.
காரணம் காரியம் எல்லாமே இணைந்திருக்கிருன்றன என்கிறார்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத சூட்சுமம் என்கிறார்கள். இப்பிறவியின் நடப்புகள் அனைத்தும் முற்பிறவிச் செயல்களின் விளைவுகள் என்றும் சொல்கிறார்கள். முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்கிறார்கள். பிற்பகல் செயின் எப்போது விளையும் என்று ஏனோ சொல்லாததால் நிறைய பேர் பிற்பகல் செய்கிறார்கள். எனக்கு அது தோன்றாமல் எல்லாவற்றையும் முற்பகலிலே செய்து பிற்பகலில் அனுபவிப்பது என் வாழ்வின் வாடிக்கை ஆகிவிட்டது.
எல்லாம் கடவுளுக்குத் தெரியும் என்கிறார்கள். கடவுளை விட்டால் யாருக்காவது தெரியுமா என்று கேட்டால் கர்மாவுக்குத் தெரியும் என்கிறார்கள். கர்மா அறியாதது எதுவும் இல்லை. நம் செயல்கள் எதுவுமே அழிவதில்லை. எல்லாவற்றையும் பிறவி வாரியாகக் கர்மா பதிவு செய்து கொள்கிறது என்கிறார்கள். அண்டத்தின் முதல் blockchain கர்மா தான் போலிருக்கிறது. அத்தனை செயல்களின் முனைப்புகளும் பாதிப்புகளும் இந்தக் கர்மா blockchainல் பதிவு செய்யப்படுகின்றன. பிறகு அதிலிருந்து அவரவருகேற்ற மாதிரி கர்மா data mining நடத்தி விளைவுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. எங்கே எது எப்படி இணைகிறது.. எத்தனை விலகல்களில் இணைகிறது.. என்பது கர்மா அல்லது கடவுள் அறிந்த புதிர்.
கடவுளை அவ்வப்போது சந்தித்திருக்கிறேன். அந்தக் சந்திப்புகளினாலேயே கடவுள் இல்லை என்ற எண்ணம் எனக்குப் பலமாகத் தோன்றும். சரி, கலர்சட்டை விவாதம் இங்கே வேண்டாம். 'என்னடா இவன் கமல்ஹாசன் மாதிரி ஒரு தினுசா பேசுறானே?' என்றும் நினைக்க வேண்டாம். பல நேரம் நான் சொல்வது பலருக்கும் புரியும். எனக்கும் கடவுளுக்கும் நேரடி மற்றும் மறைமுக பிணைப்புகள் நிறைய உண்டு. குறிப்பாக பிள்ளையார், ராமர். ஆம். மூஷிக வாகனன். மோதக ஹஸ்தன். ரகுவீரன். ரங்கபுர விகாரன். அவர்களே தான். நிறைய சம்பவங்கள். நிறைய புள்ளிகள். முன்பெல்லாம் புள்ளிகள் தெரியும். இப்போது புள்ளிகள் இணைந்த கோலம் மட்டுமே புலப்படுகிறது. புள்ளிகள் புரிகின்றன. கோலம் இன்னும் புரிந்த பாடில்லை. இந்தக் கதையை எழுதினால் ஒருவேளை எனக்கு விவரம் புரியக்கூடும் என்பதனால் எழுதுகிறேன். எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா.
நான் எழுத ஒரு நியாயம் கற்பிக்க முடியுமே தவிர நீங்கள் படிக்க அல்ல. அதனால் உடனே இந்தக் கதையை விட்டு பக்கத்து பிலாக் போனால் வருந்த மாட்டேன். இந்தக் கதையை இனித் தொடர்ந்து படிப்பதிலும் ஒரு சிறு சங்கடம் இருக்கிறது. கதையா? நிஜமா? என்ற ஐயம் எழலாம் (அய்யம் என்று எழுத வேண்டுமோ?). நிஜம் என்பது நிகழ்வுப் புள்ளிகள் இணைந்த கோலம். கதை என்பதும் அதானே? நிகழ்வுப் புள்ளிகள் கற்பனையில் இருந்தால் என்ன, கண்ணெதிரே நடந்தால் என்ன? கண்ணெதிரே நடப்பதும் இன்னொருவருக்குக் கற்பனையாகலாமே? எனக்கே கூட அந்தச் சந்தேகம் அடிக்கடி தோன்றும். இந்த நிகழ்வுகள் எனக்கு இந்த உலகில் நடக்கிறதா? அல்லது இன்னொரு இணையுலகில் இதே நேரம் நடக்கிறதா? எது கற்பனை? எது நிஜம்? இதுவா, அதுவா? இங்கா அங்கா? இத்தகைய இணையுலகக் குழப்பங்கள் சில நேரம் வழி நடத்திச் செல்கின்றன. சில நேரம் வழி கடத்திச் செல்கின்றன. என்ன நான் சொல்வது?
இந்தக் கதை என் கடவுள் சந்திப்புப் புள்ளிகளைத் தழுவியது. தழுவியது என்றதும் நினைவுக்கு வருகிறது. தப்பித் தவறி இந்தக் கதையை இனித் தொடர்ந்து படிப்பவர்களுள் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் இருந்தால் ஆங்காங்கே உரசலான விஷயங்கள் தென்படலாம். கவனம். யூட்யூபிலும் இன்னொரு ட்யூபிலும் இல்லாத உரசலா என்று இக்கட்டான எதிர்கேள்வி கேட்டால், கேசவா நாராயணா மாதவா கோவிந்தா விஷ்ணு மதுசூதனா த்ரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ருஷீகேசா பத்மநாபா தாமோதரா, ஏழை நான் என் செய்வேன்? ஊரிலேன். உறவிலேன். உன் பாதமன்றி ஒரு பற்றிலேன்.
புள்ளி.
அவர் பிள்ளையார் ரசிகை. வீட்டில் நூற்றுக்கணக்கில் சிறிதும் பெரிதுமாக விதம் விதமான பிள்ளையார் சிலைகள் வைத்திருப்பார். என் மனைவிக்கு உறவு. அதனாலேயோ என்னவோ அவரை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. கர்வமும் அகங்காரமும் தேவையில்லாத நீள் மூக்கும் கொண்டவர் என்பது என் அபிப்பிராயம்.
திடீரென்று ஒரு நாள் உறவினர் "சாகக் கிடக்கிறார், வந்து பார்க்கச் சொல்கிறார்" என்று என் மனைவி வற்புறுத்தியதால் சென்று பார்த்தேன். அடுத்தவரைப் பேச விடாமல் தானே பேசிக்கொண்டிருப்பவர் இன்று பேசத் திணறுவது எத்தனை முரணான விந்தை என்று எண்ணினாலும் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது.
என் கைகளைப் பிடித்துக் கொண்டார். பிறகு தன் தலையணையின் கீழிருந்து பிள்ளையார் சிலையொன்றை எடுத்து என் கையில் திணித்தார். வித்தியாசமான குட்டிப் பிள்ளையார். ராமர் போலக் கையில் வில்லேந்திய பிள்ளையார். ராமனுக்கு முன்னால் சிவதனுசை அலட்சியமாக எடுத்தாண்டவர் பிள்ளையார் என்று படித்திருக்கிறேன். பிள்ளையாருக்கு பட்டையாய் திறுநீறு பூசிப் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்தக் குட்டிச் சிலையின் நெற்றியில் திருமண் காப்பிட்டிருந்தார்கள். நாமம் போலவும் இருந்தது. சூலம் போலவும் இருந்தது. அதிசயம். வில்லேந்திய வைஷ்ணவப் பிள்ளையாரைப் பார்ப்பது இதுவே முதல்.
சிலையைப் பெறத் தயங்கிய என்னை அவர் விடவில்லை. கண்களால் எதோ சொல்ல வந்துத் திணறி விசுக் விசுக் என்று கழுத்தில் நரம்புகள் துடிக்க என் கைகளில் பிள்ளையாரை அழுத்தியபடியே காலமானார்.
திடுக்கிட்டேன். என் கைகளில் ஒருவர் சாவதும் இதுவே முதல். சாகிறவர் நம் வலது கையைப் பிடித்துக் கொண்டு செத்தால் ஆவியாகவோ வேறே வடிவிலோ நம்மைத் தொடர்ந்து வருவார் என்று பம்மல் பூசாரி தணிகாசலம் ஒரு முறை சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது. சட்டென்று பார்த்தேன். என் வலது கையை அவர் வலதுகை பிடித்துக் கொண்டிருந்தது. பதட்டத்துடன் விலக்கிக் கொண்டேன். ஆச்சரியமாக இருந்தது பிணப்பிடியின் வலிமை. வீட்டுக்கு வந்ததும் அவர் கொடுத்த பிள்ளையாரை எங்கேயோ வைத்தேன். அத்தோடு மறந்தும் போனேன்.
புள்ளி.
தற்செயலாகக் கிடைத்த 'நினைத்தது பலிக்கச் செய்யும்' மந்திர தாயத்தை கையில் பிடித்து நண்பர்கள் ஆளுக்கொரு வேண்டுதல் வைத்து மறந்த விஷயம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். என்றாலும் நடந்தது என்னவோ இது தான்.
மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என் அப்பா பிள்ளையாருக்கு விசாலமாகப் பூஜை செய்வார். சொத்தெல்லாம் போனபின் வேலை தேடி சென்னை வந்து காசில்லாமல் சென்னை மெரீனா பீச்சில் நடந்த போது யாரோ சாமியார் கொடுத்த சிறிய வெள்ளிப் பிள்ளையார் என்பார். அந்தச் சிலைக்கு சந்தனக் காப்பு சார்த்தி அட்டகாசமாக அலங்கரித்து ஒரு அஷ்டோத்திரப் புத்தகத்தைப் படித்து அர்ச்சனை செய்வார். மற்ற நாட்களில் ஒன்றுக்கும் உருப்படாத என் அப்பா மாதத்தில் இந்த ஒரு பூஜையை மட்டும் பந்தாவாகச் செய்வார்.
மறு நாள் பூஜைக்கு உதிரிப்பூ வாங்கிவரச் சொல்லி காசும் கொடுத்திருந்தார். பம்மல் மலையுச்சியில் தாயத்து விவகாரத்தில் பூ வாங்க மறந்தே விட்டது மட்டுமில்லாமல் காசையும் தொலைத்து விட்டேன். வீட்டுக்கு வரும் பொழுதே நேரமாகி விட்டது. காசு வேறே இல்லை. திரும்பி வரும் பொழுது கோகுலம் காலனியில் மாமாவிடம் ஒரு ரூபாய் கேட்டு வாங்கி வந்து வைத்து விடலாம் என்ற எண்ணத்துடன் சட்டென்று என் அப்பா பர்சிலிருந்து ஒரு ரூபாயைத் திருடிக் கொண்டு ஓடினேன். இரட்டைப் பிள்ளையார் கோவிலருகே இருக்கும் பூக்கடை எல்லாம் அடைத்து விட்டன. என் அப்பாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. முதலில் அடி. அப்புறம் பேச்சு. அடியென்றால் அப்படி ஒரு அடி. அர்த்தமே இல்லாமல் அடிப்பார். இப்போது காரணம் வேறு கிடைத்து விட்டதே? செத்தேன் என்று கிருஷ்ணா நகருக்கு ஓடினேன். பிள்ளையார் கோவில் அருகே பூக்கடை உண்டு. அங்கேயும் மூடிவிட்டார்கள். "பூ இல்லே, பலாப்பழம் கீது, வாங்கிக்கிறியா?" என்றாள் க்ருஷ்ணா நகர்க் கிழவி. இன்றைக்குப் பலிதான் என்று பதறி பிள்ளையாரைப் பார்த்து வேண்டிக்கொண்டே பல்லாவரத்துக்கு ஓடினேன். நல்ல வேளையாகக் கடை அடைக்கவில்லை. "ஒரு ரூபாய்க்கு உதிரிப்பூ குடுங்க" என்று பையில் கை விடுகிறேன்...
திக்கென்றது. கடைக்காரியிடம் நடந்ததைச் சொல்லி அழுது கடன் கேட்டேன். முதலில் முடியாது என்றவள் என்ன தோன்றியதோ ஒரு பெரிய பொட்டலம் நிறையப் பூ வைத்து என்னிடம் கொடுத்து, "போ ராஜா" என்றாள். தெருவின் அசிங்கம் பாராமல் சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்தேன். பூவை வாங்கிக் கொண்டு அழுது கொண்டே திரும்பி ஓடி வந்தேன். நேரமாகி விட்டது. இனி எப்படியும் அடி விழும். திரும்பும் வழியில் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டேன். 'அப்பனை அடிக்காமல் இருக்கச் சொல்லு, மாமியிடம் கேட்டு தேங்காய் உடைக்கிறேன்'.
கோகுலம் காலனி வந்த போது மாமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நைசாக மாமியிடம் ஒரு ரூபாய் கேட்டேன். மாமா காதில் விழுந்து விட்டது. "எதுக்குடா ஒரு ரூபாய்?" என்றார். சொன்னேன். "அப்பா வந்திருப்பா மாமா, அவசரமா ஓடணும்" என்றேன். "ரூபாலாம் வேண்டாம். அடிக்க மாட்டான். நடந்ததைச் சொல்லு" என்றார் மாமா. மாமியும் இனி பணம் தர மாட்டார். "இருடா.. சாப்டுட்டு போ. மாமாவை அழைச்சுண்டு போ.. நீங்க போய் சமாதானமா சொல்லிட்டு வாங்கோ.. குழந்தையை அடிக்கிறதாவது.. என்ன ம்ருகம்.. பயந்து போயிருக்கான் பாருங்கோ" என்றார். நான் சாப்பிடவில்லை. மாமாவும் வரவில்லை.
வீட்டுக்கு ஓடினேன். அப்பா குளித்துக் கொண்டிருந்தார். அவசரமாக பூவை பூஜை மேடையில் வைத்தேன். பர்சில் பணம் இல்லாததைப் பார்த்து விசாரணை நடத்தி முடித்திருந்தார் என்று என் தங்கை என்னிடம் விவரமாகச் சொன்னாள். "என்னடா நீ திருடினியா?" என்றாள். சுத்தமாக மறுத்து விடுவது என்று தீர்மானித்திருந்தேன். "சீ சீ" என்றேன். அப்பா குளித்து வந்ததும் முதல் வேலையாக என்னிடம் கேட்டார். "ஏலே.. திருவாழத்தான்.. உளப்பாம சொல்லு.. எடுத்தியா?". "எனக்குத் தெரியவே தெரியாதுப்பா". பிள்ளையார் மேல் சத்தியம் செய்தால் என் அப்பா சற்று தளர்வதைப் பார்த்திருக்கிறேன். "இல்லப்பா.. பிள்ளையார் மேலே சத்தியமா நான் எடுக்கலே.. உன் பர்ஸ் பக்கமே வரலே.. நாள் முழுக்க விளையாடிட்டிருந்தேன்.. அதான் பூ வாங்கவே லேட்டு.. பிள்ளையார் மேலே சத்தியம்பா" என்று ஒரு போடு போட்டேன்.
வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. என் தங்கை ஓடித் திறந்தாள். மாமி உள்ளே வந்தார். எங்களைப் பார்த்தார்.
"சரியான டயத்துக்கு வந்திருக்கேன். இதோ பாருங்கோ அத்திம்பேர்.. குழந்தை வந்து எல்லாம் சொன்னான்.. தெரியாம எடுத்துட்டான்.. அடிக்காதீங்கோ.." என்று எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னார். என் கன்னத்தைத் தட்டி, "வரட்டுமாடா கண்ணா.. அப்பா அடிக்க மாட்டா சரியா? சாப்டாம ஓடி வந்துட்டியேடா.. டீந்த்ரா.. வரட்டுமாடி.. இவனுக்கு சாதம் போடு.." என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். "குழந்தையை அடிக்காதீங்கோ.. ரூவா தானே.. போய்ட்டுப் போறது.."
என் மாமி கிளம்பியதும் எனக்கு விழுந்த முதல் அறையில் கன்னம் பழுத்துப் போனது. "பிள்ளையார் மேலேயா சத்தியம் பண்றே ப்ளேக்காட்?" எனக்கு விழுந்த இரண்டாவது அறையைப் பார்த்த என் தங்கை நின்றபடி அதிர்ச்சியில் ஒன்றுக்குப் போனாள். பூஜை மேடைப் பிள்ளையாரைப் பார்த்தேன். சிரிப்பது போல் பட்டது. என் அப்பா அடிக்கும் பொழுது என் அம்மா பொதுவாகத் தடுத்ததே இல்லை. அன்றைக்கும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு அடிக்கு மேல் தாங்க முடியவில்லை. பிள்ளையாரைப் பார்த்தேன். என்னைக் கைவிட்டு சிரிப்பு வேறேயா? மீண்டும் தாயத்து நினைவு வந்தது. இந்த முறை உருகி வேண்டிக் கொண்டேன். அப்பா சாக வேண்டும்.
அன்றைக்கு அவரிடம் வாங்கியது தான் கடைசி அடி. அடுத்த மாதம் ஆகஸ்டு 15ம் தேதி இறந்தார். எனக்கும் விடுதலை.
புள்ளி.
<இன்னும் உண்டு> ►► 2
2018/06/03
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொடக்க விவரிப்பு சிறிது மய்யம் போல...! கதை தெளிவாக செல்கிறது...
பதிலளிநீக்குசிறிது மய்யம் போல ஹாஹா.
பதிலளிநீக்குகதை சுவாரஸ்யம். குழந்தையை இப்படி
அடிக்கற அப்பாவா. கர்மா.
இந்தப் பிள்ளையாரும் அப்பா வைத்திருந்த வெள்ளிப் பிள்ளையாரும் தொடர்புடையதா?
பதிலளிநீக்குசர்வ சாதாரணமாக "ஊரிலேன் காணியில்லை உறவு மற்று ஒருவரில்லை, பாரில் நின் பாதமூலம் பற்றினேன் பரம்மூர்த்தி" திருமாலையைத் தொட்டிருக்கிறீர்கள். பாராட்டுகள்.
இந்த ஜென்மாவில் நாம் சந்திக்கும், தொடர்புகொள்ளும் எந்த உயிருக்கும் நமக்கும் தொடர்பு உண்டு என்றே நம்புகிறேன்.
நீங்கள் என்னதான் எழுதினாலும் நம்பிக்கை என்ற பெயரில் அடித்து துவைத்துவிடுவார்கள் கடவுள் கர்மா எல்லாம் சரியா என்பது சிறு வயதிலேயே மூளைச்சலவை செய்யப்பட்டவர்களிடம் எடுபடாது
பதிலளிநீக்குஜி.எம்.பி சார்... நீங்கள் நல்ல நிலையில் இருக்கிறீர்கள். பலர் இதைவிடச் சிறப்பா இருக்காங்க. பலர் மோசமான நிலைமையிலும் இருக்காங்க. சிலருக்கு வாய்ப்புகளே கிடைப்பதில்லை. உங்கள் வகுப்பில் உங்களைவிடத் திறமையானவர்கள் வாழ்க்கைல வெகு சுமாரா இருக்காங்க. ஆனால் பிறந்தது மிடில் கிளாஸ் ஃபேமிலி.
நீக்குஇந்தமாதிரி வேற்றுமைகளை 'விதி', 'கர்மா' என்ற வார்த்தைகள்தானே அர்த்தம் கொள்ள வைக்கும். வேறு எப்படிச் சொல்லமுடியும்?
இப்படி இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதுதான் சரி என்பதற்கு என்ன ஆதாரம்?
இப்படியெல்லாம் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமோ இதையும்தாண்டி நினைக்க முடியும் என்றே தோன்றுகிறது அப்படிச்செய்ய விடாமல் நினைக்க விடாமல் வளர்க்கப் பட்டிருக்கிறோம் என்பதேசரி
நீக்குதொடரக் காத்திருக்கேன். கதையின் பின்னணி ஓரளவு புரிகிறது. கொடுத்திருக்கும் இணைப்புக்களை ரிவிஷன் செய்துட்டு நாளைக்கு வரணும்.
பதிலளிநீக்குஇன்று காலைதான் இந்தக் கர்மா, முன் பிறவி, மறுபிறவி பற்றி நானும் என் மகனும் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கும் அவனுக்கும் ஒரே கருத்து.....ஒரே புள்ளியில் சந்தித்தோம்!!!! ஹை புள்ளி!
பதிலளிநீக்கு"அய்யம்" என்று எழுத வேண்டுமோ?// ஹா ஹா ஹா ஹா....
திருவாழத்தான்// ஆஹா என் பிறந்த வீட்டில் அடிக்கடி புழங்கிய வார்த்தை!!! எங்கள் மனதிற்குள் புழுங்கிய வார்த்தைனும் சொல்லலாம்...
மீண்டும் பம்மல் ஆள் வந்துட்டார் போல...தாயத்து அதுஇதுனு ..ஸ்வாரஸ்யமா இருக்கு...
"புள்ளி" கொள்ளாமல்லோ...அத்ஸலாயிட்டுண்டு. புள்ளியைத் தொடர்கிறேன்!! (மலையாளத்தில் புள்ளி எனப்து...ஒருவரைக் குறிப்பிட பயன்படுத்துவது...ஆனால் இங்கு இது உங்கள் கதை புள்ளி.!!)
கீதா
நாங்கல்லாமும் அப்பாவிடம் நிறையவே அடி வாங்குவோம். இம்மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்களுக்குத் தான்! அம்மாவுக்கும் கிடைக்கும்! :)))))
பதிலளிநீக்குஐயோ!
நீக்குஅதாவது அய்யோ..
நீக்குஅடிக்கிற அப்பா அதனாலேயே செத்துப் போகணுமா? பிள்ளையாரும் இதற்கு உடந்தையா? பலே... பலே...
பதிலளிநீக்குஅப்பா அடிப்பது என்பது தெரியாமல் வளர்ந்த குழந்தை நான். மிகவும் குறும்பு செய்யும் அண்ணாவிற்கும் சத்தமாய் மிரட்டல் தான் அங்கு வந்தால் என்று.
பதிலளிநீக்குஅம்மாதான் தொடையில் கிள்ளுவார்கள் நிமிட்டாபழம் வேண்டுமா என்று?
கண்ணை உருட்டி விழித்து பயமுறுத்துவார்கள். அதற்கே அடங்கி விடுவோம்.
கடவுள் இல்லை என்பர்கள் தான் கடவுளை அதிகம் நினைபார்களாம், அது போல் நீங்கள் அவரை எத்தனை பேர் சொல்லி அழைத்து இருக்கிறீர்கள்!
அப்பா சாவுக்கு மாமியும் ஒரு காரணம் ஆகி விட்டார்.
பதிலளிநீக்கு.ஆகா. எனக்கு இந்த கோணம் தோணவில்லை.
நீக்குஇழை கொடுத்திருக்கிறீர்கள்.. சுவாரசியமாக ஏதாவது பின்ன முடிகிறதா பார்க்கிறேன்.
பூக்காரம்மா நல்ல அம்மா,பிள்ளையார் வேண்டுதலை செய்ய மாமி ஒரு ரூபாய் கொடுத்து இருக்கலாம்.
பதிலளிநீக்குகை விட்ட பிள்ளையார் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். தொடருங்கள்..
பதிலளிநீக்குசுவாரஸ்யம் இத்தனை முன்னுரை அவசியம் வேண்டும் விஷயமும் கணநாதனைப் போல் கனமானது இல்லையோ.
பதிலளிநீக்குஅதானே?
நீக்குஎதையோ தேடப்போக இங்கே வந்து பார்த்தால், அட, மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டீர்களா? வழக்கம் போல அற்புதமான நடை, துரை. எது நிஜம், எது நிழல் என்று தெரியா வண்ணம் இருந்தது.
பதிலளிநீக்குநசிகேத வெண்பா போல ஒரு காவியத்தை மீண்டும் எங்களுக்கு எப்போது தரப்போகிறீர்கள்?