2012/10/01

சம்மதம்

[சற்றே வளர்ந்தப் பாப்பாக்களுக்கு]



    டெபொசிஷன் தொடங்கக் காத்திருந்தேன். நான் சொல்லப்போகும் ஒரு கோரமான கொலையின்... ரீவைன்ட்.. தீர்மானிக்க வேண்டியவன் நானல்ல என்பதால் கோர நிகழ்வு என்று கொள்க... நிகழ்வின் விவரங்களைப் பதிவு செய்யப் போகிறார்கள்.

நான், என்னுடைய வக்கீல், டிஏ ஆபீசிலிருந்து இரண்டு பேர், உள்ளூர் காவலதிகாரி ஆக ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்துப் பேசப் போதுமான இடமில்லை. அறை அடைக்கும் வட்டமேஜையைச் சுற்றி ஒருவரையொருவர் தொட்டும் தொடாமல் அமர்ந்திருந்தோம். எனக்கு இடப்புறம் இருந்த அரசு வக்கீலுக்கு என்னைப் போல் வழுக்கை. என்னிடம் இல்லாத தொப்பை, தொந்தி, ஆண்முலை. அவன் இடதில் ஒரு எல்ஐ - லீகல் இந்டர்ன். சமீபப் பட்டதாரி என்பது அவள் படபடப்பில் புரிந்தது. வெள்ளைச் சட்டையின் இறுக்கத்தில் அவளுடையக் கையடக்க மார்பு அவதிப்பட்டதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஐபேட் புரட்டிய நீள விரல்களில் மரூன் நகப்பூச்சு. இடுப்பின் கீழே என்ன அணிந்திருந்தாள் என்பது, நிச்சயம் அவளிடதில் இருந்த போலீஸ்காரனுக்குத் தெரிந்திருக்கும். போலீஸ்காரனுக்கு இடதில் என் வக்கீல். கேள்விகளுக்கு நான் பதில் சொல்லவும் தவிர்க்கவும் சைகை செயவதற்காக, அவனுடைய ஷூ என் ஷூவை தொட்டுக் கொண்டிருந்தது.

ஐபேடில் பித்தானைத் தொட்டுத் தேதி பெயர் வழக்கு விவரங்களை அறிமுகமாகப் பதிவு செய்து, என்னைப் பேசச் சொன்னாள் எல்ஐ. "எதையும் ஒளிக்காமல் எல்லாவற்றையும் நடந்தது நடந்தபடி சொல்லுங்கள்" என்றாள்.

"அப்படியானால் இன்றைக்கு நாள் முழுதும் ஆகும்" என்றேன்.

"பரவாயில்லை. அதற்குத்தான் எங்களுக்குச் சம்பளம் தருகிறார்கள்" என்றான் அரசு வக்கீல்.

"ஹ்ம்ம்.. எனக்கு ஒரு முத்தம் கூட யாரும் தருவதில்லை" என்றேன்.

"உங்கள் வக்கீலுக்கு நீங்கள் சம்பளம் தருகிறீர்கள், நினைவிருக்கட்டும்" என்றாள் எல்ஐ, தார்க்குச்சிப் பார்வையுடன்.

என் பெயர் முகவரி வயது அன்றையத் தேதி சுய அறிவு வாக்குறுதி என்று குருமாவாக விவரங்களைச் சொல்லிவிட்டுத் தொடங்கினேன்.

    தினேழாம் தேதி, ஞாயிறு மதியம். 'இரண்டாம் வழிபாட்டுச் சேவையும் முடிந்து, சர்ச் நடை அடைத்து, மக்கள் இந்நேரம் சாப்பிடப் போயிருப்பார்களே? யாரையும் காணோமே?' என்று எண்ணியபடி ஆண்களுக்கான லவுஞ்சுள் நுழைந்த போது ஜமாலைத் தவிர எவரையும் காணவில்லை. "ஹேய்" என்றேன். என் லாக்கரைத் திறந்து இரண்டு எக்லிப்ஸ் வில்லைகளை வாயுள் வீசிச் சுவைக்கத் தொடங்கினேன். ஷூ, உடை களைந்தெறிந்து லாக்கரை மூடினேன். வேர்வையையும் சோர்வையும் கழுவ, வெந்நீர்த் தொட்டிக்கு விரைந்தேன். ஆறு மைல் ஓட்டம் தொடர்ந்த அத்லெடிக் கன்டிஷனிங்கில் டிரெய்னர் என்னை மிக நோகடித்திருந்தாள். நரம்புகள் வெந்நீர் இதம் கேட்டுப் போராடின. எண்பது டிகிரி பேரந்ஹைட் நீரில் நிர்வாண உடலை மெள்ள மெள்ள இறக்கிக் கழுத்துவரை நனைத்து.. தோளையும் கழுத்தையும் நிதானத்தைவிட மெதுவாகச் சுழற்றிக் குலுக்கி.. பறவை போல் கைகளை நீட்டி.. தொட்டிச் சுவரோரம் சாய்ந்தேன். சுவற்றின் அதிவேக ஊற்றுக் குழாய்கள் நேர்த்தியாக வெந்நீரைப் பாய்ச்சி என் முதுகெங்கும் மசாஜ் செய்தன. ஆகா! புணர்ச்சியில் கூட இந்த இதம் வராது, உத்தரவாதம். கழுத்தைப் பின்புறம் சாய்த்து இடம் வலமாக, பிறகு வலம் இடமாக, மெள்ள அசைத்தேன். ஊற்றுகள் என் கழுத்தைப் பிடித்துவிட, மீண்டும் உத்தரவாதம்.

சில நிமிடங்களில் வில், ரான், எமிலியோ, ஜமால் என்று வரிசையாக ஸானாப்பெட்டிக்குள் நுழைவதைப் பார்த்து, சற்றுப் பொறுத்துச் சேர்ந்து கொள்வதாக இங்கிருந்தே கையசைத்தேன். இந்த வெந்நீர் மசாஜில் இன்னும் சிறிது மெய் மறப்போம் என்றுக் கண்களை மூடினேன். பின்னால் இப்படியெல்லாம் நிகழும் என்று தெரிந்திருந்தால் கண்களைத் திறவாமல் தொடர்ந்து மெய் மறந்திருப்பேன்.

