2013/03/31

எழுத்தின் தலைமுன்னுரை [-]

    சில தேர்வுகளின் நியாயங்கள் புரிவதேயில்லை.

ஒரே செடியில் பூத்திருக்கும் அழகு ரோஜாக்களில், சில தேவனை அலங்கரிக்கவும் சில பிணங்களை அலங்கரிக்கவும் தேர்வாகின்றன. சில காற்றில் சிதறிச் சாக்கடைச் சேற்றில் சேர்கின்றன. சில எங்கும் சேராமல் வாடி மடிகின்றன.

இங்கே ரோஜாவின் தேர்வு என்று எதுவும் இல்லை. ரோஜாவின் தவறு என்றும் எதையும் சொல்ல முடியவில்லை. ஒருவேளை.. ஒருவேளை.. தொன்மைச் சித்தாந்தங்கள் தழுவிய மேற்தட்டு நம்பிக்கைகளினூடாய்.. எல்லாம் வல்ல தீனதயாபரனின் தீர்க்கத்திட்ட ஆழ்கடலில், இந்த ரோஜாக்களின் நிலையும் அலைத்துளியென ஏற்கப்போமோ?

வில்சன் சகோதரர்கள் இருவர் - ஆல்பர்ட் வில்சன், ராஜர் வில்சன்.

ரோஜா என்ற முகப்புடன் தொடங்கியதன் பொருட்டு இங்கே வில்சன் சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணம் நெல்லளவும் தோன்றுமுன் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

சகோதரர்கள் இருவரும் கயவர்கள். அக்கிரமக்காரர்கள். திருடர்கள். பாதகர்கள். கொலைகாரர்கள். குடும்ப மானத்தை, பொதுக் கண்ணியத்தை, மனித நேயத்தை, வேரறுக்க வந்த வஞ்சக்கோடறிகள். தணலில் தள்ளி முள் சாட்டையால் அடிக்கப்பட வேண்டிய அரக்கர்கள். இரும்புச் செருப்பணிந்த இரண்டுக் கால்களாலும் உதைத்து மிதித்துத் தேய்த்து நசுக்கப்பட வேண்டிய நச்சுப்பாம்புகள். விஷம் பருகக்கொடுத்து, நெஞ்சிலே சுட்டு, பின் பலமுறைத் தூக்கிலிட்டுச் சாகடிக்கப்பட வேண்டிய மூர்க்கர்கள்..

கருவான நல்லெண்ணம் ஏதும் கலைந்திருக்கும்.

எனினும்.. இதை முழுதும் படித்ததும்.. ஏதோ ஒரு வசந்தத்தின் கள்ளமறியாக் கவர்ச்சியில், வில்சன் மொட்டுக்கள் புதிதாய் மலரவும் பொதுவாய் மணக்கவும் காத்திருந்தன என்பது மட்டும்.. என் போல் பகுதிநேரச் சிந்தனையாளர்கள் உள்ளிட்டச் சமூக உணர்வுள்ளோர் அனைவரையும்.. மணல் கலந்த மூச்சுக்காற்றாய்த் திணற அடிக்கும் என்பதை நீங்கள் உணரக்கூடும். நடுங்கக்கூடும்.விபரீதம் [-]

    ர்ட் வில்சன் ஒரு விவசாயி. அமெரிக்கா வந்த வில்ப்ரெட் வில்சனின் மூன்றாம் தலைமுறைச் சந்ததி.

மூன்றுத் தலைமுறைகளாகப் பஞ்சமும் குற்றமும் கலந்தப் பாமரத்தனம் மட்டுமே இந்த நாடோடிப் பரம்பரையின் அடையாளமாக இருந்தது. பர்ட் அதை மாற்ற விரும்பினார். ஆண்டவனின் எழுத்தை அழித்தெழுத விரும்பினார்.

நெப்ரேஸ்கா மாநில அரசு வழங்கிய மானிய நிலத்தில் சோளப் பயிர் செய்து சம்பாதித்து, தன் பரம்பரையின் விதியை மாற்ற விரும்பி உழைத்தார். பக்கத்து ஊரின் விவசாயக் குடும்பத்து அழகான பெண் கேதரினைக் காதலித்து மணந்தார். மேரிமாதா மனமவுந்து அளித்தக் காணி நிலத்திடையே ஒரு குடிசை, ஓரமாய்க் கேணியருகே நான்கு பர்ச், பனிரெண்டு ஆப்பிள் மரங்கள் அமைத்துக் குடி புகுந்தார். நல்முத்துச் சுடர் போல் நிலவொளி முன்வர, கத்துங் குயிலோசை காதில் விழ, சித்தங் குளிர்ந்து வாழ்ந்தனர் தம்பதியர் சில காலம். பாடிக் கலந்திட்ட அவர்தம் கூட்டுக் களிப்பு கொணர்ந்ததோ ஆறு கவிதைகள். படிக்கப்படாமலே தொலைந்தவை இரண்டு. பிறகு பிறந்தவள் பானி. சில வருடங்களுக்குப் பின் ஆல்பர்ட் பிறந்தான். பிறகு ராஜர். கடைசியில் விக்டர்.

பிள்ளைகளைச் செழுமையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற முனைப்பில் கடுமையாக உழைத்தனர் பெற்றோர். பரம்பரை வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரே இடத்தில் பத்து வருடங்கள் நிலைத்துச் சாதனை புரிந்தார் பர்ட். பானியைத் தினம் தொடக்கப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவதில் பர்டுக்குப் பெருமை. இதன் காரணமாகவேனும் கல்வித்தளத்தில் காலடி பதிக்கும் வாய்ப்பு கிடைத்த நிறைவுடன், பள்ளித் தேவாலயத் தேவன் காலடியில் தினமொரு ரோஜாவை வைத்து நன்றியுடன் வணங்கி வந்தார்.

அந்த வருடம், கடும் பனி தொடர்ந்து இனக் கலவரம் தொடர்ந்து வறட்சி அவர்களை வாட்டியது. கடும்பனியில் பயிரை இழந்தார்கள். இனக் கலவரத்தில் நிலத்தை இழந்தார்கள். வறட்சியில் சேமிப்பை இழந்தார்கள். "இவை இறைவனின் நல்லொழுக்கச் சோதனை" என்ற பர்ட், நகருக்குச் சென்று வேலை தேடத் தீர்மானித்தார். குடும்பத்தாரை அழைத்து விவரம் சொல்லி விடைபெற்றார்.

    இருநூறு மைல் தொலைவிலிருந்த சிகாகோ நகருக்கு எப்படியோ வந்து சேர்ந்தார் பர்ட். வந்த நாளே யூனியன் ரயில் நிலையத்தில் கூலி வேலை கிடைத்தது. அதைத் தொடர்ந்து ரயில் நிலைய அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் வேலை, இரவில் கடைகளைச் சுத்தம் செய்து காவல் காக்கும் வேலை, என மேலதிகமாக உழைத்துத் தினம் பதினைந்து இருபது டாலர் வரை சம்பாதிக்கத் தொடங்கினார். தன் செலவுக்கு மூன்று டாலர் எடுத்துக் கொண்டு, வீட்டுச் செலவுக்குப் பத்து டாலர் அனுப்புவார். மிஞ்சியதை பிள்ளைகளின் கல்லூரிப் படிப்புக்காகச் சேமித்தார்.

ரயில் நிலையத்திலேயே தூங்கிய பர்ட், வங்கிக் கணக்கு எதுவும் இல்லாததால் தனக்கு மட்டுமே தெரிந்ததாக எண்ணிய ரகசியப் பொந்து ஒன்றில் சேமிப்பை மறைத்து வந்தார். ஆறாம் மாதம் அவருடைய சேமிப்பெல்லாம் கத்தி முனையில் களவு போனது.

