2011/12/11

ஊனம்    சாதாரண நிகழ்வுகள் சில சமயம் எதிர்பாராத உருக்கொண்டு, பேரழிவுக் காரணிகளாவதைக் கவனித்திருக்கிறேன். சோம்பலா.. திமிரா.. தனக்குத் தெரியாததில்லை என்ற ஆணவமா.. முட்டாள்தனமா.. அல்லது உறைந்திருக்கும் பிறவிக் குணமா... ஏதோ ஒன்று கண்ணைக் கட்டிவிடுகிறது.

ரகு.

என் வட்டத்துக்கு வெளியே என்றாலும், சற்று நெருங்கிய நண்பர் என்பேன். தன் பெருமைகளையும் செல்வாக்கையும் அடிக்கடி அபரிமிதமாகவே வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் ரகம். குறையில்லாதவர் எவருமில்லை என்பது என் கட்சி. அதனால் அவரின் சில மிகையான செயல்கள் என்னைப் பாதிக்கவில்லை.

புதிய பிஎம்டப் வாங்கியிருந்தார். உடனடியாக எனக்கு போன் செய்தார். கார் வாங்கியிருக்கிறேன் என்று சாதாரணமாகச் சொல்லாமல், "உங்க காரை விடப் பெரிய பீமர் வாங்கியிருக்கேன். செவன் சீரீஸ்" என்றார்.

"வாழ்த்துக்கள், ரகு" என்றேன்.

"எடுத்துட்டு உங்க வீட்டுக்கு வரேன். எப்படி இருக்குனு பாத்து சொல்லுங்க" என்றார்.

"அதான் வாங்கிட்டீங்களே, இனிமே எப்படி இருந்தா என்னங்க?" என்றேன்.

"இல்ல.. இல்ல.. நீங்க பாக்கணும். லேடஸ்டு மாடல். ஸ்ப்லிட் ஹீடிங்க் கூலிங்க் போட்டோக்ரோமிக் வின்ட்ஷீல்ட் இன்டக்ரேடட் டேஷ்போர்ட் எல்லாம் இருக்குங்க.." என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டு போனார், "இத்தனை வருசமா இருக்கீங்க.. நீங்க கூட வாங்கலை.. உங்க கார்ல இதெல்லாம் இல்லை.. கொண்டு வந்து காட்டுறேன்.." என்றார், என்னை ஏளனம் செய்வது புரியாமல்.

'ஆகா, ஓகோ, உங்க கார் போல இல்லை' என்று சொல்லும் வரை விடமாட்டார் என்பது புரிந்து, "அடடே, அப்படியா? நான் பார்த்ததே இல்லை.. எடுத்துட்டு வாங்க.. உங்க காரைப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு" என்றேன்.

"இதோ கிளம்பிட்டே இருக்கேன். சுசீலாவையும் கூட்டிட்டு வரேன்.. அவ குடும்பத்துல டூ வீலருக்கே ஆனு பிளப்பாங்க.. மொத மொத சொகுசுக் கார்னதும் மயக்கம் வராத குறைதான்.." என்றார்.

"வாங்க, காத்துட்டிருக்கேன் வாங்க" என்றேன். வந்தால் போதும் என்றிருந்தது.

ஒரு மணி நேரம் காத்திருந்தேன். அவர்களைக் காணோம். எனக்குக் கொஞ்சம் வார இறுதி வேலை இருந்ததால் முடித்து விட்டு மாலை நாலு மணி போல் திரும்பி வந்தேன். ரகுவிடமிருந்து செய்தி வந்திருந்தது. அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். "என்ன ரகு, வர முடியலியா? அடடா, உங்க காரைப் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தனே?" என்றேன். மிகைப்படுத்தியிருக்கக் கூடாது.

"நீங்க ஆகா ஒகோனு சொன்னீங்களா.. உங்க கண் பட்டுருச்சா என்னனு தெரியலை.. பாருங்க.. உங்க வீட்டுக்கு வரப்ப ஆக்சிடென்ட் ஆயிருச்சு" என்றார், என்னைப் புண்படுத்துவது புரியாமல்.

பதட்டப்பட்டேன். "ரகு என்ன ஆச்சு.. யாருக்கும் அடிபட்டுச்சா?"

"ஆளுக்கெல்லாம் அடியில்லை. சுசீலாவுக்கு லேசா நெத்தியில அடி.. சரியா உக்காரத் தெரியாம... ஜட்கா ஆளுங்களை லக்சுரிக் காரில் உக்கார வச்சா அப்படித்தான்.. ப்ச.. அவளை விடுங்க, கார் கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சு.. புது வண்டி.. எனக்கு மூட் அவுட்டாகி அதான் உங்க வீட்டுக்கு வர முடியலே"

"எங்க விபத்து? என்ன ஆச்சு? போலீஸ் ரிபோர்ட் கொடுத்தீங்களா? வண்டிய விடுங்க.. இன்சூரன்சுல வாங்கி ரிப்பேர் பண்ணிடலாம்"

"கேல்மட் ரோடுல லெப்ட் எடுத்தனா.. நான் லெப்ட் எடுக்குறது தெரியாம நேரா வந்துட்டான் ஒரு வெள்ளைக்காரப் பொறுக்கி..."

"நேரா வரவங்களுக்குத் தான் வழியுரிமை ரகு.. சரி விடுங்க.. அந்தக் காருக்கு அடிபட்டுச்சா? ஆளுக்கு?"