    நாங்கள் ஐவருமே ஐம்பதைத் தொட்டவர்கள் என்றாலும் ரான் எங்களில் மூத்தவன். வெள்ளைக்காரன். கத்தோலிக்கக் கிறுஸ்தவன். உலகத்துப் பிற மதங்களெல்லாம் பாவங்களின் பிறப்பிடம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் வளர்ந்தவர்களுக்குப் பிறந்து, உள்ளுக்குள் அதே ஆழ்ந்த நம்பிக்கைகளில் வாழ்பவன். வியட்நாம் போரில் அமெரிக்கக் கர்னலாக இருந்தவன். வியட்காங் தலைவன் ஒருவன் பத்து வயதுச் சிறுவர் சிறுமியரை ஒருவருக்கொருவர் வன்புணரச் செய்து ரசித்ததைப் பார்த்துக் கொதித்து, க்ரனேட் எறிந்துத் தலைவன் தலை மட்டும் சிதறச் செய்தக் கதையை அடிக்கடி சொல்பவன்.

வில், ரானை விடச் சற்று இளையவன். அமெரிக்க விமானப்படையிலிருந்து நற்சான்றுடன் ஓய்ந்தவன். முலட்டோ. வெள்ளைக்கும் கறுப்புக்கும் பிறந்த பிராடஸ்டன்டு கிறுஸ்தவக் கறுப்பன். பல நூற்றாண்டு அடிமைத்தன விளைவின் ஆழ்ந்த வெறுப்பும் அச்சமும் இன்னமும் எண்ணங்களில் விரவியிருந்தாலும், செயலில் சமூக முன்னேற்றத்தை மதிப்பது போல் நடப்பவன். நடிப்பவன்? சாகுமுன் ஒரு வெள்ளையனையாவது ரத்தம் வர மூக்கில் குத்த வேண்டும் என்ற ரகசியமாக ஆசைப்படுகிறவன்.

எமிலியோ, சிறுவனாக லத்தீன்-அமெரிக்க நாடுகள் ஒன்றிலிருந்து ஓடி மெக்சிகோவில் போதைப் பொருள் விற்றுப் பிறகு அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவன். தொண்ணூறுகளில் சதாம் ஹூசைனைக் குவைத்திலிருந்துத் துரத்திய முதல் அமெரிக்கப் படைகள் ஒன்றில் சார்ஜன்ட். இடது சாரி. அரசாங்கத் தயவில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவன். இந்தியர்களை வெறுப்பதாக என்னிடமே ஒரு முறை சொல்லியிருக்கிறான்.

எங்களுள் இளையவனான ஜமால், முஸ்லிம் கறுப்பன். ஏமாந்தால் மால்கம்-X பற்றிக் காரசாரமாகத் தொடங்கி ஒவ்வொரு உரையாடலையும் ஆத்திரத்தோடு முடிப்பவன். வெள்ளைப் பெண்கள் அத்தனை பேரும் கறுப்பன் பூலுக்கு ஏங்குவதாகச் சொல்பவன். யூதர்கள் அமெரிக்காவைக் கட்டி வைத்திருப்பதாகப் பொருமுவதுடன், அவர்களை அல்லா ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார் என்று வெளிப்படையாக வருத்தப்படுபவன். இந்தியப் பெண்களுக்கு செக்ஸ் வராதா, ஏன் கறுப்பர்களைப் பார்த்து நடுங்குகிறார்கள் என்று என்னிடம் அடிக்கடிப் பலவாறு சந்தேகம் கேட்பான். பாகிஸ்தானியருடன் சண்டை போடுவதாக எண்ணிக்கொண்டு என்னைத் தன்னுடன் சண்டை போடச் சொல்வான். என் இந்துக் கொட்டையை அவனுடைய முஸ்லிம் கைகள் காகிதம் போல் கசக்கத் துடிப்பதாகச் சொல்வான்.

நான் கடவுள் மத நம்பிக்கையற்றவன் என்பதால் என்னை ஹிந்டம்ப், ஹிந்டூஷ் அல்லது புழு என்று அழைப்பார்கள். நான் மறுத்தாலும் ஹிந்து என்பது என் மேல் ஒட்டிய அழுக்கு என்பார்கள். ஹிந்துக்களே உலகின் மோசமானத் தீவிரவாதிகள் என்பார்கள். அமெரிக்காவில் நாத்திகராய் வாழ்வது கடினம். அதன் காரணமாகவே, இதோ நீங்களும் என் வக்கீலும் கூட என்னை நம்பாமல் போகலாம். மற்றவர்களை விட நான் ஆரோக்கியமானவன், படித்தவன், தொழில்முறையில் வெற்றி பெற்றவன் என்றச் சிறு கர்வங்கள் எனக்கிருப்பதால் அவர்களைப் பீத்துணி போல் பாவிப்பேன்.

இத்தனையும் கடந்து ஒரு நட்புச்சங்கிலி கண்ணுக்குத் தெரியாமல் எங்களைக் கட்டியது. என்று நினைத்தேன்.

அரசியல் மதம் குறித்துப் பேசக்கூடாது என்பது லவுஞ்ச் விதியென்றாலும் நாங்கள் பொதுவாக உள்ளூர் அரசியலும் உலக மதமும் பேசுவோம். ப்லகோயவிச்சின் பொறுக்கித்தனம் பற்றிப் புலம்புவோம். அல்லது முந்தைய தினங்களின் பேஸ்பால், புட்பால் பற்றிப் பேசுவோம். லின்சே, பேரிஸ், ஜஸ்டின் மற்றும் புது இளசுகளின் போலி நீலப்படங்கள் பற்றிப் பேசுவோம். எங்கள் இனங்களின் கொள்கைகள்.. சில நேரம் குறிப்பிட்ட ஏதாவது மதம்.. எதுவும் இல்லையெனில் சாப்பாடு, மனைவி பற்றிப் புலம்புவோம். அரசாங்கம், சமூகம், குடும்பம் என்று பிறருக்காக உழைத்து உழைத்து ஒரு அங்கீகாரமோ நன்றியோ கிடைக்காத வெறுப்பும் சலிப்பும் கலந்த, பல நேரம் விளிம்பைத் தொடும் உரையாடலின் போது எங்கள் குரல்கள் பலமாவதாலும் பேச்சு கொச்சையாவதாலும்... நாங்கள் ஸானாவில் இருந்தால் பிறர் அந்தப் பக்கமே வரத் தயங்குவார்கள்.

    அன்றைக்கு வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே வெந்நீர்த் தொட்டியில் முங்கிவிட்டு ஸானாப் பெட்டிக்குள் நுழைந்தபோது, ரான் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். குழுவில் புது நபர் இருப்பதைக் கவனித்தேன். பருத்த உடல், நீண்ட தாடியுடன் இருந்தப் புதியவனுக்கு தலையசைப்பில் 'ஹலோ' சொல்லிக் கதவை மூடினேன். அவனருகே ஒரு பொட்டலம் இருந்ததையும் கவனித்தேன். ஆரவாரத்தோடு என்னை வரவேற்ற மற்றவர்கள், புதியவனை அறிமுகம் செய்தார்கள். "ரஷாத்" என்றான் ஜமால். "என்னுடைய கசின். லன்டனிலிருந்து வந்திருக்கிறான்".

ரஷாத்தைப் பார்த்தேன். பார்த்தேன் என்றால் அவனுடைய பால்குறியைப் பார்த்தேன் என்று பொருள். இந்தக் கலாசார அமைப்பில் நிர்வாணம் ஒரு பொருட்டேயில்லை. அறிவு நிர்வாணத்தை வேகமாக உணர்ந்துப் புறக்கணித்துவிடும் எனினும், கண்கள் மட்டும் பெண்ணைப் பார்க்கையில் மார்பையும் ஆணைப் பார்க்கையில் புடுக்கையும் நோட்டமிடுவது ஏறக்குறையத் தன்னிச்சையாகி விட்டது. தவிர்க்க முடியவில்லை. ரஷாத் இன்னொரு விதத்தில் தனிப்பட்டிருந்தான். நாங்கள் எல்லாருமே அங்கே சிரைத்திருப்போம். இதுவும் அமெரிக்கக் கலாசார ஒற்றுமையா தெரியாது. ஆனால் ரஷாத் புதர் மண்டிக் கிடந்தான். ரஷாத் எனக்காகச் செதுக்கிய முட்டியில் நான், "சாமியார் நலமா?" என்றுச் சிலேடையாகச் சிரித்தபடி முட்டி கட்டி இடித்தேன். "வாஸப்" என்றேன் பொதுவாக. "கொஞ்சம் நகந்துக்க ஜமால்.. உன் பக்கத்துல உக்காரவா?"

"எங்கே வேணும்னாலும் உக்காருப்பா.. இதுல வேணும்னாலும் உக்காரு" என்ற ஜமால், ஸானா அடுப்பைக் காட்டினான். இருநூறு பேரந்ஹைட்டுக்குப் பழுத்துச் சிவந்திருந்த ஸானாக் கற்கள் பயமுறுத்தின.

"வேணாம்பா, எனக்கு ஏற்கனவே ரெண்டு கல்யாணம் ஆயிடுச்சு, மூணாவதா வப்பாட்டி வேறே" என்றபடி அவனருகே ஒண்டினேன். "உன் கசின்.. ரஷாத்.. நம்ம கூட்டு நிர்வாணத்தைப் பாத்துப் பயந்துடப் போறான்.." என்றேன்.

"நாமதான் அவனைப் பாத்துப் பயப்படணும்" என்று ஜமால் கண்ணடித்தான். "ஹேய் ரான்.. சொல்ல மறந்துட்டனே.. ரஷாத் இஸ் கே" என்றான். "ஆண் துளை இல்லாம அவனால் தூங்க முடியாது", என்றுப் பலமாகச் சிரித்தான்.

"தேவனின் ஆணை எதுவோ, அப்படியே நடக்கும்" என்றான் ரான்.

அப்படிச் சொன்னாலும், ரஷாத்தின் தற்பால் உணர்வு ரானுக்குச் சங்கடம் தந்ததைப் புரிந்து கொண்டேன்.

"அப்ப ஏன் சட்டுனு தள்ளி உக்காந்தே? கவனிக்கலேனு நினைச்சியா?" என்று பலமாகச் சிரித்தேன் நான். அவன் முகம் மாறுவதைக் கவனித்து, "மன்னிச்சுக்க ரான்.. நான் உள்ளே வந்தப்போ ஏதோ சொல்லிட்டிருந்த.. குறுக்கே வந்துட்டேன்.." என்றேன்.

"என்னத்தைப் புதுசா சொல்லப் போறாரு..? அமெரிக்கா அமெரிக்கா இல்லின்னா யேசு யேசு.. த்தா.. இதே தானே?" என்றான் ஜமால்.

"அமெரிக்காவோட வளர்ச்சிக்கு நாங்கள்ளாம் உசிரைக் கொடுத்ததனால தானே இப்போ நீங்கள்ளாம் இப்படிப் பேச முடியுது?"

"மசுரைக் கூடத் தரலே நீ.. என்னாத்த உசிரைக் கொடுத்தேன்றே?"

"வாய மூடு. என் சர்வீஸ் ரெகர்ட் பாக்கறியா? DD214 காமிக்கட்டுமா? வியட்காங்ல..."

"ஆரமிச்சுட்டான்யா.." என்றான் எமிலியோ. "ரான்.. இதையே எத்தனை நாள் சொல்லிட்டிருப்பே?"

"இல்லப்பா.. இந்த நாட்டுக்கு நாங்கள்ளாம் எவ்வளவு செஞ்சிருக்கோம்னு புதுசா வந்தவங்களுக்குத் தெரியணுமில்லே? நேத்து வந்துட்டு என்னமோ குதிக்கறானுவ.. இன்னிக்கு அவனவன் எல்லா நாட்டுலந்தும் வந்து இங்க சுதந்திரமா இருக்கானு சொன்னா அதுக்கு அமெரிக்க மதிப்புதானே காரணம்? அந்த மதிப்பைக் காப்பாத்த எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம்?! அப்படி உழைச்ச எங்களுக்கு ஒரு நன்றி.."

"..அதனால் தானே உன் மெடிகேருக்கும் சோஷல் செக்யூரிடிக்கும் நாங்க வரி கட்டி அழுவுறோம்? ..க்காலோழிங்க எங்க வயசான காலத்துல சுத்தமா தடவி வச்சுறப்போறீங்க.. எல்லாம் சரியாப் போச்சு கணக்குல" என்றேன்.

"அப்படிச் சொல்லுபா.. இந்த வெள்ளைக் கெழபாடுங்க சாவுற வரைக்கும் புலம்பிட்டிருப்பாங்க.. செத்தப்புறமும் புலம்புவானுக.. அதுக்கும் நாமதான் வரி கட்டணும்" என்று சேர்ந்து கொண்டான் ஜமால்.

அதுவரை அமைதியாக இருந்த ரஷாத், "அமெரிக்காவை வெறுக்கிறேன்" என்றான். "இது உலகத்தின் மோசமான தேசம்".

"ஏன் அப்படிச் சொல்லுறே?" என்ற ரான், ரஷாத்தை இடித்தான். "உன்னை யார் இங்கே வரச்சொன்னது? பிடிக்கலேன்னா ஊருக்கு ஓடிரேன்?"

"அவன் மனசுல பட்டதைச் சொல்றான், உனக்கென்னப்பா? அவனுக்குப் பேச உரிமை இருக்குது, பேசுறான்" என்றான் ஜமால்.

"ஆமாய்யா.. அவனவன் எங்கிருந்துனா வருவீங்க.. இஷ்டத்துக்கு எதுனா சொல்வீங்க.. அமெரிக்கால கால் வச்சதுமே பேச்சுரிமை மசுரும்பிங்க.. யூட்யூப்ல பேதிக்கிருப்பீங்க.. உங்க வாந்தியைப் பாத்துட்டு வெளில எவனா அமெரிக்கா ஒழிகனு தீ வப்பான்.. த்தா.. உங்களுக்கு உரிமையக் குடுத்துட்டு நாங்க இல்லே சாவறோம்?"

"நீங்க சாவுறீங்களா? அப்ப நாங்கள்ளாம் என்ன நாய் மூத்திரமா ரான்?" என்றான் வில், கடுப்புடன்.

"வெள்ளைத்தோல் இல்லே? அப்படித்தான் பேசும்.." என்றான் ரஷாத்.

பலமாகச் சிரித்த ஜமால், "வெள்ளையா இருக்குற வரைக்கும் தான் அமெரிக்கா.. மிச்சவனுங்கெல்லாம் ஊம்பறானுங்கனு நெனப்பு.. இங்கயே பொறந்து வளந்த எனக்கே அப்படித் தோணுறப்ப இவனுக்கு ஏன் தோணாது?" என்று சேர்ந்து கொண்டான்.

"உங்களையும் சேத்துத்தான் சொன்னேம்பா. காலம் மாறிட்டு வருதே? பழைய கதையை ஏன் இழுக்குறீங்க?" என்றான் ரான்.

"என்னா பழைய கதை? தெருவுல போனா என் காரை நிறுத்துறான் போலீஸ்காரன். கடைத்தெருவுல நின்னா எங்களை மட்டும் தனியா கண்காணிக்கிறாங்க. தாயொழிங்க வெள்ளைக்காரனை எதுனா கேக்குறாங்களா? இதெல்லாம் இன்னும் நடந்துட்டு தானே இருக்குது?" என்றான் ஜமால்.

"அதானே?" என்றான் வில். "நான் ஏர் ஃபோர்ஸ்ல இந்த நாட்டுக்காகப் போராடியிருக்கேன். பீமர் ஓட்டுறேன். வண்டில வெட் ஸ்டிக்கர் இருக்குது. அப்பவும் தெருவுல என் காரை நிறுத்தி ட்ரங்கைச் சோதனை போடுறானுங்க.. வெள்ளைப் போலீஸ் ஓத்தானுங்க"

"புதுசா எத்தினியோ பேருங்க வராங்க.. வெளியில எதிரிங்க இருந்தாங்க.. இப்ப உள்ளுக்குள்ளயே வந்துட்டாங்க.. யாரு எதிரினு எப்படித் தெரியும்? இதா.. நம்ம ஆளு கூட டமில் டைகரா இருக்கலாம்" என்று என்னை இடித்தான் எமிலியோ.

"வாயை மூடு லத்தீன் லத்தி" என்றேன் எரிச்சலுடன். எல்டிடிஈ அமைப்பினால் நான் பட்டக் கஷ்டங்களை நிறையச் சொல்லியிருக்கிறேன். வேண்டுமென்றே இடிக்கிறான்.

"..அதுக்கில்லேபா.. யாரா இருந்தாலும் பாதுகாப்பு வேணுமில்லே? ஒரு போலீஸ்காரன் நாலு பேரை நிறுத்துறப்ப ஒரு நல்லவனும் மாட்டத்தான் செய்வான்.. சண்டை போடுறப்ப நாலு சிவிலியன் சாவலியா?" என்றான் ரான்.

"இன்னிக்குத் தெருவுல நடந்தா வெள்ளையனுக்கும் கறுப்பனுக்கும் இருக்குற பாதுகாப்பு லத்தீன், சைனா, இந்தியாக்காரங்களுக்குக் கிடையாது.. காலம் மாறிட்டுத்தான் வருது.." என்றேன். "இந்தியப் பொண்ணுங்களை உங்க ஆட்கள் பாக்குற பார்வையை தினம் நானும் பாத்துட்டுத்தான் இருக்கேன்" என்றேன்.

"எங்கே பார்த்தாலும் இனவெறி. ஒண்ணுக்கு இருக்குறதுலந்து அரசாங்கம் எல்லாத்தையும் கண்காணிக்குது. கேட்டா.. சுதந்திரம்னு கதை உடறாங்க. அமெரிக்காவுக்கு ஏன் வந்தோம்னு தோணுது..." என்றான் ரஷாத்.

"யேசுவை மதிக்கிற நாளில் எல்லாம் சரியாயிடும். இது யேசு பூமி.."

"முண்டம்.. இது யேசு பூமியில்லை. எகிப்திலிருந்து இஸ்ரேல் வரைக்கும் எங்கேயோ யேசு பூமி. இப்போ அதுல தானே அடிதடி? சரித்திரம் படிக்கலியா? இல்லே  ந்யூஸ் புரியலியா?" என்றேன்.

"ஃபக் யூ.. இந்துக்களுக்கு உங்க நாடு இருக்கு. முஸ்லிம்களுக்கு அவங்க நாடுங்க. புத்திஸ்டுக்கு அவங்க நாடு. கம்யூனிஸ்டுக்கு அவங்க நாடு.. அது போல இது கிறுஸ்தவ நாடு.. இங்க வந்துட்டா இந்த நாட்டையும் இந்தக் கடவுளையும் மதிக்கணும்.. திஸ் இஸ் அமெரிக்கா.. திஸ் இஸ் அவர் லேன்ட்.. திஸ் இஸ் அவர் காட். எங்க நாட்டையும் எங்க கடவுளையும் மதிச்சா தாராளமா வாங்க. பிடிக்கலியா? ஊரைப் பாக்க ஓடுங்க.. ஓடுகாலி நாடுங்களுக்கு அள்ளி அள்ளிக் குடுத்து எங்க நாட்டுக்கு என்ன லாபம்? எங்களுக்கு அமெரிக்காவும் யேசுவும் போதும். இது யேசு ஆசீர்வதிச்ச பூமி..".

ரான் உணர்ச்சி வசப்பட்டிருந்தது புரிந்து நாங்கள் சற்று அமைதியானோம்.

திடீரென்று, "ஃபக் யூ, ஃப்க் யுர் ஃபக்கிங் கன்ட்ரி, அந்ட் ஃபக் யுர் ஃபக்கிங் காட்" என்றான் ரஷாத் கோபமாக, நடுவிரலை உயர்த்தி.

நாங்கள் அனைவருமே அதிர்ந்தோம். ஒரு வரியில் இத்தனை ஃபக் சேர்த்துப் பேசிக் கேட்டதில்லை என்று எனக்குத் தோன்றியது. சில நொடிகள் அறையில் அமைதி. ரஷாத்தின் ஆவேசம் ஏற்கப்படவில்லை. ரானின் முகம் ஸானா அடுப்பை விடச் சிவந்துவிட்டது.

