2014/12/02

தகாதவர்



    ட்டையில் கொஞ்சம் புதுக்களை ஒட்டிக் கொண்டிருந்தது போலிருந்தது. போன வாரம் சட்டை சற்றுப் புதிதாகத் தென்பட்டது. அதற்கு முந்தைய வாரம் நிச்சயம் புதிதாக.. அதற்கும் முந்தைய வாரம் அப்போது தான் கடையிலிருந்து எடுத்து வந்தது போல் தெளிவாக...

அணிந்திருந்தவர் முகம் மட்டும் அணிந்திருந்த சட்டையை விட வேகமாகக் களையிழந்து கொண்டிருந்தது வெள்ளைத் தாளில் வரைந்த கரும்பொட்டு போல் தெளிவாக...

    ரகு இந்தியா திரும்பி சில மாதங்கள் ஆகியிருந்தன. ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்பி புது வீடு, புது வேலை, புதுத் தலைமுறை, புது விதிகள், புது வலிகள் என வித்தியாசமான உணர்வுகளை ஏற்கப் பழகிக் கொண்டிருந்தான். விட்டுப் போன உறவுகளை வரிசையிட்டுப் புதுப்பிக்கும் மும்முரத்தில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த மனைவி ரமாவை அவ்வப்போது கவனித்தாலும், தினம் அவரைக் கவனிக்கத் தவறவில்லை. சட்டையணிந்திருந்த பெரியவரை.

காசுக்காக அல்லாமல் ஆசைக்காகச் சேர்ந்த புது லெக்சரர் வேலை ரகுவுக்குப் பிடித்திருந்தது. நேரத்தோடு அடித்துப் பிடித்துப் போக வேண்டிய அவசியம் இல்லாமல் நிதானமாகத் தினம் நுங்கம்பாக்கத்துக்குப் பயணம். குரோம்பேட்டையில் அகலப்பாதை ரயில் வந்ததே ரகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. முதன் முதலாக அகலவழி மின்ரயிலை பார்த்து அசந்து போனவன், தற்செயலாக எதிர் ரயில் நிலைய இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். பளிச்ச்ச்ச்ச்சென்றப் புதுச்சட்டை, புதிதென்று சொல்ல முடியாத பேன்ட். ஆளில்லாத அகலவழி நடைமேடை பெஞ்சில் ஏறக்குறையாக அனாதையாக உட்கார்ந்திருந்தார். நிமிர்ந்த நெஞ்சுடன் நேராக எதையோ பார்த்தபடி. பக்கத்தில் ஒரு சிறிய தோல் பை. அருகே தரையில் ஒன்றிரண்டு நாய்கள் இரவு முழுதும் குரைத்த அசதியில் தூங்கிக் கொண்டிருந்தன. பெரியவரின் தலைக்கு மேல் தொங்கிய விளம்பரப் பலகையில், 'உங்கள் எதிர்காலம் - எங்கள் பாதுகாப்பு' என்ற ஏதோ வங்கியின் அர்த்தமில்லாத விளம்பர வாசகம். அவருடைய நேர்ப் பார்வையில் வந்து விழுந்து விட்டிலானவை நினைவுகளா அல்லது வெற்றுக் காலவரிகளா என்று சொல்ல முடியாதபடி சலனம் துறந்த முகம்.

காலத்தைக் கட்டும் புகைப்படத் தருணம் என்று எண்ணினான். நல்ல கேமரா இல்லாது போனதேயென்று நொந்தான். அதற்குள் தாம்பரம் மின்ரயில் வந்து அவரைப் பார்வையிலிருந்து மறைத்தது. ரயில் விலகியதும் அவரைப் பார்க்க முனைகையில் கடற்கரை ரயில் வந்துவிட, ஆள் குறைவான பெட்டியைத் தேடி ஏறிக்கொண்டான். அப்போது தான் சட்டென்று நினைவு தட்டியது. 'நிச்சயம் இவரைப் பார்த்திருக்கிறேன்!'. அடையாளம் காணும் முயற்சியை தினத்தின் பிற தேடல்களில் தொலைத்தான்.

சென்னை எத்தனை மாறிவிட்டது! குரோம்பேட்டை எத்தனை மாறிவிட்டது!

ந்யூகாலனியில் ஆறாவது குறுக்குத் தெருவின் ஒண்டுக் குடித்தனக் குடியிருப்பு ஒன்றில் இருந்த காலம் இதோ நேற்றிரவு போல் தோன்றுகிறதே! விளையாட்டாகத் துரத்தி வந்த உயிர்நாய் டைகருக்குப் பயப்படுவது போல் மரத்தில் ஏறி உட்கார, நாய் எம்பி எம்பிக் குதித்து தடுமாறி விழுந்ததைப் பார்த்துச் சிரித்துக் கீழே இறங்கி நாயுடன் கட்டிப் புரண்டக் குதூகலம்.. இப்போது நடந்தது போல் தோன்றுகிறதே? இருந்தாலும் உடலிலும் மனதிலும் ஏன் இத்தனை சோர்வு? ஏன் இத்தனை அயர்ச்சி?

அசோக் மணிவண்ணன் சாய் மகேந்திரன் பாபு ரங்கன் ஸ்ரீமதி வேதா மாலதி சுந்தர் விஜி கண்ணன் மனோகர் ஸ்ரீனிவாசன் துரை என்று வேகமாக வளர்ந்த நட்புக் கூட்டத்துடன் வெவ்வேறு தருணங்களில் நடத்திய கூத்துகள்..

க்ரிகெட் விளையாடக் கற்றுக் கொண்டது.. முதல் மேச்சில் அசோக் தன்னை ஓபனிங்க் பேட் செய்ய அனுமதித்ததும் களத்தில் இறங்கி அஸ்தினாபுரம் இஸ்மாயில் எறிந்த பந்துகளை விளாசியது.. தவறாக நோ பால் அறிவித்த அம்பயர் பாபுவுடன் இஸ்மாயில் சண்டை போட உடனே எல்லோரும் மேட்சை மறந்து சண்டையில் இறங்க.. கையிலிருந்த ஸ்டம்பினால் இஸ்மாயில் முதுகில் ஓங்கி அடித்துவிட்டு ஓடியது.. பிறகு இஸ்மாயில் போலீஸ்காரனுடன் வீட்டுக்கு வந்ததும் அங்கேயே பயத்தில் ஒன்றுக்குப் போனது..

தோல் கம்பெனி மைதானத்தில் ஹாக்கி விளையாடிவிட்டு லெதர் கம்பெனி ரோடில் இருந்த சைவ ஓட்டலில்... பத்து பைசாவுக்கு ஒரு தோசை என்றாலும் ரூபாய்க்கு பனிரெண்டு தோசை தருவார்கள்.. அதை டீமில் அத்தனை பேரும் பகிர்ந்து சாப்பிட்டு சாம்பாரைக் குடம் குடமாகக் குடித்து.. "சார்.. பதினொரு தோசை தான் கொடுத்தீங்க" என்று அழிச்சாட்டியம் செய்து.. கடைக்காரர், "ஏம்பா.. வாரா வாரம் இதையே சொல்றீங்களே? ஒரு வாரமாவது நான் எண்ண மாட்டேனா?" என்று சிரித்தபடி இன்னொரு தோசையைத் தயாராக வைத்துக் கொடுத்தது..

தாம்பரத்திலிருந்து பூந்தமல்லிக்கு பஸ் விட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து அப்பா அம்மாவுடன் முதன் முதலாகக் குன்றத்தூர் முருகன் கோவிலுக்குப் போனது.. தேவர் படம் போலவே கோவில் இருந்ததில் வியந்தது..

வாடர் டேங்க் திடலில் விளையாடிய போது ஏற்பட்ட இன்னொரு சண்டையில் சாய், மணிவண்ணனுடன் சேர்ந்து ரத்தக்காயங்களுடன் திரும்பிய போது.. கண்ணன் கடைக்காரர் சிகரெட் பிடித்தால் வலி தெரியாது என்று ஆளுக்கொரு பில்டரில்லாத சார்மினார் சிகரெட் தர, முதல் முதலாக சிகரெட் பிடித்தது.. எக்கச்சக்கமாக இழுத்து இருமி ஏறக்குறைய இறந்து போன சாயை அங்கேயே விட்டு அவன் வீட்டுக்கு ஓடி "சாய்க்கு என்னவோ ஆயிடுச்சு.. என்னனு தெரியலே" என்று புளுகி குடும்பத்துடன் சாயை ஆளவந்தார் க்ளினிக் கூட்டிப் போனது..

பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்த தொலைபேசி வீட்டுக்கு வந்ததும் அப்பா என்னவோ சந்திரனில் இறங்கியது போல் அலட்டிக் கொண்டது..

வயதுக் கோளாறில் மாலதியை வேறு விதமாகப் பார்க்கத் தொடங்கி அவள் வீட்டுக்கு அடிக்கடி போனது.. விவரம் புரிந்து கொண்ட மாலதியின் அப்பா அவனைத் தனியாகக் கூப்பிட்டு 'வயசுல இப்படித்தான் இருக்கும், படிப்புல கவனமா இரு.. எல்லாத்துக்கும் காலம் வரும்' என்று அறிவுரையும், 'மொள்ளமாறியா இருந்தே, ஜோடு பிஞ்சிடும்' என்று கொஞ்சம் அதட்டலும் கலந்து பேசியது.. அதை ஒட்டுக் கேட்ட மாலதியின் சொந்தக்காரப் பையன் மறுநாள் காரணமில்லாமல் தன்னுடன் வம்புக்கு வந்து 'டேய்.. மாலதி வீட்டுக்கு வந்தே.. தொலைச்சுடுவேன்' என்று மிரட்டிக் கன்னத்தில் அறைந்தது.. உடனிருந்த மகேந்திரன் துரை அசோக் மூவரும் அவனுடன் சண்டைக்குப் போனது.. 'டேய்.. எங்கிருந்தோ இங்க வந்துகிறே.. எங்க செட்டு ஆள் மேலயா கை வைக்குறே?' என்று மகேந்திரன் அவன் மூக்கைப் பிளந்தது.. அதைக் கேட்டு ஆத்திரத்துடன் வந்த மாலதியின் அப்பாவிடம் மகேந்திரன். "நான் இல்லிங்க.. ரகு தான் அடிச்சான்.. வேணும்னா துரையைக் கேட்டுப் பாருங்க" என்று புளுக.. "ஆமாம்.. ரகு தான் அடிச்சான்" என்று துரை நம்பிக்கை துரோகம் செய்து, பிறகு "டேய் மன்னிச்சுக்கடா.. விஷயம் தெரிஞ்சா மகேந்திரனோட அப்பா பெல்டை உருவி பின்னிடுவாருடா.. அதான் பொய் சொன்னேன்.. வேணும்னா உங்கூட வந்து மாலதி கிட்டயே பேசிடறேன்.." என்று எத்தனை சொல்லியும் அவனுடன் சில நாட்களுக்குப் பேச்சை வெட்டியது.. தொடர்ந்து பல நாட்கள் மாலதியின் இரண்டு அண்ணன்களும் அந்தத் தெரு பக்கமே வரவிடாமல் தொந்தரவு கொடுத்தது..

தொலைக்காட்சி வந்ததும் நட்பு ஆதாரங்களே அடியோடு மாறி, இதுவரை பழகாதிருந்த டேவிட் அழகுசாமி வீட்டுக்கு டிவி இருந்த ஒரே காரணத்தால் வாரா வாரம் போய் அவருடைய எட்டு வயது மகனுடன் வேண்டா வெறுப்பாகப் பழகியது.. பிறகு ஏதோ கடுப்பில் அழுக்குசாமி என்று அவர் வீட்டுச் சுவரில் எழுதியது.. கிறுஸ்துவர்கள் எல்லாரும் ஹிந்துக்களை மதமாற்றம் செய்யவே வந்தவர்கள் என்ற தீர்மானமான நம்பிக்கையுடன் வளர்ந்தது. சில மாதங்களில் மணிவண்ணன் அசோக் சாய் என்று எல்லோர் வீட்டிலும் டிவி வந்துவிட 'எங்க வீட்டுல வெஸ்டன் எங்க வீட்டுல டெலிரேட் எங்க வீட்ல க்ரௌன் எங்க வீட்டுல கோனார்க்' என்று அவரவர் பீற்றிக்கொள்ள, தன் வீட்டில் மட்டும் டிவி பெட்டி வராத காரணத்தைக் கேட்டு அழுதது...

வகுப்பில் அடித்தார் என்ற கடுப்பில் நண்பர்களுடன் இரவு பதினொரு மணிக்கு மேல் எத்திராஜ் டீச்சர் வீட்டு வாசலில் நின்றபடி அவர் வீட்டுக் கதவு மேல் மூத்திரம் போனது.. அதையெல்லாம் மௌனமாக கண்ணாடி ஜன்னலுக்கு உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் எத்திராஜ் என்பது தெரிந்து ரத்தம் உறைந்து ஓடிப்போனது.. மறுநாள் வகுப்பில் ஏதாவது சொல்வார் என்று தினம் பயந்து நடுங்கி உட்கார்ந்திருக்க எத்திராஜ் அதைப் பற்றிப் பேசவில்லை, பேசப்போவதில்லை என்பது புரியத் தொடங்கி.. திடீரென்று வாலிப முறுக்கு மனதுள் நிரந்தரமாகக் கட்டியது..

'ஸ்ரீமதிக்கும் துரைக்கும் இது, என் கண்ணால பார்த்தேன்' என்று கட்டிவிட்டது.. ஸ்ரீமதியின் மாமாவுக்குக் கோபம் வந்து 'இந்த மாதிரி உதவாக்கரைப் பிள்ளையை பெற்றது' பற்றி அப்பாவிடம் சண்டை போட்டது.. பிறகு ஸ்ரீமதி தன்னிடம் மாமாவைப் பற்றி ரகசியமாகச் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் பயந்து கொஞ்சம் வியந்து.. இதை துரையிடம் சொல்வதா கூடாதா என்று அவதிப்பட்டது.. மூன்று வருடங்களுக்குப் பின் ஸ்ரீமதி காணாமல் போனதும்..கடைசிவரை துரையிடம் சொல்லாமலே போனது எத்தனையோ வருடங்களுக்கு உறுத்தி, ஒரு வேளை அன்றைக்கே சொல்லியிருக்கலாமோ என்று வருந்தியது..

மாலதியின் பெரிய அண்ணனுக்கு டைனோரா என்று ஒரு டிவி கம்பெனியில் வேலை கிடைத்திருப்பது பற்றி ந்யூகாலனியே அதிர்ந்தது..

மணிவண்ணன் அம்மாவிடம் ஒரு முறை "மாமி, தயவு செஞ்சு மணியை எங்கூட அனுப்புங்க.. நாளைக்குக் கணக்கு பரீட்சை.. நான் பாஸானா அது மணிக்குத்தான் புண்ணியம்.." என்று சரடுவிட்டு மணியின் அம்மா உச்சி குளிர்ந்து மணியிடம் "போடா.. போய் சொல்லிக் கொடுறா.. தானத்துல பெரிசு ஞானதானம்" என்று ஏதோ சொல்ல.. வேண்டுமென்றே தடுத்த மணியிடம் "என்னடா பிகு பண்றே? உனக்கு படிப்பு நன்னா வரும்னு தானே அவன் கேட்கறான் பாவம்? போடா.. போய் ஒரு ரெண்டு மணி நேரம் சொல்லிக்கொடு போ" என்று தள்ள.. "இவனுக்கெல்லாம் படிப்பே வராதுமா.. எப்பவும் விளையாடினா படிப்பு எப்படி வரும்?" என்று மணி இன்னும் முறைக்க.. "போடா.. போய் சொல்லிக்குடுறா.. கெஞ்சறான் பாரு ரகு" என்று அவன் அம்மா எங்களை வெளியே தள்ள.. நாங்கள் நேராக லட்சுமிபுரம் ஓடி க்ரிகெட் மேட்ச் விளையாடியது தெரிந்து மணியின் அப்பா என் வீட்டுக்கு வந்து முறையிட.. 'அப்பா.. பேஸ் போலிங்க் போட ஆளில்லை மணியைக் கூட்டிட்டு வானு இந்த ஐடியா கொடுத்தது துரையும் மகேவும் தான்" என்று அவர்களை மாட்டி விட்டது.. பிறகு மணியின் அப்பா தன்னை எங்கே பார்த்தாலும் தெருவில் காறித் துப்பியது பிடிக்காமல் தானும் அவரைப் பார்த்ததும் துப்பத் தொடங்கியது..

ப்ளஸ் டூ என்று புதிதாகக் கல்வி முறை திருத்தம் வந்து என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று குழம்பியது.. தொடர்ந்து காமர்ஸ் சயன்ஸ் என்று பிரிந்தது.. நட்பு வட்டம் குறுகி விரிந்து குறுகி விரிந்து.. எங்கேயோ பட்டப் படிப்பு என்று மறைந்தது.. எங்கேயோ சுற்றி என்னவோ செய்து மீண்டும் குரோம்பேட்டைக்கே வந்தது..

சென்னையின் மாற்றங்களினூடே தன் வாழ்க்கை மாறியதை தினம் வியப்பது ரகுவுக்கு வாடிக்கையாகிப் போனது. எத்தனை நினைவுகள்! ஒவ்வொன்றிலும் ஒரு கதையெழுதலாம் என்று நினைத்துக் கொள்வான். பெரியவரின் கதை என்ன? நினைவுகளில் பெரியவரைத் தேட முயன்றுத் தோற்றான்.

    அன்று ரயில் நிலையத்துக்கு சற்று சீக்கிரமே வந்துவிட்டான் ரகு. பெரியவர் வழக்கம் போல் உட்கார்ந்து கொண்டிருந்தார். இன்று பேசி விடுவது என்று தீர்மானித்து, ப்ளேட்பாரம் கடந்து அவர் அருகே சென்றான். "ஹலோ சார்" என்றான். பெரியவர் பதில் சொல்லவில்லை.

ரகு விடாமல், "சார், நான் உங்களை தினம் இந்த இடத்துல பார்க்கிறேன். தப்பா நினைக்காதீங்க. நீங்க எங்க இருக்கீங்க? எதுக்காக இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க தினம்?" என்றான். பெரியவர் பதில் சொல்லவில்லை.

சற்றுப் பொறுத்த ரகு தயங்கி, "சார்.. உங்களை நாலஞ்சு வாரமா பாத்துட்டிருக்கேன். இன்னிக்கு என்னவோ உங்களோட பேசியாகணும்னு தீர்மானிச்சு இங்கே வந்தேன். தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க" என்று விலகி நகர்ந்தான்.

"இங்கே தான்" என்றக் குரல் கேட்டுத் திரும்பினான்.

பெரியவர் அவனை நேராகப் பார்த்தார். "ஸ்டேஷன்ல தான் இருக்கேன். எந்த இடம்னு சொன்னா யாரானும் ஏதானு செஞ்சு எனக்குக் கஷ்டமாயிடும்.."

"என்ன சார் சொல்றீங்க? ஸ்டேஷன்லயா இருக்கீங்க?" ரகு திடுக்கிட்டான்.

"நான் சீனியர் சிடிசன். முதியவன். தீண்டத்தகாதவன். பழகத்தகாதவன். வாழத்தகாதவன். போகுற வயசாகியும் போகாத வயசுக்காரன். எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம். எனக்கு எல்லாமும் வீடு. எல்லாமும் காடு"

"மன்னிச்சுருங்க.. உங்களை பாத்தா.. நெவர் மைன்ட்.."

"என்னைப் பாத்தா என்ன? ஹோம்லெஸ்னு தோண மாட்டேங்குதா? வெல்கம் டு த ந்யூ வொர்ல்ட்... அதை விடுப்பா.. உன் பேர் என்ன? உன்னைப் பாத்தா அம்பது வயசிருக்கும் போலிருக்கு. இருந்தாலும் உன்னை நீ வானு சொன்னா கோவிச்சுப்பியா? ஐயம் செவன்டி செவன், யு ஸீ"

"அய்யோ.. அதெல்லாம் இல்லே சார்.. எனக்கு அம்பத்தஞ்சு... என்னை விட நீங்க ரொம்பப் பெரியவர்.. என்னை டா போட்டு வேணாலும் கூப்பிடுங்க" ரகு சற்று நெகிழ்ந்தான். "உங்களை இந்த நிலைல.."

"என் நிலைக்கென்னப்பா..?"

"இல்லே சார்.. நாலஞ்சு வாரத்துக்கு முன்னால புதுச்சட்டை போட்டுக்கிட்டு இங்க உக்காந்திருந்தீங்க.."

"சட்டை இப்போ பழசாப் போச்சுப்பா. உடம்பும் மனசும் என்னிக்கோ பழசாப் போயிடுச்சு. சில சமயம் பழைய சட்டையைக் கழட்ட முடியுது. சில சமயம் நாம கழண்டுக்கணும். அதுவரை பழைய சட்டை மாட்டிக்க வேண்டியது தான். எஸன்ஸ் ஆஃப் லைப்.. வாழ்க்கையின் சாரம்"

ரகு எதுவும் பேசாதிருந்தான். பெரியவர் தொடர்ந்தார். "பாவமெல்லாம் படாதேப்பா. இது நிதர்சனம். திஸ் டிபைன்ஸ் மி. இதோ இந்த அழுக்கான ஏகாந்தம் என்னை நான் விளக்கும் விளக்கம். யார் மேலாவது பாவப்படணும்னா தினம் கண்ணாடிலே பார்த்து பட்டுக்கப்பா.."

"என் பெயர் ரகு"

"அப்ப ரகுனே கூப்பிடறேன் சுருக்கமா" என்ற பெரியவரின் கண்களின் நக்கல் தொக்கியிருப்பதை இருப்பதைக் கவனித்தான். சற்று இருமலாகச் சிரித்தார். "ஊருக்குப் புதுசாப்பா?"

"இல்லே சார்.. இங்கேதான் வளர்ந்தேன்.. படிச்சு வெளியூர் போய்ட்டு பல வருஷம் கழிச்சுத் திரும்பி வந்தேன்.."

"ரொம்ப மாற்றம்... இல்லையா?"

"ஆமாம்" தலையாட்டினான். "உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்.. ஆனா ஞாபகம் வர மாட்டேங்குது"

பெரியவர் தயங்காமல், "நீ யாருனு எனக்குத் தெரிஞ்சு போச்சுப்பா" என்றார்.

"சொல்லுங்க சார்.. என்னைத் தெரியுமா? ஐ ஹவ் பீன் ட்ரையிங் ஹார்ட் டு ப்லேஸ் யு"

"கீப் ட்ரையிங்"

கைக்கடிகாரத்தைப் பார்த்த ரகு, "சார்.. மறுபடி கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க.. உங்களுக்கு வீடு இல்லையா? பிள்ளை பெண் யாரும்..."

"எதுக்கப்பா அதெல்லாம்? அவசியம்னா இன்னொரு நாள் பேசலாம்.. உன் ட்ரெயின் வருது பார்" என்று சுருக்கென்று எழுந்து கொண்டார் பெரியவர்.

"தப்பா கேட்டிருந்தா மன்னிச்சிருங்க சார்.. கண்டிப்பா இன்னொரு நாள் பேசலாம் சார்.. நான் அடுத்த ரயிலைப் பிடிச்சுக்குறேன்" மெள்ள நகர்ந்தான் ரகு.

    அதற்குப் பிறகு அடிக்கடி அவருடன் பேசத் தொடங்கினான் ரகு. எதையும் நேராகச் சொல்லாவிட்டாலும் பெரியவர் நிறைய விவரங்களைப் பகிர்ந்து கொண்டதே ரகுவுக்குப் போதுமென்றிருந்தது.

பெரியவர் குரோம்பேட்டையைச் சேர்ந்தவர். பெரிய வேலையில் இருந்தவர். ந்யூ காலனியிலோ ராதா நகரிலோ வீடு இருந்தது. பிள்ளைகள் நன்கு படித்து பெரிய வேலைக்குப் போனவர்கள். பெண் சில வருடங்களுக்கு முன் மார்பில் புற்று நோய் வந்து இறந்து விட்டாள். பெண் வயிற்றுப் பேரனின் ஒரு சிறிய கசங்கிய போட்டோ காட்டினார். ரகுவுக்கு ஏதோ பொட்டிலடித்தாலும் பிடிபடவில்லை. ஓய்வு பெற்ற அடுத்த வருடமே மனைவி இறந்து விட, சில வருடங்கள் காசி, ரிஷிகேஷ், ஹரித்வார், மானசரோவர், கைலாஷ் என்று சுற்றிவிட்டு வீடு திரும்பினால்... தன் அறையை ஒழித்து விட்டிருந்தான் மகன். பதிலுக்கு ஹாலில் ஒரு தடுப்பு போட்டு படுக்கை போட்டிருந்தான். பெரியவர் எதுவும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டார். குரோம்பேட்டையில் வீட்டு விலைகள் ஆகாயத்தைக் கிழிக்க, பையன்களின் தொந்தரவின் பேரில் வீட்டை விற்றுக் காசாக்கி மகன்களுக்கு வீடோ மனையோ வாங்கப் பகிர்ந்து கொடுத்தார். ஒவ்வொரு மகனுடனும் சில மாதங்கள் தங்குவதாக ஏற்பாடு. சில வருடங்களுக்குள் மகன்கள் தத்தம் குடும்பக் கவனத்தில் இவரைக் கவனிக்காமல் விட்டனர். மனைவியிழந்து தனிமையில் இருந்தவரை ஒதுக்க இவருக்கு ஏற்பட்ட வெறுப்பில் உடனிருந்தவர்களுக்கும் வெறுப்பூட்டினார். மகன்கள் இவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். திடீரென்று மாப்பிள்ளை ஒரு விபத்தில் இறந்து விட, முதியோர் இல்லத்திலிருந்து விலகிப் பெண் வீட்டில் பெண்ணுக்கும் வளரும் பேரனுக்கும் துணையாகத் தங்கினார். வாழ்க்கை மிதமான மகிழ்ச்சியுடன் துளிர்விட, பெண்ணுக்கு மார்புப் புற்று நோய் வந்த நிலையில் பேரப்பிள்ளையைக் கவனிக்கும் வேலையில் முனைப்பாக இருந்தார். நான்கு வருடங்கள் போல் அவதிப்பட்ட பெண் இறந்துவிட, வளர்ந்த பேரனுடன் சில காலம் இருந்தார். பேரன், "க்ரேம்ப்ஸ்.. நான் படிக்க வெளிநாடு போறேன்.. இந்த வீட்டை விற்கப் போறேன். நீ எங்கயாவது மாமாவுடன் போய்த் தங்கிக்கயேன்? ஐ வில் கிவ் யு சம் மனி" என்று சொல்ல.. மறுபடி ஒவ்வொரு மகன் வீட்டுக்கும் போனவர் அதிக நாட்கள் தாக்கு பிடிக்க முடியவில்லை. சென்னையிலிருந்த ஒரே மகன் அவரை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ள.. மறுபடி முதியோர் இல்லம். இடையில் முதியோர் இல்லத்துக்கு யார் பணம் கட்டுவது என்று மகன்களுக்குள் சச்சரவு வந்து ஒரு மாதம் பணம் கட்டாமல் தவறிப் போக... இரண்டாம் இரவில் முதியோர் இல்லத்திலிருந்து நழுவி குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

"ஸ்டேஷன்ல தங்கியிருக்காருனு சொல்றாரே தவிர விவரம் சொல்ல மாட்டேங்கறாரு ரமா" என்றான் ரகு மனைவியிடம். "பாவமா இருக்கு"

"சும்மா இருங்க. இதெல்லாம் பாவம்னு பாக்க முடியாது. அவங்கவங்க வாழ்க்கை அவங்களுக்கு. ஹி குட் ஹெவ் லிவ்ட் வித் ஹிஸ் சில்ரன். "

"என்ன இப்படி பேசுறே ரமா? அவரோட பசங்க அவரை எப்படி ட்ரீட் பண்ணினாங்க பாத்தியா?"

"யாரு அவரை வீட்டை வித்து பசங்களுக்கு தானம் பண்ணச் சொன்னது? ஹி ஷுட் னோ இல்லையா? இந்தக் காலத்துல எல்லாரும் அறுபது எழுபது வயசு சாதாரணமா இருக்குறப்ப அவங்க தானே அவங்க பராமரிப்புக்கான பாதுகாப்பைச் செய்யணும்? இந்தக் காலத்துலயும் பசங்க செய்யணும்னு எதிர்பார்க்க முடியுமா? அந்தக் காலத்துல அவங்க அப்பாம்மா கூட்டுக் குடும்பம்னு இருந்தாங்கனா வெல் அண்ட் குட். இன்னும அதையே எதிர்பார்த்தா எப்படி? அவரோட பசங்க அவரை ஒண்ணும் தப்பா ட்ரீட் செஞ்சாப்புல தோணலிங்க. யாருக்குத் தெரியும்? வயசானா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்காம ஹி மைட் ஹவ் பின் எ ப்பெஸ்ட். சும்மா தொணதொணனு எங்க தாத்தா பேசிட்டேயிருப்பாரு.. இது குத்தம்.. அது சொள்ளை.. அந்த மாதிரி ஆளா இருந்திருப்பாரு"

"பாவம் பார்க்கக் கூடாதுனு சொல்றியா?"

"இருக்குற பாவத்தைப் பார்க்கவே நேரமில்லே.. அடுத்தவங்களைப் பாவம் பார்த்து பயன் இல்லேனு சொல்றேன். அடுத்த ஜெனரேஷனுக்குக் கவலையில்லே. நம்ம ஜெனரேஷனும் எதிர்பார்ப்பில்லாம முதியோர் இல்லம் அப்படி இப்படினு போயிருவோம். நமக்கு முந்தைய தலைமுறைல அப்பா அம்மா மாமா அத்தைனு இருக்காங்க பாருங்க.. ரொம்ப கஷ்டம்., அதுக்காகப் பாவம் பார்த்தா நமக்குத்தான் கஷ்டம். பாவம்னு பார்த்து பார்த்து என்ன செய்வீங்க? ஹவ் லாங்க் வில் யு பி வொரீட்?"

"அவரை இதுக்கு முன்னால நான் நிச்சயமா பாத்திருக்கேன். யு னோ, ஹி ரெகக்னைஸ்ட் மி. எனக்குத்தான் அவரைப் பிடிபடலே? தெரிஞ்ச மனுஷன்னு உள்ளுக்குள்ள முள் குத்துது ரமா.. அவருக்கு ஏதாவது உதவி செய்யணும்னு நினைக்கறேன்"

"அதனால? சும்மா இருங்க ரகு. எதுனா செஞ்சு தெருக் குரங்கை தலையில ஏத்திக்காதிங்க""

"ஒரு மனிதம் இன்னொரு மனிதத்துக்கு செய்யுற உதவி.. சக மனிதர் மேல ஒரு அக்கறை.. அவ்வளவுதான்"

"வேர் வில் திஸ் ஸ்டாப்? உங்க உதவியை அவர் ஏத்துகிட்டு மேலே எதிர்பார்த்தாருனா? உங்களால தொடர்ந்து உதவ முடியுமா?"

"ஐ டெல் யு வாட். ஜாயலுக்காஸ் தங்கப் புதையல் அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு ரெண்டு டிகெட் வாங்கச் சொன்னே இல்லே? என் பரிசுச்சீட்டை அவருக்குக் குடுத்தா உனக்குப் பரவாயில்லையா? இட் இஸ் நாட் மனி"

"வாட் நான்சென்ஸ்!. பரிசு விழுந்தா இருபது பவுன் தங்கம்! டேமிட், இட் இஸ் மனி. ஒரு டிகெட் ஆயிரம் ரூபாய்னு வாங்கியிருக்கோம். எனி வே, உங்க டிகெட்டை என்ன வேணும்னாலும் செஞ்சுக்குங்க. ஆனா, டிகெட் குடுக்கறதுக்கு பதிலா பணமா கொடுத்தா பிச்சைக்காரனுக்கு உதவியா இருக்கும்.."

"பி சென்சிடிவ் ரமா.. பிச்சைக்காரன்னு எப்படி கூசாம பேசுறே?"

"ஓகே, லெட் மி ஸி. வீடு வாசல் கிடையாது, பிள்ளைங்க துரத்திவிட்டாங்க, ஸ்டேஷன்ல படுக்குறாரு, ஒரே சட்டையை ஒரு மாசத்துக்கு மேலே போட்டிருக்காரு.. ஸ்மெல்ஸ் லைக் ஷிட். மஸ்ட் பி ஷிட்.."

"மை குட்னஸ்! நீயா இப்படி பேசுறே?" ரகுவுக்குக் கோபம் வந்தது. கோபம் வந்தால் தம்பதிகள் உடனே ஒருவரை விட்டு விலகி சிறிது தனிமை தேடுவது பழகிப்போய், சட்டென்று அறையை விட்டு விலகினான்.

சிறிது பொறுத்து அவனருகே வந்து, "புண்படுத்திட்டனா? சாரி" என்றாள். மனைவியின் இடுப்பை இழுத்துக் கொண்ட ரகு, "நீ ப்ரேக்டிலா பேசினது என்னோட ஐடியல் மனசுக்குப் பிடிக்கலே.. நீ சொல்றாப்புல இது தெருக் குரங்குனாலும்... ஏன்னு தெரியலே எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு"

"டெல் யு வாட்.. பரிசுச் சீட்டுக்குப் பதிலா பத்தாயிரம் பணம் கொடுப்போம்.. ஓகே?"

"இல்லே ரமா. பணம் கொடுத்தா வாங்க மாட்டாரு. பரிசுச் சீட்டைக் கூட வேண்டாம்னுவாரு. எனி வே, கல்கத்தா செமினார் போயிட்டு அடுத்த வாரம் திரும்பி வரேன்ல.. வந்தப் பிறகு அவர் கிட்டே பணமோ டிகெட்டோ கொடுக்கறேன்.. வாங்கிட்டா சரி, இல்லின்னாலும் சரி.."

"அதுக்குள்ளே குலுக்கல் முடிவு தெரிஞ்சுடும். ட்ரா ஒண்ணாம் தேதி. உங்க டிகெட்டை தான் தரதா சொல்லியிருக்கிங்க நினைவுல வைங்க" என்றாள். "இதோ, ரகுனு உங்க பெயரை பென்சில் செஞ்சிருக்கேன் பாத்துக்குங்க.."

    கல்கத்தா மேனேஜ்மென்ட் ஸ்கூல் செமினாரில் இந்தியப் பெண்களின் மேலாண்மைத் திறனை உயர்த்தும் வழிகள் பற்றி ரகு பேசுகையில் செல்போன் ஒலித்தது. பேச்சை முடித்துக் கொண்டு அழைத்தவரை அழைத்தான். "என்ன ரமா?"

"ரகு.. உங்க சீட்டுக்குப் பரிசு விழுந்திருக்கு. இருபது பவுன் தங்கம்".


[தொடரும் சாத்தியம்: 90-100%]

34 கருத்துகள்:

  1. சே.. ஆயிரம் ரூபாய் டிக்கெட் என்றால் கொடுத்து விடலாம்.. இருபது பவுன் தங்கம் என்றால்... ஆயுசுக்கும் இதே போல் இருதலை கொள்ளி எறும்பு வாழ்க்கை எல்லோருக்குமேவா இல்லை மத்யமருக்கேயான சாபக்கேடா?

    பதிலளிநீக்கு
  2. கதை விடறீங்களா? கதை போலத் தெரியலேயே.... மெகா சைஸ் கொசுவத்தியால்லே இருக்கு:-)

    100% தொடரட்டும். இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. கொசுவத்தி இல்லை... காலிப் பெருங்காய டப்பா... எப்ப திறந்தாலும் அதான் வாசனை... அப்பப்பா...
    I like the the promis(ing) note - தொடரும் சாத்தியம்: 90-100%

    பதிலளிநீக்கு
  4. பால்ய கால விவரிப்பில் அசந்து போனேன்
    ஏறக்குறைய அனைவரின் வாழ்விலும்
    இடமும் பெயரும் மாறி இருந்தாலும்
    நிகழ்வுகள் இப்படித்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
  5. எஸன்ஸ் ஆஃப் லைப்.. வாழ்க்கையின் சாரம்" தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  6. இளமைக்கால நினைவலைகளில்
    அமிழ்ந்துதான் போனேன் ஐயா
    அருமை
    தொடர்கின்றேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. குரோம்பேட்டை நியூ காலனியில் அதே காலகட்டத்தில் வாழ்ந்தவன் என்ற உரிமையில், கதையைத் தொடரும்படி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். (மனதால் குரோம்பேட்டை ரயில்வே பிளாட்பாரத்தில் நானும் அடிக்கடி வாழ்வது உண்டு!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! என்ன இப்படி சொல்றீங்க? ஓரளவுக்கு என்னால் இதை ஏத்துக்கவும் முடியுதே?!

      நீக்கு
  8. கதையா...? நிஜமா...? ஆனால் தொடர வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  9. அடுத்த பகுதிககான காத்திருப்புடன் நானும்....

    பதிலளிநீக்கு
  10. சட்டை இப்போ பழசாப் போச்சுப்பா. உடம்பும் மனசும் என்னிக்கோ பழசாப் போயிடுச்சு. சில சமயம் பழைய சட்டையைக் கழட்ட முடியுது. சில சமயம் நாம கழண்டுக்கணும். அதுவரை பழைய சட்டை மாட்டிக்க வேண்டியது தான். எஸன்ஸ் ஆஃப் லைப்.. வாழ்க்கையின் சாரம்"

    வாழ்க்கையின் சாரத்தை சொல்லும் பெரியவரும்,

    யாரு அவரை வீட்டை வித்து பசங்களுக்கு தானம் பண்ணச் சொன்னது? ஹி ஷுட் னோ இல்லையா? இந்தக் காலத்துல எல்லாரும் அறுபது எழுபது வயசு சர்வ சாதாரணமா இருக்குறப்ப அவங்க தானே அவங்க பராமரிப்புக்கான பாதுகாப்பைச் செய்யணும்?//

    இன்றைய நாட்டு நடப்பை சொல்லும் ரமாவும் மனம் கவர்ந்தனர்.

    //யார் மேலாவது பாவப்படணும்னா தினம் கண்ணாடிலே பார்த்து பட்டுக்கப்பா.."//

    முதுமையில் தனிமையில் இருப்பவர்களை அச்சப்படுத்தும் வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்கு வயதாகிகொண்டே போகிறது தெரிகிறது. இல்லை அபரிமிதமான நேரம் இருக்கிறது போல் தெரிகிறது. எப்படி ஆனாலும் நினைவலைகளில் மிதக்கும் போது கோர்வையாகவும் விட்டுவிட்டும் வரும் நினைவுகள் நெகிழ்ச்சியானவை. அதுவே ஒரு எழுத்தாளனுக்குக் கதைக்கு கருத்தாகிவிடுகிறது. கதையின் உட்கருத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படுகிறது. சொல்லமுடியாது, திருப்பம் என்று சொல்லி எதையாவது எழுதிக் கொண்டுபோகும் சாத்தியமும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திருப்பம் என்று சொல்லி எதையாவது எழுதிக் கொண்டுபோகும் சாத்தியமும் இருக்கிறது.
      .ஹ்ம்... அத்தனை நம்பிக்கை .. :-)

      நீக்கு
  12. Wow!!!! What a story. I love it. Make me to read it once again.

    Within few paragraphs, you have brought the cream of the life span. Nice way of writing.
    Please make it 100% of continuing it; not only that, let that 100% happen in next few days.
    Do not take much days to complete this story.

    பதிலளிநீக்கு
  13. ரகு எங்க இருக்கார். எங்க வேணா இருக்கலாம்.,வெகு நாட்களுக்குப் பிறகு உங்களைப் படித்ததில் மிக சந்தோஷம். நீங்கள் சொன்ன சில பெயர்களில் எனக்கும் தெரிந்தவர்கள் ராதாநகரில் இருந்தனர். அவர்களுக்கும் 50 வயதிருக்கலாம். அருமையாக எழுதுகிறீர்கள் துரை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. ரகு வந்தால் அமானுஷ்யம் இருக்கணுமே..... இனிமேல் வருமோ!

    பதிலளிநீக்கு
  15. "ஒரு வேளை அந்தப் பெரியவர்
    மாலதியின் தோப்பனார் ஆக இருப்பாரோ????!!!"

    "இல்லை, அவர் வேற."

    "அப்படியா. ? அது சரி, நீங்க யாரு ?"

    "நான்தான் ரகுவோட பெட்டர் ஹஆப் ."

    "ஓ...நீங்க தான் ரமாவா ?"
    "ஆமா.."
    "அப்படின்னா...உங்களுக்கு,

    ஆத்துக்காரரோட
    சின்ன வயசு
    சபலங்கள்,
    அதான் மாலதியோட மனசு போனதெல்லாம்,
    தெரியுமோ !!"

    "என்னது ? புதுசா என்னென்னவோ சொல்றேளே தாத்தா?"

    "என்ன தெரியாதா !
    ரகு சொல்லலையா???
    !!"
    "என்ன தாத்தா , சீக்கிரம் சொல்லுங்கோ."

    "எனக்கெதுக்கு பக்கத்தாத்து வம்பு ?

    நான் சொல்லப்போய், அப்பாதுரைக்கு அடி விழும்.
    நான் அம்பேல்."


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  16. //'எங்க வீட்டுல வெஸ்டன் எங்க வீட்டுல டெலிரேட் எங்க வீட்ல க்ரௌன் எங்க வீட்டுல கோனார்க்' என்று அவரவர் பீற்றிக்கொள்ள, தன் வீட்டில் மட்டும் டிவி பெட்டி வராத காரணத்தைக் கேட்டு அழுதது... //

    தத்ரூபமான வர்ணனை. அற்புதம், துரை!

    லாட்டரி பரிசை அவரிடம் கொடுக்க செல்லும் போது அந்த தாத்தா இறந்திருப்பார் என்று சினிமாத்தனமாக யூகிக்க முடிகிறது. அடுத்த பதிவு கண்டிப்பாக வருமா இல்லை வழக்கம் போல அசுவத்தாமன் கதை மாதிரி பாதியிலேயே திராட்டில் விட்டு விடுவீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திராட்டில் விட்டு.., இந்தத் தொடரைக் கேட்டு முப்பது வருஷமாவது இருக்கும். இதற்காகவே கதையை முடிக்கும் வைராக்கியம் :-)

      நீக்கு
  17. Durai Sir,
    When you mentioned the brand names of TV in those days, you have left the brand of Solidaire because in that TV only we could see the eyebrows of the news readers clearly.

    பதிலளிநீக்கு
  18. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
    வழக்கம் போல் 75 % நிஜமும் 25% கற்பனையும் கலந்து அந்தக் காலத்துக்கே எங்களை இழுத்துக் கொண்டு போகிறீர்கள். கதையில் வரும் துரை நீங்கள் தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விகிதம் மாறிப்போச்சு கவிஞரே.
      கதையில் வரும் பெயர்கள் மட்டுமே உண்மை.

      நீக்கு
  19. சாலிடர் டிவிக்கு கவாஸ்கர் விளம்பரம் செய்வார். மாடியில் நின்றுக் கொண்டு ஆண்டேனாவைத் திருப்பி திருப்பி வெறுப்பாகிய காலங்களை நினைவுப் படுத்திப் போகிறீர்கள் அப்பாஜி

    பதிலளிநீக்கு
  20. ஹா! ஓ ஹென்றி ஸ்டைல்!!!

    ஜெயகாந்தனோட ஒரு கதையில வயசான அம்மா பரிசு விழுந்த சீட்டை கைல பிடிச்சி தவிச்சிட்டு நிப்பாளே.. அதும் ஞாபகத்துக்கு வருது.

    பதிலளிநீக்கு
  21. ரொம்பவே தாமதமாய் வந்திருக்கேன். பெரியவர் ஶ்ரீமதியோட மாமாவோ? அல்லது அந்த துரை? எதுவானாலும் ரகு 20 பவுன் தங்கத்தை வைச்சுக்கப் போறானா? தானம் கொடுக்கப் போறானானு தெரிஞ்சுக்க ஆவல்!

    பதிலளிநீக்கு

  22. //ஜாயலுக்காஸ் தங்கப் புதையல் அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு//
    இப்படி ஒரு போட்டி நிஜம்மாவே இருக்கா? கதையை எப்படி முடிக்கப் போறீங்கனு யோசிக்கிறேன். ஏற்கெனவே நிறையக் கதைகள் பாதியிலே நிற்கின்றன. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் ஒரு வாரப்பத்திரிகையில் இந்த விளம்பரம் வந்திருந்தது.

      நீக்கு
  23. எல்லாவற்றுக்கும் காலம் வரும்// வசை பாடிய வாய் வாழ்த்தவும்.

    பதிலளிநீக்கு