திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செல்வநாயகமும் - ஒரு அறிமுகம்: [-]
அடையாரிலிருந்து திருவான்மியூர் போகும் வழியில் காந்தி நகர் தாண்டி உள்ளடங்கி இருக்கும் வெடரென்ஸ் க்ளப் நிறைய மாறிவிட்டது. எழுபதுகளில் அடையார் அமைதியாக இருந்த காலத்தில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று வாதம் புரிந்தப் பெருங்கல்லூரிப் பேராசிரியர்களும் மாலை நேரங்களில் கூடி, வெளிநாட்டு பீர் விஸ்கி வைன் என்று ஆமை வேகத்தில் அருந்திக் கொண்டு, பேருக்கு டென்னிஸ் ஆடிவிட்டு, முக்கியமாக கேன்டீனில் அவ்வப்போது தயாரான உருளைக்கிழங்கு மினி போண்டா, மெதுவடை, முந்திரிப்பருப்பு கிச்சடி, அவியல் சூப், பொடிமாவடு தயிர்சாதம் என்று வரிசையாக உள்ளே தள்ளியபடி இரவு பத்து மணி வரை அரட்டை அடித்த நாளிலிருந்து... நிறையவே மாறிவிட்டது.
இடையில் சில வருடங்கள் கேட்பாரற்று கிடந்த க்ளப், சென்றப் பத்து வருடங்களில் பழைய பொலிவுக்கு வந்துவிட்டது. உறுப்பினர் கட்டணம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாதச் சம்பளமாயிருந்தாலும், சென்னையைச் சுற்றித் திரண்டிருக்கும் செலவம் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பழைய கட்டிடம் என்றாலும் சுவரிலிருந்த இந்தியாவை நினைவுபடுத்தும் சுவர்ச்சித்திரங்கள் அத்தனையும் போய், இப்போது ஒவ்வொரு அறையிலும் ஒரு வெளிநாட்டு நகரத்தின் பின்னணியில் புது அலங்காரம். புதுக் கூட்டம்.
கால் சென்டர் அரை சென்டர் என்று தெருவுக்கு ஒன்றாய்க் கிளம்பியிருக்கும் மென்பொருள், அவுட்சோர்சிங், மற்றும் வெப் 2.0 கம்பெனிகளில், கல்லூரி முடித்த மறுநாளே சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கித் தாய்மொழி மறந்த இளைஞர் கூட்டமே பெரும்பாலும். "செக் அவுட் ஹர் அஸெட்ஸ் மேன்" என்று வாட்கா குடித்து வம்படிக்கும் ஆண்களை, தயங்காமல் "யா? வேரிஸ் யுர்ஸ்?" என்று பதில் சொல்லித் தலைகுனியவைக்கும், இளவயிறு தெரிய மேல்சட்டையணிந்த ஜீன்ஸ் பெண்கள். இவர்களை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டு, எங்கேயாவது "அங்கிள்" என்று கூப்பிட்டுவிடப் போகிறார்களே எனப் பயந்து, ஒதுங்கியிருக்கும் என்னைப் போன்ற முப்பத்தைந்து வயதில் முடிகொட்டிப் போன அரைகுறை முதியோர் ஒரு சிலர். இந்த மாறுதல்களுக்கிடையே வெடரன்ஸ் க்ளப் வேர்கடலைச் சங்கமாக மருவியது புதிர்.
சில விஷயங்களில் மட்டும் சங்கம் மாறவேயில்லை. அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அசைக்க முடியாதபடி சுவையான சிற்றுண்டி வகை. வியாழக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும் பாதாம் சட்டினிக்கு மைல் கட்டி நிற்கும் கூட்டம். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் அரசியல் பேசக்கூடாதென்ற விதிகளுக்குட்பட்டு, பெரும்பாலும் காதல் பிரச்னை பற்றிய வம்பு, அரட்டை, துக்கப் பரிமாறல். அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லி, சில சமயம் பிரச்னை தீர்த்து, பல சமயம் குட்டையைக் குழப்பித் தள்ளும் பேர்வழிகள். இவர்களில் தனித்து நின்று சாதனை புரியும் பேராசிரியர் அன்புமல்லி.
சற்றே பெண்மையான பெயராக இருந்தாலும், ஒருவேளை அதனால் தானோ என்னவோ, அன்பு சாருக்குக் காதல் அனுபவம் அதிகம். காதலித்த அனுபவம் குறைவு, காதலிக்கப்பட்ட அனுபவம் அதைவிடக் குறைவு என்றாலும், காதல் தொடர்பான அனுபவம் எக்கச்சக்கம். திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் அன்புமல்லியின் அப்பா லன்டனில் இருந்தபோது அவருக்கிருந்த காதல் நெருக்கடியைத் தீர்த்து வைத்த மல்லினர் என்பவரின் நினைவாக, இவருக்கு மல்லி என்ற இடைப்பெயரை சேர்த்து அன்புமல்லி என்ற பெயரைக் கொடுத்ததாகக் கேள்வி. உண்மை விவரம் தெரியாது. அனாவசியமாக வம்பு அரட்டை என்று போக மாட்டார். ஆனால் காதல் பிரச்னை தீர வழி கேட்டு வருபவருக்கு, இல்லை எனாது அறிவுரையும் உதவியும் வழங்கும் வள்ளல். காதல் சாமியார். திருவாளர் அன்புமல்லி செல்வநாயகம்.
இனி, மல்லி கடாட்சம்.
வேர்கடலைச் சங்கத்தில் அன்றைக்கு மாலை கூட்டம் சீக்கிரமே சேரத் தொடங்கிவிட்டது.
கோபன்ஹேகன் அறையில் கூட்டம் குறைவாகத் தான் இருந்தது. ஐ.டி துறையின் சமீபத்திய தேக்கமா என்னவென்று தெரியவில்லை, முப்பது பேர் பிடிக்கும் அறையில் பத்து பேர் கூட இல்லை. சுவரோர மேஜைக்குப் பக்கத்து மேஜையைத் தேடிப்பிடித்து உட்கார்ந்திருந்தனர் மூவர். இரண்டு ஆண், ஒரு பெண். மூவருக்கும் சேர்த்து எழுபது வயது கூட இருக்காது. ஒருவனுக்கு மீசைகூட இன்னும் வளரவில்லை போலிருந்தான்.
அமெரிக்க கம்பெனியின் கால் சென்டர் வேலைக்காக, சாம் நேதன் என்று மருவிக்கொண்ட சுவாமிநாதன். அவனுடைய இடதுகையைக் கோர்த்து மடிமேல் வைத்துக் கொண்டு, பின்னணியில் 'வோர்கூடாய்' என்று தமிழ் போலவே தொனித்த பாடலுக்குக் கால்களால் தரையைத் தட்டியபடி உட்கார்ந்திருந்தாள் விமலா. விப்ரோவில் சப்ளை செயின் பிரிவில் ஆர்.எப்.ஐ.டி தொடர்பாக ஏதோ ஜீபூம்பா வேலை. செய்யாத நேரத்தில் சுவாமிநாதனுடன் ஜிலுஜிலு வேலை. இருவருக்கும் எதிரில் தலையைக் குனிந்து கொண்டு சோகமாய் உட்கார்ந்திருந்தான், மீசை இன்னும் சரியாக வளராத நெடுமாறன் என்கிற நெட் உமாரன். சாம் நேதனின் வேலைக் கூட்டாளி.
