2010/05/29

மெல்லிசை நினைவுகள்



மெல்லிசை. திரைப்படங்களில் மூன்று வகை காட்சிகள் பொதுவாக இத்தகைய இசையமைப்புக்கு ஒத்து வரும். முதலாது தனிமையின் வெளிப்பாடு. தனிமையில் இனிமையும் இருக்கலாம் (காதல் சுக நினைவு) அல்லது வெறுமையும் இருக்கலாம் (பிரிவு, சோகம்). இன்னொன்று தாலாட்டு. மூன்றாவது முறையீட்டுடனான வழிபாடு. பழைய திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளில் ஒரு மெல்லிசைப் பாடல் இருக்கும். அதுவும் பெண்கள் இடம்பெறும் காட்சிகளானால் கண்டிப்பாக மெல்லிசை அடிப்படையில் ஒரு இனிமையான பாடல் இருக்கும். உள்ளத்தை இளக வைக்கும், சில சமயம் உருக வைக்கும் பாடல்களாக அமையும்.

எம்எஸ்வி இந்த genreவின் மன்னர்.

இந்தப் பதிவுக்கான பாடலும் காதல் பாட்டு.

இனிமையான மெட்டு, குறைவான இசைக்கருவிகள் துணையுடன் நல்ல குரல் வளத்தை மட்டும் நம்பி இசையமைக்கப்பட்ட பாடல். மெல்லிசைக்கு ஒரு சிறந்த உதாரணம் என்று இந்தப் பாடலைச் சொல்லலாம்.

குரல் வளத்தை மட்டும் நம்பி இசையமைப்பதாக இருந்தால் வெகு சில பாடகர்களே அதற்கு ஒத்து வருவார்கள். அதில் முதன்மையானவர் பி.சுசீலா என்பது என் கருத்து. சுசீலாவுக்கு இணையான மெல்லிசைப் பாடகி/பாடகர் எவருமே இல்லை என்று நம்புகிறேன். நடிகர்களுக்கேற்றபடி பாடும் திறமை சுசீலாவுக்கு உண்டு என்றாலும், இன்னொரு திறமை இவரைத் தனிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன். இசையே இல்லாமல் ஒருவருடைய குரலை மீண்டும் மீண்டும் கேட்க முடியுமென்றால் இவருடையது தான்.

காதலன் காதலை வெளிப்படுத்தி விட்டுச் சென்றதும் தனிமையில் நாயகி பாடுவதாகக் காட்சி. காதல் வெளிப்படும் வரை நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னணியாக வைத்துக் காதலி பாடுவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிறையிலிருந்து தப்பி வந்து சுவரேறிக் குதித்து அடைக்கலம் கேட்ட நாயகனுக்கு உதவி செய்கிறாள் நாயகி. அடைக்கலம் கேட்டவன் அப்பாவி என்று தெரிந்ததும் ஆத்திரம் அடங்குகிறது. பிறகு அவன் பண்புள்ளவன் என்று புரிந்ததும் காதல் ஏற்படுகிறது. ஆனால் நாயகனோ சிறை சென்ற காரணத்தால் காதலை வெளிப்படுத்தத் தயங்குகிறான். இடையில் நாயகிக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது. நாயகன் தன் நிலையைச் சொல்லி விலகிச் செல்ல நினைக்கும் பொழுது நாயகி திருமண ஏற்பாட்டில் தனக்கு விருப்பம் இல்லை என்பதை ஜாடையாகத் தெரிவிக்க, நாயகன் நெகிழ்ந்து தன் காதலைத் தெரிவிக்கிறான். நாயகி பதில் சொல்லாமல் வெட்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் விலகுகிறாள். இந்தியச் சினிமாக்களில் இந்த இடத்தில் ஒரு பாடல் இருந்தே தீரும். பல சமயம் டூயட் பாடல்களாக இருக்கும். இந்தக் காட்சியில் காதலனின் இயலாமையைக் கருத்தில் வைத்துப் பார்க்கும் பொழுது டூயட் பொருந்தாது என்று தோன்றுகிறது. தனிப்பாடலைச் சேர்த்த இயக்குனரைப் பாராட்ட வேண்டும்.

