2010/12/25

மரிஷ்காவின் பூதங்கள்

சிறுகதை


முன் கதை 1 2 3 4 5


மரிஷ்காவின் முகத்தைப் பார்த்ததும் எனக்குள் ஏற்பட்டத் தமிழ்க்கவிதை படித்த மகிழ்ச்சி, தமிழ்ச்சினிமா பார்த்த ஏமாற்றத்தில் முடிந்தது. முகம் மட்டும் தான் இருந்தது. மரிஷ்காவின் உடலைக் காணோம். "என்ன மரிஷ்கா இது? நான் அடிக்கடித் தொட்டுத் தடவி மகிழ்ந்த மென்மையான இரண்டையும் காணோமே? எங்கே உன் கைகள்?" என்றேன்.

"விளையாட்டு போதும்" என்றாள். "நமக்கு நிறைய வேலை இருக்கிறது" என்றபடி நகர்ந்தாள். என் மரிஷ்காவா இவள்?!

மரிஷ்காவின் முகம் மட்டும் அறையைச் சுற்றி வந்தது விபரீதமாகத் தோன்றியது. சுற்றிலும் பார்த்தேன். குகை. அரை இருட்டு. மேலே குமிழ் போல் வாசல். மேலிருந்து வந்த ஒளியில், கவிழ்த்து வைத்த காபி டமள்ர் போல் இருந்தது குகை. மதத்தலைவர்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு நேர்வழிப் பயணம் சென்றதாகச் சொல்லப்படும் ஆன்மாக்களின் கிணறைப் போலவே இருந்தது. மற்றபடி உள்ளறை மாறுபட்டிருந்தது. தரையில் ஒரு உருவம் செதுக்கப்பட்டிருந்தது. முகம் எனக்கு விளங்குவது போல் பட்டது, சரியாகத் தெரியவில்லை. உடலில் அங்கங்கே குழிகள். நான்கு நான்காக வரிசைப்படுத்தி தோளிலிருந்து கால் வரை குழிகள். அவசரக் கணக்கில் நாற்பது தேறியது. கண்ணிரண்டும் குழிகள். சேர்த்து நாற்பத்திரண்டு. குழிக்கணக்கின் மகத்துவம் புரிவது போல் தோன்றியது.

எங்கே குசாக்கள்? துழாவிய பொழுது, செதுக்கப்பட்டிருந்த உருவத்தைச் சுற்றி இருந்த மூன்று வட்டங்கள் புலப்பட்டன. ஒவ்வொரு வட்டத்திலும் இறைச்சித் துண்டுகள் போல் நிறைய இரைந்து கிடந்தன. அவை உயிருடன் இருப்பது போல் நெளிந்தது அருவருப்பாக இருந்தது. மூன்றாவது வட்டத்திற்கு வெளியே, உருவத்தின் காலருகே, பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தன குசாக்கள். குளவி, கரப்பான், தும்பி, பூரான், நட்டு எல்லாமே தெரிந்தது. உருவத்தின் தலையருகே யோகஷைப் பார்த்து அதிர்ந்தேன். மெலிந்து காணப்பட்டாலும் முகம் உடல் எல்லாம் இருந்தது. ஆனால் அரையடி உயரம் கூட இல்லை! ஏறக்குறைய குட்டிச்சாத்தான் போலவே இருந்தார். கரப்பான் சுழற்றிக் காட்டிய எம்டிம் மாலை நினைவுக்கு வந்து. "யோகஷ்! நீங்களா?" என்றேன். எழுந்து என்னருகே வந்தார். காற்றில் பறந்து உயர்ந்து, என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "நீ இங்கே வந்ததில் பெரு மகிழ்ச்சி" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் போகும் பொழுது கவனித்தேன். பின் மண்டையிலிருந்து கீழ்வரை சதையைக் காணோம். இணையண்டத்தில் பார்த்தப் பாம்புச் செதிள்கள். சரிதான்! எங்கிருக்கிறேன்?

