2012/09/01

'மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்'





    "கவிதைகளைப் புத்தகமாக வெளியிட, நிறையப் பதிப்பகங்கள் விரும்புவதில்லை" என்று சில பதிப்பக உரிமையாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பல்வேறு காரணங்கள் சொன்னாலும், யதார்த்தமானதாகத் தோன்றிய இரண்டு காரணங்களுள் ஒன்று: "கதை, நாவல்னு சொன்னா ஒரு சுருக்கத்தை அட்டையிலயோ கதையோட தொடக்கத்துலயோ போட்டு, படிக்கிறவங்களை கொஞ்சம் ஈர்க்க முடியும். பத்து வரிக் கவிதையில என்னாத்த சுறுக்குறது? பத்து பதினஞ்சு வரின்னு அம்பது கவிதைங்கள எழுதிடறாங்க. அதுல ரெண்டோ மூணோ படிச்சு முடிச்சதும் 'ஆகா'னு சொல்லத் தோணுது. யாருக்கு எந்த ரெண்டு மூணுல 'ஆகா' கிடைக்குமுன்னு சொல்ல முடியாது. கவிதைப் புத்தகம் வாங்குறவங்க மொதல் பக்கங்களைப் புரட்டிப் பாக்குறாங்க. அவங்களோட 'ஆகா' முதல் அஞ்சு கவிதைங்கள்ள வரலின்னா அந்தப் புத்தகத்தை வாங்க மாட்டாங்க.. கவிதை வெளியிடறது வணிக நோக்குல பாத்தீங்கன்னா சொந்த செலவுல சூனியம் வச்சுக்கறாப்புல.. ரொம்ப நஷ்டம்..".

கவிதை எழுதுவது சிரமம் என்றால், படிப்பது இன்னும் சிரமம் என்பது என் கருத்து. கருவை வெளிப்படையாகச் சொன்னால் அதன் எளிமையே கவிதையின் எதிரியாகிவிடுகிறது. கொஞ்சம் மறைபொருளாகச் சொன்னாலோ, புரியாத எழுத்தாகிச் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சிறுகதையின் "ஓட்ட" வசதி, கவிதையில் இல்லை என்று நினைக்கிறேன் - கதையைக் கவிதையாகச் சொன்னாலொழிய. அதனால் கவிதை எழுதுவோர் மீது கொஞ்சம் பரிதாபமும் நிறைய பிரமிப்பும் உண்டாகிறது (எனக்கு).

பத்மஜா நாராயணன் என்னை அடிக்கடி பிரமிக்க வைத்தார் என்பேன்.

    ழுபது கவிதைகளின் தொகுப்பான 'மலைப்பாதையில்..', ஒரு ரயில்/விமானப் பயண அலுப்பு நீக்கியாகவோ அல்லது தூக்கம் கலைந்த மதியப் பொழுதின் தேநீர்த் துணையாகவோ, இதமாக இணைந்து கொள்ளும் புத்தகம். அரை மணியில் புரட்டிவிடலாம். பிடித்த ஆகா கவிதைகளைத் திரும்பி ரசிக்கலாம். நிறைய ஆகா கவிதைகள் இருந்தாலும், என் ஆகா கவிதையை எழுபதாவது கவிதையாகக் கொடுத்திருக்கிறார் பத்மஜா. (நல்ல வேளை, புத்தகங்களை கடைசிப் பக்கத்திலிருந்து மேலோட்டமிடும் வழக்கம் எனக்கிருக்கிறது! :-)

'காலோவியம்' என்ற அந்தக் கவிதையின் கடைசி நான்கு வரிகள் தேவையில்லையோ என்று தோன்றினாலும், மிகவும் ரசித்தக் கவிதை.
        சிறிது மூடியிருந்த
        கதவின் இடையில்
        தெரிந்த
        உன் பாதங்களுக்கேற்ற
        முகத்தை
        நான் மனதில்
        வரைந்துவிட்டேன்.
            வரைந்த அது
            சிதையப்போகிறது
            தயவுசெய்து
            என் கண்படாமல் போ நீ!

    'ஒவ்வொரு புடவையும் நெய்யப்படும் போதே தான் யாருக்கெனத் தீர்மானித்துக் கொள்கிறது' என்று தொடங்குகிறது, 'புடவை' எனும் கவிதை. வாசிப்பை அங்கேயே நிறுத்தி கவிதையை எப்படி முடித்திருப்பார் என்று கற்பனை செய்யத் தோன்றியது. கவிதையை முடித்த விதம் அருமை.

    'வெளிச் சுவர் லவ்' கவிதையில் வெளியிடாக் காதலின் அதிர்ச்சியும் வலியும் சுற்றிச்சுற்றி வந்தது.

    'நாய்க் குடைகள் மலர்ந்த கொல்லை'யில் மேலாக்கில்லாமல் வெளியே வந்த ராஜியின் நிலையைக் கற்பனை செய்து... கவிதையை ரசிக்க முடிந்தது.

    'கதவிலக்கம் தொலைத்த வீடு' கவிதையின் தொடக்கம் அருமை (நல்ல வேளை - முதல் கவிதையாக அமைந்தது).

    'கன்பர்ம்ட்' கவிதை, நல்ல சிறுகதைக்கான தளம். இது போல் ஒரு கிராதக 'அடுத்த வீட்டு மாமியை' நாம் எல்லாருமே சந்தித்திருப்போம் என்று தோன்றுகிறது.

    'எல்லாப் பொறிகளிலும் இலகுவாய் போய்ச் சிக்கிக் கொள்கிறது சுயம்' என்ற கவிதையைப் படித்து வாய் விட்டுச் சிரித்தேன். 'பொறியில் சிக்குதல்', நகைச்சுவைக்காக எழுதப்பட்டக் கவிதையல்ல என்று தெரிந்தும். தன்னிரக்கமா தெரியவில்லை.

    'உடைந்த நகங்களும் கூர் பற்களும்' தலைப்பே கவிதை போல் பட்டது.

    'தேடும் தேடல்' கவிதையின் 'யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம் வேண்டும் என ஆசை கொண்டு யாரிலாவது யாரையோ தேடுகிறேன்' வரிகளைப் படித்ததும் இதில் இலக்கியம் இருக்கிறதோ என்ற லேசான பயம் உண்டானது.

    'புரிதல், புரிந்து கொள்ளுதல் என்ற இரண்டு தண்டவாளங்களின் இடையே நகர்கிறது நம் நட்பு' என்ற கவிதையை அதற்குப் பிறகு தொடர்ந்து படிக்க இயலாமல் அங்கே ஏற்பட்ட நிறைவு காலோவியமாய் மனதைக் கட்டியது.

    'மிக மிக மெலிதான தொடுதலுக்கு உன் விரல்கள் ஆயத்தம் கொள்வதை ஏனோ உன் கண்கள் முன்னதாகவே வெளிப்படுத்தி விடுகின்றன' - இன்னொரு காலோவியக் கவிதை.

    'இருளின் நிறம்' கவிதையில் மூக்குத்தியின் ஒளியை மறைக்கத் துடிக்கும் காதலரின் அவசரம், சிருங்காரம். Class.

கலாப்ரியாவின் முன்னுரையும் (அணிந்துரை?) சுவாரசியம்.

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம், டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு, ரூ.70.

28 கருத்துகள்:

  1. அருமை
    ஆனால் தமிழச்சி தங்கப்பாண்டியன் (சுமதி அக்காவின்) கவிதைகள் புத்தகமாக வந்து நன்கு விற்றனவே
    பாரதி, கண்ணதாசன் , கலாப்ரியா, கல்யாண்ஜி கவிதைகள் தொகுப்பும் விற்றுள்ளனவே நன்கு

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஒரு கவிதை நூலை அறிமுகம் செய்துள்ளீர்கள்
    தங்கள் விமர்சனமும் தேரந்தெடுத்துச் சொல்லுப்போகும் வரிகளும்
    நிச்சயம் படிக்கவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டிப்போகிறது
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. பாதி வரிகளின் மீதி வரியைக் கற்பனை செய்து பார்ப்பது தனி சுகம்! சில சமயம் நம் கற்பனைகளோடும் ஒத்துப் போகும். பாதிக் கதவின் பாதக் கவிதை எனக்கு வேறொன்றை நினைவு படுத்தியது. நல்ல அறிமுகம்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல அறிமுகம். படித்துப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அறிமுகத்துக்கு நன்றி. அவர் பதிவில் நாய்க்குட்டி பற்றிய கவிதை மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
  6. நல்ல கவிதைகளின் தொகுப்பு பத்மாவுடையது.

    இன்றெழுதும் பெண் குரல்களில் மிக வெளிப்படையானதும், பூடகமற்றதும் இவரது கவிதைகளின் தொனி.

    அதென்னவோ ப்ளாகில் வாசித்ததை விட புஸ்தகமாக வாசிக்கும்போது கூடுதலாய் ஒரு ஈர்ப்பு வழக்கத்துக்கு மாறாய்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல அறிமுகம்... நீங்கள் ரசிப்பதிலிருந்து தெரிகிறது... மிக்க நன்றி... படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. அழகான மதிப்புரை பத்மாவின் கவிதைகளுக்கு. அண்மையில் சென்னை வந்த போது பத்மஜா என்னை சந்திப்பதாய் இருந்தது. கவிதைப் புத்தகத்துக்காய்க் காத்திருந்தேன். அவர்களால் அன்று வர இயலவில்லை.( (புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கி விட வேண்டியது தான்!)

    பதிலளிநீக்கு
  9. வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்று. அருமையான பகிர்வு. விரைவில் வாங்கிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. வணிக நோக்கில் கவிதை புத்தகம் நஷ்டம்தான்.. ஆனாலும் அளவுக்கு அதிகமாய் இன்று வெளி வருவதும் கவிதை தொகுப்புகளே...

    பதிலளிநீக்கு
  11. அப்பாதுரை சார்.என்ன சொல்வது என்று தெரியவில்லை.நன்றி என்பதை தவிர.கருத்து அளித்த அனைவருக்கும் நன்றி.இதை எண் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொல்கிறேன்.நன்றி

    பதிலளிநீக்கு
  12. விமர்சனம் & பின்னூட்டங்களுக்கு டிஸ்கவரி புக் பேலஸ்-ன் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. கூடுதல் வார்த்தைகளால் கவிதையின் அழகு குறைந்துவிடும்.முதல் கவிதையில் நீங்கள் கூறியது சரியே! எழுத்தாளர் சுஜாதாவாக இருந்தால் அதையேதான் சொல்லி இருப்பார்.
    ஞானம் உள்ளவர்களின் ரசனைகள் ஒத்துப் போகின்றன.
    நல்ல விமர்சனம்

    பதிலளிநீக்கு
  14. நல்ல வேளை, புத்தகங்களை கடைசிப் பக்கத்திலிருந்து மேலோட்டமிடும் வழக்கம் எனக்கிருக்கிறது! :-)

    எனக்கும் அதே வழக்கம்தான் !

    பதிலளிநீக்கு
  15. //தூக்கம் கலைந்த மதியப் பொழுதின் தேநீர்த் துணையாகவோ,...//
    Beautiful .... wow!

    பதிலளிநீக்கு
  16. இப்போது நான் படித்து வரும் புத்தகம் இதுதான். நீஙுகள் சொன்னதுடன் நான் படித்தவரை ஒப்பு நோக்கிப் பார்க்கையில் நீங்கள் சொன்னதை ரசிக்க முடிகிறது அப்பா ஸார். அருமை. அப்புறம்... பத்மா மேடம்... பேஸ்புக்ல பகிர்ந்து கொல்கிறேன்னு சொல்லிட்டீங்களே... ஏம்மா கவிதையால கொல்றது போதாதா, பகிர்ந்து வேற கொல்லணுமான்னு யாராச்சும் ஜோக்கடிச்சுடப் போறாங்க. உஷாரம்மா... ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
  17. பின்னூட்டங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பாராட்டும் வாழ்த்தும் பத்மஜா நாராயணனுக்குச் சொந்தம்.

