2011/08/27

கோமதீ




1 2 ◀◀ முன் கதை

    சப்தம் கேட்டு நினைவுக்கு வந்தாள், அரைத் தூக்கத்திலிருந்த ஹோட்டல் ரிசெப்ஷன் பெண். நாற்காலியிலிருந்து எழுந்து "ஸுமி மாஸென்" என்று மன்னிப்பு கேட்டவள், எதிரே இருந்த காவல்துறை ஆட்கள் இருவரையும் பார்த்தாள். "கேசத்தெஸ்" என்றபடி போலீஸ் அடையாளச்சீட்டைக் காட்டிய இருவரும், "ஒகயநு கென்சகு" என்றனர். இறந்து போனவனுடைய புகைப்படத்தைக் காட்டினர். பலமாகத் தலையாட்டிய ரிசெப்ஷன் பெண், உடனே அறைச் சாவியை எடுத்து வந்தாள்.

இரண்டாவது மாடியின் வடக்கு மூலையிலிருந்த அறை வாசலில் நின்று தயங்கி, போலீஸ்காரர்களைப் பார்த்தாள். கதவை மூன்று முறை தட்டிவிட்டு பல வினாடிகள் பொறுத்து, கொண்டுவந்த சாவியால் கதவைத் திறந்தாள்.

உள்ளே யாருமில்லை. டோக்யோவின் பெரும்பான்மையான ஹோட்டல்களைப் போல் சிறிய அறை. இரண்டு படுக்கைகளும் சீராக இருந்தன. மூலையில் பூட்டியிருந்த ஒரு பெட்டி. உள்ளே வந்த காவல்துறை ஆட்கள் படுக்கையறையிலும் ஒட்டியிருந்த குளியலறையிலும் தேட, ரிசெப்ஷன் பெண் வெளியே நின்று கொண்டிருந்தாள்.

படுக்கையறையில் தேடிக் கொண்டிருந்தவன், துணைக்கு வந்தவனை அவசரமாக அழைத்து தலையணைக்கடியில் இருந்ததைச் சுட்டினான், "நொஷோகு". சிறிய பொட்டலம். "ஹவ்" என்று தலையசைத்தார்கள். படுக்கையைச் சுற்றித் தீவிரமாகத் தேடினார்கள்.

அடுத்த நான்கு மணி நேரத்தில் அறையில் தங்கியிருந்தவனைத் தேடிப்பிடித்து ஷிஞ்சுகு காவல்துறை மையத்திற்குக் கொண்டுவந்தனர். ஆங்கில மொழிபெயர்ப்புத் துணையுடன் இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். "உங்கள் பெயர்?"

"மிகேல்"

"டோக்யோ வந்த விஷயம்?"

"சுற்றுலா" என்றவனிடம், ஷிஞ்சுகு ஹோட்டல் அறையிலிருந்து எடுத்துவந்தப் பொட்டலத்தையும் பெட்டியையும் காட்டினார். பெட்டி நிறைய பணம். பொட்டலத்தில் கோகெய்ன்.

"கோகன டட்சுதன்" என்றார் இன்ஸ்பெக்டர். மொழிபெயர்ப்பாளர் விழித்துவிட்டு, கொட்டையை நசுக்குவது போல் சைகை காட்டினார்.

எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லத் தொடங்கினான் மிகேல்.
**

    விமான நிலையத்திலிருந்து மருத்துவ உதவிக்குழு கிளம்பியது. என்ன செய்கிறோமென்று தெரியாமல் நானும் பின் தொடர்ந்தேன். அந்தப் பெண்ணிடமிருந்து விலகினால் போதுமென்று தோன்றியது. ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் சற்று அருகில் வருவது போல் உணர்ந்தேன். நிச்சயமாக என்னை விடாது பின்தொடர்கிறாள்.

காலையிலிருந்து எல்லாம் கனவு போல் நடப்பதால் ஒரு வேளை பிரமையோ? வாயிலிருந்து சிலந்தி வருவதாவது? பிரேதக்கிடங்கு வந்ததும் நின்றார்கள். நான் உள்ளே போக மனமில்லாமல் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

முழுக்க முழுக்க கண்ணாடிக் கட்டிடத்தின் தானியங்கிக் கதவுகள் திறந்து அவர்கள் உள்ளே போனபோது, பக்கத்திலே சுழல் கதவின் பின்னால் அவளைப் பார்த்தேன். ஐந்தடி தூரம் கூடக் கிடையாது. அவளேதான். என்னதான் செய்வாள் பார்த்துவிடலாம் என்று ஆத்திரத்துடன் உள்ளே போனேன்.

அவளைக் காணவில்லை.

அவள் நின்றிருந்த இடத்தில் மஞ்சளும் சிவப்புமாய் பொடி. தொட்டுப் பார்த்தவன் அலறினேன். தொட்டவுடனே என் கை விரல்கள் அறுந்து விழுந்தது போல் இனம் புரியாத வலி. கையை விலக்கிக் கொண்டு அதிர்ச்சியில் மேலே பார்த்து, மயிர்க்கூச்செறிந்தேன்.

உத்தரத்தில், இந்த முனையிலிருந்து அந்த முனை வரை, அறுபதடி நீளத்துக்குப் பரந்து படுத்திருந்தாள். அவள் தலைமுடிக்கற்றை விழுது போல் தொங்கியாடியது. அவளுடைய கண்கள் அகண்டிருந்தன. வாயில் இப்பொழுது பற்கள் இருந்தன. ஓனாய்ப் பற்கள்.
**

    இறந்து போயிருந்த வைத்தியைப் புதைத்துவிட்டு, இரண்டு மூன்று வாரமாய் கோக், எல்எஸ்டி, எக்ஸ்டசி என்று கோமதிக்கு தினமொரு போதை மருந்தேற்றி அவனும் மிகேலும் இன்னும் மற்றவர்களும் அவள் உடலையும் மனதையும் நாசம் செய்துவிட்டிருந்தார்கள்.

"இவள் வந்து ஒரு மாதமாகப் போகிறது துரேபன். ஐ வில் கெட் ரிட் ஆப் ஹர். ரிஸ்க் அதிகம்" என்றான் மிகேல்.

"நா" என்றான் அவன். ""ஒரு அபாயமும் இல்லை. இந்தியாவின் கிராமத்துக்காரி. வெளி மொழி எதுவும் தெரியாது. போதைக்கு அடிமை. இவளால் நம்மை அடையாளம் காட்டவே முடியாது. இவளை நம் ஏஜன்டுக்கு விற்றால் நிறைய பணமும் கிடைக்கும். அடுத்த வாரம் மாவியிலிருந்து வரும் ஜேக் மசாகி இவளை வாங்கிக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறான். டேஸ்ட் பார்த்து சொல்வதாய்ச் சொன்னான். ஒகினாவா மரீன் பேஸுக்கு இப்ப முழு சப்ளை அவன்தான். அவர்களுக்குப் பிடிக்கும் இந்த மாதிரி ஜூசி கட். பேச வேண்டாம். படுத்தா போதும்" என்றான். "சாம்பிள் பார்த்து, பிடிச்சிருந்தா எல்லா ஏற்பாடும் அவனே செய்துடுவான். வழக்கம் போல நாம போய் பணம் மட்டும் எடுத்துகிட்டு வந்தா போதும். கேஷ் டீல்".

கோமதி "இன்னும் கொஞ்சம் மருந்து குடுண்ணே" என்று கெஞ்சினாள். அவன் கோகெய்ன் பொட்டலத்தை அவள் முன் ஆட்டினான். "இப்ப யாருடி தெய்வம்?" என்றான். "நீதான்ணே, குடுண்ணே" என்று அவனைச் சுற்றி வந்தாள்.

நடந்து போன கொடூரத்தை மறக்கவும் அவர்களுக்கு இணங்கி நடக்கும் போது உண்டாகும் பயம் போகவும் அவளுக்குப் போதை மருந்து தேவைப்பட்டது. அவனிடம் தினம் கெஞ்சுவாள் "ஒரே ஒரு ஊசி தாயேன்". உள்மனத்தில் மட்டும் காயம் ஆறவில்லை. காயம் ஆறாமலிருக்க வேண்டுமென்று தெய்வத்தைத் வேண்டிக்கொள்வாள். 'மறத்துப் போனாலும் மறந்து போகவிடாதே, கடவுளே. எப்ப இதை முடித்து வைக்கப் போகிறாய், முருகா?'.

