2013/08/09

மெல்லிசை நினைவுகள்



    டனடியாகப் பதிவு எழுதவில்லையெனில் blogஐ bulletin boarடாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறது.

மெல்லிசை நினைவுகள் தலைப்பில் பதிவெழுதி நாளானதை நினைவூட்டியப் பெருந்தகைகளைப் பதிவின் முடிவில் கவனிக்கிறேன். பதிவெழுத நினைத்திருந்த எனக்கு சமீப நிகழ்வுகளும் வசதியாக அமைந்தது என்பேன்.

சமீப வாரங்களின் சிக்கல்களினால் பதிவெழுத முடியாமல் போனது. சோம்பல், பயண ஏமாற்றம், குழப்பம், விபத்து, வேலை, அலைச்சல், சோம்பல், சோகம், சோர்வு, குறிப்பாகச் சோம்பல்.. என்று பல காரணங்களால் உண்டான சிக்கல்கள். அது போதாதென்று கண்பிடுங்கி நீலன் கதையின் அடுத்தப் பகுதிகளைப் படித்து நானே திகிலடைந்ததும் ஒரு காரணம்.

திரிந்தும் உடைந்தும் அடைந்தும் கிடந்த நாட்களில் மெல்லிசையும் புத்தகமும் கதியெனக் கிடந்தேன். வீண் அலைச்சலின் இடையே கண்காணாத ஏர்போர்ட் லவுஞ்சில் நான் சற்றும் எதிர்பாரா விதமாகச் சந்தித்த இரண்டு இசைப் பிரபலங்களுடன் சில நிமிடங்கள் பேசக் கிடைத்த வாய்ப்பு, அசதி போக்கும் சந்தன வாடை மயிலிறகாக அமைந்தது. எஸ்பிபியை அடையாளம் தெரிந்தது. வாணியை அடையாளம் தெரியவில்லை. பிறகு ப்ளேன் பக்கத்து இருக்கைப் பயணி தொடர்ந்து சொன்ன ஜோக்குகளும் குட்டிக்கதைகளும் ஆலையற்ற ஊரின் இலுப்பைப்பூவாயின. எழுதி வைத்துக் கொள்ளாமல் போனேனே..! ஜோக்குகளை நினைவில் வைத்துக் கொண்டு வரிசையாகச் சொல்வது ஒரு கலை. நானறியாத கலை.

கோபமும் ஆத்திரமும் தவறு என்று கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் சொல்லும் நான், அநியாயத்துக்குக் கோபம் கொண்டு வாயில் வந்தபடி காய் கவர்ந்ததை எண்ணிக் குறுகிப் போய் வருந்திய சமீபத் தருணங்களில், மெல்லிசை எனக்குத் திரையானது. என் நண்பர் அரசனிடம் ஒரு வழக்கம் இருந்தது. தன் மீது காறித் துப்பியவர்களிடம் கூட கோபம் காட்ட மாட்டார். நான் சாதாரணத்திலும் சாதாரணம். கோபம் எனக்குத் தூண்டில் புழு போல. சட்டென்று கவ்விச் சிக்கிக் கொண்டு திண்டாடுவேன். பிறகு புத்தகம் இசை என்று காணாமல் போய்விடுவேன். அரசனுக்கும் மெல்லிசை பிடிக்கும். தூத்துக்குடி வானொலி நிலைய நண்பரிடம், இரவின் அமைதியில் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பச் சொல்லிக் கேட்பார். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்டப் பாடல் இது.
சித்திரப் பூச்சேலை


அம்ருத்சரில் வந்திறங்கிய கமல், உள்ளூர் பாஷை தெரியாமல் விழித்தபடி அங்குமிங்கும் பார்த்தார். எதிரே தென்பட்ட சர்தார்ஜியை நெருங்கி, "தமிழ் தெரியுமா?" என்றார்.
"சாலா, ஹிந்தி தேரா பாப்!" என்றார் சர்தார்ஜி கோபத்துடன்.


தமிழ் டிவிகளில் ஏமாந்தால் சூபர் சிங்கர் ஜூனியர் சிங்கர் சீனியர் சிங்கர் ஹாரிபில் சிங்கர்.. என்று கூத்தாக இருக்கிறது. அதை விட்டால் நீயா நானா என்று கற்பனை வற்றிய விவாத நிகழ்ச்சி ஒன்று. எரிச்சலாக வந்தது. வருடா வருடம் தமிழ் டிவி வரண்டு வருவதாகத் தோன்றுகிறது. (ஏதோ ஒரு நிமிடம் புலம்பிவிட்டுப் போகிறேன், விடுங்கள். என்னால் வேறென்ன செய்ய முடியும்?)