"நீங்க வேறே.. நல்லா அடிபட்டிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்.. நான் சட்டுனு ப்ரேக் போட்டு நிறுத்திட்டேன்.. லக்சுரி காராச்சே.. அவன் ஏதோ டொயோடா கட்டைவண்டியை வச்சுட்டு மெதுவா வரான்.. இருந்தாலும் அவன் காருக்கு அடி.. டிரைவர் சைட் டோருங்க ரெண்டும் கொஞ்சம் நசுங்கிருச்சு.. போலீஸ் கீலீஸ் எல்லாம் வேணாம்னு அங்கியே செடில் செஞ்சுட்டேன்"

"என்ன ரகு.. இதெல்லாம் சீரியஸ் மேடர் இல்லையா?"

"என் ப்ரெந்ட்ஸ் சர்கிள் கிட்டே கேட்டுத்தான் எல்லாம் செஞ்சேன்.. நீங்க இந்த ஊர்க்காரங்க மாதிரியே பேசுவீங்க.. இன்சூரன்ஸ் புகார் கொடுத்தா பிச்சிக்கும்.. லேசா டச் பண்ணியிருக்கேன்.. அந்த ஆளு ஓகே.. நான் ஐநூறு தரேன்னு சொன்னேன்.. அந்தாளு கூட வந்த அவன் பொண்டாட்டியோ வப்பாட்டியோ கேர்ல் ப்ரெந்டோ.. அவ செஞ்ச கூத்தைப் பொறுக்க முடியாம மேலே இருநூறு டாலர் போட்டுக் கொடுத்து செடில் செஞ்சுட்டு வந்துட்டோம்.. இதுக்குப் போய் போலீசு இன்சூரன்சு.. சுசீலா வேறே பயந்துட்டா.. பொண்ணும் பயந்துடுச்சு.. நோ ப்ராப்லம்.. செடில்ட்..."

நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார். 'உங்களுக்குத் தான் அறிவில்லை, உங்க ப்ரெந்ட் சர்கிளுக்கும் அறிவில்லையா?' என்று கேட்க எண்ணி, "ஓகே, ரகு எந்த சிக்கலும் நேராம இருந்தா சரி" என்றேன்.

"ஒரு பிரச்னையும் வராது" என்றார்.

வந்தது. மறுநாள் காலையில் எனக்கு போன் வந்தது. சுசீலா பேசினார். "அவரைப் போலீஸ்ல பிடிச்சுட்டுப் போயிட்டாங்க.. எனக்கு என்ன செய்றதுனே தெரியலை.. கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?" என்றார், அழுகை கலந்தக் குரலில்.

"இதோ வரேன்.." என்று விரைந்தேன்.

விவரம் தெரிந்த சுசீலா அழுது கொண்டிருந்தார். அருகில் அவருடைய ஆறு வயதுப்பெண் விவரம் தெரியாமல் அழுது கொண்டிருந்தார். முடிந்த வரை சமாதானம் செய்து விவரம் கேட்டேன். அடுத்த பத்து நிமிடங்களில் மூவரும் காவல் நிலையத்தில் இருந்தோம். ஸ்டேப் ஆபீசரிடம் பேசிவிட்டு உள்ளே கமிசனரிடம் நேரே போனோம். கமிசனர் கோடை காலத்தில் வாரா வாரம் மேரதான் ஓட எங்களுடன் பயிற்சி செய்வார். லேசாகப் பழக்கம் உண்டு. என்னைக் கண்டதும் அடையாளம் புரிந்து வரவேற்றார்.

"உங்க ப்ரெந்டா?"

"ஆமாம்.. இவங்க அவரோட மனைவி, மகள்.."

"ஓகே.. லெட்ஸீ.. நேத்து மதியம் இவர் இன்னொரு காரை இடிச்சிட்டு சத்தம் போடாம இடத்தை விட்டு ஓடிட்டாரு. ஹிட் அன்ட் ரன். சீரியஸ் அபென்ஸ்"

"நோ ஆபீசர்.. நேத்தே பேசினோம்.. இன்னொரு காரில் இடிச்சதாகவும் ரெண்டு பார்ட்டியும் ஒத்துகிட்டு, பணம் கொடுத்து செடில் செஞ்சதாகவும் சொன்னாரு.. என்ன சுசீலா.. நான் சொல்றது சரிதானே?"

சுசீலா தலையசைத்தார். "ஆமாம்.. அவங்க ரெண்டு பேருமே சேர்ந்து தான் காசு வாங்கிட்டாங்க.."

"கமிசனர்.. தேர் இஸ் எ மிஸ்டேக்.. விபத்தில சிக்கின அந்தப் பார்ட்டியைக் கூப்பிட்டுக் கேளுங்க.." என்று சொல்லத் தொடங்கிய என்னைத் தடுத்தார் கமிசனர். "அந்தப் பார்ட்டியைக் கூட்டிக் கேக்க முடியாது. ஆளு இறந்துட்டாரு. நேத்து ராத்திரி ஹேட் எ சீஷ்ர்.. வலிப்பு வந்து இறந்துட்டாரு. விபத்துல ஏற்பட்ட விப்லேஷ் காரணம்னு மெடிகல் ரிபோர்ட். பணம் வாங்கிட்டாருனு சொல்றீங்க.. இந்த கம்ப்லெயின்ட் கொடுத்ததே இறந்தவர் மனைவிதான்.. உங்க நண்பரோட கார் நம்பரை நோட் செஞ்சு ஹிட் அன்ட் ரன்னு கம்ப்லெயின்ட் கொடுத்தாங்க.. மேலும், செடில்மென்ட் எல்லாம் இப்ப செல்லாது.. ஹிட் அன்ட் ரன் இஸ் பேட் இன் இட்செல்ப்.. இங்கே மரணம் வேறே ஏற்பட்டிருக்கு.. திஸ் இஸ் வெரி சீரியஸ்" என்றார்.

சுசீலா அடக்க முடியாமல் அழத் தொடங்க, இன்னொரு ஏஜன்டை அழைத்து சுசீலாவைத் தனியறைக்கு அழைத்துப் போகச் சொன்னார். "விபத்து ஏற்பட்டா போலீஸ் புகார், இன்சூரன்ஸ் புகார் எல்லாம் செய்யணும்னு ஒரு காமன் சென்ஸ் கூட இல்லாம இருந்திருக்காங்க.. போத் பார்டீஸ்.. மரணம் ஏற்பட்டது பேட் லக்" என்றார் என்னிடம். "வி ஸீ திஸ் ஆல் த டைம்.. உங்க ப்ரெந்டுக்கு ஒரு நல்ல லாயரா பாருங்க" என்றபடி என்னை ரகுவிடம் அழைத்துப் போனார்.

பேயறைந்தது போல உட்கார்ந்திருந்த ரகுவுக்கு என்னைப் பார்த்ததும் அவமானமாக இருந்தது. ஆனாலும் உடனே வாயைத் திறந்தார். "நீங்க சொன்னது சரியாப் போச்சு.. கரி நாக்கு.. எந்த நேரத்தில அப்படிச் சொன்னீங்களோ..".

கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாமல் பேசும் ரகுவுடன் எப்படி என்னால் நட்புடன் பழக முடிகிறது என்று ஒரு கணம் தோன்றினாலும், புன்னகை செய்தேன். "வி வில் கெட் சம் ஹெல்ப்"

என்னுடையத் தனிப்பட்ட உத்தரவாதத்தின் பெயரில், பத்தாயிரம் டாலர் ஜாமீன் கட்டியதும் ரகுவை என்னுடன் அனுப்பினார்கள். "வாலென்டரி ஹவுஸ் அரெஸ்ட்" என்றார் கமிசனர். "ஹானர் கோட். உங்க சிடிசன்ஷிப் பெயரில் இவரை அனுப்புறோம்.. மேலும் இன்னிக்கு சன்டேன்றதுனால இங்கே இடம் எதுவும் கிடையாது இவரை அடைச்சு வக்க.. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கோர்ட் ஹியரிங்.. கெட் எ குட் அடர்னி.. குட் லக்".

ரகுவை வீட்டில் இறக்கிவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு நல்ல வக்கீலுடன் வருவதாகச் சொல்லிவிட்டு, சுசீலாவையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். ஞாயிற்றுக்கிழமை வேறு. ஒரு பயலையும் லேசில் பிடிக்க முடியாது என்ற எண்ணத்துடனே சில நண்பர்களை அழைத்தேன். அங்கே இங்கே பேசி நண்பருக்குத் தெரிந்த ஒரு வக்கீலைப் பிடித்தேன். தெரிந்த விவரங்களைச் சொல்லி உதவி கேட்டேன். மறுநாள் காலை தன் அலுவலகத்தில் வந்து பார்க்கச் சொன்னார். ரகு வண்டியின் சில புகைப்படங்களை உடனடியாக எடுக்கச் சொன்னார். அவர் கேட்டச் சம்பளம் சற்று மிகையாகத் தோன்றியது. ரகுவிடம் அனுமதி கேட்டபின் மறுபடியும் அழைப்பதாகச் சொன்னேன்.

ரகுவின் வீட்டுக்குப் போனபோது மதியம் மூன்றரை இருக்கும். ரகுவைக் காணோம். "என்ன சுசீலா, எங்கே உங்க கணவர்?"

சுசீலாவின் பதில் என்னை உறுத்தியது. "அவரோட நண்பர்கள் ஸ்ரீகுமாரும், கிரணும் வந்திருந்தாங்க.. ரொம்ப நேரம் பேசினாங்க. ஸ்ரீகுமாருக்கு நல்ல வக்கீல் ஒருத்தர் தெரியும்.. வீடு வாங்கினப்ப கூட அந்த வக்கீல்தான் பேபர் வொர்க் எல்லாம் செஞ்சாராம்.. அவர் கிட்டே கேக்கலாம்னு கூட்டிட்டுப் போனாரு."

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'ஏம்மா.. அப்ப அவங்க கிட்டயே காலைல உதவி கேட்டிருக்கலாமே?' என்று கேட்க எண்ணி, "சுசீலா.. ரியல் எஸ்டேட் லாயருக்கு இந்த மாதிரி மேடரை டீல் பண்ண முடியுமானு யோசிச்சீங்களா?" என்றேன்.

