2011/12/03

ரெயில்வே ஸ்தானம்

போக்கற்ற சிந்தனை


சந்த காலம், காலை நேரம்.

தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில், திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும் ரயில் வரப்போகிற சமயத்தில், சுமார் நூறு பிரயாணிகள் கூடியிருக்கிறார்கள்.

இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். இன்ன ஊரில், இன்ன தேதியில், இன்னாருக்கு சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள். பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலே இருந்து தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுமங்கலி பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலை குனிந்து நின்றுகொண்டு, போவோர் வருவோரைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில முகம்மதிய ஸ்த்ரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக் கொண்டு திசைக்கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேங்குழல், சுசியன், காப்பி முதலியன வியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராமணரும் சூத்திரரும் பகற்கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணி நேரம் தாமசமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை. சிறிது தூரம் உலாவி வரலாமென்று கூப்பிடு தூரம் போனேன். அங்கு ஒரு மரத்தடியிலே மிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். சரிகைத் தொப்பி, சரிகைக் கரை தைத்த மஸ்லின் சட்டை, சரிகைக் கரை போட்ட நிஜார், சரிகை போட்ட செருப்பு, பூரணச் சந்திரன் போன்ற முகம், செழித்து வளர்ந்த மீசை. அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக் குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகி விட்டது.

அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக் கண்ணீர் ஊற்றுகிறது. எனக்கு மிகவும் பரிதாபமுண்டாயிற்று. அவன் முன்னே போய் நின்று கொண்டு, "தம்பி, ஏன் அழுகிறாய்?" என்று கேட்டேன்.

என்னிடத்தில் எப்படியோ நல்லெண்ணம் உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம் கொள்ளாமல் "ரயில் எப்போது வரப் போகிறது?" என்று கேட்டான்.

"இன்றைக்கு ஒரு மணி நேரம் தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்" என்றேன்.

"உங்களுக்கு உருது எப்படித் தெரியும்? உங்களைப் பார்த்தால் ஹிந்துக்கள் போலத் தோன்றுகிறதே?" என்று கேட்டான்.

அதற்கு நான், "சிறு பிராயத்திலே காசிப்பட்டணத்தில் எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று. ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷை தான். முகலாய ராஜாக்கள் தமக்கும் தம்முடைய பரிவாரங்களுக்கும் இந்த தேசத்துப் பாஷையாகிய ஹிந்தியையே பொதுவாகக் கைக்கொண்டார்கள். ஹிந்தி, சம்ஸ்கிருத பாஷையின் சிதைவு. அதை தேவநாகரியில் எழுதி ஸ்வயம்புவாகப் பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டு பல பார்ஸி அரபு மொழிகளைக் கலந்து ஹிந்துஸ்தானி அல்லது உருது என்று பெயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார பாஷையென்று அர்த்தம். அதாவது, முகலாய சேனைகள் கூடாரம் அடித்துக் கொண்டு பல தேசத்துப் போர் வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்புப் பாஷை. ஹிந்தியிலும் இதிலும் நல்ல பழக்கமுடையவனானேன். இது நிற்க, நீ வருத்தப்பட்டுக் கொண்டிருந்த காரணம் யாது?" என்று கேட்டேன்.

அந்த முகமதியப் பிரபு சொல்லுகிறான்:

"உங்களிடம் சொன்னால் என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகுமென்று என் மனதில் ஒருவித நிச்சயம் தோன்றுகிறது. என் துயரம் மற்றவர்களிடம் சொல்லக் கூடியதன்று. எனினும் உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன். என் துயரத்தை தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்த புண்ணியமுண்டு, இந்த உபகாரத்தை நான் இறந்து போகும் வரை மறக்க மாட்டேன்".

"முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும், தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்" என்றேன்.

"எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார் பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். நான் என் பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும் போது என் பிதா மிகவும் ஏழையாக இருந்தார். எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய லாட்டரிச் சீட்டு ஏலம் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ பத்து ரூபாய் கடன் வாங்கி அனுப்பினார். அவருடைய தரித்திரத்தை நாசம் பண்ணி விடவேண்டுமென்று அல்லா திருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய்ச் சீட்டு அவருக்கு விழுந்தது. பிறகு அவர் அதைக் கொண்டு நடத்தின வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி சில வருஷங்களுக்குள்ளே ஏழெட்டு கோடிக்கு அதிபதியாகி விட்டார். அப்பால் சற்றே நஷ்டம் வரத்தொடங்கிற்று. என் பிதா நல்ல புத்திமான். நஷடம் வரத் தொடங்கிய மாத்திரத்திலே திடீரென்று வியாபாரங்களையெல்லாம் நிறுத்திக் கொண்டு, பணங்களைத் திரட்டி ஏராளமான பூஸ்திகள் வாங்கி மாளிகை கட்டிக் கொண்டு, தம்மால் இயன்றவரை பரோபகாரத்தில் ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார். நான் பதினைந்து வயதாக இருந்த போது அவர் இறந்து போய் விட்டார். அவர் சொத்தெல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது.

என் தந்தை இறக்குந்தறுவாயில் சிறிய தகப்பனாருக்கு சில லக்ஷங்கள் பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்து, என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார். இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதமில்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்து கொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொள்வதே சரியென்றும் ஒரேயடியாக மூவரையும் மணம் புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. என் சிறிய தகப்பனார் என் தாயாரின் அனுமதியில்லாமலே விவாகத்தை முடித்து வைத்து விட்டார்.

சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார், என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்து விட்டாள். சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய்விட்டது. சொத்து விஷயங்களை நான் கவனிப்பதே கிடையாது. எல்லாம் அவர் வசத்தில் விட்டுவிட்டேன். அவரும் என் சொத்தில் தம்மால் இயன்றவரை தாசிகளின் விஷயத்திலும் குடியிலும் நாசம் பண்ணிவிட்டு குடல் வெடித்துச் செத்துப் போனார். சொத்தை நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சொத்து கொஞ்சம் நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. என் மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந்தரமன்று.

அதோ, ஸ்டேஷன் பக்கத்தில் முகமமதிய ஸ்த்ரீகள் கூட்டம் தெரிகின்றதோ? நடுவே இருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக்கொருத்தியாக முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மனவொற்றுமை இல்லையென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்கு சம்மதமில்லை. அவளுக்கு ஒரு நகை வாங்கிக்கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால் அவளொரு சட்டையைக் கிழித்தெறிகிறாள். இங்ஙனம் ஒவ்வொரு விஷயத்திலும் மூவரும் முரண்பட்டு என் பிராணனை வதைக்கிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் இவர்களால் நரகமாக்கப் படுகிறது. நான் என்ன செய்வேன்?

நேற்றிரவு ஒரு கனாக் கண்டேன். அதில் முகம்மது நபி வந்து என்னை நோக்கி 'அடே! நீ உன் பத்தினிமார் மூவராலே மிகவும் கஷ்டப்படுகிறாய். யாரேனும் இருவரைத் தள்ளி வேறு விவாகம் செய்து கொள்ள விட்டு விடு. ஒருத்தியை மாத்திரம் வைத்துக் கொள். உன் துக்கம் தீரும்" என்றார்.

நம்முடைய மனதில் தோன்றுவது தான் கனவாக வருகிறதென்பதை நான் அறிவேன். ஆனாலும், நம்முடைய ஆத்மாவிலும் அல்லாவே இருக்கிறாராதலால் இந்தக் கனவை அல்லாவின் கட்டளை என்று தான் கருதுகிறேன். யாரைத் தள்ளுவது யாரை வைத்திருப்பது என்று என் புத்திக்குத் தென்படவில்லை. அதற்காகத் துக்கப்படுகிறேன்" என்று முகம்மதியப் பிரபு சொன்னான்.

