2011/06/03
அமுதன் குறள்
சமீபத்தில் படித்துப் பிரமித்து, உடனே மறுபடியும் படித்தப் புத்தகம், 'அமுதன் குறள்'.
தமிழில் வெண்பா எழுதவேண்டும் என்று தீர்மானித்த போது, என் நண்பரும் ஆசிரியருமான அரசனிடம் பயிற்சியளிக்குமாறு முதலில் கேட்டேன். அரசனோ, அமுதனின் 'வெண்பா எழுதலாம் வாங்க' வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்து, 'அங்கே போய் படிச்சுக்கோ' என்றார். திரு. அமுதன் அவர்களை, அவருடைய வலைப்பூ வழியாகவே அறிமுகம் செய்துகொண்டேன். அவருடைய வலைப்பூவில் நான் கற்ற வெண்பா இலக்கணம் மட்டுமல்ல, நுணுக்கங்களும் எனக்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றன. அதற்காக திரு.அமுதன் அவர்களுக்கு என் ஆழ்ந்த நன்றி கலந்த வணக்கம். அவருடைய வெண்பா வலைப்பூவில் என் படைப்புக்கும் ஒரு இணைப்பை உருவாக்கியது பெரிதும் ஊக்கம் கொடுத்தது. அந்தப் பெருந்தன்மைக்கு என் பெருமதிப்பு கலந்த வணக்கம்.
'அமுதன் குறள்' புத்தகத்தில் மொத்தம் 297 குறட்பாக்கள். பதினைந்தே நாட்களில் எழுதி முடித்தாராம் அமுதன்! அந்த உழைப்புக்கும் பிடிப்புக்கும் என் அடங்காத வியப்பு கலந்த வணக்கம்.
இன்றைய இளைய தமிழ்ச் சமுதாயத்திற்காக எழுதியிருக்கிறார். பெற்றோரும் உற்றோரும் தம் பிள்ளைகளுக்கும் இளையோருக்கும் படித்துச் சொல்ல நல்ல புத்தகம்.
சமீபத்தில் சென்னை சென்றிருந்த பொழுது சில பிரதிகள் வாங்கி வந்தேன் - இங்கே என் நண்பர்களுக்கு வழங்க. சிகாகோ அருகே ஒரு பெண்மணி, இங்கு வாழ்த் தமிழ்க்குடும்பங்களின் சந்ததிகளுக்கு வார இறுதியில் தமிழ் வகுப்பு நடத்துகிறார். என்னிடமிருந்த அமுதன் குறள் புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாகக் கொடுத்தேன். போன வாரம் அவரைச் சந்தித்த போது, திருக்குறள் வகுப்பை நிறுத்தி விட்டு அமுதன் குறள் வகுப்பைத் தொடங்கியிருப்பதாகச் சொன்னார். பிள்ளைகள் விரும்பிப் படிக்கிறார்கள்; எளிமையாகத் தமிழ் கற்பதுடன் இழையூடியிருக்கும் நகைச்சுவையையும் ரசிக்கிறார்கள் என்றார். பிள்ளைகளுக்குத் திருக்குறளுக்குப் பதில் அமுதன் குறள் வாங்கியிருக்க வேண்டும் என்றார்!
அந்தப் பெண்மணி சொன்னது முற்றிலும் உண்மை. அமுதன் அவர்களின் குறட்பாக்களின் எளிமை மட்டுமல்ல, நிறைய கருத்துக்களைப் புதுமையான முறையில் எடுத்துச் சொல்லியிருக்கும் விதமும் ரசிக்க முடிகிறது.
'அமுதன் குறள்' புத்தகத்திலிருந்து சில பாக்கள்:
பாட்டி கதைகூற பாட்டனார் பண்ணிசைக்கக்
கேட்டு விழியுறக்கம் கொள்
- இந்த அனுபவம் இனி எல்லாப் பிள்ளைகளுக்கும் கிடைக்குமா? எத்தனை இழந்திருக்கிறோம்!
தட்டான் பிடித்தால் தவறாகும் உன்விரல்
பட்டால் அழுமே அது
- உயிர்த்துன்பம் தவிர் என்பதை எத்தனை எளிதாகச் சொல்கிறார்!
ஓடிவிளை யாடி உடலை உறுதிசெய்
ஆடும் அருவிபோல் ஆடு
மூச்சுப் பயிற்சியால் முன்தொப்பை சீராக்கி
யாக்கைக்கு உரமேற்று வாய்
கண்டதை உண்டால் வரும்நோய் பலவாகும்
உண்பவை ஆய்ந்துநீ உண்
கனிக்கூழ் பருகிக் களிபல் அழிக்கும்
பனிக்கூழ் மறக்கப் பழகு
- உடலைப் பேணும் வழியை இதைவிட எளிமையாகச் சொல்ல முடியுமா தெரியவில்லை. (பனிக்கூழ்: ஐஸ்க்ரீம்!)
தவற்றை மறைத்தல் சரியில்லை மாறாய்
அவற்றைப் புரியாது இரு
வஞ்சித்தல் சொல்லாடல் வன்முறை பொய்களவு
நெஞ்சினுள் சேர்க்காதே நீ
துணிவே அனைத்தின் திறவுகோல் சேயுன்
பணிவே படிப்பின் பயன்
விழுந்தால் விதையாய் விரிந்தால் சிறகாய்
எழுந்தால் மரமாய் எழு
- சிகாகோ பெண்மணி, அமுதன் குறள் வகுப்பு தொடங்க விரும்பியது இப்போது புரிந்தது.
மரமும் செடியும் வளருனக்கு நாளும்
தரமான காற்றைத் தரும்
பொசுக்கும் வெயிலின் புழுக்கத்தைப் போக்க
பசுமை உலகம் படை
- காலத்துக்கேற்ற பாடம்; எளிமையான ஆழமான கருத்து.
சின்னத் திரைத்தொடர்கள் சீரழிக்கும் உன்னறிவை
உன்னி விலகல் உயர்வு
- அட! போட வைத்தக் குறள்.
இனமும் குலமும் இழிவென்று ஒதுக்கி
மனிதம் வளர்த்து மகிழ்.
- என்னை மிகவும் கவர்ந்தது.
இன்றைய காலத்துக்கேற்ற நெறிகளை எளிமையான நடையில் அருமையான தமிழில் குறட்பாக்களாய் வடித்திருக்கும் அகரம் அமுதனுக்கு நன்றி. அவருடைய குறள் புத்தகம் பரவலாகப் படிக்கப்படும் என்று நம்புகிறேன். விரும்புகிறேன். வாழ்த்துகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)