"அவருக்குத் தெரியும்.. ஸ்ரீகுமார் ரொம்ப பழக்கம்ன்றதுனால போனாரு"

"லிசன்.. மொதல்ல் ஜாமீன் எடுத்துட்டு வந்தது நான். அதுக்கு மேலே ஹவுஸ் அரெஸ்டுனு கமிசனர் ரெண்டு மூணு தடவை சொல்லியிருக்காரு. செவ்வாய்க்கிழமை கோர்ட் ஹியர்ங் முடியற வரைக்கும் ரகு வீட்டை விட்டு வெளியே போகவே கூடாது.. என்னோட தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் அவரை வெளிய விட்டிருக்காங்க.. நீங்க இப்படி நடந்துக்கலாமா? இப்ப எதுனா ஆச்சுனா ஹி வில் பி ஜம்பிங் பெயில்.. அது இன்னொரு குற்றம்" என்றேன், முடிந்தவரை என் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு. கடவுளே, எல்லாவற்றுக்கும் ஒரு அளவு வைத்தது போல் முட்டாள்தனத்திற்கும் ஒரு அளவை வைக்காதது ஏன்?

"நான் சொன்னா கேட்டாத் தானே?" என்றார் சுசீலா. கேட்டதுடன் தன் பங்கு முடிந்து விட்டது என்ற பொறுப்பற்ற மனப்பான்மை. இயலாமையில் தஞ்சம் புகும் திமிர்.

"சரி.. ரகு வரவரைக்கும் இங்க இருந்தா உங்களுக்கு ஆட்சேபணையில்லையே? அவரோட வண்டி போட்டோஸ் வேணும்னாரு வக்கீல். அதோட செலவும் அதிகமாகும் போலத் தோணுது.. ரகு கிட்டயே பர்மிசன் வாங்கி அதுக்குப் பிறகு.." என்று நான் சொல்லும் பொழுது இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள். என்னைப் பார்த்ததும் சற்றுத் தயங்கி, பிறகு நான் கவனித்தது தெரிந்து தயக்கம் தொலைத்தார்கள். ஒருவரை முன்பு பார்த்திருக்கிறேன். "ஸ்ரீ" என்று என் கையைக் குலுக்கினார். "திஸ் இஸ் கிரண்".

"ரகு எங்கே?"

"சுசீலா சொல்லலியா உங்க கிட்டே?"

சுசீலாவைப் பார்த்தேன். தலைகுனிந்தார். "மன்னிச்சிருங்க.." என்றார்.

"வாட் இஸ் ஹேபனிங்?" என்றேன் சற்றுக் குரலை உயர்த்தி.

"ரகு இந்தியா போயிட்டாரு. இப்பத்தான் ப்ளேன்ல ஏத்திட்டு வரோம்.. திஸ் இஸ் நோ ப்லேஸ் பார் ஹிம்"

"வாட்?" என்னால் எரிச்சலை அடக்கவே முடியவில்லை. "ஏன் இப்படிச் செஞ்சீங்க?"

"ஆமாங்க.. இதெல்லாம் ரேசிஸ்ட் மோடிவேசன். செடில் ஆயிருச்சு, அதுக்குப் பிறகு இந்த மாதிரி கம்ப்லெயின்ட் கொடுத்தா பின்னே எப்படி? இந்டியன்ஸ்னா என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நெனச்சிடராங்க"

"வாட்?" எனக்கு அதற்கு மேல் எதுவும் தோன்றவில்லை.

"நாங்க ரொம்ப நேரம் பேசித்தான் இந்த முடிவுக்கு வந்தோம்.. ரகு மெட்ராஸ் போயிட்டாரு. சுசீலாவும் குழந்தையும் பேங்க் அகவுந்ட் எல்லாம் மூடி செடில் செஞ்சிட்டு நாளைக்குப் போறதா ப்ளான்"

"வாட்?"

"இட் இஸ் ஓகே சார். இது எங்க பிரச்சினை..வி வில் டேக் கேர்"

அந்தக் கணத்தில்தான் எனக்குக் கோபம் வந்தது. "இது ரொம்ப சீரியஸ் மேடர்.. இது எவ்வளவு பெரிய குற்றம்னு உங்க ரெண்டு பேருக்கும் புரியலியா? இந்தம்மா.. இந்தச் சின்னப் பெண்.. இவங்க நிலமையை நினைச்சுப் பாத்தீங்களா? கோர்ட்டுக்கு வராம இருந்தா ஹி வில் பி அட்மிடிங் கில்ட். அதுக்கு மேலே ஊரை விட்டு ஓடிட்டாருனு தெரிஞ்சா பியூஜிடிவ் கேஸ் வேறே. சாதாரண விபத்தை இப்ப இன்டர்னேசனல் ப்யூஜிடிவ் நிலைமைக்குக் கொண்டு வந்துட்டீங்களே? நீங்கள்ளாம் உண்மையிலேயே நண்பர்கள் தானா? ரகு தப்பிப் போனதுக்கு நீங்களும் உடந்தை, புரியுதா? இட் இஸ் பாசிபில் தட் யு வில் ஆல் பி அரெஸ்டட்"

அவர்களும் ஆடிப்போனார்கள். "சாரி சார்.. இப்ப என்ன செய்யலாம்? தெரியாம நடந்து போச்சு."

"ஐ டோன்ட் நோ" என்றபடி, என் ரன்னிங் க்ளப் நிர்வாகியுடன் தொடர்பு கொண்டேன். அவர் கமிசனரின் வீட்டு எண்ணைக் கொடுத்தார். கமிசனருடன் பேசினேன். எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. என் அவமானத்தை விட ரகுவின் நிலமை பெரிதானதால் அமைதியாக கமிசனரின் திட்டுக்களை கேட்டுத் தலையசைத்தேன். பேசி முடித்த பிறகு மெள்ள சுசீலாவிடம் பேசினேன்.

"இதோ பாருங்க சுசீலா. ரகுவை பெயில் ஜம்பர்னு முத்திரை குத்திட்டாங்க. அது ஆபத்து. என்னோட தனிப்பட்ட உத்தரவாதம் ஒரு வாரம் வரைக்கும் செல்லும்னு கமிசனர் சொன்னாரு. அதுக்குள்ள ரகுவைத் திரும்ப கூட்டியாறணும். கோர்ட் ஹியரிங் ஒரு வாரம் தள்ளிப் போடறதா இருந்தாங்களாம், அதனால இட் மே வொர்க் அவுட்னு கமிசனர் சொன்னாரு. எப்படியிருந்தாலும் ரகுவுக்கு பெயில் ஜம்பர் ஸ்டேடஸ் தான். ஒரு வேளை கேஸ் நடந்து அவருக்கு எதிரா தீர்ப்பானா, குற்றவாளி ஸ்டேடசும் சேந்துக்கும். இந்த நிலமையில, விபத்து நடந்ததை ரெண்டு பார்ட்டியும் உடனே புகார் கொடுக்காதது மட்டுமே ரகுவுக்கு சாதகமா இருக்கு.. அவரு ஊரை விட்டு ஓடிட்டாருனு தெரிஞ்சதும் அந்த சாதகமும் போயிரும். ப்லீஸ், உடனே அவரைத் திரும்ப வரவழைங்க.. தேவைப்பட்டா டிகெட் செலவை நான் குடுத்துடறேன்.. இல்லீன்னா, நானே அடுதத ப்ளேன்ல போக வேண்டியிருக்கும்.. என்னோட பத்தாயிரம் டாலர் தொலைஞ்சு போனா பரவாயில்லை, ஒரு குற்றம் நடக்க நான் உடந்தையா இருக்க விரும்பலே, புரிஞ்சுக்குங்க" என்றேன்.

சுசீலா தலையாட்டினார், "புரியுது". என்ன புரிந்ததோ! "கவலைப்படாதீங்க.. நாளைக்கு மதியம் போன் பண்ணி அடுத்த ப்ளேன்லயே ரகுவைத் திரும்பச் சொல்லிடுறோம்" என்றார் ஸ்ரீ.

'கடவுளே, முட்டாள்களிடமிருந்து இந்த உலகத்தைக் காப்பாற்று' என்று வேண்டியபடி அங்கிருந்து விலகினேன்.

மறுநாள் மதியம் அவர்கள் வீட்டுக்குப் போனபோது வீடு பூட்டியிருந்தது.

    து நடந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் சென்னை போயிருந்த போது ரகுவைச் சந்தித்தேன். பனகல் பார்க்கில் ஒரு புத்தகக் கடையைத் தேடிக் கொண்டிருந்த போது எதிர்ப்பட்டார். என்னைக் கண்டுத் திடுக்கிட்டாலும் சுதாரித்தார். நானும்.

அதிர்ச்சிகள் விலகிச் சுமுகம் லேசாக எட்டிப் பார்த்தது.

புத்தகக் கடையைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னேன். கூடவே வந்து அடையாளம் காட்டினார். பொன்னேரி, வேளச்சேரி, அனகாபுத்தூர், போரூர் என்று நாலைந்து இடங்களில் ஒரு செயின் ரெஸ்டராந்ட் நடத்துவதாகவும் வியாபாரம் அமோகமென்றும் சொன்னார். ரெஸ்டராந்ட் பெயர் சொல்லி அவசியம் சாப்பிட வரவேண்டும் என்றார். கோயமுத்தூரில் ஒரு ஐடி கம்பெனி தொடங்கியிருப்பதாகவும் அடுத்த ஐந்து வருடங்களில் நூறு கோடிக்கு மேல் வருமானம் வரும் என்றும் அளந்தார். பழைய கதை எதுவுமே பேசவில்லை. அப்படி ஒரு கதை இருப்பதாகவே ரகுவின் பேச்சில் தோன்றவில்லை. என் மனதுக்குள் ஓரமாக ஒதுங்கியிருந்த ஏமாற்றமும் வலியும் விழிப்பது போலத் தோன்றவே, ரகுவிடம் அவசரமாக விடை பெற்றேன்.

போரூரில் என் மாமா வீட்டுக்குப் போனபோது, அருகே ரகுவின் ரெஸ்டரான்ட் இருப்பதைக் கவனித்தேன். மாமாவுடன் அங்கே சென்று சாப்பிட்டேன். கூட்டமான கூட்டம். ரகுவைக் காணோம். "இந்த ரெஸ்டராந்ட் ஓனரை எனக்குத் தெரியும்" என்றேன் மாமாவிடம். அர்த்தமற்றப் பெருமை என்பது உடனே புரிந்தது. இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை.

    போன வாரம் மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். "டேய், உன்னோட ப்ரெந்ட்.. அதாண்டா ரெஸ்டராந்ட் ஓனர்... அவனைப் போலீஸ் தேடுதுதுடா" என்றார். "ரெஸ்டராந்ட் வியாபாரத்தில் தில்லுமுல்லாம்...ஏதோ பொய் சொல்லி எசகு பிசகா மாட்டிக்கிட்டானாம்..அவனோட தப்பே இல்லைனு பேசிக்கிறாங்க.. ஆனாலும் ஆள் அப்ஸ்காந்ட் ஆயிட்டானாம்".

'தப்பு அவன் பேரில் தான், எனக்குத் தெரியும்' என்று சொல்லத் தோன்றியது. "ஊனத்தை குணப்படுத்த முடியாது" என்றேன்.

"என்னடா.. நான் என்னவோ சொல்லுறேன்.. நீ என்னவோ சொல்லிட்டிருக்கே? யாருக்கு ஊனம்?" என்றார் மாமா.

31 கருத்துகள்:

 1. சில மன ஊனக் காரர்களால் நான் பட்ட
  அவதிகளை நினைவூட்டிப் போனது பதிவு
  படிக்கையில் கதையாகத் தோணவில்லை
  ஒரு நிகழ்வினை நேரடியாகப் பார்ப்பது போல் இருந்தது
  மனம் கவர்ந்த பதிவு

  பதிலளிநீக்கு
 2. அடடா..... என்ன சொல்றதுன்னே தெரியலை......அருமை!

  நடை சும்மா.... சல்லுன்னு போகுது. இனிய பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. அற்புதமான கதை சார்! ரகு போல “எல்லா தெரிஞ்சவர்கள்” நிறைய பேர் சுத்திக்கிட்டுருக்காங்க...

  வழக்கம் போல படிக்க ஆரம்பிச்சா நடுவில நிறுத்தமுடியாத நடை! :-))

  பதிலளிநீக்கு
 4. இந்த மாதிரி உதவி செய்யறவனோட மதிப்புத் தெரியாம நடந்துக்கற ஜென்மங்கள் நிறைய இருக்காங்க. பேசும் போது நம் வார்த்தை மற்றவரிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூட யோசியாமல் பேசுபவர்களையும் பார்த்திருக்கிறேன். மிகச் சரளமான எழுத்து நடை கதையை துவக்கத்திலிருந்து முடிவு வரை ஒரே மூச்சில் படிக்க வைத்தது. பிரமாதம் சார்!

  பதிலளிநீக்கு
 5. அப்பாதுரை அவர்களே!( நீர் உம்ம கமிஷனர் நண்பருக்கு ராவோட ராவா தகவல் சொல்லி சென்னைக்கு தகவல் வந்து பெயில் ஜம்பரை அமெரிக்க போலிஸ் சார்பில் சென்னை போலீஸ் பிடிப்பதாக நினைக்கும் போதே ) அந்த hyabitual offender வேற கேசுல மாட்டிக்கிட்டான் .நல்ல டிவிஸ்ட்.---kaaSyapan

  பதிலளிநீக்கு
 6. 'பாத்திரம் அறிந்து பிச்சை இடு' அப்படின்னு பெரியவங்க சரியாதான் சொல்லி இருக்காங்க.
  ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. கதை ரெம்ப பிடித்திருந்தது. நடை சிறப்பாக.

  பதிலளிநீக்கு
 8. Neatly written. முதலில் ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பி பார்த்திருக்கலாமே?

  பதிலளிநீக்கு
 9. ஜாமீனுக்கு நின்னவரோட நிலை என்னாச்சோன்னுதான் ஒரே யோசனையா இருந்துது. ரொம்பக் கஷ்டப்படலையே அவர்?

  பதிலளிநீக்கு
 10. வெட்டி பந்தா பார்ட்டிகளிடம் விலகி இருப்பதே உத்தமம். கதை சொன்ன விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 11. நல்லா எழுதியிருக்கீங்க அப்பாதுரை. கதை என்றாலும் என்னை பாதித்து மூட அவுட் ஆக்கிவிட்டது. தூக்கம் வராது போலிருக்கு எனக்கு. என்னா கேரக்டர்ஸ்! தன் காரியம் தவிர எதையுமே பொருட்படுத்தாத ஜன்மம் ரொம்ப அவஸ்தை. என் குடும்பத்துலயும் அலுவலகத்திலேயும் நிறைய பேர் இருக்கிறாங்க. கணேஷ் அவர்கள் சொல்லியிருப்பது போல அடுத்தவங்க மனம் பாதிக்குமே என்று நினைக்காமல் பேசும் கூட்டமும் காரியம் ஆனதும் கழண்டு கொள்ளும் கூட்டமும் தான் செய்வது எத்தனை மோசமான காரியம் என்பதே புரியாமல் செய்யும் கூட்டமும் தினம் நிம்மதியைக் கெடுக்கும். அவர்களுக்குத் தான் ஆண்டவன் வழியும் காட்டுகிறான்!! எழுதிட்டு உங்களால எப்படித் தூங்க முடியுதோ!

  பதிலளிநீக்கு
 12. எத்தனையோ விதமான மனிதர்களில் இவர்களும் ஒரு விதம்.என்ன விதமாக இருந்தாலும் அடுத்தவர்களுக்குக் கரைச்சல் தராமல் இருந்தால் எவ்வளவு நல்லது !

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி Ramani, துளசி கோபால், ஸ்ரீராம்., RVS, கணேஷ், kashyapan, meenakshi, தமிழ் உதயம், மோகன் குமார், ஹுஸைனம்மா, மாலதி, geetha santhanam, ராமசுப்ரமணியன், ஹேமா, ...

  பதிலளிநீக்கு
 14. மிகத்தீவிரக் குற்றமாக இருந்தாலொழிய (drug trafficking, terrorism, pornography) சர்வதேச அளவில் போலீசாரோ FBIஐயோ ஒத்துழைப்பதில்லை. hit and run உள்ளூரில் பெரிய குற்றமே தவிர, ஓடிப்போய் விட்டால் அனேகமாகத் தேடி வரமாட்டார்கள். (யாராவது தலைவரை hit and run செய்தாலொழிய). அதனால் கதையை வளர்த்தவில்லை. உங்கள் கருத்து இன்னொரு கதைக்கான ஐடியா கொடுத்தது kashyapan, நன்றி.

  பதிலளிநீக்கு
 15. ஜாமீன் கொடுத்தவர் பாடு திண்டாட்டம் தான் ஹூசைனம்மா.

  பதிலளிநீக்கு
 16. இமெயிலுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ராமசுப்ரமணியன். உங்களை இப்படிப் பாதித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
  இது வெறும் கற்பனைக் கதை. பொருட்படுத்தாமல் தூங்க வேண்டுகிறேன் :)

  பதிலளிநீக்கு
 17. இந்த மாதிரி நண்பர்களின் தகுதி தெரிந்தும் அளவுக்கு மீறி உதவுவதும் ஒருவகை ஊனமோ என்று சந்தேகமாக இருக்கிறது.
  :-|

  பதிலளிநீக்கு
 18. அதுவும் சரி, பாலராஜன்கீதா. உதவி செய்தபின் 'விளைவினால் அல்லாடுகிறோம்' என்று எண்ணினால் அது ஊனமோ என்று தோன்றுகிறது.(நீங்கள் சுட்டிக் காட்டிய பின்னர் :).

  நான் முதலில் இங்கே இறங்கிய போது என்னை ஏற்று ஆதரவு கொடுத்தத் தமிழ்க் குடும்பம் நினைவுக்கு வருகிறது. அந்நாளில் வந்திறங்கிய மாணவக் கூட்டத்துக்கு இருக்க இடமும் உணவும் சில நேரம் குளிருக்கு இதமாக ஸ்வெடர் மேலங்கி வகையறாவும் கொடுப்பார்கள். வேலையோ காசோ இல்லாமல் மேல்படிப்பை நம்பி வந்தக் கூட்டம் என்பதால் எதற்கெடுத்தாலும் பேந்தப் பேந்த விழிப்போம். அவர்கள் வீட்டுக்கு போன் செய்ய பத்துகாசு சில சமயம் இருக்காது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை ஒரு வோக்ஸ்வேகன் வேனில் (சினிமாவில் வருவது போல) எங்களைக் கல்லூரியிலிருந்து அழைத்துக்கொண்டு போய் அவர்கள் வீட்டில் வார இறுதி முடியும் வரை தங்கவைப்பார்கள். சாப்பாடு, அரட்டை, விளையாட்டு என்று பொழுது போகும். இந்தியாவுக்கு போன் செய்ய அநியாயமாக காசு பிடுங்கும் அன்றைய ஏடிடி. ஆளுக்குப் பத்து நிமிடம் கணக்கு போட்டு இந்தியாவுடன் பேச அவர்கள் வீட்டுப் போனை உபயோகிக்க அனுமதி கொடுப்பார்கள். வீட்டையும் நாட்டையும் பிரிந்த ஏக்கம் சற்று வடியும். எந்த உதவி கேட்டாலும் தயங்கவே மாட்டார்கள். ஒரு டாலர் ரெண்டு டாலர் என்று எத்தனை கடன் வாங்கியிருக்கிறேன் என்று நினைத்தாலே சுமையாக இருக்கிறது!

  ஒரு சனிக்கிழமை அவர்கள் வீட்டுக்குப் போலீஸ் வந்தது. ஒரு பிஎச்டி மாணவன் பிடிபட்டான். அவர்கள் வீட்டு கராஜில் குழி தோண்டி கோகெயின் புதைத்து வைத்துவிட்டு, வாராவாரம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்து கல்லூரியில் விற்றுக் கொண்டிருந்திருக்கிறான். எங்கள் யாருக்குமே தெரியாது. குடும்பத்தாருக்கு நிச்சயமாகத் தெரியாது. அந்த மாணவருக்கு ஜாமீனும் வக்கீல் செலவும், விசா இழந்தபின் திரும்ப இந்தியா செல்லும் வரை இடமும், கொடுத்த அந்தக் குடும்பத்தை ஊனமென்று சொல்ல முடியவில்லையே?

  பதிலளிநீக்கு
 19. ///'கடவுளே, முட்டாள்களிடமிருந்து இந்த உலகத்தைக் காப்பாற்று' என்று வேண்டியபடி அங்கிருந்து விலகினேன். ////

  அருமையாக இருக்கிறது ஐயா...

  ஹ..ஹ... ஐயா நான் சில தடவையில் நகைச்சுவையாக கடவுளையே இப்படி நினைப்பதுண்டு..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்

  பதிலளிநீக்கு
 20. நடுவே நிறுத்த முடியாதபடி விறுவிறுப்பாய் போகும் கதை. எங்கே போலீஸ் உங்களை ( narrator ஐ ) உள்ளே தள்ளி விடுவார்களோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.