இதற்குள் ரயில் வருகிற சத்தம் கேட்டது.

அவன் திடுக்கென்றெழுந்து "சலாம்! சலாம்!" என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனை நோக்கி ஓடினான். நானும், "நல்ல வேளை, இந்தக் கடினமான விவகாரத்துக்குத் தீர்ப்பு சொல்லுமுன் ரயில் வந்ததே" என்று மகிழ்ச்சியோடு ரயிலேறப் போய்விட்டேன்.

இதுவரை நீங்கள் படித்த கதை, பாரதியார் எழுதி 1920ல் வெளியான 'ரெயில்வே ஸ்தானம்' கதையின் சுருக்கம்.

என் அறிவையும் மனதையும் தொட்டக் கதைகளில் இது ஒன்று. அந்த நாளில் இப்படி கதை எழுதி முடித்திருப்பது புரட்சி. பின்வந்த இது போன்ற பல கதைகளுக்கு முன்னோடி. சமுதாய நோக்கோடு எழுதப்பட்ட இலக்கியம்.

இனி, உங்களுக்கு ஒரு கேள்வி. பாரதியின் இந்தக் கதையில் பிழை இருக்கிறது. கருத்துப் பிழை. அது என்ன பிழை என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

பிழையையும், அந்தப் பிழை சுட்டிக்காட்டப்பட்டப் பின்னர், பாரதி என்ன செய்தாரென்பதையும் சொல்கிறேன். ரெயில்வே ஸ்தானம் கதை பற்றி, தான் எழுதிய 'முகம்மதிய ஸ்த்ரீகளின் நிலமை' என்ற கட்டுரையில் தொடர்கிறார் பாரதி.

ரண்டு தினங்களுக்கு முன்பு என்னுடைய முகம்மதிய நண்பர் ஒருவர் என்னைப் பார்க்கும் பொருட்டு வந்திருந்தார். இவர் என்னிடம் முதலாவது கேட்ட கேள்வி: "ரெயில்வே ஸ்தானம் என்றொரு கதை எழுதியிருந்தீர்களே, அது மெய்யாகவே நடந்த விஷயமா? வெறும் கற்பனைக் கதை தானா?"

"வெறும் கற்பனை" என்று நான் சொன்னேன்.

"என்ன கருத்துடன் எழுதினீர்?" என்று அவர் கேட்டார்.

"கதையென்றால் கற்பனைப் புனைவையே நான் முக்கியமாகக் கருதுவேன். எனினும் என்னை மீறியே கதைகளிலும் தர்ம போதனைகள் நுழைந்து விடுகின்றன. ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால், அதனின்றும் அவனுக்குக் கஷ்டம் தான் விளையுமென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பம் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்துகொண்டு அவளிடம் மாறாத தீராத உண்மைக் காதல் செலுத்துவதே உபாயமாகுமென்பதும் மேற்படிக் கதையினால் குறிப்பிடப்படும் உண்மையாகும்" என்றேன்.

அப்போது அந்த முஸ்லிம் நண்பர், "அந்தக் கதையில் ஒரு பிழை இருக்கிறது" என்றார்.

"என்ன பிழை?" என்று கேட்டேன்.

"அக்கதையில் ஒரு முகம்மதியப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படிச் சகோதரமான மூன்று பெண்களை மணம் புரிந்து கொள்ளுதல் முகம்மதிய சாத்திரப்படி 'ஹராம்' (பாதகம்) ஆகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடனிருக்கையில் அவளுடன் பிறந்த மற்ற ஸ்த்ரீயை ஒரு முஸ்லிம் மணம் புரிந்து கொள்ளக்கூடாதென்பதே எங்களுடைய சாத்திரங்களின் கொள்கை" என்றார்.

இதைக் கேட்டவுடன் நான், "சரிதான், எனக்கு அந்த விஷயம் தெரியாது. மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் ஹிந்துக்களுக்குள்ளே உண்டாததலால், அது போலே முகம்மதியர்களுக்குள்ளேயும் இருக்கலாமென்று நினைத்து அங்ஙனம் தவறாக எழுதிவிட்டேன். எனவே அந்த முகம்மதியப் பிரபுவுக்கு அவனுடைய சிற்றப்பன் தன் மூன்று குமாரத்திகளையும் மணம் புரிவித்தானென்பதை மாற்றி, தன்னினத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மணம் புரிவித்தானென்று திருத்தி வாசிக்கும்படி எழுதிவிடுகிறேன்" என்றேன்.

இதைத் தொடர்ந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் ஒரு திருத்த அறிக்கையையும் வெளியிட்டார்:

"ரெயில்வே ஸ்தானம் என்ற கதையில் நான் கூறிய தவறு புகவிட்டது பற்றி பத்திராதிபரும், பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன். உலகமெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லிம்களும் ஏக பத்தினி விரதம், பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் என்ற கொள்கைகளைப் பற்றி மேன்மை அடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லா ஹூத்த ஆலா அருள் புரிவாராக".

இதிலிருந்து எனக்கு உண்டான எண்ணங்களில் குறிப்பிடும்படி இரண்டை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

1) பாரதியும் சில நேரம், விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார் என்ற மேலோங்கும் வியப்பு
2) பாரதி சொல்லியிருப்பது போல், சகோதரிகளை மணம் புரிவது தவறென்று இந்து மதத்தில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்ற ஐயம்.

வியப்பு என்னோடு இருக்கட்டும். பாரதியை எண்ணி வியப்பதில் பிறவியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. ஐயம் தீர வழி உண்டா? உங்களுக்கு இதைப் பற்றித் தெரியுமா?

பாரதியின் கதைகளைப் போல் அவருடைய கட்டுரைகளும் காலத்தை வென்றவை. பாரதியின் கவிதைகளுக்கு அப்பாற்பட்ட படைப்புகளை உங்களுக்கு, பூத்தூரிகை வழியாக, அறிமுகமோ நினைவோ படுத்த எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பை எண்ணி வியக்காத நாளே இல்லை.

சிரிய நண்பர் அரசனின் நினைவில், அவர் எழுதியப் பதிவு ஒன்று. முண்டாசுக்காரனின் நினைவிலும்.
11/12/11
இதை ஏற்கனவே பதிவாக ஜனவரி மாதம் வெளியிட்டதை மறந்து மீண்டும் வெளியிட்டிருக்கிறேன். awkward. சுட்டிக்காட்டிய நண்பர் ராமசுப்ரமணியத்துக்கு நன்றி.
மன்னிக்க வேண்டுகிறேன்.

18 கருத்துகள்:

 1. //மனைவியொருத்தியின் சகோதரிகளை மணம் புரியும் வழக்கம் இந்துக்களுக்குள்ளே உண்டாதலால்//

  இப்படித்தானே பாரதி சொல்லி இருக்கார்?


  //பாரதி சொல்லியிருப்பது போல், சகோதரிகளை மணம் புரிவது தவறென்று இந்து மதத்தில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்ற ஐயம். //

  இப்படிச் சொன்னதாய்த் தெரியலையே!

  பதிலளிநீக்கு
 2. இந்தக் கதையை நானும் படித்திருக்கிறேன் அப்பாஜி.
  கதையில் பாரதி செய்த இன்னொரு பிழை. ...
  முகம்மதியர்களில் சித்தப்பா மகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லை.
  அம்மாவின் சகோதரி சித்தியின் மகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் தான் உள்ளது.

  பதிலளிநீக்கு
 3. சந்திரிகையின் கதை படித்திருப்பீர்களே? சென்னையில் பொதிகைத் தொலைக்காட்சியின் ஸ்வர்ணமால்யாவைக் கதாநாயகியாய்ப் போட்டு அதை நெடுந்தொடராக ஒளிபரப்பினார்கள். கொஞ்சம் பரவாயில்லை ரகம். :)))

  பதிலளிநீக்கு
 4. ஆமாம், இல்ல? சிவகுமாரன் சொன்னதை நானும் நினைச்சேன், எழுத மறந்து போச்சு. எங்க முகமதிய நண்பர்களும் அப்பாவழிச் சகோதரிகளைத் திருமணம்செய்து கொள்வது வழக்கம் இல்லைனே சொல்லிக்கேள்வி.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கதை. பூத்திரிகையில் வெளிவந்த போதே பலமுறை படித்தேன். இப்பொழுது இதை உங்கள் பதிவில் பகிர்ந்து கொண்டு மீண்டும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்கு மிகவும் நன்றி. ரசித்து படித்தேன்.

  சிவகுமாரன், முகமதியர்களுக்கு சித்தப்பா மகளை அதாவது தந்தையின் இளைய சகோதரனின் மகளை திருமணம் செய்யும் வழக்கம் உண்டு. என் பெரிய மகன் இரண்டாம் வகுப்பு படித்தபோது, அவன் நண்பனின் தாய் எனக்கு அறிமுகமானாள். பெயர் பாத்திமா. அவள் தன் பெரியப்பா மகனையே திருமணம் செய்து கொண்டவள். நானும் என்னுடைய இன்னொரு தோழி கீதா என்பவளும், அவளிடம் இதை பற்றி நேரடியாகவே கேட்டிருக்கிறோம். அதற்கு அவள் இது எங்கள் வழக்கம். நீங்கள் எப்படி சொந்த மாமாவையும், மாமா மகன் அல்லது மகளை மணம் செய்வது வழக்கமோ அதுபோலத்தான் இது என்றாள்.

  பதிலளிநீக்கு
 6. அந்நாட்களில் ராஜாக்கள் அரசுரிமைக்காக சகோதரிகளை மணந்து கொண்டதாக வருகிறது. ஒருவேளை பாரதி இதை மனதில் வைத்து சொல்லியிருப்பாரோ... மீண்டும் பாரதியின் வரிகளை உங்கள் மூலம் படித்ததில் மிக மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 7. என் அறிவையும் மனதையும் தொட்டக் கதைகளில்பல கதைகளுக்கு முன்னோடி. சமுதாய நோக்கோடு எழுதப்பட்ட இலக்கியம்.

  பாரதி வரிகளைப் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 8. அப்பதுரை அவர்களே! நன் ஹைதிராபாத்தில் இருக்கும் போது எனக்கு திருமணம் ஆனது.என்னுடைய ஆப்தநண்பன் ரஃபி க் அஹமது. அவன் இந்த திருமணத்தை எதிர்த்தான். நான் என் அக்காள் மகளை திருமனம் செய்துகொள்ளக்கூடது என்று தலைகீழாய் நின்றான். அவனுக்கும் அப்பொது திருமணம் நிச்சயம் ஆனது.அவனுடைய அண்ணன் மகளோடு. நானதனைதடுக்க முயன்றேன் . நான் என் அக்கள்மகளையும் ரஃபீ க் அவன் அண்ணன் மகளையும் மணந்து சவுக்கியமாக இருக்கிறோம். இதனை ஒரு சிறுகதையாக எழுதி அது பிரசுரமானது. திண்டுக்கல் சார்ந்த இஸ்லாமிய நண்பர்கள் கடுமையாக விமரிசித்து எழுதினார்கள். இஸ்லாமியப் பெரியவர் ஒருவரிடம் கேட்டபொது ஆதிகாலத்தில் அப்படி நடந்ததகவும் கூறினார். வட நாட்டில் மாமனை திருமணம் செய்வது தவறு. தமிழ்நாட்டில் அது பிறப்புரிமை. இன்றய விஞ்ஞானம் ரத்த உறவுக்குள் திருமணம் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.---காஸ்யபன்..