சரோஜாதேவியுடன் மலரும் நினைவுகள் நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது. எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி தேவிகா பத்மினி பானுமதி பற்றிப் பேசினார். முத்துராமன் பற்றி மூச். இணைந்து நடிக்கவில்லையோ? இடையிடையே பாடல் அல்லது படக்காட்சி ஒளிபரப்பினார்கள். 'போர்க்களமானேன் ஐயோ அம்மா நாதியில்லையே' என்று கண்ணீரும் கம்பலையுமாக ஒரு சோகப் பாடல் ஓடிக்கொண்டிருக்கையில் எழுந்து சாப்பிடப்போனவனுக்கு அதிர்ச்சி. கம்பலை என்றால் என்னவென்றே தெரியாமல் அந்தச் சொல்லை உபயோகித்து வருகிறேன் என்பதல்ல அதிர்ச்சியின் காரணம். சோகப்பாட்டைத் தொடர்ந்த சுகப்பாட்டே அந்த அதிர்ச்சி. சோகத்தின் part2 அந்தப் பாடல் என்பதை இன்றுவரை அறியாதிருந்தேன். பாடலைப் பிறகு கேட்போம். "இன்றைய நடிகைகளில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?" என்று சரோஜாதேவியிடம் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார் பேட்டியாளர். சரோஜாதேவியின் பதிலை ரசித்தேன். "இப்போ நடிக்கிறவங்க எல்லார் குரலும் ஒரே மாதிரி இருக்குது..".

தொடர்ந்த சூபர் சிங்கர் அறுவையில், சுசீலாவின் பழைய பாடலைப் பாடிய பெண் தமிழை வதைத்துத் தொலைத்தார். தமிழின் சிதைவை மறந்து, குரலை மட்டும் கவனிக்கலாம் என்றால் முடியவில்லை. அசல் பாடலிலும் தத்தித்ததா தித்தித்ததா பொட்டிட்டதா பட்டிட்டதா என்று சுசீலா ஏதேதோ பாடுவார். சிறுவயதில் பாடல் புரியவில்லை. பின்னாளில் ஹெட்செட் அணிந்துக் கேட்டும் புரியவில்லை. எனினும், அது தமிழ் என்பது தெளிவாகத் தெரிந்தது. தேன் குரலில் சுசீலா கொஞ்சியதும் நிறையவே பிடித்தது.

சூபர் சிங்கர் அறுவையில் பாடியவரின் குரலைக் கேட்டதும்... இனி பாடகர்களைக் குரல் வளத்துக்காக மட்டும், பாடுவது தமிழா இல்லையா என்று சந்தேகப்படாமல், கேட்டுப் பழக வேண்டியது தானோ என்று தோன்றியது.
தத்தை நெஞ்சம் முத்தத்திலே

மனைவியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிய கமல் பக்கத்து வீட்டுக்காரரிடம், "ஒரு வாரம் என் வைப் ஊருக்குப் போயிருக்கா. தனியா படுக்க பயமாயிருக்கு, என் கூட துணைக்குப் படுத்துக்க முடியுமா?" என்று கேட்டார்.
"என்ன கமல் இது.. உனக்கும் உன் பெண்டாட்டிக்கும் இதே பழக்கமா போயிடுச்சே?" என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.


சூபர் சிங்கர் அளவுக்கு இல்லாவிட்டாலும் அந்த நாளிலும் இது போன்ற போட்டிகள் சென்னையின் காஞ்சி, கனிமரா போன்ற ஹோடல்களில் நடந்தன. சினிமாவில் பாட ஆசைப்பட்டு நிறைய இளைஞர்கள் வந்து பாடுவார்கள். என் நெருங்கிய சினேகிதி ஒருத்தி 'சினிமாவில் பாடியே தீருவேன்' என்று அடம்பிடித்து வீட்டுக்குத் தெரியாமல் இது போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்று பாடுவாள். என்னைத் துணைக்கு இழுத்துக் கொண்டு போவாள். சனி ஞாயிறுகளில் சாப்பிட்டு தொண்டனுக்கும் உண்டென்று மயங்கிக் கிடக்கையில் என் தங்கை அவசரக் குரல் கொடுப்பாள்.. "துரை, உன் ப்ரெண்டு அனுராதா வராடா..". அலறி எழுந்து பின்கட்டு வழியாகத் தப்பிக்கப் பார்த்தால் கிணற்றடியில் நின்றபடி சிரிப்பாள் கிராதகி. "சாயந்திரம் சுஜாதா மூவிஸ்ல எம்எஸ்வி ட்ரூப் கோரஸ் வாய்ஸ் டெஸ்ட்ரா.. துணைக்கு வாடா ப்லீஸ்?".

சரியாக நினைவில்லை. எம்எஸ்வி இசையில் ஏதோ ஒரு பாடல் பாடினாள் என்று நினைக்கிறேன். பிறகு சங்கர் கணேஷ் இசையில் லாலாலா என்றுப் பின்னணி கும்பலோடு கோவிந்தா போட்டாளே தவிர, கல்லூரிப் படிப்பு முடியும் வரை அனுராதாவுக்கு எந்த சான்சும் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அவள் வாய்ப்பு தேடவில்லை. கடைசி வருடப் படிப்பு முடிந்ததும் முஸ்லிம் பையனைக் காதல் திருமணம் செய்து, சில வருடங்கள் தலைமறைவானாள். அவள் மகன், போன வருட சூபர் சிங்கர் கடைசி சுற்றுகளில் எஸ்பிபி பாடல்களைப் பாடினானாம். ஹேரிஸ் ஜெயராம் (?) குழுவில் இப்போது வாத்தியங்கள் வாசிக்கிறான், பாடுகிறான். எல்லாம் சுபம். அனுராதா அடிக்கடி முணுமுணுத்த பாடல் போல் இப்போது பாடல்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன் (காட்சி அமைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை).
துள்ளித் துள்ளி விளையாட துடிக்குது மனசு


ஹோட்டல் பாருக்குள் நுழைந்த ஒருவன் பக்கத்தில் இருந்தவனிடம், "ஒரு கமல் ஜோக் சொல்றேன் கேக்குறியா?" என்றான். பக்கத்தில் இருந்தவன் முறைத்தான்: "இதப்பாரு நான் கமல் மன்ற ட்ரஸ்டி. இதோ பார்டெண்டர் இருக்கானே பாடிபில்டர்.. இவன் கமல் மன்றச் செயலாளர். அதோ உக்காந்திருக்காரே மொட்டைத்தலை பார் முதலாளி.. அவரு கமல் மன்றத் தலைவர்.. இதுக்கு மேலயும் கமல் ஜோக் சொல்ல விருப்பமா?"
சொல்ல வந்தவன் தயங்கி, "வேணாம். தனித்தனியா அத்தனை தடவை சொல்லிப் புரியவைக்க முடியாது" என்றான்.


எஸ்பிபி என்றதும் நினைவுக்கு வருபவன், என் பம்மல் வட்ட நண்பன் சாம்பா. எஸ்பிபியை விட எஸ்பிபி போலப் பாடுவான். மவுத் ஆர்கன் வாசிப்பான். முழுப்பாடல்களை மூச்சுவிடாமல் விசிலடிப்பான். தொலைத்த நட்புகளில் மிகவும் தேடுகிற நட்பு. சென்னையில் சொந்தமாக இசைக்குழு வைத்திருக்கிறான், பாடுகிறான் என்கிறார்கள். அடுத்தப் பயணத்தில் இவனைக் கண்டுபிடித்தேயாக வேண்டும். அன்புக்கரசன் கிடார், ஜேம்ஸ் டிரம்ஸ், நானும் சாம்பாவும் பாட்டு. கோடை இரவுகளில் அன்புக்கரசன் வீட்டு மொட்டை மாடியில் மணிக்கணக்காகப் பாடியிருக்கிறோம். 'கிறோம்' என்று சந்தடி சாக்கில் சேர்ந்து கொள்கிறேனே தவிர, உண்மையில் சாம்பா பாடுவான். நான் ஹம் செய்வேன். 'சாமரம் போடுவேன்' என்று கா நே சச்சு சொல்வது போல.
காதல் கதை சொல்வேனோ


"அம்மா.. நாளைக்கு எங்க ஸ்கூல் பார்ட்டிக்கு எல்லாரும் சிவப்பு சட்டை போட்டுகிட்டு வரணும்னு டீச்சர் சொன்னாங்க.." என்று சிறுவன் கமல் சொன்னதும் அது போலவே சிவப்புச் சட்டை போட்டனுப்பினார் அம்மா.
மறுநாள் சீக்கிரமே திரும்பி வந்த கமல் அழுதுகொண்டே, "போம்மா.. நான் இனிமே ஸ்கூல் பார்ட்டிக்கு போகமாட்டேன்" என்றதும், "ஏன்?" என்றார் அம்மா.
"பின்ன என்னம்மா..?" என்றான் கமல். "சிவப்பு சட்டைல வரணும்னு எல்லார் கிட்டயும் சொன்னாங்கல்ல?.. கூடவே ஜட்டியும் ட்ராயரும் போட்டுகிட்டு வரணும்னு எங்கிட்ட மட்டும் சொல்லவேயில்லம்மா.."


டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் (சரியா?) ஒரு பிரபல பாடலை அறிமுகப்படுத்துகையில் "இசையமைத்த எம்எஸ்வியைத் தவிர இந்தப் பாடலில் சம்பந்தப்பட்ட எவருமே உயிரோடு இல்லை" என்றார். எம்எஸ்வி உயிரோடிருப்பதற்காக வருத்தப்படுகிறாரா? இருக்காது என்று சமாதானமாகி, வாலி டிஎம்எஸ்சை மனதில் வைத்துச் சொல்லியிருப்பார் என்று நினைத்தால் சுசீலாவை மறந்துவிட்டாரே?. பாடலில் சம்பந்தப்பட்ட பெண் குரலான சுசீலா இருப்பது தெரியாதா? இல்லை பெண் என்று இளப்பமா? சோமாறி டாய்! அவர் குறிப்பிட்ட பாடல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அதற்குப் பதில் வேறு பாடலை இணைக்கிறேன்.

வெங்கட்ராமன் என் கல்லூரி கால நெருங்கிய நண்பன். எனக்கும் அவனுக்கும் இரண்டு பெரிய ஒற்றுமைகள் உண்டு. முதலாவது, எங்கள் அப்பாக்கள் மகா உதவாக்கரைகள். இரண்டாவது, எங்களுக்கு டிஎம்எஸ்-சுசீலா என்றால் உயிர். எங்களைச் சுற்றிய ஒரு சுவாரசியமான கதைக்கு இப்போது நேரமில்லை. இந்தப்பாடல் அவனுக்காக. எஞ்சாய் வெங்கட்ராமா!
இதயத்திலிருந்து இதழ்கள் வரை


கிராமத் திருவிழாவில் தங்கள் மனைவிகளைத் தொலைத்துத் தேடிக்கொண்டிருந்த முன்சீபும் கமலும் சந்தித்தார்கள். முன்சீபுக்கு ஆதரவாக, "உங்க பெண்டாட்டி எப்படி இருப்பாங்க?" என்றார் கமல்.
"ராக்கி நல்ல உசரமுங்க.. பச்சைல முழங்கால் உசரத்துக்கு சீலை.. எப்பவும் ரவிக்கை போடமாட்டா.. உதடு ரெண்டும் பளுத்த கோவப்பழம்.. வாளிப்பா கட்டையா இருப்பா.. ஆமா, உங்க பொஞ்சாதி?" என்றார் முன்சீப்.
"கழுத கிடக்கா.. உங்க பெண்டாட்டியை முதல்ல தேடலாம் வாங்க" என்றார் கமல்.


தொடர்வது, நான் மிக விரும்பும் பாடல்களில் ஒன்று. சோகப்பாட்டின் part2. dramatic தொடக்கம், ஏறக்குறைய நௌஷத் மெட்டில் அருவி போல் வயலின், நெஞ்சை வருடும் ஹம்மிங், அற்புதமான வரிகளுடன் இனிய இசை, குரல். serenely uplifting. போட்ட மெட்டைத் திரும்பப் போடுவதில் எம்எஸ்வி வல்லவர் என்றாலும், இந்தப் பாடலின் மெட்டை மறுபடி உபயோகித்தாரா தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். மெல்லிசை நினைவுகள் பதிவெழுத நினைவூட்டியதற்காக:
நான் பாடிய பாடல்