2014/07/21

லுக்ரீசின் சாபம்



[அறிமுகம்]     [அறிமுகம்]     [1]     [2-5]     [6-15]     [16-18]     [19-25]    



லுக்ரீசின் சாபம் [2-5]

2
சிங்கங்கள். சிறுத்தைகள். நரிகள். நாகங்கள்.
சில பசுக்கள். புறாக்கள்.
அரசினப் பிள்ளைகள் கூட்டம்.

பனிமலை தேவதையிடம்1
தனிமையில் குறிகேட்கச் செல்லும்
பனிரெண்டாம் வயதுப் பருவம்.

'நான் குறிகேட்டு ஆளாகும்
அவசியம் இல்லை' என்றான் செஸ்டஸ்.
'நான் கேட்பேன். நல்லதொரு குறி சொல்ல' என்றான் ஜூனியஸ்.
'மூளை வளருமா என்றா?'
பதிலுக்கு செஸ்டஸ் வாய்திறக்க
பக்கமெல்லாம் பஞ்சுவெடிச் சிரிப்பு.
'என்ன கேட்கப் போகிறாய்?' ஆவல் பூசிய கேலி.
'வளர்ந்தொரு நாள் புவியாள்வேன் எனும் நம்பிக்கை மெய்யாகுமா?' என்றான் ஜூனியஸ்.

தகர உருளை தரையில் ஓடும் சிரிப்பு.
கட்டிவைத்தப் பசுவின் மேல் கல்லெறியும் வீரம்.
'கோமாளிகளின் தலைவனாவாய்'
'புவியாளும் ஆசையைப் பார். காலொடிந்தவன் ஓடலாமா?'
'ஜூனியஸ் ஓ ஜூனியஸ். சிரித்துச் சிரித்து எமக்கு நெஞ்சு வலி'
'கோமாளிகளின் தலைவன் ஜூனியஸ்'
சிறகொடிந்தப் புறாவைச் சுற்றிக் கெக்கலிக்கும் பருந்து.
'ஓ. நிச்சயம்'. குரல் மாற்றிக் குறி சொன்னான் செஸ்டஸ். 'முட்டாள்களின் அரசனாவான் இந்த மூடன்'.
பாசிக்குளத்தில் தவளைகள் இரைச்சல். இடையே
பாறையில் மோதும்
பேரலையோசை.
'அறியாது பேசுகிறான். பொறுங்கள்'.
கொலாடினின் வெண்கொடி.
'அறியாமையறிவது அறிந்தவர் கடமை.
சுற்றம் பகைப்பது சூரியனைப் பகைப்பது.
இவன் நம் நண்பன்.
நட்பறிந்து நடப்போம்'.
நகையாட்டம் நின்றது. ஜூனியசைப் பிரித்தான்.

'ஆ! நண்பா!
இன்று நீ மட்டும் இல்லையெனில்
இவனுக்கு மூளைகுறை என்பது உலகறியாது போயிருக்கும்'
செஸ்டஸ் உறுமினான்.
'என் வருங்காலத் தளபதி கொலாடின்!
ஆருயிர் நண்பன்!
நீயும் அரசினம். அதற்காக அரியணை விரும்புவாயா?
இவனுக்கு ஏன் அந்தப் பகற்கனவு?'

'கனவு கண்களுக்குப் பொதுவன்றோ?
ஏன்? எனக்கென்ன குறை?'
ஜூனியஸ் வெம்பினான்.
மழை ஓய்ந்தாலும் மரங்களின் சாரல்.
வெப்பம் தணிந்த சூடு.

'ஜூனியஸ்! உன் வாயே உனக்கு வியாதி' சிரித்தான் செஸ்டஸ்.
'முட்டாள். அறிந்து கொள். என் தந்தையைத் தொடர்ந்து அரியணை ஏறுவது நானடா'.

'ஏன் நான் ஆளக் கூடாதா? உன் தந்தை என் சிற்றப்பா. வயதில் உன்னை விட மூத்தவன் நான்'

'வயதுக்குப் பதவியென்றால் இங்கே மரங்களன்றோ அரசாளும்?'

உடனிருந்தோர் சிரித்தார்கள்.
'வானத்தைச் சுட்டினால் விரலைப் பார்க்கிற வீணன்' என்றார்கள்.
'முட்டாள்' என்றார்கள். 'மூடன்' என்றார்கள்.
'நீ அரசினம். அரச பரம்பரை.
அறிவில் பெருங்குறை. ஆற்றலோ அதில் பாதி.
முட்டாள் குழியின் அடிமண்.
குலத்தின் அவமானக் கொடி' என்றார்கள்.
'எடைக்கு எடை பொன் கொடுக்கும் விழாவில் உன் மூளையைக் கொண்டு போகாதே' என்றார்கள்.
கைகொட்டிச் சிரித்தார்கள்.

அரசினப் பிள்ளைகள் கூட்டம்.
ஆணவச் சோற்றின் ஊட்டம்.

3
'அம்மா அம்மா!' என்றழுத ஜூனியஸை
அணைத்தாள் அன்னை யூரிதி.
விவரம் கேட்டாள்.
அன்னையின் அணைப்பும் ஆதரவு மொழியும்
வாடிய பயிருக்கு உரமும் நீரும்.
தேடிய கண்களுக்குத் தேவனின் உருவம்.

'மேதகு ஜூனியஸ் ப்ரூடஸ்2 - எனக்கு நீ என்றும் அரசன் தானே?
மழைக்கேது எல்லை மகனே?
காலம் ஒரு கருமேகம். காத்திரு'
மார்போடு அணைத்தவள்
மனதோடு மூட்டினாள் தீ.

4
கிண்டல் செய்தான் சிற்றப்பன். அசல் மன்னன் லூசியஸ் டார்க்வின்.
'யூரிதி.. உன் மகன் கருவான நேரம்
கடவுள் மூளைக் கடையை மூடிவிட்டார்'.
குலுங்கிச் சிரித்தான்.
மகன் செஸ்டஸ் சொன்ன விவரம் சொன்னான்.
'யூரிதி.. உன் மகன் உன்மத்தன்..
ஜூனியஸ் புவியாளக் குறி கேட்பானாம். ஏன் இந்தப் பேராசை?'

'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
என் மகனின் அறிவு
ஆயிரம் சூரியனை அடக்கும்
எனினும்
அறியாது பேசியிருந்தால்
அன்போடு பொறுத்திடுங்கள்' என்றாள் யூரிதி.
அச்சம் கொண்ட அன்னை.

'சிறகைக் கடன்வாங்கிப் பறந்தாலும்
சிறுபுறா கழுகாமோ?
என் மகன் நாளைய அரசன்.
உன் மகன் அவனுக்குப் பணியாள்.
இது குலவறம்.
மீறினால் கலவரம்'
எக்காளச் சொல் பேசினார்.
எள்ளல் முள் வீசினார்.
'உன் மகனை வெயிலில் அனுப்பாதே.
பித்தம் சற்றுப்
பிறருக்கும் பிடிக்கட்டும்!'.

பத்தாண்டுகளுக்கு முன்
பித்தாண்டவன் இந்த லூசியஸ்.
ஒரு வயிற்றில் ஒரு குருதியில் ஒரு உணர்வில் உடன்பிறந்த
அண்ணனை
அவன் இளம் மனைவியும்
இரண்டு வயதுக் குழவியும்
கதறுகையில்,
அவர்கள் கண்ணெதிரே கொன்று
அவன் சிற்றரசைச் சேர்த்தவன்.
நாடாளும் வெறியன்.
பெருமானின்3 பிறவியென்று
பெரிதாக எண்ணுபவன்.
குருதியில் ஆணவக் கேணி.
மனிதத்தோல் மிருகம்.

'யூரிதி!'
லூசியஸ் பொங்கினான்.
'உன் கணவனுக்கு நானளித்த வரம்
உம்மிருவர் உடலின் உரம்.
உயிர் பிச்சை.
நினைவில் வை'.
புயல் கண்ட கடலின் சீற்றம்.
'குறிகேட்கப் பிள்ளைகள்
பனிமலை போகட்டும்.
உன் மகனும் அரசினம்.
என் மகனுக்கு
சில மாதங்கள் முன்னவன்.
அனுமதிக்கிறேன்.
ஆனால் என்
நா கொடுத்த உயிரை
உன் மகனின்
நா கெடுக்கச் செய்யாதே!'
குடிகாரக் குரங்கின் சிரிப்பு.
'ஆயிரம் சூரியன் அறிவெல்லாம்
அகத்துள்ளே இருக்கட்டும்.
வெளியே அந்த அறிவொளி
வெட்க வெளிச்சமாக இருக்கிறது.
ஆயிரம் சூரியனும்
அவன் மூளையை
உருக்கி விட்டதோ?
தாங்க முடியவில்லை
உன் மகனின் அறிவு வெப்பம்!'.
இடியெனச் சிரித்தான்
தடியன்.

5
நள்ளிரவில் குறிகேட்க
நாள் குறித்துச் சொன்னார்கள்.

பண்டிதரும் ஜோசியரும்
பாவலரும் ஏவலரும்
பொதுமக்கள் பலபேரும்
வழியனுப்பி வைத்தார்கள்.

செஸ்டஸைச் சுற்றி
அரசினப் பிள்ளைகள்.

பின்னிரவில் குறிகேட்க
முன்னிரவில் புறப்பட்டது
பன்னிருவயதுக் கூட்டம்.

உச்சிமுகர்ந்த நினைவூறக்
கண்மறைவில் வாழ்த்தினாள்
யூரிதி.
ஜூனியஸின்
பேதைத் தாய்.
கண்மூடி
மனந்திறந்து
மகனுக்காக வேண்டினாள்.
'கடவுளே!
என் உயிரின் கண்களுக்கு
காட்சிகள் கடந்த
பார்வையைக் கொடு'.

லுக்ரீசின் சாபம் [6-15]


1 ஓரகில் எனப்படும் தேவதையிடம் குறி கேட்கும் கிரேக்க அரசர்களின் பழக்கம், ரோம் அரசர்களுக்கும் இருந்தது. பெருஞ்சீசர் என்று வழங்கப்பட்ட ஜூலியஸ் சீசர் மற்றும் அவரைத் தொடர்ந்த சில அரசர்கள் இதைக் கடைபிடிக்காவிட்டாலும், பின்னாள் அரசர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். ஆண்களுக்குப் பனிரெண்டு வயதானதும் தொலைதூரப் பனிமலைக்கு அவர்களைத் தனிமையில் அனுப்பிக் குறி கேட்கச் சொல்வார்கள். வாலிபப் பருவத்தை எதிர் நோக்க ஒரு பயிற்சியாகவும் இதைக் கருதினார்கள்.

2 ஜூலியஸ் சீசரைக் கத்தியால் குத்திய ப்ரூடஸ் வேறு நபர்.

3 பெருமான் என்பது இங்கே கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட ஜூலியஸ் சீசரைக் குறிக்கிறது. பெரும் வல்லமை படைத்த சீசரின் மறுபிறவியாகவே தன்னைக் கருதினான் லூசியஸ்.

13 கருத்துகள்:

  1. கடினமான வார்த்தைகள் இல்லையென்றாலும் வழக்கமான எனது வேகத்தில்;படிக்கக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. கவிதையாக எழுதுவதால் பொருத்தமான வார்த்தைகள் தேர்வு செய்வதிலேயே உங்களது பாதி நேரம் செலவாகி இருக்கும். படிப்பவர்களின் சந்தேகங்களை ஊகித்து கடைசியில் கொடுத்திருக்கும் விளக்கக் குறிப்புகள் அசத்தல்

    பதிலளிநீக்கு
  2. எளிமை ! இனிமை ! அருமை !
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. "ஜூலியஸ் ப்ரூடஸ்" என்னும் பெயரைப் படித்ததும் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. கீழே விளக்கம் தெளிவாக்கியது. இன்று வரை கேட்டறியாக் கதை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூனியஸ் ப்ரூடஸ் என்பது அசல் பெயர். ஜூலியஸ் ப்ரூடஸ் என்று தவறாக எழுதியதைத் திருத்திவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.

      நீக்கு
  4. ஒன்றுக்கு இருமுறை வாசித்தால்தான் ரசிக்க முடியும். எனக்கென்னவோ பதிவுலகில் ஊன்றி அனுபவிப்பவர்கள் குறைவு என்றே தோன்றுகிறது. ஷேக்ஸ்பியரின் அதிகம் வாசிக்கப் படாத கதை. தொடர்கிறேன் .வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பு அனுபவம் தேடுவோர் இருக்கிறார்கள். இன்றைய வேகத்தில் தேடுவதும் தேடப்படுவதும் ஒரே கோட்டில் அமைவது அத்த்னை சுலபம் இல்லை. கூகில் தவிர? இன்ஸ்டெண்ட் காபி சாப்பிடுவோர் மத்தியில் அப்போது வறுத்து அரைத்து டிக்காக்‌ஷன் வடித்து சுண்டக்காய்ச்சிய பாலில் காபி கலந்து கொடுத்தால் அதன் வரவேற்பு வேறாக இருக்கும். இரண்டுமே தேவை தான். என்ன சொல்கிறீர்கள்?

      நீக்கு
  5. நானும் ஒரு கதையை கவதையாக்கி இருக்கிறேன். அது சேக்கு போன்றவர் எழுதியது அல்ல. தாத்தா பாட்டிகள் சொல்லும் கதை. “சிறுதுளி பெருவெள்ளம் “சுட்டி இதோ gmbat1649.blogspot.in/2011/02/ blog-post.html என் பதிவுகளில் அதிகம் வாசிக்கப் பட்டது. குறைந்த எண்ணிக்கையில் பின்னூட்டமிடப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. பொம்பைகள் காற்றிலாட ஆட
    பம்பம்மென்ற வாத்திய ஓசையிடை
    அறுகோணத் தேர் அசைந்தாடி அசைந்தாடி
    ஐந்து நிலை தாண்டி வந்தடி, தோழி!
    ஐந்தெழுத்து வல்லாளர் வடம் பிடித்து
    கவிதைத் தேர் கனஜோராய்
    வரும் அழகு காண ஓடி வாடி தோழி!

    பார்வைக்கும் காட்சிக்கும்
    வேறுபாடு காண வாடி தோழி!
    காட்சி கடந்த பார்வை
    காண ஓடி வாடி தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் பொம்பைகள் என்றால் என்னவென்று தெரியாது.

      நீக்கு
  7. அருமையாக உள்ளது. சிறப்பான பணி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான வித்வத் நிரம்பிய
    நடை கதைக்குச் சிறப்பு சேர்க்கிறது..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. அப்பாதுரை-யின் கவிதையில் குறிப்பிட நி்ரைகள் நிறைய இருந்தாலும் “வகை”ப்படுத்தியதில் முட்டி நிற்கிறது மனது. “கவதை” என இட்டது நாங்கள் “க”ருத்து போட்டு “வதை”ப்பதை குறிப்பிட்டோ?

    பதிலளிநீக்கு