சில போலி நகங்கள் அசலில் காயப்படுத்துவதை அனுபவித்திருக்கிறீர்களா?
கவிதைக்குள் நுழைகிறாய் ஒரு அறைக்குள் நுழைவது போலவே இக்கவிதைக்குள் நுழைகிறாய். கதவைத் திறந்ததும் நீ காண்பதென்ன? ஒரு கழுவுந்தொட்டி, ஒரு குளியல்தொட்டி, அல்லது கழிவறை.. கவிதையில் கழிவறை உண்டா என்ன? 'அட! இது கவிதையல்ல, குளியலறை' என்று விலகுகிறாய்.       மறுமுறை       கவிதைக்குள் நுழைகையில்       இது குளியலறை என்று       உனக்கு ஏற்கனவே புரிந்திருக்கிறது.       சுவரலமாரியில் அடுக்கப்பட்ட சில       துவட்டுந்துண்டுகளைப் பார்க்கிறாய்.       அதன் வண்ணங்களை..       சுவற்றின் கண்ணாடியை.. தரையின் பளிங்கை..       அறையோர சொகுசு இருக்கையை.. எதிரே       கண்ணாடி உருண்டைக் கைப்பிடி புதைந்த சிற்றலமாரியை..       சிற்றலமாரியுள் அடுக்கப்பட்ட அவசியங்ளை.       'அட, இது வேறு மாதிரிக் குளியலறை' என்று விலகுகிறாய். மீண்டும் கவிதைக்குள் நுழைகையில் சுவரலமாரியில் கலைந்த.. தரையில் விழுந்து சுருண்ட.. துவட்டுந்துண்டுகளைப் பார்க்கிறாய். ஆ! கண்ணாடியில் நீர்க்கறை.. பற்பசை.. அழுக்குத் தீற்றுகள்.. பளிங்குத் தரையோரம்.. நடுவில்.. எங்கும் விரிசல் ரேகைகள்.. சற்றே விலகிய கற்களின் பற்கள். அவசரமாகச் சிற்றலமாரியைத் திறக்கிறாய். நசுங்கிய கலைந்த உடைந்த ஒழுகிய விலகிய பல்துலக்கும் முகம்பொலிக்கும் உடல்விளக்கும் அழகுசாதன மிச்சங்கள்.. இதென்ன? மறந்து போன மாத்திரைப் புட்டியைப் பார்த்ததும் ஓ.. உனக்கு இப்போது புரிந்துவிட்டது இது கவிதையே என்று.     - நேற்றிரவு படிக்கத் தொடங்கிய ராபின் ஹர்ஷ் எழுதிய 'Stupid poems for the Intelligent' எனும் சுவாரசியமானக் கவிநூலின் 'you enter a poem' கவிதையைப் படித்ததும், உடனே தமிழில் தரத் தோன்றியது. 'அறிவு வளர்ந்தக் குழந்தைகளுக்கானக் கவிதைகள்' என்று முகப்பில் சொல்லியிருக்கிறார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிற ஆளில்லை. | தினப் பிராணிகள் இவர்கள் அதிகாலையில் எழுந்துவிடுகிறார்கள். அவர்களுக்குப் பற்பசை     குளியல் துணிமணி புத்தகப்பை       ஷூ சாப்பாடு கையில் டிபன்.. அவருக்கு காலையுதவி     காப்பி       அலுவல் புறப்பாட்டுச் சேவை         சாப்பாடு கையில் டிபன்.. எல்லோருக்கும் வாசலில் நின்று     சிரித்துச் சிரித்து முகமனும் விடையும் தருகிறார்கள். ஓடியாடி நின்று நடந்து எல்லோரும் உட்கார்ந்த பின்னரே உட்காருகிறார்கள். வீட்டுவேலை வெளிவேலை என்று சுழல்கிறார்கள் வழியில் காய்கறி     பால்பழம் மளிகை       சட்டைப் பித்தான்         கிழிந்த உடைக்கு ஊசி நூல் வாங்கி வருகிறார்கள்     மொழி பாட்டு நடனம் ட்யூஷன்       கோவில் மருந்துக்கடை என்று தினம் போகிறார்கள். ஓரங்கட்டிய தூசுபடிந்த வயலினைப் பார்த்தும் எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும் பெருமூச்சு விடுகிறார்கள்.         வாக்கு தவறாமல் நடக்கிறார்கள்         தவறான வாக்கெனினும். அடுத்தவர் சோகத்தில் பங்கெடுத்து 'எல்லாம் சரியாகிவிடும்' என்று புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.         எல்லோரும் திருப்தியானதும்       எல்லாம் அடங்கியதும்     விளக்கணைத்த நள்ளிரவில்   அமைதி கலைக்காத ஓசையுடன் தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்.     - தாரியா தொமித்ரொவிச் எழுதிய 'sad women' எனும் முன்பு படித்தக் கவிதையை ஏனோ மீண்டும் தேடிப் பிடித்துச் சேர்க்கத் தோன்றியது. |