2010/12/28

மரிஷ்காவின் பூதங்கள்



முன் கதை 1 2 3 4 5 6


மரிஷ்காவும் அம்மாவும் அடித்துக் கொள்வதைப் பார்த்த பொழுது நான் இதுவரை நடுங்காத அளவுக்கு நடுங்கினேன். கரப்பானும் இருதலைப்பூரானும் மரிஷ்காவுக்குப் பாதுகாப்பாக அவளைச் சுற்றின. யோகஷை அவசரமாக விழுங்கியதற்காக நொந்தேன். மரிஷ்காவின் மற்ற பாகங்களைக் கொண்டு வரும் முயற்சியிலும் அம்மாவை அழிக்கும் முயற்சியிலும் எங்கள் மகனைத் துண்டு போட்டு தரையிலிருந்த உருவத்தில் குத்திக்கொண்டிருந்தது புரிந்தது. இன்னொரு விசித்திரமும் புரிந்தது. யோகஷை விழுங்கிய கணத்திலிருந்து நான் நினைப்பதை மரிஷ்காவால் அறிய முடியவில்லை. 'மகன், மகள் எல்லாமே நான் தான்' என்ற அம்மா சொன்னதை நினைத்த போது இந்த விபரீதம் எல்லையில்லாதது போல் பட்டது. 'எப்படியோ இருந்திருக்க வேண்டியவன்' என்று கரப்பான் முதன் முதலில் சொன்னது நினைவுக்கு வந்தது. எல்லாமே அம்மாவா? அல்லது எல்லாமே நானா? இந்தப் போரை நிறுத்தும் வழி புரிந்தது. அம்மா அழிய வேண்டும். அல்லது நான் அழிய வேண்டும். மரிஷ்காவை நினைத்த போது வலித்தது.

கபாலத்தை எடுத்துக் கொண்டு தரையில் செதுக்கப்பட்டிருந்த அம்மாவின் உருவத்துக்கு விரைந்தேன். "அவனைப் பிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள்" என்ற அம்மாவின் ஆணை கேட்டு, பாம்புகள் என்னைத் துரத்தின. கரப்பான், "சீக்கிரம், வட்டத்துக்குள் போ" என்று கத்தியது. கபாலத்தைப் பிடித்தபடி நான் வெளிவட்டத்தில் கால் வைத்தவுடன் என் தலை விரியத் தொடங்கியது. பூமியதிர்ந்து வெடிப்பது போல் என் தலையில் விரிசல்கள் பரவின. என் கண்களை யாரோ தோண்டியெடுப்பது போல் உணர்ந்தேன். சில நொடிகளில் என் கண்கள் இருந்த இடத்தில் வெறும் குழிகள் மட்டுமே இருந்தன. குளவி பறந்து என் கண் குழிக்குள் உட்கார்ந்தது. நான் கபாலத்தை உருவத்தின் வயிற்றில் வைத்தேன். மரிஷ்கா "வேண்டாம், வேண்டாம், செய்யாதே" என்று அலறினாள். "இந்தப் போரை நிறுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. மன்னித்து விடு மரிஷ்கா, என் சக்தியை மீண்டும் பெறப்போகிறேன்" என்றேன். கபாலம் சிதறிப் பொடியாகத் தொடங்கியது. மேலிருந்த மை உருகி உருவத்தின் வயிற்றில் பரவியது. மை பரவிய இடம் ஒரு இருட்டுக் குழியாகத் தொடங்கியது. ஒடிந்து கொண்டிருந்த சில கபாலத் துண்டுகளை மையுடன் வழித்தெடுத்து உருட்டி அம்மாவை நோக்கி எறிந்தேன். அம்மா அதை விழுங்கியதும் ஒரு கணம் எல்லாமே நின்றது.

அம்மாவைப் பார்த்தேன். அம்மாவால் அசைய முடியவில்லை. அந்த அமைதியை நான் வியந்து கொண்டிருந்த போது யோகஷ் என் வாயிலிருந்து வெளி வந்தார். "சீக்கிரம், மரிஷ்காவை எடுத்துக் கொண்டு தப்பியுங்கள்" என்றார் மரியாதையுடன். மரிஷ்காவைக் காணவில்லை. இணையண்டத்தில் உடைந்த என் கைகளை நக்கிச் சீர் செய்த போது என்னை நேராகப் பார்த்துக் குளவி மனதுள் சொன்னது நினைவுக்கு வந்தது. உருவத்தின் காலடியிலிருந்த எம்டிமின் எஞ்சியிருந்த பூத உருவச் சிலைகளைப் பார்த்தேன். மரிஷ்கா போலிருந்த உருவம் சக்தியில்லாமல் அசைந்து கொண்டிருந்தது. மரிஷ்கா குட்டிச் சாத்தானாகிக் கொண்டிருக்கிறாள்! மற்ற குசாக்கள் என்னை நோக்கி வந்தன. "தலைவா" என்றன. "சீக்கிரம், உன் அம்மாவின் மைக்கட்டு விலகுமுன் எங்களுக்கு விடுதலை கொடு" என்றது கரப்பான். ஒவ்வொரு பூதத்தையும் உருவத்திலிருந்த குழிகளில் இறக்கி கபாலப்பொடியினால் மூடத் தொடங்கினேன். "என்னையும்" என்றது கரப்பான். குளவியைக் கையிலெடுத்து நன்றி சொன்னேன். குழியிலிறக்கி மூடினேன்.

அம்மாவைக் கட்டியிருந்த கபால மை விலகத் தொடங்கியது தெரிந்தது. "கா!" என்று அலறினார். யோகஷ் அங்கேயும் இங்கேயும் பறந்து கபாலப்பொடியை அம்மா மேல் தூவிக்கொண்டிருந்தார். "சீக்கிரம், தப்பித்தோடுங்கள்" என்றார். அம்மா கை நீட்டி யோகஷைப் பூச்சி பிடிப்பது போல் பிடித்தார். தன் நெற்றியலடித்து யோகஷை உடைத்து என் மேல் எறிந்தார். என்னை நோக்கி ஆவேசமாக வந்தார். அம்மாவின் மேல் பாய்ந்தேன். அவர் கைகளைப் பிடித்துச் சுழற்றி தரை மேலிருந்த உருவத்தை நோக்கி எறிந்தேன். அம்மா விலகிப் போய் இன்னும் உக்கிரமாக என் மேல் பாய்ந்தார். நான் எதிர்த்து அவரைக் கீழே தள்ளி அவர் கழுத்தை நெறிக்கத் தொடங்கினேன். என் மேல் நெருப்பைத் துப்பி, என் வயிற்றில் எட்டி உதைத்தார். நான் உருண்டு விழுந்த போது, கரப்பான் என்னை வட்டத்துக்குள் அவசரமாகத் தள்ளியது. உடைந்த யோகஷ் துண்டுகளை எடுத்து என் கண் குழிகளில் வைத்தது. "வட்டத்தை விட்டு வெளியே வராதே" என்றது. மற்ற குசாக்களை மூடிய குழிகள் மறையத் தொடங்கின. அம்மா ஆத்திரத்துடன் அலறினார். "உன்னை ஒழித்தேன் இத்துடன்" என்று என் மேல் பாய்ந்தார்.

அதற்குள் கரப்பான் என் கண்களில் வைத்த யோகஷின் துண்டுகள் என்னுள் கரையத் தொடங்கின. அமைதியானது போல் உணர்ந்தேன். "நிறுத்துங்கள். எனக்கு இந்தச் சக்தி தேவையில்லை. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என் ஆட்களை விடுதலை செய்து விட்டேன். எனக்கு மரிஷ்கா வேண்டும். எங்கள் வாழ்க்கை வேண்டும். நான் வருகிறேன்" என்று கரப்பானையும் மரிஷ்காவையும் எடுத்துக் கொண்டு மை கரைந்த வயிற்றின் இருட்டுக் குழிக்குள் குதித்தேன்.

    ஸ்ரேலின் ஹைபா-கார்மல் பூங்காவில் ஒதுங்கியிருந்த விடுதிக்கு வந்தவர்கள், அழகானக் கடற்கரையை அனுபவிக்காமல் அறைக்குள்ளேயே இருந்தார்கள். "நேத்து வந்ததுலந்து கொஞ்சிட்டிருக்கமே, கொஞ்சம் வெளியே போவோமே?" என்றாள் அவள்.

"சரி, நீ எழுந்து உடை மாத்திக்க" என்றான் அவன்.

"ம்ஹூம்..நீ மாத்திக்க, பிறகு நான்" என்று கொஞ்சினாள்.

"நீ முதல்" என்று அவளை நெருங்கி முரண்டான் அவன்.

"சரி, இன்னும் ஒரே ஒரு முறை. அதுக்குப் பிறகு வெளியே போவோம்" என்றபடி அவனை ஒட்டினாள். அவன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பற்களால் கடித்த போது அவன் மார்பில் பட்டது. "இன்னும் நெருங்கி வா" என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தான்.

    "முந்தா நாள் மாலைலந்து அறைக்குள்ளயே கொஞ்சிக்கிட்டிருக்கோமே, கொஞ்ச நேரம் வெளியே தான் போவோமே?" என்றான் அவன்.

"சரி, நீ எழுந்து உடை மாத்திக்க" என்றாள் அவள்.

"நீ மாத்திக்க, பிறகு நான்" என்றான் அவன்.

"நீ தான் முதல்" என்றாள்.

"சரி.. இதான் இன்னைக்குக் கடைசி முறை, பிறகு ஒண்ணாவே உடை மாத்திக்குவோம், சரியா?" என்றபடி அவளைத் தன்னோடு இழுத்து, அவள் கண்களை மூடி முத்தமிட்டான். "மரிஷ்கா!" என்றான்.

"மரிஷ்கானு கூப்பிடாதேனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? என் பெயரைச் சொல்லாம, யார் இந்த மரிஷ்கா? அதுவும் இத்தனை நெருக்கத்துல இருக்குறப்ப இன்னொரு பொண்ணு பெயரை எப்படி நீ சொல்லலாம்?" என்று சிணுங்கினாள்.

"தெரியலியே.. இந்தப் பெயர் ஏன் தோணுதுனு தெரியலியே?" என்றான்.

"ஆமா, இது வேறே குறுக்கே குறுக்கே வருது.." என்றபடி அவன் கழுத்தில் அசைந்த தங்கச் சங்கிலியின் கரப்பான் பென்டென்டை ஒதுக்கினாள். "இது என்ன பூச்சிப் பதக்கம்? கழட்டவே மாட்டுறப்பா நீ.. விசித்திரமான ஆளு.." என்றாள்.

"ஒரு நினைவாகத்தான்" என்றான். சங்கிலியின் பதக்கம் மின்னியது.  ♥♥

17 கருத்துகள்:

  1. ஒரு வழியாய் பயமும் , திகிலும் ஒய்ந்தது . உள்ளர்த்தம் புரிந்தது..

    ஒவ்வொரு உறவு /உணர்வை விரித்து இப்படி கதை எழுதுவீர்கள் போல ..

    தமிழ் சினிமா போல சுப முடிவாக இருந்தாலும், கரப்பான் மரிஷ்கா இன்னமும் பயப்படுத்துகிறது..

    பதிலளிநீக்கு
  2. கனவெல்லாம் கரப்பான் தான். ஒரு 5 மணிநேர சினிமா ஓடி ஓய்ந்தது போல... ஆனால் சுவாரசியமாக..

    கொஞ்சம் கடன் கொடுப்பீர்களா.. இந்தக் கற்பனைத் திறத்தை...

    தமிழ் மணம் முதல் கட்ட வாக்கெடுப்பில் தங்கள் பதிவு தேர்வாகியுள்ளமைக்குப் பாராட்டுகள். அடுத்த கட்ட வாக்கெடுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள் அப்பாதுரை..

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஸ்ரீராம், பத்மநாபன், ஆதிரா,...

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கதையைப் பொறுமையாகப் படித்த அத்தனை பேருக்கும் நன்றி.

    இரண்டு நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்ததன் விளைவு இந்தக் கதையின் கரு எனலாம்.

    1) தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அமெரிகாவில் 'வேகோ' அழிவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். 'apocalyptical' நம்பிக்கைகளோடு இயங்கி மொத்தமாக அழிந்து போன கூட்டத்தில் ஒரு இளங்காதல் தம்பதி சிக்கி உயிர்த் தியாகம் செய்தது.

    2) என் யூத நண்பன் திருமணத்துக்காக ஜெரூசலப் பயணத்தில் என்னை ஒரு தனியிடத்திற்கு அழைத்துச் சென்ற போது நான் நேரில் பார்த்த காட்சி: எங்கள் கண்ணெதிரெ ஒரு தம்பதி ஒருவர் கையை இன்னொருவர் கடித்துக் கொண்டிருந்தார்கள் - literally! 'pagan ritual' என்றான் நண்பன். ரத்தம் கலக்கும் உறவாம். (ரத்தம் குடிக்கும் உறவு போலத் தோன்றியது)

    நண்பனுடன் சேர்ந்து இந்த சம்பவங்களை வைத்து ஒரு மசாலா graphic novel எழுதலாமென்று எண்ணினேன். என் நண்பன் அருமையாகப் படம் வரைவான். பாதியில் நின்று போன ப்ராஜக்ட். பிறகு அரசன் பதிப்பகம் தொடங்கிய போது இதைத் தமிழாக்கம் செய்து புத்தகமாக வெளியிடுவதாகச் சொல்லி, பின் தயங்கிக் கைவிட்டார். கதையின் போக்கை ரசித்தாலும், minor sexual abuse, bestiality, 'அம்மாவைக் கழுத்தை' நெறிப்பதை எல்லாம் அவரால் ஏற்க முடியவில்லை.

    கடைசியில் இங்கே பதிவு செய்ய நினைத்தேன். கொஞ்சம் உதறல் தான். இருந்தாலும் கதையின் அடிப்படையில் காதல் இருப்பதால் முழுவதும் வெளியிடத் துணிந்தேன். பிரமாத கதையெல்லாம் இல்லை, மழை நேர மசாலா, அவ்வளவு தான்.

    அரசனுக்கும் ஒரு காணிக்கை.

    தொடர்ந்து படித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. தமிழ்மண விருது வந்திட்டே இருக்கு.பூதம்கொண்டு வருது.சிலநேரம் கரப்பான் பூச்சியும் !

    கற்பனை...சொல்ல முடில யார்மாதிரின்னு.ஆனாலும் பாதிச்ச விஷயத்தை இப்படி பயம் காட்டி...
    பயம் காட்டி எழுத அப்பாஜிதான்.

    பாராட்ட வயசில்லனாலும் ந்ல்லதை நல்லதுன்னு சொல்லியே ஆகணும்.

    இனியாவது பாட்டு PLS !

    பதிலளிநீக்கு
  6. //நேரில் பார்த்த காட்சி: எங்கள் கண்ணெதிரெ ஒரு தம்பதி ஒருவர் கையை இன்னொருவர் கடித்துக் கொண்டிருந்தார்கள் - literally! 'pagan ritual' என்றான் நண்பன். ரத்தம் கலக்கும் உறவாம். (ரத்தம் குடிக்கும் உறவு போலத் தோன்றியது)//

    இதெல்லாம் பழங்குடியினரின் வழக்கம் அப்பாதுரை.

    ஆதித் தமிழர்களின் மணமுறையிலும் கூட மணமக்களின் கைக் கட்டை விரலில் கீரி இரத்தம் வந்த பின்பு இருவரின் விரல்களையும் இணைத்துக் கட்டுவார்கள் என்று க. அப்பாதுரையின் ஆய்வு நூலிலும் கண்ணதாசனின் குமரிக்கண்டம் என்ற நூலிலும் படித்துள்ளேன்.

    எப்படியோ நல்ல விறுவிறுப்பான கதையைக் கொடுத்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. அப்பாடா ..கதை முடிஞ்சிருச்சு.. இனி பயமில்லாம தூங்கலாம். மரிஷ்கா வேற சே..மனைவி வேற வீட்டுல இல்ல.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஹேமா.. கதையை முழுக்கப் படிச்சதுக்கும் வாழ்த்துக்கும்.

    அடுத்த பதிவு உங்களுக்காகவே. பதிவு செய்யும் பாடல்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி சிவகுமாரன், ஆதிரா, ...

    ஆதிரா, தமிழ்ப் பழங்குடியிலும் ரத்தக்கடியா? சுவாரசியமான விவரத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நல்லா இருந்தது கதை. ஆனால் சடாரென முடித்ததாக தோன்றுகிறது. அண்மைலதான் உங்க பிளாக்க பார்த்தேன். முழுவதும் இதுவரை படிக்க நேரம் இல்லை என்றாலும் படித்தது எல்லாம் பிடித்தே இருக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. மிகவும் நன்றி Anbu. இணையத்தில் இது போல் கிடைக்கும் ஆதரவுக்கும் நட்புக்கும் இணையே இல்லை.

    நிஜமாகவா சொல்கிறீர்கள்? :)
    >>>சடாரென முடித்ததாக தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  12. கரப்பான்.. மரிஷ்கா.. மற்றும் சக்தி பூச்சிகள் அனைத்திலிருந்தும் விடுதலை.. க்ளைமாக்ஸ் எப்படி இப்பூடி.. வக்கிறீங்க.. ;-) ஏதோ தமிழாங்கிலப் படம் பார்த்த உணர்வு. கடைசியில் பம்மலில் முடித்திருக்கலாம். ;-)

    பதிலளிநீக்கு
  13. Freudன் 'Ratman therapy' படிச்சிருக்கியளா? தமிழில் உளவியல் fantasy அதிகம் போல் எழுதக்காணோம். உங்களது நல்ல முயற்சி.

    Ligotti's 'conspiracy against human race' படிச்சிருக்கெங்களோ?. Also, 'Lovecraft - weird writer among us', The Exorcism of Iagsat
    தேடி படிங்கொ. நிறைய எடங்களில் HPLovecraft வாடை வீசுது உங்க கதைப் போக்குல. உங்கள கதை முடியுமட்டும் "faithfully bizzare" :)
    எமது பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி poefan.

    இது எனக்குப் பிடித்த genreக்களுள் ஒன்று. அறிவு/அச்ச வரம்புகளுக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தாவும் சுகம் தனி. ஒழுங்காக எழுதத் தான் வரவில்லை.

    உங்களைப் பற்றி விவரங்கள் அறிய முடியவில்லையே? முடிந்தால் மின்னஞ்சல் அனுப்புங்களேன்? நானும் poe fan. அவருடைய 'விழிக்கும் கண்' கதையைப் படித்து விட்டு சில்லிட்டுப் போயிருக்கிறேன் - கதையின் அசல் தலைப்பு மறந்து விட்டது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களைத் தேடிப் படிக்கிறேன். நன்றி.

    (poe, lovecraft போன்ற 1940க்கு முற்பட்ட பெயர்களைச் சொல்லும் போது ர்ர்ர்ரகசியமாகப் பேச வேண்டும்... ஒருவர் காதில் விழுந்தால் அவ்வளவு தான்.)

    பதிலளிநீக்கு
  15. நல்ல கதை இருப்பினும் பிற்பகுதி பூரான் பாம்பு இறைந்தவர் திரும்பி வந்தது எல்லாம் .....தலை சுற்றி விட்டது.ஒரு வேளை கற்பனை வேண்டுமோ புரிந்து கொள்ள?

    பதிலளிநீக்கு
  16. நல்ல கதை இருப்பினும் பிற்பகுதி பூரான் பாம்பு இறைந்தவர் திரும்பி வந்தது எல்லாம் .....தலை சுற்றி விட்டது.ஒரு வேளை கற்பனை வேண்டுமோ புரிந்து கொள்ள?

    பதிலளிநீக்கு