2010/12/07

மரிஷ்காவின் பூதங்கள்

சிறுகதை


முன் கதை 1 2விளையாட்டாக, "மரிஷ்கா, நீ மறைத்த உண்மைகள் எல்லாம் எனக்கு இப்போதே தெரிந்தாகணும். எங்கே, சட்டையைக் கழற்று பார்க்கலாம்?" என்றேன்.

"போடா, விளையாட நேரமில்லை. நான் ஏன் உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன் தெரியுமா?" என்றாள்.

அவள் தோள்களை மெள்ளப் பிடித்து விட்டேன். "உன்னுடைய தலைவிதி என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்? நீ என்னைக் காதலிக்கவும் கைப்பிடிக்கவும் வேறு எந்தக் காரணமும் எனக்குத் தோன்றவில்லை மரிஷ்கா" என்றேன்.

சிரித்தாள். "காலத்தால் அழியாதக் காதல்தான் காரணம்" என்றாள். கைகளால் என் கழுத்தைச் சுற்றித் தன் முகத்தருகே இழுத்துக் கொண்டாள். மரிஷ்காவின் கண்களில் கரும்பச்சை நிறத்தில் இதற்கு முன் பார்த்திராத ஒரு ஒளி! "இந்தப் பிறவியில் தோன்றிய காதல் அல்ல. எத்தனையோ பிறவிகளாய் நாம் காதலர்கள். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு உறவுகளில் நாம் கலந்தும் பிரிந்தும் இருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சக்தி மாற்றத்திற்கான வாய்ப்பைப் பெறும் முயற்சியில் இதுவரைத் தோற்று வந்தோம். இந்த முறை வெற்றி பெறுவோம்" என்றாள்.

"இரவு என்ன சாப்பிட்டாய்? கோஷர் தானா, பார்த்தாயா?" என்றேன். பொறுமையிழந்தேன். "மரிஷ்கா. என்னை உனக்குத் தெரியும். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. உன் நம்பிக்கைக்கு நான் தடை சொல்லவில்லை. ஆனால், எதற்கு இதெல்லாம் இப்பொழுது சொல்கிறாய்?"

"எதற்கா? நாம் பிரியும் நேரம் வந்து விட்டது.. அதற்கு முன் உன்னிடம் இன்னும் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். குறுக்கே பேசாமல் கேள்" என்றாள்.

திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். "மரிஷ்கா!" என்று அவளை மடியிலிருந்து எழுப்பி உட்காரவைத்தேன். அவள் கண்களிலிருந்து பிசுக்கு போல் ஒரு திரவம் வரத்தொடங்கியது. ரத்தமா? அதிர்ந்தேன். தொடப்போன என் கைகளைத் தட்டி, அவள் மறுபடியும் என் மடியில் சரிந்தாள். "முட்டாள்! என்னை எழுப்பாதே. குறுக்கிடாமல் கேள்" என்றாள். அவள் குரலில் தொனித்தப் புது அதிகாரத்தில் கொஞ்சம் பயந்தேன். ஒரு கண அமைதிக்குப் பிறகு என் மடியில் பழைய மரிஷ்காவாகப் பேசினாள்.

"நாம் உலகமெல்லாம் சுற்றிய போது, வாரத்தில் ஐந்தாம் நாள் நான் தனிமையை நாடக் காரணம் இருந்தது. ஒவ்வொரு முறையும் வியாழன் இரவு உனக்கு மயக்க மருந்து கொடுத்து வந்தேன். அதனால்தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீ தூங்கி வழிந்தாய். நான் தனியாகச் சென்று யோகஷ் சொன்னபடி நமக்குத் தேவையான நாற்பத்திரண்டு சக்திகளை உலகமெல்லாம் தேடிப் பிடித்தேன்" என்றாள். தன் அப்பாவைப் படர்க்கையில் பெயர் சொல்லிப் பேசியதை இப்போது தான் கேட்டேன். தொடர்ந்தாள். "இந்தச் சக்திகள் நம் படை வீரர்கள். சக்தி மாற்றத்தின் போது, இவையெல்லாம் நாம் உலகை ஆளத் தேவையான அடிப்படைக் கருவிகள். நீ தளபதி. நீ தான் இந்த வீரர்களைச் சேர்த்து ஒருங்கிணைந்த படையாக்கி நம் மகனுக்கு உதவ வேண்டும். அவன் நம்மை ஒன்று சேர்ப்பான்". அவள் துடிக்கத் தொடங்கினாள். "செய்வாயா?" என்று கெஞ்சினாள்.

அவள் துடிப்பை நிறுத்த வழி தேடாமல், தோன்றாமல், "செய்வேன் மரிஷ்கா. அந்தச் சக்திகளை எப்படி ஒன்று சேர்ப்பது?" என்றேன்.

"நேரம் வரும்பொழுது அழைப்பு வரும். உதவியும் வரும். அப்பொழுது இதோ இந்த மாலையை அணிந்து கொள். அதுவரை இந்த மாலையைக் காப்பாற்றி வா. மறந்துவிடாதே, நம் மகனின் மீட்பும், உலக சக்தி மாற்றமும் உன் செயலில் தான் இருக்கிறது. உன் ரத்தம். அவனைக் காப்பாற்று. உன்னையே நம்பி இருக்கிறேன். நான் சொன்னதை மறந்து விடாதே. என்னை ஏமாற்றி விடாதே" என்றாள். தன் எலும்புக்கூட்டு மாலையைக் கழற்றிக் கொடுத்தாள்.

"நம் மகன் காணாமல் போய்விட்டானே?"

"எப்படிக் காணாமல் போனானோ, அப்படியே திரும்பி வருவான். தயாராக இரு. உன்னையே நம்பியிருக்கிறேன். விரைவில் சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு, புத்தகத்தை மூடி வைப்பது போல் இறந்து போனாள். என் மடியில் படுத்தபடி என்னைத் தொட்டுக் கொண்டிருந்ததனாலோ அல்லது எனக்கு இருப்பதாகச் சொல்லப்படும் கண் காணாத சக்தியினாலோ என்னவோ, அவள் உயிர் பிரிந்ததை என்னால் மிகத்தெளிவாக - ஓட்டைப் பொட்டலத்திலிருந்து சர்க்கரை கொட்டி வெளியேறி விழுவது போல் - உணர முடிந்தது. அதைவிட விபரீதமாக அவள் உடல், 'மரிஷ்கா!' என்று நான் அலறிக்கொண்டிருந்த போதே மறையத் தொடங்கியது. சில நிமிடங்களில் அவள் உடல் என் கண் முன்னால் முழுவதுமாகக் கரைந்து மறைந்தது.

ஒரு வருடம் போல் அதிர்ச்சியில் இருந்தேன். அத்தனை விசித்திரங்களின் பின்னணியிலும் மரிஷ்காவை நான் மிக நேசித்தேன். அவள் பிரிவு என்னை வாட்டியது. மெள்ளப் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். இப்பொழுது இந்தக் கரப்பான் தோன்றி மரிஷ்கா என்கிறது!

    வி பறக்க இரண்டு கப் டீயும் சில பிஸ்காப் இனிப்பு வறுவல்களும் ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு வந்தேன். தட்டை நடுவறை மேசைமேல் வைத்துவிட்டு வசதியாக உட்கார்ந்தேன். என்னைத் தொடர்ந்து வந்த கரப்பான் தட்டருகே அமர்ந்தது. நான் என் டீயை எடுத்தபடி, "பூச்சி..பாத்து டீ குடி... கப்புல குப்புற விழுந்தால் அப்புறம் நான் சூப் சாப்பிட வேண்டியிருக்கும்" என்றேன்.

"ஹாஹா!" என்ற கரப்பான், ஒரே மூச்சில் சூடான டீயைக் உறிஞ்சிக் குடித்ததைப் பார்த்து பிஸ்காபைத் தவற விட்டேன். "டீ அருமை. இதான் முதல் அனுபவம்" என்ற கரப்பான், ஒரு வறுவலைக் கொரித்து மெல்லத் தொடங்கியது.

"நாப்பத்திரண்டு..." என்றேன். "எங்க ஊர் போலீஸ் ஏட்டைக் கூப்பிடுவது போல் ஒரு பெயர். ஏன் என்னைத் தொந்தரவு செய்கிறாய்? மரிஷ்காவை உனக்கு எப்படித் தெரியும்? மரிஷ்கா இறந்து போய் இரண்டு வருடமாகிறதே?"

சிரித்தது. "மரிஷ்கா இறந்து போனாளா? அவ உடலை எரிச்சியா புதைச்சியா?" என்றது. பூச்சிக்கு மரிஷ்காவை நிச்சயம் தெரியும் என்றுப் புரிந்தேன். பதில் சொல்லாமல் இருந்த என்னிடம், "கேள், மரிஷ்காவுக்கோ யோகஷுக்கோ எனக்கோ ஏன் உனக்கோ கூட தற்காலிக அழிவு உண்டே தவிர, நிரந்தர முடிவு கிடையாது. நீ பயந்துவிடக் கூடும் என்றுதான் யோகஷ் உடல் கரைவதைப் பார்க்கவிடாமல் உன்னைச் சாமர்த்தியமாகத் தடுத்து விட்டாள் மரிஷ்கா" என்றது.

"யார் நீ? யார் மரிஷ்கா? யார் யோகஷ்?" என்றேன். தடுமாறினேன்.

"எல்லாம் இப்ப கேளு" என்றது. "நான் சொல்வதைப் பயப்படாமல் கேள். மரிஷ்காவின் கைப்பொம்மை போல நடந்தாயே தவிர ஒரு முறையாவது ஏன் என்ன யார் என்று யோசித்திருக்கிறாயா? நீ மனதில் நினைப்பதை நான் புரிந்து கொள்வது போல் மரிஷ்காவும் புரிந்து கொண்டாள், நினைவிருக்கிறதா? நீ அவளையே கவனித்ததால் இந்த விசித்திரங்களையெல்லாம் கவனிக்கவில்லை. நீ நான் மரிஷ்கா யோகஷ் எல்லாருமே ஒரு விதத்தில் தேவர்கள். தேவதைகள். சாத்தான்கள். மந்திரவாதிகள்... எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்" என்றது.

"இப்ப நீ என் முன்னால் வந்தது ஏன்?"

"மரிஷ்கா இறக்கும் பொழுது சொன்னாளே, எங்கே அந்த மாலை? அதை அணிந்து கொள். உன் மகன் திரும்பும் நேரம் வந்துவிட்டது. அவனைக் காப்பாற்ற வேண்டும்" என்றது. பிறகு அவசரமாக ஏதோ சொன்னது.

"கடைசியா என்ன சொன்னே?"

பூச்சி பெருமூச்சு விட்டது போலிருந்தது. "அதிர்ஷ்டம் இருந்தா உன்னையும் காப்பாத்திக்கலாம், என்னையும் காப்பாத்திக்கலாம்" என்றது. புரியாமல் விழித்த என்னை, "அது ஒரு கதை. வேண்டாத வேலை. பொல்லாத ஆசை. எனக்கேன் பொல்லாப்பு? போய் மாலையை எடுத்து வா" என்றது.

"நீ விவரமெல்லாம் சொன்னால் தான். இல்லையென்றால் இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை" என்றேன்.

"யுகம் யுகமா உன்னைத் துரத்தி, ஆசைகாட்டி, நம்பிக் கடைசியில் இழப்பதும் அழிவதுமே வேலையாகப் போனது எனக்கு. எப்படியோ இருக்க வேண்டிய நீ, இப்படி மரிஷ்காவுக்கு அடிமையா ஆயிட்டியே" என்ற பூச்சியின் குரலில் இரக்கமும் நடுக்கமும் ஒலித்தது. "இதோ பார், அந்த மாலையைப் போட்டுகிட்டா நான் இதெல்லாம் சொல்லமுடியாது. ஆபத்து. அதனால் இப்பொழுதே சொல்கிறேன், நடப்பது நடக்கட்டும்" என்றபடி என் தோளருகே பறந்து வந்து உட்கார்ந்தது. "மரிஷ்காவை நம்பாதே. ஒவ்வொரு பிறவியிலும் உன்னைப் பயன்படுத்தி, ஏமாற்றி, அழித்து.. அடுத்த சக்தி மாற்றம் வரை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள் மரிஷ்காவும் அவள் எதிரியும்"

"நிறைய டீயும் பிஸ்காபும் இருக்கு" என்று சாய்ந்து உட்கார்ந்தேன்.

