2012/07/18

மன விலங்கு



    னவுகளின் மகிழ்ச்சியை விட, கனவுகளின் நம்பிக்கையை விட, கனவுகளின் வலி சிலருக்குப் பிடித்திருக்கிறது.

    என் குரோம்பேட்டை நாட்களின் அதிகம் பழகாத நண்பன் ஸ்ரீரங்கன். ஒன்பதாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் சேர்ந்தான். கரிய நிறம். களையான முகம். சம்மர் கட் என்று அந்த நாளில் புழங்கிய மண்டை ஒட்டிய முடிவெட்டு. பெரிய நெற்றியில் வடக்கு தெற்காக ஒரு சந்தனக்கீற்று. பெரிய கண்கள். செதுக்கி வைத்தாற்போல் உதடுகள். இலவசமாகச் சுண்ணாம்பு அப்பியது போல் பற்களில் அத்தனை வெண்மை. இதான் ரங்கன். மனம் விட்டுச் சிரிக்கும் போதும் அவன் கண்களில் ஒரு சோகம் இருந்தது எனக்குப் புரிவதற்குள், நாங்கள் இருவரும் பாதை மாறிவிட்டோம்.

ரங்கனை விட அவன் அக்கா எனக்கு அதிகம் பழக்கம். ரங்கனுக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை. நிறம் களை எல்லாவற்றிலும் ரங்கனைப் போலவே இருப்பாள் அவன் தங்கை ஸ்ரீலதா. அக்கா...

முதல் நாள் பள்ளிக்கூடம் முடிந்து ரங்கனை அழைத்துச் செல்ல வந்த அவனுடைய அக்காவைப் பார்த்து அசந்து விட்டேன். இன்னும் மறக்காத, என்றைக்கும் மறக்க முடியாத, முதல் தோற்றம். சிவப்பு என்றால் அப்படி ஒரு சிவப்பு. நல்ல உயரம். எடுப்பான உடல். எங்கள் பள்ளிச் சீருடையின் அடக்குமுறையையும் அமைதியையும் மீறித் தெறித்த வனப்பு. வெள்ளையும் இல்லாமல் நீலமும் இல்லாமல் மிதமானப் பழுப்பு நிறச் சீருடைத் தாவணி மூடிய மார்பில், சிவப்பு மணி கோர்த்த கவரிங் சங்கிலி. முகம் நடமாடும் ஒளிவிளக்கு. மூக்குக் குத்தியிருந்த இடத்தில் பொன் பொட்டு. காதுகளில் சிவப்பு நிறத்தில், ப்லேஸ்டிக்காகக் கூட இருக்கலாம், கவர்ச்சியான வளையங்கள். அவள் இருக்குமிடத்தில் இருளே இருக்காது என்றுப் பார்த்தக் கணத்திலேயே சத்தியமாக நம்பினேன்.

"என்னடா அப்படி முறைக்கிறே? உன் பேரென்ன?" என்றாள்.

தடுமாறி நிலைக்கு வந்தேன். "ரங்கனோட க்லேஸ் மேட். என் பேர் துரை"

"பொண்களை அப்படி முறைச்சுப் பாக்காதே.. அக்கா தங்கையோட பொறக்கலைனு நினைப்பாங்க"

"சாரி.. நான் ஒண்ணும்...." என்று தொடங்கி எதுவும் சொல்லத் தோன்றாமல் பாதுகாப்பாக, "எனக்கும் நாலு தங்கை இருக்காங்க" என்று அரை வீறாப்பில் முடித்தேன்.

சிரித்தாள். "என் பேரு ஸ்ரீப்ருந்தா. லெவந்த் டி" என்றாள்.

"நான் நைன்த் ஈ" என்றேன்.

"அதான் சொன்னியே.. ரங்கனோட க்லேஸ் மேட்னு.. என்னை என்னா மெத்துனு நெனச்சியா?" என்றாள். நான் பதில் சொல்வதற்குள் அங்கே வந்த இன்னொரு சிறுமியைச் சுட்டி, "இவ எங்க தங்கை ஸ்ரீலதா. செவந்த் பி" என்றாள். சகோதரிகள் இருவரும் தங்கள் பைகளை ரங்கனிடம் கொடுத்தார்கள். தன்னுடைய பையையும் சேர்த்து மூன்றையும் சைக்கிள் கேரியரில் வைத்துக் காவல் கம்பியை இழுத்து மாட்டினான். சகோதரிகள் ஒரு சைக்கிள், ரங்கனும் புத்தகப்பைகளும் ஒரு சைக்கிள் என்று கிளம்பினார்கள்.

ரங்கன் சகோதரிகளின் சைக்கிள் பயணம் ஏறக்குறைய தினசரிக் காட்சியாகிப் போனது. ப்ருந்தாவுடன் பயணம் செய்யும் சாக்கில் எங்கள் வீடுகள் ராதா நகர் ந்யூகாலனி என்று எதிர் திசையில் இருந்தாலும் நாங்கள் நாலைந்து பேர் நாகல்கேணி வரை போய்வந்தோம். தன்னைக் கவனிக்கிறார்கள் என்ற கர்வம் ப்ருந்தாவுக்கு இருந்ததை உணர்ந்திருக்கிறேன்.

அந்தப் பள்ளியாண்டில் ப்ருந்தாவுடன் பழகும் வாய்ப்புக்கள் எனக்கு நிறையக் கிடைத்தன. பள்ளியில் பேச்சு, கட்டுரை, சிறுகதை போட்டிகளில் அனேகமாக அவள் முதல் பரிசு நான் இரண்டாம் பரிசு என்பது நிலையாகிப் போனது. மாதந்தோறும் டிபேட் க்ளப்பில் அவளை எதிர்த்துப் பேசும் அணித்தலைவனாக இருந்தேன். தமிழ் மீடியத்தில் படித்தாலும் அவளுடைய ஆங்கிலப் பிடிப்பு என்னை வியக்க வைக்கும். ஒரு நாள் சைக்கிள் பயணத்தின் போது கேட்டு விட்டேன். "ப்ருந்தா.. நீ எப்படி வித்தியாசமா இருக்கே? உன்னோட தம்பி தங்கைகள் கறுப்பு. நீயோ ரத்தக் கலர்ல இருக்கே. ரங்கன் இங்லிஷ் மீடியத்துல இங்லிஷ்ல சிரமப்படுறான். நீ தமிழ் இங்லிஷ்னு எல்லாத்துலயும் வெளுத்து வாங்குறே. வீட்ல உங்கப்பாம்மாவை நான் பார்த்ததே இல்லை... யாரோடயும் அதிகமா பழக மாட்றீங்க.. ஸ்கூல் விட்டா வீடு விட்டா ஸ்கூல்னு.."

"எங்கப்பா இங்கில்லடா.. காஞ்சிபுரத்துல இருக்காரு" என்று என்னை அடக்கினான் ரங்கன்.

"எங்கம்மா நல்ல சிவப்பு. அது எங்கக்காவுக்கு வந்திருக்கும் போல" என்றாள் லதா தலை குனிந்தபடி.

"காஞ்சிபுரத்துல இருந்தப்ப நாங்க எல்லாருமே கான்வென்டுல தான் படிச்சோம்.. ஆறாவதுலந்து மாறிடுச்சு.. எங்கம்மா போனப்புறம் எங்கப்பாவால தாக்கு பிடிக்க முடியலே.. அவரோட வியாபாரமும் நஷ்டமாயிடவே கடையை வித்துட்டாரு. அந்தப் பணத்துல எங்களை இங்கே படிக்க வச்சிட்டிருக்காரு.. தன்னால தனியா எங்களைப் பாத்துக்க முடியாதுனு சித்தப்பா கிட்டே அனுப்பிட்டாரு.. என்னை மட்டும் பணம் கட்டி இங்க்லிஷ் மீடியத்துல படிக்க வைக்கறார்.. எனக்கு பதிலா ப்ருந்துவைப் படிக்க வச்சிருக்கலாம்." என்றான் ரங்கன்.

"உங்கம்மா போனப்புறம்ன்றியே? இறந்துட்டாங்களா?"

ஆமோதித்துத் தலையசைத்த ரங்கனை முறைத்தாள் ப்ருந்தா. அதற்குப் பிறகு யாரும் எதுவும் பேசவில்லை. அவர்கள் வீடு வந்ததும் ப்ருந்தா என்னை நேராகப் பார்த்துச் சொன்னாள். "அவசியம் தெரிஞ்சுக்கணுமா? சரி சொல்றேன். எங்கம்மா ரொம்ப ரொம்ப அழகு. வடநாட்டு மகாராணிகள் எல்லாம் பிச்சை வாங்கறாப்ல இருப்பா. கரிக்கட்டை எங்கப்பாவோட இருந்தது போதும்னு ஒரு நாள் வீட்டுல இருந்த நகைநட்டு பணம் எல்லாத்தையும் எடுத்துட்டு சொல்லாமக் கொள்ளாமப் போயிட்டாங்க. எங்கம்மா செத்துட்டாங்கனு நாங்க சொல்றதெல்லாம் பொய். போதுமா? வேணும்னா யார் கூட ஒடிப்போனாள்னு சொல்றேன்.. கேக்கறியா?" என்றாள்.

என்னுடைய சாதாரணக் கேள்விக்கு அவளுடைய அசாதாரண பதில், என் பதிமூன்று வயது உணர்வுகளுக்கு அப்பாற்பட்டப் பேரதிர்ச்சியாக இருந்தது.

    ஏனோ தெரியவில்லை, அடுத்த சில நாட்களுக்கு நான் ரங்கனையும் ப்ருந்தாவையும் தவிர்த்தேன். அன்றைக்கு ரங்கன் பள்ளிக்கு வரவில்லை. ப்ருந்தாவும் வந்திருக்க மாட்டாளென்று டிபேட் க்ளப் கூட்டத்துக்கு வந்தபோது, ப்ருந்தா பிடித்துக் கொண்டாள். "சாயந்திரம் துணைக்கு வரியா? இல்லே.. ரங்கன் வந்தாத்தான் வருவியா?" என்றாள். 'தெரிஞ்சுக்கிட்டே கேக்குறியே?' என்று சொல்ல நினைத்தவன், "ஓகே, வரேன்" என்றேன்.

வீட்டுக்கு வந்ததும், "உள்ள வாயேன்" என்றாள். ஏறக்குறைய என் கையைப் பிடித்து இழுத்தாள். அவளுடன் போனேன். மிதியடிக்குக் கீழே இருந்தச் சாவியை எடுத்துக் கதவைத் திறந்த போதுதான் பூட்டையே கவனித்தேன். "வீட்ல யாரும் இல்லையா?" என்றேன்.

"புத்திசாலி. உன்னை விழுங்கிட மாட்டேன், பயப்படாம உள்ள வா" என்றாள். எனக்காகக் காத்திராமல் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

"அவங்கள்ளாம் எங்கே?" என்று கேட்டபடி நான் தயங்கி உள்ளே நுழைந்து, வாசல் கதவோரமாக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தேன். ஐந்து நிமிடங்களில் உள்ளிருந்து வந்தாள். உடை மாற்றியிருந்தாள். வெள்ளைப் பின்னணியில் பச்சை நீலம் தங்கம் சிவப்பு வைலட் என்று கட்டங்கள் போட்ட பாவாடை. இளம்பச்சை நிறத்தில் வடநாட்டுப் பாணியில் ப்ரில் வைத்த அரைக்கைச் சட்டை. முகம் கழுவிப் பொட்டு வைத்திருந்தாள். பின்னல் நீங்கியத் தலைமுடியை அள்ளி ஒரு க்ளிப் போட்டுக் கட்டியிருந்தாள். கழுத்து எடுப்பாகத் தெரிந்தது. கழுத்தில் தொங்கிய சிவப்புமணிச் சங்கிலியும் அது சரிந்து வந்த இடமும் இன்னும் எடுப்பாகத் தெரிந்தன.

"பொம்பளையை முறைச்சுப் பாக்காதேனு சொல்லியிருக்கேன்ல?" என்றாள்.

"உன்னை முறைக்கணும்னு தோணவே இல்லே ப்ருந்தா.. பாத்த உடனே எனக்கே என்னை மறந்து போச்சு"

"ஸ்கூல் யூனிபார்ம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலே.. என் அழகையே கெடுக்குது.. அதான் வீட்டுக்கு வந்ததும் ப்ரீ.. இந்த ட்ரெஸ் அழகா இருக்கா?" என்றபடி இடம் வலம் திரும்பிப் போஸ் கொடுத்தாள்.

"சினிமா ஸ்டார் மாதிரி இருக்கே" என்றேன்.

சனி நாவில் குடிவந்து நாசமாகப் பேசவைக்கும் என்பார்களே, அதை அன்றைக்கு உணர்ந்தேன்.

"என்ன சொன்னே? மறுபடி சொல்லு" என்றாள்.

"சினிமா ஸ்டார் மாதிரி இருக்கே"

ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். "யூ ஆர் ரைட்" என்று சில நொடிகள் குதித்தாள். பிறகு அழத் தொடங்கினாள். என் தோள்களைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். "என் லைப் பாழாயிடுச்சு துரை.. சந்தனத்துல மிதக்க வேண்டியவ இப்படி சாக்கடைல சேர்ந்து.." என்று வசனம் பேசி அழுதாள். திடீரென்று அழுகையை நிறுத்தி, "என் கூட துணைக்கு வரியா?" என்றாள்.

"எங்கே?"

"பம்பாய்க்கு.. அங்கே எங்க அம்மா இருக்காங்க.. சினிமால எக்ஸ்ட்ரா ரோல்ஸ் செஞ்சுட்டிருக்காங்க.. எனக்கும் அங்க சான்ஸ் கிடைக்கும்.. என் அழகுக்கு நான் பெரிய ஆளா வருவேன்.. என் கூட துணைக்கு வா" என்றாள்.

நடுங்கிப் போனேன். "என்ன... வீட்டை விட்டு ஓடறதா? விளையாடறியா?"

"என் கிட்டே பணம் இருக்கு. உனக்கு டிகெட் வாங்கறேன். உனக்கும் சினிமா மோகம் இருக்குனு சொல்லியிருக்கே.. மே பி யூ கேன் ஷைன் தேர். இல்லாட்டி திரும்பி வந்துரு.. ப்லீஸ் என்னைக் கூட்டிட்டுப் போ.."

"நிறுத்து ப்ருந்தா.. நீ புத்திசாலி. நல்லா படிக்கிறே.. அழகா இருக்கே.. எத்தனையோ டேலன்ட் இருக்கு.. படிப்பு முடிச்சுட்டு நீ என்ன வேணா செய்யலாமே? வீட்டை விட்டு ஓடினா நாளைக்கு ரங்கனும் லதாவும் கஷ்டப்படுவாங்க இல்லே?". உளறுகிறேன் என்பது எனக்குப் புரிந்தது, இருந்தாலும் சொல்லிவைத்தேன்.

"நீ சொல்றது சரிதான். லதா ரொம்ப வீக். தற்கொலை செய்தாலும் செஞ்சுக்குவா, எங்கப்பா மாதிரி" என்றாள் அமைதியாக.

"வாட்?" என்று அதிர்ந்தேன்.

"தெரியாதா? எங்கப்பா நேத்து இறந்துட்டாரு. சூய்சைட். அதான் ரங்கனும் லதாவும் சித்தப்பா சித்தியெல்லாம் நேத்து நைட்டே காஞ்சிபுரம் போயிட்டாங்க" என்றாள்.

"வாட்?" என்று மறுபடி அதிர்ந்தேன். "தற்கொலையா? உங்கப்பாவா? நீ போகலியா?"

"எங்கப்பா செத்துப் போனா நான் எதுக்குப் போவணும்? எங்கம்மா ஓடிப்போனதுலந்து ஹி வாஸ் லாஸ்ட். பொருந்தாத கல்யாணம் செஞ்சுக்குவானேன் பிறகு சிரமப்படுவானேன்?"

"நீ ஏதாவது குண்டு தூக்கிப் போட்டுக்கிட்டே இருக்கே"

"எங்கம்மா ரொம்ப அழகு. ரொம்ப வெளிப்படை. நல்லா பழகுற டைப். எங்கப்பாவுக்கும் அழகுக்கும் விரோதம். தாழ்வு மனப்பான்மை அதிகம். இப்படி இருக்குறப்ப ஏன் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்களோ! உறவு, பணம்.. இதெல்லாத்துக்கும் மேலே மனம், சுதந்திரம், வாழ்வுனு இருக்குல்ல? அது ரெண்டு பேத்துக்கும் தெரிஞ்சிருக்க வேண்டாமா? எங்கம்மாவுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமே இல்லைனு சொல்வாங்க. சந்தர்ப்ப சூழல்னு ஏதோ சொல்வாங்க.. சமயம் கெடச்சப்ப கழண்டுக்கிட்டாங்க.."

"நீ உங்கம்மா செஞ்சது சரி மாதிரி பேசுறே"

"சரியா தப்பானு நான் ஜட்ஜ் பண்ணப் போறதில்லே.. எங்கம்மாவுக்கு சரின்னுப் பட்டதை அவங்க செஞ்சாங்க.. அதன் பாதிப்பை ஏத்துக்குற முதிர்ச்சியில்லாமப் போனதினால எங்கப்பா தொங்கினாரு.. அவர் செஞ்சதையும் சரியோ தப்போனு தீர்மானம் செய்யமுடியாது.. எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க.. ஒன் லைப் ஓன் இட்னு. எனக்கும் கனவுகள் இருக்கு துரை.. ஒரு நாகல்கேணிலந்து இன்னோரு நாகல்கேணிக்குப் போக எனக்கு விருப்பம் இல்லே. அப்புறம் நாகல்கேணியை நொந்து சாவறதுல என்ன ப்ரயோஜனம்? தப்பு நாகல்கேணில இல்லே.. நாகல்கேணி டைப் இல்லேனு தெரிஞ்சும் நாகல்கேணி போதும்னு நாம நினைக்கறோம் பாரு.. நம்ம பேர்ல தான் தப்பு"

"ஏய்.. ஏய்.. என்னல்லாமோ சொல்றியே?"

"எனக்கு நிறைய கனவுகள் இருக்கு துரை. என் அழகுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் நான் பெரிய மாடலா சினிமா ஸ்டாரா வருவேன். இங்க இருந்தா எனக்கு ஒரு ஹோப் கூடக் கிடையாது. நட்சத்திரத்தைப் பிடிக்கணும்னா கொறஞ்சது ஒரு மொட்டை மாடிலயாவது நிக்க வேண்டாமா? இப்படிக் குழி தோண்டி நின்னுட்டிருக்கேனே.. ஹௌ குட் ஐ?"

அவளுடைய வலி எனக்குப் புரிந்தது போல் தோன்றியது. இருந்தாலும், "அதெல்லாம் சரி.. உனக்கு பதினாறு வயசு தான் ஆகுது.. அதை மறந்துடாதே" என்றேன்.

"முப்பது வருசத்துக்கு முன்னால, நம்ம ஜனங்க பதினாறு வயசுல ரெண்டு பிள்ளை பெத்துக்கிட்டு தூளியில ஒரு குழந்தையும் மடியில ஒரு குழந்தையுமா அடுப்பூதிட்டிருந்தாங்க துரை.. எங்க பாட்டிக்கு பதினாறு வயசுல எங்கம்மா பொறந்தாங்க.. எங்கம்மாவுக்குக் கல்யாணம் ஆவுறப்ப ஷி வாஸ் நைன்டீன்.. ஸ்டில் எ டீனேஜர்.." என்றவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். "துரை.. திஸ் இஸ் எ சைன்.. யோசிச்சுப் பாரு.. சினிமா ஸ்டார் மாதிரி இருக்குறதா நீ ஏன் சொல்லணும்? வை பி ஸ்பெசிபிக்? அழகா இருக்குனு பொதுவா சொல்லியிருக்கலாமே? ஸி.. நிச்சயமா இது எனக்காக விழுந்த பூ.. இட் இஸ் எ சைன். சொல்லி வச்ச மாதிரி எங்கப்பாவும் செத்துட்டாரு... நான் இந்த சான்ஸை எடுத்தே ஆகணும்.. உன்னோட பேசுறதும் பழகுறதும் எனக்கு பிடிச்சிருக்கு.. வா ஓடிப்போயிடலாம்... உனக்குப் பிடிக்கலேன்னே பம்பாய்ல என்னை விட்டு நீ திரும்பி வந்துரு.. ப்லீஸ்" என்று கெஞ்சினாள்.

நான் மறுத்தேன். "ப்ருந்தா.. எனக்குத் துணிச்சல் கிடையாது. இருந்தாலும் நான் இதைச் செய்யவே முடியாது" என்றேன்.

"ஓகே.. அப்ப நீ வீட்டுக்குக் கிளம்பு.. இங்க இருந்தா எனக்குக் கடுப்பா இருக்கும்" என்றாள்.

சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி சிஎல்சி ரோடு வரை வந்துவிட்டேன். திடீரென்று ஏதோ தோன்றி பதட்டத்தோடு திரும்பி ப்ருந்தாவின் வீட்டுக்கு விரைந்தேன். வழியில் முருகன் கடையில் கடனுக்கு போன் வாங்கி நாயுடு வீட்டுக்குப் போன் செய்து அம்மாவை வரவழைத்துப் பேசினேன். ப்ருந்தா வீட்டுக் கதவைப் படபடவெனத் தட்டினேன். "என்ன?" என்றபடிக் கதவைத் திறந்தாள். நிம்மதியானேன்.

"உங்க சித்தப்பா எப்ப வருவாங்க?"

"நாளைக்கு.. ஏன்?"

"இதோ பார்.. நீ எங்க வீட்ல தங்கு.. இல்லே, அவங்க வர வரைக்கும் நான் இங்கே தங்குவேன்" என்றபடி உள்ளே சென்றேன்.

"ஏன்..?" என்றாள்.

"ஏன்னா.." என்று தயங்கினேன். "ஏன்னு எல்லாம் கேக்காதே.. தட் இஸ் மை டிசிஷன்".

"உங்க வீட்ல தேட மாட்டாங்களா?" என்றாள்.

"சொல்லிட்டுத் தான் வந்தேன்.."

என்னைக் குறும்பாகப் பார்த்தாள். "தனியா வயசுப்பொண்ணும் பையனும் தங்கினா நாளைக்கு ஊர்ல யாருனா எதுனா சொல்ல மாட்டாங்களா?"

"அதுக்குத் தான் எங்க வீட்டுக்கு வானு சொன்னேன். ஆல்சோ எங்க வீட்டுக்கு வந்தின்னா ரெண்டு பேருக்குமே சோறு கிடைக்கும்" என்றேன்.

"வேணாம்.. அப்புறம் என் காத்து பட்டு உன் தங்கைங்க எதுனா கனவு காணப்போறாங்க.. இங்கயே இருக்கலாம்.." என்று என் மிக அருகில் வந்தாள். "உண்மையைச் சொல்லு துரை.. நான் ஓடிருவேனோனு பயந்து தானே திரும்பி வந்தே?" என்று என் கண்களைத் தோண்டிக் கேட்டாள்.

"ஆமாம்" என்றேன். எனக்குத் திக்கித் திணறியது. "வீட்டை விட்டெல்லாம் ஓடிறாத ப்ருந்தா.." என்று வார்த்தைகள் வருமுன் அழுகை வந்துவிடும் போலிருந்தது. "ப்ராமிஸ் பண்ணு" என்று கை நீட்டினேன்.

என் தோளைத் தட்டிக் கொடுத்தாள். "யூ ஆர் க்யூட்" என்றாள். "ஆமா.. உனக்கு என் மேலே லவ்னு ஏதாவது.."

"சே சே" என்றேன்.

"குட். ஏன்னா ஒரு வேளை அந்த மாதிரி நம்பிக்கை வச்சிருந்து ஏமாந்துடக்கூடாது பாரு. உன்னை என்னால காதலிக்க முடியாது. நான் உன்னை விடப் பெரியவள்ன்றதை விடு.. என் கனவுகள் எனக்கு முக்கியம். காதல் ரெண்டாம் பட்சம். அப்படியே காதலிச்சாலும் என் காதல் நாயகனா நான் நெனச்சிருக்குற ஆதர்ச வடிவத்துக்கும் உனக்கும் ரொம்பத் தூரம்.. தப்பா நெனக்காதே" என்றாள்.

"நான் அந்த மாதிரியெல்லாம் நினைக்கவே இல்லை" என்றேன். வலியா நிம்மதியா தெரியவில்லை, ஏதோ உணர்ந்தேன்.

மாலை அவளே சமைத்து, "துரை.. அய்ங்கார் வீட்டு பருப்புப்பொடி ரசம் சாப்பிட்டிருக்கியா?" என்றாள். இரவு எனக்கு ஒரு பாய் தலையணை போர்வை கொடுத்தாள்.

"வாச ரூம்ல படுத்துக்கறேன்" என்றேன்.

சிரித்தாள். "பதிமூணு வயசுல நீ என்ன பண்ணமுடியும்னு நெனக்கறே? உனக்கு விஷயம் தெரியாதா?" என்றாள். அவமானமாக இருந்தது. "இங்கயே படு. இந்த ரூம்ல தான் பேன் இருக்கு. வாச ரூம்ல கரப்பு வரும்" என்றாள். எனக்காகக் காத்திராமல் பாயை விரித்துப் படுத்தாள்.

நான் படுத்ததும் உருண்டு என்னருகே வந்தாள். என் தலையை வருடிப் புன்னகைத்தாள். தன் படுக்கைக்குத் திரும்பினாள்.

மறுநாள் மாலை ரங்கனிடம் விவரமெல்லாம் சொன்னேன். "அக்கா சொன்னா. தேங்க்ஸ்டா. நானா இருந்தா அவளோட ஓடியிருப்பேன்" என்றான். அவனை அதிர்ச்சியுடன் பார்த்தேன்.

    அடுத்த வருடம் ப்ருந்தா வைஷ்ணவா கல்லூரியில் பியூசி சேர்ந்தாள். பத்தாம் வகுப்பில் ரங்கன் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தான். அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து எல்லோரும் திரும்பிய போது ரங்கன் வரவில்லை. அந்த வாரம் ஒரு நாள் மாலை ஸ்ரீலதா என் வீட்டுக்கே வந்துவிட்டாள். பாவாடை தாவணியில் திடீரென்று அவள் பெரிய பெண் போல் தோன்றினாள். "எங்க அண்ணாவும் அக்காவும் ஓடிட்டாங்க" என்றாள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுமுன், "துரை.. நானும் உங்க வீட்ல தங்கிக்கிறேனே? அஞ்சாவது தங்கச்சியா இருந்துட்டுப் போறேன். எனக்குப் படிக்கணும் துரை. எங்க சித்தப்பாவோட இருக்கப் பிடிக்கலே.. எங்கப்பாம்மாவும் இல்லே.. இந்த ஊர்ல அதிகம் பழகினது நீ மட்டுந்தான்.. ப்லீஸ் நான் உங்க வீட்டுல தங்கிக்கட்டுமா? ப்லீஸ் துரை ப்லீஸ்.. எங்க சித்தப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாது" என்றாள்.

வேலையிலிருந்து திரும்பி வந்து அபிராமி அந்தாதி சொல்லியபடி அவசரமாகச் சமைத்துக் கொண்டிருந்த என் அம்மா இரண்டையும் பாதியில் நிறுத்திவிட்டு, "யாரும்மா நீ? எங்க வீட்டுல தங்கறதாவது?" என்று ஓடிவந்தார். "யாருடா இந்தப் பொண்ணு?" என்று என்னிடம் பதறினார்.

    ங்கன் குடும்பத்தினர் எவரையும் அதற்குப் பிறகு நான் பார்க்கவில்லை. சென்னை வரும் பொழுது சில சமயம் ப்ருந்தா நினைவுக்கு வருவாள், மற்றபடி ரங்கன் குடும்பம் பற்றிச் சிந்திப்பது கூட இல்லை.

    இந்தச் சென்னைப் பயணத்தில் ரங்கனைச் சந்தித்தேன். போன வாரம் என் தங்கை கணவருடன் ஒரு பக்திச்சுற்று சென்ற போது தி.நகர் திருமலை கோவிலில் எதிர்பாராவிதமாக தேவஸ்தான நூலகத்தில் சந்தித்தேன். அவனை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஒரு புத்தகத்தைத் தேடி என் தங்கை கணவர் ஒதுங்கிய போது என்னிடம் நெருங்கி, "டேய் துரை, என்னைத் தெரியலியா?" என்றான் ரங்கன். ஒரு காகிதத்தைக் கொடுத்து, "என் செல் நம்பர். போன் பண்ணு" என்று கிசுத்தான்.

போன் செய்து, பிறகு அவனைச் சந்திக்கச் சென்றேன். "நீ மாறவே இல்லேடா. என்ன... முடியெல்லாம் கொட்டிப் போச்சு. மத்தபடி அப்படியே இருக்கே" என்றான் சாதாரணமாக. என் குடும்பத்தார் அனைவரையும் விசாரித்தான். என் வேலை படிப்பு என் தம்பி தங்கைகள் படிப்பு அவர்களுடைய குடும்பம் எல்லாம் விசாரித்தான். பிறகு அமைதியானான்.

மெள்ள, "ப்ருந்தா, லதா எல்லாம் எப்படி இருக்காங்க?" என்றேன்.

"லதா இப்ப பாலிவுட்ல பெரியாள்டா. கரீனாவோட அசிஸ்டென்டா இருந்தா. கரீனா தெரியும்ல?" என்றான்.

'தெரியாது' என்று சொல்லவந்து நிறுத்திக் கொண்டேன். "பெரிய ஸ்டார்டா" என்றான். "இப்பக் கொஞ்சம் டல். போன வாரம் லதா ஒரு ப்ரொட்யூசரைக் கல்யாணம் செஞ்சிட்டிருக்கா. தர்ட் மேரேஜ்" என்றான்.

"உங்கம்மா?"

"இரண்டாயிரத்து ரெண்டுல போயிட்டாங்கடா"

"சாரி"

"அதனால என்ன.." என்றபடி என்னை உற்றுப் பார்த்தான். பிறகு, "பாக்கறியா?" என்றான்.

ஆமோதித்த என்னைக் கைபிடித்து உள்ளறைக்கு அழைத்துச் சென்றான். படுக்கையில் சோர்ந்து படுத்திருந்தாள் ப்ருந்தா.

வெள்ளையாக ஏதோ போர்த்தியிருந்தாள். மெலிந்திருந்தாள். முகத்திலும் கைப் பகுதிகளிலும் சிறு ரத்தக்காயங்கள் பேன்டெயிடை மீறிப் புலப்பட்டன. கண்களை மூடியிருந்தாள். தூங்கவில்லை என்பது தெரிந்தது. அருகே சென்ற ரங்கன் மென்மையாக, "ப்ருந்தா.. யாரு வந்திருக்கா பாக்குறியா?" என்றான். கண் திறந்து என்னைப் பார்த்தவள், சற்றே தயங்கிப் பின் என்னை அடையாளம் தெரிந்து கொண்டாள். அவள் முகத்தில் ஒளி இன்னும் மிச்சம் இருந்ததை நான் தெரிந்து கொண்டேன்.

நெருங்கிய என்னைத் தடுத்தான் ரங்கன். "துரை.. யூ மஸ்ட் நோ.. ப்ருந்தாவுக்கு எய்ட்ஸ். டெர்மினல் ஸ்டேஜ். நீ அங்கிருந்தே பேசலாம்" என்றான்.

ப்ருந்தா என்னைப் பார்த்தாள். என்ன தோன்றியதோ விடுவிடென்று நடந்து அவள் கைகளை எடுத்து மென்மையாகப் பற்றிக் கொண்டேன். எத்தனையோ கேட்கத் தோன்றினாலும் எதுவும் பேசாமலிருந்தேன். பிறகு விலகினேன். நான் சற்றும் எதிர்பாராமல் என் தலையை வருடிப் புன்னகைத்தாள்.

வெளியே வந்து உட்கார்ந்தோம். "ப்ருந்தாவை நீ பாத்துட்டிருக்கியா? எத்தனை வருஷமா?" என்றேன்.

"டூல கொல்கத்தாலே இருந்தேன். டாக்காலந்து கஞ்சா கடத்திட்டு வந்து வித்திட்டிருந்தேன். தட் வாஸ் மை லைப். ப்ருந்தா தான் என்னைத் தேடிப்பிடிச்சு அம்மா செத்துட்டாங்கனு சொன்னா. பம்பாய் போய் அம்மா பொணத்தை எரிச்சுட்டு வந்தேன். அப்பத்தான் இவ நிலமையும் தெரிஞ்சுது. என்னவோ திடீர்னு எல்லாத்தையும் விட்டு இவளை அழைச்சுட்டு இங்க வந்துட்டேன். ஆனா வியாதி கொஞ்சம் கொஞ்சமா முத்திப் போய் இப்ப டெர்மினல் ஸ்டேஜ் வந்தாச்சு. இன்னும் கொஞ்ச நாள் தான் இருப்பா" என்றான். "பட், தட் இஸ் ஹர் லைப்" என்றான்.

எனக்குக் கோபம் வந்தது. "என்னடா இது.. லைப்னா விளையாட்டா இருக்கா? டீனேஜ்ல ஓடிப்போவணும்னு எவன் சொன்னான்? இப்படி நாசமாக்கிக்கிட்டு.. என்னடானா சித்தர் மாதிரி பேசுறே? ஷி வாஸ் ஸச் எ டேலன்ட்.. ஷி குட் ஹவ் பீன்.."

"ட்ரூ. அவ தானே தீர்மானிச்சா? நீ சொன்ன அந்த டேலன்ட்... அதெல்லாம் பம்பாய்ல நாங்க போன ரெண்டாவது வாரத்துலயே புரிஞ்சு போச்சு... ரெண்டு ப்ரொட்யூசர், ரெண்டு அசிஸ்டென்ட் டைரக்டர், ரெண்டு ம்யூசிக் டைரக்டர், ஒரு ஹீரோ, ஒரு எம்எல்ஏனு அவளைச் சாய்ச்சப்புறம் எல்லாமே தெளிவா புரிஞ்சு போச்சு. எங்கம்மா அவளை அழைச்சுட்டுப் போய் ஸ்டாராக்குறேன்னு சொன்னாங்க. என்னால தாங்க முடியலடா. ஓடிட்டேன். அங்க இங்க வருஷக்கணக்கா ஓடி கொல்கத்தா வந்தா.." என்றான்.

"ஐம் சாரி"

"ப்ச்.. யு நோ? ப்ருந்தா ரெண்டு மூணு படத்துல ஹீரோயினோட ப்ரென்டா நடிச்சா. ஷி வாஸ் லுகிங் அப். என்ன ஆச்சோ தெரியலே.. வாடெவர் ஹாபன்ட் இது அவளோட தேர்வு தானேடா? பம்பாய் போய் இவளைப் பாத்ததும் என்னோட பாதையும் மாறிடலியா?. கஞ்சா வித்திட்டிருந்தவன் இப்ப தேவஸ்தான புக் ஸ்டோர்ல ஸ்டாக் கீப்பர்.."

என்ன சொல்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் பார்த்தேன். சுவரோரமாக இருந்த மேஜையில் ஒரே ஒரு படம் இருந்தது. என் தேடலைத் தொடர்ந்த ரங்கன், "ப்ரியா" என்றான். "ப்ருந்தாவோட பொண்ணு. அனதர் ரீசன் நான் என்னோட பாதையை மாத்திக்கிட்டதுக்கு. ஏழு வயசுக் குழந்தையா இருந்தா.. இப்ப ஷி இஸ் க்வைட் எ லேடி."

"சார்மிங்"

"சினிமா ஸ்டாராகணும்னு ஆசைப்படறா.. போன வாரம் மிஷ்கின் கிட்டே ஒரு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தா.." என்றான். முறைத்தேன். பொருட்படுத்தாமல், "அவளோட கனவுகள்.. நிறைய வச்சிருக்கா.." என்றான்.

29 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. ஹா!என்ன ஒரு வாழ்க்கை இது அப்பாஜி.

    வாழ்க்கையை விடவும் பெரிய கேன்வாஸ் எதுவுமில்லைன்னு மட்டும்தான் சொல்லத் தோணுது.

    உங்க எழுத்தும் நீங்க சொல்ல நினைச்ச வாழ்க்கையோட மேடு பள்ளங்களை பச்சாதாபமாகவோ போலியாக நடிக்காமல் அப்படியே சொல்லியிருக்கு.

    //"நான் அந்த மாதிரியெல்லாம் நினைக்கவே இல்லை" என்றேன். வலியா நிம்மதியா தெரியவில்லை, ஏதோ உணர்ந்தேன்.//

    நிஜமாகவே எனக்கு வலித்தது.

    தேவஸ்தான நூல்நிலையத்துக்கு அடிக்கடி போவேனாயினும் ஒருவேளை நிஜமாகவே ரங்கன் அங்கே இருக்கக் கூடுமாயினும் நான் சந்திக்க விரும்பவில்லை. உங்கள் கதையிலேயே ரங்கன் உறையட்டும்.

    7/18/2012

    பதிலளிநீக்கு
  3. பழகியவர்கள் பாழானதைப் பார்க்கும்போது வேதனையாய்த்தான் இருக்கும். அவர்களின் விதி எனும் நதி ஒருபக்கமாகவேதான் ஓடுகிறது போலும்.

    பதிலளிநீக்கு
  4. நூலகத்தில் இல்லை, ஆனால் நண்பன் தேவஸ்தான ஆபீசில் இருக்கிறான்.. சுந்தர்ஜி. 'அங்கேயே உறையட்டும்' என்பதே என் விருப்பமும் - well said.
    வாழ்க்கை கேன்வாஸ் ரொம்ப ரொம்ப ரொம்பப் பெரிசு என்பதே எனக்குக் கிடைத்தக் கல்வி.

    பதிலளிநீக்கு
  5. உண்மை ஸ்ரீராம்.. நானும் இது பற்றி யோசித்திருக்கிறேன். சிலருடைய வாழ்க்கையில் எதுவுமே சரியில்லையே என்று நினைப்பேன் (என்னைப் பற்றி அவர்கள் அதே போல் நினைக்கக் கூடும் என்பது புரிய நாளானது).

    பதிலளிநீக்கு
  6. நெஞ்சைத் தொட்டுட்டீங்க அப்பாஜி

    பதிலளிநீக்கு
  7. என்ன சொல்வெதென்றும் தெரியவில்லை
    எப்படிச் சொல்வெதென்றும் தெரியவில்லை
    காட்டை மனதில் கொண்ட மிருகமும்
    கனவை மட்டுமே மனதில் கொண்டு திரியும் மிருகமும்
    எதற்கும் அடங்காது என நினைக்கிறேன்
    மனதை அதிகம் பாதித்த பதிவு

    பதிலளிநீக்கு
  8. //நட்சத்திரத்தைப் பிடிக்கணும்னா கொறஞ்சது ஒரு மொட்டை மாடிலயாவது நிக்க வேண்டாமா? //

    ஆதர்ச உண்மை. பிருந்தாவின் பெண்ணும் அதே கனவுகளுடன் !!

    எனக்கு படம் எடுக்க அடிக்கடி எண்ணம் வரும்போது நினைக்கதோன்றும் எண்ணங்களும் இதேபோல் தான். என்னுடன் பச்சையப்பன் கல்லூரியில் படித்த நண்பனின் காதலியையும் இப்படித்தான் சின்னாபின்ன படுத்தி பார்த்தது திரையுலகம்.

    பதிலளிநீக்கு
  9. பிருந்தாவின் அறிவும் அழகும் சினிமா என்ற மிருகத்தால் விழுங்கப்பட்டது. இப்போது அவள் பெண்ணும் அதே கனவில். வாழ்க்கையில் சில விஷயங்களின் அர்த்தமே புரிவதில்லை. (வாழ்க்கை எனும் கேன்வாஸ் என்ற வார்த்தை பிரயோகத்தை ரசித்தேன்.) ரங்கன் அங்கேயே உறையட்டும் என்பதே என் விருப்பமும்.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லாஜூலை 19, 2012

    There were two Rengans with beautiful sisters in our school and both absconded in tenth class. I wonder you know that.

    பதிலளிநீக்கு
  11. ப்ளீஸ் நான் உங்க வீட்டுல தங்கிக்கட்டுமா? ப்ளீஸ் துரை ப்ளீஸ் எங்க சித்தப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாது ‘என்றாள்.என்னென்னவோ அனுபவங்கள் விளைவுகளின் காரணங்கள். வாழ்க்கை கான்வாசில் நல்ல வழிகாட்டல்கள் அறிவுரைகள் மூலம் அல்ல, வாழ்ந்துகாட்டும் வழிகாட்டல்கள் இல்லையென்றால் ப்ருந்தாக்களும் ஸ்ரீலதாக்களும், ரங்கன்களும் குறைவில்லாமல் காணக் கிடைப் பார்கள். ஹூம் எனும் பெருமூச்சுதான் விட முடிகிறது.

    பதிலளிநீக்கு
  12. டச்சிங்....

    பிருந்தாவைத் தொடர்ந்து அவள் பெண்ணும் நடிக்க ஆசைப்படுகிறாள்.. ம்ம்... :(

    பதிலளிநீக்கு
  13. மன ஊஞ்சலில் அந்தக் கோடியிலிருந்து இந்தக் கோடிக்கு.. இப்படியான ஊஞ்சலாட்டம் எப்படி சாத்தியமாயிற்று அப்பாஜி?.. நீங்கள் ஆடிக்கொண்டே இருக்கும் பொழுது நடுநடுவே பயம் வேறு. ஊஞ்சல் என்றால் இரண்டு பக்கமும் உயர வேண்டும் என்றாலும்
    அந்தக் கோடிக்குப் போகும் பொழுதெல்லாம் இந்தக் கோடி ஈர்ப்பு சக்தி இழுக்க வேண்டுமே, என்று.. கடைசியில் ஆட்டத்தை நிறுத்தி தரையில் காலூன்றிய போது, ஓ.. யூ ஹாவ் வெல் டன் இட்!

    பதிலளிநீக்கு
  14. அப்பதுரை அவர்களே! ராட்சத்தனமான கற்பனை! And science says there is no fiction! What an irony! I enjoy the irony of it! ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  15. எங்கிருந்தாலும் ரங்கன் அமைதியாக இருக்கட்டும். பிருந்தாவின் பெண்ணுக்காவது நல்ல வாழ்க்கையாக அமையட்டும். அம்மாவைப் பார்த்தாவது தெரிந்திருக்க வேண்டாமா!

    மனமே வேதனையில் ஆழ்ந்து விட்டது. :(((((( அதிலும் சினிமா உலகைப் பற்றித் தெரிந்து கொண்டே போய் விழும் பெண்களை நினைத்தால்.......:((((

    பதிலளிநீக்கு
  16. நேற்றுதான் வாத்தியாரின் ஸ்ரீரங்கத்து சீனுவின் கதை படித்தென் கதையை சிரிக்க சிரிக்க சொல்லி ...அதன் சோக பாகத்தையும் சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது என்று அந்த கதா பாத்திரத்தின் மீது ஒரு சலிப்பை காட்டி முடித்திருப்பார்....

    அது வேறு சூழலில் சீனு தன் வாழ்க்கைப் படத்தை வண்ணம் சிந்தி கெடுத்த கதை...

    இன்று ரங்கன் குடும்ப கதை படித்தே ... வாழ்க்கைப் படங்களை பார்த்ததை பார்த்த மாதிரி எழுத்தில் வரைந்துள்ளீர்கள்... ரங்கனின் குடும்பம் சீரடைய அவர் பணிபுரியும் இடத்தில் உள்ள வேங்கடவன் அருள் புரியட்டும்.....

    பதிலளிநீக்கு
  17. Geetha santhanamஜூலை 21, 2012

    அழகும் அறிவும் சேர்ந்திருந்தும் வாழ்க்கையைத் தொலைத்த பிருந்தாவின் கதை மனதை என்னவோ செய்தது. அது எப்படி நீங்கள் மட்டும் ஒவ்வொரு இந்தியா விசிட் போதும் உங்கள் பள்ளித் தோழர்களைச் சந்திக்கிறீர்கள். 

    பதிலளிநீக்கு
  18. // Geetha santhanam கூறியது...

    அது எப்படி நீங்கள் மட்டும் ஒவ்வொரு இந்தியா விசிட் போதும் உங்கள் பள்ளித் தோழர்களைச் சந்திக்கிறீர்கள்.//

    அதை சொல்லு. எனக்கு நேற்று பேசிய கஸ்டமரின் பெயர் நினைவுக்கு வர அடம் பிடிக்கின்றது. அப்பாதுரை பல்லாவரம், குரோம்பேட்டை, நண்பர் கூழாம் என்று எல்லாவற்றையும் நினைவு வைத்திருப்பது, பார்ப்பது என்று அட்டகாசம் போங்கள்.

    துரையை நினைவாற்றலை நினைக்கும்போது, என் நினைவில், தர்ப்பையை வைத்துதான் பொசுக்கவேண்டும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

    - சாய்

    பதிலளிநீக்கு
  19. சில சமயம் தேடிப்போவேன்; சில சமயம் தேடி வரும்.

    இன்றைக்கு ஏற்பட்ட சந்திப்பைக் கனவில் கூட எதிர்பார்த்ததில்லை. 68ல் விட்ட தொடர்பு திரும்பக் கிடைக்கும் சாத்தியம் கொஞ்சம் சிலிர்க்க வைத்தது!

    பதிலளிநீக்கு
  20. அப்பாதுரை அவர்களே! தேடிப் போனவற்றையும்,தேடி வந்தவற்ரையும் பதிவிடும் ஐயா! நாங்களும் தெரிந்துகொள்கிறோம்! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன் .

    பதிலளிநீக்கு
  21. உங்கள் நினைவுகள் அனைவரையும் நெகிழ்த்துகிறது

    பதிலளிநீக்கு
  22. பல முறை படித்து விட்டேன்.
    கதையின் முடிவு நிறைய யோசிக்க வைத்தது.
    சிலருக்கு இது தான் வரும் இது தான் வாழ்க்கை என்று இருக்கும் போது அதிலிருந்து மீண்டு வர முடிவதில்லை. சுனாமியில் பெற்றோரைப் பறிகொடுத்த மீனவச் சிறுவன் மீண்டும் கடலுக்குள் இறங்குவது போல.
    Versatile writing.
    நீங்க தமிழ்நாட்டில் இருந்திருந்தால் புதுமைப்பித்தன், சுஜாதா வரிசையில் வந்திருப்பீர்கள்.உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

    பதிலளிநீக்கு
  23. //சுனாமியில் பெற்றோரைப் பறிகொடுத்த மீனவச் சிறுவன் மீண்டும் கடலுக்குள் இறங்குவது போல.//

    அற்புதம் சிவா.

    பதிலளிநீக்கு
  24. பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி.

    (ஒரு வரி நன்றி எழுதுவதற்குள் என் பாடு பொல்லாப்பாடாகிவிட்டது. எப்படி இந்த constrained நிலையில் தொடர்ந்து பதிவுகளும் பின்னூட்டங்களும் எழுதுகிறார்கள் பதிவுலக நண்பர்கள் என்று ஒவ்வொரு கணமும் வியக்கிறேன்!!)

    பதிலளிநீக்கு
  25. தலைப்பு யோசித்த போது, விலங்கு என்ற சொல்லின் "சிறைப்படுத்தும்" தன்மை, விலங்கு என்ற சொல்லின் "மிருகத்தனம்" அதாவது தன் இயல்பை விட்டு வெளிவர இயலாதத் தன்மை, இரண்டும் தோன்றின. நம்முன் பரந்த விரிந்த உலகம் இருந்தாலும் நாம் தேர்வு செய்யும் பாதையில் என்னவோ மனதின் விகாரங்கள்/வெறுமைகள் மட்டுமே தென்படுகின்றன.. சிலருக்கு இந்தச் சிறைவாசம் பரம்பரை பரம்பரையாக யுகக்கணக்கில் தொடர்கிறது. உங்கள் உவமையை மிகவும் ரசித்தேன் சிவகுமாரன்.
    பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாழ்க்கை. வாழ்க்கை.. இப்படித்தான் என்பதை அழகாக...

    சிவகுமரன் சொல்வது போல சென்னையில் இருந்திருந்தால் நீங்கள் தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் முதலில் இருப்பீர்கள். இப்போது என்ன குறைச்சல். எங்கள் மனத்தில் நீங்கள் அப்படித்தான்.

    இனிய நட்புக்கு நட்பு நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லாஆகஸ்ட் 10, 2012

    // 68ல் விட்ட தொடர்பு திரும்பக் கிடைக்கும் சாத்தியம் கொஞ்சம் சிலிர்க்க வைத்தது!//

    ரொம்பப் பெரியவர் போலருக்கு! :-)

    முரளியோட மீதிக் கதையை என்றைக்கு எழுதப்போறீங்க சார்? :-)

    -----------

    இந்தக் கதை உறைய வைத்தது. இதே சமரசங்களுடன் பிருந்தா ஸ்டார் ஆகியிருந்தால் பெரிதாகக் கவலைப்பட்டிருக்க மாட்டேன். கனவு கலைந்து போனதில் வருத்தம் தான்.

    I am happy that the other fields are not bad as the ever f---ing movie industry. F--- all those assholes responsible for her state.

    உங்கள் நண்பர் வேலை செய்யும் இடத்தை மறைத்திருக் வேண்டும்! உங்கள் மேல் கோபமாக வருகிறது. You have violating his trust with which he shared all such sensitive information. I hope you would learn to handle such sensitive information about others in future with care.

    பதிலளிநீக்கு
  28. அடுத்தவருக்கும் நம்மைப் போல் அறிவுண்டு என்று நினைக்கும் கணத்தில் கோபம் மறைந்துவிடுவதை உணர்ந்திருக்கிறேன் பெயரில்லா.

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லாஆகஸ்ட் 11, 2012

    கதையை வாசிக்கும் போது அப்படித் தோன்றவில்லை! ஆனால் ஒரு பின்னூட்டத்திற்கான பதிலைப் பார்த்ததும், எங்கே வாய்தவறி விட்டீர்களோ என்று தோன்றியது!

    ////அடுத்தவருக்கும் நம்மைப் போல் அறிவுண்டு//

    உண்டு என்பதில் சந்தோஷம்! I am happy that you have maintained his trust! Thanks!

    பதிலளிநீக்கு