2012/04/06

பாலுவின் கோடை



        1


    குரோம்பேட்டையில் இருந்தபோது, ஏமாந்தால் பம்மல் கோகுலம் காலனியில் இருந்த என் மாமா வீட்டிற்கு வந்துவிடுவேன். எங்கள் புதுவீடு தயாராகிக் கொண்டிருந்தது ஒரு வசதியானக் காரணமானதால் அந்தக் கோடையில் தினம் பம்மலில் தங்கியிருந்தேன். எதிர் வீட்டில் ஒரு பிரபல பல்பொடிக் கம்பெனி. வெள்ளை நிறப் பல்பொடியைப் பேக்கெட்டில் அடைத்து விற்பனை வண்டியில் ஏற்றுவார்கள். சில சமயம் வேறு உபயோகத்துக்கான வெள்ளைப் பொடியும் பொட்டலம் கட்டுவார்கள். என் பதின்ம வயதின் தொடக்கத்தில் பல்பொடிக் கம்பெனியில் நான் பார்க்காத கேட்காத தெரிந்துகொள்ளாத உலக விஷயமே கிடையாது. எனக்கு ஞானம் கிடைத்த ஆசிரமம். எட்டு வயதிலிருந்து இருபது வயது வரையிலான பெண்களும் ஆண்களும் தினம் புழங்கிய இடம். அவர்களுடன் கலந்துத் தொழிலாளியாகி, தலைமுதல் கால் வரை பல்பொடி மணக்க வீட்டுக்குள் வந்தால் மாமி திட்டுவார். பல்பொடி வேலையில்லாத நாளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், அதே பெண்கள் சுள்ளி ஒடிக்க வருவார்கள். ஒரு வேலி விடாமல் சுள்ளி ஒடிப்பார்கள். என் மாமி ஒரு மூங்கில் கழியை எடுத்துக்கொண்டு "டீ.. தடிச்செறுக்கி" என்று அவர்களைத் துரத்துவார்.

ஈசு அந்தப் பெண்களில் ஒருத்தி.

    பாலு எங்கள் கூட்டத்தில் சேர்ந்த வாரம். எங்கள் வீட்டில் ஈசுவைச் சித்தாளாகப் பார்த்தேன். தாத்தாவிடம் கூலி வாங்கிக்கொண்டு கைநாட்டு வைத்துவிட்டுப் போனாள். என்னைப் பார்த்து, "ஐரே.. உன் வீடா?" என்றாள், கீழுதட்டை உள்ளுக்குச் சுருட்டி முன்பல்லால் கடித்தபடி. பாலு சற்றும் தயங்காமல், "ஆமாம்.. என் வீடு தான்" என்றான். நெருங்கிப் பழகியவன் போல், "இங்க வா.. உன் பேரென்ன.. இப்படி எங்களோட வந்து உக்காந்துக்க" என்றான்.

பதில் சொல்லாது போன ஈசு, பனைமரத்தருகே சென்றதும் சட்டென்று நின்றாள். திரும்பி எங்களைப் பார்த்தாள். கடகடவென்று நடந்து சலனமில்லாமல் பாலுவின் பக்கத்தில் அமர்ந்தாள். எனக்குக் கூச்சமாக இருந்தது. பெண் என்ற கூச்சமா அல்லது எங்கள் வீட்டுச் சித்தாளுடன் உட்கார்ந்திருப்பது தெரிந்தால் அவமானம் என்ற ஜாதி உணர்வா தெரியவில்லை. எனினும் அவள் எங்கள் நடுவில் இருந்தது ஒரு சாதனை போல் பட்டது. "எவ்வளவு கூலி?" என்று சாதாரணமாக அவள் கைகளிலிருந்து பணத்தைப் பிடுங்கப் போனான் பாலு. "தே!" என்று அவனைத் தள்ளிவிட்டு பணத்தை இடுப்பில் முடிந்து கொண்டாள். "அரை நாள் கூலி" என்றாள். மற்ற சித்தாள் பெரியாள் பெயர்களையும் வயதையும் கேட்டுத் தெரிந்து கொண்டான் பாலு. சிறிது நேரத்தில் ஒரு கொத்தனார் அவளையழைக்க, ஈசு எழுந்தாள்.

"நாளைக்கு எங்க கூட ஏரியம்மன் குளத்துல குளிக்க வரியா?" என்றான் பாலு. "டேய்!" என்று திடுக்கிட்டான் சாம்பா. "வேணாண்டா" என்று நடுங்கினேன் நான்.

ஈசு சாதாரணமாக, "வேணாம் ஐரே.. தாளமாட்டே" என்றுத் தன் முழுப்பாவாடையை லேசாக உயர்த்திச் சிரித்தபடி ஓடினாள். பனைமரத்தருகே மறுபடியும் நின்றாள். யாரோ அவள் தலையைத் திருப்பியது போல் எங்களைத் திரும்பிப் பார்த்தாள்.

பாலு என்னிடம், "ஈசு.. நல்ல பேருடா..அவளோட ஒட்டிக்கிட வேண்டியது தான்" என்றான். ஜேம்ஸ் குறுக்கிட்டு, "டேய் பாலு.. துரை சின்னப்பையன்.. நீ வம்புல மாட்னாலும் அவனை மாட்டி வுட்றாதே" என்றான்.

பாலு பலமாகச் சிரித்தான். "டேய் புண்ணாக்கு மயிராண்டிங்களா.. என்னடா வம்பு வரப்போவுது? நாம எல்லாருமே டீனேஜு. கொஞ்சம் தொட்டுப் பாக்கப் போறோம்.. அவ்வளவு தான்.. ஈசுவைப் பாத்தா வம்புக்காரப் பொண்ணாவா தெரியுது? இப்ப என்ன ஆச்சுன்றே? பொதுக் குளத்துல நம்ம கூட குளிச்சா ஒண்ணும் ஆயிராது..." என்றான். ஈசுவுடன் குளிப்பதன் கிளுகிளுப்பு உள்ளுக்குள் இருந்தாலும் அமைதியாக இருந்தேன். எங்கள் கூட்டத்தில் நான் இளையவன் என்றாலும் ஜேம்ஸ் என்னைச் சின்னப்பையன் என்றது உறுத்தியது.

"அவளைப் பாருடா.. இன்னும் நம்மளையே பாத்துட்டிருக்கா" என்று கிசுகிசுத்தான் ரவி. பனைமரத்தடியில் ஈசு இத்தனை நேரமாக எங்களையே பார்த்துக் கொண்டிருந்தது விசித்திரமாக இருந்தது. நிமிர்ந்த பாலு, "போய்ட்டு வா ஈசு" என்று பலமாகக் குரல்கொடுத்தான். "நாளைக்கு மறந்துடாதே". அவள் எங்களைப் பார்த்துத் தலையசைத்தபடியே பின்னால் நடந்தது அப்போது விபரீதமாகத் தோன்றவில்லை.

ஸ்ரீதர் சைக்கிளில் வருவதைப் பார்த்ததும் எங்கள் கவனம் கலைந்தது. ஸ்ரீதருக்குக் கொடுப்பதில்லை என்று நாங்கள் தீர்மானித்திருந்த வேர்க்கடலைப் பொட்டலங்களை அவசரமாகச் சாப்பிட்டுத் தீர்த்தோம். ஸ்ரீதர் வந்ததும் காலிப் பொட்டலங்களைப் பார்த்துவிட்டு வாயில் வந்தபடித் திட்டினான். கடுப்பு வந்து கிளம்பினான். ஜேம்ஸ் சமாதானமாக, "ரைட்ரா.. கோச்சுக்காத மச்சி.. நைட்டு கோவிலுக்கு வருவில்லே? நானே வெல்லமும் வேர்க்கடலையும் வாங்கி வரேன்" என்றான். அப்பொழுது தான் அன்றிரவு கோவிலில் பேயோட்டம் என்பது எங்கள் நினைவுக்கு வந்தது. மாமியிடம் ஏதாவது பொய் சொல்லிவிட்டு வந்தாக வேண்டும். இரவு பேயோட்டம் பார்ப்பதற்கானத் திட்டங்கள் போட்டோம்.

அந்தப்பக்கம் வந்தத் தணிகாசலம் எங்களைத் தடுத்து, "வேணாம் கண்ணுங்களா.. இன்னிக்குக் காட்டேறி பூஜை" என்றார்.

பாலு அவரை முறைத்தான். "பூசாரிண்ணே.. எங்களைப் பாத்தா எப்படித் தெரியுது?" என்றான்.

"அதுக்கில்ல கண்ணுங்களா.. ரத்தக்காட்டேறி பூஜை ரொம்பக் கனமா இருக்கும். வயசானவங்களே பயந்துருவாங்க. நீங்கள்ளாம் சின்னப்பசங்கள்ளா.." என்றார்.

"நாங்க வரோம் பூசாரிண்ணே". கிளம்பினோம். இரவு திரும்புவோம் என்பது எங்களுக்குத் தெரியும். அவருக்கும் தெரியும்.

பனைமரத்தடியிலிருந்து ஸ்ரீதர் அலறினான். "இங்க வாங்கடா!". ஓடினோம். ஈசு நின்ற இடத்தில் வட்டமாக ரத்தக்கறை. ஈரமாக இருந்தது. திக்கென்றது.

"சே.. அவ ஒண்ணும் இங்கே நிக்கலைடா!" என்றான் பாலு. "மதியம் எதுனா கடா வெட்டி பொங்கினாங்களா பூசாரிண்ணே?"

"ஆமப்பா" என்றார் பூசாரி. எனக்கு என்னவோ உள்ளுக்குள் கலங்கியது.

    பம்மல் அனகாபுத்தூர் பிரதேசத்தில் பேயோட்டம் நிறைய நடக்கும். கிறுஸ்துவ பெந்தகொஸ்தே திருச்சபை இரண்டிலும் இரவு எட்டு மணிக்கு மேல் 'பிலுபிலுபிலுபிலுபிலு' என்று கீச்சுக்குரலில் அலறி உடலைக் குலுக்கி இரண்டடி உயரத்துக்குக் குதித்துக் கலக்கடிப்பார்கள். பிற மதத்தினருக்கு ஏரியம்மன் கோவில். சில சமயம் பேய்கள் மதம் மாறிவிட்டதோ என்ற சந்தேகத்தில் இரண்டு இடங்களிலும் பேயோட்டுவார்கள். சாதாரணப் பேய்களுக்கு பூவாத்தா எல்லையம்மன் துர்கை நீலி பாம்புப்புத்து மாரியம்மன் பிடாரியம்மன் என உற்சவர் சன்னதிகள் போன்ற கோவில்கள் பரவலாக இருந்தாலும், குறிப்பாக ரத்தக்காட்டேறி பித்தகாட்டேறி பூஜை இரண்டும் மூலவரான ஏரியம்மன் கோவிலில் மட்டுமே நடக்கும்.

பேயோட்ட இரவுக்கு மறுநாள் ஏரியில் என்னென்னவோ மிதக்கும். பூக்கூடை, மயிற்கற்றை, ரத்தம், கடாயில் வறுபட்டுக் காய்ந்த நார்த்தங்காய் போல் சுருங்கிய ரத்தப் பொறிகள், குங்குமம், மஞ்சள் பொடி, பால் தொன்னைகள், சாராயக் குப்பிகள், வேட்டிகள், சில ரவிக்கைகள்.... என்று கோவிலோரமாக, மதியத்துக்கு மேல் போதை தெளிந்தபின் தர்மகர்த்தா வேலாயுதம் வீட்டு ஆட்கள் வந்து சுத்தம் செய்யும் வரை மிதந்து கொண்டிருக்கும்.

கோடைக் காலைகளில் மாமா வீட்டில் தினம் ஒரே மெனு. கெட்டித் தயிரில் பிசைந்தப் பழைய சோறு. அதில் பச்சை மிளகாய், மணத்தக்காளி, மோர்மிளகாய், மாங்காய் இஞ்சித் துண்டு, கறிவேப்பிலை எல்லாம் அளவாக வறுத்துப் போட்டுக் கலந்திருப்பார்கள். பக்கத்தில் ஒரு குடுவையில் முந்தைய வருடத்து மாவடு. இருபது பேருக்குத் தயாராக இருக்கும் சோறு. பத்து பேராக அதை ஒரு பிடி பிடிப்போம்.

மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு மூச்சு விடக்கூட முடியாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஏரியம்மன் கோவிலுக்குப் போனேன்.

ஏற்கனவே பாலுவும் சாம்பாவும் ஜேம்சும் தண்ணீரில் இறங்கியிருந்தார்கள். கை நிறைய ஏரிக்குப்பையை அள்ளிக் காற்றில் என் பக்கமாக எறிந்தான் பாலு. "ஆத்தா வந்துட்டா!" என்றான். "ஆத்துல இறங்கு ஆத்தா!" என்று சிரித்தார்கள். சைக்கிளைச் சாய்த்துவிட்டு அப்படியே தண்ணீரில் இறங்கினேன். முதல் நாளிரவு பார்த்தப் பேயோட்டம் இன்னும் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தது. "என்னடா ஈசு வரலியா?" என்றேன்.

இரவு, பேயோட்டத்தில் ஈசுவின் அக்கா யார் மேலோ வந்துவிட்டாள் என்று வேப்பிலையால் மாறி மாறி ஒருத்தியை அடித்தார்கள். பேய்ப் பெண்ணை முடியால் இழுத்து ஒரு கற்றையை ஏரியம்மன் சூலப் படியில் ஆணியடித்து நிறுத்தினார்கள். அந்தப் பெண் உறுமிக் கொண்டே இருந்தாள். ஈசு கூட பயந்து விட்டாள். "அக்கா! அக்கா!" என்று அலறிக் கொண்டு ஓடியவளைப் பிறகுக் காணவில்லை. அதற்குப் பிறகு வேப்பிலையும் உடுக்கடியும் ரொம்ப ஓவரானதென்று நாங்களும் கிளம்பிவிட்டோம்.

"தோடா.. நாங்களாம் கிறோம்.. ஈசு வரலியான்றான்" என்றான் ஜேம்ஸ். கோவிலோரமாக நீந்திக் கொண்டிருந்த பாலு, நீரில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து தோ ராஹா ஜாடை காட்டினான். பலமாகச் சிரித்தான். "அதுக்குள்ளே என்னடா அவசரம் உனக்கு?" என்றான்.

"வராட்டிப் போறா விடு" என்ற சாம்பா, என்னைத் தள்ளினான்.

நான் பாலுவைச் சாதுவான கெட்ட வார்த்தையில் ஏதோ சொல்லப் போக, திடீரென்று பாலுவைக் காணோம். இப்போது தானே நீரில் இருந்தான்? சாம்பாவும் திடுக்கிட்டான். அடுத்த சிலக் கணங்களில் பாலு மேலே வந்தான். மூச்சுத் திணறி மறுபடியும் மூழ்கினான். நாங்கள் அரண்டோம். ஜேம்சும் சாம்பாவும் பாலு இருந்தப் பக்கமாக மூழ்கினார்கள். நான் தயக்கத்துடன் அவர்கள் பக்கமாக நீந்தினேன். திடீரென்று என்னை யாரோ காலைப் பிடித்து நீருக்குள் இழுத்தார்கள். இவர்களாக இருக்கும் என்று எண்ணி விளையாட்டாக இருந்தால் என்னைத் திரும்பவிடாமல் இழுத்துக் கொண்டே இருந்தது புசுபுசுவென்று கால்களில் உறுத்திய ஏதோ ஒன்று. எட்டி உதைத்துத் திணறி மேலேறி வந்தால் மூவரும் நீந்திக் கொண்டிருந்தார்கள். "எங்கடா போனே?" என்றார்கள். நான் திணறித் துப்பிக் கொண்டிருந்தேன்.

"நிச்சயம் யாரோ தண்ணில இருக்காங்கடா" என்றான் பாலு. "இல்லடா.. நாங்கதான் பாத்தமே?" என்றான் சாம்பா.

"போயிடலாம்டா" என்றேன்.

இரண்டு நிமிடங்கள் பொறுத்து நீரிலிருந்து மேலே திடுப்பென்று மாயமாக வந்தாள் ஈசு. கைகளை உயர்த்திக் காட்டுத்தனமாகச் சிரித்தாள். அவள் கைகளைச் சுற்றிக் கோரைப் புல்லினால் கட்டியிருந்தாள். புல்கட்டுக் கையுறையை அவிழ்த்து எறிந்து, "என்னா அய்ரே.. பயத்துல ஒண்ணுக்கிருந்தியா?" என்று என்னை நெருங்கித் தோள்களைக் கட்டினாள். நான் சற்றும் எதிர்பாராமல் என் நிஜாரின் நடுவில் கை வைத்து "ஈரமாயிருச்சு" என்றுச் சிரித்தாள். "பயந்துட்டியா?" என்றாள். அவள் என் நிஜாரில் கைவைத்ததால் இன்னும் பயந்தேன். "மாமியாண்ட சொல்றாதப்பு. உன் மாமி.. அய்ரூட்டு மாமியா அது?" என்றாள்.

"நீதானு எனக்குத் தெரியும் ஈசு.. அதான் சும்மா இருந்தேன்" என்றான் பாலு.

"சேய்! கம்னு கெட. நீ எத்தினி பயந்தேனு எனக்குத் தெரியாதா?"

"ஆமா! எங்கே ஒளிஞ்சிருந்தே?" என்றேன்.

"ஏரியம்மா காவா குகை தெரியாதா உனக்கு?"

"தெரியாதே?" என்றோம்.

எங்களை நீருக்குள் அழைத்துப் போனாள். முதன் முறையாகப் பார்த்துத் திடுக்கிட்டோம். ஏரியம்மன் உள் சன்னதியில் அம்மன் சிலையின் பின்புறத்தில் ஆள் புகும் அளவுக்குச் சுரங்கக் கால்வாய். அம்மன் மேல் செய்த அபிஷேக நீரெல்லாம், குறிப்பாக ரத்தம் பொடி போன்ற திக்திக் பொருட்களையெல்லாம் ஏரிக்குள் பைசல் பண்ண வசதியாக வெட்டியிருந்தார்கள். ஏரியின் உள்வாயை ஒரு மூங்கில் தட்டிக் கதவினால் அடைத்திருந்தார்கள். தட்டியைத் தட்டியபடி அலட்சியமாகக் கோவிலுக்குள்ளிருந்து ஏரிக்கு வந்து போனாள் ஈசு. புதுமை காரணமாக நாங்களும் கோவிலுக்கு உள்ளும் ஏரிக்கும் மாறி மாறி நீந்தினோம்.

"இங்கிருந்து தான் உங்க அத்தினி பேரையும் பயங்காட்டினேன்" என்றாள்.

"ஆமா.. இது உனக்கெப்படித் தெரியும்?" என்றான் பாலு.

"அஞ்சு வருசத்துக்கு முந்தி எங்கக்கா இங்கதானே செத்துச்சு?" என்றாள்.

அதிர்ந்தேன். "இங்..கியா?"

"தெரியாதா? எங்கக்காவை இந்தக் காவாயிலதான் திக்கித் திணறி சாவடிச்சிருக்காங்க தேவடியா பசங்க" என்றாள்.

"யே.. உங்கக்கா பனைமரத்துல தொங்கிச்சுனு சொன்னாரு பூசாரி நேத்து?" என்றான் ஜேம்ஸ்.

"நான் பாத்தன் கண்ணு.. இந்தக் காவாயில தான் உடம்பு ஊதிப் போயி.. போலீஸ் நாய் வந்து.. அப்ப நான் சின்னப்புள்ளைனாலும் நல்லா பாத்தனே..?"

"உனக்குப் பயமா இல்லே?" என்றேன்.

"என்னாடா.. லூசாட்டம் கேக்குறே?" என்றான் பாலு.

"எனக்கு இன்னா பயம்? எங்கக்காவைக் கெடுத்தவனை எனக்குத் தெரியும். நாந்தான் அந்தாளைப் பழி வாங்கப் போறேனில்லே? பயந்தா முடியுமா?" என்றாள்.

"யாரு?" என்றான் பாலு.

"சொல்லிருவனா.. இங்கே வச்சிருக்கேன்" என்று மறுபடியும் நான் எதிர்பாராத விதமாக என் கையை எடுத்து அவள் இடது மார்பில் வைத்தாள். நான் அவசரப்பட்டு விலகினேன். ஈசு பலமாகச் சிரித்தாள். நீரில் மூழ்கி வெளிவந்து வாயைக் குவித்துத் துப்பினாள். ஊற்று போல வெளியேறித் தெறித்தது தண்ணீர்.

"எங்கே வச்சிருக்கே? எனக்கும் சொல்லேன்?" என்று வேகமாக அவள் பக்கமாக நீந்தினான் பாலு.

ஈசு மறுபடி சிரித்தாள். "ஐரே.. நீ யாரு.. இன்னா விசயம்னு உன்னைப் பத்தித் தெர்யாதா?" என்று மறுபடி நீரில் மூழ்கி வெளிவந்து வாயைக் குவித்துத் துப்பினாள். ஊற்று போல வெளியேறித் தெறித்தது ரத்தம்.

    "ஏண்டா.. என்ன ஆச்சு?" என்று அலறினார் பாட்டி.

சுவரோரமாக இருந்தக் கட்டிலில் என்னை உட்காரவைத்த பாலு, "ஒண்ணுமில்லே.. ரொம்ப சாப்பிட்டானா என்ன தெரியலே.. ஏரில வாந்தி எடுத்து மூழ்கப்போனான்.. பயப்படாதீங்கோ.. நாங்க உடனே பிடிச்சுக் கொண்டு வந்துட்டோம்". வழியெங்கும் பாலுவின் கறார் அறிவுரை. "டேய்.. சும்மா நம்மள ட்ரிக் பண்ணியிருக்காடா ஈசு.. வாயிலந்து ரத்தம் வரதாவது? பேயோட்டக் குங்குமம் எல்லாம் தண்ணில மிதந்திட்டிருந்ததை நீதான் பாத்தியே.. நீ எதுனா நல்லா தின்னுட்டு வந்திருப்படா.. அதான். வீட்ல இதெல்லாம் சொன்னா எல்லாருக்குமே வம்பாயிரும் தெரியுதா?". நான் பார்த்தது குங்கும நீர் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தும் குழம்பியிருந்தேன். 'ஈசு ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?' என்ற கேள்வியை என்னுள் கேட்டுக் கொண்டிருந்தேன். 'எங்கக்காவை கெடுத்தவனை எனக்குத் தெரியும்' என்று என் கையை எடுத்து நெஞ்சில் வைப்பானேன்?

"தொரப்பாவுக்கு ஒடம்பெல்லாம் நடுங்குறதே? சாந்தி.. சித்த வா இங்கே" என்றார் பாட்டி. என் மேல் வெயிலோ நிழலோ அதிகமாக விழுந்தால் கூட என் பாட்டிக்குக் கவலை வந்துவிடும். இந்த நிலைமையில் சும்மா இருப்பாரா? அடுத்த நிமிடம் மாமி வந்துவிட்டார். பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும் எட்டூருக்கு மிரட்டி உருட்டுவார். எனக்கிருந்த குழப்பத்தில் எல்லாவற்றையும் சொல்லி முடித்தேன். "ஈசு என்னைப் பழி வாங்கப் போறா. அவ அக்காவைக் கெடுத்தேன்னு நெனைச்சிட்டிருக்கா" என்றேன்.

"அதெல்லாம் இல்லிங்க மாமி" என்றான் ஜேம்ஸ். அய்யர் வழக்கில் ஜேம்ஸ் பேசுவது தமாஷாக இருக்கும். அந்த நிலையிலும் ரசித்தேன். பாலுவின் முகத்தில் கோபம் வெடித்தது. சாம்பா வெளியே ஓடத் தயாராக வெளிக்கதவருகே நின்றிருந்தான். வழியில் எங்களைப் பார்த்து விவரம் தெரிந்து கொண்ட ரவி, இந்நேரம் பாலுவைப் பற்றி அவன் வீட்டில் வத்தி வைத்துக் கொண்டிருப்பான்.

மாமி வெடிக்கப் போகிறார் என்று நினைத்தேன். மாறாக ஒரு தட்டில் மிளகாய், எள், பச்சைக்கற்பூரம் என்று என்னென்னவோ எடுத்து வந்தார். "சும்மா இருடா.. மீசை கூட முளைக்கலை.. கன்னாபின்னானு பேசிண்டு.. கெடுக்கறதுனா என்னனு தெரியுமாடா உனக்கு? தத்துபித்தாட்டம்.. உக்காருங்கடா எல்லாரும்" என்று அதட்டினார். எல்லோரும் என்னைச் சுற்றி அமர்ந்தனர். "குழந்தை பயந்துடுத்தே.. காத்து கருப்பு பட்டிருக்குமோ?" என்று புலம்பிக் கொண்டிருந்த பாட்டியையும் அதட்டினார். "சும்மா இருங்கோ. ஒண்ணும் ஆகல உங்க தொரப்பாவுக்கு. டேய்.. உக்கார்டா. கண்ட இடத்துல எதையாவது சாப்பிட வேண்டியது.. இஷ்டத்துக்கு சுத்த வேண்டியது.." என்றபடி என் தலையை அழுத்தி உட்கார வைத்தார். "சுத்திப் போட்டா சரியாயிடும்" என்று எங்கள் முன் நின்றுகொண்டு தட்டைச் சுற்றத் தயாரானார்.

"இதெல்லாம் வேணாம் மாமி.. எனக்கு நம்பிக்கையில்லை" என்ற பாலுவை முறைத்தார். "நம்பிக்கையில்லேனு நாசமாப் போனதால தானே இப்பக் கிடந்து அவஸ்தைப் படறோம்? சும்மா இருடா.. உனக்கு நம்பிக்கையில்லேனா எனக்கு இருக்கு. உக்காருடா" என்று அதட்டி, "உனக்கென்னடா தனியா பத்திரிகை அனுப்பணுமா? வா இங்க" என்று சாம்பாவையும் வரச்சொல்லி உட்காரவைத்தார்.

அதற்குள் ரவியும் அவன் அம்மாவும் வந்துவிட்டார்கள். "என்னடா பாலு?" என்றபடியே உள்ளே வந்தார். "வாங்கோ.. உங்க பையனா இவன்?" என்றார் என் மாமி.

"இல்லே.. அண்ணா பையன்.. லீவுக்கு வந்திருக்கான்.. ஏண்டா பாலு, என்ன ஆச்சு?"

எல்லாவற்றையும் சொல்ல வேண்டியிருந்தது. ரவியின் அம்மா அழத்தொடங்கி விட்டார். "இந்த மாதிரி ரெண்டுங்கெட்டானெல்லாம்.. யாரு மாமி அது ஈசு? யாரோட அக்கா? என்ன விஷயம்? இவனுக்கு ஏதாவது ஆச்சுனா எங்கண்ணாவுக்கு என்ன பதில் சொல்வேன்?" என்றார். சிக்கல் பாலுவின் பக்கம் திரும்பியதில் எனக்குக் கொஞ்சம் நிம்மதி.

"ஒண்ணும் ஆகலே. பயப்படாதீங்கோ" என்றார் மாமி. "நீங்கள்ளாம் குடிவரதுக்கு முன்னால நடந்தது. இந்த ஈசுவரியோட அக்கா திலகமோ என்னவோ அவ பேர்.. நல்லா தெரியும்.. பல்பொடி கம்பெனியிலயும் இங்கயும் அங்கயும் சுத்திண்டிருப்பா.. வயசுக் கோளாறு.. திடீர்னு ஒரு நா ராத்திரி, "ஓடிப்போயிட்டா ஐரே!"னு அவ அம்மா இங்க வந்தா. இவர்தான் போலீசுக்குச் சொல்லி என்னவோ செஞ்சு வச்சார். ஒண்ணும் நடக்கலே. ஒரு மாசம் கழிச்சு அவளே வந்துட்டா. எவனோ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லிக் கூட்டிண்டு போய் திருத்தணில தாலி கட்டி நாலு நாள் வச்சுண்டிருந்துட்டு பம்பாய்லயோ விஜயவாடாலயோ வித்துட்டானாம். த்வம்சம் பண்ணிட்டாளாம் சின்னப் பொண்ணைப் பாவம்.. எப்படியோ ஓடி வந்துட்டா. ரெண்டு மாசம் கழிச்சு கர்ப்பம்னு தெரிஞ்சதும் மறுபடியும் ஓடிப்போயிட்டா. அப்புறம் மூட்டைப் பூச்சி மருந்து குடிச்சு செத்துப் போயிட்டானு சொல்லி.. ஏரியம்மன் கோவில்ல கிடந்தாளாம்.. எடுத்துப்போட்டு..பதினாறு வயசோ என்னமோதான் பாவம்.. மூக்கும் முழியுமா.. சூத்ரக்குட்டி மாதிரியே தெரியாது" என்றவரை பாட்டி தடுத்தார். "போறும் போறும்.. குழந்தை ஏற்கனவே பயந்து போயிருக்கான்"

"தெரியட்டும் தெரியட்டும்.. தடிமாடு மாதிரி சுத்தலே?" என்றார் மாமி. சாதாரணமாக என்னை 'வாடா கண்ணா' எனும் மாமி கோபம் வந்தால் தடித்தாண்டவராயா, எருமைமாடு போன்ற சொல்லடிகள் கொடுப்பார். தெருப்பொறுக்கிக்கு இணையாக "டேய்!" என்று உதார் விடும் மாமியென்பதால் அடங்கிவிடுவேன்.

"சுத்திப் போட்டா சரியாயிடும்" என்றார். "வாங்கோ நீங்களும் பிடிங்கோ" என்று ரவியின் அம்மாவிடம் ஒரு தட்டைக் கொடுத்து கைப்பிடிக் கற்பூரத்தை நடுவில் வைத்து ஏற்றினார். "நீங்க முதல்ல மகமாயி ராசி சுத்திப் போடுங்கோ. நான் திருஷ்டி சுத்திப் போடுறேன்" என்றார். ரவியின் அம்மா எங்கள் முன் தட்டைச் சுற்றத் தொடங்கினார். இரண்டாவது முறை சுற்றும் பொழுது பாலு தும்மினான். "இருங்கோ" என்று நிறுத்திய என் மாமி கற்பூரத்தட்டில் ஒரு உப்புக்கல்லை எடுத்துப் போட்டு, "மறுபடியும் சுத்திப் போடுங்கோ. தும்மிட்டான்" என்றார். இந்த முறை முதல் சுற்றில் பாலு எதிரில் வந்ததும் கற்பூரம் அணைந்தது. ரவியின் அம்மா பயந்து விட்டார். "வேணும்னே வேகமா மூச்சு விடறான் மாமி. டேய் பாலு, தொலைச்சுடுவேன்.. சும்மா இருடா" என்ற மாமி, "நானும் சுத்தறேன் வாங்கோ" என்றார். ஒரு பெரிய தட்டில் திருஷ்டிப் பொருளையும் கற்பூரத்தையும் மாற்றி இருவரும் முனைக்கொருவராகப் பிடித்துக் கொண்டு சுற்றினர். இரண்டாவது சுற்றில் கற்பூரம் சொல்லிவைத்தாற் போல் அணைந்தது. "பரவாயில்லை விடுங்கோ" என்ற மாமி, சுற்றுவதை நிறுத்தவில்லை. மூன்றாவது சுற்றில் "இன்னாடி முண்டைங்களா.. கயிசடை.. தூ!.." என்று பாலு துப்பியது அதிர்ச்சியாக இருந்தது.

கட்டைப் பெண் குரலில் அவன் பேசியது இன்னும் அதிர்ச்சி.

[தொடரும்]


21 கருத்துகள்:

  1. யப்பா. சாமி.
    நடு நிசியில இப்பிடி பயமுறுத்துறீங்களே.
    ஆனாலும் கதை(?!) ஜிவ்வுன்னு போகுது.
    ஆமா... மச்சி-ங்குற வார்த்தை அப்பவே இருந்துச்சா ?

    பதிலளிநீக்கு
  2. //ஈசு அந்தப் பெண்களில் ஒருத்தி. //

    இங்கே அங்கே தயங்கித் தயங்கி நின்ன கதை, ஈசு வந்ததும் களை கட்டி விட்டது.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நாளாக் காணோமேனு நினைச்சேன். :)))))

    பதிலளிநீக்கு
  4. காட்டேரி நடமாட்டம் அதிகமா இருக்கும் போல...

    பதிலளிநீக்கு
  5. கஞ்சி குடிக்கும் போது நறுக்கென்று பச்சை மிளகாயைக் கடித்த சுகம் இதுபோன்ற ஆவி சமாச்சாரக் கதைகளைப் படிப்பதில் இருக்கிறது. தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து படிக்கத் தூண்டும் கதைதான்.
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. சுவாரஸ்யமான நடை. ஆவி இருந்ததுன்னு நீங்களா சொல்லுவீங்க. நானே சொல்ல மாட்டேன் !!

    பதிலளிநீக்கு
  8. பதின்ம வயதுகளில் கிடைக்கும் அனுபவங்கள்....வயசுப் பெண்ணொருத்தி, வயதுகளின் பிடியில் இளசுகள். சோட்டானிக்கரையில் அந்திவேளை பூஜையில் ஆடும் (மனநிலை தவறியவர்களா. பேய் பிடித்தவர்களா)ஆட்டமும் குருதி பூஜையும் நினைவுக்கு வருகிறது. எதிர் நோக்க வைக்கும் விதத்தில் கதை சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. பேயோ ஆவியோ வரப்போகுது.நம்பிக்கை இல்லாட்டியும் இப்பிடிப் பயம்காட்டினா பயமாத்தான் இருக்கு அப்பாஜி !

    பதிலளிநீக்கு
  10. //"எனக்கு இன்னா பயம்? எங்கக்காவைக் கெடுத்தவனை எனக்குத் தெரியும். நாந்தான் அந்தாளைப் பழி வாங்கப் போறேனில்லே? பயந்தா முடியுமா?" என்றாள்.

    "யாரு?" என்றான் பாலு.//

    போக்குக் காட்டலோ?..

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லாஏப்ரல் 07, 2012

    கதை சுவாரசியமாவும் இருக்கு, பயமாவும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. பிற்சேர்க்கை: சேர்க்கத் தவறியதை இந்தப் பதிவின் இறுதியில் சேர்த்திருக்கிறேன்.

    இரண்டு பதிவுகளையும் படித்து பயப்படாமல் பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி. பயணம் மற்றும் injury காரணமாக என்னால் பதிலெழுதவோ பதிவைத் தொடரவோ முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

    ஸ்ரீராம்: உங்கள் யூகம் வியக்க வைக்கிறது. (பயமாகவும் இருக்கிறது:) கொசுறு confession: எங்கள் பிளாக் ரத்தக்காட்டேறி பதிவு கிளறிவிட்ட நினைவுகளை வைத்துப் புனைந்தது இது.

    வல்லிசிம்ஹன்: பம்மல் தேவர்கள்.. நல்ல பேயர் கொடுத்தீங்க :)

    சிவகுமாரன்: எழுபத்துமூன்று வாக்கில் நிகழ்ந்த சில சம்பவங்களை வைத்துப் புனைந்தது. அந்தக் காலக்கட்டத்தில் 'மச்சி' வழக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
  13. நடுங்குது சாமி. ஒங்க பம்மல்ல சாதாரண ஜீவனே கிடையாதா?

    (சூத்ரகுட்டியா? ஏற்கனவே அடிபட்டுக் கிடக்கிறதா சொல்றாங்க :-)))))

    பதிலளிநீக்கு
  14. யப்ப்பாடி, முழுசும் இப்போத் தான் படிச்சேன். அசத்தல்! தொடருங்க, பாலுவுக்கு என்னாகுமோனு கவலையா இருக்கு. ஒண்ணும் ஆகாது தானே?

    அது சரி விவாகரத்துக் கதை எங்கே வந்திருக்கு? புரியலை! தேடிப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. . பிற மதத்தினருக்கு ஏரியம்மன் கோவில். சில சமயம் பேய்கள் மதம் மாறிவிட்டதோ என்ற சந்தேகத்தில் இரண்டு இடங்களிலும் பேயோட்டுவார்கள்.

    அருமையான எழுத்து நடை. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ஒரு பதிவைப் படித்துமுடித்தபிறகு அதே பதிவில் இன்னும் சேர்த்தால் எப்படித் தெரிந்து கொள்வது. ? ஒவ்வொரு பதிவையும் மறு படியும் படிக்க வேண்டுமா.? கதை சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  17. திரும்பப் படித்ததுக்கு நன்றி ஜிஎம்பி சார்.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லாஏப்ரல் 09, 2012

    ஹேமாவின் தளத்தில் உங்கள் 'நிலவு' கவிதை மனதை தொட்டது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. மறுபடியும் வந்து பார்த்தால் கதை நீண்டு போச்சே. திலகத்தோட வேலையோ ?

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லாஏப்ரல் 09, 2012

    கவிதையின் தலைப்பு 'பாசம்'. 'நிலா' என்று எழுதிவிட்டேன். இப்பொழுதான் கவனித்தேன். மன்னிக்கவும்.
    கவிதை ஒரு வரியானாலும் மனதை உருக வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  21. ரெண்டு பாகத்தையும் இப்பதான் படிச்சேன். காட்டேரியும் காத்து கருப்பும் சகஜமா நடமாடுது போல!

    சின்னக்கா சொல்லும் பேய்க்கதைகள் நினைவுக்கு வருது!

    பதிலளிநீக்கு