிசலில் மணிக்கணக்காகச் சிக்கி எங்கே சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்றுக் கலங்கினாலும், ஜிஎம்பி அவர்களைச் சந்தித்தது நிறைவாக இருந்தது. அவர் வீட்டு விருந்து என்னை எங்கள் கிராமத்துக்கு அழைத்துச் சென்றது. உணவு முடிந்து நிறையப் பேசினோம். தன் பதிவுலகக் கோட்டையைச் சுற்றிக் காட்டினார். கலாசாரம், பதிவர்கள், விலைவாசி, பெங்களூர் என்று பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. திரும்பிச் செல்லும் வழியென்று அவர் விவரமாகச் சொன்னதைக் கொஞ்சம் வீம்புடன் உள்வாங்கிய டிரைவர், என்னை ஜலஹள்ளியிலிருந்து சர்ஜாபுர ரோடுக்குக் கவனமாக அழைத்துச் சென்றார் - கேரளா வழியாக.

பாலராஜன் கீதாவைச் சந்தித்தது மறக்க முடியாத இன்னொரு நிறைவு. சுவாரசியமான மனிதர், ரசிகர், தம்பதி.

எங்கள் குடும்பப் பதிவர்களான கீதா சந்தானம், ஸ்ரீராம் இருவரையும் சந்திக்க முடிந்ததும் ஆச்சரியம். ஹி. நாங்கள் சென்னை வரும் நேரும் அபூர்வமாக இணைந்தது காரணம்.

சந்திக்க முடியாமல் போனவர்களில் சிலருடன் தொலைபேச முடிந்தது - ஜீவி, சமுத்ரா, சிவகுமாரன், கௌசல்யா ராஜ், கீதா சாம்பசிவம் (சுப்பறியும் தாம்பு என்ற விருதை இவருக்கு வழங்கிக் களிக்கிறேன். 'எந்த ஊர்ல இருக்கீங்க?' என்றக் கேள்விக்கான சாதாரண விடையிலிருந்து ஒரு மொகஞ்சதாரோவை அசாதாரணமாகப் பெயர்த்தெடுத்தார்). சாந்தினி, போகன், ஷைலஜா, கௌதமன் நால்வருக்கும் தலா ஒரு ஹலோ போட்டதோடு சரி. சத்ரியன் சென்னையில் வசிக்கவில்லை என்று அவருடன் பேசியதில் தெரிந்து கொண்டேன்.

பாலராஜன் கீதா, மோகன்குமார், ரமணி, கணேஷோடு புகைப்படம் எடுக்க மறந்தது ஒரு குறை. "தமிழ்மணம் #1 பதிவரைச் சந்தித்தீர்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி?" என்று யாராவது கேட்டால் என்ன சொல்வது?

தமிழகத்தில் வசித்தால் இது போல் அடிக்கடி சந்தித்துக் கொஞ்சம் intellectual மேய்ச்சலுக்கான வழி கிடைக்கும். யோசிக்கிறேன்.

26 கருத்துகள்:

 1. இனிய சந்திப்பின் இனிமையான பகிர்வு...

  இனி யாரும் கேள்வி கேட்க முடியாது... ஹா.. ஹா..

  பகிர்வுக்கு நன்றி சார் !

  பதிலளிநீக்கு
 2. இத்தனை பதிவர்களை நீங்கள் சந்தித்துள்ளீர்கள். சென்னையில் இருந்தும் இவர்களில் பாதி பேர் கூட நான் சந்தித்ததில்லை. அதனால் சென்னையில் இருந்தால் எல்லாரையும் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். தூர இருந்து வருவதால் தான் இவ்வளவு மெனெக்கெட்டு அனைவரையும் பார்த்துள்ளீர்கள் அருகில் இருந்தால் எப்போ வேண்ணா பாத்துக்கலாம் என்று பார்க்கவே மாட்டோம் !

  //அவருடைய வளர்ச்சி நெளிவு சுளிவு வேகம் எல்லாம் அவர் பைக்கைப் பார்த்ததும் புரிந்தது :-) "

  இது புரியலை. நம்ம பைக் ரொம்ப சுமாரா தானே மெயிண்டயின் பண்றேன். நீங்க கார் ஓட்டி ஓட்டி மட்டும் பழகியதால் நம்ம பைக் பார்த்து கொஞ்சம் ஆர்வமா இருந்திருக்கலாம் !

  இத்தனை பேருக்கும் மறக்காமல் அவர்கள் ப்ளாக் லிங்க் இந்த பதிவில் குடுத்துருக்கீங்க சான்சே இல்லை !

  உங்களுடன் மறுபடி ஒரு நாள் சந்தித்து பேசணும் என நினைதேன் முடியாமல் போச்சு அடுத்த முறை இன்னும் கொஞ்ச நேரம் உங்களுடன் பேச சந்தர்ப்பம் வாய்க்கணும்

  பதிலளிநீக்கு
 3. //தமிழ்மணம் #1 பதிவரைச் சந்தித்தீர்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி?" என்று யாராவது கேட்டால் என்ன சொல்வது?//

  தமிழ் மணத்தில் #1 பதிவர் யார் என பத்து இருபது பேர் தான் சார் கவனிக்கிறாங்க. அது பெரிய விஷயமா தெரியலை. அது ஒரு டார்கெட். அதை அடையும் வரை மட்டுமே அந்த சுவாரஸ்யம் இருக்கும். நிச்சயம் இது யாருக்கும் நிரந்தரமில்லை. #1 மாறி கிட்டே தான் இருக்கும்

  தொடர்ந்து எழுதுவதால் நிறைய பேரின் மனதில் இருக்கோம். காலை/ நள்ளிரவு என - ஒரு நாளின் எந்த ஒரு நேரத்திலும் நம் பதிவை குறைஞ்சது அஞ்சு பேராவது ஆன்லைனில் படிச்சுகிட்டு இருக்காங்க. இது தான் பெரிய விஷயமா தெரியுது.

  பதிலளிநீக்கு
 4. //அது ஒரு டார்கெட். அதை அடையும் வரை மட்டுமே அந்த சுவாரஸ்யம் இருக்கும்
  உண்மை. ஒருவகையில் எல்லாமே அப்படித்தானே மோகன்குமார்? இலக்கை அடைய எடுக்கும் முயற்சியும் தக்கவைப்பதற்கான உழைப்பும் தான் சாதனை, இலக்கு வெறும் தடயம். எல்லாருக்கும் அந்த முயற்சியும் உழைப்பும் வருமா என்பது ?.
  தமிழ்மணமோ எதுவாக இருந்தாலும் மேல்தட்டு என்பது பெருமைக்குரியதே.

  வெளியூரிலிருந்து வருவதால் இது பெரிதாகத் தோன்றினாலும் உள்ளூரில் பதிவர் சந்திப்புகள் இயல்பாக நடப்பதாகவே அறிகிறேன். நடேசன் பூங்காவில் மாதமொருமுறை சந்திப்புகள் நிகழ்த்துவதாக சுந்தர்ஜி சொன்ன ஞாபகம். நீங்கள் பதிவர் திருவிழா அறிவித்திருக்கிறீர்கள். ஈரோடு கோவை என்று அங்கங்கே பதிவர் சந்திப்புகள் நடக்கின்றன. தெலுங்கில் பதிவெழுதும் நண்பன் ஒருவன் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு பற்றிப் பொறாமையாகப் பேசினான்.

  //இது புரியலை. நம்ம பைக் ரொம்ப சுமாரா தானே மெயிண்டயின் பண்றேன். நீங்க கார் ஓட்டி..
  என்ன இப்படி சொல்லிட்டீங்க? பைக் சுறுசுறுப்பு, கார் மெதுக்கு. பைக் டெபனேர், கார் வெறும் ஏர். பைக் ஆகஸ்டு 15, கார் அதற்கு முன். பைக் தனியாள், கார் குடும்பஸ்தன். பைக் ரஜினிகாந்த், கார் பிற நடிகர்கள். பைக் ஒரு கலாசாரம், அதைக் கார் நெருங்கக் கூட முடியாது.
  என்றைக்காவது ஒரு நாள் பழைய யெஸ்தியைப் புதுப்பித்து தமிழ்நாட்டை சுற்றிவரும் கனவை அப்படியே பத்திரமாக வச்சிருக்கேன்.

  பதிலளிநீக்கு
 5. அழகான சந்திப்புகள்.. அருமையான பகிர்வு

  பதிலளிநீக்கு
 6. சந்தோஷமாவும் பொறாமையாவும் இருக்கு அப்பாஜி.நிச்சயமாய் எனக்கு இப்படியான கொடுப்பனவு வரப்போவதில்லை !

  பதிலளிநீக்கு
 7. ஏதோ வேலையாக வந்தீர்களா இதே வேலையாக வந்தீர்களா என்று நினைக்குமளவு இத்தனை பதிவர்களைச் சந்தித்துச் சென்றிருக்கிறீர்கள். மோகன் குமார் சொன்னதுதான் எனக்கும் தோன்றியது. நான் தஞ்சாவூரில் இருந்த காலங்களில் பெரிய கோவிலை மதித்ததே இல்லை. எப்போதாவது போவதோடு சரி. வெளியூரிலிருந்து வருபவர்கள் மாய்ந்து மாய்ந்து அரண்மனை, சரஸ்வதி மகால் என்று அலைந்து பார்ப்பார்கள். இது எந்த ஊருக்கும் பொருந்தும்! உள்ளூரில் இருப்பவர்கள் தமிழை நினைப்பதை விட வெளிநாட்டில் இருக்கும் உங்கள் போன்ற நண்பர்கள் தமிழை அதிகம் நினைக்கிறார்கள். தாயைப் பிரிந்த சேய் போல! பதிவர்கள் மாநாடு போடுவது வேறு. இது வித்தியாசமான மாநாடு, பதிவர்களைத் தேடித் தேடிப் பார்த்துள்ளது!

  'ஸ்ரீராம் வீட்டில் விருந்து'- நகைச்சுவையை ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 8. பட்டுசேலையின் ஒரு நுனியை மட்டும் காட்டுவதுபோல்
  உங்களை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளாமல்
  இருந்தீர்கள் எனப் புரிந்து கொண்டேன்

  நான் சட்டியை இவ்வளவு
  சுரண்டிக் காட்டி இருக்கவேண்டாமோஎனத் தோன்றியது
  தங்கள் சந்திப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது
  மீண்டும் சந்திக்க முடிந்தால் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்

  பதிலளிநீக்கு
 9. ஆஹா - உங்களின் இந்தப் பதிவில் இடம் பெறும் வாய்ப்பை இழந்து, அன்று வலம் வந்துவிட்டேனே!

  பதிலளிநீக்கு
 10. ஹைய்யோ!!!!!

  ஸ்ரீராம் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு!!!!

  //ஏதோ வேலையாக வந்தீர்களா இதே வேலையாக வந்தீர்களா //

  அதானே:-))))

  நியூசிக்குக்கிளம்பி வாங்க.... ஒன் டு ஒன் பதிவர் மாநாடு நடத்திப்பிடலாம்!!!!

  பதிலளிநீக்கு
 11. //நடேசன் பூங்காவில் மாதமொருமுறை சந்திப்புகள் நிகழ்த்துவதாக சுந்தர்ஜி சொன்ன ஞாபகம்.//

  நமக்கு இந்த தகவல்கள் வருவதே இல்லை. சுந்தர்ஜி நமக்கும் சந்திப்பு இருந்தா சொல்லுங்க. எல்லா முறையும் வர முடியாவிட்டாலும் சில முறையாவது வருவேன்

  பைக் Vs கார் பற்றி நீங்கள் சொன்னது சுவாரஸ்யம்
  ***
  எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் சென்னையில் இருந்தும் "சந்திக்கலாம்" என்று எழுதினால் பதிலே சொல்வதில்லை . அட போன் நம்பர் கேட்டா கூட தர மாட்டேங்கிறார். இது என்ன நியாயம் என நீங்களே கேளுங்க அப்பாஜி

  பதிலளிநீக்கு
 12. எகிப்தில் நடந்த புரட்சிக்கு "பதிவுலகம்" பெரும் பங்காற்றியதாகக் கூருவார்கள்! எனக்கு அது உடன்பாடல்ல! ஆனலும் சில நன்மைகளைச்செய்கிறது.! பல்லயிரம் மைல்களுக்கு அப்பால் சிககோ நகரில் வசிக்கும் அப்பாதுரை அவர்கள் இந்தக் கிழவனை சந்திக்க நாகபுரி வந்தது பதிவுலகம் கொடுத்த கொடை என்பதை நான் அனுபவிக்கிறென்! நாகபுரியில் அவருக்கு வேறேந்தப்பணியும் இல்லை! என்னைப் பார்க்க மட்டுமே வந்திருந்தார்! அப்பதுரை அவர்களே! என்னப் பெருமைப் படுத்தி விட்டீர்கள்!வாழ்த்துக்கள்!---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 13. அனைவரையும் சந்திக்க வேண்டுமென்கிற தங்களது ஆவல் பாராட்டுக்குரியது. எனக்கு இந்த பதிவினை படிக்கும் போது கணேஷ் சார் நினைவே வந்தது. சந்திப்பு என்றால் ஓடி வருவது அவரே.

