(பெரிய) சிறுகதை
1 2 3 ◀◀ பூர்வத்துலே..
    பொதுவாவே தபஸ்விகள் எல்லாரும் ரொம்பவே நிதானத்தை அனுஷ்டிக்கறவா. மெதுக்குன்னோ சோம்பேறின்னோ சொல்லலாம், ஆனா பாருங்கோ நிதானம்ங்கறது காயிருப்பக் கனி கவர்ந்த மாதிரியோன்னோ, அதனாலே அப்டியே வச்சுப்போம்.
கௌதமர் பொதுவா நிதானமானப் பேர்வழினு சொல்லலாம். கார்த்தாலே நித்யகர்மாக்களைப் பண்ணி முடிக்கணும்னு நெனச்சுண்டு எழுந்துண்டவர், சித்தே நிதானமா இருக்கார். நமக்கெல்லாம் இந்த நாளிலே கண் முழிச்ச பத்து நிமிஷத்துக்குள்ளே காபி உள்ளே இறங்கலைன்னா எல்லாமே துவேஷமாயிடறது இல்லியோ? அதுவும் நல்ல டிகிரிக் காபியா வேண்டியிருக்கு நாக்குக்கு. செலபேர் காபி போடறேன்னுட்டு எதையோ போட்டுக் கொடுக்கறா. குத்தமில்லை. ஆனா, அந்த நாள்ல காபியாவது கீபியாவது? கிடையாதுன்னாலும், காச்சின பசும்பாலிலே மொத நாள் பொடிச்சு வச்ச சுக்கைக் கொஞ்சம் கலந்து உள்ளே தள்ளினாத்தான் அவாளுக்கும் இஞ்சின் ஓடித்து. அப்புறந்தான் மத்த ஆஜார அனுஷ்டானங்களோட நெனப்பே வந்துதாக்கும்.
ஒரு வகை ஆஜாரம் அகல்யைக்கு அப்புறந்தான் லோக அப்யாசத்துக்கு வந்துதுனு சொல்லுவா. அதாவது, ஸ்த்ரீகளுக்கு மாசா மாசம் ருது உண்டாறதும் தூரம் தீட்டு பாக்கறதும் அவாள்ளாம் இந்த்ரனோட பாவத்தை சுமக்கறதுனால வந்ததுனு, அகல்யை கதையை வச்சுப் புராணத்துல வந்ததா சொல்றா. அதெல்லாம் பொய்யாக்கும். இட்டுக்கட்டாக்கும். நம்ம பாவத்தை சுமக்கறதுக்கே நமக்கு ஒழியலை, இதுல இன்னொருத்தர் பாவத்தை வேறே சுமக்கணுமா? அக்ரமம் பாருங்கோ. தாய்மைங்கற ஒசந்த ஸ்தானத்தை, தெய்வங்களுக்கு மேலான ஸ்தானத்தை, ஸ்த்ரீகள் அடையறதுக்கு சாத்யமான இயற்கையான ஒரு அனுலோம கார்யத்தை, இந்த்ரனோட பாவம்னு சொல்றது அழிச்சாட்டியமில்லையோ? 'நாதியில்லாத பொம்னாட்டிகள் தானே, வாயை மூடிண்டிருப்பா'னு ஒரு குபுத்திலே சொன்னதாக்கும். அத்தனையும் வ்யாகுதி. புராணப் புருஷாளோடத் திமிராக்கும். அத்தனை லோகாதய சுகத்தையும் அதர்மத்தையும் அனுசரிச்சுட்டு, கடைசியிலே 'பெண் என்னும் மாயப் பேய்'னு அவாளைப் போட்டு மிதிச்சு த்வம்சம் பண்றது, அத்தனைப் புராணப் பண்டிதாளுக்கும் தொழிலா இருந்துது. கடவுளை கும்பிடறேன் பேர்வழின்னு வாய்ல வந்தபடி ஸ்த்ரீகளை பங்கப்படுத்தியிருக்கா. ஐயா.. உமக்கு கடவுள் ஞானம் வந்துதா? பலே, கும்பிட்டுக்கோ! வேண்டாங்கலே. என்னவோ பண்ணிக்கோ. ஏன் ஸ்த்ரீகளைப் போட்டு சாக்கடை சல்லடைனும் பிணினும் கன்னாபின்னானு சொல்லணும்? 'ஸ்த்ரீகள் கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்தினேடா சிவனே! வைகுந்தா!'னு இஷ்டத்துக்கு பாடுவானேன்? 'ஸ்த்ரீகள்டேயிருந்து என்னைக் காப்பாத்தினியே, மகாலக்ஷ்மி! பராசக்தி!'னு யாராவது பாடியிருக்காளா தெரியலை. கண்ணைக் குத்தியிருப்பா.
தான் என்கிற அகந்தையிலே புருஷ வம்சாவளி, என்னையும் சேத்து சொல்றேன், ஆயிரம் கோடி வர்ஷமா ஸ்த்ரீகளுக்கு மனசாலும் வாக்காலும் கார்யத்தாலும் செஞ்ச அபகாரங்களுக்கு இந்த அசுவத்தாமன் மன்னிப்பு கேட்டுக்கறேன். நல்ல வேளையா ஒரே ஒரு புலவராவது 'எங்கெங்கு காணினும் சக்தியடா'னு பாடினாரேனு த்ருப்தியா நெனச்சுக்கறேன். ஸ்த்ரீகளோட அசாத்ய சக்தியினாலே தான் அனித்யமான இந்த லோகவாழ்க்கைல நாங்கள்ளாம் ஏதோ ஒப்பேத்திட்டுப் போயிண்டிருக்கோம். இதை நான் ரொம்ப நன்றியோட சொல்றேனாக்கும். புருஷாளை மன்னிச்சுடுங்கோனு தண்டமா கேட்டுக்கறேன். நரகம்ங்கறது ஆம்ப்ளேளுக்கு மட்டும் தானாக்கும். கவலையே படாதீங்கோ. ஸ்த்ரீயாப் பொறந்தாலே அது ஸ்வர்க்கத்துக்கு ஒன் வே டிக்கட் வாங்கின மாதிரியாக்கும்.
என்னமோ சொல்ல வந்து எங்கயோ போயிட்டேன் பாருங்கோ. சித்தே இருங்கோ. ம்ம்ம்.. இந்தப் பொடிப் பழக்கத்தை விடமுடியலை.
அகல்யா உள்ளே வரதைப் பாத்துண்டிருந்த கௌதமர், "ஏது இவ்வளவு நேரமாச்சு உனக்கு?"னு கேட்டார். "இங்கே நான் எழுந்து எத்தனை நாழியாக் காத்துண்டிருக்கேன்?"
"என்னம்மா, நல்லாத் தூங்கினியா?"னு கேக்கலை. "காலங்கார்த்தாலே பச்சைத்தண்ணிலே ஸ்நானம் பண்ணிட்டு வந்திருக்கே. குளிர் ஜூரம் வந்துடப்போறது. சீக்கிரமா தலையைத் துவட்டிக்கோ. நான் வேணும்னா சாம்ப்ராணி புகைச்சுக் குடுக்கட்டுமா?"னு கேக்கலை. "சிரமபரிகாரம் ஏதாவது பண்ணிண்டியா?"னு கேக்கலை. "இத்தனை நாழியாக் காத்துண்டிருக்கேனே, தெரிய வேண்டாம்?"னு கேட்டார்.
கௌதமரைப் பிரமாதமா குத்தம் ஒண்ணும் சொல்லலை. புருஷாள் நாங்க எல்லாருமே அப்படித்தான். அம்மாவாகட்டும் அக்காவாகட்டும் ஆம்படையாளாகட்டும், அவா சிரமத்துல படுத்துண்டிருந்தாலும் சரி, "என்னை மொதல்ல கவனி.. என்னை மொதல்ல கவனி.. என்னை மொதல்ல கவனி.." இதைத்தான் பரம்பரை பரம்பரையா கௌதமர் காலத்லேந்து சொல்லிண்டிருக்கோம்னா பாருங்கோ. டிஎன்ஏலனா கலந்துடுத்து? லேசுல மாறுமோ? நாமதான் அப்படி.. ஸ்த்ரீகளாவது மாறுவாள்னா அங்கயும் டிங்கிரியானா இருக்கு? எல்லாத்தையும் பொறுத்துண்டு.. கோவில் மாடு மாதிரி தலையை தலையை ஆட்டிண்டு.. தன் மதிப்பைத் தானே கெடுத்துண்டு.. கண்றாவி போங்கோ.
"இதோ ஆச்சு.. மன்னிச்சுருங்கோ"னுட்டு உள்ளே ஓடறா அகல்யா. அவசரமா ஒரு விளக்கேத்திட்டு, கறந்து வச்சப் பாலைக் காய்ச்சரா. காஞ்ச சுக்கை ஒரு கை எடுத்து நன்னா பொடி பண்றா. அதை அப்படியே பாலில் கலக்கறா. பாலும் சுக்கும் சேந்து காயற வாசனை மூக்கைத் தொளைக்கறது. காயட்டும்னுட்டு அங்கேந்து நகந்து அன்னைய ஔபாசனத்துக்கு வேண்டிய சமித்து, பஞ்சபாத்திரம், சந்தனம், குங்குமம், மஞ்சளரிசி எல்லாம் எடுத்து வைக்கறா. அகல்யா குடுகுனு வேலை செய்றதைப் பாத்துட்டு ஒக்காந்துண்டிருந்த கௌதமர் கேட்டார். "என்ன நீ.. ரொம்ப உத்சாகமா இருக்கியே?"னுட்டு.
சில குடும்பத்துல பாத்திருக்கேன். பெண்டாட்டி சித்தே உற்சாகமா இருந்தா புருஷாளுக்குத் தாங்காது. "நான் இப்படி நோஞ்சு கிடக்குறப்போ நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாமா?"ங்கற மாதிரியா கேப்பா பாத்திருக்கேன். அதுமாதிரி இருக்கு கௌதமர் கேக்கறது. அகல்யாக்கு திக்குங்கறது. 'நம்ம மனசுல இருக்குற குதூகலம் ஒருவேளை மொகத்துலயும் கார்யத்லேயும் தெரியறதோ?'னுட்டு நெனச்சுக்கறா. பொங்க ஆரமிச்சப் பாலை எடுத்துக் கீழே வச்சுட்டு, "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. ஒங்களுக்கு நேரமாறதேனுட்டு அவசரம் அதான்"னு சொல்றா.
"இருந்தாலும் இத்தனை சுறுசுறுப்பை இன்னிக்குத்தான் பாக்கறேன்"னு சொன்ன கௌதமர் சட்னு, "ஆமா, குடத்துல தண்ணி கொண்டு வருவியே.. எங்கே குடத்தைக் காணோம்? நான் முகம் அலம்பிக்கணுமே?"னு கேட்டார்.
அப்பத்தான் அகல்யாவுக்குத் திக்குனு ஆறது. அதாவது திக்குனு ஆன மாதிரி நடிக்கிறா. "அடடா! மறந்துட்டேன்"னு சொல்றப்பவே கௌதமர் குறுக்கே சொல்றார். "மறந்துட்டேனு தான் நானும் சொல்றேன். வாசப்படியிலயே வச்சிருக்கியே?"னு சொல்றார். டக்குனு அவ வாசல்ல பாக்கறா. பார்த்தவுடனே சட்னு அடுக்களைல ஒதுங்கிக்கறா. கௌதமர்ட்டே, "அதிதி வந்திருக்காப்ல இருக்கு"னு சொல்றா.
விருந்தாளி யாராயிருக்கும்னுட்டு கௌதமர் வாசல்ல பாக்க வரார். அங்க இந்த்ரன் நின்னுண்டிருக்கான். கௌதமரைப் பாத்துட்டு நம்ஸ்காரம்னு சொல்றான். சட்னு குடத்தை எடுத்து "இந்தாங்கோ.. நான் உள்ளே எடுத்துண்டு வரேன்"னு சொல்றான்.
கௌதமர் குடத்தை வாங்கற மாதிரி தவறவிடறார். தண்ணி கொட்டிடறது.
அமர்ஷஹாசம்னு சொல்வா. அதாவது சிரிப்பும் இல்லாம உறுமலும் இல்லாம முனகலும் இல்லாம ஒரு நையாண்டி.. அடுத்தவாளை மட்டம் தட்டற மாதிரி ஒரு கேனைத்தனமான சிரிப்புக்கு அமர்ஷஹாசம்னு பேர். 'ஹ'னு ஒரு சப்தம் கேட்டிருப்பேள்.. சிரிக்கறாளா மாட்டை விரட்டறாளானு தெரியாது.. அதான் அமர்ஷஹாசம். அசுவத்தாமனோட குடும்பத்லயும் அமர்ஷஹாசப் புலிகள் உண்டு.
"ஹஹ.. இந்த்ரன் கைபட்டா எல்லாம் தவறிடும் போலிருக்கே?"ங்கறார் கௌதமர். 'ஹ்ம்ம்ம்'னுட்டு கௌதமர் உள்ளேயும் வெளியேயும் பாத்தார். தாடியைத் தடவிண்டார். "உள்ளே வானு இப்ப சொல்லமுடியலியே. என்னை மன்னிக்கணும்.. நான் ஸ்நானம் பண்ணிட்டு வரேன்.. ஒரு நாழி கழிச்சு வாங்கோ"னு சொல்றார்.
"அதனால என்ன, பரவாயில்லை. நானும் ஸ்நானம் பண்ணனும். உங்ககூட வந்தா எனக்கும் இடம் தெரிஞ்ச மாதிரி. அப்புறம் இந்த ஆஸ்ரமத்துல விஷ்ணு பூஜை பண்ண நீங்க தான் அனுக்ரகம் பண்ணனும்"னு பவ்யமா சொல்றான்.
"ஆகா! வாங்கோ போகலாம்"னு சொல்லிட்டு படியிறங்கினார் கௌதமர். 'விஷ்ணு பூஜை பண்ண வந்த மூஞ்சியப் பாரு?'னு மனசுல நெனச்சுண்டார். குடிலுக்குள்ளே பாத்து, "அகல்யா.. தட்டியைச் சாத்திக்கோம்மா. யார் வந்தாலும் திறக்காதே, பத்திரம்"னு உரக்கவே சொல்றார். இந்த்ரனைப் பாத்து, "ஹ.. கதவைத் தொறந்து வச்சா.. கண்டதும் உள்ளே வந்துடறது.. காடு பாருங்கோ..நீங்க வாங்கோ தேவராஜா.. ஹ.. நாம போகலாம்"னு நடக்கறார்.
இந்த்ரன் அவர் கூடவே போறான். அவன் மனசெல்லாம் அகல்யானு ஜபம் பண்றது. இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாம நடக்கறான். திட்டம் போடறான். 'இந்தக் கிழவனை வஜ்ராயுதத்தால லேசா ஒரு தட்டு தட்டிடலாமா? பிரம்மஹத்தியாவது புடலங்காயாவது? எல்லாத்துக்கும் பரிகாரம் வச்சிருக்காளே, அப்புறம் என்ன?'னு அவன் மனசுல தோணறது. இருந்தாலும் கட்டுப் படுத்திக்கறான்.
அகல்யாவைக் கொண்டுவிடறப்போ பிரம்மா சொன்னதை நினைச்சுக்கறார் கௌதமர். "முனி ஸ்ரேஷ்டரே.. என்னோட பொண்ணை.. உலகத்துலயே சௌந்தரின்னு சொல்லக்கூடிய இந்த அகல்யாவை, உங்களுக்கு ஒத்தாசையா இருக்க விட்டுட்டுப் போறேன். கடுமையான தபஸ் பண்றேள், உங்களுக்கு சகல விதத்துலயும் ஒத்தாசையா இருப்பா"னு தாரை வாத்துக் கொடுத்த பிரம்மா, சும்மா இருக்காம "இந்த்ரன் கண்ல படாம பாத்துங்கோ"னு வேறே சொல்லிட்டு போனார். பிரம்மக் குசும்புன்னா சும்மாவா?
கௌதமர் மறுபடியும் மனசுக்குள்ளே 'ஹ' போடறார். இந்த்ரனை ஓரக்கண்ணாலப் பாக்கறார். 'பிரம்மா மட்டும் யோக்யனா? சொந்தப் பொண்ணுனு பாக்காம சரஸ்வதி பின்னால ஓடினவன் தானே? எல்லா தேவாளுமே அயோக்யத்தனம் பண்றதுலே சளைச்சவா இல்லே போலிருக்கு'னு நெனச்சுக்கறார். அகல்யாவைப் பார்க்கறதுக்குத் தான் வந்திருக்கான் இந்த்ரன்னு அவருக்கு நன்னா தெரியறது. சும்மா இருக்காம இந்த்ரனைக் கிண்டல் பண்றார்.
"பாக்க வந்தது பாக்க முடியாம போயிடுத்தோ தேவராஜா?"னு கேட்டார்.
பக்குனு ஆறது இந்த்ரனுக்கு. "என்ன சொல்றேள்?"னு கேட்டான்.
"விஷ்ணு பூஜை பண்ண இடம் பாக்கறதா சொன்னேளே.. நான் கரடியாட்டம் குறுக்க வந்து உங்களை என்னோட ஸ்நானம் பண்ண அழைச்சுண்டு போறதைச் சொன்னேன்.. ஹ"
"பாக்க வேண்டியதை பாத்துட்டு தான் வந்தேன்.. இருந்தாலும் உங்க அனுக்ரகம் இல்லாம ஒண்ணும் செய்யக்கூடாதுனுட்டு.."னு இழுக்கறான் இந்த்ரன். அவன் மட்டும் சளைச்சவனா?
"ஸ்நானம் பண்ணுங்கோ.. எல்லாத்தையும் முழுகிடுங்கோ"னு ஜாடையா சொல்றார் கௌதமர். "கௌதமன் அனுக்ரகம் லேசுல கிடைக்காதாக்கும்.. ஹ.."
"சாபம் மட்டும் உடனே கொடுப்பேளோ?"னு கேட்டுடறான் இந்த்ரன். அப்புறம் சமாளிச்சு "இல்லை.. உங்க கோபம் த்ரிலோகப் பிரசித்தி.. அதான் பயத்துல கேட்டேன்.. க்ஷமிக்கணும்"னு சப்பை கட்டறான்.
கௌதமர் சட்னு பேச்சை மாத்தி இன்னும் தூபம் போடறார். "அகல்யா இருக்காளே.. அழகுன்னா அத்தனை அழகு.. புருஷாள் நமக்குள்ளே சொல்றதுக்கு என்ன.. அவ அழகை வர்ணிக்கவே முடியாது தெரியுமோ? உங்க இந்த்ராணி அழகுன்னாலும் அகல்யா ஆயிரம் மடங்கு அழகுன்னு தோணறது, மன்னிக்கணும்"னு சொல்லிட்டு இந்த்ரன் முகத்தை கவனிக்கறார். பொறாமையால வேகட்டும்னு மனசுக்குள்ள நெனச்சுக்கறார். "நேத்திக்கு முழு நிலா வெளிச்சத்துலே ஆஸ்ரமத் தரையிலே அவளோட ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அகல்யாவை எனக்குக் கொடுத்த பிரம்மாவுக்கு என்னிக்குமே என்னோட க்ருதக்ஞை'னு சொல்றார். க்ருதக்ஞைனா அதிகமான ஸ்வஸ்த்யக்ஷரம்.. இங்க்லிஷ்லே க்ரேடிட்யூட்ம்பாளே.. நன்றிக்கு ஒரு படி மேலே.
'உன்னோட க்ருதக்ஞையை உடைப்புல போட'னு நெனச்சுக்கறான் இந்த்ரன். இருந்தாலும் பவ்யமா தலையாட்டறான். அவன் மனசுல உடனே அகல்யாவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கணும்னு தோணியாச்சு. உதட்ல ரெண்டு மார்ல ரெண்டுனு எண்ணி நாலு முத்தம் குடுத்துட்டு மறுகாரியம் பாக்கணும்னு துடிக்க ஆரம்பிச்சான்.
அதுக்குள்ள புருஷாளுக்கான தடாகம் வந்தாச்சு. கௌதமர் மண் படிக்கட்டுல இறங்கி, "வாங்கோ, ஸ்நானம் பண்ணலாம்"னு இந்த்ரனைக் கூப்பிடறார்.
இந்த்ரனும் படிக்கட்டுல இறங்கறான். கடைசிப் படியிலே நிக்கறச்சே தடாகத்துலே கௌதமரோட உருவம் தெரியறதைப் பாக்கறான். டகால்னு அவன் மனசுல ஒரு யுக்தி. 'அடடா! அருமையான சான்சு. இந்தக் கிழம் இங்கே குளிச்சிண்டிருக்கச்சே நாம அகல்யாவை கொஞ்சிட வேண்டியது தான். கௌதமர் மாதிரியே வேஷம் போட்டுண்டு போனா அவளுக்கும் தெரியாது. சங்கடம் இருக்காது'னு அவன் மனசுல தோணறது. தேவகன்னிகைகளோட அலங்காரம் எதுவும் இல்லாம, சாதாரண கச்சைகளோட அகல்யா நடந்து போனதையும் அவளோட ஸ்தனமும் ப்ருஷ்டமும் எந்தவிதமான கட்டுமில்லாம இயற்கையா அசைஞ்சதையும் நெனச்சுப் பாக்கறான். எப்பேற்பட்ட அழகி அவள்! இந்த தபஸ்விக் கிழத்துக்கிட்டே மாட்டிண்டு முழிக்கறாளே? உடனடியா போய் அந்த அழகை ஆராதிக்க வேண்டியது தான்னுட்டு கௌதமர் போல வேஷம் போடத் தீர்மானிக்கறான். தண்ணிலே தெரிஞ்ச கௌதமரோட உருவத்துல கொஞ்சம் மண்ணைத் தள்ளறான். அது அந்த உருவத்தைக் கலைச்சுப் போட்டதை ரசிக்கறான்.
திடீர்னு தலை சுத்தறா மாதிரி இருக்கு அவனுக்கு. படியிலே உக்காந்துக்கறான். மனசுல அகல்யா மறைஞ்சு போய் விஸ்வகர்மா ஞாபகம் வரது. "விஸ்வகர்மா! விஸ்வகர்மா!"ங்கறான்.
"என்னாச்சு?"னு கேட்டார் கௌதமர்.
"தெரியலே.. குளிக்கலாம்னு நெனச்சேன்.. திடீர்னு மனசுல விஸ்வகர்மா ஞாபகம் வியாபிச்சிண்டிருக்கு.. தேவகுலத்துக்கு ஏதாவது ஆபத்தோ.. அசுரக்கூட்டம் ஏதாவது படையெடுத்து வந்துடுத்தோ தெரியலியே?"னு புலம்பறான். அதுக்குள்ளே ஐராவதம் பிளிறிண்டே வரது. இந்த்ரன் கௌதமர் கிட்டே, "என்னை மன்னிச்சுடுங்கோ.. என்னவோ நடக்கறது.. போய் பாத்துட்டு வந்துடறேன்"னு உடனே கிளம்பறான். அவன் ஏறி உக்காந்ததும் ஐராவதம் ஜெட் ஏர்வேஸ் ஜம்போ மாதிரி சொய்னு ஆகாசத்துல காணாம போறது.
'விட்டது சனி'னு கௌதமர் குளிக்கறார்.
பாதி குளிக்கறச்சே திடீர்னு அவருக்கு சந்தேகம் வரது. 'மகாபாவி ஒருவேளை ஆஸ்ரமத்துக்குப் போயிருப்பானோ?'னு நெனச்சுக்கறார். 'போறும் குளிச்சது'னுட்டு எழுந்துக்கறார். அவசரமா வேஷ்டி அங்கவஸ்திரத்தைச் சுத்திண்டு பரக்க பரக்க ஆஸ்ரமத்துக்கு நடந்தார். 'அவன் மட்டும் அங்கே இருக்கட்டும், இன்னிக்கு அவனை பஸ்பமாக்கிடறேன்'னுட்டு பொறுமிண்டே நடந்தார்.
ஆஸ்ரமத்து வேலிதாண்டி உள்ளே வந்தவர் சட்னு நின்னார். வாசல்ல தட்டிக்கதவு சாத்தியிருக்கு. ஆனா உள்ளே ஏதோ பேச்சுக்குரல் கேக்கறது. உடனே உள்ளே போகாம என்ன நடக்கறதுனு பாத்து கையும் களவுமா பிடிக்கணும்னு நெனக்கறார். பக்கவாட்டுல நடந்து மாட்டுக் கொட்டில் மேலே பரபரனு ஏறி அதுலேந்து குடிலோட கூரைக்குத் மெதுவாத் தாவினார். அடுக்களை கிட்டேயும் தாழ்வாரம் கிட்டேயும் கூரை லேசா ஜன்னல் மாதிரிப் பிரிஞ்சிருக்கும் அந்த நாளிலே. சமையல், ஹோமப் புகை போறதுக்காகவும், நிலா வெளிச்சத்துல சம்போகம் பண்றதுக்காகவும் அந்த ஏற்பாடு. இப்பலாம் சன்ரூப் மூன்ரூப் சன்லைட் வின்டோ தஸ்சுபுஸ்சுனு என்னவோ சொல்றா, எல்லா ஏகாந்தமும் நம்ம கலாசாரத்துலயும் கட்டுமானத்துலயும் உண்டு. அடுக்களையில அரவம் இல்லே. மெள்ள நகந்து தாழ்வாரக் கூரை பக்கம் போறார்.
"ஏதுடா அசுவத்தாமா? முனிஸ்ரேஷ்டாளுக்கு ஞானத்ருஷ்டி உண்டே? அப்படித் தெரிஞ்சுக்காம என்னமோ திருடனாட்டம் கூரை ஏறினார்னு சொல்றியே? இதெல்லாம் நியாயமாடா?"னு ரமணிண்ணா கேக்கறார். உங்களுக்குத் தெரியாததை நான் என்ன சொல்லிடப்போறேன்? இந்த ஞான த்ருஷ்டியெல்லாம் உடான்சுண்ணா. பாருங்கோ.. அந்த நாள்லே பாதி தபஸ்விகளுக்கு த்ருஷ்டியே கிடையாது... மிச்ச பாதிக்கு ஞானம் கிடையாது.. இதுல எங்கேந்து ஞானதிருஷ்டி வரது? எல்லாரும் இந்த அசுவத்தாமன் மாதிரிதான். பாருங்கோ.. என்னோட பால்யத்துலே.. வாத்யார் தொழிலைப் பத்திச் சொல்வா. வேறே வேலை கிடைக்கலேன்னா ஸ்கூல் வாத்யார் வேலைக்கு போம்பா. அதுமாதிரி புராண காலத்துலே.. பொழைக்க வழி வேறே ஒண்ணும் இல்லேன்னு வையுங்கோ, தபஸ் பண்ணப் போயிடுவா. வாஸ்தவமாக்கும். எல்லா தபஸ்விகளும் அப்படினு இந்த அசுவத்தாமன் ஒரு நாளும் சொல்லமாட்டான். அதே நேரம் எந்த தபஸ்விக்கும் ஞானத்ருஷ்டினெல்லாம் எதுவும் இருக்கலைனும் திட்டமா சொல்வான்.. தப்பா நெனக்காதீங்கோ.
கௌதமருக்கு ஞானம் இருந்தாலும் த்ருஷ்டி கொஞ்சம் தகராறு. அதனாலே மெள்ள நகந்து கூரையைப் பிரிச்சுப் பாக்கறார். உத்துக் கவனிக்கறார். அங்கே தாழ்வாரத்து ஓரமா ரெண்டு பேர் ரொம்ப மதாகுளமா அதாவது காம உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சிண்டும் பேசிண்டும் இருக்கா. அகல்யாவை நன்னா அடையாளம் தெரியறது. அதிர்ச்சிலே விழுந்துடக் கூடாதுன்னு கூரையைக் கவனமா பிடிச்சுண்டே பாக்கறார். இன்னொருத்தர் பாக்கறதுக்குத் தன்னை மாதிரியே இருக்கார். "இது என்னடா கூத்து?"னுட்டுக் கவனிக்கறார்.
கீழே சல்லாபம் நடந்துண்டிருக்கு.
"இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?"னு கேக்கறா அகல்யா.
"உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை"னு சொல்றார் கௌதமர். சொல்லிட்டு அகல்யாவைக் கட்டிப் பிடிக்கறார். அகல்யா அவரோட மார்லயும் முகத்துலயும் முத்தம் கொடுக்கறா. கௌதமரோ வாலிபனாட்டம் அகல்யாவை ரெண்டு கைலயும் அள்ளியெடுத்துண்டு அப்படியே முத்தம் கொடுக்கறார். அவளைக் கீழே விடாமே இடுப்போட சேத்துப் பிடிக்சுக்கறார். அவளும் கால் ரெண்டையும் கௌதமரோட இடுப்பைச் சுத்திக் கட்டிக்கறா. கையை அவரோட கழுத்தைச் சுத்திக் கட்டிக்கறா. அப்புறம் ரெண்டு பேரும் தாழ்வாரத்துலே புரள்றா. திடீர்னு அகல்யா, "என்ன.. இந்த்ரனை விட உங்களுக்கு என் மேலே ஆசை அதிகமா?"னு கேக்கறா. "நல்ல வேளை பிரம்மா என்னை இங்கே கொண்டு விட்டாரே"னு சொல்றா.
"நான் இந்த்ரன்னு சொன்னா நம்புவியா அகல்யா?"னு கேக்கறார் கௌதமர்.
மேலேந்து பாத்துண்டிருக்கற கௌதமருக்கு உடம்பெல்லாம் பத்திக்கறது. புரிஞ்சு போச்சு. இந்த்ரன் தான் வேஷம் போட்டுண்டு வந்திருக்கான். கௌதமருக்கு கோவத்துலே ருத்ரதாண்டவம் ஆடத்தோண்றது. ஆனா ஆட வராதேன்னுட்டு ஆக்ரோஷமா பாத்துண்டிருக்கார். 'மகாபாவி! விஸ்வகர்மாவைப் பாக்கணும் அப்படி இப்படினு கதைவிட்டு இங்கே வந்து என் பெண்டாட்டியைப் பாத்துண்டிருக்கியே சண்டாளா!'னு நெனச்சுக்கறார். அந்த வேகத்துல பிடியை விட்டுடறார். சரசரனு வழுக்கி வாசல் பக்கமா தட்டிக் கதவு கிட்டே விழப்போனவர், சுதாரிச்சுண்டு தட்டியிலே சாஞ்சு உள்ளே விழுந்தார்.
விழுந்த வேகத்துலே எழுந்து உள்ளே இருந்த ரெண்டு பேரையும் பார்த்தார். அவர் முகத்துல கோபாக்னி. "ஏலே.. இந்த்ரா"னார். 'ஏலே'ன்னது பக்கத்தாத்து மாமாவாக்கும். இந்த்ரன் சொன்னானா தெரியாது. "ஏட்டி.. அகல்யா"னார். 'ஏட்டி'ன்னதும் பக்கத்தாத்து மாமாதான். "உங்க ரெண்டு பேரையும் சபிக்கிறேன் பார்"னு கமண்டலத்தைத் தேடினார். "இங்க தானே வச்சேன் கமண்டலம்.. எங்கே போச்சு?"னு கத்தினார்.
சுவரோரமா கிடந்த கமண்டலத்தை எடுத்து, "ஏலே இந்த்ரா.. பொம்னாட்டி தேகத்துலே யோனி மோகத்துலே மூழ்கி நாசமாப் போற பயலே.. உனக்கு உடம்"னு சொல்லி முடிக்கறதுக்குள்ளே காலிங் பெல் சத்தம் மாதிரி கேக்கறது. திரும்பிப் பாக்கறார். தட்டியோரமா இந்த்ரனும் அகல்யாவும் நின்னுண்டிருக்கா. கௌதமருக்கு ஒண்ணும் புரியலே. 'இங்க ஒரு கௌதமர்-அகல்யா ஜோடி, அங்க ஒரு இந்த்ரன்-அகல்யா ஜோடி.. நடுவுல நான் அசல் கௌதமன்.. என்ன இது?'னு முழிக்கறார்.
"முனி ஸ்ரேஷ்டரே.. உங்க சாபத்துலே நியாயமே இல்லை"னு சொல்றான் வாசல்ல நிக்கற இந்த்ரன். "ஏன்னா.. நான் தான் இந்த்ரன்.. அது வேறே யாரோ.. அவாளை சபிக்கறதுக்கு பதிலா என்னை சபிக்கறது அநியாயம் மட்டுமில்லே, அதர்மமும் கூட"னு சொல்றான்.
"உங்க ரெண்டு பேரையும் சபிச்சுடறேன்"னு குதிக்கறார் கௌதமர்.
"அதெப்படி? நான் ஒரு தப்பும் பண்ணலையே.. என்னை எப்படி சபிக்கலாம்?"னு லா பாயின்ட் போடறான் அசல் இந்த்ரன்.
"அகல்யா.. க்ராதகி"னு தாழ்வார அகல்யாவைப் பாத்து சபிக்கப் போறார் கௌதமர்.
"நிறுத்துங்கோ.. அது அகல்யாவுமில்லை. நான் தான் அசல் அகல்யா"னு சொல்றா வாசல்ல நின்ன அகல்யா. தாழ்வார அகல்யா திருதிருனு முழிக்கறா.
கொழம்பிப் போறார் கௌதமர். சாபம் கொடுக்க எடுத்த கையும் கமண்டலமும் அப்படியே இருக்கு. ஆரம்பிச்ச சாபத்தை கொடுத்து முடிச்சே ஆகணும். இப்ப என்ன பண்றது? அப்போ காலிங் பெல் சப்தம் மாதிரி மறுபடியும் கேக்கறது. பிரம்மா படியேறி வரார். "தவ ஸ்ரேஷ்டரே.. என்னை மன்னிச்சுடுங்கோ"னு நாலு மண்டையையும் பணிவா ஆட்டறார். ஆனா ஒரு மனசுக்குள்ள, "அம்பி.. ஒன்னோட தபோபலன் எல்லாம் புஸ்வாணமாயிடுத்து.. இனிமே இந்த்ர பதவிக்கெல்லாம் ஆபத்தில்லை'னு நெனச்சுக்கறார்.
"பிரம்மா.. இது என்ன நாடகம்?"னு வசனம் பேசறார் கௌதமர். இன்னும் கமண்டலத்தைப் பிடிச்சுண்டே.
"நான் சொல்றேன்"னுட்டு தாழ்வார கௌதமர் அசல் கௌதமர் கால்லே சாஷ்டாங்கமா விழுந்தார். "எங்களை மன்னிச்சுடுங்கோ.. ஏதோ ஆசைக் கோளாறினாலே இப்படி நடந்துண்டோம். நான் விஸ்வகர்மாவாக்கும்"னுட்டு அசல் உருவத்துக்கு வந்தான் விஸ்வகர்மா.
"நெனச்ச நேரத்துலே நெனச்ச ரூபத்துல ஸ்மரண யாத்ரை போற எந்திரம் ஒண்ணு கண்டுபிடிச்சேன். அதை என் ஆம்பிடையாள் கிட்டே காமிச்சப்போ, எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஒரு ரூபத்துல பூலோகம் போய் சந்தோஷமா இருக்கணும்னு தோணித்து"னு சொல்றான் விஸ்வகர்மா. சொல்றப்பபோ வாசல் பக்கம் நிக்கற அசல் அகல்யாவைப் பாக்கறான். 'நீ சொல்லிக் கொடுத்தபடியே சொல்றேனா?"னு கேக்கற மாதிரி இருக்கு அவன் பார்வை.
கௌதமருக்கு இன்னும் கோவம் தணிஞ்ச பாடில்லை.
அடுத்த ப்ரசங்கத்துல முடிச்சுடறேன். ►►
2011/12/28
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வணக்கம் அப்பா ஸார்... முதல்ல உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன். ரவிராஜ் லைப்ரரி இப்பவும் இருக்கு. விசாரிச்சு, போய்ப் பார்த்தேன். ஆனா நமக்கு லக் இல்ல... பழைய கலெக்ஷன்லாம் வித்துப் போய்டுச்சாம். இப்ப அவங்க பழைய ஆங்கில நாவல்களும், புது பப்ளிகேஷன் புக்ஸ்ம் சேல்ஸ் பண்ணிட்டிருக்காங்க... சாண்டிலியன் கிடைக்காம, வேற வழியில்லாம ஏமாற்றத்தோட திரும்பினேன். நன்றி.
பதிலளிநீக்குதடுக்குல போனா கோலத்துல போறது, கோலத்துல போனா தடுக்குல போறதுன்னு எல்லாம் படிச்சிருக்கேன். இந்த இந்திரனும் கௌதமரும் இதில் கில்லாடிகள். விஸ்வகர்மாவும் அகலிகை கதாப்பாத்திரமா. இப்படியே போனால் எது ஒரிஜினல் எது டூப்ளிகேட் என்று தலையைப் பிச்சுக்கப் போறேன்.
பதிலளிநீக்குஞானம் இல்லை திருஷ்டியும் இல்லை வார்த்தையாடலை ரசித்தேன். கௌதமர் கூரை மேலே நகரும் காட்சி மனக் கண்ணில் சிரிப்பு மூட்டியது!
பதிலளிநீக்கு"ஸ்த்ரீகள்டேயிருந்து என்னைக் காப்பாத்தினியே, மகாலக்ஷ்மி! பராசக்தி!'னு யாராவது பாடியிருக்காளா தெரியலை. கண்ணைக் குத்தியிருப்பா."
பதிலளிநீக்குஅருமையாக சொன்னீர்கள். காயத்ரி மந்திரத்தை பெண்கள் சொல்ல கூடாது என்று சிலர் இன்றைக்கும் கூறுவதை பார்க்க முடிகிறது. காயத்ரி என்பதே பெண் தெய்வம் தானே? காலம் காலமாக பெண்கள் மீது இது போன்ற அட்டூழியங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
எப்படி உங்களுக்கு எழுத ஆரம்பிச்சு நிறுத்த முடியலையோ அதே மாதிரி எங்களுக்கு படிக்க ஆரம்பிச்சா சரசரன்னு கடைசிவரை ஒரே ஓட்டம் ... பெண்ணுரிமை பாரதி மேற்கோளுடன் நல்ல சாடல் ...கூடவே புராணங்களையும் ஓரு புடி புடிச்சிட்டிங்க ( முள்ளை முள்ளால் )... கதை தலைப்பில் நன்றாக இறங்குகிறது .....
பதிலளிநீக்குஅப்பாஜி...வாசிச்சேன் உண்மையா வாசிச்சேன்.
பதிலளிநீக்குபழைய பாடல்களுக்காகக் காவல் !
//சொல்றப்பபோ வாசல் பக்கம் நிக்கற அசல் அகல்யாவைப் பாக்கறான். 'நீ சொல்லிக் கொடுத்தபடியே சொல்றேனா?"னு கேக்கற மாதிரி இருக்கு அவன் பார்வை// ஓ... அகல்யா விஸ்வா-வ அண்ணாஅண்ணா-ன்னு கூப்பிட்டது ஆபத்தில் அட்டெண்டன்ஸ் போடத்தானா?
பதிலளிநீக்குகதை ரொம்ப சுவாரசியமா போறது.
பதிலளிநீக்குபிரம்மா நாலு மண்டையையும் பணிவா ஆட்றது, கௌதமர் கூரை மேல ஏறி எட்டி பாக்கறது, ஞான திருஷ்டி பத்தின விளக்கம், பொழைக்க வழி இல்லாதவா தபஸ் பண்ண போறது....... இதெல்லாம் ரொம்பவே ரசிக்க வைத்தது.
கதையை நிறுத்தவே தோன்றாமல் ஒரே மூச்சில் படிக்க வைத்த உங்கள் எழுத்து நடை அருமை.
உப்புமடச் சந்தியில உங்களைப் பாடச்சொல்லிக் கூப்பிடிருக்கேன்.வந்து பாடிட்டு போங்க அப்பாஜி !
பதிலளிநீக்குநன்றி கணேஷ், G.M Balasubramaniam, ஸ்ரீராம்., Expatguru, பத்மநாபன்,ஹேமா, அரசூரான், meenakshi,..
பதிலளிநீக்குவிடாம தேடியிருக்கீங்களே கணேஷ்! பலே! கிடைக்காம போனதுக்கு வருத்தம் போங்க. எல்லாம் வித்துப் போச்சுனா ரவிராஜ் லைப்ரரிக்காரர் இப்ப சந்தோஷமா இருக்காருங்களா? யாரும் வரதில்லேனு வருத்தப்பட்டிட்டிருந்தாரு.. எல்லாம் சுத்தமா ட்ச் விட்டுப் போச்சு. பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் ரோடிலே ஒரு பழைய புத்தகக் கடை இருக்கும் - ரவிராஜுக்கு இணையா கலெக்ஷன், ஆனா totally unorganized. ஒரு மூட்டையைக் கொணாந்து கொடுத்து நம்மளையே பிரிச்சுத் தேடிக்கச் சொல்வாரு. அந்தக் கடை இன்னும் இருக்குதா தெரியலே.
பதிலளிநீக்கு'தடுக்குலே' எப்பவோ கேட்டது GMB சார்! டூப்லிகேட் சந்தேகமே வேணாம் உங்களுக்கு :)
பதிலளிநீக்குஇந்திரன் பத்தின ஆராய்ச்சி ரொம்ப சுவாரசியமானது. இந்து மதத்தின் முதல் கடவுள் அல்லது தலைவன் என்ற ரீதியில் இந்திரனைப் பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிக சுவாரசியமானவை சார்.
ஹிஹி பத்மநாபன். வளவளனு போறதை இப்படி நாசூக்கா சொல்றீங்களா :)
பதிலளிநீக்குஇது போன்ற உபன்யாச ஸ்டைலில் ஒரு உபயோகம். கதை, கவிதை, கட்டுரை, social commentary, editorial, அரசியல், நீதி என்று அத்தனையும் கலந்தடிக்கலாம். anything goes. அதனால் இழுத்துவிடும். anything goes பாணியில் எழுதுவது மிகவும் சிரமமானது - stressful - என்று நினைக்கிறேன். எழுதுபவருக்கும் படிப்பவருக்கும் :)
தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.
இடையில் எந்த அலுவல் வந்தாலும் நிறுத்த முடியாமல் படித்தேன். ரசித்தேன். இடையிடையே உங்கள் பகுத்தறிவுக் கருத்துக்களை நாசூக்காய் சொல்லிப் போனவிதம் அருமை. கண்மூடித் தனமெல்லாம் மண்மூடிப் போகட்டும் என்னும் வாதம் கதைக்கு ஊடே இழையோடுகிறது.
பதிலளிநீக்குபடிச்சா ஒரு தடவையோட நிறுத்த முடியாது
பதிலளிநீக்குஅதனால்தான் தாமசம்
கதை மிகப் பிரமாதமா அந்த காலத்துக்கே
அழைச்சிண்டு போறது
கதை முடிஞ்சும் வீட்டுக்குள்ளேதான் இருக்கோம் என்பதை
புரிந்து கொள்ளா கொஞ்ச நேரம் எடுக்கிறது நிஜம்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எனது மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
கதையோடு கூடவே பெண்ணுரிமைப் போராட்டமும் ரசிக்க வைத்தது. நல்ல ஓட்டம். கொஞ்ச நாட்களா வரவே முடியலை. ஆனாலும் இப்படித் தாமதமாப் படிக்கிறதும் வசதியாத் தான் இருக்கு. எல்லாப் பின்னூட்டங்களும், அவங்க எழுதி இருக்கும் கருத்துக்களையும் சேர்த்துப் படிக்கும்போது கிடைக்கும் வடிவம் அருமை.
பதிலளிநீக்குவிஸ்வகர்மா மாறுவேஷம் அருமை! இப்படி ஒரு கோணம் யாருமே நினைச்சுப் பார்த்திருக்க முடியாது.
பதிலளிநீக்கு