முடித்து வைக்கும் வாய்ப்பு வந்தது. ஒகினாவாவில்.

சிகாகோவிலிருந்து மாவிக்குப் போய், அங்கிருந்து அமெரிக்கக் கப்பற்படை சார்ந்த மரீன் கார்கோ தனியார் சப்ளை விமானத்தில் கடத்தப்பட்டு ஒகினாவா வந்தாள்.

கோமதியுடன் சேர்த்து மொத்தம் ஆறு பெண்களைக் கடத்தி வந்திருந்தார்கள். ஓகினாவா மரீன் பேஸ் டாபரிடம் அவர்களைப் ஒப்படைத்தார்கள். அவன் அவர்களின் முகம், உதடு, பல், மார்பு, பிட்டம், அல்குல் என்று ஒவ்வொரு இடமாய்த் தொட்டுப் பார்த்துச் சோதனை செய்தான். பிறகு தலையாட்டி, "கார்கோ ஓகே" என்றான். ஒரு சீட்டெழுதிக் கொடுத்தான்.

"என்ன இது?" என்றான் மிகேல்.

"ஷிஞ்சுகு ஹோட்டல் அட்ரெஸ். அங்கே போய்க் காத்திருங்க. ஒரு பொண்ணுக்கு இருபதாயிரம் டாலர். ஆறுக்கும் சேத்து நூத்திருபது. பவுடருக்கு இருநூறு. மொத்தப் பணத்தையும் அங்கே கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றான் டாபர்.

சீட்டை வாங்கிப் பையில் திணித்துக் கொண்ட மிகேல், கூட்டாளியை அழைத்தான். "வா போவலாம்".

ஷிஞ்சுகுவில் காத்திருந்த இருவருக்கும் பணப்பெட்டி வந்தது. பண விஷயம் மிகேலின் பொறுப்பு என்பதால், அவன் அடுத்த விமானத்தில் சிகாகோ செல்லத் தீர்மானமானது.

ஒகினாவாவின் சிவப்பு விளக்குப் பகுதியில் கோமதியைப் புதுச்சரக்கு என்று அதிக டாலருக்கு டாபர் வாடகை பேச, இரண்டு அமெரிக்கச் சிப்பாய்கள் வந்தனர். ஆடைகளைக் களைந்துவிட்டு, "டூ இன் ஒன்" என்றனர். கோமதி, ஆடையில்லாமல் நின்றுகொண்டிருந்த இருவரையும் பார்த்துச் சிரித்தாள். அவர்கள் கழற்றிப் போட்ட பேன்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆட்டிச் சிரித்தாள். பதிலுக்கு அவர்களும் இடுப்பை ஒடித்து, "லுக் அட் அவர் கன்ஸ்" என்று சிரித்தனர். கோமதியை நெருங்கினர். அவள் இருவரையும் சுட்டாள்.

முதல் குறி தவறி எங்கோ தெறிக்க, அவர்கள் இருவரும் அப்படியே வெளியே ஓட முயற்சித்தனர். மறுமுறை வைத்த குறி தவறாமல் சுட்டாள். தன் நெற்றியில். "கோமதி, நீ செய்ய வேண்டியதெல்லாம் இனிமேல் தானடி".
**

    ஷிஞ்சுகு காவல் மையத்தின் உயரதிகாரி, மிகேல் சொல்வதையெல்லாம் கேட்டபடி ஒரு சிகரெட் எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவன் உட்கார்ந்திருந்தான். கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த போதைப்பொருள் தடுப்பிலாகா அதிகாரி, அப்பொழுது வந்த செய்தியைக் காண்பித்தார். ஒரு புகைப்படத்தை அவனிடம் காட்டினார்.

"இவள்தானா அந்தப் பெண்?" என்றார்.

"ஆமாம்" என்று தலையாட்டினான்.

"உங்கள் கூட்டாளி எங்கே?" என்று கேட்டார், போதைப்பொருள் தடுப்பிலாகா அதிகாரி.

"அவன் நேற்றே சிகாகோ..".

அவனை மறித்த போலீஸ்காரர், "அவன் நேற்று இரவு நகோயா விமான நிலையத்தில் விபரீதமாய்க் கொல்லப்பட்டான்" என்றார். அதிகாரியிடம் ஏர்போர்ட் விவரங்களைச் சொன்னார்.

அதிகாரி எழுந்து, "மிஸ்டர் மிகேல், நீங்க எங்ககூட வந்துப் பிணத்தை அடையாளம் காட்டுங்க. முழு குற்றச்சாட்டு தீர்மானமாகும் வரை உங்களை போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைத்திருக்கிறோம்" என்றார்.
**

    அங்கிருந்து நகர்ந்தேன். எதிரே இருந்த அறைக்குள் சில காவல்துறை ஆட்கள் நிற்பதைப் பார்த்து நிதானமும் தைரியமும் வந்து உள்ளே போனேன். அந்தப் பெண் இத்தனை காவல் இருக்குமிடத்துக்கு வரமாட்டாள்.

வந்து சேர்ந்த தேதி, நேரம், பதிவெண் வாரியாகப் பிணங்களைக் கிடங்குள் வைத்திருந்தார்கள். நான் அருகே சென்றபோது ஏதோ ஒரு பிணத்தை அடையாளம் காட்டுவதற்காக வெளியே எடுத்து வந்தார்கள். அடையாளம் காட்ட வந்தவனோ எனக்கு நன்றாகத் தெரிந்தவன். மிகேலா?

அப்படியானால் பிணம்? அதிர்ச்சியுடன் பிணத்தைப் பார்த்தேன். என் முகமா அது? யானைக்கால் வியாதி போல் வீங்கி, சீ ஒழுகிக் காய்ந்து போன கண்றாவி. இருந்தாலும் அடையாளம் தெரிந்தது.

என் கையை யாரோ பிடிக்க, திடுக்கிட்டேன். அந்தப் பெண்தான்.

ஒரு சில நொடிகளுக்கு மசாஜ் செய்த பெண்ணாகத் தோன்றினாள். என் கையை உதற நினைத்தேன், முடியவில்லை. இப்பொழுது கோமதியாக மாறி என் கையை அழுத்தினாள். அவள் கை விரலகள் ஐந்தும் தேள் கொடுக்காய் மாறி என்னை ஒரே நேரத்தில் கொட்ட, துடித்தேன். கொட்டிய இடத்தில் உடனே நூற்றுக்கணக்கில் கம்பளிப்புழு. அடுத்த நொடியில் அவள் கண்களிலிருந்த வந்த தீப்பொறி பட்டு, எரிந்துகொண்டே ஓடியக் கம்பளிப்புழுக்கள் என் கைகளைக் குடைந்து உள்ளே சென்றன.

அலறினேன். நான் இறந்திருந்திருந்தால் வலிப்பானேன்? துடிப்பானேன்?

"இந்தச் சாவு என் பழிக்கு ஆரம்பம். இன்னும் ஏழு பிறவி இருக்குடா, சண்டாளா.. உன்னை என்ன பாடு படுத்துகிறேன் பார். உனக்கு நரகம் கிடையாது" என்று என் காதில் சொன்னாள். சொல்லும்போதே அவள் நாக்கிலிருந்த விஷமுள் என் கன்னமெல்லாம் கீறியது. பிறகு "வாடா துரையப்பன், இனி முதல் பிறவி" என்றாள்.
⚫⚫



9 கருத்துகள்:

  1. ஹை.... அப்போ என் ஊகம் கிட்டத்தட்ட ரைட்டா...! முற்றும்னு போடலையே...இன்னும் ஆறு பாகம் இருக்கா என்ன? (ஏழு பிறவியில் ஒரு பிறவி போனால் ஆறு இல்லையோ...?)

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஆகஸ்ட் 27, 2011

    சிறுசிறுசிறுசிறு.... கதை ...அருமை...

    பதிலளிநீக்கு
  3. இதை நவீன புராணம் என்று எடுத்துக்கொள்ளலாம்... புராணங்களின் தேவையையும் நியாயப் படுத்துகிறது..

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாஆகஸ்ட் 27, 2011

    அப்பப்பா!...ச்சூ!.... என்ன பயங்கரமாய்க் கிடக்கே இந்தக் கதை. இன்னம் தொடருமா?...என்ன தான் நடக்கும் என்று வாசித்தேன்...தொடருங்கள் ஐயா!.....
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. அறியாப்பெண்ணை ஊர் தெரியாத பாஷைகள் தெரியாத இடத்தில் எத்தனை கொடூரவனா இருந்தாலும் கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல் இப்படி ஒரு செயலை செய்துவிட்டு தப்பிக்க இறைவன் விடுவானா?

    அதான் கோமதியின் மூலமாக சம்ஹாரம் பண்ணிட்டு இருக்கார்...

    நல்ல சாவு இந்த பிறவியில் மட்டுமில்லை இனி எழேழு பிறவிக்கும் தொடரும் இந்த பயங்கரம்னு முடித்தது அசத்தல்..

    கதை தொடங்கிய விதமும் அங்கங்கே சின்ன குழப்பம் கூட வராதபடி பயங்கர காட்சிகளை கண் முன் கொண்டு வந்த விதமும் சிறப்பு...

    பெண்ணை தொட்டதனால் வந்த வினையை ஏழு பிறவிகள் எடுத்தாலும் தப்பிக்க முடியாது என்பதை சிறப்பாக சொல்லி சென்ற விதம் அருமை...

    அன்பு வாழ்த்துகள் அருமையான படைப்பு....

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஸ்ரீராம், ரெவெரி, பத்மநாபன், kovaikkavi, மஞ்சுபாஷிணி,...

    ஸ்ரீராம், kovaikkavi: கதை முடிந்துவிட்டது. ஸ்ரீராம், இன்னும் ஆறு பாகம் எழுதச்சொல்றீங்களா? ம்ம்ம்.. யோசிக்கவே பயமா இருக்குதே.

    பத்மநாபன்: என்னங்க இது..புராணமா? அவ்வளவு நீளமாவா போயிடுச்சு?

    மஞ்சுபாஷிணி: தெளிவான கருத்துக்கு மிகவும் நன்றி. முன்பின் தெரியாத இடத்தில் சிக்கினால் வரும் ஆபத்தை இன்னதென்று விளக்க முடியாது. இந்தக் கதையின் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. நாம் அந்தப் பாதையில் சிக்கினால் ஒழிய நமக்குத் தெரிவதில்லை.

    judgment night என்று ஒரு பழைய ஆங்கிலப்படம். வழிதெரியாமல் தவறிப்போய் ஒரு தெருவில் திரும்பிய நாலு பயணிகளின் வாழ்க்கை எப்படிச் சீர்கெட்டுப் போகிறது என்பதைச் சொல்லும் படம். மறக்கவே முடியாத பயங்கரப்படம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நினைத்தேன். படம் பார்த்த ஆறு மாதங்களுக்கு மிக மிக மிக நன்றாகத் தெரிந்த இடங்களுக்கு மட்டுமே போய்க்கொண்டிருந்தேன். ஜிபிஎஸ் தலைமுறைக்கு இது புரிய சாத்தியமில்லை.(நல்லவேளை, ஜிபிஎஸ் :)

    பதிலளிநீக்கு
  7. வக்கிரத்தின் பேயாட்டத்தையும்
    அதனால் சிதறுண்டு சீரழந்து போன
    அப்பாவித்தனத்தையும் பின் அதன்
    அக்ரோஷமான எழுச்சியையும் மிக அழகாக
    எழுத்தில் வடித்துள்ளீர்கள்
    உணர்ந்து படிக்கவைக்கும் அழகான பதிவு
    நல்ல பதிவினைத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லாஏப்ரல் 11, 2012

    பெய்க்கதை ஸ்பெசலிஸ்டா நீங்க?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லாஏப்ரல் 11, 2012

    விபரீதக் கதங்கள் மொத்தமும் படிச்சபின் கூச்செடுத்து நிக்குமோ?

    பதிலளிநீக்கு