2013/12/15

பேயாள்வான் புராணம்




    ஸ்.

என்ன அது? எதுவாகவும் இருக்கலாம்.

ஓசையாக இருக்கலாம். ஒரு அளவையாக இருக்கலாம். உணர்வாக இருக்கலாம். ஒரு வெளிப்பாடாக இருக்கலாம். மூச்சாக இருக்கலாம். காத்திருப்பின் வலியாக இருக்கலாம். வலிகளின் காத்திருப்பாக இருக்கலாம். இதோ அதோ உதோ எனப் பரவியிருக்கும் காலச்சுவடுகளின் ஒட்டுமொத்தக் கணக்காக இருக்கலாம். அண்ட அசைவுகளின் அதிர்வாக இருக்கலாம். நான் யாரென்பதன் அடையாளமாகவும் இருக்கலாம்.

நான் யார்?

விசித்திரமான கேள்வி. நான் யார் என்பதை எப்படி அடையாளப்படுத்துவது? என் பெயரை வைத்தா? என் நடத்தையை வைத்தா? என் குணாதிசயங்களை வைத்தா? என் பெயர் இன்னது என்றால் என்னை உங்களுக்குத் தெரிந்துவிடுமா? நான் ஒரு அயோக்கியன் என்றால் என் அடையாளம் வெளிப்படுமா? நான் என்பதே ஒரு குறுகிய விளக்கமாகப் படுகிறதே? ஆன்மாவைத் தெரிந்தவர்களுக்கு ஆள் பற்றிய அக்கறையில்லை. வேண்டுமானால் ஆன்மாவைத் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்களேன்? நான் நீ அவன் அவள் அது எல்லாமே... எல்லாமே உண்டு. அனைத்துமே இல்லை. ஒரு பிறவி ஒரு வாழ்க்கை என்று சொன்ன பலர், தங்கள் முதுகெலும்பு ஒடிந்து மடங்கி ஆலவிழுதுகளில் பரிணாமங்கள் மாறும் காலத்துக்குத் தொங்கிச் சுருங்கி இன்று வௌவால்களாகப் பறந்து கொண்டிருப்பதை அறிவேன். பாதுகாக்கப்பட்ட அறிவு. சர்வம் யக்ஞேன கல்பதாம். அறிதலே வேள்வி. ஆன்மாவை உடைத்தால் அதில் எத்தனை நான்கள்? இதில் நான் என்று எந்த நானைச் சொல்லிக் காட்டுவேன்?

நான் செய்யப் போவதை வைத்து என்னை அடையாளம் காணுங்கள். நடக்கப் போவதில் மட்டுமே எனக்கு நம்பிக்கை. நடந்தவை பற்றி எனக்கு அக்கறையில்லை. உங்களுக்குக் கண்கள் முன்புறம் இருப்பதன் காரணம் அதுதான் தெரியுமா? 'முன்புறம் என்றால் என்ன?' என்று என்னைப் போல் குதர்க்கமாகக் கேட்பீர்களானால் உங்கள் தலையைச் சுக்கு நூறாகச் சிதற வைக்க முடியும் என்னால். செய்ய வேண்டியதில்லை. நான் அப்படிச் சிந்தித்தாலே போதும். உங்கள் தலை ஆயிரம் சுக்கலாக ரத்தம் தெறிக்க வெடிக்கும்.

நீங்கள் யாராக இருந்தாலும் சரி. மூன்று வயதுக் குழந்தையாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கலாம். பனிரெண்டு வயதில் சமர்த்தாக தாத்தாவின் கால்களை சோர்வு தீர விளையாட்டாகப் பிடித்து விட்டுக் கொண்டிருக்கலாம். இருபது வயதில் அப்பா பேச்சைக் கேட்டு அம்மாவை அழவைத்துக் கொண்டிருக்கலாம். முப்பது வயதில் காதலனுடன் மூச்சுமுட்டும் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம். நாற்பது வயதில் கனவுகளைத் தொலைத்து ஏங்கிக் கொண்டிருக்கலாம். ஐம்பது வயதில் உடல் இளைக்க நடந்து கொண்டிருக்கலாம். அறுபது வயதில் மனம் ஆறத் தவித்துக் கொண்டிருக்கலாம். எழுபது வயதில் போலியாக மனிதத்தைத் தேடிக் கொண்டிருக்கலாம். எண்பது வயதில் மூச்சை நிறுத்த முயன்று கொண்டிருக்கலாம். எல்லாமே உங்கள் சுமைகள். நீங்கள் சீவ வேண்டியப் பேய்த்தலைகள். நீங்கள் யாராக இருந்தாலும் எனக்கு அக்கறையில்லை. எனினும், நான் நினைத்தால் அத்தனையும் ஸ்ஸ்ஸ்ஸ். அவ்வளவுதான்.

சில நேரம் தலை வெடித்துச் சிதறாமல் இருக்கவும் சிந்தித்திருக்கிறேன். ஓரிரு பேய்வெட்டிகளைக் கண்டெடுக்க. பராமரிக்க.

அந்தக் குழப்பக் கணத்தில் தான் இப்போது காத்திருக்கிறேன். காத்திருக்கிறேன் என்றால் காலம் பரிமாணம் எல்லாவற்றுக்கும் அடங்காத ஒரு காத்திருப்பு. பரீக்ஷித்துக்கான சுகரின் காத்திருப்பு. ஏறக்குறைய. இது ஒரு பேயாள்வானுக்கான காத்திருப்பு எனும் இம்மி வித்தியாசம். உங்களுக்குப் புரியாமல் இதை விளையாட்டாக எடுத்துக் கொண்டால், உங்கள் தலை வெடிக்கிறார்போல் எனக்குச் சிந்தனை தோன்றட்டும். என் குழப்பக் காத்திருப்புக்கு வருகிறேன்.

இதோ இருக்கிறானே இளைஞன், இவன் பெயர் ஆதி.

இப்போது இளைஞனாக இருக்கிறானே தவிர, இவன் முதியவனாக இருந்த காலத்திலிருந்தே இவனையறிவேன். குழம்பித் தலை வெடிக்காதீர்கள். என் சிந்தனைக்கு வேலையில்லாமல் போய்விடும்.

இளைஞன் தான், எனினும் தற்கொலை செய்து கொள்வது பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆதியின் மனதில் நிறைய பேய்கள் இருப்பது அவனுக்குத் தெரியும். எனக்கும். இவனுடைய அம்மா ஒரு.. என்ன வார்த்தை அது?.. தற்காலச் சொல்... அ.. இவனுடைய அம்மா ஒரு லோலாயி. இவனுடைய அப்பா ஒரு மிருகம். இவனுடைய பாட்டன் பற்றிக் கேட்கவே வேண்டாம். பெரும் பாட்டன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. இவனுடைய மாமன் ஒரு உதவாக்கரை. இவனுடைய ஒரு சகோதரன் தற்கொலை செய்து கொண்டவன். எனக்குத் தெரியும். இன்னொரு சகோதரனோ இவனையே கொலை செய்யத் துணிந்தவன். இதைவிடக் கொடுமைகளைப் பார்த்திருக்கிறான். எப்படியோ போகட்டும், எதையும் தவிர்க்க முடியாது.

எனக்கு ஆதி பற்றிய கவனம் இப்போதைக்கு.

தன்னம்பிக்கை குறை, ஏமாற்றம், நம்பிக்கை துரோகங்கள், சொந்த ஆணவத் திமிரின் விளைவுகள், இளவயதுத் துயரங்கள், தகாத உறவுகள்... என்று மனச்சுமையின் அழுத்தத்தில் தவித்துக் கொண்டிருக்கிறான். தன் மனதை ஆக்கிரமித்த அரக்கர்களை அழிக்க வழி தெரியாமல் துடித்துக் கொண்டிருக்கிறான். இவன் துடிப்பதும் நான் முடிப்பதும் ஒன்றும் புதிதல்ல. ஆன்மா நம்பிகளைக் கேட்டுப் பாருங்கள். பாழ் தரும் ஊழ், அறிவீரோ?

இவன் தலையை வெடிக்க வைத்து இவனைக் காப்பாற்றலாம். அல்லது இந்தச் சுமைப்பேய்களை வெட்டியொடுக்க வழி காட்டலாம். ஓ.. நான் யாரென்று இப்போது அடையாளம் காட்டத் தெரிந்துவிட்டது.

நான் ஒரு வழிகாட்டி. எமக்குத் தொழில் வழிகாட்டல்.

ஆதிக்கு வழிகாட்டப் போகிறேன். என் வழிகாட்டலையும் மீறி அவன் தலை வெடித்தால் வெடிக்கட்டும். எல்லாவற்றுக்கும் நான் பொறுப்பாக முடியாது. இதற்கு முன் ஆதிக்கு நிறைய வழி காட்டியிருக்கிறேன். என்னைப் போல் ஒரு வழிகாட்டி ஆதிக்குக் கிடைக்கப் போவதில்லை. புரிந்து கொள்கிறானா பார்ப்போம்.

நான் அவனுக்கு வழிகாட்டி என்றால், அவன் எனக்கு ஒரு வகையில் தலைவன் போல. ஒரு நேர்மையானத் தொண்டனாக இருக்கப் போகிறேன்.

மெள்ள அவனை நெருங்கினேன். "ஹாய்" என்றேன். "மே ஐ?"

தலையாட்டினான். அருகில் அமர்ந்தேன். "வாட் ஆர் யு ஹேவிங்?"

"கின்னஸ்" என்றான். வாய் குழறியது. நிறையக் குடித்திருப்பான் போலிருக்கிறது. எதிரே சிறிய கஞ்சா சிகரெட்டுகள் வைத்திருந்தான்.

"எதையாவது மறக்க விரும்புறியா?"

"என் வாழ்க்கையில் நான் மறக்க விரும்புவதற்கு.. இந்த உலகின் மதுவும் கஞ்சாவும் போதாது"

"ட்ரபிள்?"

"டிபென்ட்ஸ்"

"ஆன் வாட்?"

"பெர்ஸ்பெக்டிவ்" என்றான்.

"ஹா!" என்றேன். என்னைப் போல சிந்திக்கிறான். தேவையில்லையென்றாலும் என்னுள் சிறு நம்பிக்கை பிறக்கிறது. நம்பிக்கை எல்லாம் கோழைகளுக்கு. வழிகாட்டிகளுக்குத் தேவையில்லை.

"கேன் ஐ பை யு எ ட்ரிங்க்?" என்றேன்.

"ஏன்?" என்றான்.

"டு ரிகனெக்ட். உன்னை மறுபடி சந்திப்பதைக் கொண்டாட. உன்னை எனக்கு நன்றாகத் தெரியும்" என்றேன். "உன் சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறேன். ஐ கென் ஹெல்ப் யு ஸ்லே யுர் இன்னர் டீமன்ஸ்"

சிரித்தான். "வாட் த ஃபக் டு யு னோ அபவ்ட் மை டீமன்ஸ்?"

சிரித்தேன். "மோர் தென் யு திங்க்"

"என்னுடைய மனப்பேய்கள் கொடுமையானவை. ரத்தம் குடிப்பவை"

"இதை விடக் கொடுமையான பேய்களை நீ ஒடுக்கியிருக்கிறாய். நான் உதவியிருக்கிறேன்"

திடீரென அழத் தொடங்கினான். "சாக விரும்புகிறேன். என் சிறு வயது முதலே வாழ்க்கை என்னை வெறுத்து வருகிறது. இப்போது நான் வாழ்க்கையை வெறுக்கிறேன்"

காத்திருந்தேன். அழுகை நின்றதும், "ஐ'ம் ஆதி" என்றான். கை நீட்டினான்.

"மீதி?" என்றேன், கை பிடித்து.

"வாட்?"

"உன்னுடைய மீதிப் பெயர்?" புன்னகைத்தேன்.

"நீங்க என்ன சொல்றீங்க?"

"உனக்கு அப்படிப் பெயர் வரக் காரணமிருக்கிறது. உன் பெற்றோர்களின் அறிவார்ந்த தேடலில் உதித்த பெயர் என்று நினைத்துவிடாதே. அவர்களை நான் நன்கறிவேன். உன் தாய் கபடநடிகை. உன் தந்தையோ மடக்கழுதை. மறந்து விட்டாயா?". பலமாகச் சிரித்தேன்.

நான் பலமாகச் சிரித்தால் சங்கடம். ஆயிரம் பேய்களின் அழுகை. உலக மரங்களின் அத்தனை கிளைகளும் வரிசையாக முறியும் சத்தம். உலகின் அத்தனை பிணங்களும் எரியும் படபடப்பு. உலகின் அத்தனை காற்றும் ஒரே கணத்தில் அடங்கும் அமைதி. அத்தனையும் கலந்தாற்போல் ஒரு ஓசை. என் சிரிப்பைக் கேட்ட அதிர்ச்சியில் சில உயிர்கள் நின்றுவிடுவதையும் பார்த்திருக்கிறேன்.

இவன் அதிரவில்லை. "ஏன் சிரிக்கிறீர்கள்? என் பெற்றோர்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை.. அவர்கள் பற்றிய உங்கள் கருத்தில் எனக்கு அக்கறையில்லை" என்றான் சாதாரணமாக. "எனி வே, யார் நீங்க? என் பெற்றோர்களை எப்படித் தெரியும்?"

இவன் என் ஆதித்யனே. சந்தேகமில்லை. மறுபடி சிரித்தேன். "உன் பாட்டனுக்குப் பாட்டனையும் தெரியும்". கஞ்சா சிகரெட்டை எடுத்துக் கொடுத்தேன். "என்னைத் தெரியவில்லை?"

விழித்தான். "தெரியவில்லை"

"கிடக்கட்டும்.. நீ யார் தெரியுமா?"

"அதான் சொன்னேனே.." கஞ்சா சிகரெட்டை உள்ளிழுத்தான்.

சட்டென்று அவன் முகத்துக்கு நேராக முகம் வைத்தேன். "என்னை நன்றாகப் பார்".

என்னை உற்றுப் பார்க்கத் தொடங்கினான். அவன் முக ரேகைகள் பரந்து விரிந்து தேய்ந்து வெடித்துப் பரவின. கண்களின் தீவிரத்தில் காலத்தைக் கடந்த பக்குவம். பார்வையின் தேடலில் பயண வேகம். அடர்ந்த காட்டில் மேகம் மறைத்த நிலா. எங்கோ புலப்பட்ட ஒற்றையடிப் பாதை. அரையிருளின் இலை நிழலில் அமைதியின் அழிவு. ஆல் வேல் புளி நாகம் என்று மரப்பேதமில்லாமல் ஆங்காங்கே தொங்கும் பிணங்களின் கண் பிதுங்கல். அரையாடையுடன் காற்றில் வழுக்கிச் செல்லும் அழகி. சிதையில் எரியும் பிணங்களின் புகையுடன் கலக்கும் மிருகங்களின் சடலமணம். உயிரைப் பிழியும் ஓலம். இவற்றினூடே தந்தையின் கை பிடித்து நடக்கும் சிறுவன்...

பயந்து குழம்பினான். "யோகி...?" அவன் குரல் நடுங்கியது. என்னைப் பார்த்தப் பார்வையில் அடக்கமும் கலக்கமும். "குரு?"

"ஆமாம்.. நீ யாரென்று தெரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. நீயும் நானும் நெடும்பயணம் செய்யப் போகிறோம்"

"பயணமா.. எங்கே?"

"பயப்படாதே. தலைவனாகிய உனக்கு பயமே கிடையாது. நீ விரட்டிய பேய்களைப் பற்றி அறிந்து கொள். என்னுடன் வா, விக்ரமா" என்றேன்.

16 கருத்துகள்:

  1. பெயர் ஒன்றுதான்.

    அதை கதையின் ஆங்காங்கே ஒளித்து வைத்திருக்கிற சாமர்த்தியம்.

    பதிலளிநீக்கு
  2. சாமர்த்தியமும் நீங்களும் ஒரே ஊர் ஜீவி சார்.

    யாரோ எறிந்த தங்கத் துண்டுகள். பொறுக்குவது மட்டுமே பெற்ற சலுகை.

    பதிலளிநீக்கு
  3. பொறுக்குவது//
    அந்த சிரமே இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல
    அந்த பேயைக்கொஞ்சம் மூவ் பண்ணுங்க.
    கமெண்ட் பொடன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னும்.

    விக்ரமாதித்யன்வேதாளம் கதையை ஒரு வெண்பாப ப ப பா பா பாவா வா சொல்லி இருக்கலாலலலலலலா மோ ??
    what subbu thatha what is the matter?

    (ஒண்ணுமில்லை, பேய்க்கதை அப்படிங்கறதுலே கொஞ்சம் குரல் நடுக்கம் .
    ஏண்டி கிழவி, இன்னிக்கு தூக்கம் வருமோ ?
    சுப்பு தாத்த்த்த்த்தா.

    பதிலளிநீக்கு
  4. பேய்க்கதை....
    விபரீதமாய் கதையை நகர்த்திச் செல்வதில் ஒரு சாமர்த்தியம்...

    பதிலளிநீக்கு
  5. அட வேதாளமே! இப்படியெல்லாம் பேச, சிந்திக்க எங்கே கற்றுக்கொண்டாய்!!!!!

    பதிலளிநீக்கு
  6. விக்கிரமாதித்யன் கதையா? அதை ஏங்க இவ்வளவு பயங்கரமா.... சரி அடுத்ததைச் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு

  7. நீங்கள் கதை சொல்லும் பாணி அருமை. இதுவா அதுவா எனச் சிந்திக்க வைத்து இதுவுமில்லை அதுவுமில்லை வேறெதுவோ எனச் சொல்லிப் போகும் உங்கள் சாமர்த்தியம் நான் சிலாகிப்பது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சிக்கலான அமைப்பு. 'நான்' யார் என்று தெரிந்ததும் மறுபடி படித்தேன்.

    ஜீவி ஸார்...!

    பதிலளிநீக்கு
  9. Changed quickly from Lolayee to Kabada Nadigai for amma !!!

    பதிலளிநீக்கு
  10. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    என்னங்க ஹேமா இப்படிக் கேக்குறீங்க? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ம்பாங்க. அஞசாத கண்ணனான நம்ம ஆதி பாத்தது அத்தனையும் அசல் பேயாச்சே? அசலை படிச்சுட்டு நானே காக்க காக்க கனகவேல்னு ஒதுங்கிட்டேன்..

    பதிலளிநீக்கு
  11. //உலகின் அத்தனை காற்றும் ஒரே கணத்தில் அடங்கும் அமைதி. //
    அற்புதமான வார்த்தை பிரயோகம். நல்ல உவமை. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  13. படிக்கிறச்சே ஒரு நிமிஷம் லா.ச.ரா. நினைவில் வந்தார். எப்படி எழுதறீங்க. எல்லாமே ஒண்ணுதான் என்பதை எவ்வளவு எளிதாய்ச் சொல்லிட்டீங்க! மிக அருமை. எழுதி இருக்கும் நடை அதை விட அருமை!

    லா.ச.ரா.வின் பாற்கடல் நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
  14. அடர்ந்த காட்டில் மேகம் மறைத்த நிலா. எங்கோ புலப்பட்ட ஒற்றையடிப் பாதை. அரையிருளின் இலை நிழலில் அமைதியின் அழிவு. ஆல் வேல் புளி நாகம் என்று மரப்பேதமில்லாமல் ஆங்காங்கே தொங்கும் பிணங்களின் கண் பிதுங்கல். //

    அப்பா!

    பதிலளிநீக்கு