  நீங்கள் மனிதர்களை நிறையவே படித்திருக்கிறீர்கள் அப்பாஜி.

  பதிலளிநீக்கு
 21. அருட்கவியில் ஐயப்பன் பாடல் கேட்டீர்களா அப்பாஜி ?

  பதிலளிநீக்கு
 22. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
  நன்னயம் செய்து விடல் .
  அந்த மாணவன் நாணினானா?

  பதிலளிநீக்கு
 23. நன்றி ♔ம.தி.சுதா♔, சிவகுமாரன், ...

  அந்த மாணவர் என்ன ஆனார் என்று தெரியாது. பிரபல தொழிலதிபரின் பேரன் என்பது பின்னால் தெரிந்தது. பிஎச்டி வரை படித்துவிட்டு.. எப்படி வழிதவறினார் என்று சில நேரம் பேசுவோம். மாணவரை ஆறு மாதங்களில் மறந்துவிட்டோம் :)

  ஜாமீன் கொடுத்தவர் மிகவும் அல்லல்பட்டார். அவர் வீட்டில் கோகெயின் பிடிபட்டதால் அவர் தான் முதல் குற்றவாளி - போலீஸ் கண்ணோட்டத்தில். இரண்டு வருடங்களுக்கு மேல் போலீஸ் கோர்ட் என்று அலைந்தார். தேவையில்லாத விளம்பரம் வேறே! அந்த நிலையிலும் மாணவருக்கு பாதுகாப்பு கொடுத்தது தான் வியப்பு. 'சரியான கேனை சார் நீங்க!' என்பேன். 'அப்படியா?' என்பார். அத்தோடு சரி. (போனஸ்: அவருடைய மரணம் தான் நசிகேத வெண்பாவின் வித்து)

  பதிலளிநீக்கு
 24. அதிசய மனிதர்.
  அவர் பொருட்டுத் தான் எல்லோர்க்கும் பெய்கிறதோ மழை ?

  பதிலளிநீக்கு
 25. அப்பாதுரைஅவர்களே ! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் . தமிழ்நாட்டின் பிரபலமான குடும்பம்.மாப்பிள்ள பெரிய தொழிலதிபர் வீட்டு பேரன். கஞ்சா பேர்வழி. விவாகரத்து ஆகிவிட்டது.மாப்பிளை பேயர்---ஆத்தாடி.......! ஆட்டொவில ஆள் வந்துரும்.! சொல்றதுனா நீர் சொல்லும் ---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 26. என்னமா விவரம் சேர்த்து வைத்திருக்கீங்க! investigative journalist என்பது அப்பட்டமாகப் புரிகிறது kashyapan சார்.

  நீங்கள் குறிப்பிடும் தொழிலதிபர் யாரென்று தெரியாது. நான் சொல்வது நடந்து இருபது வருடங்களுக்கு மேலாகின்றன. நான் குறிப்பிட்டிருப்பது அன்றைய தமிழ்நாட்டில் பெரிய தொழில் குடும்பம். RVSக்குத் தெரிந்திருக்கலாம். ரெண்டு வீடு தள்ளியிருப்பவராச்சே?

  பதிலளிநீக்கு
 27. உதவி செய்துவிட்டு இப்படி மாட்டிக்கொண்டு விழிப்பவர்கள் நிறையப் பேர். எதிராளிகளுக்கு அது புரியாமல் போவது அவங்க சுயநலத்தை மட்டுமே நினைப்பதுதான். மத்தவங்களைப் பத்தி யோசிக்கிறதில்லை. அருமையான ஓட்டம்.

  எப்படி இதைக் கவனிக்கலை?? அப்டேட் ஆகலையோ?

  பதிலளிநீக்கு
 28. நான் குறிப்பிட்டிருப்பது அன்றைய தமிழ்நாட்டில் பெரிய தொழில் குடும்பம். RVSக்குத் தெரிந்திருக்கலாம். ரெண்டு வீடு தள்ளியிருப்பவராச்சே?//

  தலை வெடிச்சுடும் போலிருக்கே! யாராயிருக்கும் அது?? :))

  பதிலளிநீக்கு
 29. ரொம்ப நன்றி கீதா சாம்பசிவம்.
  விடாதீங்க.. கண்டுபிடிச்சே தீருங்க..
  (இதெல்லாம் சகஜம்.. முன்னெல்லாம் இந்திய செல்ப்ரிடி குடும்பங்களிலிருந்து வருவோர் என் போன்ற ஒன்றிரண்டு சராசரிகளுடன் பழகுவார்கள்.. இப்போதெல்லாம் இங்கேயும் அவர்கள் தனி செல்ப்ரிடி அந்தஸ்துடன் இருக்கிறார்கள்.. பாஸ்டன் காலேஜில் படித்த நெடியோன் மகன் அடிச்ச கூத்தைப் பத்தி கதை கதையா எழுதலாம்.. அப்பல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது. இங்கே வந்தபிறகு ஜாதியாவது அந்தஸ்தாவது.. ஒன்றாக நன்றாகப் பழகுவார்கள்.. இன்டர்னெட் பிரபலமான பிறகு எல்லாருமே சுதாரித்துக் கொண்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.)

  பதிலளிநீக்கு