2010/12/13

மரிஷ்காவின் பூதங்கள்

சிறுகதை


முன் கதை 1 2 3அமைதியாக இருந்தேன். "நான் சொல்வதில் நம்பிக்கையில்லையா? நீ மற்றவர் போலில்லை" என்றது பூச்சி.

"பேசும் கரப்பானைக் கண்ணெதிரே பார்த்தபிறகு நம்பாமல் இருப்பேனா? நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அவசியமில்லை. நேரமுமில்லை. இதெல்லாம் முன்பிறவிகளில் நடந்திருக்கலாம், எக்கேடோ கெடட்டும். இப்போது நான் எடுத்திருப்பது இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பிறவி. பூதம், சக்தி, எம்டிம் எல்லாம் எனக்கு ஒத்துவராது. இந்தப் பிறவிக்கேற்றபடி இருந்து விட்டுப் போகிறேன். நீ தாராளமாக இங்கே இருக்கலாம் - எனக்குப் பேச்சுத் துணையாக. இல்லையென்றால் பூச்சிக் கட்டுப்பாட்டு மையத்தைக் கூப்பிட்டு இந்த வீட்டைச் சுத்தம் செய்யச் சொல்லப்போகிறேன்" என்றபடி எழுந்தேன்.

"நான் சொல்வதைக் கேள். உன் மகனைக் காப்பாற்றுவோம். அதற்குப் பிறகு உனக்கு என்ன தோன்றுகிறதோ அப்படியே செய். உன் மகனைச் சந்திக்க விருப்பமா? அல்லது அதிலும் இந்த நூற்றாண்டு நுட்பம் ஏதாவது இருக்கிறதா?"

என் மகன்! பத்து வருடங்கள் போலாகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அப்படி ஒன்றும் பாசமோ அன்போ இன உணர்வோ ஏற்படவில்லை. நெஞ்சிலும் வயிற்றிலும் சுருளும் என்பார்களே, ஒன்றுமே தோன்றவில்லை. மரிஷ்காவின் பிரிவு என்னைப் பாதித்ததே தவிர, மகனின் பிரிவு மறந்தேவிட்டது. "என் வாழ்க்கையில் மகனுக்கு இப்போது இடமில்லை. தொலைந்தவன் தொலைந்தவனாகவே இருக்கட்டும்" என்றேன்.

"நில். விவரம் புரியாமல் பேசுகிறாய். ஒவ்வொரு பிறவியிலும் உன்னோடு இதே தொழிலாகி விட்டது. உன்னை வற்புறுத்தி மனம் மாற்றுவதற்குள் என் சிறகு கழன்றுவிடுகிறது. மாலையை அணிந்து கொள். மகனின் நிலை புரியும். அதற்குப் பிறகு உன் விருப்பம்" என்றது மறுபடி.

எம்டிம் மாலையை அணிந்துகொள்ள முதலில் இருந்த விருப்பம் ஏனோ தணிந்து விட்டது. "ஆமாம், நீ தான் பூதம் என்கிறாயே? உனக்கு இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி என் மகனைக் காப்பாற்ற வேண்டியது தானே?" என்றேன் கிண்டலாக.

"இவ்வளவு படித்திருக்கிறேன், புது நூற்றாண்டுக்காரன் என்றெல்லாம் பேசுகிறாயே, பூதம் குட்டிச்சாத்தான் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்கிறதே?" என்று என்னைப் பார்த்தது. "எங்களுக்குப் பெரும் சக்திகள் கிடையாது. மற்ற குட்டிச்சாத்தான்களுடன் சேர்ந்து பெரிதாக ஏதாவது செய்வோமே தவிர, தனிப்பட்ட முறையில் நாங்கள் சின்னச் சின்ன மாயங்கள் செய்வோம், அவ்வளவு தான். உதாரணமாக, உனக்கு பக்லவா தேவையா சொல், காற்றிலிருந்து வரவழைக்கிறேன்" என்றது.

சிரித்தேன். "அவ்வளவுதானா? உலக சக்தி மாற்றம் என்றெல்லாம் கிளப்பிவிட்டாயே? இந்த சக்தியை வைத்துக்கொண்டு குழாயில் தண்ணீர் கூட வரவழைக்க முடியாது போலிருக்கிறதே? என்ன பெரிய சக்தி?"

