2012/12/28

கனவு பலி...க்கும்




"வாங்க டாக்டர் ஜேம்ஸ்" என்றார் மணிவண்ணன்.

"அவசரமாக என்னைப் பார்க்கச் சம்மதித்ததற்கு நன்றி, டாக்டர் மணி" என்றார் அரைப் புன்னகையுடன் அறையுள் நுழைந்த ஜேம்ஸ். "இந்தப் பிரச்சினை என்னைக் குடைஞ்சிட்டே இருக்கு. நானே விக்டிம் ஆயிட்டது நம்ப முடியலே"

"உக்காருங்க.. ப்லீஸ் செடில்" என்று சாய்விருக்கையைச் சுட்டினார் மணி.

"முதல்லயே சொல்லிடறேன் டாக்டர் மணி.. இது கொஞ்சம் விபரீதமான கேஸ்.." சொகுசுச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து மெள்ளச் சாய்ந்து கொண்டார் ஜேம்ஸ்.

"பொறுமையா விவரம் சொல்லுங்க.. எந்த விபரீதமானாலும் வி ஷல் கம் அவுட் டுகெதர்" என்றபடி ஜேம்சின் தலையருகே இருந்த ஒரு நேர் நாற்காலியில் அமர்ந்துத் தன் ஐபேடைத் தட்டி எழுப்பினார் டாக்டர் மணி.

அரை டசன் பெருமூச்சுகளுக்குப் பிறகு பேசத் தொடங்கினார் ஜேம்ஸ்.

"ரெண்டு மாசம் முன்னே டாக்டர் விமலா என் க்லினிக் வந்தாங்க. தன்னை ட்ரீட் பண்ண முடியுமானு கேட்டாங்க"

"யு மீன்..?"

"ஆமா.. அவங்களே தான்.. பிரபல உளவியல் மருத்துவரான விமலா எங்கிட்டே ட்ரீட்மென்ட் தேடி வந்திருக்காங்களேனு ஆச்சரியமா இருந்துச்சு எனக்கு. எல்லா மருத்துவர்களுமே நோயாளிகள் தான்னு கல்லூரியில படிச்சது நினைவுக்கு வந்துச்சு. பட் வந்திருக்குறது விமலான்றதால மரியாதை கலந்த பயத்தோட சிகிச்சையைத் தொடங்கினேன்.."

"ம்ம்.."

"ஆறு மாசம் முந்தி அவங்களைத் தேடி ஒரு பேசண்ட் வந்தாராம்.. தொடர் கனவின் விளைவாக தூக்கமிழந்ததாகச் சொன்னாராம்.."

"ம்ம்.. தொடர்ந்து சொல்லுங்க.."

"கோட்டூர்புரம் ஸ்டேசன்ல சென்னை பீச் போற வழியில நின்னுட்டு இருக்கேன் டாக்டர்.. மதியம் பனிரெண்டு மணி இருக்கும்.. காலேஜ்ல செமஸ்டர் பரீட்சைக்குப் போவணும்.. கூட்டம் அதிகம் இல்லே.. மொதல்ல ஒரு ஆளு வரான்.. கைல ஒரு கறுப்பு க்ளவுஸ் போட்டிருக்கான்.. பாக்சிங் எல்லாம் பண்றாங்களே அது போல பருத்து வெயிட்டா இருக்குது அவன் கை.. காத்துல குத்து விடுறாப்புல கையை வீசி நடந்துகிட்டு வரான்.. அதுக்கு பயந்துகிட்டே வழியில நின்ன சிலபேருங்க நவுந்து ஒதுங்குறாங்க..

..இந்த ஆளு என்னைத் தாண்டிப் போவுறான்.. கொஞ்ச நேரத்துல இன்னொரு ஆளு வரான்.. அவன் ஒரு பொண்ணை இழுத்துட்டு வராப்புல இருக்குது.. பக்குனு ஆவுது எனக்கு.. ஆனா அந்தப் பொண்ணு தானாவே அவன் கூட வராப்புலயும் இருக்குது.. வயசுப் பொண்ணு.. பச்சைக் கலர் சட்டையும், ஜீன்சும் போட்டுகிட்டிருக்கு.. தயங்கித் தயங்கி அதே நேரம் பலாத்காரத்துக்குப் பயந்து வராப்புலவும் இருக்குது.. பக்குனு ஆவுது எனக்கு..

..என்னைத் தாண்டிப் போவுறப்ப கவனிச்சேன்.. பொண்ணு மூஞ்சி பேயடிச்சாபுல இருக்குது.. கண்ணுல தண்ணி காஞ்சிருக்குது.. ஆனா அந்தாளு பொண்ணை இழுத்துகிட்டு போயிட்டே இருக்கான்.. 'யாராவது உதவி செய்யுங்களேன்.. ஐயோ.. தயவு செய்து யாராவது என்னைக் காப்பத்துங்க'னு அந்தப் பொண்ணு அமைதியா அழுதுகிட்டே வேண்டுறாப்புல இருக்குது.. ஆனா வாய் திறந்து கத்தக் காணோம்.. யாரும் கண்டுக்கிட்டதாகவே தெரியலிங்க.. அதுக்குப் பிறகு பத்தடி தள்ளி இன்னொரு ஆள் கைல பாக்சிங் உறை மாட்டிக்கிட்டு அவங்க பின்னால போறான்..

..என்னால எதுவும் செய்யாம இருக்க முடியலே.. ஆனா என்னா செய்யுறதுனு தோணலே.. செல்போன் எடுத்து போலீசுக்கு சொல்லலாம்னு பாத்தேன்.. பக்கத்துல நின்னுட்டிருந்த ஆளு என் செல்போனை தட்டி விட்டான்.. 'தம்பி.. உன் வேலையைப் பாரு.. வம்புல மாட்டிக்காதே'னு கிசுகிசுனு சொல்றாரு..

..செல் போனை எடுத்துப் பையில போட்டேன்.. அந்தப் பொண்ணுக்கு எதுனா உதவி செய்யணும்னு துடிக்குது மனசு.. அந்தப் பொண்ணை எங்க கூட்டிக்கிட்டுப் போறான்னு பாத்துருவோம்னு அவங்க பின்னால போனேன்.. காலேஜுக்குப் போவணும்னு ஒரு அலாரம் மனசுல அடிக்குது.. ஆனா அந்தப் பொண்ணோட முகம் என் மனசுல பெரிய பீதியைக் கிளப்பி விட்டுருச்சு.. ஒரு ஆதரவில்லாத பொண்ணுன்றது மட்டுமில்லே.. இப்படி பொதுமக்கள் நடுவுல பட்டப்பகல்ல எங்க கண் முன்னாலயே இழுத்துட்டுப் போற அக்கிரமத்தைத் தாங்க முடியலிங்க.. எதுனா செய்யணும்னு வேகம்..

..நான் அந்தப் பொண்ணு கிட்டே போய் நின்னேன்.. வண்டி வந்துச்சு.. ஏறினாங்க.. நானும் சட்டுனு அவங்க கூடவே ஏறினேன்.. அந்தப் பொண்ணு கிட்டே ரொம்பத் தெரிஞ்சவன் போல 'என்னம்மா? எக்சாம் போவலியா?'னு கேட்டேன்.. அந்தக் காலிப் பசங்க விலகிடுவாங்கனு நெனச்சது தப்பாப் போச்சு.. வண்டி கிளம்பினதும் அந்த ஆளு என்னை அப்படியே ப்ளேட்பாரத்துல தள்ளி விட்டான்.. விழுந்து புரண்டு கை காலெல்லாம் அடி..

..மறுநாள் மதியம் ஸ்டேசன்ல நின்னுட்டிருக்கேன்.. சீக்கிரமே வந்துட்டனா.. அங்க இங்கே பார்வை மேஞ்சிட்டிருக்குறப்ப அதே பொண்ணைப் பார்த்தேன்.. அவசரமா அதுகிட்டே போய் 'மேடம்.. நேத்து நீங்க.. உங்களுக்கு எதுனா ஆயிடுச்சுனு பயந்துட்டிருந்தேன்.. அந்த ஆளுங்க..'னு இழுத்தேன்.. அந்தப் பொண்ணு சுருக்குனு 'மிஸ்டர்.. உங்க வேலையைப் பாத்துகிட்டு சும்மா இருங்க'னுச்சு..

..அஞ்சு நிமிசமோ பத்து நிமிசமோ இருக்கும்.. மொத நாள் பாத்த அதே ஆளு வந்தான்.. வேகமா அவ கிட்டே வந்து நின்னான்.. எதிர்பார்க்கவே இல்லிங்க.. பட்னு அவ கன்னத்துல அறைஞ்சான்.. ஆடிப்போயிட்டேன்.. என்னவோ திட்டினான்.. அதுக்கு அந்தப் பொண்ணு என்னவோ சொல்லி அழுவுது.. என்ன ஆனாலும் பரவாயில்லேனு நான் அந்த ஆள்கிட்டே போய் 'மிஸ்டர்.. என்ன அந்தப் பொண்ணை இப்படி அடிக்கிறீங்க? போலீஸ் கம்ப்லெயின் குடுக்கறேன்னு சொல்லி அவனை அங்கயே செல்போன்ல போட்டோ எடுத்தேன்.. அவன் என் போனைப் பிடுங்கத் தாவினான்.. நான் சட்டுனு ஓட ஆரம்பிச்சேன்.. அவன் என்னைத் துரத்தினான்.. நான் 'மேடம்.. ஓடிறுங்க.. ஸ்டேசன் டிகெட் கவுன்டர்கிட்டே போலீஸ் நிக்குறாங்க.. போங்க'னு கத்திக்கிட்டே ஓடினேன்... அந்த ஆளு என்னைத் துரத்திட்டு வந்துப் பிடிச்சுட்டான்.. செத்தடானு சொல்லிக் கத்தியை உருவினான்.."

"கனவு அங்க நின்னுடுச்சாம்.. சரியா அந்த இடத்துல தினம் அந்தாளு முழிச்சுக்குவானாம்.. அப்புறம் தூக்கம் வராம ரா முழிச்சு தவிப்பானாம்.." என்றார் ஜேம்ஸ்.

"ம்ம்.."

"டாக்டர் விமலா அவனுக்கு முதல்ல மெலடனின் ட்ரீட்மென்ட் குடுத்தாங்க.. ரெண்டு வாரமோ என்னவோ கொடுத்து அதுக்குப் பிறகும் நிலமை கொஞ்சம் கூட இம்ப்ரூவ் ஆவலியாம்.. பிறகு நாலு வாரம் லைட் பேர்பசுரேட் கொடுத்துப் பாத்தாங்க.. நோ யூஸ்.. ஒரு நாள் ட்ரீட்மென்டுக்கு வந்த ஆளு எழுந்து விமலா எதிர்ல நின்னு நிதானமா ஒண்ணு சொன்னானாம்.. பிறகு திடீர்னு விமலா டேபிள் மேலே இருந்த கத்தரிக்கோலை எடுத்து பச்சு பச்சுனு நாலஞ்சு தடவை மார்ல குத்திக்கிட்டானாம்.. ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போறதுக்குள்ளாற க்லினிகலி டெட்.. ஆர்டீரியல் லேசரேசன்.."

"குட்னஸ்!"

"அதுக்குப் பிறவு ஒரு மாசமோ என்னவோ பொறுத்து விமலா என் க்லினிக் வந்தாங்க.."

"ம்ம்.. அதானா? குத்திக்கிடறதுக்கு முன்னால என்ன சொன்னானாம்?"

"இங்க தான் விபரீதம் தொடங்குது டாக்டர் மணி.. சொல்றேன்.."

"சொல்லுங்க.."

"டாக்டர் விமலாவுக்கு அதே கனவு வரத் தொடங்கிச்சாம்.. முதல்ல அவங்க சைகோ அனேலிசிஸ் செய்யுறதா வேணாமானு குழம்பி அப்படியே விட்டுட்டாங்க.. ஆனா தினம் தூக்கம் கெட்டுப் போனதும் என் கிட்டே வந்தாங்க.. நான் நாலஞ்சு வாரம் அவங்களுக்கு பேர்பசுரேட்டும் அமிட்ரிடைலினும் குடுத்தேன்.. ஹிப்னோசிஸ் சிகிச்சையும் குடுத்தேன்.."

"ம்ம்."

"ரெண்டு மாசம் முன்னே க்லினிக் வந்து, கனவு நின்னுடுச்சு, ரொம்ப தேங்க்ஸ்னாங்க.. பிறகு எழுந்து என்னெதிரே வந்தாங்க.. என் கண்ணைப் பாத்தாங்க... அவங்க பேசன்ட் சொன்னதை ரிபீட்.. அப்படியே என் கிட்டே சொன்னாங்க. நான் சுதாரிக்கறதுக்குள்ளாற தன் கைப்பையிலிருந்த ரிவால்வர்னால பின் கழுத்துல சுட்டுக்கிட்டாங்க.. யு நோ தி ரெஸ்ட்.."

"குட்னஸ்! அந்த க்லினிக்?"

"ஆமா.. அவங்க சுட்டுக்கிட்ட பிரபல மருத்துவமனை என்னுடைய க்லினிக் தான்.. பெயர் வராமத் தடுத்துட்டேன்.."

மணி புன்னகைத்தார். "டாக்டர் ஜேம்ஸ்.. உங்களுக்கு இப்ப இந்தக் கனவு வருதுனு சொல்றீங்க.. சரியா?"

"ரைட்.. மூணு வாரமா தினம் அதே கனவு.. வெயிட் பண்ணி வெயிட் பண்ணிக் கடைசியிலே உங்க கிட்டே வரலாம்னு முடிவு செஞ்சேன்.."

"என் திறமைல நம்பிக்கை வச்சு என் கிட்டே வந்ததுக்கு நன்றி டாக்டர் ஜேம்ஸ்.. கவலைப்படாதீங்க.. இது இனி நீடிக்காம பாத்துக்குவேன்.. நீங்க உடனே என் கிட்டே வந்திருக்கணும்"

"என்னோட கவலை அதில்லே டாக்டர் மணி.. கனவு என் கிட்டேயிருந்து உங்க கிட்டே வந்தப்பிறகு.. எனக்கு சாக விருப்பமில்லே.. அதுக்கு மேலே.. உங்க சாவுக்கு நான் காரணமாகிறேனேனு எனக்கு கில்ட்.."

"டேக் இட் ஈஸி, என் மேசைல கத்தரிக்கோல் துப்பாக்கி எதுவும் கிடையாது.. இனி இங்க வரப்ப உங்களைச் சோதனை செஞ்சுதான் உள்ளே விடுவேன்.. பர்கிவ் மி.." என்று மணி சிரித்தார். "டாக்டர் ஜேம்ஸ், மைல்ட் பேர்பசுரேட்ல தான் நானும் உங்க சிகிச்சையைத் தொடங்கப் போறேன்..".

டாக்டர் மணி சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்தார். எதிரே இருந்தவரை நெருங்கினார்.

மிக அமைதியான குரலில், "டாக்டர்.. எனக்கு சரியாயிடுச்சு.. கனவு நின்னுடுச்சு.. உங்க பத்து வாரச் சிகிச்சைக்கு நன்றி. ஆனா இப்பலேந்து கனவு உங்களுக்கு தொத்திக்கும்.. என்னையும்.. எனக்கு முன்னால டாக்டர் ஜேம்ஸ், டாக்டர் விமலா, அவங்க பேசன்ட் போல.. உங்க தூக்கத்தையும் கெடுக்கும்.. பலி கூட வாங்கிரும்.. குட்பை டாக்டர் சுதா" என்று சடுதியில் ஓடி, பதினோறாம் மாடி ஜன்னல் கண்ணாடிக் கதவை உடைத்துக் குதித்தார்.



புத்தாண்டு வாழ்த்துக்கள்

2012/12/17

அறுந்த காற்றாடி


3


◄◄   1   2


    றுநாள் காலை நான் வேலைக்குக் கிளம்பும் நேரத்திலும் அவர்கள் எழவில்லை. தூங்கட்டும் என்று ஓசை தவிர்த்துக் கிளம்பினேன். அரை நாள் விடுப்போடு மதியம் வீடு திரும்பினேன். மனம் ஏனோ இலேசாகியிருந்தது. முதல் நாளிருந்த அச்சமும் ஆத்திரமும் இல்லை. 'அஞ்சுவது ஒளியையா, இருளையா?' எனும் ப்லேடோவின் சித்தாந்தக் கேள்வி, காரணமில்லாமல் நினைவுக்கு வந்தது. பத்தடித் தண்ணீருள் மூழ்கி மூச்சுவிட்ட உணர்வு.

கவனமாக உள்ளே நுழைந்து, உடனே கதவடைத்தேன். கிச்சனில் மாமி ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார். "வாப்பா. டேபிள் மேலே எல்லாத்தையும் வசதியா எடுத்து வச்சுட்டுப் போயிட்டியே? இருந்த துவரம்பருப்பை வைச்சு மிளகு ஜீரா அரைச்சு ரசம் பண்ணியிருக்கேன். சாப்பிடறியா? காய்கறி எதுவும் காணோம், சிப்ஸ் இருக்கு.."

மனதுள் குறித்துக் கொண்டேன். மளிகை வாங்க வேண்டும். "நீங்க சாப்பிடுங்க. நான் கேன்டீன்ல சாப்பிட்டாச்சு. என்னென்ன வாங்கணும்னு சொல்லுங்க, வாங்கிட்டு வறேன்"

"அப்புறம் போய்க்கலாம். ரெஸ்டு எடு" என்றார் மாமி. இந்த அக்கறை எனக்குக் கொஞ்சம் புதுமையாக இருந்தது. என் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

"நேத்திக்கு உனக்கு சரியா நன்றி சொல்ல முடியாம போயிடுத்துப்பா" என்றார் மாமி. "பேஸ்மென்டுல வேண்டாம், நாங்க உங்கூடத்தான் தங்கணும்னு நீ ரொம்பப் பிடிவாதமா இருந்ததா ரகு சொன்னான். என் பிள்ளையாட்டமா இப்படி எங்களைத் தாங்குறியே..?" என்ற மாமியின் குரல் கம்மியது. "ரொம்ப தேங்சுப்பா.. என்னால எந்தக் கைம்மாறும் செய்ய முடியாம இருக்கே?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமி" என்றேன். எனக்குக் கூசியது. அப்படியா சொன்னான் ரகு? இவர்களிடம் என் நேற்றைய மனநிலையை இப்போது எப்படிச் சொல்வது? "மாமி, நான் ஒண்ணு கேக்கலாமா? இந்த வயசுல எதுக்காக இப்படி இமிக்ரேசனுக்குப் பயந்து பயந்து ஓடணும்? உங்களுக்கு இது கஷ்டமில்லையா?" என்றேன், தயங்கி.

"பயம் இல்லே. என்ன பயம்? இமிக்ரேசன்காரா அவா வேலையைப் பண்றா. இதெல்லாம் 'அடிக்கறாப்ல அடிக்கறேன், அழறாப்ல அழு' விளையாட்டு. கொஞ்சம் யோசிச்சா உனக்கே புரியும். என்னையும் மாமாவையும் பிடிச்சு கேஸ் போட்டா, அவாளுக்குத்தான் கஷ்டம். நஷ்டம். அவர் படத்தைப் போட்டு இமிக்ரேசனைப் பத்திரிகைக்காரா கிழிச்சிடுவா. எத்தனையோ கேடிகள் இருக்கச்சே எங்களால யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லேனு அவாளுக்கு நல்லாத் தெரியும். இது ஒண்ணும் புதுசு இல்லை. அப்பப்போ இந்த மாதிரி விரட்டுவா.. சங்கடம் தான். அங்க இங்கே தங்கிட்டு அப்புறம் மூணு மாசம் கழிச்சு மறுபடி கடை போட்டுப் பிழைக்கணும். ஆனா எங்கக் கஷ்டம் அது இல்லேப்பா"

மாமியின் யதார்த்தம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. காரணமில்லாமல் பயந்தேனா? மாமி வெகுளியல்ல என்றுப் புரிந்தது. "இருந்தாலும்.. இந்த மாதிரி சிரமப்படறதுக்கு பதிலா.. இந்தியா வேணும்னா போயிடறேளா? நான் என்னால ஆனதைப் பண்றேன்.. உங்க கஷ்டம் என்ன அப்போ?" என்றேன்.

"எங்க கஷ்டம் நாங்க தான். இந்தியா போகலாம், பிரச்சினையில்லே. அஞ்சு வருஷமாத்தானே இங்கே இருக்கோம்? அங்கே இவரோட பூர்வீக சொத்து ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் இருக்கு. ஆள் அட்ரெஸ் காணோம், ஆக்சிடெண்டு ஆச்சுனு தெரிஞ்சு இவரோட தம்பிமார் எல்லாம் வீடு நிலத்தையெல்லாம் இத்தனை நேரம் எடுத்துண்டிருப்பா. ஒரு தபால் கூட போடமுடியாம போச்சே? இப்ப நாங்க போனா நடுத்தெருல நிக்காட்டாலும்... சிரமம். ஆனா அடிச்சுப் புடிச்சாவது எங்க சொத்தைத் திரும்ப வாங்கிடுவேன். அதெல்லாம் பிரச்சினையில்லே. அங்கே போனா வசதியா இருக்கலாம். ஆனா அதுல எங்களுக்கு விருப்பமில்லேப்பா.."

"புரியலியே.. அங்கே வசதியா இருக்கலாம்னா இங்கே ஏன் இப்படி கஷ்டப்படணும்?"

"என் பிள்ளை, மருமகள், சந்ததி எல்லாத்தையும் இங்க தானேப்பா பறிகொடுத்தோம்? இங்கே தானே இருக்கா அவா? இந்த மண்லயும் இந்தக் காத்துலயும் தானேப்பா அவாளை உணர்ந்துண்டிருக்கோம்? உனக்கு வேணும்னா கேலியா இருக்கலாம், ஆனா என் பேத்தியோட வாசனை இங்கே தானே மூக்குலயே நிக்கறது? ஆக்சிடென்டு ஆனப்போ என் பேரக் குழந்தைகளுக்கு ரெண்டு வயசு கூட முடியலே. அந்தச் சின்னக் குழந்தைகளோட மூச்சு இன்னும் இதோ என் கழுத்துல பட்டுண்டே இருக்கேப்பா? இப்படி நான் ஒரு தோள்லயும் இவர் ஒரு தோள்லயும் வச்சுண்டு தூங்கப் பண்ணுவோம்..

..இப்பத்தான் பேச்சு வரலியே தவிர, இவர் நல்லாப் பாடுவார் தெரியுமோ? 'க்ருஷ்ணா.. ப்ரிய க்ருஷ்ணா.. கோவர்த்தனம் கொண்ட கை வலியோ.. காளிங்கனை வென்ற மெய் வலியோ.. கண்ணுறங்கு மணிவண்ணா''னு, என் பையன் குழந்தையா இருந்தப்போ நான் பாடித் தூங்கப் பண்ணுவேன். அந்தப் பாட்டை ஞாபகம் வச்சுண்டு இவர் பேரக்குழந்தைகளைப் பாடித் தூங்கப் பண்ணுவார். ரெண்டும் பட்டுக் குழந்தைகளோனோ? புஸ் புஸ்னு வேக வேகமா மூச்சு விட்டுண்டு தோள்லயே தூங்கிடும். ரெண்டுத்தையும் கைலயே வச்சுண்டிருந்தா எங்களுக்கு கை வலிக்கும்.. கீழே இறக்கினாலோ மனசு வலிக்கும்.. அப்படியே முடிஞ்ச வரைக்கும் தோள்லயே வச்சுண்டிருப்போம்..

..ஹ்ம்ம்.. இந்தியால்லாம் வேண்டாம்பா. எங்களுக்கு இங்கயே, இந்த மண்லயே, பிராணனை விட்டு அவாளோட கலக்கணும்.. இங்கயே பிராணனை விட்டா அவாளோட கண்டிப்பா சேந்துப்போம்னு ஒரு நம்பிக்கை. அந்த உலகம்மை அதையாவது எங்களுக்குச் செய்வானு ஒரு நம்பிக்கை.." என்று மாமி மீண்டும் கலங்கினார்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தோம். எனக்கு ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஒரு எண்ணம் கூடத் தோன்றவில்லை. மாமி சொன்னதைக் கேட்டு ஆடிப்போயிருந்தேன்.

"உனக்கு இது புரியாமப் போகலாம். இளப்பமா கூட இருக்கும்" என்றார் மாமி மூக்கை உறிஞ்சியபடி.

அந்த சோகத்திலும் மாமி களையாக இருந்தார். எனக்குப் பரிதாபமாக இருந்தது. "இல்லை மாமி. உங்க நம்பிக்கைல தப்பே இல்லை.."

"ஒத்தொத்தர் சுமங்கலியா போகணும்னு வேண்டிப்பா. ஆனா இவரை உடனே அழைச்சுக்கோடி உலகம்மைனு நான் தினம் வேண்டிக்கிறேன். ஏதுடா இப்படிப் பேசறாளேனு பாக்காதே. நான் போயிட்டா இவரை யாரும் கவனிக்க மாட்டானு இல்லே. ஏதாவது அனாதை ஆசிரமத்துலே யாராவது கவனிப்பா. இல்லேன்னா தெருவுல நாறிக் கிடந்துட்டுப் போறார். இன்னிக்கு செத்தா நாளைக்கு ரெண்டு. நான் செத்தப்புறம் இவர் உடம்பு கஷ்டம் நேக்கென்ன தெரியவா போறது? அதைப் பத்தி அவருக்கும் காலணா அக்கறை கிடையாது. ஆனா நான் அப்படிப் போயிட்டா, இவர் மனசு நாறிப் போயிடும். மனசு வெம்பியாச்சுனா, உடம்பு இரும்பா இருந்தாலும் துருப்பிடிச்சுருமேப்பா..?..

..ரெண்டு பேரும் எத்தனை சந்தோஷமா இருந்தோம்! ஆக்சிடென்டுக்கு முன்னால நாங்க சிரிக்காத நாள் கிடையாது.. எங்களுக்குள்ளயோ இல்லை பேரக்குழந்தைகளோடோ கொஞ்சாத நேரம் கிடையாது. இப்ப எங்களுக்கு இருக்கறதெல்லாம்.. அந்த சந்தோஷத்தோட நிழல். ஞாபகங்கள். அவ்ளோதான். அந்த சந்தோஷமெல்லாம் காத்தாடி மாதிரி எங்க மனசுல சுத்திண்டேருக்கு. ஒருத்தொருக்கு ஒருத்தர் துணையா இருக்கச்சே அது பலம். ஒருத்தர் போயிட்டா அதே நினைவுகள் பாரமாயிடும். அந்த ஞாபகங்கள் எல்லாம் அப்படியே விஷ அம்பா மாறி அவர் மனசைக் குதறி எடுத்துடும். உடம்பு கிடந்து நாறட்டும், இவர் மனசு நாறக்கூடாதுப்பா"

"என்ன சொல்றதுனே தெரியலே மாமி. உங்களுக்காகவாவது இவர் சீக்கிரம் உயிர் விடணும்னு தோணுது, சொல்றேனேனு தப்பா நினைக்காதீங்கோ" என்றேன் தயங்கித் தயங்கி.

"நானும் அதைத்தான் வேண்டிக்கிறேன். புத்திர சோகம் பௌத்திர சோகம் ரெண்டும் பாத்தாச்சு.. சரி பொட்டுனு போயிடும்னு பாத்தா, உசிர் இலுப்பச்சட்டி பிசுக்காட்டம் ஒட்டிண்டுனா இருக்கு..?..

..இவருக்கு முன்னால நான் போயிடணும்னு தினம் வேண்டிக்கிறார் சைவப்பிள்ளைவாள். வாய் பேசாட்டா என்ன? இவர் நினைக்கறது நேக்குத் தெரியாதா? அதே லாஜிக்கு தான். அவர் போயிட்டா என் மனசு நாறிடுமாம். ஏன்னு கேளு.. என் மனசுல இவர் முழுக்க முழுக்க இருக்காராம், அதனால என் மனசு நாறக்கூடாதாம். என்ன சுயநலம் பாரு.. கையைக் காணோம், காலைக் காணோம், வாயைக் காணோம்னா பிசுநாறிப் பிராமணர் போகவும் காணோம்.. என்னையே நினைச்சுண்டு நைநைனு உசிரைப் பிடிச்சிண்டிருக்கார்.." என்று மாமி கண்களைத் துடைத்துக் கொண்டார். "ரெண்டு பேரும் பொட்டுனு ஒரே டயத்துல போயிட்டா நல்லாயிருக்கும்"

ஆதரவாகச் சிரித்தேன். "அதெல்லாம் நடக்கிற காரியமா? நம்ம கைலயா இருக்கு?"

"எல்லாமே நம்ம கைலதான் இருக்கு துரை. ஆனா எசகு பிசகா நடந்துடக்கூடாதேனு பயம், அதான். எங்களால மனசால சந்தோசமா இருக்க முடியற வரைக்கும்.. மனசு நாறாத வரைக்கும் வாழ்ந்து பாத்துடணும். செத்தப்புறம் பேரக்குழந்தையோட வாசனை தெரியாதே?"

வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு மாமி அவசரமாக எழுந்தார். மாமியின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். "நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்ததுக்கு உண்மையிலயே இப்ப ரொம்ப சந்தோஷப்படறேன். கவலைப்படாம உள்ளே போய் உக்காருங்கோ" என்றேன். மெள்ள நடந்துக் கதவைத் திறந்தேன்.

ரகு. சிரித்தபடி உள்ளே வந்துக் கதவடைத்தான்.

    ரகுவைப் பார்த்ததும் முன்பிருந்த ஆத்திரம் திரும்பும் என்று நினைத்த எனக்கு வியப்பு. என் மனதைப் புரிந்தவன் போல் ரகு, "ரொம்ப தேங்க்ஸ்" என்றான். பெட்ரூமிலிருந்து வெளியே வந்த மாமியிடம், "எல்லாம் வசதியா இருக்கா?" என்றான். மாமி பதில் சொல்லுமுன், "நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போகணும், கவனமா இருங்கோ.." என்றான்.

"வேண்டாம் ரகு, மாமி விஷயம் தானே? இங்கயே பேசுவோம்" என்றேன்.

என்னைக் கீழாகப் பார்த்த ரகு, "யூ ஷூர்? மாமியை எங்கே கூட்டிண்டு போறதுனு முடிவெடுக்கணும்.." என்றான்.

"மாமியைப் பத்திப் பேசறதா இருந்தா அவங்க முன்னிலைல தான் பேசணும்.. எங்கே போறதுங்கற முடிவுல மாமிக்குப் பங்கு வேண்டாமா?"

மாமி எங்களிருவரையும் பார்த்தார். "ஒரு வாய் காபி சாப்பிடறேளா ரெண்டு பேரும்?"

"வேண்டாம் மாமி" என்றான் ரகு. "ஓகே துரை. அதுக்கு முன்னால உன்னோட இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். நன்றி சொல்லிடறேன். அதோட உனக்கு உண்டான அதிர்ச்சிக்கு நான் எத்தனை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. நான் உன்னை வஞ்சிக்கணும்னு நினைக்கவே இல்லை துரை, சத்தியமா உன்னை ஏமாத்தி இவங்களை இங்கே கொண்டு வர நினைக்கவில்லை" என்றான்.

நான் மாமியைச் சங்கடத்தோடு பார்க்க, மாமி அவசரமாக எழுந்து போவது போல் எழுந்து உட்கார்ந்தார். ரகு தொடர்ந்தான். "உன்னோட பேசினப்புறம் எனக்கு என்ன செய்யுறதுனே தெரியலே துரை. யுவான் கிட்டே இன்னும் ஒரு நாள் பேஸ்மென்டுல இவங்களை வச்சுக்க முடியுமானு கேட்டேன். அவன் 'மாமி எதுவும் சாப்பிடலே, கஷ்டமா இருக்கு'னு சொல்லி வருத்தப்பட்டான். உன் வீட்டுல கொண்டு விடறதா சொல்லியிருந்தேனா.. அதைப் பத்திக் கேட்டான். நம்ம பேச்சுவார்த்தை பாதிலயே முறிஞ்சு போச்சுனு சொன்னேன். அப்புறமா போன் பண்றேன்னு சொல்லி போனை வச்சுட்டான். அப்புறம் ரெண்டு மணி நேரம் கழிச்சு எனக்கு போன் செஞ்சான். ரெண்டு பேரையும் உங்க வீட்டுல விட்டு வந்ததா சொன்னான். எனக்கு பெரிய அதிர்ச்சி. உங்கிட்டே எப்படிச் சொல்றது? அவனே சொல்றதா சொன்னான். என்னை ரெண்டு நாள் வெளியூர் போகச் சொன்னான். அதான் நீ வந்தப்போ நான் இல்லை. நீ சும்மா வெயிட் பண்ண வேண்டாமேனு செக்யூரிடில ஊருக்குப் போறதா சொல்லிட்டுப் போனேன். ஆனா, ஐ குட் நாட் மேக் பீஸ் வித் மை கான்சியன்ஸ்..."

"இட் இஸ் ஓகே ரகு. நீ மேலே எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நான் தான் உங்கிட்டே மன்னிப்பு கேக்கணும். மாமி கிட்டேயும்.. மாமி என் வீட்டுல தான் தங்கணும்னு நான் சொன்னதா நீ மாமிகிட்டே சொல்லியிருக்கே. அதுக்கு நன்றி" என்று மாமியைப் பார்த்தேன். மாமி எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார். எனக்கு நாக் குழறியது. "மாமி.. என்னை மன்னிச்சுடுங்கோ.. நீங்க நெனச்ச மாதிரி நான் ஒண்ணும்.." என்று தடுமாறினேன்.

"நீயும் விழுந்துட்டியா மாமியோட வலையில?" ரகு பலமாகச் சிரித்தான். "எதுக்கு இவங்களுக்கு உதவுறேனு என்னைக் கேட்டியே? திஸ் இஸ் வை. மாமி மாதிரி ஆட்கள் நமக்கே தெரியாம நம்மை மனுசனாக்குறாங்க. நான் ஏன் அவங்களுக்கு உதவி செஞ்சேன்னு இன்னி வரைக்கும் எனக்குத் தெரியாது. உண்மையிலே நான் உதவி செய்யறதாக் கூட நினைக்கவே இல்லை. இது.. தர்மம்னு சொன்னா உனக்குக் கோபம் வரும். ஆனா இது ஒரு டைப் தர்மம். சுயதர்மம்னு வச்சுக்கயேன்? நீ என்னை விட எத்தனை சட்டம் பேசினே? தர்க்கம் பண்ணினே? எத்தனை லாஜிக் பார்த்தே? இப்ப என்ன ஆச்சு? சட்டத்துக்கு மேலே போய், நியாயம் என்ன நியாயத்துக்கு மேலே போய், தர்மம் என்ன தர்மத்துக்கும் மேலே போய், ஸ்வதர்மம்னா என்னனு புரிஞ்சுட்டிருக்கே.."

"ஐயம் சாரி ரகு. மாமி, நீங்களும் என்னை மன்னிக்கணும். நேத்திக்கு வீட்டுக்கு வர வரைக்கும், வந்தப்புறமும் கூட, என் மனசுல ஆத்திரமும் கோபமும் இருந்தது. ஆனா உங்களோட பேசினப்புறம், நீங்க சாதம் ஊட்டறதைப் பாத்தப்புறம்.. என்னவோ தெரியலே மனசு மாறிட்டேன். எப்படி இருந்தாலும் வீடு வந்தவங்களை வெளில துரத்தியிருக்க மாட்டேன்னாலும்.. நேத்திக்கு நான் ரொம்பக் குழம்பிப் போயிருந்தேன்.."

"போறதுப்பா.. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறே. வாழ்க்கைல நாம மனசால தினம் கொஞ்சமாவது உசரணும்னு இவர் அடிக்கடி சொல்வார். நீங்க ரெண்டு பேரும் ஆகாசத்துக்கே உசந்துட்டேள்.. நானும் இவரும் நாலு ஜன்மத்துக்கு உங்களுக்கு குழந்தைகளாப் பிறந்துத் தாங்கினாக் கூட இந்தக் கடனை அடைக்க முடியாது.. போறது விடுங்கோ"

ரகு மீண்டும் சிரித்தான். "வெளியில துரத்தறதப் பத்திப் பேசுவோம். என் கலீக் ஒரு மாசம் குடும்பத்தோட இந்தியா போறான். வெள்ளிக்கிழமை சாயங்காலத்துலந்து ப்ரீமான்ட்ல அவன் வீடு காலியா இருக்கும். நான் இவங்களை அழைச்சுட்டுப் போயிடறேன். அதுவரைக்கும்..." என்றான்.

"ஒரு மாசத்துக்கப்புறம்?" என்றேன்.

"அதுக்குள்ள இமிக்ரேசன் விளையாட்டு முடிஞ்சுரும். திரும்ப அங்கயே போயிடலாம், இல்லை ஒண்ணு ரெண்டு மாசத்துக்கு வேறே தற்காலிக இடம் பாத்துக்கலாம்"

"அதுக்கப்புறம் என்ன செய்வே?"

ரகு என்னைத் தீவிரமாகப் பார்த்தான். "வாட் டு யூ ஹேவ் இன் மைன்ட்?"

"இவங்களை ஒரு சர்க்கஸ் கம்பெனியா என்னால பாக்க முடியலே ரகு. தே நீட் எ ஹோம். நேத்து ராத்திரிலந்து யோசிச்சிட்டிருந்தேன். இன்னிக்குக் காலைல எங்க ஹெச்.ஆர் வக்கீல் கிட்டே ரொம்ப நேரம் பேசிட்டு வந்தேன். அம்னெஸ்டி இன்டர்நேஷனல்ல ப்ரோ போனோவா நிறைய வேலை செய்றாராம். அகதியா தஞ்சம் கேட்டா இவங்களோட நிலமையை வச்சு குடியுரிமை கிடைக்கலாம்னு சொல்றாரு. இவங்களுக்கு அசைலம் பெடிஷன் போடுவோம்"

ரகு வெடித்தான். நான் இதை எதிர்பார்க்கவில்லை. "வாட்? இவங்க பத்தின டீடெய்ல்ஸ் ஏதானும் கொடுத்தியா?"

"இல்லை.. பட் ஐ வில்"

"ஸ்டாப் இட். தஞ்சம் கேட்டு பெட்டிசன் போட்டா அதுக்கு சான்ஸ் எத்தனை பர்சன்ட்னு சொன்னானா உன்னோட வக்கீல்?"

"அஞ்சு சதவிகிதம்னு.."

"அப்ப மிச்ச தொண்ணூத்தஞ்சுக்கு எங்கே போகச் சொல்றான் உன் வக்கீல்? கிடைக்கலேன்னா இவங்க நிலமை என்ன ஆகும்னு சொன்னான் உன் வக்கீல்?"

"ரகு.. டேக் இட் ஈஸி. என் வக்கீல்னு சும்மா அழுத்தாதே.. னான் இல்லை, னாள்.. ஷி.. இஸ் ஏ லாயர், நாட் மை லாயர். அவ வேண்டாம், நீதான் மனு போடேன்?"

"இது எனக்குத் தெரியாம இருக்கும்னு நினைச்சியா? அமெரிக்காவை விட கேனடால சான்ஸ் அதிகம். அங்கே கூட நான் விசாரிச்சாசு.. இவங்களோ இங்கதான் உயிரை விடணும்னு இருக்காங்க. மாமி சொல்லியிருப்பாங்களே? அர்த்தமில்லாம நான் பண்ற ஆயிரம் லாஜிகல் விஷயங்களை விட, அர்த்தத்தோட நான் பண்ணின ஒரு இல்லாஜிகல் விஷயம்.. மாமியோட இல்லீகல் ஸ்டேடஸ்.. எனக்கு முக்கியம்னு இப்ப புரிஞ்சுட்டிருப்பியே?"

"உனக்கு முக்கியமா, மாமிக்கு முக்கியமா ரகு? முயற்சி கூட செய்யாம தீர்மானிச்சா? ஒருவேளை அம்னெஸ்டி வழியாக் குடியுரிமை கிடைச்சா? கேனடாவுல கிடைச்சாக்கூட இங்கே வந்து இருந்துட்டு ஒரு வருஷத்துக்கொருக்க கேனடா போய்ட்டுத் திரும்பிடலாமே?"

"நோ. மாமி இங்கயே இருக்கட்டும். நான் அவங்களை இங்கயே பாதுகாப்பா எங்கயாவது வச்சுக்கறேன்"

"ரகு.. மாமியை நீயே ஒரு பெட்டிக்குள்ள வேணும்னாலும் பூட்டி வச்சுக்கோ. ஆனா அந்த பெட்டிக்குள்ள தன் இஷ்டத்துக்கு இருக்க மாமிக்கு சுதந்திரம் வேணும்.. எதிர்பார்ப்பில்லாதப் பரோபகாரம்னா என்னனே உங்கிட்டே தான் கத்துக்கிட்டேன். இருந்தாலும், பழைய தவறுகள் தொடர நான் அனுமதிக்க மாட்டேன்"

"என்ன செய்யப் போறே?"

"கருணைத் தஞ்சம் மனு போடுவோம்"

"நான் முடியாதுனு சொன்னா?"

"முடியாதுனு மாமி சொல்லட்டும்".

இருவரும் மாமியைப் பார்த்தோம். விவரங்களைச் சொன்னோம். மாமி தயங்காமல், "கருணை மனு போட்டுப் பாத்துருவமே? கிடைக்கலேன்னா இருக்கவே இருக்கு, உலகம்மை காட்டுற வழி" என்றார்.

"உங்க இஷ்டம் மாமி" என்று ரகு என்னைப் பார்த்தான். அவன் கண்களில் தோல்வியின் அவமானம் சட்டென்றுத் தெரிந்து மறைந்தது.

மறுநாள் ரகுவும் என் அலுவலக வக்கீலும் சேர்ந்து மாமியின் சார்பில் அம்னெஸ்டி வழியாகக் கருணைத் தஞ்சக் குடியுரிமைக்கான மனு கொடுத்தார்கள். உடனடியாகக் கிடைக்கவில்லையெனினும், மனு நிராகரிக்கப்படாததால் அவர்கள் தொடர்ந்து ஓடி ஒளிய வேண்டிய அவசியமிருக்கவில்லை. ரகு அவர்களுக்கு சன்னிவேலில் ஒரு பழைய தனிவீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்தான். ஆறு மாதங்களுக்குள் மாமி பழையபடி மெஸ் துவங்கினார் என்று கேள்வி. அதற்குள் எனக்கு பாஸ்டனில் பெரிய வேலை கிடைத்ததால் எல்லாவற்றையும் விட்டு, படிப்பையும் நிறுத்தி, கிழக்கே ஓடி வந்துவிட்டேன். ரகுவுடன் அவ்வப்போது இமெயில் தொடர்பு இருந்தாலும் பழைய நெருக்கம் திரும்பவில்லை.

    போன மாதம் நட்புக் கூட்டத்தில் பழைய நினைவுகள் எங்களை நெருங்க வைத்தன. ஏதேதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று "தென்காசி ராமலக்ஷ்மி மாமி ஞாபகம் இருக்கா?" என்றான் ரகு.

"ஷ்யூர்.. நம்மை மனிதராக்கினவங்களாச்சே?"

"மாமி போன வருசம் செத்துப் போயிட்டாங்க"

தலையாட்டினேன். "ஷி லிவ்ட்" என்றேன். "மனம் போல வாழ்ந்தாங்க. அத்தனை கஷ்டத்துக்கு நடுவுலயும் அவங்க ரெண்டு பேர் நெருக்கம் எனக்கு ஒரு ஆச்சரியம்.. அதைவிட நீ அவங்களுக்கு செஞ்ச உதவிகள் இப்பவும் நினைச்சா பெரிய ஆச்சரியமாத்தான் இருக்கு.. "

"எனக்கு என்ன ஆச்சரியம்னா, அவங்க ஏன் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்கனு தான்"

"வாட்?"

"கிட்டத்தட்ட இருபது வருஷம் அப்படியே இருந்தாங்க.. திடீர்னு ஒரு நாள் ரெண்டு பேருமே தற்கொலை செஞ்சிகிட்டாங்க. பசுபதியோட கையைப் பிடிச்சுக்கிட்டு மாமி செத்துப் போனது.. பாக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்த்து.. இத்தனை வருஷம் கழிச்சு இப்ப ஏன்னு... இன்னி வரைக்கும் புரியலே"

மாமியின் கூட்டுத் தற்கொலை நான் எதிர்பாராத அதிர்ச்சி. திடுக்கிட்டு, மெள்ள இயல்புக்கு வர அவகாசமெடுத்துக் கொண்டேன். "எனக்குப் புரியுது" என்றேன்.

ரகு என்னைக் கேள்வியோடு பார்த்தான்.

"மனசு நாறக்கூடாதுனு மாமி சொல்வாங்க" என்றேன்.

"என்ன சொல்றே?"

"காத்தாடி சமாசாரம்" என்றேன்.


முற்றும்.



sury siva, கீதா சாம்பசிவம், ஜீவியின் பின்னூட்டக் கருத்துக்களை இல்லாத உரிமையுடன் கதையில் சேர்த்திருக்கிறேன். மனமார்ந்த நன்றி.

2012/12/14

அறுந்த காற்றாடி


2


◄◄   1


    கு சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை. ராமலக்ஷ்மி-பசுபதி தம்பதியரின் இக்கட்டு எனக்குப் புரிந்தது. அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பதை நான் விரும்பவில்லை. "ரகு, இமிக்ரேசனுக்குத் தெரிஞ்சா எல்லார் நிலமையும் டேஞ்சர்.. வேறே ஏதாவது செய்ய முடியுமா?" என்றேன்.

ரகு சில நொடிகள் அமைதியாக இருந்தான். பிறகு, "துரை, உன்னோட வாக்குவாதம் செய்யுறதா நினைக்காதே. ரெண்டு பேர், ஆதரவில்லாத நாதியில்லாத ரெண்டு ஜீவன், இப்ப ரொம்ப இக்கட்டான நிலைல இருக்காங்க. அவங்களுக்கு நம்ம உதவி தேவை. நீ சொல்றாப்புல இது சட்டவிரோதமா இருக்கலாம். ஆனால் இவங்க நிலமை இன்னும் மோசமாகி அவங்களுக்கு ஏதாவது ஆச்சுனா அது தர்ம விரோதம்" என்றான்.

எனக்குக் கோபம் வந்தது. "ரகு.. நீ சொல்றது ஒரு விதத்துல ப்லேக்மெயில். இன்னொரு விதத்துல முட்டாள்தனம். அய்தர் வே, இல்லீகல் அன்ட் இம்ப்ரேக்டிகல். நானா அவங்களை சட்டவிரோதமா இங்கே தங்கச் சொன்னேன்? அவங்க நிலமை எனக்குப் புரியுது. அதுக்காக அவங்க மேலே எனக்கு இருக்குற கரிசனத்தையும் அக்கறையையும் தவறான முறையில பயன்படுத்திக்க அனுமதிக்க முடியலே. ஏற்கனவே நீங்க எல்லாரும் சேர்ந்து அவசரப்பட்டு, முக்கியமா நீதான் காரணம், அவங்களை இங்கே குழியில தள்ளி வாழ வச்சிட்டிருக்கீங்க. இப்ப மறுபடி மறுபடி தோண்டிட்டே இருந்தா, எத்தனை பேர் எவ்வளவு ஆழத்துல விழுந்து அல்லாடுவாங்கனு நெனச்சுப் பாரு. ரகு, நீ புத்திசாலி... தர்ம விரோதம்னு என்னவோ பினாத்திட்டு அறிவுக்கு விரோதமா நடக்கறியே?"

"மெதுவா பேசு. அனாவசியமான அடென்ஷன் வேண்டாம்.. எனக்கு இந்த அவசரத்துல வேறே எந்த யோசனையும் தோணலே துரை, ப்லீஸ் ஹெல்ப். நினைச்சுப் பாரு. ஐஎன்எஸ் அவங்களைப் பிடிச்சு உடனடியா கைது செஞ்சு உள்ள தள்ளிடுவாங்க. அறுபது நாள்ல கோர்ட் ஹியரிங் வச்சு இந்தியாவுக்கு அனுப்பிடுவாங்க. இந்திய பாஸ்போர்ட் கூட அவங்க கிட்டே கிடையாது. தொலைஞ்ச பாஸ்போர்ட்டை மீட்கணும்னா மாட்டிக்குவாங்கனு அதை அப்படியே விட்டுட்டாங்க.. நாம உதவலேனா அவங்க நடுத்தெருல தான் நிப்பாங்க"

"நான் அவங்களுக்கு உதவ மாட்டேன்னு சொல்லவே இல்லை.. ஆனா திருட்டுத்தனமா எதுவும் செய்ய என்னால முடியாது.. மேக்ஸ் நோ சென்ஸ்"

"ஓகே.. ரெண்டே நாள். ஜஸ்ட் டூ டேஸ் உங்க வீட்டுல வச்சுக்கோ. யாருக்கும் தெரியாம நான் கொண்டு விட்டு, நானே வேறே இடத்துக்கு கூட்டிட்டுப் போயிடறேன். உன்னோட தர்க்கம் எல்லாம் ரெண்டு நாளைக்கு ஒத்தி வை. இப்போதைக்கு தீயணைச்சுட்டு பிறகு பேசுவோம்"

"ரகு, உனக்குப் புரியலே. சட்டம் அதிகாரம்னு வரப்ப நான் ரொம்ப கோழை. பயந்து செத்துருவேன். இவங்களை ஒரு மணி நேரம் என் வீட்டுல வச்சுக்கிட்டா என் நிம்மதி போயிடும். நானே பயந்து போய் ஏதாவது தப்பா செஞ்சுடுவேன்.. ப்லீஸ்.. வேறே யாரிடமாவது கேட்டுப் பாரேன்?"

"சட்ட விரோதமா எதுவுமே செஞ்சதில்லைனு சொல்லு துரை? தினம் சின்ன சின்ன சட்ட மீறல்கள் செஞ்சுகிட்டுத்தான் இருக்கே. போன வருஷ வருமான வரிலே எத்தனை ஆயிரம் டாலர் அரசாங்கத்தை ஏமாத்தினே? மாட்டினா உனக்கு ஜெயில்னு தெரிஞ்சு தானே வரி ஏய்ப்பு செஞ்சே?"

"தட் இஸ் டிபரன்ட்"

"ஏன்?"

"ஒன் திங். என்னோட தப்புல மாட்டினா நான் மட்டும் தான் பலன் அனுபவிப்பேன். இதுல நீ சொன்னாப்புல ரெண்டு நிராதரவான ஜீவன்களும் பாதிக்கப்படுவாங்க. அதுக்கு மேலே என்னோட வாழ்க்கை நாசமாயிடும். என்னை நம்பியிருக்குற என் அம்மா சகோதர சகோதரிகள் பாடு திண்டாட்டமாயிடும்.."

"சில சமயம் நீ வக்கீலா இல்லை நான் வக்கீலானு எனக்கு மறந்துடுது.. குட் பாயின்ட். இருந்தாலும், அலோ மீ" என்றான் ரகு. "உன்னை நம்பியிருக்கறவங்களைப் பத்திக் கொஞ்சம் கூட கவலைப்படாமதான் தினசரி வாழ்க்கையை நடத்திட்டு வரே. நீ மட்டுமில்லே, நானும் தான். காரணம், நம்பியிருக்கறவங்கனு நாம சொல்றது எல்லாம் நம்ம கூடப் பொறந்தவங்க, இமிடயட் பேமிலினு ஒரு சின்ன வட்டம். அதனால அந்தச் சின்ன வட்டப் பார்வைலே பெரிய மீறல்கள் ஒரு பொருட்டா படறதில்லே. அதே நேரம், அந்த வட்டத்துக்கு வெளியே இருக்கறவங்களோட பழகுறப்ப மட்டும், நாம செய்ய வேண்டிய சாதாரண மனித நேயக் கடமையைக் கூட திடீர்னு சட்டம் முறைனு ஏதோ பேசி மிகச் சுலபமா ஒதுக்கி வச்சுடறோம். கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா, உலகத்துல நாம எல்லாருமே ஏதோ ஒரு காரணத்துக்காக ஒருத்தரை ஒருத்தர் நம்பித்தான் இருக்கோம் துரை. யாவரும் கேளிர். நீயும் நானும் ராமலக்ஷ்மிக்கு பிறக்கலை, அவ்வளவு தான். இருந்தாலும் இது நம்மைச் சார்ந்த ரொம்பப் பெரிய வட்டம். நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன்"

"என்னமோ பெரிய வட்டம் சொட்டம்னு பேசறே? ஹூ ஆர் தீஸ் பீபில்? எனக்கு ஏதானு ஆச்சுனா நீ சொல்ற பெரிய வட்டமா வந்து தாங்கப் போகுது? ராமலக்ஷ்மி-பசுபதிக்கு இப்படி ஆச்சுனா அது அவங்க பாடு. அவங்கவங்க சிலுவையை அவங்கவங்க தான் சுமக்கணும்" என்று கத்த நினைத்தேன். ரகுவோடு வாதம் செய்து பயனில்லை என்று தோன்றியது. குருட்டுப் பரோபகாரி. மென்மையாக விலகுவதே மேலென்று முடிவு செய்து, "வேறே யார் கிட்டேயாவது கேட்டுப் பாரு ரகு.. என்னால முடிஞ்சா நான் செய்வேன்.. நாளைக்கு அவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னால் நிம்மதியா இருக்க முடியாது.. குற்ற உணர்வே என்னைக் கொன்னுடும்.. என்னால முடியும்னு தோணலே" என்றேன்.

இந்த முறை ரகுவுக்கு எரிச்சல் வந்தது. "முடிஞ்சா செய்வேன்றது இல்லாஜிகல் துரை. செஞ்சாத்தானே முடியுமா முடியாதானு தெரியும்? நாளைக்கு என்னாகும்ன்ற கற்பனை பயத்துல, இன்னிக்கு நிஜமான முதல் அடி வைக்கத் தயங்கினா எப்படி? முடிஞ்சா செய்வேன்னு சொல்றது கீழ்த்தரமான வழுக்குவாதம்னு உனக்கே தெரியும். அதுக்கு பதிலா என்னால முடியாதுனு வெளிப்படையா சொல்லிடேன்?"

"ஓகே. என்னால முடியாது, ரகு"

"வாட்?"

"என்னால முடியாது"

"நோ.. நோ.. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சுரு துரை. உன்னை நம்பி வந்துட்டேன்.. அது என்னோட தப்புதான். ஜஸ்ட் ரெண்டு நாள் எனக்காக இந்த உதவி செய். இந்த வாரக்கடைசிலே, வேணாம் வெள்ளிக்கிழமை சாயந்திரமே நான் அவங்களுக்கு வேறே ஏற்பாடு செஞ்சுடறேன்.. அது கூட முடியாதுனா ஜஸ்ட் இன்னிக்கு மட்டும்.." ரகு கெஞ்சத் தொடங்கியதும், அவன் மேலிருந்த மதிப்பு குறையத் தொடங்கியது. திடீரென்று என் மனதில் ஒரு விடுதலை உணர்வு தோன்றியது. நான் எதுவும் பேசாதிருந்தேன். ரகு தொடர்ந்து கெஞ்சினான். "தயவு செய்து வெட்டிடாதே துரை.. ஒரு மணி கழிச்சு போன் செய்யுறேன்.. கொஞ்சம் யோசிச்சு சொல்லு.. உன்னையே நம்பியிருக்கேன்".

"ரகு.. எதுக்காக நீ இப்படி அவங்களுக்காகக் கெஞ்சறேனு புரியலே. இட் இஸ் நாட் ஸ்மார்ட். ஓகே, நீ சொல்றதுக்காக யோசிக்கிறேன்.. ஆனா நான் என்ன சொல்லப்போறேன்னு எனக்குத் தெரியும், உனக்கும் தெரியும். கால் மி பேக். எனக்கு வேலை இருக்கு" என்று போனை வைத்தேன்.

இரண்டு மணி நேரமாகியும் ரகுவிடமிருந்து போன் வரவில்லை. வேறு வழி தேடப் போயிருப்பான் என்று நினைத்தேன். ராமலக்ஷ்மி=பசுபதி கழிவிரக்கத்தைச் சுலபமாகக் கழுவ முடிந்த ஆறுதலில் என் வேலையில் மூழ்கினேன். மாலை நான்கு மணி இருக்கும். என்னைத் தேடி யாரோ வந்திருப்பதாகத் தகவல் வர, கீழே இறங்கி வந்தேன். லவுஞ்சில் உட்கார்ந்திருந்த யுவான் என்னைப் பார்த்து எழுந்தான். அவனுடன் வெளியே வந்து, "என்ன யுவான்?" என்றேன்.

"ராம்லா, பாசு ரெண்டு பேரும் இப்ப உங்க வீட்டுல பத்திரமா இருக்காங்க.. அவங்களை உள்ளே விட்டு வெளிக்கதவைப் பூட்டி வந்திருக்கேன். யாருக்கும் தெரியாது. ரகு உங்களோட தொடர்பு கொள்ற வரைக்கும் நீங்க பாத்துக்குங்க. ரொம்ப தேங்க்ஸ்" என்றான் இயல்பாக.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "வாட்? யாரைக் கேட்டு இதைச் செஞ்சே? கதவை எப்படித் திறந்தே?" என்று எரிந்தேன். யுவான் எதுவும் பேசாதிருந்தான். என் கேள்விகளின் முட்டாள்தனம் புரிந்து இன்னும் எரிச்சலடைந்தேன். "போலீசைக் கூப்பிடுவேன்.. உடனே அவங்களை அங்கிருந்து கூட்டிட்டுப் போ.. போலீசைக் கூப்பிடத் தயங்கவே மாட்டேன். ரகு எங்கே? நீ எப்படி என் வீட்டுக் கதவைத் திறக்கலாம்?" என்று இலக்கில்லாமல் தாவியது என் ஆற்றாமை.

யுவான் அமைதியாக, "ரிலாக்ஸ் மிஸ்டர். போலீசைத் தாராளமா கூப்பிடு. அப்புறம் உனக்கு என்னாகும்னு யோசிச்சுக்க" என்றான். "திஸ் இஸ் நாட் எ பிக் டீல். இந்த வட்டாரத்துல மட்டும் ஆயிரம் பேராவது விசா இல்லாம இருக்காங்க. இதெல்லாம் மனுசனுக்கு மனுசன் செய்யறது தான். கெட் ஓவர் இட்" என்றுப் புன்னகையுடன் நகர்ந்தான். பத்தடி போனவன் திரும்பி வந்தான். என்னை நேராகப் பார்த்தான். "மிஸ்டர், புத்திசாலித்தனமா நடந்துக்குங்க. அப்புறம் கஞ்சா வச்சிருந்ததுக்காக அனாவசியமா பேர் கெட்டு வேலை இழந்து ஜெயிலுக்குப் போகாதீங்க" என்றான். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு என்னைக் கடந்து சென்றான்.

    செய்வதறியாமல் திகைத்தேன். தவித்தேன். உடனே வீட்டுக்குச் சென்று அவர்களைத் துரத்தத் தோன்றியது. போலீசுக்குப் போகத் தோன்றியது. அதனால் சிக்கல் இன்னலாகும் சாத்தியம் புரிந்து அடங்கினேன். யுவானின் மென்மையான அச்சுறுத்தல் வேறு என்னுள் பரவத் தொடங்கியது. 'ரகுவை வென்றேன்' என்ற எண்ணம் பொடியாகி, அவன் மேல் ஆத்திரம் எழுந்தது. அவன் தான் யுவானை ஏவியிருக்க வேண்டும். என் ஆபீசுக்குச் சென்று ரகுவுக்கு போன் செய்தேன். பத்துப் பதினைந்து முறையாவது முயற்சி செய்திருப்பேன். அவனைப் பிடிக்க முடியவில்லை. கடுப்பு தாளாமல் விடுப்பு அனுமதி வாங்கி வெளியே வந்தேன். அலுவலக வாசலில் இருந்த டேக்சி ஒன்றில் ரகுவின் பாஸ்டர் சிடி காண்டோவுக்கு விரைந்தேன். செக்யூரிடி ஆசாமி அறையின் பிஎஸ்டூ கணினியில் அவசரமாக மேய்ந்துவிட்டு, "ரகு ந்யூ யோர்க் போயிருக்காரு. வர ஒரு வாரம் ஆகும். வீட்டுல யாரும் இல்லை. மெசேஜ் இருந்தா குடுத்துட்டுப் போங்க" என்றான் பணிவுடன்.

ஏமாற்றப்பட்ட ஆத்திரத்துடன் நடந்தே வீடு திரும்பிய போது இருட்டி விட்டது. வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது அமைதியாக இருந்தது. யாரையும் காணவில்லை. ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தேன். இரண்டாவது பெட்ரூமின் குளியலறையில் அவர்களைப் பார்த்தேன். வீல்சேரில் பசுபதி, அவர் கைகளைப் பிடித்தபடி கண்களில் கலக்கத்துடன் உட்கார்ந்திருந்த ராமலக்ஷ்மி.. இருவரையும் பார்த்ததும் எனக்கிருந்த கோபம் மாற்றுக் குறைந்தாலும் ஆத்திரம் குறையவில்லை.

என்னைப் பார்த்ததும் மாமி வெளியே வந்தார். "நீ எப்ப வருவேனு தெரியாது. அதான் லைட்டைக் கூடப் போடாமல் உக்காந்திருந்தோம்" என்றார்.

எனக்கிருந்தக் கடுப்பில் பேச்சே வரவில்லை. மாமி தொடர்ந்தார். "நீ தெய்வம் மாதிரி, நான் கும்பிடுற பகவான் விசுவநாதர் உலகம்மை ரெண்டு பேரும் சேந்து வந்த மாதிரி, இது கையில்லே காலா நெனச்சுக்கோ.. அப்படியெல்லாம் எனக்குப் பேசத் தோணினாலும் அதெல்லாம் சரியில்லேனு தெரியும் துரை. கொச்சையாப் போயிடும்" என்ற மாமியின் கண்களில் ஈரம் மின்னியது. "பகவானுக்கெல்லாம் பிராண சங்கடம்னா என்னன்னே தெரியாது. பகவான்லாம் பிராணனை எடுப்பாளே தவிர சங்கடத்தை தீர்த்து வச்சதே இல்லை. சங்கடத்தைத் தீத்து வைக்கறது மனுசாளாலே மட்டுந்தான் முடியும். அதனால நீ பகவானுக்கெல்லாம் மேலேப்பா" என்றார்.

"எப்படி உள்ளே வந்தீங்க?" என்று சம்பந்தமேயில்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டேன்.

"யுவான் காத்து மாதிரி வந்தான். ஒரு வேன்ல எங்களை இங்கே கூட்டிண்டு வந்தான். உன் கதவைத் திறந்து சட்டுபுட்டுனு எங்களை இங்க பாத்ரூம்ல உக்கார வச்சுட்டு காத்தாப் போயிட்டான். அப்பலேந்து இந்த பிராமணர் கையைப் பிடிச்சுண்டு உலகம்மை உலகம்மைனு ஜபம் பண்ணிண்டிருந்தேன். பாதி நேரம், 'இது வேறே யாரோட வீடா இருந்தா என்ன பண்றது? இந்த யுவான் ஏதாவது திருவாழத்தான் வேலை பண்ணி... திடீர்னு உள்ளூர்க்காரா யாராவது வந்து எங்களைப் பாத்து பயந்து வச்சுட்டா?'னு நேக்கு பயம். நீ வரதுக்குள்ளே கதி கலங்கிப் போச்சுப்பா" என்றார் மாமி.

ஏனோ தெரியவில்லை, வாய்விட்டுச் சிரித்தேன். கண்ணில் நீர் வரச் சிரித்தேன்.

ஓய்ந்து, "ஏதாவது சாப்பிட்டீங்களா?" என்றேன்.

"இல்லப்பா.. ரெண்டு நாளா யுவான் வீட்டு பேஸ்மென்டுல இருந்தோம்.. அவா மாம்சம் சாராயம்னு அங்க அடுக்கி வச்சிருக்கா. யுவான் அப்பப்போ ரொட்டி ஜேம்னு கொண்டு வந்து கொடுத்தான் பாவம். நேக்குக் கொமட்டிண்டு வந்துருத்து. இவருக்கு மட்டும் அப்பப்ப ரெண்டு ஸ்பூன் ஜேம் கொடுத்தேன். நான் ரெண்டு நாளா எதுவும் சாப்பிடலை. இருந்திருந்து இப்ப பசி மயக்கம் சுத்திண்டு வரது. ரெண்டு கரண்டி கஞ்சி இருந்தாக் கூட போறும். உப்பு போட்டு, இதுக்கு ஒரு கரண்டி கரைச்சுக் குடுத்துட்டு நானும் ஒரு கரண்டி சாப்டுவேன். ஏது நான் சமைச்சுப் போடாம உங்கிட்டே கேக்கறேன்னு நினைக்காத.. பழையதுனாலும் பரவாயில்லை.. ரெண்டு கரண்டி சாதம் இருக்குமாப்பா?" என்றார் மாமி, கையை ஏந்தி.

நடுங்கும் மெழுகின் ஒளி ஆயிரம் வாட் விளக்கைவிட பிரகாசிக்கும் முரண் கடுமையான இருளில் மட்டுமே புரியும். அந்தக் கணத்தில் எனக்குள் இருந்தக் காழ்ப்பும் கடுப்பும் எரிச்சலும் பொசுங்கியதை உணர்ந்தேன்.

"மாமி, நான் சமைச்சு ஒரு வருஷமாகுது. இந்தியாலந்து போன வருஷம் அம்மா குடுத்தனுப்பின பருப்புப் பொடி, ஊறுகாய் இருக்கு. அரிசி இருக்கு. சாதம் வச்சுடறேன், பத்து நிமிஷம் இருங்க" என்றேன். அவசரமாக அந்த அறையைச் சீர் செய்தேன். மாமியிடம், "நீங்க இங்க வசதியா இருங்க. குளிக்கறதுனா துண்டு, சோப்பு எல்லாம் இங்கே இருக்கு. ஏதாவது வேணும்னா சொல்லுங்க" என்றேன். அரிசியைக் குக்கரில் ஏற்றிவிட்டு, அவசரமாக வெளியேறினேன். தெருக்கோடிக் கடையில் மோரும் உருளைக்கிழங்கு சிப்சும் வாங்கி வந்தேன்.

சாதம் மேற்பகுதி வெந்து, கீழ்ப்பகுதி சற்று அரிசியாகவே இருந்தது. "பரவாயில்லே. வெழுமூன பிசஞ்சுட்டா ஒண்ணுமே தெரியாது" என்ற மாமி, ஒரு டம்ளர் வென்னீரை அரைகுறை சாதத்தில் ஊற்றினார். இரண்டு நிமிடங்கள் போல் அழுத்திப் பிசைந்தார். கூழான சாதத்தில் இரண்டு ஸ்பூன் பருப்புப் பொடியும், உப்பும், பிறகு மோரும் கலந்தார். ஒரு பெரிய டம்ளரில் விளிம்பு வரை நிரப்பி, "இந்தா.. மாமி கையால உங்காத்து முதல் சாப்பாடு.." என்று என்னிடம் கொடுத்தார்.

"நீங்க சாப்டுங்கோ மாமி"

"சாப்பிடுப்பா..களைச்சு வந்திருக்கே.. நீ சாப்பிட்டதும் இவருக்குக் குடுத்துட்டு நானும் சாப்பிடறேன்" என்றார்.

நான் களைத்திருப்பதாகக் கவலைப்படுகிறாரே? ஒரு வாய் சுவைத்தேன். கூழ் மணத்தது. கைமணம் என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இருந்ததில்லை. நான் கூழை ஒவ்வொரு மிடறாக விழுங்க, மாமி சிப்ஸ் பாகெட்டிலிருந்து இரண்டிரண்டாக எடுத்துக் கொடுத்தார். இரண்டாவது டம்ளர் கூழும் போன இடம் தெரியவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன், கல்யாணச் சாப்பாடு கூட அந்த அன்றையக் கூழுக்கு இணையாகாது. "போதும் மாமி" என்றேன்.

"சித்த இவரைப் பிடிச்சுக்கறியா?" என்றார் பசுபதியைக் காட்டி.

"நான் வேணும்னா ஊட்டறேனே, மாமி?" என்றேன்.

"ஊகூகூம்" என்று பதட்டமானார் மாமி. பிறகு நிதானித்து, "தப்பா நினைக்காதே துரை. இது.. இவருக்கு ஊட்டி விடறது.. இது நான் தினம் பண்ற தபஸ். காசி விசுவநாதர் உலகம்மைனு நான் சும்மா வாய்க்கு வாய் சொன்னாலும் நேக்கு எல்லாமே இப்ப இவரோட மூஞ்சி தாம்பா. ஒரு வாய் முழுங்கினதும் இவர் கண்ல ஜொலிக்கறது பார், அது நான் பண்ற தபசுக்குக் கை மேல் கிடைச்ச பலன். என்னை விட்டா இவருக்கு யாரும் இல்லைனு எல்லாரும் சொல்றா. உண்மை என்னன்னா இந்தப் பிராமணரை விட்டா நேக்கு நாதி கிடையாது. என்னோட தினசரி சோகத்தை ஒரு ஜொலிப்புல பஸ்பமாக்கிடுவார்.. அதான்.. நானே இவருக்கு ஊட்டி விடறேன்"

"என்னை மன்னிச்சுருங்க மாமி" என்றபடி அருகிலிருந்து ஒரு கைத்துண்டை எடுத்துக் கொண்டேன். "இவர் சைவப்பிள்ளைனீங்க.. பிராமணர் பிராமணர்னு வாய்க்கு வாய் சொல்றீங்களே?"

"எனக்கு இவர் பிராமணர், இவருக்கு நான் சைவப்பிள்ளை. அவ்வளவு தான்" என்றபடி மாமி ஊட்டத் தொடங்கினார். "உனக்கொண்ணு தெரியுமோ? நாங்க திருட்டுக் கல்யாணம் பண்ணிண்டது கூட இவாத்து மனுஷாளுக்குப் பெரிசா தோணலே. எம்பேரு ராமலக்ஷ்மிங்கறதுல அவாளுக்கு அவ்ளோ துக்கம். சைவம்னா அப்படியொரு சைவம். நான் சொல்றதெல்லாம் கேட்டுண்டே மனசுக்குள்ள எப்படி சிரிக்கிறது பாரு இந்தக்கிழம்?" என்றபடி பசுபதியின் மார்பில் விளையாட்டாகக் குத்தினார் மாமி.

ரகு எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறான் என்பதும், அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய உதவி என்னவென்பதும் தெளிவானது. ஆனால் என் செயல், ரகுவுக்கும் எனக்குமிடையே நிரந்தர விரிசலை உருவாக்கும் என்று அப்போது தெரியாமல் போனது.


தொடரும்>>

2012/12/09

அறுந்த காற்றாடி



றுந்தக் காற்றாடிகளைச் சேமித்து வைக்கும் பழக்கம் எனக்கிருந்தது. நூலறுந்தக் காற்றாடியைத் துரத்தி துரத்தி, அறுந்து கிழிந்தது மேலும் சேதமடையாமல் சேமித்து வைப்பதன் முனைப்பும் வேகமும் கலக்கமும் பலனும்... எல்லோருக்கும் புரிவதில்லை.

இந்தியா திரும்பும் நண்பர் ஒருவர் சமீபத்தில் அழைத்திருந்த நட்புக் கூட்டத்தில் ரகுவைச் சந்தித்தேன். எங்கள் சிலிகன்வேலி நாட்கள் மற்றும் இந்திய உணவக நினைவுகளைப் புரட்டிக் கொண்டிருந்தோம். பேச்சுவாக்கில், "தென்காசி ராமலக்ஷ்மி போன வருடம் இறந்து போனார்" என்றான் ரகு. இறப்பில் ஒரு புதுமையும் இல்லை. மேலும், ராமலக்ஷ்மி இறக்கையில் அவருக்கு எண்பது வயதாவது இருக்கும். மரணச் செய்தி கேட்டு இயல்பாகத் தலையாட்டினேன். அதற்குப் பிறகு அவன் சொன்னது என்னைத் திடுக்கிட வைத்தது.

அக்கணத்திலிருந்து ராமலக்ஷ்மியின் மரணம், என்னுடைய முதல் காதல் தோல்வி போல் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது. யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போலிருக்கிறது.

        1990-91 என்று நினைக்கிறேன். பெல்மான்ட் சிறுநகர மலையடிவாரத் தெருவொன்றின் பூர்ஷ்வா காபிக்கடை வெளியரங்கில், ப்ரெஞ்ச் டோஸ்ட், கார்லிக்-பெப்பர்கார்ன் ஆம்லெட், மர்மலேட் அப்பிய இங்லிஷ் மபின், அப்பொழுது பிழிந்த ஆரஞ்சு ஜூஸ், கருங்காபி (ஸ்டார்பக்சாவது மண்ணாவது) என்று வகை வகையாக மெள்ளச் சாப்பிட்டபடி, என் சனிக்கிழமையைத் துவக்கியிருந்தேன். தனிமையின் சோகங்களுக்கிடையே இது போன்ற சிறு இனிமைகளைத் தவறவிடக் கூடாது என்றக் கொள்கையுடன், இளவெயில்.. இதமான காற்று.. மணக்கும் உணவு.. வாக்மேனில் மாலி குழலிசை.. என்று மொத்தமாகவும் சில்லறையாகவும் அனுபவித்தபடி சுற்றிலும் பார்த்தேன். எதிரே கண்ணில் பட்டது என்னைக் கிறுகிறுக்க வைத்தது. மூலை டேபிள் மேல் பரந்து கிடந்தப் பீங்கான் தட்டுக்களைத் தாண்டித் தென்பட்ட உருவத்தின் முகத்தை ஒரு குமுதம் பிரதி மூடிக் கொண்டிருந்தது. ஆணா பெண்ணா என்றுகூடத் தெரியவில்லை. இனக் கிறுகிறுப்பு தலைக்கேறி எழுந்தேன். அருகே சென்று அறிமுகம் செய்துகொண்டேன். அப்படி அறிமுகமானவன் ரகு.

நாங்கள் பேசத் தொடங்கியக் கணங்களில் எங்களை இறுக்கிப் பிடித்து கொண்டது நட்பு.

கால மிதியடியின் கீழே எத்தனை கோடிச் சாதனைகள் குப்பைத் துகளாய்க் கிடக்கின்றன என்பது எனக்கு அடங்காத ஆச்சரியம். அன்றைய சிலிகான் வேலியின் சாதனைக் கம்பெனி நொவெல். ரகு அங்கே பெரிய ஹெச்.ஆர் வக்கீலாக இருந்தான். இன்னொரு அருஞ்சாதனைக் கம்பெனியில் பகுதி நேர வேலைக்குச் சேர்ந்திருந்தேன் நான். பெல்மான்ட்டின் வசதியான அபார்ட்மென்ட் ஒன்றில் வாடகைக்கு இருந்தேன். ரகு பாஸ்டர் சிடியில் வசதியான காண்டோ வாங்கியிருந்தான்.

ஊர் படிப்பு வேலை என்று விவரம் கடந்து, இசை புத்தகம் சினிமா என்று கலை கடந்து, சிகரெட் மது மாது என்று பழக்கம் கடந்து, நிறையப் பேசினோம். சாப்பாடு பற்றிப் பேச்சு வந்தது. இப்போது போல் தடுக்கி விழுந்தால் தென்படும் இந்தியக் கடைகளும் உணவகங்களும் அப்போது இல்லை. சேன் ப்ரேன்சிஸ்கோவில் ஒன்று, சேன்டா க்லேராவில் ஒன்று, தவிர்த்து சன்னிவேலில் ஒன்று - இம்மூன்று உணவகங்கள் மட்டுமே இந்தியச் சோறு போட்டன. [சன்னிவேல் உணவக முதலாளி, படிக்காத ஏழை டீனேஜ் தெலுங்குப் பெண்களை வைத்துப் பலான பிசினஸ் செய்து வந்தது பின்னாளில் பலரைத் திடுக்கிட வைத்தது. அங்கே நான் சாப்பிட்டதெல்லாம் இன்றைக்கும் என்னைத் துன்புறுத்துகிறது]. என் வாடகை அபார்ட்மெண்ட் அருகில் எங்கேயும் இந்தியச் சாப்பாடு கிடைக்காததை ஒரு பெரிய பொருட்டாக எண்ணவில்லை. நான் உண்டு என் பகுதி நேர வேலை, பெர்க்லி படிப்பு உண்டு என்று இருந்தேன். நான் தினமும் பூர்ஷ்வா கடை, பிட்சாக் கடை என்று திரிவதைக் கேட்டு, "அப்ப இன்னிக்கு டின்னர் எங்கூட வா.. வீட்டுச் சாப்பாடு, திருநெல்வேலிச் சமையல்" என்றான் ரகு.

"உனக்குச் சமைக்கத் தெரியுமா என்ன?"

"எனக்கும் நல்லா சாப்பிடத்தான் தெரியும்" என்று என் டேபிளைக் காட்டிச் சிரித்தான். "வீட்டுச் சாப்பாடுன்னா என் வீட்டுல இல்லப்பா. சாயந்திரம் ஆறு மணிக்கு இங்க வந்துரு. ஒரு இடத்துக்குக் கூட்டிப் போறேன், அசந்துருவ" என்றான்.

        வன் கார் வைத்திருந்தான். நான் கால் வைத்திருந்தேன். அதனால் ஐந்து ஐம்பதுக்கே வந்துக் காத்திருந்தேன். சரியாக ஆறு மணிக்கு வண்டியோடு வந்தான். புத்தம்புது ஈகிள் டேலன். உள்ளிருந்தபடியே ரிமோட்டில் கதவைத் திறந்து "ஏறிக்கோ" என்றான். சன்னிவேலுக்கும் சேன் ஹோசேவுக்கும் இடையே எல் கமீனோவிலிருந்து வடக்கே திரும்பும் சந்தில் ஒரு பழைய காம்பவுன்ட் சுவர் எதிரே நிறுத்தினான். "வா" என்றான்.

காம்பவுன்டுக்குள் முன்னும் பின்னுமாக இரண்டு வீடுகள். முன் வீட்டின் எதிரே சில மெக்சிகன் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். திண்ணையில் ஒரு வாலிபனின் மடியில் படுத்தபடி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. வாலிபனின் பார்வை என்னைத் தொடர்ந்ததை உணர்ந்தேன்.

பின்வீட்டுக் கதவைத் தள்ளித் திறந்தான் ரகு. ணங் என்று மணியடித்து எதிரொலிக்க. "வாப்பா" என்று ஒரு குரல் கேட்டது. என்னைப் பார்த்து உள்ளே வரும்படி தலையசைத்தான். நுழைந்ததும் என்னை முதலில் தாக்கியது சமையல் மணம். தேங்காய் எண்ணையில் பச்சைமிளகாய் இஞ்சி கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு என்று தாளிக்கும் மணம். தொடர்ந்து ஒரு கரண்டியுடன் எங்களைத் தேடி வந்தார் ஒரு பெண்மணி.

வரும் வழியில் ஓரளவுக்கு அறிமுக விவரம் சொல்லியிருந்தான் ரகு. இருந்தாலும் இத்தனை லட்சணமாய் ஒருவரைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. நல்ல உயரம். வாட்டசாட்டமாக இருந்தார். மஞ்சள் கலர். பெரிய கண்கள். குங்குமப்பொட்டு. மிக லேசானப் பெண்மீசை. எளிய மூக்குத்தி, தோடு. கழுத்தில் மஞ்சள் கயிறு தவிர நகையில்லாதது உறுத்தியது. பச்சைக் கலரில் ஒரு ஜரிகை சின்னாளப்பட்டு சேலை கட்டியிருந்தார். தலையை ஒரு ஸ்கார்பினால் முக்காடு போல் கட்டியிருந்தார். "யாருப்பா இது, ரகு?" என்றார் என்னைக் கண்களால் சுட்டி.

"மாமி.. இவன் பேரு துரை. ஊருக்குப் புதுசு.. சோத்துக்கு லாட்டரி கேஸ்.." என்றான். பிறகு என்னிடம், "துரை.. இவங்கதாம்பா நான் சொல்லலே.. ராமலக்ஷ்மி மாமி.. சொந்த ஊர் திருநெல்வேலி"

"நேக்கு சொந்த ஊர் தென்காசி. அவருக்கு திருநெல்வேலி. வாப்பா.. உனக்கு எந்த ஊர்?"

"மெட்ராஸ்"

"அதெப்படி மெட்ராஸ்னு சொல்றே? பூர்வீகம் எதும் கிடையாதா? மெட்ராஸ் மூர்க்காள் ஊர்னா? மெட்ராஸ்னாலும் சாத்வீகமான மனுஷாளுக்கு பூர்வீகம் இல்லாம இருக்காது.. எந்த ஊர்னு சொல்லு"

"எனக்குத் தெரிஞ்சு மெட்ராஸ் தான்.... மாமி" என்றேன் சற்றே கூச்சத்துடன். நான் யாரையும் "மாமி" என்றழைத்து நாளாகியிருந்தது.

"சங்கோஜப்படாம மாமினே கூப்பிடு" என்று என்னிடம் சொன்ன மாமி, "வாங்கோ" என்று எங்களைத் தாண்டிப் பார்வையை ஓட்டினார். வாசலில் மூன்று பேர் கதவைத் திறந்து வந்தனர். "சாப்பாடு அரை மணிலே ரெடியாயிடும். வாழைத்தண்டு தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு, புளித்துவையல், பீன்ஸ் கறி, பெங்களூர் கத்தாரிக்கா கூட்டு, தக்காளி ரசம், மோர், புதுசா நெல்லிக்காய் ஊறுகாய் போட்டிருக்கேன்.. இதான் மெனு இன்னிக்கு.. சாப்பிட்டுப் பாத்து பிடிச்சிருந்தா மாசக் கூப்பன் வாங்கிக்கோ. இன்னித்துச் சாப்பாடு ப்ரீ உனக்கு மட்டும். போங்கோ.. எல்லாரும் ஹால்லே உக்காருங்கோ.. சாப்பாடு தயாராயிடும்.. ரெண்டு தட்டுல உளுத்தங்களி எடுத்துண்டு வரேன் அதுவரைக்கும்.." என்று உள்ளே போனார்.

பராமரிக்கப்படாத சிறிய வீடு. வாசல் ரூம், தொடர்ந்த ஹால், லேசாக கதவடைத்த பெட்ரூம் போல் தெரிந்த ஒரு அறை. ஸ்டோர் ரூம் போலிருந்த இன்னொரு அறைக்கு மாமி அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தார். தடுப்புக்கு அந்தப்புறம் சமையலறை. தடுப்புக்கு இந்தப்புறம் மாடிப்படிகள். மாடிப்படிச் சுவரில் இடம் வலமாக கட்டப்பட்டிருந்தக் கம்பிக்கொடியில் ஒரு புடவை. ஹால் அலமாரியில் ஒரு கலர் போட்டோ, சில பழுப்பேறிய போட்டோக்கள். வீடெங்கும் சுவரின் கீழ்ப்பகுதியில் அக்கிரகாரங்களிலும் கோவில்களும் இருப்பது போல் காவிப்பட்டை. ஜன்னல்களில் துணித்திரை. மிக மிக இலேசான ஊதுபத்தி மணம். திடீரென்றுத் திருநீர்மலை மனதில் தோன்றியது.

எங்களுக்கு முன்னால் வந்திருந்த நாலைந்து பேருடன் ஹால் என்ற இடத்தை சூழ்ந்து கொண்டோம். ஹாலின் குறுக்கே ஒரு பெரிய மேசை. இந்தியாவில் இந்த இடம் தாராளம் என்று தோன்றினாலும் இங்கே நெரிசலாக உணர்ந்தேன். மாமி கொண்டு வைத்த உளுத்தங்களி உருண்டைகளை அங்கிருந்தோர் அவசரமாக ஒரு கை பார்த்தனர். நான் ஒதுங்கி ரகுவிடம், "மாமி தனியாவா இருக்காங்க..?" என்றேன். பிறகு பேசலாம் என்று சைகை செய்தான்.

சரியாக ஏழு மணிக்கு சாப்பாடு தயார் என்றார் மாமி. எங்கள் வீட்டில் தாம்பாளம் என்பார்கள்.. அங்குல விளிம்புடன் வட்டமான எவர்சில்வர் தட்டைக் கொடுத்தார். "ஸ்வீட் எதும் செய்யலே இன்னிக்கு" என்றபடி கால் ஸ்பூன் சர்க்கரை வைத்துக் கொடுத்தார். நடுவில் இருந்த பெரிய மேசையில் எங்கள் உதவியுடன் அத்தனை சாப்பாட்டையும் அடுக்கி வைத்தார். நாங்களே எடுத்துப் பரிமாறிக் கொண்டோம். அத்தனை சுவையான சாப்பாட்டை நான் என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. இரவு ஒன்பது வரை சுமார் ஐம்பது பேராவது சாப்பிட்டிருப்பார்கள். ரகு கிளம்பாததால் நானும் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒன்பதரைக்குக் கடைசி நபரும் சாப்பிட்டுக் கிளம்பியதும், "நான் கொஞ்சம் மாமிக்கு உதவியா பாத்திரம் கழுவப்போறேன், வரியா?" என்றான்.

இதை எதிர் பார்க்கவில்லை. 'ஐம்பது பேருக்கு மேல் சமைத்த பாத்திரங்களைக் கழுவுவதாவது?' என்றுத் திகைத்தேன்.

"மாமிக்கு ஆள் இல்லை.. உன்னால் முடியாவிட்டால் அப்படி ஓய்வாகப் படுத்துக் கொள்.. ஒரு மணியில் எழுப்புறேன்" என்றான் ரகு.

"இல்லை ரகு, நானும் உதவி செய்றேன்" என்று ரகுவுடன் சென்றேன். அத்தனை பாத்திரங்களையும் கழுவி ட்ரெய்னர் ஷீட்டில் அடுக்கி, கரண்டி டவரா கிண்ணம் தட்டுமுட்டுகளை டிஷ்வாஷரில் அடுக்கி, ஐம்பதுக்கு மேற்பட்ட எவர்சில்வர் தட்டுக்களை ஸ்ப்ரே வாஷரில் அடுக்கி, டேபிளை லைசால் வின்டெக்ஸ் போட்டுத் துடைத்து... எல்லாம் முடித்த போது பத்தரை மணிக்கு மேலாகிவிட்டது.

ஓய்ந்து ஹாலில் ஒதுங்கிய போது, மாமி ஒரு சிறிய வால்பாத்திரமும் டம்ளரும் எடுத்து வந்தார். "என்னப்பா மெட்ராஸ் துரை.. மாசக் கூப்பன் வாங்கிக்கிறியா? சனி, ஞாயிறு இங்கே வந்து மூணு வேளை சாப்பாடு, மிச்ச நாளைக்கு சம்படம் கட்டி எடுத்துண்டு போலாம். மாசம் அம்பத்தஞ்சு டாலர். சரியா?" என்றார். நான் பதில் சொல்லுமுன் ரகுவிடம், "கதவைத் திறக்கறியா?" என்றார்.

ரகு உடனே எழுந்து பெட்ரூம் போலிருந்த அறைக்கதவைத் திறந்தான். உள்ளே வீல்சேரில் இருந்தவரைத் தள்ளிக் கொண்டு வந்தான். "இவர் தான் பசுபதி. மாமியோட ஹஸ்பென்ட்" என்றான் ரகு. பார்ப்பதற்கே கோரமாக, பரிதாபமாக இருந்தவரைப் பார்த்து அதிர்ந்துத் தயங்கினேன். "மை காட்! என்ன ஆச்சு?" என்றேன்.

"கதையை அப்புறம் சொல்றேன். இவருக்கு முதல்ல சாப்பாடு ஊட்டணும்" என்று மாமி வால்பாத்திரத்தில் கூழாகப் பிசைந்திருந்த ரசம் சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக டம்ளரில் ஊற்றிக் கணவருக்கு ஊட்டினார். ரகு ஒவ்வொருமுறையும் அவர் வாயிலிருந்து வழிந்ததைத் துடைத்தான். சாப்பிட்டு முடித்ததும் அவருடைய மேல்சட்டையைக் கழற்றினான். மாமி கொடுத்த சட்டையை மாற்றினான். பிறகு வீல்சேரை தள்ளி உள்ளே படுக்கையருகே கொண்டு நிறுத்திவிட்டு வந்தான்.

எனக்குள் ஏதோ வீக்கம். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தபோது மாமி என்னிடம், "இவர் தான் என்னோட அஸ்பெண்டு. இவா புளியங்குடி சைவப்பிள்ளைமார். அந்தக் காலத்துலயே நாங்க லவ் மேரேஜ் பண்ணிண்டோம். எங்க ஊர்ல தான் காலேஜ் படிச்சார். அந்த நாள்லே நாங்க அடிக்காதக் கூத்தில்லே. குத்தாலத்துலே.."

நான் இன்னும் "மை காட்! என்ன ஆச்சு?"வில் இருந்தேன்.

"அஞ்சு வருஷத்துக்கு முன்னால இங்கே வந்தோம். எங்க பையன் இதோ ரகுவோட கம்பெனில ஜோலியா இருந்தான். இங்கயே ஒரு வெள்ளைக்காரச்சியைக் கல்யாணம் பண்ணிண்டு தினம் சிரிச்சுண்டு சந்தோஷமா இருந்தான்" என்றபடி அலமாரியிலிருந்தக் கலர் போட்டோவைக் கொண்டு வந்து காட்டினார். "இவன் எங்க பிள்ளை அம்பி. கட்டைக்கறி. இவ ரோசு. கள்ளிச்சொட்டு. என்னமா சிரிக்கறா பாரு" என்றார்.

நான் போட்டோவை வாங்கிப் பார்ப்பது போல் பார்த்துவிட்டுத் திருப்பினேன்.

"ரோசுக்கு ரெட்டைக் குழந்தைனு விவரம் தெரிஞ்சதும் எங்களை வரச் சொன்னான் அம்பி. ப்ளேன்ல பர்ஸ்ட் க்ளாஸ்லயாக்கும் வந்தோம். அப்போ ப்லெசன்டன்ல இருந்தோம். ரெண்டு வருஷம் குழந்தைகளை வளக்கறதுக்கு கூடமாட உதவியாயிருந்தோம். மூணாம் வருஷம்.. இங்கதான் ஜூலை நாலாந்தேதி கொண்டாட்டமா இருக்கே..? எங்களைக் கூட்டிண்டு சேக்ரமென்டோ போறேன்னுட்டு.. அம்பி ரோசு ரெட்டைக் குழந்தை இவர் எல்லாம் ஒரு கார்லயும், நான் ரகு எல்லாம் இன்னோர் கார்லயும் போனோம்.. ஒரு பெரிய ஆக்சிடெண்ட் ஆயிடுத்து. அம்பியும் ரோசும் ஸ்பாட்லயே போயிட்டா. ஒரு குழந்தை ஆஸ்பத்திரிலே செத்து போச்சு. இவருக்கு எக்கச்சக்கமா அடிபட்டு மூஞ்சி பத்தி எரிஞ்சாப்புல ஆயிடுத்து.. கை விளங்காம போயிடுத்து.. காலை அறுத்துத்தான் வெளிலயே எடுக்க முடிஞ்சுது.. ஆஸ்பத்திரில ரெண்டு மாசம் இருந்தார்.. உக்காந்துட்டே இருக்கணும், படுக்க முடியாது.. இப்படித்தான்.. சின்னக் கொழந்தை வரைஞ்ச ராட்சசன் படமாட்டம் பிராணன் போறமட்டும் இருக்கணும்".

எனக்கு மனதைப் பிசைந்தது. "கடவுளே!" என்றேன். "...தப்பா நினைக்காதீங்கோ.. இன்னொரு குழந்தை என்னாச்சு?"

"இந்த ஊர்ல எல்லாத்துக்கும் சட்டம் தம்பட்டம்னு வச்சிருக்கானே? அனாதைக் குழந்தை அரசாங்கத்துக்குச் சொந்தம்னுட்டு அவாளே எடுத்துண்டுட்டா.. அதும் நல்லதுக்குத்தான்.. அந்தக் குழந்தையை எங்களால வளக்க முடியாதே?" மாமிக்குக் குரல் கம்மியது.

"என்னை மன்னிச்சுருங்க மாமி.. துக்கத்தைக் கிளறிட்டேன்"

"துக்கச்சட்டி. கிளறினா ஆப்பைல வேறென்ன வரும்? போறது.. ஏதோ உன்னைப் பார்த்ததும் எனக்குச் சொல்லத் தோணித்து.. ஓசிச் சாப்பாடு போட்டு ஒப்பாரி வைக்கறேன்னு நினைச்சுப்பாய்" என்றார்.

"அச்சச்சோ.. அப்படி இல்ல"

"சரி.. நாளை சாப்பாடுக்குத் தயார் பண்ணனும். ஞாயித்துக் கிழமையாச்சே.. கச்சேரியாட்டம் வருவா. மூணு வேளைக்கும் பண்ணனும். காசு வாங்கியாச்சே? கார்த்தால இட்லி, பொங்கல். சட்னி அரைக்கணும். மத்யான சாப்பாட்டுக்கு தேங்காய் ஜீராக் குழம்பு, உருளைக்கிழங்கு ரோஸ்ட், அவியல், அரைச்சு விட்ட ரசம், முட்டைக்கோஸ் பச்சடி, டிபனுக்கு குழம்புமா உப்புமா பண்ணுங்கோனு ரொம்ப நாளா கேட்டுண்டிருக்கா எல்லாரும், அப்புறம் ராத்திரி மீல்சுக்கு எலுமிச்ச ரசம், வாழைக்காய் பொடிமாஸ். வாரத்துக்கு கட்டிக் கொடுக்க முப்பது சம்படம்.." என்று பட்டியல் போட்டார்.

"நான் ஹெல்ப் பண்றேன்" என்று எழுந்தான் ரகு. "வரியா துரை? டயர்டா இருந்தா நீ மாடில படுத்துக்க.."

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு மாமிக்கு உதவி செய்தோம். எல்லாம் முடிந்த போது இரவு ஒன்றரைக்கு மேலாகிவிட்டது. மாமி எங்களுக்கு ஒரு டம்ளரில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு என் அம்மா நினைவு வந்தது. தூங்கிக் கொண்டிருந்தாலும் எழுப்பி, குடித்துப் படுக்கச் சொல்லிப் பாலை ஆற்றிக் கொடுப்பார் அம்மா. மாமிக்கு நன்றி சொல்லிப் பாலை வாங்கிக் கொண்டேன்.

"இங்கயே படுத்துக்கோ.. ரகுவாட்டம் நீயும் எனக்கு ஒரு பிள்ளை தான்" என்று அலமாரியிலிருந்து ஒரு புது ஜரிகைவேட்டி கொண்டுவந்து கொடுத்தார். நான் வேட்டியே கட்டியதில்லை, எனினும் வாங்கிக் கொண்டேன். "நான் கண்ணசரணும். கோரமானாலும் எம்புருஷன் எனக்குக் காதலனாச்சே? அவர் கையையாவது பிடிச்சுண்டு படுத்தா தான் தூக்கம் வரும் இந்தக் கட்டைக்கு" என்றபடிக் காணாமல் போனார்.

ரகுவும் நானும் மாடியில் படுத்தோம். "சாரி துரை.. இதையெல்லாம் உன்னிடம் முதலில் சொல்ல வேணாம்னு தான் சொல்லலே.. வேணும்னா உன்னை அபார்ட்மென்ட்ல கொண்டு விடறேன்" என்றான்.

"நோ நோ.. எனக்கு ஆச்சரியமா இருக்கு ரகு.. இப்படி இவங்களுக்கு உதவி பண்றியே? பெத்தவங்களாட்டம்.."

"இதெல்லாம் சின்ன விஷயம்.. இவ்வளவுதான் என்னால் முடியும்" என்றான் ரகு. அந்தக் கணத்தில் ரகு எனக்கு விசுவரூபம் கொடுத்தான்.

"நானும் இனிமே வாராவாரம் உதவி செய்ய வரேன்" என்றேன். "ரகு.. கேட்டா தப்பா நினைக்காதே? இவங்க எப்படி இங்க தங்கறாங்க?"

"இல்லீகல் தான். விசா கிடையாது. க்ரீன் கார்ட் கிடையாது. பசுபதி டிஸ்சார்ஜ் ஆனதும் ஐஎன்எஸ்ல அறுபது நாள் கருணை அவகாசம்னு கொடுத்தாங்க.. வேன்கூவருக்கு டிகெட் வாங்கி அனுப்பிட்டு, அங்கிருந்து கார்ல நான் தான் இவங்களைப் பதுக்கி அழைச்சுட்டு வர ஏற்பாடு செஞ்சேன். இந்தியால இந்த மாதிரி ஒரு புருஷனோட இவங்களால எப்படி சமாளிக்க முடியும்? அதுக்கு மேலே இந்த வயசானக் காதல் ஜோடிக்கு வேறே குடும்பமும் கிடையாது.. அதான் இங்கயே சாப்பாட்டு மெஸ் வச்சுப் பிழைக்கற வழியப் பாத்துக்குறாங்க. எல்லாம் கேஷ்.. பேங்க் அகவுன்ட் கிடையாது, விலாசம் கிடையாது, தபால் கிடையாது.. கஷ்டம் தான், இருந்தாலும் மாமி கஞ்சி ஊட்டறப்ப பாத்தியே பசுபதியோட கண்கள் பளபளன்னதை.. அதான் லவ்.. அந்த அனுபவத்துக்காக மாமி செக்கிழுக்கவும் தயாரா இருக்கா.."

"உடம்பு சரியாமப் போனா?"

"மாமிக்கும் பசுபதிக்கும் கருணை ஆஸ்பத்திரிகளிலும் இந்திய மெக்சிகன் டாக்டர்கள் மூலமும் அப்பப்போ மருத்துவம் கிடைக்குது.. இந்த இடமும் நல்ல பாதுகாப்பு.. நாம வரப்ப முன் வீட்டுல பாத்தமே மெக்சிகன்.. உன்னையே கவனிச்சான் பாரு யுவான்.. அவன் ஏறக்குறைய செக்யூரிடி மாதிரி.. சந்தேகத்துக்கிடமா யாராவது வந்தா உடனே சிக்னல் கொடுத்துடுவான்".

        டுத்த இரண்டு மாதங்களுக்கு நான் வாராவாரம் ரகுவுடன் ராமலக்ஷ்மி வீட்டுக்குப் போவது வாடிக்கையானது. அவருக்குச் சமையல் வீட்டுவேலை என்று உதவி செய்ததால் என்னிடம் நாற்பது டாலர் மட்டுமே வாங்கிக்கொண்டார். என்ன சொல்லியும் கேட்கவில்லை. எனக்கு அவருடன் பழகுவதும் உதவுவதும் ஏனோ கோவிலுக்குப் போய்வரும் நிறைவைக் கொடுத்தது.

ஒரு புதன்கிழமை காலை ரகு எனக்குப் போன் செய்தான். "துரை.. அர்ஜன்டா உதவி தேவை.. பக்கத்துல யாரும் இல்லையே? மெதுவா பேசு" அவன் குரலில் படபடப்பு.

"என்ன?" என்றேன் அலுவலக போனில் மென்மையாக. அப்போதெல்லாம் செல்போன் கிடையாது.

"ப்ராப்ளம். ஐஎன்எஸ்க்கு யாரோ வத்தி வச்சுட்டாங்க.. ராமலக்ஷ்மி பசுபதி ரெண்டு பேரையும் யுவான் பதுக்கி வச்சிருக்கான்.. அவங்களை அங்கிருந்து உடனே வேறே எடத்துக்கு மாத்தணும்.. க்ரைசிஸ்.."

"எங்கே?"

"உன் அபார்ட்மென்டுல அவங்களை வச்சுக்க முடியுமா? கொஞ்ச நாளைக்குத் தான்.. என் வீடு கேடட் கம்யூனிடி.. செக்யூரிடி அதிகம்.. அதில்லாம மூணாவது மாடி.. உன் அபார்ட்மென்ட் க்ரவுன்ட் ப்ளோர்"

"அது சட்ட விரோதமில்லையா ரகு?"

"சில ஆத்மார்த்த நேயங்கள் சட்டத்துக்கு வெளியே தான் ஆரம்பமாவுது துரை.. கேன் யூ? ஏதாவது ஆச்சுனா நான் பொறுப்பு.."


தொடரும்>>


2012/12/06

போகட்டும் 2012



            2012 முடியப் போகிறது. இந்த வருடத் தொடக்கத்தில் செய்வதாகத் தீர்மானித்தவைகளைச் செய்து முடிக்க இன்னும் இருபத்தைந்து நாட்களே உள்ளன, மக்களே! செய்யத் தொடங்க இன்னும் இருபத்தைந்து நாட்களே உள்ளன, அப்பாதுரை!
***

கணக்கற்ற வாக்குறுதிகளைக்
கண்ணாடியில் அள்ளி வீசும்
பத்து நாள் அரசியல்வாதி.
பாமரனின் புதுவருடச் சலுகை.
***

            12/12/12 பற்றி ஒரு திகில் சிலருக்கு இருக்கிறது. இதை வைத்து நான் 2009ல் எழுதிய 'நாகூர் கசம் சே!' paranormal கதையை நினைவில் வைத்துக் கொண்டு இமெயில் அனுப்பி 'ஷ்யாமி 12/12/12 அன்று வருவாளா?' என்று விசாரித்த (பயமுறுத்திய) இந்ட்லி நண்பர் சுரேந்திரனுக்கு நன்றி. கதை மறந்தே போனது. கதையின் நாயகன் ரகு இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போனான் என்று என்னுடைய சமீப இந்தியப் பயணம் ஒன்றில் தெரிந்து கொண்டேன். ஷ்யாமி வந்தாலும் ரகுவின் ஆவியைத் தான் தேடவேண்டும். உலகம் அழியுமோ என்றுக் கலங்குவோர் உடனடியாகக் கதையைப் படித்து பயப்படலாம். பிறகு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம். ஒரு பயம் இன்னொரு பயத்தைப் போக்கலாம், அல்லது கூட்டலாம். எல்லாம் நல்லெண்ணம் தான்.
***

            21/12/12 பற்றி ஒரு திகில் சிலருக்கு இருக்கிறது. இன்றிலிருந்து மூன்றாவது வெள்ளிக்கிழமை உலகம் அழியுமா? இதைப் பற்றிக் கலவரப்பட்டு NASAவுக்கு கோடிக்கணக்கில் இமெயில், கடிதங்கள் வருகின்றனவாம். தனியாக ஒரு இணையதளக் கேள்விபதில் பகுதி அமைத்து அமைதிப்படுத்த முனைந்திருக்கிறது அமெரிக்க அரசாங்கம்/NASA. அப்படி உலகம் அழியும் என்று நம்புகிறவர்கள் தங்கள் சொத்துக்களை விற்றுப் பணமாக என்னிடம் கொடுக்கலாம். என்னுடைய ஸ்விஸ் வங்கியில் போட்டு வைக்கிறேன். உலகம் அழியவில்லையென்றால் ஸ்விஸ் வங்கிச் சேமிப்புக்கான செலவை மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சதைத் திருப்பிவிடுகிறேன். என் கருமுடி, மீசை, தாடி மேல் சத்தியமாகச் சொல்கிறேன், என்னை நம்பலாம்.
***

            2012ன் மோசமான தோல்வி, ஹ்ம், வேண்டாம், திரும்பத் திரும்பப் புலம்பி என்ன பயன்?
***

            2012ன் மிகப்பெரிய வெற்றி.. க்கும்.. அது ஒன்றும் இல்லை.

2012ன் மிகப்பெரிய வெற்றி, கந்னம் ஸ்டைலாக்கும்.

கந்னம் ஸ்டைலுக்குச் சொந்தக்காரரான தென் கொரியாவைச் சேர்ந்தக் கலைஞர் ஸை (psy), யுட்யூப் சாதனத்தின் வழியாக உலகப் புகழ் பெற்றவர். இவரது கந்னம் ஸ்டைல் விடியோக்கள் ஒன்றரை பிலியன் பார்வைகளுக்கு மேல் பெற்று யுட்யூபில் யாராலும் எளிதில் எட்டிப் பிடிக்க முடியாத சாதனையைப் படைத்திருக்கிறது. இவரது அசல் விடியோ மட்டும் ஏறக்குறைய பிலியன் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. மெட்டு/டேன்ஸ் இரண்டையும் ஷாருக் கான், விஜய் போன்றவர்கள் காபியடித்து இந்தியாவுக்கு இன்னும் கொண்டு வரவில்லையென்றால் ஆச்சரியம். ஒரு வேளை ரஜனிகாந்துக்காகக் காத்திருக்கிறார்களோ என்னவோ.

கவனிக்கவில்லையெனில் மறுபடியும் சொல்கிறேன். யுட்யூபில் ஒன்றரை பிலியன் பார்வைகளுக்கு மேல்!!! ஒரே ஒரு பாடல்/ஆட்டம் மட்டும்! ஆங்கிலம் கிடையாது, பிரபலங்கள் யாரும் இல்லை. புது ஆள் புரியாத பாஷையில் பின்னி எடுக்கும் இந்த விடியோவுக்கு பார்வைகள் இன்னும் பிய்த்துக் கொண்டு போகின்றன. பாடலின் தொடக்கத்தில் விளம்பரத்தை இணைக்க போட்டா போட்டியாம். ஒரு யுட்யூப் பதிவை வெட்/ஒட் செய்து மறு யுட்யூப் பதிவு செய்வோருக்கும் விளம்பரங்கள் குவிகின்றனவாம்!

இந்த வருடம் முழுதும் அமெரிக்காவில் கந்னம் கூத்து. டீனேஜ் பிள்ளைகள் முதல் ஒபாமா வரை கந்னம் ஜூரம். மடானா, ப்ரிட்னி, ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன் என்று பழைய பிரபலங்களும் டெய்லர் ஸ்விப்ட், கேடி பெரி போன்ற புதுப்பிரபலங்களும் புஸ்க் புஸ்க் என்று கந்னம் சூடு போட்டுக் கொண்டு குதித்தது சிரிப்பாக இருந்தது. அசல் கந்னமும் சிரிப்பு தான் - அது வேறே விஷயம்.

still, ஜூரம் வந்து ஆடும் இந்த ரசிகர்களைப் பாருங்களேன், நான் சொல்வது புரியும். இந்த ரசிகர்களின் உற்சாகம் கொஞ்சமாவது நம்மைத் தொற்றிக் கொள்ளும்.

இளம் கலைஞர் ஸையின் வாழ்க்கை வரலாற்றை (!) படித்த போது - இந்த நபரின் சாதனைகளின் பின்னே இருக்கும் விடாமுயற்சியும் தளராமையும் கந்னத்தில் கைவைத்து வியக்க வைத்தது. அது தான் இவரது வெற்றியை நிறைவோடு நோக்கச் செய்கிறது.
***

            2012ன் கொடுமையான சோகம். இந்தியாவில் இளைஞர் தற்கொலைகள் சென்றப் பதினொரு வருடங்களை விட அதிகமென்று சமீபத்தில் படித்தேன். எப்போதோ படித்த இந்த வரிகள் நினைவுக்கு வந்தன. "I know life can be tough at times, but when I think about the fact that I'll be dead for trillions and trillions of years longer than I'll be alive, I think I'll hang around and deal with it as long as I can". துயரங்கள் வாட்டினாலும், வாழ்வது எவ்வளவோ மேல்.
***

            2012ல் உலகம் அழிகிறதோ இல்லையோ அனாவசிய பயங்களையும் கண்மூடித்தனங்களையும் இந்த வருடத்தோடு அழிப்போம். தன்னம்பிக்கையோடு புதுவருடத்தைத் தொடங்குவோம்.

2012/11/24

அவல் என நினைத்தால்..





            ன்னொரு இந்திய நண்பர் மூட்டை கட்டத் தொடங்கியிருக்கிறார். மகள் முதுகலைக் கல்லூரியில் சேர்ந்த இரண்டே மாதங்களில் நட்புத் தம்பதிகள் இருவரும், "போதும்டா ஆசாமி! (நாத்திகத் தம்பதிகள்) இத்தனை நாள் அமெரிக்காவில் இருந்ததும் சேர்த்ததும் போதும்" என்று வேலையை உதறினார்கள், வீடு கார் என்று தொடங்கி ஐபாட் வரை அத்தனை வசதிப் பொருட்களையும் விற்றார்கள் (கராஜ் சேல் எனும் சுலபமான சந்தைமுறை இன்னும் இந்தியாவைத் தொடவில்லை என்று நினைக்கிறேன்). பெண் பெயரில் பாதிப் பணத்தைப் போட்டார்கள், மீதிப்பணத்தில் கோயமுத்தூர் அருகே முதியோர் இல்லம் ஒன்றில் இடம் வாங்கினார்கள்.. கிளம்பத் தயாராகி விட்டார்கள். புதுவருடத்தை இந்தியாவில் கொண்டாடப் போகிறார்கள். நீடித்த மின்சாரத் தடையுடன் வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க நினைவாக ஒரு சிறிய விழா வைத்து அழைத்திருந்தார் நண்பர். போனதும் என்னை ஆறத்தழுவி, "எல்லாம் முடிஞ்சாச்சு அப்பாத்துரை" என்று என் பெயர் உடைய அழுத்தினார். "இனிமே பொண்ணு கல்யாணம் கில்யாணம்னு ஏதானு செஞ்சுகிட்டு, அதும் கல்யாணத்துக்குக் கூப்பிட்டா இங்கே வருவோம்.. இல்லாட்டி அவ்ளோ தான்.. இந்தப் பக்கமே தலைவச்சுப் படுக்கப் போறதில்லே.." என்றார். எனக்கு மட்டுமே கேட்டப் பெருமூச்சுடன் வாழ்த்தினேன்.

விழாவுக்கு வருகிறேன். இந்த ஊரில் நட்புக்கூட்டம் சேர்ந்தால் 'இந்த மேரதான் அந்த மேரதான்' என்று ஏதாவது செய்வார்கள். இது ஓடுகிற மேரதான் அல்ல. சொல்கிறேன்.

நண்பர் எம்ஜிஆர் ரசிகர். ஊருக்குக் கிளம்புமுன் தன் முப்பது வருட ஆசை ஒன்றைத் தீர்த்துக் கொண்டார். எம்ஜிஆர் சினிமா மேரதான் ஒன்றைத் தன் ஊர்திரும்பல் விழாவின் மையக் கொண்டாட்டமாக அமைத்தார் (மோகன்குமாரின் பதிவுப்பெயர், பொருள் புரிந்து நெற்றியில் அடித்தது).

ஒரு புறநகர் சினிமா அரங்கை வார இறுதிப் பேகேஜ் என்று புதன் கிழமை முதல் ஐந்து நாள் வாடகைக்கு எடுத்திருந்தார் நண்பர். அவர் அழைத்திருந்த சுமார் இருபது குடும்பங்களும் தினம் அரங்கிலேயே தஞ்சம். அரங்கில் இரண்டு சினிமா தியேட்டர்கள். இரண்டு தியேட்டரிலும் தினம் சுமார் பதினெட்டு மணி நேரம் எம்ஜிஆர் படங்கள் ஓட, அரங்கிலேயே விருந்து, அரட்டை, விடியோ விளையாட்டு, கேரம், சீட்டாட்டம்... எங்கிருந்தோ பல்லாங்குழி புளியங்கொட்டை கூட கொண்டு வந்திருந்தார்கள்!.. அண்மை ஓட்டலில் ஐந்து ரூம்கள் குட்டித்தூக்கம் மற்றும் பிற வசதிகளுக்கு என அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.

எத்தனையோ வருடங்கள் கழித்து முதல் வரிசையில் அமர்ந்து விசில் அடித்தேன். சுகமான அனுபவம். ஒரு அமெரிக்க நண்பர் அத்தனை எம்ஜிஆர் படங்களையும் பார்த்தார். கிளம்பும் பொழுது தமிழ் சினிமா ஆச்சரியம் அவர் கண்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. "you guys make films, we only make movies" என்றார் எங்களிடம். புரிந்தது போல் தலையாட்டினோம்.

வித்தியாசமான thanksgiving. அரட்டை அமர்க்களத்தில் எங்கள் தூக்கம் போனது. எனினும் நட்புத் தம்பதியருக்குப் பெரும் நிறைவு. அதுதான் முக்கியம்.

Thanksgiving என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

அமெரிக்கா வந்த புதிது. ஒரு தமிழ் நண்பர் என் போன்ற சோற்றுக்கு லாட்டரியடித்த மாணவர்களை அழைத்து வருடந்தோறும் விருந்து கொடுப்பார். ஒருமுறை விருந்துக்கு ஒரு பிரிடிஷ் பேராசிரியரை அழைத்திருந்தார். சும்மா இருக்காமல் ஒரு கேனை அமெரிக்க மாணவன் அவரிடம், "இங்கிலாந்தில் தேங்ஸ்கிவிங் எல்லாம் கொண்டாடுவீர்களா?" என்றான்.

பேராசிரியர் அமைதியாக, "ஜூலை நாலாம் தேதி கொண்டாடுவோம்" என்றார்.


            னித இனம் மூளை மழுங்கி வருவதாக - நம்முடைய புத்திசாலித்தனம் குறைந்து வருவதாக - கண்டுபிடித்திருக்கிறார்கள் ஸ்டேன்பர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள். மனித அறிவாளுமையை நிர்ணயிக்கும் ஏறத்தாழ ஐந்தாயிரம் மரபணுக்களை வகைப்படுத்தி ஆராய்ந்தவர்கள், இந்தப் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள்.

'இது என்ன பெரிய கண்டுபிடிப்பு - என் அப்பா அம்மாவுக்கும் மனைவி கணவருக்கும் இன்ன பிறருக்கும் எப்போதோ தெரிந்த விஷயமாச்சே?' என்று நீங்கள் எண்ணினால் நானும் துணை. எனினும், இவர்கள் கண்டுபிடித்திருப்பது உங்களையும் என்னையும் பற்றியல்ல. பொதுவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, மனித இனம் தன்னுடைய மூளை வளர்ச்சியின் உச்சத்தை எப்போதோ அடைந்துவிட்டதாம்.

எப்போது அடைந்ததாம்? மனித இனம் கூட்டாக வாழும் நாகரீகத்தைத் தழுவிய போது என்கிறார்கள். அதாவது, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாம்.

கூட்டாக வாழத்தொடங்கியதால் மனித அறிவு அந்த வாழ்க்கைக்குத் தேவையான மாற்றங்களுக்குத் தன்னைத் தயார் செய்வதிலேயே மூளையைச் செலவழிக்கத் தொடங்கியதால், மூளை தொடர்ந்து வளரவேயில்லையாம்.

இதை எதிர்த்து ஒரு ஆய்வாளக்கூட்டம், "அதெப்படி? இன்றைக்குக் காணப்படும் இத்தனை வளர்ச்சிகளும் மூளை வளராமல் ஏதாவது கடவுள் கொண்டு வந்து போட்டதா?" என்று வம்புக்கு வர, முதல் ஆய்வாளக் கூட்டம், "அப்படியில்லை.. மனித இனம் தன் மூளையை lateral developmentஆகப் பயன்படுத்தி வருகிறது. மூளையின் பயன்பாடு வளர்ந்தாலும் மூளையின் அளவு ஆயிரக்கணக்கான வருடங்களாக வளரவேயில்லை" என்று விளக்கியது. எதிர்கூட்டம் விடாமல் "இது போன்ற ஆய்வில் நேரத்தையும் பணத்தையும் செலவழிப்போருக்குத் தான் மூளை வளரவில்லை" என்று இடித்தது.

என்னுடைய ஓட்டு எதிர்க்கட்சிக்கு (எப்போதுமே).

போகட்டும், நம்முடைய மூமூமூமூமூ...மூதாதையரின் மூளை நம் மூளையைவிட ஒரு சைஸ் பெரிதாக இருந்திருக்கலாம். அதைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு நமக்கு மூளை இருக்கிறது. அதுதான் முக்கியம்.

மூளை அளவு என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

மூளை மியூசியம் ஒன்றில் உலகத்தின் அத்தனை நாடு/இன மக்களின் மூளை அளவுகளையும் விவரங்களையும் தொகுத்துக் காட்சியில் வைத்திருந்தார்களாம். மற்ற இனங்களை விட சர்தார்களின் மூளை மிகப்பெரிதாக இருந்ததாம். அதை மனைவி மக்களிடம் காட்டிப் பெருமைபட்ட ஒரு சர்தார், "நல்ல வேளை நாம மூளையை பொறுப்பா அப்படியே வச்சிருக்கோம், மத்தவங்களைப் போல செலவழிக்காம.." என்றாராம்.


            ந்தப் பக்கம் அப்படியென்றால், இந்தப்பக்கம் இப்படி ஒரு ஆராய்ச்சி.

மரணத்தை வெல்ல முடியும் என்றுத் தீர்மானமாகச் சொல்கிறார்கள் marine வேதியல் ஆராய்ச்சியாளர்கள்.

நிறையச் சிரிக்க வேண்டும், கவலை இல்லாமல் இருக்கவேண்டும், பற்றறுக்க வேண்டும், அரை வயிறு சாப்பிட வேண்டும் போன்ற 'சும்மா இலக்கியத்தனப்' பேச்சு இல்லை. திருமூலரின் 'காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறி'யுமல்ல.

இது அசலில் நோ டெத். சாவுக்குச் சாவு. கயாவுக்கு ஒரு கயா. மரணத்தை எண்ணிக் கலங்காத விஜயனின் ரகசியம். இந்த ரகசியம் கெமிஸ்ட்ரியில் புதைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் ஸ்மித்சோனியன் ஆய்வாளர்கள். அப்படி என்ன ரகசியம்?

செசியம் க்லோரைட், செசியம் க்லோரைட் என்று ஒரு உப்பு. இந்த உப்பின் ஒரு முக்கிய பாதிப்பு, RD என்று செல்லமாக வழங்கப்படும் Reversed Development. உடனே நாம் குரங்காவோம் என்று பயப்படவேண்டாம். இந்த RD ரொம்ப நல்ல RD.

நீரினங்களில் இந்த உப்பின் பாதிப்பை ஆராய்ந்தவர்கள், 'turritopsis nutricula' எனப்படும் jelly fish வகை தாமாக இறப்பதே இல்லை என்று கண்டுபிடித்தார்கள். செசியம் உப்பின் பாதிப்பினால் இந்த மீன் வகையின் உயிரணுக்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கின்றனவாம்.

alright! அங்கிருந்து மனித இனத்துக்குக்கானப் பயன்பாடு, தொட்டு விடும் தொலைவு தானே?

நமது உடலின் திசு மற்றும் உயியரணுக்களை 'பிறந்த நிலைக்கு' மீண்டும் எடுத்துப் புதுப்பிக்க வைக்கும் RD உப்பை வருக வருக என்று வரவேற்கிறேன். நமது செல்கள் இயற்கையாகத் தம்மைத்தாமே தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டால், என்றைக்கும் இளமை தானே? மரணபயமே லேதே? ..காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன். எல்லோரும் பாடலாம். மீசை optional.

காலனை வெல்லும் இந்த உப்பு, என் வாழ்நாளில் தெருமுனை முருகன் கடையில் கிடைக்கப் போவதில்லை. இந்த நூற்றாண்டு முடிவுக்குள் கிடைக்கலாம், முருகன் கடைகள் மூடினாலும். சின்ன சிக்கல்கள் தீர வேண்டும் முதலில். இது முழுக்க முழுக்க கதிரியக்க உப்பு என்பதால் கட்டுப்பாட்டுடன் nuclear medicineஆக மட்டுமே பயன்படுகிறது. இப்போதைக்கு 'அருகிலிருந்தும் தொடப்பயந்தேனே' கதை.

மரணத்தை வென்றால் 'கடவுள் சொர்க்கம் நரகம் எல்லாம் என்னாவது?' என்றக் கவலைகள் கிடக்கட்டும், மனிதம் மரணத்தை வெல்ல ஒரு சாத்திய வழி தெரிந்திருக்கிறது. அதுதான் முக்கியம்.
மரணம் கடவுள் சொர்க்கம் நரகம் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

ஒரு பூசாரி, ஒரு மருத்துவர் - ஒரே நேரத்தில் இறந்த பின் எமனைச் சந்திக்கிறார்கள். எமன் இருவரையும் வரவேற்று "இருவருக்குமே சொர்க்கம்" என்று தீர்ப்பளித்து அனுப்புகிறான்.

சொர்க்கத்தில் ஒரு பெரிய வசதியான இடத்தில் மருத்துவருக்கு இடம் கிடைக்கிறது. பரமசிவனுக்குப் பக்கத்து வீடு.

பூசாரிக்கோ முப்பத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து சொச்ச தேவர் ஒருவருடைய வீட்டின் பின்கட்டில் ஒரு இலையில்லா மரத்தடியில் சிறிய கூரை போட்டுக் கொடுக்கிறார்கள்.

மருத்துவருக்குப் புரியவில்லை. பரமசிவனிடம், "என்ன இது மிஸ்டர் பரமசிவம்? இந்தப் பூசாரி நாள் முழுதும் உம் போன்றக் கடவுள்களையே வழிபட்டு புகழ்பாடி வந்தார். அவருக்கு இப்படி ஒரு இடம். நாளும் பணம் தேடிக்கொண்டிருந்த டாக்டரான எனக்கு இத்தனை வசதியான இடமா, புரியவில்லையே!?" என்று கேட்டார்.

பரமசிவன், "ஐயா.. இங்கே பூசாரிகள் கணக்கில்லாமல் வராங்க.. ஆனால் பாருங்க.. சொர்க்கத்துக்கு வந்திருக்கும் முதல் டாக்டர் நீங்கள் தான். அதனால் இந்த வரவேற்பு" என்றார்.


            மெரிக்கத் தேர்தல் பரபரப்பினிடையே ஒரு கொடிய செயல் ஊடகங்களில் பின்தங்கிவிட்டது. பத்து மாதச் சிறுமியைக் கடத்திச் சென்றுக் கொன்றக் குற்றத்துக்காக ரகுநந்தன் எனும் கயவன் பிலடெல்பியாவில் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருக்கிறான். வழக்கு நடைபெற்று வருகிறது.

கிராதகன் ரகுநந்தன் சிறுமியை மட்டும் கொல்லவில்லை. சிறுமியைப் 'பார்த்துக் கொண்டிருந்த' அவளுடையப் பாட்டியையும் கொன்றிருக்கிறான். எதற்காக? ஐம்பதாயிரம் டாலர் பணத்துக்காக!

இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தால் கயவனும் திருந்துவானே?

தற்காப்புக்கான அனைத்து சக்தியும் இழந்த முதியவரை.. தற்காப்பு எண்ணம் கூடத் தோன்ற இயலாதக் குழந்தையை.. this.. this monster... this demon.. ரகுநந்தன் ராட்சசன் ஆனதேன்?

கொலைகளையும் செய்துவிட்டு, 'குழந்தையைக் காணவில்லை' என்று வஞ்சிக்கப்பட்டக் குடும்பத்துடன் 'தேடலில்' பங்கெடுத்துக் கொண்டானாம். இவன் மனிதன் தானா?

அனேகமாக இவனுக்கு மரண தண்டனை கிடைக்கும். கிடைக்க வேண்டும். ரகுநந்தனின் கொட்டைகளை அந்தக்காலத் துருப்பிடித்தப் பாக்குவெட்டியால் உயிர் போகும் வரை நசுக்கி நறுக்கிக் கொல்லவேண்டும் என்று கனம் கோர்ட்டாரைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சிறுமியின் பெற்றோருக்கு என் உளமார்ந்த அனுதாபங்கள், வருத்தங்கள். எத்தனையோ கனவுகளுடன் அமெரிக்கா வந்து அத்தனையும் சிதைந்துத் திரும்பிய இந்தியத் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்களுடைய இழப்புக்கு அளவில்லை. மிகக் கொடுமை.

இந்த வேளையில் உற்றார் உறவினரின் அன்பும் ஆதரவும் இவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும். துயரினின்று மீள்வது முக்கியம். பணத்தாசைக்குச் சுலபமாகப் பலியாகும் நமக்கு ரகுநந்தன் போன்றக் கொலைகாரர்கள் பாடமாவதும் முக்கியம்.
கொலைகாரன் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. (எங்கே என் கண்ணியம்?)

ஒரு சிறுமியைக் கொலை செய்ய எண்ணிய ஒரு கொலைகாரன், அவளைக் கடத்தி ஒரு இருண்ட காட்டுக்குள் அழைத்துச் சென்றானாம்.

வேண்டாம்.. மேலே சொல்ல மனம் வரவில்லை.


            ந்த வாரம் அத்தனை எம்ஜிஆர் படங்களைப் பார்த்ததும், ஏற்கனவே தெரிந்திருந்த ஒன்று தீர்மானமானது.

சரோஜாதேவியே எம்ஜிஆருக்கு மிகப் பொருத்தமான ஜோடி. 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டும் விதிவிலக்கு.

கொஞ்சம் கூடப் பொருந்தாத இணை நடிகைகள் பாரதி, வாணிஸ்ரீ, மற்றும் லதா. தேவிகா சற்று ஆச்சரியமான பொருத்தம். எம்ஜிஆர் அருகில் இருந்தாலும் பானுமதி, சாவித்திரி இருவரும் ஏதோ தனியாக நடிப்பது போலிருந்தது. சந்திரகலா, மஞ்சுளா இருவரையும் ஏன் தன் ஜோடியாக நடிக்க வைத்தார் எம்ஜிஆர் என்பது புதிர்.

பின்னாள் படங்களைப் பார்க்கையில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்குப் பலமா அல்லது ஜெ எம்ஜிஆருக்குப் பலமாக இருந்தாரா என்றக் கேள்வி அடிக்கடித் தோன்றியது.

பாடல் காட்சிகளில் சரோஜாதேவி சளைக்காமல் எம்ஜிஆரையே கணக்கு பண்ணுகிறார்! எம்ஜிஆர் பானுமதியிடம் பயந்து நடிக்கிறார். பத்மினி எம்ஜிஆர் படங்களில் அழகாக இருக்கிறார். சௌகார் ஜானகிக்கு அட்டகாசமான பாடல்கள் கிடைத்திருக்கின்றன. கேஆர்விஜயா ஜெயலலிதா இருவருடனும் எம்ஜிஆர் 'நெருங்கி' நடித்திருக்கிறார்.

வில்லன்களில் நம்பியாருக்குத் தனியிடம் கொடுத்திருக்கிறார். மற்றவர் படங்கள் போல் நாகேஷ் காமெடி எம்ஜிஆர் படங்களில் அத்தனை சிறப்பாக இல்லை.

எம்ஜிஆரைப் போல் நடனமாட தமிழ்ச் சினிமாவில் யாரும் இல்லை. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' போல் ஒரு வேக நடனக் காட்சியை நான் பார்த்ததில்லை என்றே நம்புகிறேன். விஜயலட்சுமியுடன் போட்டியாட்டம் சில நேரம் கேமரா ட்ரிக்கோ என்று நினைக்க வைத்தது. நடனத்தை ரசித்த இன்னும் சில பாடல்கள் 'பல்லவன் பல்லவி', 'நல்ல வேளை'.

ஜெமினி சிவாஜியைப் பார்க்கையில் எம்ஜிஆர், பாடலுக்கேற்ற உடையலங்காரத்தில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 'வனமேவும் ராஜகுமாரி' பாட்டில் ராஜேந்திரனுக்குத் துணைவரிகளைப் பாடுகிறார் என்றாலும் எம்ஜிஆரின் உடையும், நடன அசைவில் பெண் பாவனையும் மறக்கவே முடியவில்லை.

கேவிஎம் எம்ஜிஆருக்கு நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். மிகவும் ரசித்த கேவிஎம் பாடல்கள்:'உன்னை அறிந்தால்', 'அழகுக்கு மறு பெயர்'. இரண்டு பாடல்களிலும் சவுன்டுக்கு ராஜன் சொக்க வைக்கிறார். எம்எஸ்வி எம்ஜிஆருக்கு உபரியாக உழைத்தார் என்றுச் சொல்வார்கள். உண்மைதானோ என்றுத் தோன்றியது. அனைத்து டூயட்களிலும் டிஎம்எஸ்-சுசீலா அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். 'தஞ்சாவூரு சீமையிலே', 'நாங்க புதுசா' பாடல்களில் சுசீலா டிஎம்ஸை லபக் என்று விழுங்கியிருக்கிறார்.

இந்த வாரம் பார்த்தப் படங்களில் மிக மோசமானது நவரத்தினம். மிக மோசமான பாடல் படமாக்கம்/வரிகள்: 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. எப்பேற்பட்ட பாடல் மெட்டை எப்படி வீணாக்கியுள்ளார் எம்ஜிஆர்... எண்ணித் தாங்கவில்லை. முதல் முறையாகப் பார்த்து, சற்றும் எதிர்பாராமல் ரசித்த படம்: பெற்றால் தான் பிள்ளையா.

எம்ஜிஆர் டூயட்களில் நிறைய 'சிப்பி/முத்து' உவமை வருகிறது. அதற்கு ஏற்ற நடன அசைவுகள் தணிக்கைக்குத் தப்பியது ஆச்சரியம். 'நீ வெட்கத்தை விட வேண்டும், நான் சொர்க்கத்தைத் தொட வேண்டும்' போன்றப் பாடல் வரிகளை மட்டும் பருப்பு ரசமாக மாற்றி என்ன பயன்? மிகவும் ரசித்த டூயட்கள்: 'பாட்டு வரும்', 'நாணமோ'. விடாமல் திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்த டூயட்: 'வளர்வது கண்ணுக்குத் தெரியலே'.

தனிப்பாடல்களில் 'ஒரு கை பார்ப்பேன்' என்ற பொருள் அடிக்கடி வருகிறது. 'உலகம் பிறந்தது எனக்காக' 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' 'வெற்றி மீது வெற்றி' என எம்ஜிஆருக்கு அமைந்தாற்போல் கொள்கை/தனிப்பாடல்கள் பிறருக்கு அமையாதது ஆச்சரியம். பார்த்ததில் மிகவும் ரசித்தத் தனிப்பாடல்கள்: 'போயும் போயும்', 'தைரியமாகச் சொல்'.

கணக்கில்லாமல் எம்ஜிஆர் படம், பாட்டு, நட்புடன் அரட்டை என நாட்கள் போனதே தெரியவில்லை. நண்பரை நானும், இந்த விழாவை அவரும், எங்கள் மரணம் வரை மறக்கப் போவதில்லை. அதுதான் முக்கியம்.
எம்ஜிஆர் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி மூவரும் சொர்க்கத்தில் சந்திச்சாங்களாம். 'கதாநாயகிங்களை ரம்பை ரதினு பாடினமே, அவங்க எப்படித்தான் இருக்காங்க பார்ப்போம்'னு தேவகன்னிகை குவார்டர்சுக்குப் போனாங்களாம். அங்கே ரதி, ரம்பை, மேனகை, திலோத்தமை எல்லாம் ஒரு ஓடையில உல்லாசமா குளிச்சிட்டிருந்தாங்களாம். அவங்க நடுவுல யாரது தெரிஞ்ச முகமா இருக்குதேனு பாத்தா.. நாகேஷாம். மூணு பேருக்கும் கடுப்பாயிடுச்சாம். நேரே போய்..

மேலே சொன்னால் மக்கள் உதைக்க வருவாங்களோ? அப்ப ஜோக்கை இன்னொரு சமயம் சொல்றேன். இப்ப நான் ரசித்துப் பார்த்த சில வாத்தியார் டூயட்களைப் போட்டுச் சமாதானமாப் போயிடறேன்.

வாத்தியார் டூயட் பாடல்கள்
சற்று ஒதுங்கி, புத்தாண்டில் சந்திக்கிறேன். அனைவருக்கும் விழாக்கால மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2012/11/08

சூர்ப்பனகை






    சிறுகதைகள் ஆக்சிஜனைப் போன்றவை. தினசரி யதார்த்தத்தின் வேகத்திலும் அயர்விலும் விதியென்றுத் தொலைந்து போகும் பரிதாபத்துக்குரிய ஆயிரக்கணக்கான சபிக்கப்பட்ட மாந்தரைப் போல் தொலையாமல்.. குலையாமல்.. வாழ்வின் நுகர்ச்சிகளை அறிந்தே அடைந்தே தீருவது என்ற உறுதியுடன் சோர்வை விரட்டத் துணியும் சிலருக்கு, சிறுகதை வாசிப்பு ஆக்சிஜன். துரித ஆகஸ்டு பதினைந்து. அப்படித்தான் நினைக்கிறேன். மொழி, மக்கள், நாடு, இனம், கலாசாரம், பண்பாடு என்று வகை கடந்த, அல்லது வகை சார்ந்த, சிந்தனைப் பிரதேசத்துக்கான உடனடிப் பயணம் சிறுகதை. இலக்கியம் அலக்கியம் போன்றப் பாசாங்கு அளவுகோலோடு திரியாமல்,'படிப்பவர் உணர்வுகளைச் சுண்டியிழுத்தால் அது சிறுகதையின் வெற்றி' எனும் பக்குவத்தோடு படிக்கும் பொழுது அடிக்கடி இலக்கியத்தைத் தொட முடிகிறது.

ம்ம்.. எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறேனோ? இல்லையெனில் இப்போது சொல்கிறேன். எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும்.

சமீபத்தில் பல முறை படித்தப் புத்தகம், 'சூர்ப்பனகை'. கெ.ஆர்.மீரா எழுதிய மனதைப் பிசையும் மலையாளச் சிறுகதைகளை மொழிமாற்றித் தமிழில் வழங்கியிருக்கிறார் கே.வி.ஷைலஜா.

'புத்தகம் படிப்பது எப்படி?' என்று virginia woolf எழுதியக் கட்டுரையைக் கல்லூரி நாளில் படித்திருக்கிறேன். இதற்கு ஒரு கட்டுரையா என்று கேலி செய்ததன் பலனை சூர்ப்பனகை புத்தகம் படிக்கும் பொழுது அனுபவித்தேன். கட்டுரையில், 'புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது புத்தகம் படிப்பதன் முக்கிய சவால்' என்பார் வர்ஜினியா. நுண்மையைக் கண்டுணரும் தேடல் இருக்கிறது பாருங்கள்.. சாகா எழுத்தின் அடையாளம். இந்தத் தொகுப்பில் நிறைய கதைகள் அந்தத் தவிப்பைத் தந்தன.

தொகுப்பில் மொத்தம் எட்டுச் சிறுகதைகள். அனைத்துமே கனமானக் கதைகள். கதைத் தலைப்புகள் ஒவ்வொன்றும் கவிதை. தலைப்புக்காக ஒரு முறை, கதைத்தளத்துக்காக ஒரு முறை, கதைக்காக ஒரு முறை, நடைக்காக ஒரு முறை, சொல்லாட்சிக்காக ஒரு முறை, புரியாத தவிப்பைப் பெற ஒரு முறை, புரிந்த அதிர்ச்சியைப் பெற ஒரு முறை, கதையின் பாதிப்புக்காக ஒரு முறை, பாதிப்பிலிருந்து விடுபட ஒருமுறை என்று பல முறை படிக்க வைக்கின்றன. எட்டில் ஆறு கதைகளாவது படித்த பின் ஆவி போல் நம்மைச் சுற்றிக் கொண்டேயிருக்க வல்லவை.

பொதுவாக, மனதை வருடியோ உலுக்கியோ செல்லும் கதைகள் நிறைய கிடைக்கின்றன. படித்திருக்கிறேன். இத்தொகுப்பில் கதைத் தளமும் சொல்லிச் சென்றப் பாங்கும் அறிவைக் குடைந்தெடுத்து விடுகின்றன. அறிவைக் குடையும் படைப்புகளுக்கு ஆயுள் அதிகம். இது மீராவின் வெற்றி, ஷைலஜாவின் சாதனை. ஷைலஜாவின் ஆக்கத்திறனுக்கு சிறிது நேரத்தில் வருகிறேன். முதலில் புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்த நான்குக் கதைகளைப் பற்றி.

சூர்ப்பனகை
அனகா. பெண்ணின் சமூக அடையாளம் அந்தஸ்து அங்கீகாரங்களுக்காகப் போராடும் பெண்ணியவாதி. கணவனைப் பிரிந்து சுதந்திரமாகத் தன் பெண் சீதாவைப் வளர்ப்பவர். தன்னிலையை விட்டுக்கொடுக்காமல் போராடும் கல்லூரி விரிவுரையாளர். 'பெரிய மார்புகள் வைத்து வரைந்த படங்களுக்கும் சுவரெழுத்துக்களுக்குமிடையே பணி புரியும்' அவரை 'சூர்ப்பனகை' என்று அழைக்கிறார்கள். பெயர்க்காரணம் மறுபடியும் கதையின் இறுதியில் நம்மைத் தாக்கும் பொழுது ஒரு கணம் மூச்சுத் திணறுகிறது. கதையின் இறுதியில் அனகாவுக்கு மார்புப் புற்று நோய் வந்து மார்பை அறுத்தெறிய வேண்டி வருகிறது. சிகிச்சைக்கு முன் சீதாவை அழைத்து, "உனக்கு என்ன வேண்டும் கேள்" என்கிறார். 'லேக்டோஜன்' குடித்து வளர்ந்த அனகாவின் பெண், "முலைப்பால்" என்கிறாள். சிறுகதை இங்கே முடிந்துவிடுகிறது என்று நான் நினைத்தேன். ஆனால் அதைத் தொடர்ந்து சில வரிகள் எழுதி கதையை முடித்த விதம் அதிர்ச்சியூட்டும் வகையில் பிரமாதம். கதையின் ஆதார ஆண்-பெண் சமத்துவ வாதங்களும் நுண்பிரசாரங்களும் சொல்லாட்சியும் நடையும் திகைக்க வைக்கின்றன. 'இனிப்பூட்டப்பட்ட வார்த்தைகள் கட்டுப்பட்டியானப் பெண்களுக்கே பொருந்தும். வீழ்ச்சிகளை அறிந்துகொண்டே செய்யும் சாகசம் தான் பெண்ணியம்' என்ற வரிகள் சிந்திக்கத் தூண்டின. ஒரு கட்டத்தில், 'ஆணால் எப்படிக் கட்டுப்பட்டியாக வாழமுடிகிறது?' என்ற அனகாவின் கேள்வியைப் படித்ததும் சத்தியமாகத் திடுக்கிட்டேன்.

செய்திகளின் நாற்றம்
தலைப்பின் கவிதைத்தனத்தை ரசித்தபடி படிக்கத் தொடங்கினால் நொடிகளில் கதைத் தளம் நம்மைக் கட்டிப் போடுகிறது. ஜர்னலிசத்தில் முனைவர் பட்டம் பெற்ற அன்னா ஒரு சாதாரணப் பத்திரிகையில் இரங்கல் செய்தி, மரண அறிவிப்பு, சவ அடக்க விவரங்கள் எழுதுபவராகப் பணிபுரிகிறார். அன்னா, மகன் சன்னி, காதலன் சந்தோஷ் என்ற மூன்று பாத்திரங்களினூடே சொல்லப்பட்டிருக்கும் இறுக்கமான கதை. சூர்ப்பனகை போலல்லாமல் இந்தக் கதையின் முடிவோடு என்னால் ஒத்துப் போக முடிந்தது. ஆனால் எதிர்பார்க்கவில்லை. தில்லிக்குப் பெயரும் பொழுது, 'மரணச்செய்திகளின் வாடையை மட்டுமே உன்னால் அறிய முடிகிறது; வேறு ஜர்னலிச வேலைகளுக்கு நீ லாயக்கில்லை' என்றப் பொருளில் கிண்டலடிக்கும் சந்தோசின் வரிகள் அன்னாவின் தன்மானத்தை அப்போதைக்கு ரணப்படுத்தினாலும், கதையின் இறுதியில், அன்னாவின் கணுக்கால் நாற்றத்தைப் படிக்கையில் சம்மட்டியாக நம்மைத் தாக்குகின்றன.

அர்த்த ராத்திரிகளில் ஆத்மா
'ஹெட்மிஸ்ட்ரஸ் சரளா தூங்க ஆரம்பித்தவுடன் அவளுடைய ஆத்மா விழித்துக் கொண்டுவிடும். உடலிலிருந்து மெதுவாக இறங்கி.. வேட்டைக்காரன் போல் சோம்பல் முறித்து வெளியே வரும்' என்றுத் தொடங்கும் முதல் பத்தியில் தொலைந்து போனவன், கதை முடிந்து வெளியே வர ஒவ்வொரு முறையும் மிகவும் சிரமப்பட்டேன். உறங்கும் பொழுது உடலை விட்டுப் பிரிந்து உலவும் ஆத்மாவின் பயண அனுபவங்கள், விழித்த நிலையில் பாதிக்குமானால் என்னாகும்? உன்னதமான கதைத்தளம். கற்பனை. 'கனவுகளென்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்?' என்று முடித்திருக்கும் விதம் பிரமாதம் என்றாலும், நுட்பத்தை முகத்தின் எதிரே நிறுத்திக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. தொகுப்பில் என்னை மிகக் கவர்ந்தக் கதை.

இறந்தவளின் கல்யாணம்
'இறந்தவளின் கல்யாணம் இப்படியாக மங்களமாக நடந்தேறியது' என்று முடிகிறது கதை. முடிவை முதலில் படித்து அது வழங்கிய மெல்லிய ஆச்சரியத்தில் தூண்டப்பட்டு முழுக்கதையும் படித்தேன். ஆதர்ச நிலையிலிருக்கும் ஒருவருக்கும் அவரை அப்படி நிறுத்தியவருக்கும் இடையிலான கோழைத்தனம் பூசிய அபாண்டமான நிழலுறவின் விளைவுகளை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். படித்ததும் சிலந்தி வலையில் எதிர்பாராமல் விழுந்துச் சிக்கியச் சிறு பூச்சி போல், நாற்புறமும் எச்சில் அமிலத்தால் தன்னை வாட்டிப் புரட்டும் சிலந்தியைத் தடுக்க முடியாமல் தவிப்பது போல், உணர்ந்தேன். ஹா! என்ன கற்பனை! எப்படிப்பட்ட நடை! திருமணமும் சிலருக்கு மரணச்சடங்காகவே அமைகிறது என்ற எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை.

    மொழிமாற்றம் எளிதேயல்ல. மூலப்படைப்பின் வெற்றியில் அந்த மொழிக்குப் பெரும் பங்கிருக்கிறது. மூலப்படைப்பின் உயிர்த்துடிப்பில் அந்த மொழிக்குப் பெரும் பங்கிருக்கிறது. அந்த துடிப்பை இன்னொரு மொழியில் வெற்றிகரமாக வழங்குவது எப்பேற்பட்ட ஆற்றல்! ஷைலஜாவின் தமிழாக்கத்தை மட்டுமே படித்த நான், மூலத்தின் தாக்கத்தைப் பெறும் அறிவில்லையே என்று ஏங்கினேன் என்றால் அது ஷைலஜாவின் சாதனை. தமிழில் இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று வியக்க வைத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு எழுத்தையும் 'கைபிடித்து அழைத்துப் போய் மலையுச்சியில் வைத்து அழகு பார்க்கும் பிரபஞ்சன்' போலவே நானும் உணர்கிறேன்.

சூர்ப்பனகை
மலையாள மூலம் கெ.ஆர் மீரா | தமிழில் கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ் வெளியீடு, டிசம்பர் 2009, ரூ.50


2012/10/27

மைத் மை டியர்

3


◄◄   1   2



    கோவில் வாசலில் நின்று கொண்டிருந்தவர்களை சிங்காரமும் ரகுவும் தொலைவிலிருந்து அளந்தனர். மைத்தைப் பார்த்ததும் ரகுவின் இதயத்துடிப்பு எழுநூறைத் தொட்டது. ஆரவாரித்த ரகுவை அடக்கினான் சிங்காரம். "தம்பி.. நீங்க இப்ப என் கூட வரக்கூடாது, நீங்க செய்ய வேண்டியது கவனமிருக்கட்டும்.. நானே போய் அந்தப் பொண்ணோட பேசுறேன்.."

"பாத்து பேசுங்க சிங்காரம்.. கொஞ்சம் வல்லினமா பேசினாலும் அவ காது நோகும்.." என்றபடி ரகு வேறு திசையில் கோவிலைச் சுற்றி நடக்கத் தொடங்கினான்.

    "அங்கிள் எங்கே சிங்காரம்? என்னை வரச்சொன்னாரே? மணி மூணாவுது, கோவில் திறக்க இன்னும் ஒரு மணியாவது ஆகும்.. இப்படிக் கழுத்தறுக்குறாரே?" என்றாள் மைத், அருகில் வந்த சிங்காரத்திடம்.

"வருவாரும்மா.. அவரு கார் டைர் பஞ்சராயிடுச்சு.. அதான் உங்களை வெயிட் பண்ணச் சொல்லியனுப்பினாரு.. கூல் ட்ரிங்ஸ் எதுனா வாங்யாரட்டுமா?"

"வேணாம்..."

"அப்ப இங்கயே இருங்க.. நான் போய் ஒரு சோடா குடிச்சுட்டு வரேன்.. தாகம் தாங்கலே" என்ற சிங்காரம் அவசரமாகக் கிளம்பி கோவிலின் பின்புறம் பீச் ரோட் பக்கமாக நடக்கத் தொடங்கினான்.

    ன்புமல்லி தன்னைத் தனியாக வரும்படி மைத் மூலம் சொல்லியனுப்பியதன் காரணத்தை அசைபோட்ட வாசு, பீச் ரோடில் இறங்கிக் கோவிலை நோக்கி நம்பிக்கையோடு நடந்தான். ஒருவேளை தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அன்புமல்லியை என்ன செய்யலாம் என்றுத் தயங்கி யோசித்தான். கையை உடைத்து வயிற்றை நசுக்குவதா அல்லது முதுகை உடைத்துப் பிறகு மூக்கை நசுக்குவதா என்று வரிசையைத் தீர்மானிக்க முடியாமல் தவித்தான். தவிப்பைக் குறைக்க அவசரமாகக் காற்றில் தை க்வான் தோ பழகினான். ஒரு குத்துக்கு இரண்டு பல் விழுந்தால் முப்பத்திரண்டு பல் விழ எத்தனைக் குத்துக்கள் தேவைப்படும் என்ற உபரிக் கணக்கு மனதில் தோன்ற, கைவசம் கேல்குலேடர் இல்லாமல் மிகவும் நொந்து போனான். அமைதிப்படுத்திக் கொள்ள மணல் தரையில் தண்டால் எடுக்கத் தொடங்கினான். பதினேழாவது முறையாக எழும் போது முகத்தில் ஈரமாக ஏதோ உணர்ந்து தலை நிமிர்ந்தான். முகத்திற்கு நேராக முகம் வைத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தது ஒரு கரிய நாய். சங்கத்தில் பார்த்த அதே தினேஷ்குமார்.

அடுத்து நிகழ்ந்தவற்றை விவரிக்கப் புலவரின் தமிழ் போதாது.

நரன் ஐயோ எனவில்லை, நாய் வள் எனவில்லை. வாசுவும் நோக்க வைரவரும் நோக்க அங்கே வாய்ச்சொற்கள் பலனிலாது போயின.

கம்பன் வாசுவைப் பார்த்திருந்தால் 'எடுத்தது இற்றது' என்றெல்லாம் எழுதாமல், 'பல் கண்டனன் பாதம் கண்டனன் அன்ன' என்று வாசுவின் வேகத்துக்கு மாற்றுக் குறைவாகவே ராமனின் வில்முறித் திறனை வர்ணித்திருப்பார். புறநானூற்றுப் பட்டினிப் புலவர் யாராவது பார்த்திருந்தால், 'பரியுட னிரியும மரியதுஞ் சரியுமே' என்று புரியும்படி விவரமாகப் பாடியிருப்பார். கண்ணதாசன் பார்த்திருந்தால் 'வாசுக்கென்ன வேலி' என்று பாடியிருப்பார், அல்லது 'கண்ணெதிரே தோன்றிநாய் கடுமுகத்தைக் காட்டிநாய்' என்றும் பாடியிருக்கக் கூடும். வைரமுத்து பார்த்திருந்தால் 'கண்கள் கோப ஜன்னல், கால்கள் ராஜ மின்னல்' என்று பாடியிருப்பார். வாலி பார்த்திருந்தால் 'இட்டாலக்கடி உய்!' என்று பாடியிருப்பார்.

கற்பனைக்குக் கட்டுப்படாதவனாக ஓடத் தொடங்கினான் வாசு. இதைச் சற்றும் எதிர்பாராத நாய், சுதாரித்துப் பாய்ந்து அவனை அதே வேகத்தில் தொடர்ந்தது. ஒரு கணம் நாய் அவனை நெருங்கிக் காலைக் கவ்விடும் போலத் தோன்றும். மறு கணம் வாசு உயரத்தாண்டல் நீளத்தாண்டல் சாதனைகளை வரிசையாக முறியடித்து வாகை சூடுவான். அவன் நோக்கும் காலை நோக்கும் நாயும், நோக்காக்கால் நைசாய் உறுமிப் பாயும்.

பார்த்துக் கொண்டிருந்தப் பொதுஜனம் உற்சாகமடைந்தது. கைகள் தட்டின. உதடுகள் விசிலடித்தன. குதிரைப் பந்தயம் பழகிய ஒரு சிலக் கண்கள், 'இது போட்டோ பினிஷ்' என்று பதட்டப்பட்டன. ஒரு தாடி, 'வெறிநாய் துரத்தினா வடிவேலும் உசைன் போல்டு தான்' என்று சொறிவுக்கிடையே தத்துவம் பேசியது. அருகிலிருந்தக் காக்கிச்சட்டை, 'இதை என் ஆட்டோல எயிதிக்கவா சார்?' என்றது. ஒரு புடவை அருகிலிருந்த சல்வாரிடம், 'இந்த நாய் வாடகைக்குக் கிடைக்குமா தெரியலியே? தீபாவளிக்கு ஊர்லந்து மாமியார் வராங்க' என்று அக்கறையுடன் விசாரித்தது. ஒரு லுங்கி மற்ற லுங்கிகளிடம் 'இன்னிக்கு அந்தாளு கோயிந்தா.. இன்னான்ற நீ?.. கட்னா வெட்டு ராஜா.. கட்னா மூணுக்கு ஒண்ணு.. வெட்னா ஒண்ணுக்கு மூணு.. வை ராஜா வை' என்று உற்சாகமாக ஐந்து ரூபாய் எறிந்து பெட் கட்டியது.

இடையே, திடீரென்றுக் குறுக்கே வந்த நபர் மீது இடித்து விழுந்து புரண்டு எழுந்தான் வாசு. நபரைப் பார்த்ததும் நாயும் நின்றது.

"என்ன தம்பி, இப்படி ஓடியாறீங்க?" என்றார் நபர்.

"யோவ் சிங்காரம்.. நீதான்யா எனக்கு எமன்.. எருமைக்குப் பதிலா நாயோடு சுத்துறே.. நாய்க்கரடி என்னைத் துரத்துறதை இத்தனை நேரம் பாத்துட்டா இருந்தே? உன்னை முதல்ல சுளுக்கெடுக்கணும்"

"ஐயையோ தம்பி.. தெரியாதுங்களே.. மல்லி ஐயாவோட கார் டைரு பஞ்சராயிடுச்சுங்க.. வர லேட்டாவும்னு உங்க கிட்டேயும் மைதிலியம்மா கிட்டயும் சொல்லச் சொன்னாரு.. அவங்க கோவில்ல இருந்தாங்க.. போய் சொல்லிட்டு வரதுக்குள்ள நாய் ஓடிருச்சுங்க.. அதை எப்படியோ தெரிஞ்சுகிட்டு உங்களைத் துரத்தவிட்டு என் கிட்டே கொணாந்து சேர்த்ததுக்கு ரொம்ப நன்றிங்க. கஸ்டமரோட நாய்.."

"இப்ப மட்டும் ஏன்யா கரடி ரெண்டடி விட்டு செலயாட்டம் நிக்குது?"

"வசியம் தம்பி, வசியம்"

"வசியமா?"

"தம்பி.. உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன். சிறுவசியம் பெருவசியம்னு ரெண்டு இருக்குங்க. நாய் துரத்துதுனு வைங்க. உடனே ஓடக்கூடாது. அதுக்குப் பதிலா நின்னு நிதானமா நாயுருவி இலை, எருக்க இலை ரெண்டையும் கசக்கி நாய் முகத்தில எறிஞ்சீங்கன்னா அந்த வாடையில நாய் அடியெடுக்க முடியாம மயங்கிரும். இது சிறுவசியம்"

"யோவ் சிங்காரம்.. உனக்கு வெங்காயம்னு பேர் வச்சிருக்கணும்யா. இந்த நாயோட பல்லைப் பாத்த பிறகும் பச்சிலை மூலிகைனு பேசுவியாய்யா நீ? அடங்கிடுமோனு உயிரையும் அவுந்துருமோனு பேன்டையும் பிடிச்சுக்கிட்டு நாய்க்குப் பயந்து நானே பேயாட்டம் ஓடுறப்ப, எருக்க இலைக்கு எங்கய்யா போவேன்? நாயுருவின்னா என்னான்னே தெரியாதேய்யா? நின்னு ரெண்டுத்தையும் கசக்கி எறியுற மட்டும், நாய் என்னா பாத்துட்டா நிக்கும்? அப்படியே நீ சொல்றாப்புல கசக்குனா, அந்த வாடையில நானே மயக்கம் போட்டுருவேன்யா. என்னய்யா ரீல் வுடுறே? ஐடியா குடுக்குற மூஞ்சியைப் பாரு. சரி, அது என்னா பெரு வசியம்?"

"இதாங்க" என்று சிங்காரம் தன் பையிலிருந்து ஒரு கல்லை எடுத்தான். "தம்பி.. நாய்க்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாம நாயைக் கல்லால அடிக்கலாம். ஆனா நாய் நம்மளைக் கல்லால அடிக்க முடியாது. நாய் பல்லைக் காட்டினா நாம பயந்துடறோம். நாம கல்லைக் காட்டினா நாய் பயந்துரும். இந்தாங்க, சும்மா ட்ரை பண்ணுங்க" என்று வாசுவிடம் கல்லைக் கொடுத்தான் சிங்காரம். "சும்மா ஓங்குங்க சொல்றேன்.."

வாசு கல்லெறிவது போல் கை ஓங்கியதும், தினேஷ்குமார் முனகிப் பயத்துடன் அடங்கி உட்கார்ந்தது. "சிங்காரம்! பிரமாதம்யா.. என்னா தத்துவம், என்னா உண்மை, என்னா டெக்நிக்! கல்லைக் காட்டி ஓங்கினதும் அடங்கிடுச்சே? இதான் பெரு வசியமா? தெரியாமப் போச்சே? நீ பெரிய ஆள்யா"

"இதுக்கும் கேக்கலின்னா குறி வச்சு கல்லை எறிஞ்சுருங்க.. ஒண்ணு அடங்கும், இல்லே ஓடிறும். கவலையே படாதீங்க. கடவுள் ஏன் கல்லானான்? நாயை அடிக்கத்தான்" என்றபடி தன் பையிலிருந்து இரண்டு கற்களை எடுத்து வாசுவிடம் கொடுத்தான் சிங்காரம். "கவனம் தம்பி. ரொம்ப நாளா தேச்சு வழவழப்பா வச்சிருக்கேன். என் கண்ணு ரெண்டையும் உங்க கிட்டே ஒப்படைக்கிறாப்புல.. இந்தாங்க.. கைவசம் வச்சுக்குங்க. அவசியமுன்னா ஒரு கல்லை மூக்குலயும், மத்ததைக் கால்லயும் பாத்து அடிங்க. இதப் பாத்தீங்களா..? இது மூக்குல அடிக்க. இந்தா பாருங்க, தட்டையா இருக்குற இந்தக் கல்லு, கால்ல அடிக்கறதுக்காவத் தேச்சதுங்க. வீசினமுன்னா நாலு கால்ல எதுனா ஒரு கால்லயாச்சும் படுங்க.. ஆண்டவன் நாய்க்கு நாலு கால் படைச்சதும் அதுக்காவத்தான்.. இந்தாங்க, பிடிங்க. நீங்க தைரியமா கோவிலாண்ட போய் மைத்தம்மாவோட பேசிட்டிருங்க.. நான் ஐயா வராரானு பாத்துட்டிருக்கேன்"

"சிங்காரம்.. சிங்காரம்.. உன்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்ட இந்தப்பாவியை மன்னிச்சுடு சிங்காரம். நீ ஒப்பற்ற ஞானி சிங்காரம்.." என்று கண்களில் நீர் முட்ட, கற்களை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டான் வாசு. கைக்கு ஒரு கல்லாக எடுத்து இரண்டு கைகளையும் ஓங்கினான். கையிலிருந்தக் கற்களைப் பார்த்த தினேஷ்குமார், தன் வாலைச் சுருட்டி கால் கட்டி முடங்கிக் கெஞ்சலாய் முனகியது. மறுமுறை உயர்த்த, ஏறக்குறைய அழுதது. கற்களைப் பையில் போட்டு, புது நம்பிக்கையுடன் கோவிலை நோக்கி நடந்தான் வாசு.

    கோயிலருகே மைத்தைக் காணாது சுற்றுமுற்றும் பார்த்த வாசு, தொலைவில் அலையருகே மைத் தனியாக அமர்ந்திருப்பதைக் கவனித்தான். வேகமாக அருகே சென்று "மைத்.. உங்கிட்டே முக்கியமா பேசணும்" என்றான். திரும்பியவள் கண்களில் வழக்கமான காதலைக் காணாமல் கோபத்தைக் கண்டவன் நிதானித்தான். "ஏன் ஒரு மாதிரியா இருக்கே?"

"வாசு" என்று அவனைத் தழுவிக் கொண்டாள். பிறகு விலகி, "உனக்குக் குழந்தைகள் பிடிக்குமா?" என்றாள்.

"ஏன் கேக்குறே?" என்றான் வாசு திகைப்புடன்.

மைத் அப்படிக் கேட்டதன் காரணம் வாசுவுக்குத் தெரியாது. அவன் தினேஷ்குமாருடன் ஓடிக்கொண்டிருந்த போது நடந்து முடிந்த நிகழ்ச்சி.

    வசரமாக வந்த ஜே, தனியாக நின்றுகொண்டிருந்த மைத்தை நெருங்கி "என்ன மைத், எதுக்காக வரச்சொன்னே?" என்றான்.

"நான் வரச்சொல்லலே ஜே, என் அங்கிள் தான் வரச்சொன்னாரு.. அவரைப் பாத்துப் பேசினே இல்லே?"

"ம்" என்றான். "எங்கே அந்த ஆளு? என்ன சொன்னாரு உங்கிட்டே?"

"டயர் பஞ்சராயிடுச்சுனு வர லேட்டாகுமாம். சிங்காரம் இப்பத்தான் சொல்லிட்டு போனாரு.."

"மைத்.. நானே உங்கூட பேசணும்.. அங்க வா.. அலையோரமா மேட்டுல உக்காந்து பேசுவோம்" என்று அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.

இருபது அடி நடந்திருப்பார்கள். திடீரென்று ஒரு சிறுவன் "அப்பா! அப்பா!" என்று கூவிக்கொண்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான். ஏதும் புரியாமல் இருவரும் திரும்பிப் பார்க்க, ஓடி வந்தச் சிறுவன் சட்டென்று ஜேயைக் கட்டிக் கொண்டான். "அப்பா, என்னை விட்டு எங்கப்பா போனே? இதோ வரேன்னு சொல்லிட்டுப் போனியே?" என்றான்.

"என்னது? அப்பாவா? யார் அப்பா? யாருக்கப்பா? யாருப்பா நீ? விடுப்பா" என்று ஜே வலுக்கட்டாயமாகக் கால்களை உதறியதில் கீழே விழுந்தான் சிறுவன். எழுந்து மறுபடி அணுகினான். "அப்பா!"

"ஏய்.. யார்பா நீ?" என்று ஜே எரிச்சலுடன் சிறுவனைத் தடுத்தான். அக்கம்பக்கம் பார்த்தான். யாருமில்லை. "அப்பா.. அப்பா!" என்று குதித்தான் சிறுவன். மைத்தைச் சுட்டி, "இது யாருப்பா? புது அம்மாவா?" என்றான். "புது அம்மா.. ஐ.." என்று மைத்தைக் கட்டிக் கொண்டான். "நீ ரொம்ப அழகா இருக்கே, புது அம்மா"

"அடச்சீ அவளை விடுறா.." என்றான் ஜே.

"இரு ஜே. சின்னப் பையன் கிட்டே எரிஞ்சு விழாதே. தம்பி, யாருப்பா நீ?" என்றாள் மைத் அமைதியாக.

"என்னைப் பாத்தா தம்பி மாதிரியா இருக்கு? எம்பேரு மணி. எனக்குப் பத்து வயசு. இது எங்கப்பா. பீச்சுக்குக் கூட்டிவந்தாரு. இதோ வரேனு சொல்லிட்டு ஓடிட்டாரு"

"பல்லை உடைப்பேன்.. யாருடா அப்பா?"

"நீ தான். நீ தான் அப்பா"

"ஐயையோ.. இந்த வயசுலயே இப்படி அடாவடி பண்றானே? மைத்.. இந்தப் பையனை நான் பார்த்ததே இல்லை.."

"நான் ஏன் பொய் சொல்லணும்? பத்து வயசுப் பச்சைப் பிள்ளைக்கு எங்கயாவது அப்பாவைத் தெரியாம இருக்குமா? நீங்களே சொல்லுங்க புது அம்மா"

"பாத்தியா பாத்தியா.. இப்ப உன்னை அம்மான்றான்.. விடாதே இவனை"

மைத் ஜேயை ஆழமாகப் பார்த்தாள். ஜே பதறினான். "மைத்.. சத்தியமா எனக்குத் தெரியாது. அடப்பாவி.. டேய். டேய்.. யாரு பெத்த பிள்ளையோ நீ? பத்து வயசுலயே இப்படி பாதகனா இருக்கியே"

"அப்பா.. என்னை விட்டுப் போகாதப்பா.. தங்கச்சி அழுவுதுபா"

"என்ன.. தங்கச்சியா?" என்றாள் மைத்.

"ஐயோ, அது வேறேயா?" என்றான் ஜே.

"ரெண்டு தங்கச்சி. ரெட்டையாக்கும். ஷீலா மாலா"

"யாரு.. என்ன.. ரெட்டைத் தங்கச்சியா? டேய்.. டேய்.. எத்தினி பேர்டா கெளம்பியிருக்கீங்க?" என்று ஜே குதித்தான்.

"எங்கப்பா உன் தங்கச்சிங்க?" என்றாள் மைத் கனிவுடன்.

"ஷீலா ஆஸ்பத்திரில இருக்கா. நேத்து அப்பா கோவத்துல அவளை அடிச்சுட்டாரு. மண்டை வீங்கியிருக்கு. இப்பத்தான் டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப்போனாரு இந்தப்பா.."

"என்ன.. இந்தப்பாவா? பல்லை உடைப்பேன்"

"அதான் நேத்து ஷீலாவோட மண்டையை உடைச்சுட்டியேப்பா.. இன்னிக்கு என் பல்லை உடைக்கப் போறியா? ஏற்கனவே எனக்கு பல்லு கம்மி.."

"ஆ! இப்படிப் பேசுறானே? ஐயையோ.. எனக்கு எதுவுமே தெரியாது. சனியன். மூஞ்சைப் பாரு"

"உன் இன்னொரு தங்கை மாலா எங்கேப்பா?" என்றாள் மைத் அன்புடன்.

"புது அம்மா. உன் குரல் தேனாட்டம் இருக்கு.. நீ ரொம்ப நல்லவ"

"டேய்.. டேய்.. நிறுத்துடா. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுடா சில்லறை. எங்கடா உன் தங்கை? கதை வுடறான்"

"மாலா.." என்று பையன் கூச்சலிட, அண்மையில் இருந்த ஒரு சில பெண்கள் குழம்பித் திரும்பிப் பார்த்தனர். பையன் தொடர்ந்து கூப்பிட்டான். சில நிமிடங்களில் ஒரு சிறு பெண் கோவிலருகிலிருந்து ஓடி வந்தாள். ஏழெட்டு வயதிருக்கும். "அப்பா.. அப்பா" என்று ஜேயைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் குதித்தாள். "எங்கப்பா போனே? இதோ வரதா சொல்லிட்டு எங்களை அந்தக் கடை வாசல்ல.. எனக்குப் பயமா இருந்துச்சுபா"

"என்னங்கடா.. குடும்பத்தோட கிளம்பிட்டீங்களா? யாருடீ அப்பா?"

"நீ தான். நீ தான் அப்பா"

"சனியங்களா.. எனக்குக் குழந்தைங்கள்னாலே ஆவாது.. அதுவும் உங்களை மாதிரி ஊரை ஏமாத்துற.." என்ற ஜேயின் கால்களைக் கட்டிக் கொண்டாள் மாலா. "அப்பா!" என்று தன் மூக்கை உறிந்து ஜேயின் பேன்டில் துடைத்தாள்.

"ஐயையோ.. புதுப் பேன்ட்ல சளியைத் தடவுதே சனியன்.. எந்திரிடி.. யாருடி நீ?"

"ஜே.. என்ன இது?" என்றாள் மைத் கடுப்புடன்.

"ஐயையோ மைத்.. இந்த சனியனுங்க யாருனே எனக்குத் தெரியாது. இதுக்குத்தான் நான் குழந்தைங்களே வேணாம்னு இருக்கேன். குழந்தைங்களா இதுங்க... ஏய்.. அரை டிகெட்.. நவுறுடி.. உங்கண்ணனை இழுத்துக்கிட்டு எங்கனா ஓடு.. இந்தா அஞ்சு ரூவா.. ஐஸ்க்ரீம் வாங்கித் தின்னுங்க போங்க.. ஆளை விடுங்க.."

"அப்பான்னா அப்பா தான்" என்று ஐந்து ரூபாயைப் பிடுங்கிக் கொண்டான் பையன்.

அதற்குள் ஒரு ஜீன்ஸ் பெண் வேகமாக ஓடிவந்தாள். ஜே, மைத் இருவரையும் கும்பிட்டாள். "மன்னிச்சுருங்க.. இதுங்க ரெண்டும் என் பிள்ளைங்க. சினிமால நடிக்கிறாங்க.. குழந்தைங்களை வெறுக்குற அப்பாவோட வசனம் பேசணும்.. டயலாக் ட்யூடர் இப்படி தற்செயலா யாரையாவதுப் பார்த்துப் பேசினா தைரியமா இயல்பா நடிக்க வரும்ணு ஐடியா குடுத்தாரு.. தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்றபடி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனார்.

ஜே நிம்மதியுடன் "அஞ்சு ரூவாய சுட்டுகிட்டுப் போயிட்டான் பாத்தியா மைத்? எப்படியெல்லாம் கிளம்பிடறாங்க நாட்டுல.." என்றான்.

மைத் பதில் சொல்லவில்லை. எதுவும் பேசாமல் மௌனமாக நடந்தாள்.

"என்ன மைத்.. பேச மாட்டேங்குறே" என்று பத்து முறை கேட்டதும், மைத் வெடித்தாள். "குழந்தைங்க பிடிக்காதுனு சொன்னியே?"

"ஆமாம்.. என்ன இப்ப?"

"என்ன இப்பவா? உன் உண்மையான குணம் தெரிஞ்சிடுச்சு. குழந்தைங்க பிடிக்காதுன்றத ஏன் மறைச்சே? பச்சப் பிள்ளங்களை சனியன்னு திட்டறப்பவே நினைச்சேன்"

"சனியனைச் சனியன்னு திட்டாம எப்படித் திட்டுறது மைத்? அந்தக் குழந்தைங்களைத் திட்டினதால என் குணம் மோசமாயிருமா? நீ கூடத்தான் என் கிட்டே உண்மையை மறைச்சே.."

"என்ன சொல்றே?" மைத் தீர்க்கமானாள்.

"ரெண்டு பேரைக் காதலிக்கிற உண்மையை"

"அதனால?"

"ஒரு பொண்ணு.."

"ஸ்டாப் இட். என்ன சொன்னே? ஒரு பொண்ணா..? பொண்ணுன்னா அதெல்லாம் கூடாதா? ஆம்பிளங்கனா பரவாயில்லையா? ஷேம் ஆன் யூ" என்று பொரிந்தாள். "நீ சொல்றது சரிதான். உன்னையும் சேத்து காதலிச்சிருக்கக் கூடாது. ஐ டோன்ட் லவ் யூ. கெட் லாஸ்ட்"

"ஐயோ மைத்.."

"போதும் ஜே. எப்படியிருந்தாலும் நாளைக்கு இது நமக்குப் பிரச்சினையா முடிஞ்சிருக்கும். உனக்குக் குழந்தைங்களையும் பிடிக்கலே. பொண்ணுன்னாலும் கீழ்த்தட்டுல பாக்குறே. ப்லீஸ். லீவ் மீ" என்று வேகமாக அலைகளைப் பார்த்து நடந்தாள். சிறிது உலாத்திவிட்டு ஒரு மேட்டில் உட்கார்ந்தபடி அலைகளைக் கவனித்து சற்று அடங்கினாள்.

    "மைத்.. உன்னைத்தான். கேக்குறேன் இல்லே? ஏன் குழந்தைங்க பிடிக்குமானு கேட்டே?" என்று வாசு அவளை சற்றே உலுக்க, "ஒண்ணுமில்லே" என்றாள்.

"மைத்.. உங்கிட்டே ஒண்ணு கேக்கணும்.. நீ என்னையும் ஜேயையும்.." என்றபடி அவளருகே அமர்ந்தான்.

"ஓவர். ஜேயைப் பத்தி இனிமே பேசாதே" என்றாள் மைத். வாசுவின் கைகளை இழுத்துக் கொண்டாள். "எவ்வளவோ கனவுகளைத் தேக்கி வச்சிருந்தேன். ரெண்டு கணவன், நாலு குழந்தைங்க, ஆளுக்கு ஒரு நாய்.. ஹ்ம்ம். இப்ப ஒரு கணவன்னு ஆயிடுச்சு. அதான், உனக்குக் குழந்தைங்க பிடிக்குமானு கேட்டேன்"

வாசு குளிர்ந்தான். இன்றைக்கு எல்லாம் கனிந்து வருவதாக உணர்ந்தான். முதலில் நாய் வசியம். இப்போது மைத் வசியம். குளிர்ச்சியில் மைத் கேட்டதைச் சரியாகக் கவனிக்கவில்லை. மைத் பேச்சுவாக்கில் ஏதோ நாய் என்றது போல் தோன்றியது. "குழந்தைங்க தானே? அதுக்கென்ன அவசரம்?" என்றான்.

"ரைட். கல்யாணத்துக்கப்புறம் குழந்தைங்க. இப்ப முதல்ல நாய் வளப்போம். ஐ லைக் இட்" என்றாள். அவன் கைகளைப் பிணைத்துக் கொண்டாள். "நல்ல சகுனம் வாசு. நாய்னதும் பாரேன்.."

பார்த்தான். அவர்களுக்கு பத்தடி தொலைவில் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கறுப்பு நாய் நின்று இவர்களைப் பார்த்தது. பல்லைக் காட்டியது. தன்னைக் கிண்டல் செய்துச் சிரித்தது போல் பட்டது வாசுவுக்கு. "தினேஷ்குமார்!" என்றான் உரக்க.

"யாரு?"

"உனக்குத் தெரியாது" என்று கைகளை விடுவிக்க முயன்றான் வாசு. "ஏன் கையை இழுக்குறே?" என்றாள் மைத்.

தினேஷ்குமார் நெருங்கியது. "உர்ர்" என்றது.

"இந்த நாய் நம்மளைக் குதறிடும் மைத். கையை விடு" என்று உதறினான் வாசு. "ஆனா நீ பயப்படாதே. நானிருக்கேன். எனக்கு நாய் வசியம் தெரியும்" என்று பையிலிருந்தக் கற்களை எடுத்து ஓங்கினான்.

"வாசு.. நிறுத்து.. வாயில்லாப் பிராணியைக் கல்லால அடிக்காதே.."

"இதா வாயில்லாப் பிராணி? இதோட பல்லைப் பாத்துட்டுப் பேசு" என்று இன்னும் ஓங்கினான்.

நாய் நிற்கவில்லை. வாலை ஆட்டியபடி வேகமாக அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது.

ஒரு கல்லை நாயின் முகத்தைக் குறி வைத்து வீசினான் வாசு. கல் குறி தவறி முகத்தோரமாக உரசி விழுந்தது. லேசாக முனகிய நாய் வாலை ஆட்டியபடி இன்னும் நெருங்கியது. அடுத்தக் கல்லை எடுத்தான். காலுக்கு குறி வைத்தான்.

"வாலை ஆட்டுது வாசு.. ஸ்டாப் இட். என்ன இது? பாகெட் நிறையக் கல்லோட ரெடியா வந்திருக்கே? நாய் அடிக்குறது வழக்கமோ?"

"உனக்கு எதுவும் தெரியாது மைத். இந்த தினேஷ்குமார் சாதாரண பிராணி இல்லே.." என்று கால்களைக் குறிபார்த்து வீசினான். கல் சரியாக அதன் இடது கால்களில் பட்டுத் தெறிக்க, நாய் வலியுடன் குரைத்துத் தடுமாறி விழுந்தது. பிறகு மெள்ள எழுந்து இருவரையும் பார்த்தது. அடிபட்ட ஊனத்துடன் மெள்ளத் தேய்த்து நடந்து அவர்களருகே வந்தது. மைத்தை நெருங்கி அவள் கைகளை முகர்ந்து லேசாக நக்கியது. வாசுவை ஏக்கத்துடன் பார்த்தது.

"ஏய்.. ஓடு" என்றான் வாசு பயத்துடன்.

நாய் மறுபடி மைத்தை நக்கிவிட்டு, தடுமாறித் தடுமாறி அலைகள் அருகே சென்றது. ஒரு முறை திரும்பி அவர்களைப் பார்த்தது. புரண்டு விழுந்தது.

மைத் துடித்து எழுந்தாள். "வாசு.. யூ ப்ரூட்"

"ஐயையோ.. மைத்.. இது அத்தனையும் நடிப்பு. தேவர் பிலிம்ஸ்ல இருந்த நாய். இப்ப படம் எடுக்குறதில்லேன்றதுனால இப்படி பீச்ல சுத்திட்டு இருக்கு. சத்தியமா சொல்றேன், என்னைத் துரத்தியெடுத்த நாய்.."

"சே! என்ன மனுசன் நீ? ஆதரவில்லாத உயிரை இப்படித் துன்பப் படுத்துறியே?"

"ஐயோ மைத்.. ஆதரவாவது மண்ணாவது.. சொன்னாக் கேளு.. ஆஸ்காருக்குப் போக வேண்டிய நாய் இது.. நம்பாதே.. எல்லாம் வேஷம்". சிங்காரத்தை நினைத்துக் கொண்டான். "டேய் வெங்காயம்.. உன்னை என்ன செய்யுறேன் பாரு"

"யாரு வெங்காயம்?" என்று மைத் கேட்டு முடிப்பதற்குள் ஒரு வாலிபன் வேகமாக வந்து, கீழே கிடந்த நாயைக் குழந்தை போல் இரு கையாலும் அள்ளி எடுத்தான். அலையில் இறங்கி நாயின் முகத்தில் நீர் தெளித்தான். வெளியே கொண்டு வந்து கிடத்தித் துடித்து அழுதான். "ஐயோ.. ஒரு நிமிசம் உன்னை விட்டுப் போனா இப்படி அடிபட்டு கிடக்கிறியே!" என்று புலம்பினான். "ஏன் சார், கல்லாலயா அடிச்சீங்க? பெரிய கல்லா சார்?" என்றான் வாசுவிடம்.

"யோவ்.. என்னைத் துரத்தி எடுத்துச்சுயா உன்னோட நாய். அப்புறம் என் மேலே பாயுற மாதிரி வரப்ப நான் என்னய்யா செய்ய முடியும்? வேணும்னா ஐம்பது ரூவா நஷ்ட ஈடு குடுத்துடறேன்.. இந்தா"

மைத் அவனை நெருங்கி, "மிஸ்டர்.. ரொம்ப சாரி.. இது என் தப்பு. உடனே நாயை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போங்க.. என்ன செலவானாலும்.." என்று அவனைப் பார்த்தாள். "உங்களை எங்கியோ.."

"நேரமில்லே மேடம்.. நான் உடனே ஆஸ்பத்திரிக்குப் போகணும்.. சார்.. உங்க தாராள மனசுக்கு ரொம்ப நன்றி. என்னோட நாய் குடுத்தத் தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்று நாயை எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினான். நாலடி ஓடிவிட்டுத் திரும்பி வந்து வாசுவின் கையிலிருந்த ஐம்பது ரூபாய் நோட்டை உருவிக்கொண்டு மீண்டும் ஓடினான்.

"விட்டது சனி.. வா மைத்" என்றான் வாசு.

மைத் அவன் கைகளை உதறினாள். "நாய் மேலே கல்லெறிய உனக்கு வெட்கமாயில்லே வாசு?"

"மைத்.. விவரம் தெரியாமப் பேசாதே"

"எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன். கைல கல்லோட அலையுறதைப் பாத்தாலே தெரியுதே விவரம்? எங்கெங்கே நாய் கிடைக்கும் அடிக்கலாம்னு அலைவே போலிருக்கு. உன் முகத்திலயே இனி முழிக்க மாட்டேன்.." என்று நடந்தாள்.

"யா? உன்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டு அரை டஜன் நாயுங்களுக்குத் தினம் பயந்துத் தண்டம் அழுவணும்னு எனக்கு மட்டும் தலையெழுத்தா? நானும் உன் முகத்தில முழிக்கலே" என்று வேகமாக எதிர் திசையில் நடந்தான்.

    திரே உட்கார்ந்திருந்த மைத்தை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அன்புமல்லி.

"போனாப் போவுது விடு மைதிலி. எனக்கு அப்பவே தெரியும் அந்தப் பசங்களைப் பத்தி. ஆனா நீ காதலிக்கறதா சொன்னதால.."

"அங்கிள். நீங்க சொன்னது ரொம்ப சரி. இனிமே யாரையுமே காதலிக்கப் போறதில்லே. ஆம்பிளைங்க எல்லாருமே ஏமாத்துக்காரங்க.."

"இப்படித்தான் என் மருமகன் ஒருத்தன் காதல் வேணாம்னு கவிதை எழுதிட்டிருந்தான்"

"என்ன அங்கிள், என் பிரச்சினைக்கு பதிலா கண்டவனைப் பத்திப் பேசுறீங்களே?"

"கண்டவன் இல்லம்மா, கபிலன். என் ஒண்ணு விட்ட அக்கா பையன்.. அவன் கதை சொல்லியிருக்கேனோ?"

"என் கதையே எப்படி முடியும்னு தெரியலே, இதுல கண்டவன்.."

"கபிலன்மா கபிலன்"

"அங்கிள்.. காதல்ன்றது இனிமே என் அகராதியிலயே கிடையாது" என்று மைத் சொல்லி முடிக்கவும், சிங்காரம் ஒரு வாலிபனுடன் அருகே வரவும் சரியாக இருந்தது.

வாலிபன் நேராக மைத்தைப் பார்த்தான். படபடவென்றுப் பேசினான். "மேடம்.. சாரி, அவசரமா ஓட வேண்டியதாப் போச்சு. என்னோட நாய்க்கு என்ன ஆச்சோனு ஒரே பயம், அதான். இப்ப ஒண்ணுமில்லேனு வெட் சொல்லிட்டாரு. கால்ல லேசாக் கட்டு போட்டிருக்காரு. ரெண்டு நாள்ல சரியாயிடும். உங்களுக்கும் உங்க ஹஸ்பென்டுக்கும் - எங்கே அவர் - தொந்தரவு கொடுத்ததுக்கு மன்னிச்சுருங்க. அதைச் சொல்லத்தான் வந்தேன்"

"இவளுக்கு இன்னும் கல்யாணம் ஆவலே" என்றார் அன்புமல்லி.

"ஓ.. அப்ப உங்களுக்கும் உங்க காதலருக்கும்.."

"ஹி இஸ் நாட் மை லவர் ப்ரென்ட ஆர் எனிதிங்" என்றாள் மைதிலி.

"ஓ.. அப்ப உங்களுக்கு.."

"தம்பி.. யாருப்பா நீ? சும்மா பேசிட்டிருக்கியே.. உக்காரு" என்றார் அன்புமல்லி.

"நன்றி சார். எம்பேரு ரகுராம். சுருக்கமா ரகுனு கூப்பிடுவாங்க. நீங்க மேடம்?"

"என் பேர் மைதிலி"

"என் பேர் அன்புமல்லி.. சுருக்கமா"

"இருக்கட்டும் சார். மேடம், உங்களைச் சுருக்கமா மைத்னு கூப்பிடவா?"

மைத் குளிர்ந்தாள். "இதுக்கு முன்னால் உங்களை.."

"பாத்திருக்கோம் மிஸ் மைத். காலைல உங்க பேரைக் கேட்டப்ப, அழகான குரல்ல, தேன் சொட்டச் சொட்டச் செருப்பு பிஞ்சிரும்னு சொன்னீங்க. ஆனா அது உன் பேரா இருக்காதுனு அப்பவே நெனச்சேன் மைத்"

சிரித்தாள். "உங்க நாய்க்கு அடிபட நானும் ஒரு காரணம்.. ப்லீஸ் என்னை மன்னிச்சுருங்க"

"நோ நோ. அப்படி நடக்கலின்னா ரகுராம்-மைதிலி சேர்ந்திருக்க முடியுமா? ஐ மீன் நாம இப்படி அறிமுகமாகியிருக்க முடியுமா? தட்ஸ் ஆல் ரைட். பேர் பொருத்தம் எப்படி? அட்டகாசமா இல்லே?"

"நாய்னா உங்களுக்குப் பிடிக்குமா?"

"மை டியர் மைத். எனக்கு உலகத்துல ரெண்டே ரெண்டு தான் பிடிக்கும். ஓகே, மேக் இட் மூணு. ஒண்ணு காதல். இன்னொண்ணு குழந்தைங்க. மூணாவது நாய். பொதுவா எல்லாமே ப்லூரலா வேணும் எனக்கு. பல குழந்தைகள். பல நாய்கள். ஆனா காதல் மட்டும் சிங்குலர். ஒரே காதல். உனக்கு எப்படி வசதி?"

"எனக்கும்" என்ற மைதிலி சிரித்தாள். "ரொம்ப விட்டா பேசுறீங்க ரகு"

"விட்டா ரொம்ப பேசுவான் போலிருக்கே.." என்று குறுக்கிட்டார் அன்புமல்லி. "தம்பி.. உங்க ஊர் எது? அப்பா அம்மா யாரு? என்ன படிச்சிருக்கீங்க? என்ன வேலை? சும்மா காதல் நாய்க்குட்டினு பட்டாசு வெடிச்சா எப்படி? என்னா விசயம்ன்றேன்.."

"ஓல்ட் மேன். ப்லீஸ் டோன்ட் பாதர்" என்ற ரகு, மைத்தின் கையைப் பிடித்து எழுப்பினான். "மைத். இனிமே என்னை ஒருமையில கூப்பிடு. நீங்கனு கூப்பிட்டா நெருக்கமா தோணலே. வாயேன், பேசிட்டே போவோம்?" என்று அவளுடன் நடந்தான். சற்றுத் தொலைவு நடந்ததும், தலையைத் திருப்பி அன்புமல்லிக்குக் கண்களால் நன்றி சொன்னான்.

சிங்காரம் டேபிளைச் சுத்தம் செய்து, "வேறெதும் வேணுமா சார்?" என்றான்.

"சிங்காரம்.. உனக்கு சிலை வைக்க யாராவது நன்கொடை சேக்குறாங்கனா சொல்லு.. நானே முழுச் செலவையும் எடுத்துக்குறேன்"

"உங்களுக்கு உதவ முடிஞ்சதே சந்தோசம்யா.."

"விவரமெல்லாம் நான் கேட்கப் போறதில்லே.. எத்தனை செலவாச்சு சொல்லு, மேலயே கொடுத்துடறேன்"

"நாய், சினிமா எக்ஸ்ட்ரா, குழந்தைங்க.. ஐயா.. நாளைக்குக் கணக்குப் போட்டுச் சொல்றேன்யா.. அவசரம் இல்லே"

"நல்லது சிங்காரம், நல்லது" என்ற அன்புமல்லி மெள்ள அகன்றார். காரை எடுக்கும் பொழுது ரகுவும் மைத்தும் நெருக்கமாக இன்னொரு கார் மேல் அமர்ந்திருப்பதைக் கவனித்தார். 'காதல் வாழ்க' என்று வாழ்த்தியபடி வெளியேறினார்.

முற்றும்.