  பதிலளிநீக்கு
 9. இது வரை நான் படித்ததில்லை. கதையும்,அது பற்றிய கருத்துக்களும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 10. வருக geethasmbsvm6, சிவகுமாரன், meenakshi, கணேஷ், இராஜராஜேஸ்வரி, kashyapan, சென்னை பித்தன்,...

  பதிலளிநீக்கு
 11. geethasmbsvm6//இப்படித்தானே பாரதி சொல்லி இருக்கார்?

  சரியே. "சகோதரிகளை மணம் புரிவது தவறென்று இந்து மதத்தில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லையே?" என்று கேட்டிருக்க வேண்டும். எனக்கும் முதல் தடவை இதைப் படித்த போது அப்படித்தான் தோன்றியது. தன்னுடைய சந்தேகத்தில் பாரதியைச் சேர்த்திருக்க வேண்டாம். (எங்க டீச்சரு அப்படித்தான்.. sensible பாதி sensational பாதியாத் தான் எழுதுவாரு :)

  பதிலளிநீக்கு
 12. உண்மை kashyapan சார். என் குடும்பத்திலும் ரத்த உறவுகளுக்குள் நிறைய திருமணங்கள் நடந்திருக்கின்றன. எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள் (என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் :).

  முதல், இரண்டாம் தட்டு ரத்த உறவுகளில் மணம் செய்து கொள்வது நானறிந்தவரை உலக கலாசாரங்களில் சாதாரணமாகவே இருந்து வந்திருக்கிறது. முதல் தட்டு உறவுகள், சந்ததிகளின் மன உடல் மூளை வளர்ச்சியைப் படிப்படியாக பாதிக்கும் (degeneration) என்பதற்கு நிறைய dna level ஆதாரங்கள் சேர்த்து சென்ற முப்பதுக்கும் குறைவான வருடங்களாகத்தான் தீவிரமாக ரத்த உறவுத் திருமணங்களைத் தவிர்க்கச் சொல்லி வருகிறார்கள் (கிறோம்). இரண்டாம் தட்டு ரத்த உறவுகள் அப்படிப் பாதிக்கின்றன என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் சேர்த்து வருகிறார்கள். (நிறைய பேருக்கு வேலையில்லை; பூனைங்களும் அதிகமாயிடுச்சு..)

  எனக்கு என்னவோ இவை scientific proof விட social tabooவின் தாக்கம் என்றே தோன்றுகிறது. வரவேற்க வேண்டிய மாற்றம். பரந்து விரிந்த உலகில் காதலுக்கும் சந்ததிக்கும் நாலு தட்டு தாவித்தான் பார்ப்போமே?

  பதிலளிநீக்கு
 13. அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 14. பாரதி கதை எழுதினார்ங்கிற வரை தெரியும். மறுபடி மறுப்பு தெரிவிச்சது இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன். :-))))

  பதிலளிநீக்கு
 15. அப்பாஜி....பாரதியின் எதிர்ப்பு அப்பவே இருந்திருக்குன்னா சந்தோஷம்.சில விஷயங்கள் என்க்கு புதுசாவும் அதிசயமாவும் இருக்கு.ஈழத்தில் நாங்கள் சொந்த அம்மாவின் சகோதரன் இல்லை அப்பாவின் சகோதரி பிள்ளைகளைத் திருமணம் செய்வதில் அக்கறை எடுப்போம் !

  பதிலளிநீக்கு
 16. உலக மக்கள் தொகைக் கணக்கின்படி நூத்தி ஏழு பையன்களுக்கு நூறு பொண்ணுங்கன்னு ரேஷியோ சொல்லுதாம். ஒரு காலத்துல பாருங்க கல்யாணம் செய்ய ஏதோ ஒரு பொண்ணு கிடைச்சா போதும்னு அலையப் போறாங்க பசங்க....!!

  பதிலளிநீக்கு
 17. பாரதியின் வரிகளைப் படிக்கும் மறு வாய்ப்புக்கு நன்றி. பின்னூட்டங்கள் என்ன ஒரு சுவாரசியம்..

  பதிலளிநீக்கு