"மரிஷ்காவும் அவள் எதிரியும் எத்தனையோ பிறவிகளாக இந்த உலகத்தை இயக்கி வருகிறார்கள். இயக்கங்கள் அத்தனைக்கும் அவர்கள் தான் காரணம். அவர்களின் சக்தியைத் துதிபாடி நாமெல்லாருமே அவர்களின் அடிமைகளாக இயங்கித் துணை புரிகிறோம். எங்களுக்கும் உனக்கும் நிரந்தரமாக விடுதலை கிடைக்க வேண்டுமென்றால் அது உன்னால் தான் முடியும்"

"என்ன செய்யலாமென்கிறாய்?" என்றேன் கிண்டலாக.

"சுலபம். மரிஷ்காவையும் அவள் எதிரியையும் அழிக்க வேண்டும். ஒவ்வொரு சக்தி மாற்றத்தின் போதும் இதைச் சொல்கிறேன், நடக்காமல் போய்விடுகிறதே?" என்றது.

"பூச்சி, உன்னை அழிக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்றேன்.

"நான் எப்படியும் அழியத்தான் போகிறேன். அதற்கு முன்னால், நீ யார் என்பதைப் புரிந்து கொள். உன் மகன் யார் என்பதைத் தெரிந்துகொள்" என்றது. "உன் படுக்கையறைக்குள் பூட்டி வைத்திருக்கிறாயே, மரிஷ்காவின் எலும்புகூட்டு மாலை, அதை எடு முதலில். ஒருவேளை இந்த முறை என் கனவு பலிக்கலாம். சீக்கிரம்" என்று அவசரப்படுத்தியது.

மாலையை எடுத்து வந்தேன். "அணியாதே, பொறு, பொறு.." என்றது. வேகமாக மாலையைப் புரட்டி ஒரு எலும்புக்கூட்டைக் காட்டியது. "யார் தெரியுதா?" என்றது.

கவனித்தேன். அசப்பில் பூச்சியைப் போலவே இருந்தது. "ஆமாம், நானே தான். என்னை ஒரு பூதமாக கட்டி வைத்திருக்கிறாள் மரிஷ்கா" என்றபடி மாலையை மறுபடிப் புரட்டி இன்னொரு கூட்டைக் காட்டி, "இது உன் மகன்" என்றது. பார்த்தேன். "அப்படி இல்லையே?" என்றேன். "நீ மீண்டும் உன் மகனைப் பார்க்கும் பொழுது புரியும். இது யார்?" என்று இன்னொரு கூட்டைக் காட்டியது. யோகஷ்! மறுபடியும் மாலையை வேகமாகப் புரட்டி ஒரு கூட்டை என் முன் பணிவோடு வைத்தது. எழுந்து உட்கார்ந்தேன். என்னைப் போலவே இருக்கிறதே என்று திடுக்கிட்டேன்.

"நீயே தான். நீயும் ஒரு குட்டிச்சாத்தான். புரிகிறதா? மரிஷ்காவின் கைப்பொம்மை" என்றது. பிறகு என்னைப் பார்த்து, "இப்படியே இருக்கப்போகிறாயா? அல்லது உனக்கும் எங்களுக்கும் விடுதலை கிடைக்க வழி செய்வாயா?" என்றது.


(பூதத்தைப் பின்தொடர ►►)

11 கருத்துகள்:

 1. புத்தகத்தை மடிப்பது போல இறந்து போனாள்..! ஓட்டை பொட்டலத்திலிருந்து சர்க்கரை விழுவது போல...புதிய வர்ணனைகள். அடுத்த வரியில் 'சட்'டென ஒரு வருடம் ஓடி விடுகிறது. ஓ...ஃ ப்ளாஷ் பேக் முடிவா? 'கப்புல குப்புற விழுந்தால் சூப்பு' ஹா ஹா ஹா... சுவாரஸ்யமாகப் போகிறது. அடுத்தது என்ன? காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 2. அடுத்த பூதம் வரட்டும்.காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. மரிஷ்கா அவ்வளவு பரபரப்பாக இருந்துவிட்டு இப்படி பொசுக்கென்று தவறியது கஷ்டமாகத்தான் இருக்கிறது ...கரப்பானின் செய்திகள் ஒவ்வொன்றும் திடுக்கிட வைக்கிறது ... என்ன ஆகுமோ ... ஏது ஆகுமோ ஒரே டென்ஷன் .... ஸ்ரீ குறிப்பிட்டது போல் இப்பதிவிலும் உவமைகள் -புத்தகம் மடிப்பது, சர்க்கரை பொட்டலம் நச் ......

  பதிலளிநீக்கு
 4. சீக்கிரம் அந்த மாலையை எடுத்து கழுத்தில் போட்டுக்கொள்ளுங்கள். அடுத்தது தொலைந்து போன மரிஷ்கா சக்தியின் பிள்ளை வருமான்னு பார்க்கணும். அந்த 42 என்ன ஒரு 420யான்னு தெரியணும்? டீ குடிச்சுட்டு சக்தி மாற்றம் கேக்குது. அந்த மரிஷ்கா "குட்டி" இவ்வளவு சாத்தான்களை எதற்க்காக வைத்திருக்கிறாள் என்று எனக்கு தெரிந்தாக வேண்டும். நல்லாப் போகுது விபரீதங்கள். ;-) (இப்பெல்லாம் விபரீதத்துக்கு நம்பர் போடறதில்லையே.. ;-) )

  போகன் செக்குக்கு மேட் வையுங்க... ;-)

  மற்றபடி பத்துஜி, ஸ்ரீராம் போன்ற கதா ரசனையாளர்கள் இரசித்ததை இந்த சிற்றறிவும் ரசித்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அப்பாஜி...சாதரணமான பூதக்கதை இல்லை இது.காதலும் மாலையுமா வர்ணணையோடு கரப்பான் பூச்சி பற்றிய அருவருப்பைக்கூட தள்ளி வைத்துவிட்டு வாசிக்கத்தூண்டுகிறது.
  தொடருங்கள்.பூதம் வரட்டும் !

  பதிலளிநீக்கு
 6. வருக ஸ்ரீராம், தமிழ் உதயம், பத்மநாபன், RVS, ஹேமா,... ரசித்தமைக்கு நன்றி.

  ஹேமா.. சரியாக் கண்டுபிடிச்சீங்க.. இதை ரெண்டு சக்திகளுக்குக்கிடையே சிக்கிய காதல் சாகசக் கதைனு சொல்லலாம் (எழுத ஒரு முயற்சின்னும் சொல்லலாம்:). பூதம் எல்லாம் கருவிகள்.

  (பேய்க்கதைக்கும் பூதக்கதைக்கும் இருக்கும் வித்தியாசத்தை சட்டென்று மறந்து போய் இதை பேய்க்கதை என்று நினைத்துப் படிக்கிறவர்கள் லேசாக ஏமாறுவார்களோ என்று தோன்றுகிறது :)

  பதிலளிநீக்கு
 7. குட்டிச்சாத்தன்,பூதம்
  ஜியூஸ். வாட் நெக்ஸ்ட்!! பயமாகத்தான் இருக்கு. நல்ல முயற்சி துரை.
  very convincing and compelling.

  பதிலளிநீக்கு
 8. இனிமேல் கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே பயமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.
  தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. "உடம்பு உயிர் எடுத்ததோ, உயிர் உடம்பு எடுத்ததோ" என்னும் சிவவாக்கியரின் பாடல் நினைவுக்கு வந்தது. வளமான கற்பனை.

  பதிலளிநீக்கு
 10. வாங்க வல்லிசிம்ஹன், சென்னை பித்தன், சிவகுமாரன், ...

  கருத்துக்கு நன்றி.

  கிட்டத்தட்ட பத்து நாளாய் உடல்நிலை சரியில்லை; கணினி பக்கம் அதிகம் வரவில்லை. பனிபெய்து அட்டகாசம் செய்கிறது. இதைத் தடுக்க ஏதாவது பூதம் கிடைத்தால் பரவாயில்லை.

  பதிலளிநீக்கு
 11. என்ன ஆச்சு? flu ஆ?. இப்ப எப்படி இருக்கு? take care.

  பதிலளிநீக்கு