2011/11/25

மெல்லிசை நினைவுகள்

வெத்து வேலை


    நேற்று நள்ளிரவு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போல எல்ஆர் ஈஸ்வரி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். காரணம் இருக்கிறது.

முதல் நாள் மாலை உள்ளூர் பள்ளிக்கூட ஜேஸ் விழாவில் பதின்ம வயதினரின் இசையை அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று வந்த மெட்டு பாதித்தது. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே இந்தக் குழல் என்று நினைத்தேன். எந்தப் பாடல் எந்தப் பாடல் என்று என்னையே கேட்டுக் கேட்டு நொந்து நொந்து போனேன். பட்டத்து ராணி பார்க்கும் பார்வை. அட!

தமிழ் ஜேஸ் கேட்க ஆசை வந்தது. அதான் முதல் வரியில் குறிப்பிட்ட நள்ளிரவு நிகழ்வு. தமிழ்த் திரையிசையில் ஓசைப்படாமல் ஜேஸ் புகுத்திய பெருமை விஸ்வநாதன் ராமமூர்த்தியைச் சேரும். எல்ஆர் ஈஸ்வரியின் குரலில் எம்எஸ்வி நமக்கு (எனக்கு மட்டும்:) கொடுத்த சில ஜேஸ் பாணிப் பாடல்கள் அருமையானவை. பாடல்களுக்கு என்னை விட வயது அதிகமென்றாலும் இன்னும் கேட்க முடிகிறதே! மெல்லிசை மன்னன் என்றால் மெல்லிசை மன்னன் தான். எல்ஆர் ஈஸ்வரிக்கு யாரும் எந்தப் பட்டமும் தரவில்லையே, ஏன்?

  • 'வரவேண்டும் ஒருபொழுது' பாடல் தமிழ்த் திரையிசையில் ஒரு மைல்கல். ஈஸ்வரி மட்டுமே பாடியிருக்க முடியும். பதின்ம வயதில் நண்பன் சாம்பா அறிமுகம் செய்துவைத்தப் பாடல்.
  • 'பூவுக்கு முகம் காட்டுவேன்' பாடலில் குழலிசை அற்புதம். இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிபரப்பான போது, 'என்னடா பாட்டு இது, காட்டுவேன் காட்டுவேன்னு பொம்பளை பாடிட்டிருக்கா, நீயும் கேட்டுட்டிருக்கே?' என்று ஒருமுறை என் மாமா ரேடியோவை நிறுத்தியதை இன்றைக்கும் வெறுக்கிறேன் :-)
  • 'நான் கண்ட கனவில் நீ' பாடலில் 'துடித்ததென்னவோ' என்று உடுக்கை போல் நாவை உருட்டும் வித்தை எல்ஆர் ஈஸ்வரிக்கு மட்டுமே தெரியும். ட்ரம்பெட் சேக்சபோன் துள்ள வைக்கும். ஜெயலலிதா வேறேயா? ஹ்ம்ம்ம்ம்!
  • 'கண்களுக்கென்ன' மெட்டு எம்எஸ்வி திரும்பத் திரும்ப உபயோகித்த மெட்டு. இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பேங்கோஸ், ட்ரம்பெட் என்று துவக்கத்தில் பின்னுவார் பாருங்கள், சடாரென்று நிறுத்தி ஸ்னேர் டிரம்ஸ், கிடார் ஸ்ட்ரம், ஹம்மிங் பின்னணியில் ஈஸ்வரியின் 'ஏதோ ஒரு அற்புதக் கற்பனை' வரிகள்.. சொக்க்க்க்கும்.
  • 'மல்லிகை ஹொ' பாடலுக்கு இணையாக தமிழில் இன்னொரு பாடல் வரவில்லை. என் டாப் 10. இந்தப் பாடலுக்காக ஈஸ்வரிக்கு பட்டம் பதக்கம் எதுவும் தராதது உலக மகா குற்றம்.
  • 'உறவினில்' பாடல் அதிகம் பிரபலமாகவில்லை என்று தோன்றும். பாடலின் 1:09 கணத்தில் 'கன்னம் கனி.. இனியமொழி என்றும் ஹனி' வரிகளின் இறுதியில் திடீரென்று லட்சம் வயலின் பாய்ந்து திடுக்கிட வைக்கும். பாவி எம்எஸ்வி, இப்படியா திடுக்கிட வைப்பது? இன்னொரு தடவைடா கண்ணா, ப்லீஸ் ப்லீஸ்.

உங்களுக்கும் பிடித்தால் துள்ளலாம், சொக்கலாம், திடுக்கிடலாம். (ஒலியைச் சற்றே குறைத்துக் கேட்க வேண்டுகிறேன். எல்லாப் பாடல்களும் சீராக ஒலிதிருத்த மறந்துவிட்டது, மன்னிக்கவும்.)

மெல்லிசை நினைவுகள் | எல்ஆர் ஈஸ்வரி | 2011/11/25

20 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி... இந்த ஆடியோ, எப்படி வலைபூக்களில் பகிர்கிறீர்கள் என்று நேரம் கிடைக்கும் பொழுது பதில் பின்னூட்டம் இட முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. எல் ஆர் ஈஸ்வரிக்கு மஸ்கட்டில் இன்று வாழ்நாள் சாதனையாளர் விருது தருகிறார்கள் என்று இன்று எங்கோ படித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. எங்கள் ஊர் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில், தீமிதி நாள் அன்று, ஊரில் ஒட்டப்பட்ட போஸ்டரில், 'எலந்தைப் பழப் புகழ்' எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் இன்னிசைக் கச்சேரி என்று பார்த்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  4. முன்பே கேட்ட பாடல்களாயிருப்பினும், நீங்கள் எழுதியதைப் படித்தபின் கேட்கும் போது தாக்கம் அதிகமாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. இது மாலை நேரத்து மயக்கம்.
    காதோடு தான் நான் பேசுவேன்.
    பட்டத்து ராணி.
    -- அவர் தனிக்காட்டு ராணி.

    பதிலளிநீக்கு
  6. எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் ஒரு தனிப்பட்ட சிகரம்.அவரது பாணியில் இதுவரை யாருமில்லை.அவரது எந்தப்பாடல்களும் கேட்க இன்றும் இனிமைதான் !

    பதிலளிநீக்கு
  7. முதல் பாடல் கேட்ட ஞாபகம் இல்லை. நான் கண்ட கனவில் நீயிருந்தால் பாடலில் நாக்கை உருட்டுவதை விட, ஹஹ்ஹாஹஹா என்று பாடலுக்குத் திரும்பும் அழகு எனக்குப் பிடித்திருக்கிறது...! கண்களுக்கென்ன ஒரு துள்ளிசைப் பாடல்....அதில் குழுவினர் பாடும் வரிகளை நாங்கள் வேறு மாதிரிப் பாடுவோம்! உறவினில் பாடலும் நாங்கள் பாடி நண்பர்கள் எங்களுக்குள் வெறுப்பேற்றும் சண்டையிடுவோம்...குறிப்பாக பிப்டி பிப்டி பாதிப் பாதி வரிகள்...!

    இரண்டு பாடல்களில் மீண்டும் மீண்டும் வரும், பல்லவிக்கு மீண்டு வரும் வரிகள் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  8. அப்பாதுரை அவர்களே !"பூவுக்கு முகம் காட்டுவென் "-என் உறவினர் மகன் விஸ்வேஸ்வரன் -பால்ய நண்பன் - மிகச்சிறந்த இசைஞன் . குழலிசையில் வித்தகன்.விஸ்வநாதன் குழுவில் இருந்தான்.சாக்ஸாபோனும் வாசிப்பான். அவனுடைய வாசிப்பு தான் அது. பாவம் இளம் வயதில் நாக்கில் கான்சர் வந்து இறந்தான் .---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  9. துரை, எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல்கள் எனக்கும் பிடித்தவை. சில பாடல்களை அவரால் மட்டுமே பாடியிருக்கமுடியும் என்று சொல்லலாம்.
    கஷ்யப்பன் ஐயா கருத்தைப் படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. நாக்கில் கான்சரா? என்ன கொடுமை சார்.

    பதிலளிநீக்கு
  10. பாடல்களைக் கேட்டதும் MSV என்னும் மேதையின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  11. கண்களுக்கென்ன பாடலில் நாகேஷ் நடனம் என்று நினைவு. ரசிக்கத் தக்கதாயிருக்கும்!பின்னாளில் எல் ஆர் ஈஸ்வரி பாடிய பாடல்களில் ஒன்றான 'ஆனந்தத் தாண்டவமோ' பாடல் கூட நன்றாக இருக்கும். நேற்று ரிலீஸ் ஆன படத்தில் எல் ஆர் ஈஸ்வரியும் டி ஆரும் பாடிய ஒரு பாடல்! ஈஸ்வரியைக் காணோம்.

    பதிலளிநீக்கு
  12. வருக suryajeeva, kg gouthaman, சென்னை பித்தன், சிவகுமாரன், ஹேமா, ஸ்ரீராம்., kashyapan, geetha santhanam,...

    பதிலளிநீக்கு
  13. kashyapan ஐயா.. இனி இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் விஸ்வேஸ்வரனை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. கண்களுக்கென்ன பாட்டு எந்தப் படத்தில் வருகிறது ஸ்ரீராம்? 'ஆனந்த தாண்டவமோ' அருமையான பாட்டு என்றாலும் ஈஸ்வரியின் குரல் ஓய்ந்து விட்டது என்றே தோன்றியது...

    பதிலளிநீக்கு
  15. 'நில் கவனி காதலி' என்று கூகிள் சொல்கிறது. அதைத் தேடும்போது டிசம்பர் 2010 இல் மூன்றாம் சுழியில் வந்த எல் ஆர் ஈஸ்வரி பதிவையும் காட்டுகிறது!

    பதிலளிநீக்கு
  16. பதிவில் இது போல பாடல்களை கேட்பது மிகவும் சந்தோஷம், சுகம். (ஸ்ரீராம் கவனிக்க! :) )

    பாட்டெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. 'அழகிலே கனிரசம்', 'பூவுக்கு முகம் காட்டுவேன்' இந்த இரண்டு பாடல்களையும் கேட்டதே இல்லை. மிகவும் ரசித்து கேட்ட பாடல் 'நான் கண்ட கனவினில்'. இந்த பாடலை கேட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. 'வரவேண்டும் ஒரு பொழுது' அப்பப்பா! என்ன ஒரு பாடல் இது! இசையும், எல்.ஆரின் குரலும்! வாவ்! ஒரு பத்து முறையாவது கேட்டிருப்பேன். எல்.ஆர். பாடல்களை கேட்பதில் எப்போதுமே ஒரு தனி கிக் உண்டு. இவரது தனி பாடல்களில் நிறைய பாடல்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றாலும் 'அதிசய உலகம்' பாடல் மேல் ஒரு வெறியே உண்டு. அது போல் 'நானொரு காதல் சன்யாசி' பாடலில் சில வார்த்தைகளை இவர் இழுக்கும் விதமே போதை ஏற்படுத்தும்.
    சமீபமாக மீண்டும், மீண்டும், மீண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல் 'என் உள்ளம் உந்தன் ஆராதனை'.

    மெல்லிசை நினைவுகளை மீண்டும் மீட்டியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. எம் எஸ் வி. எல் ஆர் ஈஸ்வரி என்று ஒரு குளிர் நாளின் மதியத்தை சுகமாக்கி விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
  18. பாட்டை இன்னமும் கேட்கவில்லை(நீங்க கொடுத்திருப்பது) ஆனால் சமீபத்தில் தான் இந்தியாவில் இருந்து கிளம்பும் முன்னர் ஏதோ ஒரு சானலில் எல்.ஆர். ஈஸ்வரியின் முழுப் பேட்டியையும் பார்க்க நேர்ந்தது. குரல் இன்னமும் அப்படியே தான்.

    பி.கு. மதுரையில் ஏதோ ஒரு கோயில் (மீனாக்ஷி?)நவராத்திரி விழாவுக்குப் பாட வந்த எல்.ஆர். ஈஸ்வரியை எல்லோரும் வற்புறுத்தி "எலந்தப்பழம்" பாட்டைப் பாடச் சொல்லக் கோயில் நிர்வாகம் கச்சேரியைப்பாதியில் நிறுத்திய நினைவு. சரியாய் நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    பதிலளிநீக்கு
  20. அருமையான பகிர்வு மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு