2011/12/20

ஸ்மரண யாத்ரை

(பெரிய) சிறுகதை


1 2 ◀◀ பூர்வத்துலே..

    சிரிச்சுண்டே நின்னுண்டிருந்த இந்த்ரனை ப்ரமிச்சுப் போய் பாத்துண்டிருக்கா அகல்யா. சினிமால பாடறாளே, நினைத்தேன் வந்தாய் நூறு வயதுனு, அந்த மாதிரி பாடத் தோணறது அவளுக்கு. இந்த்ரனைக் கட்டிப் பிடிச்சுக்கலாம்னு வாத்சல்யத்தோட போறா. ஒரு அடியெடுத்து வைச்ச அகல்யா, சட்டுனு நின்னுடறா. தன்னோட காலப் புடிச்சுக்கறா. கண்டகம் குத்திடறது. நெருஞ்சி முள். நன்னா காய்ஞ்சு போன நீளமான முள். சுர்ருனு பாதத்துல குத்திக் குடைஞ்சு ஏறிடுறது.

இந்த மாதிரி டயத்துல நமக்கெல்லாம் என்ன தோணும்? 'சனியன்'னு எரிச்சல் படத்தோணும். 'ஐயோ, அம்மா.. பிராணன் போச்சே'னு கூச்சல் போட்டு ஊரைக்கூட்டத் தோணும். அகல்யாவுக்கு முள்வலினாலும் யோசிக்கறா. 'கௌதமரும் அவரோட ரிஷிக் கூட்டமும் தெனம் நடமாடற இடமாச்சே? நானும் மத்த ரிஷிபத்னிகளும் நித்யம் ஆசிரமத்திலேந்து தடாகம் வரைக்கும் இந்தப் பாதையைப் பெருக்கித் தள்ளி சுத்தமா வச்சிருக்கோமே, இன்னிக்கு எங்கேந்து முள் வந்தது? அதுவும் காஞ்ச கண்டகம்? ஒரு வேளை ரிஷிகள் யார் கால்லயாவது குத்தியிருந்தா எத்தனை கஷ்டமாயிருக்கும்? நல்ல வேளை, நம்ம கால்ல குத்தினதால இதை எடுத்துத் தூர போட முடியறதே!'னு முள்ளை எடுத்து ஓரமா போட்டு ஸ்ராங்கா மண்ணைத் தூவி மூடறா.

அதுக்குள்ள "என்னாச்சு?"னுட்டு ஓடி வந்துட்டான் இந்த்ரன்.

"குத்திடுத்து"னு, கொழந்தை மாதிரி விசும்பிண்டே ஒரு பாதத்தைக் காட்டறா.

'கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ?'னு அவளைப் பாத்துட்டு, "இதென்ன வினோதம்? முத்தும் பவழமும் இப்படி சேந்து உருள்றதே?"னு கேக்கறான்.

அகல்யாவோட பாதம் அவளோட முகம் மாதிரி அத்தனை பொலிவா இருக்காம். பாதத்துல ரத்தம் பவழமா வரதாம். முள் குத்தின வலி தாங்காம அகல்யாவோட கண்லேந்து ஜலம் முத்தா உருள்றதாம். என்னமா டயலாக் விடறான் பாருங்கோ! சினிமாக்காராள் காதல் டயலாக் எழுதக் கத்துண்டது இந்த்ரன் அகல்யா ஜோடி கிட்டேயாக்கும்.

தன்னோட காலையும் கண்ணையும் பாத்துட்டு இந்த்ரன் இப்படி வர்ணிக்கறான்னு தெரிஞ்சதும், வலி போன மாதிரி இருக்கு அகல்யாவுக்கு. இந்த்ரன் அவளோட காலைப் பிடிக்க வரான். முள்ளு குத்தினதுக்கான ஹேது புரிஞ்சுது அவளுக்கு. அவசரமா ஒதுங்கிண்டு இந்த்ரனைத் தடுக்கறா. "இந்த முள்ளை அத்தனை லகுவா எடுக்க முடியாது"னுட்டு கழுத்தைக் தொட்டுக் காட்டறா. அவள் கழுத்துல மின்னின மஞ்சள் குங்குமத்தைப் பாத்துட்டு ஒதுங்கறான் இந்த்ரன்.

அந்த காலத்துல மனுஷ்ய கல்யாணத்துக்கு அடையாளமோ லக்ஷணமோ உண்டானு கேட்டேள்னா, உச்சந்தலைலயும் கழுத்துக் குழியிலயும் வச்சுக்குற மஞ்சள் குங்குமப் பொட்டுதான். விவாகச் சின்னம்னு இப்ப நாம எல்லாம் விவாதம் பண்ற தாலி, மாங்கல்யம், மெட்டி எல்லாம் பின்னால வந்தது. மாங்கல்யதாரணம்னு ஒரு க்ருதானுசாரத்தை நாம ஏன் அனுஷ்டிக்கிறோம்னு தெரிஞ்சா, இந்தக் காலத்துப் பொண்கள் பாதி பேர் தாலி கட்டிக்க மாட்டா. 'என்னடா அசுவத்தாமா, அடி வாங்கத் தயாரா இருக்கியா?'ங்கற மாதிரி பாக்கறார் பாருங்கோ காஸ்யபன் மாமா.. அதனால அந்தக் கதையை இன்னொரு நாள் சொல்றேன்.

அகல்யா தன்னோட மஞ்சள் குங்குமத்தைத் தொட்டுக் காமிச்சதும் இந்த்ரனுக்கு எரிச்சலாவும் கஷ்டமாவும் இருக்கு. "இதெல்லாம் மனுஷ சம்ஸ்காரம், இதுக்கெல்லாம் நீ ஏன் கவலைப் படறே?"ங்கறான்.

"இப்ப நான் மனுஷியாத்தானே இங்கே வந்திருக்கேன்? மனுஷ பழக்கங்களையும் யதார்த்தங்களையும் அனுசரிச்சு தானே ஆகணும்?"னு பதில் கேள்வி கேக்கறா அகல்யா.

"பூ போட்டு என்னை வரச்சொன்ன மனுஷி, நீ தானே?"னு, 'மனுஷி'யை அழுத்தி, கொஞ்சம் கோவமா கேக்கறான். அவளைத் தொட்டுத் தாங்க முடியலையேனு அவனுக்கு ஆதங்கம். ஆத்திரம். சில பொம்னாட்டிகள் காதலிக்கிறேம்பா தியாகம் பண்றேம்பா.. ஆனா திடீர்னு அப்பா அம்மா குடும்பம் வேலை லொட்டுனு ஏதோ சாக்கு சொல்லி பல்டி அடிச்சு காதலிக்கறவனை நடுத்தெருல நிக்க வச்சுருவா. அப்படித்தான் ஏமாந்த சோணகிரியான மாதிரி இருக்கு இந்த்ரனுக்கு.

"நான் என்ன தெரிஞ்சா பூ போட்டேன்? எதை எதுக்காக ஆகாயத்துல எறியறேன்னு தெரியாம தானே இத்தனை நாளும் எறிஞ்சேன்?"னு பதிலுக்குக் கேக்கறா.

"நீ மனுஷப்பிறவில இதையெல்லாம் மறந்துடுவேன்னு தானே முன் ஜாக்கிரதையா அப்படி ஒரு வரம் கேட்டே? என்னோட பலஹீனத்தைப் புரிஞ்சுண்டு என்னை வரவழைக்கத் தானே திட்டம் போட்டு அப்படி ஒரு வரம் கேட்டே?"னு இந்த்ரன் லா பாயின்டை புட்டு புட்டு வைக்கறான்.

அகல்யா யோசிக்கறா. புத்திசாலி பொம்பளையோன்னோ? பேச்சை மாத்திடறா. "சரி, ரெண்டு பேரும் மாத்தி மாத்திக் கேள்வி கேட்டுண்டு இருந்தா எப்படி?"னு இந்த்ரனைப் பாத்து சிரிக்கறா. கொஞ்ச நேரம் அவனையே பாத்துண்டு இருக்கா. ரெண்டு பேர் பார்வைலயும் இந்த அசுவத்தாமனால பிரஸ்தாபிக்க முடியாத அளவுக்கு சிந்தா பரிவர்த்தனை நடந்துண்டிருக்கு. அத்தனை பேசிக்கறா நயன பாஷைல. 'வாய்ச் சொற்கள் யாது பயனும் இல'னு புலவர் சொன்னது இவாளை வச்சுத்தான்.

அப்புறம் அகல்யா, "விவாகமான ஒரு ஸ்த்ரீ இன்னொரு புருஷனைப் பாக்கறதே அதர்மம்னு மனுஷ சாஸ்த்ரம் சொல்றது, இருந்தாலும் ஒங்களைப் பாக்கணும் போல இருந்துது. என்னோட மனுஷ்ய ஜீவிதத்லே சோர்வு என்னை உருக்கும் போது உங்களை பாத்தா உற்சாகமா இருக்கும்னு எனக்கு அப்பத் தோணித்து, வரம் கேட்டேன்"னு ரொம்ப சாத்வீகமா சொல்றா.

இந்த்ரன் சாந்தமாறான். அகல்யாவைப் பாத்து, "சுகம் தானா? சொல்லு கண்ணே"ங்கறான்.

அவளும் அவனைப் பாத்து விஷமமா, "சுகம் சுகம் தானே நினைவிருந்தால்"னு சொல்றா. அப்புறம், "எனக்கு ஒரு குறையுமில்லை. என்னை ஒரு சேவகி மாதிரி பாவிக்கறார் கௌதமர். அவருக்கு எல்லா விதத்துலயும் ஒத்தாசையா இருக்கேன். இருந்தாலும் அப்பப்போ கோவம் வந்து சபிச்சுத் தள்ளிடறார்"னு கையை காலைக் காட்டறா. அங்கங்க ஒரே புண்ணா இருக்கு.

"இப்படிப் புண்ணாக்கி வச்சிருக்கியேடா என் தங்கமே?"னு உருகறான் இந்த்ரன்.

"அதுக்காகத் தானே இங்கே வந்திருக்கேன்? கௌதமரோட தவபலத்தைக் கட்டுப்படுத்தத்தானே? சாபத்தைக் கொடுத்துட்டா அதைத் திருப்பி எடுத்துக்க முடியாதே? அதான் சாப நிவர்த்திக்காகவும் உக்ரத்தைக் குறைக்கவும் இப்படியெல்லாம் பரிகாரம் பண்ண வேண்டியிருக்கு"னு அவ தலையைக் குனிஞ்சுண்டே சொல்றா.

ச்ச்ச்.. அகல்யா என்ன சொல்றா கவனிச்சேளா? புஷ்பத்தைப் போலானவள் பெண். முனிவரோட சாபத்தை வாங்கிண்டு புண்ணா சொமக்கறா பாருங்கோ? எப்பேர்கொத்த தியாகம்? எதுக்காக இந்த த்யாகம்? புரிஞ்சுக்க முடியாத த்யாகங்கள் பொம்பளேள்ட்டே நெறய உண்டு போங்கோ! எங்கம்மா ஞாபகம் வந்து நேக்கே கண் கலங்கறது.

சாபம் ஏன் குடுக்கத் தோண்றது? க்ரோதம். ஆங்காரம். தபஸ்வியா இருக்கறவா சாந்தமா, மன்யு விட்டு இருக்கணும். க்ரோதமோ மன்யுவோ வந்து சாபம் கொடுத்துட்டா, சாந்தமா இருந்து சம்பாதிச்ச தபோபலன் அத்தனையும் காணாம போயிடும். பேலன்சிங் ஆக்டுங்கறாளே, அதான். மனுஷாளை மனுஷாளாவே வச்சிருக்க இது ஒரு தேவ யுக்தியாக்கும்.

கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேள்னா, இதுல பெரிய லோகநீதி புதைஞ்சிருக்குனு புரியும். ஆத்துல ஏதோ அசம்பாவிதம் நடக்கறது. கொழந்தை காபி டம்ளரைத் தட்டிவிடறது. வாழக்கா பொடிமாஸ்ல பொண்டாட்டி உப்பை ஜாஸ்தியா போட்டுடறா. பிள்ளை பரீட்சைலே மார்க்கு கம்மியா வாங்கியிருக்கான். பொண்ணு சொன்ன பேச்சு கேக்காம அடம் புடிக்கறா. ஆபீஸ்லே சொன்ன டயத்துக்கு வந்து வேலை செய்ய மாட்டேங்கறா. ஷாப்பிங் சென்டருலே கார் பார்க் இடத்துக்கு சண்டை. ஏதோ ஒரு அல்ப காரணம். மனுஷ நியமப்படி நமக்குக் கோபம் வந்து அடாபுடானு வையறோம், பல சமயம் கைநீட்டி அடிச்சுடறோம். 'உன் தலையில இடி விழ'னு நாம் சொல்றது வசவா இருந்தாலும், யோசிச்சுப் பாத்தேள்னா அது சாபம் தானே? 'நீ உருப்படமாட்டே'னு நம்ம கொழந்தேளை நாம சொல்றது திட்டா, சாபமா? 'கட்டேலே போக'னு எத்தனை தடவ சொல்றோம், அது சாபம் தான்னு நமக்குத் தோணலை பாத்தேளா? மனுஷாளா பொறந்து சம்சார பந்தத்துலேந்து அனாச்ருதம் வேணும்னு நாம பண்ற தபஸ், இந்த மாதிரி சாபங்களால தானே ஸ்வாதீனமே இல்லாமப் போறது? கோவத்தை வளத்து இப்படி சாபம் குடுக்க குடுக்க, நாம பிறவி எடுத்துண்டே இருப்போம். நாம சொல்ற கடுமையான வார்த்தை, திட்டு வாங்கினவாள் கிட்டே புண்ணா மாறிடறது. அந்தப் புண் நம்ம கண்ணுக்குத் தெரியாதே தவிர, வாங்கிண்டவா மனசுலயும் உடம்புலயும் அது அழுகிண்டே இருக்கும். சுட்டுண்டே இருக்கும். 'நாவினால் சுட்ட வடு ஆறாதே'னு புலவர் சொல்லலியா?

மன்யுவை, அதாவது அசாத்யக் கோபத்தை, மனுஷா எல்லாருமே குறைக்கணும். மன்யு அகார்ஷீத்னு ஜபம் பண்றதே அதுக்குத்தான் தெரியுமோ? சும்மா பூணலை மாட்டிண்டு புரியாத பாஷைல எதையோ சொல்லிட்டு பாயசம் வடையைச் சாப்பிடறோம். என்ன ப்ரயோஜனம்? இந்த ஜபத்தை எல்லாருமே பண்ணலாம். மத நம்பிக்கை இல்லேன்னா கூட இந்த ஜபம் பண்ணலாம். 'அசாத்ய கோபம் தொலஞ்சு போகட்டும்'னு ஜபம் பண்றதுக்கு தெய்வ மத நம்பிக்கை தேவையில்லை. லோகத்துல கோவம் குறையட்டும்னு பிரார்த்தனை பண்ணுங்கோ எல்லாரும் நாளைக்கு.

சரி, கதைக்கு வரேன். லோகநீதியப் பத்தி பேசினா நாலு மாமாங்கம் ஆகும் முடியறதுக்கு. அகல்யா கதையை புராணமாட்டம் இழுத்துண்டு போனேன்னு வைங்கோ, சிவகுமாரன் வெண்பாவிலே அறம் பாட ஆரம்பிச்சுடுவார்.

கௌதமர் அகல்யாவைச் சபிக்கற போதெல்லாம் இப்படி அவ தேகத்துல ரணகளமாயிடறது. அவளும் பிரம்மாகிட்டே கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்னு த்யாகம் பண்ணிண்டே இருக்கா. இங்கயும் பாத்தேள்னா, இது லோகநீதி தான். ஸ்த்ரீகளுக்கு புருஷன் தானே தெய்வம்னு சொல்றா? அதனாலதானே லோகநீதி காரணமா ஸ்ரீராமபிரான் பண்ணின கொடுமையெல்லாம், பிராட்டி பொறுத்துண்டா? எப்பேர்கொத்த மகோன்னத த்யாகம் அது!

மனுஷ தர்மப்படி நடக்கணும்னு அகல்யாவும் பொறுமையா இருக்கா.

இந்த்ரனுக்கு கை துறுதுறுங்கறது. வஜ்ராயுதத்தை நெனச்சுக்கறான். அகல்யாவை இப்படி நடத்தறானே பாதகன்னு தோணறது அவனுக்கு. தேவாளோன்னோ, மனுஷாள் எல்லாருமே அவாளுக்குப் பாதகாளாத் தோணும். தேவாள் என்ன பாதகம் பண்ணாலும் குத்தமில்லே, பாவ மூட்டைய சொமக்கறது மனுஷக் கூட்டம். மனுஷனா பொறந்துட்டாலே பாவம் பண்றவாள்னு சொல்றதே வேதம்? நம்ம வேதம் மட்டுமில்லே. எங்காத்து முனைலே ஒரு சர்ச் இருக்கு. போன வாரம் பாருங்கோ, அந்தப் பக்கமா வர போறவாளை எல்லாம் பாவிகளே பாவிகளேனு கூப்டுண்டேயிருக்கா மைக் வச்சு. ரெண்டு நாளைக்கப்புறம் அந்தப் பக்கம் போறதையே நிறுத்திட்டேன். கதைக்கு வருவோம்.

"உன் மனசு எத்தனை கஷ்டப்படும்?"னு சொல்றான் இந்த்ரன்.

"இல்லையே. உங்க மனசைத்தானே நான் எடுத்துண்டு வந்தேன்? என் மனசு உங்க கிட்டேதானே இருக்கு? வச்சிண்டிருக்கேளா, இல்லே இன்னொரு பொண்ணைப் பாத்துட்டு என் மனசைத் தூக்கிப் போட்டுட்டேளா? கடைசி வரைக்கும் பத்திரமா வச்சுப்பேள்னு தானே குடுத்துட்டு வந்தேன்?"னு முள் குத்தின வலிலே கண்ல தண்ணி வந்தாலும், சிரிச்சுண்டே சொல்றா அகல்யா. "என் ஒடம்புல தான் காயம். மனசுல பாருங்கோ, ஒண்ணுமில்லே. ஒங்க மனசாச்சே, பத்திரமா காயம் படாம வச்சுண்டிருக்கேன்"னு சொல்றா.

அகல்யா சொன்னது இந்த்ரன் ஹ்ருதயத்தைக் கூழாக்கறது. அகல்யா மேலேயே கோபம் வரது. தேவராஜனாச்சே, கொஞ்சம் கட்டுப் படுத்திண்டு ஒண்ணும் பேசாம இருக்கான்.

"என்ன, உம்முனு இருக்கேள்? உங்களைப் பாத்ததுல சந்தோஷம்"னு ஏக்கத்தோட மறுபடியும் சொல்றா அகல்யா. "ஆனா, என்னோட நெலமையை மறந்து உங்களை நெனச்சது தப்புதான். தெரியாமலே செஞ்ச பாதகம். உங்களோட இப்படிப் பேசிண்டிருந்தா அவருக்குக் கோபம் வந்து ரெண்டு பேரையும் சபிச்சுடப் போறார். என்னைப் பாக்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். கிளம்புங்கோ. நானும் போயிட்டு வரேன்"னுட்டு ஆஸ்ரமத்தைப் பாத்து நடக்கறா. முள் தச்ச பாதமோன்னோ, உந்திண்டே நடந்து போறா பாவம்.

    அவ போறதையே பாத்துண்டிருக்கான் இந்த்ரன். அகல்யா உந்தி உந்தித் தள்ளாடறது அவனுக்குத் துக்கமா இருக்கு. தனக்காகத் தானே இந்தத் த்யாகம் பண்றானு வருத்தமா இருக்கு. மனசுக்கு இஷ்டமானவளோட இருக்க முடியாம, இந்த்ர பதவினால என்ன ப்ரயோஜனம்னு எரிச்சலா இருக்கு. க்லேசம் ஓயணும்னு சித்த நாழி கண்ணை மூடிக்கறான்.

கொஞ்சம் ஆசுவாசமானதும், திரும்பிப் போகலாம்னு எழுந்து ஐராவதத்தைக் கூப்பிட்டவன், கீழே பாக்கறான். அகல்யா கைதவறி விட்ட குடம் ஓரமா உருண்டு கிடக்கு. அகல்யாவைக் கூப்பிடலாம்னு பாத்தா அவளைக் காணோம். 'அடடா, இதை மறந்துட்டாளே, கௌதமர் கோவத்துல ஏதாவது சபிச்சுடப் போறாரே'னு எழுந்து குடத்தைக் கையிலே எடுத்துண்டு ஆஸ்ரமத்தைப் பாக்க ஓடறான்.

இந்த சமயத்துல கார்யசித்திக்கான ஒரு சுவாரஸ்யமான உத்தியைப் பத்திச் சொல்லணும். பொண்களுக்கு ரொம்பக் கைவந்த யுக்தியாக்கும்.

அகல்யா அந்தக் குடத்தை மறந்து விட்டுட்டு போனாள்னு தானே நாம நெனச்சுண்டிருக்கோம்? ஆனா துளசி மாமியைக் கேளுங்கோ.. அகல்யா குடத்தை வேணும்னே விட்டுட்டுப் போனாள்னு டக்குனு சொல்லிடுவா டீச்சர். வாஸ்தவமாக்கும். தேவைப்பட்டா புத்தியில்லாம நடந்துக்கறது அசாத்திய புத்தியாக்கும். கார்யசித்திக்கோஸ்ரம் பொண்கள் இப்படி நடந்துப்பா. புருஷாளுக்கு இது சுட்டுப் போட்டாலும் வராது. பொண்கள் இப்படி நடந்துக்கறாங்கறதும் நமக்குத் தெரியாது. நம்ம கண்ணைத்தான் காமமும் க்ரோதமும் சதா மறைச்சுண்டே இருக்கே? 'புத்தியில்லாம இருக்கியே?'னு கத்திட்டுத் தொண்டையப் பிடிச்சுண்டு ஒக்காந்துடுவோம். கார்யம் ஜெயம்னு அவா மௌனமா மனசுக்குள்ள கொண்டாடிண்டிருப்பா.

அகல்யாவும் அப்படித்தான். இந்த்ரன் குடத்தை எடுத்துண்டு வருவான், கௌதமரைப் பாத்து பேசுவான், விவகாரத்தை முத்த வைக்கணும்னு தான் குடத்தை மறந்து போன மாதிரி விட்டுட்டுப் போனா. இந்த்ரன் கண்ணை மூடிண்டு ஒக்காந்துண்டான்னு தெரிஞ்சதும், உந்தி உந்தி நடந்துண்டிருந்தவ, ஒரே ஓட்டமா ஆஸ்ரமத்துக்குப் போக ஆரமிச்சா. அவ மனசுல உத்சாகம்.

ஓடறப்போ ஞானோத்சவத்துல விஸ்வகர்மாவோட பேசினது ஞாபகம் வரது அகல்யாவுக்கு. ஸ்ரீராம் அண்ணாவுக்காக ஸ்பெஷலா இன்னோரு ப்ளேஷ்பேக்.

விஸ்வகர்மாவுக்கு எப்பவுமே அபிக்யாத்ர மனசு, அதாவது மேனேஜ்மென்ட் மென்டாலிடிம்பாளே, அது உண்டு. தேவேந்த்ரனோடும், க்ரகாதிபதிகளோடும், மும்மூர்த்திகளோடும் விஸ்ராந்தியா குழைஞ்சு பேசுவானே தவிர, சாதாரண தேவாளை துரும்பாக் கூட நினைக்க மாட்டான். அவாள பாக்கறதே காலவிரயம்னு நெனக்கறவன் எங்கேந்து பேசப் போறான்? வந்தவாள் கிட்டே அவனோட எடுபிடிகளை விட்டு பேசச் சொல்லிண்டிருந்தவன், திடீர்னு சதசுக்கு வந்த அகல்யாவைப் பாத்ததும் அசந்துட்டான். இத்தனை முகலட்சணத்தை அவன் மகாலக்ஷ்மி கிட்டேயும் பாத்ததில்லை. அவ பின்னாடியே ஓடி, அவளுக்கு எல்லாத்தையும் சொல்லிக் காண்பிச்சான். அகல்யா எல்லாத்தையும் பாத்துட்டு, ஓரமா இருந்த ஹோமகுண்டத்துக்கு வந்து, "இது என்ன?"னு கேட்டா.

"அதை தேவேந்த்ரனுக்கும் மும்மூர்த்திகளுக்கு மாத்ரமே சொல்ல முடியும். மகா ரகஸ்யமாக்கும். என்னை மன்னிச்சுடுங்கோ"னான்.

"நீங்க எனக்கு அண்ணாவாகணும். தங்கை கிட்டே சொல்லக் கூடாதா?"னு கெஞ்சிப் பேசறா.

"அண்ணாவா?"னு கேக்கறான் விஸ்வகர்மா.

"சரஸ்வதியை சித்தத்துல நெனச்சு உங்களை ஒரு விசேஷ கார்யத்துக்காகப் படைச்சார் இல்லையா பிரம்மா? அதே மாதிரி சரஸ்வதி க்ருபையோட என்னையும் ஒரு விசேஷ கார்யத்துக்காகப் படைச்சிருக்கார். இருக்கிற தேவாள்ள சரஸ்வதி க்ருபையோட பொறந்தது நாரதனை விட்டா, நீங்களும் நானும் தான். நீங்க தேவேந்த்ரனுக்கு உதவி பண்றேள். நானும் தேவேந்த்ரனுக்கு உதவி பண்றேன்"னுட்டு பிரம்ம ஆக்ஞை பத்தி எல்லாத்தையும் சொல்றா. சொல்லிட்டு விஸ்வகர்மா முகத்தை ஏக்கத்தோட பாக்கறா. அவ கண்ல அப்படி ஒரு ஆகர்ஷணம். காந்தி. கவர்ச்சி. உருகிடறான் விஸ்வகர்மா.

அனேக புருஷாளுக்கு ஒரு துர்பலம் உண்டு. அவாளைப் பொருத்தவரைக்கும் அழகான பொண்கள், ஒண்ணு தான் கல்யாணம் பண்ணிக்கறவாளா இருக்கணும், இல்லை கூடப் பொறந்தவாளா இருக்கணும். அழகான பொண்களோட நெருக்கம் புருஷாளுக்குத் தேவைப்படறது. அப்பத்தான் மத்த புருஷாளோட மதிப்பும் மரியாதையும் நமக்கு கிடைக்கிறதுன்னு ஒரு எண்ணம். வாஸ்தவம்.

அகல்யாவைக் காட்டிலும் அழகியுண்டோ? விவேகியுண்டோ? விஸ்வகர்மாவுக்கு ஹோமகுண்டத்தைப் பத்தி ஆதியோடந்தமா அகல்யாவண்டை சொல்லத் தோணறது. "இது அதி விசேஷமாக்கும். நெனச்ச நேரத்தில் நெனச்ச ரூபத்தில் ப்ரயாணம் செய்யத் தோது பண்ணும். இதுல இப்படி நின்னுண்டு எந்த உருவம் வேணுமோ அதை மனசுல நினைச்சுண்டு, எங்கே போகணும்னு விரும்பறோமோ, அங்கே ஸ்மரண வேகத்துல போய்டலாம்."

"ஆச்சரியமா இருக்கே?"னு கண்ணைப் படபடனு அடிச்சிக்கறா அகல்யா. "இது இருந்தா எந்த வாகனமும் வேண்டாம் போலிருக்கே? உங்க வித்யை பத்திக் கேள்விப் பட்டிருக்கேன், ஆனா இப்போதான் பாக்கறேன். ஆஹா! நீங்க எப்பேர்பட்ட புத்திமான்! இந்த்ரன் கொடுத்து வச்சிருக்கணும், நீங்க இந்த்ர சபைல ஆஸ்தான வித்தகரா சேந்து இருக்கறதுக்கு! அண்ணானா அண்ணா தான்!"னு ஏகத்துக்கு ஸ்துதி பண்றா.

விஸ்வகர்மா கர்ணம் குளிற எல்லாத்தையும் கேட்டுண்டிருக்கான். திடீர்னு அகல்யா கேக்கறா, "ஆமாம், இது நெஜமாவே வேலை செய்யுமாண்ணா?"னு.

காத்து போன பலூன் மாதிரி ஆய்டறது விஸ்வகர்மா மொகம். ரோஷம் வரது. "என்ன இப்படி சொல்றே?"னு அதிகாரத்தோட கேக்கறான்.

"இல்லை அண்ணா. கொஞ்ச நேரத்துல தேவேந்த்ரன் வந்து இதைப் பத்திக் கேட்டு வேலை செய்யலைனு வச்சுங்கோ.. அண்ணா, ஒங்களுக்குத் தானே கெட்ட பேர்? இதைப் பரீக்ஷை பண்ணிப் பார்க்க வேண்டாமா?"னு கேக்கறா அகல்யா.

அப்பத்தான் இந்த்ரன் ஒண்ணும் சொல்லாமப் போனது ஞாபகம் வரது விஸ்வகர்மாவுக்கு. ஒருவேளை இந்த்ரன் திரும்பி வந்து பரீக்ஷை பண்ணிணா? வாஸ்தவம்னு தலையாட்டிட்டு, "இந்தா, நீ பரீக்ஷை பண்ணிப் பார்"னு சொல்றான்.

"வேண்டாம் அண்ணா, எனக்கு பயமா இருக்கு அண்ணா!"னு வரிக்கு வரி அண்ணானு கொஞ்சறா அகல்யா. "நீங்களே பண்ணுங்கோ. ஒங்களுக்குத்தான் ஞானம் ஜாஸ்தி. ஏதாவது ஆச்சுனா கூட என்ன பணணனும்னு தெரிஞ்சு புத்திசாலித்தனமா திரும்பி வந்துடுவேள்"னு சொல்றா. பாருங்கோ, லக்ஷ்மி கடாக்ஷம் அவச்யமில்லே, அழகான பொண்களுக்கு முகஸ்துதியே சகல சௌபாக்யத்தையும் கொடுக்குமாக்கும்.

"சரி, என்ன ரூபம் எடுக்கட்டும் சொல்லு"ங்கறான் விஸ்வகர்மா.

அகல்யா கொஞ்சம் யோசிக்கறா. எல்லாம் பாவ்லா. அவளுக்கு நன்னா தெரியும், என்ன கேக்கணும்னு. சொன்னேனில்லையா, சில சமயம் புத்திமட்டா நடந்துக்கறது அதிபுத்திசாலித்தனம்னு? "நேக்கு ஒண்ணும் தோண மாட்டேங்கறதே, அண்ணா?"ங்கறா. அப்புறம் விஸ்வகர்மாவோட கையைப் பிடிச்சுண்டு சின்னக் குழந்தையாட்டம் குதிக்கறா வேணும்னே. "இப்படிப் பண்ண முடியுமா அண்ணா? பிரம்மாவை விட்டா நான் உங்களையும் இந்த்ரனையும் தான் பாத்திருக்கேன். இந்த்ரன் மாதிரி ரூபம் எடுத்துண்டு பரீக்ஷை பண்ணிக் காட்டுங்கோ பாக்கலாம், நான் நம்பறேன்"னு சொல்றா.

விஸ்வகர்மா கொஞ்சமும் யோசிக்காம, "சரி, அதுக்கென்ன? இதோ பார்"னு அந்த குண்டத்துக்குள்ள இறங்கி நின்னான். "இந்த்ரனா மாறி அதோ அந்த கூட்டத்துல தெரிவேன் பார். உன்னைப் பாத்து வலது கையை அசைக்கிறேன் சரியா?"னு வடக்குப் பக்கமா கை காண்பிக்கறான். அப்படியே கண்ணை மூடிக்கறான். காத்துல கரைஞ்சு போன மாதிரி, விஸ்வகர்மாவைக் காணோம்.

அகல்யாவுக்கு திக்குனு ஆறது. சட்டுனு உத்தர தெசைலே பாக்கறா. அங்கே தேவேந்த்ரன் நின்னுண்டிருக்கான். சாக்ஷாத் தேவேந்த்ரன்னுட்டு எல்லா தேவாளும் அவனோட பேசிண்டிருக்கா. அங்கேருந்துண்டே அகல்யாவைப் பாத்து வலது கையை ஆட்டறான். அகல்யாவுக்குப் புரிஞ்சு போச்சு அது விஸ்வகர்மானு.

இப்பல்லாம் டெலிபோர்டேஷன்னு விசித்ரமா சொல்றாளே.. பாருங்கோ அது அப்பவே நம்ம விஸ்வகர்மா வித்தையாக்கும்.

தேவேந்த்ரனாட்டம் இருந்த விஸ்வகர்மா தன்னை எல்லாரும் விழுந்து விழுந்து உபசரிக்கறதைக் கொஞ்ச நாழி அனுபவிச்சுட்டு, பழையபடி குண்டத்துலேந்து திரும்பி வந்தான். அகல்யாவைப் பாத்துட்டு பெருமையா, "இப்ப என்ன சொல்றே?"னான்.

"நான் என்ன சொல்றது அண்ணா? அபாரம். ப்ரமாதம். அபூர்வம்"னு அவனைக் கட்டிப் பிடிச்சு நெத்தியிலே முத்தம் கொடுக்கறா. "நான் வரேன் அண்ணா"னுட்டு கிளம்பறா. ஒரு நாலடி நடந்து போய்ட்டு திரும்பி வந்து விஸ்வகர்மாவைத் தனியா கூப்பிடறா. "அண்ணா, இந்த குண்டத்துனால உங்களுக்கு ஆபத்து வரும்னு தோணறது"னு சொல்றா.

"திடீர்னு என்ன இப்படி சொல்றே அகல்யா?"னு கேக்கறான் விஸ்வகர்மா.

"ஒண்ணும் இல்லை. தேவேந்த்ரனோட பதவிமோகம் அதிதீவிரம்னு எல்லாருக்குமே தெரியும். இந்த குண்டத்தை வச்சுண்டு யார் வேணா தேவேந்த்ரனா ஆயிடலாம் போலிருக்கே? இதைக் கண்டுபிடிச்ச உங்களை தேவேந்த்ரன் கண்டிப்பா அழிச்சுடுவார்னு தோணறது"னு மெதுவா, ஆனா நல்லா ஒறைக்கும்படி சொல்றா.

"நான் இதைக் கண்டுபிடிச்சதோட சரி. வஜ்ராயுதம் மாதிரி இதுவும் ஒரு லவி, சாஸ்த்ரம், கருவி அவ்ளோதான்"னு சொல்றான் விஸ்வகர்மா. அவன் குரல் லேசா நடுங்கறதைக் கண்டுக்கறா அகல்யா.

"நீங்க சொல்றது சரிதான் அண்ணா. ஆனா நீங்க இந்த்ரனா மாறி தேவாளோட பேசிண்டிருந்ததை நெறய பேர் பாத்திருக்காளே? அதுவும் நல்லா அனுபவிச்சுப் பேசிண்டிருந்தேளே? அவா போய் ஏதாவது கோள் சொல்லிட்டா? இந்த்ரனுக்கு சந்தேகக் குணமாச்சே? இன்னோரு இந்த்ரன் எங்கேந்து வந்தான்னு யோசிச்சா?"னு கிளறிவிடறா அகல்யா.

"ஏண்டிம்மா.. நீயே போய் சொல்லிக் கொடுத்துடுவே போலிருக்கே?"ங்கறான் விஸ்வகர்மா. பக்குனு அடிவயிறு பத்திக்கறது. இருந்தாலும் சமாளிக்கறான். "அது நான்தான்னு யாருக்கும் தெரியாதே, உனக்கு மட்டுந்தானே தெரியும்? நீ என்ன ஒங்கண்ணாவையே சொல்லிக் கொடுக்கவா போறே?"னுட்டு அகல்யாவைப் பாக்கறான்.

அகல்யா முகத்துல ஒரு அதீதக் களை. விஷமமா சிரிச்சுண்டே விஸ்வகர்மாவைப் பாக்கறா. அவன் கேள்விக்கு பதில் சொல்லாம, ஒண்ணும் பேசாம, அவனை அப்படியே பாத்துண்டிருக்கா. விஸ்வகர்மாவுக்கு பயம் பிடிச்சுண்டுது. தன்னை இந்த்ர ரூபம் எடுக்கச் சொன்னக் காரணம் எல்லாம் மொள்ளப் புரியறது அவனுக்கு.

"அகல்யா, நீ என்னோட தங்கையில்லையா? ஒனக்கென்ன வேணும் சொல்லு, நான் செய்யறேன். இந்த்ரன் கிட்டே மட்டும் இதைச் சொல்லிடாதே. என்னைக் காப்பாத்து"னு சாஷ்டாங்கமா அகல்யா கால்ல விழறான். பயம் வந்தாலும் தன்னம்பிக்கை போனாலும் புருஷாளுக்கு என்ன பணறதுன்னே தெரியாது. அகல்யா அவனைத் தடுத்து, "என்ன அண்ணா இது? நான் உங்க தங்கையாச்சே, ஒங்களைக் காட்டிக் குடுப்பேனா?"ங்கறா. அப்புறம் சாவதானமா, "நீங்க எனக்கு ஒரு கார்யம் பண்ணினாப் போறும். பண்றேள்னு சொல்லுங்கோ, நான் இந்த்ரன் கிட்டே மூச்சு விடலை"னு சொல்றா.

"என்ன பண்ணனும் சொல்லு, சத்யமா பண்றேன்"னு வாக்கு கொடுக்கறான் விஸ்வகர்மா. அசடு.

அகல்யா தனக்கு என்ன வேணும்னு அவன் கிட்டே விளக்கமா சொல்றா.

அதைக் கேட்டதும் விஸ்வகர்மா மொகத்துல களையே இல்லை. "என்ன அகல்யா, இப்படிப் பண்ணச் சொல்றே?"னு கேக்கறான்.

"இதை விட்டா வேறே வழியே இல்லை அண்ணா. உங்களுக்கும் எனக்கும் இந்த்ரனுக்கும் ஆபத்து வராமே இருக்கணும்னா நீங்க இதுக்கு ஒத்துண்டே ஆகணும். எனக்காகவாவது நீங்க இதைப் பண்ணித்தான் ஆகணும். இல்லேன்னா ஒரு வேகத்துல நான் இந்த்ரன் கிட்டே ஒங்களைப் பத்திச் சொல்லிடுவேன்"னு, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டும்பாளே அது மாதிரி, சொல்லிடறா அகல்யா.

"சரி, இந்த்ரன் எங்கிட்டே வந்ததும் நீ சொன்னபடி செய்யறேன். நல்ல தங்கச்சி வந்து வாச்சாளே எனக்குனு"னுட்டு புலம்பிண்டே வாக்கு கொடுக்கறான் விஸ்வகர்மா.

"மறந்துடாதீங்கோ அண்ணா, இப்படிக் கேக்கறேனேனு தப்பா நினைக்காதீங்கோ. உங்களைக் காட்டிக் குடுத்தா நேக்கு மட்டும் நிம்மதி இருக்கும்னு நினைக்கறேளா?"னு சொல்லிட்டு அங்கேந்து கிளம்பறா.

காரணத்தோடே தானே விஸ்கர்மாவைப் பாத்துப் பேசிட்டு வந்தா அகல்யா? இந்த்ரன் பூலோகம் வந்தாச்சு, இனிமே நெனச்சதெல்லாம் ஒண்ணொண்ணா கை கூடி வரும்னு மனசுக்குள்ள சிரிச்சுண்டே ஆஸ்ரமத்துக்குள்ளே போனா அகல்யா.

அங்கே கௌதமர் காத்துண்டிருக்கார்.

மிச்சக் கதை அடுத்த ப்ரசங்கத்துல.►►21 கருத்துகள்:

 1. நடையும், வர்ணனையும் அப்பப்பா, மிக லயித்து எழுதி இருக்கிறிர்கள்.

  பதிலளிநீக்கு
 2. அப்பாதுரை அவர்களே! கலை இலக்கியத்தில் Alieanation Theory என்று கூறுவார்கள். எழுத்திலோ நடிப்பிலோ மெய்மறந்து சொக்கிப்போய் படைப்பு சொல்லும் செய்தியை மறைத்துவிடக்கூடாது.அந்த செய்தி மறந்தும் விடக்கூடாது.வாசகனோ, பார்வையா ளனோ படைப்புக்கு வெளியில் நின்று கொண்டு (அந்நியமாகி) அனுபவிப்பது ஒரு வகை.கதைக்கு நடுவில் ஸ்ரீராம்,ஹேமா, காஸ்யபன் வருவது அதற்காகத்தானோ?---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 3. முக்கியமான கட்டத்துக்கு வரும்போது முஸ்தீபுகள் நிறைய வேணும் போலேருக்கு...ஆனாலும்....எங்கேயோ போயிட்டீங்க....!

  பதிலளிநீக்கு
 4. தொடர்ந்து படிப்பதற்கு நன்றி தமிழ் உதயம், kashyapan, ஸ்ரீராம், ...

  பதிலளிநீக்கு
 5. புரிகிறது kashyapan.. பெயர்களை சேர்ப்பதில் பிரமாத காரணமில்லை சார். சம்பந்தமில்லாமல் அந்நியப் பெயர்களைக் கதைக்குள் சேர்ப்பது உபன்யாச ஸ்டைலில் ஒத்து வரும் என்று தோன்றியது. எழுபதுகளின் குரோம்பேட்டை ந்யூகாலனி வாசிகளுக்கு வெங்கட்ராம பாகவதரைத் தெரிந்திருக்கலாம். கதையிலிருந்து விலகி வியாக்யானம் செய்துவிட்டுத் திரும்பும் பொழுது ந்யூகாலனி வாசிகளின் பெயர்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு உரையில் தெளிப்பார். நான் அவர் ஸ்டைலைக் காபி அடிக்கிறேன். அவ்வளவு தான். தவறு இருந்தால் என்னுடையது. மற்றபடி கதையில் செய்தி எதுவும் கிடையாது. (கஜேந்த்ர மோக்ஷம் வாலி வதம் போன்ற உபகதைகளை உபன்யாசமாகச் சொல்வார் வெ பா. கஜேந்த்ர மோக்ஷம் கதையை ஒருவாரத்துக்கு கதைக்குள் கதைக்குள் கதை என்று இழுத்துப் பிடித்து சொல்வார்!).

  பதிலளிநீக்கு
 6. இந்தக் கதையையும் விறுவிறுப்போடு சஸ்பென்ஸ் வைத்து உங்களால்தான் சொல்லமுடியும். சபாஷ்

  பதிலளிநீக்கு
 7. //பாதத்துல ரத்தம் பவழமா வரதாம்// இது போல நிறைய இடத்தில் கலக்கி இருக்கீங்க.
  வாஸ்தவம் - பாலகுமாரன் ஒரு கதையில் எழுதியிருப்பார் - பேருந்தில் அவள் அருகில் அமர முடியவில்லை, பின் இருக்கையில் அமர்ந்தேன், அதுவே ஆனந்தமாக இருந்தது என்று.

  பதிலளிநீக்கு
 8. அறம் பாடுவது ஒண்ணு தான் பாக்கி. அழிச்சாட்டியம் பண்ணுற அரசியல் பேய்களைப் பார்த்தே இன்னும் பாடல்லே.

  அப்பாஜிக்கு "வாழத்துப்பா"லோன்னோ பாடணும்.

  லோகநீதி நன்னாவே இருக்கு. இடையியிடையே அள்ளி விடுங்கோ.

  கதை ஜோரா போறது.

  பதிலளிநீக்கு
 9. 'அசாத்ய கோபம் தொலஞ்சு போகட்டும்'னு ஜபம் பண்றதுக்கு தெய்வ மத நம்பிக்கை தேவையில்லை. லோகத்துல கோவம் குறையட்டும்னு பிரார்த்தனை பண்ணுங்கோ எல்லாரும் நாளைக்கு. /

  இது நீதி போதனை..

  தேனில் குழைத்துக்கொடுத்த அற்புதம்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 10. பெயர்களை இழுத்து கதை சொல்வது .. நேரில் கதைகேட்கும் உணர்வை ஏற்படுத்துகிறது ..கதையில் நம்ம வான் புகழ் புலவர் அழகாக உள்ளே வருவது அருமை.... அகல்யா இந்திரன் இவ்வளவு விஸ்தாரமாக எங்கும் படித்ததில்லை கேட்டதில்லை .. தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 11. மூன்று பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டு அசைபோடும்போது எனக்கு ராமாயண கதையின் பல நோக்குகளை ஆராய்ந்து எழுதியவர் பலராலும் விமரிசிக்கப்படுவது நினைவுக்கு வந்தது.
  “அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மண்டோதரீ ததா
  பஞ்சகன்யா ஸ்மரேந்நித்யம் மஹாபாதக
  நாசநம்” என்று கொண்டாடப்படும் கதாபாத்திரங்களை வைத்து இப்படியெல்லாம் கற்பனை செய்து எழுத
  துணிச்சலும் சாமர்த்தியமும் வேண்டும் .உங்களிடம் அது அபரிமிதமாகவே இருக்கிறது பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 12. என்ன ஒரு அசாத்தியமான எழுத்து! ஏங்க வைத்துவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
 13. ரொம்ப அழகான எழுத்து நடை. சின்னவளா இருந்தபோது அம்மா அப்பாவோட நிறைய கதா காலட்சேபம் கேட்டிருக்கேன். உங்க காலட்சேபத்தை படிக்கும்போது அந்த நினைவுதான் வரது.
  அகல்யா விஸ்வகர்மாகிட்ட என்ன சொன்னா? தயவு பண்ணி அடுத்த பதிவுல சஸ்பென்ஸ் வைக்கமா சொல்லிடுங்க.

  பதிலளிநீக்கு
 14. நன்றிகள் geetha santhanam, அரசூரான், சிவகுமாரன், இராஜராஜேஸ்வரி, பத்மநாபன், G.M Balasubramaniam, bandhu, meenakshi, ...

  //ராமாயண கதையின் பல நோக்குகளை ஆராய்ந்து எழுதியவர் பலராலும் விமரிசிக்கப்படுவது நினைவுக்கு வந்தது
  ராமாயணக் கதையை அரைகுறையாகப் படித்ததோடு சரி GMB சார், அதற்கு மேல் எதுவும் கிடையாது என்னிடம். விமரிசனமாக எழுதவில்லை, வெறும் கதைதான்.
  சுலோகத்துக்கு நன்றி (கதையில் சேர்த்திருந்தேன், வேறு ஒரு கருத்தில் - இப்போது எடுத்துவிடப் போகிறேன் :-).
  அந்த சுலோகத்தை திருமணமான பெண்கள் சிலர் தினமும் சொல்வதை அறிவேன். 'மகாதுக்க நிவர்த்திதம்' என்றும் ஒரு variation இருக்கிறது. "அந்த ஐந்து பெண்களின் திருமண வாழ்வில் அத்தனை துக்கம், அதனால் ஓ திருமணமான இந்துப் பெண்ணே, அவர்களை நினைத்து உன் கணவனைப் பற்றியும் உன் மணவாழ்க்கையைப் பற்றியும் புலம்பாதிரு" என்றும் ஒரு (கு)தர்க்க விளக்கம் உலவுகிறது :)
  இது போன்ற சுலோகங்களைப் படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் எதற்குத்தான் benchmark என்று இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்ததுண்டு. மகாதுக்க நிவர்த்தி என்பது ஓரளவுக்கு யதார்த்தம். 'தம்மினும் மெலியாரை' கருத்தின் extrapolation எனக் கொள்ளலாம். 'மகாபாப நாசநம்' என்று வரும் சுலோகங்களையெல்லாம் சற்று வியப்போடு கவனித்திருக்கிறேன். பாப நாசம் இத்தனை சுலபமா என்று :)
  காலைக் காபியின் சுவை கூட்ட, சிந்தனையைக் கிளப்பி விட்டீர்கள் சார், நன்றி.

  பதிலளிநீக்கு
 15. அருமை! வாழ்த்துக்கள்!
  பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
  பகிர்விற்கு நன்றி!
  படிக்க! சிந்திக்க! :
  "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

  பதிலளிநீக்கு
 16. .. சூடாமுடி சூடிக்கொள்ள தயாராகி விட்டது -- இந்த தறுதலை.

  பதிலளிநீக்கு
 17. ஆஹா, என்ன அருமையான நடை. பிரசங்கம் ரொம்ப பிரமாதமா போயிண்டிருக்கு. காக்க வைக்காதீங்கோ, அடுத்தாப்ல‌ என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கோம்.

  பதிலளிநீக்கு
 18. நன்றி, திண்டுக்கல் தனபாலன், Expatguru.

  பதிலளிநீக்கு
 19. கவனித்தமைக்கு நன்றி சிவகுமாரன்.. நீண்ட நாள் ஆசை, நிறைவேறுமா பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 20. மாங்கல்யதாரணம்னு ஒரு க்ருதானுசாரத்தை நாம ஏன் அனுஷ்டிக்கிறோம்னு தெரிஞ்சா, இந்தக் காலத்துப் பொண்கள் பாதி பேர் தாலி கட்டிக்க மாட்டா. 'என்னடா அசுவத்தாமா, அடி வாங்கத் தயாரா இருக்கியா?'ங்கற மாதிரி பாக்கறார் பாருங்கோ காஸ்யபன் மாமா.. அதனால அந்தக் கதையை இன்னொரு நாள் சொல்றேன். //

  அதையும் சொல்றது.

  பதிலளிநீக்கு
 21. அந்தக் கதை கொஞ்சம் விவகாரமான தமிழ் ஓவியா டைப் கதைங்க கீதா.. நிச்சயமாக அசுவத்தாமன் அடிவாங்குவார்..

  பதிலளிநீக்கு