2010/10/23

புகை


முன் கதை 1    "அப்புறம் உன்னை ஏண்டா கட்டிக்கிட்டா?" என்றேன்.

"அது வேறே கதைடா" என்றான் வயலின். "ஒரு நா திலகமும் அவ அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்து, திலகத்தை நான் கெடுத்துட்டதா சொன்னாங்கடா. திலகம் என்னைக் காட்டி நான் அவளைப் படுக்க வச்சதாவும் அதனால கர்ப்பமாயிட்டதாயும் சொன்னா. அதனால காதும் காதும் வச்ச மாதிரி எங்க வீட்லயும் அவ வீட்லயும் பேசி எங்களுக்கு கல்யாணம் கட்டி வச்சுட்டாங்கடா. நீ வந்தப்ப திலகம் கர்ப்பமா இருந்தது, என்னோட கர்ப்பம் இல்லடா" என்றான்.

என் அதிர்ச்சி அதிகமானது. "உனக்கு என்னடா பைத்தியமா பிடிச்சிருந்துச்சு? உண்மையைச் சொல்ல வேண்டியது தானடா?"

"ஒரு பொண்ணு ஒங்க வீட்டுக்கு வந்து, நீ தான் அவளைக் கெடுத்துட்டனு சொன்னா எந்த அப்பா அம்மா நீ சொல்றத கேப்பாங்கடா?" என்றான்.

"இப்ப எங்கடா அவ?"

"தெரியலடா. ஒரு நாள் பொழுது விடிஞ்சு பாத்தப்ப ஆளக்காணோம். எவனோடயோ ஓடிட்டா"

"கொழந்த?"

"அது... அந்த கர்ப்பம் கலஞ்சு போயிடுச்சுரா"

"திலகம் உன்னை நல்லா பயன்படுத்தியிருக்கா" என்றேன். எனக்கு ஆத்திரம் வந்தது.

வயலின் அமைதியாக, "ஆனா, ஓரளவுக்கு அது எனக்கு பிடிச்சு தாண்டா இருந்துச்சு. திலகத்தைக் கட்டிப்பேன்னு நான் கனவுல கூட நினைச்சதில்ல. தாயத்துக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்" என்றான்.

நாற்பது வயதுக்காரனின் தளர்ச்சியும் முதிர்ச்சியும் அவனுடைய பேச்சில் தென்பட்டது. நண்பனின் நிலை இப்படியானது வலித்தது. "பொடாங்... நீ மூளையிலாம நடந்துகிட்டு தாயத்து தயிர்வடைனுட்டு.." என்றேன் எரிச்சலை அடக்க முடியாமல்.

    தற்குப் பிறகு, படிப்பிலும் ஒன்றிரண்டு காதல் விவகாரங்களிலும் கவனமாக இருந்ததால் கல்லூரி முடியும் வரை பம்மல் போகவில்லை. மேற்படிப்புக்காக ஐஐஎமில் இடம் கிடைத்ததால் உடனே பெங்களூர் கிளம்பிவிட்டேன். படிப்பு முடியுமுன்னரே மேனேஜ்மென்ட் ட்ரெய்னி வேலை கிடைத்து டெல்லி போனேன். டெல்லி கல்கத்தா என்று மூன்று வருடப் பயிற்சி முடிந்து சென்னைக்கு மாற்றம் பெற்று வந்து ஆறு மாதம் ஆகியிருந்தது. புதிதாக வாங்கியிருந்த ராஜ்தூத் யமஹாவில் ஒரு சுற்று சுற்றிவரலாமென்று சும்மா திரிந்த போது, ஜிஎஸ்டி-குரோம் லெதர் கம்பெனி சாலைகளின் முனையில் என் வண்டி காரணமில்லாமல் சட்டென்று நின்றது. புது வண்டி நின்று விட்டதே என்ற கடுப்பிலிருந்த என் எதிரே ஒரு முதியவர் அழுது கொண்டு போனதைப் பார்த்துத் திகைத்தேன். பழகிய முகம். என் முன் கை கூப்பிக்கொண்டே திரும்பிவந்தார். மன்னிப்பு கேட்கிறாரா பிச்சை கேட்கிறாரா என்று புரியவில்லை. திடீரென்று என்னருகில் தோன்றியவரைப் பார்த்து வண்டியை ஒரு கணம் மறந்தேன். என்னிடம் ஏதோ சொல்லவோ கொடை கேட்கவோ போகிறார் என்று நினைத்து வண்டியில் கவனமாக இருப்பது போல் நடித்தேன். என்னை ஏக்கமாகப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமலே போனார். பெட்ரோல் தீர்ந்து ரிசர்வுக்கு மாற்ற மறந்தது தெரிந்து என்னைத் திட்டிக்கொண்டே மாற்றினேன். வண்டி கிளம்பிவிட்ட நிறைவில், 'பாவம், பெரியவருக்கு என்ன கஷ்டமோ.. ஐந்தோ பத்தோ கொடுத்திருக்கலாமே' என்று நினைத்து அவர் போன வழியில் திரும்பியவன் திகைத்தேன். சாலையின் இருபுறமும் மைல் நீளத்துக்கு ஆளரவமே இல்லை. இரண்டு முறை இப்படி அப்படி மெள்ள ஓட்டிப் பார்த்தும் கிழவரைக் காணோம். எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று நினைத்தபடி வீட்டுக்கு வந்தேன்.

தேசியும் அவனுடைய அண்ணா பெண்ணும் வீட்டில் காத்திருந்தார்கள். "டேய், எனக்குக் கல்யாணம்டா. சாயந்திரம் நிச்சயதார்த்தம். கண்டிப்பா வாடா" என்றான். "லவ் மேரேஜுடா. இந்தா போட்டோ".

புகைப்படத்தில் பெண் இளமையாக, மிக அழகாக இருந்தாள். "யார்டா பொண்ணு?" என்றேன். "சொல்லவே இல்லையே? ரொம்ப அழகா இருக்கா". வாழ்த்தினேன். "வேறே யாரைக் கூப்ட? தடியன், வயலின், சேஜோ, காஜூகாரன் யாருனா வராங்களா?" என்றேன்.

"நீ மட்டுந்தாண்டா. வயலின் எதுலயும் கலந்துக்கறதில்லே. தடியன் ஊர்ல இல்லை. கோகுலம் காலனிப் பசங்களைக் கூப்பிடலைடா" என்றான்.

வயலினைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினோம். தாயத்து பற்றிப் பேச்சு வந்தது. கொஞ்சம் தயங்கி, "உங்கிட்டே ஒண்ணு சொல்லணும்டா" என்றான்.

"என்னடா, உனக்கு லட்ச ரூவா கெடச்சுதா, தாயத்து மகிமையாலே?" என்றேன் கிண்டலாக.

அதற்குள் உள்ளிருந்து வந்த அண்ணன் பெண்ணுடன் கிளம்பினான். "சாயந்திரம் நிச்சயதார்த்தத்துக்கு வா. பேசலாம்" என்றான்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. இதென்ன, தாயத்து மறுபடி தலையெடுக்கிறதா? மாலை அவன் வீட்டிற்குப் போனேன். பத்து பேர் கூட இல்லை. பெண் வீட்டிலிருந்து இரண்டே பேர். பெண், அவளுடைய தாத்தா. எங்கேயோ பார்த்தாற்போலிருந்தது அவரை. தேசியின் அண்ணா எனக்கு ஒரு ரோல் மாடல் என்பதால் அவனுடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து விட்டு, "யாரு சம்பத் இந்த ஆளு? எங்கயோ பாத்தாப்புல இருக்கே?" என்றேன்.

"பாலாஜி நகர் மச்சான். லஷ்மணன் அவளைத் தள்ளிகினு போறேனு கெளம்னான். நான்தான் அம்மாவாண்ட சொல்லி கட்டிவைனு ஜபர்தஸ்து பண்ணிகினேன்" என்றான். சம்பத் மெத்தப் படித்தவன். இங்லிஷ் ஞானி. தமிழில் மட்டும் ஏனோ சேரிவழக்கில் பேசுவான். தேசியை லஷ்மணா என்றுதான் கூப்பிடுவான். விசித்திர, உயர்தர கேரக்டர். அதற்குள் புரோகிதர் அழைத்ததால் கூடத்திற்குச் சென்றோம். "தண்ணி வாங்கியாந்திருக்கான் லஷ்மணன். ஒயிட் ஹார்ஸ். முட்டை புர்ஜி பண்ணிகிறேன். தட்டு மாத்தினதும் நாம மாடிக்குப் போவலாம். ஓடிறாத மச்சான்" என்றபடி என்னை இழுத்துக் கொண்டு போனான்.

திருமணப் பத்திரிகை படித்துவிட்டு பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் பழத்தட்டு மாற்றிக்கொண்டார்கள். சீதன வகைப் பேச்சு வந்ததும், பெண் வீட்டுப் பெரியவர், "எனக்கு இருக்குறது இந்தப் பேத்தி மட்டுந்தான். இவ அப்பன் ஆத்தா சொத்து, நகை, என்னோட சொத்து எல்லாம் சேத்து இதோ இந்தப் பணம் முழுக்க இவளுக்குத் தான். இந்தப் பணத்தை சீதனமாத் தரேன். பாதி பொண்ணு பேர்லயும் மீதி ஒங்க ரெண்டு பேர்லயும் பேங்குல போட்டுறுங்க" என்றார். நூறு ரூபாய் கட்டுக்கள் பத்து எடுத்து வைத்தார். "லட்ச ரூவாங்க. மவ பவிசு மனசு குளிருங்க" என்றார். தேசியைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். பொட்டிலறைந்தாற் போல் பெரியவர் யாரென்று நினைவுக்கு வந்தது.

இருப்புக் கொள்ளாமல் தவித்தேன். சாப்பாட்டில் லயிக்காமல் நானும் சம்பத்தும் மொட்டை மாடிக்குப் போனோம். நாகரீகமாக மூன்று ரவுண்டு விஸ்கி அடித்துவிட்டு புர்ஜியைக் கொறித்துக் கொண்டிருந்தோம். சம்பத் ஹிந்தியில் அருமையாகப் பாடுவான். விஸ்கியும் முழுநிலவும் மொட்டைமாடியும் பம்மல் காற்றும் சேர்ந்தக் கலவையில், "..ஹாமோஷியோங்கி சதாயேன் புலா ரஹீஹை துமேன்.." என்று ரபியைத் தோற்கடித்துப் பாடிக்கொண்டிருந்தான். தேசி வந்து சேர்ந்ததும் கொஞ்ச நேரம் விஸ்கி புர்ஜி வேலை அரசியல் என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். எம்ஜிஆர் இறந்த வாரமாகையால் அதைப்பற்றிக் கொஞ்ச நேரம் பேசினோம். "தொப்பித்தலையன் பூட்டான் மச்சான்" என்றான் சம்பத். "லஷ்மணா.. துரையைக் கவனிடா. கிவ் ஹிம் எ ட்ரிங் ஐ சே" என்றான்.

"டேய், லட்ச ரூவா கத்தை கத்தையா கொடுக்குறாங்களேடா பொண் வீட்டுல?" என்றேன் தேசியிடம், சம்பத் கவனிக்கிறானா என்று பார்த்தபடி. குரு தத் போல் எழுந்து நின்ற சம்பத் இரண்டு கைகளையும் உயர்த்தி, "யே துனியா அகர் மில் பி ஜாயே தோ க்யா ஹை?" என்று பாடத் தொடங்கினான். சம்பத் அவனுடைய உலகத்தில் ஆழ்ந்துவிட்டது தெரிந்து தேசியைத் தனியாக இழுத்துப் பிடித்துக் கொண்டேன். "டேய், என்னடா இது?! லட்ச ரூவா? பேய்ப்பொண்ணு தானேடா அவ? தாத்தா தானேடா நம்மளைப் பிடிச்சு ஆடினது?" என்றேன்.

"கோச்சுக்காதறா. பாலாஜி நகர் போனதுல பழக்கமாயிடுச்சுடா. நாலு வருசமா அவளோட பழகிட்டிருக்கேண்டா. ப்லஸ்டூ முடிச்சு ரயில்வே க்ளர்க் பரீட்சை பாஸ் பண்ணி வேலைல இருக்காடா. தாயத்து விஷயம் எனக்கு ஒரு பொருட்டா படலைடா. ஷி இஸ் டிவைன். இவளை நான் உண்மையிலயே விரும்புறேண்டா. தாத்தாவும் என் மேலே அன்பா இருக்கார்டா. லட்ச ரூவா கொடுக்குறதா தாத்தா ரெண்டு வருசமா சொல்லிட்டிருக்காருடா. நான் கல்யாணம் செஞ்சுக்காம போயிருவேனோனு பயத்துல ஆசை காட்டுறதா நெனச்சேன். ஆனா போன வாரம் பணத்தைக் காட்டினதும் ஆடிப் போயிட்டேண்டா. கட்ன துணியோட அவளைக் கல்யாணம் பண்ணிக்கத் தயார்டா. எனக்கு அந்தப் பணம் தேவையே இல்லைடா. லட்ச லட்சமா கெடச்சாலும் அவளுக்கு ஈடாகாதுடா" என்றான்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனைக் கட்டிப்பிடித்தேன். "கங்கிராட்ஸ்டா!" என்றேன்.

"ஒரு விதத்துல தாயத்தை வேண்டிக்கிட்டது பலிச்சுடுச்சோனு நெனச்சேன்... இருந்தாலும் பணத்தை அவ பேர்லயே போடச் சொல்லிட்டேண்டா. ஐ லவ் ஹர்" என்றான் மென்மையாய்.

"நல்லா இருடா" என்றேன். "நான் கெளம்புறேண்டா. ஐ நீட் டு ரெகன்சைல். நாளைக்குப் பாப்போம்" என்றபடி கிளம்பினேன். சம்பத் இன்னும் உருகிக் கொண்டிருந்தான். "நயி நயி ரங்க் லேகே..".

நள்ளிரவு போல் தோன்றியது. மேகங்களின் நிழலை முழுநிலவு பூமியில் காட்டிக்கொண்டிருக்க, கொஞ்சம் போதை கொஞ்சம் ஆத்திரம் கொஞ்சம் கலவரம் கலந்தவனாக நடக்கத் தொடங்கினேன். தேசி வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு மூலைவிட்டப் பாதையில் நடந்தால் இருநூறு அடி கூட இருக்காது. பம்மலின் சென்ற ஐந்தாண்டு துரித வளர்ச்சியில் வீடுகள் வந்து, வரப்புகள் அசல் ரோடுகளாக மாறியிருந்தன. தார்சாலையில் செங்கோணமாக அறுநூறு அடி நடக்க வேண்டியிருந்தது. சிவன் கோயில் தெருவும் தேசி வீட்டு அண்ணா சாலையும் சந்திக்கும் இடத்தில் உருவத்தைப் பார்த்தேன். மதியம் குரோம்பேட்டையில் பார்த்தக் கிழவர்! திடுக்கிட்டுப் போய்ப் பின் வாங்கினேன். தெருவில் யாருமில்லை. மாலதி கடை மூடியிருந்தது. கைகூப்பி வந்தார் கிழவர். பாவமாக இருந்தது. என்ன கேட்கப் போகிறார் என்று நினைக்கையில் ஆளைக் காணோம். ஓட்டமெடுத்தேன். மபொசி தெருவிறங்கி கொஞ்சம் மூச்சு வாங்கினேன். ஒற்றைப் பனைமரத்தடியில் கிழவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் பக்கென்றது. அவரைத் தாண்டித்தான் வீட்டு வேலிக்கதவைத் திறக்க வேண்டும். "சே! என்ன பிரமை" என்று என்னைத் தேற்றிக்கொண்டு வேலிக்கதவைத் திறந்தேன். எனக்கு நேர் எதிரே கிழவர் நின்று கொண்டிருந்தார். ஏதோ சொல்ல முயற்சிப்பது புரிந்தது. "ஏன்?" என்று கிழவர் கேட்பது போல் பட்டது. கெஞ்சுவது போல் பட்டது. வேகமாக நடந்து கதவைத் தட்டினதும் என் தங்கை கதவைத் திறந்து வெளி விளக்கை இயக்கினாள்.

திரும்பிப் பார்த்த போது வாடர் டேங்க் வரை ஈ காக்கா இல்லை. "ஏண்டா, என்னவோ போலிருக்கே?" என்று முகம் சுளித்தத் தங்கையை லட்சியம் செய்யாமல் உள்ளே சென்றேன். என் அறைக்குச் சென்று படுத்தேன். பத்து நிமிடமோ என்னவோ பொறுத்து ஜன்னல் இடுக்கு வழியாக வெளியே பார்த்தேன். பனைமரத்தடியில் கிழ உருவம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.

திடுக்கென்று அவர் யாரென்பது புரிந்து எழுந்து உட்கார்ந்தேன். போதை முழுதுமாகத் தெளிந்து வியர்த்தது. மறுபடி ஜன்னலிடுக்கு வழியாகப் பார்த்தபோது உருவத்தைக் காணோம்.

➤புகை: 3

11 கருத்துகள்:

 1. விறு விறுவெனப் ப்டித்து அடிவயிறு சில்லிட, மயிர்க்கூச்சலுடன் கால் தரையில் பதியாமல் நிறைவுப் பகுதிக்காகக் காத்து இருக்கிறேன்....

  குறிப்பு: தங்களின் கடவுள் வைரசைப் பலமுறை படித்து வியந்து ஒரு முறையும் மறுமொழி இட முடியாமல் தன்னை (என்னை) மறந்து போனதை எப்படிச் சொல்ல?? சொன்னால்தான் நம்வுவீர்களா???

  பதிலளிநீக்கு
 2. அப்பாஜி!ஆற்றொழுக்காய் நகர்கிறது.. மற்றவை முடிவிற்குப் பின்...

  பதிலளிநீக்கு
 3. தன்னிலையில் கதை நகர்த்தும் பாங்கு அருமையாக இருக்கிறது ..அந்த கிழவர் சஸ்பென்ஸாக பாடுபடுத்துகிறார்..ஆவலோடு அடுத்தபதிவிற்கு ...

  பதிலளிநீக்கு
 4. அந்த ஒற்றைப் பனைமரத்தைப் பார்த்தாலே பேய் பிசாசு என்று கற்பனை வந்துவிடும் போலும். அந்த பனை மரத்தில் பேயைப் பார்த்தாதாக இன்னொருவரும் சொன்னதுண்டு. ஒரு நாள் நம் சகோதரி மாலை வரும்போதே கோவிலில் உடுக்கை ஆரம்பித்துவிட்டது. நான் மெதுவாக சாவி தேடி திறப்பதற்குள் அவள் பயத்தில் அழவே ஆரம்பித்துவிட்டாள்.
  நமக்கு அப்படியெல்லாம் வினோத அனுபவங்கள்!!!
  மாலதி கடையெல்லம் நீ இன்னமும் மற்க்காமல் குறிப்பிடுவது படித்து உன் நினைவாற்றலை வியக்கிறேன்.
  அடுத்த பகுதியே உடனே வெளியிடவும். ஆவலாயிருக்கிறது. ---கீதா

  பதிலளிநீக்கு
 5. உன்னுடைய குடுகுடுப் பாண்டி கதை நினைவிற்கு வருகிறது. பக்கத்தில் அதற்கும் ஒர் சுட்டி கொடுப்பதுதானே. இதுவரை படிக்காதவர்கள் படித்து மிரளட்டும். உன் கதைகளியலேயே எனக்கு மிகவும் பிடித்தது அது.--கீதா

  பதிலளிநீக்கு
 6. அருமையாக உள்ளது! தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
 7. ஆகா, நல்ல எண்ணம் கீதா!
  >>>படிக்காதவர்கள் படித்து மிரளட்டும்

  பதிலளிநீக்கு
 8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிரா, மோகன்ஜி, பத்மநாபன், கீதா சந்தானம், எஸ்கே...

  உங்கள் பின்னூட்டம் படித்துத் தலைகால் புரியாமல் சந்தோஷப்பட்டேன் ஆதிரா, நன்றி. சிறுகதைகளைப் படித்ததே பெரிது.

  பதிலளிநீக்கு
 9. அமானுஷ்யமாக கிழவர் கேரக்டர் வேறு.. கதையை அடிச்சு நவுத்துறீங்க அப்பாஜி! ;-)

  பதிலளிநீக்கு
 10. திகிலுக்கு நடுவே தித்திப்பான பாடல்களைச் சேர்த்திருக்கிறீர்கள். நினைவுகளைக் கிளறிது. இது போல ரைட்டிங்க் தான் உங்க மத்த துவேஷ ரைட்டிங்கை மறக்க வைக்கிறது சார்வாள் :) திரிலிங்க். எங்க பாட்டி எனக்குக் கொடுத்த தாயத்தைக் கழட்டி வைக்கலாமானு தோணுகிறது.

  பதிலளிநீக்கு
 11. காலத்தாலழியாத பாட்டுங்களாச்சே.., சும்மாவா ராம்?
  சம்பத் வீட்டு மாடியில் இந்த மாதிரி பாட்டுக் கச்சேரி நடக்கும் போதெல்லாம், mostly dark nights. சம்பத் அடக்கிப் பாடினாலும் குரல் தூக்கிட்டுப் போகும். ரோட்டுல நடந்து போறவங்க சில பேர் குரலை மட்டும் கேட்டு திரும்பித் திரும்பிப் பாத்துக்கிட்டே போனதை நிறைய தடவை பாத்து சிரிச்சிருக்கேன். நம்ம பூசாரித் தானைத் தலவர் வே. ஒரு தடவை அந்தத் தெருவுல ஒண்ணுக்குப் போக வந்து உக்காந்தவர், சம்பத் 'ம்ம்ம்ம்ம்' என்ற முதலில் வரும் சௌத்வி கா சாந்த் ஹம்மிங்கைக் கேட்டு அலறி அடிச்சுட்டு ஓடினார். சம்பத் வீட்லயே பிறகு 'இந்தத் தெருவுல இந்திக்காரப் பேய்' இருக்குறதா சொல்லி அம்மனுக்கு எலுமிச்ச மாலைக்கு காசு வாங்கிக் கொண்டு போனார்.

  யார் போஸ்டர்ல சாணியடிக்கச் சொன்னேன்? எந்தப் புத்தகத்தைக் கொளுத்தச் சொன்னேன்? என்ன இப்படி சொல்றீங்க? :)
  >>>உங்க மத்த துவேஷ ரைட்டிங்கை மறக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு