2009/04/10

மெல்லிசை நினைவுகள்    எம்எஸ்வியின் மேல் எனக்குள்ள அபிமானத்தைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். அவர் கஷ்டப்பட்டதாகத் தோன்றிய ஆர்.டி.பர்மனின் இந்திப்பாடலின் தமிழ் வடிவத்தைப் பற்றி எழுதுவதாகச் சொன்னது நினைவிலிருக்கிறது. அதற்கு வேளை வரும். இந்தப் பதிவு அவருடைய தனிப்புகழ் கொடி கட்டிப் பறப்பதற்கு சற்றே முற்பட்டக் காலத்தில், விசுவநாதன்-ராமமூர்த்தி காலத்தில் வந்த ஒரு பாடலைப் பற்றியது.

தமிழ்த் திரையிசையில் புதுத்திருப்பத்தை ஏற்படுத்திய இரட்டையர் இவர்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவர்கள் சேர்ந்து வடித்த பாதையில் எம்.எஸ்.வி பின்னர் தனியாகப் புகுந்து விளையாடினாரென்றாலும், திருப்பத்தை உருவாக்கியதற்கான பெருமை இருவருக்குமே சேரும். இரட்டையர் சேர்ந்து இசையமைத்த பாடல்களில் பெரும்பாலானவை இன்றைக்கும் கேட்டு ரசிக்கும்படி இருப்பது இதற்கு சாட்சி. எம்.எஸ்.வியின் தனிப்பட்ட ஆட்சி இருவரும் சேர்ந்திருந்த காலத்தை விட நீண்டது என்றாலும், இரட்டையராக இருந்த போது பெற்ற வெற்றியை விட கணிசமாகக் குறைவாகத் தான் இருந்தது அவருடைய தனிப்பட்ட வெற்றி என்ற கருத்து நிலவுவதை அறிவேன். தனியாக எம்எஸ்வி தொட்ட வெற்றியின் உச்சங்களை இரட்டையராக தொட்டிருக்க முடியாது என்பது என் கருத்து. நெஞ்சில் நிறைந்திருக்கும் பாடல்களை அமைத்த விதத்தைத் தான், நான் இங்கே வெற்றியென்று குறிப்பிடுகிறேன். எம்.எஸ்.வியின் வெற்றிக்கு இணையாக, இன்னொரு தனி இசையமைப்பாளர் இன்னும் வெற்றி பெறவில்லை.

ஏ.ஆர்.ஆரைப் போல் மற்ற தமிழ் இசையமைப்பாளர்கள் இந்தியில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அது இந்தித் திரையிசையின் நஷ்டம் என்று சொல்லத் தோன்றினாலும், அதில் உண்மையில்லை என்பது எனக்கே புரிகிறது. இன்றைய இந்தித் திரையிசைத்துறையில் ஏ.ஆர்.ஆருக்கு போட்டியே இல்லை. ஏ.ஆர்.ஆரின் வெற்றிக்கு அவருடைய திறமை தான் முதல் காரணம் என்றாலும், போட்டியில்லாத நிலையில் அவர் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் என்பதில் உண்மை இருக்கிறது என்று எண்ணுகிறேன். இன்றைய இந்தித்திரையிசையைப் பற்றி சமீபத்தில் ஒருவர் youtubeல் புலம்பியிருக்கிறார்: "சப் பக்வாஸ் ஹி பக்வாஸ் ஹை. சோர் மசாதே ஹை இன் லோக், கீதேன் நஹின்". (எல்லாம் பகட்டு. இசையைக் காணோம், எல்லாம் ஓசையாக இருக்கிறது). இசை என்பது அவரவர் விருப்பத்தையும் ரசனையையும் பொருத்தது என்றாலும், இன்றைய இசையை மெல்லிசை என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எம்.எஸ்.வி காலத்தைய இந்தித் திரையிசையைப் பார்ப்போம். மதன் மோகன், எஸ்.டி.பர்மன், சலீல் சௌத்ரி, நௌசத், ரவி, ஆர்.டி.பர்மன் என்று மேதைகள் கொடி கட்டிப் பறந்த காலம். ஒரு விதத்தில், எம்.எஸ்.வி யை விடத் திறமை வாய்ந்தவர்கள் போல் தோன்றுகிறது. அத்தகைய நிலையில் இந்தியில் இசையமைப்பது இருக்கட்டும், தமிழில் இவர் இசையமைத்த பாடல்களை இந்தி இசையமைப்பாளர்கள் அங்கீகரிப்பதே பெரும் சிறப்பென்பேன். (லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் இரட்டையரை நான் இந்த வரிசையில் சேர்க்காததன் காரணம் உண்டு. என் கணிப்பில் அவர்கள் இரண்டாம் தட்டு இசையமைப்பாளர்கள். அந்த இரட்டையர் இசையமைத்த ஒரு பாடலின் தமிழ் வடிவத்தில் எம்.எஸ்.வி சும்மா பிய்த்து உதறுவார் பாருங்கள். அதாவது கேளுங்கள். அதை இன்னொரு பதிவில் எழுதுகிறேன்)

