2011/12/16

ஸ்மரண யாத்ரை

(பெரிய) சிறுகதை

    கதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன். வியாக்யானமும் சம்பாஷணையும் ஏ சர்டிபிகேட்டா எசகுபிசகா இருக்கலாம், பால்யருக்கு உசிதமில்லேனு பெரியவாள்ளாம் பவ்யமா எடுத்துச் சொல்லுங்கோ. கேக்கலேனா, செவிட்டுல ரெண்டு சாத்துங்கோ, குத்தமில்லை, பகவான் ரக்ஷிப்பார்.

மரண யாத்ரை தெரியும். அதான் பாடறாளே, நாலு பேருக்கு நன்றினு. சினிமாப் பாட்டு பாடினா எல்லாருக்கும் ஞானம் வந்துடறது. ஸ்மரண யாத்ரை தெரியுமோ? ஒரு எடத்துக்குப் போகணும்னு நெனக்கறோம்.. பஸ்சு காரு ப்ளேனுனு இல்லாம, டக்குனு நெனச்ச ஒடனே போக முடியறதுனு வைங்கோ, அதான் ஸ்மரண யாத்ரை.

எல்லாம் நடக்கற காரியந்தான் கீதா மாமி. நடந்துருக்கே? சொல்றேன், சித்த இருங்கோ. ஒரு சிட்டிகை....நல்ல பட்டணம் பொடில்லாம் இப்ப கெடைக்கறதே இல்லை...நன்னா விர்ர்ர்னு ஏர்றது.

மெட்ராஸ்ல மழை விடாது போலிருக்கே? என்னோட ஸ்கூடர் பாருங்கோ, பாதி நாள் ஓடாது. இன்னைக்கு அது சத்யமா ஓடாதுனு ஸ்டார்ட் பண்ணினா, பட்டுனு ஸ்டார்டாயிடுத்து. மழை என்னடானா ப்ரளய சம்ஸ்காரம் பண்றாப்ல கொட்டறது, இன்னைக்குப் பாத்து ஸ்டார்ட் ஆறதே சனியன்னு தர்ஜம் பண்ணிண்டே ஆப் பண்ணிட்டு, கொடை எடுத்துண்டு நடராஜா சர்வீஸ்ல ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து நின்னா.. ஸத்யவ்ரதனோட ஓடத்துக்கு காத்துண்டுருக்கற மாதிரி, அங்க அப்படி ஒரு ஜனசந்தம். எனக்கானா இங்க வந்து சம்வாதம் பண்ணனுமே, இப்படி விளம்பிதமாயிண்டுருக்கேனு ஆயாசம். ஸ்மரண யாத்ரை பண்ண முடிஞ்சுதுனு வைங்கோ, இங்கே வரணும்னு நெனச்ச க்ஷணத்துலயே வந்திருக்க மாட்டேனோ?

என்னடா அசுவத்தாமா, இப்படி இல்லாததக் கொண்டா கல்லாததப் பாடுனு சொல்றாப்ல இருக்கேங்கறா, நம்ம மீனா மாமி. சரி மாமா, உங்க மீனா மாமி. நீங்களே வச்சுங்கோ, யார் வேண்டாம்னா? ஸ்மரண யாத்ரை பண்ண சாத்யப்படுமானு கேக்ககறா மாமி. அதுக்கு நான் சொல்றேன். ஸ்மரண யாத்ரை சாத்யம். சாத்யம். சாத்யம். இது சத்யம். சத்யம். சத்யம்.

சயன்ஸ் பிக்சன்னதும் சாத்யமெல்லாம் மறந்துட்டு வாயைப் பிளந்துண்டு படிக்கறா பாக்கறா. சயன்ஸ் பிக்சன் என்ன சுண்டைக்காய்? பாலக்ருஷ்ணனோட வாய்க்குள்ளே பூலோகம் மேலோகம் எல்லாம் தெரிஞ்சுதுனா அது கப்ஸாங்கறோம். அதையே இன்டர் ஸ்டெல்லர் விஷன்னு யாராவது சொன்னா ஆகா ஓகோங்கறோம். பகுத்தறிவிலே பரவசமாகிச் செலபேருக்கு ந்ருஜலமே வந்துடறது. சரிண்ணா, கதைக்கு வந்துடறேன். ஸ்ரீராம் இருக்கார் பாருங்கோ, விடாம தார்க்குச்சி போட்டுண்டே இருப்பார்.

நெனச்ச மாத்ரத்துல என்னண்ணா, நெனச்ச ரூபத்துல கூடப் ப்ரயாணம் பண்ணலாம். எல்லாத்துக்கும் நம்ம இதிகாசத்துல சாக்ஷி இருக்கு. நிதர்சனமா.. இன்ன முறைலே இன்ன விதமா எப்படி பண்ணனும்னு சிஷ்டாத்வமா சொல்லியும் வச்சுருக்கா. கிருஷ்ணர் முருகர் எல்லாம் டக்கு டக்குனு இங்கயும் அங்கயும் போனார், தர்சனம் கொடுத்தார்னெல்லாம் படிச்சிருக்கோமே. கேட்டிருக்கோமே. எல்லாம் இப்படியாகப்பட்ட பயணம் தான். சந்தேகமே வேண்டாம்.

பகவானை விடுங்கோ. நேத்தி பேப்பர்ல பாத்தேளா? போன மாசம் நடந்த விருத்தாசலம் கோவில் திருட்டுப் பத்தி தகவல் போட்டிருக்காளே? கோவில் குருக்கள் தான் எல்லாத்தையும் திருடினார்னு குத்தம் சாத்தி அவரை ஜெயில்ல போட்டுட்டாளே? இவர் என்னடானா, 'திருட்டு நடந்த அன்னைக்கு நான் ஊர்லயே இல்லை, இது எப்படி சாத்யம்?'னு கதறிக் கதறிக் கேக்கறார். கதறினாலும், அவரைக் கண்ணால பாத்ததா எத்தனை பேர் சத்யம் பண்ணியிருக்கா பாருங்கோ! எனக்கென்னவோ குருக்கள் அன்னிக்கு ஊர்ல இல்லைனு சொல்றது வாஸ்தவமாப் படறது. வேற யாரோ.. குருக்கள் ரூபத்துல வந்து, அவாளே திருடிட்டு ஸ்மரண யாத்ரை பண்ணி காணாம போயிருக்காங்கறேன். குருக்கள் பாவம், மாட்டிண்டிருக்கார். குருக்கள் தானே, பொய் சொல்லுவார்னு தோணிடுத்து எல்லாருக்கும். என்ன பண்றது? நெலமை... குருக்கள், மடத்துக்காராளை எல்லாம் ஜெயில்ல போடறதை கொஞ்ச நாள் பாக்காம இருந்தோம்.. இப்போ மறுபடி அடியைப் பிடிரா பாரதபட்டானு கிளம்பிடுத்தோனு தோண்றது..

நான் உளறலை மாமி. புத்தியோட, வித்யிதமாத்தான் பேசறேன்.

போன மாசம் என்னோட மாமனார் தவறிப் போயிட்டார்னு நானும் பார்யாளும் போயிருந்தோம். மாமனாரோட மரண யாத்ரைக்கும் நான் சொல்ற ஸ்மரண யாத்ரைக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதெங்கோ. நானே சொல்றேன்.

என்னோட மாமனார் ஊர், திருநெல்வேலி பக்கத்துல க்ருஷ்ணாபுரம். மாமனார் ஒண்டிக் கட்டை. வயசாயிடுத்து. காரியம் எல்லாம் முடிஞ்சு ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கோமா?

பக்கத்து ஆத்துக்காரர், க்ருஷ்ணாபுரம் கோவில்ல அநித்ய குருக்கள் வேலை பாக்கறார். இப்பத்தான் கோவிலை எல்லாம் கவர்மெண்டு எடுத்துண்டு அழிச்சாட்டியம் பண்றாளே, என்ன பண்றது சொல்லுங்கோ? அநித்யமா இருந்தாலும் ஏதோ பகவத் கைங்கர்யம் பண்ணிண்டு, புவாவுக்கு வேலைன்னு ஒண்ணு இருக்கேன்னு சாத்வீகமா இருக்கா பாவம். கிளம்பறதுக்கு மொத நாளன்னிக்கு அவாத்துல சாப்பிடக் கூப்பிட்டிருந்தாளேனு போனோம்.

அவா குடும்பத்லே அண்ணா தம்பி எல்லாருமே குருக்கள் தானாம். ஒண்ணு ரெண்டு போட்டோ காட்டிட்டு குடும்பக் கதை பேசி முடிக்கறதுக்குள்ளே சமையல் ரெடி. தளிகை தேவாம்ருதம். சூயன் அந்த ஊர்ல பண்ணி சாப்டாத்தான் நேக்குத் திருப்தி. புருஷாள் ரெண்டு பேரும் சாப்ட உக்காந்திருக்கோம். நான் ஏதோ அவசரமா சாதத்தைப் பிசஞ்சுண்டு, பிட்ளைக்காக காத்துண்டிருக்கேன். என்னோட பார்யை அழறாப்ல கேக்கறது. என்னனு அவளைப் பார்த்தேன். அவ என்னடான்னா அந்தப் பக்கத்தாத்து மாமாவைப் பாத்துண்டு, பரிமாறாம நிக்கறா. நானும் அவரைப் பாத்தேன்.

சாப்பாட்டுராமர் அநேகம் பேர் இருக்கா. செலபேர் போஜனம் பண்றது, பாக்கறதுக்கு விசித்ரமாவோ நூதனமாவோ இருக்கும். ஒத்தொத்தர் போஜனம் பண்றத பாத்தா, சம்க்ஷோபமா.. அதி பயங்கரமா இருக்கும். இன்னும் செலபேர் பாத்தேள்னா, என்னமோ எல்ஐசி கட்டின எஞ்சினியர் மாதிரி வித்தை எல்லாம் காட்டுவா.

பாருங்கோ, என்னோட மாமனார் இப்படித்தான். தட்டு சாதம், அதுக்கு மேலே பருப்புப்பொடி, நெய், அதுக்கு மேலே சொட்டு நல்லெண்ணெய் குத்திண்டு, அப்படியே பெசஞ்சு ஒரு கொளம் கட்டுவார். நாலு பக்கமும் நன்னா வரப்பு மாதிரி கட்டி, பெசஞ்ச சாதம் உள்பக்கம் சரிஞ்சுண்டு வரும். அப்புறம் தெளிவா ரசம் நாலு கரண்டி எடுத்து அந்த குளத்துல விடுவார். குளம்னா அப்படியே ரசத் தடாகம் மாதிரி இருக்கும். கொத்தமல்லி தக்காளித்துண்டு எல்லாம் குளத்துல அல்லி மாதிரி ரசத்துல மொதந்துண்டு இருக்கும்.

தாம்பாளத்துல சிவில் எஞ்சினியர் வேலை பாத்துண்டிருக்கார் பக்கத்தாத்து மாமா. அதைப் பாத்ததும் என் ப்ரியைக்கு அப்பா ஞாபகம் வந்து அழ ஆரம்பிச்சுட்டா. மொள்ள அடங்கி, ஒரு முகூர்த்தத்துல எல்லாரும் சாப்டு முடிச்சோம். தாம்பூலம் போடலாம்னு திண்ணைக்கு வந்தோம். மாமியும் என்னோட மிஸசும் வந்து உக்காந்துண்டா. மாமி ராமாயண புஸ்தகத்தை எடுத்துண்டு வந்து படிக்க ஆரம்பிச்சா. அகல்யை விமோசனம். "படிக்கறேன், கேக்கறேளா?"னா. "பேஷா"னேன்.

மாமி ராமாயணம் படிக்க ஆரம்பிச்சார். கொஞ்ச நாழி கழிச்சு மாமா, "வெத்தலை போடறேளாவே?"னார்.

"நேக்கு பழக்கமில்லை"னேன்.

கால் பேகட் வாசனை சீவலை எடுத்து ஒண்ணொண்ணா வாயில போட்டுண்டார் மாமா. மூணு வெத்தலை எடுத்து, காம்பைக் கிள்ளிட்டு தொடையில அப்டி ஒத்தி எடுத்துட்டு, சுண்ணாம்பைத் தடவி.. அப்டி இப்டி மடிச்சு.. ஒண்ணொண்ணா வாயில போட்டுண்டார். வெத்தலைச் சாறு, சர்ர்னு தெளிக்கறது. அதை அப்படியே வாயைத் திறந்தபடி உறிஞ்சுண்டார். மாமிக்குக் கோபம் வந்துடுத்து. "கோதண்டராமன் சரிதம் படிக்கறச்சே இப்படி கட்டபொம்மன் பஸ் மாதிரி சத்தம் போடறேளே. உள்ள போலாம் வா"னு என் பெண்டாட்டியை அழைச்சுண்டு உள்ளே போனார்.

அவா போனப்புறம், மாமா சிரிச்சுண்டார். "அப்படி நடக்கலை"னார்.

"என்ன?"

"அகல்யை சாபம், ஓய். அப்படி நடக்கலை"னார்.

"அகல்யை விவகாரம் பொய்ங்கறேளா?"னேன்.

"ஓய், அதைச் சொல்லலை. அகல்யை விவகாரம் நடந்தது வாஸ்தவம். ஆனா வெவரம் எல்லாம் மாத்திட்டா".

"அப்படின்னா?"

"சொல்றேன் கேளும்"னுட்டு என்னமோ பகுஜனப் பிரசங்கம் பண்ற மாதிரி, த்ருஷ்டாந்தமா நானா பக்கமும் பாத்துட்டு, மாமா சொல்ல ஆரம்பிச்சார்.

    தேவலோகத்துல அன்னிக்கு வருஷாந்த்ர மகோத்சவம் ஆரம்பம். தேவசபை முழுக்க ஜகஜ்ஜோதியா அலங்காரம் பண்ணியிருக்கா. எட்டு திக்குலயும் பாரிஜாத சுகந்தம். முப்பத்து முக்கோடில ரெண்டு பேரைத் தவிர மத்த தேவாளும், மும்மூர்த்திகளும், தேவாசுர குருக்களும், ப்ரத்யேகமா கூப்பிட்ட அசுர கந்தர்வ ராஜாக்களும், சபைல கூடியிருக்கா. பாட்டும் நாட்யமும் களை கட்டிண்டிருக்கு. இந்த்ராணியும், தேவேந்த்ரனும் வந்து மகோத்சவத்தை ஆரம்பிச்சு வைக்கறதுக்காக தேவலோகமே காத்துண்டிருக்கு.

பிரம்மாவுக்கு நாலு முகமோல்லியோ, தலையைத் திருப்பாமலேயே நாலு பக்கமும் சைட் அடிச்சுண்டிருக்கார்.

நேர் எதிர்த்தாப்ல, மன்மதன் ஒக்காந்துண்டிருக்கான். பக்கத்துல ரதி. மல்கோவா மாம்பழம் மாதிரியான அவளோட மார் ரெண்டும் எப்படி அந்தரத்துல நிக்கறது, இடுப்பையே காணோமேன்னுட்டு, எல்லா ஆம்பள தேவாளும் நாக்கைத் தொங்கப் போட்டுண்டு பாக்கறது தெரிஞ்சதும், வேணும்னே ரதியோட தோளைச் சுத்திக் கையைப் போட்டு, மார்ல மார் அப்படி பக்கவாட்ல உரசற மாதிரி, பக்கத்துல இழுத்துக்கறான். பொறாமைல மத்த தேவாள்ளாம் பஸ்பமாறா.

'எல்லாரும் என்னோட சந்ததி, என்னோட கொழந்தேள், ஆனாலும் இப்படி ஒருத்தர ஒருத்தர் சைட் அடிக்கறேளே?'னு நினைச்சுண்டே இடது பக்கம் பாக்கறார் பிரம்மா.

அங்க, விஷ்ணு மகாலக்ஷ்மியோட ஒக்காந்துண்டிருக்கார். தேமேனு சாதுவா ஒக்காந்துண்டிருக்கார்னு நினைக்கறச்சேயே பத்தடி தள்ளி ராமரா சீதை பக்கத்துல ஒக்காந்திண்டிருக்கார். கொஞ்சம் தள்ளி பாமா ருக்மணியோட ஒக்காந்துண்டிருக்கார். இன்னும் சித்த தள்ளி ராதையோட தோள்ல தலையை சாச்சுண்டு இருக்கார். மகாப் பொல்லாதா பத்தடி தள்ளி பாலக்ருஷ்ணரா கோபிகைகளோட சில்மிஷம் பண்ணிண்டிருக்கார். கொடுத்து வச்சவர்னு நினைச்சுண்டு வலது பக்கம் பாக்கறார் பிரம்மா.

யாருடானு பாத்தா நீலகண்டர். மகாதேவன். சிவபெருமான். உம்முனு இருக்கார், பாவம். பராசக்தி மகாதேவி அவரைக் கட்டுப்படுத்தி வச்சிருக்கா. இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பிப் பாத்து சைட் அடிச்சா காளி ரூபம் எடுத்துண்டு பரமசிவனை நடுங்க வச்சு, பெட்டிப் பாம்பா அடக்கி வச்சிருக்கா. கங்கையைக் கூட சைட் அடிக்க முடியலை, தலைக்கு மேலேனா ஒக்காந்திருக்கா? நெத்தியில கண் இருந்து என்ன ப்ரயோசனம், தலைலனா இருக்கணும்? பிரம்மா மனசுக்குள்ள சிரிச்சுண்டு தலையைத் திருப்பாமலே பின்பக்கம் பாக்கறார்.

அங்க என்னடான்னா ஞானோத்சவத்துக்கான ப்ரயத்னங்கள் நடந்துண்டிருக்கு.

நம்ம ஊர்ல சயன்ஸ் எக்சிபிஷன், கண்காட்சிம்பாளே, அதேதான். வந்திருக்கிற தேவ விஞ்ஞானியெல்லாம் அவா அவா கண்டுபிடிச்சதை மத்தவாளுக்கு காண்பிச்சுண்டிருக்கா. ஒரு பக்கம் சுக்ராச்சாரியார் டீம்லந்து விசேஷ ஆயுதங்கள். இன்னொரு பக்கம் ப்ரஹஸ்பதி பாடசாலைலேந்து அஸ்த்ரம், ஆதர்சம், விமானம்னு என்னென்னமோ எடுத்துப் பிரிச்சுப் போட்டிருக்கா. எல்லாரையும் தாண்டி விஸ்வகர்மா ஏகதேசத்துக்கு கண்டுபிடிப்புகளை எடுத்து வச்சுண்டுருக்கார். என்னவா இருக்கும்னு பாக்கறச்சேயே கூட்டத்துல உற்சாக சப்தம் கேக்கறது.

'நாலு முகம் இருந்து என்ன புண்யம், எதுக்காக கோஷம் போடறா, கண்ணுக்கு ஒண்ணும் தெரியலையே'னு பிரம்மா நினைக்கறச்சே, ஆகாச மார்க்கமா பிளிறிண்டே இறங்கறது ஐராவதம்.

மொதல்ல இந்த்ரன் இறங்கறான். தேவராஜாவோன்னோ, கம்பீரம்னா அப்படி ஒரு கம்பீரம். இந்த்ராணியை இடுப்பைப் பிடிச்சு இறக்கி விடறச்சே அவ உடுத்திண்டிருந்த பட்டு சரிஞ்சு அவளோட காலும் தொடையும் தெரியறது. எல்லாரும் 'ஙே'னு பாக்கறா. அவளோ கவலைப்படாம அலட்சியமா, இந்த்ரனுக்கேத்த கம்பீரத்தோட நடந்து வரா. 'ஜே' 'ஜே'னு எல்லாரும் கூச்சல் போடறா. எல்லாரையும் பாத்து இந்த்ரனும் ராணியும் கையசைக்கறா. தேவசபைல கரகோஷம் பிளக்கறது. சில தேவாள்ளாம் விசிலடிக்கறா. தேவராஜனைப் பாத்த சந்தோஷம். எல்லாரையும் சாந்தமா இருக்கும்படி சைகை காண்பிச்சுட்டு, இந்த்ரன் தன்னோட வஜ்ராயுதத்தை எடுத்து அப்படி ஆகாசத்துல ஒசத்தினதும் அதுலந்து வர்ணஜாலமா தீப்பொறி பறக்கறது. உத்சவம் ஆரம்பமாயாச்சு. கோலாகலம்.

மும்மூர்த்திகளுக்கும் ஒரு 'ஹலோ' போட்டுட்டு, ஞானோத்சவ ப்ரதேசத்துக்குப் போறான் இந்த்ரன். மத்த தேவ கூட்டம் வர்றதுக்கு முன்னாடி, இந்த்ரனுக்கு மட்டும் ப்ரைவேட் ஷோ உண்டு எப்பவும். ஒவ்வொரு ஐட்டமா பாத்துண்டு வரான். ப்ரகஸ்பதி பாடசாலைல ஒருத்தன் ஒரு சின்ன பெட்டியை வச்சுண்டு இருக்கான். "என்ன இது?"ங்கறான் இந்த்ரன்.

"திவ்யாதர்சம்"ங்கறான் அந்தப் பெட்டிய காமிச்சவன்.

"புரியும்படியா சொல்லும் ஓய்"னான் இந்த்ரன். திருநெல்வேலியோன்னோ, எல்லாத்துக்கும் ஒரு ஓய் போட்டுடுவார் மாமா. இந்த்ரன் ஓய் போட்டானா தெரியாது.

"தேவராஜா, உங்க கையைக் காட்டுங்கோ"னான் பெட்டிக்காரன். இந்த்ரன் கையைக் காட்டினதும் அந்தப் பெட்டியத் தொறந்து, இந்த்ரன் ஆள்காட்டி வெரல்லே மோதிரம் மாதிரி ஒண்ணைப் போட்டு நன்னா நாலு வாட்டி தேச்சான்.

"இனிமே, நீங்க இப்படி விரலைக் காத்துல கிழிச்சேள்னா ஒடனே கண்ணுக்குத் தெரியாததெல்லாம் தெரியும். இது உங்களுக்காகப் பண்ணினது"னுட்டு இந்த்ரன் கால்ல சாஷ்டாங்கமா விழறான் பெட்டிக்காரன். இந்த்ரனுக்கு இதுல நம்பிக்கையில்லை. இருந்தாலும் படிச்சவாள் ஸ்னேகம் வேணும்னுட்டு பேசாம சிரிச்சுண்டே நகந்து, விஸ்வகர்மாவாண்ட போறான். விஸ்வகர்மா இந்த்ரனோட பேவரட்டாக்கும். போன வருஷம் வஜ்ராயுதம் பண்ணிக் கொடுத்திருந்தான்.

"இந்த வருஷம் என்ன விசேஷம்?"னு கேக்கறான் இந்த்ரன்.

ரெண்டு கையையும் தூக்கி ஒரு பெரிய கும்பிடு போட்ட விஸ்வகர்மா, "தோ பாருங்கோ தேவராஜா"னான்.

விஸ்வகர்மா காமிச்ச எடத்தைப் பாத்தான் இந்த்ரன். நாலஞ்சு செங்கலை சேத்து வச்ச ஹோம குண்டம் மாதிரி சதுரமா ஒண்ணு இருக்கு. நம்ம ஊர் கோவில் சிலதுல த்வஜஸ்தம்பம் பக்கத்துல இதை மாதிரி பாக்கலாம். "என்ன இது?"னு வழக்கமா கேக்கறான் இந்த்ரன்.

விஸ்வகர்மா அதைப் பத்தி விஸ்தாரமா சொன்னான்.

எல்லாத்தையும் பொறுமையா கேட்ட இந்த்ரனுக்கு நம்பிக்கை வரலை. 'சரிதான் இந்த வருஷம் ஞானோத்வசத்ல எல்லாமே ரொம்ப அபூர்வமா இருக்கும் போலிருக்கே?'னு வெளிப்படையா சொல்லாம, விஸ்வகர்மாவை 'ஆகா ஒகோ'னு முகஸ்துதி பண்றான். யாரையுமே பகைச்சுக்கப் படாதில்லையா? அதுலயும் புத்திமான் த்வேஷம் நிந்திதமாச்சே?

எல்லாத்தையும் பாத்துட்டு வெளில வந்த இந்த்ரன், "இனிமே பொது தேவாளுக்கு உள்ளே வர அனுஜ்யை..பர்மிஷன் க்ரேன்டட்"னு கூட வந்த சாதாரண தேவாள்ட்ட சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினான். கொஞ்சம் தள்ளி நின்னுண்டிருந்த பிரம்மாவைப் பாத்து பிரமிச்சுப் போறான். என்னிக்குமில்லாதபடி அப்படி ஒரு தேஜஸ் பிரம்மாகிட்ட ஜொலிக்கறது. என்ன இப்படி ஒரு தேஜஸ்னு பாத்தப்போ, பிரம்மா பக்கத்துல நின்னுண்டிருந்த கன்னிகையைக் கவனிக்கறான் இந்த்ரன்.

அவளைப் பாத்ததும் அவனுக்கு கை கால் உடம்பெல்லாம் வஜ்ராயுதம் பட்ட மாதிரி பொறி பறக்கறது. தேவலோகமே காலடிலேந்து கழண்டு விழுந்த மாதிரி இருக்கு. அப்படி ஒரு அழகியை அவன் பாத்ததே இல்லை. பிரம்மாவுக்கு இத்தனை ரசனையுண்டா? கிழட்டு பிராமணனால இப்படி எல்லாம் கூட படைக்க முடியறதா? அப்படி இப்படினு மனசுல நினைச்சு அவளை மறுபடியும் பாத்துத் திக்குமுக்காடிப் போயிடறான்.

அவளால தான் பிரம்மாவே ஜொலிக்கறார்னு அவனுக்கு இப்போ புரிஞ்சு போச்சு. அவளோட சௌந்தர்யம் அப்படி ப்ரகாசிச்சுண்டு, பக்கத்துல இருக்கறவா எல்லாரையுமே அழகா காட்டிண்டு இருக்கு.

இந்த ஸ்த்ரீயை த்ரிலோகத்துலயும் பாத்ததில்லையேனு அசந்து போறான் இந்த்ரன். ரதி, த்லோத்தமை, ஊர்வசி, மேனகை எல்லாரோட அழகையும் ஒண்ணாக்கி, அதுக்கு மேலே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதியோட லாலித்யத்தைக் கலந்து, மும்மூர்த்திகளோட தேஜசைக் கலந்து, அதுக்கு மேலே அது எல்லாத்தையும் லக்ஷம் மடங்கு பெருக்கினா கூட இத்தனை ரூப லாவண்யம் வருமாங்கறது சந்தேகம்னு அவனுக்குத் தோணறது.

'யாரிந்த சுந்தரி சௌந்தரி நிரந்தரி?'னு நினைச்சுண்டே பிரம்மாவைப் பாத்து வேகமா நடக்கறான். இவன் இப்படி நினைச்சுண்டிருக்கச்சே, அவளும் இந்த்ரனைப் பாத்துட்டா.

பாத்த க்ஷணத்துலயே மனசைப் பறிகொடுத்துடறா. எப்பேர்க்கொத்த அழகன் இவன்! ஐராவதத்துக்குப் பக்கத்துல நின்னா, இவன் தோள் எது ஐராவதம் எதுன்னு புரியாது போல இருக்கே! என்னமா நடந்து வரான்?! சிம்ஹம் மாதிரி அவன் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் 'என்னை எடுத்துக்கோ'னு சொல்லத் தோணறதே! இவனைப் பாத்தப்புறமும் இன்னும் எதுக்கு எல்லாரும் மும்மூர்த்திகளக் கும்பிட்டுண்டு இருக்கா? பார்வைல எத்தனை தீட்சண்யம்?! 'என் மனசை அப்படியே இழுத்துண்டு போறதே, யாராவது தடுத்து நிறுத்துங்கோளேன்'னு படபடத்துப் போறா. ஆனாலும் உள்ளுக்குள்ள சந்தோஷமா இருக்கு. த்விகுண லீலாவா நின்னுண்டிருக்கா.

பிரம்மா சொன்ன விஷயம் ஒண்ணு சட்னு தேவையில்லாம அவளுக்கு ஞாபகம் வரது. இருந்தாலும் இந்த்ரனையே பாத்துண்டிருக்கா.

அதுக்குள்ள இந்த்ரன் பக்கத்துல வந்துட்டான். கண் பிரம்மாவைப் பாத்தாலும், அவன் மனசு மட்டும் அவளையே சுத்திண்டிருக்கு. அவளுக்கும் அவன் தன்னை மானசீகமா பாத்துண்டிருக்கான்னு தெரிஞ்சுடறது. பேனோவிஷன் கேமராங்கறாளே அது மாதிரி அவள் கண் ரெண்டும் அவன் முகத்தை படம் புடிச்சு ப்ரேம் போட்டு மனசுல மாட்டி வச்சுடறது. அவளோட நாடி நரம்பு ஹ்ருதயம் எல்லாம் 'இந்த்ரா இந்த்ரா'னு அடிச்சுக்கறது. பக்கத்துல இருந்தாலும் தொட முடியலையேன்னு நினைச்சுக்கறா.

இந்த்ரன் பிரம்மாகிட்டே ஏதோ பேசிண்டிருக்கறதைப் பாத்துண்டு இருக்கா. திடீர்னு ரெண்டு பேரும் அவ கிட்ட வந்துடறா. இந்த்ரன் அவளைப் பாத்து முகமெல்லாம ப்ரகாசமா புன்னகை பண்றான். அவளும் பதிலுக்கு புன்னகைக்கறா. சாதாரண புன்னகையா? கமலஹாசம்னா! இந்த்ரன் சொக்கிப் போயிடறான்.

பிரம்மா அவள் கிட்டே சொல்றார். "அகல்யா, இவன் தேவராஜன். இந்த்ரன். உன்னைப் பாத்துப் பேசணும்னு சொன்னான்"னு அறிமுகம் பண்ணி வைக்கறார்.

"அகல்யா. த்ரிலோக அழகையெல்லாம் நீ ஒருத்தியே இப்படி எடுத்துண்டா இனிமே வரவாளெல்லாம் அழகுக்கு எங்க போறது?"னு வசனம் பேசறான் இந்த்ரன். தேவ ராஜனோல்லியோ, பேச வராதா?

"சந்தோஷம்"னு ஒரு வார்த்தை சொல்றா. பாற்கடல்லேந்து எடுத்த அம்ருதம் கூட அத்தனை மதுரமா அவனுக்குத் தோணலை. அந்த ஒரு வார்த்தைக்கப்புறம் அவன் எதையுமே கேட்கப் ப்ரியப்படலை. அந்தப் பேரழகியோட மொதல் வார்த்தையே 'சந்தோஷம்'னு வரப்போ, இனிமே எதுக்குப் பேசுவானேன்னு அவன் நினைக்கறான். அவன் நினைக்கறது அவளுக்குப் புரியறது.

பிரம்மா அவளைப் போகச் சொல்றார். "போம்மா, சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கட்டும்"ங்கறார்.

அவளும் தலையசைச்சுட்டு, இந்த்ரனைப் பாத்து "வரேன்"னு சொல்லிட்டுப் போறா.

"சத்யமா வருவியா?"னு அவன் மனசு கேட்டதை அவள் மனசும் கேக்கறது.

அகல்யா போனப்புறம், பிரம்மா இந்த்ரனைப் பாத்து தீர்மானமா பேசறார். "நீ அவளை மறந்துடு. பூலோகத்துல கௌதமர் மகாதவம் பண்ணிண்டு இருக்கார். அவரை இப்படியே விட்டா உன்னோட இந்த்ர பதவிக்கு ஆபத்து வந்துடும். அதனால கௌதமர் முன்னாடி ப்ரசன்னமாகி அகல்யாவை அவருக்கு தாரம் கொடுத்து சேவை செய்யச் சொல்லப் போறேன். உன்னோட பதவி நெலைக்கணும்னா அவளை மறந்துடு"ங்கறார்.

"எனக்கு இந்த்ர பதவி வேண்டாம். அகல்யா தான் வேணும்"னு சொல்றான் இந்த்ரன்.

"நோக்கு இந்த்ர பதவி வேண்டாம்னாலும், எங்களுக்கெல்லாம் நீ தான் ராஜா. அதனால இந்த பதவில நீ இருந்து தான் ஆகணும்.. ஒன்னோட திருவாழத்தான் வேலையை எல்லாம் அவகிட்டே காட்டாதே. அவளை மறக்காம நீ ஏதாவது திப்பிசம் பண்ணினியோ, உனக்கு ரொம்பக் கெடுதல் வரும் தெரிஞ்சுக்கோ"னு உக்ரமா சொல்லிட்டுக் கிளம்பிடறார் பிரம்மா.

அகல்யாவும் பொசுக்னு காணாமப் போயிடறா.

இந்த்ரனுக்கு எல்லாமே வெறுப்பா இருக்கு. இத்தனை நாள் இல்லாம இன்னிக்கு எங்கருந்து வந்து முளைச்சா இந்த அகல்யானு நெனச்சு வேகறான். கொஞ்ச நாளானா சரியாப் போய்டும்னு அவனாவே சமாதானம் பண்ணிக்கறான்.

    கொஞ்ச நாள் ஆறது. இந்த்ரன் அகல்யா ஞாபகமாவே இருக்கான். முன்னை விட மோசமாயிடுத்து. தன்னை மாதிரி அவளும் நினைச்சுத் துடிப்பாள்னு நினைச்சுக்கறான். அப்ப அவனுக்கு திவ்யாதர்ச மோதிரம் ஞாபகம் வரது. அகல்யாவை மனசுல நினைச்சுண்டே கையை ஆகாசத்துல தேய்க்கறான்.

ஆதர்சம்னா கண்ணாடினு ஒரு அர்த்தமுண்டு. இந்த்ரன் கையை அப்படி தேச்சதும், காத்துல கண்ணாடி மாதிரி தெரியறது. பிரமிச்சுப் போய் நிக்கறான். அகல்யாவை மனசுல நினச்சுண்டு எதிர்க்க தெரிஞ்ச காத்து கண்ணாடில பாக்கறான்.

ஹபுல்னு சொல்றாளே.. அதுல பாத்தா ஆகாசத்துல அத்தனையும் க்ளோசப் ஷாட் மாதிரி தெரியுமாமே? அது மாதிரி அந்தக் காலத்லயே வந்தாச்சு பாருங்கோ! இந்திரன் காத்துல தேச்சது அந்தக்கால ஹபுலாக்கும். கூகுல் எர்த் மேப் மாதிரி பூலோகத்துல அத்தனையும் விஸ்தாரமா தெரியறது. சூபர் அமோலெட் டிஸ்ப்லேங்கறாளே.. இந்த்ரன் பார்த்தது அதைவிட சூபராக்கும். இந்த்ரன் ஆள்காட்டி விரலாலே காத்துல டக்கு டக்குனு க்ளிக் பண்றான்.

பூலோகம் தெரியறது. கோதாவரி சுழிச்சுண்டு ஓடறது. சுத்திப் பாக்கறான். கங்காத்வாரம் கிட்ட, கோவம் அடங்கின காதலி மாதிரி, கோதாவரி சாந்தமா ஒடற எடத்துல ஒரு பெரிய தடாகம் பரவி இருக்கு. அல்லி, தாமரைனு எராளமான ஜல புஷ்பங்கள். ஒரு தாமரை ரொமப அழகா இருக்கேனு அவன் கவனிச்சுப் பாக்கறச்சே, அது அகல்யாவோட முகம்னு புரிஞ்சு போய்டறது. அப்புறம் பாத்தா அனேக ரிஷி பத்னிகள் ஸ்நானம் பண்ணிண்டு ஜலத்துல விளையாடிண்டு இருக்கா.

இந்த்ரன் பாத்துண்டு இருக்கச்சே அகல்யா எழுந்துக்கறா. பூமிலேந்து உதிச்ச நிலா மாதிரி அவ எழுந்துக்கறதைப் பாத்ததும் இந்த்ரன் ஆனந்தப் பரவசமாய்டறான்.

முகமும், தோளும், மார்பும், கையும், வயிறும், இடுப்பும், தொடையும், காலும் ஈரம் சொட்டறது. ஸ்த்ரீ லக்ஷண சிற்ப சாஸ்த்ரத்துக்கு எழுதின வ்யாக்யானம் மாதிரி அவ எழுந்துக்கறா. எழுந்து கரைக்கு வரா. ஒரு சின்ன அல்லிப்பூவை கிள்ளி எடுத்து முகத்துலயும் மார்லயும் வச்சுக்கறா. அப்புறம் அந்தப் பூவை எடுத்து ஒரு முத்தம் குடுக்கறா. என்ன தோணித்தோ அப்படியே ஆகாசத்துல வீசறா. பூ ஆகாசத்துல போன இடத்தைப் பாத்துண்டு இருக்கா.

தேவலோகத்துலந்து அந்தப் பூவைப் பாத்துண்டு இருந்த இந்த்ரனுக்கு, பூலோகத்துலேந்து அதே பூவைப் பாத்துண்டிருந்த அகல்யாவோட கண்ணைப் பாத்த மாதிரி தோண்றது. திக்குனு ஆய்டறது. ஒரு வேளை தான் பாத்தது அவளுக்கு தெரிஞ்சு போயிருக்குமோன்னு நினைச்சு சட்டுனு கண்ணை மூடிக்கறான். கண் தொறந்து பாக்கறச்சே கோதாவரியும் தெரியலை. ஸ்வப்ன சுந்தரியும் தெரியலை.

மிச்சக் கதை அடுத்த ப்ரசங்கத்துல.►►

29 கருத்துகள்:

 1. கதை அருமையா போறது
  ரொம்ப காக்க வைக்காம சீக்கிரமா தொடருங்கோ
  ஆவலா கத்திண்டு இருக்கோம்

  பதிலளிநீக்கு
 2. சாதாரண புன்னகையா? கமலஹாசம்னா! இந்த்ரன் சொக்கிப் போயிடறான்.


  அருமையான வர்ணனைகள்.. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. //இந்த்ரன் தன்னோட வஜ்ராயுதத்தை எடுத்து அப்படி ஆகாசத்துல ஒசத்தினதும் அதுலந்து வர்ணஜாலமா தீப்பொறி பறக்கறது. உத்சவம் ஆரம்பமாயாச்சு// அங்கயும் ஃபயர் ஒர்க்ஸா? கலக்கலா இருக்கு சார்.

  பதிலளிநீக்கு
 4. நானும் ஆகாசத்தை அண்ணாந்து பார்த்துண்டு இருக்கேன். அகல்யா எறிஞ்ச அல்லி தெரியுறதான்னு,

  ஜிவ்வுன்னு போகுது கதை.

  பதிலளிநீக்கு
 5. கீதா மாமி, மீனா மாமி, ஶ்ரீராம் இவங்க மட்டும் தான் வந்தாங்களா? மிச்சப்பேரெல்லாம் எங்கே?

  அமர்க்களமாய் இருக்கு உபந்நியாசம். உண்டியல் குலுக்கப் போறது யாரு? :))))) மிச்ச உபந்நியாசமும் சீக்கிரமே ஆகட்டும்.

  பதிலளிநீக்கு
 6. வாசிக்கிறப்போ புரியிறமாதிரி இருக்கு.அப்புறம் தெரியல அப்பாஜி.சாப்பாடு குழைச்சு ரசம் விட்டு சாப்பிடுற வரை நானும் சாப்பிடாமாதிரி ஏப்பம் விட்டேன் !

  பதிலளிநீக்கு
 7. சரி நைனா...பாகதவரு ஃபிளாஷ்பேக்கையே இம்மாம் நீளம் நீட்டறாரே....எப்போ மெயின் பிக்சரு ஓடும்னு கேட்டுச் சொல் நைனா...இந்த அவலிவைக்கு இம்மாம் வர்ணனை வீசறாரே...ஒரு படம் போடக் கூடாதா நைனா...ஸ்மரண யாத்திரைல பாக்கலாம் பேசலாம் வேற ஒண்ணும் தொட கிட முடியாதுன்னு சொல்றானுவளே நிசமா நைனா?

  பதிலளிநீக்கு
 8. என்ன இப்படி..... சுவாரஸியமாச் சொல்லிண்டே வந்து 'டக்'ன்னு நிறுத்திப்புட்டேள்????

  ஒரே ஜாலமான்னா இருக்கு!!!!!

  ம்ம்..... மேலே சொல்லுங்கோ...

  காத்திண்ட்ருக்கோம்.

  பதிலளிநீக்கு
 9. கொழுப்புன்னா கொஞ்ச கொழுப்பு இல்லையா உமக்கு! உருப்படமாட்டீரு! ---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 10. அடுத்த அத்தியாத்திற்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. கலக்கல். தர்ஜம், விளம்பிதம் போன்ற வார்த்தைகள் எனக்குப் புதிது. பருப்பு சாதம் வர்ணனை உடனே சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வந்தது.
  ஸ்ரீராம், வாசகர்களின் கற்பனையைப் படங்கள் குறைத்துவிடுமோ?

  பதிலளிநீக்கு
 12. படிச்சதுக்கும் ரசிச்சதுக்கும் ரொம்ப நன்றி Ramani, இராஜராஜேஸ்வரி, அரசூரான் (ஆளையே காணோமே?), சிவகுமாரன், geethasmbsvm6 (உண்டியல் குலுக்கற சமாசாரம் மறந்தே போச்சுங்க..கதைல சேத்துடறேன்), ஹேமா (அதனால என்னங்க.. நான் எழுதுறது எனக்கே பாதி புரிய மாட்டேங்குது.. விடுங்க, உங்களுக்காக ஒரு கதை எழுதி வச்சிருக்கேன்..), ஸ்ரீராம், துளசி கோபால், kashyapan, தமிழ் உதயம், geetha santhanam (விளம்பிதம்னா விளாம்பழம்னு அர்த்தம். எதுக்கும் அசுவத்தாமன் கிட்டே confirm பண்ணிடறேன்)

  பதிலளிநீக்கு
 13. எங்கிருந்து ஐயா வருகிறது இப்படி அபூர்வக் கற்பனைகளெல்லாம்? அமர்க்களம்;காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. கூண்டை விட்டு வெளியே வந்து ஒவ்வொன்றாக படிக்கலாம் வந்தால் , இந்த ஒரு கதையிலே கட்டி போட்டுட்டிங்களே .... சீரியஸ் மேட்டரை இவ்வளவு சிரியஸா எழுத உங்களால் தான் முடியும் ... அதுலையும் பாகவதய்யர் பாஷையில் இவ்வளவு வார்த்தை பிரவாகம் தொடர்ந்து சொல்லாடுபவர்களுக்கே கிடைக்காது ..இந்த பேச்சு மொழி ,உங்க ஊரில் சுற்றி வர உள்ள கொள கொழா ஆங்கிலத்தில் காணாமல் போகாமல் எப்படி பத்திரமாக இருக்கிறது என்பது அடுத்த ஆச்சர்யம்....

  பதிலளிநீக்கு
 15. சர்தான்பா! எங்க சீயராம் ஐயா சரியா கேட்டுகினாறு. அம்மான் சோக்கா கீற அந்த அவலிவை பட்த மெய்யாலுமே ஒரு தபா பாக்கணும் போல கீதுபா, அஆஆ!
  பாகவதருங்க பாசைல கத சூப்பரா சொல்லிகின! எட்ததுமே டாப் கீர்ல போவுது. அட்த ஷோ எப்போ? எத்தினி மணிக்கு? நான் டயத்துக்கு கரீட்ட வந்துக்கறேன்.

  பதிலளிநீக்கு
 16. வேம்புலியாடிசம்பர் 17, 2011

  திருமதி அகல்யா கெளதம் பற்றி திருமிகு அப்பாதுரை அவர்களின் அகல்யா தொடரின் துவக்கத்தைப் படித்தேன்.

  நம் இதிகாச, புராண கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுமே மனிதத்திற்கு நல் வழி காட்ட பிறப்பிக்கப் பட்டவையே. அகல்யாவும் ஒன்று.

  புராணத்தில் வந்திருப்பது இந்திரன்தான், கௌதமன் இல்லை என்பது 'அப்போதே' அகல்யாவுக்குத் தெரியும் என்ற ஒரு வரி அவள் பற்றிய மதிப்பீட்டைக் குறைத்துக் காட்டுகிறது. இதை மீறிய ஒரு அனுதாபத்திற்கும் அவள் உரியவளாவது நாம் தம்பட்டமடித்துக்கொள்ளும் நம் கலாஹ்சாரத்திற்கு ஒரு பின்னடைவே என்று சொல்லக் கூடாதா?

  ஏகபத்தினி விரதத்திற்கு இராமனும், ஏ.....க' பத்திநிகளுடன் தசரதனும் உலா வரும் இராமாயணமும், அதன் கற்புக்கரசியாக சீதையும், ஐந்து கணவர்களுடன் அழியாத பத்தினியாக வரும் திரௌபதியும் இந்து மதத்தை உயர்த்திக் காடுவனதானா?

  சமீபத்தில் அக்னிஹோத்ரம் தாத்தாசார்யாரின் 'இந்துமதம் எங்கே போகிறது' என்ற புத்தகத்தைப் படித்தபோது நாம் பெருமைப் படவா, வெறுப்புறவா என்ற ஐயங்கள் நிறைய எழுகின்றன.

  இது பற்றி மற்றவர்களும் தங்கள் கருத்துகளைப் பகிரலாமே...

  பதிலளிநீக்கு
 17. வேம்புலி, படிச்சது தான் படிச்சீங்க, தெய்வத்தின் குரல், ரமண சரிதம், போன்றவை படிக்கக்கூடாதோ? ஒருமுறை ஜி.வி.ஐயரின் மஹாபாரதம் திரைப்படம் முழுக்கமுழுக்க சம்ஸ்கிருதத்தில் எடுக்கப்பட்டு, ஆங்கில சப் டைட்டில்களோடு வந்தது. பார்த்தால் திரெளபதி பாத்திரத்தின் தன்மை புரியும். அகல்யை பற்றி இப்போது ஒன்றும் சொல்லப் போவதில்லை.

  பதிலளிநீக்கு
 18. தசரதனுக்கு மூன்று மனைவியர் தான் ஐயா. இல்லைனு சொல்லவில்லை. முதல் மனைவிக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை எனில் அடுத்தாற்போல் வம்சம் வளரத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அரச குடும்பங்களில் எப்போதும் உண்டு. மேலும் எப்போதும் போர், யுத்தம், என்றிருப்பதால் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. ஒரு மனைவி இல்லை எனில் இன்னொருத்திக்குக் குழந்தை பிறந்தால் வம்சம் விருத்தியாகும் என்று தான் திருமணம் செய்து கொள்வார்கள். வெறும் சிற்றின்ப நோக்கத்தில் அல்ல.

  பதிலளிநீக்கு
 19. நன்றி சென்னை பித்தன், பத்மநாபன் (ஆ! அவரா இவர்?),...

  பதிலளிநீக்கு
 20. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேம்புலியா.

  தூண்டிலோடு வந்திருக்கிறீர்கள், சிக்கலாமா வேண்டாமா?.

  ['அப்போதே' அகல்யாவுக்குத் தெரியும் என்ற ஒரு வரி] எங்கே படித்தீர்கள்? புராணத்திலா? (அரைகுறை அறிவுடன் எழுதும் நானே இன்னும் அது போல் எழுதவில்லையே?)

  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புத்தகத்தையும் நான் படித்ததில்லை.

  எனினும், நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகள் சுவாரசியமானவை என்பதை மறுக்கவில்லை. மதத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தமோ, மதத்தால் பெருமையடைய வேண்டிய அவசியமோ, மனிதனுக்கு இல்லை என்பது என் நிலை.

  அடர்ந்த காட்டில் பயணம் செய்கிறோம். காட்டில் அச்சம் ஆச்சரியம் இனிமையிலிருந்து ஒறுப்பு வரை அகரவரிசையில் அனுபவங்களைப் பெறலாம். காட்டை மொத்தமாக அனுபவிக்கத் தெரிந்தால் அது நிறைவாக இருக்கிறது. முள்ளையும் மிருகத்தனத்தையும் மட்டுமே கவனிக்கும் சிலருக்கு காட்டைப் பிடிக்காமல் போகிறது.

  பெருமையோ வெறுப்போ கொள்ளும் வகையில் நீங்கள் என்ன படித்தீர்கள், ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்? சுவையான ஆரோக்கியமான விவாதமாகத் தொடரலாம். அதுவரை, தூண்டில் அழாகாக இருக்கிறது என்று சொல்ல அனுமதியுங்கள் :)

  பதிலளிநீக்கு
 21. மறுமொழிக்கு ரொம்ப நன்றி கீதா சாம்பசிவம். ஜிவியின் சம்ஸ்க்ருதப் படம் பற்றி அடிக்கடி படிக்கிறேன். பார்க்க வேண்டும்.

  'வம்சவிருத்திக்காக செய்து கொண்டார்கள் என்பது சரியான காரணமா?' என்று அடுத்த கேள்வி வரும். அதை உரித்தால் 'பெண்களை இழிவுபடுத்தும் கலாசாரம்' என்பதை உரிக்கலாம். கடைசியில் ஒன்றும் இருக்காது. 'அரசர்கள் எந்த நோக்கத்தில் திருமணம் செய்துகொண்டால் என்ன வந்தது?' என்று கேட்கத் தோன்றுகிறது.

  புராணம் போன்ற exaggerated நிகழ்வுகள் மற்றும் கற்பனைகளை வைத்துக் கொண்டு 'மதம் எங்கே போகிறது', 'மதத்தின் மகிமை' என்று திரிப்பவர்கள் எல்லாம் ஒன்று மிகப் பெரிய ஞானிகளாக இருக்கிறார்கள், அல்லது முட்டாள் விஷமிகளாக இருக்கிறார்கள். ஞானிகள் என்று புரிந்து கொள்ளும் பக்குவம் நம்மில் பெரும்பாலோர்க்கு இல்லை (நிச்சயமாக எனக்கு இல்லை). முட்டாள்களை அடையாளம் காணும் அறிவு நம்மில் பெரும்பாலோர்க்கு உண்டு.

  [அகல்யை பற்றி இப்போது ஒன்றும் சொல்லப் போவதில்லை]னு எழுதியிருக்கீங்களே? பயமா இருக்கே? உங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்கேன். காஞ்சிபுரம் இட்லி குடுப்பீங்களா? இப்படித்தான் இன்னொருத்தர் காபி கொடுத்தே..சரி விடுங்க.

  பதிலளிநீக்கு
 22. வாங்க சைதாப்பேட்டை.. க்கும்.. meenakshi.

  பதிலளிநீக்கு
 23. அது என்னமோ தெரியலை! பதிவுகளிலே வர சமையல் திட்டமே எங்க வீட்டிலே செய்யப் படுகிறது. அன்னிக்கு ஜீவி சார் பாகற்காய் பிட்லை பத்தி எழுதி இருந்தார். அன்னிக்கு எங்க வீட்டிலேயும் பாகற்காய் பிட்லைதான்.

  இன்னிக்குக் காஞ்சிபுரம் இட்லி, கொத்சு! :))))))))

  பதிலளிநீக்கு
 24. ஞானிகள் என்று புரிந்து கொள்ளும் பக்குவம் நம்மில் பெரும்பாலோர்க்கு இல்லை (நிச்சயமாக எனக்கு இல்லை). முட்டாள்களை அடையாளம் காணும் அறிவு நம்மில் பெரும்பாலோர்க்கு உண்டு.//


  கரெக்ட்; இப்போ என்னை அடையாளம் கண்டாப்போல!:)))))))))))

  அவசரமாப் போகவேண்டி இருந்தது; பாதி பின்னூட்டம் தான் கொடுக்க முடிந்தது.

  வாங்க, வாங்க அதான் சொல்லிட்டீங்களே; இங்கே தான் டேரானு! பயந்து ஓட வைச்சுட மாட்டோமா! :))))))))))))

  பதிலளிநீக்கு
 25. நன்றி பத்மநாபன்.

  இந்த மாதிரியெல்லாம் யாருங்க இப்ப பேசுறாங்க? தமிழே பேசுறதில்லே.

  என்னுடைய ட்ரிக் இது. கதையை மொதல்ல எழுதிவச்சுட்டு பிறகு உபன்யாச garnish. அவ்வளவுதான். உ.வே.சாமிநாதரின் 'என் கதை'யிலிருந்து பாதி சொற்களை அபேஸ் பண்ணியிருக்கிறேன். புதுமைபித்தன், பாரதியார், பெரியார் சுயசரிதை (ஹிஹி.. அவரு எத்தனை சம்ஸ்க்ருத சொற்களை உபயோகித்திருக்கிறாருனு பட்டியல் போட்டா உதைக்க வந்துடுவாங்க)யிலிருந்தும் நிறைய சுட்டிருக்கேன்.

  மணிப்பிரவாள நடையே படிப்பதற்கு நெருடலாக இருக்கும். உபன்யாச நடை இன்னும் நெருடல். கலாசார உருமாற்றத்தில் தேய்ந்து போன பல கலைகளில் இது ஒன்று - போதாக்குறைக்கு சம்ஸ்க்ருத/பிராமண பூச்சு அதை அழித்தே விட்டது எனலாம். சிறுவயதில் காலட்சேபம் கேட்கப் பிடிக்கும். இப்பொழுதும் சில நேரம் நெடுந்தூரப் பயணங்களில் சில நேரம் கேட்பேன். ஒரு வரிக்கதையை ஒரு மணி நேரம் சொல்லும் வித்தையில் ஒரு கவர்ச்சி இருப்பதாக நினைக்கிறேன்.

  ஒன்றைக் கவனித்திருக்கிறேன். ஆங்கிலம் போலவே (விட?) சம்ஸ்க்ருத சொற்களின் வளம் பிரமிக்க வைக்கிறது. பல expressionகளுக்கு ஆங்கிலம் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகளில் கிடைக்கும் அளவுக்குத் தமிழில் எளிமையான சொற்கள் கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன். (தமிழ்ப்பற்று அதிகமாயிடுச்சுனு வைங்க.. தமிழ்லந்து சம்ஸ்க்ருதம் வந்துச்சுனு சொல்லிட்டுப் போயிற வேண்டியது தான்.)

  ரசிச்சதுக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. நன்னா எழுதிருக்கேள்...

  நான் ரொம்ப லக்கின்னு நினைக்கிறேன்...

  எப்பவும் லேட்டா வந்து படிச்சுட்டு லேட்டா விமர்சனம் எழுதறதே நேக்கு வேலையா போயிடுத்து...

  கதை படிக்க ஆரம்பிச்சதுமே தோணித்து... சந்தடி இல்லாத சமயமா ஆழ்ந்து படிக்க வேண்டிய கதை அப்பாதுரையோடது....

  இல்லன்னா கிரஹிக்க சிரமமாகும் நேக்கு....

  கதை படிச்சிட்டு எழுதறேன் அப்பாதொர அதுக்காக இப்படி கோச்சிண்டு அந்தப்பக்கம் மூஞ்சிய திருப்பிண்டு இருக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்ப்ப்பா...

  நான் கதைய முழுஷா படிச்சுட்டு எழுதினதும் நேக்கு வாக்கு தாங்கோ நன்னா நேரா முகத்தை வெச்சிண்டு பேசுறேன்னு...

  பதிலளிநீக்கு
 27. நீங்க வைத்த தலைப்பே... கதைல இதைப்பற்றி அப்படி என்ன தான் இருக்குதுன்னு தேடி படிக்கவைக்கிறது...

  ஆரம்பமே அருமையான அசத்தலா தொடங்கி இருக்கீங்க....

  நாம ஒன்னு நினைச்சா நடப்பது என்னமோ வேறமாதிரி இருக்கும் கரெக்டே...

  ஆனா ஸ்மரண யாத்திரை சாத்தியமான்னு கேட்டா.. சாத்தியம் மட்டுமில்ல சத்தியம் கூட அப்டின்னு எங்க சுவாரஸ்யத்தை கூட்டிட்டீங்க...

  இன்னும் படிக்கணும்ற உத்வேகத்தையும் தொடங்கிவிடுகிறதுப்பா...

  அந்த காலத்து பட்டணம்பொடி நல்லா விர்ருனு இருக்கும்....

  மாமனார் இறப்புக்கும் ஸ்மரண யாத்திரைக்கும் அப்படி என்ன தான் சம்பந்தம் இருக்கும்னு எனக்கும் அறிய ஆர்வம் தொடர்ந்தேன்....

  பக்கத்து வீட்ல சாப்பிட கூப்பிட்டாங்கன்னு போய் அங்க சிவில் எஞ்சினியர் வேலையை தாம்பாள தட்டுல காமிச்சார்னு விவரிச்சப்ப ரசித்தேன்....

  லேங்க்வேஜ் கொஞ்சம் புரிய சிரமமா இருந்தாலும் படிக்கும் ஈடுபாடு மட்டும் குறையவே இல்லை....

  படிப்போரின் நாடி பிடித்து எழுதும் வரிகளாச்சே உங்களுடையது... அதுக்கு உங்களுக்கு சல்யூட் அப்பாதுரை....

  என்னது அகல்யா விமோசனம் கதை விவரமே மாத்திட்டாங்களா?

  என்னது சஸ்பென்ஸ் கண்ட்ரோல் பண்ண முடியலை...

  படிச்சு முடிச்சதை பகிராமல் இருக்கவும் முடியலை...

  அதனால் தான் படிச்சவரைக்கும் எழுதிட்டேன்...

  இனி அகல்யை விவரம் மாத்திட்டாங்களா? இருங்க படிக்க போகிறேன்...

  சமஸ்க்ருதம் கலந்த பாஷை கேட்க ரொம்ப நல்லா இருக்குப்பா...

  பதிலளிநீக்கு
 28. ஸ்மரண யாத்திரைக்கும் மாமனார் மரணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கப்போறதுன்னு படிக்கிற எல்லாரையும்போல தான் நானும் நினைச்சேன்...

  ஆனால் சாவுக்கு போய் அங்க பக்கத்து வீட்ல இருக்கும் மாமா அகல்யை விவரமே வேறன்னு சொல்லி கதை சொல்ற விதமே ஆஹா... அதெப்படி இந்திரன் ஓய் சொன்னானா இல்லையானான்னு தெரியாதா? இதைத்தான் அப்பாதுரை டச் என்று சொல்வாங்க தானே?

  சபையை விவரிச்ச விதம் அசந்து போனேன்.. சினிமாக்கெல்லாம் போறது வேஸ்ட் என்னைக்கேட்டால்... ஏன்னா சினிமால என்ன காமிக்கிறானோ அதை தான் பார்க்கவேண்டிய கட்டாயமாகிறது...

  ஆனால் இங்க ஒரு க்ரியேட்டர் (அப்பாதுரை )அருமையா ஒரு சபையை உருவாக்கி தன் சிந்தனைகளை எல்லாம் கற்பனாத்திறனால் (இன்னும் கொஞ்சம் அதான் உபநிஷத் கார்னிஷீங் அப்டின்னு சொல்லிட்டீங்களே...) உருவாக்கி...

  அதென்ன பிரம்மாவுக்கு நாலு தலை இருந்தால் நாலுபக்கமும் சைட்டடிக்கலாமா சந்தடி இல்லாம?

  விஷ்ணுவாக, ராமனாக, க்ருஷ்ணனாக இப்படி பல அவதாரங்களுடன் தன் துணை தாரங்களுடன் ஒருபக்கம்....

  சிவன் மட்டும் உம்முனு இருக்காரா? ஏன்னா சக்தியின் கண்ட்ரோலுக்கு அடிபணிந்து கங்காவை கூட பார்க்கமுடியாம ஏன்னா கங்கை சிவனின் ஜடாமுடியில் சிக்கி இருப்பதாலா?

  ரசிக்கவைத்தது மட்டுமில்லாம வார்த்தைகளை படிக்கும்போதே எனக்கு இப்படி தோணித்து அப்பாதுரை...யப்பா என் கற்பனைத்திறனுக்கு கடிவாளம் போட யாரும் இல்லையான்னு சந்தோஷக் கூச்சல் போடாதா உங்க மனசு?

  அகல்யை பற்றிய விவரங்கள் மைகாட் அப்படியா? அப்படியா? அப்டின்னா அகல்யை கண்டது முதலில் இந்திரனையா?

  இந்திரன் அகல்யையை முதன்முறை கண்டபோதே அவள் திருமணம் ஆகாதவளா ஆஹா....

  இந்திரனைப்பற்றி விவரிக்கும்போது கமலஹாசம்னா அட அட அட என்ன அப்பாதுரை மந்தஹாசம் பழசாயிடுத்துன்னு அழகா இப்படி ஒரு புதுமையா...

  இன்னும் இன்னும் நிறைய புதுமைகள் படிக்கும்போதே... அட உங்க சிந்தனைகளுக்கு ப்ளீஸ் ப்ளீஸ் ரெஸ்ட் கொடுத்துராதீங்க...

  எப்பவும் உங்க சிந்தனைகள் உயிர்த்து கற்பனை வளம் பெருகிக்கொண்டிருந்தால் தான் க்ரியேட்டிவிட்டி தொடர்ந்துக்கொண்டே இருக்கும்...

  எங்களுக்கும் இப்படி அற்புத படைப்புகள் பிறந்துக்கொண்டே இருக்கும்....

  ஆகாசத்துல விரலை கிழித்து கண்ணாடி வரவைத்து அதில் அல்லியை அகல்யை கண்களாக, தாமரை மலர்களில் அகல்யை முகமாக....

  கற்பனையை கண்மூடி நானும் ரசிக்கிறேன்...

  உங்களுடனே இந்த கதையின் ஊடாக பயணிக்கும்போது...

  கதை படிப்பது போல தெரியவே இல்லையே அப்பாதுரை...

  அந்த தேவகன்னிகை அருகில் நின்று நீங்கள் வர்ணித்தவை எல்லாம் தகதகவென்று கண்கள் பறிக்க அகல்யை பற்றிய வர்ணனை கண்கூடாக ரசிக்கிறோமோ என்று தோணவைத்துவிட்டதுப்பா...

  சுவாரஸ்யங்களும் ஆச்சர்யங்களும் தொடரட்டும் அப்பாதுரை...

  அன்பு வாழ்த்துகள் கூடிய நன்றிகள் (நன்றிகள் மட்டும் இறைவனுக்கு) இப்படி ஒரு துருதுரு அப்பாதுரையை இந்த உலகில் படைத்ததற்காக...


  என்னமா எழுதுறீங்க.. என்னமா சிந்திக்கிறீங்க... என்னமா கற்பனைகளை வளர்க்கிறீங்க....


  அடுத்து படித்துவிட்டு சொல்கிறேன்பா...

  பதிலளிநீக்கு