2013/08/17

கடைசிவரை கணினி



    ணினி என்னைத் தொடக் காரணமாயிருந்த பெண் இன்று எங்கேயிருக்கிறாளோ, எப்படி இருக்கிறாளோ?! ஆகஸ்டு பதினைந்தை அசலில் கண்டாளோ? அல்லது அப்பனுக்குப் பின் கணவன், கணவனுக்குப் பின் பிள்ளை பெண் பேரர்கள் என்று தொடர் அடிமையாக இருக்கிறாளோ?

அந்தத் தென்னைமரம் பசுமாடு கதைக்குப் பிறகு வருகிறேன், அவள் எங்கிருந்தாலும் வாழ்க என்ற நினைப்போடு (பின்னணியில் தவளை சத்தம் சகிதம்).

    உங்களுக்கு எப்படியோ தெரியாது, நானறிந்த மட்டில் கணினிப்பிடி உடும்புப்பிடி. நினைத்துப் பார்க்காத, பார்க்கவும் முடியாத வகைகளில் பிடித்து வைத்திருக்கிறது. பாதிக்கிறது. பாதிக்கும் என்பதும் புரிகிறது. உதாரணத்துக்கு கீழ்க்காணும் யஜூர்வேத சான்னித்யப் ப்ரஷதமா:
        pecados assombrar nos!, pragas legado en crianças!, manda manda!, escarraar te!

என்ன சுந்தர்ஜி? அது யஜூர் வேதமில்லையா? அப்போ உபநிஷதமா? அதுவுமில்லையா? ப்ச.. அது மட்டும் நாங்க என்ன, பொருள் தெரிஞ்சா சொல்றோம்? ஏதோ உங்க தயவுலயும் கணினி தயவுலயும் கணினியறியக் காரணமான அந்தப் பெண் தயவாலும் கொஞ்சம் தெரிஞ்சுக்க முடியுது - இதுவும் அதுவோனு நினைச்சுட்டேன்.

போகட்டும். மேற்கண்ட ஞானவரிகளுக்கு வருவோம். இவை மூன்றாம்சுழி ப்லாகின் spam commentகளாகக் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து வருகின்றன. வெனிசுவேலா, ரஷியா என்று பலவித இடங்களில் இருந்து வந்து விழும் கருத்துக் குருத்துக்கள். ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதப்பட்டிருந்தால் அனானியாகப் பதிவாகியிருக்கக் கூடிய, ஒரு சாதாரண IP Mask உதவியுடன் வந்துவிழும் SPAM மழை. IP Mask என்ன பெரிய புடலங்காய்? ஒன்றுமில்லை.

'அன்புள்ள எங்கள் பிளாக், உங்கள் தயவால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். நிற்க, வாந்திபேதி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ரொம்ப நாளாக ஆசை. அதைப் படங்களுடன் அறியும்படி ஒரு சுட்டியை அடுத்து இணைப்பீர்களா?' என்று கருத்திட நினைக்கிறேன்.. அல்லது..

'இன்னாம்மே.. சும்மா எதுனா கலாய்ச்சினுகிறே? ஒயுங்கா எயுதுவியா, இல்லே எஸ்க்யுஸ் வுட்டுகினே இருப்பியா?' என்று கவிநயாவை கலவரப்படுத்த விரும்புகிறேன்..

..என்று வையுங்கள். இந்தக் கருத்துக்களை அவல் உப்புமா+காபி சுவைத்தபடி, சென்னை எக்ஸ்பிரஸ் hd பிரதியை இணையத்தில் பார்த்தபடி, சிகாகோவில் சாவகாசமாக எழுதிவிட்டு, ஒரு இலவச ஐபி முகமூடி மென்பொருள் தயவால் பெர்முடா, பங்கலாதேஷ் அல்லது பூந்தமல்லியிலிருந்து வரும்படி மாற்றி அனுப்பமுடியும். அனானி கருத்தாக வந்தாலும் நேரம் இடம் பொருள் ஏவல் பார்த்து, எந்த ஊரில் யார் எங்கே இருக்கிறார்கள், எந்தப் படுக்கையில் யார் ஒண்ணுக்கு போயிருக்கிறார்கள் என்று ஸ்டேடஸ் பார்த்துத் துப்பறிந்துத் தூக்கம் தொலைக்கும் ஷெர்லாக்களின் முகத்தில் கொஞ்சம் தார் பூசமுடியும். அல்லது அசல் நல்ல காரியங்களுக்கோ கசமுசாக்களுக்கோ சங்கேதச் செய்தியும் அனானி இமெயிலும் அனுப்பமுடியும். இணைய அடையாளத்துக்கு ஒரு முகமூடி. அம்புட்டுதேன் ஐபி மேஸ்கு. அட்ரா மோளம்! லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ்...

ஞானவரிகளின் பொருள் ஓரளவுக்குப் புரிவதாலும் இவை தொடர்ந்து வருவதாலும்.. இவற்றை ஒரு செய்தியாகப் பாவிக்கலாமா கூடாதா, இது போன்ற குறிப்பற்ற பொதுவானக் கணினி கருத்துக்கள் தனிப்பட்ட மிரட்டலா இல்லையா, கூகுலுக்கும் போலீசுக்கும் சொல்வதா தவிர்ப்பதா என்று ஒற்றையா இரட்டையா போட்டு வருகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அனானியாகவோ நேரிடையாகவோ சொல்லுங்கள். அல்லது தி.தனபாலனின் இணைய முகவரியைப் பயன்படுத்தி அவர் சொல்வதாகவும் சொல்லலாம். உங்கள் வசதி.

IP முகமூடி என்றில்லை, இலவசமாகக் கிடைக்கும் இணையப் ப்ராக்சிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை வளர்மதி (பூத்தூரிகை) விளக்கியதும் நல்ல தமிழ் சினிமா பார்த்தது போல் அதிர்ந்திருக்கிறேன். ஆசிரிய நண்பர் அரசன், புலிகளல்லாத இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செய்தி அனுப்ப இந்த முறையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று தெரிந்து சில நாள் பயந்திருக்கிறேன். தன் இணையக்கணக்கு அடையாளங்களினால் உண்டான சிக்கலில் வாழ்க்கையே நாசமான நண்பரின் கதையை எப்பொழுதோ ஒரு முறை எழுதியிருக்கிறேன்.

கொஞ்சம் இந்தப் பக்கம் வந்தால் கணினி சுகமாகவே இருக்கிறது.

கணினி தயவில் கண்காணாதவர்களுடன் நட்பு கொள்ள முடிகிறது. மனம் விட்டுப் பேசமுடிகிறது. இன்னும் நிறைய செய்ய முடிகிறது. சென்னையிலிருந்து சிகாகோவுக்கு கணத்தில் பணம் அனுப்பமுடிகிறது. பெங்களூரு புன்னகையை பாஸ்டனில் பார்க்க முடிகிறது. ஒரே நேரத்தில் ஒரு கணினி ஜன்னலில் சென்னை கணேஷுடனும் இன்னொரு கணினி ஜன்னலில் பெங்களூரு ரஞ்சனியுடனும் வளவளாவ முடிகிறது. சிகாகோ கணினியில் மறந்து போன வணிகக் காகிதம் ஒன்றை ப்ரேங்க்பர்ட் ஏர்போர்டில் ப்ரின்ட் எடுத்து பிசினஸுக்குத் தயாராக முடிகிறது. கூகுல் லிங்க்டின் பேஸ்புக் டம்ளர் என்று உலவித் தேடி ஜாதகம் கணித்தது போல் ஒருவரையோ பலரையோ தேவைக்கு மேல் அறிந்து அதற்கேற்ப நடக்க முடிகிறது. விளையாட்டுப் பிள்ளையின் சிவப்பியில் இரண்டு வருடங்களுக்கு முன் பதித்த குட்டி ஜிபிஎஸ் வழியாக எங்கே போகிறார் என்று இப்போதும் அறிய முடிகிறது. (ஹிஹி.. ச்ச்சும்மா).

விடுங்க, இதெல்லாம் ஜூஜூபி. வருங்காலத்தில்.. இன்ன நேரத்தில் கண்ணை மூடவேண்டும் (நிரந்தரமாக) என்றுத் தீர்மானித்ததும் கணினி வளையலை அணிந்து கொண்டால் சரியான நேரத்தில் அலாரம் வைத்தது போல் பத்தாயிரம் பூக்களால் அடித்த ஒரு மென்மையான அதிர்ச்சி கொடுத்து இதயத்தை நிறுத்தவும் முடியும். (இப்போதே முடிகிறது என்றாலும் பொதுவில் வர நாளாகும்). என் முடிவு அப்படி வந்தால் நன்றாக இருக்கும். கடவுளுக்குப் பதில் கடைசி வரை கணினியை நம்பலாம் என்றே தோன்றுகிறது.

என்ன.. கணினியால் நிறைய முடியும் என்றாலும் எல்லாம் ஆகாது. அன்பும் காதலும் மட்டும் மனித செயலாக, மனித அடையாளமாகவே இருந்துவரும். ஹ்ம்ம். அன்பினாலும் காதலினாலும் என்ன பிரயோஜனமோ, யார் கண்டார்கள்!

இன்றைக்கு ஓரளவுக்குக் கணினிப் படம் காட்டும் நான், அந்தப் பக்கமே போகாமலிருந்திருக்கக் கூடும் என்பதை நினைத்தால் நடுக்கமாக இல்லை? சசிகலா, உங்களைத்தான் கேட்கிறேன். நீங்க தானே பதிவெழுதச் சொன்னீங்க? (நன்றி :)

    எனக்கு இருபது வயது என்று நினைக்கிறேன். விரும்பிய ஐஐஎம் கிடைக்காமல் நொந்திருந்தேன். கிடைத்த வேலையையும் ஐஐஎம்மை நம்பி விட்டிருந்தேன். இரண்டு மாதங்களாக நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தவள், அவளுக்கு இடம் கிடைத்து எனக்கு ஐஐஎம் கிடைக்கவில்லை என்றுத் தெரிந்ததும் 'இனி நாம் பழக வேண்டாம் துரை' என்று விலகிக்கொண்ட கடுப்பும் ஏமாற்றமும் மிகுந்திருந்தேன். சிகரெட் மதுவில் ஈடுபாடு இல்லாததால் (காசு இல்லாததாலும்) அங்கேயும் மறதி தேட முடியாத நிலையில், என் பம்மல் நண்பன் தேசிகன் ஒரு செய்தியோடு வந்தான். அவன் வீட்டு ஹிண்டு பேப்பரை நான் ஒசியில் படிப்பது வழக்கம். முழுப் பக்க விளம்பரம். பெங்களூரில் ஒரு கணினி கலாசாலை தொடங்கப் போவதாகவும் அகில இந்திய அளவில் தேர்வு நடக்கப் போவதாகவும் முபவ. அனியாயத்துக்கு கட்டணம். அந்த நாளிலேயே இருபதாயிரமோ என்னவோ. இரண்டு வருட முதுகலைப் படிப்பு. நுழைவுத் தேர்வில் முதல் ஐந்து இடங்களை வெல்வோருக்கு வருடத்துக்கு மூவாயிரம் ரூபாய் புத்தகம் மற்றும் கணினிக்கான உபரிச் செலவு என்று கொடுத்தார்கள். அது தவிர, முதலிடத்தை வெல்பவர் படிப்பு செலவு மொத்தமும் கொடுத்தார்கள்.

மொரார்ஜியினால் துரத்தப்பட்ட ஐபிஎம் நிறுவனம், பின் கதவு வழியாக இந்தியா நுழையத் திட்டம் போட்டது என்ற குழப்படி செய்தி தெரியாமல் (தெரிந்தாலும் ஏதும் செய்திருக்க முடியாத அறிவற்ற இளமை) கோலாகலமாகத் திறக்கப்பட்ட அந்தக் கணினி கலாசாலையின் நுழைவுத் தேர்வெழுதி, அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் வந்தேன். முதல் இடத்தைப் பிடித்தவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்.

இரண்டாவது இடத்தினால் எனக்கு ஒரு பயனும் இல்லை. கணினிப் படிப்புக்கான பணம் கட்ட முடியாத நிலை. என் நண்பர்கள் சிலர் எனக்கு உதவ முன்வந்தாலும் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும் செலவுக்கு எங்கே போவது?! வேலை காதல் படிப்பு என்று எல்லாமே கைக்கெட்டி வாய்க்கெட்டாமலே போன சோகத்தில், சினிமா பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். இசை எம்எஸ் விஸ்வனாதன்.

'என்னால் சேர முடியாது' என்று கணினி கலாசாலைக்காரர்களுக்கு எழுதினேன். இளைஞர் காங்கிரசில் சேர்ந்தேன். சஞ்சய் காந்தி தயவில் ஐயாயிரம் ரூபாய் வரை கேள்வி கேட்காமல் கிடைத்துக் கொண்டிருந்த கடன் ஸ்கீமில் கணிசமாக அடிக்கத் திட்டம் போட்டிருந்த செங்கை இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு என் இங்க்லிஷும் இந்தியும் தேவைப்பட்டது. ஒரு கடன் பத்திரம் முடித்தால் எனக்கு ஆயிரம், தலைவருக்கு மூவாயிரம், வங்கி மேனேஜருக்கு ஐநூறு, கடன் வாங்கியவருக்கு ஐநூறு என்ற விகிதப்படி பட்டுவாடா செய்ய வேண்டும். கடன் கொடுத்த கணக்கை இந்தியிலும் இங்க்லிஷிலும் எழுதி அவருக்கு அனுப்ப வேண்டும். அதான் வேலை. கட்சியில் சேர்த்துக் கொண்டு பணம் தருவதாகவும், வளர்ந்து டெல்லியில் எம்பி ஆகலாமென்றும் தலைவர் ஆசை காட்டியதில் விழுந்தேன். வீட்டில் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. 'என்னடா இது நாலு தங்கைகளை வச்சுக்கிட்டு, இப்படி அரசியல்ல குதிக்கறேன் சினிமா கதை எழுதுறேன்னு என்னென்னவோ சொல்லிட்டிருக்கே? ஒழுங்கா வேலைக்குப் போடா.. அம்மா கர்ப்பரட்சே, அபிராமி! என் பிள்ளைக்கு நல்ல புத்தியைக் கொடுமா' என்று புலம்பத் தொடங்கினார். அவசரத்துக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குச் சேவை செய்துவிட்டு அத்துடன் அரசியல் ஆசையை விட்டேன்.

அந்த நிலையில் கலைஞரின் நெருங்கியவராக இருந்த நல்லதம்பியின் 'நெருங்கியவராக' இருந்த ஒருவர் எனக்கு துபாயில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். அவருக்குச் சொந்தமான ஒரு கம்பெனியில் மேனேஜர் வேலை. இந்திய டேக்சி டிரைவர்களை மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி, அங்கே அவர்களை 'மேய்க்கும்' மேனேஜர் வேலை. டிரைவர்கள் கொடுக்கும் 'விசா செலவுக்கான' பெருந்தொகையை வாங்கி அங்கே அவர் கணக்கில் சேமிக்க வேண்டும். அங்கிருந்து வருடாவருடம் இன்னொரு அடையாளம் தெரியாத வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்ற வேண்டும். இதான் வேலை. துபாயில் நூறு பணம் சம்பளம். அதைத் தவிர, இந்தியாவில் பம்மல் வங்கிக் கணக்கில் மாதம் இரண்டாயிரம் சம்பளம். அரசாங்கத்துடன் பேசிப் பழகி முடிவுகள் எடுக்க என் ஆங்கிலமும் பட்டப்படிப்பும், அதே நேரம் 'நம்மாள்' என்ற முறையில் என் நாணயமும் நெருங்கியவருக்கு உதவும். வெளிநாடும் வேலையும் சம்பளமும் எனக்கு உதவும். அவருக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. எனக்கும். வீட்டில் சொல்வதில்லை என்று தீர்மானித்திருந்தேன். துபாய் போனபின் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இருந்தேன்.

பத்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வந்தது. ஓசியில் டிவிஎஸ் ஒட்டிக்கொண்டிருந்த எனக்கு கார் டிரைவிங் லைசென்சும் வந்தது. நான் எங்கேயும் போகவில்லை. எதையும் செய்யவில்லை. எல்லாம் நெருங்கியவரே பார்த்துக் கொண்டார். தொடர்ந்து சில வாரங்களில் விசாவும் வந்தது. 'என்சைக்லோபிடியா விற்கும் வேலை' என்றது என் விசாத்தாள். 'என்ன இழவாக இருந்தால் என்ன!' என்று நான் கிளம்பத் தயாரானேன்.

கிளம்ப ஒரு வாரம் இருக்கும் பொழுது எனக்கு ஒரு தந்தி வந்தது. கணினி கலாசாலையிலிருந்து. சென்னை சபையர் அருகே இருந்த ஹோட்டலில் வந்து சந்திக்குமாறு சொன்ன தந்தியைத் தூக்கி எறியலாமென்று நினைத்தேன். ஏனோ தெரியவில்லை, தியேடரில் படமாவது பார்ப்போம் என்ற சமாதானத்தோடு கிளம்பினேன்.

"மிஸ்டர் துரை. உங்களுக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறது. கணினிப் படிப்பின் மொத்த செலவையும் கலாசாலையே ஏற்கும். பிடியுங்கள் அட்மிஷன் பேப்பர்ஸ். இன்று மாலை அமெரிக்க எம்பசியில் ஒரு இன்டர்வ்யூ. அது சரியாகிப் போனதென்றால் உங்களுக்கு அட்மிஷன் கன்பர்ம் ஆகும்" என்று கைகுலுக்கினார் சிவப்பாக இருந்த ஒரு கோட் சூட் இந்தியர்.

ஆச்சரியமாக இருந்தது. பெங்களூர் படிப்புக்கு அமெரிகன் எம்பசியில் எதற்கு இன்டர்வ்யூ என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. "ஒரு பெண் அல்லவா முதல் இடத்தை வென்றார்? என்ன ஆச்சு?" என்றேன்.

"ஆமாம்.. ஆனால் அந்தப் பெண் தனக்கு இந்தப் படிப்பில் இஷ்டமில்லை என்று சொல்லிவிட்டார். நாங்கள் பலமுறை அவர் வீட்டுக்கே சென்று கேட்டுப் பார்த்துவிட்டோம். பிடிவாதமாக இருக்கிறார். அவர் விட்டுக் கொடுத்ததால் உங்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. நீங்கள் அவசரப்பட்டு படிப்பு வேண்டாம் என்று எழுதிவிட்டதால் அட்மிஷன் பேப்பர்ஸ் மறுபடி தர வேண்டியிருக்கிறது. உங்களை மாணவராக அடைவதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி" என்றார்.

"கொஞ்சம் யோசிக்கிறேன். மாலையில் பார்ப்போம்" என்றேன். அமெரிக்க தூதரகத்தில் இன்டர்வ்யூ முடிந்து எதிரே இருந்த உட்லண்ட்ஸ் டிரைவின்னில் காபி டிபன் சாப்பிட்டோம். மதுரைப் பெண்ணின் முகவரி வேண்டும் என்றேன். கொடுத்தார்கள்.

ஏனோ தெரியவில்லை, மதுரைப் பெண்ணைப் பார்த்து விவரம் கேட்க வேண்டும் என்று மதியத்திலிருந்து தோன்றிய எண்ணத்தை ஒடுக்க முடியவில்லை. முகமறியாத பெண்ணுக்கு நன்றியாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நண்பன் வயலினிடம் (பெயர்க்காரணம் இன்னொரு சமயம்) யெஸ்தி கடன் வாங்கிக் கொண்டு மதுரை சென்றேன். அதிகாலை ஏழுமணி சுமாருக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெருவில் இருந்த ஹோட்டலில் குளித்து உடை மாற்ற மட்டும் வாடகைக்கு ரூம் கொடுத்தார்கள். அட்டகாசமாக டிபன் சாப்பிட்டு விட்டு (அப்பொழுதெல்லாம் ரெண்டு இட்லி, பொங்கல், வடை, சாதா தோசை, பூரி மசாலா, காபி என்று சர்வ சாதாரணமாக நாஷ்தா சாப்பிட முடிந்தது) மதுரைப் பெண் வீடு தேடிக் கிளம்பினேன்.

பெண்ணின் அப்பா வரவேற்றார். என் பெயரைக் கேட்டதும் அவர் கேட்ட முதல் கேள்வி: "பாக்கறதுக்கு பிராமணாள் போல இருக்கியேபா?". திண்ணை கடந்து உள்கட்டில் ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். கிராமத்து அசல் அக்கிரகார வீடு. பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

"ஐயா.. ஆமாம்" என்று என் சர்மாவைச் சொன்னதும், "அப்படியா? எந்த ஊர் பூர்வீகம்?" என்றார்.

தோளைக் குலுக்கி எனக்குத் தெரிந்தவரையில் சொன்னேன்.

"நன்னா தெரியுமே? அவாள்ளாம் த்ர்னாங்கோயில்லையோ? நீ என்ன படிச்சிருக்கே? உத்யோகம் பாக்கறியா? எத்தனை அக்கா தங்கை? அப்பா அம்மா என்ன பண்றா? காபி சாப்பிடுறியா?"

உரையாடல் வேறே ரூட்டில் போவதை உணர்ந்து சடன் ப்ரேக் போட்டேன். "சார்.. உங்க பெண்ணோட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்" என்றேன்.

"எம்பொண் கிட்டயா? ஏன்? எதுக்கு? யாரு? உனக்கு எப்படி அவளைத் தெரியும்?" என்று வரிசையாக கேள்விக்கணை தொடுத்தார். காபி தரமாட்டாரென்று தோன்றியது.

வந்த விவரத்தை சொன்னேன். "சார்.. மொதல் இடத்துல வரது எவ்ளோ பெரிய சாதனை.. ஏன் விட்டுக் கொடுத்தாங்கனு கேட்க வந்தேன். இது பெரிய வாய்ப்பாச்சே சார்?" என்றேன். சொல்லும் பொழுது அருகே இருந்த அறையில் (ரேழி?) நிழலாடுவதை உணர்ந்தேன். என் எதிரே இருந்த தூண்களில் தொங்கிய செவ்வக நிலைக்கண்ணாடியில் லேசாக ஒரு முகம் தெரிந்தது.

"பொம்னாட்டிகளுக்கு எதுக்கு ஊர் விட்டுப் போய் படிப்பு வேண்டிக்கிடக்கு? அதுவும் கம்பியூடர் எல்லாம்? நாளைக்கு வாக்கப்பட்டு போற இடத்துல அவாளா சொன்னா எல்லாம் படிச்சுக்கட்டும்.. இருக்குற செலவு போறாதா?"

"சார்.. முதல் ரேங்க்னால அவங்களே எல்லா செலவையும் ஏத்துக்குவாங்க சார். இது எவ்வளோ பெரிய சான்ஸ்! நாளைக்கு அமெரிக்கா எல்லாம் போகலாம். அதும் பெண்கள் இப்படி முதல் ரேங்க்ல வந்தா அதை விடுறது தப்பு சார்"

சொல்லியிருக்கக் கூடாது. வெடித்தார். "என்ன தப்புங்கறே? யார்டா நீ? எம்பொண்ணுக்கு எது தப்பு ரைட்டுனு எனக்குத் தெரியாதா? இந்த மாதிரி சொல்லிண்டு தான் ஒரு வடக்கத்திக்காரனும் வெள்ளைக்காரனும் வந்தாங்க.. வாசல்லயே வச்சு போங்கடான்னுட்டேன்.. உன்னை உள்ள விட்டது தப்பா போச்சு"

உடனே பணிந்தேன். "சாரி சார். தெரியாம சொல்லிட்டேன். தப்பா நினைக்காதீங்க. நீங்க வேணாம்னு சொன்னதால உங்க பொண்ணோட இடத்தை எனக்குக் கொடுத்திருக்காங்க. ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா யோசிச்சு சொல்லுங்க சார். நான் இதை உடனே எடுத்துக்கணும்னு இல்லை சார். நாலு நாள் வேணும்னா யோசிச்சுக்குங்க. அங்கே நிறைய பெண்கள் படிக்கிறாங்க. உங்க பெண்ணுக்கு ஒரு ஆபத்தும் வராது". உள்ளறையோரமாக லேசான கொலுசு சப்தம் கேட்டது.

"அதெல்லாம் யோசிக்கறதுக்கு ஒண்ணும் இல்லே. ஏதோ டெஸ்டு எழுதினா. பேங்கு எக்சாம் எழுதுறி தடிச்செறுக்கினா இதையெல்லாம் எழுதி வைக்கறா.. அவ அம்மா குடுக்குற எடம். அவளுக்கு இந்தப் படிப்பெல்லாம் வேண்டாம்" என்றார். உள்ளறையோரமாக ஒரு பெண் ஒரு தட்டில் இரண்டு கப் காபி கொண்டு வைத்ததை உணர முடிந்தது. சட்டென்றுத் திரும்பிப் பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தாலும் பயனிருந்திருக்காது. காபியை என்னிடம் கொடுத்தார். அற்புதமான டிகாக்ஷன் காபி.

காபி அருந்தியதும் பத்து நிமிடம் போல் பேசினோம். கடைசியில் அவருக்குப் பொறுமை குறையத் தொடங்கியதும், "எனக்குக் கிடைச்ச இந்த இடம் உங்க பெண் போட்ட பிச்சைனு சொல்வேன் சார்" என்றேன். சினிமாவில் எழுதத் துடித்த எனக்கு டயலாக் பேசவா வராது? "அவங்க கிட்டே ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு போயிடறேன்"

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவளுக்கு எது நல்லதுனு பெத்தவனான எனக்குத் தெரியும். ஒண்ணு செய்.. உங்காத்து அட்ரெஸ் குடுத்துட்டுப் போ. எம்பொண் ஜாதகத்தை அனுப்பறேன். பரவாயில்லையா?" என்றவரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் என் பம்மல் முகவரியை எழுதிக் கொடுக்க முன்வந்தேன். ஏன் அப்படித் தோன்றியதோ தெரியவில்லை, தெருப்பெயரை மாற்றி எழுதிக் கொடுத்தேன். இன்றைக்கும் லேசாக உறுத்துகிறது.

நெருங்கியவரிடம் எனக்குத் துபாய் வேலையில் இஷ்டமில்லை என்று சொன்னேன். அவரிடமும் தேசியின் அண்ணனிடமும் காங்கிரஸ் தலைவரிடமும் ஆளுக்கு ஆயிரம் கடன் வாங்கினேன். பெங்களூரு சென்று கணினி கலாசாலையில் சேர்ந்தேன்.

    தென்னைமரத்தில் இனி பசுமாட்டை கட்டலாம்.

சேர்ந்த முதல் வாரமே தனியறையில் வீற்றிருந்த வேக்ஸ் மினியைக் காட்டினார்கள். இருபத்து நாலு மணி நேரமும் கணினி உபயோகிக்க ஒரு கார்டு கொடுத்தார்கள். குளுகுளு அறையின் மணத்தில் மனதைக் கொடுத்தேன். விஎம்எஸ் புடலங்காய் என்று ஏதேதோ சொல்லிக் கொடுத்தார்கள். சிஸ்டம்ஸ் அனாலிசிஸ், கோட் செக்மன்ட், கெர்னல், அது இது என்று என்னென்னவோ கற்றேன். சிஎப்டிஆர்ஐ, அமெரிக்க எம்பசி நூலகம், தில்லித் தூதரகம் போன்ற அமைப்புகளுடன் சுலபமாக கணினியில் நெட்வொர்க் செய்யச் சொல்லிக் கொடுத்தார்கள். ஸ்ட்ரெடிஜிக் டிசைன், காக்னிடிவ் அசோசியேசன் என்று மேல்தட்டில் நிறையக் கற்றேன். கணினி அறையின் குளுகுளு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இருபத்து நாலு மணி நேரம் கணினி கிடைத்தாலும், தினம் ஹாஸ்டலில் கொடுத்த சப்பாத்தியும் உடன் சாப்பிடத் தொடங்கிய மஞ்சள் மளேர் மங்களூர் பெண்ணும் கவனத்தில் இருந்தார்களே தவிர கணினிப் படிப்பு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என்றாலும் நான் முதல் வகுப்பில் தொடர வேண்டியிருந்தது - இல்லையென்றால் ஸ்காலர்ஷிப்பை நிறுத்திவிடுவார்கள் என்ற பயம். கணினியறையின் குளுகுளு பிடித்திருந்தது. தொடர்ந்து முதல் வகுப்பில் வந்ததால் நிறைய அமெரிக்க அறிமுகங்கள் கிடைத்தன. அடுத்த ஒரு வருடத்தில் சிபிஐ என்று இக்கட்டாகி கலாசாலை சீக்கிரமே காலிசாலையானது. மறுபடி ஐஐஎம் எழுதத் தீர்மானித்தேன்.

கணினிப் படிப்பு நின்றாலும், என் அமெரிக்க வாழ்வு அங்கே விதைக்கப்பட்டது என்பதும் விதைத்தவர் அந்த மதுரைப் பெண் என்பதும் என் வாழ்நாளின் கடைசி நொடி வரை மறக்க முடியாது. கணினியுகத்தில் என்றைக்காவது அவரை சந்திக்க முடியாமலா போய்விடும்?

தொடர, Expatguruவை அழைக்கிறேன்.