"சரியான இடத்தில் தான்" என்றாள் மரிஷ்கா. "சக்திக்கான போராட்டம் இன்றிரவு தொடங்குகிறது. சக்தியைக் கைப்பற்ற நீயும் உன் மகனும் உதவி செய்யப் போகிறீர்கள். அதற்குப் பிறகு நமக்கு மகிழ்ச்சியும் இனபமும் தான்" என்றாள். என் மகனா? எங்கே? "எங்கே நம் மகன்?" என்றேன்.

கேள்வியை எதிர்பார்த்தது போல் மரிஷ்கா என்னை வெட்டிப் பார்த்தாள். யோகஷ் இரண்டு கைகளையும் வீச, காற்றடித்துத் தூசி விலகியது போல் உருவத்தின் தலைப்பகுதியில் படுத்திருந்த மகனின் உருவம் தெரிந்தது. இன்னும் சோனியாகத் தெரிந்தான். "மரிஷ்கா, அவன் நம் மகன். அவனுக்கு உடனே மருத்துவ உதவி தேவை" என்றேன்.

"நீ, நான், மகன் எல்லாரும் அசாதாரணப் பிறவிகள். அவனுக்குத் தேவை மருத்துவம் அல்ல. தியாக வாய்ப்பு. நான் மகத்தான சக்தியைப் பெறச் சிலத் தியாகங்களைச் செய்யப் போகிறான் மகன்" என்றாள் மரிஷ்கா. "அண்டத்தைக் கட்டும் சக்தியில் உனக்கு விருப்பம் இல்லையா? நாம் உழைத்தது இதற்காகத் தானே?"

"எனக்குச் சாதாரணமே போதும் மரிஷ்கா. இந்தச் சக்திகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாய்? காதலை விடவா பெரிய சக்தி? நம் ஒவ்வொரு மூச்சிலும் மகிழ்ச்சி நிம்மதி உற்சாகத்தைக் கலக்கும் காதலை விடப் பெரிய சக்தி எதுவுமே இல்லை. நம் காதல் சக்தியினால் தானே உலகமே இயங்கியது? வா, என்னுடன். பழைய காதலுக்கே போகலாம். மகனுடன் வாழலாம் வா, மரிஷ்கா" என்றேன். "எங்கே, என் கண்களைப் பார்த்துச் சொல்? உனக்குக் காதலில் விருப்பம் இல்லையென்று?"

மரிஷ்காவின் முகம் ஒரு கணம் தயங்கியதைக் கவனித்தேன். அதற்குள் நட்டுவாக்களி அலறியது. "தொடங்கிவிட்டான் புராணத்தை. ஒவ்வொரு முறையும் இதே கதை. காதல், கவிதை என்று எதையாவது சொல்லி குட்டையைக் குழப்பி விடுவதே இவனுக்குத் தொழிலாகி விட்டது. அப்போதே சொன்னேன் மரிஷ்கா, இவனைச் சாப்பிட்டு விடலாமென்று. கரப்பான் தான் குறுக்கே வந்து விட்டான். சீக்கிரம் இவர்களைத் தின்று முடி. சக்திப் போராட்டம் தொடங்கப் போகிறது. நாங்களெல்லாம் உன் அடிமைகள். தலைவி தலைவி" என்றது. மற்ற குசாக்கள் வழக்கம் போல் தொடர்ந்து "தலைவி, தலைவி" என்றன.

நட்டுவாக்களியின் துரோகம் அரசியல்வாதிகளை நினைவுபடுத்தியது. கொஞ்சம் சிந்தித்த போது ஒவ்வொரு குட்டிச்சாத்தானும் ஒருவகை உலக நடத்தையை நினைவுபடுத்தியது. இவர்கள் உலகத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொன்னார்களே?

