2015/05/18

ஜபேஷ்



1 ◄◄இதற்கு முன்



    வெளியே மழை மீண்டும் வலுக்கத் தொடங்கியது. டிவியில் கவனமில்லாமல் வீட்டைப் பற்றியும் படித்துறையில் பார்த்த உருவம் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இடியோசை அடங்கியதும் தொலைவில் குழந்தை அழுவது போல் ஒலிக்க, சற்றுத் தயங்கினேன். டிவியில் தாலாட்டு பாட்டு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து சமாதானமானேன். மறுபடி குழந்தை அழுகை ஒலிக்க, டிவியில் கவனித்தேன். குழந்தை எதுவும் காணோம். எங்கிருந்து வருகிறது அழுகை? அல்லது அழுகை போன்ற ஓலம்? இத்தனை ஏக்கம் தோய்ந்த ஓலம்? படித்துறை பக்கம் பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. அழுகையொலியை உன்னித்த போது அது குழந்தையின் அழுகையில்லை என்றுத் தெளிவானது. நாய்? பூனை? மழையில் சிக்கித் தவிக்கிற ஏதோ பிராணி என்று புரிந்து வருந்தி அமைதியானேன்.

உறக்கம் வரவில்லை. பசித்தது. சிறிது வயிற்றுக்கு ஈயலாம் என்று எழுந்து சமையற்கூடம் செல்லும் பொழுது மின்னல் பளீரிட்டது. சரியான இடி விழப்போகிறது என்று எண்ணியது வீணாகவில்லை. ஜெயா எழுந்திருக்கப் போகிறாளே என்று எண்ணியபடி ஒரு அப்பளத்தை மைக்ரோவேவில் வைத்து, பத்து நொடி பித்தானைத் தட்டினேன். ஜெயாவின் குரலைக் காணோம். அப்பளத்தைப் புரட்டிப் போட்டு மறுபடி பத்து நொடிப் பித்தான். முறுகலாகச் சுட்டிருந்த அப்பளத்தில் ஒரு ஸ்பூன் நெய்யைத் தடவி, உள்ளறைக்கு வந்து உட்கார்ந்தக் கணத்தில் மின்வெட்டு. இன்வர்டர் இயங்கி ஒரு விளக்கு மட்டும் எரியத்தொடங்கிய சில நொடிகளில் ஜெயாவின் குரல் கேட்க, திரும்பிப் பார்த்தேன்.

"என்னங்க இது, தூங்கலியா?"

"சுட்டப்ளம் நெய். சாப்பிடுறியா?"

"சரிதான். இடி சத்தம் வயித்தைக் கலக்குதேனு ஓடி வந்தா, தூங்காம அப்பளமா சாப்பிட்டுருக்கீங்க?" என்றபடி அருகே வந்து கொஞ்சம் அப்பளத்தைப் பிட்டு நெய் தொட்டுத் தின்றாள். கையோடு கொண்டு வந்திருந்த கம்பளிச் சால்வையைப் போர்த்துக் கொண்டு என் தோளில் சாய்ந்தபடி இரண்டு கால்களையும் சோபாவில் உயர்த்திச் சிறு குழந்தை போல் ஒருக்களித்துக் குறுக்கிக் கொண்டாள். "தூக்கம் வருது" என்றபடி தோளிலிருந்து மெள்ளச் சரிந்து என் மடியில் படுத்தாள். இப்பொழுது மின்னலும் இடியும் அதிகரித்திருந்தன. "ப்லீஸ்.. எழுந்து போகாதீங்க. இடின்னா எனக்கு பயம்னு தெரியுமில்லையா?" என்றாள்.

சில நொடிகளில் அவளிடமிருந்து வெளிப்பட்ட மெல்லிய குறட்டை, அந்த ஓசையிலும் தூங்கிவிட்டாள் என்றது. நான் அப்பளத்தை ஓசை வராமல் பிட்டுத் தின்றபடி இன்னமும் படித்துறை நினைவாகவே இருந்தேன். எப்போது தூங்கினேன் என்றே தெரியாது. உட்கார்ந்த நிலையிலேயே தூங்கியிருக்கிறேன். திடீரென்று ஜெயாவின் முனகல் கேட்டு விழித்தேன். "தூக்கம் வரலேனு பாடுறீங்களா? எனக்குத் தூக்கம் வருது" என்று என் முதுகை அணைத்தபடி புரண்டு படுத்தாள். பாடுகிறேனா? என்ன சொல்கிறாள்?

அப்பொழுதுதான் கவனித்தேன். இது ஓலம். இல்லை, கானம். நிச்சயமாக யாரோ முணுக்கும் ஒலி.. இனிமையான ஆலாபனை.. கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல் தொலைவாக வந்தாலும் தெளிவாகக் கேட்டது.

என்று காண்பேனோ?
பாதங்களை என்று காண்பேனோ?
பெருஞ் சனகனே பாலூற்றிக் கழுவியப் பாதங்களை என்று காண்பேனோ...
பாறையிற் பட்டுப் பெண்ணுயிர்த்தப் பாதங்களை என்று காண்பேனோ...
என்று காண்பேனோ?
கரங்களை என்று காண்பேனோ?
காதலுடன் சீதைக்குக் கல்யாணப் பொட்டிட்டக் கரங்களை என்று காண்பேனோ...
கருணையுடன் முனிவரைக் காத்தக் கரங்களை என்று காண்பேனோ...


எங்கே கேட்டிருக்கிறேன்? சட்டென்று பொறி தட்டியது. இது.. இது.. நான் சிலிர்த்து உட்கார்ந்ததில் ஜெயா எழுந்து விட்டாள்.

"என்னங்க ஆச்சு? நல்லா ஹம் பண்ணிட்டிருந்தீங்களே? தாலாட்டு மாதிரி சுகமா இருந்துதே?"

"நான் பாடலே ஜெயா. பாடுறீங்களானு நீ கேட்டதும் என்னைத் தட்டி எழுப்பினாப்புல இருந்தது.. எழுந்தா..". சட்டென்று ஜன்னலோரமாக விரைந்துப் படித்துறையைப் பார்த்தேன். இருளிலும் மழையிலும் எதுவும் தெரியவில்லை. ஜெயா நிச்சயமாகக் கலங்கியிருந்தாள். "என்னங்க ஆச்சு? எதுக்கு அப்படி திடீர்னு ஓடினீங்க? நான் உருண்டு விழுந்துட்டேன் பாருங்க. அப்படி யாரு வெளியில? திருடனா?"

"ஆமாண்டி. திருடன்னு சொல்லிண்டு ஒருத்தன் வருவானாக்கும்.." என்று அவளைக் கிண்டல் செய்தபடி உட்கார்ந்தேன். நடந்தவற்றை அவளிடம் சொன்னேன். "இப்ப கேட்டியே இந்தப் பாட்டு.. இது தியாகராஜர் க்ருதி"

"அதனாலே?"

"தெரியலே. குழப்பமா இருக்கு. எனக்கென்னவோ நான் பார்த்த அந்தப் பெரியவர் தியாகப்பிரம்மம்னு தோணுது"

"யாரு? அசல் தியாகராஜரா?"

"அசலில்லாத ரூபத்துல.."

ஜெயா திடீரென்று என் நெற்றியைப் பிடித்துவிட்டாள். "மோர் காய்ச்சிக் கொண்டு வரட்டுமா? சுவாமிமலை விபூதினு மாலி கொஞ்சம் கொடுத்தான். அதையும் கொண்டு வரேன். எதையோ பார்த்து பயந்திருக்கீங்க."

"பாட்டு.. நீயும் தானே கேட்டே?"

"நீங்க ஹம் பண்றீங்கனு நெனச்சேன். இல்லேன்னா அடிச்ச காத்துல ஏதாவது விசித்திரமா இருக்கலாம். சில சமயம் தெருநாய் ராத்திரில ஊளையிடறதும் இப்ப வர சினிமா பாட்டு மாதிரியே இருக்கு.. நடக்கக் கூடியது தான். அதுக்காக தியாகராஜராவது? நாழிகை நலிய ஊழியென உலுக்கும் இசைனு நீங்க ஏதோ சொல்வீங்களே அடிக்கடி.. அதுமாதிரிதான். ஏதோ திருடன் வந்திருக்கான்.. உங்களைப் பார்த்ததும் டபக்னு காவேரில குதிச்சு ஓடியிருப்பான்...வயசான காலத்துல எதுக்கு வெளில தனியா போறீங்க? ராத்ரில அதுவும் மழைல? காலம்பற எழுந்து பின்கட்டுல எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கலாம். படுங்க பேசாம"

காலையில் எழுந்த போது எட்டு மணிக்கு மேலிருக்கும். ஜெயா எழுந்துவிட்டிருந்தாள். "தூங்கினீங்களா? கரன்டு இன்னும் வரலே. காபி சாப்பிட்டு ஜெனரேட்டரை ஆன் பண்ணுங்க. இன்வர்டரும் போயிடும் போலருக்கு"

காபி சாப்பிட்டபடி பின் கட்டுக்குச் சென்றேன். வெளியே இன்னும் கசகசவென்று தூறலும் இல்லாமல் மழையும் இல்லாமல் பெய்து கொண்டிருந்தது. நிச்சயமாக நேற்றிரவு கேட்டது ஊழியின் வேடிக்கையில்லை. பின் கட்டைத் தாண்டிப் படித்துறையைப் பார்த்தேன். ஏதோ உந்துதலில் ஒரு குடையுடன் படித்துறைக்குச் சென்றேன். நீருக்குள் இறங்கியப் படித்துறையில் மொத்தம் பத்துப் படிகளாவது இருக்கும். மண்மேல் தெரிந்த ஐந்தாறு படிகளில் ஐந்தாவது படியின் விரிசலில் கிடந்தவற்றைப் பார்த்து... என்னையறியாமல் "ஜெயா!" என்று கூவினேன். அவசரமாக ஓடி வந்த ஜெயாவிடம் நான் கண்டதைக் காட்டினேன். "இங்கே பார்!".

அரையடி உயர விக்கிரகங்கள் மூன்று படித்துறைப் படியிலும் பக்கவாட்டுச் சேற்றிலும் காவிரி நீரிலும் பட்டும் படாமல் கிடந்தன. அவசரமாக எடுத்துப் பார்த்தேன். இலேசாக சேறு நீக்கிப் பார்த்த போது.. ராமன்... இல்லை இலட்சுமணன். இன்னொன்றை எடுத்துப் பார்த்ததும்... படித்துறையில் கிடந்தவை வெண்கலத்தாலான ராமன், சீதை, மற்றும் லட்சுமணன் விக்கிரகங்கள் என்பது புரிந்தது. மழையில் மறுபடி நீரில் விழுந்து விடக்கூடாதென அஞ்சி சேற்றுடன் அப்படியே மூன்று விக்கிரகங்களையும்... என்னைத் தடுத்த ஜெயா, எதிரே மதில் சுவரைச் சுட்டினாள்.

மதில் மேல் ஒரு பூனை. எங்களையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. பாய்வதற்குத் தயாராக இருந்த புலி போல் பூனை பயமூட்டுவதாகவே இருந்தது. அதன் கண்கள் எங்களை உற்றுக் கவனித்தன.

நான் விக்கிரகங்களைத் தொட்ட போது ஒரு காலை முன்வைத்து அலறியது. பின் வாங்கினேன். பிறகு பூனை அமைதியாக என்னையே பார்த்தது. குட்டிப்பூனை என்றாலும் அந்தத் தருணத்தில் கொஞ்சம் பயமாகவே இருந்தது. தெப்பலாக நனைந்திருந்த எங்கள் நடுவே மழையில் கொஞ்சமும் நனையவில்லை அந்தப் பூனை என்பது இன்னும் ஆச்சரியமாகவும் அச்சமாகவும் இருந்தது.

பூனையைப் பார்த்தபடி மெள்ள விக்கிரகங்களைத் தொட்டேன். இப்பொழுது பூனை அலறவில்லை. மென்மையாகக் குரல் கொடுத்தது. பசித்த குழந்தை போல். விக்கிரகங்களை ஒவ்வொன்றாக மண்ணோடு சேர்த்தெடுத்து என் மேற்சட்டையில் சுருட்டிக் கொண்டேன். மதிலைப் பார்த்தேன். பூனை எங்களை வெறித்துப் பார்த்தது.

ஜெயா பூனையை அழைத்தாள். "மியாவ்.. இங்க வா.." என்று ஏதோ சொன்னாள். பூனை ஜெயாவை விட்டு என்னை மட்டும் பார்த்தது. சட்டென்று தாவியோடி மறைந்தது. விக்கிரகங்களுடன் உள்ளே நடந்தேன். ஜெயா என்னைக் கட்டிக்கொள்ளாதக் குறையாக ஒட்டிக்கொண்டு வேகமாக வந்தாள்.

    நான் சென்னையிலிருந்து திரும்பி வர ஐந்து நாட்களாயின. ஜெயாவின் உறவினர் மாலியும் உடன் வந்திருந்தார். தியோசாபிகல் சொசைடி, கிங் இன்ஸ்டிட்யூட், ஐஐடியின் கெமிகல் எஞ்சினியரிங் மற்றும் மெடலர்ஜி துறைகள், பழைய ப்ரெசிடென்ஸி ஆர்கியாலஜி ப்ரொபசரான என் நண்பரின் வீடு, கனிமரா மற்றும் தாம்பரம் கிறுஸ்தவக் கல்லூரி நூலகம் என்று ஒரு ரவுண்டு அடித்துத் திரும்பியிருந்தேன். நான் இல்லாத நாளில் கும்பகோணம் போய்த் திரும்பியிருந்தாள் ஜெயா.

"அத்திம்பேர் தயவுல மெட்ராஸ் நன்னா சுத்திப் பாத்தாச்சு" என்றார் மாலி.

"என்ன கண்டுபிடிச்சீங்க? விக்கிரகங்களுக்கு மதிப்புண்டா? போய்ட்டு வந்த செலவுக்காவது தேறுமா?" என்றாள் ஜெயா.

"இந்த விக்கிரக வெண்கலத்தோட தரம், வடிவம், வேலைப்பாடு, மேலே படிந்திருந்த மண் எல்லாம் நாலஞ்சு இடத்துல சோதிச்சுப் பாத்தோம். இந்த விக்கிரகங்கள் முன்னூறு வருஷத்துக்கு முன்னால உருவானவைனு தீர்மானமா சொல்றாங்க. நான் என்ன சொன்னேன் உங்கிட்டே?"

"தியாகராஜர் ஆராதிச்சுத் தொலைச்ச விக்கிரகங்களா இருக்கும்னீங்க. தியாகராஜர் பொறந்தே முன்னூறு வருஷமாகலியே இன்னும்.."

"அதனாலென்ன.. தியாகராஜருக்கு இந்த விக்கிரகங்கள் கிடைச்சிருக்கலாமே? பரம்பரைல வந்திருக்கலாம். அவரோட அப்பா பெரிய ராமபக்தர் தெரியுமோ?"

"சரிதான்.. எனக்கென்னவோ சாதாரணமாப்படுது.. பிடிக்கலேனு கூட சொல்வேன். உள்ளே வைக்கறதா இருந்தா சுத்தம் பண்ணி வைங்க"

"அடியே. இந்த மண்ணுக்கும் மவுசிருக்குடி. முன்னூறு வருஷத்துக்கு முந்தின சேறு. சாயில் கம்பொசிசன் அப்புறம் அசிடிடி டெஸ்ட் பண்ணித்தான் தொன்மையைக் கண்டுபிடிச்சோம். விக்கிரகத்தோட சேர்ந்தது மண்.. மண்ணோட சேர்த்துத்தான்.."

"இந்த சேத்து மண்ணோட எல்லாம் உள்ளே வைக்காதீங்க. கறாரா சொல்லிட்டேன். ஏதாவது கோயிலுக்குத் தானமா கொடுங்க.. இல்லின்னா பழையபடி மண்ணோட மண்ணா போகட்டும், ஆத்துலயே விட்டுறுங்க"

"ஜெயா!" இரைந்தேன். "இது எவ்வளவு புராதனமானதுனு தெரிஞ்சுமா இப்படிப் பேசுறே?"

"ரைட். நாம கூடத்தான் புராதனமானவங்க. நம்ம ரெண்டு பேத்துக்கும் இடையே நூத்தம்பது வருஷமாகப் போகுது. யார் நம்மளைத் தலைல தூக்கி வச்சுட்டிருக்காங்க? ஏதோ ஆத்து மண்ணுல புதைஞ்சு அந்த மழைல மேலே வந்திருக்கலாம்னு சொல்றத ஏத்துக்கிட்டாலும் ஒரேயடியா லெப்டுல போறீங்களே?"

"ஏன் இருக்கக் கூடாது ஜெயா? பெரியவர் மாதிரி நான் பார்த்த உருவம்.. கைல ஏதோ வச்சிருந்தார்னு சொன்னனே.. விக்கிரகங்கள் தான்.."

"ஆவி மாதிரி மறைஞ்சுட்டார்னு சொன்னீங்க.. விக்கிரகங்கள் கரைஞ்சா போச்சு?"

"அப்புறம் அந்த ஹம்மிங்.. எத்தனை ஏக்கத்துடன் கூடிய இனிமையான பாட்டு! அந்த பாட்டோட வரிகளைச் சொன்னேன் இல்லையா? உலகத்தைக் காக்கும் பராக்கிரம ராமனை என்றைக்குப் பார்ப்பேன்னு தியாகராஜர் ஏக்கத்தோடு பாடின பாட்டு..."

"இப்ப என்னதான் சொல்றீங்க?"

"அந்த விக்கிரகங்களை என்னிடம் சேர்க்க தியாகராஜர் வந்து பாடியிருக்கலாமே? அரூபத்துல வந்தது ஒரு ஸிம்பாலிக்... அடையாள நிகழ்வா இருக்கலாம். ராம விக்கிரகங்கள் மேலெழுவது தெரிந்து இந்த விக்கிரகங்களைப் பராமரிக்க முடியாமல் போன ஏக்கத்தில் இதை என்னிடம் தந்திருக்கலாமே?"

"உங்க கிட்டே ஏன் தரணும்? இத்தனை வருசமா இந்தக் கவலை வரலியா தியாகய்யருக்கு?"

"தெரியலியே!"

"என்னமோ காரணமாத்தான் அத்திம்பேருக்கு இந்த விக்கிரகங்கள் கிடைச்சிருக்கு" என்றார் மாலி.

"நீ என்ன சொல்றே?"

"இல்லே அத்தே.. தியாகய்யர் பாரத்வாஜ கோத்ரம்.. நீங்க பொறந்ததும் பாரத்வாஜ கோத்ரம்.."

"அப்போ எங்கிட்டே இல்லே கொடுத்திருக்கணும்? அத்திம்பேர் கண்ல படுவானேன்? விக்கிரகங்களைத் தருவானேன்?"

"இப்ப நீங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டாலும் பொறந்த கோத்ரம்.. ஒரே வம்சாவளிக் குடும்பம்னு ஆறதில்லையா?"

"உங்க ரெண்டு பேர் உளறலுக்கு ஒரு அளவேயில்லைனு ஆறது" என்று ஜெயா கடுப்புடன் எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.

"உளறலா இருந்தா என்ன? ரெண்டு நாளா தொடர்ந்து என் கண்ணுல பட்ட பெரியவர்.. அப்புறம் நம்மளையே முறைச்சுட்டு இருந்த அந்தப் பூனை... நான் விக்கிரகங்களை எடுத்துச் சுருட்டி உள்ளே கொண்டு போறதை பாத்துட்டுதானே தாவிப் போச்சு? நம்ப முடியாம இருந்தாலும் நடந்துச்சா இல்லையா? பூனைலந்து எதுவுமே அதுக்குப் பிறகு நம்ம கண்ல படலே இல்லையா?" என்றேன்.

ஜெயாவின் வீறல் கேட்டு அலறிப்புடைத்து அடுக்களைக்கு ஓடினோம்.

சமையல் மேடைக்கும் அலமாரிக்கும் இடையே இரண்டடி இடைவெளி உண்டு. தண்ணீர் அல்லது அரிசிப்பானை வைப்பதற்காக இருந்திருக்கலாம் அந்தக்காலத்தில். அந்த இடத்தில் மரச்சட்டங்களை வைத்துக் குறுக்கே பலகை போட்டு ஷெல்ப் போல் வைத்திருந்தோம் நாங்கள். சில வாசனைப் பொருட்கள், சமையல் புத்தகங்கள் என்று சிறிதாக அடுக்கி வைத்திருந்தோம். குனிய முடியாதென்பதற்காகக் கீழே எதுவும் வைக்கவில்லை. அங்கே சுவரோரமாக சுருட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தது பூனை. நாங்கள் முன்பு பார்த்த அதே பூனை!

ஜெயா மறுபடி அலறினாள். "இது இங்கே எப்படி வந்தது?"

"கதவைத் திறந்து வச்சிருப்பே.."

"கிடையவே கிடையாது. நேத்து சாயந்திரம் காபி கலந்து சாப்பிட்டேன். இன்னிக்கு காலைல நீங்க வருவீங்கன்னு இட்லி மாவு கரைச்சு வச்சேன். அப்பல்லாம் இந்தப் பூனை இங்க இல்லவே இல்லை" என்றாள் ஜெயா.

"கண்ல படலேனு அத்திம்பேர் சொன்னதுமே பூனை ப்ரத்யக்ஷமாறதே? விசித்ரமா இல்லே இருக்கு?!"

இம்முறை நான் அவர்களை அடக்கினேன். "சும்மா இருங்க ரெண்டு பேரும். பூனையாவது தீடீர்னு தோண்றதாவது! பாரு. இட் இஸ் ரியல். நிஜப்பூனை. அஞ்சறிவுப் பிராணி. கதவைத் திறந்து வச்சிருப்பே. இல்லின்னா ஜன்னல். ஏதாவது ஒரு வழியில வந்திருக்கும். விரட்டிட்டா போச்சு" என்றபடி அருகே சென்று பூனையை விரட்டினேன்.

பூனை பாய்ந்து ஓடவில்லை. மாறாக எழுந்து சோம்பல் முறித்தது. பிறகு எங்களைப் பார்த்து நின்றது. கம்பீரமான, அழகான பூனை. ஏறக்குறைய தங்கக்கலரில் இருந்தது. இடையே மண் கலரில் சிறு திட்டுக்கள் அதன் தோலழகுக்கு மெருகு சேர்த்தது. மஞ்சளும் கறுப்பும் கலந்த கண்கள். தீவிரமான பார்வை. அருகே சென்றேன். மெள்ளத் தடவிக் கொடுத்தேன். கழுத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் முடிச்சு முடிச்சாக ஒரு மாலை, ஏறக்குறைய புதைந்திருந்தது. "இதோ பாரு.. மாலை. யார் வீட்டுப் பூனையோ.. இடம் தெரியாம ஓடி வந்திருக்குனு நினைக்கிறேன்.. பக்கத்துல தான் இருக்கணும்.. தேடிப்பார்த்துக் கொடுத்துடலாம்" என்றேன்.

ஜெயா இப்போது அமைதியாக இருந்தாள். "பார்க்க நல்லாத்தான் இருக்கு பூனை. ஒரு தட்டுல பால் தரேன். குடிச்சதும் வெளில கொண்டு விட்டுறுங்க". ஒரு சிறு குழித்தட்டில் கொஞ்சம் பால் ஊற்றினாள். பூனையருகே வைத்தாள்.

பூனை பாலைக் குடிக்கவில்லை. ஒரு முறை தட்டை வாசனை பார்த்துவிட்டு பழையபடி இடுக்கிலேயே உட்கார்ந்துவிட்டது.

"நாம இருக்கோம்னு சங்கோஜமா இருக்கோ என்னமோ?" என்றார் மாலி.

சிரித்தேன். "சரி சரி.. அங்கயே இருக்கட்டும். யாராவது வந்து கேட்டா பூனையைக் குடுத்துறலாம்" என்றபடி ஹாலுக்கு வந்தேன்.

ராம விக்கிரகங்களை ஒரு ப்லேஸ்டிக் பைக்குள் வைத்து கண்ணாடி அலமாரிக்குள் தற்காலிகமாக இருக்கட்டும் என்று வைத்தேன். பிறகு எதிரேயிருந்த சோபாவில் உட்கார்ந்தேன். ஜெயா கொண்டு தந்த இட்லியை சாப்பிடலாம் என்று தட்டை எடுக்கத் திரும்பினால்... பக்கத்தில் சோபா ஓரமாகப் பூனை உட்கார்ந்திருந்தது. எதிரே இருந்த விக்கிரகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.

"ஏய்.. பூனை இங்க வந்துடுத்து பாரு!" என்றேன். ஜெயா கவனிக்கவில்லை. மாலியுடன் ஏதோ பேசியபடி இருந்தாள்.

பூனையைப் பார்த்தேன். மறுபடி மெள்ளத் தடவிக்கொடுத்தேன். "உம் பேரென்ன தெரியலியே? யார் வீட்டுப் பூனையோ இங்க வந்து டேரா போடப் பாக்கறியே?" என்றேன்.

எழுந்து சமையலறையிலிருந்து பால்தட்டை எடுத்து வந்து அதன் முன் வைத்தேன். பூனை கவனிக்கவேயில்லை. பொதுவாக நாய்களை விட பூனைகளிடம் பிகு செய்து கொள்ளும் பழக்கம் அதிகம் என்று எனக்குத் தெரியும். என்னவோ மகாராஜா வீட்டு செல்லப்பிள்ளை போல் பூனைகள் நடந்து கொள்ளும். நாயானால் சாப்பாட்டைப் பார்த்ததும் வாலட்டி ரகளை செய்து சுற்றிவர அசிங்கம் செய்து சாப்பிடும். பூனை அப்படியல்ல. அலுங்காமல் குலுங்காமல் சோம்பேறித்தனமாகவும் அதே நேரம் அதிகாரத் தோரணையுடனே எதுவும் செய்யும். வேன்கூவரில் எங்களிடம் ஒரு பூனை சில நாட்கள் இருந்தது. அந்தப் பூனை எங்களை அடிமையாக நடத்தியது என்றால் உண்மை. நினைவு வந்து மறுபடி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

பூனையைத் தடவி "ஏ பொறம்போக்குப் பூனை! போனாப் போறதுனு இடம் கொடுத்து பாலும் கொண்டு வந்தா என்னவோ பிகு பண்ணிக்கிறியே?" என்றேன் உரக்க. என் பேச்சு என்னவோ பூனைக்குப் புரிவது போல்.

பூனை சிலிர்த்துச் சட்டென்று என்னை ஏறிட்டுப் பார்த்த பார்வையில் அதிர்ந்து போனேன்! சட்டென்று கைகளை எடுத்துக் கொண்டேன். பூனை மறுபடி அமைதியானது. எதிரே இருந்த விக்கிரகங்களைப் பார்த்தபடி அமைந்தது.

மறுபடி சோபாவில் அமர்ந்தேன். பூனையைப் பார்த்தேன். விக்கிரகங்களையே பார்த்துக் கொண்டிருந்தது. பால் தட்டை அருகே நகர்த்தினேன். சீண்டவில்லை. விக்கிரகத்தின் மேலேயே பார்வை படிந்திருந்தது.

மென்மையாகப் பாடினேன். நிதி சால சுகமா.. ராமு நி சந்நிதி சேவ சுகமா..

பூனை சட்டென்று எழுந்து உட்கார்ந்தது. என்னைப் பார்த்தது. தலையசைப்பது போல் பாவனை செய்தது.

மனதில் தோன்றியதை அடக்க முடியவில்லை. சட்டென்று எழுந்தேன். என் சேம்சங் நோட்புக்கில் சேமித்திருந்த எம்பி3 ஒலிவடிவ தியாகராஜர் க்ருதிகளை ஸ்பீக்கரில் ஓடவிட்டேன்.

அனுபம குணாம்புதியனி நின்னு...
ப்ரோசேவாரு எவரே...


"நல்ல கீர்த்தனை அத்திம்பேர்" என்றபடி அருகே வந்த மாலியை சைகை காட்டி உட்காரச் சொன்னேன். "என்ன பண்றீங்க?" என்று கேட்ட ஜெயா, நான் மாலியை அடக்குவதைப் பார்த்து "எனக்கு அடுக்களைல வேலை இருக்கு.. நீங்க பூனையைப் பிடிச்சு என்ன வேணா பண்ணுங்க" என்று மறைந்தாள். நான் பொருட்படுத்தவில்லை. பாட்டில் கவனமாக இருந்தேன்.

தயரா நி தயரா நி தாசரதி ராமா...
எவரி மாட வின்னாவோ...


ஒவ்வொரு பாட்டிலும் அனுபல்லவியும் முதல் சரணமும் மட்டும் பாட விட்டு மாற்றினேன். பூனை நிமிர்ந்து உட்கார்ந்து அசைவேயில்லாமல் ஒன்றிப்போனது.

தொடர்ந்து ஒரு சினிமாப் பாடலை வைத்தேன்.

..என்னை விட்டு ஓடிப் போக முடியுமா, இனி முடியுமா?

பூனை சாதாரணமாகக் கீழே இறங்கி வாசலை நோக்கி நடந்து சற்றுத் தள்ளி உட்கார்ந்தது. ஒரு வேளை சீர்காழி டூயட் பிடிக்கவில்லையோ? சமீபப் பாடல் ஒன்றை மாற்றினேன்.

.. தெரியாத பறவை அழைத்ததே. மனமும் பறந்ததே.. இதயமும்.. ஹோய்..

பூனை கண்டு கொள்ளவேயில்லை. மறுபடி மாற்றினேன்.

..ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள்.. அவள் வந்துவிட்டாள்

பூனை என்னைக் கோபமாக முறைப்பது போல் பார்த்து விட்டு வேகமாக நகரப் பார்த்தது. சட்டென்று மாற்றினேன்.

எந்த வேண்டுகொண்டு ஒ ராகவா.. பந்தமேலரா..

பூனை சடாரென்று திரும்பி ஒரே தாவலில் சோபாவில் ஏறி என்னருகே உட்கார்ந்தது. பாடலை சிறிது ஓடவிட்டு மாற்றினேன்.

ஸம்வேர்.. பியான்ட் த ஸீ.. ஸம்வேர்.. வெய்டிங் பார் மீ..

பூனை என்னைப் பரிதாபமாகப் பார்த்து மறுபடி கீழே இறங்கியது.

ஆஜ் மத்ஹோஷ் ஹுவா..

பூனை திரும்பிப் பார்க்கவில்லை.

பஜ கோவிந்தம்..
கந்தா வா வா..


பூனை சமையற்கட்டுப் பக்கம் ஓடி மறைந்தது.

"என்ன பண்றேள் அத்திம்பேர்? பூனையை விரட்டுறதுக்கு சிரமப்படறேள் போலருக்கே? ஒரு கட்டையால தட்டினா ஓடிட்டுப் போறது.."

"இல்லே மாலி. பூனையை வரவழைக்கறேன்.."

"என்ன சொல்றேள்?"

"பூனை இங்க இருக்கா?"

"இல்லையே.. ஓடிப்போச்சே.."

"இப்போ வரும் பாரு" என்றேன். மறுபடி தியாகராஜர் க்ருதி ஒன்றை ஒலிக்க விட்டேன்.

ஜெய ஜெய ஸ்ரீ ரகுராமா..

அரை நொடியில் சொல்லி வைத்தாற்போல் பூனை என்னருகே உட்கார்ந்தது கண்டு மாலி ஆடிப் போனார். நான் ஜெயாவை அழைத்தேன்.

"என்னத்துக்கு சத்தம் போடறிங்க?" என்றபடி வந்தாள்.

"இந்தப் பூனை யார் வீட்டுப் பூனையும் இல்லே"

"அதுக்காகவா ஜெயானு இத்தனை கூச்சல்?"

"இந்தப் பூனை யாரு, எதுக்காக வந்திருக்குனு எனக்குத் தெரிஞ்சு போச்சு.."

ஜெயா என்னை முறைத்தபடி நின்றாள்.

"இந்தப் பூனை.. இல்லை இல்லை.. இது பூனையில்லை.. பூனை வடிவத்துல நம்ம வீட்டுக்கு வந்திருக்கறது.. அசல் தியாகப்பிரம்மம். தியாகராஜரே தான்" என்றேன்.


[தொடரும்] ➤➤