2015/05/18

ஜபேஷ்



1 ◄◄இதற்கு முன்



    வெளியே மழை மீண்டும் வலுக்கத் தொடங்கியது. டிவியில் கவனமில்லாமல் வீட்டைப் பற்றியும் படித்துறையில் பார்த்த உருவம் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இடியோசை அடங்கியதும் தொலைவில் குழந்தை அழுவது போல் ஒலிக்க, சற்றுத் தயங்கினேன். டிவியில் தாலாட்டு பாட்டு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து சமாதானமானேன். மறுபடி குழந்தை அழுகை ஒலிக்க, டிவியில் கவனித்தேன். குழந்தை எதுவும் காணோம். எங்கிருந்து வருகிறது அழுகை? அல்லது அழுகை போன்ற ஓலம்? இத்தனை ஏக்கம் தோய்ந்த ஓலம்? படித்துறை பக்கம் பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. அழுகையொலியை உன்னித்த போது அது குழந்தையின் அழுகையில்லை என்றுத் தெளிவானது. நாய்? பூனை? மழையில் சிக்கித் தவிக்கிற ஏதோ பிராணி என்று புரிந்து வருந்தி அமைதியானேன்.

உறக்கம் வரவில்லை. பசித்தது. சிறிது வயிற்றுக்கு ஈயலாம் என்று எழுந்து சமையற்கூடம் செல்லும் பொழுது மின்னல் பளீரிட்டது. சரியான இடி விழப்போகிறது என்று எண்ணியது வீணாகவில்லை. ஜெயா எழுந்திருக்கப் போகிறாளே என்று எண்ணியபடி ஒரு அப்பளத்தை மைக்ரோவேவில் வைத்து, பத்து நொடி பித்தானைத் தட்டினேன். ஜெயாவின் குரலைக் காணோம். அப்பளத்தைப் புரட்டிப் போட்டு மறுபடி பத்து நொடிப் பித்தான். முறுகலாகச் சுட்டிருந்த அப்பளத்தில் ஒரு ஸ்பூன் நெய்யைத் தடவி, உள்ளறைக்கு வந்து உட்கார்ந்தக் கணத்தில் மின்வெட்டு. இன்வர்டர் இயங்கி ஒரு விளக்கு மட்டும் எரியத்தொடங்கிய சில நொடிகளில் ஜெயாவின் குரல் கேட்க, திரும்பிப் பார்த்தேன்.

"என்னங்க இது, தூங்கலியா?"

"சுட்டப்ளம் நெய். சாப்பிடுறியா?"

"சரிதான். இடி சத்தம் வயித்தைக் கலக்குதேனு ஓடி வந்தா, தூங்காம அப்பளமா சாப்பிட்டுருக்கீங்க?" என்றபடி அருகே வந்து கொஞ்சம் அப்பளத்தைப் பிட்டு நெய் தொட்டுத் தின்றாள். கையோடு கொண்டு வந்திருந்த கம்பளிச் சால்வையைப் போர்த்துக் கொண்டு என் தோளில் சாய்ந்தபடி இரண்டு கால்களையும் சோபாவில் உயர்த்திச் சிறு குழந்தை போல் ஒருக்களித்துக் குறுக்கிக் கொண்டாள். "தூக்கம் வருது" என்றபடி தோளிலிருந்து மெள்ளச் சரிந்து என் மடியில் படுத்தாள். இப்பொழுது மின்னலும் இடியும் அதிகரித்திருந்தன. "ப்லீஸ்.. எழுந்து போகாதீங்க. இடின்னா எனக்கு பயம்னு தெரியுமில்லையா?" என்றாள்.

சில நொடிகளில் அவளிடமிருந்து வெளிப்பட்ட மெல்லிய குறட்டை, அந்த ஓசையிலும் தூங்கிவிட்டாள் என்றது. நான் அப்பளத்தை ஓசை வராமல் பிட்டுத் தின்றபடி இன்னமும் படித்துறை நினைவாகவே இருந்தேன். எப்போது தூங்கினேன் என்றே தெரியாது. உட்கார்ந்த நிலையிலேயே தூங்கியிருக்கிறேன். திடீரென்று ஜெயாவின் முனகல் கேட்டு விழித்தேன். "தூக்கம் வரலேனு பாடுறீங்களா? எனக்குத் தூக்கம் வருது" என்று என் முதுகை அணைத்தபடி புரண்டு படுத்தாள். பாடுகிறேனா? என்ன சொல்கிறாள்?

அப்பொழுதுதான் கவனித்தேன். இது ஓலம். இல்லை, கானம். நிச்சயமாக யாரோ முணுக்கும் ஒலி.. இனிமையான ஆலாபனை.. கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல் தொலைவாக வந்தாலும் தெளிவாகக் கேட்டது.

என்று காண்பேனோ?
பாதங்களை என்று காண்பேனோ?
பெருஞ் சனகனே பாலூற்றிக் கழுவியப் பாதங்களை என்று காண்பேனோ...
பாறையிற் பட்டுப் பெண்ணுயிர்த்தப் பாதங்களை என்று காண்பேனோ...
என்று காண்பேனோ?
கரங்களை என்று காண்பேனோ?
காதலுடன் சீதைக்குக் கல்யாணப் பொட்டிட்டக் கரங்களை என்று காண்பேனோ...
கருணையுடன் முனிவரைக் காத்தக் கரங்களை என்று காண்பேனோ...


எங்கே கேட்டிருக்கிறேன்? சட்டென்று பொறி தட்டியது. இது.. இது.. நான் சிலிர்த்து உட்கார்ந்ததில் ஜெயா எழுந்து விட்டாள்.

"என்னங்க ஆச்சு? நல்லா ஹம் பண்ணிட்டிருந்தீங்களே? தாலாட்டு மாதிரி சுகமா இருந்துதே?"

"நான் பாடலே ஜெயா. பாடுறீங்களானு நீ கேட்டதும் என்னைத் தட்டி எழுப்பினாப்புல இருந்தது.. எழுந்தா..". சட்டென்று ஜன்னலோரமாக விரைந்துப் படித்துறையைப் பார்த்தேன். இருளிலும் மழையிலும் எதுவும் தெரியவில்லை. ஜெயா நிச்சயமாகக் கலங்கியிருந்தாள். "என்னங்க ஆச்சு? எதுக்கு அப்படி திடீர்னு ஓடினீங்க? நான் உருண்டு விழுந்துட்டேன் பாருங்க. அப்படி யாரு வெளியில? திருடனா?"

"ஆமாண்டி. திருடன்னு சொல்லிண்டு ஒருத்தன் வருவானாக்கும்.." என்று அவளைக் கிண்டல் செய்தபடி உட்கார்ந்தேன். நடந்தவற்றை அவளிடம் சொன்னேன். "இப்ப கேட்டியே இந்தப் பாட்டு.. இது தியாகராஜர் க்ருதி"

"அதனாலே?"

"தெரியலே. குழப்பமா இருக்கு. எனக்கென்னவோ நான் பார்த்த அந்தப் பெரியவர் தியாகப்பிரம்மம்னு தோணுது"

"யாரு? அசல் தியாகராஜரா?"

"அசலில்லாத ரூபத்துல.."

ஜெயா திடீரென்று என் நெற்றியைப் பிடித்துவிட்டாள். "மோர் காய்ச்சிக் கொண்டு வரட்டுமா? சுவாமிமலை விபூதினு மாலி கொஞ்சம் கொடுத்தான். அதையும் கொண்டு வரேன். எதையோ பார்த்து பயந்திருக்கீங்க."

"பாட்டு.. நீயும் தானே கேட்டே?"

"நீங்க ஹம் பண்றீங்கனு நெனச்சேன். இல்லேன்னா அடிச்ச காத்துல ஏதாவது விசித்திரமா இருக்கலாம். சில சமயம் தெருநாய் ராத்திரில ஊளையிடறதும் இப்ப வர சினிமா பாட்டு மாதிரியே இருக்கு.. நடக்கக் கூடியது தான். அதுக்காக தியாகராஜராவது? நாழிகை நலிய ஊழியென உலுக்கும் இசைனு நீங்க ஏதோ சொல்வீங்களே அடிக்கடி.. அதுமாதிரிதான். ஏதோ திருடன் வந்திருக்கான்.. உங்களைப் பார்த்ததும் டபக்னு காவேரில குதிச்சு ஓடியிருப்பான்...வயசான காலத்துல எதுக்கு வெளில தனியா போறீங்க? ராத்ரில அதுவும் மழைல? காலம்பற எழுந்து பின்கட்டுல எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கலாம். படுங்க பேசாம"

காலையில் எழுந்த போது எட்டு மணிக்கு மேலிருக்கும். ஜெயா எழுந்துவிட்டிருந்தாள். "தூங்கினீங்களா? கரன்டு இன்னும் வரலே. காபி சாப்பிட்டு ஜெனரேட்டரை ஆன் பண்ணுங்க. இன்வர்டரும் போயிடும் போலருக்கு"

காபி சாப்பிட்டபடி பின் கட்டுக்குச் சென்றேன். வெளியே இன்னும் கசகசவென்று தூறலும் இல்லாமல் மழையும் இல்லாமல் பெய்து கொண்டிருந்தது. நிச்சயமாக நேற்றிரவு கேட்டது ஊழியின் வேடிக்கையில்லை. பின் கட்டைத் தாண்டிப் படித்துறையைப் பார்த்தேன். ஏதோ உந்துதலில் ஒரு குடையுடன் படித்துறைக்குச் சென்றேன். நீருக்குள் இறங்கியப் படித்துறையில் மொத்தம் பத்துப் படிகளாவது இருக்கும். மண்மேல் தெரிந்த ஐந்தாறு படிகளில் ஐந்தாவது படியின் விரிசலில் கிடந்தவற்றைப் பார்த்து... என்னையறியாமல் "ஜெயா!" என்று கூவினேன். அவசரமாக ஓடி வந்த ஜெயாவிடம் நான் கண்டதைக் காட்டினேன். "இங்கே பார்!".

அரையடி உயர விக்கிரகங்கள் மூன்று படித்துறைப் படியிலும் பக்கவாட்டுச் சேற்றிலும் காவிரி நீரிலும் பட்டும் படாமல் கிடந்தன. அவசரமாக எடுத்துப் பார்த்தேன். இலேசாக சேறு நீக்கிப் பார்த்த போது.. ராமன்... இல்லை இலட்சுமணன். இன்னொன்றை எடுத்துப் பார்த்ததும்... படித்துறையில் கிடந்தவை வெண்கலத்தாலான ராமன், சீதை, மற்றும் லட்சுமணன் விக்கிரகங்கள் என்பது புரிந்தது. மழையில் மறுபடி நீரில் விழுந்து விடக்கூடாதென அஞ்சி சேற்றுடன் அப்படியே மூன்று விக்கிரகங்களையும்... என்னைத் தடுத்த ஜெயா, எதிரே மதில் சுவரைச் சுட்டினாள்.

மதில் மேல் ஒரு பூனை. எங்களையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. பாய்வதற்குத் தயாராக இருந்த புலி போல் பூனை பயமூட்டுவதாகவே இருந்தது. அதன் கண்கள் எங்களை உற்றுக் கவனித்தன.

நான் விக்கிரகங்களைத் தொட்ட போது ஒரு காலை முன்வைத்து அலறியது. பின் வாங்கினேன். பிறகு பூனை அமைதியாக என்னையே பார்த்தது. குட்டிப்பூனை என்றாலும் அந்தத் தருணத்தில் கொஞ்சம் பயமாகவே இருந்தது. தெப்பலாக நனைந்திருந்த எங்கள் நடுவே மழையில் கொஞ்சமும் நனையவில்லை அந்தப் பூனை என்பது இன்னும் ஆச்சரியமாகவும் அச்சமாகவும் இருந்தது.

பூனையைப் பார்த்தபடி மெள்ள விக்கிரகங்களைத் தொட்டேன். இப்பொழுது பூனை அலறவில்லை. மென்மையாகக் குரல் கொடுத்தது. பசித்த குழந்தை போல். விக்கிரகங்களை ஒவ்வொன்றாக மண்ணோடு சேர்த்தெடுத்து என் மேற்சட்டையில் சுருட்டிக் கொண்டேன். மதிலைப் பார்த்தேன். பூனை எங்களை வெறித்துப் பார்த்தது.

ஜெயா பூனையை அழைத்தாள். "மியாவ்.. இங்க வா.." என்று ஏதோ சொன்னாள். பூனை ஜெயாவை விட்டு என்னை மட்டும் பார்த்தது. சட்டென்று தாவியோடி மறைந்தது. விக்கிரகங்களுடன் உள்ளே நடந்தேன். ஜெயா என்னைக் கட்டிக்கொள்ளாதக் குறையாக ஒட்டிக்கொண்டு வேகமாக வந்தாள்.

    நான் சென்னையிலிருந்து திரும்பி வர ஐந்து நாட்களாயின. ஜெயாவின் உறவினர் மாலியும் உடன் வந்திருந்தார். தியோசாபிகல் சொசைடி, கிங் இன்ஸ்டிட்யூட், ஐஐடியின் கெமிகல் எஞ்சினியரிங் மற்றும் மெடலர்ஜி துறைகள், பழைய ப்ரெசிடென்ஸி ஆர்கியாலஜி ப்ரொபசரான என் நண்பரின் வீடு, கனிமரா மற்றும் தாம்பரம் கிறுஸ்தவக் கல்லூரி நூலகம் என்று ஒரு ரவுண்டு அடித்துத் திரும்பியிருந்தேன். நான் இல்லாத நாளில் கும்பகோணம் போய்த் திரும்பியிருந்தாள் ஜெயா.

"அத்திம்பேர் தயவுல மெட்ராஸ் நன்னா சுத்திப் பாத்தாச்சு" என்றார் மாலி.

"என்ன கண்டுபிடிச்சீங்க? விக்கிரகங்களுக்கு மதிப்புண்டா? போய்ட்டு வந்த செலவுக்காவது தேறுமா?" என்றாள் ஜெயா.

"இந்த விக்கிரக வெண்கலத்தோட தரம், வடிவம், வேலைப்பாடு, மேலே படிந்திருந்த மண் எல்லாம் நாலஞ்சு இடத்துல சோதிச்சுப் பாத்தோம். இந்த விக்கிரகங்கள் முன்னூறு வருஷத்துக்கு முன்னால உருவானவைனு தீர்மானமா சொல்றாங்க. நான் என்ன சொன்னேன் உங்கிட்டே?"

"தியாகராஜர் ஆராதிச்சுத் தொலைச்ச விக்கிரகங்களா இருக்கும்னீங்க. தியாகராஜர் பொறந்தே முன்னூறு வருஷமாகலியே இன்னும்.."

"அதனாலென்ன.. தியாகராஜருக்கு இந்த விக்கிரகங்கள் கிடைச்சிருக்கலாமே? பரம்பரைல வந்திருக்கலாம். அவரோட அப்பா பெரிய ராமபக்தர் தெரியுமோ?"

"சரிதான்.. எனக்கென்னவோ சாதாரணமாப்படுது.. பிடிக்கலேனு கூட சொல்வேன். உள்ளே வைக்கறதா இருந்தா சுத்தம் பண்ணி வைங்க"

"அடியே. இந்த மண்ணுக்கும் மவுசிருக்குடி. முன்னூறு வருஷத்துக்கு முந்தின சேறு. சாயில் கம்பொசிசன் அப்புறம் அசிடிடி டெஸ்ட் பண்ணித்தான் தொன்மையைக் கண்டுபிடிச்சோம். விக்கிரகத்தோட சேர்ந்தது மண்.. மண்ணோட சேர்த்துத்தான்.."

"இந்த சேத்து மண்ணோட எல்லாம் உள்ளே வைக்காதீங்க. கறாரா சொல்லிட்டேன். ஏதாவது கோயிலுக்குத் தானமா கொடுங்க.. இல்லின்னா பழையபடி மண்ணோட மண்ணா போகட்டும், ஆத்துலயே விட்டுறுங்க"

"ஜெயா!" இரைந்தேன். "இது எவ்வளவு புராதனமானதுனு தெரிஞ்சுமா இப்படிப் பேசுறே?"

"ரைட். நாம கூடத்தான் புராதனமானவங்க. நம்ம ரெண்டு பேத்துக்கும் இடையே நூத்தம்பது வருஷமாகப் போகுது. யார் நம்மளைத் தலைல தூக்கி வச்சுட்டிருக்காங்க? ஏதோ ஆத்து மண்ணுல புதைஞ்சு அந்த மழைல மேலே வந்திருக்கலாம்னு சொல்றத ஏத்துக்கிட்டாலும் ஒரேயடியா லெப்டுல போறீங்களே?"

"ஏன் இருக்கக் கூடாது ஜெயா? பெரியவர் மாதிரி நான் பார்த்த உருவம்.. கைல ஏதோ வச்சிருந்தார்னு சொன்னனே.. விக்கிரகங்கள் தான்.."

"ஆவி மாதிரி மறைஞ்சுட்டார்னு சொன்னீங்க.. விக்கிரகங்கள் கரைஞ்சா போச்சு?"

"அப்புறம் அந்த ஹம்மிங்.. எத்தனை ஏக்கத்துடன் கூடிய இனிமையான பாட்டு! அந்த பாட்டோட வரிகளைச் சொன்னேன் இல்லையா? உலகத்தைக் காக்கும் பராக்கிரம ராமனை என்றைக்குப் பார்ப்பேன்னு தியாகராஜர் ஏக்கத்தோடு பாடின பாட்டு..."

"இப்ப என்னதான் சொல்றீங்க?"

"அந்த விக்கிரகங்களை என்னிடம் சேர்க்க தியாகராஜர் வந்து பாடியிருக்கலாமே? அரூபத்துல வந்தது ஒரு ஸிம்பாலிக்... அடையாள நிகழ்வா இருக்கலாம். ராம விக்கிரகங்கள் மேலெழுவது தெரிந்து இந்த விக்கிரகங்களைப் பராமரிக்க முடியாமல் போன ஏக்கத்தில் இதை என்னிடம் தந்திருக்கலாமே?"

"உங்க கிட்டே ஏன் தரணும்? இத்தனை வருசமா இந்தக் கவலை வரலியா தியாகய்யருக்கு?"

"தெரியலியே!"

"என்னமோ காரணமாத்தான் அத்திம்பேருக்கு இந்த விக்கிரகங்கள் கிடைச்சிருக்கு" என்றார் மாலி.

"நீ என்ன சொல்றே?"

"இல்லே அத்தே.. தியாகய்யர் பாரத்வாஜ கோத்ரம்.. நீங்க பொறந்ததும் பாரத்வாஜ கோத்ரம்.."

"அப்போ எங்கிட்டே இல்லே கொடுத்திருக்கணும்? அத்திம்பேர் கண்ல படுவானேன்? விக்கிரகங்களைத் தருவானேன்?"

"இப்ப நீங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டாலும் பொறந்த கோத்ரம்.. ஒரே வம்சாவளிக் குடும்பம்னு ஆறதில்லையா?"

"உங்க ரெண்டு பேர் உளறலுக்கு ஒரு அளவேயில்லைனு ஆறது" என்று ஜெயா கடுப்புடன் எழுந்து சமையலறைக்குச் சென்றாள்.

"உளறலா இருந்தா என்ன? ரெண்டு நாளா தொடர்ந்து என் கண்ணுல பட்ட பெரியவர்.. அப்புறம் நம்மளையே முறைச்சுட்டு இருந்த அந்தப் பூனை... நான் விக்கிரகங்களை எடுத்துச் சுருட்டி உள்ளே கொண்டு போறதை பாத்துட்டுதானே தாவிப் போச்சு? நம்ப முடியாம இருந்தாலும் நடந்துச்சா இல்லையா? பூனைலந்து எதுவுமே அதுக்குப் பிறகு நம்ம கண்ல படலே இல்லையா?" என்றேன்.

ஜெயாவின் வீறல் கேட்டு அலறிப்புடைத்து அடுக்களைக்கு ஓடினோம்.

சமையல் மேடைக்கும் அலமாரிக்கும் இடையே இரண்டடி இடைவெளி உண்டு. தண்ணீர் அல்லது அரிசிப்பானை வைப்பதற்காக இருந்திருக்கலாம் அந்தக்காலத்தில். அந்த இடத்தில் மரச்சட்டங்களை வைத்துக் குறுக்கே பலகை போட்டு ஷெல்ப் போல் வைத்திருந்தோம் நாங்கள். சில வாசனைப் பொருட்கள், சமையல் புத்தகங்கள் என்று சிறிதாக அடுக்கி வைத்திருந்தோம். குனிய முடியாதென்பதற்காகக் கீழே எதுவும் வைக்கவில்லை. அங்கே சுவரோரமாக சுருட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தது பூனை. நாங்கள் முன்பு பார்த்த அதே பூனை!

ஜெயா மறுபடி அலறினாள். "இது இங்கே எப்படி வந்தது?"

"கதவைத் திறந்து வச்சிருப்பே.."

"கிடையவே கிடையாது. நேத்து சாயந்திரம் காபி கலந்து சாப்பிட்டேன். இன்னிக்கு காலைல நீங்க வருவீங்கன்னு இட்லி மாவு கரைச்சு வச்சேன். அப்பல்லாம் இந்தப் பூனை இங்க இல்லவே இல்லை" என்றாள் ஜெயா.

"கண்ல படலேனு அத்திம்பேர் சொன்னதுமே பூனை ப்ரத்யக்ஷமாறதே? விசித்ரமா இல்லே இருக்கு?!"

இம்முறை நான் அவர்களை அடக்கினேன். "சும்மா இருங்க ரெண்டு பேரும். பூனையாவது தீடீர்னு தோண்றதாவது! பாரு. இட் இஸ் ரியல். நிஜப்பூனை. அஞ்சறிவுப் பிராணி. கதவைத் திறந்து வச்சிருப்பே. இல்லின்னா ஜன்னல். ஏதாவது ஒரு வழியில வந்திருக்கும். விரட்டிட்டா போச்சு" என்றபடி அருகே சென்று பூனையை விரட்டினேன்.

பூனை பாய்ந்து ஓடவில்லை. மாறாக எழுந்து சோம்பல் முறித்தது. பிறகு எங்களைப் பார்த்து நின்றது. கம்பீரமான, அழகான பூனை. ஏறக்குறைய தங்கக்கலரில் இருந்தது. இடையே மண் கலரில் சிறு திட்டுக்கள் அதன் தோலழகுக்கு மெருகு சேர்த்தது. மஞ்சளும் கறுப்பும் கலந்த கண்கள். தீவிரமான பார்வை. அருகே சென்றேன். மெள்ளத் தடவிக் கொடுத்தேன். கழுத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் முடிச்சு முடிச்சாக ஒரு மாலை, ஏறக்குறைய புதைந்திருந்தது. "இதோ பாரு.. மாலை. யார் வீட்டுப் பூனையோ.. இடம் தெரியாம ஓடி வந்திருக்குனு நினைக்கிறேன்.. பக்கத்துல தான் இருக்கணும்.. தேடிப்பார்த்துக் கொடுத்துடலாம்" என்றேன்.

ஜெயா இப்போது அமைதியாக இருந்தாள். "பார்க்க நல்லாத்தான் இருக்கு பூனை. ஒரு தட்டுல பால் தரேன். குடிச்சதும் வெளில கொண்டு விட்டுறுங்க". ஒரு சிறு குழித்தட்டில் கொஞ்சம் பால் ஊற்றினாள். பூனையருகே வைத்தாள்.

பூனை பாலைக் குடிக்கவில்லை. ஒரு முறை தட்டை வாசனை பார்த்துவிட்டு பழையபடி இடுக்கிலேயே உட்கார்ந்துவிட்டது.

"நாம இருக்கோம்னு சங்கோஜமா இருக்கோ என்னமோ?" என்றார் மாலி.

சிரித்தேன். "சரி சரி.. அங்கயே இருக்கட்டும். யாராவது வந்து கேட்டா பூனையைக் குடுத்துறலாம்" என்றபடி ஹாலுக்கு வந்தேன்.

ராம விக்கிரகங்களை ஒரு ப்லேஸ்டிக் பைக்குள் வைத்து கண்ணாடி அலமாரிக்குள் தற்காலிகமாக இருக்கட்டும் என்று வைத்தேன். பிறகு எதிரேயிருந்த சோபாவில் உட்கார்ந்தேன். ஜெயா கொண்டு தந்த இட்லியை சாப்பிடலாம் என்று தட்டை எடுக்கத் திரும்பினால்... பக்கத்தில் சோபா ஓரமாகப் பூனை உட்கார்ந்திருந்தது. எதிரே இருந்த விக்கிரகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.

"ஏய்.. பூனை இங்க வந்துடுத்து பாரு!" என்றேன். ஜெயா கவனிக்கவில்லை. மாலியுடன் ஏதோ பேசியபடி இருந்தாள்.

பூனையைப் பார்த்தேன். மறுபடி மெள்ளத் தடவிக்கொடுத்தேன். "உம் பேரென்ன தெரியலியே? யார் வீட்டுப் பூனையோ இங்க வந்து டேரா போடப் பாக்கறியே?" என்றேன்.

எழுந்து சமையலறையிலிருந்து பால்தட்டை எடுத்து வந்து அதன் முன் வைத்தேன். பூனை கவனிக்கவேயில்லை. பொதுவாக நாய்களை விட பூனைகளிடம் பிகு செய்து கொள்ளும் பழக்கம் அதிகம் என்று எனக்குத் தெரியும். என்னவோ மகாராஜா வீட்டு செல்லப்பிள்ளை போல் பூனைகள் நடந்து கொள்ளும். நாயானால் சாப்பாட்டைப் பார்த்ததும் வாலட்டி ரகளை செய்து சுற்றிவர அசிங்கம் செய்து சாப்பிடும். பூனை அப்படியல்ல. அலுங்காமல் குலுங்காமல் சோம்பேறித்தனமாகவும் அதே நேரம் அதிகாரத் தோரணையுடனே எதுவும் செய்யும். வேன்கூவரில் எங்களிடம் ஒரு பூனை சில நாட்கள் இருந்தது. அந்தப் பூனை எங்களை அடிமையாக நடத்தியது என்றால் உண்மை. நினைவு வந்து மறுபடி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

பூனையைத் தடவி "ஏ பொறம்போக்குப் பூனை! போனாப் போறதுனு இடம் கொடுத்து பாலும் கொண்டு வந்தா என்னவோ பிகு பண்ணிக்கிறியே?" என்றேன் உரக்க. என் பேச்சு என்னவோ பூனைக்குப் புரிவது போல்.

பூனை சிலிர்த்துச் சட்டென்று என்னை ஏறிட்டுப் பார்த்த பார்வையில் அதிர்ந்து போனேன்! சட்டென்று கைகளை எடுத்துக் கொண்டேன். பூனை மறுபடி அமைதியானது. எதிரே இருந்த விக்கிரகங்களைப் பார்த்தபடி அமைந்தது.

மறுபடி சோபாவில் அமர்ந்தேன். பூனையைப் பார்த்தேன். விக்கிரகங்களையே பார்த்துக் கொண்டிருந்தது. பால் தட்டை அருகே நகர்த்தினேன். சீண்டவில்லை. விக்கிரகத்தின் மேலேயே பார்வை படிந்திருந்தது.

மென்மையாகப் பாடினேன். நிதி சால சுகமா.. ராமு நி சந்நிதி சேவ சுகமா..

பூனை சட்டென்று எழுந்து உட்கார்ந்தது. என்னைப் பார்த்தது. தலையசைப்பது போல் பாவனை செய்தது.

மனதில் தோன்றியதை அடக்க முடியவில்லை. சட்டென்று எழுந்தேன். என் சேம்சங் நோட்புக்கில் சேமித்திருந்த எம்பி3 ஒலிவடிவ தியாகராஜர் க்ருதிகளை ஸ்பீக்கரில் ஓடவிட்டேன்.

அனுபம குணாம்புதியனி நின்னு...
ப்ரோசேவாரு எவரே...


"நல்ல கீர்த்தனை அத்திம்பேர்" என்றபடி அருகே வந்த மாலியை சைகை காட்டி உட்காரச் சொன்னேன். "என்ன பண்றீங்க?" என்று கேட்ட ஜெயா, நான் மாலியை அடக்குவதைப் பார்த்து "எனக்கு அடுக்களைல வேலை இருக்கு.. நீங்க பூனையைப் பிடிச்சு என்ன வேணா பண்ணுங்க" என்று மறைந்தாள். நான் பொருட்படுத்தவில்லை. பாட்டில் கவனமாக இருந்தேன்.

தயரா நி தயரா நி தாசரதி ராமா...
எவரி மாட வின்னாவோ...


ஒவ்வொரு பாட்டிலும் அனுபல்லவியும் முதல் சரணமும் மட்டும் பாட விட்டு மாற்றினேன். பூனை நிமிர்ந்து உட்கார்ந்து அசைவேயில்லாமல் ஒன்றிப்போனது.

தொடர்ந்து ஒரு சினிமாப் பாடலை வைத்தேன்.

..என்னை விட்டு ஓடிப் போக முடியுமா, இனி முடியுமா?

பூனை சாதாரணமாகக் கீழே இறங்கி வாசலை நோக்கி நடந்து சற்றுத் தள்ளி உட்கார்ந்தது. ஒரு வேளை சீர்காழி டூயட் பிடிக்கவில்லையோ? சமீபப் பாடல் ஒன்றை மாற்றினேன்.

.. தெரியாத பறவை அழைத்ததே. மனமும் பறந்ததே.. இதயமும்.. ஹோய்..

பூனை கண்டு கொள்ளவேயில்லை. மறுபடி மாற்றினேன்.

..ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள்.. அவள் வந்துவிட்டாள்

பூனை என்னைக் கோபமாக முறைப்பது போல் பார்த்து விட்டு வேகமாக நகரப் பார்த்தது. சட்டென்று மாற்றினேன்.

எந்த வேண்டுகொண்டு ஒ ராகவா.. பந்தமேலரா..

பூனை சடாரென்று திரும்பி ஒரே தாவலில் சோபாவில் ஏறி என்னருகே உட்கார்ந்தது. பாடலை சிறிது ஓடவிட்டு மாற்றினேன்.

ஸம்வேர்.. பியான்ட் த ஸீ.. ஸம்வேர்.. வெய்டிங் பார் மீ..

பூனை என்னைப் பரிதாபமாகப் பார்த்து மறுபடி கீழே இறங்கியது.

ஆஜ் மத்ஹோஷ் ஹுவா..

பூனை திரும்பிப் பார்க்கவில்லை.

பஜ கோவிந்தம்..
கந்தா வா வா..


பூனை சமையற்கட்டுப் பக்கம் ஓடி மறைந்தது.

"என்ன பண்றேள் அத்திம்பேர்? பூனையை விரட்டுறதுக்கு சிரமப்படறேள் போலருக்கே? ஒரு கட்டையால தட்டினா ஓடிட்டுப் போறது.."

"இல்லே மாலி. பூனையை வரவழைக்கறேன்.."

"என்ன சொல்றேள்?"

"பூனை இங்க இருக்கா?"

"இல்லையே.. ஓடிப்போச்சே.."

"இப்போ வரும் பாரு" என்றேன். மறுபடி தியாகராஜர் க்ருதி ஒன்றை ஒலிக்க விட்டேன்.

ஜெய ஜெய ஸ்ரீ ரகுராமா..

அரை நொடியில் சொல்லி வைத்தாற்போல் பூனை என்னருகே உட்கார்ந்தது கண்டு மாலி ஆடிப் போனார். நான் ஜெயாவை அழைத்தேன்.

"என்னத்துக்கு சத்தம் போடறிங்க?" என்றபடி வந்தாள்.

"இந்தப் பூனை யார் வீட்டுப் பூனையும் இல்லே"

"அதுக்காகவா ஜெயானு இத்தனை கூச்சல்?"

"இந்தப் பூனை யாரு, எதுக்காக வந்திருக்குனு எனக்குத் தெரிஞ்சு போச்சு.."

ஜெயா என்னை முறைத்தபடி நின்றாள்.

"இந்தப் பூனை.. இல்லை இல்லை.. இது பூனையில்லை.. பூனை வடிவத்துல நம்ம வீட்டுக்கு வந்திருக்கறது.. அசல் தியாகப்பிரம்மம். தியாகராஜரே தான்" என்றேன்.


[தொடரும்] ➤➤

50 கருத்துகள்:

  1. கரடி விடறார் என்று சொல்வார்கள். நீங்கள் பூனை விடுகிறீர்கள். நல்ல ஆராய்ச்சி. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ! இதென்ன? நான் பின்னூட்டத்தின் நடுவில் 'நல்ல ஆராய்ச்சி' என்று டைப் பண்ணவேயில்லை, அந்த வரி எப்படி வந்தது? ராமா!

      நீக்கு
    2. க்ருஷ்ணகுமார்மே 18, 2015

      தமாஷா எழுதுறீங்க மிஸ்டர் ஸ்ரீராம்.

      நீக்கு
    3. பாராட்டுக்கு நன்றி அ. க்ருஷ்ணகுமார்.

      :)))))

      நீக்கு
  2. அப்பாதுரையின் கதைகளில் இந்த அமானுஷ்யம்தான் ஸ்பெஷாலிடி. சுவாரசியம்

    பதிலளிநீக்கு
  3. கதை கற்பனை எல்லாம் அபாரம்.

    இருந்தாலும்
    ஒரு விஷயம் சொல்லலே அப்படின்னா
    சுப்பு தாத்தா தலை வெடிச்சுடும்.

    1. எனக்குத் தெரிந்த வரையில்,
    தியாகப்பிரும்மம் பூஜை செய்த
    ராம லக்ஷ்மண, சீதை, ஹனுமார்
    விக்ரகங்கள் எல்லாமே இன்னமும்
    தஞ்சாவூர் தெற்கு வீதி, வரகப்பையர் சந்து லே
    மூன்றாவது வீட்டிலே நித்யபடி பூஜை புனஸ்காரம்
    எல்லாம் நடக்கறது. திருவையாறு தியாகப்பிரும்ம ஆராதனை
    சமயத்தில், வெளியூர் லேந்து கச்சேரிக்கு வருபவர்கள் எல்லாருமே
    இங்கும் வந்து விக்ரஹங்களை தரிசித்து விட்டு போகிறார்கள்.

    2. கதை போக்கிலே போனா...

    எங்க அம்மா வழியும் பாரத் வாஜ கோத்ரம் தான்.

    எத்தனையோ தரம் அந்த ஆத்திலே இறங்கின
    எனக்கு தான் நியாயமா கிடைச்சு இருக்கணும்.

    இருந்தாலும்,
    பகவான்
    நம்புபவர்களை விட,
    நம்பாதவர்களுக்குத் தான்
    ப்ரத்யக்ஷம் ஆகிறார்.

    இருந்தாலும் விக்ரஹம் சிம்பாலிக் தான்.
    என்கிற உண்மை தெரிந்ததால்,

    என்னுடைய க்ளைம் பெட்டர் ஆக இருந்தாலும்
    போனால் போகட்டும், சாரே வச்சுண்டு
    ஸ்ரத்தையா பூஜை எல்லாம் பண்ணட்டும்.

    ராம நின்னே நு ப்ரோவரா.

    சுதா.

    அதான்
    சுப்பு தாத்தா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றது வாஸ்தவம் சார். இருந்தாலும் ஒரு கதை.
      தியாகய்யர் தொலைத்த விக்கிரகங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதற்கான சாத்தியங்கள் அதிகம். தஞ்சாவூர்(?) மகாராஜா ஆஸ்தானத்துக்கு கொடுத்த அழைப்பைப் புறக்கணித்து 'நிதி சால சுகமா'னு பாடினதாலே கோபத்தில் சகோதரர் சபேசன் தியாகய்யரின் விக்கிரகங்களை காவிரியில் எறிந்த கதை தெரிந்திருக்கும். தியாகய்யர் உடனே க்‌ஷேத்திராடனம் கிளம்பி கோவில் கோவிலாக ராமா என்றபடி அலையத் தொடங்குகிறார். ராமரே அவருக்கு விக்கிரகங்களைக் காட்டிக் கொடுத்ததாகக் கதை சொன்னாலும் தொலைத்த இடமும் கிடைத்த இடமும் வேறே இல்லையா? இராம மேஜிக்கா இருக்கலாம். இல்லை, இவர் மேலே இருந்த அபிமானத்தாலே வேறே யாராவது ஒரு செட் விக்கிரகங்களை இவர் போற வழியில நைசா போட்டிருக்கலாம். 
      இன்னொன்று. தியாகய்யர் ஹனுமாரை ஆராதிக்கவில்லை என்று ஒரு கருத்து உண்டு. அவர் பாடல்களில் ஆஞ்சநேயர் இடம்பெறவில்லை என்கிறார்கள். (ஆராய்ச்சி பண்ண எனக்கு அறிவும் நேரமும் குறைவு.) அதனால் அவர் ஆராதிச்ச விக்கிரகங்களில் ஆஞ்சனேயர் உண்டா என்ற சந்தேகம் எழலாம் (at least எனக்கு ;-).
      மூன்றாவது தியாகய்யர் தன் வாழ்நாளில் விக்கிரக தானமும் செய்திருக்கிறார். அவருடைய சீடரான குப்பையருக்கு விக்கிரகம் பரிசளித்த கதையுண்டு. ஆக, அவர் காலத்தில் பல செட் விக்கிரகங்கள் வைத்திருந்த சாத்தியம் அதிகம். (நான் சொன்னா கேக்கணும். அப்புறம் கதை எப்படி எழுதுறதாம் ;-).

      ஹிஹி.. குப்பையரின் வம்ச வரிசையில் நம்பள்கி ரத்தமும் ஓடிச்சுனு என் அம்மா வழித் தாத்தா நிறைய கதை விடு..சொல்வார். (இதையாவது நம்பணும்).

      நீக்கு
    2. ஹிஹி ... உங்களுக்குத் தான் கிடைச்சிருக்கணும்.. அடுத்த வாட்டி நல்லா செக் பண்ணிடுங்கோ.

      நீக்கு
    3. நம்பாதவாளுக்கு ப்ரத்யக்‌ஷமாகி க்யா ப்ரயோஜனம் சார்? பகவானுக்கு டைமும் மேக்கப்பும் விரயமில்லையோ?

      நீக்கு
    4. பாராட்டுக்கு நன்றி சார். சர்வம் ரோல்ட் டால் அர்ப்பணம்.

      நீக்கு
    5. பாராட்டுக்கு நன்றி.//

      பாராட்டு என்றால் நீங்க மீன் பண்ணுவது ?

      பார் (உலகு) ஆட்டுவது = நம்மை தொட்டிலிட்டு ஆட்டுவது போல் சுகமாக சொற்களினால் சொர்க்கம் காட்டுவது.



      bar ஆட்டுவது. =
      இதுக்கு எக்ச்ப்லனேஷன் தேவை இருக்காது.

      இதுலே எது ?

      எனிவே,
      ஈட்டம் வேண்டி இசை வேண்டா மாந்தர் தம் தோற்றம் நிலக்குப்பொறை'
      என்ற வள்ளுவ வாய் மொழி படி,
      என்ன தான் அமேரிக்கா போய், சிடிசன் ஆகி,
      பல கோடி டாலர் செலவிலே வீடு கட்டி,
      சுகமா வாழ்ந்தாலும்

      நம்ம நாட்டுலேந்து நாலு பேரு
      சபாஷ் அப்படின்னு
      சொல்வதற்கு
      மனசு ஏங்குரது இல்லையா !!

      இன்னொரு விஷயம். அப்பவே சொல்லனும்னு நினைச்சேன். வயசாயிடுச்சா.. மறன்னு போயி..

      //சில சமயம் தெருநாய் ராத்திரில ஊளையிடறதும் இப்ப வர சினிமா பாட்டு மாதிரியே இருக்கு//

      சரிதான்.
      சுப்பு தாத்தா
      www.subbuthatha72.blogspot.com

      நீக்கு
    6. இந்த பின்னு pinறீங்களே.. எனக்கு வேணும் வேணும்.

      நீக்கு
    7. //நம்பாதவாளுக்கு ப்ரத்யக்‌ஷமாகி க்யா ப்ரயோஜனம் சார்? பகவானுக்கு டைமும் மேக்கப்பும் விரயமில்லையோ?//

      என்ன அப்படி ஒரு கேள்வி மாங்காய் புளிச்சதோ வாய் புளிச்சதோ அப்படின்னு கேட்டுபிட்டீக...!!!

      நீங்க எழுத ஆசைப்பட்டதோ அந்த ஏதோ டால் கதை. அதை ஒட்டி எழுதணும். மிஞ்சி மிஞ்சி போனா அந்த காதிலே ஏதோ ஒன்னு இரண்டு உலொகப்பொருள், பழங்காலத்து ஐடால்ஸ் அப்படின்னு தான் சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கு.

      ஆனா நீங்க ராம லக்ஷ்மண, சீதை விக்ரஹம் ஏன் சூஸ் செஞ்சீங்க? எது உங்களை அந்த டால் கதையோட தியாகராஜர் விட்டுவிட்டு போன ராம லக்ஷ்மண சீதை அனுமன் விக்ரகங்கள் ஞாபகம் வந்து, அது பத்தி எழுதணும் அப்படின்னு தோன்றியது ?

      நானும் பார்த்தேன். ராமா ராமா அப்படின்னு இந்த இரண்டாம் பகுதிலே 11 தரம் அந்த ராமன் பெயரை டைப் அடிச்சு இருக்கீங்க...

      இருக்கட்டும். இதே இந்த விக்ரஹம் என்னோட, இல்ல, கீதா அம்மா கையிலே கிடைச்சதுன்னா என்ன செஞ்சு இருப்போம் ? மாக்சிமம்
      அதற்கு ஒரு இரண்டு நாள் பூஜை செஞ்சுட்டு, அத கோவில் எதுனாச்சும் பாத்து கொண்டு போய் கொடுத்துட்டு,

      ராமா, என்னாலே சரீரத்தினாலே இதற்கு மேலே உபாசனை ச்ரமம் பண்ணிக்க முடியாது. எனக்கு ஹார்ட்,ப்ராப்ளம், முட்டி வலிக்கிறது.

      அப்படின்னு சொல்லிட்டு, இரண்டு காயத்ரி கூட பண்ணிட்டு போயிருப்போம். ராம நவமி க்கு இரண்டு வெல்ல அச்சு கூட பானகத்துலே போட்டுட்டு, அப்பாடா என்று விடுதலை ஆகியிருப்போம்.

      ஆனா, உங்களுக்கு என்னாச்சு அப்படின்னு நீங்களே பாருங்கோ..

      உடனே அதைப் பத்தி ஆராய்ச்சி செஞ்சு, அந்த விக்ரஹம் யார்கிட்டே முதல்லே வந்தது, எப்படி தொலஞ்சது, அப்படின்னு மட்டுமல்ல,அதுலே அனுமன் இருக்கானா இல்லையா என்பது முதற்கொண்டு பாத்திருக்கீங்க...

      என்ன ! அனுமன் உங்க முன்னாடி பூனையா வந்திருக்கான். அவன் ராமன் இருக்கும் இடமெல்லாம் இருக்கிறவன் இல்லையா...

      அது மட்டும் அல்ல, ராமனைப்பாடும் தியாகப்பிரும்மத்தின் கீர்த்தனைகள் எந்தெந்த இடத்திலே எதை எதை சொல்லணும் அப்படின்னு அதை கன ஸ்ரத்தையா படிச்சு ,

      அங்கங்க கோட் பண்ணனும் அப்படின்னா,

      என்ன காரணம் !!

      இது முதல் படி. பகவான் நாஸ்திகர்களுக்கு முன்னாடி தான் இமீடியட்டா ப்ரத்யக்ஷம் ஆகிறான்.

      வழக்கமா, காபி குடிக்கிறவா கிட்ட நம்ம காபி பெருமைய பேசுவோமா என்ன ?

      வழக்கமா, பாடா ஷூ வாங்கிற போடறவங்க கிட்ட, ஷூ போட்டுண்டு போகத்தான் ஆகணும் என்று சொல்வாங்களா என்ன ?

      உங்ககிட்ட ஒரு பகவத் சிந்தனையை உண்டு பண்ணினது ராம நாமம்.

      ராம சீதை லக்ஷ்மண விக்ரஹம் அதற்கு ஒரு ஹேது. அவ்வளவு தான்.

      உங்களுக்கு இந்த ஜன்மத்திலே ஒரு கொடுப்பினை இருக்கு.

      ராமனைப் பத்தி எழுதுவதே ராமன் கொடுத்த வரம் தான்.

      அட் லீஸ்ட் இதற்காவது கீதா மேடம் உங்களுக்கு என்னை விட கரெக்டா எடுத்து சொல்வாங்க அப்படின்னு நினைக்கிறேன்.

      அது எல்லாம் இருக்கட்டும்.

      நீங்க காக்னிடிவ் பிஹேவியர் தெரபி அப்படின்னு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?

      ஒரு பூனையை எப்படி உங்கள் வழிக்கு கொண்டு வரணும் அப்படின்னா, அதற்கு இந்த சி.பி.டி டெக்னிக் படி செய்யணும்.

      அத விவரமா இன்னொரு சமயத்திலே சொல்றேன்.

      சுப்பு தாத்தா.
      www.subbuthatha72.blogspot.com

      நீக்கு
    8. விபரமாக் கமென்ட் போட்டிருந்தேன். அநியாயத்துக்குக் காக்காய்/அல்லது தியாகய்யர்/ அல்லது பூனையாய் வந்த அனுமன்? ராமன்? யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்களே! :)

      //அட் லீஸ்ட் இதற்காவது கீதா மேடம் உங்களுக்கு என்னை விட கரெக்டா எடுத்து சொல்வாங்க அப்படின்னு நினைக்கிறேன்.//

      நிறையவே எழுதி இருந்தேன் அதே மாதிரி மறுபடி வருமானு தெரியலை! இருந்தாலும் முயன்று பார்க்கிறேன். :(

      நீக்கு
    9. அப்பாதுரை சமீப காலமாக ராமனைப் பத்தியே நினைச்சுட்டு இருக்கார். வேறே நினைப்பே இல்லை. எனக்கும் உங்களைப் போல் தான் தோணியது. பகவான் நாத்திகர்களுக்குத் தான் உடனடியாகக் காட்சி தரான். அது எத்தனை உண்மை! இங்கேயும் அப்பாதுரை ராமனை நினைத்து உருகி இருக்கார். (ஹிஹிஹி) ராமா, ராமானு அவர் 24 மணி நேரமும் அவன் நினவாவே இருக்கார். கொடுத்து வைச்சவர். என்னை மாதிரி ஆட்களெல்லாம் இந்த உலக நினைவுகளிலே ஆழ்ந்து போய் எப்போவானும் தான் ராமனை நினைக்கிறோம். இந்த மாதிரி ராமனை நினைப்பதற்கும் பூர்வ ஜன்மக் கொடுப்பினை வேணும்.

      அப்புறமா என்னிடம்/எங்களிடம் இந்த விக்ரஹங்கள் கிடைச்சதுன்னா கோயிலிலே எல்லாம் கொண்டு போய்க் கொடுக்க மாட்டேன்/மாட்டோம். என்னால்/எங்களால் முடிஞ்சதை அவனுக்கும் கொடுத்து ஆராதனை பண்ணி வீட்டிலேயே வைச்சுப்பேன்./வைச்சுப்போம். எனக்கப்புறம்/எங்களுக்கு அப்புறமாப் பையருக்கு அந்த உரிமை போய்ச் சேரும்படியா ஏற்பாடு பண்ணிடுவேன்./பண்ணிடுவோம். முட்டிவலி, நோய்னு வந்தால் நான் சாப்பிடும் காஃபியையாவது ராமனுக்குக் கொடுப்பேன். அட பால் கூடவா வாங்காமல் இருக்கப் போறோம்? அந்தப் பாலை அப்படியே ராமனுக்குக் காட்டினால் வேண்டாம்னா சொல்லப் போறான்? விக்ரஹங்கள் எங்களிடமே தான் இருக்கும். :)

      நீக்கு
    10. ஆனால் விக்ரஹங்களின் தொன்மையைக் கட்டாயமாய் ஆராய்ந்து பார்த்திருப்போம். ஏனென்றால் விக்ரஹங்களின் காலம் தெரியணுமே!

      நீக்கு
    11. சுவாரசியமான கருத்துக்கள். ஹிஹி.. ராம அருள் அப்படியே பிச்சிகினு கொட்டுது. என்ன பண்றதுனே தெரியலே.

      circular fatalism என்று ஒரு வகை வாதம், சித்தாந்தம் உண்டு. வார இறுதி வரை நினைவும் பொறுமையும் இருந்தால் எழுதுகிறேன். சுருக்கமாக:
      நான்: அம்பாளாவது கிம்பாளாவது, அதெல்லாம் யாரும் கிடையாதும்மா
      என் அம்மா: உன்னை அப்படிச் சொல்ல வைக்கிறதும் அந்த அம்பாள் தான்
      there you go!

      நீக்கு
  4. // தெருநாய் ராத்திரில ஊளையிடறதும் இப்ப வர சினிமா பாட்டு மாதிரியே... // ஹா... ஹா... உண்மை...

    சுவாரஸ்யத்தை தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. First of all thank you very much for posting the second part very shortly which was totally unexpected one. Secondly, for comparing the today's cine songs with the weeping sound of dogs.

    பதிலளிநீக்கு
  6. //பத்து நொடி பித்தானைத் தட்டினேன். ஜெயாவின் குரலைக் காணோம். அப்பளத்தைப் புரட்டிப் போட்டு மறுபடி பத்து நொடிப் பித்தான். முறுகலாகச் சுட்டிருந்த அப்பளத்தில் ஒரு ஸ்பூன் நெய்யைத் தடவி,.....//
    சரியா வரலியே...ஒரு வேளை அப்பளத்தில் நெய் தடவினப்பரம் தான் மைக்ரோ ஓவன் லே வைக்கணுமோ என்னவோ...
    ஒரு வேளை அப்பளம் அப்படின்னா உளுந்து அப்பளம் ஆக இருக்குமோ.!!
    நம்ம தெரியாத்தனமா அரிசி அப்பளத்தை ஒவன்லே வச்சுட்டு அவஸ்தை படரோமோ..!!
    மிளகு அப்பளத்தில் நெய் தடவியும் வெச்சுப் பார்த்தேன்.
    தெரியலேன்னு ராமா...
    எந்தரோ மானுபாவோ...அந்தரிகி
    அப்பளத்திற்கு நெய் தடவி ஒவன்லே வைக்கிறது எப்படின்னு
    ரா ரா ராமா...

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்ளோ டெக்னிக் இருக்கா?!
      உளுந்து அப்பளம்னு நினைக்கிறேன் (அம்பிகா அப்பளம்) மைக்ரோ வேவ்ல அப்படியே சுட்டு, அப்புறம் ஒரு சின்ன ஸ்பூன் நெய் விழுதை சுட்ட அப்பளாத்துல தடவி.. ஆகா..

      நெய் தடவி மைக்ரோவேவ்ல வைக்கக்கூடாதுனு நினைக்கறேன். ட்ரை பண்ணதில்லே.
      அரிசி அப்பளாம் மிளகு அப்பளாம் (கேள்விப்பட்டதே இல்லையே) எல்லாம் என்ன ஆகும் தெரியலியே.. அரிசி அப்பளாம் ட்ரை பண்ணதில்லே. வடாம் ட்ரை பண்ணியிருக்கேன். எண்ணையில பொறிச்ச மாதிரி வராதுன்னாலும் சாப்பிட நல்லாவே இருக்கும். நெய் தடவி அப்பளத்தை ஒவன்ல வைக்கிறதா இருந்தா எதுக்கும் தள்ளி நின்னு ட்ரை பண்ணுங்க... இல்லின்னா மோகன்ஜி, ஸ்ரீராம் யாரையாவது கூப்பிட்டு நைசா விஷயத்தை சொல்லாம ட்ரை பண்ணச் சொல்லுங்கோ.

      நீக்கு
    2. அவன்ல அப்பளம் பத்து நொடிகளில் தயாராவது இல்லை - எங்கள் வீட்டு அவனில்! ஒரு நிமிடம் வைக்க வேண்டி இருக்கும். அரிசி அப்பளம் அலுத்து விட்டது!

      நீக்கு
    3. ஜவ்வரிசி வடாம் மைக்ரோவேவ்ல சுட்டா சகிக்காது. சாதாரண வடாம் ஓரளவுக்கு நல்லாவே இருக்கும்.

      நீக்கு
    4. அரிசி அப்பளாம் அலுத்து விட்டதா! ஏன் சொல்லமாட்டீங்க.

      நீக்கு
    5. உண்மைதான். உங்களுக்கு அங்கு அது அதிசயப் பண்டம்! வருடத்துக்கொருமுறை வந்து கவர்ந்து செல்ல வேண்டியிருக்கும். இங்கு இப்போது கிடைக்கும் அ.அ. முன்பு போலான ருசியில் கிடைப்பதில்லை ன்பது என் அபிப்ராயம். ரொம்பத் தடிமனாய், காரமே இல்லாமல்... போர்!

      நீக்கு
    6. எந்த அப்பளமாக இருந்தாலும் நெய்யோ, தே.எண்ணெயோ தடவி இருபது நொடிகள் வைத்திருந்தால் போதும். திருப்பி எல்லாம் போட வேண்டாம். வடாத்தை விட இலை வடாம் மைக்ரோவேவில் நன்றாக வரும். நெய் தடவிட்டு அவனை விட்டுத் தள்ளி எல்லாம் நிற்க வேண்டாம். பக்கத்திலேயே இருக்கலாம். ஒண்ணும் ஆகாது. பத்து வருஷங்களுக்கும் மேலே அவனில் அப்பளம் சுட்டுப் பார்த்தாச்சு! :) அப்பாதுரைக்கு இது சகஜமா இல்ல இருக்கணும்! :)))))

      நீக்கு
    7. அரிசி அப்பளம் இப்போல்லாம் நல்லா இல்லை தான்! உளுந்து அப்பளம் மட்டும் என்ன வாழ்ந்தது? கல்லிடைக்குறிச்சியிலேயே வாங்கிப் பார்த்தாச்சு! மோசம் தான். இங்கே ஒருத்தர் கொடுக்கிறார் உளுந்து அப்பளம். சுமாராக இருக்கிறது.

      நீக்கு
    8. இன்றைக்கு இந்த ப்லாக் எழுதியதன் salvation கிடைத்தது.
      அப்பளத்தில் நெய் தடவி மைக்ரோவேவ் செய்தேன். my goodness! இத்தனை அற்புதமாக பொறிச்ச அப்பளாம் போலவே வருமென்று இத்தனை நாள் தெரியாமல் போச்சே! வீணாக்கியிருக்கிறேனே இத்தனை நாட்களை!

      நீக்கு
    9. அப்பள் அனுபவம் ஏற்படுத்திக் கொடுத்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. நன்றி. மொறுக் மொறுக்.

      நீக்கு
    10. //இன்றைக்கு இந்த ப்லாக் எழுதியதன் salvation கிடைத்தது.//


      //என் அம்மா: உன்னை அப்படிச் சொல்ல வைக்கிறதும் அந்த அம்பாள் தான்
      there you go!//
      எல்லாமே அந்த ராமனின் கிருபை. அருள்.

      இன்னிக்கு நீங்க எழுதியது எல்லாமே
      மிளகு ரசம் இல்லை.
      நீங்க குடிச்ச அனுபவிச்ச ராம ரசம்.
      pibare rama rasam.
      www.youtube.com/watch?v=j50rnetVGJs

      Jai Shri Ram.

      Sri Rama Rama Ramethi Rame RaamE ManoramE
      Sahasra nama thasthulyam sri rama naama varaanane.

      subbu thaththa.



      நீக்கு
  7. அரிசி அப்பளாம் சாப்பிட்டே வருஷக்கணக்காச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்ன அப்பளாம் ?

      அப்பளம் . அப்பளாம் இல்லை.

      அப்பளத்தில் பல்வகை உண்டெனவெ தொல்பொருள் ஆராய்ச்சி பல கூறுமாம்.

      அரிசி, உளுந்து இவைதான்
      அப்பளத்தின் அடிப்படைப் பொருள் எனினும்
      மிளகு, சீரகம், பூண்டு, சுக்கு கலந்த
      மிகச் சுவைக்கும் வகைகளும்
      மாம்பலம் அயோத்யா மண்டபம் அருகே ..
      சாதிக்காய், லவங்கம், பட்டை உடன்
      கிராம்பின் காரமும் கலந்த
      ஹல்திலால் தயாரிப்பு
      ஹெவன்ஸ் இங்கு தான் என்ச்சொல்லுமே !!

      அடடா !
      அயோத்தி ராமனின் கதை
      அப்பளத்திற்கு உருண்டு சென்றதோ !!
      அந்த ஆவியாய் வந்த தியாகப்பிரும்மமும்
      அப்பளத்தின் வாடை நுகர்ந்து தான்
      வந்திருப்பாரோ !!

      ஸ்வாமி...
      பூனை வந்தது தியாகராஜ கீர்த்தனை கேட்க அல்ல!!
      தி.நகர். அப்பளம் தனக்குக் கிடைக்குமோ என்ற நப்பாசை தான்.
      பூனை உங்கள் பிரமை எனச் சொல்ல மாட்டேன்.
      மாயையின் மறுவடிவோ !!
      கீதா மேடம் தீர்ப்பளிப்பார்.
      மோகன்ஜி என் ஐயம் தீர்ப்பார்.

      சுப்பு தாத்தா

      நீக்கு
    2. ஆஹ்ஹா.. பாலுக்குப் பதில் அப்பளமும் நெய்யும் தந்திருந்தால் கதையே மாறியிருக்குமோ?

      நீக்கு
    3. ஆஹா, என் மண்டையையும் உருட்டியாச்சா? நானெல்லாம் தீர்ப்புச் சொல்றதா? வாய்ப்பே இல்லை! மோகன் ஜி வந்து சொல்லட்டும். :)

      நீக்கு
    4. பம்மல் நாட்களில் பேயோட்டம் தவறாமல் பார்ப்பதுண்டு. அதில் பேய் பிடித்தவர் அப்பளம், தயிர், வெண்ணை இதெல்லாம் கேட்டால் "பாப்பாரப் பேய் பிடிச்சிருக்குது" என்பார் பூசாரி.

      நீக்கு
    5. நீங்க சொல்றதிலே ஒரு ஒமிஷன் இருக்கு.

      பா............பேய் அப்படின்னா
      கும்பகோணம் டிகிரி காபி கண்டிப்பா கேட்கும்.

      (இந்த கமெண்ட் என்னுடைய இல்லாளின் அனுமதியுடன்
      இடப்பட்டது.)

      சு தா

      நீக்கு
    6. www.youtube.com/watch?v=9oOEXnCfCM8
      you may see how one prepares sutta appalam in micro over coated by ghee

      subbu thatha

      நீக்கு
    7. அட்டகாசம்.. அட்டகாசம்.. விழுந்து விழுந்து சிரித்தேன். ரன்னிங் கமெண்டரி வேறே.. தட்டு நடுவுல வைக்கணும்னு சொன்னீங்க பாருங்க.. அது! அப்பளம் (ளாம்னு இனிமே சொன்னா கேளுங்க) பொறிவது பார்க்க நன்றாகவே இருக்கிறது. அவ்வளவு சூடாகவா வருகிறது? கடைசி சீன் பார்த்தால் தான் அனுபவிக்க முடியும். சுபர்ப்!

      நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

      நீக்கு
    8. பதிவுல இணைக்க அனுமதி கொடுங்க சார்.

      நீக்கு
    9. அப்பளம் கம்பெனி பெயர் சரியாகக் காதில் விழவில்லை..

      நீக்கு
    10. Why U need permission?

      This video and the appalam inside is
      all YOURS ...
      TRULY YOURS.
      The company is Haldilal.
      SUBBU THATHA.

      நீக்கு
    11. //அப்பளம் கம்பெனி பெயர் சரியாக காதில் விழவில்லை//

      ஹலோ...
      நாங்கள் தான் அந்த கம்பெனி லேந்து பேசரோம்.
      எங்க பெயரு ஹல்திராம்.
      \
      என்னது ?

      ஹல்தி ராம்.

      காதுலே சுத்தமா விழல்லே.

      ஹல்தி.. ...ராம்...

      ஹல்தி விழரது. அப்பரம் என்ன ?

      ராம்..
      என்ன ?

      ராம்.

      சத்தமா சொல்லுங்க...
      ராம். ராம். ராம்.

      ஊஹும்...சுத்தமா விழலே...

      கவலைப்படாதீங்க...அடுத்த ஜன்மத்திலேயாவது விழட்டும்.

      subbu thatha.

      நீக்கு
    12. ஆமாம்.. ஹல்திலாலா ஹல்திராமா? ஒண்ணு லாலா, இன்னொண்ணு ராமா.. ஹ்ம்ம். always mining insights.. பின்றீங்க சார். ஆனா அப்பளத்துல இருக்கு தாத்பர்யம். rose is a rose, right?

      நீக்கு
  8. அருமையான கதை. ஆனால் தியாகய்யருக்குத் தொலைந்த விக்ரஹங்கள் கிடைத்தது மறுபடி காவிரியிலே இருந்து தான் என்றல்லவோ படிச்சேன்! ஆகையால் இங்கே கிடைத்திருக்கும் விக்ரஹங்கள் அது இல்லை என நினைக்கிறேன். சு.தா சொல்றாப்போல் தியாகய்யரின் விக்ரஹங்கள், தம்புரா, வீணை போன்ற வாத்தியங்கள் எல்லாம் அவர் வழி வாரிசுகளிடம் இருக்கிறது. சுத்தானந்த பாரதியார் கூட தியாகய்யரின் வழி உறவின் முறைக்காரர் தான். சுத்தானந்தரின் அண்ணா பிள்ளை வீட்டில் தியாகய்யரின் தம்புராவை வைத்து வழிபட்டு வருகின்றனர். பல வருடங்களாக அவர்களிடம் தான் இருக்கிறது எனக் கேள்விப் பட்டிருக்கேன். அண்ணாவின் இன்னொரு பிள்ளை ரீச் சந்திரா என்றும் ப்ளாஸ்டிக் சந்திரா என்றும் அழைக்கப்படுவார். ரீச் ஃபவுன்டேஷனில் சுறுசுறுப்பான உறுப்பினர். பல கோயில்களைத் திரும்பப் புனர் நிர்மாணம் செய்ததில் இவருக்கும் பெரிய அளவில் பங்கு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தியாகய்யரின் நேர் வாரிசு அவருடைய மகளுடன் முடிந்தது. அவர் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த மகளுக்குக் குழந்தை பிறக்கவில்லை. அதனால் வம்சாவளி என்று எதுவும் இல்லை.

      தியாகராஜர் விக்கிரங்கங்களை தொலைத்த இடமும் மீட்ட இடமும் வேறேனு தோணுது.. தொலைச்ச உடனேயே தியாகய்யர் ஊர் ஊராக் கிளம்பிட்டார்னு தான் சொல்றாங்க.

      போகுது.. இது கதை தானே..(சூரி சார் இப்படி பாயின்ட் பிடிப்பார்னு தெரியாம போச்சே.) எத்தனை சால்ஜாப்பு சொல்றது?!

      நீக்கு
    2. ஹூம், உங்க ப்ளாகிலேயே ஏதோ அமாநுஷ்யம் இருக்குனு நினைக்கிறேன். :P :P :P ரெண்டு தரம் கமென்டினேன். ரெண்டும் கோவிந்தா! :)

      தியாகய்யரின் நேர் வாரிசுனு சொல்லலை. அவரோட குலம், கோத்திரம், வம்சாவளி. அண்ணன் வழியாகக் கூட இருக்கலாம் அந்தத் தம்புராவை நான் சென்னையில் அவங்க வீட்டுப் பூஜை அறையில் பார்த்திருக்கேன்.

      விக்ரஹங்கள் தொலைஞ்சதும் தேடிக் கொண்டு கிளம்பிய தியாகய்யர் பின்னாடி அவர் வீட்டுக்கு வந்துடலையா? ஊர் ஊராகக் கிளம்பி யாத்திரை செய்ததாகத் தெரியவில்லை. எதுக்கும் ஒரு தரம் தேடிப் படிச்சுப் பார்த்துடறேன் :)

      நீக்கு
  9. சில நேரங்களில் உங்கள் பதிவைவிட வரும் கதையல்லாத பின்னூட்ட ஜுகல் பந்தி எனக்குப் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க.. நீங்களும் அப்பளம் நொறுக்குங்க.

      நீக்கு
  10. அமானுஷ்யம் சரி... ஆனால் என்ன ஒரு அழகா தியாகராயரையே வரவழைச்சுட்டீங்களே உங்க கதையில்... தியாகராயர் அவருடைய பாட்டு ஒவ்வொன்னா போட்டு பூனை அதை கேட்டு ரசித்து... பாட்டை மாற்றி போட்டதுமே பூனை முறைப்பதும் பரிதாபமாக பார்ப்பதும் பின் ஓடுவதும்... செம்மப்பா...

    விக்கிரகங்கள் கண்ல பட்டு அதை எடுக்கும்போது முறைக்கும் பூனை பின் சுவாதீனமா சமையல்கட்டுக்குள் சோம்பல் முறிப்பது...

    அழகா ஒரு சினிமா பார்ப்பது போல் தத்ரூப எழுத்துகள்பா அப்பாதுரை...

    ஜெயா எத்தனை தான் பொறுப்பா எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தாலும் இடின்னதும் பயந்து கட்டிக்கொள்வது ஜெயாவிடம் இருக்கும் குழந்தைமனசை பளிச்சுனு காட்டறது..

    இந்த கதைக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குன்றதே கமெண்ட் படிக்கும்போது தான் தெரியறதுப்பா..

    சுவாரஸ்ய லஹரி.... தொடருங்க தொடருங்க... நல்லாருக்குப்பா...

    பதிலளிநீக்கு
  11. அமானுஷ்யம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது. அடுத்த பாகத்தைத் தொடரும் ஆர்வம் தாவுகின்றோம்...அட அட இந்த பூனை படுத்திய பாடு தாவுகின்றோம் என்றாகிவந்து விட்டது....இல்லை ஹனுமார் ஹை ஜம்ப்?!!!! ஹஹ

    உங்கள் தளம் செம சுவாரஸ்யமாக இருக்கிறது என்றால் பின்னூட்டங்கள் அதை விட செம சுவாரஸ்யமாக இருக்கின்றது...இத்தனை நாள் மிஸ் பண்ணிவிட்டோமே என்றும்.....

    ஆவி அவர்களின் (இது உங்க அமானுஷ்யம் இல்ல நம்ம கோவை ஆவி) போட்டியில் தங்களது அந்த போலீஸ்காரரின் கதையில் இறுதியில் வந்த ட்விஸ்ட்டை ரசித்தோம்...பரிசு பற்றியும் அறிந்தோம்...ஆவி எங்களுக்கு நல்ல நண்பராயிற்றே.....உங்கள் கதையைக் காட்டினார்...

    ஓகே ஓகே இப்ப ஹை ஜம்ப்!

    பதிலளிநீக்கு