"இப்போது புரிகிறதா சக்தியின் மகத்துவம்? பூமியில் சாதாரணச் சக்தியோடு வாழக் குட்டிச்சாத்தான் போதுமே? நாமெதற்கு?" என்றாள் மரிஷ்கா. கரப்பான் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. சிந்தனையை உடனே அடக்கிக் கொண்டேன். மரிஷ்கா என்னை ஒரு கணம் வெறித்து விட்டு, யோகஷிடம், "தயாரா?" என்றாள். யோகஷ் தலையசைத்து என் மகனருகே சென்றார். மகனின் கால்களைக் குச்சி போல் உடைத்தெடுத்து உருவத்தைச் சுற்றியிருந்த வெளிவட்டத்தில் வைத்தார். இறைச்சித் துண்டுகள், உடைந்த என் மகனின் கால் துண்டுகளை நோக்கி அசைந்தன. பிறகு யோகஷ் மகனின் கைகளை உடைத்து இரண்டாவது வட்டத்தில் வைத்தார். தொடர்ந்து, உடலை நான்காக உடைத்து முதல் வட்டத்தில் வைத்தார். கடைசியாக, தலையை உருவத்தின் வயிற்றில் வைத்தார். நான் அலறித் துடித்தேன். "மரிஷ்கா, மரிஷ்கா, நில். வேண்டாம். இவன் நம் மகன். நம் காதலின் அடையாளம்". மரிஷ்கா நகரும் இறைச்சித் துண்டுகளையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

"பெரிய தவறு செய்கிறாய். அவனைச் சாப்பிட்டால், முந்தைய முயற்சிகளைப் போலவே இந்த சக்திப் போராட்டத்தில் தோற்றுப் போவாய். அவனை நீ சாப்பிட்டால் என்னால் உனக்கு உதவ முடியாது போகும்" என்றேன்.

மரிஷ்கா என்னைப் பார்த்தாள். "என்ன சொல்கிறாய்?".

"முதலில் மகனின் பாகங்களை ஒன்று சேர், சொல்கிறேன்" என்றேன். "இணையண்டத்தில் பாம்பு அவசரப்பட்டுச் சொன்னதைக் கேட்டேன். மகனை என்னெதிரில் தின்றால் என் சக்தி அழிந்து விடும் என்றது. என் சக்தி அழிந்து விட்டால் உன் போராட்டத்தில் உனக்கு என்னால் உதவ முடியாது. என்னை நீ நம்பியிருப்பது எனக்குத் தெரியும். என் உயிரின் கேடலிஸ்ட் சக்தி என்னவென்றும் எனக்குப் புரிந்து விட்டது" என்றேன். என் கைககளைக் குணப்படுத்திய குளவி என்னை நேராகப் பார்த்துத் தன் மனதுள் நினைத்தது நினைவுக்கு வந்தாலும், அடக்கினேன். "எத்தனையோ பிறவிகளாக என் அரசாங்கம் நடைபெற்று வந்தது. என் உயிரில் என் அரசாங்கத்தின் அத்தனை பிரஜைகளும் கலந்திருக்கிறார்கள் - அதனால் தான் உயிர் விடும் பொழுது என்னைத் தொட்டு உயிர் விடுகிறார்கள். முந்தைய போர்களில் என் எதிரிலேயே நீ என் மகனைத் தின்றதால் என் சக்தி அழிந்தது. என் சக்தியின் அம்சம் என் மகன். அவனைத் தின்பது என்னை அழிப்பது போல் என்பது உனக்கு புரியவில்லையா? காமன் சென்ஸ். யோகஷும் நட்டுவும் கூட்டு; உனக்குத் தவறான யோசனை கொடுத்திருக்கிறார்கள்" என்றேன். என் பேச்சு எனக்கே வியப்பூட்டியது. இது வேறு உலகம். முதலில் இங்கிருந்து தப்ப வேண்டும்.

"நேரம் வீணாகிறது. சக்தி வந்துவிடும்" என்ற யோகஷ், மகனின் கால்துண்டை அசைகின்ற இறைச்சியில் சுற்றி, நடுவிலிருந்த உருவத்தின் மார்பில் ஓங்கிக் குத்தினார். பஞ்சில் ஊசி ஏறுவது போல் கால்துண்டு உடலில் குத்தி நின்றது. இறைச்சி ஊர்ந்து கால்துண்டிலிருந்து உடலுக்குள் புகுந்தது. வேகமாக நகர்ந்து இரண்டாவது வட்டத்திலிருந்த மகனின் கைத்துண்டை எடுத்து இறைச்சியில் சுற்றி உடலுக்குள் ஓங்கிக் குத்த, மறுபடி பஞ்சில் ஊசி. உடல் இப்போது தெளிவடையத் தொடங்கியது. இது என்ன சித்திரவதை? நான் யோகஷைத் தடுத்தேன். "நிறுத்துங்கள்". அவர் இயந்திரத்தனமாய் மூன்றாவது வட்டத்திலிருந்து ஒரு உடல் துண்டை எடுத்து இறைச்சியைச் சுற்றி உடலில் குத்தினார். ஒவ்வொரு குத்திலும் உருவம் உயிர்பெறுவது போல் தோன்றியது.

"அவனை நம்பாதே. நேரத்தை வீணாக்காதே" என்ற நட்டுவாக்களி என்னை நோக்கி வேகமாக வந்தது. யோகஷைத் தடுக்கும் அவசரத்தில் இருந்த என் கால்களைக் கவ்வியது. எட்டி உதைத்தேன். நட்டுவாக்களி உயரே பறந்து கரப்பான் முன் விழுந்தது. சற்றும் எதிர்பாராத ஒன்றைச் செய்தேன். ஒரு வேகத்தில் யோகஷை எடுத்து விழுங்கி விட்டேன். என் செயலைப் பார்த்ததும், கரப்பான் உடனே நட்டுவாக்களியை எடுத்து விழுங்கியது. "கா!" என்றேன் வெறியுடன் பாம்புகளைப் போல். சிறிது தணிந்து, "மரிஷ்கா, நான் சொல்வதைக் கேள், இங்கிருந்து போய்விடுவோம். உன் மேல் எனக்கு வெறுப்பில்லை. வா, நடந்ததை மறந்திருப்போம்" என்றேன்.

"இனி முடியாது. போராட்டம் தொடங்கிவிட்டது" என்றாள். மரிஷ்கா என்னை வியந்து பார்த்தாள்.

"என்னப் போராட்டம்? யாருடன்? என்னுடனா?" என்று சீறினேன். மரிஷ்கா தரையிலிருந்த உருவத்தின் முகத்தைக் காட்டினாள். முகம் இப்போது தெளிவாகியிருந்தது. கண்களுக்கானக் குழிகளிலிருந்து பச்சை ஒளி புகை, போல வரத்தொடங்கியது.

தரையிலிருந்த உருவம், என் அம்மா. என்னைப் பெற்று வளர்த்த அசல் அம்மா.

    நான் மரிஷ்காவை அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தேன். குகையின் மேலிருந்து ஒரு மின்னல் வெட்டியது. இறங்கி வந்தவர் என் அம்மா. பார்ப்பதற்கு சிந்தாளம்மன் போலிருந்தார். இணையண்டத்தில் பார்த்தது போலவே பல பாம்புகள் அம்மாவைத் தொடர்ந்து வந்தன. குகையின் வாசல் சொர்க்கத்துக்குப் போகிறதென்று நினைத்தேன், பம்மலுக்கா போகிறது? "அம்மா, நீங்களா?!" என்றேன்.

என்னைக் கவனிக்காமல், தரையிலிருந்த உருவத்தில் குத்தியிருந்த உடல் துண்டுகளை எடுத்தெறிந்தார். "கா!" என்று சிலிர்த்தார். அதற்குள் அணிகள் உருவாயின. மரிஷ்காவின் பின்னால் குசாக்களும் அம்மாவைச் சுற்றிப் பாம்புகளும் தயாராக நின்றன. "கா!" என்றார் அம்மா மறுபடி.

"அம்மா, நிறுத்துங்கள்" என்றேன். "என்னைத் தெரியவில்லையா அம்மா? இது என்ன விபரீதம்? இது என்ன போர்? நான் உங்கள் மகன். இவள் உங்கள் மருமகள். இவன் உங்கள் பேரன். உங்கள் ரத்தம்".

என்னப் பார்த்து விகாரமாகக் கண்களை உருட்டினார் அம்மா. "மகன், மகள் எல்லாமே நான் தான். புரியாத முட்டாளாக இருக்காதே. எங்கே உயிர்?" என்று தேடினார். தரையிலிருந்த உருவத்தின் வயிற்றிலிருந்த் என் மகனின் தலையை எடுத்தார். வலது கையில் வைத்துக்கொண்டு இடது கையால் அடித்தார். தேங்காய் உடைப்பது போல் என் மகனின் தலை உடைந்தது. மண்டையோட்டை எடுத்து, "கபாலம்" என்றார். அருகிலிருந்த பாம்பிடம் கொடுத்து, "மையை எடுத்துக் கொடு, சீக்கிரம்" என்றார்.

நான் பாய்ந்து தட்டி விட்டேன். கபாலம் மரிஷ்காவின் அருகில் விழுந்தது. பிடிக்கப் போன பாம்பை மரிஷ்காவுக்குக் காவலாகக் குறுக்கே புகுந்த கரப்பானும் இரண்டு தலைப்பூரானும் ஆளுக்குப் பாதியாக விழுங்கின. நான் கபாலத்தை எடுக்க விரைந்தேன். அம்மாவின் சேனையும் மரிஷ்காவின் குசாக்களும் அடித்துக் கொண்டன. மரிஷ்காவும் என் அம்மாவும் ஆளுக்காள் சீறினார்கள். மரிஷ்காவின் கண்களிலிருந்து தீப்பொறி பறந்தது.

அம்மா சீறினார். "கா!". அவர் நாக்கு இருந்த இடத்தில் இரண்டு பாம்புகள் இருந்தன. "க்ருஷ்ணா, சப்தம் கேட்குதே" என்று எனக்கு அமைதியாகத் தாலாட்டுப் பாடிய குரல், இப்போது "கா!" என்கிறதே? என்னை உச்சி மோந்த உதடுகளுக்குள் இன்றைக்குச் செதிள் வைத்தப் பாம்பு புரள்கிறதே? சாதாரணப் பிறவிகளாக அன்புடன் பழகிய அம்மாவும் மனைவியும் இப்போது பேய்களாக அடித்துக் கொள்கிறார்களே? நான் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அம்மாவின் வாய்க்குள்ளிருந்து வந்த பாம்புகள் மரிஷ்காவின் தலையை உருட்டித் தள்ளின. மரிஷ்கா திணறினாள்.

துடித்தேன். மரிஷ்காவுக்கு என் உதவி தேவை. என்ன செய்வது? மறுபடி கை கால் உடைத்து ரத்தம் சிந்த வேண்டுமா? "வேண்டாம் அம்மா. போராட்டத்தை நிறுத்துங்கள். நிரந்தரமாக நிறுத்துங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றேன்.

"இந்தப் போராட்டம் எத்தனையோ யுகங்களாக நடக்கிறது. இதை நிறுத்த ஒரே வழி தான் இருக்கிறது. உனக்கே தெரியும்" என்றார் அம்மா.

அவர் சொன்னது எனக்குப் புரிந்தது.



(பூதத்தைப் பின்தொடர ►►)

19 கருத்துகள்:

  1. கடைசியில் மாமியார் மருமகள் சண்டைதானா!!
    //குகையின் வாசல் சொர்க்கத்துக்குப் போகிறதென்று நினைத்தேன், பம்மலுக்கா போகிறது? //
    எந்த அண்டத்துக்குப் போனாலும் பம்மல் விடாது போலிருக்கே.
    நல்லா இருக்கு. இப்ப அருவருப்பெல்லாம் பழகிவிட்டது

    பதிலளிநீக்கு
  2. விபரீத கதைன்னாலே பயமாத் தான் இருக்கு..படிக்கவும் முடியலே..
    படிக்காம இருக்கவும் முடியலே...

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.
    https://twitter.com/sridar57#

    பதிலளிநீக்கு
  3. பயமுறுத்தி பார்க்கவேண்டுமென்றே எழுதிய கதை மாதிரி இருக்கிறது..இந்த பகுதி ரொம்ப பய படுத்தி எடுத்து விட்டது.. அம்மா பாத்திரத்தின் நுழைவு சற்று சாந்த படுத்தும் என பார்த்தால் அது அதற்கு மேல்...
    பம்மல் காரர்...இஸ்ரேல் மரிஷ்கா.... தீரா மோகம்..... மகன் மேல் பாசம்...அம்மாவின் வித்தியாச கோபம்....மனதை எடுத்து விரித்தால் இப்படித்தான் குழப்பமும் பயமும் நிறைந்த படமாக இருக்குமோ....
    திருப்பி பார்க்க வேண்டாம் என்றிருக்கிறதே...அப்ப தொடருமா....சரி யுகப்போரட்டத்தில் பம்மல் புரிந்ததை என் போன்ற ட்ரி மண்டைகளுக்கும் விளக்கி விடுங்கள்....

    பதிலளிநீக்கு
  4. //தமிழ்க்கவிதை படித்த மகிழ்ச்சி, தமிழ்ச்சினிமா பார்த்த ஏமாற்றத்தில் முடிந்தது. //

    //"என்ன மரிஷ்கா இது? நான் அடிக்கடித் தொட்டுத் தடவி மகிழ்ந்த மென்மையான இரண்டையும் காணோமே? எங்கே உன் கைகள்?" என்றேன். //

    குழிகள், இறைச்சிகள்... கசாப்புக் கடைக்குள் புகுந்த உணர்வு... பச்சை பசேலென... ஆன்மாக்களின் கிணறு... அடிச்சு நகர்த்துங்க அப்பாஜி... நல்லா வேகமா போகுது....
    ஏழேழு உலகிலும் மாமியார் மாட்டுப்பெண் சண்டை தான் என்று நிரூபிக்க முயற்சி செய்வது ரொம்ப யதார்த்தமாக உள்ளது.. ;-) ;-)

    பதிலளிநீக்கு
  5. நான் நினைத்த அதே வார்த்தை அப்படியே கீதா சந்தானம் கமெண்ட்! மாமியார் மருமகள் சண்டைக்கு நடுவே தோட்டத்தில் படுத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஃபாண்டசி கதைகளைப் படித்துத் தூங்கிப்போய் மேலே ஊர்ந்த கரப்பான் மற்றும் பூசிகளின் தாக்கத்தில் வந்த கனவின் விரிவாக்க சிந்தனை போல உள்ளது...(ஷ்...அப்பா..)

    என் மகன் சிறு வயதில் தாங்க முடியாத கோபம் வரும்போது "கா" என்று அலறுவான். அவ்வப்போது சொல்லிச் சிரிப்போம். இப்போது பயமாக இருக்கிறது!!
    //"சிந்தனையை உடனே அடக்கிக் கொண்டேன்."//

    முடியும்? அப்போ சக்தி கிடைச்சுட்டுதே..இன்னும் என்ன சக்தி?

    தமிழ்க் கவிதை, தமிழ் படம், கவிழ்த்த காபிக் கோப்பை, நல்ல வர்ணனைகள். மென்மையான ரெண்டு..........கைகளா...ஓகே ஓகே..டிபிகல் அப்பாதுரை....

    பதிலளிநீக்கு
  6. இங்கயும் மாமியா....மருமகளா...!

    வாசிக்க வாசிக்க அருவருப்பா இருக்கு பூச்சி புழு சதை இரத்தம்ன்னு !

    பதிலளிநீக்கு
  7. வருக geetha santhanam, ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, பத்மநாபன், RVS, ஸ்ரீராம், ஹேமா, ...

    சாதாரண வளர்ந்த ஆணின் நிம்மதியும் மகிழ்ச்சியும் இந்த இரண்டு சக்திகளின் இடையில் சிக்கித் தவிப்பதை அப்படியே சொன்னால் சுவையாக இல்லையே? அதான்:)

    ஒரு ஜெரூசலப் பயணத்தில் நான் நேரில் பார்த்த விபரீதத்தை என்னுடைய dark lens பார்வையிலிருந்து எழுதியது..

    பிறகு இந்த மாமியார்-மருமகள் cold war சொந்த அனுபவத்திலிருந்தும்; குறிப்பாக ஒரு குழந்தை பிறந்ததும் இரண்டு சக்திகளும் போடும் ஊமைச் சண்டை இருக்கிறதே - ரத்தக்காட்டேறிகள் பரவாயில்லை என்று தோன்றும்.

    இதுக்கே இப்படி சொல்லிட்டீங்களே ஹேமா, அருவருப்பே இப்பத் தானே தொடங்கியிருக்கு ?!

    பதிலளிநீக்கு
  8. “//முகம் மட்டும் தான் இருந்தது. மரிஷ்காவின் உடலைக் காணோம். "என்ன மரிஷ்கா இது? நான் அடிக்கடித் தொட்டுத் தடவி மகிழ்ந்த மென்மையான இரண்டையும் காணோமே? எங்கே உன் கைகள்?"//

    //நான் பாய்ந்து தட்டி விட்டேன். கபாலம் மரிஷ்காவின் கையில் விழுந்தது.//

    கத நல்லாதான போயிகிட்டு இருக்கு?

    பதிலளிநீக்கு
  9. Anbu, பிடிச்சீங்களே உடும்புப் பிடி!
    திருத்தி விடுகிறேன்.
    படிச்சதுக்கும் பிடிச்சதுக்கும் ரொம்ப நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  10. பயமுறுத்த எழுதவில்லை பத்மநாபன், பயந்து போய் எழுதியது.. :)

    பதிலளிநீக்கு
  11. தமிழ் மணம் முதல் சுற்றுல நான்கு வெற்றி போலிருக்கே...!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள். மென்மேலும் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. மிகவும் சந்தோஷம். வாழ்த்துக்கள் அப்பாதுரை! வலைப்பதிவில் பிரபலமானது போல், கூடிய விரைவில் தமிழ் பத்திரிகைகளிலும் உங்கள் எழுத்துக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. பல்லி ஓணான் கரப்பான்பூச்சினு பாத்தா மெள்ளப் பெண்டாட்டி, அப்பா, பிள்ளைனு முன்னேறி அம்மாவையும் பிடிச்சி.. யாரைப் பாத்தாலும் பயமா இருக்குதே? இது என்ன கதை? இங்க் கொட்டி கன்னாபின்னானு படம் வரையச் சொல்லுவாங்களே, அது மாதிரியா?

    பதிலளிநீக்கு
  15. //ஒரு வேகத்தில் யோகஷை எடுத்து விழுங்கி விட்டேன். //
    எனக்கு ஏனோ நண்பர் ஒருவர் ஷாங்காயில் பார்த்ததாய் சொன்ன ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வந்தது. ஒரு கம்யூனிஸ்ட் பணக்காரர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் விருந்தினர்களுக்கு கொடுத்த விருந்தில் நட்டநடுநாயகமாய் உயிரோடு ஒரு காட்டு விலங்கை (முள்ளம்பன்றி என்று நினைவு) அடுப்பில் வைத்து வேகவைத்து சாப்பிட்டார்களாம்!, நம் நண்பர் தலைதெரிக்க ஓடியது வேறுகதை.

    அருமையான நடை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி ஸ்ரீராம், geetha santhanam, meenakshi

    பதிலளிநீக்கு
  17. வாங்க ராமசுப்ரமணியன், வசந்தா நடேசன், ...

    ஷேங்கேய் நண்பர் கூறியதில் உண்மையிருக்கலாம்; வாழ்க்கை விசித்திரங்களை கற்பனையில் கூடப் பார்க்க முடியாது என்பது என் அனுபவம் வசந்தா நடேசன்.

    சில அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் பொழுதே அறிவுக்கு அப்பாற்பட்டு நிற்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு தாம்பரம் ரெயில் நிலையத்தில், இரவு பனிரெண்டு மணி இருக்கும்

    பதிலளிநீக்கு
  18. //ஒரு தாம்பரம் ரெயில் நிலையத்தில், இரவு பனிரெண்டு மணி இருக்கும்//

    நீங்க அறிவை தாண்டறிங்களா...சொல்லுங்க ,சொல்லுங்க ..என்னாச்சுங்க அப்புறம்?

    பதிலளிநீக்கு
  19. பதிமூணு வயசுல எல்லாமே அறிவுக்கு அப்பாற்பட்டது தான் பத்மநாபன் எனக்கு. (இப்பவும் அப்படித்தான்னு வைங்களேன்)

    பதிலளிநீக்கு