2008/10/28

சந்திரிகையின் கதை

பூத்தூரிகையிலிருந்து:


முன் கதை (1) (2) (3) (4) (5) (6) (7) (8)பொக்கிஷக் கதை


ஒன்பதாம் அத்தியாயம்: பெண்டாட்டிக்கு ஜயம்.றுநாட் காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டந்தான். வீட்டில் அவளிட்டது சட்டம். அவள் சொன்னது வேதம். சோமநாதய்யர் ஏதேனுமொரு காரியம் நடத்த வேண்டுமென்று சொல்லி, அவள் கூடாதென்றால் அந்தக் காரியம் நிறுத்தி விடப்படும். அவர் ஏதேனும் செய்யக் கூடாதென்று சொல்லி அவள் அதைச் செய்துதான் தீரவேண்டுமென்பளாயின் அது நடந்தே தீரும்.

இங்ஙனம் முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி அவருக்கு அடிக்கடி மனவருத்தமேற்படுவதுண்டு. ஆனால், அந்த வருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார். "தெய்வத்தினிடம் ஒருவன் உண்மையான பக்தி செலுத்தப் போனால், அது அவனை எத்தனையோ சோதனைகளுக்குட்படுத்தும் என்கிறார்கள். அதினின்றும் ஒருவன் தனது பக்தியைச் சோரவிடுவானாயின், அவன் உண்மையான பக்தனாவனோ? உண்மையான பக்தியால் கடைசியில் எய்தப்படும் பயன்கள் அவனுக்குக் கிடைக்குமோ? நாம் இவளை ப்ரத்யக்ஷ தெய்வமாகவன்றோ பாவித்து நடத்துகிறோம். எனவே, இவள் ஏது செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். நாம் மனவருத்தப்படலாகாது" என்று தீர்மானித்துத் தம்மைத் தாமே தேற்றிக் கொள்வார்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி, "நாளை ஞாயிற்றுக்கிழமை தானே? உங்களுக்கோ கோர்ட்டு வேலை கிடையாது. ஆதலால் நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும்

(இனி வாசகர் மனதில்)


கதையாக்கம்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்


என் குறிப்பு: 1

கதை முற்றுப் பெறவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கதையை முடிப்பதற்குள் பாரதியார் காலம் சென்று விட்டதால், "சந்திரிகையின் கதை" முற்றுப் பெறவில்லை.

கதையைப் படித்து முடித்தபின், கதை நிறைவு பெறாத குறை மட்டுமில்லை, பாரதியையே முதன் முறையாக இழந்த சோகம் மனம் முழுதும் பரவியது.

முழுவதும் எழுதி முடிக்கப்பட்ட எத்தனையோ படைப்புகளை விட பாதியில் நின்று போன பாரதியின் இந்தப் படைப்பு என்னை மிகவும் பாதித்தது. கதைக் கருவில் மட்டும் புரட்சி இல்லை - அதைச் சொல்ல அவர் எடுத்தாண்ட முறைகளிலும் புரட்சியிருப்பதாகப் படுகிறது. அன்றைய நடைமுறையை கண்ணெதிரே கொண்டு வந்திருப்பதாகத் தான் நினைக்கிறேன். கதையைக் கண்டெடுத்துப் படித்ததில் ஏற்படாத நிறைவு, இதை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் ஏற்பட்டதாகவும் நினைக்கிறேன்.

இந்தக் கதையின் இறுதியில் வளரும் என்றோ முற்றும் என்றோ எழுதத் தோன்றவில்லை. வாசகர் மனதில் என்றும் நிலைக்கும் என்று நம்புவதால், மனதில் வளரும் என்று கருதி முடிக்கிறேன்.

உங்கள் எண்ணத்தைச் சொல்லுங்கள்.


என் குறிப்பு: 2

பல மாதங்களுக்கு முன் பூத்தூரிகையில் பதிவாக வந்த 'கோபாலய்யங்காரின் மனைவி' பொக்கிஷக் கதையில், கதாசிரியர் புதுமைபித்தன், பாரதியாரின் 'சந்திரிகைக் கதை'யைக் குறிப்பிட்டு, தம் கதையை 'பாரதியார் எழுதாத இரண்டாவது பாகமாக, பின் கதையாக'த் தெரிவித்திருந்ததை என் குறிப்பில் எழுதியிருந்தேன். உங்களுக்கு நினைவிருக்கலாம். விரும்பினால் அந்தக் கதையை மீண்டும் படியுங்கள்: கோபாலய்யங்காரின் மனைவி.

1 கருத்து: