2010/12/02

மரிஷ்காவின் பூதங்கள்

சிறுகதை


    காதருகே யாரோ சிரித்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.

சிரிப்பு என்றால் கலகல, முத்துதிர என்கிற உவமைக்கெல்லாம் ஒவ்வாத சிரிப்பு. மழலைச் சிரிப்பில்லை. பொக்கைச் சிரிப்பில்லை. சினிமாப் பாட்டில் சந்திரபாபு சிரிப்பது போலுமில்லை. இளம் வயதில் நான் வளர்ந்த வீட்டெதிரே மாரியம்மன் கோயிலில் பூசாரி பேயோட்டும் போதுக் கேட்கும் எக்காளம் கூட இல்லை. வினோதமான, உறைய வைக்கிற, ஏறக்குறைய அல்ட்ராசானிக் கிண்டல் சிரிப்பு. மீண்டும் துல்லியமாகக் கேட்டது. பஹ்ஹ்ஹ்ஹ்.

மேசைவிளக்கைத் தேடித் தடவினேன். கை பட்டிருக்க வேண்டும். அலாரம் போல் சிரிப்பு நின்று, 'ஏய்' என்று அதட்டும் குரல் கேட்க, அதிர்ந்தெழுந்து மின்விளக்கைப் போட்டேன். ஒலியின் திக்கில் கவனித்தேன். பேனா தரையில் உருண்டோடியிருந்தது. தூங்குமுன் படித்துக் கொண்டிருந்த கிப்லிங் புத்தகத்தில் குறிப்பெழுதிவிட்டு, பேனாவைச் சைனாவில் வாங்கிய கரப்பான் உருவப் பதினாறாம் நூற்றாண்டுப் பேனாக்கூட்டில் சேர்த்தது நினைவுக்கு வந்தது. கூட்டைக் காணோம். வியந்து விழித்தபோது புலப்பட்டது.

கிப்லிங் புத்தகத்தின் அட்டையில் அசைந்துகொண்டிருந்தது பெரிய சைஸ் கரப்பான் போல் ஒரு பூச்சி. கால் கட்டைவிரல் அளவில், நக அழுக்குக் கலரில் இருந்த அந்தக் கொழுத்தக் கரப்பான், இரண்டு வினாடிகளுக்கொரு முறை அரைகுறையாய் வளர்ந்த தன் சிறகுகளைத் தூக்கியிறக்கி முன்னும் பின்னும் நகர்ந்து, புத்தகத்தின் அட்டை மேல் கபடி விளையாடிக்கொண்டிருந்தது.

நான் வளர்ந்த குரோம்பேட்டை வீட்டில் இரவு முழுதும் 'றர்ர்ர்' என்று படபடத்த கரப்பான் பூச்சிகளுக்கு பயந்து, பேயடித்து ரத்தம் கக்கினாலும் பரவாயில்லையென்று வெளியே சென்று ப்லேஸ்டிக் பொம்மைகள் தூக்கில் தொங்கிய வேப்பமரத்தடியில் அவசரமாக ஒன்றுக்குப் போய் வந்தது நினைவுக்கு வந்தது. முப்பது வருடங்களுக்குப் பிறகு கரப்பானை இப்போது தான் பார்க்கிறேன். அதுவும் இத்தனை சுத்தமான என் கிகர் ஹமிதினா வீட்டில். எங்கிருந்து வந்திருக்கும் கரப்பான் என்று புரியாமல் தவித்தேன். தைரியம் வந்து, வெறும் கரப்பான்பூச்சி தானே என்று ஒரு பேப்பர் சுருளால் அதை அடிக்கக் குனிந்தேன். சட்டென்று கையை நீட்டி என் கையிலிருந்த பேப்பர் சுருளைத் தட்டிவிட்டுச் சிரித்தது. என்னால் நம்ப முடியவில்லை. ஆடிப் போய் விட்டேன். இது ஏதாவது கெட்ட கனவா?

"இல்லை, நிஜம்" என்றது. எனக்குப் பேச்சு வரவில்லை. மூச்சு நின்று விடும் போல் இருந்தது. "பயப்படாதே" என்றது. 'இல்லை' என்று தலையாட்டினேன். "யார் நீ?" என்று கேட்க நினைத்தேன், வார்த்தை வரவில்லை. "நான் நாற்பத்திரண்டு" என்றது.

என் மனதில் தோன்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறதே? மறுபடியும் பேப்பர் சுருளைக் கையிலெடுத்தேன். "வேண்டாம், என்னை உன்னால் கொல்ல முடியாது. கண்டிப்பாகப் பேப்பர் சுருளை வைத்துக் கொல்ல முடியாது" என்றது.

"ஏன்?" என்றேன்.

"ஏனா? ஏனென்றால், நான் ஒரு பூதம். பூதத்தைப் பேப்பர் சுருளால் அடித்துக் கொன்றதாக எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்று சொல்லிச் சிரித்தது. பஹ்ஹ்ஹ்ஹ்.

"உன் பெயர் நாற்பத்திரண்டா? விசித்திரமாக இருக்கிறதே?"

"இங்கே பார்" என்று புரண்டு படுத்து முதுகு போலிருந்த இடத்தைக் காட்டியது. எனக்குப் பரிச்சயமானக் கையெழுத்தில் 4 2 என்ற எண்கள். திரும்பி என் திசையில் பார்த்து, "அதான் நாற்பத்திரண்டு. என்னைப் போல் நாற்பத்தியொரு பூதங்கள் இருக்கிறார்கள். பலர் இந்த வீட்டிலேயே இருக்கிறார்கள்" என்றது. பிறகு குரலில் அசல் சிவாஜி ஏற்றி, "கடமை முடிக்கும் காலம் வந்ததால் நாங்கள் உயிர்த்தெழுந்து விட்டோம். புறப்படு தலைவா!" என்று செம்மொழி சொன்னது.

என் தூக்கம் வெள்ளையடித்தச் சுவரானது. ஒரு கப் டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. பூச்சியைப் பார்த்தேன். "எனக்கும் சேர்த்து ஒரு கப் எடுத்து வா" என்றது.

"டீ குடிப்பியா என்ன?"

"பழக்கமில்லை. ஆனால் நீ போடும் டீ சுவையாக இருக்கும் என்று மரிஷ்கா சொல்லிக் கேட்டிருக்கிறேன்"

இது கனவில்லை என்று நிச்சயமாகப் புரிந்தது. மரிஷ்காவை இதற்கு எப்படித் தெரியும்? கேள்வியை யோசித்திருக்கக் கூடாது. "டீ போட்டுக் கொண்டு வா, விவரமாகச் சொல்கிறேன்" என்றது.

    ருபத்து நாலு வயதில் பெர்க்லியில் தொல்பொருள் ஆராய்ச்சியல் மேற்படிப்புக்காக இந்தியாவிலிருந்து வந்தவன், இரண்டு வருடம் படித்துவிட்டு என் கல்லூரிப் பேராசிரியர் யோகஷ் மெனாஹம் தனியாக நடத்திய தொல்பொருள் வணிக நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். தொல்பொருள் ஆராய்ச்சி ஆர்வம் ஒரு காரணம். யோகஷின் ஒரே பெண் மரிஷ்காவின் தோல்பொருள் ஆராய்ச்சியில் இருந்த ஆர்வம் மற்ற காரணங்களின் மொத்தம். மரிஷ்காவின் கண்கள்! மரிஷ்காவின் மார்பு! மரிஷ்காவின் இடை!

படிப்பு முடிந்து இரண்டு மாதத்தில் திருமணம் செய்து கொண்டோம். நான் சைவப் பார்ப்பான். மாமிசம் சுத்தமாகக் கூடாது, பார்த்தாலே வாந்தி வந்து விடும். அவளோ கோஷர் பெண். அவளுக்கு மாமிசம் சுத்தமாக இருக்க வேண்டும். இருவருக்கும் எப்படி பொருந்தும் என்று நிறைய பேர் நினைத்தார்கள். கல்லூரி நண்பர்கள் பந்தயம் கட்டினார்கள். அவர்கள் பந்தயம் கட்டியக் காரணம் வேறே. முஸ்லிம்கள் போலவே யூதர்களும் இளம்பிராய ஆண்களுக்கு அந்த இடத்தில் மேல்சதையைச் சதக் பண்ணிவிடுவார்கள். கூடலில் வசதியாக இருக்கும் என்று ஒரு நிரூபிக்கப்படாத நம்பிக்கை. பாஹ்மிட்ஸ்வா முடிந்த நாள்முதல் அத்தனை பணக்கார இஸ்ரேலியப் பையன்களும் முந்திரிப்பழ மரிஷ்காவுக்காக உயிரையும் விடத் தயாராக இருக்கும் போது... இந்தியப் பையன்.. பம்மலிலிருந்து ஒரு பாப்பாரச் சோப்ளாங்கி - பிரமிக்க வைக்கும் பம்ப்லிமாஸ் இஸ்ரேல் பொண்ணு.. இது எங்கே நிலைக்கும் என்று எங்கள் திருமண தினத்தன்று எங்களிடமே பந்தயம் கட்டினார்கள். சாப்பாடு, மதப் பொருத்தம் இல்லையென்றாலும், சுன்னத் சமாசாரம் வரும் போது இந்தியப் பையன், இந்தியப் பையன் தான். இந்த வித்தையைப் பற்றிப் புத்தகம் எழுதினவர்களாச்சே, சும்மாவா? மரிஷ்காவும் நானும் - அதை எப்படிச் சொல்வார்கள்? நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம், ரைட் - எங்கள் காதலை வளர்த்தோம். எங்களைப் போல நெருக்கமானத் தம்பதிகள் எங்களுக்கு முன்னும் இல்லை, இனி வரப்போவதுமில்லை. என் கல்லூரி நண்பர்களெல்லாம் இரண்டாவது மூன்றாவது திருமணத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் போது, நானும் மரிஷ்காவும் நகமும் சதையும் போல, அன்று கண்ட அன்பில் ஒன்று கண்ட அன்றில் என்று, இருக்கிறோம்.

இருந்தோம் என்று சொல்ல வேண்டும். இப்பொழுது யோசிக்கையில், நடந்த நிகழ்ச்சிகளின் விபரீதம் காலில் கருகமுள் குத்தியது போல் புலப்படுகிறது.

    யோகஷின் தொல்பொருள் வணிக நிறுவனச் சார்பில் இருவரும் உலகமெல்லாம் சுற்றினோம். கிறுஸ்து காலத்து நீர்க்கோப்பை, அலெக்சேந்தர் காலத்து போர்க்கவசம், பாபிலோனிய மதுக்குடுவை, ஹம்முராபி நாணயம், மொகஞ்சதாரோ குளியலறைப் பெட்டி, சுமாத்ராவில் மகத மன்னர் விட்டுச் சென்ற பொற்சிலை, ராஜராஜ சோழன் காலத்து சுவடி, நேபாள ராஜாக்களின் தங்கக் கஞ்சாப் பெட்டி, புத்த பிட்சுக்களின் வெள்ளிப்பிடித் தேக்குத்தடி, சைனாவிலிருந்து சியன் சிற்பம் என்றுத் தேடிக் கண்டுபிடித்து வாங்கி விற்று பணம் சேர்த்தோம். நிறையச் சேர்த்தோம். ஒவ்வொரு இடத்திற்கும் ஒன்றாகப் போவோம். வாரத்தில் நான்கு நாட்கள் ஒன்றாக வேலை செய்வோம். ஐந்தாவது நாள் மட்டும் தனியாக எங்களுக்குப் பிடித்ததைச் செய்வோம். வார இறுதியில் கூடும் இனிமைக்கு, ஐந்தாம் நாளின் பிரிவு காரணமாகிறது என்பது மரிஷ்காவின் கருத்து. விட்டால் போதும் என்று ஐந்தாம் நாள் முழுதும் தூங்குவேன். ஆனால் மரிஷ்கா எங்கேயாது கிளம்பி விடுவாள். வைதீஸ்வரன் கோவில் ஜோதிடச் சுவடி, சாலர்ஜங்க் கடைத்தெரு, கராச்சியில் விக்டோரியா சதுக்கம், பேங்காக்கில் வோடவுஸ் கிடங்கு, பெய்ஜிங்கில் ஹங்சௌ அங்காடி என்று எங்கேயாவது வெள்ளிக்கிழமை தோறும் கிளம்பி விடுவாள். வருவதற்கு மாலை நேரம் ஆகும். நான் எழுந்திருக்கச் சரியாக இருக்கும். பிறகு சனி ஞாயிறு இரண்டு நாளும் மிகத் தேவையானாலொழியப் படுக்கையிலிருந்து நாங்கள் எழுந்திருப்பதில்லை. உலகமெல்லாம் சுற்றினாலும், மாதமொரு முறை சேன்ப்ரேன்சிஸ்கோ வந்து யோகஷைச் சந்தித்து தொழில் முன்னேற்றம் பற்றிப் பேசுவோம். எங்கள் கூட்டம் முடிந்ததும், அப்பாவும் பெண்ணும் நாலைந்து மணி நேரம் என்னவோ பேசிக் கொண்டிருப்பார்கள். 'தேடிக்கொண்டிருக்கிறோம், புரியும் நேரம் வரவில்லை, காலம் வரும்பொழுது தயாராக இருக்க வேண்டும்' என்று இருவரும் ஏதாவது சொல்வது சிலசமயம் காதில் விழும். நான் எதையும் பொருட்படுத்தாமல் தூங்கி விடுவேன். ஆடையில்லாத மரிஷ்காவை அழுந்த அணைப்பது சுகம். அதை விட்டால், தனிமையில் ஆழ்ந்த உறக்கம் சுகம். உலகப்பயணம், உல்லாசம், அவ்வபோது எளிய போதைப்பொருள், வாரத்தில் இருபத்தெட்டு மணி நேரம் கலவி... வாழ்க்கை இனித்தது. மரிஷ்காவின் கலவி முறைகள் விசித்திரமாகவும் பல சமயம் விபரீதமாகவும் சில சமயம் வன்முறையாகவும் தோன்றும். எதையோ மனதில் நிறுத்திப் புணருவது போல் தோன்றும். மரிஷ்காவை நான் மிக நேசித்ததால் எதையும் பொருட்படுத்தவில்லை.

ஒரு முறை கேன்பெராவில் ஆதிவாசிகள் உபயோகித்த ஊதலை விலை பேசிக் கொண்டிருந்த போது, மரிஷ்காவைப் புதிதாய்ப் பார்த்தக் கடைக்காரர், எங்களை அவசரமாகத் தனியறைக்கு அழைத்துச் சென்று ஒரு பழைய மரப்பெட்டியைத் திறந்து காட்டினார். உள்ளே சின்னஞ்சிறிய முழு எலும்புக் கூடுகளினால் கட்டிய மாலை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடுகள் என்றார். ஒவ்வொரு எலும்புக்கூட்டிலும் தலை முதல் கால் வரைத் தெளிவாக அடையாளம் தெரிந்தது, என்றாலும் எலும்புக்கூடுகள் ஒரு சென்டிமீடருக்கு மேல் உயரமில்லை. ஆச்சரியமாக இருந்தது. "என்ன மிருகம்??" என்று கேட்ட என்னைக் கோபமாகப் பார்த்து, "மிருகமில்லை, குட்டிச்சாத்தான் தேவதைகள்" என்றார். விற்க மறுத்துவிட்டதால், கிளம்பினோம். மறு நாள் வழக்கம் போல் நான் தூங்கி விட்டேன். மாலையில் எழுந்த போது, எதிரே மரிஷ்கா. அவள் கழுத்தில் முதல் நாள் பார்த்த எலும்புக்கூட்டு மாலை.

அவளைப் பாராட்டினேன். என்னைக் கீழே தள்ளி என் மேல் ஏறி உட்கார்ந்தாள். சரி, இன்ப விவகாரம் என்று நான் தயாராகையில், குனிந்து என் தலையில் கை வைத்துச் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு எழுந்து, "நாம் உடனே ஊருக்குப் போயாக வேண்டும்" என்றாள். நான் ஏனென்று கேட்குமுன், "நாளைக்கு என் அப்பா இறக்கப் போகிறார். உயிர் பிரிவதற்குள் நாம் அங்கே இருக்க வேண்டும்" என்றாள். முதல் விபரீதம்.


(பூதத்தைப் பின்தொடர ►►)

17 கருத்துகள்:

 1. அடுத்த விபரீதத்துக்காகக் காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 2. ம..ம....மரிஷ்கா....அமானுஷ்யத்தை தொட்டு இருக்கிறிர்கள்...இப்ப கரப்பானை பார்த்து பயந்து கொள்பவர்களுக்குள்ளேயே இந்த கதை தெரியும் போல ... அடுத்த பகுதி நிச்சயம் சீக்கிரம் வேண்டும்...இரண்டு கதை சஸ்பென்ஸ் ஆள உளுக்குது...

  பதிலளிநீக்கு
 3. மரிக்க வைக்கிறாள் மரிஷ்கா. கேன்பேரா ஆதிவாசி ஊதல், வைத்தீஸ்வரன் கோயில் ஓலைச் சுவடி என்று உலகம் முழுக்க பெரட்டி பெரட்டி அடிக்கறீங்க...

  குட்டிச்சாத்தான் கதை... பெரும் பேயா வளரும் போலிருக்கு.. அப்பாஜி அடுத்த எபிசோடுக்கு வைட்டிங்.

  பதிலளிநீக்கு
 4. மாறுப்பட்ட கோணத்தில் ஒரு கதையை வாசித்த திருப்தி.அடுத்த பூதத்துக்காகக் காத்திருக்கிறேன்......

  பதிலளிநீக்கு
 5. சுவாரஸ்யம்!!! அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 6. மரிஷ்காவின் பூதங்கள் நல்லா இருக்கு. ஒவ்வொரு பூதமாக அடுத்தடுத்து விரைவில் ரிலீஸ் செய்யவும். ஏதேது பேய் பூதங்கள் கதையில் Ph.D., வாங்குவீர்கள் போலிருக்கே.

  பதிலளிநீக்கு
 7. அப்பாஜி....கதைக்கிற் கரப்பான் பூச்சி.புதுசாத்தான் இருக்கு !

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சென்னை பித்தன் (நானும்), பத்மநாபன், RVS,தமிழ் உதயம், எஸ்.கே, Baski, geetha santhanam, ஹேமா, ... அடுத்த விபரீதம் நாளைக்கு.

  பதிலளிநீக்கு
 9. கரடி விடறீங்களா...கரப்பான் விடறீங்களா...(எச்சிலை விழுங்கிக் கொண்டு) அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்..(பகல்ல வாசிக்கணுமா ராத்திரில வாசிக்கணுமா?) மரிஷ்காவின் பூதங்கள்...சுவாரஸ்யமான தலைப்பு...'அப்பாதுரையும் ஏழு பூதங்களும்' இதுவும் ஒன்றா?

  பதிலளிநீக்கு
 10. தொடருமா...
  வித்தியாசமான எழுத்து நடையில் அருமையா இருக்கு...
  திரும்பி பார்க்கலை... திரும்பி வரலாமுல்ல பூதம் பாக்க....

  பதிலளிநீக்கு
 11. சுவாரஷ்யமாக இருக்கு சார் முதல் முறை வருகிறேன்
  திரும்பிப்பார்க்கிறேன்
  திரும்பும் திசையெல்லாம்
  பூதம் வரட்டும் என்று
  பூதக் கண்ணாடியுடன் .....................

  பதிலளிநீக்கு
 12. எங்க வீட்லயும் ஏழெட்டுக் கரப்பான் பூச்சி சுத்திட்டு இருக்கு அப்பாஜி.. அது இதுவா இருக்குமோ!!!!

  எந்தப் பூச்சிக்குள் எந்த பூதமோ.. அமாஷ்யம்..

  அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்து...

  பதிலளிநீக்கு
 13. என்னாச்சு அடுத்த பார்ட்! (கையில் கத்தியுடன்..) நாங்கெல்லாம் ரசிக வெறியர்கள். வேண்டுமென்றால் என்னுடைய வஸ்த்ரகலா பதிவில் கெ.பிக்கு அளித்த பதில் கமெண்ட்டை பார்க்கவும். மரிஷ்கா இன்னும் அவன்(ர்) மேலேர்ந்து எழுந்திருக்கலையா? (எழுந்தாச்சு போலருக்கே..)
  எவ்வளவு நேரம் தான் திரும்பிப் பார்க்காமல் இருப்பது.. ;-)

  @ஆதிரா...
  உங்க வீட்டு கரப்பான் பூச்சிகளுக்கு ஒரு ஹிட் யூஸ் பண்ணுங்க.. சரியாயிடும்.. ;-)

  பதிலளிநீக்கு
 14. வாங்க ஸ்ரீராம், சே.குமார், dineshkumar, ஆதிரா,...

  குமார்: பூதம் வருது பூதம் வருது :)

  dineshkumar: பூதக்கண்ணாடியால பூதம் தேடுறீங்களா? கிவாஜக்கு பக்கத்து வீடா உங்களது?

  ஆதிரா: கரப்பானை மட்டும் நம்பாதீங்க; பாக்குறதுக்கு தான் அப்படி இருக்குதே பூச்சி தவிர நம்ம எல்லாரையும் விடத் தொன்மையான பிறவி.. ஜாக்கிரதை, சொல்லிட்டேன்.

  ஸ்ரீராம்: உங்கள் சந்தேகம் சரி. நண்பர் அரசனுடைய புத்தகத்துக்காக எழுதத் தொடங்கிப் பாதியில் விட்ட கதை (பாதி நிறுத்தப்பாதுரைனு எனக்கு பட்டம் வந்துரும் போலிருக்கு); "எழுத்து நடையும் கருத்தும் எசகு பிசகா இருக்குதுய்யா, கொஞ்சம் மாத்துய்யா" என்றார்; "கதையே கிடையாது போங்க வாத்தியாரே" என்று ஏமாத்திட்டேன். இப்பொழுது முடிக்கத் தோன்றியது. 'உன் கதையில ஆம்பிளங்களுக்குப் பேரே இல்லப்பா' என்று அவர் கதையின் தலைப்பை 'அப்பாதுரையும் ஆறேழு பூதங்களும்'னு மாத்தி வச்சார். 'இதென்ன அப்புசாமி மாதிரி ஒரு தலைப்பு'னு அதுலயும் தகராறு செஞ்சு ஒதுங்கினேன். இதான் பக்கவாத்தியம் கதைக்கு.

  பதிலளிநீக்கு
 15. RVS ஹிட்டுக்கெல்லாம் பெப்பே சொல்ற் பூதக் கரப்பு.. அதை விறட்ட அப்பா ஜி யாலேதான் முடியும்.. அடுத்தப் பதிவைப் பார்த்து அமானுஷ்யத்தில் சென்று மறைந்தால் சரி.

  //ஆதிரா: கரப்பானை மட்டும் நம்பாதீங்க; பாக்குறதுக்கு தான் அப்படி இருக்குதே பூச்சி தவிர நம்ம எல்லாரையும் விடத் தொன்மையான பிறவி.. ஜாக்கிரதை, சொல்லிட்டேன்.//
  பாத்தீங்களா அவரே சொல்றாரு. சரி அடுத்தப் பதிவைப் பார்த்துட்டு வரேன். இப்பவே நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சுக்கிது. திக் திக்குன்னு இருக்கு... ஆனா படிச்சாகனும்னு மனசு மட்டும் சொல்லுது.

  பதிலளிநீக்கு
 16. //"நான் நாற்பத்திரண்டு" என்றது.//
  //அவர் கதையின் தலைப்பை 'அப்பாதுரையும் ஆறேழு பூதங்களும்'னு மாத்தி வச்சார். //

  பதிலளிநீக்கு