"நாங்கள் குட்டி தேவதைகள். எங்களை ஆட்டி வைக்கும் இரண்டு சக்திகளும் உண்மையான சக்திகள். நாங்கள் செய்யும் மாயங்களில் பல சமயம் குரூரமும் விபரீதமும் அடங்கியிருக்கும் - எங்களை ஆட்டி வைப்பவர்கள் சொற்படி அவை மொத்தமாகையில் பெரும் விபரீதங்களாக முடிகின்றன. அமெரிக்க-இரேக் போர் எப்படி வந்தது என்று நினைக்கிறாய்? பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகப் புரளி கிளப்பி விட்டது யாரென்று நினைக்கிறாய்?" என்று நிறுத்தி என்னைப் பார்த்தது. "கிளம்பு, மகனைச் சந்தித்த பிறகு சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. இரண்டு சக்திகளையும் அழித்து நீ முடியேற்று எங்களை விடுவிப்பாய் என்று இன்னும் நம்புகிறேன்"

"ரைட். எனக்கு நொபெல் பரிசு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்"

"கிண்டல் போதும். சீக்கிரம். மாலையை அணிந்து கொள்" என்ற பூதத்தின் குரலில் அவசரம் தொனித்தது.

"இதோ பார், பக்லவா பூதமே. எனக்கு இதில் விருப்பமில்லை. இன்னொன்று. உங்களுக்கும் எனக்கும் அழிவே கிடையாது என்று நீதான் சொன்னாய். இப்போது எல்லாரையும் அழித்துச் சாதனை செய்யலாம் வா என்கிறாய். ஆளை விடு"

"மரிஷ்காவுக்கு நீ கொடுத்த வாக்கு என்னாகும் என்று நினைத்துப் பார்த்தாயா?"

"மரிஷ்காவே போனபின், கொடுத்த வாக்கு என்ன ஆனால் எனக்கென்ன?" என்றேன். சொல்லி முடிக்கவில்லை, என் கன்னத்தில் யாரோ அறைந்தது போல் வலித்தது. சின்ன ரத்தக்கீற்று கையை நனைத்தது. அவசரமாக குளியலறைக் கண்ணாடியில் பார்த்தேன். என் கன்னத்தில் ஒரு சிறு கீரல், கண்ணெதிரே வளர்ந்து கொண்டிருந்தது. "ஏய்! நீயா அறைந்தாய்?" என்றேன்.

"நான் தான்" என்ற குரல் வந்த திசையைப் பார்த்தவன், திடுக்கிட்டேன். என் வீட்டின் பல்வேறு அறைகளிலிருந்து சிறு பூச்சிகள் பறந்தும் ஊர்ந்தும் நடுவறைக்குள் வந்து கொண்டிருந்தன. பல்வேறு நாடுகளில் வாங்கிய பூச்சி வடிவ மைக்கூடுகள், பேனாக்கள், சாவிப்பிடி, சமையல் கரண்டி என்று ஒவ்வொன்றும் உயிர் பெற்று வந்ததைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றன் முதுகிலும் எண்கள். எனக்குத் தெரியாமல் பூதங்களையும் குட்டிச்சாத்தான்களையுமா சேகரித்தாள் மரிஷ்கா?! புதுப் பூச்சிகள் மெள்ளக் கரப்பானைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்கின. கரப்பானைக் கிடுக்கிப் பிடித்தபடி ஒரு நட்டுவாக்களி என்னைப் பார்த்துப் பேசியது. "நான் தான் அறைந்தேன். நீயோ உன் மகனோ அந்த மரிஷ்கா மூதேவியோ யாருமே எங்களுக்குத் தேவையில்லை. போன பிறவியிலேயே சொன்னேன், உன்னைக் கொன்று இந்தக் கதையை இப்போதே முடிப்போம் என்று, இவன் தான் கேட்கவில்லை" என்று கரப்பானை ஒரு உலுக்கு உலுக்கியது. என்னைப் பார்த்து, "இப்போது மறுபடியும் உன்னால் பிறவிச்சிறை. இந்த முறை ஏமாற மாட்டோம்" என்றது. பிறகு, கரப்பானை நெரிப்பது போல் பிடித்தது. மற்ற பூச்சிகளிடம், "ஏய்! இவனையும் அந்தப்பயலையும் சேத்து சாப்பிடுங்க. அந்த மாலையையும் உடைச்சு எறிங்க. நமக்கு விடுதலை" என்றது.