    ராம்ஜி_யாஹூ: நீங்க சொல்றது சரி. இது பதிப்பகங்கள் சொன்ன இரண்டு யதார்த்த காரணங்களுள் இன்னொன்று. கொஞ்சம் புண்படுத்தும் கருத்து என்பதால் விரிவாகச் சொல்லவில்லை.

    பாரதியார் கவிதைகள் மாதிரியே புதுமைப்பித்தன் கதைகளும் பிச்சிக்கிட்டு போகுறாப்புல தெரியுது கவனிச்சீங்களா? படிக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது என்பது மட்டுமே காரணம் இல்லை :) இரண்டுக்கும் பொதுவா இன்னொரு காரணம் இருக்கு.

    பதிலளிநீக்கு
  18. ஆழமான விமர்சனம்.பத்மா அக்காவுக்கு வாழ்த்துகள்.இந்தியா போகும் நேரங்கள்தான் வாங்கமுடியும் எனக்கு.ஆனாலும் அவர்களின் தளங்களில் வாசித்துக்கொண்டுதானிருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லாசெப்டம்பர் 03, 2012

    கவிதை பற்றிய உங்கள் கருத்து சுவை. பத்மா அவர்களின் வலைப்பூ அறிமுகம் எனக்கு ஏற்கெனவே போகன் அவர்களின் வலைப்பூவின் மூலம் கிடைத்தது. ஆனால் தொடர்ந்து படிக்க இயலாமல் போனது. உங்களின் இந்த பதிவின் மூலம் இனி அவர் வலைப்பூவை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றி வந்து விட்டது. நன்றி. பத்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    Profile photo பார்க்க ரொம்ப ரொம்ப பயமா இருக்கு. தூக்கத்துல ஞாபகம் வந்தா கூட அலறி அடிச்சுண்டு எழுந்துடுவேன்னு நினைக்கறேன். :)

    பதிலளிநீக்கு
  20. //உன் பாதங்களுக்கேற்ற
    முகத்தை
    நான் மனதில்
    வரைந்துவிட்டேன்.
    வரைந்த அது
    சிதையப்போகிறது.. //

    பாதம் மட்டும் என்ன பாவம் செய்தது?

    //தயவுசெய்து
    என் கண்படாமல் போ நீ!//

    போவதற்குக் கூட பாதம் தானே ஒத்துழைக்க வேண்டும்! :))

    பதிலளிநீக்கு
  21. 'கண்படாமல் போ'வில் கவிதை தொலைந்ததாகவே நானும் நினைக்கிறேன் ஜீவி. நன்றி.

    பதிலளிநீக்கு
  22. கவிதை எழுதிய பத்மஜா என்ன நினைக்கிறாரோ தெரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லாசெப்டம்பர் 05, 2012

    சரி, அதெல்லாம் இருக்கட்டும், எதோ 'கவிதை'ன்னு சொன்னீங்களே, எங்கே காணோம்?

    பதிலளிநீக்கு
  24. (நல்ல வேளை, புத்தகங்களை கடைசிப் பக்கத்திலிருந்து மேலோட்டமிடும் வழக்கம் எனக்கிருக்கிறது!

    நானும் கடைசியில் இருந்துதான் வாசிக்கத்தொடங்குவேன்..

    பதிலளிநீக்கு
  25. வாசிப்பைத் தூண்டும் விமர்சனம்.
    பொறாமைப்பட வைத்த கவிதை வரிகள். நன்றி அப்பாஜி

    பதிலளிநீக்கு
  26. நான் தொலைகிறேன் என்றிருக்க வேண்டுமோ ?

    பதிலளிநீக்கு
  27. வேகமாக வாசித்து விடலாம் என்பது கவிதைகளுக்கு உள்ள வசதி. எனவே, அதை காசு கொடுத்து வாங்க வேண்டுமா என நிறையப் பேர் யோசிக்கலாம். ஆனால், நல்ல கவிதைகள்(நமக்கு பிடித்தது) எப்பொழுதும் படிக்கலாம். மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் குறித்த தங்கள் பதிவு அந்நூலை வாசிக்கத்தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு