2012/06/13

தைவாதர்சனம்





◄◄   1     2




    தை கேக்கத் திரும்பி வந்தவாளுக்கு ஒரு ஆத்மார்த்த வெல்கம் போட்டுடறேன்.

சினேகிதர் ஒத்தராத்துக்கு சாப்பிடக் கூப்பிட்டிருந்தாளேன்னு இன்னைக்குப் போயிருந்தேன். தேங்காய்த் தொகையல், மோர்க்கொழம்பு, மைசூர் ரசம், எண்ணைக் கத்திரிக்காய் கறி, கொத்தவரங்காய் கூட்டு, பால்போளினு விருந்து பண்ணிட்டா. நமக்கோ வயசாயிடுத்து, எங்கேந்து இத்தனையும் சாப்பிடறது சொல்லுங்கோ? இருந்தாலும் வரச்சொல்லி ஆசையா பண்ணியிருக்காளேன்னு, சாப்ட ஒக்காந்தேன். கொத்தவரங்காய் கூட்டுன்னா நேக்கு பிடிக்கும். ஆனா பாருங்கோ, ஒரு வாய் போட்டுண்டா அன்னத்வேஷம் மாதிரி வந்துடுத்து. கூட்டு சகிக்கலை. மாமிக்கு ரொம்ப வருத்தம். அதனாலென்ன, போனாப் போறது, மிச்ச எல்லாம் நன்னாருக்கேன்னு சொல்லி, "ரொம்ப சாப்பிட்டா இன்னிக்குப் கதோபாக்யானம் பண்ணமுடியாது"னு சாக்கு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்.

சமையல் நன்னா வரது ஒரு புண்யமாக்கும். செல பேர் விபாகமா சமைப்பா, செல பேர் அபாகமா சமைப்பா. மாமி சமையல் அபாக ரகம், என்ன பண்றது சொல்லுங்கோ? அனேகம் பேருக்கு கொத்தவரங்காய் கூட்டு பண்ண வராது. அது பிரம்ம வித்யையாக்கும். பாருங்கோ, கொத்தவரங்காய்க் கூட்டுலே கொழம்புக் கருடாம் போட்டா அதீத ருசி. தேங்காய் மிளகாவத்தல் கொத்தமல்லி விரை அரைச்சு விடறா மாதிரி, நன்னா நெய்ல வறுத்த கைப்பிடி கொழம்புக் கருடாமும் போடணும். அதான் கொத்தவரங்காயை அலாதியான கூட்டா ட்ரேன்ஸ்பார்ம் பண்ணறது. மாமி கொழம்புக் கருடாம் சேர்க்க மறந்துட்டா. கூட்டுல தேங்காய் அரைச்சுவிடவும் மறந்துட்டா. உப்பு மாத்துக் கம்மியாப் போட்டுட்டா. கொத்தவரங்கா கூட இன்னும் சித்தே வெந்திருக்கலாம். என் சினேகிதருக்கு கோபம் வந்து, பாருங்கோ, என் முன்னாலேயே பார்யாளை கோச்சுண்டுட்டார். 'நல்ல காய்கறியை நாசம் பண்ணிட்டியேடி..'னு என் எதிர்லயே நன்னா வைய ஆரம்பிச்சுட்டார். "கர்மம்!"னு என்னெதிர்லயே சாப்பாட்டுத் தட்டை அப்படி நெட்டித் தள்றார். நேக்கே ஒரு மாதிரியா ஆய்டுத்துன்னா, அந்த மாமிக்கு எத்தனை அவாத்யம் பாவம், நினைச்சுப் பாருங்கோ.

எதுக்குச் சொல்றேன்னா, இப்ப அம்ருதமாச் சாப்பிட்டாலும் எட்டுமணி நேரத்துல மலமாற மகா அல்ப வஸ்து.. கொத்தவரங்காய், அதைச் சரியா தன்னிஷ்டப்படி பண்ணாததுக்கே கொலைக் குத்தம் பண்ண மாதிரி கோவம் வந்தா... தேவ தோப்பனார் வாஸ்தவமாவே கொலை பண்ணிட்டார். ப்ரியதர்சனிக்குப் பொத்துண்டு வராதோ?

