2010/10/24

புகை


முன் கதை 1 2


    லுவல் பயணங்கள், சகோதரிகள் திருமணம் என்று இரண்டு வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. மூன்றாம் வருடம் அமெரிக்கா போக வாய்ப்பு கிடைத்ததும் உடும்பாகப் பிடித்துக் கொண்டேன். பதவி உயர்வுடன் வெளிநாட்டில் வேலை என்றதும் அப்போதிருந்த காதலையும் கைவிட்டு அமெரிக்கா கிளம்ப ஆயத்தமானேன். விமானநிலையத்திற்கு வயலின் உட்பட என் நண்பர்கள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள். தனக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்றான் சுரேஷ். "நம்ம செட்ல எல்லாரும் செட்டில் ஆயாச்சு மச்சி. நீ மட்டுந்தான் கிர்கில்ஸ் விட்டுட்டிருக்கே" என்றான். அதுவரை அமைதியாக இருந்த வயலின், "ஏண்டா, அவன் ஒருத்தனாவது நிம்மதியா இருக்கட்டுமேடா?" என்றான் சட்டென்று. "இங்கே நிம்மதிக்கென்னடா குறை? அமெரிக்கா போனா நிம்மதியாயிருமா? அவனவனுக்கு என்ன நடக்கணுமோ அது தாண்டா நடக்கும்" என்ற தேசியைத் தட்டிக்கொடுத்த சுரேஷ், "ரைட், விடுங்கடா" என்றான். எனக்கு இருந்தப் பெருமையிலும் போதையிலும், எல்லாவற்றையும் விட இந்தியாவை விட்டுப் போகும் வேகத்திலும், அவர்கள் பேச்சில் புதைந்திருந்த அச்சத்தை உணரத் தவறினேன்.

எனக்கென்னவோ என்னிடமிருந்தே விடுதலை கிடைத்தது போலிருந்தது. அமெரிக்கா வந்த ஒரு வருடத்துக்குள் தமிழ், தமிழ்நாடு, நண்பர்கள், உறவினர் என்று அத்தனை பேரையும் மறந்து விட்டேன். வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை அம்மாவுடன் தொலைபேசுவதோடு சரி. வந்து பத்து வருடங்களுக்கு மேலாகியிருக்கும். இரண்டாயிரத்தொன்றில் தாயத்தின் நிழல் என்மேல் மீண்டும் பட்டது.

    டோக்யோவிலிருந்து சேன்ஹோசே திரும்பிக் கொண்டிருந்தேன். நகோயா விமான நிலையத்தில் யாரென்று பார்த்தால், சுரேஷ்! கொஞ்சம் கூட எதிர்பார்க்கவேயில்லை. என்னை அடையாளம் கண்டு பேசினான். அரைமணி காரசாரமாகத் திட்டிவிட்டு பழைய நட்பின் இழைகளைக் காட்டினான். எனக்கும் நட்பை இழந்த வருத்தமேற்பட்டு அவனிடம் மன்னிப்பு கேட்டேன். குடும்பம், தொழில் பற்றிப் பேசினோம். ஐ.டி வெளிச்சேவை பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வந்த நேரம் அது. ஒரு இந்திய ஐ.டி கம்பெனியின் விற்பனை அதிகாரியாக சேன்ஹோசே வந்திருப்பதாகவும், இனி அமெரிக்காவில் தான் வேலையென்றும் சொன்னான். வீடு பார்த்தபின் மனைவி, மகனை வரவழைப்பதாகவும் சொன்னான். புகைப்படங்கள் காட்டினான். வாழ்த்தினேன்.

விமானம் கிளம்ப நேரமிருந்தது. என் கணக்கில் அவனையும் உயர்வகுப்புக்கு மாற்றிக்கொண்டு, லவுஞ்சுக்கு அழைத்துச் சென்றேன். "என்ன சாப்பிடுறே?" என்றேன். "கல்யாணி கிடைக்குமாடா?" என்றான். "அடச்சே. டோக்யோக்காரன் தண்ணியடிப்போம்டா" என்று ஒரு புட்டி உயர்தர சொச்சு தரவழைத்தேன். "நம்ம ஊர் பட்டைச்சாராயம் போல இருக்கேடா?" என்றான். அங்கேயிங்கே சுற்றிப் பேசி, "மச்சி, அமெரிக்கா வருவேன்னு நினைக்கவேயில்லடா. ஐ.டி மட்டும் வரலின்னா சான்சே இல்ல. இதுல கூட ஒரு இழவும் தெரியாமத்தான் வந்திருக்கேன். ஒரு மணி நேரத்துக்கு முப்பது டாலர்னு தொழில் விக்குற வேலைடா. என்ன வித்தியாசம்னா, இந்த தொழில்ல படுக்க வேண்டாம், அவ்ளோ தான். கெளம்பினதுலந்து கிள்ளி கிள்ளி விட்டிட்டிருக்கேண்டா. அமெரிக்கா!" என்று வியந்து பேசினான். பிறகு அமைதியாக, "தாயத்து தாண்டா" என்றான்.

அதுவரை என் உள்ளத்தின் ஆழ்கிணறுகள் ஒன்றில் சங்கிலிப் பாரம் கட்டிப் புதைந்து கிடந்த உளுத்த பெட்டி மெள்ள எழும்பியது. பெட்டியின் விரிசல்களிலிருந்து கரப்பான்பூச்சி முட்டைகள் சோப் குமிழிகளாக ஆயிரக்கணக்கில் வெளிவந்தன. முட்டை வெடித்து கரப்பான்பூச்சிகள் என் மனம், உடல், மூளையெங்கும் பரவி ஓடத்தொடங்கின. அதிலிருந்து வெளிவந்த ஒரு கரப்பான்பூச்சி சர்ர்ர்ர்ரென்று வெளியே பறந்து எனக்குச் சற்றுத் தொலைவில் இறங்கி மனித உருவில் நடக்கத் தொடங்கியது.

"டேய்" என்று சுரேஷ் என்னை உலுக்கினான். "என்னடா ஆச்சு? பேயடிச்ச மாதிரி பாக்குறே?" என்றான்.

"நதிங்" என்று சுதாரித்தேன். "நீ தாயத்துன்னதும் கொஞ்சம் ஸ்டன்னாயிட்டேன், அதான்" என்றேன். கண்கள் கரப்பான்பூச்சியைத் தேடின.

"அதப்பத்தி பேச விரும்பலைனா, வேணாம்டா. சாரி" என்றான்.

"சேசே! அதுல எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லடா" என்றேன். "ஸோ, தாயத்து பலிச்சுடுச்சுன்றே?"

"வேறே எப்படிறா இதுக்கு விளக்கம் சொல்றது? கம்ப்யூடர்னா என்னனு கூடத் தெரியாதுறா எனக்கு. க்ளூகோஸ் வித்துக்கிட்டிருந்த என்னைச் சுண்ணாம்படிச்சு சட்டை போட்டு இங்கே கொணாந்திருச்சேடா?" என்றான்.

"அப்ப, எஞ்சாய்டா" என்றேன். "புடிக்கலேன்னா க்ளூகோஸ் வியாபாரம் இருக்கவே இருக்கு" என்றேன்.

"அதை விடுறா. தாயத்து வேண்டுதல் பலிச்சு கொஞ்ச நாள்லயே எதுனா கெட்டதும் நடக்குதேடா? அதாண்டா பயமா இருக்கு" என்றான்.

"வயலினை வச்சு சொல்லாதறா. திலகம் அவனை யூஸ் பண்ணினானு உனக்கும் நல்லாத் தெரியும். ஷீ வாஸ் எ ட்ரேம்ப். அழகா கவர்ச்சியா இருந்தா, அந்த வயசுல நம்ம சுரப்பிகளும் ஓவர்டைம் செஞ்சுட்டிருந்துச்சு. தட்ஸ் ஆல். அவ ஓடினது வயலினுக்குத் தான் நல்லது. குட் ரிடன்ஸ்" என்றேன்.

"அவ திரும்பி வந்துட்டா தெரியாதா?" என்றான்.

விமானம் கிளம்பத் தயாராக இருப்பதாகச் சிப்பந்திப்பெண் பணிவாகச் சொன்னாள். "வாடா" என்றேன். மேல்வகுப்புப் பிரயாணிகளுடன் கலந்தபடி, "திரும்ப சேந்துட்டாங்களா? அப்புறம் என்ன? குட்" என்றேன்.

"இல்லடா. அவனை அவ பாடா படுத்தி பெண்டெடுக்குறா. கேரக்டரும் சரியில்லே. வேற கல்யாணமும் கட்ட முடியல, விவாகரத்தும் செய்ய மாட்டுறான். ஆளு இப்ப ரொம்ப நொந்துட்டான்" என்றான்.

இடம் தெரிந்து அமர்ந்து கொண்டோம். "இருக்கட்டுமேடா. ஒரு கேசை வச்சுக் கலங்குறதுல லாஜிக்கே இல்லியே? தேசி சந்தோசமாத் தானேடா இருக்கான்?" என்றேன். கேட்டிருக்கக் கூடாதோ? உளுத்த பெட்டி மீண்டும் மேலே வந்தது.

"விஷயம் தெரியாதா? அவங்களுக்கு ஒரு கொழந்த பொறந்ததும் பிரிஞ்சுட்டாங்க. கொழந்த பொறந்ததுமே அவங்க ரெண்டு பேருக்கும் தகராறாகி அவ கொழந்தையைத் தூக்கிக்கிட்டு தாத்தாகாரனோட ஓடிட்டா" என்றான்.

"ஏன்?". பெட்டி விரிசல்களிருந்து கரப்பான்பூச்சி முட்டைகள் பொங்கி வந்தன.

"எனக்குத் தெரியாதுடா. தேசி தான் சொன்னான். பொறந்த கொழந்தை இவனைப் பாத்து சிரிச்சுதாம்" என்றான். சற்றுத் தயங்கி, "வாயெல்லாம் பல்லா இருந்துச்சாம்டா. கோரப்பல் கூட இருந்துச்சாம். அன்னிக்குப் பொறந்த கொழந்தைக்கு எப்டிறா பல்லு வரும்?" என்றான். முட்டைகள் வெடித்துக் கரப்பான்பூச்சிகள் என் மேல் ஊரத் தொடங்கின. உதட்டோரம் ஆட்டுரத்தம் தெறித்து தேசி காட்டேறி போல் தெரிந்தான். "அவன் டாக்டர்கிட்டே வைத்தியம் செய்யணும்னு சொல்ல, அவ முடியாதுனு சொல்ல, அதுக்குள்ள தாத்தாக்காரன் வந்து, இதைக் கேளுடா.. ரெண்டு பேரும் கொழந்தையோட ஜன்னல்லந்து தவளை குதிக்கிற மாதிரி குதிச்சுப் போயிட்டாங்களாம்". ஒரு பூச்சி சர்ர்ர்ர்ரென்று பறந்து, என்னைப் பார்த்து சிரித்தபடி வந்த விமானப் பணிப்பெண்ணின் கண்ணுக்குள் கலந்தது.

"வாட் நான்சென்ஸ்!" என்று சுதாரித்தேன். "எப்படிரா இதையெல்லாம் நம்புறே? இஸ் ஹி நட்ஸ் ஆர் வாட்?"

"இதையெல்லாம் நம்புறனா நம்பலியா உண்மையா பொய்யா அதெல்லாம் பீராஞ்சுட்டிருக்கலாம். வேறே விஷயம். ஆனா வயலினும் தேசியும் நம்ம ப்ரென்ட்ஸ். அவங்க நம்மள மாதிரிதான். அவங்கள நம்பாம எப்படிரா?"

"தேசி இப்ப எப்படி இருக்கான்?"

"அதையெல்லாம் மறந்துட்டான். புது ஆள் இப்ப. பிலிப்ஸ்ல சீப் மார்கெடிங் ஆபீசர். கம்பெனி ப்ளேன்ல போயிட்டிருக்கான். ரீமேரிட். யூரோப்ல செட்டிலாயிட்டான்."

"அப்புறம் என்னடா? சுபம். விடுறா" என்றேன்.

சேன்ஹோசேவில் அவனுடைய ஹோட்டலில் இறக்கிவிட்டேன். என் செல் நம்பரைக் கொடுத்து, "செட்டிலானதும் போன் பண்ணு" என்றேன். என் ஹோட்டலுக்கு வந்தேன். ரூம் சாவியைக் கொடுத்த நபரைப் பார்த்து ஏறக்குறைய மயங்கி விழுந்தேன். தேசியின் நிச்சயதார்த்தத்தன்று நான் பார்த்த முதிய உருவம்! பனைமரத்தடியில் மீண்டும் பார்த்து அடையாளம் கண்ட அதே உருவம்! சிப்பந்திக்கருகில் தோன்றி மறைந்தது.

செப்டம்பர் பதினொன்றாம் தேதி மாலை சுரேஷிடமிருந்து போன் வந்தது. அரண்டு போயிருந்தான். "டேய், என் பையனைக் காணலடா. உடனே வாடா, ஹெல்ப்" விடாமல் பேசிக்கொண்டிருந்தான். கொஞ்சம் நிதானப்படுத்தியதும், "குடும்பத்தோட ந்யூயோர்க் வந்தேன். இன்னி காலைல நடந்த கலாட்டாலே என் பையனைத் தொலைச்சுட்டம்டா. இங்கே ஒரே கூச்சலும் கொழப்பமாவும் இருக்குடா. பாஸ்போர்ட் பையும் தொலஞ்சுடுச்சுடா. எல்லாரையும் பிடிச்சு உள்ளே போட்டுட்டிருக்காங்கடா. உடனே வாடா" என்று விவரம் சொல்லி மன்றாடினான்.

அன்றிரவே காரில் விரைந்து அவனை மறுநாள் சந்தித்த போது நல்லவேளையாகக் குழந்தை அகப்பட்டச் செய்தி கிடைத்தது. போய் அழைத்து வந்தோம். கூட்டத்தில் சிக்கிய பையனுக்கு உடலெங்கும் சிராய்ப்புகள், காயங்கள். சுரேஷ் மனைவி, "மெட்ராஸ் போலாம், போதும் போதும்" என்று அரிக்கத் தொடங்கினாள். அவளை அமைதிப்படுத்தி, அவன் குடும்பத்துடன் சில நாட்கள் தங்கினேன். சிகாகோ கிளம்புகையில் நன்றி சொன்னார்கள். என்னைக் கட்டிக்கொண்ட சிறுவனை ஆதரவாக அணைத்தேன். "காயமெல்லாம் சரியாயிடுச்சா?" என்றேன். "ஆயிடுச்சு. தழும்பு கூட வந்திருக்கு. இங்க பாருங்க அங்கிள்" என்று முழங்கையைக் காட்டினான். முழங்கைக்குக் கீழே காயம் காய்ந்த வடு. தாயத்து வடிவத்தில் இருந்தது. நானும் சுரேஷும் அதிர்ந்தோம்.

    வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் விவரமெல்லாம் சொன்னேன். "யூ நீட் ஹெல்ப்" என்றாள். அவளுடைய சக உளவியல் மருத்துவர் கெவின் ப்லேனகனிடம் சிபாரிசு செய்தாள். மூன்று நாட்களாகத் தினம் ஒரு மணி நேரத்துக்கு பழைய கதையெல்லாம் பேசி, நான் கெவினிடம் தாயத்துப் பின்னணியைச் சொல்லி முடித்தேன். வாங்கும் இன்சூரன்ஸ் காசுக்கு வஞ்சனையில்லாமல் மூன்று நாட்களாய் எழுதிச் சேர்த்த நோட்சையெல்லாம் படித்தான்.

"துரை, தாயத்து நம்பிக்கையெல்லாம் கொஞ்சம் ஒத்தி வைப்போம். மோஸ்ட்லி ப்லெசிபோ. ஆனா நீங்க குழம்பியிருக்கறதுக்கான அடையாளங்கள் நிச்சயமா உங்க பேச்சுல தெரியுது. மைல்ட் பெர்சனாலிடி டிசோர்டர்னு சொல்லத் தோணுது. இருபது வருச ஹெலுசினேடிங் ப்ரொபென்சிடி கவலைப் படவைக்குது. அமானுஷ்யத் தோற்றங்கள் உங்க மனதோட உள் விகாரங்கள்னு நினைக்கிறேன். எல்லா விவரங்களையும் சொன்னீங்கன்னா, கொஞ்சம் சைகோ அனேலிசிஸ் செஞ்சு பார்க்கலாம். உதாரணமா, பனைமரத்தடியில் அடையாளம் தெரிஞ்ச உருவம்னு சொன்னீங்களே, அது யாரு?" என்றான்.

சற்று நிதானித்துவிட்டு, "சாலை விபத்துல மண்டையிலடிபட்டு இறந்து போன என்னோட அப்பா" என்றேன்.


➤புகை: நிறைவு

16 கருத்துகள்:

  1. பெயரில்லாஅக்டோபர் 24, 2010

    ம.. அப்புறம்?

    பதிலளிநீக்கு
  2. //சற்று நிதானித்துவிட்டு, "சாலை விபத்துல மண்டையிலடிபட்டு இறந்து போன என்னோட அப்பா" என்றேன்.//

    ம்.....அப்புறம்?

    பதிலளிநீக்கு
  3. அப்பாஜி..கதை அப்பா...போடவைக்கிறது..

    ஒரு திரைக்கதையின் லாவகம் தெரிகிறது

    கரப்பான் பூச்சி, புளுத்தப்பெட்டி கொசுவர்த்திக்கு மாற்றான சிந்தனை அசர வைக்கிறது.

    தாயத்து தாயத்து என அமானுஷ்யத்தின் மீது நம்பிக்கை வைத்துவிட்டு அக்கடா என்று உட்காரலாம் என்று பார்த்தால் இங்கிலிஷ் காரரிடம் ஆராய விட்டுவிட்டீர்களே...பிரித்து மேய்வாரே ...
    மிகுந்த எதிர்பார்ப்புடன் அடுத்த பதிவிற்கு..விரைவில் பிளிஸ்....

    பதிலளிநீக்கு
  4. கதை உள் நாட்டிலிருந்து வெளி நாட்டுக்குத் தாவி விட்டது. விறுவிறுப்பாகப் போகிறது...டிபிகல் அப்பாதுரை ஸ்டைல் கதை. தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  5. புகையச் சுத்திட்டு நடுவில விட்டா, அழுகுணி ஆட்டம்னு தான் சொல்லணும். மூன்று பகுதிகளும் ஒரே அமர்வில் படித்தேன்! அப்புறம் என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
  6. யப்பா.... காலையில் எழுந்து ஒரு வேலை செய்யலை.. கண்கொட்டாம மானிட்டர் பார்த்து படிச்சு முடிச்சேன்.
    அப்பா .. அப்பப்பா... அப்பாஜியின் அட்டகாசங்கள்... ;-)

    பதிலளிநீக்கு
  7. ஸ்வாரஸ்யமாகப் போகிறது. நாளையே அடுத்த பகுதி ப்ளீஸ்.--கீதா

    பதிலளிநீக்கு
  8. //கரப்பான் பூச்சி, புளுத்தப்பெட்டி கொசுவர்த்திக்கு மாற்றான சிந்தனை அசர வைக்கிறது.// பத்துஜி கதைக்கு டைட்டிலே அதான் "புகை"..... கரெக்ட்டா அப்பாஜி ;-)

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. செப்டம்பர் லெவனில் சிக்கின திகிலை மறக்கவே முடியாது. அமெரிக்கா திரும்பப் போகும் நினைப்பையே வேரோட அழிச்ச நினைவுகள். ரெண்டு வரினாலும் கண்முன்னால் நிக்குது. தாயத்துக்கு மேட்சான திகில் அந்த ஏழு நாட்கள்.(ஆமா, நாளைக்கு பையன் 'என்ன அங்கிள் தழும்புனு கதை விடறீங்கனா என்ன பண்ணுவேங்க?)

    பதிலளிநீக்கு
  11. நன்றி சாய்,பத்மநாபன்,ஸ்ரீராம்,கெக்கே பிக்குணி,RVS,geetha santhanam,எஸ்.கே,ராமசுப்ரமணியன்,...

    முடிச்சுடறேன்... முடிச்சுடறேன்..:)

    பதிலளிநீக்கு
  12. சரியான வார்த்தைகள், ராம். செப் 11 திகிலுக்கு இணையாக எதுவுமே நான் கண்டதில்லை. பெற்றோர்களைத் தவற விட்ட குழந்தைகளும் குழந்தைகளைத் தவற விட்டப் பெற்றோர்களும், அரெஸ்ட் அட் சைட் அவசரமும்... பெரும்பாலான குழந்தைகளுக்கு இங்லிஷ் வரவைல்லை. இந்தியக் குழந்தையும் இங்கிலாந்துக் குழந்தையும் - - எல்லாருமே 'அம்மா' என்று தான் அழுதார்கள்.
    இன்றைக்கும் அடிவயிறு சுருண்டுகொள்ளும் அனுபவம். கடவுளும் மதமும் பேய்களை விடத் திகிலைத் தூண்ட வல்லவை என்பதை உணர்ந்த அனுபவம்.

    பதிலளிநீக்கு
  13. RVS,எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..:)
    >>>கதைக்கு டைட்டிலே அதான் "புகை"

    பதிலளிநீக்கு
  14. பயாக்ரெபி போல இது புருடாக்ரெபினு சொல்லிக்கொடுக்க வேண்டியது தான். (வாழ்க்கையில் அவசியம் கைகொடுக்கும் கலை புருடாக்ரெபினு இப்பலிருந்தே சொல்லி வைங்க)
    >>>தழும்புனு கதை விடறீங்கனா என்ன பண்ணுவேங்க?

    பதிலளிநீக்கு
  15. அப்பாஜி! சிலந்தி, இழையிலேயே தொங்கியபடி அசைந்து அசைந்து,ஒரு பிடிமானத்தில் இழை பதித்து, மீண்டும் சரசரவென அடுத்த வட்டம் வருவது போல் மையக்கருவை விலகாமல் இங்கும் அங்குமாய் கதையின் ஊஞ்சலாட்டம்.. முடிவைச் சொல்லுங்க அப்புறமா வச்சுக்குறேன்!

    பதிலளிநீக்கு