  பதிலளிநீக்கு
 14. ஆசையும் பொறாமையும் கலந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது! பைக்கும் காரும்- ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 15. intellectual சந்திப்புகள்..

  மலர்ந்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 16. ஏதோ ஒரு சோம்பல் ஒரு வாரமாய் அப்பாஜி.

  இதுவரை பதிவர்களிலேயே சென்னை, ஹைதராபாத், நாக்பூர், பெங்களூர் என்று சூறாவளியாய் சுழற்றியடித்து தனித்தனியே அதிகம் பதிவர்களைச் சந்தித்த முதல் பதிவர் நீங்கள்தான் என்று சொல்லிவிடலாம். அசராமல் அசத்திட்டீங்க.

  உங்கள் பயணத்தின் முதல் பாதியை விட பரபரப்பாய் முடிந்தது மறுபாதி.

  பகிர்வின் சுகந்தத்தை சென்ற வழியெல்லாம் பரப்பி விட்டுப் பறந்துவிட்டீர்கள் அப்பாஜி.

  நடேசன் பூங்காவில் மாதமொருமுறை சந்திக்காலாமே என்று இந்த இரண்டாவது சந்திப்பில்தான் நினைத்தோம்.சுவர்களுக்கு வெளியிலும் செடிகொடிகளுக்கு அருகிலும்தான் நம் சந்திப்புக்கள் இருக்கும்.

  ஆகவே மூன்றாவது சந்திப்பு இந்த மாதம் நிகழும்போது யார்யாரையெல்லாம் தொடர்புகொள்ளலாம் என விரும்புகிறீர்களோ அந்த நண்பர்களெல்லாம் 9443227895க்கு குட்டிச் செய்தி அனுப்பலாம்.

  மோகன்குமார்!ஆர்விஎஸ் உங்களைத் தொடர்பு கொண்டு சந்திப்பு குறித்து அழைப்பதாகச் சொல்லியிருந்தார். மயிரிழையில்........
  பதிலளிநீக்கு

 17. நீங்கள் பெங்களூர் வந்தபோது என்னை சந்தித்தது எனக்கு நிறைவு தரவில்லை. என்னுடன் ஓரிரு நாட்களாவது தங்கி இருந்திருக்க வேண்டும். வந்தீர், கண்டீர், வென்றீர், சென்றீர், எல்லாமே கனவுபோல்தான் தெரிகிறது. இருந்தாலும் அவ்வளவு இடர்பாடுகளுக்கு இடையிலும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 18. உங்கள் கருத்து எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது. email அனுப்பிவிட்டேன்.மிக்க நன்றி!
  -Hema

  பதிலளிநீக்கு
 19. I must thank Sundarji for organizing the Chennai Meet @ Natesan Park! It was a pleasure to have you there! It was amazing to read that you had traveled so much to meet so many bloggers! Hats off!

  பதிலளிநீக்கு
 20. உங்களைச் சந்தித்து உரையாடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அந்த தினம் என்றும் பசுமையாய் நினைவிலிருக்கும். உங்களால் எனக்குக் கிடைத்த சுந்தர்ஜியின் அறிமுகம் மிகப் பெரிய வரம் என்றே கருதுகிறேன். யாவற்றுக்கும் நன்றி அப்பா ஸார்.

  பதிலளிநீக்கு
 21. துரை சென்னை வந்தும் ,எனக்குத் தொலைப் பேச எண்ணவில்லையா:(

  பரவாயில்லை ஔத்த தடவை சிகாகோ வரும்போது உங்கவீட்டு வழியாவே போவேன்,. வரமாட்டேன்:)
  ஃப்ளாஷ் ட்ரைவ் கிடைத்தது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 22. இத்தனை பதிவர்களை நீங்கள் சந்தித்துள்ளீர்கள். சென்னையில் இருந்தும் இவர்களில் பாதி பேர் கூட நான் சந்தித்ததில்லை. அதனால் சென்னையில் இருந்தால் எல்லாரையும் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். தூர இருந்து வருவதால் தான் இவ்வளவு மெனெக்கெட்டு அனைவரையும் பார்த்துள்ளீர்கள் அருகில் இருந்தால் எப்போ வேண்ணா பாத்துக்கலாம் என்று பார்க்கவே மாட்டோம் !//

  மோகன்குமார் சொல்வதே சரி, எனக்கும் இத்தனை பதிவர்களைத் தெரியாது என்பதோடு பலரைப் பார்த்ததும் இல்லை. ஏன் மோகன்குமாரின் பதிவுக்குக் கூட எப்போவோ தான் போக முடியுது! அது எப்படி உங்களாலே எல்லாரையும் பார்க்க முடிந்ததோடு, எல்லார் பதிவுக்கும் போகவும் முடியுதுனு எனக்கு இன்னமும் ஆச்சரியம் தான்.

  இவ்வளவு பேரைப் பார்த்துட்டு, இங்கே வராமல் போயிட்டீங்க! :(((( ஆனால் உங்க மண்டையை இங்கே உருட்டிட்டு இருந்தோம்.

  பதிலளிநீக்கு
 23. எனக்கு கருத்தெல்லாம் எழுத தோணல சார்.அன்றைய சந்திப்பின் தித்திப்பு இன்னும் நாவில் ..பத்து கிலோ சாப்பிட்டு எடை கூடிய நீங்கள் நான் அன்போடு உபசரித்த ஐஸ் காண்டி மட்டும் வேண்டாம்னு சொல்லிடீங்க ...

  still couldn't believe the amazing wonderful link we share ..so happy appadurai sir

  பதிலளிநீக்கு
 24. படித்துக் கொண்டே வரும் போது , உங்கள் லிஸ்டில் நான் இல்லையோ என்ற கவலையும், பயமும் சூழ்ந்து கொள்ள கண்ணோரம் இரு துளிகள் முட்டிக் கொண்டு நின்றன. பெயரைக் கண்டதும் சட்டென்று உருண்டன கன்னத்தில் --- மகிழ்ச்சியில் என்று சொல்லவும் வேண்டுமோ?

  பதிலளிநீக்கு
 25. இனிய சந்திப்புகள். இதமான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 26. பெயரில்லாசெப்டம்பர் 05, 2012

  வணக்கம் அப்பா சார்.[இந்தப் பெயர் நல்லாருக்கே!]மேடையில் கடைசியில் பேசுபவர்களுக்கு ஒரு வசதி.நிறைய கலந்து,கொஞ்சம் நம்ம சொந்த சரக்கையும் சேத்து அடிக்கலாம்.நடேசன் பூங்கா சந்திப்பர்[மேய்ப்பர் மாதிரி!]களில் அல்லது வலைஞர்களில் நான் ஆகக்கடேசி கருத்தன்[கருத்தைச் சொல்பவன் கருத்தன்! சாரி கொஞ்சம் ஓவர்.]என நினைக்கிறேன்.மணிரத்னச் சுருக்கமாகச் சொல்வதெனில், “நல்லாருந்து.ரொம்ப நல்லாருந்து! நான் நடேசன் பூங்காவின் தின அதிகாலை நடையாளி.அங்கு ரொம்ப எச்சரிக்கையாய் சக நடையர்களை தவிர்த்து விடுவேன்.எனது அதிகாலைத் தனிமைக்கு அவர்களில் எவரேனும் பகைவர்கள் ஆகிவிடுவார்களோ என்ற பயம்தான்.ஆகவே தருக்களும்,புற்களும்,குருவிகளும், அணில்களும் மட்டுமே என் மொவ்னமான சினேகிதர்கள்.தினம் குட் மார்னிங் சொல்லும் இன்றுவரை பெயர் தெரியாதவரும்,எழுத்தாளர் இரா.முருகனும் மட்டும் விதிவிலக்கு.மனம் பிறழ்ந்த இன்னொரு தோழன் உண்டு.அவனுக்கும் எனக்கும் கூட விரல்களின் உரையாடல் மட்டுமே.தினம் ஒரு டீக்கு 5 ரூபாய் கொடுப்பேன்.இப்படியான நடேசன் பார்க்கில் அன்று மாலை ஒரு நட்புத் திருவிழாவே நடத்தி அசத்தி விட்டார்,நண்பர் சுந்தர்ஜீயார்![ஜீயர் மாதிரி உயர்வு நவிற்சி!]இன்னும் வீச பயந்து இணையக்கடலில், வலைபோடாதவனுக்கு இது பாக்கியம்.ஆம்,அன்று உங்களையெல்லாம் பார்த்ததால் நான் பாக்கியவான்!இதை ஆற்றுப்படுத்திய சுந்தர்ஜிக்கு நன்றி.இதோ மின்சாரம் தடை படும் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்...இந்த பாக்கியவானின் பாக்கிப் பகிர்வு இன்னொரு கருத்திடுகையில்....நேசமிகு எஸ்.ராஜகுமாரன் 9840124602 thamizkkuudam@gmail.com

  பதிலளிநீக்கு