முட்டைக்கோஸ் வடை, கெச்சப், பனிக்கட்டி சேர்க்காத சாத்துகுடிச்சாறு என்று வரிசையாகக் கொண்டுவந்து வைத்தப் பணியாளரிடம் "இங்கே தானே வந்து உட்காருவாரு?" என்று ஒரு ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்தபடி கேட்டான் சாம்.
"அன்புமல்லி சார் தானே? இன்னிக்கு புதன் கிழமையில்ல? கண்டிப்பா வருவாரு. இந்த மேஜைகிட்ட தான் உட்காருவாரு. அதனால தான் உங்களை இங்கே உட்காரச் சொன்னேன். எங்கேயும் போவாதீங்க." என்றான் ஐம்பதை விழுங்கியவன்.
"என்னதான் ஆச்சு, சொல்லு நெடு?" என்றாள் விமலா.
"போன வாரம் நானும் பூமாவும் கொடைக்கானல் போயிருந்தமா... அங்க அவங்க அப்பா கிட்ட மாட்டிக்கிட்டோம்"
"மெகா ஸ்டார் மதன் ராஜை நேரில் பாத்தியா?" என்று வியந்தாள் விமலா.
"ஆமா, இவளுக்கு ஆடோகிராப் கூட வாங்கிட்டு வந்திருக்கான்.. மாட்டிகிட்டான்னு சொல்றான், சும்மா இருப்பியா? என்னடா ஆச்சு? பூமாவுக்கு எப்படிரா தெரியாம இருக்கும்?" என்றான் சாம்.
"கொடைக்கானல்ல ஷூட்டிங்னு அவளுக்குத் தெரியாது. அவங்கப்பா கால்ஷீட்டெல்லாம் பார்த்து இந்த மாசம் பூரா மைசூர் பக்கம் ஷூட்டிங்னு சொன்னா. ஏதோ ரகசியமா எடுக்கற படம் போலிருக்கு.. ஷூட்டிங் இடத்தை மாத்திட்டாங்க. நாங்க கொடைக்கானல்ல போய் ஹோட்டல்ல இறங்கறோம்... அவங்க அப்பா எதிர்ல நிக்கறாரு"
"அப்புறம்?"
"அப்புறம் என்ன? ஒரே அதிரல் தான். எங்க ரெண்டு பேரையும் தனித்தனி கார்ல ஏத்தி வீட்டுக்கு அனுப்பிச்சுட்டாரு"
"அவ்வளவு தானே?"
"அப்புறம் சனிக்கிழமை எங்க வீட்டுக்கே வந்துட்டாருடா. எங்கப்பா கிட்டே சொல்லி என்னை பூமா பக்கம் வரக்கூடாதுனு எச்சரிக்கை பண்ணிட்டுப் போயிட்டாரு"
"உங்கப்பா என்ன பண்ணாரு?"
"எங்க அம்மா என்னை வேலைய விட்டு நின்னுடச் சொல்லிட்டாங்கடா. அடுத்த வாரம் ஊருக்குப் போய் பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணப் போறாரு எங்க அப்பா"
"அத உடுரா.. பூமா என்ன சொல்றா?"
"ஞாயிறு காலை பூமா எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கூட்டிக்கிட்டு அவங்க அப்பா கிட்டே போனா. அவங்க அப்பா பாத்துக்கிட்டே இருந்தாரா, அவங்க வீட்டு மாடிப்படி கைப்பிடி மேலே ஏறி நின்னுக்கிட்டு என்னை விட்டு அவளால உயிரோட இருக்க முடியாதுனு சொன்னா. நான் ஏதும் சொல்றதுக்கு முன்னாலே டப்புனு அவங்க அப்பா எதிரே கீழே இருந்த சோபாவில் குதிச்சு இந்த நிமிஷமே கல்யாணம் பண்ணி வை, இல்லாட்டா தன்னையும் சுட்டுக்கிட்டு, என்னையும் வேறே சுட்டுறுவேனு வசனம் பேசி, அவங்க அப்பாவோட துப்பாக்கியை எடுத்துட்டு பத்ரகாளியாட்டம் பயமுறுத்திக்கிட்டே கத்தினா"
"சினிமா நடிகர் பொண்ணுதானேடா.. எல்லாம் ஸ்டன்ட்" என்றான் சாம்.
"சே, ஹௌ ரொமேன்டிக்! அப்புறம், அப்புறம்?" என்று கதை கேட்டாள் விமலா.
"திங்கட்கிழமை ராத்திரி பதினொரு மணிக்கு ரெண்டு ஆட்களோட மறுபடி எங்க வீட்டுக்கு வந்துட்டார் மதன் ராஜ். திருடன் வேஷத்துல நடிச்சு மேக்கப் கலைக்க நேரமில்லாம வந்ததால, எங்கம்மாவுக்கு அவங்களைப் பார்த்ததும் குலை நடுங்கிடுச்சு. "திருடன், திருடன்"னு கூச்சல் போடத் தொடங்கிட்டாங்க. நான் எழுந்து வந்து பாத்தனா? நேரே எங்கிட்டே வந்து அம்பது லட்சம் பணம் கொடுத்து, 'பூமாவை மறந்துடு, நெருப்போட விளையாடாதே, அப்படி இப்படி'னு சுண்டல் கொடுத்துட்டுப் போயிட்டாரு."
"கறுப்புப் பணமா இருக்கும்" என்ற விமலா, திடிரென்று விழித்தாள். "என்ன நெடு, அ..அம்பது லட்சமா?"
"உங்கப்பா என்னடா சொல்றாரு?"
"பணத்தைத் தங்கமா மாத்தி வச்சுக்கனு சொல்றாரு. கறுப்புப் பணத்தை நல்லதா மாத்த பத்து வழி இருக்குனு சொல்றாரு. ஏண்டா, நீ வேறே?"
"பூமா என்ன சொல்றா?"
"நேத்து எனக்கு போன் பண்ணி, நான் விவரம் சொன்னதும் என்னைப் பார்க்க ஓடோடி ஆபீஸ் வந்தா. நீ தான் பார்த்தியே, எல்லார் எதிர்லயும் என்னைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்தா"
"அப்புறம் என்னடா பிரச்னை?"
