2010/10/08

அப்பாவி

சிறுகதை


ஷாராணிக்கு, உன் புருசன் அற்புதராசன் என்கிற ராசு எழுதியது:

இங்க வந்த நாள்ளந்து உன்ன எப்பவும் நெனச்சுட்டிருக்கேன். என்னையே நம்பி இருந்த உன்னையும், பிள்ளங்களயும் தவிக்கவிட்டது பெரிய குத்தமுனு தெரிஞ்சு போச்சு. இந்த வேலூர் ஜெயில்ல சேர நான் செஞ்ச பாவத்தை விட, உங்களையெல்லாம் தவிக்கவிட்டு வந்தனே அதேன் பெரிய பாவம்.

உனக்கும் நம்ம பிள்ளங்களுக்கும் நம்ம எல்லாரையும் ரட்சிக்கும் மேரிமவனான அந்த மெய்யான அற்புதராசனுக்கும் தெரியும், நான் தப்பேதும் செய்யலனு. இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்க. நான் என்ன சொல்லியும் கேக்காம தண்டனை கொடுத்து என்னை செயிலுக்கு அனுப்பிட்டாங்க. என்னை அவங்க நம்பாட்டாப் போவுது, நீ நம்புனா போதும். நடந்ததையெல்லாம் சொல்லிடறேன்.

சனிக்கிழமை கடை அடைச்சிட்டிருந்தனா? சின்னானையும், ரப்பரையும் கூலி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டு, ரிப்பேருக்கு வந்த வண்டிங்களை உள்ளாற தள்ளிட்டு, கைகால் க்ரீஸ் எண்ணை எல்லாம் கழுவி, வேளாங்கன்னி மாதா படத்துக்கு மெழுவேத்தி, உனக்காவ வாங்குன மல்லியப்பூ எடுத்துகிட்டு வெளிசட்டரை இழுத்துப் பூட்டுறப்ப அவிங்க ரெண்டு பேரையும் பாத்தேன். சீமைக் காரிலந்து எறங்கி வந்தானுங்க. "ராசண்ணே, காலைல வந்தாங்கனு சொன்னனே, இவங்கதேன்" அப்படினு ரப்பர் தான் என் முன்னால கூட்டியாந்தான்.

வணக்கம் சொல்லிட்டு, "ஒனக்குத் தெரிஞ்சவங்களா ரப்பரு?"னு கேட்டேன்.

"ஆமண்ணே. இவர் பேரு முத்து. மும்பைல இருக்காரு. இவரு செண்டு, என் மச்சான்"னு ரப்பர் தலையாட்டினான்.

"கடை அடைச்சாச்சுங்க. வண்டி டிரபிளா? எனக்கு கார் பத்தி அவ்வளவா தெரியாது. மோட்டார் பைக்கு எந்த மாடலானாலும் செய்வேன்"னு சொன்னேன்.

"ராசு, உன்னைப் பாக்க வந்தது வேற விஷயமா. நீ மோட்டார் பைக்கு ஓட்டறதுல சேம்பியன்னு சொன்னான் ரப்பர்"னாரு முத்து.

எனக்கு வெக்கமாயிடுச்சு. "அதெல்லாம் கல்யாணம் கட்டுறதுக்கு முன்னங்க. என்னோட புல்லட்டு வண்டிய எடுத்தேன்னா புல்லட்டு கணக்கா பறப்பேன். இப்ப குடும்பம் வந்திருச்சுங்க. நம்பி ஒருத்தி வந்த பிறவு பொறுப்பில்லாம ரேஸ் ஓட்டுறதுல்லனு இருக்கேனுங்க. சும்மா எப்பனா ஊர் சுத்துறதோட சரிங்க"னு சொன்னேன்.

"போன மாசம் ஒரு திருடனைப் பிடிக்க உதவி செஞ்சதா போட்டிருக்குதே? ரப்பர் தான் எடுத்தாந்தான்"னாரு செண்டு. பேப்பர் கட்டிங்கை காட்னாரு. வீட்டுல மாட்டி வச்சியே, போலீசுல மெடல் கொடுத்தாங்களே, அதே போட்டோ.

"ஆமாங்க, எதிர் பேங்குல கொள்ளையடிச்சிட்டு கார்ல தப்பிச்சு ஓடப் பாத்த கும்பலை, தப்பா நெனக்காதீங்க, அதும் சீமைக் கார்னு தோணுது, போலீஸ் ஜீப்பால பிடிக்க முடியலிங்க. இன்ஸ்பெக்டர் ஐயாவை பின்னால வச்சுகிட்டு, என் புல்லட்டுல துரத்திட்டுப் போய் அவங்களை காஞ்சிபுரத்துல புடிச்சோம்"னு சொன்னேன்.

"அதான் உன்னைப் பாக்க வந்தோம். நாளைக்கு நான் பேங்குல ரொக்கமா நிறைய பணம் எடுக்கணும். எனக்கு விரோதிங்க இருக்காங்க. அவங்க இந்த பணத்தைத் திருடி எடுத்துட்டுப் போக வருவாங்கனு எனக்கு தெரியும். என் உயிருக்கே ஆபத்து வந்தாலும் வரலாம்"னாரு முத்து.

"நான் என்னங்க செய்யட்டும்"னு கேட்டுகிட்டே ரப்பரை சந்தேகமா பாத்தேன்.

"சின்ன உதவி, ராசு"னாரு செண்டு. "நாங்க எதிர் பேங்கிலந்து பணத்தை எடுத்துகிட்டு வெளில வரப்ப, நீ கடையிலயே உக்காந்திரு போதும். உன் பைக்கோட காத்துட்டிரு. இவரு கிட்டருந்து பையை வாங்கி உன் வண்டி சைடுபெட்டில போடறேன். அதை எடுத்துகிட்டு நீ எவ்ளோ வேகமா முடியுமோ.. இந்த இடத்த விட்டுப்போயிரு. அவ்ளோதான்"னாரு.

எனக்குப் பதட்டமா போயிட்டுது. "ஐயையோ, பணத்தை எல்லாம் எடுத்துட்டுப் போக முடியாதுங்க, ஆபத்து"னு சொன்னேன்.

"பதறாதே ராசு"னாரு முத்து. "அந்த பைல வெறும் காயிதம் தான் இருக்கும். என் பணத்தை உன் கிட்டே கொடுக்க எனக்கு மட்டும் என்ன பைத்தியமா சொல்லு? என்னைய தேடி வரவங்களை வழி மாத்த ஒரு திட்டம். அவங்க உன்னையத் துரத்திக் கிட்டு ஓடுவாங்க. செண்டும் நானும் பின்பக்கமா ஓடி கார்ல போயிருவோம்".

நான் ஆவாதுனு சொன்னேன். "நீ சொம்மா செய்ய வேணாம் ராசு"னாரு செண்டு. "உன் உதவிக்கு நன்றியா இருபதாயிரம் ரூவா ரொக்கம். இப்பவே தரோம்"னாரு. சொல்லிட்டு கொத்து பணத்தை எடுத்துக் காட்னாரு. "பத்து நிமிச வேலை ராசு, இருபதாயிரம் ரூவா"னாரு.

என்ன பதில் சொல்லனு யோசிச்சப்ப, என் கையைப் பிடிச்சுக்கிட்டாரு முத்து. "இத பாரு ராசு, நான் பரம்பரை பணக்காரன். இப்ப நொடிச்சி போயிட்டிருக்கேன். என் பொண்ணு கல்யாணத்துக்காவ எல்லாத்தியும் வித்து இந்தப் பணத்தை எடுத்துகிட்டுப் போறேன். எனக்கு தொழில் எதிரிங்க இருக்காங்க. எதுனா தவறிடுச்சுனா என் வயசுப் பொண்ணு கல்யாணம் நின்றும்பா. என் உயிர் போனாலும் பரவாயில்லை, தாயில்லா பொண்ணு என் மகள் கல்யாணம் நின்னுற கூடாது. அதுக்கு பயந்துதான் இந்த உதவி கேக்குறேன். எனக்கு உயிர்ப்பிச்சை, என் மகளுக்குத் தாலிப்பிச்சைனு வச்சுக்க. மேலே பணம் வேணும்னாலும் தரேன்"னாரு. பணத்தைப் பாத்ததும் என் மனசு மாறிடுச்சு. உனக்கு பட்டுசேலை, பசங்களுக்கு கான்வென்டு, கடைக்கு வெள்ளையடிச்சு கண்ணாடி கவுன்டர்னு கணக்கு மேலே கணக்கா போடத் தொடங்கிடுச்சு. அதுவும் கல்யாண உதவினு வேறே சொல்றாங்க. படிச்ச பொண்ணு நீ, பத்தாம்பு மெகேனிக் எங்கூட ஓடியாந்து கலியாணம் கட்டிக்கிட்டது நினைவு வந்திடுச்சு. சரினு ஒத்துகிட்டேன்.

பிறவு நடந்தது உனக்குதான் தெரியுமே? நான் எடுத்துகிட்டுப் போனது வெறும் காயிதப்பைனு தெரிஞ்சு வாலாஜாபேட்ல கடாசிட்டு வந்தனா, போலீஸ் நான்தேன் திருடன், பணத்தை எங்கியோ வச்சிருக்கன்னு சொல்லி, என்னய பிடிச்சிகிட்டு திருட்டு குத்தம் சுமத்தி கொணந்து உள்ற தள்ளிட்டாங்க. பேங்குல பணம் எடுக்க போறதா முத்து சொன்னப்ப, அவங்க அகவுன்ட்லந்து எடுத்துட்டு வருவாங்கன்னு நினைச்சேன். எனக்கென்ன தெரியும் திருடிகிட்டு வருவாங்கனு? சத்தியமா சொல்றேன். இதான் நடந்துச்சு.

ரப்பர் ஓடிட்டதா கேள்விப்பட்டேன்.. அவன் திரும்பி வந்தா எடங்கொடுத்து சோறு போடு. பயத்துல ஓடியிருப்பான். மன்னிச்சுட்டதா சொல்லு. உனக்குப் புண்ணியமா இருக்கும். கர்த்தர் துணையும் ஆசியும் உனக்கு உண்டு.
இப்படிக்கு ராசு.

ருமைக் காதலன் அற்புதராசனுக்கு ஆசை மனைவி உஷாவின் கடிதம்.

நீ சிறையில் வாடுவது வேதனையாக இருக்கிறது. வேலூர் சிறையைப் பற்றி பயங்கரமாகப் பேசிக்கொள்கிறார்கள். நீ சிறைக்குப் போன எட்டு மாதங்களில் உனக்கு ஒரு கடிதமும் எழுதவில்லை என்று கலங்காதே. பிள்ளைகளையும் கடையையும் பார்ப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை. உன்னைப் பிரிந்த வேதனையில் அடிக்கடி அழுது விடுகிறேன். அதனால் கடிதம் எழுதவில்லை. என் சோகம் உன்னை எவ்வளவு பாதிக்கும் என்று தெரியும்.

இருந்தாலும் என்னால் முடியவில்லை ராசு. அதனால் எழுதுகிறேன்.

எட்டு மாதமாகத் தலைமறைவாக இருந்த ரப்பர் திடீர் என்று போன வாரம் என்னிடம் வந்து, "எனக்கு ஒண்ணும் தெரியாதுமா. என் மச்சானை ராசண்ணன் கிட்டே கூட்டியாந்த பாவத்துக்கு பயந்து ஓடிட்டம்மா, என்னை மன்னிச்சு மறுபடி வேலைக்கு வைங்க, கூலி கூட தேவையில்லை" என்று ஒரு வாரம் போல் தினமும் கெஞ்சினான். முதலாளியாக ஒரு பெண் இருப்பதாலா தெரியவில்லை, வாடிக்கை அதிகமாகி விட்டது. சின்னான் மட்டும் போதவில்லை. ரப்பர் மேலிருந்த கோபத்தைக் குறைத்துக் கொண்டு அவனை வேலைக்கு வைத்திருக்கிறேன்.

சின்னான் முன்னேறி விட்டான். நானும் வேலை கற்றுக் கொண்டேன். கார்பரேடர் சுத்தம் செய்கிறேன். பிரேக் பேட் மாற்றத் தெரியும். இன்னும் நிறைய கற்றுக்கொண்டு, நீ திரும்பி வரும்பொழுது நான் உன்னுடன் கடையிலேயே தினம் வேலை செய்யலாம் என்று இருக்கிறேன். மதிய வேளையில் கடையடைத்து இந்த க்ரீஸ் எண்ணையை உன் மார்பில் தடவ வேண்டும் போலிருக்கிறது.

நிற்க, கடையில் வாடிக்கை மிக அதிகமாகி விட்டாலும் போதுமான வசதியில்லை. பேங்கில் கடன் தர மறுக்கிறார்கள். பிள்ளைகள் கான்வென்ட் பணம் கட்டியது போக கடைக்கு எதுவுமே செலவழிக்க முடியவில்லை. கையில் பணம் இருந்தால் கடையையும் கொஞ்சம் விரிவுபடுத்தி பக்கத்தில் இருக்கும் கடையைக் கூட ஏலத்தில் எடுக்கலாம். பிள்ளைகளுக்கு வருடப் படிப்புச் செலவைக் கட்டி விடலாம். என்ன செய்வதென்றே புரியவில்லை.

இப்படிப் பல சிக்கல்களில் என்னை மறந்து ஆழ்ந்திருப்பதால் உன்னை மறந்து விட்டேனென்று நினைத்து விடாதே. வருத்தப்படாதே. நிற்க, பெரிய வக்கீலைப் போன வாரம் சந்தித்துப் பேசினேன். ஹை கோர்ட்டுக்கு அப்பீல் செய்து உன்னை வெளிக்கொண்டு வரவோ தண்டனை காலத்தைக் குறைக்கவோ வழி செய்கிறேன் என்றார். செண்டு, முத்து ஆட்களைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்கிறார். அவர் உன்னைப் பார்க்க வரும்பொழுது விவரமாக உனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிவிடு.

உன்னையே நினைந்து வாடும்
உயிருள்ளவரை உஷா.
ன்பு உஷா

என்ன மன்னிச்சுரு, என்னால ஒனக்கு எத்தினி தொல்லை!

வேலூர் செயிலைப் பத்திக் கவலைபடாதே. காமராசு, அண்ணா, கலைஞரு, இன்னும் எத்தனியோ பேரு.. பெரிய ஆளுங்கலாம் வந்திருக்காங்க. அந்த அய்யரு சாமியார் கூட ரெண்டு ரூம் தள்ளிதான் அடச்சிருந்தாங்களாம். இடமெல்லாம் சுத்தமா இருக்குது. மணியடிச்சா சோறு கிடைக்குது. மதியம் முழுக்க வேலை. செருப்பு தைக்கவும், மணிமாலை கோக்கவும் கத்துட்டிருக்கேன். உனக்காக ஒரு நீலமணி மாலை செஞ்சு எடுத்தாரேன். க்ரீஸ் தடவுறதா உசுப்பேத்திட்டியா, உன்னை நெனச்சு ஏங்குறன். உன்னையும் பசங்களையும் பாக்க முடியாத குறை. படிச்ச பொண்ணு நீ எங்கூட இப்படிச் சிக்கிட்டியேனு எனக்கு ரொம்ப வருத்தம் கண்ணு. இருந்தாலும் என் மேலே நீ வச்சிருக்குற அன்புக்கு நான் எப்படி நன்றி சொல்லுறது?

இந்த தொல்லை நான் வெளிய வந்ததும் தீந்துடும்; அதுவர பொறுத்துக்க செல்லம். எப்படியாவது நான் நம்மள பழைய நெலக்கு கொணாந்துறுவேன்.

ரப்பரை வேலைக்கு வச்சதுக்கு சந்தோசம். அவனைக் கவனிச்சுக்க, பாவம்.
அன்பான ராசு.

காதல் கணவன் அற்புதராசனுக்கு உஷாவின் உதடுகள்.

உடனே பதில் எழுத முடியவில்லை; தவறாக நினைக்காதே. செலவை எப்படியோ சமாளித்து வருகிறேன். கவலைப்படாதே. உன் அன்பே எனக்குப் போதும்.

ரப்பர் ஒழுங்காக வேலை செய்கிறான் என்றாலும் அவன் நடத்தை கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. திடீரென்று காணாமல் போய் விடுகிறான். மூன்று வாரங்களுக்கு முன் இப்படித்தான் உன்னுடைய புல்லட் வண்டியை சுத்தம் செய்கிறேன் என்று எடுத்துக் கொண்டு போனவன் நான்கு நாட்கள் கழித்து திரும்பி வந்தான். கேட்டால் ஏதோ சாக்கு சொல்கிறான். அவனை நம்பலாமா? சரி விடு, அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.

இடையில், செண்டும் முத்துவும் ஹோசூர் ஹோட்டலில் இறந்து போனதாக டிவியில் செய்தி வந்தது. பிணம் அடையாளம் கூடத் தெரியவில்லையாம். இவர்கள் தான் பேங்கு கொள்ளைக்காரர்கள் என்று சொல்கிறார்கள். செண்டும் முத்தும் இறந்துவிட்டதாலும், பேங்கு விடியோ கேமராவில் தெரிந்த முகமூடிகள் இரண்டு பேர் அவர்களாகவே இருக்கலாம் என்பதாலும், உன் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்து விட்டதென்றும், காணாமல் போன பணமோ குற்றவாளிகளோ மற்ற சாட்சியோ இல்லாத நிலையில் கேசை மூடி உன்னை விடுதலை செய்வார்கள் என்றார் வக்கீல். குற்றம் நடந்த இடத்தில் நீயில்லை, யாரும் உன்னைப் பார்க்கவும் இல்லை, வாலாஜாபேட் போய் குப்பை கொட்டியதற்காக உன்னைத் தண்டித்திருக்கிறார்கள் என்று வாதாடுவதாகச் சொல்லியிருக்கிறார். உன்னைப் பார்க்க வந்தாரா? விவரமெல்லாம் சொன்னாயா?

நீ விடுதலையாகி வரக்கூடும் என்பதே எனக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கிறது. அப்பாவிகளுக்கு அன்பும் ஆண்டவரும் தான் துணை. இரண்டுமே உனக்கு என்றைக்கும் உண்டு.
உனக்காக என் காதல்.

ண்ணே உஷா

வக்கீலய்யா நேத்து வந்தாரு. வாய்தா போட்டு இழுத்தாலும் ஆறு மாசத்துல விடுதலையாயிரும்னாரு. எல்லாம் அந்த கர்த்தர் கருணை. மேரிமாதா துணையாலயும் உன்னோட அன்பாலயும் நாம வசதியாக இருக்கப் போற நாள் தொலைவில இல்லை.

மறந்துட்டன் பாரு. ரப்பரை தொடர்ந்து வேலைக்கு வச்சதுக்கு மறுபடி நன்றி. விவரம் தெரிஞ்சவன். ரொம்ப உபயோகமா இருப்பான். அவனை துரத்திடாதே.
உன் ராசு.

16 கருத்துகள்:

  1. உங்க கதையுல எதுனாச்சும் திருப்பம் இருக்கணுமேன்னு முளுசா படிச்சேன். தாங்கீஸு:‍)

    நல்லா இருந்தது. ரப்பரு அழிச்சுருச்சின்றீங்க. சரி!

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு கிரிமினலா ஒரு மெக்கானிக் யோசிக்க முடியுமா? ரப்பர் அழிச்சிடுச்சீங்கறீங்க என்ற கெக்கே பிக்குணி கமெண்ட் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. //ரப்பர் அழிச்சுட்டதா..

    ஆகா! என்னமா சொல்லியிருகீங்க.. வருகைக்கு நன்றி கெபி.
    முழுக்க படிச்சதுக்கு பதில் தாங்கிசுங்கோ.. (கதையை நிறைய சுருக்கியிருக்கலாம்னு இப்ப தோணுது)

    பதிலளிநீக்கு
  4. கதை சற்றே பெரிதாக இருந்தாலும் நல்லா இருக்குங்க.....வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நேத்து ராத்திரி தத்து பித்துன்னு நா ஒரு லெட்டர் கதை போட்டுட்டு இங்க வந்து பாத்தா இங்க ஒன்னு.
    // முதலாளியாக ஒரு பெண் இருப்பதாலா தெரியவில்லை, வாடிக்கை அதிகமாகி விட்டது.// என்னா குத்தல்.....
    //வேலூர் செயிலைப் பத்திக் கவலைபடாதே. காமராசு, அண்ணா, கலைஞரு, இன்னும் எத்தனியோ பேரு பெரிய ஆளுங்க வந்திருக்காங்க. அந்த அய்யரு சாமியார் கூட ரெண்டு ரூம் தள்ளிதான் அடச்சிருந்தாங்களாம்.// என்னா நக்கலு...

    ஆவட்டும்...ஆவட்டும்... அப்பாஜி..

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாஅக்டோபர் 09, 2010

    இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

    பதிலளிநீக்கு
  7. யதார்த்தமான நடையில், கடிதங்களின் பரிமாற்றத்தில் கதை சொன்ன உத்தி நன்றாக இருக்கிறது அப்பாஜி.உங்களுக்கே உரித்தான சில சொல்லாடல்.... 'மார்பில் கிரீசைப் பூசும் ஆசை'(மெக்கானிக் செட்டில் அது தானே சந்தனம்..)
    நல்ல படைப்பு!
    கெக்கே பிக்குணி சாரின் காமென்ட் அருமை!

    பதிலளிநீக்கு
  8. ஒரு சின்ன ஏக்சிபிடென்டாயிருச்சு RVS... நான் எப்பவுமே ஒரு வாரம் ரெண்டு வாரத்துக்கு அட்வான்ஸ் பிளாகிங்க் செய்யுறது வழக்கம்.. நேரம் கிடைக்குறப்ப எழுதி மெதுவா எடிட் செய்யலாம் பாருங்க? இந்தக் கதை அடுத்த வாரத்துக்கு எழுதினது. தேதி கவனிக்குறதுக்கு முன்னால அவசரப்பட்டு பதிவாயிடுச்சு.. எப்படி இருந்தா என்ன.. great minds think alike இல்லிங்களா? (இப்படி சந்தடி சாக்குல சொன்னாதான் எனக்கும் அந்தஸ்து கிடைக்கும்)

    பதிலளிநீக்கு
  9. ஐயா அப்பாதுரை அவர்களுக்கு...
    உங்களது செந்தமிழ் என்னுது கொஞ்சூண்டு சிந்திய சிந்தமிழ்
    உங்களது கன்னல் தமிழ் என்னுது கன்னா பின்னா தமிழ்
    உங்களது தீந்தமிழ் என்னுது தீஞ்ச தமிழ்..
    முடிவாக நீங்கள் ஒரு தமிழ்த்துறை(ரை)
    என்னை இவ்வளவு தூரத்துக்கு சுதி ஏத்தி விட்டுட்டீங்களே... தன்யனானேன்.

    பதிலளிநீக்கு
  10. கிராமிய நடையில் அருமையான கடிதக்கதை...எங்க முடிச்சு இருக்குன்னு தேடி தேடி கதை முழுவதும் அலைய வைப்பது கதைக்காரரின் திறமை.. அத்திறமை சிறப்பாகவே இதில் வெளிப்பட்டுள்ளது....

    வெள்ளந்தியான கடிதப்போக்குவரத்து நன்றாக இருந்தது... பென்சில் மட்டுமல்ல ரப்பரும் க(வி)தை எழுதும்ன்னு புரிந்தது...

    பதிலளிநீக்கு
  11. கிராமிய நடையில் அருமையான கதை...

    பதிலளிநீக்கு
  12. முடிச்சு இறுக்கமாய் இருந்தது.ஆனால் சரியாய் அவிழ்ந்ததா..

    பதிலளிநீக்கு
  13. என்னைப்போலவே என் நண்பர் ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தியும் க்ரீஸ் தடவறதா சொன்னதை மிகவும் ரஸித்திருக்கிறார். மெக்கானிக் பட்டறையாக இருப்பதால் அன்பை வெளிப்படுத்த க்ரீஸ் தடவினாலே சந்தனம் தடவியது போலத்தான் அது.
    பதிவுக்குப் பாராட்டுகள். அன்புடன்,
    வை கோபாலகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம், நித்திலம்-சிப்பிக்குள் முத்து,RVS ,மோகன்ஜி,பத்மநாபன்,சே.குமார்,அப்பாவி தங்கமணி,bogan ,ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி,VAI. GOPALAKRISHNAN .

    பதிலளிநீக்கு