தன்னைச் சொன்னாலும் பரவாயில்லை - தன் கடவுளை - இன்னொருவன், அதுவும் முஸ்லிம், தெருவழக்கில் ஓத்தா ஒம்மா என்றால் எந்தக் கேதலிக் வலதுசாரி அமைதி காப்பான்? ரான் வெறியுடன் ரஷாத்தின் முகத்தில் தன் மண்டையால் இடித்தான். திக்குமுக்காடிப் போன ரஷாத் சுவற்றில் சாய்ந்து நிலைபெறுவதற்குள் ஜமால் ரான் மேல் பாய்ந்து, ரானின் இடது முழங்கையை ஸானா அடுப்பில் வைத்துத் தேய்த்தான். நொடிகளில் கை தீய்ந்து எலும்பு வரை ரத்தமும் சதையும் சூட்டில் கருகி, காய்ந்த ரத்தவாடை அறையுள் பரவியது. ரான் அலறினான். வில் ரானையும், நான் ஜமாலையும் பிரிக்கப் பார்த்தோம். ரான் திமிறி ரஷாத்தின் முகத்தில் எட்டி உதைத்தான். "முஸ்லிம் பொறம்போக்கு.. என் நாட்டுக்கு வந்து என் கடவுளையா அப்படிப் பேசுறே? ஹோமோத் துக்கிரி" என்று காறித் துப்பினான். ஜமால் என்னை உதறியதில் நான் தடுமாறிக் கதவில் முட்டி.. இதோ என் வழுக்கைத் தலையில் இங்கே அடிபட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. நான் விழுவதைப் பார்த்த எமிலியோ, ஜமாலைப் பிரித்துத் தனிக்கட்டப் பார்த்தான். ஜமாலுக்கு வந்த எரிச்சலில் வில்லைத் திட்டினான். "..த்தா.. நீயெல்லாம் கறுப்பனா? இந்த வெள்ளைப் பன்னியைக் காப்பாத்துறியே?" என்று வில்லை நோக்கித் துப்பினான். ரான் சும்மா இராமல், "எத்தனை கறுப்பனுக வந்தாலும் வாங்கடா.. வரிசையா வந்து ஊம்புங்க" என்று மறுபடி ஜமாலை உதைக்கப் போக, ஜமால் ரானின் காலைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றினான். வில், ரான் இருவருமே தடுமாறி விழுந்தார்கள். அதுவரை ஒத்துழைத்த வில் இப்போது கட்சி மாறி ரானை ஏசினான். நான் என் தலைக்காயத்தை அழுத்தியபடி, "பொறுமை.. தயவுசெய்து நிறுத்துங்க.. இது விபரீதமா போயிட்டுது" என்றேன். "இந்தப் பீ மூஞ்சிய எவன் உள்ளே விட்டது?" என்று என்னைத் தள்ளிவிட்டு, ரான் மறுபடி ஜமாலை இடிக்கப் போனான்.

ரஷாத் அருகேயிருந்தப் பொட்டலத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து எங்கள் முன் வெறியோடு நின்றான். அசல் யு22 நியாஸ் பெரட்டா! மேன்! யூ நோ.. ஃபக்.. நாங்கள் ஆடிப்போனோம்! அந்தக் கணத்தில் நாங்கள் எல்லோருமே விளிம்பைத் தாண்டி விட்டோம் என்று நினைக்கிறேன்.

எமிலியோ ரஷாத்தை அமைதிப்படுத்த முனைந்தான். நான் கதவருகே நின்றிருந்தேன். 'கடவுள் மதக் கண்றாவி எப்படியெல்லாம் படுத்துது! முட்டாள் சுட்டுருவானா?' என்றுக் கலங்கினேன். ஜமாலும் வில்லும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. ரஷாத்தின் குரலில் தீவிர ஆத்திரம். "ஜமால், இந்த வெள்ளைச் சூத்தை இன்னிக்குப் பதம் பாக்கப் போறேன். எனக்கு வெள்ளைத் துளை வேணும்" என்றான். துப்பாக்கியை வேகமாக ஆட்டினான்.

"ஸ்டாப் இட்!" என்று நானும் எமிலியோவும் அலறினோம். ஜமால் குரூரப் புன்னகையுடன், "ரான்.. முஸ்லிம் சுன்னி எப்படி இருக்குதுனு பாக்குறியாடா, கேதலிக் பன்னி?" என்றான்.

"வேண்டாம்.. ஜமால்.." என்று வில் அவனைத் தடுத்தான். "எல்லாத்தையும் மறந்துடுவோம்.. ப்லீஸ்.. இன்னிக்கு நாள் சரியில்லனு போயிருவோம்".

"நோ ஷிட்.." என்ற ரஷாத், ரானை வயிற்றில் எட்டி உதைத்தான். இதை எதிர்பார்த்தது போல் ரான் சற்று ஒதுங்கி வயிற்றால் ரஷாத்தின் கால்களைத் தாங்கித் தள்ளினான். ராணுவப் பயிற்சி. ரஷாத்தின் கையிலிருந்தத் துப்பாக்கி எகிறி ஸானாப் பெஞ்சின் மேல் தளத்தில் எங்கேயோ விழுந்தது. நான் ரஷாத்தை அடக்க விரைந்தேன். வில் ரானை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

ரான் ஒரு நிலையில் இல்லாமல், கத்தத் தொடங்கினான். முழங்கைப் புண் மூளைக்கேறியிருக்க வேண்டும். "என் நாட்டை விட்டுப்போங்க எல்லாரும். ஃபக் யூ ஆல் ஹீதன்ஸ். பொன்னாள் வரும்போது நீங்க எல்லாருமே என் ஜீசஸுக்கு கைகட்டிச் சேவை செய்வீங்க" என்று காறித் துப்பினான். திமிறினான்.

எமிலியோ "நான் போலீஸைக் கூப்பிடுறேன்" என்று சட்டென்று கதவைத் திறந்து ஓடினான்.

"வில், இவன் கையைப் பிடிச்சுக்க" என்றான் ஜமால். ஜமாலும் வில்லும் ரானைப் புரட்டி நிற்க வைத்துச் சாய்வாகப் பிடித்துக் கொண்டார்கள். என் முகத்தில்.. இதோ இங்கே.. இடித்து என்னை உதறிய ரஷாத், ரானின் பின்புறத்தை நெருங்க, ரான் அலறினான். "ஹெல்ப். கெட் ஹெல்ப்! என்னால் இந்தக் கறுப்புப் பன்றிகளை சமாளிக்க முடியும்" என்று திமிறினான். பின் காலால் வில்லின் ஆண்குறியில் சரியாக உதைத்தான். ஜமால் ரானை வெறியோடு ஸானா அடுப்பின் மேல் தள்ளினான். மறுபடி ரானை பெஞ்ச் அருகே நிற்க வைத்தார்கள். வில் ரானின் கால்களை அகற்றிப் பரப்பினான். "ரஷாத்... வா, வந்து மாடாட்டம் இவனை ஏறு" என்றான் ஆத்திரத்துடன். ரான் மீண்டும் திமிறினான்.