இந்தியில் அங்கீகாரம் பெறுவது சரி, இந்தியில் இசையே அமைக்கும்படி நேர்ந்தால்? இசை அமைப்பது போதாது என்று வெற்றிப் பாடல்களை இசையமைத்தும் விட்டால்? விசுவநாதன்-ராமமூர்த்தி அதைத் தான் செய்தார்கள். அதுவும் வெற்றி பெற்ற ஒர் தமிழ் மெட்டை அப்படியே திருப்பிப் போடாமல், இந்திக்காக இந்தி திரைக் கலாசாரத்துக்கேற்றபடி அருமையான மெட்டுடன் பாடல்களை இசையமைத்து வெற்றி பெற்றார்கள். அவர்கள் தொடர்ந்து இந்தியில் இசையமைக்காதது எனக்கு வருத்தம் தான்.

நான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்தப் பாடல் 1955 வாக்கில் வெளிவந்தது. விசுவநாதன்-ராமமூர்த்தியின் முதல் இந்திப் படம் என்று நினைக்கிறேன். தமிழில் வெற்றி பெறத் தொடங்கியிருந்தார்கள். இந்தியில் காலடி வைத்து அங்கேயும் வெற்றியைச் சுவைத்தவர்கள் இந்தியில் அதிகமாக இசையமைக்காதது வருத்தமென்றாலும், அங்கேயே தங்காதது பெரு மகிழ்ச்சி என்று சொல்வேன். இல்லையென்றால் எம்.எஸ்.வி கிடைத்திருப்பாரா?

'லௌட் கயா, கம் கா சமானா' எனும் இந்தப் பாடலைக் கொடுத்த இரட்டையருக்கு நன்றி. இந்தப் பாடலுக்கு முகமது ரபியை பாட வைக்காமல் ஹேமந்த் குமாரைப் பாட வைத்திருப்பது ஆச்சரியம். இதே படத்தின் இன்னொரு பாடலை ரபி பாடியிருக்கிறார் என்றாலும், இந்தப் பாடலை அவர் பாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ஹேமந்த் குமாரைத் தேர்ந்தெடுக்கக் காரணம், அவர் குரலும் பாடும் முறையும் 'செய்கல்' போல இருப்பதால் இருக்கலாம் என்று நினைக்கிறேன். செய்கல் எம்.எஸ்.வியின் அபிமான இந்திப் பாடகர் என்று படித்திருக்கிறேன். ஹேமந்த் குமார் அருமையாகப் பாடி இருக்கிறார். உடன் பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் தேனாகக் கொட்டுகிறார் என்றால் தேனாகக் கொட்டுகிறார். மென்மையாக, மெதுவாகத் தொடங்கி, அருமையான மெட்டு, கொஞ்சும் குரல், இனிமையான கிடார் இடைச் செருகல்கள், ஓரளவுக்கு நயமான கருத்து (கண்ணதாசன் கிடைத்தது நமக்கு மட்டும் தான்), scintillating music என்று கண்ணை மூடி மெய்மறக்க வைக்கும் பாடல். ஏறத்தாழ அறுபது வருடங்களுக்கு முந்தைய பாடல் என்பதை நினைவில் வைத்துக் கேளுங்கள். இந்தப் பாடலை நள்ளிரவின் தனிமையில் கேட்டால், இதயத்தைக் கிறங்க வைக்கும் என்பது சத்தியம். மறக்க முடியாத பாடல்.

ஒரு பாடலுடன் விடுவானேன்? எம்.எஸ்.வி இசையமைக்க இசையாத எனக்குப் பிடித்த இன்னொரு பாடலையும் சேர்த்திருக்கிறேன். எம்.எஸ்.வியின் நண்பர் ரவி இசையமைத்த பாடல். இருவரும் சந்திக்கும் போது, புகழ் பெற்ற இசைக்கலைஞன் என்றெல்லாம் நினையாமல் யார் சேர்ந்து கொண்டாலும் வரவேற்று அந்தக் கால வழக்கப்படி music jam செய்வார்களாம். அந்த பாதிப்போ என்னவோ, இந்தப் பாடலில் என் இதயம் கரைவதும் சத்தியம். பத்து வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் தமிழில் வெளி வந்த போது எம்.எஸ்.வியை அழைத்தார்களாம். ஏனோ எம்.எஸ்.வி ஒப்புக்கொள்ளாததால், இன்னொருவரிடம் கொடுத்து விட்டார்கள். அந்தப் பாடலுக்கு இணையான ஒரு தமிழ்ப்பாடல் வராமலே போய்விட்டது. 'இன் ஹவாவோன் மே' என்ற அந்தப் பாடலையும் கேட்டு ரசிக்கவென்று சேர்த்திருக்கிறேன்.

மெல்லிசை நினைவுகள் | 2009/04/10

1 கருத்து:

  1. பெயரில்லாஏப்ரல் 18, 2009

    தமிழ்ப் பாட்டுனு நினைச்சா pleasant surprise. Beautiful melodies.

    பதிலளிநீக்கு