பாடலின் வரிகளை அழகு படுத்திக் காட்டுவது தான் மெல்லிசையின் சிறப்பு என்று நினைக்கிறேன். பாடலின் கடைசி வரிகளில் கவிஞரின் முத்திரை இருக்கிறது. காதலியின் நெஞ்சத்தில் இருப்பதை அருமையாக வெளிப்படுத்தும் வரிகள். தன் நாயகனைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்பதை, தைப்பது போல் சொல்லும் பட்டிழை வரிகள். மெல்லிசையினால் இதை அழகுபடுத்திக் காட்ட எம்எஸ்வியால் தான் முடியும். குழல், வயலின், விட்டு விட்டு வரும் பியேனோ, ஒரே ரிதமில் தபலா - இவ்வளவு தான் இசை. இரண்டாவது சரணத்திற்கு முன் ஹிந்துஸ்தானி பாணி வயலினில் (சரங்க்?) ஒரு இழு இழுக்கிறார் பாருங்கள்... மனதை ரப்பர் பேன்ட் போட்டுக் கட்டும் உருக்கம். 'என் இறைவன் திருடவில்லை' என்று அருமையாகச் சொல்ல சுசீலாவால் தான் முடியும்.

முந்தைய பதிவுக்கு முதலில் தேர்வு செய்திருந்தது இந்தப் பாடலைத் தான். ஒளிவடிவத்தையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ததால் தாமதிக்க நேர்ந்தது. தொழில்நுட்பக் கோளாறு. (கோளாறு தொழில் நுட்பத்துல இல்லைனு மட்டும் சொல்லிக்க அனுமதி தாரேன், என் பேர்ல பழியைப் போட்டீங்கன்னா விசயமே வேறேயாயிடும், கவனம்)

எம்எஸ்வி-7 | 2010/05/28 | ஒரு நாள் இரவில்

11 கருத்துகள்:

  1. என் கணினி ஸ்பீக்கருல கோளாறு. பாட்டு கேட்க முடியல. இருந்தாலும் குருட்டு ஆய்வை வாசித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இரவில் உலவும் திருடன் ...
    நல்ல வரி , எனக்கு பிடித்திருந்தது ...
    முதலில் வரும் புல்லாங்குழல் அருமை ...
    தொடர்ந்து வருமென நினைத்து சற்று ஏமாற்றம் தான் ...
    திருடனை பின்னர் இறைவனாக்கியது காதல் ..
    ஜொலிக்கும் சுசி ...
    மனதுக்கு ஒத்தடம் கொடுப்பது போலிரிருக்கிறது குரலும் படமும் ....
    நன்றி அப்பாதுரை சார் !

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப ரொம்ப சந்தோஷம் அப்பா.பாடல்கள் அவ்வளவு சந்தோஷம்.இந்த வகையில் நீங்கள் எந்தப் பாடல்கள் போட்டாலும் ரசிப்பேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான குரல்...
    அருமையான இசை....
    அருமையான பாடல்...
    அருமையான நினைவுகள்...
    ஆனாலும் சில..இல்லை இல்லை பல பாடல்களை காட்சியைப் பார்க்காமல் ரசிப்பது நல்லா இருக்கும். சில சமயங்களில் பாடகரின் குரல்வளம் மனதில் முழுமையைப் படிய வேண்டுமென்றால் காட்சியின்றி பாடல் ரசிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றும்

    பதிலளிநீக்கு
  5. உண்மை ஸ்ரீராம். இந்தப் பாடலைத் தனியாகக் கேட்டால் காட்சிப் பின்னணி தெரியாமலே அனுபவிக்க முடியும். நீங்கள் சொல்வது போல் பல பாடல்களை தனித்துக் கேட்பது மேல்.

    இந்தப் பாடல் காட்சியில் சரோஜாதேவி அடக்கி வாசித்து பாடலுக்கு மெருகு ஏற்றியிருக்கிறார் என்று நினைக்கிறேன்; 'திருடாது ஒரு நாளும் காதல் இல்லையென்றேன்' என்ற வரியைப் பாடும் பொழுது காதல் என்ற வார்த்தைக்கு கண்களைத் தாழ்த்திப் புன்னகைக்கிறாரே - அதற்காகப் பத்து தரம் பார்க்கலாம்.

    நடிகையும் பாடகியும் அடக்கி வாசித்து எளிமையாகப் பாடும் பொழுது கேமரா வேலை கொஞ்சம் எடுத்துக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் பாடலுக்கேற்றபடி எளிமையாகவும், அதே சமயம் புகைப்படத் தொகுப்பு போல் சப்பென்று இல்லாமலும், ரசிக்கும்படி அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் ஒளி வடிவத்தைச் சேர்த்தேன். (of course, எனக்கு சரோஜாதேவி பிடிக்கும். அவருக்கு பதிலாக வேறொருவர் நடித்திருந்தால் சேர்த்திருப்பேனா? சந்தேகம் தான்)

    இரவின் அமைதியில் தனியாகவோ துணையுடனோ இந்தப் பாடலை ரசிக்கும் பொழுது உள்ளத்தின் கனம் குறைவது என்னவோ நிஜம். உங்களுக்கும் பிடித்திருப்பதில் சந்தோசம்.

    எளிமையான பாடலைத் திறமையாகப் படமாக்க வேண்டிய அவசியத்தை சொல்ல எண்ணும் பொழுது, பாடகியும் நடிகையும் அடக்கி வாசித்து அருமையாக அமைந்த இன்னொரு பாடல் நினைவுக்கு வருகிறது. 'ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்' - ஜானகி(?), ஸ்ரீதேவி, இளையராஜாவின் அருமையான காம்பினேஷன். கொஞ்சம் கூட கற்பனை இல்லாத காமெராத் திறமைசாலி பாலு மகேந்திரா என்று நினைக்கிறேன் - பாடல் காட்சியை புகைப்பட ஆல்பம் போல் க்ளோஸ்ப் ஷாட்டுகளாக எடுத்துக் குட்டிச்சுவர் செய்திருக்கிறார். அந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் படக்காட்சி நினைவுக்கு வந்து வதைக்கும். எம்எஸ்வி அந்த விதத்தில் அதிர்ஷ்டசாலி எனலாம். அவர் பாடல்களை இயக்கிய பெரும்பான்மையான இயக்குனர்கள் கற்பனையும் திறமையும் நிரம்பப் பெற்றிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஹேமா. இந்தப் பாட்டை ரொம்ப ரசிச்சிருப்பீங்க போல. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. > மனதுக்கு ஒத்தடம் கொடுப்பது போலிரிருக்கிறது குரலும் படமும்.

    எவ்வளவு அருமையா சொல்லியிருக்கீங்க நியோ, ஆஹா!

    பதிலளிநீக்கு
  8. ஸ்பீக்கர் தொல்லையா? வருத்தப்படறேனுங்க தமிழ்உதயம். அப்படியும் படிச்சு ரசிச்சதுக்கு சந்தோசம்.

    பதிலளிநீக்கு
  9. பாட்டை ரசித்தேனோ இல்லையோ, நீ எழுதியிருக்கும் விதத்தை மிகவும் ரசித்தேன். --கீதா

    பதிலளிநீக்கு
  10. அடுத்தடுத்து இரண்டு மெல்லிசை நினைவுகள். பிரமாதம்தான் ! நன்றி!
    //இனிமையான மெட்டு, குறைவான இசைக்கருவிகள் துணையுடன் நல்ல குரல் வளத்தை மட்டும் நம்பி இசையமைக்கப்பட்ட பாடல். மெல்லிசைக்கு ஒரு சிறந்த உதாரணம் என்று இந்தப் பாடலைச் சொல்லலாம்.//
    இதே வரிசையில் உள்ள பாடல்தான் 'அத்தான் என்னத்தான், அவர் என்னைத்தான்'. இன்னும் சில பாடல்கள் உள்ளது. சுசீலாவின் குரலும், மெல்லிசை மன்னரின் இசையும் போல் இந்த பாடலை பற்றி நீங்கள் எழுதி இருப்பதும் அழகாக இருக்கிறது. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது. என் அண்ணாவை கேட்டால், இந்த பாடலில் சுசீலாவின் குரல் அழகை பற்றி ஒரு ஐந்து நிமிடமாவது விடாமல் பேசுவான். சுசீலாவின் குரலுக்கு அவன் அடிமை என்றே சொல்லலாம்.

    //'ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்' - ஜானகி(?)//
    இந்த பாடலை பாடியவர் சுஜாதா. பள்ளி நாட்களில் பாடுவதற்கு எளிமையாக, அழகாக இருக்கும் பாடல்கள் சிலதை, நாங்கள் பாடுவதற்காக தேர்ந்தெடுத்து வைத்திருப்போம். அதில் இந்த பாடல் எப்பொழுதுமே இருக்கும். 'வாழும் நாளெல்லாம், என்னை வாழ வைப்பது, இசை என்றானது.....' அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  11. பாட்டைப் பார்த்துக் கேட்கும் பொழுது, சுகமான தாலாட்டு கேட்பது போல இருக்கின்றது. ஆனால் பாடலில் கண் உறக்கம் பிடிக்கவில்லை என்று வருகிறது. வேடிக்கையான முரண்பாடு !!

    பதிலளிநீக்கு