ப்ராணனில்லாம கெடக்கற பிரதாபகுமாரனைப் பாக்கறா ப்ரியதர்சனி. தான் கொத்தவரங்கா, பிரதாபகுமாரன் கொழம்புக் கருடாம்னு இருக்கச்சே, பிரிச்சுப் போட்டா ருசி கெட்டுப்போகாதோ? அழுகையும் கோவமும் சேந்து வர்றது. சம்க்ஷோபத்துல, தாங்க முடியாத அதிர்ச்சில, "அப்பா, என்ன காரியம் பண்ணிட்டேள்!"னு கதறித் துடிக்கறா ப்ரியதர்சனி.

பிரதாப ராஜாவோ கீழே விழறப் புத்ரனோட தலையை அந்தக்கால ஏக்நாத் சோல்கர் மாதிரி டைவடிச்சுக் கேச் பிடிக்கப் பார்த்தார். அது மிஸ் ஆகி உருண்டோடறது. ராஜா, "குமரா குமரா!"னுண்டே துரத்தி அதை எடுத்துண்டு வந்து அலற ஆரம்பிச்சார்.

தேவ தோப்பனாருக்கு இப்பத்தான் மண்டைல அறைஞ்ச மாதிரி, தான் பண்ணின தப்பு தெரிஞ்சு போறது. பிராணஹத்யை மகா தோஷமில்லையோ? மும்மூர்த்திகளெல்லாம் தான் பண்ணின பிராணஹத்யைக்கு சாக்கு வச்சுண்டிருந்தா. பக்தாளும் அதை நம்பி அவாளோட பாதகமான உயிர்க்கொலைகளை மறந்துட்டு பூஜை பண்ணினா. இவர் யாரு? நேத்து சாம்பார் மாதிரி சாதாரண தேவனில்லையோ? பிசாத்தில்லையோ? இவரை யார் மன்னிப்பா? தேவ ஜோட்டாலயே அடிக்க மாட்டாளோ?

என்ன பண்றதுன்னு பாக்கறார். மிச்ச தேவாள் பண்ற மாதிரி மனுஷா மேலே பழி போடறார். "பிரதாபா.. என்னை என்ன கார்யம் பண்ண வச்சுட்டே பார்.. இந்தப் பாவம் உன்னை சும்மா விடாது"ங்கறார்.

பிரதாப ராஜா இன்னும் "குமரா குமரா"னு அலறிண்டிருக்கார்.

அதிர்ச்சிலே ஸ்தம்பிச்சுப் போன ப்ரியதர்சனி, பிரதாப ராஜாட்டேருந்து தன் ப்ரியனோட தலையை வாங்கி உடம்போட சேத்து வைக்கறா. என்னென்னமோ பண்ணிப் பாக்கறா. ம்ஹூம். அசைவில்லை. கூட்டை விட்டுப் பறந்து போன கிளி எங்கயாவது திரும்பி வந்திருக்கா? தலை வெட்டினதுமே உசிர் காத்துல கலந்தாச்சு. ப்ரியதர்சினி கலக்கத்துலயும் கோவத்துலயும் அவனை சேர்த்து வைக்க ட்ரை பண்றா.

தேவ தோப்பனாரோ காருண்யமே இல்லாம, "போறும். எழுந்து வா. இவன் மனுஷ்யன், நாம தேவ குலம். என் பேச்சைக் கேக்காம நீ இவனோட எப்படி சேந்திருக்கலாம்? ஜாதி வித்யாசம் கிடையாதா? நம்ம அந்தஸ்து என்ன, இவன் உனக்கு தகுதி கெடயாது. அதுவும், என் கண் முன்னாலயே இப்படிக் கொஞ்சி விளையாடறேளே, உங்களுக்கு வெக்கமா இல்லை?"னு பொண்ணைக் கத்தறார்.

அது வரைக்கும் புலம்பிண்டிருந்த பிரதாபன், சட்டுனு வாளை உருவிண்டு "என் பையனைக் கொன்னுட்டீரே ஐயா, இது என்ன நியாயம்?"னு ஆக்ரோஷத்தோட தேவ தோப்பனார் மேல பாயறார்.

பிரதாபன் தன் மேலே பாயறதைப் பார்த்ததும் டக்குனு கண் மறைவாயிடறார் தேவ தோப்பனார். "தேவஸ்த்ரீயைத் தொட்டதனால, இது உம்ம புத்ரனுக்குத் தண்டனை"னு குரல் மட்டும் கேக்கறது.

திரும்பித் திரும்பிப் பாக்கறார் பிரதாப ராஜா. "கோழை! வீரமிருந்தா வெளில வா. நியாயமான முறைல என்னோட சண்டை போடு. உன்னை உருத்தெரியாம அழிச்சுடறேன்"னு கத்தறார். அதுக்கு தேவர், "இப்ப மட்டுமென்ன? உருத் தெரியறதா?"னு கிண்டல் பண்றார்.

பிரதாப ராஜா கீழே விழுந்து கெடக்கற சீமந்தபுத்ரனைப் பாத்துக் கதறி அழறார். "அக்கிரமம்.. அக்கிரமம்.."னுட்டு தலைலயும் மார்லயும் அடிச்சுக்கறார். பட்டாபிஷேகம் பண்ணி மகராஜாவா இருக்க வேண்டியவன் இப்படி பார்ட் பார்டா கழண்டிருக்கானேனு அவர் மனசு துடிக்கறது.

ப்ரியதர்சனியைப் பார்த்ததும் இன்னும் அழுகையா வரது. "அம்மா.. சௌபாக்யவதி.. என் பிள்ளை பண்ணின தப்பு என்னனு சொல்லும்மா... உன்னைக் காதலிச்சான்.. நீயும் தானே அவனைப் பதிலுக்குக் காதலிச்சே? ரெண்டு பேரும் வேறே வேறே ஜாதி தான், குலம் தான், இல்லங்கலே.. ஜாதிவிட்டுக் காதலிச்சா வெட்டிக் கொல்றதா? ஈனத்தனமில்லையா? இந்தப் பாவத்தை மனுஷா கூட செய்ய மாட்டாளே? இனிமே உங்களைப் பாத்து இந்தப் பழக்கம் மனுஷாளுக்கு வந்துடுமே!"னுட்டு தலைல தலைல அடிச்சுக்கறார். "நீயே சொல்லும்மா.. ஆத்மார்த்த காதலைத் தவிர இவன் செஞ்ச பாவம் என்னனு சொல்லுமா.. இதுக்காகவா இவனை சீரும் சிறப்புமா வளர்த்தேன்.."னு பாசமலர் சிவாஜிகணேசன் மாதிரி அழறார். "கொலையப் பண்ணிட்டு காணாமப் போறதுதான் தேவ நியமமா! கேப்பாரில்லையா?"னு விடாமப் புலம்பறார்.

இதையெல்லாம் பாத்துண்டிருந்த ப்ரியதர்சனிக்கு அசாத்ய கோபம் வர்றது. "எனக்கு அப்பாவான ப்ராணஹத்தி! மகாபாவி! எங்க ரெண்டு பேரையும் மறைஞ்சு நின்னுப் பாத்தேள். என்னோட காதலனைக் கொன்னுட்டு மறுபடியும் மாயமா மறஞ்சுட்டேள். கேவலம், கோழைத்தனம்.."னு கத்தறா.

கொஞ்சம் கூட யோசிக்காம, சாபம் குடுக்கறா. "உருத்தெரியலேனு கிண்டலா பண்றேள்? நேருக்கு நேர் நின்னு பேச தைர்யமில்லாத தேவகூட்டம் இந்த க்ஷணத்துலேந்து கண்ணுக்கே தெரியாம மறஞ்சு போகட்டும். உங்க கண் முன்னாடி இப்படி நடந்ததுன்னு தானே கோபம்? இனிமே மனுஷ்யாளும், மனுஷ்யாள் சம்பந்தப்பட்ட எதுவுமே, தேவாள் கண்ணுக்குத் தெரியாம போகட்டும். ஒண்ணா இருந்தாத்தானே மனுஷ்ய ஜாதி, தேவ ஜாதின்னு பேதம் பேசறேள்? இனிமே மனுஷாள் இருக்கற லோகத்துல உங்களுக்கு இடம் இல்லாமப் போகட்டும். ஆத்மார்த்தமான நேசமும் காதலும் பக்தியும் தேவாள் மேலே இருக்கணும், ஆனா தேவாளோட கலந்து இருக்க மட்டும் மனுஷாளுக்கு பாத்யதை கிடையாதுன்னு சொல்றேளே? இனிமே ஜீவராசிகள் யார் கண்ணுக்கும் தெரியாம தேவாள்ளாம் மறஞ்சு போகட்டும்"னு சீரியல் சாபம் குடுத்துடறா. சாபம் குடுத்துண்டே பிரதாபர் கொண்டு வந்திருந்த நாலு கிலோ குங்குமத்தை கோவத்துல அங்கயும் இங்கயும் வாரி இறைக்கறா ஆக்ரோஷமா. அப்புறம் குலுங்கி அழறா. மகா ஆக்ரோஷமான காட்சியைப் பாத்துட்டு பிரதாப ராஜாவே பையனை மறந்துட்டு பயந்து நடுங்க ஆரம்பிச்சார்.

காதலனை பறி கொடுத்த வேகத்துலயும் துக்கத்துலயும் ஆத்ரத்துலயும் என்ன சொல்றோம்னு தெரியாம சாபம் குடுத்துட்டா. பொல்லாத சாபமில்லையோ? அடுத்த க்ஷணம் எல்லாம் மாறிப் போக ஆரம்பிச்சுது.

கரண்ட் போனதும் லைட் அணையற மாதிரி பொட்டு பொட்டுனு தேவாள்ளாம் காணாம போயிண்டிருக்கா. சிவசபை, பிரம்ம கூட்டம், விஷ்ணு பரிவாரம் எல்லாம் ஒத்தொத்தரா அஞ்ஞாத பெவிலியனுக்குப் போயிண்டிருக்கா.

சாபம் தனக்கும் பலிக்கும்னு தெரியாம கொடுத்தாளோன்னோ நம்ம ஹீரோயின் ப்ரியதர்சனி? கொஞ்ச நாழில அவளும் காணாமப் போயிட்டா.

"இதேதுடா வம்பா போச்சே!"னுட்டு கலங்கிப் போயிருக்கார் பிரதாப ராஜா. தான் இருக்கோம், தன் புத்ரனோட ப்ரேதம் இருக்கு. கோவில் சுத்துப்புறம் எங்கயும் யாரையும் காணோம். இதென்ன விபரீதம்னு ஆடிப்போயிட்டார். இனிமே தேவர்கள் யாரையுமே பார்க்க முடியாதா? பிள்ளையார் பிடிக்க வந்து உள்ளதையும் போக்கிட்டோமேனு நினைச்சார்.

இதுல பாருங்கோ, தேவர்கள் எல்லாரும் ஜீவராசிகளோட கண்ணுக்குத் தெரியாம போகட்டும்னுதான் சாபம் குடுத்தா ப்ரியதர்சனி. கண்ணுக்கே தெரியாமப் போகட்டும்னு குடுத்திருந்தா, இந்தக் கதைக்கு சமாபனமே இல்லாமப் போயிருக்கும். ஏன்னா, இப்பப் பாருங்கோ அட்லீஸ்டு தேவர்களுக்குள்ளேயாவது ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சுண்டா. அதனால, கதையைக் கொஞ்சம் முடிவுக்குக் கொண்டு போக முடியறது.