"அப்புறம் தான்டா பிரச்னையே. நேத்து சாயந்திரம் ஒரு தடியனோட எங்க வீட்டுக்கு வந்து, 'எங்கப்பா கிட்டேந்து பணம் கறக்கறதுக்காக நான் உன்னைக் காதலிக்கிறதா நடிச்சேன். எனக்கு முப்பது, இந்தா உனக்கு மிச்சம்'னுட்டு, பணத்தை எடுத்துக்கிட்டு டாடா சொல்லிட்டு போயிட்டா"
"அடப் பாவி" என்றாள் விமலா.
"இது மாதிரி அடிக்கடி செய்வாளாம், கைச் செலவுக்காக. அத வேறே சொல்லிட்டு போனாடா எங்கம்மாகிட்டே" என்றான் நெடு.
"சரி, விட்டுத் தள்ளுடா. இவ இப்படினா, இதுக்குப் போய் ஏன் அப்ளிகேசன் சர்வர் டவுனான மாதிரி டென்சனாகுறே?"
"இல்லைடா. நான் பூமாவை நிஜமாகவே காதலிக்கிறேன். அவ இல்லாட்டா எனக்கு உலகமே இல்லை"
"ஏண்டா டேய், என்னமோ புதுசா கார் மாத்தற மாதிரி அவ காதலனை மாத்திக்கிட்டிருக்கா. அவங்கப்பா வேறே பெரிய சினிமா ஸ்டார். போதாக்குறைக்கு அவர் கூடவே நாலஞ்சு தடிமாடு பாடிகார்ட் வேறே இருக்காங்கனு சொல்றே. நீ என்னடான்னா லேசா மழை பெஞ்சா கரைஞ்சு போயிடுவியோனு பயப்படற மாதிரி, காஞ்சு போன கறிவேப்பிலையா இருக்கே. அடிச்சு கிடிச்சு வச்சான்னு வை, உன்னைத் தேடிப் பொறுக்கக்கூட முடியாம போயிடும். சொன்னா கேளுடா. வேறே யாரையாவது காதல் பண்ணு" என்றபடி, கடைசியாக இருந்த வடைத்துண்டைக் வயிற்றுக்கனுப்பினான் சாம்.
"காதலிக்கிற உங்க ரெண்டு பேருக்கும் என் நிலைமை புரியும்னு தான் இங்கே வரச் சொன்னேன். அன்புமல்லி சாரோட பேச எனக்குத் தைரியம் தருவீங்கன்னு பார்த்தா, வயித்தைக் கலக்குறீங்களேடா?"
"சும்மா இரு, சாம்" என்ற விமலா, "நெடு. நான் உன்னை நம்புறேன். ஆனா, நிலைமையை உள்ளபடி பார். நீ விரும்பினாலும் அவ உன்னை விரும்பலை போலிருக்கே? அவளே பணத்தை எடுத்துக்கிட்டு ஓடிட்டானு சொல்றே. ஏற்கனவே இந்த மாதிரி செஞ்சிருக்கானு வேறே சொல்றே. அப்படி இருந்துமா அவளை விரும்புறே? பூமாவை நிஜமாவே விரும்புறயானு நல்லா யோசிச்சுப் பாத்துக்க. இது தீராத பிரச்னை போலத் தான் தோணுது" என்று, நெடுவின் கைகளை ஆறுதலாய்ப் பிடித்தவாறே சொன்னாள்.
"விமலா.. சில சமயம் டிசைன் செய்யும் போதே டிசைன்ல குறையிருக்குறது பத்தி் தெரிந்தாலும் தற்காலிக பலனுக்காக அவசர முடிவு செய்தா, பிறகு அவுட்புட்ல எல்லாம் மறுவேலைக்குத் திரும்பி வரும்போது, நாம முதலிலேயே கவனமா இருந்திருக்கலாம்னு தோணுமில்லையா? கொஞ்சம் சிக்கலான டிசைன் என்றால் மறுவேலையே பண்ணமுடியாம கூட போகலாம். புடலங்காய் விக்குற ப்ரோக்ராம் டிசைனுக்கே அப்படினா, இரண்டு உயிரோட விளையாடும் வாழ்க்கையைப் பத்தின டிசைன் ப்ராப்ளத்தின் விளைவை நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது, இல்லையா?" என்ற நெடு, தான் சொல்லிக் கொண்டிருக்கும் போது அறைக்குள் வந்த அன்புமல்லி சுவரோர மேஜையருகே இருந்த இரண்டு நாற்காலிகளை ஒதுக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டதைக் கவனித்தபடியே தொடர்ந்தான்.
"இது வாழ்க்கை டிசைன் தொல்லைங்கிறது பூமாவுக்கு இப்ப தெரியலை. அப்படித் தெரிஞ்சு ஒரு நாள் அவள் தவிக்கும் போது அவள் கூட இருக்க விரும்புகிறேன். என்னைக் காதலிக்கறதை மறந்து பணத்துக்காகவோ வேறே எதற்காகவோ அவ இன்னிக்கு ஒதுங்கிப் போனாலும் பரவாயில்லே அது தற்காலிகம்னு எனக்கு நல்லாத் தெரியும். நான் அவளை என்னிக்குமே காதலிப்பேன். நாளைக்கு என்னைத் தான் காதலிக்கிறது புரிஞ்சதும், நான் அவகூட இல்லையென்றால் இரண்டு பேருக்குமே எத்தனை நரக வேதனை? அவ என்னை நிச்சயமா காதலிக்கிறா, எனக்குத் தெரியும். சில பெண்களைப் பார்த்தா உடம்புல என்னவோ செய்யும், சில பெண்களைப் பார்த்தா மனசுல என்னவோ செய்யும், சில பெண்களைப் பார்த்தா மூளைல என்னவோ செய்யும்... ஆனா ஆனா... பூமாவைப் பார்த்தா எனக்கு மூச்சுலே ஏதோ செய்யும்டா. ஒவ்வொரு தடவை அவளைப் பார்க்கும் போதும் புதுசா மூளை, ரத்தம், நரம்பு என்று தலையிலிருந்து கால்வரை ஏதோ எரிபொருள் மாதிரி பத்தி எரிந்து பூமியைவிட்டுக் கிளம்பின ராகெட் போல் இருக்கும்டா. அவ என்னைக் காதலிக்கலேனா இப்படி எனக்கு தோணாது."
"ஓம்ப்பொடி மாதிரி இருந்துகிட்டு என்ன டயலாக் உடறடா டேய்?! புல்லரிக்குது. கையைப் பார்டா, புல் வெட்டாத லான் மாதிரி ஆயிடுச்சு!" என்றான் சாம்.
சாமின் கன்னத்தைத் தட்டி, "சே.. நீ ஒரு தடவையாவது என்னைப் பத்தி இந்த மாதிரி நினைச்சிருப்பியா?" என்றாள் விமலா.
"சரிடா. நீ அவளைக் காதலிக்கறது இருக்கட்டும். இப்ப எங்கிருந்து இந்த டிசைன் ப்ராப்ளத்தை மறுபடி தொடங்குவே? பூமாவோ கிட்டே வராதேங்கறா. என்ன செய்யப் போறே?
"அதுக்கு தானேடா இங்கே வந்தோம்? அதோ உட்கார்ந்திருக்கார் பார், அவரு தான் அன்புமல்லினு நினைக்கிறேன். காதல் பிரச்னையெல்லாம் அவர் தீர்த்து வைக்கிறதா சொல்றாங்க. அவர் கூட பேசலாம்னு தான்" என்றான் நெடு.
    அன்புமல்லிக்குப் பிடித்தமான பனிக்கட்டி கலந்த ஸ்காச், உப்புறப்பிலாமல் வறுத்த பிஸ்தா பருப்பு, இரண்டு வடை, உப்பில்லாத தேங்காய்ச் சட்டினி, கெச்சப், பால் சர்க்கரை எதுவும் கலவாத குளிர்ந்த காபி என்று அவரெதிரில் வரிசையாகக் கொண்டு வைத்த பணியாள், இவர்கள் மூவரையும் பார்த்துக் கண்ணசைத்து அருகில் வரச் சொன்னான். அவர்கள் அருகில் வந்ததும், "ஐயா.. இவங்க பிரச்னையை நீங்க தீர்த்து வைப்பீங்கனு நான் தான் இங்க வரச் சொன்னேன்" என்று ஐம்பது ரூபாய்க்கான தன் கடமையை முடித்துக் கொண்டு வெளியேறினான்.
மூவரும் அவரெதிரே உட்கார்ந்தனர். அவர்களைப் பார்த்தபடியே ஸ்காச்சைக் கையிலெடுத்து "சீர்ஸ்" என்றார். ஒரு வாய் குடித்து விட்டு தொண்டையைச் சரி செய்து கொண்டார். "யாருக்குப் பிரச்னை?" என்றார்.
ஒரே நேரத்தில் சாமும் விமலாவும் "இவனுக்குத் தான்" என்றனர்.
நெடுமாறனை ஏற இறங்க பார்த்த அன்புமல்லி "வயசுக்கு வந்துட்டியா, இன்னும் இல்லையா?" என்றார். புரியாமல் விழித்தவனிடம் நிதானமாக, "தப்பா நினைக்காதே, பாத்தா ரொமப சின்னப் பையனா இருக்கே, உனக்கென்ன காதல் பிரச்னை? சொல்லு கேட்போம்" என்றார்.
நெடு சொல்லி முடிக்கும் வரைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அன்புமல்லி, அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். "நெடுமாறன். அருமையான பெயர். பெயருக்காகவே உன்னைக் காதலிக்கணுமேபா அந்த பொண்ணு?" என்றார்.
"உங்களுக்குத் தெரியுது சார்.." என்றான் சாம், இரண்டு கையையும் உயர்த்தியபடி.
"அவங்க அப்பாகிட்டே பேசற தைரியம் இல்லையா உனக்கு?" என்று நெடுவிடம் கேட்டார் அன்பு.
"அப்படியில்லை, அவரைச் சுத்தி நாலஞ்சு தடிப் பசங்க சார். கிட்ட போக விட்டா தானே சார் பேசறது?" என்றான் நெடு.
"அந்தப் பொண்ணு கூட போன்ல பேசறது தானே?"
"போனை மாத்திட்டா சார்."
"கடிதம், இமெயில் எழுதறது தானே?"
"பதில் இல்லை சார்"
அமைதி.
"என்ன சார், ஒண்ணுமே சொல்ல மாட்றீங்க?" என்று கேட்டான் நெடு.
"இல்லபா. பொதுவா எங்கிட்டே பிரச்னைனு வரவங்க காதலரா இருப்பாங்க. ஏதோ ஊடல், விளையாட்டா ஆரம்பிச்ச சண்டை வினையாப் போய் வழி கேட்டு வருவாங்க. இல்லைனா அப்பா அம்மா சம்மதம் வாங்க ஐடியா கேட்டு வருவாங்க. சில சமயம் ரெண்டு பேரைக் காதலிக்கிறேன், ஒருத்தரை எப்படி தேர்வு செய்யறதுனு யோசனை கேட்டு வருவாங்க. அதுவும் இல்லைனா கல்யாணம் பண்ணக் காசில்லைனு உதவி கேட்டு வருவாங்க. உன் கேஸ் என்னடானா... அந்த நாதஸ்வரம் வாசிக்கறவர் ஊர் ஞாபகம் வருதேபா?"
"காரக்குறிச்சியா சார்?" என்றான் சாம்.
"சிக்கல்டா சும்பை"
"கிட்ட வராதேனு சொல்லிட்டான்றே. உன் மேலே கோபமும் இல்லை. உன் கிட்டே பாதிப் பணத்தைக் கூலி மாதிரி கொடுத்துட்டு போயிட்டான்றே. எல்லாம் நாடகம்னு கோனார் உரை போட்டுச் சொல்லிட்டு வேறே போயிட்டா. அவ உன்னைக் காதலிக்கறாளானு தெரியாம இதுல இறங்கினா விரயம்பா. உனக்கு என்ன, இருபது வயசு இருக்குமா? ரெண்டே வாரத்துல அந்தப் பொண்ணை மறந்துடுவே, கவலைப்படாதே. இந்தா, இந்த வடையை சாப்பிட்டு பார். பிரமாதமா இருக்கு. சாப்பிட்டு, பூமாவை மறந்துட்டு வீட்டுக்கு போ" என்றார்.
"நாங்க உண்மையாவே காதலிக்கிறோங்கிறதை நீங்க புரிஞ்சுக்குவீங்கனு பார்த்தேன்" என்றான் நெடு வருத்தமாக.
"அவங்க காதல் நிஜம் தான் சார்" என்று துணைக்கு வந்தான் சாம். "சார், அவ இந்திப் பாட்டு பாடினா இவன் புரிஞ்சுக்குவான் சார். இவங்க ரெண்டு பேருக்குமே இந்தி தெரியாதுனா பாத்துக்குங்க சார். இது காதல் இல்லைனு எப்படி சார் சொல்வீங்க? டேய், அந்த ராகெட் டயலாகை எடுத்து உடுறா. ஒட்றை மாதிரி இருக்கானேனு பாக்காதீங்க சார்.. எல்லாம் இரும்புக் கம்பி சார்" என்றான் சாம்.
"எங்கிட்டே பணத்தைக் கொடுத்துட்டு எல்லாம் நாடகம்னு சொன்னப்போ ஒரு தடவை கூட அவ என் கண்களைப் பார்த்துப் பேசலை சார். அங்கேயும் இங்கேயும் பார்த்தாளே தவிர, என் கண்களைச் சந்திக்கவேயில்லை" என்றான் நெடு, நிதானமாக.
"பாயின்ட்" என்றாள் விமலா. "நான் திட்டறதா இருந்தாலும் கொஞ்சறதா இருந்தாலும் இவன் மூஞ்சிக்கு நேரா கண்ணைப் பாத்து தான் சொல்வேன்" என்று சாமின் தோளில் இடித்தாள்.
"அனேகமா திட்டறது தான்" என்றான் சாம்.
அன்புமல்லி யோசித்தார். "அந்தப் பொண்ணு பணத்துக்காக நடிச்சதா சொல்றா இல்ல?"
"ஆமாம் சார்" என்றான் நெடு.
"ஆனா அவ அப்பாகிட்டே இல்லாத பணமா? கேட்டு வாங்க மாட்டாளா? ஏதோ உதைக்குதே?"
"சாரி சார், தெரியாம பட்றுச்சு" என்று மேஜைக்கடியிலிருந்து கால்களை எடுத்துக் கொண்டான் சாம்.
"அட, உன்னைச் சொல்லலைபா. ஒண்ணு செய், நெடுமாறன். அடுத்த புதன் கிழமை இங்கே வா. அதுக்குள்ளே ஏதாவது யோசனை பண்ணி திட்டம் போட்டு வைக்கிறேன். உன் செல் நம்பரைக் கொடுத்துட்டுப் போ, தேவைப்பட்டா கூப்பிடறேன்"
    அடுத்த புதன். அதே அறை. விமலா, சாம், நெடு இவர்களுடன் பூமா. இவர்களைத் தவிர, சுவரோர மேஜைக்கருகில் ஒரு நடு வயது ஆணும் பெண்ணும். வந்து பதினைந்து நிமிடம் ஆவதற்குள் அந்தப் பெண் மூன்று விஸ்கியும் சோடாவும் சாப்பிட்டு விட்டு சத்தமான ஏப்பம் ஒன்றை விட்டு, வயிற்றைத் தடவிக் கொண்டே ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டாள். அதைக் கேட்டும் பார்த்தும் அதிர்ச்சியடைந்த சாம் "சரிதான், பொம்பளைங்க ஆம்பளைங்களுக்கு சமம்னு இப்படியும் நிரூபிக்கலாம்" என்றான்.
"அவங்க ரெண்டு பேரும் அடிக்கடி நம்மளைப் பாக்கறாங்க" என்றான் நெடு.
"பெரிசுங்க தானடா.. எல்லாம் வயித்தெறிச்சல்" என்றான் சாம்.
"அவங்களை விடு, நீங்க ரெண்டு பேரும் பழையபடி சேர்ந்துட்டீங்க, சந்தோஷமா இருக்கு உங்களைப் பார்க்க" என்றாள் விமலா.
"ஆமாம், ஐ லவ் நெடு" என்றாள் பூமா, நெடுவின் கைகளை இணைத்து அழுத்தியபடி.
"ஒரு வாரத்தில் எப்படிரா எல்லாம் தலை கீழே மாறிடுச்சு?" என்றான் சாம்.
"எல்லாம் அன்புமல்லி சாரோட ஜாலம்" என்றான் நெடு.
"அவர் வந்தவுடன் எல்லாருக்கும் என்னோட ட்ரீட்" என்றாள் பூமா. "வாட் எ மேன்!".
"அவர் வரும் வரைக்கும் விஷயத்தையாவது சொல்லுங்க. மண்டை காயுது" என்றான் சாம்.
"போன வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தேனா, அன்புமல்லி சார் எங்கப்பாவோட பேசிக்கிட்டிருக்காரு. என்னைப் பார்த்ததும், நெடுமாறன், நான் சொல்றபடி கேட்டா உன் பிரச்னை தீர்ந்து போயிடும், கேட்பியான்னாரு. விவரமா எல்லா திட்டத்தையும் என் கிட்டே சொன்னாரு" என்று விளக்கத் தொடங்கினான் நெடு.
        இருவரும் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தனர். அறையின் வசதியும் அலங்காரமும், அரையிருட்டிலும் தெளிவாகத் தெரிந்தது. நடுவிலிருந்த சாய்வு மெத்தையில் ஒரு ஈரத்துணியால் கண்களை மூடியபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மதன் ராஜ், கதவு திறந்து இருவரும் உள்ளே நுழைவதைப் பார்த்து மெள்ள எழுந்தார்.
"மதன் சார், மன்னிக்கணும். இவர் என் உயிர் நண்பர் அன்புமல்லி, உங்களுக்காக ஒரு கதை வச்சிருக்கார், உங்களைப் பார்க்கணும்னு சொன்னார், அதான். நீங்க தூங்கிக்கிட்டிருந்தா... இன்னொரு சமயம்.."
"அதெல்லாம் ஒண்ணுமில்லே.. வாங்க, வாங்க" என்று அருகிலிருந்த காலி சோபாவைக் காட்டினார் மதன் ராஜ். அவர்கள் அமர்ந்ததும் "என்ன கதை, என்ன வேஷம், சொல்லுங்க?" என்றார்.
"உங்க கிட்டே கொஞ்சம் தனியா பேசணுமே" என்றார் அன்புமல்லி.
"ரகசியக் கதையா? பலே, பலே. சார், ஒண்ணு பண்ணுங்க, போறப்ப கதவை மூடிக்கிட்டுப் போயிடுங்க" என்றார் மதன் ராஜ், முறைத்தபடியே வெளியேறிய நண்பரிடம். "கதையைக் கேட்டு படம் பண்ணி வருஷக்கணக்காவுது.. இப்பல்லாம் ரசிகர்களுக்கேத்த மாதிரி குப்பையா படம் பண்ணவேண்டியிருக்குதே. நீங்க சொல்லுங்க சார்."
"உங்க வாழ்க்கையிலேயே நீங்க போட்ட கஷ்டமான வேஷம் இதுவாத் தான் இருக்கும்" என்று தொடங்கி அன்புமல்லி சொல்லச் சொல்ல, அஜீரணத்தினாலோ இல்லை பேயறைந்ததாலோ அவ்வப்போது முகம் ஒரு மாதிரிப் போனாலும், கவனமாகக் கேட்டார் மதன் ராஜ்.
        தனியாக டிவி பார்த்துக்கொண்டிருந்த பூமாவிடம் "அம்மா, உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்காரு, ரொம்ப அவசரம், உயிர் போகிற பிரச்னை.. உங்களைத்தான் பார்க்கணும் ஒரு காலில் நிக்கறாருமா" என்றாள் வேலைக்காரி.
"கீழே விழுந்துடப் போறாரு, நான் வரேன்னு சொல்லி உட்கார வை, போ" என்று பத்து நிமிடம் பொறுத்துக் கீழே இறங்கி வந்த பூமா, காத்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து "என்ன வேணும் உங்களுக்கு?" என்றாள்.
"என் பேரு அன்புமல்லி. நெடுமாறனோட பக்கத்து வீடு. அவங்கப்பா கிட்டேயிருந்து உன் முகவரியை வாங்கிக்கிட்டு வந்தேன்" என்ற அன்பு, பூமாவின் முன்னால் ஒரு தோள் பையை வைத்தார். "அவங்களால வர முடியலை. சோகம்."
"நீங்க என்ன சொல்றீங்க? இது என்ன பை?" என்றாள் பூமா.
"இதுல இருபது லட்சம் இருக்குமா. நெடு உங்கிட்ட தரச் சொல்லி எழுதிவச்ச கடிதம் இதோ" என்று அவளிடம் கொடுத்தார். "பூமா இல்லாத உலகத்தில பணத்தை வச்சுக்கிட்டு என்ன பயன்? அவளுக்குத் தேவையாயிருக்கலாம், பாவம் என்ன கஷ்டமோ அதனால் தான் நாடகமாடியிருக்கா, இதை அவள் கிட்டயே சேர்த்துடுங்க. இது தான் என் கடைசி விருப்பம்னு சொல்லி பூச்சி மருந்தைக் குடிச்சுட்டுப் போயிட்டான்மா"
"செத்துப் போயிட்டானா?" என்றாள், அதிர்ச்சியுடன் பூமா.
"இல்லமா, ஆஸ்பத்திரிக்குப் போயிட்டான்னு சொல்ல வந்தேன். பூச்சி மருந்து ரொம்ப கசக்குதுனு சர்க்கரையைக் கலந்து குடிச்சிருக்கான். சரியா வேலை செய்யாம, அவன் மூளை கோளாறாகி இப்ப ஆஸ்பத்திரியில் இருக்கான்மா. வரட்டா? நான் ஆஸ்பத்திரிக்குப் போகணும், நேரமாச்சு. நீ நல்லா இருமா" என்றபடி எழுந்தார்.
நிதானமாக வாசல் வரை போனவரைக் கூவி நிறுத்தி, "இருங்க, நானும் வரேன்" என்றாள் பூமா.
        "இவங்க தான் பூமாவா?" என்ற டாக்டரைப் பார்த்து மிரண்டாள் பூமா. அறைக்குள்ளே தேவையில்லாமல் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். பொறுத்தமில்லாமல் பெரிய தாடி. சினிமாவில் பார்த்த முகம் போலிருந்தது. சங்குச் சக்கரம் போல அடிக்கடி ஸ்டெத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார். எதிரே சாய்வு நாற்காலியில் கை காலெல்லாம் கட்டுடன் சுவரோரமாக உட்கார்ந்து கொண்டிருந்த நெடுவைச் சுட்டி, "ஸீ யுர் சன்.. ஐ மீன் மை சன்.. ஐ மீன் ஹிஸ் சன்" என்றார் அன்புமல்லியைப் பார்த்து.
"பக்கத்து வீட்டு சன்" என்று திருத்தினார் அன்பு.
"டூ மச் டென்சன்" என்று பெருமூச்சு விட்டார் டாக்டர்.
"மூளைல கோளாறுனு சொன்னீங்க, எதுக்கு இப்படி உடம்பெல்லாம் கட்டு கட்டியிருக்கு?" என்றாள் பூமா.
"அதானே?" என்றார் டாக்டர். "மூளைல கட்ட முடியாதுனு தான் கை கால்ல கட்டியிருக்கோம்" என்று தாடியை மூன்று முறை இழுத்து விட்டுக் கொண்டார்.
"அதாவது பூமா.. மூளைக் கோளாறினால எங்கே தன்னையும் மத்தவங்களையும் ஏதாவது ஆபத்துல கொண்டுவிட்டுறக் கூடாதேன்னு தான் கை காலெல்லாம் கட்டியிருக்காங்க, இல்லையா டாக்டர்?" என்றார் அன்பு.
"அதானே.. ஐ மீன், அதே தான்" என்றார் டாக்டர். "நான் கூட வேண்டாம்னு தான் சொன்னேன், இந்த் பேசன்ட் தான் கேட்காமல் கை காலெல்லாம் கட்டு போட்டு வைங்க நல்லா இருக்கும்னாரு" என்று தொடர்ந்த டாக்டரை இடுப்பில் நெருக்கி "ஏன் டாக்டர், பைத்தியக்காரன் சொல்றதையா கேட்பீங்க?" என்றார் அன்பு.
"அதானே" என்றார் டாக்டர் மறுபடி.
"பூமா" என்றான் நெடு, திடீரென்று அன்புமல்லியைப் பார்த்து. அவனை பூமாவின் பக்கம் திசை திருப்பினார் அன்பு. "வந்துட்டியா பூமா? என்னைக் கேட்டிருந்தா எங்கப்பா அம்மாகிட்டேயிருந்து திருடி, நானும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்திருப்பேனே" என்று பூமாவைப் பார்த்துச் சொன்னவன், விபரீதமாகத் தரையில் விழுந்து வேகமாக ஊர்ந்து போகத் தொடங்கினான்.
"புத்தி தடுமாறிடுச்சு. ஒண்ணு ரெண்டு நிமிஷம் நிதானம், பழையபடி கோளாறாயிடும். பூச்சி மருந்து சாப்பிட்டு மூளை கோளாறானதால தன்னை ஏதோ பூச்சியா நினைச்சுக்கறான்" என்ற டாக்டர், அன்புமல்லியைப் பார்த்து கண் சிமிட்டி "எப்படி நம்ம ஐடியா, ஐ மீன், தியரி?" என்றார்.
"அதனால் தான் நீ வர வேண்டாம், பணத்தை வச்சுக்கிட்டு நல்லா இருமானு சொன்னேன்" என்றார் அன்பு.
மூவரையும் ஒரு கணம் பார்த்த பூமா அழத் தொடங்கினாள்.
"ஏம்மா பயந்துட்டியா? தாடியை வேணா எடுத்துறவா?" என்ற டாக்டரின் காலை மிதித்த அன்புமல்லி, பூமாவிடம் "ஏம்மா அழுவுறே?" என்றார்.
"அந்தப் பையில் இருக்கிற பணம், பாதிக்கு மேலே போலி. மேலாகத் தான் நிஜப் பணம். உள்ளே எல்லாம் மூணு ருபா, எட்டு ரூபா நோட்டா இருக்கு. சினிமா பணம். எங்கப்பா நல்லா ஏமாத்திட்டாரு" என்றாள்.
"அதுக்கா இப்படி அழுவுறே?"
"இல்ல. எனக்கிருந்த பண நெருக்கடியினால தானே இப்ப நெடுவுக்கு இந்த மாதிரி ஆயிடுச்சு? என்னால எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்? நெடு இப்ப பூச்சி மாதிரியே நடக்குறாரே?"
"விடுமா, காசா பணமா, காதல் தானே?" என்றார் டாக்டர்.
"நான் நெடுவை உண்மையாகவே காதலிச்சேன். வாழ்க்கையில முதல் முறையா என் பணத்துக்கும் அழகுக்கும் பயப்படாத ஒரு சின்சியர் ஆளோடப் பழகினேன். பாழாப் போன பழைய காதலன் இப்படி என்னைப் படு குழியில் தள்ளிவிடுவான்னு தோணலையே?"
"அப்படி என்னமா உனக்குத் தொந்தரவு? சொல்லலாம்னா சொல்லு" என்றார் அன்பு.
"என்னோட பழைய காதலனோட ஒரு முறை விவரம் தெரியாம அந்தரங்கமா இருந்தப்போ, அதை அவன் எனக்குத் தெரியாம விடியோ எடுத்துட்டான். முப்பது லட்சம் கொடுத்தா அந்தப் படத்தை என்னிடம் கொடுத்துடறதாகவும், இல்லாவிட்டால் எங்கப்பாவோட புதுப் படம் ரிலீசாகறதுக்கு ஒரு வாரம் முன்னாடி விடியோவை யூட்யூபில் போட்டுடறதாவும் பயமுறுத்தினான். அவன் தான் என் கிட்டே இந்த ஐடியா கொடுத்தான்"
"ஏம்மா, உங்கப்பா கிட்டே சொல்லியிருந்தா, அவரு கிட்டதான் நாலஞ்சு தடிப்பசங்க வேலை பாக்கறாங்களே, அவங்களை வச்சு உன்னோட பழைய காதலனை பஞ்சர் பண்ணியிருப்பாரே" என்ற டாக்டரை வியந்து பார்த்தார் அன்புமல்லி. "பரவாயில்லையே".
"அவரோட தடிப் பசங்கள்ள ஒருத்தன் தான் சார் என் பழைய காதலன்"
"யாரவன் சொல்லு, பின்னிடறேன்" என்று தாடியை நீவியபடி எகிறிக் குதித்த டாக்டரைத் தடுத்து நிறுத்தினார் அன்பு. "அவங்களை உங்களுக்குத் தெரியாது, டாக்டர்" என்றார் அழுத்தமாக.
தரையில் இன்னும் ஊர்ந்து கொண்டிருந்த நெடு எழுந்து பூமாவைப் பார்த்து "நல்லா இரு, பூமா" என்றான். பூமா மறுபடி அழத்தொடங்கினாள். "அவன் தான் அம்பது லடசம் ரூபா கொடுத்து செட்டில் பண்ணச் சொல்லி எங்கப்பா கிட்டேயும் ஐடியா கொடுத்தான். ஆனா எங்கப்பா இப்படி எல்லாரையும் ஏமாத்திட்டாரே"
"அவனா?" என்ற டாக்டர், அலறினார். "ஐயோ". பிறகு, அவர் கால்களில் ஓங்கி மிதித்த அன்புமல்லி விலகிக்கொண்டதும், "உங்கப்பா சாதாரண ஆளில்லைமா.. எத்தனை சினிமால நடிச்சிருக்காரு... அவருக்கா தெரியாது ஐடியா?" என்றார் பெருமையுடன்.
பூமா மேலும் அழத் தொடங்கினாள். "அவரால தான் இந்தப் பிரச்னையே. எங்கப்பாவைக் கண்டாலே வெறுப்பா இருக்கு"
"நீ ஒண்ணும் கவலைப் படாதே. நான் சொல்றபடி செய் பூமா. உங்கப்பா கிட்டே சொல்லி இன்னொரு முப்பது லட்சம் ரூபா வாங்கிக்கிட்டு அந்த ஆள் கிட்டே கொடு. உடனே நான் கூட்டிக்கிட்டு வந்த இன்ஸ்பெக்டர் அவனைக் கையும் களவுமா பிடிச்சுடுவார். உனக்கு ஒரு பிரச்னையும் இருக்காது" என்றார் அன்பு.
"எனக்குத் தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் தான்" என்றார் டாக்டர். "ஆனா, தாடி கிடையாது" என்று அவசரமாகச் சேர்த்துக் கொண்டார்.
நெடு மறுபடியும் எழுந்து "பூமா, வந்துட்டியா?" என்றான்.
"சும்மா இருபா, நீ வேறே. அந்தச் சுவரோரமா போய் ஊர்ந்துக்கிட்டிரு, போ" என்ற அன்புமல்லி, பூமாவிடம் "வாம்மா, உங்கப்பா கிட்டே போய் உண்மையைச் சொல்லி அந்த ஆளைப் பிடிக்க ஏற்பாடு செய்வோம். நெடுவை ரெண்டே நாளில் குணப்படுத்திடுவாரு டாக்டர்" என்றார்.
        ஹோடல் மாயாவில் உயர்ந்த ரக காபிக் கடையின் இருண்ட மூலையில் உட்கார்ந்திருந்தாள் பூமா. அருகில் பச்சை நிறப் பையில் பணம். எதிரே தடியன். பணப்பையை அவனருகில் நகர்த்தினாள். "இதுல முப்பது லட்சம் இருக்கு. எல்லாம் நிஜப் பணம், பார்த்துக்க" என்றாள்.
விரைவாகவும் கவனமாகவும் பணத்தை எண்ணியவன் சிரித்தான். "இந்தா விடியோ. நீ இந்த வழியா போ. நீ போய் பத்து நிமிடம் கழித்து நான் அந்த வழியா போவேன்" என்றான்.
"சரி, இது தான் விடியோனு எப்படித் தெரியும்?"
"பூமா, இது தான் உனக்குத் தெரியாம நான் எடுத்த விடியோ. வேறே பிரதி எதுவும் கிடையாது" என்று அவன் சொல்லி முடிக்கவும், சுவரை விலக்கி கொண்டு தோன்றினர் இருவர். கையில் ஒலிப்பதிவுப் பெட்டியுடன் இருந்த அன்புமல்லி, "நான் பூமாவோட வக்கீல்" என்றார். "இப்ப நீ சொன்னதெல்லாம் இதுல பதிவாகியிருக்கு"
இரண்டாமவர் குதித்துக் கொண்டே வெளியே வந்து, "நான் இன்ஸ்பெக்டர் திலீப் கரிகாலன். கமிசனர் சௌத்ரியைத் தெரியுமா? தெரியாதா? அலெக்ஸ் பாண்டியன்? அதுவும் தெரியாதா? என்ன ஆளுயா நீ? என்னை யாருன்னு நினைச்சே? இந்த திலீப் கரிகாலனோட பேரைச் சொன்னாலே அழுதுகிட்டிருக்கிற ஒவ்வொரு குழந்தையும் கிள்ளி விட்ட அம்மாவைப் பின்னியெடுத்துடும்"
"இவனைக் கைது செய்வாருனு பார்த்தா, இந்த இன்ஸ்பெக்டர் என்ன இப்படி டயலாக் பேசிக்கிட்டிருக்காரே?" என்றாள் பூமா.
இதற்குள் ஓட முயற்சித்த தடியனைத் துப்பாக்கியைக் காட்டி நிறுத்தினார் இன்ஸ்பெக்டர். "மவனே, சல்லடையா மாத்திருவேன் உன் முகத்தை"
"இன்ஸ்பெக்டர், டயலாக் போதும். இவனைக் கைது செய்யுங்க" என்றார் அன்புமல்லி.
அவன் கையில் விலங்கு மாட்டினார் இன்ஸ்பெக்டர். "இந்த விலங்கு உன்னை மாதிரி திரியுற ஒவ்வொரு நாய்க்கும் நான் போட்ட விலங்கா இருக்கட்டும்"
"போதும் இன்ஸ்பெக்டர்" என்ற அன்புமல்லி விடியோவை எடுத்து பூமாவிடம் கொடுத்து "இதை எடுத்துக்கிட்டு நீ வீட்டுக்கு போமா. நாங்க இவனை லாக்கப்ல தள்ளிட்டு வந்துடறோம்" என்றார்.
"பூமா, என்னை மன்னிச்சுரு... என்னை விட்டுறச் சொல்லு. விடியோ தான் உங்கிட்டே கொடுத்துட்டனே, பணமும் இப்ப உங்கிட்ட தானிருக்கு. என்னை விட்டுறச் சொல்லேன்?" என்றான் தடியன்.
"அந்தரங்க விஷயங்களை அனுமதியில்லாம படமெடுத்த குற்றத்துக்கும், பயமுறுத்திப் பணம் பறித்த குற்றத்துக்கும் அப்புறம் யாருடா தண்டனை அனுபவிப்பாங்க?" என்றபடி எழுந்தாள் பூமா. இன்ஸ்பெக்டரிடம், "இவனுக்கு என்ன தண்டனை சார் கிடைக்கும்?" என்றாள்.
"இந்த மாதிரி நாய்களுக்கெல்லாம் சட்டம் தண்டனை வழங்காது, இந்த சவுக்கு தான் தண்டனை வழங்கும்" என்று இடுப்பிலிருந்த சவுக்கை உருவியெடுத்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து திடுக்கிட்டுத் தடுத்து நிறுத்திய அன்புமல்லி, தடியனிடம் "இந்தக் குற்றத்துக்கு ஒரு நாப்பது வருஷ ஜெயில் தண்டனை கிடைக்கும். உனக்கு இப்ப என்னப்பா வயசு?" என்றார்.
சவுக்கைப் பார்த்து நடுங்கிப் போன தடியன், "இருபத்தெட்டு சார். என்னை மன்னிச்சிருங்க சார். பூமா, தயவு செய்து என்னை மன்னிச்சுரு, நான் எங்கேயாவது ஓடிப் போயிடறேன். உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்" என்றான்.
    "என்னடா, அன்புமல்லியை இன்னும் காணோம்? எனக்குப் பசிக்குது" என்றான் சாம்.
"எப்பவும் சோறு தானா உனக்கு?" என்று சலித்துக் கொண்ட விமலா, பூமாவைப் பார்த்து "அப்புறம் என்ன ஆச்சு?" என்றாள்.
"அப்புறம் என்ன? எங்கப்பாவும் அன்புமல்லி சாரும் அவனைக் கொஞ்ச நேரம் அழ விட்டு வேடிக்கை பார்த்தாங்க. அப்புறம் அவன் கிட்டேயிருந்து ஒப்புதல் வாக்குமூலம் எழுதி வாங்கிக்கிட்டாரு அன்புமல்லி. என்னை எப்ப தொந்தரவு செய்தாலும் வாக்குமூலத்தைப் போலீசில் கொடுத்துறதாச் சொல்லி, அவன் விலங்கை எடுத்து விட்டாரு. அவன் ஒரே ஓட்டமா ஓடிப் போயிட்டான்" என்று சிரித்தாள் பூமா. "இதுல என்னடானா எங்கப்பாவும் நெடுவும் வேஷம் போட்டாங்கனு கடைசி வரைக்கும் எனக்குத் தெரியாது".
"எல்லாம் அன்பு சார் போட்ட திட்டம் தான்" என்றான் நெடு.
"அந்த விடியோ?" என்றாள் விமலா.
"பார்த்தேன். அது பூமாவே கிடையாது. பூமாவோட முகத்தை மட்டும் வேறே யாருடைய உடம்போட சேர்த்து மோர்ஃப் பண்ணி யாரோ சினிமாக்காரங்க உதவியோட எடுத்த தரமில்லாத விடியோ" என்றான் நெடு.
"உனக்கு எப்படித் தெரியும், அது நானில்லைனு?" என்றாள் பூமா.
"சொல்றேன்" என்றபடி பூமாவின் காதில் மட்டும் ஏதோ சொல்ல, அவள் "சீ" என்றாள்.
"நிறுத்துங்கடா, அப்புறம் குலாவலாம். பசி பிடுங்குது, ஏதாவது கொண்டு வரச் சொல்லுங்க" என்று பணியாளரைக் கைதட்டிக் கூப்பிட்டான் சாம்.
இன்னொரு பலத்த ஏப்பத்தை விட்டு வயிற்றைத் தடவி இரண்டு தட்டு தட்டிக்கொண்ட சுவரோரப் பெண்மணியை அருவருப்புடன் பார்த்தவாறே முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பூமா. "என்ன பொம்பளை இவ?"
இதற்குள் பணியாள் வந்து அவர்களிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்க, பிரித்துப் படித்தான் நெடு. "நண்பர்களே, இன்றைக்கு இன்னொரு நண்பருடன் விருந்து இருக்கிறது. உங்களுடன் வர முடியாது. இன்னொரு சமயம் பார்க்கலாம். நெடு, பூமா இருவருக்கும் வாழ்த்துக்கள். அன்புமல்லி"
"நன்றி, அன்புமல்லி சார்" என்றான் நெடு உரக்க, இரு கைகளையும் உயர்த்தியபடி.
"வாட் எ மேன்!" என்றாள் பூமா.
"சரி, சரி, நாம சாப்பிடலாம் வாங்க" என்றான் சாம்.
    அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் சாப்பிட்டு வெளியேறிய பின், சுவரோர ஆணும் பெண்ணும் நீண்ட நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.
"பொண்ணு பிரச்னை முடிஞ்சிடுச்சு. அன்பு...உங்களுக்குத் தான் நன்றி சொல்லணும்" என்ற பெண் கொஞ்சம் பொறுத்து, "இந்த கிளப் நல்லா தான் இருக்கு. வேஷம் போட்டுக்கிட்டு வந்தா நிம்மதியா தனிமையை அனுபவிக்கலாம் போலிருக்கே" என்றார்.
"வேஷம் போட உங்களுக்குச் சொல்லியா கொடுக்கணும்? இருந்தாலும், பெண் வேஷத்துல இப்படி அடிக்கடி சத்தமா ஏப்பம் விட்டுக்கிட்டிருந்தா பொறுத்தமா இல்லை" என்றார் ஆண்.    ♥♥
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக