2010/12/04

மரிஷ்காவின் பூதங்கள்

சிறுகதை


முன் கதை 1


அவள் சொன்னது எனக்குப் புரியவில்லை என்றாலும் மரிஷ்காவின் விவேகம் பற்றி எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லாததால், "உன் அப்பா இறக்கப் போகிறாரா? மழை வரப்போகிற மாதிரி சாதாரணமா சொல்றியே?" என்றேன். அவள் முகத்தின் தீவிரத்தைக் கவனித்து விட்டு, "எப்படித் தெரியும்?" என்றேன்.

கழுத்திலிருந்த எலும்புக் கூட்டு மாலையைத் தொட்டுக் காட்டினாள். "எம்டிம்" என்றாள். நான் பேந்த விழித்தேன். "Metaphysical Telepathic Interference Monitor" என்றாள். நான் இன்னும் பெரிய கேள்வியுடன் அவளைப் பார்த்தேன். 'என் தலையில் ஏன் கை வைத்தாய் மெடபிசிகல் மங்கையே?'

"உனக்கு இப்பப் புரியாது புலவரே. நான் சொல்றதை மட்டும் நம்பு, சரியா?" என்று என் முதுகில் தன் மார்பையழுத்திக் கட்டிப்பிடித்து என் மனதைத் திசை திருப்பினாள். ஒரு சிறுபிள்ளைக்கு விளக்குவதுபோல், "என் அப்பாவின் மனம் என் மனதுடன் பேசிய போது சொன்ன செய்தி. இது நாற்பத்திரண்டு குட்டி தேவதைகளின் எலும்புக்கூட்டு மாலை" என்றாள், தன் மாலையை என் காது மடலில் உரசவிட்டு. குறுகுறுக்கக் காரணம் அவள் மாலையா அல்லது தொடர்ந்து என் காதில் சேதி சொன்ன அவள் உதடுகளா என்று தவித்தேன். "இந்த மாலை, ஒரு மனதுடன் இன்னொரு மனம் ஒரே அலைவரிசையில் பேசுவதற்கு வழி செய்கிறது. அப்படி மன உரையாடல் நடக்கும் பொழுது கவனித்து, மாலையின் தேவதைகள் எல்லா செய்திகளையும் துண்டுத் துண்டாய்ப் பிடித்து வைத்துக் கொள்கின்றன. உன் உயிருக்கு ஒரு கேடலிஸ்ட் சக்தி இருக்கிறது. உன் உயிரின் கேடலிஸ்ட் சக்தியைப் பயன்படுத்தி இந்த எலும்புக்கூட்டு மாலை செய்திகளை ஒன்று சேர்த்து, நமக்குப் புரியும் மொழியில் அறிவிக்கிறது" என்றாள்.

எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. அவ்வப்போது போதைப் பொருள் உபயோகிப்போம் என்றாலும் நம்பகமான கஞ்சா தான். அதற்கு மேல் தீவிரமாக ஒன்றும் கிடையாது. ஒருவேளை ஏதாவது எக்ஸ்டசி, எல்எஸ்டி என்று எனக்குத் தெரியாமல் உபயோகிக்கிறாளா?

"இல்லைடா.. சொன்னா நம்பு. நீதான் எனக்கு எல்லாவற்றையும் விடப் பெரிய போதை" என்று என் தலைமுடியைக் கோதி மண்டைச் சதையை நகங்களால் மெல்லக் கீறினாள். விழுந்தேன். தலைமுடி நகக்கீறலின் போதை கஞ்சாவில் கூட கிடைக்காது. "சரிடி மோகினி" என்று கிறங்கினேன். மரிஷ்கா சொன்னது விசித்திரமாகத் தோன்றினாலும், நம்பினேன். சொல்லப்போனால் என் தொல்பொருள் தேடல் அனுபவத்தில், நான் பார்க்காத விசித்திரமே இல்லை. மரிஷ்கா மட்டுமில்லை பிறரும், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விசித்திரமாகவும் விபரீதமாகவும் நடந்து கொண்டிருக்கிறார்கள். சியன் மாகாணத்தில் ஒருமுறை ஒரு வயதான ஆசாமி, "நான் புத்தன், என்னைப் பார்" என்று மேலங்கியைத் திறந்து காட்டினார். தோலையும் காணோம் எலும்பையும் காணோம். ட்ரேன்ஸ்பேரன்டாக சில பேர் வீட்டில் போடும் காபி போல், ஒரு காவிக்கூட்டின் வழியே அந்தப்பக்கம் இருந்த சுவரெல்லாம் தெரிந்தது. இன்னொரு முறை, திருவிடைமருதூர் கோவிலில் சுவர்சித்திரம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது எங்களுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு கிழவர் மரிஷ்காவிடம் ஒரு மஞ்சள்பொடிப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு சர்வ சாதாரணமாகக் கரைந்து சித்திரத்தில் கலந்தார். "மாசி மாதச் செவ்வாய்க்கிழமை காலைகளில் மட்டும் நடக்கிறதாகச் சொல்கிறார்கள், உங்கள் கண்ணுக்குத் தெரிந்ததா?" என்று எங்களை அதிர்ச்சியுடனும் அதிசயத்துடனும் பார்த்தார் கோவில் குருக்கள். மரிஷ்காவின் அண்மையில் நிறைய விசித்திரங்கள் பார்த்திருக்கிறேன், எம்டிம் அப்படி ஒன்றும் புதிதாகப் படவில்லை.

    வசரமாக சேன்ப்ரேன்சிஸ்கோ வந்தோம். வீட்டுக்குள் வந்ததும் யோகஷ் என்னைத் தனியாக அழைத்து, என் கைகளைப் பிடித்துக் கொண்டு அரை மணி போல் அமைதியாக இருந்தார். பிறகு, "வா, வா. நீ வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி" என்றார், கல்யாண விருந்தை வரவேற்பது போல. யோகஷின் வீடு, கூடுதலாக இருட்டியிருந்ததைக் கவனித்தேன். ஜன்னல் வாசல் இடுக்கு, பாத்ரூம் ஓட்டை என்று வீட்டின் ஒரு இடம் விடாமல் ப்லேடோ களிம்பினால் அடைத்துக் கொண்டிருந்தாள் மரிஷ்கா. யோகஷ் தன் படுக்கையறையின் நான்கு மூலைகளிலும் மெழுகு விளக்குகளை ஏற்றி வைத்தார். என்னையும் மரிஷ்காவையும் அருகே வரச்சொல்லி இறுக அணைத்தார். பிறகு நான் சற்று எதிர்பாராத விதத்தில் தன் உடைகளைக் களைந்து, "அம்மணமாக வந்தேன், அப்படியே போவேன்" என்று சித்தர் போல் சொன்னார். என்னை மறுபடி அணைத்துவிட்டு, படுக்கையில் விழுந்தார். எனக்குச் சங்கடமாக இருந்தது. படுக்கையருகே சென்று மரிஷ்கா அவரையே கவனித்துக் கொண்டிருந்தாள். அப்பாவின் அம்மணம் அவளை உறுத்தவே இல்லை. அவள் கழுத்தில் எலும்புக்கூட்டு மாலை இருந்தது. என் வலது கையை இழுத்துப் பிணைத்துக் கொண்டாள். "இன்னும் ஒரு நிமிடத்தில் அப்பாவின் உயிர் பிரியும்" என்று என் காதில் கிசுகிசுத்து, என் இடது கையை யோகஷின் கைகளோடு சேர்த்தாள். சொன்னபடியே ஒரு நிமிடத்தில் யோகஷ் இறந்து போனார். அவர் இறந்ததை என்னால் உணர முடிந்தது. மெய்சிலிர்த்த அனுபவம்.

யோகஷ் இறந்ததும் மரிஷ்கா செய்தது மிகவும் வினோதமாகப் பட்டது. பொதுவாக இறந்தவர் வீட்டில் அழுவார்கள், துக்கம் கொண்டாடுவார்கள். ஆனால், மரிஷ்கா என்னை அடுத்திருந்தப் படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, "இப்போதே நாம் கூட வேண்டும்" என்றாள். நான் தயங்கினேன். "மறுக்காதே, மறுக்காதே" என்று கெஞ்சத் தொடங்கினாள். அவசரப்படுத்தினாள். மறு நாள் பொழுது விடியும் வரை என்னை வெளியே விடவில்லை. சோர்ந்து போய் நான் தூங்கிவிட்டேன்.

எழுந்த போது பெரும் தனிமையை உணர்ந்தேன். இருண்ட வீட்டில் தேடிப்பிடித்து விளக்குகளைப் போட்டேன். யோகஷின் உடலையும் காணோம். அடுத்த இரண்டு நாட்களுக்கு மரிஷ்காவையும் காணோம். திரும்பி வந்ததும், "என்னை மன்னித்து விடு. எங்கள் மதச்சடங்குகளில் உன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதனால் நானே எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு, என் உறவினர்களுக்கு விடை சொல்லி விட்டு வந்தேன். உன்னிடம் சொல்லாமல் போனதால், என் மேல் கோபமா?" என்றாள்.

மரிஷ்கா மேல் எனக்குக் கோபமே வந்ததில்லை. "இல்லை" என்றேன். "ஆனால், ஒன்று கேட்க வேண்டும். இறந்த வீட்டில் கூடுவது உனக்கு விசித்திரமாகப் படவில்லையா? அதுவும் இரவு முழுதும்? போதாக்குறைக்கு இறந்தவர் உன் அப்பா எனும் பொழுது?!"

சிரித்தாள். "இதில் என்ன விசித்திரம்? என் பிரியக் காதலனே, நான் சொல்வதையெல்லாம் இப்போதைக்கு அப்படியே நம்பு. நீ, நான், என் அப்பா மூவருமே சக்தி சாதனங்கள். மகத்தான எதிர்கால விளைவைக் கொண்டு வர நாம் பிறவிக்கணக்கில் தயார்படுத்தப் பட்டிருக்கிறோம். அவ்வளவு தான். இறந்தக் கணத்தில் என் அப்பாவின் ஆவி மற்ற ஆவிகளுடன் கலந்து உன்னுள் ஊடுறுவி, ஒரு கலப்படச் சக்திப் பிறவி அம்சத்தை உன்னுள் விட்டுச் சென்றிருக்கிறது. என் அப்பாவின் ஆவி இந்த உலகத்தை விட்டுப் போகுமுன் நாம் கூடி அதன் ஆசியையும் அந்த அம்சத்தையும் கைப்பற்றியாக வேண்டும். பிறக்கப் போகும் நம் பிள்ளைக்குத் தர வேண்டும். அதனால் தான் கூடுவதற்கு அவசரப்படுத்தினேன். ஏய்..நீ பெரிய ஆள்... அன்றிரவு நான் கருவுற்றேன் தெரியுமோ?" என்று என் கையை எடுத்துத் தன் கீழ்வயிற்றில் வைத்தாள். "நமக்கு உலகை ஆளும் மகன் பிறக்கப் போகிறான். இது என் அப்பாவின் பிறவி ரகசியம். நம் பிறவி ரகசியம். மறந்து விடாதே. அதற்காகத்தான் என் அப்பா நம்மை இங்கே வரச் சொன்னார்".

எனக்குத் தலை சுற்றியது. "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை, மரிஷ்கா, நீ சந்தோஷமாக இருந்தால் சரிதான்" என்றேன். உண்மையும் அதுதான். மரிஷ்காவின் மகிழ்ச்சி, என் மகிழ்ச்சி.

    டுத்தப் பதினெட்டு மாதங்களில் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். குழந்தைத் தானாக வெளிவரும் வரையில் பொறுத்திருப்பேன் என்று அடம் பிடித்து வீட்டிலேயே இருந்தாள் மரிஷ்கா. அவர்கள் குடும்ப ரேபை மட்டும் அடிக்கடி ரகசியமாக வந்து பார்ப்பார். என் மகன் பிறந்த அன்றைக்கு அவர் தன் கழுத்தைக் கீறித் தற்கொலை செய்துகொண்டது விசித்திரமாகத் தோன்றினாலும், கிறுக்கன் என்று தணிந்தேன். நிறைய மதவாதிக் கிறுக்கர்களைப் பார்த்திருக்கிறேன் என் வாழ்நாளில்.

மகன் பிறந்ததும் மரிஷ்கா என்னுடன் பயணம் வருவதை நிறுத்தி விட்டாள். மரிஷ்காவைப் பிரிந்திருக்க முடியாமல், நானும் பயணங்களை வெகுவாகக் குறைத்தேன். மகனை எந்தப் பள்ளிக் கூடத்துக்கும் அனுப்ப விரும்பவில்லை மரிஷ்கா. வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுத்தாள். அவன் எங்களுடனேயே இருந்தான். இதுவும் ஒரு வகையில் நன்றாக இருந்தது என்றாலும் மரிஷ்காவின் போக்கு எனக்கு அவ்வப்போது மிதமான எரிச்சலை உண்டாக்கத் தொடங்கியது. வழக்கம் போல் என்னை அன்பிலும் அணைப்பிலும் அடக்கி விடுவாள். "நமக்குப் பிறந்திருப்பது சாதாரண மனிதக்குழந்தை என்று நினைத்து விடாதே. அவன் உயிருக்கு ஆபத்து வராமல் பத்து வருடங்கள் பாதுகாப்பது நம் பொறுப்பு" என்பாள்.

மகனுக்கு பதிமூன்று வயதிருக்கும் போது இரண்டாவது விபரீதம் நடந்தது.

மகன் பாஹ்மிட்ஸ்வாவை இஸ்ரேலில் நடத்த விரும்பி, பெத்லஹெம் போயிருந்தோம். ஜெருசலத்தில் விக்கியழும் சுவரைப் பார்க்கப் போனோம். மரிஷ்கா வரவில்லை. என்ன அழைத்தும் மறுத்து பெத்லஹெத்தில் தங்கி விட்டாள். முதன் முறையாகப் பிள்ளையைப் பிரிந்துத் தனியாக இருந்தாள். நானும் என் மகனும் போயிருந்தோம். ஏதோ நினைவில் இருக்கும் போது, திடீரென்று மகனைக் காணோம். எங்கே தேடியும் கிடைக்கவில்லை. வெளளிக்கிழமையானதால் கூட்டமோ கூட்டம். பெத்லஹெம்-ஜெரூசலத்தின் பத்து கிலோமீடர் தொலைவைச் சுற்றிச் சுற்றித் தேடியும் ஒரு தடயமும் கிடைக்கவில்லை. எனக்கு மனமும் உடம்பும் பதைத்தது. பதிமூன்று வயதுப்பையன் விவரம் தெரிந்தவன் எங்கே போயிருப்பான்? போலீசுக்குப் போகக் கூடத் தோன்றவில்லை. அங்கே இங்கே அலைபாய்ந்து விட்டு, மரிஷ்கா உடைந்து போய்விடுவாளே, எப்படிச் சொல்வது என்று திரும்பி வந்து பதைத்துப் போய் நடந்ததைச் சொன்னேன்.

"நாம் ஜெரூசலம் வந்த காரியம் முடிந்து விட்டது" என்றாள் அமைதியாக.

"என்ன மரிஷ்கா? மகனைத் தொலைத்து விட்டு நிற்கிறோம், என்னவோ சாப்பிட்டு முடித்தது போல பேசுகிறாயே?" முதல் முறையாகக் கத்தினேன்.

என்னைத் தீர்க்கமாகப் பார்த்து, "நம் மகன் இன்னும் பத்து வருடங்களுக்குக் கிடைக்க மாட்டான். அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. உலகத்தை ஆளுவதற்கு அவன் தயாராக வேண்டாமா? அதான் நம்மிடமிருந்து பிரிக்கப் பட்டிருக்கிறான்" என்றாள்.

காவல் துறைக்கு புகார் தரவோ, செய்திப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கவோ, தனியார் துப்பறிவாளர்களை அணுகவோ மறுத்து விட்டாள். என் மகனைத் தேடும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று என்னிடமே கண்டிப்பாக இருந்தாள். மறுத்தால் மகனை நிரந்தரமாக இழந்துவிடுவோம் என்று நம்பினாள். கேட்டால், ஆவி சொன்னது, telepathic message, பூத சமாசாரம் என்று புரியாத விவரம் சொன்னாள். ஊருக்குத் திரும்பினோம். மனம் மெள்ள மகனை மறந்து விட்டது. மரிஷ்காவும் நானும் முன்பை விட நெருக்கமாகி விட்டோம்.

    ழெட்டு வருடங்களாகியிருக்கும், ஒரு நாள் "நான் பிறந்த மண்ணில் நமக்கு ஒரு வீடு வேண்டும்" என்றாள். அடுத்த நாளே இஸ்ரேல் சென்றோம். வடக்கு டெல்-அவிவ் நகரத்தில் கடலோரமாக இந்த கிகர் ஹமிதினா வீட்டை வாங்கினோம். "இங்கேயே இருப்போமே?" என்றாள்.அடுத்த மாதமே டெல்-அவிவுக்குக் குடி வந்து விட்டோம்.

இஸ்ரேல் குடிவந்து சில வாரங்கள் இருக்கும். இரவில் என் மடியில் படுத்துக் கொண்டிருந்தாள் மரிஷ்கா. என் கைகளை எடுத்து மார் மேல் வைத்துக் கொண்டாள். "நான் உன்னிடம் சில உண்மைகள் சொல்ல வேண்டும். இத்தனை காலமாக மறைத்திருந்திருந்தேன் என்று நினைக்காதே, சரியான தருணத்துக்காகக் காத்திருந்தேன்" என்றாள். மூன்றாவது விபரீதம்.


(பூதத்தைப் பின்தொடர ►►)

18 கருத்துகள்:

  1. கதை ரொம்ப அருமையா போகுதுங்க... தொடருங்கள்... ஆவலாய் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. படிக்கும் ஆவலை தூண்டும் விதமாக உள்ளது படைப்பு. நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவமே.

    பதிலளிநீக்கு
  3. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்க வைத்திருக்கிறீர்கள்.மிக மிக சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  4. மரிஷ்காவிடம் கதாநாயகன் ’’கட்டுண்டான் காதலன்’’என்ற வகையில் சிக்கிகொண்டது போல் உள்ளது..

    தந்தையின் மரணம் , தனயனை தள்ளிவைத்தல் மரிஷ்கா என்னதான் செய்து கொண்டிருக்கிறாள்.... பெரிய காரணம் ஒன்று இருப்பதாக தெரிகிறது ..

    மழை வரப்போற மாதிரி , சிலர் வீட்டில் போடும் காப்பி போல, இப்படி நிறைய உதாரணங்கள் நச்...

    ( தரித்தலுக்கும் பிறத்தலுக்கும் 18 மாத இடைவெளியா , என் புரிதலை சீர் செய்யுங்க )

    பதிலளிநீக்கு
  5. பத்துஜி! அது ஒரு அசாதாரண கர்ப்பம் என்று அப்பாஜி சொல்கிறாரோ? இன்னும் டெல்-அவிவ்வில் என்னென்ன விபரீதமோ? காத்திருக்கிறோம். மாசிச் செவ்வாய்... மஞ்சள் பொடி.. திருவிடைமருதூர்.. உம்.உம்.... நல்லா போவுது... ;-)

    பதிலளிநீக்கு
  6. omen,பாபா ,விவிலியம் எல்லாம் சட்டென்று நினைவு வருகிறது.இவற்றிலிருந்து வேறுபட்டு நீங்கள் எப்படி கதையை நகர்த்திச் செல்வீர்கள் என்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு வகையில் அந்தத் திசைகளில் நீங்கள் நகராமல் இருக்க நான் வைக்கும் செக் என்று வைத்துக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  8. //" bogan கூறியது...
    omen,பாபா ,விவிலியம் எல்லாம் சட்டென்று நினைவு வருகிறது.."//

    எனக்குக் கூட எப்போதோ படித்த ரஷ்யக் கதை ஒன்று, திலீபனும் ஆனந்தியும் ஞாபகம் வருகிறார்கள்!

    மரிஷ்காவுக்குத் தந்த அந்த மஞ்சள் பொடியை அவர் அப்புறம் என்ன செய்தார் என்று சொல்ல...வே இல்லையே..!

    யானைக்குத்தான் பதினெட்டு மாதம் கர்ப்பம்...மரிஷ்காவுக்குமா?

    //"bogan கூறியது...
    ஒரு வகையில் அந்தத் திசைகளில் நீங்கள் நகராமல் இருக்க நான் வைக்கும் செக் என்று வைத்துக் கொள்ளலாம்"//

    அப்பாஜிக்கு இது ஒரு பெரிய விஷயமா என்ன?!

    பதிலளிநீக்கு
  9. ஏலியன்ஸ்.இன்னொரு செக் .

    பதிலளிநீக்கு
  10. வருக சே.குமார், தமிழ் உதயம், சென்னை பித்தன், பத்மநாபன், RVS, bogan, ஸ்ரீராம்,... தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. 'சொல்லப்பட வேண்டியவை எல்லாம் சொல்லப்பட்டு விட்டன' என்று பரீட்சித்து மன்னனுக்குக் கதை சொன்ன சுக முனிவர் சொன்னாராம் - இனிப் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சேக்குபியர் கூட இதை 'எல்லா கதைகளும் ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன' என்று சொன்னதாகப் படிச்சிருக்கேன் (அவரு எழுதினதை அவரு எழுதவே இல்லைனு அவரையே அடிச்சுக் கேட்டாங்களாம்).

    இதனால் தெரிவிப்பதென்னவென்றால் இந்தக் கதையின் சம்பவங்கள் எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டவை (அப்பாடி.. பிழைச்சேன். இனியும் படிச்சு ஏமாந்தா உங்க விதி :).

    பாபா - சினிமாவா? புரியலியே bogan?

    பதிலளிநீக்கு
  12. நீங்க செக்கு மேலே செக்கா வைக்கறீங்க - நானும் தலையாட்டிகிட்டே சுத்துறேன்.

    bogan, ஸ்ரீராம்: இந்தக் கதையின் setup இந்தப் பதிவிலேயே இருக்கிறது: "நீ, நான், என் அப்பா மூவருமே சக்தி சாதனங்கள்"

    பதிலளிநீக்கு
  13. யானைக்கு 18 மாத கர்ப்பமா? தெரியாம போச்சே ஸ்ரீராம்? (தகவலுக்கு நன்றி) இருபது மாசம்னு மாத்தியிருப்பேனே? இல்லை யானை மாதிரி பையன்னு எழுதியிருப்பேனே? நான் ஏதோ 'அசாதாரணத்தை' எழுதுறதா நெனச்சு எழுதினா - அதுவும் அரைகுறையாயிடுச்சே!

    பதிலளிநீக்கு
  14. rosemary's baby![இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சிருக்கு]

    பதிலளிநீக்கு
  15. அதுலந்து கொஞ்சம் இதிலந்து கொஞ்சம்.. நல்ல்ல்ல்லாஆஆஆ கலக்கி அம்பது கிராம்.
    >>> rosemary's baby![இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சிருக்கு]

    பதிலளிநீக்கு
  16. 'பாபா' என்ன சம்பந்தம் சொல்லவில்லையே, bogan?

    பதிலளிநீக்கு
  17. //( தரித்தலுக்கும் பிறத்தலுக்கும் 18 மாத இடைவெளியா , என் புரிதலை சீர் செய்யுங்க )//
    நானும் கேட்க நினைத்தது.. ஆனால் அமானுஷ்யத்தில் இதெல்லாம் சகஜமப்பா.. ஊர்க்காரங்க கேள்வியெல்லாம் கேட்கலையா?

    உவமையெல்லாம் கொட்டுது.. காபி எப்படி இருக்கும்?

    தலையில் கீறினா நகக்கீறல்ல ரத்தம் வராது.. கஞ்சாவை விட போதை வரும. நல்லா இருக்கு..

    மரிஷ்கா மீது உங்களுக்குக் கோபமே வராதா? ஆம் கதையை ஒட்டிச் செல்பவள் அவள்தானே.. மனுஷ்ய கதாநாயகி.. மரிஷ்காவின்
    மறைத்த உண்மைகளைச் சொல்லும் சரியான தருணத்திற்காக காத்திருக்கிறோம். விறு விறு.. சூடா.. காரமா...சுக்குக் காபி குடிச்சமாதிரி..

    பதிலளிநீக்கு