2012/07/01

மெக்சிகோ



    து பயணக்கட்டுரை அல்ல.

    ன்னும் மூணறை பிலியன் வருடங்களில் ஹைட்ரஜன் வற்றத்தொடங்கி சூரியன் ஏறக்குறைய சூபர் நோவா நிலைக்குத் தயாராகும் பொழுது, உலக வெப்பம் இன்றை விட இரட்டிப்பாகும் சாத்தியம் உண்டு என்கிறார்கள். பூமி அழிவதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று உலக மகா புத்திசாலிகள் அவ்வப்போது கூடி ஒருவர் தலையை இன்னொருவர் சொறிந்து கொண்டிருக்கிறார்கள். நிறையத் திட்டங்கள் பரீசீலனையில் உள்ளன. ஒரு தலைசொறிக் கூட்டம் சொல்லியிருக்கும் திட்டத்தைப் படித்த போது ஆகா என்று தோன்றியது.

பூமியை இப்போது இருக்கும் பாதையிலிருந்து அலேக்காகப் பெயர்த்து வியாழன் அல்லது சனிக்கருகில் சேர்த்துவிடுவதே அந்தத் திட்டம். இயல்பாக நிலவும் கிரகங்களின் ஈர்ப்புச் சக்தி மற்றும் slingshot உத்திகளின் அடிப்படையிலான எளிமையானத் திட்டம் என்றாலும், விவரங்களைப் புரிந்து கொள்ள பி.எச்டி வேண்டும். என்னிடம் பி கூட இல்லை.

விடுங்கள். தோன்றியக் கணம் முதல் நாட்பட பூமியின் வெப்பம் அதிகரித்தது, அதிகரிக்கிறது, அதிகரிக்கும் (வினைத்தொகையாக ஒரு சொல் தெரிந்தால் சொல்லுங்கள்) என்று நினைத்தேன். இல்லையாம். ஏறக்குறைய நூறு மிலியன் ஆண்டுகளுக்கு முன், பூமி இப்போதை விட இருபது சதவிகிதம் போல் அதிக வெப்பமாக இருந்தததாம். என்ன காரணம் என்று நோண்டிப் பார்த்தால், டைனோசார்! டைனோக்கள் வாழ்ந்த காலத்தில் பூமி வெப்பம், ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததாம். காரணம் ரொம்ப சிம்பிள். டைனோசார் குசு. அத்தனையும் சுத்த மெதேன். பூமியின் வெப்பம் உயரும் அளவுக்கு சக்தி வாய்ந்த டைனோ வாயு. இதைக் கண்டுபிடித்து நம்முடன் பகிர்ந்துகொண்ட ஞானிகளுக்கு ஒரு கிலோ மொச்சைக்கொட்டை பரிசு.

NASAவின் அற்புதமான Climate Kids தளத்தை அறிமுகம் செய்து, என் பிள்ளைக்கு greenhouse effect பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன். (பச்சைவீடு பாதிப்பு என்று இன்னும் யாரும் தமிழ்ப்பெயர்க்கவில்லை). கார்பன் டையாக்சைட், மெதேன் பற்றி என்னிடமிருந்த அரைகுறை ஞானத்தை அவனிடம் சேர்த்தேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு, "now i know why our house is always unbearably warm" என்றான்.

"coz of summer" என்றேன்.

"no old man, coz of your methane" என்றான்.

உரக்கச் சிரித்த என் மகள், "figures.. another indian phenom" என்றாள்.

இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் பெரியவர்கள் என்ற மரியாதையே இல்லை. "ஏம்மா கொழந்தே அப்படிச் சொல்லுறே? இந்தியா என்ன பண்ணிச்சு?" என்றேன் மிகுந்தப் பணிவுடன்.

சொன்னாள். படித்த செய்தி என்றாலும் மறந்திருந்தேன். இந்தியாவின் ஐநூறு மிலியன் கால்நடைகள் ஒரு வருடத்துக்கு சுமார் பனிரெண்டு டன் மெதேனைக் கடைப்புறமாகக் கிளப்புகிறதாம். ஓசைப்படாமல் வாயு போக்கும், வாயில்லா ஜீவன் பாவம் வேறென்ன செய்யும்?

    ந்தியாவில் அப்படி என்றால் மெக்சிகோவும் சபாபதே போலிருக்கிறது. சமீபப் பயணம் ஒன்றில் தெருவோரமாக நிறைய ஆடுமாடுகள் நிம்மதியாக அமர்ந்து சுவாரசியமாக அசை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. எத்தனை டன் மெதேன் கிளப்புகின்றனவோ!

ஒரு public policy/social measure கலந்துரையாடலுக்காக மெக்சிகோ போயிருந்தேன். ஓசியில் இடம் சாப்பாடு பயணச்செலவு கொடுத்து அழைத்தார்கள். திருமணக்கால உச்ச வரம்பு பற்றிய "பிரமுகர்" உரையாடல். திருமண லைசென்சுக்குக் காலவரம்பு வேண்டும் என்றக் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான். "திருமணத்தை காலவரம்புக்கு மேல் நீடிக்க வேண்டுமானால் இன்னொரு லைசென்சு பெறலாம். பிடிக்கவில்லையா, தானாகவே விலகிவிடலாம். விவாகரத்து, வக்கீல், பிள்ளைப் பிரிவு, கஸ்டடி சண்டை என்று எந்தவித சிக்கலும் இருக்காது" என்று நிறைய உள்ளூர் social public policy கருத்தரங்குகளில் பேசியிருக்கிறேன். அமெரிக்க ரோமன் கத்தோலிக்கக் குழுவிடம் சில நேரம் கல்லடி பட்டிருக்கிறேன். i mean சொல்லடி.

மெக்சிகோவில் திருமணக் காலவரம்புச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு திருமணம் சட்டப்படி செல்லாது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்தால் திருமணத்தைச் சட்டப்படிப் புதுப்பித்துக் கொள்ளலாம். i think that is a very forward looking measure. இரண்டு நாள் workshopல் challenge simulation, policy modeling என்று அறிவுக்கும் கற்பனைக்கும் வேலை கொடுத்தார்கள். நிறைவாக இருந்தது, சாப்பாட்டைப் போலவே. "திருமணக் காலவரம்பு எல்லா நாடுகளிலும் அமலுக்கு வரும். மெக்சிகோ முன்னோடியாக இருக்கிறது. சமூகப் பிரச்சினைகள், குறிப்பாகப் பிள்ளை வளர்ப்பு பற்றியவை, வரத்தான் செய்யும், எனினும் முற்போக்கான முயற்சி" என்றுப் பாராட்டிப் பேசிவிட்டு வந்தேன்.

இப்போது இன்னொரு மெக்சிகோ நகரத்தில் இரண்டு ஆண்டு திருமணக் காலவரம்பு கொண்டு வருவதாகப் பேச்சு அடிபடுகிறது. என்ன வேகம், நில்லு மரியா.

    மெக்சிகோ பயணத்தின் இரண்டு மறக்க முடியாத சுவாரசியங்களுள் முதலாவது கேரி தனீன் சந்திப்பு. கேரியின் sex tips இணையத்தில் பிரபலம். தினமும் பலமுறை உடலுறவு கொள்வது மனதுக்கும் உடலுக்கும் ரொம்ப நல்லது என்கிறார். இதை விட்டு அனாவசியமாக ஜிம்முக்கும் ரன்னிங் ட்ரேக்குக்கும் ஒடுகிறேனே என்று நினைத்தேன். ஓ.. செக்சுக்கு இரண்டு பேர் வேண்டுமோ? இணக்கமும் வேண்டுமோ? சரிதான். எங்கே என் running shoe?

திருமணக் காலவரம்பு பற்றிப் பேச வந்திருந்தார் கேரி. மனவளர்ச்சி குறைவாக இருப்பதால் காலவரம்பு தேவைப்படுவதாகச் சொன்னார். "ஆணும் பெண்ணும் மனதளவில் முதிர்ச்சியை வளர்த்துக் கொண்டால் காலவரம்புக்கு அவசியமில்லை. காலவரம்பைப் பற்றியக் கவலையும் இல்லை" என்று நிறைய விவரங்களைப் பிட்டு வைத்தார். மாலை cocktails போது சந்தித்து அறிமுகம் செய்து கொண்டு அவர் பேச்சைப் பாராட்டினேன். "உடலுறவு உடல் நலனுக்கு உகந்ததா?" என்றேன் உற்சாகமாக. காலவரம்பு கிடக்கிறது.

"உண்மையில்" என்றார்.

"அடடே! எங்கே கொஞ்சம் விவரமா சொல்லுங்க?" என்றேன்.

"தவறாமல் உடலுறவு கொண்டால் அழுத்தம் போன்ற மன உபாதைகள் மட்டுமல்ல, தினம் அனுபவிக்கும் சளி, பித்தம், பெண்களுக்கு ஏற்படும் அதிக மாதவிடாய் ஓட்டம், ஆண்களுக்கு ஏற்படும் தலைவலி போன்ற உபாதைகளும் நீங்கும்" என்றார்.

"அடடே!" என்றேன். "உடலுறவு எத்தனை நாள் தான் இயலும்? அதற்குப் பிறகு சளி பித்தம் தீர என்ன செய்வது? என்ன தான் காதலித்தாலும் கருத்தொருமித்தாலும் வயதாகுமே?" என்றேன்.

"அதற்காகக் காலவரம்பு போடுவது முறையா?" என்று சிரித்தார். உடனே சீரியசாக, "தம்பதிகளிடையே காதல் இருந்தால் எதுவுமே தேவையில்லை. முடியும் பொழுது உடலுறவு கொண்டால் உடலுக்கு நல்லது. மனதுக்கும் நல்லது. உடலுறவுக் காலத்தையும் கடந்து நிலைக்குமே மன நலம்? முடியாத காலத்தில் ஒருவர் புன்னகையை மற்றவர் ரசிப்பதும் உடலுறவு தான்" என்றார். பொட்டில் அடித்தது.

கேரியின் பதிவொன்றை இணைத்திருக்கிறேன். பதிவை நிறைய பேர் படிப்பார்கள் என்று தெரியும். எதற்குச் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் வலைச்சரம் ஆசிரியராக ஒரு வாரம் ஓட்ட வாய்ப்பு கிடைத்தது. சுய அறிமுகத்தில் நிறைய சொல்லியிருந்தேன். அந்த வாரம் மூன்றாம் சுழியில் அதிக வாசகர்கள் படித்தது நான் குறிப்பிட்டிருந்த 'காமம்' பற்றிய பதிவுகளே. மிச்ச மூன்றாம் சுழிப் பதிவுகளை ஒருவரும் சீண்டவில்லை. எல்லோரும் என்னைப் போலவே இருக்கிறார்கள்.

    மெக்சிகோ பயணத்தின் இன்னொரு சுவாரசியம் சற்றும் எதிர்பாராதது. தேவானந்தின் குடும்பத்தில் ஒருவரைச் சந்தித்தேன். ஆனந்த் சகோதரர்களுக்கு உறவாம். ஐம்பது வருடங்களாக பொலிவியா மெக்சிகோ என்று வாழ்வதாகச் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. தென்னமெரிக்கப் பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு இங்கே வந்து தங்கிவிட்டதாகச் சொன்னார். திருமணமான இரண்டு பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தாலும், தான் தனியாகவே வாழ்வதாகச் சொன்னார். மனைவி நினைவில் தாங்கள் காதலோடு சுற்றிய இடங்களை அவ்வப்போது பார்ப்பதாகச் சொன்னார். நெஞ்சைத் தொட்டது. தேவ் எனக்குப் பிடித்த ஹீரோ என்றதும் வீட்டுக்கு வரச்சொன்னார். ஒரு இரவு முழுவதும் தேவ் ஆனந்த் படங்கள் பார்த்தோம்.


2:22 வாக்கில் தேவின் கன்னத்தைக் கல்பனா வருடி வருடாமல் போகும் நளினத்தைக் கவனித்து, இருவரும் அதைப் பற்றிக் கொஞ்சம் பேசினோம். எளிமையானக் காதல் பாடல்கள் இப்போது வருகிறதா என்று கேட்டார். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தேன்.

நிறைய குடும்பக் கதைகள் சொன்னார். மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்தேன். "இறந்ததா? யார் சொன்னது?" என்றார்.

"மனைவி நினைவில்.. என்றீர்களே?". எனக்கு சங்கடமாக இருந்தது. மன்னிப்பு கேட்டேன்.

சிரித்தார். "தவறாகப் புரிஞ்சுக்கிட்டீங்க போல. ஒரு சின்ன ஊடல் கொஞ்சம் விவகாரமாயிடுச்சு. இனிமே உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன்னு அவ சொன்னப்ப, நானும் கோபமா என் மூஞ்சிலே நீ முழிச்சால் என் கண்ணு ரெண்டும் குருடாகட்டும்னு கத்திட்டேன். ஒரு கோவத்துல வெளியே போனவதான்.. திரும்ப வரவேயில்லே..." என்றார்.

திடுக்கிட்டேன். "என்ன சார்.. இப்படிச் சொல்றீங்க?"

"ஆமாம்.. முப்பது வருஷமாச்சு.. என்ன ஆனாள்னு யாருக்குமே தெரியாது.. most likely she is no more.. ஆனால் நாங்க சுத்தின இடங்களிலெல்லாம் அவ இருக்கா.. இங்க எப்பவுமே இருக்கா" என்றார், நெஞ்சை இரண்டு விரல்களால் குத்தியபடி.

எனக்கு நெஞ்சைக் கட்டிக் கண்களில் நீர் முட்டியது.

    காதலில் இது தான் பெரிய தொந்தரவு. ஒருவரையொருவர் புரிந்து கொண்டது போல் நடிப்பவர்களுக்கு காதலின் பலன் கிடைக்காமலே போகிறது. ஒருவரை நன்கு புரிந்து கொண்ட இடத்தில், காதலன் அல்லது காதலி பேச்சை விளையாட்டுக்காகவோ அல்லது இயலாமையினாலோ அல்லது எந்த காரணத்திலோ.. உதாசீனம் செய்தாலும் அந்த ஒரு கணம் அவர்களின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிவிடுகிறது.

தேவானந்த் பாடலைத் தேடியபோது சாய் பரஞ்ச்பையின் இந்தப் படக்காட்சி கிடைத்தது. நண்பர்கள் பேச்சைக் கேட்டு காதலியைத் தவறாக நினைத்துவிடுகிறான் காதலன். அவள் மனம் நோகப் பேசிவிடுகிறான். தொடரும் உருக்கமானப் பாடல் காட்சி. படம் வந்த நாளில் நிறைய ரசித்திருக்கிறேன். இப்போது மீண்டும் வாரக்கணக்கில் தொடர்ந்து பார்த்து ரசிக்கிறேன். ஜேசுதாசின் best effort பாடல்களில் ஒன்றாக இதைக் கருதுகிறேன். உடன் பாடியிருக்கும் ஹைமலதாவின் குரல் குழல்.

இன்னொரு பாடலுக்கு நேரம்/பொறுமை இருக்கிறதா? இருந்தால் இதையும் ரசியுங்களேன்?