தேவக் கூட்டத்துல அலாதி கலவரம்.

நம்மாத்துல கரண்ட் கட்டாகி லைட்டெல்லாம் போனா, என்ன பண்றோம்? மொதல் வேலையா அடுத்தாத்துல லைட் எரியறதான்னு பாக்கறோம். அங்க எரியலைனா ஒரு அல்பத் திருப்தியோட, தெருவுல வேற யார் வீட்லயாவது லைட் எரியறாதான்னு பாக்கறோம். தெருவுலயும் எரியலைனா எதிர் தெரு, பக்கத்துத் தெருன்னு பாக்கறோம். அப்புறம் புலம்ப ஆரம்பிக்கிறோம். அந்த மாதிரி தேவாள்ளாம் சிவ லோகம், விஷ்ணு லோகம், பிரம்ம லோகம்னு ஒத்தொத்தரையா பாத்துக்கறா கேட்டுக்கறா. அவாள மட்டும் ஒத்தருக்கொத்தர் பாத்துக்க முடியறது, மத்தது எல்லாம் கண்ணுக்குத் தெரியலை. எல்லாருக்கும் ஒரே கலவரமாப் போறது. என்னடாது கண்ணுக்குத் தெரிஞ்சுண்டிருந்த ஜீவராசியெல்லாம் மறைஞ்சு போச்சேன்னு பிரமிப்பு போய், பயம் வர ஆரம்பிச்சுது.

எமர்ஜன்சின்னுட்டு மும்மூர்த்திகளும் கலந்து பேசறா. என்ன ஆச்சுனு இங்க்வைரி பண்றப்போ, எல்லா விஷயமும் தெரிஞ்சுபோறது. நேரா ப்ரியதர்சனியண்டை போறா. "என்ன கார்யம் பண்ணிட்டேமா?"னு கதறிட்டு, "சாபத்தைத் திருப்பி வாங்கிக்கோ"னு சொல்றா.

சாபத்தை எங்கேந்து திருப்பிக்கறது? "மொதல்ல என் நாயகனை, பிரதாபகுமாரனை, உயிரோட திருப்புங்கோ. நான் சாபத்தைத் திருப்பறதைப் பத்தி அப்புறம் யோசிக்கறேன்"னு அவ சொல்றா. இன்னும் ஆத்திரம் அடங்கலை. எப்படி அடங்கும்? ஆத்மார்த்தக் காதலை அடாவடியாப் பிரிச்சுட்டா ஜன்மத்துக்கும் இருக்குமே துவேஷம்?

"அவன் மானுடன், அவனோட ம்ருத்யுவை மேனேஜ் பண்ண உபகாரி யாரும் இல்லை. அவன் இப்போ அவாந்த்ரத்துல இருக்கான். சொர்க்கமோ, நரகமோ அவன் பிராப்தத்துக்கு ஏத்த மாதிரி நடக்கும்"னு மும்மூர்த்திகளும் கை விரிச்சுடறா.

"அப்படின்னா, என் சாபத்தை நான் மாத்திக்க மாட்டேன். நீங்கள்ளாம் கண்ணுக்குத் தெரியாம இருக்க வேண்டியது தான்"னு தீர்மானமா சொல்லிடறா ப்ரியதர்சனி.

"இதேதுடா வம்பா போச்சே!"னுட்டு தேவாளும் கலங்கிப் போயிடறா. என்ன சொல்லியும் ப்ரியதர்சனி கேக்க மாட்டேங்கறா.

என்னதான் மும்மூர்த்திகள் ஆனாலும், தேவசாபம்னு வந்துட்டா அவாளும் அனுபவிச்சுத் தானே ஆகணும்? இதுக்குப் பிராயசித்தம் எதுவும் அவாளுக்குத் தோணலை. குமாரனோட ஜீவன் பிரிஞ்சு அவாந்த்ரத்துக்கு போயாச்சு. மீட்டுண்டு வரவும் முடியலை. ஏதாவது அவுட்-ஆப்-கோர்ட் செட்டில்மென்ட் பண்ணலாம்னு நிர்ணயம் பண்றா.

ப்ரியதர்சனியண்டை வந்து, "என் கண்ணோல்லியோ, சொல்றதைக் கேளுமா"ன்னார் விஷ்ணு. உஷாரானப் பார்ட்டியோன்னோ? இன்னும் எக்கச்சக்கமா சாபம் கொடுத்துடப் போறாளேனுட்டு சர்வ ஜாக்ரதையா பேசறார்.

"என்ன?"ங்கறா எரிச்சலோட.

"நான் நெலமையைச் சொல்றேன், கோவிச்சுக்காதே. பிரதாபகுமாரனோட ஜீவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. ம்ருத்யுவானப்புறம் மனுஷ்ய ஜீவனெல்லாம் ஒண்ணுக் கொண்ணு வித்தியாசமில்லாம அடுத்த ஜன்மம் தீர்மானமாற வரைக்கும் அவாந்த்ரத்துல அலஞ்சிண்டிருக்கும். உன்னாலயும் சரி, என்னாலயும் சரி அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருக்கச்சே, திருப்பணும்னு நினைச்சாலும் அந்த ஜீவனை எப்படி திருப்பிக் கொண்டு வர முடியும்? நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாருமா"

"ஆமாம்.. யோசிச்சுப் பாருமா"னு அஞ்சு தடவை தலையாட்டறா சிவனும், பிரம்மாவும்.

சத்யமான காதல் இருக்கு பாருங்கோ, அது கல்லை விட நெருக்கமா உடைக்க முடியாம சாஸ்வதமா இருக்கும்பா. ப்ரியதர்சனி பிரதாபகுமாரன் காதல் அந்த மாதிரி சாலிட் ராக்கில்லையோ?

ப்ரியதர்சனி விடறதாயில்லை. "அது மனுஷ்ய ஜீவன் தானே? பிரதாப ராஜாவாலே கண்டுபிடிக்க முடியும். தோப்பனார் கூப்பிட்டா, பிள்ளையோட ஜீவன் வராமலா போகும்? அவரை அனுப்பி அந்த ஜீவனைக் கூட்டிண்டு வந்து, இந்த ஒடம்போட மறுபடி சேத்து வையுங்கோ"னு அடம் பிடிக்கறா.

எல்லா தேவாளும் பிரதாப ராஜா கிட்டே வந்து கெஞ்சறா.

யாருமே கண்ணுக்கு தெரியலை, ஆனா தினுசு தினுசா குரல் மட்டும் கேக்கறது, ராஜாவுக்கு ஒண்ணும் புரியலை. கலங்கிப் போறார். பிள்ளையையும் பறி கொடுத்துட்டு, இப்படி பைத்தியம் மாதிரி காத்துல சத்தம் கேக்க ஆரம்பிச்சுதுன்னா, யாருக்குத் தான் கலக்கமா இருக்காது?

எல்லாத்தையும் பாத்துட்டு, சிவன் சொல்றார். "தேவாள்ளாம் சித்த சாந்தமா இருங்கோ. பிரதாப ராஜா கொழம்பி பயந்து போயிருக்கார். பிரதாபா, நான் மகாதேவன் பேசறேன். ப்ரியதர்சனி போட்ட சாபத்துனால நாங்க எல்லாரும் மனுஷா கண்ணுக்குத் தெரியாம போய்ட்டோம். பழைய நிலைக்கு வரணும்னா, உன் பையனைத் திருப்பிக் கொண்டு வந்தாத்தான் முடியும். எங்களால மனுஷ்ய ஜீவன்களைக் கண்டு பிடிக்க முடியாது. நீதான் அவாந்த்ர லோகத்துக்குப் போய் உன் பிள்ளை ஜீவனோட குரலை வச்சுக் கண்டுபிடிச்சுத் திருப்பிக் கூட்டிண்டு வரணும். உடனே போ, உன் பிள்ளையோட ஜீவன் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ மறு ஜென்மத்துக்கோ போயிட்டா திருப்பிக்கொண்டு வரவே முடியாது. தயவு செஞ்சு உன் பிள்ளையைக் கண்டுபிடிச்சு எங்களையும் காப்பாத்துப்பா"னு வேண்டிக்கறார் நடராஜர்.

பிரதாப ராஜாவுக்கோ கோவம் கோவமா வர்றது. "தேவாள்ளாம் சேந்து இப்படிக் கூத்தடிக்கறேளே?"னு கத்தறார். ப்ரியதர்சனியைக் கூப்பிடறார். "அம்மா, இதெல்லாம் சத்யமான வார்த்தை தானா?"னு கேக்கறார். "ஆமாம்.. தயவுசெஞ்சு உடனே போங்கோ"னு அவளோட அழுகையானக் குரல் மட்டும் கேக்கறது.

"சரி, அவாந்த்ரத்துக்கு எப்படிப் போறது? யார் என் கூட வருவா? நேக்கு வழி தெரியாதே?"னு கேக்கறார் பிரதாப ராஜா.

சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவைப் பாக்கறா. பிரம்மா வேற வழியில்லாம, "நான் கூட்டிண்டு போறேன்.. பிரதாப ராஜா.. உம்ம வலது கையைக் கொடும்"னு சொல்றார். தட்டித் தடவி பிரதாபனோட வலது கையைப் பிடிச்சுண்டார் பிரம்மா.

"பொண்ணே.. எங்க இருக்கே? நான் திரும்பி வரவரைக்கும் இவன் உடம்பைப் பத்திரமா பாத்துக்கோ, உன்னை நம்பித்தான் போறேனாக்கும்"னு சொல்லிட்டு, தன் கையைப் பிடிச்ச பிரம்மாவோட அவாந்த்ரத்துக்கு கிளம்பினார் பிரதாப ராஜா.

இந்த ஆள் கையை விட்டு ஓடிறாம இருக்கணுமேனு யோசிக்கறார் பிரம்மா. நிலமை கையை விட்டுப் ஓடிடும் போலருக்கேனு சிவனும் விஷ்ணுவும் ரொம்ப யோசிக்கறா. நிலமையை எப்படிக் கைக்குள்ளே போட்டுக்கறதுனு நிதானமா யோசிக்கறார் பிரதாப ராஜா.

மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.

மிச்ச கதை

10 கருத்துகள்:

  1. இந்தப் பாவத்தை மனுஷா கூட செய்ய மாட்டாளே? இனிமே உங்களைப் பாத்து இந்தப் பழக்கம் மனுஷாளுக்கு வந்துடுமே...

    -எக்ஸலண்ட்! இந்த வரிகளை ரொம்பவே ரசிச்சேன். பிரம்மாவும், விஷ்ணுவும், சிவனும், பிரதாப மகாராஜாவும் யோசிச்சுண்டே இருக்கட்டும். நான் கொஞ்சமும் யோசிக்காம அடுத்த கதோபாக்யானத்துக்கு வந்துடறேன்!

    பதிலளிநீக்கு
  2. அச்சச்சோ.....கொத்தவரங்கா கூட்டு இப்படி ஆய்டுத்தே! போட்டும்...பால்போளி தேவலாம்தானே?

    நம்மாத்துலே கரண்டு போனால் சட்ன்னு என்ன பண்றோமுன்னுச் சரியாச் சொல்லிப்புட்டேள்:-))))

    ப்ரியதர்சினி இப்படி சாபம் கொடுப்பளோ? அதான் நாராயணன் கண்ணுக்கே ஆப்டலை நேக்கு:(

    இப்படியும் செய்வளோ ஒருத்தி....ஹூம்....

    காத்துண்டு இருக்கேன் கதை கேக்க. சீக்கிரம் வாங்கோ.

    பதிலளிநீக்கு
  3. மோர்க்குழம்பு பச்சை மோர்க்குழம்பாயிருந்தா இன்னும் திவ்யமா இருக்கும். தேங்காத் தொவையலுக்கு சரி நிகர்! பால்போளி....ம்...ஹூம் சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு.... !

    விபாகம், அபாகம், அவாத்த்யம்,.... எனக்குப் புதுப் பிரயோகங்கள்! ஆனால் ஒன்று... சமைக்கர்துக்குத் திறமை மட்டும் பத்தாது! கைமணம் வேண்டும்!

    தேவ ஜோட்டு... ரொம்ப விசேஷம் போங்கோ...

    பதிலளிநீக்கு
  4. //பட்டாபிஷேகம் பண்ணி மகராஜாவா இருக்க வேண்டியவன் இப்படி பார்ட் பார்டா கழண்டிருக்கானே

    ஒரு கொலைக்கதையை நகைச்சுவையா சொல்றதுல சுவாரசியம் இருக்கு. நடுவுல உங்க பிரசாரம் வேறே.

    பதிலளிநீக்கு
  5. எதைச் சொல்ல, எதை விட.....

    பிரசங்கத்தின் ஒவ்வொரு பகுதியும் அருமை...

    பிரசங்கத்தின் அடுத்த பகுதிக்காய் ஆவலுடன் வெயிட்டிங்....

    பதிலளிநீக்கு
  6. கற்பனைக்குதிரை வேகமாப் பறக்கிறாப் போல் இருக்கு. பறக்கட்டும்; பறக்கட்டும் இதிலே சில கேள்விகள் எல்லாம் இருக்கு எனக்கு. அதை எல்லாம் இப்போக் கேட்டால் கதைப்போக்கு மாறிடும். ஆகவே வெயிட்டிங்!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  7. கீதசாம்பசிவம் கருத்துக்கு என்'ditto'

    பதிலளிநீக்கு
  8. //எதுக்குச் சொல்றேன்னா, இப்ப அம்ருதமாச் சாப்பிட்டாலும் எட்டுமணி நேரத்துல..//

    அந்த 8 மணி நேர (இது 'எங்கள்' எட்டு இல்லே; ஆக்சுவல் 8) தங்கலுக்கு கியாரண்டி கொடுக்கறது தான் அம்ருதமான சாப்பாடு, இல்லையா?

    //தேவ ஜோட்டாலயே அடிக்க மாட்டாளோ? //

    ஜோடு கூடா தேவ.. ரகளை தான்!

    //இதுல பாருங்கோ, தேவர்கள் எல்லாரும் ஜீவராசிகளோட கண்ணுக்குத் தெரியாம போகட்டும்னுதான் சாபம் குடுத்தா ப்ரியதர்சனி. கண்ணுக்கே தெரியாமப் போகட்டும்னு குடுத்திருந்தா..//

    Wonderful Explanation!

    //இந்த ஆள் கையை விட்டு ஓடிறாம இருக்கணுமேனு யோசிக்கறார் பிரம்மா. நிலமை கையை விட்டுப் ஓடிடும் போலருக்கேனு சிவனும் விஷ்ணுவும் ரொம்ப யோசிக்கறா. நிலமையை எப்படிக் கைக்குள்ளே போட்டுக்கறதுனு நிதானமா யோசிக்கறார் பிரதாப ராஜா.//

    ஒரு கை விளையாட்டு! சும்மா 'ப்பூ'ன்னு ஊதித் தள்ளிட்டீங்களே, அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  9. இப்படிஒரு கதோபாக்யானம் செய்ய அப்பாதுரையால் மட்டுமே முடியும்.superb

    பதிலளிநீக்கு
  10. \\\ஆமாம்.. யோசிச்சுப் பாருமா"னு அஞ்சு தடவை தலையாட்டறா சிவனும், பிரம்மாவும்.///
    ரசித்தேன்.
    கலக்குறீங்க அப்பாஜி

    பதிலளிநீக்கு