அடுத்த வாரம் கேதரினிடமிருந்து கடிதம் வந்தது. கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் இன்னொருவரைத் திருமணம் புரிவதாகவும், நான்கு பிள்ளைகளையும் அழைத்துப் போகச் சொன்னது கடிதம். உடன் விவாகரத்து மனு.

கெனால் தெரு அடிவாரத்தில் புறம்போக்குக் குடிசை ஒன்றை அரை டாலர் தினவாடகைக்குப் பிடித்தார் பர்ட். உடனே பிள்ளைகளை அழைத்து வந்தார். பானியையும் ஆல்பர்டையும் மேட்டுத் திருச்சபைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்.

    வீட்டில் ஆல்பர்ட் தினம் பானியை அடிக்கத் தொடங்கினான். ராஜர் அதைப் பார்த்துச் சிரிப்பான். தடுக்கப்போன விக்டர் அடிபட்டுக் கிடப்பான். வீடு திரும்பிய பர்ட் தினம் சமாதானம் செய்து பிள்ளைகளுக்கு படிப்பினைக் கதைகள் சொல்லி, கிடைத்த கூலியில் வாங்கி வந்த சோற்றை ஊட்டித் தூங்கச் செய்வார்.

சில வாரங்கள் பொறுத்து பானியின் ஆசிரியர் சிஸ்டர் கரீன், பர்ட்டைத் தேடி வந்தார். "பானி ஏன் தினம் பள்ளிக்குக் காயங்களுடன் வருகிறாள்?" என்று விவரம் கேட்டார். தன் சகோதரன் அடித்ததாக பானி சொல்லியிருந்தாலும் அதை நம்பவில்லை கரீன். வீட்டில் உண்மையைத் தெரிந்து கொண்டதும், "பானியை எங்கள் சர்ச்சில் வளர விடுங்களேன்?" என்றார். கூட்டிக் கழித்துப் பார்த்த பர்ட் சம்மதித்தார். தானும் பானியுடன் போவதாக விக்டர் அடம்பிடிக்க, கரீனும் சம்மதிக்க, இருவரையும் அனுப்பி வைத்தார். இறைவனுக்கு நன்றி சொல்லி, ஒரு வருடத்துக்கான தேவாலய மெழுகுவர்த்திச் செலவை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

சில மாதங்களில் எதிர்க்குடிசையில் இளைய சகோதரி மரியாவுடன் வாழ்ந்து வந்த லீலாவின் நட்பு கிடைத்தது. லீலா சாராயத்துடன் சுகத்தையும் வியாபாரம் செய்து வந்தது பர்டுக்குப் பிடிக்கவில்லையெனினும் இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு காதலானது. லீலா தொழிலை விடமுடியாது என்று திட்டவட்டமாகச் சொன்னாள். காலப்போக்கில் அவள் மாறலாம் என்ற எண்ணத்துடன் பர்ட் லீலாவை மணந்து கொண்டார். பிள்ளைகளுடன் லீலா வீட்டில் குடியேறினார்.

    இறைவன் உருட்டியப் பகடைகளாய் ஓடின வருடங்கள்.

திருத்த எண்ணிய பர்ட் லீலாவுடன் சேர்ந்து கொண்டார்.

ஒன்பது வயதில் லீலாவுக்கு அடியாளானான் ஆல்பர்ட். அடியார்க்கடியாளான லீலா, அவனை மெச்சி நிழல்வேலை நுட்பம் பல அருளினாள். அதன் பலனாய் பத்து வயதில் சில்லறைத் திருட்டுக்கள் செய்தான். பனிரெண்டு வயதில் தம்பி ராஜரைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டான். இருவரும் கார் பேட்டரி, பெட்ரோல், சக்கரங்கள் என்று திருடி விற்றார்கள். சின்னம்மா லீலாவுக்கு அவ்வப்போது பணம் வசூலித்தார்கள், ஆள் பிடித்தார்கள். பதினாலு வயதில் ஆல்பர்ட் முதல் முறையாக கத்தியால் ஒருவரைக் குத்திவிட்டுத் தலைமறைவானான்.

லீலாவின் சாராய வினியோக வேலைகளை இப்போது ராஜர் கவனிக்கத் தொடங்கினான். சிகாகோ ரவுடிக் கூட்டங்களின் நட்பு கிடைத்தது. கொலராடோவிலிருந்து கஞ்சா கடத்தி சிகாகோ கூட்டத்திடம் கொடுத்து வந்ததில், பணமும் பருவப் பெண்களின் நட்பும் கிடைத்தது. அவர்களுக்காக நிழல் வேலைகள் செய்யத் தொடங்கினான். டிசம்பர் விழா நாட்களில் ஒரு போலீஸ்காரரின் நட்பும் கிடைக்க, சிசரோ வட்டக் காவல் நிலையத்துக்கு மறைவாக மது, மாது போதைப் பொருள் சப்ளை செய்யத் தொடங்கினான். சிசரோ வட்டத் திருட்டுக்கள் அட்டூழியங்களில் ராஜருக்குப் பெரும் பங்கிருந்தது.

ஒரு வருடம் பொறுத்துத் திரும்பிய ஆல்பர்ட், லீலாவின் வட்டத்தில் தம்பி நிலையானதைக் கவனித்தான். மேற்கே போவதாகவும் தன்னுடன் வருமாறும் அழைத்தான். ராஜர் மறுத்துவிட, ஆல்பர்ட் கலிபோர்னியா பயணமானான்.

    சில வருடங்கள் ஓடின. வாலிப ஆல்பர்டும் ராஜரும் விசித்திர சூழ்நிலையில் ஒன்று சேர நேர்ந்தது.

வளர்ந்த பானி, பிரபல சமூகச்சேவைக் குழுமத்தில் துணை மேலாளராகப் பணிபுரிந்தபடி தேவாலயக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

தன் பிள்ளைகளின் செயல்கள் எதையும் தடுக்க இயலாதிருந்த பர்ட், திடீரென்று லீலாவை விவாகரத்து செய்தார். சாராய வியாபாரத்திலிருந்து விடுபட்டார். பழையபடி தன் கூலிவேலையில் கவனம் செலுத்தி வந்தார். விவரிக்க இயலாத சூழ்நிலையில் பானியின் வீட்டெதிரே ஒரு நாள் பிணமாகக் கிடந்தார்.

பர்ட் மரணம் பற்றி எதையும் தீர்மானிக்க இயலாமல் ஆறு மாதங்களில் வழக்கை மூடிவிட்டது போலீஸ். பர்ட் பெயரில் லட்சம் டாலர் காப்பீட்டுத் தொகை இருப்பதை அறிந்த சிசரோ போலீஸ்காரர், அதை ராஜரிடம் தெரிவித்தார். அந்தப் பணம் பானிக்குச் சேர வேண்டும் என்று சில மாதங்கள் முன்பு பர்ட் சத்தியப் பிரமாணம் செய்து எழுதிக் கொடுத்ததைத் தெரிவித்து, பானியிடம் பணத்தைக் கொடுப்பதாக அறிவித்தது இன்சூரன்சுக் கம்பெனி.

பானியுடன் பணத்துக்காகச் சண்டை போட்டுக் கொண்டிருந்த ராஜருக்கு ஆல்பர்ட் திடீரென்று தோன்றியது வியப்பாக இருந்தது. லீலாவின் தங்கை மரியாவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் ஆல்பர்டுக்கு விஷயம் தெரிந்த விவரம் புரிந்து கொண்ட ராஜர், அண்ணனுடன் சேர்ந்து கொண்டான். அப்பாவின் பணம் பிள்ளைகளுக்குச் சொந்தம் என்றும், பணத்தைத் தராவிட்டால் கொலை செய்வதாகவும் பானியை இருவரும் மிரட்டினார்கள்.

சமரசம் செய்ய விரும்பிய பானி ஒரு நிபந்தனை விதித்தாள். பணத்தில் தனக்கு ஒரு சென்ட் கூட வேண்டாமென்றும், சகோதரர்கள் இருவருக்கும் தலைக்குப் பத்தாயிரம் டாலர் உடனே தருவதாகவும், தீய வழியை விட்டுத் தன்னுடன் ஐந்து வருடங்கள் தேவாலயத் தொண்டாற்றினால் மிச்சப்பணம் முழுதையும் இருவருக்குமே பகிர்ந்தளிப்பதாகவும் சொன்னாள். தன் சகோதரர்களை எப்படியாவது நல்வழிக்குத் திருப்ப விரும்பினாள். தங்கள் தந்தை குடும்பத்துக்காகப் பட்டக் கஷ்டங்களையும் அவருடையக் கனவுகளையும் எடுத்துச் சொல்லி உருக்கமாக வேண்டினாள்.

வசியமாகப் பேசி ஆல்பர்டிடம் வழக்குப் போடத் தூண்டினாள் மரியா. பிள்ளைகள் அனைவருக்கும் இருபத்தொரு வயதாகிவிட்டதால், தனக்கு மணமாகாத நிலையில் பர்ட் யாருக்கு வேண்டுமானாலும் இன்சூரன்சு பணத்தை எழுதி வைக்கலாம், வழக்கு செல்லாது, என்றார் வக்கீல்.

சகோதரர்கள் வேறொரு திட்டமிட்டனர்.

இளைய சகோதரன் விக்டர், தன் பரம்பரை தொடர்பே வேண்டாமென்று உயர்நிலைக் கல்வி முடித்ததும் புகழ்பெற்ற கிழக்கத்திய கல்லூரியில் தகுதிசார் உதவித்தொகை பெற்றுப் படித்து வந்தான். தன் குடும்ப விவரங்களை மறைத்து, மறந்து, படிப்பில் கவனமாக இருந்தான். பானிக்கு மட்டுமே விக்டரின் இருப்பிடம் மற்றும் வாழ்முறை விவரங்கள் தெரியும்.

பானியின் வீட்டை அவளறியாமல் தேடிய ஆல்பர்ட் ராஜர் சகோதரர்களுக்கு, விக்டர் பற்றிய விவரங்கள் கிடைத்தன. பணம் முழுதையும் தராவிட்டால் விக்டரைக் கொன்று விடுவதாகப் பானியிடம் சொல்ல, அவள் நடுங்கினாள். தந்தை பர்ட் குடும்பத்துக்காகப் பட்ட கஷ்டங்களைச் சொல்லி அழுதாள். இரக்கமில்லாமல் நடந்து கொண்ட சகோதரர்களிடம் எத்தனை முறையிட்டும் பயனில்லாத நிலையில் மறுநாள் பணம் முழுதையும் எடுத்துக் கொடுத்தாள்.

தகவல் சொன்னதற்காகப் பங்கு கேட்டு மரியாவும் போலீஸ்காரரும் சகோதரர்களைத் தொந்தரவு செயதனர். துரோகம் செய்த வெறுப்பில் இருந்த மரியாவின் கணவர் டேனியை அணுகினார்கள் சகோதரர்கள். மரியா, போலீஸ்காரர் இருவரையும் கொலை செய்தால் பத்தாயிரம் டாலர் தருவதாகச் சொன்னார்கள்.

இன்சூரன்சுப் பணம் கிடைத்ததைக் கொண்டாடலாம் என்று அனைவரையும் மரியாவின் வீட்டுக்கு அழைத்திருந்தான் ஆல்பர்ட். எல்லோருக்கும் போதை ஏறியதும் டேனி மரியாவையும் போலீஸ்காரரையும் சுட்டுக் கொல்வதாகத் திட்டம். ஆனால் போலீஸ்காரர் திடீரென்று எழுந்து ஆல்பர்ட்டின் நெற்றியில் துப்பாக்கியை அழுத்தினார். பணம் முழுதையும் எடுத்துவருமாறு ராஜரிடம் சொன்னார். டேனியைத் துணைக்குப் போகச்சொன்னார். சிரித்துக் கொண்டே ராஜரை நெட்டித் தள்ளினான் டேனி.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சகோதரர்கள் கொதித்தார்கள். போகிற போக்கில் ராஜர் திடீரென்று ஒரு கத்தியை வீச, போலீஸ்காரர் தடுமாறினார். உடனே எழுந்த ஆல்பர்ட், போலீஸ்காரரை அடித்து வீழ்த்தினான். போலீஸ்காரரின் துப்பாக்கியால் டேனியைச் சுட்டான். விரைந்த ராஜர், கத்தியால் போலீஸ்காரரின் ஒரு கண்ணைத் தோண்டி எடுத்தான். சகோதரர்கள் இருவரும் மரியாவை ஒரு மூலைக்குத் தள்ளினார்கள். ரத்தம் பெருகத் துடித்தப் போலீஸ்காரரின் கண் ஓட்டையில் துணியடைத்தார்கள். டேனியை ஒரு நாற்காலியோடு கட்டினார்கள். மரியாவின் வாயில் பஞ்சடைத்து அவளை நிர்வாணமாக்கினார்கள். போதையின் உச்சியில் இரண்டு சகோதரர்களும் டேனியின் கண் முன்னே நிர்வாண மரியாவுடன் தொடர்ந்து வெறியுறவு கொண்டார்கள். பிறகு மரியாவின் அல்குல் கிழியும் அளவுக்கு கண்ணில் பட்ட சிறு பொருட்கள், காய்கறிகளைத் திணித்தார்கள்.

குக் மருத்துவமனை முன்னே விழுந்து கிடந்த தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம், வழக்கமான காவல் சுற்று வந்தபோது முகமறியாத யாரோ தன்னைக் காயப்படுத்தியதாகப் பொய் சொன்ன போலீஸ்காரர் அடங்கிப் போனார். டேனியைக் காணவேயில்லை. மரியாவின் பிணத்தை நாலைந்து நாட்களுக்குப் பின் அழுகிப் போயிருந்த நிலையில் கண்டெடுத்தார்கள். குற்றமோ குற்றவாளியோ விளங்காமல் வழக்கு மூடப்பட்டது. பானியிடம் பெற்றப் பணத்தைப் பகிர்ந்து கொண்ட சகோதரர்கள் பிரிந்தனர். ஆல்பர்ட் மேற்கே போக, ராஜர் வழக்கம் போல் சிகாகோவில் புழங்கினான்.

    சகோதரர்கள் மீண்டும் சந்திக்க நேரிட்டது.

மேற்கே போன ஆல்பர்ட் ஏனோ வழியெல்லாம் மரியாவின் நினைவில் வாடினான். பீனிக்ஸ் நகரில் மரியாவைப் போலவே இருந்த ஒரு மெக்சிகன் விதவையைப் பார்த்ததும் அங்கே தங்க முடிவு செய்தான். மெக்சிகன் விதவையுடன் பழகத் தொடங்கினான். தன்னைப் பற்றிய விவரங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டான். அவனைத் திருத்துவதாகச் சொல்லி அவள் ஆல்பர்ட்டை மணக்கச் சம்மதித்தாள். அவளுடன் வாழ்ந்த இரண்டு வருடங்களில் ஆல்பர்ட் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஒரு பெட்ரோல் பம்பில் ஒழுங்காக வேலை பார்த்தான். இருவருக்கும் ஒரு மகன் பிறக்க, தனக்கும் ஒரு குடும்பம் அமைந்ததே என்றக் களிப்பில் இருந்தான் ஆல்பர்ட்.

மகன் பிறந்த சில வாரங்களில் பழைய நண்பன் ஒருவனைச் சந்தித்தான் ஆல்பர்ட். பெட்ரோல் நிரப்ப வந்த நண்பன் ஆல்பர்ட்டிடம் பேசத் தொடங்கினான். ஓமகாவில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கப் போவதாகவும் உடன் வரச் சம்மதமென்றால் கணிசமான பணம் கிடைக்கும் என்றும் சொன்னான். குடும்பம் பற்றி ஒரு கணம் சிந்தித்த ஆல்பர்ட், குடும்பத்தைத் துறந்து வேலையை அப்படியே விட்டு நண்பனுடன் ஓமகா சென்றான்.

வங்கியைக் கொள்ளையடித்த இருவரும் டென்வருக்குத் தப்பியோடிச் சிறிய ஹோட்டல் ஒன்றில் தங்கினார்கள். காலையில் பயணத்தைத் தொடர எண்ணினர். தப்பி வந்த வண்டியை எல்லையிலே விட்டதால் இன்னொரு வண்டி தேவைப்பட்டது. அதிகாலையில் எழுந்து இன்னொரு வண்டியைத் திருடும் பொழுது வண்டிக்குச் சொந்தக்காரர் வந்துவிட, ஆல்பர்டும் நண்பனும் துப்பாக்கி முனையில் அவரை வண்டியின் பின்கிடங்கில் திணித்துப் பூட்டி வண்டியோடு கிளம்பினார்கள். வழியெங்கும் இடித்து ஓசை செய்து வந்ததால் பெருவழியில் யாருமற்ற இடமாகப் பார்த்து ஒதுங்கினர். கிடங்கைத் திறந்து வண்டிக்காரரை எழவிடாமல் சுட்டுத் தள்ளினார்கள். பிணத்தை தெருவில் உருட்டிவிட்டு ஓடினார்கள். பெட்ரோல் வற்றியதைக் கவனிக்காமல் ஓட்டியதால் வண்டியை வழியில் நிறுத்த வேண்டியதாயிற்று. எதிர்பாராமல் வந்த போலீஸிடம் பிடிபட்டு ஒன்றிலிருந்து ஒன்றாக விவரங்கள் வெளிவந்து சிறையிலடைக்கப்பட்டனர். கொள்ளை, கொலை வழக்கு நடந்து இருவருக்கும் முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கொலைக் குற்றம் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படாததால் திருத்தப்பட்டு முப்பதாண்டுக் கடுங்காவல் தண்டனையானது.

தம்பி ராஜருக்கு சாராயத் தொழிலின் முடக்கமும் கஞ்சா வியாபாரத்தின் போட்டியும் வேறு பாதைகளை வகுத்தன. இளம் பெண்களைக் கடத்தி மெக்சிகோவிலும் லாஸ்வேகசிலும் ஹானலூலுவிலும் விற்கத் தொடங்கினான்.

கடத்தல் பொருட்டு லாஸ்வேகஸ் போகும் வழியில் டென்வரில் ஒரு நிர்வாண நடன அரங்கில் குடித்துவிட்டுத் தொடங்கிய சிறு தகராறு வளர்ந்து கொலையில் முடிந்தது. அவன் வண்டியில் இருந்த இளம் பெண்கள் தப்பியோடிப் போலீசில் சொல்ல, ராஜர் மேல் கொலை பலாத்காரக் கடத்தல் குற்றங்கள் பேரில் வழக்கு நடந்தது. நாற்பதாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

கொலராடோ கடுங்காவல் சிறையில் அடைக்கப்பட்ட சகோதரரகள் இருவரும் எதிர்பாராமல் சந்தித்தார்கள்.

சகோதரர்கள் மனதில் இன்னொரு திட்டம் உருவானது. ஆல்பர்டின் நண்பனுடன் சிறையிலிருந்துத் தப்பிக்க முடிவு செய்தார்கள்.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று சிறையில் காவல் சற்று மெலிந்திருப்பதை அறிந்தார்கள். ஞாயிறன்று சிறையில் தோத்திரமும் வேதமும் சொல்லும் பாதிரிகளையும் அவர்களுடன் காவலாக வரும் வார்டனையும் கொல்லத் தீர்மானித்தார்கள். வேதபோதனை முடிந்ததும் பாவமன்னிப்புக்காகப் பாதிரிகள் அரை மணி போல் தங்குவார்கள். அந்த ஞாயிறன்று போதனை முடிந்ததும் சகோதர்கள் இருவரும் ஆல்பர்டின் நண்பனும் பாவமன்னிப்புக்குத் தங்குவதாகச் சொல்லி மண்டியிட்டுக் காத்திருந்தார்கள். பிற கைதிகளைத் துணை வார்டனுடன் அனுப்பிய வார்டன் பின் தங்கினார். மண்டியிட்டு வணங்கும் பெஞ்சுப் பலகைக் கட்டையால் மூவரும் பாதிரிகளையும் வார்டனையும் அடித்துக் கொன்றார்கள். அவசரமாக பிணங்களின் ஆடைகளை எடுத்தணிந்தார்கள். பிணங்களை பெஞ்சுகளின் இடையே அமுக்கித் தள்ளிவிட்டு, மூவரும் சிறையிலிருந்து தப்பித்து வெளியேறினர்.

வெளியே வந்த சில நொடிகளில் ஒரு காவலனுக்குச் சந்தேகம் ஏற்பட்டு அவர்கள் பின்னே கூவிக்கொண்டு வர, அவசரத்தில் அந்தக் காவலனை ஆல்பர்டின் நண்பன் சுட, பிற காவலர்களும் வெளியே வந்து சுடத் தொடங்கினர். ஆல்பர்ட் தப்பி ஓடினான். நண்பன் சுடப்பட்டு இறந்தான். ராஜர் பிடிபட்டான்.

சிறைச்சாலைக் கொலைகள், டென்வர் கொலை, பெண்கள் கடத்தல் என்று தொடங்கிய வழக்கு மெள்ள விரிந்து ராஜரின் சிகாகோ வாழ்வை சந்திக்குக் கொண்டு வந்தது. கண்ணிழந்த போலீஸ்காரர் இப்போது சாட்சி சொல்ல வந்தார். மரியாவின் கொலையும் சேர்ந்தது. பிற கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள் என்று எண்ணற்றக் குற்றங்கள் எழும்பி, ராஜர் மீதான வழக்கு பல மாநில அரசுகளின் பல நாள் தேடலுக்கான தீர்வாக அமைந்தது. வழக்கும் பல வருடங்கள் நடந்தது.

சமூக நல இயக்கங்களின் சார்பில் ஆயுள் தண்டனை வழங்கும்படி அவனுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீலையும், அவரை அழைத்து வந்த சகோதரி பானியையும், கோர்ட்டிலேயே திட்டினான். லீலாவிடம் காசு வாங்கிக்கொண்டு பர்ட்டை, சொந்தத் தந்தையை, கம்பிவலையால் கழுத்தை நெறித்துக் கொன்றதாகச் சொன்னதும் கோர்ட்டே அதிர்ந்தது.

மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது கொலராடோ நீதிமன்றம்.

இது நடந்தது 1989ல். மரண தண்டனையை அனுமதிக்க மறுத்த மாநிலங்கள் காரணமாகவும், குற்றங்கள் நடந்த இடங்கள் காரணமாகவும், பதிமூன்று வருடங்களாக இழுபறியாகி 2002ல் ராஜர் தூக்கிலிடப்பட்டான்.

    தப்பித்த ஆல்பர்ட் அங்கிங்கு நாடோடி போல் சுற்றிச் சிறு திருட்டுக்கள், குற்றங்கள் செய்து வந்தான். இருபது வருடங்களுக்குத் தலைமறைவாக இருந்தவன், தான் முன்பு வாழ்ந்த அரிசோனாவின் பீனிக்ஸ் நகருக்கு வந்தான். ஏதோ உந்துதலால் இரண்டாண்டுகள் வாழ்ந்த இடத்தைக் காணச் சென்றான். தன் மனைவியும் மகனும் இன்னும் அங்கே இருப்பதைக் கண்டு அதிர்ந்தான். பாதிரி வேடமிட்டு அவர்களைச் சந்தித்தான். தனக்கு ஒரு பேரக்குழந்தை இருப்பதை அறிந்து மகிழ்ந்தான். சந்தோஷமாகப் பேசினான். வெளியேறுகையில் போலீசில் பிடிபட்டான். அவனை அடையாளம் கண்ட மனைவி ரகசியமாகப் போலீசை அழைத்தது அவனுக்குத் தெரியாது.

ஆல்பர்ட் மேல் வழக்கு தொடங்கியது. அவனுடைய தனிப்பட்டக் குற்றங்களுக்கு மேல், தம்பி ராஜருடன் சேர்ந்து செய்தக் குற்றங்களும் பதிவாகி இன்னும் பரவலான, குழப்பமான வழக்கானது.

நீதி, சமூகம், கல்வி, பொதுநலம், காவல், குற்றவியல், உளவியல் எனப் பல்துறை விற்பன்னர்களையும் வில்சன் சகோதரர்கள் புரிந்தக் குற்றங்களின் ஆழ அகல காலப் பரிமாணங்கள் ஈர்த்தன. ஆல்பர்டின் சார்பில் அவனுடைய அக்கா பானி மீண்டும் நல்ல வக்கீல்களை நியமித்தார். சமூக அமைப்புகளைத் துணைக்கு அழைத்து வந்தார். ஆல்பர்டின் மனைவியும் தன் கணவனைக் காட்டிக் கொடுத்தது சமூக உணர்வே ஒழிய, கணவனாக இருந்த இரண்டு வருடங்களும் குற்றமில்லாத நடத்தைக்குச் சாட்சியாகப் பேசினார். மரண தண்டனை வழங்க வேண்டாமென்று ஆல்பர்ட் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கருணை மனுக்கள் தரப்பட்டன.

தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை ஏற்று ஆல்பர்ட் நீதிமன்றத்தில் பேசினான்.

"என் பரம்பரையில் எல்லாருமே நாடோடிகள். என்னை அந்த மரபிலிருந்து விலக்கித் தனிமைப்படுத்த முனைந்தது என் தந்தையின் தவறு. எனினும், நான் செய்த குற்றங்களுக்கு வேதனை அடைகிறேன். மனித நாகரீகம் தெரியாமல் வளர்ந்து விட்டேன். அறிவற்ற முடிவுகளை எடுத்தேன். அவை அறிவற்ற முடிவுகள் என்று உணர, கண நேர விழிப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. உங்களைப் படைத்த தேவனே என்னையும் படைத்தார். என்னைத் தூக்கிலிடாதீர்கள். உங்களிடமும் என் தெய்வத்திடமும் மன்னிப்புக் கேட்கிறேன்" என்றப் பொருள்பட ஒவ்வொரு குற்றமாகச் சொல்லி மன்னிப்பு கேட்டு அழுதான்.

இது நடந்தது 2007ல்.

    இப்போது மார்ச் 2013. ஆல்பர்டுக்கு 77 வயது.

எதிர்மனுக்களால் இழுத்தடிக்கப்பட்ட ஆல்பர்டின் தண்டனை வரும் மே மாதம் நிறைவேறும் என்கிறார்கள். இதுவரை தனக்கு வழி காட்டிய ஆண்டவனிடம் சேரத் தயாராக இருப்பதாகச் சொல்கிறான் ஆல்பர்ட். தன் தம்பி ராஜர் இப்போது குற்றம் களைந்தத் தூதனாக இருப்பதாகவும் சொல்கிறான்.

இடையே, கஞ்சா வைத்திருந்த காரணத்துக்காக ஆல்பர்டின் மகன் சென்ற வாரம் அரிசோனாவில் பிடிபட்டிருக்கிறான்.என்னுரை [-]

    டித்து முடித்ததும் இதயப்பகுதியை ஈரத்துணியாகப் பிழிவது போலிருந்தால், சற்று முயற்சி செய்து நிமிர்ந்து பாருங்கள். உங்களுக்கு எதிரே நெஞ்சைப் பிசைந்து கொண்டிருக்கும் உருவம் நானாக இருக்கலாம்.

இது உண்மைக்கதை(?). சமூக அக்கறை தோய்ந்தப் பெருங்குற்ற வழக்குகளில் ஒன்று. சில இடம், பெயர், கால, குற்ற விவரங்களை மாற்றியிருக்கிறேன். சமூக அக்கறைப் பரிமாணங்களைப் பார்க்குமுன் (புலம்புமுன்) சில புள்ளிவிவரங்கள்.

இரண்டு சகோதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தது அமெரிக்க வரலாற்றில் இதுவே இரண்டாவது முறை. அடுத்துப் பிறந்த சகோதரர்களுக்கு மரண தண்டனை வழங்கியது உலகிலேயே முதல் தடவை என்கிறார்கள். வில்சன் சகோதரர்கள் தனித்தும் இணைந்தும் செய்த குற்றங்கள்: 17 கொலைகள், 1280க்கு மேற்பட்ட சில்லறைத் திருட்டுக்கள், 36 தீவைப்பு மற்றும் வன்முறைகள், 11 கொள்ளைகள், 285 பாலியல் மீறல்கள், 13 கற்பழிப்புகள், சுமார் 60000 கிலோ போதைப் பொருள் (!) வியாபாரம், 7 இடங்களில் விபசாரம், 500க்கு மேற்பட்ட கார் திருட்டுக்கள்.. பட்டியல் நீளுகிறது. எழுபதாண்டுச் சராசரி வாழ்நாள் அடிப்படையில் இவர்களின் குற்றப்பட்டியலை ஆய்ந்தவர்கள் சொன்னது: 'தினம் ஒரு கிலோ போதைப்பொருள் வியாபாரம், வாரம் ஒரு திருட்டு, மாதம் ஒரு பாலியல் குற்றம், வருடம் ஒரு கொலை அல்லது வன்முறை...' அதிர்ச்சியில் அயரவைக்கும் உழைப்பு! "சிந்திக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு விரைவானத் தொடர் குற்றவாளிகள்" என்றார் ஒரு குற்றவியல் நிபுணர்.

குற்றம் புரிவதில் இணையான மனப்பாங்குடன் செயல்பட்டச் சகோதரர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை வெவ்வேறு விதமாக அணுகினார்கள்.

ராஜர் எதற்கும் மன்னிப்பு கேட்கவில்லை. வருந்தவுமில்லை. தூக்கிலிடுமுன் ராஜரிடம் தேவச்செய்தி சொல்ல வந்த பாதிரியைக் கூட தலையால் முட்டிக் காயப்படுத்தினான் என்கிறார்கள். தேவனின் ராஜ்ஜியத்தில் இருப்பவர்களையும் ஒரு கை பார்ப்பதாகச் சொன்னான் என்கிறார்கள்.

ஆல்பர்ட் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தீவிர ஆத்திகனாக மாறியுள்ளான். சகோதரி பானியை அடிக்கடி சந்திக்கிறான். குற்றங்களுக்கு மன்னிப்புக் கோரி, சிறையில் தினம் முகமறியா நபர்களுக்குக் கடிதங்கள் எழுதுகிறானாம்.

    இரு சகோதரர்களின் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மனுக்கள் தாக்குதல் செய்யப்பட்டன, சமூக அமைப்புகள் பிரசாரங்கள் செய்தன, என்றாலும் ஆல்பர்டின் வழக்கின் போது அதிகச் சமூக அக்கறையும் ஈடுபாடும் இருந்தது. சமூக அமைப்புகள் சகோதரர் வாழ்க்கையை அலசத் தொடங்கின. அக்கா பானி ஒரு உயர்ந்த சமூக நிலையில் இருக்க, சகோதரர்கள் இப்படிக் கொடியவர்களானதன் சமூகப் பொருளாதார அரசியல் சட்டக் காரணிகளை ஆராய்ந்தார்கள். ஆல்பர்டின் தாய் தந்தை மூதாதையர் பற்றிப் பேசினார்கள். ஆல்பர்டின் விதி, மூதாதையரின் குற்றம் கலந்த நாடோடி வாழ்க்கையினால் நியமிக்கப்பட்டதா? பர்ட் வில்சன் அத்தனை முயன்றும் பிள்ளைகள் இருவரும் குற்றம் தழுவிய நாடோடிகளாகத் தானே வாழ முடிந்தது? சமூக வளர்ச்சியினால் அந்த விதியை மாற்ற முடியவில்லையா? இனி ஆல்பர்டுகள் உருவாகாதிருக்க என்ன செய்ய வேண்டும்?' என்று விவாதித்தார்கள். ஆல்பர்டுடன் பேசி குற்ற உணர்வு, தூண்டுதல், வன்முறை எண்ணங்கள் பற்றி அறிந்தார்கள். "மரியாவின் மீது இவர்கள் காட்டிய மிருக வன்மத்துக்கு என்ன காரணம்? இதற்குச் சமூகம் எந்த விதத்தில் பொறுப்பேற்க வேண்டும்?" என்று ஒரு சமூக ஆர்வலர் தீர்ப்புக்கு எதிரான வழக்குகளில் பேசினார்.

"இத்தனை வயதுக்கு மேல் இவரைத் தூக்கிலிட்டு என்ன பயன்? தண்டனை வழங்கினால் இவரைச் சமூகம் விரைவில் மறந்து விடும். அதற்குப் பதிலாக இவரை இளைஞர் சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் சென்று பேசச் செய்யலாம். சமூக நல அமைப்புகளுடன் இணைந்து வெறிக்குற்றங்கள் தடுப்புக்கான பிரசாரங்கள் செய்யலாம்" என்று ஒரு கூட்டம் ஆல்பர்ட் வழக்கில் விடாமல் பிரசாரம் செய்து வருகிறது. "சமீபமாகத் தோன்றியிருக்கும் ஆத்திகப் பழக்கம் இவரைக் கடவுள் மன்னித்துவிட்டதன் ஆதாரம். கடவுள் மன்னித்த ஒருவனை மனிதர்கள் தண்டிக்கலாமா?" என்று ஒரு மதம் சார்ந்த சமூக நலக்குழு வாதாடி வருகிறது.

விக்டர் பற்றிய மர்மமும் வம்பும் இந்த வழக்கின் உபரி சுவாரசியங்கள். சமூக, மத மற்றும் பல்துறை விற்பன்னர் ஆர்வத்தைத் தூண்டியதும், வக்கீல்களையும் சலுகை ஆய்வாளர்களையும் நியமிக்க பானிக்குப் பண உதவி மிகச் செய்ததும், விக்டர் என்கிறார்கள். இன்று அமெரிக்காவில் மிகுந்த செல்வாக்குடைய, பண்புக்கும் கண்ணியத்துக்கும் அடையாளமாக விளங்கும், ஒரு வணிகரை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் தான் விக்டர் என்கிறார்கள். சிறு வயதிலேயே ஊர் பெயர் எல்லாம் மாற்றிக் கொண்ட விக்டர் யாரென்று பானிக்கு மட்டுமே தெரியும்.

திருமணமே செய்து கொள்ளாத பானிக்கு எண்பது வயதுக்கு மேல் ஆகிறது. தன் சகோதரர்களின் வழக்கைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் நிறையப் பேசுகிறார். சகோதரர்களின் நலனுக்காகவும் பாவ மன்னிப்புக்காகவும் பிரார்த்தனை செய்கிறார். தன் சொத்துக்கள் அத்தனையும் ஆல்பர்டின் பேரனுக்கு எழுதி வைத்திருக்கிறார்.

பர்ட் வில்சனின் கனவு இனியேனும் பலிக்குமா என்றக் கேள்வி இந்த வழக்கில் அடிக்கடி கேட்கப்பட்டது. பானியும் 'முகமில்லா' விக்டரும் தான் வில்சனின் கனவு என்கிறார்கள் சிலர். எனினும், பர்ட் வில்சனின் பரம்பரை ஆல்பர்டின் சந்ததி வழியாக மட்டுமே தழைத்திருப்பதை சமூக ஆய்வாளர்கள் மிகுந்த வியப்புடனும் எதிர்பார்ப்புடனும் கவனிக்கிறார்கள்.

கலர் சட்டைக்காக எழுதியது. சுழிக்குப் பொருந்துவதால் இங்கே பதிவிட்டேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.21 கருத்துகள்:

 1. படித்து முடித்ததும் ஒரு நீண்ட பெரு மூச்சு.
  வளரும் சூழலும், வந்த வழியும் ஒரு மனிதனின் குணாதிசியத்தை நிர்ணயிப்பதில் சமவிகித பங்களிக்கிக்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. பாவம்.. பாட் கண்ட கனவு இப்படியா பொய்த்துப் போக வேண்டும். அந்த சகோதரர்களின் க்ரைம் ரேட் தகவல் மனதைப் பதற வைத்தது. பானியை காயப்படுத்திய அந்த வயதிலேயே பாட் கடுமையாக ஆல்பர்ட்டை தண்டித்திருந்தால் வாழ்க்கை திசை மாறியிருக்குமோ என்றுகூட ஒரு நினைவு வந்து போனது எனக்கு.

  பதிலளிநீக்கு
 3. நெடிய கதையைப்படித்தவுடன் பலத்த பெருமூச்சு முதலில் ஏற்பட்டது.

  //ஒரே செடியில் பூத்திருக்கும் அழகு ரோஜாக்களில், சில தேவனை அலங்கரிக்கவும் சில பிணங்களை அலங்கரிக்கவும் தேர்வாகின்றன. சில காற்றில் சிதறிச் சாக்கடைச் சேற்றில் சேர்கின்றன. சில எங்கும் சேராமல் வாடி மடிகின்றன.//

  இந்த வரிகள் தான் கதையின் உள் அடக்கத்தை சொல்லிவிட்டது.

  கேதரின், பர்ட்டைபிரியாது இருந்தால் குழந்தைகள் ந்ல்லவர்களாய் வளர்ந்து இருப்பார்கள்.

  கரீன், விகடர் நல்ல இடத்தில் வளர்ந்ததால் நன் மக்களாய் வளர்ந்தார்கள்.

  பர்ட் லீலாவை மணந்து கொண்டது பெருங்குற்றம்.

  யாரை சொல்லி என்ன செய்வது நீங்களே சொல்லிவிட்டீர்கள் இறைவன் உருட்டியப் பகடைகள் என்று.
  கூட நட்பு கேடாய் முடியும் என்று சொல்வார்கள் பெரியவர்கள்.
  எல்லாம் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள்.

  இக்கதையின் மூலம் ஒழுக்கம் தான்
  மனிதனை மேம்படுத்தும் என்றும் ஒழுக்கம் தவறினால் சிறுமைபடுத்தும் என்று மக்கள் உணர்ந்து கொண்டால் போதும்.

  பதிலளிநீக்கு
 4. ம்....ஹூம். இவர்களின் இந்தப் பிறவி இப்படி. அக்காவும் ஒரு சகோதரரும் தப்பிப் பிறந்திருப்பது அல்லது வளர்ந்திருப்பது 'எந்தக் குழந்தையும்' மை ஞாபகப் படுத்துகிறது.

  பதிலளிநீக்கு

 5. ஒரு பெரிய நாவலுக்கான கதையை சுருக்கமாகச் சொல்வதில் பல சங்கடங்கள் இருக்கின்றன. நிறைய கதை மாந்தர்கள். எல்லாவற்றையும் புரிந்து படிக்க ஒரு முறை போதாது. பலமுறை படிக்க வைக்க முயற்சிகள் எடுத்துக் கொள்ளப் படவில்லை. கதாசிரியரின் கருத்தும் தெளிவாக இல்லையோ என்று தோன்றுகிறது. அப்பாதுரையின் படைப்பா என்று சந்தேகம் வருகிறது.

  பதிலளிநீக்கு
 6. கதையைப் படிக்கிறதுக்குனு வந்தால், எல்லாம் லிங்கிலே இருக்கு. ஹிஹிஹி, இப்போ கரன்ட் போயிடும், அப்புறமா வரணும். :)))

  பதிலளிநீக்கு
 7. // எல்லாப் புகழும் இறைவனுக்கே.//

  அந்த இறைவன் யாரு அப்படின்னு இன்னொரு வலை


  உங்களுக்கு இன்னும் ஒரு வலைப்பதிவு இருக்கிறதா !!
  இன்று இப்பொழுது தான் பார்த்தேன்.

  கலர் சட்டை நாத்திகன் !!

  ' கலர் சட்டை ' என்று மட்டும் போட்டிருந்தால் போதாதோ ?

  நாத்திகன் என்று வேறு ஏன் இன்னொரு வார்த்தை ?  // அப்பாதுரையின் படைப்பா என்று சந்தேகம் வருகிறது.//

  //"உனக்கு ஒன்றுமே தெரியவில்லை டேடி"//

  எனக்கும் ஒண்ணும் புரியல்லே...

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 8. ரோஜாவில் ஆரம்பித்து
  முள்ளில் முடிந்த கதை ..!

  பதிலளிநீக்கு
 9. அப்பாதுரை,
  கதையா, நிகழ்வா? இதைப் படிச்சப்புறமாத் தோன்றியது என்னவெனில் பர்ட் தன் குடும்பத்தையும் அழைத்து வந்திருக்கலாமோ? மனைவியைப் பிரிந்ததால் அவள் இன்னொருவனைத் தேடிக் கொண்டதும், குழந்தைகள் கண்ணெதிரே பெற்ற தாய் தந்தைக்கு துரோகம் செய்ததும், அந்த இரு இளைஞர்கள் மனதையும் அவர்களையும் அறியாமல் கடுமையாகத் தாக்கி இருக்கிறது. அதனால் தான் பெண் குலத்தின் மேல் இவ்வளவு வெறுப்பு.

  உளவியல் ரீதியாக இதைத் தான் காரணமாய்ச் சொல்ல முடியும். இதற்குக் கடவுள் எப்படி காரணம் ஆவார்?

  மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் கடவுளைப் பொறுப்பாளியாக்குவது மட்டும் ஆத்திகத்தில் சேர்த்தி இல்லையா?

  பதிலளிநீக்கு
 10. Unable to make any comment. On one hand, looking to the crime schedule, my heart has become very heavy and the mind refuses to think to make any comment. This is the effect of this story.

  பதிலளிநீக்கு
 11. பின்னூட்டங்களுக்கு நன்றி.

  இது உண்மைக்கதை (?).
  இந்த வழக்கின் முழு விவரங்களைப் படித்ததும் எனக்கு ஒரு வாரம் எதுவுமே செய்யத் தோன்றவில்லை (mohan சொன்னது போல).
  வழக்கின் பின்புலத்தை என்னால் இயன்றவரை சுருக்கி வழங்க முயற்சித்தேன் - அப்படியும் நீளமாகிவிட்டது. மேலும், வழக்கின் அறுபதாண்டு கால விவரங்களை சுருக்கினால் சாரம் மறைந்துவிடுமோ என்றும் அஞ்சினேன்.
  ஆத்திகம் (மதம்) இந்த வழக்கின் தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் பங்கெடுத்ததனால் எனக்கு சுவாரசியம் கூடியது. வழக்கில் பேசப்பட்டதை ஏறக்குறைய அப்படியே கொடுத்திருக்கிறேன். மற்றபடி கடவுளிடம் எனக்கு ஒரு காழ்ப்பும் இல்லை. இல்லாத ஒன்றின் மேல் காழ்ப்பை வைத்து என்ன பயன்?
  இந்தச் சகோதரர்கள் சாதாரணமாகப் பிறந்தார்கள். இவர்களின் குற்றங்களைப் படித்தால் ("அசாதாரண உழைப்பு!") இப்படி ஒரு வாழ்க்கையை இவர்கள் வாழக் காரணம் என்னவென்று தோன்றுகிறது. கடவுளைக் குற்றம் சொல்ல முடியாது என்றாலும் - கை தட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததா கடவுள் என்று கேட்கத் தோன்றியது. இவர்களிடம் வதைபட்டவர்களுக்காகவாவது கருணைக் கண் திறந்திருக்க வேண்டாமோ?
  கடைசியில் கடவுள் மன்னித்தவரை மனிதன் தண்டிக்கக்கூடாது என்று ஆத்திகம் சொல்வது அசிங்கமாகத் தோன்றியது.

  பதிலளிநீக்கு
 12. //எல்லாப் புகழும் இறைவனுக்கே//

  நாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் இறைவனால் தான் என்பது சரியா? நமக்கு நன்மை, தீமையைப் பகுத்தறியும் புத்தியை ஏன் கடவுள் கொடுத்தார்? ஒரு தாயின் வயிற்றில் பிறந்த நான்கு பிள்ளைகளில் இருவர் ஒழுங்காய் இருக்க, இருவர் இப்படிக் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போனது கடவுளால் தான் என்றால் இருவர் நல்லவர்களாய் இருப்பதும் கடவுளால் தானே?
  மின்சாரம் போயிடுச்சு, மிச்சத்துக்கு அப்புறமா வரேன். :))))
  இதைக் கொடுக்கையில் மின்சாரம்போயிடுச்சு. ஆகவே நல்லவேளையாக சேமிச்சு வைச்சேன். இதைக் குறித்து இன்னும் எழுத ஆசைதான். ஆனால் அப்பாதுரையின் பதில் இதற்கு ஒரு முடிவுரையாகத் தோன்றுவதால் நிறுத்திக்கிறேன்.

  பின்னால் ஒரு கை பார்க்கலாம் அப்பாதுரை, இருக்கவே இருக்கு எனக்கு உங்களோடயும், உங்களுக்கு என்னோடயும். :))))) முடிவற்ற வாதப் பிரதிவாதங்கள். :)))))

  பதிலளிநீக்கு
 13. //கை தட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததா கடவுள் என்று கேட்கத் தோன்றியது. இவர்களிடம் வதைபட்டவர்களுக்காகவாவது கருணைக் கண் திறந்திருக்க வேண்டாமோ?
  கடைசியில் கடவுள் மன்னித்தவரை மனிதன் தண்டிக்கக்கூடாது என்று ஆத்திகம் சொல்வது அசிங்கமாகத் தோன்றியது.//  இல்லை என்று நினைக்கப்படுகின்ற ஒருவர் அவர் கடவுளே ஆயினும்
  கண்ணைத் திறந்து பார்க்கவேண்டாமோ என்று ஆதங்கப்படுவது புரியவில்லை.

  இல்லை என்று யாரை சொல்கிறோமோ முடிவு கட்டிவிட்டோமோ அவர் தண்டிப்பாரா மாட்டாரா என்று மேலே
  சொல்வதெல்லாம் பேசுவதெல்லாமே இல்லாஜிகல்.

  நம்ம எல்லோருமே ஒரு புரிதலுக்காக சொல்லப்போனால் ஒரு கலர் சட்டை தான். ( மி இன்க்லூடட்)
  அந்தந்த சிசுவேஷனுக்குத் தகுந்தபடி நாம் சட்டையை மாற்றி போட்டுக்கொள்கிறோம்.
  ஒரு இடம் நமக்கு சௌகர்யமா இருந்ததுன்னா, அதுலே கிடைக்கறது எல்லாம் நமக்கு வேண்டும்
  அப்படின்னா, சும்மா இருடா, பேசாம இருடா அப்படின்னு மனச் சாட்சிக்கு (,அதாகப்பட்டது நம்ம உண்மை அப்படின்னு
  எதை நம்பறோமோ, அதுக்கு )வாய்ப்பூட்டு போட்டு விடுகிறோம்.

  அந்தமும் என்ன என்று தெரியாது. ஆதி என்னவா இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ளவும் பொறுமை இருக்காது. நமக்கு தெரியாதது புரியாதது எல்லாமே இல்லை என்ற ஒரு வறட்டு ஈகோ நம்மகிட்டெ எல்லாரிட்டயும் இருக்கு. எகைன் மி இன்க்லூடட். இதுலே எதுக்கு அந்தாதி அர்த்தம் பொழிவுரை எல்லாம் ?

  கன்ஸிஸ்டன்ஸி வி கான்ஸ்டன்ட்லி பிலீவ் நீட் நாட் பி எ வர்சூ.

  இன்னொன்னு லாஜிக். ராதர் த ஆப்ஸன்ஸ் ஆஃப் இட்.
  இது சினிமாவிலே தான் அப்படிங்கறது இல்ல.
  நிஜ வாழ்க்கையிலுமே பல இடங்களிலே மிஸ்ஸிங்.
  என்னடா !! உன்னோட பேச்சுலே லாஜிகல் ஃபாலஸீஸ் இருக்கே அப்படின்னு சொல்றதுக்கு முன்னாடியே
  அவனை ஒரு தினுசா குழப்பி விடறோம்.
  நமக்கு எதுக்குடா வம்பு அப்படின்னு அவனவன் ஓடிப்போயிடரான்.

  நானும் ஓடிப்போயிடறேன்.

  சுப்பு தாத்தா.
  பதிலளிநீக்கு
 14. Yeah!! I also feel sometimes whether God exists or not whenever I see bad people getting all good things in life and enjoying high life style which they got thro' crooked mind and activities. Despite this, I do believe in God not because of these people but because he has not done anything bad to me.

  பதிலளிநீக்கு

 15. கலர் சட்டை வலைப் பூ இப்போதுதான் பார்க்கிறேன்.படித்தேன். காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே. காய்தலின் கண் குணமும், உவத்தலின் கண் குறையும் தோன்றாக்கெடும். முன்பே ஒரு பின்னூட்டம் எழுதி இருந்தேன். தெரியாததைஇல்லை என்று சொல்வது சரியா.?

  பதிலளிநீக்கு
 16. தெரியாததை இருப்பதாகச் சொல்லலாமா?

  பதிலளிநீக்கு
 17. 'நமக்குத் தெரியாதது எதுவுமே இல்லை' என்பது வறட்டு ஈகோ இல்லை. 'ஆண்டவனுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை' என்பதே, 'அவனன்றி ஓரணுவும் அசையாது' என்பதே வறட்டு ஈகோ என்று நினைக்கிறேன். இதன் corollaryஆக 'நமக்கு தெரிந்தது எதுவுமே இல்லை' என்ற அடக்குமுறையும் வறட்டு ஈகோ தான்:-)

  உண்மையில் நமக்குத் தெரியாதது எத்தனையோ இருக்கிறது. மனிதம் பரிணமிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து எத்தனையோ தினம் தெரிந்து கொண்டு வருகிறோம் - இன்னும் தெரிந்து கொள்வோம். கடவுள் கிடையாது என்பது உட்பட.

  பதிலளிநீக்கு
 18. //இல்லை என்று யாரை சொல்கிறோமோ முடிவு கட்டிவிட்டோமோ...பேசுவதெல்லாமே இல்லாஜிகல்.

  என் கருத்துக்கும் வழக்கு மாந்தர் கருத்தையொட்டியக் கேள்விக்கும் போதிய இடைவெளி விடாதது என் இலக்கணப் பிழை.

  பதிலளிநீக்கு
 19. மிக அற்புதமான நடை.... உங்கள் எழுத்துகளில் இந்தப் பதிவை/ சம்பவத்தை வெகுவாய் ரசித்துப் படித்தேன்...

  முடிவில் அவரது மகனும் கஞ்சா வழக்கில் கைதாகி இருப்பது ஜீன்களின் நீட்சியா.. வளர்ப்புமுறையின் நீட்சியா... தேவனுக்கே வெளிச்சம்

  ஆரம்பத்தில் ரோஜா பூ பற்றி சொல்லிய வரிகள் அருமை

  பதிலளிநீக்கு
 20. சிக்கலான ஒரு வழக்கின் விவரங்களை கோர்வையாக(இயன்ற அளவு) எழுதியதற்குப் பாராட்டுகள் முதலில்.

  இந்த வித தொடர் குற்றங்கள் நிகழ்த்தும் மனிதர்கள் அடிப்படையில் மிகச் சிறு வயதிலேயே மனச் சிதைவுக்கு ஆளானவர்களாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றுதான் மனவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்..

  இது போன்ற குற்றம் மேலும் குற்றங்கள் செய்வதற்கான உந்துதலை அவ்வித மனச் சிதைவுக் காரணிகள் அவர்களுக்கு அளிக்கலாம்.

  இது போன்ற கதைகள்-சம்பவங்கள் எங்கும் உண்டு-ஆட்டோ சங்கர்-.. ஆனால் ஆல்பர்ட் போன்றவர்களுக்குப் பரிந்து பேச ஒரு கட்சி தோன்றுவது அமெரிக்கா போன்ற நாடுகளில்தான் சாத்தியம்.

  சமூக ஒழுங்கு என்ற நோக்கில் பார்க்கும் போது, ஆல்பர்ட் போன்ற நபர்கள் சமூகத்தில் இல்லாதிருப்பதே நல்லது என்பது எனது கருத்து.

  இன்னொரு விதயம்..இப்படி பதிவில் சுருக்கி, நீட்டி எழுதும் விதம் எவ்வாறு? (Expanding and compressing..)

  பதிலளிநீக்கு
 21. முதல்ல கதை எங்கே இருக்கிறது என்றே தேடினேன்.
  + புது முறையா.!!
  ஒரு பெரிய க்ரைம் நாவலைப் படித்த ஆயாசம் தான் வருகிறது.
  ஆல்பர்ட் போல எத்தனை தகப்பனார்கள் வாடினார்களோ.
  Bஆனியும் விக்டரும் பிழைத்துப் போனார்கள்.அதற்குத் தேவ கருணையும் காரணம்:)
  தேவரின் இருப்பிடத்தில் அடைக்கலம் கிடைத்ததால் என்று சொல்கிறேன்.
  கடவுள் தந்த இரு மலர்கள் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.
  பிஞ்சிலியே பழுத்துவிடும் மனங்களுக்கு யார் காரணம்.


  இத்தனை கொடுமைகளுக்கும் தீர்வு உண்டா என்றால் தீமை தொடருகிறது என்பது ஆல்பர்டின்

  பேரன் செயல் நிரூபிக்கிறது.


  ஆழமான எழுத்துகள். அருமையாகப் பிசிறில்லாமல் தொடர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் துரை.

  பதிலளிநீக்கு