நாலைந்து பூச்சிகள் என்னை நோக்கிப் பறந்து வர, நான் ஒரு துண்டை வீசி அவற்றை அடிக்க முனைந்தேன். "மாலை.. மாலையை அணிந்துகொள்" என்று முனகியது கரப்பான். நட்டுவாக்களி எம்டிம் மாலையை ஒரு காலால் சுழற்றிக் கடாசியது. நான் அதைப் பிடிக்க ஓடும் பொழுது பறந்து வந்த குளவி ஒன்று என் தலைமுடிக்குள் புகுந்து பரவத்தொடங்கியது. பூரான் போல் தரையில் ஊர்ந்து வந்த இரண்டு தலைப் பூச்சி என் மேலேறத் தொடங்கியது. காலை உதறி கையிலிருந்தத் துண்டால் பூரானை மூடிவிட்டு ஓடினேன். இன்னும் சில பூச்சிகள் என்னை நோக்கி வந்தன. தும்பி போலிருந்த ஒரு பூச்சித் திரும்பத் திரும்ப என் கண்களைத் தேடி வந்தது. வேகமாகச் சுவருக்குச் சுவர் தாவிய பல்லி ஒன்று எப்படியோ என் கழுத்துக்குள் விழுந்து, லேசாகக் கடிக்கத் தொடங்கியது. நான் வலியில் அலறினேன். நட்டுவாக்களி என்னெதிரில் கரப்பான் பூச்சியைச் சாப்பிடத் தொடங்கியது. அதன் வாயுள் புகாமல் கரப்பான் தவித்து முரண்டு பண்ணியது. திடீரென்று என் தலை எரிவது போல் உணர்ந்தேன். தலைமுடி சொறிந்து உள்ளே புகுந்தப் பூச்சியைத் தேடலாமென்றால், தலையில் கை வைத்ததும் பெயின்ட் கொட்டியது போல் பிசுக்கான ஈரம்! என்னவென்று பார்க்கக்கூட தைரியம் வராமல், ஒரே தாவலில் எம்டிம் மாலையை எடுத்து அணிந்தேன். மாலையை அணிந்த சில நொடிகளில் என்னைச் சுற்றி ஒரே ஆரவாரம். பிள்ளைகளின் அழுகையும் மிருகங்களின் அலறலும் புல்லாங்குழலிசையும் சம்மட்டி அடியும் கலந்து ஒலிப்பது போல் இடைவிடாத ஓசை. சுதாரிப்பதற்குள் எனக்கு மூச்சு வாங்கியது. எதிரிலிருந்த சாய்வு நாற்காலியில் விழுந்தேன்.

    ன்னுடைய மெர்சடீஸ் முன்னிருக்கையில் என்னருகில் கரப்பானும், பின்னிருக்கையில் முப்பத்தாறு குட்டிச்சாத்தான்களும் வரிசையாக விரலைச் சப்பியபடி உட்கார்ந்திருக்க, பழைய ரமத்-அவிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். கரப்பானைப் பார்த்துப் புன்னகைத்தேன். "சைவச் சாப்பாடு போல பின்னிருக்கையில் எல்லாம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறதே?" என்றேன். "இப்படியாகும் என்று முன்பே சொல்லியிருக்கலாமே, நாற்பத்திரண்டு?"

"என்னையே நம்பவில்லை நீ. முப்பத்தாறு பூதங்கள் உன்னைத் தின்ன வருமென்றால் நம்பவா போகிறாய்? நல்லவேளை, மாலையை அணிந்தாய். என்னைக் காப்பாற்றினாய். நன்றி மறக்க மாட்டேன்" என்றது கரப்பான்.

"இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை. எம்டிம் அணிந்ததும் நாராசமாக ஒலி கேட்டதே?" என்றேன்.

"உன்னுடைய மன அலைவரிசைக்கு ஏற்பச் சீர்பட்டது மாலை. எங்கள் சக்திகளெல்லாம் இப்பொழுது உன் கட்டுப்பாட்டில். மாலை உன் கழுத்தில் இருக்கும் வரை உன்னால் அடுத்தவர் மனத்துடன் ஒத்த அலைவரிசையில் உரையாட முடியும். தகவல் தெரிவிக்க முடியும். உன் மகன் உனக்குத் தரப்போகும் தகவலை இதை வைத்தே அறிந்துகொள்ள முடியும். அடுத்தவர் எண்ணங்களை உன்னால் கேட்க முடியும்; இனி உன் எண்ணங்களை அடுத்தவர் கேட்க முடியாது" என்றது.

எனக்கு இன்னும் பிரமிப்பாக இருந்தது. "ஏய், எதற்காக என்னைத் திட்டினாய் இப்போது?" என்றேன்.

"என் எண்ணத்தை உன்னால் படிக்க முடிகிறதா என்று பார்க்கத்தான்" என்றது நாற்பத்திரண்டு.

கடற்கரையோரமாக வந்தோம். எதிரே அகழ்வாராய்ச்சி மையத்தில் அங்கங்கே தோண்டியிருந்தார்கள். எட்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரீகத்தின் சின்னங்களைத் தோண்டியெடுத்து ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார்கள். "புராதன ரமத் பிரதேசம் வந்துவிட்டது. யார்கென் பூங்காவில் என்ன செய்யப் போகிறோம்?" என்று வண்டியை ஒரு மறைவிடத்தில் நிறுத்திக் கேட்டேன்.

கரப்பான் தொண்டையைக் கனைத்துப் பேசத் தொடங்கியது, "முப்பத்தாறு சாத்தான்களும் நாலு திசையிலும் காவல் இருப்போம். நான் கூட்டத் தலைவன். சூரியன் முழுவதும் மறைந்ததும் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழிகளைக் கவனிப்போம். ஒரே ஒரு குழியிலிருந்து மட்டும் பச்சை நிற ஒளி வரும். அதைக் கண்ட உடனே உன்னிடம் விவரம் சொல்வோம். அந்தக் குழியில் உன் மகன் இருப்பான். நீ மட்டும் தனியாகப் போய் அங்கிருந்து அவனை எடுத்துக்கொண்டு, எத்தனை வேகமாக வர முடியுமோ இங்கே வந்துவிடு" என்றது. பிறகு முப்பத்தாறு பூதங்களையும் நான்கு பிரிவுகளாக்கி அனுப்பத் தொடங்கியது.

திமிரடங்கிய நட்டுவாக்களியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. "ஏய், நட்டு.. உன்னை இங்கிருந்து தூக்கி எறிந்தால் கடலில் விழுவாய் தெரியுமா?" என்றேன்.

"உன் தயவு, தலைவரே" என்றது நட்டுவாக்களி பணிவாக. 'தலைவரே, தலைவரே' என்று தவளையொலி போல் மற்ற பூதங்களும் ஆமோதித்தன. பிறகு ஒவ்வொரு பிரிவாக இடம்பெயர்ந்தன.

அவர்கள் சென்றதும் கரப்பானிடம், "என் மகனைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்றாயே?" என்று கேட்டேன்.

"அனேகமாகத் தூக்கிக் கொண்டு வர வேண்டியிருக்கும். காரணம், இப்போது உன் மகனைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவன் ஆன்மா கரையும் முன்னால் நீ அவனைக் காப்பாற்றப் போவதால் உயிரோடிருந்தாலும், சக்தியில்லாதிருப்பான். நீதான் தூக்க வேண்டியிருக்கும். எங்களால் அங்கே நுழைய முடியாது. நீ வெளியே வந்ததுமே, பூதங்கள் நான்கு பக்கமும் உன்னைச் சூழ்ந்துகொண்டு பாதுகாப்பு கொடுக்கும்" என்றது.

அதிர்ந்தேன். "பலி கொடுக்கிறார்களா? நாம் போகுமுன் ஏதாவது ஆகிவிட்டால்?"

"நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எங்கே இருக்கிறான் என்பது கூடத் தெரியாது. இன்றைக்கு மட்டும் சூரியன் மறைந்ததும் தெரியும் சில நிமிட ஒளியை வைத்து அடையாளம் கண்டாக வேண்டும்"

"உள்ளே என்ன இருக்கும்?"

"தெரியாது"

"பயமாக இருக்கிறது"

"பயந்து ஒன்றும் ஆகப்போவதில்லை"

"ஒரு ஆறுதலுக்குக் கூட உன்னுடன் பேச முடியாது போலிருக்கிறதே? சரி, அவனை எடுத்துக்கொண்டு வேகமாக வரச்சொன்னாயே? ஏன்?"

"அவன் குற்றுயிராய் இருக்கும் பொழுதே, இங்கிருந்து உடனே நாம் ஜெரூசலம் போயாக வேண்டும்"

"ஜெரூசலத்தில் எங்கே?"

"ஆன்மாக்களின் கிணறு"

"கப்பத்-அஸ்-சக்ர?" என்றேன். "அங்கே எதற்கு?"

"மரிஷ்காவும் யோகஷும் காத்திருப்பார்கள்"

"அவர்கள் சாகவில்லையா?"

"முதலிலிருந்து ஆரம்பிக்கணுமா? சரிதான், அதற்கு நேரமில்லை"

எனக்கு எரிச்சல் வந்தது. "அவர்கள் ஏன் இந்த வேலையைச் செய்யக்கூடாது?"

"யோகஷால் ஒன்றும் முடியாது. நட்டுவாக்களி போலத்தான். மரிஷ்காவுக்குச் சக்தி போதாது. மகனைச் சேர்த்தால்தான் புராதனச் சக்தி கிடைக்கும்"

"ஏய் கரப்பான். மகனே குற்றுயிராயிருக்கும் பொழுது அவனால் மரிஷ்காவுக்கு எப்படி சக்தி கிடைக்கும்?"

"உன் மகனை மரிஷ்கா தின்றதும் அவளுக்குச் சக்தி கிடைத்து விடும்" என்றது அமைதியாக.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! கரப்பான் சொன்னது என்னைத் தாக்கித் தெளியுமுன்னர், நட்டுவாக்களியிடமிருந்து செய்தி வந்தது. "வடக்கு மூலைக் குழிகளில் நடுக்குழி" என்றது. "ஓடு, ஓடு. நேரமில்லை. உன் கேள்விகளைப் பிறகு கேட்டுக் கொள்ளலாம். போ, உன் மகனைக் காப்பாற்றி எடுத்துவா. மாலையைக் கழற்றாதே" என்று என்னை விரட்டியது கரப்பான்.

நட்டுவாக்களி சொன்ன திக்கில் பார்த்தேன். குழியின் மேலாக ஒரு பச்சை ஒளி வட்டம். மரிஷ்காவின் கண்களில் சாகுமுன் தென்பட்டது போலவே பச்சை ஒளி. என் மகன் சாகப்போகிறான்! திடீரென்று வேகம் வந்து ஓடினேன்.


(பூதத்தைப் பின்தொடர ►►)

16 கருத்துகள்:

 1. நிறைய விறுவிறுப்பாகவும் கொஞ்சம் அருவருப்பாகவும் (பூச்சிகளின் தாக்குதலைச் சொன்னேன்) போகிறது. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன் ஆவலுடன்.

  பதிலளிநீக்கு
 2. மேல் நாட்டு மொழி பெயர்ப்பு கதையொன்றை வாசிக்கிற உணர்வு.

  பதிலளிநீக்கு
 3. கதையின் போக்கு விறுவிறுப்பு. இந்த பாகத்தைப் படித்து சிரித்து முடியவில்லை. கதை முழுவதும் ரசிக்கும் படியாக உள்ளது. அடுத்த பாகத்திற்காக......

  பதிலளிநீக்கு
 4. இன்னும் எத்தனை பாகம் பூச்சி காட்டப் போறீங்க... கரப்பான் பூச்சிக்கு பச்சை ரத்தம்பாங்க...அது போல பச்சை ஒளி...காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா நாகேஷிடம் "வேணாம்பா...கதை பயங்கரமாப் போகுது...எனக்கு வேணாம்..."என்பார்...அது நினைவு வருகிறது. ஆசை யாரை விட்டது. அடுத்த பாகத்துக்கு ஆவலுடன்...

  பனியா...முதுகு வலியா... இப்போது தேவலாமா...?

  பதிலளிநீக்கு
 5. கரப்பான் சரியான கதை கறப்பான் போலிருக்கிறதே...

  கொஞ்சம் திகிலாகவே இருக்கிறது....

  ரொம்ப கொண்டு போய்விட்டீர்கள்..சவாலான சிக்கல்களை அவிழ்த்து எப்படி முடிப்பீர்கள் எனும் ஆவல் மேலிடுகிறது...

  பதிலளிநீக்கு
 6. ஸ்ரீராம்: காநேவில் இன்னொரு டயலாக் நாகேஷ் சொல்வது: நான் எடுக்குறது தான் படம், இதைப் பாக்கறது உங்க தலையெழுத்து.. :)

  பத்மநாபன்: சவ்வு இன்னும் பாக்கி இருக்குதே?

  வருகைக்கு நன்றி geetha santhanam, தமிழ் உதயம், Jeyahar, ஸ்ரீராம், பத்மநாபன், ...

  பதிலளிநீக்கு
 7. அப்பாஜி...இனி எந்த ஒரு காலத்திலயும் கரப்பான் பூச்சியை மறக்கமாட்டேன் இது சத்தியம்.நான் மறந்தாலும் மனம் மறக்காது.

  கரப்பான் பூச்சியை புத்தகப் படங்களில் பார்த்தாலும் இந்தப் பூதக்கதை ஞாபகம் வரும் !

  பதிலளிநீக்கு
 8. Read it at one go !! Easier that way for me.

  துரை நல்ல அழகான உவமைகள் (கலக்கல்ஸ் இன்பாக்ட்) - நக அழுக்கு கலர்; குரலில் "அசல் சிவாஜி" ஏற்றி; என் தூக்கம் வெள்ளையடித்தச் சுவரானது; விபரீதம் காலில் கருகமுள் குத்தியது; தலைமுடி நகக்கீறலின் போதை கஞ்சாவில் கூட கிடைக்காது; ட்ரேன்ஸ்பேரன்டாக சில பேர் வீட்டில் போடும் காபி போல்; ட்ரேன்ஸ்பேரன்டாக சில பேர் வீட்டில் போடும் காபி போல் (என் அம்மாவழி தாத்தாவும் அப்படி தான் இறந்தார் என்று என் அம்மா சொல்லுவாள்); ஓட்டைப் பொட்டலத்திலிருந்து சர்க்கரை கொட்டி வெளியேறி விழுவது போல்; கப்புல குப்புற விழுந்தால் அப்புறம் நான் சூப் சாப்பிட வேண்டியிருக்கும்; உன்னை வற்புறுத்தி மனம் மாற்றுவதற்குள் என் சிறகு கழன்றுவிடுகிறது;

  பூரான் - ஓ அது பாளையம்கோட்டை திருநெல்வேலியில் என் தந்தை வழி தாத்தா / பாட்டி வீட்டில் என்னை சிறு வயதில் மூன்று வருடங்கள் விட்டு வைத்திருந்தார்கள். நான் அங்கு தான் வளர்ந்தேன். எங்கும் எதிலும் பூரான் இருக்கும். சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு இருப்பார். ஐயோ அருவருப்பு !

  "உன் அப்பா இறக்கப் போகிறாரா? மழை வரப்போகிற மாதிரி சாதாரணமா சொல்றியே - சென்னை வானிலை இல்லையோ ?

  //தமிழ் உதயம் சொன்னது…மேல் நாட்டு மொழி பெயர்ப்பு கதையொன்றை வாசிக்கிற உணர்வு.//

  கா.நேரமில்லையில் நடிகர் நாகேஷ் ரவிச்சந்திரனிடம் கேட்ப்பார் "சார் இது உங்க கதை தானே" என்று !!

  துரை இதான் விஷயமா ??

  பதிலளிநீக்கு
 9. நன்றி ஹேமா, சாய், ...

  ஹேமா: 'மறக்க மாட்டேன்' என்று சொன்னதற்காகக் கரப்பான் சமூகத்திலிருந்து உங்களுக்கு விழாக்கால வாழ்த்துக்கள்!

  சாய்: ரசித்ததுக்கு நன்றி; தமிழ் உதயம் அப்படியா சொன்னாரு? "கேஸ் போட மாட்டாங்களே" அருமையான ஜோக். இந்தப் பின்னூட்டப் பக்கத்திலேயே மூணு காநே ஜோக்!

  நன்றி ஸ்ரீராம், geetha santhanam: பனிச்சறுக்கில் கவனக்குறைவால் அடி, தொடர்ந்து வீட்டுள் சுற்றிய காய்ச்சல்,.. அதான்.

  பதிலளிநீக்கு
 10. //பனிச்சறுக்கில் கவனக்குறைவால் அடி//

  நாங்க ஊர்ல மழை பெய்யுதுன்னு தெரிய ஆரம்பிச்சவுடனே சைக்கிள் எடுத்துருவோம் நனையறதுக்காகவே..

  நீங்க பனிய பார்த்தவுடனே கத்திய கால்ல கட்டீட்டிங்க போல....

  பதிலளிநீக்கு
 11. கண்ணாடி பூதம் காமிக்குதுன்னு நேத்து வீட்ல சொன்னபோது கூட மரிஷ்காவின் பூதங்கள்தான் ஞாபகம் வருது. ;-)

  மகனைப் பொழைக்க வச்சுடுவீங்கதானே..

  பதிலளிநீக்கு
 12. //பத்மநாபன் சொன்னது… நாங்க ஊர்ல மழை பெய்யுதுன்னு தெரிய ஆரம்பிச்சவுடனே சைக்கிள் எடுத்துருவோம் நனையறதுக்காகவே..

  நீங்க பனிய பார்த்தவுடனே கத்திய கால்ல கட்டீட்டிங்க போல....//

  நான் இருபது வருடங்களுக்கு மேல் வார வாரம் கிரிக்கெட் ஆடி இருக்கின்றேன். (கிரிக்கெட் பால் / கார்க் பால் என்று).

  லண்டனில் இருந்த இரண்டு வருடமும் அங்கே லீக் மேட்ச் (லோக்கல் சுவாமி - யார்க்க்ஷிர் எல்லாம் இல்லே) turf விக்கெட்டில் ஆடி இருக்கின்றேன். பெங்களூர் கார்பரேட் கிரிக்கெட் வட்டத்திலும் பத்து வருடங்களுக்கு மேல் ஆடி இருக்கின்றேன்.

  இங்கே வந்து மாலை போட்ட முதல் வருடம் சக்கரை வியாதி என்று கண்டுபிடித்தபிறகு - கிரிக்கெட் ஷு எல்லாம் எடுத்து மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.

  யாரு அடி வாங்கி அது ஆறாமல் நோவது. இப்போது தோன்றும், ஆடவேண்டும் என்று. நாப்பத்தைந்து வயதில் எதுக்கு ரிஸ்க் !!

  பதிலளிநீக்கு
 13. //கிரிக்கெட் ஷு எல்லாம் எடுத்து மூட்டை கட்டி வைத்துவிட்டேன். //
  மூட்டையை பிரீங்க , கிரிக்கெட்ட விடுங்க.. ஷு வை மாட்டுங்க சக்கரையை தொரத்த ஓடித்தானே ஆகனும்....

  பதிலளிநீக்கு
 14. //பத்மநாபன் சொன்னது…மூட்டையை பிரீங்க , கிரிக்கெட்ட விடுங்க.. ஷு வை மாட்டுங்க சக்கரையை தொரத்த ஓடித்தானே ஆகனும்....//

  நீங்கள் வேறு - எங்கள் வீட்டில் treadmill துணி காய போட்டு இருக்கின்றேன் ! கிளப் பணம் கொடுத்துவிட்டு போக டைம் இல்லை.

  ஐயப்ப சீசன் நாலு கிலோ குறைந்தாலும் வார இறுதியின் வீட்டு பூஜையில் கிலோ இருக்கின்றது !!

  பதிலளிநீக்கு
 15. //RVS said,

  "மகனைப் பொழைக்க வச்சுடுவீங்கதானே.."//

  எதுக்கு மரிஷ்கா டிஃபனுக்கா...

  ஆர் வி எஸ் மரிஷ்கா மேல என்ன கரிசனம் உங்களுக்கு...

  பதிலளிநீக்கு
 16. ஆஹா நல்லதொரு ஹாலிவுட் ஸ்க்ரீன் ப்ளே

  பதிலளிநீக்கு