2011/07/24

ததாஸ்துக் களிம்பு1 ◀◀ முன் கதை

    ம்பீஸ் காபி ஜகப்பிரசித்தம். அப்பசத்திக்கு அரைச்ச அரெபிகா காபிப்பொடி போட்டு, கொதிக்கக் கொதிக்க வென்னீர் ஜலத்துல இறங்கின டிகாக்ஷன்லந்து அரை டம்ளர் விட்டு, அதுல காச்சின பாலையும் சுண்டக் காச்சின பாலையும் அளவா கலந்து, ரெண்டு ஆத்து ஆத்தி, மேலாக ஒரு கரண்டிப் பால் நொரைய விட்டு, அதுக்கு மேலே வட்டமா டிகாக்ஷன் தெளிச்சுத் தருவான் பாருங்கோ... அதுன்னா காபி? மிச்சல்லாம் கோமியம்னா?
காபி சாப்டுண்டே ராமலிங்கம் நடந்ததை எல்லாம் சொன்னார்.

சதாசிவத்துக்கு ஒண்ணும் புரியலே. ரொம்ப யோசிச்சுட்டு, 'சரி, வீட்டுக்குப் போலாம் வா. இதைத் ருசுப்படுத்திக்க ஒரு வழி இருக்கு'னு ராமலிங்கத்தைக் கூட்டிண்டு போனார். தான் கொண்டு வந்த பொட்டிலேந்து ஒரு பெரிய போட்டோ ஆல்பத்தை எடுத்துக் காட்டினார். சின்ன வயசுலந்து எடுத்த போட்டோல்லாம் வரிசையா இருந்துது அதுல. புரட்டிண்டிருக்கச்சே திடீர்னு சதாசிவத்தோட கல்யாண போட்டோ வந்துது. ரெண்டு பேரும் பாத்து அசந்து போனா. சதாசிவத்துக்கு என்ன சொல்றதுன்னே புரியலை. பொண்டாட்டி நினைவே இல்லை, ஆனா போட்டோ இருக்கு! என்ன பண்றது இப்போ? பொட்டிக்கடியில தேடினா, ஒரு ப்லாஸ்டிக் பைக்குள்ளே நெறய காகிதங்கள் இருந்துது. என்னனு எடுத்துப் பாத்தா.. போலீஸ் கேஸ்ல வந்த ரிபோர்ட். எல்லாத்தையும் ரெண்டு பேரும் படிச்சா.

களிம்புல ரெண்டு பேருக்கும் நம்பிக்கை வந்துது. பயமும் வந்துது.

"டேய், இது நிஜமாவே மாயக்களிம்பு தாண்டா ராமா"

"கண்டிப்பா சதா, பெண்டாட்டி நினைவே இருக்கக் கூடாதுனு நினைச்சு நீ தடவியிருக்கணும்"

"டேய் ராமா. அப்போ நான் கொலைகாரப் பாவியாடா? ஒரு குத்தமும் பண்ணாத மாதிரி தானேடா இருக்கு?"

"அதான் சொல்றேனே, இது ததாஸ்துக் களிம்பு. உன் பாவமெல்லாம் உன் நினைப்புக்குள்ள தானேடா? பாவ நினைப்பே இல்லேன்னா நீ பாவியில்லை. ததாஸ்து"

"ராமா, இது வம்புக்களிம்பு போல இருக்கேடா? ததாஸ்துக் களிம்பு இல்லேடா, தகராறுக் களிம்பு. எங்கேயாவது காவேரிலயோ இல்லை காட்டுலயோ புதைச்சு வச்சுடு"

ராமலிங்கம் சிரிச்சார். இல்லை, மாயை சிரிச்சா. "போடா, காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்திக்கு வந்தவன் கூட்டிண்டுப் போன கதையில்ல பேசறே? நான் தெனம் கும்பிடற முருகன் எனக்கு வழி சொல்லி இருக்கான்டா. நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இந்தக் களிம்பை வச்சு நான் நாலு காசு சேக்கப்போறேன்"

"நல்லா யோசிச்சுக்கோடா ராமா"னு சொன்னாலும், சதாசிவம் மனசுலயும் சஞ்சலங்கள் சமுத்ரமா பெருகித்து.

மாயை விளையாடறப்போ, மனுஷன் யோசிக்கறதாவது?

அடுத்த நாளே பிசினஸ் ரெடி. ராமலிங்கமும், அவருக்குச் சகாயமா சதாசிவமும், அம்பீஸ் பக்கத்துல ஒரு சின்னக் கடையை வாடகைக்கு எடுத்துண்டா. வெப் சைட்டுங்கறாளே, அதையும் வச்சுண்டா. ஆரம்பத்துல ஒண்ணு ரெண்டு பேர் வந்து ததாஸ்துக் களிம்பாவது தேங்கா மூடியாவதுனு விப்ரலபமா, கேலி பண்ணிட்டுப் போனா. ஆனா நாளாந்திரத்துல பாருங்கோ, அவாளுக்கு வாடிக்கை பிச்சிண்டு போயிடுத்து. நூறு, ஆயிரம், பத்தாயிரம்னு வசூல் பண்ணிண்டே இருந்தா. போன வருஷம் பாருங்கோ.. இந்திரன் குபேரன்னு ஏதோ பாடாவதி சினிமா படுத்துரும்னு பயந்து போய், பணம் போட்ட முதலாளிகளும் சினிமாக்காராளும் களிம்பை உபயோகிச்சு அமோகமா படத்தை ஓடவச்சு நாலு சந்ததிக்குச் சம்பாதிச்சுட்டானு சொல்றா. டாடா பிர்லா மாதிரி ஆட்கள், போலீஸ், மந்திரி, சாமியார், கடத்தல்காரன், கான்டிராக்டர், நடிகைனு பெரிய பெரிய மனுஷாள்ளாம் வந்து களிம்பு வாங்கிண்டுப் போனா. தப்பு செஞ்சுட்டோம்னு நெனக்கறவா எல்லாரும் காசு கொடுத்துக் களிம்பு வாங்கிண்டு போனா. ஒரு தடவை ஒரு பெரிய குரு ஆளனுப்பி களிம்பு வாங்கிண்டு போனதுனாலதான் இப்பக் கோர்ட் கேசெல்லாம் ஜெயமாறதுனு பொதுவா ப்ரஜல்பம் பண்ணிக்கறா. ராமலிங்கம் சதாசிவம்னா, ஜெகப் பிரசித்தமாயிட்டா. லக்ஷ்மி கடாட்சம் ஆகாசத்தப் பிச்சுண்டு கொட்டித்து. இவா ரெண்டு பேருக்கும் இந்தப்பக்கம் கரூர்லந்து அந்தப் பக்கம் த்ருச்னாப்பள்ளி தாண்டி மதுரை வரைக்கும் நெலமும் வீடும் சேந்துண்டே இருந்துது.

அந்தக் குப்பில களிம்பு என்னடான்னா, அட்சயபாத்திரம் மாதிரிக் குறையவே இல்லை.

மனுஷ ஜென்மம் இருக்கு பாருங்கோ, மகா விசித்ரமானதாக்கும். நமக்குள்ளே ரெண்டு கண்ணாடிகள் உண்டு. விவேகம்னு ஒண்ணு, விகாரம்னு ஒண்ணு. ரெண்டுமே அச்சு ஒரே மாதிரி கண்ணாடிகள்னாலும், விவேகக் கண்ணாடில விகாரம் தெரியும், விகாரக் கண்ணாடில விவேகம் தெரியாது. தெனம் தூங்கி எழுந்தோடனே இந்த ரெண்டுல ஏதாவது ஒரு உள்கண்ணாடில தான் நம்மள மொதல்ல பாத்துக்கறோம். அதுல என்ன தெரியறதோ அந்தப் பிம்பம் தான் வெளிலோகத்துக்குத் தெரியறது. விகாரக் கண்ணாடில பாத்துண்டோம்னா நம்மளோட கார்யங்கள்ளே விவேகம் மறைஞ்சு போயிடும்.

வெளில மரம் செடி கொடியெல்லாம் அழிஞ்சுண்டே இருக்கு. செல்போன் டவர் கட்டி சின்னக் குருவியெல்லாம் காணாமப் போயிண்டிருக்கு. கார் மேலே கார் வாங்கி எங்கப்பாத்தாலும் புகை, கமறல். கான்க்ரீட்டுல பாளம் பாளமாக் கட்டி இப்போ காத்துக்குக் கூட வழியில்லாமப் போயிடுத்து. இன்னும் பதினஞ்சு வருஷத்துல இயற்கையான தாவரம் காய்கறி பால் எதுவுமே கிடைக்காது, சப்ஜாடா பயோடெக்குனு பயமுறுத்துறா. லட்ச லட்சமா சம்பாதிச்சாலும் ஜனங்களுக்கு நிம்மதியில்லாம போயிண்டிருக்கு. பத்துப் பதினஞ்சு மணி நேரம் வேலைப்பாக்கறா, பொண்டாட்டி கொழந்தேளோட பத்து நிமிஷம் கொண்டாட முடியலை. ஆத்துக்குள்ளே அப்பாவும் பொண்ணும் செல்போன்ல பேசிக்கறா. வெளிக்காய்ச்சல் வந்து அவஸ்தைப் பட்டுண்டிருந்தது போறாதுனு, இப்போ ஆஸ்தி பூஸ்தி தேடிண்டு உள்காய்ச்சல் வந்துத் திண்டாடிண்டிருக்கோம். அரை வயிறு பருப்புஞ்சாத்துல சந்தோஷமா இருந்தவாள்ளாம் இப்போ தொப்பையும் தொந்தியுமா தெனம் நாலு தட்டு குப்பைல கொட்டறோம். சாக்ஷாத் பரப்ரம்ஹம்னு சொல்லகூடிய குருவெல்லாம் ரூட்டு மாறிப் போயிண்டிருக்கா. கொழந்தேள்ளாம் படிப்போ படிப்புனு மாஞ்சு போறா. ஆனா ஞானம் பெருகறதோ ஆசை பெருகறதோ தெரியலை. வளந்த பெரியவாள்ளாம் வெட்கக் கேடா நடந்துண்டு கொழந்தேள் கெட்டுப் போறானு கூசாம சொல்லிண்டிருக்கோம். டிவி சீரியல்ல யாரோ துக்கப்படறானு அழறோம், தெருவோரத்துல பச்சைக்கொழந்தையோட கஷ்டப்படுற ஜீவனைக் கண்டுக்காமப் போறோம். மாயைல விழுந்துட்டோம், விழுந்தது தெரியாம அடுத்தவாளையும் இழுத்துண்டு மூழ்கிண்டே இருக்கோம். ஆனா நீஞ்சிப் போற மாதிரித் தோணறது நமக்கு.

...ரொம்ப உபதேசமா போயிண்டிருக்கேனோ? எதுக்குச் சொல்றேன்னா விகாரத்துல விழுந்துட்டோம்னா எழுந்துக்கறது கஷ்டம். ராமலிங்கம் சதாசிவம் மாதிரி. நாமெள்ளாம் ப்ரக்ருதி கைல சொப்புனு சொன்னேன். இல்லியா பின்னே? ராமலிங்கத்தைப் பாருங்கோ. ஒரு போது யோகினு இருந்தவர், சாந்தம் ஷண்முகம் நித்யம்னு இருந்தவர் பணத்துக்கும் புகழுக்கும் ஆலாய்ப் பறந்தார். இத்தனை பரோபகாரம் பண்ணினாளே ரெண்டு பேரும், அதனால லோகத்துல ஒரு சுபகார்யம் நடந்துதோ? ஒரு அன்னதானமோ, பாடசாலையோ நடத்தினாளோ? அவாள சுத்தி நடக்குற அத்தனை விகாரங்களை அவா பாத்திருக்க வேண்டாமோ? பாக்கலியே? களிம்புனால அவாளுக்கு உண்டானதைச் சேத்துண்டாளே தவிர அகிலத்துக்கு ஏதாவது பண்ணுவோம்னு தோணித்தோ? விபரீத புத்தி ஜாஸ்தியானா வினாச காலம் அடுத்த பாயின்ட் டு பாயின்ட் பஸ் பிடிச்சு டாண்ணு வந்துடும். அதான் நடந்தது.

ஆஸ்தியும் ஆகாத ஸ்னேகமும் சேரச்சேர இவாளுக்குள்ள அவிஸ்வாசம் ஆரம்பிச்சுது.

மொதல்ல ராமலிங்கம் அபகாராத்தமா சில அல்ப கார்யங்கள் பண்ண ஆரம்பிச்சார். சதாசிவம் என்னடான்னா, களிம்பை உபயோகம் பண்ணித் தன் முகத்தையே மாத்திண்டுட்டார். பாக்கறதுக்கு இப்போ பழைய சதாசிவம் மாதிரியே இல்லை, செவப்பா ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி ஆயிட்டார். புது அடையாளத்தை வச்சுண்டு சதாசிவம், சட்டவிரோதமா... இலிசிட்ம்பாளே, அவ்யவஸ்தித கார்யங்கள்... எல்லாம் பண்ணிட்டு, ததாஸ்துக் களிம்பை உபயோகம் பண்ணித் தப்பிச்சுக்க ஆரம்பிச்சார்.

ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம் பூடகமா ஆரம்பிச்சு பூதாகாரமாயிடுத்து. கலியுகத்துல கைமேல பலனில்லையோ? தெய்வ சம்பன்னமாச்சே? பிடிச்சுண்டுடுத்து.

ஒரு நாள் கார்த்தால அம்பீஸ்ல தனியா டிபன் காபி சாப்டுண்டு இருந்தார் ராமலிங்கம். இவாளுக்காகவே அம்பீஸ்ல குளுகுளுனு ஏசி ரூம் போட்டாச்சு. வெண்பொங்கலும் நீர்க்க மாங்கா இஞ்சித் தொகையலும் இலைல மணக்க மணக்க, எடுத்து ஒரு வாய் சாப்பிட்டார். பொசுக்குனு எதிரே சத்தம். யாருடானு பாத்தா, பழைய சித்தர். நடுங்கிப் போயிட்டார் ராமலிங்கம்.

"உமக்கு களிம்பு தந்தது துன்பம் தீரவா, சேரவா?"

"என்ன இப்படிக் கேக்கறேள் சித்தரே? களிம்பை வச்சு எத்தனையோ பேர் துன்பத்தைத் தீத்து வைக்கறேன்". கூசாமப் பொய் சொன்னார் ராமலிங்கம்.

"கந்தனை நிந்தனை செய்தீரே களிம்பு கொண்டு! தண்டனை காத்திருக்கிறது உமக்கு"னு சித்தர் ஆவேசமா தமிழ் பேசறார்.

"ஐயா, அப்படி எல்லாம் சொல்லாதீங்கோ. சேத்த பணத்துல பாதிய முருகனுக்கே எழுதிடறேன். தண்டனை எல்லாம் கொடுத்துடாதேள்"

"தண்டனை தருபவன் தணிகைவேலன். சிங்காரன். முருகன். என் வேலை எளிது. குப்பியைப் பெறவே நான் வந்தேன்"

"குப்பி எங்கிட்ட இல்லையே? அவசரப்பட்டு முடிவு செஞ்சுடாதேள். இன்னும் தீர்க்க வேண்டிய பிரச்னையெல்லாம் நிறைய இருக்கு. காவேரி பாருங்கோ, வத்திண்டே போறது, தண்ணி விட மாட்டேங்கறா கன்னடக்காரா. உள்ளூர்க்காரா என்னடான்னா சமச்சீர் கல்வினு கொழந்தேள் படிப்பைக் குட்டிச்சுவர் பண்ணிடுவா போலிருக்கு. எங்கப் பாத்தாலும் கடவுள் பேரைச்சொல்லி பித்தலாட்டம், கண்மூடித்தனம். நாட்டுல ஜனங்கள் மூளையில்லாம கண்ட கண்ட கட்சிக்கெல்லாம் ஓட்டு போட்டு.. ஒரு யோக்யப் பரிபாலனமும் கிடையாது.. இதையெல்லாம் களிம்பை வச்சுத்தான்.. லோகக்க்ஷேமத்துக்காக நாழியானாலும் கொஞ்சம் கொஞமா தீக்கணும்னு இருக்கேன்"

கூசாம பொய் சொன்ன ராமலிங்கத்தப் பாத்து சித்தர் சிரிச்சார்.
    'மதியால்வித் தகனாகி மனதாலுத்தமனாகிப்
    பதிவாகிச் சிவஞான பரயோகத்தருள்வாயே
    நிதியேநித் தியமேயென் நினைவேநற்பொருளாயோய்
    கதியேசொற் பரவேளே கருவூரிற்பெருமாளே'னு பாடறார்.

ராமலிங்கத்தை நேராப் பாத்து, "குப்பி தானே என்னிடம் வரும். இன்னிரண்டு வாரம், என் வசம் சேரும். அதற்குள் உம் அத்தனை தீயவை தேய ஒரு செயல் செய்யும். இல்லையேல் பெருந்தீங்கு நேரும். முருகன் ஆணை"னு சொல்லிட்டு வந்த மாதிரியே பொசுக்குனு மறைஞ்சு போயிட்டார்.

ராமலிங்கம் சுத்திப் பாத்தார். ஏதாவது பட்டுத்துணி இருக்கானு பாத்தார். அப்புறம் இலைல பாத்தா, வெண்பொங்கல்ல கரப்பான்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு ராமலிங்கத்துக்கு. மனசுல சஞ்சலம். களிம்பை வச்சு வியாபாரம் பண்ணதுலேந்து முருகன் கோயிலுக்கே போகலைனு ஞாபகம் வந்துது அவருக்கு.

என்னவோ தீர்மானம் பண்ணிண்டு கடைக்கு போனார். அங்கே சதாசிவம் உக்காந்துண்டு இருந்தார். சதாசிவம் இப்பல்லாம் அம்பீஸ் பக்கம் வரதில்லே. அவர் சுலைமான் கடைலேந்து மாம்சமும், டீத்தண்ணியும், சீமைத்தண்ணியும் கொண்டு வரச்சொல்லி சாப்டுண்டு இருந்தார். ராமலிங்கம் உள்ளே வந்து, "சதா, உன்னண்ட ஒரு விஷயம் சொல்லணும்"னு ஆரம்பிச்சு, நடந்ததையெல்லாம் சொன்னார். "குப்பி ரெண்டு வாரத்துல போயிடும். அதுக்குள்ளே ஒரு நல்ல காரியம் செய்யலேன்னா பெரிய தண்டனை கிடைக்கப் போறது. சேத்த பணத்துல முருகனுக்கு பாதிய குடுத்துட்டு, நீயும் நானும் பழையபடி சினேகிதமா இருக்கலாம்டா"னார்.

அதுவரைக்கும் மறைச்சு வச்சிருந்த சந்தேகம் பொறாமை த்வேஷம் எல்லாம் ரெண்டு பக்கமும் விஸ்வரூபம் எடுத்துது.

அபசாரம். ஊருக்கு உபதேசம் பண்ணிண்டு அசுவத்தாமனே இப்படிப் பேசறேன் பாருங்கோ. விஸ்வரூபம் புண்யக்ருதம். நல்லது விஸ்வரூபம் எடுக்கும். பகவான் விஸ்வரூபம் எடுப்பார். த்வேஷமும் சந்தேகமும் மகாபாவம்னா? பாவம் பெரிசாச்சுன்னா பூதாகாரம்னு இல்லையா சொல்லணும்? பூதாகாரமாச்சுனு மாத்திப் படிங்கோ.

சதாசிவம் சிரிக்க ஆரம்பிச்சார். "என்ன ராமா, என் காதுல பூ சுத்தறியாடா? சித்தர் ஏண்டா உங்கிட்ட மட்டும் வந்தார்? இனிமே வந்தா எங்கிட்ட இருக்கு குப்பினு சொல்லு, எப்படி எடுத்துண்டு போறார்னு பாக்கறேன். நீ பொய் சொல்றே. எங்கிட்டயிருந்து குப்பியை வாங்கிட்டு, எங்கியாவது ஓடிப் போயிடலாம்னு திட்டம் போட்டிருக்கே. நீ ஏதாவது திப்பிசம் பண்ணினா தெரியும் சேதி"

"இல்லைடா, சதா. ஒரு திப்பிசமும் இல்லை. எனக்கு என்னமோ திடீர்னு மனசு மாறிடுத்து. நாம பண்றது பித்தலாட்டம்னு தோண்றது. ஜனங்களுக்கு நல்லது பண்றதுக்கு பதிலா கண்மூடித்தனத்தைனா வளக்கறோம்? அதுவும் காசு வாங்கிண்டு? இது பாவம்னு இப்பத் தோண்றதுடா"

"என்னடா இது? பாவ நெனைப்பே இல்லேன்னா பாவம் கிடையாதுனு சொன்னவனே நீதானே? இப்ப என்னமோ பாவம் லொட்டு லொசுக்குனு சொல்லிண்டிருக்கே?"

"தெரியலடா. சித்தர் வந்துட்டுப் போனதுலந்து இப்படித் தான் தோண்றது. நாம பண்ணியிருக்கறது எதுவும் சரியில்லடா. நமக்கு ரெண்டு வாரம் டயம் இருக்குடா. அதுக்குள்ள நம்ம வழியை மாத்திக்கணும்னு சூட்சுமமா சொல்லிட்டுப் போனதா நெனக்கறேன். இல்லேன்னா என்ன கஷ்டம் வரப்போறதோ? மாறிடுவோம்டா"

ராமலிங்கத்தோட விகாரக் கண்ணாடியை சித்தர் க்ஷணம் மழுங்கப் பண்ணிட்டுப் போனது அவருக்கு எப்படித் தெரியும்?

"ராமா, உன்னை நம்பமுடியலியேடா. ஒண்ணு செய்... நீ குப்பிய வச்சுக்கோ, திருப்பிக் குடுத்துரு, என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா இது வரைக்கும் சம்பாதிச்சதையெல்லாம் என் பேர்ல எழுதிக் கொடுத்துடு, சரியா?"னார் சதாசிவம்.

"சதா, அதெல்லாம் எப்படி முடியும்? நீ தானேடா என்னைவிட அதிகமா சம்பாதிச்சிருக்கே? நான் சம்பாதிச்சதுல பாதி முருகனுக்குத்தான் கொடுக்கறதா இருக்கேன்"

"ராமா, இந்தச் சிவன்கிட்டே குடுத்தா என்ன, அந்த முருகன் கிட்டே குடுத்தா என்னடா? சரி, சரி. என்னப் பத்தி உனக்கு நல்லா தெரியும். கொலை செஞ்சிருக்கேன்னு நீயே சொல்லியிருக்கே. நீ சொத்தையெல்லாம் எங்கிட்ட தரலைனா உன்னை.. உன் குழந்தைகளைக் கூட.. உயிரோட விடமாட்டேன். அமெரிக்கால இருந்தாலும் சரி, அதல பாதாளத்துல இருந்தாலும் சரி"னு மகா அல்பமா சொன்னான்.

"சதா, இதுக்கு மேலே இன்னும் பணம் சேர்த்து என்னடா பண்ணப் போறே? அந்தக் குப்பி எங்கிட்ட வந்ததே, நான் ஏதாவது நல்லது செய்வேன்னு ஒரு நம்பிக்கைலதான். என்னோட தலையெழுத்து, தறிகெட்டு அலஞ்சேன். களிம்பை வச்சு மொதல்ல உன் பாவத்தைக் கழுவினதாலயோ என்னமோ, ஒரு நல்ல காரியம் கூட பண்ணத் தோணலியேடா? இப்ப நம்ம ரெண்டு பேரையும் பாரு, சினேகிதமும் போய் கொலை மிரட்டல்னா பண்ணிண்டு நிக்கறோம்?"னு கொஞ்சம் சமாதானமாப் பேசினார் ராமலிங்கம்.

"ராமா, போறுண்டா உன்னோட உபதேசம். பரோபகார வேஷமா போடறே? பொழைக்கணும்னா நான் சொல்றபடி நடந்துக்கோ. இல்லைன்னா என்னைப் பொல்லாதவனா மாத்தின பாவமும் நோக்குத்தான். நாலு நாள் மெட்ராஸ் போறேன், திரும்பி வந்தோடனே பேசிக்கலாம். அதுவரைக்கும் களிம்பு என்னோடயே இருக்கட்டும்"னு சொல்லிட்டு, எச்சக்கையாலயே சட்னு ராமலிங்கத்துட்டந்து களிம்பைப் பிடுங்கிப் பையில போட்டுண்டார். "என்னை ஏமாத்தினா, களிம்பை உனக்கெதிரா உபயோகிச்சுப் பாக்கவும் தயாரா இருக்கேன்"னு சொல்லி, சாபிட்டத் தட்லயே கையலம்பிட்டு எழுந்து போயிட்டார் சதாசிவம்.

வக்ரதுண்டரைப் பிடிக்கப் போய் இப்படி வானரமா வந்து சேந்துடுத்தேனு வருத்தப்பட்டார் ராமலிங்கம்.

நேரம் ஆயிடுத்தே. மிச்சக் கதைய நாளைக்குச் சொல்றேனே? ►►

28 கருத்துகள்:

 1. தப்பு செஞ்சிட்டோம்னு மனசுல நெனப்பு இருக்கறவரைதான் மனுஷன் மேல மேல பாவம் பண்ணாதிருப்பான் போல...லோகத்துல முதல் பாவம் ஆஸ்தி சேர்க்கறது...அடுத்த வேளைக்குக் கூட எதுவும் இல்லன்னுட்டு உஞ்சவிருத்தி பண்ணிண்டு இருந்தால்தான் நல்லது...யார் பண்றா...கலிகாலம்தான். (கலிகாலம்னு டைப் பண்ணினா கூகிள் சித்தர் களிகாலம்னு அடிக்கறார்என்ன ஒரு ஞானம்...!)

  பதிலளிநீக்கு
 2. //விவேகம் ன்னு ஒண்ணு...விகாரம்னு ஒண்ணு// நசிகேதத்தின் நற்தாக்கம்..

  களிம்பு நினைச்சு. அப்டேட்டா யோசிச்சா சிரிப்பு முட்டிட்டு வருது...

  ஸ்ரீ....களி காலம் சூப்பர் ( சரவணபவன் ப்ராஞ்சு ஒப்பன் பண்ணிட்டதா கேள்வி )

  பதிலளிநீக்கு
 3. அப்பாதுரை அவர்களே! இதில் கதை இருக்கிறதா? இல்லை! அப்படியானால் இது கதை இல்லையா? கதைதான். கதையில்லாதகதை வகைப்பட்டது.---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 4. இரண்டு பதிவுகளையும் சேர்த்து இன்றுதான் படித்தேன்
  சித்தர் களிம்பை எல்லா விஷயங்களோடும்
  ஒப்பிட்டுப் பார்த்தேன் சரியாகத்தான் இருக்கிறது
  ( 2 ஜி உட்பட ) பாவம் சதாசிவம் என்னபாடு படப்போகிறாரோ
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

  பதிலளிநீக்கு
 5. கதா காலட்சேபம் ரொம்ப நன்னா இருக்கு,அம்பீஸ் காஃபி போல.அடுத்த டோஸுக்குக் காத்திண்டிருக்கேன்!
  இன்னோரு விஷ்யம்.உங்கள் ஆணையை நிறைவேற்றி விட்டேன்.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா! அம்பீஸ் காபி வாசம் பிடிச்சிண்டு முதல் வரியிலயே நின்னுட்டேன். அங்கயே இருந்திருக்கலாம். இறங்கி வந்தேனே..

  பணம் படுத்துற பாட்டப்பார்த்தேளா? முருகா! சித்தருக்கே சி.டி. கொடுக்கப் பாக்கறாளே?

  ஸ்வாமி! இவா ரெண்டு பேரையும் ரொம்ப கெட்டவா ஆக்கி சுவாமிக்கு வேலை வச்சுடாதேள்.. ஏதோ கனாவுலதான் வந்தது இதுல்லாம்னு மங்களம் பாடிடுங்கோ. குழந்தைகள்ளாம் இதைப் படிச்சிண்டிருக்கா. களிம்பு கிடைச்சா தேவலாம்னு தோனிடப்போறது.

  எல்லாம் ரூம்போட்டு யோசிப்பா. நீங்க ஏதோ கோவில் கோபுரத்துமேல ஏறிண்டு யோசிச்சேளோ? எப்படின்னா அந்த நாலு வரி ஹரோகரான்னு நடுவுல வந்து விழுந்தது? தீர்க்காயுசா இருங்கோ.. (நண்டு வேணாம்னா..)

  பதிலளிநீக்கு
 7. விதம் விதமா எப்பிடித்தான் கற்பனை பண்ணுவீங்களோ அப்பாஜி.இனி எதுக்கும் களிம்பு பூசினா உங்க ஞாபகம் வரும்போல இருக்கு !

  பதிலளிநீக்கு
 8. களிம்பு அது வேலைய காட்ட start பண்ணிடுத்து! அந்த "விவேகம்"/"விகாரம்" கண்ணாடி- ரொம்ப நன்னா இருந்துது- படிக்க...
  அம்பீஸ் coffee -- நீங்க எழுதியிருக்கறதே நல்ல flavour ... இப்போலாம் ஸ்ரீரங்கம் கோவில் பக்கத்ல "முரளி coffee"... நல்ல business அங்க... but இருந்தாலும் அம்பீஸ் அளவுக்கு இருக்காது- தான் போலருக்கு... அப்பா உபரி தகவல்-- லால்குடி லேர்ந்து season ticket வாங்கிண்டு வருவாளாமே அம்பீஸ் coffee சாப்ட!! Time Machine reality யா இருந்தா நன்னா இருக்கும்! இப்போலாம் அம்பீஸ் coffee இல்லையாமே! நடுப்ற சமச்சீர் கல்வி வேற வந்துருக்கு பாவம்... Felt anachronistic... :) No offense meant ...

  ஒரு hard lesson இந்த கத... Something very much needed these days...

  பதிலளிநீக்கு
 9. விவேகம் , விகாரம் கண்ணாடிகள் - நசிகேதன் டச்

  பதிலளிநீக்கு
 10. நான்கூட களிம்புன்னதும் ஏதோ வெவகாரமா எழுதப் போறீங்கன்னு நெனைச்சேன். நல்லாத் தான் போகுது கதை.

  பதிலளிநீக்கு
 11. அம்பீஸ் காபியையே ரொம்ப ரசிச்சு ரசிச்சு குடிச்சுண்டு இருந்ததால, மன்னிக்கணும் படிச்சுண்டு இருந்ததால கதையை படிக்க சித்த நாழி ஆயிடுத்து. :)

  கதை ரொம்ப நல்லா இருக்கு அப்பாதுரை! படிக்க ஆரம்பிச்சப்போ சின்ன வயசுல அம்மா அப்பாவோட ஆத்து மணல்ல உக்காந்து கதா காட்சேபம் கேட்ட நாட்கள் எல்லாம் ஞாபகம் வந்ததால, இந்த கதையையும் ஆத்து மணல்ல உக்காந்து படிக்கறா மாதிரியே ஒரு உணர்வு. :)

  விதவிதமான கற்பனைல, விதவிதமான நடைல, உங்க ஸ்டைல் கலந்து நீங்க எழுதறது எல்லாமே ரொம்ப அழகு, அருமை. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. அன்டையீர்!
  வணக்கம்!
  வலைகண்டு வந்து வாழ்த்திய
  தங்களின் அன்பு நிலைகண்டு
  மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்
  நுனிப் புல் மேயும் பதிவல்ல
  தங்களின் அருமையான பதிவு
  அமைதியாகப் படித்து
  அறிந்தன எழுதுகிறேன்
  நன்றி
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 13. துரை, ததாஸ்து களிம்பு கதை தமிழ் சினிமா மாதிரி இலக்கில்லாமல் (அபத்த?) திருப்பங்களோடு போறது. உன்னோட ஒரு கதையை கோலிவுட்டில் ஒரு வழி பண்ணினாங்க என்று சொன்னாயே, அதோட விளைவா இது?

  தயவு செய்து தாதாஸ்து களிம்பைப் பூசிக்கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 14. ஸார்! களிம்பு தீந்து போறதுக்குள்ளே எனக்கு கொஞ்சம் குடுக்கச் சொல்றேளா? அம்பீஸ் காபி... பெயர் ரொம்ப நன்னா இருக்கு..
  ஜகப்பிரசித்தம். த்ருச்னாப்பள்ளி பாஷை ப்ரவாகமா புகுந்து வெளையாடுது...

  ஆஸ்தியும் ஆகாத ஸ்னேகமும் அவிஸ்வாசம்... தல.. நீங்க க்ரேட்...

  வெண்பொங்கலும், நீர்க்க மாங்கா இஞ்சித் தொகயல்.... நாக்ல ஜலம் ஊறரது..

  லாஸ்ட்டா.. வக்ரதுண்டரைப் பிடிக்கப் போய் வானரமா... ரகளை....

  :-)

  பதிலளிநீக்கு
 15. எப்படிக் கற்பளை போகிறது. நன்றாக இருக்கிறது. தொடருங்கள். முத்தான முடிச்சு தொடர் பதிவுக்கு உங்களை அழைத்திருக்கின்றேன். தொடர அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 16. வருக ஸ்ரீராம், பத்மநாபன், kashyapan, Ramani, சென்னை பித்தன், மோகன்ஜி, ஹேமா, Matangi Mawley, சிவகுமாரன், meenakshi, புலவர் சா இராமாநுசம், geetha santhanam, RVS, சந்திரகௌரி, ...

  Matangi.. 'அம்பீஸ்' காபி காலப் பரிமாணத்துக்கு அப்பாற்பட்டது - ஆன்மா மாதிரி. மத்தபடி சமகாலத்தைச் சேர்த்துச் சொல்வது காலட்சேப styleனு நெனச்சு எழுதினேன்.. anachronism point taken.

  meenakshi.. ரொம்ப நன்றி. அம்பீஸ் காபிய விடுங்க. அது அசுவத்தாமன் சொன்னத அப்படியே எழுதினது. எனக்கு தெருவோர ஸ்டால் காபியும் பிடிக்கும் (அடுத்த முறை சந்திச்சா காபி சாப்பிடச் சொல்வீங்களோ மாட்டீங்களோ..)

  பதிலளிநீக்கு
 17. வளமான கற்பனை. மறுபடி வரேன்.

  பதிலளிநீக்கு
 18. கதையை முழுவதுமாகப் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. வக்ரதுண்டரைப்பிடிக்க வானரமாய் ததாஸ்து களிம்பு கலிகாலத்தில் கிலி கொள்ள வைத்தது.

  பதிலளிநீக்கு
 20. http://atheetham.com/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9

  OUR MAIL ID CHANGED artcilesatheetham@gmail.com

  பதிலளிநீக்கு
 21. ஆர்வத்தை தூண்டி பாதியில் விட்டு சென்றாள் எப்படி !?

  பதிலளிநீக்கு
 22. பெயரில்லாஆகஸ்ட் 01, 2011

  அதீதம்ல தொடர்ந்து எழுதுறீங்களா என்ன? ஜூலையை விட ஆகஸ்டு கதை ஜூபர். அங்கே கமென்ட முடியலியே, ஏன்?

  பதிலளிநீக்கு
 23. பெயரில்லாஆகஸ்ட் 01, 2011

  நல்ல பதிவு...

  பதிலளிநீக்கு
 24. நாளை இன்னும் வரலியா? சித்தர் மறந்துட்டரா ?

  பதிலளிநீக்கு
 25. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி geethasmbsvm6, ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, DrPKandaswamyPhD, இராஜராஜேஸ்வரி, ! ❤ பனித்துளி சங்கர் ❤ !, Reverie, பொன்ஸ்~~Poorna,...

  பதிலளிநீக்கு
 26. எதிர்பாராத அவசரப் பயணம்/வேலையில் பத்து நாள் ஓடிவிட்டது. 'நாளைக்கு' இன்றைக்குத் தான் வந்தது :)

  பதிலளிநீக்கு