நான் சுற்று முற்றும் பார்த்துவிட்டு செய்வதறியாமல் தவித்தேன். ஏதோ தோன்றியது. உதவி தேடலாமென்று, சட்டென்றுக் கதவைத் திறந்து ஓடினேன். ஸானா அறை, நீச்சல் குளம் எல்லாம் கடந்து மாடியேறி வருகையில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. நான்கு அல்லது ஐந்து முறை, சரியாகக் கவனிக்கவில்லை. திரும்பலாமா என்றுத் தயங்கினேன். அதற்குள் எமிலியோ செக்யூரிடி ஆட்களுடன் வருவதைப் பார்த்தேன்.

நாங்கள் ஸானா அறைக்குள் நுழைந்த போது, வில் மார்பில் சுடப்பட்டிருந்தான். ஜமால் கழுத்தில் சுடப்பட்டிருந்தான். இருவரும் இறந்து விட்டார்கள் என்று தெரிந்தது. ரான் தொடையில் சுடப்பட்டு, ஸானா அடுப்பின் மேல் விழுந்திருந்தான். செக்யூரிடி ஆள் ஆனை அவசரமாகப் புரட்டித் தள்ளினான். ரானின் மார்பெல்லாம் தீப்புண். சுட்டுப் பொசுங்கியிருந்தது. "ஜீசஸுக்குப் பெருமை" என்று முனகலாக ஜெபித்துக் கொண்டிருந்தான். அருகே ரஷாத் முன் மண்டையில் சுடப்பட்டுக் கிடந்தான். கைகளும் உதடுகளும் துடித்துக் கொண்டிருந்தன.

சொல்லி முடித்து என் வக்கீலைப் பார்த்தேன். எனக்கு மட்டும் புரிகிற பாணியில் புன்னகை செய்தான். அரசாங்க வக்கீல் கொடுத்தத் தண்ணீரை நன்றியுடன் வாங்கிப் பருகினேன். எல்ஐ வெலவெலத்துப் போயிருந்தது அவள் முகத்தில் தெரிந்தது. இன்றிரவு இவள் தூங்கினாற் போல்தான். என்னைத் துணைக்குக் கூப்பிட்டால் போகலாம் என்று நினைத்தக் கணத்தில், போலீஸ்காரன் இன்னும் அவள் இடுப்பைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். குரல் கனைத்த அரசு வக்கீல், "நன்றி" என்றான்.

"அப்ப நான் கிளம்பலாமா? தலைக்காயம் கண்ணைக் கட்டுது. ஓய்வெடுக்கணும்" என்றேன். வக்கீல் சொல்லிக் கொடுத்திருந்தான்.

"நீங்க குடுத்த டெபொசிஷன் நகலை உங்க வக்கீல் கிட்டே சேர்க்குறப்ப ஏதேனும் வேறே கேள்விகள் இருந்தால், உங்க வக்கீல் வழியா சொல்லியனுப்புறோம்" என்ற அரசு வக்கீல், தன் குறிப்புக்களை அவசரமாகப் பார்த்தான். பாவி! நான் சொன்னதை நோட்ஸ் வேறு எடுத்திருக்கிறான். "இப்போதைக்கு ஒண்ணு ரெண்டு கேள்விங்க" என்றான். என் வக்கீலின் ஷூ, என் ஷூவை நெருங்குவதை உணர்ந்தேன்.

"உதவி தேடி ஓடுறதுக்கு முன்னே ஏதோ தோணிச்சுனு சொன்னீங்களே, என்ன நினைச்சீங்க?"

"அ.. அ.. அவங்கள அப்படியே விட்டு ஒடுறதானு ஒரு சந்தேகம்.. பயம்.. அவங்களைப் பிரிக்கலாமா, ஓடி உதவி கேட்கலாமானு தான்.."

என்னை ஆழமாகப் பார்த்தான் அரசு வக்கீல். "துப்பாக்கி எகிறி விழுந்துச்சுனு சொல்றீங்க... எப்படி யார் கைல கிடைச்சிருக்கும்னு நினைக்கிறீங்க?"

ஷூ ஒரு வினாடி அழுத்த, "தெரியாதுங்க" என்றேன்.

"உதவி கேட்டு வரும்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டுச்சுனு சொன்னீங்க.. விட்டு விட்டுக் கேட்டுச்சா? எத்தனை நொடி இடைவெளி? ஸானா அறையிலந்து மாடிப்படிக்கு ஓடி வர எத்தனை நேரமெடுத்துக்கிட்டீங்க?"

ஷூ சற்று பலமாக அழுத்த, "எனக்கு அப்ப இருந்தப் பதட்டத்துல சரியாக் கவனிக்கலிங்க.." என்றேன்.

"பெரட்டா யு22னு தெளிவா சொல்றீங்க? உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"நான் ரஷாத் பக்கத்துல நின்னுட்டிருந்தேன். கண் முன்னால துப்பாக்கிய ஆட்டிட்டிருந்தான்.. துப்பாக்கி லோகோ பார்த்தேன்"

"ஸானா அறையிலந்து மாடிப்படி வரை ஓடி வந்தாலும் ரெண்டு நிமிஷம் ஆகியிருக்கும்.. நாலஞ்சு தடவை வெடிச்சத்தம் கேட்டும் நீங்க தொடர்ந்து ஓடி வந்தீங்களா? ஏன்?"

"பயம்"

"நீங்க துப்பாக்கி வச்சிருக்கீங்களா? உங்க பேர்ல ரெஜிஸ்டர் பண்ணியிருக்கீங்களா?"

வக்கீல் குறுக்கிட்டு, "இந்தக் கேள்விக்கு என் க்லையன்ட் பதில் சொல்ல வேண்டியதில்லை" என்றான்.

"நீங்கள் கடவுள் மத நம்பிக்கையற்றவர்னு சொன்னீங்க.. அப்படி நம்பிக்கையுள்ளவர்களை நீங்கள் வெறுக்கறீங்களா?"

வக்கீல் மீண்டும் குறுக்கிட்டு, "இந்தக் கேள்விக்கு என் க்லையன்ட் பதில் சொல்ல வேண்டியதில்லை" என்றான்.

'இதென்ன.. என்னைக் குறுக்கு விசாரணை செய்கிறார்களே? போக்கு சரியில்லையே?' என்றுக் கலங்கினேன்.

அதற்குள் என் வக்கீல் எழுந்தான். உடனே நானும் எழுந்தேன். குறிப்புப் புத்தகத்தை மூடி, "நன்றி. டெபோசிஷன் ஓவர்" என்றான் அரசு வக்கீல். "வழக்கு முடியும் வரை உங்க வக்கீல் அனுமதியில்லாம நீங்க வெளியூர் எங்கேயும் போக முடியாது".

    மேற்சொன்ன விவரங்கள் தொடர்பான 'படுகொலைகள்' பற்றி, உங்களில் சிலர் சிகாகோ புறநகர் டிவி பத்திரிகை அல்லது இணையம் வழி அறிந்திருக்கலாம். பெயர்தான் படுகொலையே தவிர, வழக்கு கோர்ட்டுக்குக் கூடப் போகவில்லை. ரானும் ரஷாத்தும் ஆஸ்பத்திரியில் இறந்து போனார்கள். ரானின் வலது கைவிரல்களில் துப்பாக்கி துகள் படிந்திருந்ததால், ரான் மற்றவர்களைச் சுட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றார்கள். ரஷாத்தின் விரல்களிலும் துகள் இருந்ததால், ரானை ரஷாத் சுட்டிருக்கலாம் என்றார்கள். எத்தனை தேடியும் துப்பாக்கியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸானா அடுப்பின் நடுவிலிருந்து உருத்தெரியாது உருகிப் போன சில உலோகத்துண்டுகளைக் கண்டெடுத்தார்கள். அது துப்பாக்கியா என்று ஆராய்வதற்குள் ரான் ரஷாத் மரணங்கள் சேர்ந்து கொள்ள, வழக்கை மூடிவிட்டார்கள். "துரதிர்ஷ்டமான இனவெறி விளைவுகள்" என்றார் கமிஷனர். என்றார் மேயர்.

    மூன்று மாதங்கள் கழித்து, இறந்த குடும்பங்கள் சார்பில் பொது இரங்கல் ஏற்பாடு செய்திருந்தார்கள். கேதலிக் ப்ராடஸ்டன்டு பாதிரிகள், ஒரு உள்ளூர் இமாம் என்று வரிசையாக தெய்வச்செய்தி சொன்னார்கள். உள்ளூர் காங்கிரஸ்காரன் தலைமை தாங்கிப் பேசினான். "ரானைக் கொன்றது கொலஸ்டிரால் அல்ல. வில் இறந்த காரணம் அவருக்கு இருந்த டயபடீசோ, அல்லது ஜமாலைக் கொன்றது அவருடைய ப்ராஸ்டேட் தொந்தரவோ அல்ல. வாலிபன் ரஷாத்துக்குத் தலைவலி கூட வந்ததில்லையாம். எனில், இவர்களைக் கொன்றது எந்த வியாதி? அன்பர்களே, சிந்தியுங்கள்! நாம் வணங்கும் கடவுளுக்குப் பல பெயர்கள், பல உருவங்கள். நம்மை வழி நடத்தும் மதங்களுக்குப் பல பெயர்கள், பல வேதங்கள். எனினும், நாம் எல்லோரும் ஒரு கடவுளின் பிள்ளைகள் என்பதை மறக்கும் பொழுது விபரீதங்கள் ஏற்படுகின்றன. மனிதம் எனும் பொதுமதத்தின் உறுப்பினர்கள் என்பதை மறக்கும் பொழுது கேடு விளைகிறது. நமது அமெரிக்காவின் பார்வையில் பேதம் கிடையாது. வீ ஆர் ஒன் நேஷன் அன்டர் காட். எல்லா மதங்களும் இங்கே அமைதியையே பாதையாகக் காட்டுகின்றன. பயணம் போகும் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்" என்றுப் பேசி அனைவரையும் கவர்ந்தார் மேயர். சில கண்ணீர்க் கண்களைப் பார்த்தேன். ரானின் விதவை, இறந்த அனைவருக்கும் சேர்த்து உரத்தப் பிரார்த்தனை செய்தாள். இதையெல்லாம் ஒதுக்கி ஜமாலின் பிள்ளை வில்லின் பெண்ணுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். சடங்குகளில் தளர்ந்து போன ரானின் பேரப்பிள்ளைகள், ஜமால் உறவினர் ஒருவர் மடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. திடீரென்று அல்லாவும் யேசுவும் கூடி உலக சமாதானம் பேசுவது போல் பட்டது. என் கண் முன்னே ரான், ரஷாத், வில், ஜமாலின் மதவெறியும் இனக்காழ்ப்பும் கொலாஜ் கட்டி ஆடின. இங்கே சர்வமதச் சமாதான இரங்கல், அதே வெறியர்களின் நினைவில்! என்னால் பொறுக்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்து, இரங்கல் விருந்தினருக்குத் தர வேண்டிய பழத்தட்டுகளில் உதிர்ந்த திராட்சை, ஸ்ட்ராபெரி என்று அடுக்கத் தொடங்கினேன்.


[பின் கதை]

    நாலைந்துப் பழத்தட்டுக்கள் அடுக்கியிருப்பேன். அதுவரை என்னுடன் பேசாத எமிலியோ மெள்ள என்னருகே வந்து நின்றான். "ப்ரோ" என்றேன். அவன் எதுவும் சொல்லவில்லை. நான் அவனை உந்தாமல் பொறுமையாக இருந்தேன். ஒன்றிரண்டு பிள்ளைகள் பழத்தட்டு எடுக்க வந்தனர். அவர்கள் விலகியதும் எமிலியோ பலத்தப் பெருமூச்சு விட்டான். புன்னகைத்தேன்.

"ஜிம் பக்கம் போனியா?" என்றான்.

"இல்லை.. அங்கே போனா மனசு ரொம்ப பாதிக்கும்"

"எனக்கும். நேத்து மெம்பர்ஷிப் கேன்சல் செய்யப் போயிருந்தேன். ஸானா அறையை சுத்தமா இடிச்சுட்டாங்க. வேறே ஓபன் வ்யூ ஸானா கட்டப்போறாங்களாம்"

"அப்படியா?"

சிறிது மௌனம்.

"உலோகத் துண்டுகள் துப்பாக்கியினதல்லனு சொல்லிட்டாங்க.." என்றான்.

"படிச்சேன்"

"நாலு பேரும் இறந்துட்டாங்க. துப்பாக்கியும் காணோம். வழக்கே இல்லை"

"படிச்சேன்"

உடைந்தான். "காரணமே இல்லாம.. எதுக்காகச் செத்தாங்கனு ஒரு சின்னம் கூட..", அவன் குரல் கம்மத் தொடங்கியது.

அடங்கிச் சிறிது மௌனத்துக்குப் பிறகு என் மிக அருகில் வந்தான். "தப்பா நினைக்காதே. நாம் இனி நண்பர்களாக இருக்க முடியாது என்று சொல்லத்தான் வந்தேன்" என்றான்.

அதிர்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தேன்.

என் கண்களை நேராகச் சந்தித்து, "என் மதம் எனக்கு முக்கியம் என்றாலும், அதற்காகச் சாக விருப்பமில்லை" என்று மெள்ள விலகினான். வேகமாக நடந்து மறைந்தான். என் கையில் பழத்தட்டு நடுங்கியது.

18 கருத்துகள்:

  1. பெயரில்லாஅக்டோபர் 01, 2012

    பல வரிகளில் எழுத்தின் வலிமை மனதை அடித்து நிறுத்தியது. மிகவும் கனமான கரு. பாத்திரங்களின் படைப்புகளும், கதையை கொண்டு சென்றிருக்கும் விதமும் அழகு. கதையை முடித்திருக்கும் விதம் மிகவும் பிடித்தது. எழுத்து நடை வரிக்கு வரி உங்கள் பாணியை சொல்லி செல்கிறது.

    பதிலளிநீக்கு
  2. Very powerful. ஆனா நீங்க யாருனே எனக்கு தெரியாது.

    பதிலளிநீக்கு
  3. அட்டகாசம் அப்பாதுரை... மிக கனமான பாத்திர படைப்புகள் .. கதைத் தளமும் அதே போல்

    பதிலளிநீக்கு
  4. அப்பாதுரை அவர்களே! ஸ்டேன் பெக் நோபல் பரிசு பெற்றவர். அவருடைய நாவல் பெயர் நினைவு வரவில்லை,"Gods lIttle -----" என்று வரும். அவருடைய வேறு சிலபடைப்புகளையும் படித்திருக்கிறேண்.அவர் எழுத்துக்களின் கொச்சைதனத்தின் நவீன வடிவம் போல இருக்கிறது. Depression காலத்தைச்சித்தரித்ததாக சொல்வார்கள். நீங்கள் கலாச்சாரச்சீரழிவை சித்தரித்துள்ளீர்களோ என்ற ஐயமெனக்கு உண்டு.கதையின் நோக்கம் ஈடேறவில்லை என்று படுகிறது.யதார்த்தம் என்ற பெயரில் அதீதமான உரிமை எடுத்துக்கொண்ட படைப்பு---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  5. தங்களுக்கே உரிய எழுத்து. மதவெறியை சுட்டுத் தள்ளியிருக்கிறீர்கள்.உரையாடல்களில் கொஞ்சம் ஓவர் தான்

    பதிலளிநீக்கு
  6. உங்க கொள்கைக்கு ஏற்ற மாதிரி களம் அமைச்சு கதை சொல்றதுல ஜெயிச்சிட்டிங்க ....
    கதை பாத்திரங்களை மத வெறியோட மதுவையும் ஊற்றி படைத்து விட்டீர்கள் என நினைக்கிறேன் ( இங்க ஸ்மைலி போட விரும்பவில்லை ).
    ஒன்று புரிகிறது , முதல்ல குழந்தைகளுக்கு செய்தி சொல்லற மாதிரி களம் அமைத்து , அப்புறம் upgrade ? செய்து இருக்கிறீர்கள்
    கடவுளும் மதமும் உங்களை அதீதமாக எரிச்சல் படுத்துவது தெளிவாக தெரிகிறது ....

    பதிலளிநீக்கு

  7. க்தை சொல்லிய விதம், நடை, ஒரு spontaniety,எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ஆனால் பகிர்ந்து கொள்ள விரும்பிய எண்ணக்கள் இலக்கை அடைந்தனவா...சந்தேகம்தான். The profanity is abundant but of little use. கதை நீஈஈஈஈ ளமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_3.html) சென்று பார்க்கவும்...

    நன்றி…

    பதிலளிநீக்கு
  9. வார்த்தைகளால் பயமுறுத்துகிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  10. அசத்தலான நடை ..பத்திரிகைத்துறையிலிருந்தால் இந்நேரம் தமிழ் மக்கள் அனைவரிடமும் பிரபலமாகிஇருப்பீர்கள்..சற்றே மிகையான ஆங்கில வசவுகள் ஆனால் கதைக்குத்தேவையாக உள்ளதே.. விறுவிறுப்பான நடை. முடிவும் அசத்தல். பாராட்ட வார்த்தை இல்லை அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  11. பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி. அடுத்த கதையில் 'வார்த்தைகள்' ஒன்றிரண்டைக் குறைத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. //அடுத்த கதையில் 'வார்த்தைகள்' ஒன்றிரண்டைக் குறைத்துக் கொள்கிறேன்.//

    எந்த இரண்டு?! :))

    அப்போ இந்த 'நான்'தான் சுட்டதா? எனக்குப் புரியவில்லை. மதங்கள் மதம் பிடிக்க வைத்தது என்றால், மத நம்பிக்கை அற்ற இந்த 'நான்' எப்படி எப்படி மதம் பிடித்துச் சுட்டிருக்கும்?

    பதிலளிநீக்கு
  13. //கருத்தும் நடையும் முதிர்ந்த வாசகருக்கானவை//

    இந்த‌ப் ப‌திவு இத‌ற்கான "சாட்சாத் சாட்சி"

    முதிர்ச்சி அடைந்த‌வ‌ர்க‌ளுக்கான‌து.
    சின்ன‌ப் ப‌ச‌ங்க‌ இந்த‌ வெளையாட்டுல‌ருந்து வெலகிருங்க‌

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள திரு அப்பாதுரை அவர்களுக்கு,
    நாளை முதல் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்கிறேன்.

    எனது அறிமுகத்திலேயே உங்களையும் குறிப்பிட்டுள்ளேன்.

    படித்துவிட்டு உங்கள் கருத்துரைகளையும் சொன்னால் மிகவும் சந்தோஷப் படுவேன்

    அன்புள்ள
    ரஞ்ஜனி

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லாஅக்டோபர் 12, 2012

    Che enga pOnAlum Indianukku polappu nadattha kuppaya allurathum, pIthuniya sutham pannurathume velayApOchi.

    Kathayil muthirchiyai vida melliya nunnunarvugal maruthuppona oru vAlibanadai therigirathu.

    பதிலளிநீக்கு
  16. நினைத்தே பார்க்க முடியவில்லை. இப்படியெல்லாம் இப்பமட்டுமல்ல எதிர்காலத்தில் கூட எழுத முடியுமா என்று?

    பதிலளிநீக்கு
  17. பதிவுகளைத் தேடிப்படித்து ரசித்துப் பின்னூட்டமிடும் ஜோதிஜி - ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு