2015/06/13

ஜீன்ஸி ராணி



    டையாரிலிருந்து பதினைந்து நிமிடங்களில் சென்ட்ரல் ரயில் நிலையம் அசராமல் கொண்டு விட்ட டிரைவருக்கு நன்றி சொன்னான் ரகு. சதாப்தி ரயில் நின்ற இரண்டாவது பிளாட்பாரத்துக்கு நடந்தான்.

பெட்டியில் உட்கார வந்தால்... தன் இருக்கையில் ஏழெட்டு வயது போல் தெரிந்த அழகான உடையணிந்த ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தாள். அடுத்த இருக்கையில் கண்ணாடியணிந்த தொப்பைக்காரர் ஒருவர்.

ரகு சிறுமியைப் பார்த்து, "பாப்பா.. என் சீட்ல உக்காந்திருக்கம்மா" என்றான்.

பாப்பா உர்ரென்று பக்கத்து சீட் கண்ணாடிக்காரரைப் பார்த்தாள். "ஆமா சார். இது ஜன்னல் சீட்டு. என் பெண்ணுக்குப் பிடிக்கும். அதான். நீங்க இந்த அயில் சீட்டுல உக்காருங்க. சரியா?" என்றார் கண்ணாடிக்காரர்.

ரகு மெதுவாக, "முடியாதுங்க. தயவுசெய்து என் சீட்ல என்னை உக்கார விடுங்க" என்றான். கைப்பையை எடுத்துக்கொண்டு அவர்கள் விலகத் தயாராக நின்றான்.

சிறுமி இருவரையும் பார்த்து "நோ!" என்றாள். அதிகம் பேசிவிட்டது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கைகளை இறுக்கிக் கொண்டு நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

வேறு வழியில்லாமல் ஏதோ முணுத்தபடி முனை சீட்டில் உட்கார்ந்தான் ரகு. ஹ்ம்.. அசந்தா இப்படி ஏமாத்துறாளே இந்தப் பொண்ணு? வளந்த பிறகு யாரை எப்படி ஏமாத்தி என்ன அராஜகம் பண்ணப் போகுதோ இந்த அம்மா?

மெள்ள கூட்டம் சேரத் தொடங்கியது. ரகுவின் எதிரே மூன்று பேர் வந்தமர்ந்தார்கள். அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, ஜீன்ஸ் கமீஸ் அணிந்த முப்பது வயதின் அண்மையில் ஒரு பெண், ஐந்தாறு வயதுக்குட்பட்ட சிறுவன். சிறுவன் ஒரே பாய்ச்சலில் "அம்மா எனக்கு ஜன்னல் சீட்டு" என்று தாவ, ஜீன்ஸ்-கமீஸ் அவனை "நோ, யூ ஸிட் ஹியர்" என்று ஆங்கிலத்தில் அடக்கி நடு சீட்டில் உட்கார வைத்தார். தான் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்.

ரகு பிரமித்தான். அட, குழந்தையை அடக்கும் தாய்!

    குழந்தைகள் என்றால் ரகுவுக்கு மிகவும் பிடிக்கும். தான் ஒரு ஊரிலும், அவர்கள் நாலைந்து ஊர்கள் தள்ளியும் இருந்தால். அவர்களின் அழுகையும், நச்சரவும், காரணமில்லாத கெக்கலிப்பும், சிரிப்பும், கூச்சலும், கத்தலும் திடீரென்ற விம்மலும் வீறலும் பிடிவாதமும் மூர்க்கமும்... திடமான மனிதர்களையே சற்று உலுக்கிவிடும். அரசியல், பொருளாதார மற்றும் கோர்பரெட் அழுத்தங்களின் கலவையில் மூழ்கிக் காசுக்கும் கடனுக்கும் அடிமையாகி 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?' என்று தினம் புலம்பியபடி வாழும் அதிட மாந்தர்களில் ஒருவனான ரகுவைக் குழந்தைகளின் ரசிகன் என்று சொல்ல முடியாது.

தன் வரிசையில் குட்டிப் பெண். எதிரே குட்டிப் பையன். 'இன்றைக்கு இரண்டு வில்லர்களுடன் ஆறு மணி நேரம் பயணம் செய்ய வேண்டுமே!' என்று உள்ளுக்குள் கலங்கியவனைப் பார்த்து எதிர்வரிசைச் சிறுவன் இலேசாகச் சிரித்தான். நடுங்கியபடி சுற்றுமுற்றும் பார்த்தான். சிறுவன் சிரிப்பின் வில்லத்தனம் புரிந்தது. இந்தியாவில் இன்று குழந்தைகள் பயண தினம் என்று ஏதாவது கொண்டாடுகிறார்களா தெரியவில்லையே? பெட்டியில் வரிசைக்கு ஒரு குழந்தை என்ற கணக்கில் வந்திருந்தாற்போல் பட்டது. பிறந்த குழந்தை, கைக்குழந்தை, மழலை, பிள்ளை, சிறுவர் என்று வகைக்கு அரை டசனாகப் பெட்டியை அடைத்துக் கொண்டிருந்தது குழவிப் பட்டாளம். 'இன்றைக்குப் பெங்களூர் போய்ச் சேர்ந்த மாதிரிதான்!' என்றெண்ணி... அஞ்சி நடுங்கி... மூலை சீட்டுக்குள் ஒடுங்கினான்.

வண்டி நகரத் தொடங்கியது. ம், "அம்மா எனக்கு சிப்ஸ் வேணும்" என்றான் சிறுவன்.

"ஆஸ்க் க்ரேன்மா" என்று பதில் சொல்லிவிட்டு ஐபேடுக்குத் திரும்பினார் ஜீன்ஸ். இதைக் கேட்ட அறுபது வயது பெண்மணி சிரத்தையுடன் கீழே இருந்த பையிலிருந்து ஒரு சிப்ஸ் பேகெட்டை எடுத்து அவனிடம் கொடுத்தார். "பிரிச்சுத் தரட்டுமாடா கண்ணா?"

"வேணாம் பாட்டி.." என்று சட்டென்று சிப்ஸ் பேகெட்டைப் பிடுங்கிக்கொண்டான் சிறுவன். சிப்ஸ் பேகெட்டை அப்படி இப்படிப் புரட்டிவிட்டு உயரத் தூக்கியெறிந்து கேச் பிடிக்கத் தொடங்கினான்.

பேஸின்ப்ரிட்ஜ் தாண்டியதும் கேடரிங்க சிப்பந்திகள் ஒரு தட்டில் ஒரு பாதுஷா, சமோசா, கெச்சப் என்று கொண்டு தந்தார்கள். சிறுவன் இன்னும் கேச் பிடித்துக் கொண்டிருந்தான். சாப்பிடலாம் என்று இனிப்பை எடுத்தான் ரகு. சிறுவன் எறிந்த சிப்ஸ் பேகெட் ரகு இனிப்புப் பொட்டலம் பிரிக்கும் நேரத்தில் அதன் மேல் விழ, இனிப்போடு பொட்டலத்தைக் கீழே தவற விட்டான். சிப்ஸ் பேகெட் அவன் தட்டில் விழ, சிறுவன் சடாரென்று பாய்ந்து சிப்ஸ் பாகெட்டை எடுக்க, சமோசா பொட்டலம் தவறி உருண்டு தரையில் விழுந்தது.

இப்போது ரகுவின் தட்டில் கெச்சப் பாகெட்டும் பேப்பர் துண்டும் மட்டுமே அசையாமல் இருந்தன. பையன் இன்னும் கேச் பிடித்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்களில் சிப்பந்திகள் தட்டுக்களை திருப்பி எடுத்துக் கொண்டு போனார்கள். சுத்தம் செய்ய வந்த சிப்பந்தி ரகுவின் காலடியில் கிடந்த பாதுஷாவை அப்புறப்படுத்துகையில், "பாத்து சாப்பிடக் கூடாதா சார்? இப்படி அசுத்தம் பண்றீங்களே?" என்றார்.

நொந்து போன ரகு, கண்களை மூடிச் சாய்ந்து உட்கார்ந்தான். தலையில் ஏதோ மடமடவென்று தாளமிட்டு நெருட, கைகளால் தடவிப் பார்த்தான். செருப்பு போல் பட்டது.

திரும்பிப் பார்த்தான். பின்னிருக்கையில் ஒரு ஐந்து வயதுச் சிறுவன் தலைகீழாக ட போல் உட்கார்ந்திருந்தான். அவனருகே இன்னொரு சிறுவன் இன்னொரு ட. இருவரும் பாகெட் நின்டென்டோ விளையாடிக் கொண்டிருந்தார்கள். நாலைந்து முறை கேட்டும் பயனிலாது போக, சிறுவனின் கால்களை நகர்த்தினான் ரகு.

அந்த நேரத்தில் கையில் ஏதோ பொட்டலத்துடன் அந்தப் பக்கம் நடந்த இன்னொரு சீட்காரர் விதி போல் விளையாடினார். ரகு நகர்த்திய சிறுவனின் கால்கள் அவரை இடறிவிட, தடுமாறி பொட்டலத்துடன் விழுந்தார். சிதறி விழுந்த மிளகாய்ப்பொடி இட்லிகளை விடச் சிவந்திருந்தது விழுந்தவரின் முகம். "ஏன்யா யோவ்? அறிவில்லே?" என்று அமைதியாக ரகுவை அழைத்தார்.

இதற்குள் செய்தியறிந்த பெட்டியின் குழவிப் பட்டாளம் ஆளாளுக்குக் கொக்குத்தலை நீட்டிப் பார்த்துச் சிரித்தன. பலத்த சிரிப்பு.

விழுந்தவர் அவமானம் தாங்காமல் கொதித்தார். அன்புடன் ரகுவைப் பார்த்து, "பன்னாடை! சின்ன பசங்க காலைத் தட்டி விட்டு போற வரவங்களை இப்படித்தான் இடறி விடுறதா? மனுசனாய்யா நீ? இதப் பாரு.. தட்டி விட்டது நீ. சுத்தம் செய்யுறதும் நீ தான்" என்று ரகுவின் கைகளில் பொட்டலத்தைத் திணித்தார். திணித்த வேகத்தில் அதில் கைவிட்டு இருந்த ஒரு இட்லியை எடுத்து வாயில் அடைத்துக் கொண்டார். "இதையாவது விட்டு வச்சியே" என்றபடி நகர்ந்தார். கண்ணில் தென்பட்ட இட்லிகளைப் பொறுக்கி எடுத்துப் பொட்டலமிட்டு பாத்ரூம் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு வந்தான் ரகு.

    சில நிமிடங்களுக்குப் பிறகு சிறுவனும் சிறுமியும் பழையபடி கேச் பிடிக்கத் தொடங்கினர். மெள்ள பெட்டியின் பிற ராட்சசர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர். "அம்மா!" என்று அலறியது ஒரு குரல். இன்னொன்று பேயறைந்தாற் போல் வீறிட்டலறியது. பின்னிருக்கைச் சிறுவர்கள் சண்டை போடத் தொடங்கினர். கதவோரம் இருந்த பிள்ளைகள் இருக்கைகளின் இடைப்பாதையில் ரன்னிங் ரேஸ் ஓடத்தொடங்கினர். எதிர் வரிசை இருக்கைகள் ஒன்றில் ஒரு பிள்ளை சீட்டில் உட்காராமல் குரங்கு போல் சீட்டின் மேல் ஏற முயற்சித்துக் கொண்டிருந்தான். இன்னொரு இருக்கை வரிசையில் இரண்டு மூன்று சிறுமிகள் பாடத்தொடங்கினர். ஒரு கைக்குழந்தை அழுதது. ரன்னிங் ரேஸ் குழந்தைகளை சமாளித்தபடி ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு பாத்ரூம் பக்கம் அவசரமாக விரைந்தார் ஒரு தந்தை. தன் இருக்கையில் அமர்ந்து மனதுள் கந்த சஷ்டிக் கவசம் சொல்லத் தொடங்கினான் ரகு.

கேச் விளையாட்டை நிறுத்திய சிறுவன் பாகெட்டைப் பிரிக்க முற்பட்டான். "நான் பிரிச்சுத் தரேண்டா ராஜா" என்ற பாட்டியை ஒதுக்கி பாகெட்டை இரண்டாகக் கிழிக்க முற்பட்டான். கன்னாபின்னாவென்று கிழிந்த பாகெட்டிலிருந்து சிதறி விழுந்தன உருளை வறுவல்கள். "ஹஹா!" என்று சிரித்தாள் சிறுமி. மேசையில் கிடந்த ஒரு பிஸ்கெட் பாகெட்டை எடுத்துப் பிரித்துப் போட்டான் சிறுவன். "ஹஹா!" என்றான். சிறுமி உடனே ஒரு பிஸ்கெட்டை எடுத்து சிறுவனைப் பார்த்து எறிந்தாள். சிறுவன் நகர அது பாட்டியின் தோளில் பட்டுத் தெறித்தது. சிறுவன் உடனே ஒரு பிஸ்கெட்டை எடுத்து சிறுமியைக் குறிவைத்து எறிந்தான். அது ஜன்னலில் பட்டுத் தெறித்தது.

சிறுவனுக்கு என்ன தோன்றியதோ அடுத்த பிஸ்கெட்டைச் சிறுமியைப் பார்த்து எறியாமல் தோராயமாக பெட்டியின் வாயிலை நோக்கி எறிந்தான். "ஹேய்!" என்று பின்பக்கத்திலிருந்து குரல் கேட்க, சிரித்தான். சிறுமி சும்மா விடுவாளா? இன்னொரு பிஸ்கெட்டை எடுத்து எதிர்புறம் எறிந்தாள். "யார்ராது?" என்ற குரல் கேட்டு "கிகிகி" என்று மென்மையாகச் சிரித்தாள் வில்லி. இருவருக்கும் இது பிடித்துவிட்டது. சதிகாரக் கூட்டம்!

பெட்டி திடீரென்று அமைதியானது. கேடரிங் சிப்பந்திகள் மறுபடி அடுக்குகளுடன் உள்ளே வந்தார்கள்.

வரிசையாக மறுபடி ஆளுக்கொரு தட்டில் சில பொட்டலங்களைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். முன் அனுபவம் எச்சரிக்க, ரகு அவசரமாகத் தட்டில் பாய்ந்தான். காய்ந்து போன வரட்டித் துண்டு போல் நான்காக வெட்டப்பட்ட பராத்தா ரொட்டி. குமட்ட வைக்கும் கரம் மசாலா போட்ட சென்னா கூட்டு. ஒரு பொட்டலத்தில் கீரைச்சாதம். ஒரு சிறு பேகெட் சிப்ஸ். கொடகொடவென்று ஒரு கப் தயிர். ஒரு ஊறுகாய்ப் பொட்டலம். ஒரு தண்ணீர் பாட்டில், ஸ்பூன், பேப்பர் துண்டு. கீரைச்சாதத்தையும் மோரையும் விழுங்கிவிட்டு தட்டை அப்படியே வைத்தான். தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்துக் கொண்டான்.

தட்டைத் தொடாத ஜீன்ஸ்-கமீஸ் ஐபேடிலிருந்து விலகி, "ஆர் யூ எஞ்சாயிங்?" என்றார் மகனிடம். "ஓ ப்லீஸ் டோன்ட் ஈட் திஸ் ரப்பிஷ்!" என்றார். பிறகு பையிலிருந்த டப்பர்வேர் டப்பாவைத் திறந்து அவனுக்கான உணவை எடுத்து, "அம்மா.. கேன் யூ கிவ் ஹிம்?" என்று அம்மாவிடம் கொடுத்தார். இவருக்கு அம்மா என்பதைத் தவிர வேறு ஏதாவது தமிழ்ச் சொல் தெரியுமா என்று திகைத்தான் ரகு.

    ஜோலார்பேட்டை தாண்டி அரை மணி இருக்கும். பெட்டியில் எல்லோரும் வரிசையாக பாத்ரூம் போகத் தொடங்கினார்கள்.

ரகுவுக்கு தலை வலிக்கத் தொடங்கியது. கண்ணாடிக்காரர் ஏறக்குறைய அவன் மடியிலேயே படுத்துக் கொண்டுவிட்டார். அவ்வப்போது எழுப்பி தோளுக்கு உயர்த்திக் கொண்டிருந்தான். சிறுமி இப்போது கலர் பென்சிலால் மேசை மேல் வரைந்து கொண்டிருந்தாள். சிறுவன் தண்ணீர் பாட்டிலை உருட்டிக் கொண்டிருந்தான். இரண்டரை மணி நேரத்தில் பெங்களூர் அடைந்துவிடும் என்று யாரோ சொல்வது காதில் விழுந்தது. பெங்களூர் வருவதற்குள் ஒரு மணி நேரமாவது தூங்கினால் நன்றாக இருக்குமென்று நினைத்தான் ரகு. முடியாமல் தவித்தான்.

ஜீன்ஸ்-கமீஸ் ஐபேடை உள்ளே வைத்தார். "அம்மா.. ஐ நீட் டு ஸ்லீப். கேன் யு டே கேர் ஆப் ஹிம்?" என்றார். பெட்டியின் இரைச்சலைப் பொருட்படுத்தாமல் ஜீன்ஸ் ராணி கண் மூடியது ரகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னிருக்கைச் சிறுவர்கள் இப்போது வேகமாக காலால் உதைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

எதிர்வரிசைச் சிறுவன் உருட்டிக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலின் மூடி அவனது பிடியிலோ உருண்டதிலோ விலகியிருக்க வேண்டும்.. மூடி விலகி மேசையெங்கும் தண்ணீர். கிடுகிடுவென ஓடி ஜீன்ஸ் ராணியின் உடையில் அருவி போல் சரிந்தது. பாட்டி அவசரமாக பாட்டிலை எடுத்து நிறுத்தினாலும் ஜீன்ஸ் நனைந்து விட்டது.

கண்ணயர நினைத்த ஜீன்ஸ் ராணி கோபமாகப் பார்த்தார். "ஒரு பத்து நிமிஷம் தூங்க விடறியா நீ?" என்று இரைந்தார். அதற்குப் பிறகு ரகு கற்பனை செய்து பார்த்திராத சாதனையை நிகழ்த்திக் காட்டினார் அல்லி ராணி.

சிறுவனைப் பிடித்து பட்டென்று கன்னத்தில் ஒரு அறை, தோளில் ஒரு அறை விட்டார். "என்ன விஷமம். ஒரு அளவில்லே? எப்பப் பாத்தாலும் ரகளை" என்று இன்னொரு தட்டு தட்டினார். ஜீன்ஸ் ராணி தமிழில் பேசியதை ரகு கவனிக்கத் தவறவில்லை. "ஆகா! இத்தனை அழகாகத் தமிழ் பேசுகிறவரைச் சந்தேகப்பட்டோமே' என்று வருந்தினான்.

விசும்பிக் கொண்டிருந்த சிறுவனை இழுத்த ஜீன்ஸ் ராணி, "பின்னே என்ன? சொன்னாக் கேட்டா தானே? இங்க வா, படுத்துக்க.. அம்மா தூங்க வேண்டாமா? தூங்கறியா இல்லின்னா இன்னும் ரெண்டு அறை கிடைக்கும்" என்று அணைத்துக் கொண்டார்.

பெட்டியில் சட்டென்று அமைதி. அங்கங்கே சுவிச் அணைத்தாற்போல் ஓசைகள் அடங்கின. "உனக்கும் ரெண்டு போடவா?" என்று அங்கங்கே குரல்கள். எட்டிப் பார்த்த ஒன்றிரண்டு குட்டி அரக்கர்கள் அடங்கினர்.

ரகு ஜீன்ஸ் ராணியைப் பெருமிதத்துடன் பார்த்தான். 'ஆகா! வாட் எ லீடர்?! குழந்தையை ரெண்டு தட்டு தட்டத் துணிந்த சக்தியின் அவதாரம் இல்லையோ இவர்? உலகில் அமைதியை நிலை நாட்டப் பிறந்தவரல்லவோ இந்த ஜீன்ஸி ராணி?' என்று மனதுள் ஆராதித்தான்.

தூங்க முயற்சித்தான்.

19 கருத்துகள்:

  1. //கருத்துகள் இல்லை//

    s

    su. tha.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. ஏதோ ஒரு குழந்தை அடி வாங்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டே படித்தேன். அதுவும் ரகுவிடம் வாங்கும் என்று நினைத்திருந்தேன். ஜீன்ஸ் ராணி புண்ணியம் கட்டிக்கொண்டார்.

    பதிலளிநீக்கு
  3. எல்லா களேபரம் முடிந்த பின் சக்தியின் அவதாரம்...!

    பதிலளிநீக்கு
  4. //எல்லா களேபரம் முடிந்த பின் சக்தியின் அவதாரம்//

    உண்மை.
    உயிரனம் தோன்றியதும் அதன்
    ஒட்டு மொத்த பரிணாம இயல்பு வளர்ச்சியும்
    இக்கருத்தை நிலை நிறுத்துகிறது.

    எனர்ஜி இல்லாது மேட்டர் தண்டம்.
    அது ஒரு கவர்ச்சிப்பொருள் ஆக துவக்கத்தில் இருக்கலாம்.
    ஆனால், கவர் போய் விட்டால் சீ என்று தூக்கி எறியப்படும்
    எந்தப் பொருளுமே
    எத்தனை நாள் நினைவில் நின்று நிலைக்க இயலும் ?

    ஆடம் இருந்து பிரயோஜனம் இல்லை என உணர்ந்த
    ஆண்டவனும் அதனால் தானோ
    இவளை இட பாகத்தினளை
    ஈவ் ஆகப் படைத்திட்டனன் போலும்.

    உயிருக்கெல்லாம் ஊக்கத்துக்கேல்லாம்
    எண்ணுக்கடங்கா ஏற்றங்களுக்கெல்ல்லாம்
    ஐயமில்லை. ஒப்பிலாத
    ஓங்காரமே அஃதே



    எனர்ஜி இலாத மேட்டர் தண்டம் எனச் சொன்னேன்.
    மேட்டர் இலாத எனெர்ஜி இருக்க இயலுமா?
    இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக
    அண்மையில் சில் ஆய்வுகள் எமை நம்பும் வகையில்
    உண்மைகளை எடுத்துச் சொல்லுகின்றன.

    சக்தி உள் இருப்பதால் அன்றி
    சிவம் சவமே .

    சக்தி இல்லையேல்
    சந்ததிகள் இருக்க மாட்டார்கள் என்று கூட இல்லை.
    சந்தியில் எப்பொருளும் திட நிலையில் அசைவற்ற நிலையில்
    இருக்க இயலும்.

    உண்மையில்,
    சக்தி அசையச் செய்கிறது.
    அமைதியைத் தருகிறது.
    ஆனந்தத்தைத் தருகிறது.
    இக லோக இன்பங்களை எல்லாம்
    ஈகிறது.

    அவ்வாறு இருக்கையில்,

    பிரளயம் முடிந்து திரும்பவும் (எல்லா களேபரம் முடிந்த பின் )
    தோன்றுதல் என ஒன்று
    நிகழ்கையில்
    சக்தியின் அவதாரம்
    சத்யம், சிவம், சுந்தரம்.

    சுப்பு தாத்தா.

    www.subbuthatha72.blogspot.com (matter)
    www.subbuthatha.blogspot.com (energy)
    www.movieraghas.blogspot.com (display)
    www.vazhvuneri.blogspot.com (purposeful demonstration )
    www.Sury-healthiswealth.blogspot.com ( dissonance/deviations)
    www.pureaanmeekam.blogspot.com (end is never the end)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெய் அப்பளம் எனர்ஜியுள்ள மேட்டரா?

      நீக்கு
    2. நெய் அப்பளம் எனர்ஜி உள்ள மேட்டரா/

      என்ன அப்படி சொல்றேள் போங்கோ.

      நெய் யில் இல்லாத கொழுப்பா? கொலஸ்ட்ரால் சகலமும் அதுதானே.
      அப்பளம் உளுந்து. அதுவும் ப்ரோடீன் கொழுப்பு. போதாதற்கு அதுலே ஏகத்துக்கு காஸ் ப்ரொட்யூஸ் பண்ற நைட்ரஜன் வேற , உளுந்தை உப்பு போட்டு ஊற வைத்து நல்லா அரைக்கும்போது கொஞ்சம் 2

      மணி நேரம் வேண்டாம் அரை மணி நேரம் ஊற வச்ச கூட ஒரு கெமிகல் ரி ஆக்சன் . அதுலே இருக்கிற கால்சியம் கார்பொனேட்
      CaCO3(s) + 2HCl(aq) → CaCl2(aq) + CO2(g)
      . கார்பன் டை ஆக்சைடு வரதுக்கு காரனமாயிடறது. அந்த உளுத்த மாவுலே பண்ணின அப்பளத்துலே
      அப்ப்ப்ப்பா துரை சொன்னார் அப்படிங்கரதுக்குக்காக தினசரியா
      நெய்யை ஊத்தி ஒவன்லே சுட்டு சாப்பிட்டுட்டு,
      வயத்துலே பொய் டப டபா அப்படின்னு சத்தம் போடறது. போதாக்குறைக்கு, இதுலே ஒரு சல்பூரிக் ஆசிட் வேற , கார்பன் மொனொக்சைட் ,சேந்துண்டு, ஒரு ஸ்மெல் வந்து,
      இந்த சுதா அதான் சுப்பு தாத்தா வந்தாலே டேஞ்சர் அப்படின்னு
      மூன்றாம் சுழி பக்கத்துலே கூட வர முடியாம, மோகன்ஜி யை ஆக்கி விட்டுடுத்து அப்படின்னா அதுக்கு என்ன காரணம் ?

      நெய், உளுந்து இரண்டுமே மேட்டர் தான்.
      அதுலே படார் டபார் அப்படின்னு வேட்டு வெடி சத்தம் போடக்கூடிய
      எனர்ஜி ப்ரட்யூஸ் ஆறது.

      இன்னொன்னும் சொல்லணும். சுத்தமான் பசும்பாலிலே தயிராக்கி, வெண்ணை ஆக்கி அதை நெய்யாக்கி அத சாப்பிட்டா அதுலே ஹை கொலஸ்ட்ரால் இருக்கு. அது உடம்புக்கு வேண்டிய கொலஸ்ட்ரால். குட் கொலஸ்ட்ரால். 40 வரைக்கும் இருந்தால், ஆயுசு 100 என்று ஆயுர்வேதம் சொல்றது.
      நாலு பாட்டில் வாங்கி அனுப்பவா.. ஒரு பாட்டில் 40 டாலர் மட்டுமே. வாட் வரி உட்பட.

      அதுனாலே,
      மேட்டர் எனர்ஜி பத்தி உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.

      அப்படியே உங்களுக்கு ஐயமேற்பட்டால்,
      கும்பகோணம் அந்த பிரபல ஹோட்டல் பேரு என்ன ? மறந்து போச்சே..
      அங்க நான் நாலு மாசம் முன்னாடி,
      நெய் ரவா வெங்காய ஸ்பெசல் மசாலா தோசை ரோஸ்ட் சாப்பிட்டு, அடுத்த நாளு நாளைக்கு
      அபான வாயு அதிகமாய் போனதுனாலே
      ஜெலுசில், ரானாடின் பண்டோப்ரசால், எல்லாத்தையும் ஒரு வாரம் சாப்பிட்டேன்.

      கொஞ்சம் இருங்கோ.
      டபார்...டபார்....டப் ..டப்...டபார்.

      எனர்ஜி மேட்டர் உள்ளே போயிடுத்துன்னா வெளிலே வராம இருக்குமோ !!!

      சுப்பு தாத்தா.
      www.subbuthathacomments.blogspot.com
      www.subbuthatha72.blogspot.com

      நீக்கு
    3. அடடா.. எங்கியோ போயிட்டீங்க சார்!

      ரவா தோசையைப் பத்திக் கிளறிட்டீங்க்களே.. இப்ப புலம்பினாத்தான் மனசாறும் போலிருக்குதே?

      சக்தி விசாரம் ரொம்ப ஆழம். சக்தியில்லாமல் எதுவுமில்லை - எங்கெங்கு காணினும் சக்தியடா.. ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.

      நெய் அப்பளம் சும்மா விளையாட்டுக்கு. அப்பளத்தை ஒரு பிடி பிடிப்பீங்க்கனு தெரியாம போச்சே!

      நீக்கு
  5. சில பெற்றோர் குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் என்னும் பெயரில் தாந்தோன்றிகளாக்குகிறார்கள். அது பிறருக்கு எவ்வளவு இடைஞ்சல் என்று புரிந்து கொள்வது இல்லை. என்னதான் சுதந்திரம் என்றாலும் அது அடுத்தவன் மூக்கு வரைக்கும்தான் என்பதைப் பெற்றோர் அறியவேண்டும்நகைச்சுவையை ஒரு அவலச் சுவையாகவும் வெளியிட முடியும் என்பது இப்பதிவில் தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். பிள்ளைகளை அன்பாக வளர்க்க வேண்டும் அல்லது கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்று. எண்ணும் வேளையில் பொறுப்புணர்ந்தவராக வளர்க்க வேண்டும் என்பதை பல் நேரம் மறந்து விடுகிறோம்.

      நீக்கு
    2. போர்த்தி வளர்க்கிறேன் பேர்வழி என்று எதற்குமே சுயமாக முடிவெடுக்க முடியாத இளைய சமுதாயத்தை உருவாக்குகிறோமோ?

      நீக்கு
  6. ரயிலில் நானே ரகுவாக மாறிப் பயணிப்பது போன்ற அனுபவம்!

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள சகோதரர் அப்பாத்துரை அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (19.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 19ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/19.html

    பதிலளிநீக்கு
  8. என்ன ஆச்சரியம்!!!!! நேற்று பல்லவனில் வரும்போது இதே விஷயம் பேசிக் கொண்டு வந்தோம். அந்தக் காலத்தில் (ரொம்பல்லாம் அந்தக்காலம் இல்லை, அதுக்காக என்னை வயசானவள்னு நினைக்கப்படாது பாருங்க! ) அந்தக்கால கட்டத்தில் இரண்டு குழந்தைகளைக் கட்டி மேய்த்துக் கொண்டு ராஜஸ்தான், குஜராத் என்றெல்லாம் எப்படிச் சுத்தினோம்! ஒவ்வொரு இடத்துக்கும் குறைந்த பட்சமாக இரண்டு நாள் பிரயாணம் வேறே. உண்மையிலேயே நேற்றைய ரயில் பிரயாணத்திற்கு அப்புறமா என் குழந்தைகளைப் போல் சமர்த்துக் குழந்தைகள் உலகிலேயே பிறக்கலைனு நினைச்சுண்டேன். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹி.. நாம் எல்லாருமே ரொம்ப சமர்த்து தான்!!

      நீக்கு
    2. ஒரு entitlement மனப்பாங்கு இல்லாமல் வளர்ந்த தலைமுறைகளின் சிக்கல்.

      நீக்கு
  9. அப்போ சமீபத்தில சென்னை டூ பெங்களூர்க்கு ரகு வடிவத்தில வந்துட்டு போயிருக்கீங்க :-)

    செம அப்சர்வேஷன் உங்களுக்கு...

    பதிலளிநீக்கு
  10. கதையின் விவரணம் அருமை....

    அந்தச் சின்ன பையன அதுக்கு முன்னாடியே அந்த ஜீன்ஸ் ராணி அடக்கியிருக்க வேண்டாமோ?!!

    தன் மேல தண்ணி கொட்டின அப்புறம் தானே அந்த ஜீன்ஸ் ராணி "முழித்துக்" கொண்டது போல் தெரிகின்றது....எல்லாவற்றிற்கும் அம்மாவையே நாடும் ஜீன்ஸ் ராணி!!! .....ம்ம்ம் பெற்றோர் இப்பல்லாம் இப்போ குழந்தைகளை ஓவர் செல்லம்..இல்லைனா ஓவர் கண்டிப்பு..இடைப்பட்ட நிலையில், அன்புடன் ஆனால் அதே சமயம் கண் மூடித்தனமான அன்பில்லாமல், குழந்தைகளை பொறுப்புடன், குறிப்பாகப் பொது இடங்களில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லி வளர்க்கலாம் என்று தோன்றுகின்றது பல சமயங்களில்....பொதுவாகக் குழந்தைகள் அப்படித்தான் இருப்பார்கள்...புடம் போட வேண்டும் அப்போதானே பொன்னும் மிளிரும்...ஸோ ஜீன்ஸ் ராணி லீடர்? நோ....சக்தி...நோ....சுயநலம் கலந்த ஜீன்ஸ்ராணி...???!!!

    பதிலளிநீக்கு